Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கே.பி.யை பயன்படுத்தும் கொழும்பின் அரசியல்...

Featured Replies

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு களத்தில் ஆயுதங்களை மௌனித்த நிலையில் இலங்கை அரசாங்கத்துக்கு இன்றுள்ள மிகப்பெரிய சவால் 'தமிழ் டயஸ்போரா" (Tamil Diaspora) எனப்படும் புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகம்தான். கடந்த மூன்று தசாப்த காலத்தில், போர் காரணமாகவும், தமிழ் மக்களுக்கு எதிராக அவர்களுடைய தாயகத்தில் பிரயோகிக்கப்பட்ட ஒடுக்குமுறைகளினாலும் கொழும்புக்கு அச்சுறுத்தலைக் கொடுக்கக்கூடிய ஒரு சக்தியாக புலம் பெயர்ந்த தமிழர்கள் வளர்ச்சியடைந்துள்ளார்கள் என்பது உண்மை. இந்த தமிழ் டயஸ்போரா ஒரு பலமான சக்தியாக இருப்பதென்பது தமக்கு எப்போதும் ஒரு அச்சுறுத்தலாக இருக்கும் எனக் கருதுவதால்தான் அதனை இலக்குவைத்து செயற்பாடுகளை இலங்கை அரசாங்கம் இப்போது முன்னெடுத்திருக்கின்றது.

இன்றைய நிலையில் தமிழ் டயஸ்போராதான் தமக்குள்ள ஒரே அச்சுறுத்தல் என்பதை மகிந்த அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்கள் சிலரே வெளிப்படையாக ஒப்புக்கொண்டிருக்கின்றார்கள். சிங்கள அரசுக்கு ஆலோசனை வழங்கும் சிங்கப்பூர் பல்கலைக்கழகம் ஒன்றில் போராசிரியராகக் கடமையாற்றும் கலாநிதி றோஹான் குணரட்ண என்பவரும் தமிழ் டயஸ்போராவினால் உருவாகிவரும் அச்சுறுத்தல்கள் தொடர்பாக கொழும்பை தொடர்ந்தும் எச்சரித்து வருகின்றார். சர்வதேச பயங்கரவாதம் தொடர்பில் நிபுணத்துவம் பெற்றவரான றோஹான் குணரட்ண, புலம்பெயர்ந்த தமிழ் சமூகத்தை எவ்வாறு கையாள வேண்டும் என்பது தொடர்பில் அரசாங்கத்துக்கு ஆலோசனைகளையும் வழங்கிவருகின்றார்.

றோஹான் குணரட்ணதமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் சர்வதேச வலைப்பின்னல் இப்போதும் மிகவும் மிகவும் செயல் ஊக்கத்துடன் செயற்படுவதாக றோஹான் குறிப்பிடுகின்றார். தமிழ் டயஸ்போராதான் இந்த சர்வதேச வலைப் பின்னலுக்கான பலத்தைக் கொடுப்பவர்களாக இருக்கின்றார்கள் என்பது அவரது கருத்து. சர்வதேச ரீதியாக இலங்கைக்கு எதிராக முன்னெடுக்கப்படும் பல்வேறு செயற்பாடுகளின் பின்னணியிலும் தமிழீழ விடுதலைப் புலிகளின் இந்த சர்வதேச வலைப்பின்னல்தான் இருப்பதாகக் குறிப்பிடும் அவர், இதனை முறியடிப்பதன் மூலமாகவே களத்தில் பெற்றுக்கொண்ட வெற்றியை நிரந்தரமாக்க முடியும் எனவும் குறிப்பிடுகின்றார். அதாவது விடுதலைப் புலிகளின் சர்வதேச வலைப்பின்னலைத் தகர்க்க வேண்டும். அதற்காக தமிழ் டயஸ்போராவைப் பலவீனப்படுத்த வேண்டும் என்பனதான் இலங்கை அரசின் அடுத்த இலக்கு!

இந்நிலையில்தான் புலம்பெயர் தமிழ் சமூகத்தைப் பிளவுபடுத்த அல்லது பலவீனப்படுத்தும் முயற்சிகளை மகிந்த அரசாங்கம் இப்போது முடுக்கிவிட்டிருக்கின்றது. இந்த முயற்சிகள் இரண்டு வகையாக இடம்பெறுகின்றது. ஒன்று - நேரடியான நடவடிக்கைகள். மற்றது மறைமுகமான நடவடிக்கைகள். இந்த முயற்சிகளின் ஒரு பகுதியாக புலம் பெயர்ந்த சமூகத்தின் ஒரு பிரிவினரை தம்வசப்படுத்தும் உபாயம் ஒன்றையும் இலங்கை அரசாங்கம் வகுத்துச் செயற்படுவதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. இதற்காக கே.பி. எனப்படும் விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் சர்வதேசப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதனை அரசாங்கம் பயன்படுத்துகின்றது என்பதை வாசகர்கள் புரிந்துகொண்டிருப்பார்கள். இப்போதுள்ள கேள்வி என்னவென்றால் கொழும்பு வகுக்கும் இந்த வியூகத்தை புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகம் எவ்வாறு உடைக்கப்போகின்றது என்பதுதான்!

