Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இணையத்தில் தமிழ்வளர்க்கும் விலங்கியல் துறை ஆசிரியர்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இணையத்தில் தமிழ்வளர்க்கும் விலங்கியல் துறை ஆசிரியர்

இக்காலத்தில் தமிழ் ஆசிரியர்கள் பலர் தமிழை வணிகமாக்கிக்கொண்டிருக்கும் நேரத்தில் சென்ற ஆண்டு ஓய்வுபெற்ற விலங்கியல் துறை ஆசிரியர் ஒருவர் தமிழ் வளர்ப்பில் கடந்த 1985 இலிருந்து ஈடுபட்டு இணையத்திலும் தமிழை வளர்த்துக்கொண்டிருக்கிறார். குழந்தைகளிடம் தமிழை வளர்க்க தாய்த்தமிழ் தொடக்கப்பள்ளியையும் நடத்திவருகின்றார். அவர்தான் பொள்ளாச்சி நசன் என்ற தமிழம் தமிழ்க்கனல்.புதிய தலைமுறை இதழுக்காக பொள்ளாச்சி நசன் கொடுத்த பேட்டியை இங்கே இணைத்துள்ளோம்.

puthiyathalaimurainasan001-750x1024.jpg

puthiyathalaimurainasan002-748x1024.jpg

nasan-ayya.jpg

1. ‘நசன்’ என்ற பெயர் தனித்துவம் வாய்ந்தது. இது பெற்றோர் வைத்த பெயரா அல்லது இப்பெயரின் பின்கதைச்சுருக்கம் என்ன?

என்னுடைய பெயர் நடேசன் அப்பா பெயர் மணி ஆக என் பெயர் ம. நடேசன். இது தான் பள்ளிப் பதிவுகளில் உள்ளது. 80 களில் நான் கவிதை எழுதத் தொடங்கும் பொழுது,

புனை பெயர் வேண்டுமே என்று எண்ணியபொழுது, என் பெயரில் உள்ள டே எழுத்தை நீக்கி / யாரும் என்னை டே என்று அழைக்க வேண்டாம் என்று சொல்லி/ டே எழுத்தை

நீக்கி, எழுதத் தொடங்கினேன். அன்றிலிருந்து நசன். பொள்ளாச்சியில் இருப்பதால் பொள்ளாச்சி நசன். நசன் / 642006 என்று அஞ்சல் அட்டை எழுதினாலே எனக்கு வந்துவிடும்.

2. உங்கள் தந்தையார் பெருங்காய மூட்டை சுமந்து தங்களை படிக்கை வைத்ததாக சொல்கிறீர்கள்.

உங்கள் இளமைப் பிராயம், குடும்பப் பின்னணி, மறக்க முடியாத சம்பவங்கள் சிலவற்றை சொல்லுங்களேன்?

ஆம். என் இளமைக்காலம் உணவுக்காக ஏங்கிய காலம். 60 களில் தொடக்கப்பள்ளி படிக்கும் பொழுது ஏழ்மைநிலையில் தான் எங்கள் குடும்பம் இருந்தது. எனது அப்பா பெருங்காய மூட்டையைச் சுமந்து கொண்டு ஊர் ஊராகச் சுற்றி விற்று வந்து ரூ 20 தான் அம்மாவிடம் கொடுப்பார். அம்மா சிக்கனமாக இருந்து என் அண்ணன்கள் இருவரையும் படிக்க வைத்தார். (ஒருவர் தொடக்கப்பள்ளி ஆசிரியர், அடுத்தவர் எழுத்தர், நாங்கள் மூவருமே இப்பொழுது பணி ஓய்வு பெற்றுவிட்டோம்) அண்ணன்கள் இருவரும் சேர்ந்து என்னைப் படிக்கவைத்தனர்.

எனது தொடக்க நிலைப்படிப்பு சிதம்பரம் (தென்னார்காடு மாவட்டம்) வரவரமுனி பாடசாலையில்தான் தொடங்கியது. தலைமைஆசிரியர் நாகராசனும், ஏழாம் வகுப்பு ஆசிரியர் சுந்தரேசனும் என்னால் மறக்க முடியாத ஆசிரியர்கள். எனது கல்லூரிப் படிப்பும் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில்தான். முதுகலை விலங்கியல் படிப்பு முடித்தது 1974 இல்.

