Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கே.ஜே.யேசுதாஸ் கண்ணீரின் கானம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கே.ஜே.யேசுதாஸ் கண்ணீரின் கானம்

ஷாஜி

yesudasq.jpg

“யேசுதாஸ் மிக அழகான குண்டுப் பெண் ஒருத்தியிடம் காதல் கொண்டிருந்தார். ஒரு கொடூரமானவன் அப்பெண்ணைக் கற்பழிக்க முயன்றான். அப்போது யேசுதாஸ் தனது வாளை எடுத்துச் சுழற்றி சண்டையிட்டு அவனைக் கொன்று விட்டார். நீ அவசியம் அந்த வாள் ‘ஃப்ளெயிட்டைப்’ பார்க்கவேண்டும்! என்னா ஒரு ஃப்ளெயிட்!வாள் சண்டையில் யேசுதாஸை அடிக்கவே முடியாது” தான் முதன் முதலாகப் பார்த்த சினிமாவின் கதையை வசீகரமாகச் சொல்லிக் கொண்டிருந்தான் தங்கன். ஊரில் சில்லறை வேலைகளைப் பார்த்துத் திரிந்துகொண்டிருந்த பதினாறு வயதான அவன் பள்ளிக்கூடம் சென்றதில்லை. பத்து வயதான எனக்கு ஊர்க்கதைகளையும் பாலியல் அறிவையும் தங்கு தடையில்லாமல் வழங்கிக் கொண்டிருந்தவன். வயல்களில் சின்னச் சின்ன மீன்களைப் பிடித்துக்கொண்டும் குன்றுகளில் துடலிப்பழங்களைப் பறித்துக்கொண்டும் நாங்கள் இருவரும் காடு கரையென ஊரைச் சுற்றிக்கொண்டிருந்தோம்.

அவன் சொல்லும் ஆர்வமிக்க தகவல்களை ரசித்துக்கொண்டும் நம்பிக்கொண்டும் இருந்த எனக்கு யேசுதாஸைப் பற்றிய அவனின் சினிமாக்கதை ஏமாற்றமளித்தது. யேசுதாஸ் சினிமாவில் வாள் சண்டை போடுகிறாரா? வாய்ப்பே இல்லை! ஆனால் தங்கன் அது யேசுதாஸ்தான் என்பதில் மிக உறுதியாக இருந்தான். ஏனெனில் அந்தப் படத்தில் அவர் பாடும் எல்லாப் பாடல்களுக்குமே ரேடியோவில் நாம் கேட்கும் யேசுதாஸின் அதே குரல்தான் என்றான். அப்போதுதான் எனக்குப் புரிந்தது. மலையாள சினிமாவின் மிக அழகான கதாநாயகன் பிரேம் நஸீரைத் தான் யேசுதாஸ் என நினைத்துக் கொண்டிருக்கிறான் தங்கன். அவனைச் சொல்லிக் குற்றமில்லை. பிரேம் நஸீருடைய குரலும் யேசுதாஸின் குரலும் ஏறத்தாழ ஒரே மாதிரிதான். இப்பூமியில் மிகவும் அழகான மனிதனின் இனிமையான குரல் என்றால் அது யேசுதாஸின் குரல் அல்லாமல் வேறேது?

பல தலைமுறை மலையாளிகளைப் போல எனது பால்ய காலங்களும் யேசுதாசின் பாடல்களாலேயே நிரம்பியிருந்தது. அக்காலத்துக் காற்றலைகளை நிரப்பிய பெரும்பாலான மலையாள சினிமாப் பாடல்களிலும் பக்திப்பாடல்களிலும் ஒலித்த ஆண்குரல் யேசுதாஸாகவே இருந்தது. இசையைக் கேட்கத் தொடங்கிய நாட்களிலிருந்து யேசுதாஸின் குரலுக்கும் அவரது பாடும் முறைக்கும் நான் தீவிரமான ரசிகனாக இருந்தேன். யேசுதாசின் குரல் ஒலிக்காத ஒரு உலகத்தை எங்களால் யோசிக்கவே முடியவில்லை. அப்போதும் சரி, இப்போதும் சரி யேசுதாஸின் குரல் இல்லாத ஒரு இசையை, பாடல்களை எண்ணிப் பார்க்கக் கூட இயலாமல் இருக்கிறார்கள் பலகோடி மலையாளிகள். கேரளாவை ‘கடவுளின் சொந்த நாடு’ என்று சொல்வதைப் போலவே யேசுதாஸை ‘கடவுள் தந்த பரிசு’ என்றே அழைக்கிறார்கள் அவர்கள்.

