Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காலச்சூழலில் அகப்பட்ட நினைவுகளை மீட்டெடுக்கும் படைப்பு

Featured Replies

பி. விக்னேஸ்வரன்

1970ஆம் ஆண்டு கே.எஸ். பாலச்சந்திரன் இலங்கையில் வானொலிக் கலைஞராகத் தெரிவுசெய்யப்பட்டு, நாடக ஒலிப்பதிவுகளுக்கு வரும்போது ஏற்பட்ட அறிமுகம் பின்னர் நான் தயாரிப்பாளனாக வானொலியிலும் தொலைக் காட்சியிலும் தயாரித்த பல நாடகங்களில் அவர் பங்குபற்றியதன் மூலம் மேலும் நெருக்கமானது. அங்குள்ள கலைஞர்களில் நான் மிக நெருக்கமாகப் பழகிய ஒருசிலரில் பாலச் சந்திரனும் ஒருவர். சினிமா, நாடகம், எழுத்திலக்கியம் என்று எந்தத் துறை பற்றியும் சம்பாஷிக்கக்கூடியவர் பாலச் சந்திரன். கலைத்துறையில் அவரது பன்முக ஆற்றல், ஈடுபாடு பற்றியெல்லாம் மிக விளக்கமாக பி.எச். அப்துல் ஹமீது அவர்கள் ‘கரையைத் தேடும் கட்டுமரங்கள்’ நாவலின் முகவுரையில் விவரித்திருக்கிறார்.

கரையைத் தேடும் கட்டுமரங்கள்

(நாவல்)

கே.எஸ். பாலச்சந்திரன்

karai.jpg

பக்: 306, விலை: ரூ150 ($15/-)

வெளியீடு:

வடலி பதிப்பகம், எண் 6/3, சுந்தரர் தெரு, எம்.ஜி.ஆர் நகர், சென்னை 600 078

தொலைபேசி: 0091-44-4354-0358

பாலச்சந்திரனின் பன்முக ஆற்றல் பற்றி அறிந்திருக்கும் எனக்கு அவரது மிகப்பிந்திய ஒரு வெளிப்பாடான நாவலாசிரியர் முகம் மிகுந்த வியப்பை அளிக்கிறது. இவர் இந்த ஆற்றலை முன்பே வெளிக்காட்டியிருந்தால் எழுத்துலகிலும் மிகவும் குறிப்பிடத்தக்க ஒருவராக இருந்திருப்பார். ஒருவேளை அவரது நீண்டகால, பல்துறை அனுபவங்கள்தான் இப்படியொரு ஆற்றலாக வெளிப்படுகிறதுபோலும்.

இந்த நாவல் எனக்குப் பல வழிகளிலும் மனத்துக்குப் பிடித்திருக்கிறது. காங்கேசன்துறையில், பாக்கு நீரிணையை வட எல்லையாகக்கொண்ட ஒரு காணிக்குள் இருந்த வீடொன்றில் எனது இளமைக்காலங்கள் கழிந்ததால், இந்த நாவலை வாசிக்கும்போது கடலின் பல்வேறு பருவகாலத் தோற்றங்களையும் காற்றையும் மணலையும் கடற்கரையின் பல்வேறு காட்சிகளையும் அதன் வாசனை முதற்கொண்டு மீண்டும் அனுபவிக்கும் வாய்ப்பை எனக்கு அளிக்கிறது. இதன் கதைக்களங்கள் எனக்கு மிகவும் பரிச்சயமானவை. மான்பாய்ஞ்சவெளி எமது அண்மைய ஊர். மயிலிட்டி, பலாலி, தொண்டைமானாறு, வசாவிளான், காங்கேசன்துறை எல்லாம் நான் நன்கறிந்த ஊர்கள்.

ஏன், பண்ணைப் பாலத்தால் செல்லும்போது விவரிக்கப்படும் காட்சிகள்கூட எனக்கு நன்கு பரிச்சயமானவைதான். பண்ணைப் பாலத்தின் இருமருங்கிலும் உள்ள கடலில் மீனவர்கள் நின்று மீன்பிடிக்கும் காட்சி, கரைகளில் சைக்கிள்களைக் கிடத்தியிருப்பது, வண்டிச் சக்கரங்களில் பேத்தை, நண்டு முதலியன நெரிபடும் சத்தம் எல்லாம் நான் அனுபவித்தவையே. தீவுப்பகுதிக்குச் செல்லும் பாதையில் கடலுக்கு அக்கரையில் தெரியும் தந்திக் கோபுரமும் குருநகர், யாழ்ப்பாணக் காட்சிகளும் அப்படியே கண்முன் தெரிகின்றன.