வேலை கிடைத்தது 1980 இல். இடைப்பட்ட இந்த ஆறு ஆண்டுகள்தான் – என்னுள் உறுதியையும், உயரவேண்டும் என்ற வைராக்கியத்தையும் பதிவுசெய்தது. சுண்ணாம்பு அடிப்பது, வண்ணம் பூசுவது என்று தொடங்கிய எனது வேலை – கூலி வேலை செய்பவர்கள் படும் பாட்டை பட்டறிவாகப் பதிய வைத்தது. 1980 களில் நான் பி.எட் தொலைதூர வகுப்பு அண்ணாமலைப் பல்கலையில் சேர்ந்து படித்ததால் எனக்கு ஆசிரியர் வேலை கிடைத்தது. அப்பொழுது எம்.ஜி.ஆர் தான் முதலமைச்சர். நேர்காணலுக்கு நிறைய பேர் வந்திருந்தார்கள். சிபாரிசு இல்லாமல், பணம் இல்லாமல் சென்ற எனக்கு அன்று வேலை கிடைத்தது. பி,எட் படித்தவர்களுக்குத்தான் முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் பதவி வழங்கவேண்டும் என்று உறுதியான ஆணை இருந்ததால் அன்று எனக்கு வேலை கிடைத்தது. இறுதியாகப் பணி நிறைவு பெற்றது திருமூர்த்தி நகர் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் முதுநிலை விரிவுரையாளராக பணி செய்து பணி நிறைவு பெற்றேன். ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் பணியாற்றியதால்தான் கல்வி பற்றிய பல்வேறு நுணுக்கங்களை ஆழமாகவும், நுட்பமாகவும் அறிய முடிந்தது.

3. தாய்த் தமிழ் தொடக்கப்பள்ளி நடத்துகிறீர்கள்? இதைத் தொடங்க வேண்டும் என்ற உந்துதல் எங்கிருந்து கிடைத்தது? உங்கள் பள்ளியைப் பற்றியும் சில வார்த்தைகள்….

தியாகு அவர்கள் சென்னையில் தாய்த்தமிழ்ப் பள்ளி நடத்தினார். அந்த ஆசிரியர்களோடு, பள்ளியோடு பழகும் வாய்ப்புக் கிடைத்தது. தாய்மொழியில் கல்வி கற்றால் அதுவும் அடிப்படைக் கல்வி கற்றால்தான், அது அந்த மாணவனின் எதிர்காலத்திற்கு படிக்கட்டாக இருந்து வளர்த்தெடுக்கும் என்ற உண்மையை அறிந்து கொண்டேன். திருமிகு பொற்கொடி அவர்களும் இந்தப் பணியில் முன்னோடியாக இருந்து செயற்படுவதையும், அப்பள்ளியின் ஆசிரியர் மாணவர் அன்புப் பிணைப்பையும் நேரில் கண்டு வியந்தேன். திருப்பூர், பல்லடம், கோபி என தாய்த் தமிழ்ப் பள்ளிகளையெல்லாம் பார்வையிட்டு உள்வாங்கி அதன் உண்மையை உணர்ந்தேன். அந்த அடித்தளமே நான் தாய்த் தமிழ்த் தொடக்க்ப்பள்ளி தொடங்க வழிஅமைத்தது.

எங்கள் பள்ளியில் இப்பொழுது 140 மாணவர்கள் படிக்கிறார்கள். அய்ந்தாம் வகுப்பு வரை உண்டு. முதல் வகுப்பு மாணவர்கள் செய்தித்தாள் படிக்கிற 32 அட்டைகளைக் வடிவமைத்து அந்த அட்டைகளை தாய்த் தமிழ்ப் பள்ளியில் பயன்படுத்தி வெற்றி கண்டேன். இதே அட்டைகளை திரு கார்மேகம் அவர்கள் முதன்மைக் கல்வி அலுவலராக கோவை மாவட்டத்தில் இருந்த பொழுது கோவை மாவட்டம் முழுவதும் உள்ள அரசுப்பள்ளிகளில் ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு மூன்று மாதங்களுக்குப் பயன்படுத்தி நல்ல வெற்றியும் கண்டோம்.