1950களின் ஆரம்பத்தில் மெஹ்பூப், கோழிக்கோடு அப்துல்காதர், கே.எஸ்.ஜார்ஜ் போன்றவர்களின் குரல்களாலே மலையாள சினிமாப் பாடல்கள் அமைந்திருந்தன. பின்னர் கமுகர புருஷோத்தமன், கே.பி. உதயபானு போன்றவர்கள் பின்னணிப் பாடகர்களாக நுழைந்து பலவருடங்களாக நிலைத்திருந்தார்கள். ஆயினும் இவர்களில் எவரும் ஓரு உச்ச நட்சத்திரப் பாடகராக ஆகவில்லை. பின்னர் மலையாளத்துக்கு தெலுங்குப் பாடகர்களின் வரவு நிகழ்ந்து அவர்களின் ஆதிக்கம் ஆரம்பித்தது. 1953ல் மலையாள சினிமா பின்னணிப் பாடகராக நுழைந்த ஏ.எம்.ராஜா மலையாளத்தின் முதல் நட்சத்திரப் பாடகராக ரசிகர்களால் அங்கீகரிக்கப்பட்டார். பின்னர் வந்த பி.பி.ஸ்ரீனிவாஸும் மிகப்பெரிய அங்கீகாரத்தை அடைந்தார். ஆனால் இதெல்லாம் யேசுதாஸின் வருகை வரை மட்டும்தான் நீடித்தது. அறுபதுகளின் மத்தியில் ஆரம்பித்த யேசுதாஸின் இசை ராஜாங்கம் நாற்பது வருடங்களுக்கும் மேல் நீடித்தது. தற்போது எழுபது வயதைத் தாண்டிய அவரின் இடத்தை நிரப்ப யாராலேயும் இயலவில்லை.

மலையாள சினிமா துளிர்விட்டு வந்த 1940களின் கடைசியில் கடலால் சூழப்பட்ட ஃபோர்ட் கொச்சி பகுதியில் கட்டச்சேரி அகஸ்டின் ஜோசப் என்ற ஒரு பாடக நடிகர் இருந்தார். நாடகங்களில் சிறப்பாகப்பாடி நடிக்கும் திறன் கொண்டவராகவும் பொலிவான தோற்றமுடையவராகவும் இருந்தார் அவர். சினிமாவில் பாடி நடித்து திரையுலகின் ஒரு பிரபல நட்சத்திரமாக வேண்டும் என்ற கனவோடு வாழ்ந்து வந்தவர். 1950 களின் முதல் பகுதியில் சினிமாவில் பாடவும் நடிக்கவும் அவ்வப்போது சில வாய்ப்புகள் கிடைத்தபோதிலும் திரையுலகில் எந்த வெற்றியும் அவருக்குக் கிடைக்கவில்லை. விரைவில் பாடி நடிக்கும் நடிகர்களின் தேவையே இல்லாத காலமும் வந்தது. ஐந்து குழந்தைகளுடன் மிகவும் சிரமம் நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்தார். அவருடைய முதலாவது மகனாக 1940ல் பிறந்த கட்டச்சேரி ஜோசப் யேசுதாஸ் என்பவரே பிறகு கே.ஜே.யேசுதாஸ் என்றழைக்கப்பட்டார்.

தனது மகனின் ஐந்தாவது வயதிலேயே அவனுடைய பாடும் திறமையை அறிந்து கொண்ட அகஸ்டின் ஜோசப், இசையின் ஆரம்ப பாடங்களைக் அவனுக்கு கற்றுக் கொடுத்தார். அவனது தனித்துவமான திறமையை உணர்ந்து கொண்ட அவர் தன்னால் அடையமுடியாத இடத்தை தன் மகன் பெறவேண்டுமென்ற எண்ணத்தோடு அவனுக்கு இசைப் பயிற்சிகளை வழங்கினார். பள்ளியிலும், மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் நடந்த பாடல் போட்டிகளில் அவரது மகனே சிறந்த பாடகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டான். ஆனால் ஒரு கிறிஸ்துவராக இருந்து கொண்டு கர்நாடக இசையைக் கற்றுக்கொள்ள முயல்வதாக எல்லோராலும் பரிகசிக்கப்பட்டான் அவன்.

மிகுந்த ஏழ்மையிலேயே வளர்ந்தார் யேசுதாஸ். இசைப்படிப்புக்கான கட்டணம் செலுத்த முடியாததால் பல்வேறு இசைப்பள்ளிகளிலிருந்து வெளியேற்றப்பட்டதாக அவர் பின்னர் குறிப்பிட்டிருக்கிறார். ஆயினும் இசைப் பள்ளிகளில் சாதனையான மதிப்பெண்களுடனும் இரட்டைத் தகுதி உயர்வுகளுடனும் தனது இசைப் பாடங்களைக் கற்றுத்தேர்ந்தார். உயர்கல்விக்காக திருவனந்தபுரத்தில் உள்ள சுவாதித்திருநாள் இசைக்கல்லூரியில் சேர்ந்தார். அக்கல்லூரியில் செம்மங்குடி ஸ்ரீனிவாச ஐயர், செம்பை வைத்திய நாத பாகவதர் போன்ற புகழ்பெற்ற ஆசிரியர்களின் மிகவிருப்பமான மாணவராக அவர் திகழ்ந்தார் எனக் கூறப்படுகிறது. ஆனால் அவரது தந்தையால் கல்விச்செலவுகளை வழங்க இயலாததால் பாதியிலேயே அங்கிருந்து வெளியேறினார். திருவனந்தபுரத்தில் தங்கும் வசதி இல்லாததால் செம்மங்குடியின் வீட்டின் கார் கொட்டகையில் மாதக்கணக்கில் படுத்துறங்கியதாக யேசுதாஸ் பின்னர் குறிப்பிட்டிருக்கிறார்.