எனக்கு நன்கு தெரிந்த களத்தை விவரித்திருப்பதற்காக மட்டும் இந்த நாவல் எனக்குப் பிடித்தமானது என்பதல்ல. பாலச்சந்திரனின் இயல்பு கெடாது கதைசொல்லும் பாங்கு, மிகத் தேர்ந்த எழுத்தாளர்களுக்கே உரிய திறனாகும். திடீர்த் திருப்பம், விறுவிறுப்பு முதலியன வேண்டும் என்பதற்காக வலிந்து புனையாமல் நாம் நன்கறிந்த யாழ்ப்பாண உழைக்கும் வர்க்கத்தின் அன்றாட உழைப்பு, அதில் ஏற்படும் கஷ்டநஷ்டங்கள், அவர்கள் சந்திக்கும் அந்நிய மனிதர்கள், அவர்களுடனான உறவுகள், அவற்றால் அவர்களுக்குள் ஏற்படும் உறவுச் சிக்கல்கள், நன்மை தீமைகள் முதலியவற்றை அத்தனை இயல்பாக வெளிப்படுத்துகிறது இந்த நாவல்.

எமக்குத் தெரியாதவற்றை எழுதும்போது அவை எமக்குப் புதுப்புதுத் தகவல்களை, அறிவைத் தரலாம். ஆனால் அவை ஜனரஞ்சக அந்தஸ்தைப் பெறுவதில்லை. மாறாக எமக்குத் தெரிந்தவற்றை, நாம் அன்றாடம் காணும் காட்சிகளை, மனிதர்களை, உணர்வுகளை அப்படியே யதார்த்தமாகப் படைக்கும்போது நாம் எம்மை, எம்மைச் சுற்றியுள்ள மனிதர்களை, உணர்வுகளை, காட்சிகளை அப்படைப்பில் இனம் காண்கிறோம். அதனால் அவை அபிமான படைப்புகள் ஆகிவிடுகின்றன.

இரண்டுவிதமான படைப்புகள் மக்களிடையே வரவேற்பைப்பெறுகின்றன. ஒன்று, அதீதக் கற்பனைகளோடு புனையப்படும் படைப்புகள். எமது புராண, இதிகாசச் சாதனைகள், திரைக் கதைகள் குறிப்பாக இந்திய திரைக் கதைகள். நாம் என்னதான் பகுத்தறிவு உடையவர்களாக இருந்தாலும் அதை ஒருபுறம் தள்ளிவிட்டு, எமது சக்திக்கு அப்பாற்பட்டதைக் கற்பனை செய்வதிலும் அவற்றைக் கண்டு ரசிப்பதிலும் ஒருவித சந்தோஷத்தை அடைகிறோம். இவை மனரீதியான நிம்மதி, பாதுகாப்பு, சந்தோஷம் முதலிய உணர்வுகளை மனிதனுக்குக் கொடுக்கின்றன.

கடவுள் நம்பிக்கை முதல் ‘கந்தசாமி’ படத்தை ரசிப்பதுவரை இந்த மனநிலைதான். இதை மக்கள் விரும்பியே செய்கிறார்கள் என்று மனோதத்துவ ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். இத்தகைய அதீதப் புனைவுகளை ரசிக்கும் மக்களின் மனவியல்பை ‘Willing Suspension of Disbelieve’ என்று அழைப்பார்கள். எவ்வளவுதான் பகுத்தறிவு பேசினாலும்கூட ரகசியமாகவாவது இத்தகைய ரசனையைக்கொண்டிருப்பார்கள். ரஜினிகாந்த் சூப்பர்ஸ்டார் ஆனதற்கு இதுவே காரணம். இது தவறானதல்ல. சிறுவர்களுக்கான படைப்புகள் இத்தகையனவே. சிறுவர்கள் முற்றுமுழுதாக அவற்றை நம்பி, அந்த உலகுக்குள்ளே அமிழ்ந்து அவற்றை ரசிக்கிறார்கள். ‘ஹரிபொட்டர்’, பறவைகள், விலங்குகள் மனிதர்கள்போல் செயற்படும் அனிமேஷன் படைப்புகள் இத்தகையன.

அதேபோல் மிக யதார்த்தமாக உண்மை கூறும் படைப்புகளிலும் பெரும்பான்மையான மக்கள் தம்மை, தம் சூழலை, தம் உறவுகளை, உணர்வை இனம் காண்பதால் அவை பிரபலமாவதோடு உயர்ந்த இலக்கிய அந்தஸ்தையும் அடைகின்றன.

பாலச்சந்திரனின் ‘கரையைத் தேடும் கட்டுமரங்கள்’ இரண்டாவது வகைப்பட்ட ஒரு முயற்சி. அதில் அவர் கணிசமான அளவு வெற்றியடைந்திருக்கிறார் என்றே நான் கருதுகிறேன். இந்த நாவலில் விவரிக்கப்பட்டிருக்கும் மிக யதார்த்தமான தருணங்கள் அவை சம்பவங்களாக இருக்கட்டும், உணர்வு வெளிப்பாடுகளாக இருக்கட்டும், காட்சி வர்ணனைகளாக இருக்கட்டும் எல்லாமே மனதுக்கு மிகுந்த சந்தோஷத்தைக் கொடுக்கின்றன. அவர் காட்சிகளை, சம்பவங்களை விவரிக்கும் பாணி அப்படியே அவற்றை எம் மனக்கண்ணில் காட்சிரூபமாகப் பதியவைப்பதால் யதார்த்தமான திரைப் படத்தைப் பார்க்கும் உணர்வைக் கொடுக்கிறது.