இந்த 32 அட்டைகளை மட்டும் பயன்படுத்திக் கற்பித்தால் எளிமையாக தமிழ்ச் செய்தித்தாளை மூன்றே மாதங்களில் யார் வேண்டுமானாலும் படிக்க முடியும்.

4. அரியநூல்களை திரட்டி இணையத்தில் அனைவரோடு பகிர்ந்துக் கொள்கிறீர்கள். இந்தப் பணியை எப்போதிருந்து செய்கிறீர்கள்? ஏன் செய்கிறீர்கள்?

விடுதலைப் பறவை என்ற உருட்டச்சு இதழை நான் 1983 களில் நடத்தினேன். உரைவீச்சுகளை மட்டுமே உள்ளடக்கிய துணுக்கு இதழது. இலவசமான அந்த இதழைப் பலருக்கும் அனுப்பினேன். அந்த இதழுக்கு மாற்றுப் பிரதியாக நிறைய இதழ்கள் வந்தன. வந்த இதழ்கள் என்னை வளர்த்தெடுத்து, தரமான இலக்கியத்தின் பக்கம் நகர்த்திச் சென்றது. சேர்ந்த இதழ்களை தொகுப்பாகப் பார்த்தேன். வியந்து போனேன். பலவகையான இதழ்கள். வண்ண வண்ணமாக, அழகாக இருந்தன.ஆழமாக இருந்தன, நுட்பமாக இருந்தன, இதழ்களைப் பாதுகாக்கத் தொடங்கினேன். 1990 களில் எனக்கு வந்த இதழ்களின் பட்டியலுக்காகவும், அதன் இணைப்பிற்காகவும் – சிற்றிதழ்ச் செய்தி – என்ற இருமாத இதழ் அச்சு இதழ் தொடங்கினேன்,

அந்த அச்சுக் கருவியையும் நானே அச்சுக் கோர்த்து இயக்கினேன். இலவசமாகவே இதழாளர்களுக்கும் நண்பர்களுக்கும் அனுப்பி வந்தேன். 36 இதழ்கள் வரை சிற்றிதழ்ச் செய்தி தொடர்ந்தது. நான் சேகரிக்கும் செய்தியை இதழில் வெளியிட்டு, சேர்ந்த இதழ்களின் குறிப்புகளை வெளியிட்டு, இதழுக்காகவே அந்த இதழை நடத்தினேன். அந்த காலகட்டத்தில் சேகரித்த இதழ்களை வரிசைப்படுத்தி எடுத்துச் சென்று கண்காட்சியாகவும் வைத்து அங்குள்ள நண்பர்களிடமிருந்தும் இதழ்களைத் திரட்டினேன். தஞசாவூரில்தான் முதல் கண்காட்சி வைத்தேன். பல்கலைக்கழக நூலகர் திறந்து வைத்தார். இறுதியாக நடந்த கண்காட்சி சென்னையில். கோமல் சுவாமிநாதன் வந்து பேசி வாழ்த்தினார். 15 இடங்களில் கண்காட்சி

வைக்கப்பட்டது. கண்காட்சி வைக்கும் பொழுது இதழ்கள் வீணாகின. எனவே சென்னைக்குப் பிறகு கண்காட்சி நடத்துவதைத் தவிர்த்து விட்டேன்.

பல இதழ்களை நான் பழைய புத்தகக் கடையிலிருந்து சேகரித்தேன். நல்ல இலக்கியவாதிகள் வாழும் வரை அவரோடு அந்த இதழ்கள் வாழ்ந்து அவரது மறைவிற்குப் பிறகு அவரது உறவினர்களாலேயே பழைய புத்தகக் கடைக்கு அனுப்பப் பட்டது கண்டு வருந்தினேன். எப்படியாவது அனைத்து இதழ்களையும் சேகரித்து விடவேண்டும் என்று அலைந்தேன்.

சேகரித்த இதழ்க்ளை அடுத்த தலைமுறையினருக்கும் காட்சிப்படுத்த வேண்டுமே என்ற கவலையும் நிழலாடிக் கொண்டே இருந்தது. பல இதழ்கள் உடையும் நிலையில் இருந்தன. எப்படியாவது பாதுகாக்க வேண்டுமே என்ற உந்துதலில் பாதுகாப்பது பற்றித் தேடிக் கொண்டே இருந்தேன். அப்பொழுது தான் நூலகம் இணையதள நண்பர் திரு கோபி அவர்கள் பழக்கமானார்.