குழாய்த் தண்ணீரை மட்டும் குடித்துக்கொண்டு வாய்ப்புக்கள் தேடி சென்னையில் கணக்கில்லாத மைல்கள் நடந்து திரிந்ததையும் திறமையில்லாதவர் என பல இசையமைப்பாளர்களால் நிராகரிக்கப்பட்டதையும் பதிவு செய்திருக்கிறார். திருவனந்தபுரம் ஆல் இந்தியா ரேடியோ அவரது குரலை ஒலிபரப்புக்குத் தகுதியில்லாதது என நிராகரித்தது. கடைசியில் ஒருவழியாக 1962ம் ஆண்டு இயக்குனர் கே.எஸ். ஆண்டனி தனது கால்ப்பாடுகள் என்ற படத்தில் ஒரு சுலோகத்தின் நான்கு வரிகளைப் பாட வாய்ப்பளித்தார். இசையமைப்பாளர் எம்.பி.ஸ்ரீனிவாசன் இசையமைத்த அப்படத்தின் முக்கிய பாடகர் கே.பி. உதயபானு. யேசுதாஸின் வசீகரக் குரலைக் கவனித்த எம்.பி.ஸ்ரீனிவாசன் அப்படத்திலேயே ஒரு டூயட் பாடலையும் அவரைப் பாடவைத்தார். யேசுதாஸின் குரல் சினிமா வட்டாரங்களில் உடனடியாகப் பேசப்பட்டது. அதே வருடத்திலேயே மேலும் 7 படங்களில் பாட அவருக்கு வாய்ப்பு கிடைத்தது! தனது மகன் வெற்றிப்பயணத்தைத் தொடங்கியிருப்பது பார்த்துவிட்டு 1964ல் காலமானார் அகஸ்டின் ஜோசப்.

ஏறத்தாழ எல்லா இந்திய மொழிகளிலும் பாடியிருந்தாலும் மலையாளத்துக்கு அடுத்தபடியாக தமிழில்தான் யேசுதாஸ் நட்சத்திரப் பாடகராக மாறினார். ஆனால் மலையாளத்தைப்போல அவ்வளவு எளிதாக அவர் தமிழில் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.1963 ஆம் ஆண்டில் வீணை எஸ்.பாலசந்தர் இயக்கி இசையமைத்த பொம்மை என்ற படத்தில்தான் முதன் முதலாகத் தமிழில் பாடும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. “நீயும் பொம்மை நானும் பொம்மை" என்ற பாடல். அடுத்த தமிழ் படத்தில் வாய்ப்புக் கிடைக்க மேலும் ஒரு வருடம் காத்திருக்க நேர்ந்தது. காதலிக்க நேரமில்லை (1964) படத்தில் "என்ன பார்வை உந்தன் பார்வை" என்ற பாடலை பி.சுசீலாவுடன் இணைந்து பாடினார்.

அடுத்த பத்தாண்டுகள் தமிழில் சிறப்பான பாடல்கள் ஏதும் இல்லாமல் சென்றது யேசுதாஸுக்கு. ஆனால் இதுதான் மலையாளத்தில் யேசுதாஸ் உச்சமான படைப்பூக்கத்துடன் பாடிய காலகட்டம்.

பின்னர் எம்.ஜி.ஆர் நடித்த உலகம் சுற்றும் வாலிபன் (1973) படத்தில் "தங்கத் தோணியிலே" பாடலைப் பாடினார். ஆனால் எம்.ஜி.ஆரின் "விழியே கதையெழுது '(உரிமைக்குரல்-1974) பாடல்தான் யேசுதாஸின் பெரிதும் ரசிக்கப்பட்ட முதல் தமிழ்ப்பாடல். அதன் பின்னர் எம் ஜி ஆர் நடித்த பல்லாண்டு வாழ்க (1975) படத்தின் அனைத்துப் பாடல்களையும் பாடும் வாய்ப்பும் யேசுதாஸுக்குக் கிடைத்தது. அதில் “போய்வா நதியலையே”, “அன்புக்கு நான் அடிமை," "ஒன்றே குலமென்று பாடுவோம்” போன்ற வெற்றிபெற்ற பாடல்கள் இடம் பெற்றிருந்தன. மேலும் "என்னை விட்டால் யாருமில்லை” (நாளை நமதே -1975), "இந்த பச்சைக் கிளிக்கொரு" (நீதிக்குத் தலைவணங்கு -1976) போன்ற பாடல்களையும் எம்.ஜி.ஆரின் நடிப்பில் பாடினார் யேசுதாஸ். சிவாஜி நடித்த படங்களிலும் பல வெற்றிப் பாடல்களை பாடினார். "மலரே குறிஞ்சி மலரே" (டாக்டர் சிவா), "கங்கை யமுனை இங்குதான் சங்கமம்" (இமயம்) போன்றவை உதாரணம். ஆனால் இதை எல்லாம் விட அவள் ஒரு தொடர் கதை'(1978) படத்தில் இடம்பெற்ற "தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு" பாடல்தான் யேசுதாஸை தமிழில் மிகவும் பிரபலமாக்கியது.