எனக்கு இதை வாசிக்கும்போது நன்கு எழுதப்பெற்ற ஒரு திரைப்படப் பிரதியை வாசிக்கும் பிரமை ஏற்பட்டது. இந்நாவலில் கையாளப்பட்ட உருவகங்கள், குறியீட்டு வர்ணனைகள் மட்டுமல்ல மனித இயல்புகள் மிகமிக யதார்த்தமாக இருப்பதும் ஒரு கலைஞனுக்கு மிகவும் தேவையான, சகலவற்றையும் உற்று அவதானிக்கும் தன்மையைப் பறைசாற்றுகின்றன.

பாலச்சந்திரன் ஒரு நகைச்சுவைக் கலைஞராக அறியப்பட்டவர். வாழ்க்கையை உற்று அவதானித்து, அதன் அபத்தங்களை நையாண்டியாக வெளிப்படுத்துவது சிறந்த நகைச்சுவை என்று சொல்வார்கள். அவரிடமுள்ள அந்தத் தன்மை இந்நாவலில் பல இடங்களில் வெளிப்படுகின்றது. குறிப்பாக, மனஸ்தாபம்கொண்டு பிரிந்திருக்கும் உறவினர்கள், திருமணம் போன்ற விசேட நிகழ்வுகளில் பகைமை உணர்வைக் கைவிட்டு ஒன்றுசேரும்போது, சிறுசிறு காரியங்களுக்குக்கூட வலிந்து உறவுமுறை சொல்லி அழைத்து அவர்களை முன்னிலைப்படுத்தும் எமது இயல்பை விவரித்திருக்கும் விதம் எனக்குள்ளேயே புன்னகையை வரவழைத்தது.

அதேபோல் கனமாக, உணர்வுபூர்வமாகக் காட்சிகளை விவரித்தபோது அந்த உணர்வுகள் எம்மிடமும் ஏற்படுகின்றன. இந்த நாவலின் வெற்றிக்குப் பிரதான காரணம் அதில் இடம்பெறும் உரையாடல்களில் காணப்படும் யதார்த்தம். யாழ்ப்பாணப் பேச்சுவழக்கு பாலச்சந்திரனுக்கு மிகவும் பரிச்சயமானது. இலங்கை வானொலி நாடகங்களில் யாழ்ப்பாணப் பேச்சுவழக்கு யதார்த்தமாகக் கையாளப்பட்டது. வானொலி நாடகங்களில் மிகுந்த அனுபவம்கொண்ட பாலச்சந்திரனுக்கு இந்த ஆற்றல் இருப்பது அதிசயமானதல்ல.

இந்தக் காலகட்டத்தில் முப்பதாண்டுகளுக்கு முந்தைய காலப்பகுதியில் நடப்பதாக ஒரு கதையை எழுதுவது பற்றி யாரும் கேள்வி எழுப்பலாம் என்ற ஒரு ஐயம் பாலச்சந்திரனுக்கு இருப்பது அவரின் ‘என்னுரை’யில் வெளிப்படுகிறது. அந்தச் சந்தேகம் அவசியமற்றது. முதலாம் இரண்டாம் உலக யுத்தங்களை மையமாக வைத்துத் தற்போதும் படைப்புகள் வெளிவந்துகொண்டிருக்கின்றன. அப்படிப் பார்த்தால் கல்கியின் பொன்னியின் செல்வனும் சாண்டில்யனின் கடல்புறாவும் கதை நடைபெற்ற காலகட்டங்களிலா வெளிவந்தன?

பாலச்சந்திரன் அப்படியென்ன ஒரு காவியத்தை, மாஸ்டர் பீஸைப் படைத்துவிட்டாரா என்னும் கேள்வி எழலாம். நான் அப்படிச் சொல்லவில்லை. நான் வாசித்த, நான் அறிந்த ஈழத்துப் படைப்புகளில் பாலச் சந்திரனின் இந்தப் புதிய பரிமாண வெளிப்பாடு முக்கிய இடத்தைப் பெறுகிறது என்று சொல்வேன்.

