Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

குமரன் பத்மநாதன் என்று அறியப்பட்ட கே.பி. அவர்களுக்கு...! திகதி: 07.08.2010 // தமிழீழம்

Featured Replies

குமரன் பத்மநாதன் என்று அறியப்பட்ட கே.பி. அவர்களுக்கு...!

திகதி: 07.08.2010 ஃஃ தமிழீழம்

உங்கள் நலம் விசாரிக்க வேண்டிய நிலையில் நீங்கள் இல்லை என்பதாலும், எங்கள் நலம் குறித்து சொல்வதற்கு எதுவும் இல்லாத நிலையிலும் பரஸ்பர விசாரிப்புக்கள் தேவையற்ற நிலையில் இந்த மடலைப் பகிரங்கமாகவே உங்களுக்கு வரைகின்றேன்.

ஈழத் தமிழினத்தின் அவலங்களைத் தரிசித்த காரணத்தாலும், சிங்களத்தின் மாறாத இனவாத சிந்தனையைப் புரிந்து கொண்ட காரணத்தாலும் தமிழீழ விடுதலைக்கான பயணத்தில் நாங்கள் தடம் மாறாத பயணத்தை மேற்கொண்டு வருவது, தற்போதைய உங்கள் அட்டகாசமான இருப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கலாம் என்பதால், எங்கள் சிந்தனைகளும், எழுத்துக்களும், நியாயங்களும் கூட உங்களுக்கு கோபத்தைத் தரலாம். கட்டாயம் கோபம் வந்தேயாகவேண்டும்.

ஆனாலும் உங்களால் புலம்பெயர் தமிழர்களான எங்களை எதுவும் செய்ய முடியாது. எதுவும் செய்ய முடியாது என்பது, எங்கள் மமதையின் உச்சரிப்பு அல்ல. கொண்ட இலட்சியத்தின் திமிர். உங்களால் எங்களில் சிலரை வீழ்த்த முடிந்தாலும் கூட, அது எங்கள் இலட்சியத்தை இன்னமும் கொழுந்து விட்டு எரியச் செய்யும். அது உங்களது முடி சூட்டுதலுக்கு இசைவானதாக அமையப் போவதில்லை.

'ஒருவனை அறிந்து கொள்ள வேண்டுமானால், அவனது நண்பனைத் தெரிந்து கொள்ளுங்கள்' என்பார்கள். இப்போது உங்கள் அணிக்கு டி.பி.எஸ். ஜெயராஜும் வந்துவிட்டார். சபாஷ்...! சரியான தெரிவுகளோடுதான் நீங்களும் களத்தில் நிற்கிறீர்கள். ஆனால், திறமை மிகுந்த ஊடகவியலாளரான டி.பி.எஸ். ஜெயராஜ் அவர்களது எழுத்துக்களுக்கு தமிழர்களிடையே ரசிகர்கள் இல்லை என்பதை நீங்கள் புரிந்து கொள்ளவில்லையே.

இத்தனை காலம் விடுதலைப் புலிகளுடன் இணைந்து? பணியாற்றிய உங்கள் தரப்பு நியாயங்களை எழுத தேசிய ஊடகவியலாளன் எவரும் கிடைக்கவில்லை என்பதிலிருந்தே நீங்கள் இப்போதே தோற்றுப்போய் விட்டீர்கள் என்பதை நீங்களும் ஏற்றுக் கொண்டுதான் ஆகவேண்டும். உங்கள் குறித்த வீடியோப் பதிவுகளில் உங்களைத் தரிசித்தேன்.

அப்பாடா...! முள்ளிவாய்க்கால் பேரவலத்திற்குப் பின்னர் இவ்வளவு சந்தோசமான ஒரு மனிதரை எங்குமே பார்த்ததில்லைப் போங்கள்... எந்தவொரு துக்கமோ, எந்தவொரு இழப்போ, எந்தவொரு சஞ்சலமோ, எந்தவொரு அழுத்தமோ நெருங்காத ஒரு தமிழரின் முகத்தைத் தேடிக் களைத்த என் விழிகளுக்கு அற்புதமான காட்சியாக இருந்தது.