இளையராஜா தொடர்ந்து யேசுதாசுக்கு வாய்ப்புகள் வழங்கி வந்தார். பெரும் வெற்றிபெற்ற "பூவே செம்பூவே", "ஆராரிரோ பாடிய தாரோ", "ராஜராஜ சோழன் நான்", "தென்றல் வந்து என்னைத் தொடும்", "கண்ணே கலைமானே", "பூங்காற்று புதிதானது", "வெள்ளைப்புறா ஒன்று" என பல இளையராஜாப் பாடல்கள் யேசுதாஸின் குரலில் வெளிவந்து மிகவும் பிரபலமடைந்தது. தமிழ் நாடு அரசின் சிறந்த பின்னணிப் பாடகருக்கான விருதை எட்டு முறை வென்றிருக்கிறார் யேசுதாஸ். "அதிசய ராகம்" (அபூர்வ ராகங்கள்), "செந்தாழம் பூவில்" (முள்ளும் மலரும்), "கல்யாண தேனிலா" (மௌனம் சம்மதம்), "உன்னிடம் மயங்குகிறேன்" (தேன் சிந்துதே வானம்) போன்று வெகுசிறப்பாக ரசிக்கப்பட்ட யேசுதாஸ் பாடல்களின் வரிசை நீளமானது.

தெலுங்கிலும் வெகுவாகப் பாராட்டப்பட்ட பாடகராக மாறினார். பல சூப்பர்ஹிட் பாடல்களுடன், ஆந்திர மாநில அரசின் சிறந்த பாடகருக்கான விருதையும் ஆறு முறை பெற்று இருக்கிறார். மேகசந்தேசம் என்ற படத்தின் பாடல்களுக்காக அங்கு தேசிய விருதையும் பெற்றார் யேசுதாஸ். எழுபதுகளின் இறுதியிலும் எண்பதுகளிலும் கன்னட சினிமாவிலும் பல பிரபலமான பாடல்களுடன், மாநில அரசின் ஐந்து விருதுகளும் கிடைத்திருக்கிறது யேசுதாஸுக்கு. சலீல் சௌத்ரி இசையமைத்த சின்னா நின்னா முத்தாடுவே (1977) படத்தில் இடம்பெற்ற “ஜோ ஜோலாலி” என்ற அவரது பாடல் கன்னடத்தின் என்றென்றும் விரும்பப்படும், மிகவும் புகழ்பெற்ற தாலாட்டுப் பாடலாகும்.

யேசுதாஸை இந்தி சினிமாவுக்குக் கொண்டு சென்றவரும் சலீல் சௌத்ரிதான். சலீல்தா இசையமைத்த ஆனந்த் மஹல் (1977) என்ற படத்திற்காக பதிவு செய்யப்பட்ட “நி ச க ம ப நி” பாடலே யேசுதாஸின் முதல் இந்திப்பாடல். சலில்தாவின் இசையிலமைந்த சோட்டி ஸி பாத் என்ற படத்தில் இடம்பெற்ற “ஜானேமன்” என்ற பாடல் தான் அவரது பிரபலமடைந்த முதல் இந்திப் பாடல். அதன் பின்னர் இசையமைப்பாளர் ரவீந்திர ஜெயின் பிரபலமான பல பாடல்களை யேசுதாஸுக்கு வழங்கி அவருக்கென ரசிகர் கூட்டத்தை அங்கு உருவாக்கினார். 1976ல் வந்த சிட் சோர் என்ற படத்தில் இடம்பெற்ற “ஜப் தீப் ஜலே ஆனா”, “தூ ஜோ மேரெ சுர் மே” போன்ற பாடல்கள் மறக்கமுடியாதவை. ஜெய்தேவும் அற்புதமான சில பாடல்களை யேசுதாஸின் குரலில் உருவாக்கினார். ஏன் பப்பி லஹிரி கூட “ஜித் நா கரோ”, “மானா ஹோதும்” போன்ற இனிமையான பாடல்களை யேசுதாஸுக்கு வழங்கினார்.