இதில் சில நெருடல்களும் இல்லாமல் இல்லை. கதை இரண்டு வருடங்களுக்குள் நடப்பதாகச் சொல்லப்படுவதால், இயல்பாக நடைபெறுவதற்குத் தேவையான கால அவகாசம் குறைந்து சம்பவங்கள் விரைவாக நடப்பதான உணர்வை ஏற்படுத்துகின்றது. பீற்றர், மதலேனாள் ஆகியோரது மரணங்கள், அந்தோனி, ஸ்ரெலா அறிமுகமாகி மூன்றாம்நாளே ஸ்ரெலா அந்தோனிக்கு முத்தமிடுவது போன்றவை சற்று நெருடுகின்றன. சிங்கள மக்கள் நயினா தீவு விகாரைக்கு வருவது நின்றுபோனமை 83 கலவரத்துக்குப் பிறகு நடந்தது என்று நினைக்கிறேன். இந்தக் கதை நடைபெறும் காலத்தில் அது பற்றிப் பிரஸ்தாபித்திருப்பது சரிதானா எனத் தெரியவில்லை.

இவை தவிர இந்த நாவல், ஒரு நல்ல வாசிப்பனுபவத்தை ஏற்படுத்தும். என்போன்ற அந்தக் காலகட்டத்தை அனுபவித்தவர்களுக்கு மனத்தில் ஒரு ஏக்கம் நிறைந்த சந்தோஷத்தைக் கொடுக்கும். ஆனால் காலச்சூறாவளியில் அகப்பட்டுச் சிதறடிக்கப்பட்டு, இந்த நினைவுகளெல்லாம் பழங்கதையாய், கனவாய்ப் போயுள்ள நிலையில் பாலச்சந்திரனின் ‘கரையைத் தேடும் கட்டுமரங்கள்’ போன்ற படைப்புகள்தாம் இழந்தவற்றைப் பதிவுசெய்கின்றன.

பாலச்சந்திரன் போன்ற படைப்பாற்றல் மிக்கவர்கள் இத்தகைய முயற்சிகளில் ஈடுபடுவது வரவேற்கத்தக்கது. நாடகம், சினிமா போன்ற படைப்புகளில் நாம் நினைப்பவற்றை அப்படியே கொண்டுவருவதென்பது இயலாத காரியமாக உள்ளது. பல் வேறுபட்ட கலைகள், தொழில்நுட்பக் கலைகளில் திறமை, பெரும்பணம் ஆகியவை அமையப்பெற்றால்தான் அது சாத்தியமாகும். ஈழத் தமிழர்களின் தற்போதைய வாழ்க்கை முறையில் அது சாத்தியமாகக்கூடிய ஒன்றா என்பது கேள்விக்குறியே.

ஆனால் நாவல் போன்ற படைப்புகளில் ஒருவரின் மன வெளிப்பாடுகளைப் பதிவுசெய்வது, பாலச்சந்திரன் போன்ற அந்த ஆற்றல் கைவரப் பெற்றவர்களுக்கு சுலபமானதாகவும் மனத்திருப்தியை அளிக்கக்கூடியதாகவும் இருக்குமென்பது என் எண்ணம்.

தகவல் மூலம்: காலச்சுவடு, நன்றி

  • 1 month later...
  • தொடங்கியவர்

தாய்வீடு பத்திரிகையில் நாவல் விமர்சனம்

கனடாவிலிருந்து வெளியாகும் 'தாய்வீடு' மாதாந்த சஞ்சிகை/பத்திரிகையில் பிரபல எழுத்தாளரான "பூரணி" ம்காலிங்கம், நாவல் பற்றிய விரிவான விமர்சனத்தை எழுதியுள்ளார். அவருக்கும் 'தாய்வீடு' நிர்வாகத்தினருக்கும் என் நன்றி.

என்.கே.மகாலிங்கம்

nkmakalingam.jpg

என் பார்வையில் -கே.எஸ்.பாலச்சந்திரனின் கரையைத் தேடும் கட்டுமரங்கள் -நாவல்

மிகச் சுருக்கமாகச் சொல்வதானால் இந்த நாவல் அந்தோனி என்ற மீனவ இளைஞனின் காதல் கதை. அல்லது அந்தோனி காதல்களில் தோல்வி அடைந்த கதை. முதல் காதலில் தோல்வியடைந்து சோகத்துடன் நின்ற அந்தோனியுடன் ஆரம்பித்த நாவல் முடிவிலும் இன்னொரு காதலில் தோல்வியடைந்த அந்தோனியுடனே முடிகிறது. இடையில், தகப்பன் மரியாம்பிள்ளை சம்மாட்டி, தாய் மதலேனாள், தமையன், தங்கைகள் எலிசபேத், மேரி, மனைவி சில்வியா, முதல் காதலி செல்வராணி, இரண்டாவது காதலி ஸ்ரெல்லா என்பவர்களுடன் மான்பாய்ஞ்ச வெளி என்ற கிராமமும் ஒரு சில உறவுக் குடும்பங்களும், புங்குடுதீவிலுள்ள மீனவப் பகுதியிலுள்ள ஒரு குடும்பமும் ஊடாடுகின்றன.