எப்படி ஐயா உங்களால் மட்டும் இத்தனை மகிழ்ச்சியாக இருக்க முடிகின்றது? உங்கள் மனம் போல, உங்கள் விருப்பம் போல உங்கள் வாழ்வு அமைந்ததனால் வந்த பூரிப்பை உங்கள் முகத்திலும் பேச்சிலும் தரிசித்தேன். சிங்கள தேசத்தில் இப்போது உயிரோடு பிழைத்துள்ள தமிழர்கள் பாக்கியவான்கள். நீங்கள் அதை விடவும் மேலாக, எதிரியின் சிம்மாசன நிழலில் அல்லவா விளையாடுகின்றீர்கள்.

வீரத் தமிழ் மன்னன் எல்லாளனைக் காட்டிக் கொடுத்த அவன் தளபதியும் துட்ட கைமுனுவுடன் தாயம் விளையாடி மகிழ்ந்தானாமே... நானும் படித்திருக்கிறேன். பாவம், எல்லாளன் தமிழனாகப் பிறந்தது அவன் செய்த பாவம் அல்லவா...? நீங்களும், நானும் அதற்கு என்ன செய்யமுடியும்? அன்றும் நீங்கள் இருந்து, எல்லாளன் உங்கள் பேச்சைக் கேட்டிருந்தால் அவனும் உயிர் பிழைத்திருப்பான். உங்களால் அப்போது பிறந்திருக்க முடியவில்லை, அது ஆண்டவன் செய்த சதி. விட்டுவிடுங்கள், சரித்திரம் திரும்பியா வரப்போகின்றது?

சிங்களத்தால் அடித்து நொருக்கி, துவைத்துக் காயப்போட்டு, உயிரோடு விட்டு வைத்துள்ள தமிழர்களுக்கு உதவப் போகிறீர்களாமே...? அதுவும், புலம்பெயர் தமிழர்களிடம் பணம் பெற்று புனர்வாழ்வு கொடுக்கப் போகின்றீர்களாமே...? என்ன அற்புதமான சிந்தனை.... பகவத் கீதையில் கண்ணன் சொன்னதை நீங்கள்தான் சரியாகப் புரிந்து கொண்டுள்ளீர்கள்.

'எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது... எதற்காக அழுகிறாய்? எதை நீ கொண்டுவந்தாய் அதை நீ இழப்பதற்கு...' எதற்காகத் தமிழர்கள் அழ வேண்டும்? 'கொன்றவன் கண்ணன்..... கொல்பவன் கண்ணன்....' என்று கீதையே சொல்லும்போது, அந்தக் கண்ணன்தான் ராஜபக்ஷக்கள் என்று நீங்கள் சொல்வதைத் பாவித் தமிழர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்களா...?

வர... வரத் தமிழர்களுக்கு விதி மீது நம்பிக்கையே இல்லாமல் போய்விட்டது... பெரிய மீனைச் சின்ன மீன் சாப்பிடுவதை என்றாவது நிறுத்தியிருக்கிறதா...? அதற்காகச் சின்ன மீன்கள் பெரிய மீன்களோடு சண்டை போட்டுக்கொண்டா இருக்கின்றன...? பெரிய மீன்கள் வாழும் கடலில்த்தான் சின்ன மீன்களும் வாழ வேண்டியிருப்பதால், பெரிய மீன்களை சின்ன மீன்கள் அனுசரித்துத்தான் போக வேண்டும் என்ற உங்கள் தத்துவத்தை ஏற்றுக்கொண்டுதானே ஆகவேண்டும்.