தொலைபேசி வழியாகவே எப்படி இதழ்களைப் படவடிவக் கோப்பாக்கிப் பாதுகாப்பது என்ற முறையை கற்றுத் தந்தார். இணையத்தில் இதழ்களைப் படவடிவக் கோப்பாக்கி, இலவசமாக அனைவரும் வலையிறக்கும் வகையில் வைப்பதற்கு அடித்தளமாகவும், ஊக்கியாகவும் இருந்தவர் அவர்தான். இணையத்தில் இதழ்கள் வலையேற்றத் தொடங்கியதும் பல நண்பர்கள் தொடர்பு கொண்டார்கள். இதழ்களையும் நூல்களையும் தந்து உதவினார்கள். ஈரோட்டிலிருந்து ஒரு நண்பர் 5 சாக்குகள் நிறைய அரிய புத்தகங்களை அன்போடு அளித்தது மட்டுமல்லாமல், வீடுவரை தன் சொந்தச் செலவிலேயே கொண்டுவந்து கொடுத்தது, என்னால் என்றுமே மறக்க முடியாது. இது போன்ற மக்களின் ஊக்குவிப்பும், உதவியும் தான் நான் தொடர்ந்து இயங்க வழி அமைக்கின்றன.

5. சிற்றிதழ்ச் செய்தி ஆய்விதழ் பற்றி… இதை நீங்களே அச்சுக்கோர்த்து கொண்டுவந்ததாக தெரிகிறது. இப்பணியைப் பற்றி சில வார்த்தைகள்…

சிற்றிதழ்கள் பற்றிய செய்திகளை படைப்பாளி வாசகர் இதழாளர் என்ற முக்கோணக் கூட்டுக்குள் இணைக்க நான் அச்சாக்கி வெளியிட்டதுதான் சிற்றிதழ்ச் செய்தி இருமாத இதழ். 36 இதழ்கள் வந்துள்ளன. அவை அனைத்தும் தமிழம் வலை இணையத்தில் நாள் ஒரு நூல் பகுதியில் முதல் 50 நூல்களுக்குள் வைக்கப்பட்டுள்ளன. சிற்றிதழ்ச் செய்திக்காக இரண்டே வகையான எழுத்துருக்களை வாங்கி, 20 கிலோ மட்டும் வாங்கி, ஒவ்வொரு பக்கமாக நானே அச்சுக் கோர்த்து, அச்சடித்து உருவாக்கியது தான் சிற்றிதழ்ச் செய்தி.

அச்சுக் கோர்த்து பிழை திருத்தியதால் கண்ணாடியின் அளவு கூடியது. சிற்றிதழ்ச் செய்தியின் இறுதி இதழ்கள் 486 கணினியில், விண்டோ 3.1 இல் திரு, ஆதமி எழுத்துருக்களில் உருவாக்கியவை. கணினியில் நானே உருவாக்கி அச்சடிக்க அச்சகம் சென்றேன். அச்சகம் சென்றதால்.. மூன்று இதழ்களுக்கு மேல் சிற்றிதழ்ச் செய்தி வரவில்லை.

6. நல்லாசிரியர் விருது பெற்றவர் நீங்கள். உங்கள் கால்நூற்றாண்டு ஆசிரியப்பணியைப் பற்றிய அனுபவங்கள், மறக்கவியலா சம்பவங்கள்.

சி.சி.ஆர்.டி யின் நல்லாசிரியர் விருதை டெல்லியில் சென்று பெற்றேன். மகிழ்வாக இருந்தது. விருதுகளை விட மக்களுக்கு உழைத்து அவர்களது மகிழ்வை நேரடியாகப் பார்க்கும் பொழுது ஏற்படும் மகிழ்வு நிறைவாக இருந்தது. எனவே அதற்குப் பிறகு விருதுகளை விட்டு விலகி நிற்கலானேன். ஆசிரியர் பணி என்பது உயரிய பணி. நம்மை நாம் செழுமைப் படுத்திக் கொள்ள உருவாக்கப்படும் உயரிய சூழல். நல்ல ஆசிரியராக இருப்பது என்பதை விட, இறுதிவரை தொடர்வது என்பதில்தான் மகிழ்வும் நிறைவும் இருக்கிறது. சரியான மாணவர்களைக் கண்டறிந்து, அவர்களை வளர்தெடுக்கும் பொழுது ஏற்படும் நிறைவு வேறு எந்தப் பணியிலும் கிடையாது. நம் மாணவர்கள் நம்மைவிட திறமையாகவும், சிறப்பாகவும் இயங்குவது கண்டால் நமது உள்ளம் நெகிழ்வடைகிறது. இது வேறு எந்தப் பணிக்குமே கிடைக்காதது.