மான்பாய்ஞ்ச வெளி மீனவர்கள் தங்கள் கடலில் மீன்பிடித் தொழில் குறைந்த பருவ காலத்தில் புங்குடுதீவு தெற்குக் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்வது வழக்கம். அங்குள்ள மீனவத் தொழிலாளிகள் சிலரை மான்பாய்ஞ்சவெளி மீனவர்கள் தொழிலுக்கு உதவிக்கு வைத்தும் கொள்வர்.

அந்தோனி முதல் காதலில் தோல்வியடைந்து சோகத்துடனும் துயரத்துடனும் இருக்கையில் குடும்பம் புங்குடுதீவுக்குத் தொழிலுக்குச் செல்லுகின்றது. அவனும் செல்கிறான். போன இடத்தில் இவனுக்கு இரண்டாம் காதல் ஸ்ரெல்லா என்பவளுடன் ஆரம்பமாகின்றது. இவள் கணவனை இழந்த இளம் விதவை. அரசினர் ஆஸ்பத்திரியில் தாதி. அவளுடைய தாய் லூர்த்தம்மா. அவளை அந்தோனியின் தகப்பன் மரியாம்பிள்ளை இளம் கணவனாக இருந்த காலத்தில் புங்குடுதீவுக்குத் தொழிலுக்குச் சென்ற இடத்தில் ‘வைத்திருந்தவன்’. அப்பொழுது ஸ்ரெல்லா சிறு குழந்தை. லூர்த்தம்மாவின் கணவன் அப்பொழுது அவர்களைக் கைவிட்டு வேதாரிணியத்தில் குடும்பமாக போய் விட்டான். லூர்த்தம்மாவுக்கும் மரியாம்பிள்ளைக்கும் இருந்த உறவு பலருக்குத் தெரியாது.

மரியாம்பிள்ளை, அந்தோனி ஸ்டெல்லா காதலை விரும்பவில்லை. அதனாலும்; அந்தோனி, ஸ்டெல்லாவை இன்னொரு ஆடவனுடன் பார்த்து சந்தேகப்பட்டதாலும் இந்தக் காதலும் நிறைவேறவில்லை. அவனுக்கு மான்பாய்ஞ்சவெளியின் அருகிலுள்ள கிராமத்திலுள்ள பணக்காரச் சம்மாட்டியின் மகள் சில்வியாவுக்கும் திருமணம் நடக்கிறது. சுpல்வியா பணக்காரி. படித்தவள் என்ற திமிர் பிடித்தவள். திருமணம் முடித்த நாளிலிருந்தே அவள் அந்தோனியையும் அவன் குடும்பத்தையும் விரும்பவில்லை. ஏறுமாறாக நடத்துகிறாள். அதனால் திருமண வாழ்க்கையிலும் அவனுக்குக் காதல் சுகம் கிடைக்கவில்லை. அந்தவேளையில் ஓர் அசம்பாவிதம் நடக்கிறது. அவன் தொழிலுக்குச் சென்ற படகு புயலில் அகப்பட்டுக் காணாமல் போகிறது. படகில் சென்ற அந்தோனியும் மற்ற மூவரும் காணாமல் போய் விடுகிறார்கள். அத்துடன் அவனுடைய குடும்பத்தில் தாய் சாகிறாள். எலிசபெத்தின் திருமணம் தடைப்படுகிறது. தகப்பன்; தடுமாறுகிறான். தொழில் பாதிப்படைகிறது. படகுகள் விற்கப்படுகின்றன. சில்வியாவும் ஒரு மைனருடன் ஓடிப் போய் விடுகிறாள். தெய்வாதீனமாக அந்தோனியும் மற்றவர்களும் சென்ற படகு தாய்லந்து தேசத்தில் கரையொதுங்குகிறது. அதிலிருந்த இருவர் இறந்து விட அந்தோனியும் மற்ற இருவரும் இலங்கை திரும்புகின்றனர். அந்த இடைவெளிக்குள் தாயில்லை. மனைவி வேறொருவனுடன் ஓடி விட்டாள். ஆகவே, அவனுடைய அண்ணியின் தூண்டுதலில் திரும்பவும் புங்குடுதீவுக்கு ஸ்டெல்லாவிடம் காதலைத் தேடி ஓடுகிறான். அங்கும் அவளுக்கு கணவனின் தம்பியை திருமணம் செய்யப்பட்டு விட்டதை ஸ்டெல்லா தெரிவிக்கிறாள். திரும்பவும் அந்தோனி காதல் தோல்வியில் சோகத்துடன் நிற்கிறான். அத்துடன் நாவல் முடிகின்றது.