சலில்தாவே யேசுதாசை வங்காளத்துக்குக் கொண்டு சென்று கமல்ஹாசன் நடித்த வங்கப்படமான கொபிதா உள்ளிட்ட படங்களில் பல சிறப்பான பாடல்களை அவருக்கு அளித்தார். மேற்கு வங்க அரசின் சிறந்த பாடகருக்கான விருதையும் ஒருமுறை பெற்றார் யேசுதாஸ். உலகில் மிக அதிகமாக பாடல்கள் பதிவு செய்யப்பட்ட பாடகர்களில் ஒருவர் யேசுதாஸாகும். கடந்த 48 வருடங்களில் நாற்பதாயிரத்துக்கும் மேற்பட்ட அவரது பாடலகள் பதிவாகியுள்ளன. ஏழுமுறை தேசிய விருதுகளையும், பத்மபூஷன், பத்மஸ்ரீ போன்ற விருதுகளையும் பெற்றிருக்கிறார். கேரளாவின் 16 மாநில அரசு விருதுகள் உட்பட மொத்தம் 34 மாநில அரசு விருதுகளைப் பெற்றிருக்கிறார்.

திரைப்பாடல்களிலும் பக்திப் பாடல்களிலும் ஒரு உச்சநட்சத்திரமாக மாறிய பின்னர் யேசுதாஸ் தன்னை ஒரு கர்நாடக சங்கீதப் பாடகராகவும் முன்நிறுத்தினார். பல்வேறு கர்நாடக இசைக்கச்சேரிகளை உலகமெங்கும் நிகழ்த்தினார். இப்போதும் அவரது கச்சேரிகள் நிகழ்கின்றன. கர்நாடக இசையை ஜனரஞ்சகமாக்க முயன்றவர்களில் முதலிடத்தில் இருப்பது யேசுதாஸே என அவரது ரசிகர்கள் நம்புகின்றனர்.

அவரது பக்திப்பாடல்கள் இதயத்தை உருகவைப்பவை என பல பக்தர்கள் கருதுகிறார்கள். வயதையும் காலத்தையும் கடந்த, என்றும் இனிமையான பாடகராகவே அவரை அவரது பெரும்பாலான ரசிகர்கள் எண்ணுகிறார்கள்.

இந்தியாவில் தோன்றிய பாடகர்களில் ஒரு மிகச்சிறந்த ஆண்குரலுக்குச் சொந்தக்காரர் யேசுதாஸ் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. திரை இசையில் யேசுதாசின் சாதனைகள் மகத்தானவை என்பதிலும் சந்தேகமில்லை. ஆனால் கேரளாவில் பலர் நம்புவது போல உலகத்தில் பிறந்த பாடகர்களிலேயே மிகச்சிறந்தவர் யேசுதாஸா? இசையை விரும்பத் தொடங்கிய காலத்திலிருந்தே வாழ்வின் பின்னணி இசைபோல அமைந்த யேசுதாஸ் பாடல்களோடு வளர்ந்த எனக்கும் அவரது பாடல்களையும் பாடும்முறையையும் உணர்ச்சிவசப்படாமல் விலக்கிப் பார்ப்பது இலகுவானதாக இருந்ததில்லை. ஆனால் அப்படி விலக்கி பார்க்கும்போதெல்லாம் சங்கடமான முடிவுகளுக்குத் தான் நான் வந்து சேர்ந்ந்திருக்கிறேன்.

யேசுதாஸின் சோகப்பாடல்கள் கேரளாவின் ஒரு கலாச்சாரமாகவே ஆகிவிட்டது. தன் பாடல்கள் வழியாக யேசுதாஸ் கேரளாவின் வரலாற்றுச் சோகத்தை வளர்த்தெடுத்தார் என்று கூட சொல்லலாம். காதலோடு சம்பந்தப்பட்ட மெல்லிய துயரம், வேதனை, பிரிவு, காதல் தோல்வி மற்றும் மனச்சோர்வு போன்ற உணர்வுகளை வெளிப்படுத்தும் பாடல்கள் எல்லாம் யேசுதாஸின் பாடும்முறையில் அற்புதமாக வெளிப்பட்டது. ஆனால் அவரது பாடல்கள் எல்லாவற்றிலும் துயரத்தின் இழையொன்று அடிநாதமாய் ஓடிக் கொண்டேயிருக்கும்.