பெரிய மீன்கள் பசி எடுக்கும்போது, சின்ன மீன்கள் இரையாக வேண்டியது சின்ன மீன்களுக்கு விதிக்கப்பட்ட விதி என்பது போல், சிங்களம் திமிர் எடுக்கும் காலங்களில் எல்லாம் தமிழர்கள் கொல்லப்படுவதும், எரிக்கப்படுவதும், அடிக்கப்படுவதும், அவமானப்படுத்தப்படுவதும் விதியாகத் தொடர்வதைத் தவிர்க்க முடியாது என்ற உங்கள் தத்துவத்தை ஏனோ தமிழர்கள் சந்தேகத்துடன் பார்க்கிறார்கள்.

ஈழத் தமிழர்களின் வாழ்வும், வழமும், மாண்பும், நலமும், மானமும் என எல்லாமே சிங்களத்தால் சூறையாடப்பட்டது தவிர்க்க முடியாதது. எல்லாவற்றையும் துடைத்துவிட்டு, மீண்டும் உங்கள் கரங்களை ஊன்றி எழுவதற்கு முயற்சி செய்யுங்கள்... நீங்கள் எதுவும் கேட்காதவர்களாக இருக்கும்வரை எங்களால் எந்தத் தொல்லையும் இருக்காது என்று சிங்களம் தரும் நல்வாய்ப்பை இந்தத் தமிழர்கள் புரிந்து கொள்கிறார்கள் இல்லையே என்ற உங்கள் ஆதங்கம் எங்களுக்குப் புரியாமல் இல்லை.

இழப்பதற்கு எதுவுமே இல்லை என்ற நிலைக்கு வந்த பின்னர், தமிழர்களாய் இருப்பதற்கு எதற்காக மானம்? என்ற உங்களது நியாயம் அவர்களுக்கு விழங்குவதாய் இல்லை. அதுவும் புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு விழங்குவதாக இல்லை. அதனால்தான், நீங்கள் உங்கள் உயிர்த் தோழர்கள் கோத்தபாயவுடனும், ஹெந்த விதாரணவுடனும் மூளையைக் கசக்கி, தமிழீழம் எங்கும் சிங்களக் குடியிருப்புக்களை நிறுவி, ஈழத் தமிழர்கள் தலை நிமிர்ந்து கேள்வி கேட்டு, மீண்டும் சிங்களத்திற்குக் கோபம் மூட்டாமல், அழிவிலிருந்து அவர்களைக் காப்பாற்றும் திட்டத்தை அரங்கேற்றி வருவதை இந்தத் தமிழ் ஜென்மங்கள் உணர்வதாய் தெரியவில்லை.

உயிர் வாழ்தல் என்பது ஈழத் தமிழர்களுக்கு நீங்கள் வாங்கிக் கொடுக்கும் வரமாகவே உள்ளது. அதை விடவும் எது வேண்டும் அவர்களுக்கு...? 'நான் உயிர்வாழ்தலுக்கான சமரசத்தைச் செய்து கொண்டதனால்இ சந்தோசமாக இல்லையா...?' என்று கேட்கும் உங்களைப் புரிந்து கொள்கிறார்கள் இல்லையே...! நீங்கள் புத்தரைக் கும்பிட்டதால்இ கோத்தபாயா குளிர்ந்துபோய் உங்களை ஆரத் தழுவினாராமே... அதற்காகத்தானே தமிழீழம் எங்கும் புத்த விகாரைகளை சிங்களம் விதைத்து வருகின்றது என்பதை இந்தத் தமிழ் மர மண்டைகள் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனவே...

உங்களால் வரவழைக்கப்பட்டுஇ கோத்தபாயவுடன் விருந்துண்ண வைக்கப்பட்டவர்களை, புலம்பெயர் தமிழர்கள் துரோகிகள் என்கிறார்களே... 'துரோகி' என்ற வார்த்தைக்கு இந்தத் தமிழர்களுக்கு எப்போதுமே அர்த்தம் புரிவதில்லை. நீங்கள் விடுதலைப் புலிகள் பக்கத்தில் இருக்கும்போது, சிங்கள அரச தரப்புடன் இணைந்து செயற்பட்டால் மட்டுமே 'துரோகி' என்பதை எப்படி இவர்களுக்குப் புரிய வைப்பது?