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம்தான் புலம்பெயர் சமூகத்தை ஒரு குறிப்பிட்ட அரசியல் இலக்குடன் அணிதிரட்டுவதற்கு அடிப்படையாக இருந்துள்ளது என்பது உண்மை. சிறிலங்கா அரசாங்கமானது தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டத்தை கட்டுப்படுத்துவதில் தற்காலிக வெற்றியை ஈட்டியிருந்தாலும், தமிழ் டயஸ்போரா இன்றும் அதேபலத்துடன் இருக்கின்றது என்பதுடன், எதிர்காலத்தில் அதன் திட்டங்கள் செயற்பாடுகள் தமக்கு ஆபத்தானதாக அமையலாம் என்ற அச்சம் கொழும்பிடம் காணப்படுகின்றது. புலம் பெயர் சமூகத்தில் காணப்படும் புத்திஜீவிகள், மேற்கு நாடுகளின் தீர்மானங்களை எடுப்பதில் செல்வாக்கைச் செலுத்தக்கூடியவர்களாக இருப்பதுடன், புலம்பெயர் தமிழர்களின் கட்டுக்கோப்பான செயற்பாடுகளும் சர்வதேச சமூகத்தில் அழுத்தத்தைக் கொடுக்கக்கூடியளவுக்குப் பலமானதாகவே இருக்கின்றது.

புலம்பெயர் சமூகத்தின் செயற்பாடுகள் தொடர்பில் அரசாங்கம் அச்சமடைவதற்கு மூன்று காரணங்கள் உள்ளன.

ஒன்று - போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை நிலவரங்கள் தொடர்பில் இலங்கைக்கு எதிராக மேற்குலக நாடுகள் எடுக்கக்கூடிய தீர்மானங்களைப் பொறுத்தவரையில் புலம் பெயர்ந்த தமிழர்கள் செல்வாக்கைச் செலுத்தக்கூடியவர்களாக உள்ளனர். உதாரணமாக - இலங்கையில் இடம்பெற்ற போர்க் குற்றங்கள் தொடர்பில் தனக்கு ஆலோசனை வழங்குவதற்கான நிபுணர் குழு ஒன்றை ஐ.நா. செயலாளர் நாயகம் அண்மையில் அமைத்துக்கொண்டார். அமெரிக்காவினதும், புலம்பெயர்ந்த தமிழர்களினதும் அழுத்தங்கள் காரணமாகத்தான் இவ்வாறான குழு ஒன்றை அமைப்பதற்கான தீர்மானத்தை பான் கீ மூன் எடுத்ததாக இலங்கையின் அமைச்சர் ஒருவரே குற்றஞ்சாட்டியிருந்தமை கவனிக்கத்தக்கது.

அதாவது தமிழ் டயஸ்போராவினால் மேற்குலக நாடுகளில் முன்னெடுக்கப்படும் போராட்டங்கள் சர்வதேசத்தின் மனச்சாட்சியைத் தொடுவதாக அமைந்திருக்கின்றது. இதனை முறியடிக்கக்கூடியளவுக்குப் பலமான பிரச்சாரங்களை அரசாங்கத்தினால் முன்னெடுக்க முடியவில்லை. அதனைவிட வெளிநாடுகளிலுள்ள சிங்கள சமூகம் தமிழ் டயஸ்போரா அளவுக்குப் பலமானதாக இல்லை. இது எதிர்காலத்தில் சர்வதேச சமூகம் தமிழர்களுடைய பக்கம் சாய்வதற்குக் காரணமாகிவிடலாம் என்ற அச்சம் சிங்கள சமூகத்திடம் உள்ளது.

இரண்டு - தாயகத்தில் இராணுவ அடக்குமுறைகளால் தமிழர்கள் உணர்வுகளை இழந்தவர்களாக இருக்கின்ற போதிலும், புலம்பெயர் தமிழ் சமூகம் இன்றும் தமிழ்த் தேசிய உணர்வுடன் முன்பைவிட உத்வேகத்துடன் செயற்பட்டுவருகின்றது. இது எதிர்காலத்தில் களத்தில் தாக்கத்தை ஏற்படுத்துவதாக அமையலாம். புலம் பெயர் தமிழ் சமூகத்திடம் காணப்படும் நிதி வளம் இதற்குப் பயன்படுத்தப்படுவதுடன், எதிர்காலத்தில் ஆயுதப் போராட்டம் ஒன்று மீண்டும் முளைவிடுவதற்கும் இது வழிவகுக்கலாம் என்ற அச்சம் கொழும்பிடம் உள்ளது.