மகிழ்ச்சியான உணர்வுகளையோ, கொண்டாட்டமான மனநிலையையோ வெளிப்படுத்துவதற்கான பாடலென்றாலும் அதிலும் மெலிதான சோகம் பரவுவதை நாம் உணர முடியும். இப்படியாக சந்தோஷமான மனநிலையை வெளிப்படுத்த வேண்டிய பாடல்கள் அவரது பாடும் தொனியால் சோகமான பாடலைப் போல் மாறிவிடும். உதாரணமாக, "ராஜராஜ சோழன் நான்" (ரெட்டைவால் குருவி), "உன் பார்வையில் ஓராயிரம்" (அம்மன் கோவில் கிழக்காலே) போன்ற பாடல்களை கவனமாக கேட்டுப் பாருங்கள். ஏன் அவரது டப்பாங்குத்து பாடல்களான "அடி கானக்கருங்குயிலே" (பூந்தோட்ட காவல்காரன்), "வச்சுக்கவா ஒன்ன மட்டும்" (நல்லவனுக்கு நல்லவன்) போன்றவற்றை மீண்டும் கேட்டுப்பாருங்கள். மகிழ்ச்சிகளும் கொண்டாட்டங்களும் வர்ணிக்கும் பாடல்களில் சோகத்தின் கீற்றொன்று இழையோடிச் செல்வதை நிச்சயமாக உணர முடியும். இனிய இசை துயரமானதே என்று சொல்வார்கள். ஆனால் விதவிதமான உணர்ச்சிகள் வெளிப்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட திரைப்பாடல்கள் அனைத்துமே துயரப்பாடல்களாக மாறுவதும் ஒரு பெரும் துயரம் தானே!

தமிழ் சினிமா இசையமைப்பில் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரேயொரு சாதனையாளர் மட்டுமே கோலோச்சி வந்திருக்கின்றனர். ஆனால் மலையாள சினிமா இசையின் பொற்காலம் என்பது மிகச்சிறந்த பல இசையமைப்பாளர்கள் ஒரே நேரத்தில் பங்குபெற்றதாகவே அமைந்திருந்தது. ஆனால் அந்தப் பாடல்களில் பெரும்பாலானவை யேசுதாஸின் குரலில்தான் வெளி வந்தது. அதனால் அந்தப் பாடல்களின் இசை அமைப்பில் இருந்த பன்முகத்தன்மை பாடல்களின் வெளிப்பாட்டில் இல்லாமல் போய்விட்டது.

யேசுதாஸின் குரலும் ஆளுமையும், திரை இசை ரசிகர்கள் மத்தியில் அவருக்குக் கிடைத்த மாபெரும் அங்கீகாரமும் காரணமாக, யேசுதாஸின் பாடும்முறை மட்டுமே சிறந்தது என்ற ஒரு பிரமை மலையாள இசையை ஆக்ரமித்தது. அவரது கம்பீரமான குரலும் பாடல் முறையின் சோக பாவமும் எல்லாப் பாடல்களுக்கும் பாடகர்களுக்கும் அளவுகோளானது. மற்ற பாடகர்கள் உள்ளே வராமல் போனதற்கும், வந்தவர்கள் பிரபலமடையாமல் போனதற்க்கும் இதுதான் காரணம். பிறகுவந்த பாடகர்கள் எல்லோருமே யேசுதாஸின் பாணியிலேயே பாடுவதைக் கேட்கவேண்டிய நிலைமைதான் மலையாளப் பாடல் ரசிகர்களுக்கு நேர்ந்தது. ஒவ்வொரு வளர்ந்து வரும் பாடகர்களும் அவரை நகலெடுப்பதற்கு மட்டும் தான் முயற்சி செய்தார்கள். சோகமோ வலியோ அல்லாத பிற உணர்வுகள் மலையாளப் பாடல்களுக்கு அன்னியமாகி விட்டது.

அவரது முந்தைய காலப் பாடல்களில், குறிப்பாக பாபுராஜ், சலில்தா போன்றவர்கள் இசையமைத்த பாடல்களில் உணர்ச்சிபூர்வமான ஆழங்களும், நுட்பமான ஏற்ற இறக்கங்களுடன் கூடிய பாவனைகளும் நிரம்பியிருந்தது. ஆனால் மெல்ல மெல்ல அவரது பாடல்களில் இருந்த நுட்பமான வேறுபாடுகளின் இனிமை இல்லாமல் போனது. காலங்கள் செல்லச் செல்ல அவரது பாடல்கள் முழங்கும் குரல் மட்டுமாக மாறி விட்டது. ஏற்ற இறக்கங்களுடன் ஒலிக்க வேண்டிய ஒவ்வொரு சுரமும், ஒரே தொனியில் ஒலித்து இறுக்கமானதாக வெளிப்பட்டது.

தனது பாடல்களில் இடம்பெறும் ஒவ்வொரு சுரமும் ஒரே மாதிரியான ஒலி அதிர்வுடன் ஓங்கி ஒலிக்க வேண்டும் என விரும்பிய தேவராஜன் போன்ற இசை அமைப்பாளர்களின் தாக்கமும் இதற்குக் காரணமாக அமைந்திருக்கலாம். யேசுதாஸ் கர்நாடக இசையில் அதீத கவனம் செலுத்தத் தொடங்கிய பின்னர் இப்படி ஓங்கி ஒலிக்கும் பாடும்முறையே அவரது நிரந்தரமான பாணியாகி விட்டது.