டி.பி.எஸ். ஜெயராஜ் சொல்கிறார், நீங்கள் வடக்கு - கிழக்கில் விரைவான மீள் குடியேற்றம் செய்யப் போகிறீர்களாம், தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் உறுப்பினர்களை விரைவாக விடுதலை செய்யப் போகின்றீர்களாம், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு - கிழக்குப் பகுதிகளில் பொருளாதார அபிவிருத்தி செய்யப் போகிறீர்களாம்... கேட்கச் சந்தோசமாக இருக்கின்றது... இராமன் கால்கள் பட்டு அகலிகை சாபம் நீங்கியது போல், ஒங்கள் கால்கள் பட்டு தமிழீழம் சாபம் நீங்கட்டுமே என்று இந்தத் தமிழர்கள் உங்களை நம்புகிறார்கள் இல்லையே...

ஆனாலும் ஒரு கேள்வி, தமிழீழத்தின் வளமான பகுதிகள் எல்லாம், இராணுவக் குடியிருப்புக்களாக மாற்றப்பட்டு வரும் நிலையில், பாவம் அந்த அப்பாவித் தமிழர்களை எங்கே குடியிருத்த உத்தேசித்துள்ளீர்கள்? அப்படிக் குடியெற்றப்பட்டாலும் அவர்களது உயிர்வாழ்தலுக்கு என்ன உத்தரவாதம்? சிங்களம் திருந்திவிட்டது என்று சத்தியம் செய்கிறீர்களா, அல்லது 'அந்தச் சிங்கங்கள் பசித்தாலும் இப்போது புல்லு மட்டும்தான் தின்னும்' என்று சமாதானம் சொல்லப் போகின்றீர்களா? பிடிப்பதும், அடிப்பதும், அடைப்பதும், விடுவதும் அவன் செயல் என்றே நாங்கள் வாழாவிருக்க..., புலம்பெயர் தேசங்களில் நாங்கள் தூங்கிக்கொண்டு இருக்க..., தமிழீழத்தைக் காவு கொடுத்து சிங்களத்திடம் இரஞ்சி விடுதலை பெற்றுக் கொடுக்கும் உங்கள் தியாகத்திற்கு ஈடு எதுவுமே ஆகாது....

விடுதலைப்புலி என்ற சந்தேகத்தில் நிரூபிக்கப்பட முடியாத குற்றச்சாட்டுடன், அல்லது உங்களைப் போலவே சிங்களத்திற்கு ஊழியம் செய்யத் தயாரான ஒரு சில நூறு போராளிகளின் விடுதலைக்காகவா விடுதலை வேள்வியை விலை பேசி விற்கிறீர்கள்? என்று புரியாத தமிழர்கள் உங்களைத் திட்டுவதும் எங்களுக்கு வருத்தத்தைக் கொடுக்கின்றது.

நீங்கள் ஆயுதம் கொடுத்தீர்கள், போராடினார்கள். நீங்கள் சயனைற் கொடுத்தீர்கள், குப்பி கடித்தார்கள். நீங்கள் ஜக்கெற் கொடுத்தீர்கள், அவர்கள் வெடித்துச் சிதறினார்கள். அது அவர்கள் தலைவிதி. இப்போது நீங்கள் உயிர் வாழ்வதற்காய் இந்தத் தமிழர்களிடம் பெரிதாய் என்ன கேட்டுவிட்டீர்கள்? மானத்தையும், வீரத்தையும், சுயமரியாதையையும் மட்டும்தானே கேட்கிறீர்கள். இது ஏன் இவர்களுக்குப் புரியவில்லை?