மூன்று - புலம் பெயர் தமிழர்கள் தமிழகத்திலுள்ள தமிழ் உணர்வாளர்களுடன் நெருக்கமான உறவுகளை வைத்துள்ளார்கள். தமிழகத்தில் உருவாகிவரும் நிலைமைகளும் தமக்கு ஆபத்தானது என்றே கொழும்பு கருதுகின்றது. குறிப்பாக நாம் தமிழர் போன்ற அமைப்புக்களின் தோற்றமும். மக்கள் மத்தியில் அதற்குக் கிடைத்துவரும் ஆதரவும் தமிழ்த் தேசியவாதம் தமிழகத்தில் வேகமாக வளர்ந்துவருவதைத் தெளிவாகக் காட்டுகின்றது. இந்த நிலையில் தமிழ் டயஸ்போரா, தமிழக தமிழ் உணர்வாளர்களுடன் வைத்துள்ள நெருக்கமான உறவுகள் எதிர்காலத்தில் தமக்குப் பாரிய தாக்கங்களை ஏற்படுத்தலாம் என கொழும்பு கருதுகின்றது.

இது போன்ற காரணங்களினால்தான் தமிழ் டயஸ்போராவைப் பலவீனப்படுத்த அல்லது பிளவுபடுத்த அரசாங்கம் முயற்சி செய்கின்றது.

நிலைமைகளை நன்கு கணித்துள்ள அரசாங்கம் தமிழ் டயஸ்போராவைப் பலவீனப்படுத்துவதற்கான முயற்சிகளில் இப்போது இறங்கியிருக்கின்றது. இதற்காக அரசு வகுத்துக்கொண்டுள்ள உபாயங்களில் இரண்டு அம்சங்கள் காணப்படுகின்றன.

ஒன்று - விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களைக் கொள்வனவு செய்வதற்கான நிதி உதவிகளை வழங்கியவர்கள் மற்றும் சட்டவிரோதமான கப்பல் போக்குவரத்து போன்றவற்றில் ஈடுபட்டவர்கள் அல்லது அதற்கு ஆதரவு வழங்கியவர்கள் என்ற வகையில் அவர்களுடைய செயற்பாடுகளுக்குச் சட்டரீதியான தடையைப் போடுதல். இதனை நோக்கமாகக் கொண்ட பிரச்சாரங்கள் ஏற்கனவே ஆரம்பமாகிவிட்டன.

இரண்டு - தற்போது அரசாங்கத்தின் 'வசம்" உள்ள கே.பி. போன்ற புலம் பெயர் சமூகத்துடன் நெருக்கமான தொடர்புகளைக் கொண்டிருப்பவர்களைப் பயன்படுத்தி புலம் பெயர் சமூகத்தின் ஒரு பகுதியைத் தம்வசப்படுத்திக்கொள்வது. அரசாங்கத்தின் இந்த முயற்சிக்கு கே.பி.யும் தாராளமாக உதவுகின்றார் என்பதை உறுதிப்படுத்தக் கூடிய செய்திகளே கிடைத்தவருகின்றன.

கே.பிகே.பி.யின் அழைப்பை ஏற்று புலம்பெயர் தமிழ் சமூகத்தைச் சேர்ந்த ஒன்பது தமிழ்ப் பிரமுகர்கள் அண்மையில் ஐரோப்பாவிலிருந்து கொழும்பு வந்து சென்றிருக்கின்றார்கள். இவர்களை கே.பி. வடபகுதிக்கு அழைத்துச் சென்று திரும்பியிருப்பது கொழும்பைத் திருப்திப்படுத்தும் வகையில் கே.பி. செயற்படத் தொடங்கியிருப்பதைக் காட்டி நிற்கின்றது. கே.பி.யை ஏனைய கைதிகளைப்போல தடுத்து வைத்து விசாரணைகளுக்கு உட்படுத்தாமல் அவரை வேறு வகையில் - அதாவது புலம்பெயர் தமிழ் சமூகத்தை வசப்படுத்திக்கொள்வதற்கு பயன்படுத்தியிருப்பது அரசாங்கத்தின் இராஜதந்திரத்தைக் காட்டுகின்றது.

புலம்பெயர்ந்த தமிழ் சமூகத்தைச் சேர்ந்த தொழில் அதிபர்கள் சிலர் ஏற்கனவே கொழும்புடன் நெருக்கமான உறவுகளை ஏற்படுத்திக்கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் எற்கனவே கொழும்பு வந்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது சகோதரர்கள் உட்பட பலரையும் சந்தித்துத் தமது திட்டங்களை வெளிப்படுத்தியிருக்கின்றார்கள். புலம் பெயர் சமூகத்தை வசப்படுத்த அரசாங்கம் எவ்வாறான திட்டங்களை வகுத்தாலும் கள நிலைமைகளில் அரசாங்கம் மாற்றங்களைச் செய்யப்போவதில்லை.