அவரது கர்நாடக இசையோ ஆழ்ந்த கர்நாடக இசை ரசிகர்களால் ஏற்றுக்கொள்ளப்படவுமில்லை. தீவிர கர்நாடக செவ்வியல் இசை ரசிகரும் விமர்சகருமான ஆர்.ராமகிருஷ்ணன் யேசுதாஸின் கர்நாடக சங்கீதத்தைப் பற்றிக் குறிப்பிடுகையில் “யேசுதாஸ் மிகச்சிறந்த குரல்வளம் உடையவர். ஆனால் குரல் மட்டுமே இசையல்ல. நல்ல குரல் என்பது நல்ல கையெழுத்தைப் போன்றதுதான். கையெழுத்தை அழகாக எழுதுபவர் அம்மொழியின் விற்பன்னர் என்று அர்த்தமல்ல. மொழி தனக்கென ஒரு இலக்கணத்தையும், பின்பற்றவேண்டிய பல விதிமுறைகளையும் கொண்டுள்ளது. இலக்கிய அறிவு பாலர் பள்ளி மாணவர்களால் மதிப்பிடப்படுவதல்ல. அதே மாதிரி செவ்வியல் இசைப்பாடகர்களின் பாடும் முறை இசையறிவு கொண்டவர்களாலும், அதைப் புரிந்துகொண்டவர்களாலுமே மதிப்பிட முடியும். கர்நாடக இசையைப் பற்றி எதுவுமே அறியாதவர்களே ‘யேசுதாஸ் மிகச்சிறந்த சங்கீத வித்வான்’ என்று சொல்வார்கள்” என்றார்.

யேசுதாஸும் தன்னுடைய கர்நாடக சங்கீதத்தைப் பற்றி உயர்வான தன்னம்பிக்கையுடன் இருந்ததில்லை எனப்படுகிறது. “என்னுடைய இசையைக் கர்நாடக சங்கீதமாக கருதமுடியாதென்றால் அதை ‘பாரதீய சங்கீதம்’ என அழைத்துக் கொள்ளுங்கள்” என்றுகூட அறிவித்திருக்கிறார் அவர். கர்நாடக இசையை ஜனரஞ்சகமாக்கும் முயற்சிகளும் தேவை இல்லாதவை. செவ்வியல் இசை முற்றிலுமாக ஒருபோதும் ஜனரஞ்சகமாகப் போவதில்லை. அது தேவையுமில்லை.

மலையாளம் அல்லாத பிற மொழி வார்த்தைகளைச் சரியாக உச்சரிப்பதில் யேசுதாஸ் பிழைசெய்து கொண்டேயிருந்தார் என்பது அவரது இன்னுமொரு பலவீனம். தென்னிந்திய மொழிகளில் அடைந்த இடத்தை இந்தியில் அவர் அடையமுடியாமல் போன தன் காரணம் கூட உச்சரிப்பில் இருந்த இந்தக் குறைபாடே. யேசுதாஸின் மலையாள உச்சரிப்பு ஈடு இணையற்றது என்று சொல்வார்கள் அவரது ரசிகர்கள். ஆனால் மலையாளத்தில்கூட ‘ஸ்னேஹம்’, ‘ப்ரஹ்மம்’ போன்ற வார்த்தைகளை ‘ஸ்னேகம்’ ‘ப்ரம்ஹம்’, என்று தான் அவர் உச்சரிக்கிறார்.

2004ல் அவருடைய பாடல்களை மேடையில் பாடுவதற்கு ராயல்டி தொகை தரவேண்டும் என்று புது தலைமுறை பாடகர்களிடம் கட்டளையிட்டு சர்ச்சைக்கு ஆளானார் யேசுதாஸ். “யேசுதாஸின் பாடல்களை இசைநிகழ்ச்சிகளில் பாடுவதாக இருந்தால் அதற்கு ராயல்டி தொகை தரவேண்டும்” என யேசுதாசின் மகன் வினோத் யேசுதாஸ் நிர்ப்பந்திப்பதாக பின்னணிப் பாடகர் உன்னிமேனன் கூறியபோது பெரும் சர்ச்சை உருவானது. மலையாளத் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் யேசுதாஸின் பாடலை அவருக்கு ராயல்டி செலுத்தாமல் பாட அனுமதி மறுக்கப்பட்டதாக மது பாலகிருஷ்ணன் என்ற பாடகர் குறிப்பிட்டார். இந்த சர்ச்சையினால் யேசுதாஸ் ரசிகர்கள் பெரும் அதிருப்தி அடைந்தார்கள். இதனால் முதன்முதலாக கேரளத்தில் அவரது புகழுக்கு சரிவு ஏற்பட்டது. பின்னர் அவர் இதுகுறித்த தனது அறிவிப்புகளைத் திரும்பப் பெற்றுக் கொண்டார். இதுபோல் மலையாளத் திரை இசையை முற்றிலுமாகத் தன் வியாபாரமாக்கவும் ஒரு கட்டத்தில் முயன்றிருக்கிறார் யேசுதாஸ். 70களில் அவர் ஆரம்பித்த இசை நிறுவனமான தரங்கிணி ரெக்கார்ட்ஸுக்கு இசை வினியோக உரிமை அளிக்காத திரைப்படங்களிலோ இசைத்தட்டுகளிலோ பாட அக் காலகட்டத்தில் அவர் முற்றிலுமாக மறுத்தார்.