நீங்கள் யுத்தத்திற்காகக் காசு கேட்டீர்கள், அள்ளிக் கொடுத்தோம். நீங்கள் அங்காங்கே, சில முதலீடுகள் செய்ததை எப்படிப் பிழை என்று சொல்ல முடியும்? உங்கள் பெயரிலா கனடாவில் நகைக்கடைகள் இருக்கின்றன? உங்கள் பெயரிலேயா தொலைக்காட்சி இருக்கின்றது? உங்கள் பெயரிலேயா கட்டடங்கள் இருக்கின்றன? ஹோட்டல்கள் இருக்கின்றன? உங்கள் பெயரிலேயா கப்பல்கள் ஓடுகின்றன? எல்லாமே பினாமி பெயரில் அல்லவா இயங்குகின்றன.

இதையெல்லாம் உங்கள்மீது குற்றச்சாட்டாக வைத்தால், உலகம் தாங்குமா...? இப்போது, உங்கள் உதவியோடு அழிக்கப்பட்ட தமிழீழத்தைப் புனரமைக்க உங்களிடம் வாரி வழங்குவதுதானே முறை? அதை ஏன் இவர்கள் புரிந்து கொள்கிறார்கள் இல்லை...? சிங்களப் படையிடம் சரணடைந்த விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர்கள் எவரும் உயிரோடு இல்லையாமே...? வெள்ளைக் கொடியோடு சரணடையச் சென்ற அரசியல் போராளிகளும்இ தலைவர்களும் கோத்தபாயாவின் உத்தரவோடு சுட்டுக் கொல்லப்பட்டதில் என்ன தவறு இருக்க முடியும்...? அவர்கள் உங்களைப்போல் சமரசம் செய்து கொள்வார்கள் என்று எப்படி நம்ப முடியும்...?

சமாதான காலத்தில், உங்களைப் போல் அவர்களும் ஏதாவது ஏற்பாடு பண்ணியிருந்தால் பிளைத்துத்தான் இருப்பார்கள். அவர்களுக்கு அரசியல் புரியவில்லை. அது அவர்களுடைய தப்பு. ஆனால், உயிரோடு சரணடைந்த பாலகுமாரனும், யோகியும், புதுவை இரத்தினதுரையும் இன்னும் பல அற்புதமான மனிதர்களும் என்னவானார்கள்...? அவர்களும் உங்களைப்போல் சமரசம் செய்து கொள்ள மறுத்துவிட்டதால், உங்கள் நண்பர் அழிக்கச் சொல்லி ஆணையிட்டு விட்டாரா? கொஞ்சம் கேட்டுச் சொல்லுங்களேன்...

அவர்களது உறவுகள் இறுதிக்கடனுக்காவது அழுது தொலைக்கட்டுமே.... போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் புனர்வாழ்வும், போருக்குள் சிதைந்துபோன சிறுவர்களுக்குக் கல்வியுங்கூட வழங்குகிறீர்களாம்... கண்ணா... உன் கருணைக்கு அளவே கிடையாதா...? கொல்பவனும் நீ, கொல்லச் சொல்பவனும் நீ, காப்பாற்றுபவனும் நீ, உயிர் வாழ வைப்பவனும் நீயாகவே எங்கள் கண்ணுக்குக் காட்சி தருகின்றாயே...

பத்மநாபனே...

உன் கருணை வெள்ளத்தால் அழிந்துபோயுள்ள எங்கள் தமிழீழம் அழிழ்ந்து போக வேண்டாம்... உன்னால் முடிந்தால், உன் ஆருயிர் நண்பன் கோத்தபாயா மூலம் எங்கள் மக்களைத் திறந்து விடச் சொல்லு, எங்கள் மக்களை நாங்களே வாழ வைக்க எங்களுக்கு உள்ள தடையை நீக்கச் சொல்லு... நாங்கள் அவர்களை சொர்க்கத்தில் வாழ வைக்கின்றோம்... உனக்கு ஏன் கண்ணா வீண் சிரமம்...? எங்களிடம் யாசித்து எங்களுக்கே அவல் கொடுக்கிறாயே...

தொடரும்...

அறிவன்

யாழ் மாவட்டம்

தமிழீழம்

http://www.sangathie.com

Edited by aathirai

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.