இந்த நாவலில் சில சிறப்புக்கள் உள்ளன. முதலாவது, நாவலை வாசகன் தங்குதடையின்றி ஒரே இருப்பில் வாசிக்கக் கூடியதாக நேர்கோட்டில் கதை செல்கிறது. ஆசிரியர் நல்ல கதைசொல்லி. இரண்டாவது, யாழ்ப்பாணத்து மொழிநடை. அதனால் நாவல் எந்தவகையிலும் எமக்குச் சிரமம் தரவில்லை. மண்வாசைனயை ஒட்டிய உரையாடல்களும் சொற்களும், சொல்லாடல்களும், பின்னணியும், காட்சிகளும் கதையை ஓட்டிச் செல்வதனால் கதைக்கு ஒரு உண்மைத்தன்மை உள்ளது. அதனால் இப்படியும் நடக்குமா என்ற ஆதங்கமோ வியப்போ படத் தேவை வரவில்லை. புயலில் அகப்பட்ட படகொன்றில் சென்ற மீனவர்கள் தாய்லாந்தில் அடைந்து திரும்பிய கதை ஒன்றும் யாழ்ப்பாணத்தவருக்குத் தெரிந்ததே. எனவே, அதுவும் சாகசக் கதையின் அம்சமல்ல. மூன்றாவதாக, சோக உணர்ச்சிகள், இரக்கம், குடும்ப உறவு, அன்பு, பாசம், பொறுப்புணர்வு ஆகிய அறங்கள் எல்லாம் மீறப்படாமலே அப்படியே படம்பிடித்துக் காட்டப்பட்டுள்ளன. அவை வாசகர்களை உருக வைத்து நாவலை விடாமல் வாசிக்கத் தூண்டுகின்றன. நாலாவது, மீனவர்களின் வாழ்வியல், நடைமுறைகள், சம்பிரதாயங்கள், தொழில் நடவடிக்கைககள், தொழில் நுட்பங்கள், போன்றவை அனைத்துமே நுட்பமாக அவதானிக்கப்பட்டு எழுதப்பட்டுள்ளன. ஐந்தாவது, யாழ்ப்பாணக் கிராமங்களினதும், குறிப்பாகப் புங்குடுதீவுக் கிராமத்தினதும் புவியியல் அமைப்பும் இடங்களும் நுட்பமாக அவதானிக்கப்பட்டுள்ளன. வாடைக்காற்று, கச்சான் காற்று, சோளகக் காற்று முதலியவைகள் அவற்றின் திசைகள், போக்குகள், காலங்கள், படும் மீன்கள், வலைகள், படகுகள் எல்லாம் முறையாகக் கவனிக்கப்பட்டு பொருத்தமாக எழுதப்பட்டுள்ளன. இவ்வகைகளில் வாசக ருசிகள் கவனிக்கப்படுகின்றன. அந்தவகையில் இந்த நாவல் வெற்றியே.

அவற்றை விட, தமிழிலக்கியத்தில் இந்த நாவலின் இடம் எது அல்லது ஈழத்திலக்கிய வரலாற்றில் இந்த நாவலின் இடம் எது என்று கேள்விகள் கேட்கப்பட வேண்டும் என்று நினைக்கிறேன். அப்படிக் கணிப்பீடு செய்ய நவீன நாவலுக்குரிய சில அம்சங்களை இங்கே கவனத்தில் எடுக்கப்பட வேண்டும் என்றும் நினைக்கிறேன்.

எந்த இலக்கியப் படைப்புமே இலக்கிய வரலாற்றில் எக்கால கட்டத்தைச் சேர்ந்தது என்று நிர்ணயிக்கப்பட வேண்டும். அந்த வகையில் இந்த நாவலின் காலமும் களமும் யாழ்ப்பாணத்தில் 1980 களுக்கு முன்னர் நடந்தவை என்று அனுமானிக்கலாம். ஏனென்றால், அதன் பிறகு ஒரு யுகப்புரட்சியே நடைபெற்று முடிந்திருக்கின்றது. இந்த நாவல் யாழ்ப்பாணக் கிராமங்கள் இயல்வு நிலையில் இருந்த காலத்தில் நடைபெற்றுள்ளன. இப்பொழுதோ 1980 களுக்குப் பிறகோ இருந்த அரசியல் சூழலோ, சமூகச் சூழலோ அங்கிருக்கவில்லை. 30 வருட யுத்தம் ஆரம்பிப்பதற்கு முன்னர் இருந்த காலமும் களமுமே இந்தக் கதைக்கானவை. அதுதான் வன்முறை அரசியல், இயக்கக் கெடுபிடிகள்;, யுத்தங்கள், இடப்பெயர்வுகள் முதலியன நடைபெறாத காலம்.