குறிப்பாக கடந்த வாரம் வவுனியாவில் தமிழ் வர்த்தகர் ஒருவர் ஆயுத முனையில் கடத்தப்பட்டு 30 லட்சம் ரூபா கப்பம் பெறப்பட்ட நிலையிலேயே விடுதலை செய்யப்பட்டிருக்கின்றார். யாழ்ப்பாணத்திலும் இந்த நிலை காணப்படுகின்றது. இந்த நிலையில் புலம்பெயர்ந்த தமிழர்கள் உள்நாட்டில் முதலீடு செய்வதாக இருந்தால் அவர்கள் அரசுடன் இணைந்து செயற்படும் ஆயுதக் குழுக்களுடன் உறவுகளைக் கொண்டவர்களாக இருக்க வேண்டும். ஏனெனில் மற்றவர்களுக்கு பாதுகாப்பை வழங்க அரசு தயாரில்லை.

இதனைவிட வடபகுதியில் பாரிய இராணுவ முகாம்களையும், சிங்களக் குடியேற்றங்களையும் அமைப்பதற்காக தமிழர்களின் நிலங்கள் அபகரிக்கப்படுகின்றன. இதனைவிட வடபகுதியில் முதலீடுகளைச் செய்வதற்கு சிங்கள வர்த்தகர்களே ஊக்குவிக்கப்படுகின்றார்கள். ஆவர்களுடைய பாதுகாப்பை மட்டும் உறுதிப்படுத்துவதற்கு மட்டுமே அரசாங்கம் தயாராக இருக்கின்றது.

ஏ-9 வீதியில் முறுகண்டிக்கு அண்மையில் பாரிய ஹொட்டல் ஒன்று அவசரமாக அமைக்கப்படுகின்றது. இதில் சிங்கள வர்த்தகர்களே முதலீடு செய்திருக்கின்றார்கள். இவை அனைத்தும் அரசாங்கத்தின் திட்டங்களைப் புலப்படுத்துவதாக அமைந்திருக்கின்றது.

ஆக, தமக்கு ஆதரவான சில சக்திகளைப் பயன்படுத்தி புலம் பெயர்ந்த தமிழ் சமூகத்தைப் பிளவுபடுத்தும் அரசாங்கம், அவர்களுக்கான முதலீட்டு வாய்ப்புக்களைச் செய்துதருவதாகச் சொல்லிக்கொண்டாலும், அதன் பின்னணியிலுள்ள சதித் திட்டங்களைப் புரிந்துகொள்ள முடியாதவர்களாக தமிழர்கள் இல்லை.

குறிப்பாக வடக்கில் முன்னெடுக்கப்படும் இராணுவ மயமாக்கலின் நோக்கங்களைப் புரிந்துகொள்ள வேண்டிய அவசரம் தமிழர்களுக்கு உள்ளது. இதற்கு எதிரான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டியவர்களும் புலம் பெயர்ந்த தமிழ் மக்கள்தான்! கே.பி. போன்றவர்களின் செயற்பாடுகள் சலசலப்பை ஏற்படுத்தினாலும் அவர்களுடைய முயற்சிகள் பிசுபிசுத்துப்போவதைத்தான் இப்போது காணமுடிகின்றது.

பூராயத்திற்காக

கொழும்பிலிருந்து சத்தியன்

http://www.pooraayam.com/article/573-2010-08-06-01-39-39

கே பி யிடம் சென்று வந்த ஒன்பது பேரையும் இப்போது காணவில்லை. இன்னுமொரு அழைப்பு கே பி யிடமிருந்து வந்தாலும் இவர்கள் போகமாட்டார்கள். இனிமேல் கே பி எப்படித்தான் செயற்பட்டாலும் இலங்கையரசிற்குப் பயன் ஏதும் கிடைக்கப்போவதில்லை. கே பி யை வைத்துக் கொண்டு, அல்லது அரசாங்கமே கே பி சார்பில் அறிக்கைககளை வெளியிட்டாலும் பயனில்லை. இப்படியே ஒரு போனில் கதைப்பதைப் போல் கே பியைப் படம்பிடித்து பத்திரிகைகளில் போட வேண்டியதுதான்.

இலங்கையரசு இந்தச் சிக்கலில்லிருந்து விடுபடுவதற்கு ஒரே ஒரு வழிதான் இருக்கிறது. முழுமையாகச் சீனாவின் பக்கம் சாயாமல், மேற்கு நாடுகளை யும் இந்தியாவையும் உள்ளிழுப்பதுதான் வழி. அதற்கான தருணத்தை சிறிலங்கா எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.