7. எளியமுறையில் தமிழ் கற்பித்தல் பற்றி….

தமிழம் வலை இணையத்தில் - கல்வி என்ற பகுதியில் ஆங்கில வழியில் தமிழ் கற்பித்தலுக்கான இணைப்பு உள்ளது. 35 பாடங்களில் தமிழைக் கற்பிக்கும் இணைய வழி பாடங்கள் அவை, வெளிநாட்டு நண்பர்கள் இந்த இணைப்பைப் பயன்படுத்தி தமிழை கற்றுக் கொள்ளலாம். தொடக்க நிலைக்கான பாடங்கள் மட்டுமே உள்ளன. மேலும் தமிழ் கற்பதற்கான எளிய முறையில் அமைந்த குறுவட்டு ( நான் உருவாக்கியது ), படவடிவக் கோப்புகள், அட்டைகள் என நிறைய உள்ளன. பயன்படுத்தித் தமிழைக் கற்றுக் கொள்ள அன்போடு வேண்டுகிறேன். இடர்பாடுகள் இருந்து தொடர்பு கொண்டால் உதவவும் காத்திருக்கிறேன்.

8. நீங்களாகவே கிணறு வெட்டியிருக்கிறீர்கள்? ஏன்? எதற்காக? – இந்த உழைப்புக்கான உந்துதல் என்ன?

1980 களில் எங்கள் பகுதியில் தண்ணீர் தட்டுப்பாடு நிறைய இருந்தது. கோடை காலத்தில் கிணற்றில் தண்ணீர் கிடைப்பது அரிது. நானே கிணறு வெட்டினால் என்ன என்று தோன்றியது ஒரு கடப்பாரை, ஒரு கூடை, ஒரு கயிறு அவ்வளவு தான். தோண்டத் தொடங்கினேன். 3 அடிக்கு 3 அடி அளவில் தோண்டினேன். முதலில் தென்னம்பிள்ளைக்கான குழி என்றும், பிறகு கழிப்பறைக்கான குழி என்றும், இறுதியில் கிணறு என்றும் சொன்னேன். கிணறு என்று சொன்னதும் -வேலையற்ற வேலை என அனைவரும் விலகத் தொடங்கினர்- அதே மக்கள் அந்தக் கிணற்றில் தண்ணீர் வந்ததும் குடத்தை எடுத்துக் கொண்டு தண்ணீர் பிடிக்க வந்தனர். செய்யும் வேலையை நெஞ்சில் நிறுத்தி, தொடர்ச்சியாக, எதைப் பற்றியும் கவலைப்படாது, சோர்ந்துவிடாமல், இலக்கு அடையும் வரை இயங்கிக் கொண்டே இருந்தால் கட்டாயம் வெற்றி பெற முடியும். கிணறு வெட்டுவதிலிருந்து கணினிப் பக்கம் வடிவமைக்கும் வரை நான் அனைத்திலும் வெற்றி பெறுவதற்கு அடித்தளமாக இருப்பது இந்த உறுதியும், தொடர் உழைப்பும் தான்.

நன்றி: புதிய தலைமுறை & தமிழம் இணையம்

நம் மீனகம் தளத்தினை ஊக்கப்படுத்தி வருபவர்களில் பொள்ளாச்சிநசன் அய்யா வும் ஒரு முக்கிய நபர். மக்களுக்கு பயன்படும் வகையில் இணைய சேவை செய்யுங்கள் என்று 5 ஆண்டுகளுக்கு முன்னரே எம்மை ஊக்கப்படுத்தியவர் ஆசிரியர் பொள்ளாச்சி நசன் என்பதை நாம் பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

http://meenakam.com/2010/10/28/12298.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.