எந்த நாவலும் ஒரு அரசியல் சூனியப் பிரதேசத்தில் நடைபெறாது. அது சாடைமாடையாகக் கூட இந்த நாவலில் கோடிகாட்டப்படவில்லை. ஆனால் இந்த நாவல் பிரசுரமாகியதை வைத்து -இது 2009 இல் தான் வெளிவந்தது- இந்த நாவலின் இலக்கிய வரலாற்றுக் காலப் புள்ளியை குறிப்பிட முடியாது. ஆகவே, இந்த நாவலை நாம் ஒரு முப்பது வருடங்கள் முன் தள்ளி வைத்தால் அக்காலத்தில் இலங்கையில் வெளிவந்த நாவல்களுடன் இதை ஒப்பீடு செய்யலாம். அதுவே இந்நாவலின் இருப்பையும் தரத்தையும் நியாயப்படுத்த எடுத்துக் கொள்ள வேண்டிய அளவீடுகள். இன்றைய நவீன, அல்லது பின் நவீன நாவல்களுடன் ஒப்பிடுவது முறையல்ல. இந்நாவல் எழுதப்பட்ட அக்காலத்தில் தான் முற்போக்கு நாவல்களும், செங்கையாழியானின் வாடைக்காற்று, பாலமனோகரனின் நிலக்கிளி போன்ற நாவல்களும் வெளி வந்திருந்தன.

அத்துடன் 70-80 காலத்தில் மீனவர் வாழ்க்கையை வைத்து சில நாடகங்களும் சினிமாவும் வெளிவந்துள்ளன. மஹாகவியின் புதியதொரு வீடு நாடகம். அதே காலத்தில் ஐரி~; நாடகாசிரியரான ஜே.எம். சிஞ்( John Millington Sunge) எழுதிய கடலோடிகள் (Riders to tha Sea)என்ற கடல் சார்ந்த நாடகம் ஒன்றை ஆங்கில விரிவுரையாளர் கந்தையா மேடையேற்றினார். தகழியின் செம்மீன் நாவல் சினிமாவாக்கப்பட்டு மக்கள் மனதைக் கவர்ந்திருந்தது. அந்நாவலை சுந்தர ராமசாமி மொழிபெயர்த்தும் இருந்தார். அதைப் பரவலாகப் பலரும் வாசித்தும் இருந்தனர்.

செம்மீன் சினிமாவில் (நாவலிலும்) கறுத்தம்மா கணவன் பழனி கடலுக்குப் போயிருந்தபோது பழைய காதலன் பரிக்குட்டி சோகமாகப் பாடிக் கொண்டிருந்ததைக் கேட்டு, காதலைத் துறக்க முடியாமல் அவனுடன் மீண்டும் தொடர்பு வைப்பாள். அதேபோல இந்த நாவலிலும் அந்தோனி கடலுக்குப் போயிருந்தபோது சில்வியா தன் காதலனுடன் போய் வருவாள். செம்மீனிலும் கடலன்னை அதைப் பொறுக்காமல் கணவனை தனக்குள் இழுத்துக் கொள்வாள். இங்கும் அந்தோனி சென்ற படகு புயலில் மாட்டிக் கொண்டு அவனும் காணாமல் போய் விடுவான். அந்த ஐதீகம் தெரிந்தோ தெரியாமலே இந்த நாவலாசிரியரையும் பாதித்திருக்கிறது.

இந்த நாவல் நேரடியான கதை சொல்லல் முறையில், யதார்த்தப் பண்பில் சொல்லப்பட்டுள்ளது. சிலவேளை யதார்த்த வாதப் பண்புக்கும் இயற்பண்பு வாதத்திற்கும் இடையே இந்நாவல் ஊடாடுகிறது. அதாவது, யதார்த்தத்தை அப்படியே பிரதிபலிப்பது, மற்றது இயற்கையை அப்படியே படம்பிடிப்பது. நவீன நாவல்கள் வளர்ச்சியடைந்து பல நவீன உத்தி முறைகளைக் கையாண்டு, நவீன, பின் நவீனப் புனைவுகளாக வளர்ந்தும் விட்டன. பல அவிழ்க்க முடியாத முடிச்சுக்களை வாசகர்களே அவிழ்க்க விட்டு ஆசிரியர் மறைந்தும் நிற்கிறார். வாசக வெளிக்கும் மௌனத்துக்கும் கற்பனைக்கும் இடம் விட்டு விடுகிறார்;. இந்த நாவலின் ஆசிரியர் வாசகனுக்கு எந்தத் தொல்லையும் கொடுக்காமலே அவரே அனைத்தையும் சொல்லி விடுகிறார். உதாரணமாக, சில்வியா ஏன் மைனரை நாடிப் போனாள் என்பதற்கு அந்தோனி தன் பழைய காதலியை நினைத்துக் கொண்டிருப்பதால் தன்னைத் தொடுவதே இல்லை, அதனால் தான் வேறோருவனிடன் போக வேண்டி வந்தது என்கிறாள். இதை வாசகனே உய்த்துணர வைத்திருக்க வேண்டியது நாவலாசிரியனின் வேலை. விளக்கம் கொடுப்பதில்லை. பாத்திரங்கள் மூலமாகக் கூட.