யேசுதாஸின் குரல் இசைத்தன்மை குறைந்ததாக மாறிப் பலகாலம் ஆகிவிட்டது. தொண்ணூறுகளின் மத்திக்குப் பிறகு சிறப்பாகப் பாடிய பாடல்களை அவரிடமிருந்து நாம் கேட்டது குறைவே. அவரது சோகப் பாடல்கள்கூட ஒரு முழக்கமாக மாறிப்போனது. ஒரு முறை யேசுதாஸ் வெளிப்படையாக ‘லதா மங்கேஷ்கரின் குரல் முந்தைய காலங்களில் இருந்த இனிமையை இழந்துவிட்டது. எனவே அவர் பாடுவதை நிறுத்திக் கொள்ளவேண்டும்' என வேண்டுகோள் விடுத்திருந்தார். ஆனால் தன் பாடும் குரல் மோசமானதாக மாறிவிட்ட பின்னரும் அவர் பாடுவதை நிறுத்திக் கொள்ளவில்லை! சமீபத்தில் வந்த பழசி ராஜா படத்தின் ‘ஆதியுஷஸ் சந்த்ய’ போன்ற பாடல்களை உன்னிப்பாகக் கேட்டுப்பாருங்கள்.

மதம், கடவுள் சார்ந்த அவருடைய நிலைப்பாடுகள் கூட நிச்சய மற்றதாகவே தோன்றுகிறது. எந்தக் கேள்விக்குப் பதில் அளித்தாலும் அதை மதம் சார்ந்த உரையாடலுக்குள் கொண்டு செல்வதை வழக்கமாகக் கொண்டிருப்பவர் அவர். மதத்துடனோ கடவுளுடனோ எந்தச் சம்பந்தமும் இல்லாத ஒரு விஷயத்தைப் பற்றி கருத்துச் சொல்வதாக இருந்தாலும் இறுதியாக அதில் கடவுளை இணைத்து விடுவார். “எது நடந்தாலும் கடவுளால் முன் தீர்மானிக்கப்பட்ட தாய் இருக்கிறது” என்ற கோட்பாட்டில் தீவிர நம்பிக்கை உடையவராக இருப்பவர் அவர். அப்படியென்றால் ஏன் இன்னும் குருவாயூர் கோவிலுக்குள் செல்வதற்காகப் போராடிக் கொண்டிருக்கிறார்? அவரைக் குருவாயூர் கோவிலுக்குள் நுழையவிடாத உயர்ஜாதி ஆதிக்கமும், மதவெறியும் கூட அவர் நம்பும் ஜகதீஸ்வரனால் முன் தீர்மானிக்கப்பட்டதுதானே?

நான் இப்போதும் யேசுதாஸின் அற்புதமான பல பாடல்களின் ரசிகனே. ஆனால் நாம் முன்பு ரசித்த, நம்முள் தாக்கத்தை ஏற்படுத்திய இலக்கியங்களை மறுவாசிப்புச் செய்வது போல, திரைப்படங்களை மறுபார்வைக்கு உள்ளாக்குவது போல, ஒரு காலகட்டத்தில் நம்மை பாதித்த இசையையும், பாடல்களையும் உணர்ச்சிவசப்படாமல் மீண்டும் கூர்ந்து கேட்பதும் நமது கலை உணர்வுகளும் மனித உணர்வுகளும் மேம்பட அவசியமானதேயாகும்.

தமிழில்: முபாரக்

http://uyirmmai.com/contentdetails.aspx?cid=3159

  • கருத்துக்கள உறவுகள்

எந்த கலைஞனாலும் அவரது தனிப்பட்ட வாழ்க்கை பற்றி ஆராட்சி செய்யாமல் பாடலை /கலையை ரசித்து விட்டு போகவேண்டியது தானே.

ஆரம்பத்தில் அவரது தமிழ் உச்சரிப்பும் சரியாக இருக்கவில்லை. காலப்போக்கில் அவர் தன்னை திருத்திக்கொண்டார்.நிச்சயமாக ஜேசுதாசின் மறக்கமுடியாத பல பாடல்கள் உள்ளன."உன்னிடம் மயங்குகிறேன்" பாடல் என்றென்றும் மறக்க முடியாத பாடல்.

இணைப்புக்கு நன்றி கிருபன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.