நாவலாசிரியர் ஒரு மேடை நாடக நடிகர். வானொலி நாடக நடிகர். அருமையான குணசித்திர நடிகர். அவை 50-60 தமிழ் சினிமாவில் அதிகம் காணக் கூடிய பண்பு. ஒரு மெலோடிராமாவுக்குரிய –மிகையுணர்ச்சிக்குரிய-பல அம்சங்கள் இதிலுள்ளன. குறிப்பாக, அந்தோனியின் பாத்திரம். இந்த நாவல் தமிழ் சினிமாக் கதையின் அம்சங்கள் பலவற்றைக் கொண்டதாக உள்ளது. முக்கியமாக, சில்வியா என்ற பாத்திரம் சினிமாவில் வரும் அச்சொட்டான வில்லியாகவே உள்ளாள். மற்றப் பாத்திரங்கள் பலவும் அப்படியே உள்ளன. அந்தோனி, அவனுடைய தமையன், தங்கை எலிசபெத். கறுப்பு வெள்ளைப் பாத்திரங்கள் அடங்கிய தமிழ் சினிமா உலகம்.

நாவலில் இரண்டு பகுதி மீனவர்களும் கத்தோலிக்க சமயத்தவர்கள். அது ஓர் ஒற்றுமை. அதனால் அவர்களிடையே வேறு வேற்றுமைகள் இல்லை என்று சொல்ல முடியாது. உதாரணமாக, மான்பாய்ஞ்சவெளி மீனவர்கள் கரையார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். புங்குடுதீவு மீனவர்கள் வேர்க்குத்திப் பறையர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். அந்த இரு சமூகங்களிடையேயும் பெண்கள் ‘கொள்வனவு கொடுப்பனவு’ இருக்குமோ என்று எனக்குத் தெரியாது. அதுவும் திருமண பந்தம் செய்யும் அளவுக்கு. வேர்க்குத்திப் பறையர் மீன் தொழில் செய்வதை மறந்து பல நூற்றாண்டுகளாகி விட்டன. அவர்கள் போர்த்துக்கீசர் காலத்திலேயே கத்தோலிக்கராகி விட்ட ஊர் மக்கள். நாவலாசிரியர் கூறுவதுபோல அவர்கள் அங்கு தங்கி விட்ட மீனவர்கள் அல்ல. டச்சுக்காரர் காலத்தில் அவர்களில் பெரும்பான்மையினர் புடவைக்குச் சாயம் போட்டனர். அதனால் அவர்கள் வேர்க்குத்திப் -வேல்குத்திப்-பறையர் என்று அழைக்கப்பட்டனர். பின்னாளில் அத்தொழில் மறையவே அவர்கள் பல தொழில்களையும் செய்தனர். வலை போட்டு மீனும் பிடித்தனர். கட்டிட வேலை செய்தனர். ஓலை வெட்டினர். தோட்டத்தில் உதவியாளராக இருந்தனர். திருகோணமலை துறைமுகத்தில் வேலை பார்த்தனர். இளம் பரம்பரையினர் படித்து அரச உத்தியோகம் பார்த்தனர். ஆனால் தோணி வைத்து மீன் பிடித்த இன்னொரு சமூகம் புங்குடுதீவில் இருந்தது. அவர்கள் திமிலர். அவர்கள் சைவ சமயத்தவர்கள். இவற்றைக் குறிப்பிட வேண்டி வந்ததற்குக் காரணம், சமூகக் கட்டமைப்பில் இன்னும் யாழ்ப்பாணம் சாதி அடுக்குச் சமூகமே. ஊர் விட்டு ஊர் போனாலும் -அதாவது மான்பாய்ஞ்சவெளியிலிருந்து புங்குடுதீவுக்குப் போனாலும் சரி, நெல்லியடிக்குப் போனாலும் சரி, தேசம் விட்டு தேசம் சென்றாலும் சரி, சாதியம் தீய ஆவியைப் போலத் தொடர்ந்து கொண்டு தான் போயிருக்கிறது, போய்க் கொண்டிருக்கிறது.

தூய சவேரியார் வந்து மதம் மாற்றினால் போல அது மறைந்து விடவில்லை. அதுவும் 80 களுக்கு முதல்.

இறுதியாக, ‘கரையைத் தேடும் கட்டுமரங்கள்’ என்பது அருமையான உருவகம்.

- கே. எஸ். பாலச்சந்திரன்

தகவல் மூலம்: சொல் புதிது...சுவை புதிது

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

கனகாலத்துக்கு முன் வாசித்த நாவல்! மீட்டெடுத்து இருக்கிறீர்கள் குருவே நன்றி!! :rolleyes:

  • தொடங்கியவர்

குருவே தங்களுக்கு காலம் மெதுவாக கடக்கின்றது போல் உள்ளது, நமக்கு அதே காலம் வேகமாக சுழல்கின்றது. நீங்கள் 26செஞ்சுரிகள் அடித்து இருக்கின்றீர்கள். :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.