Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுரேஷ்.க.பிறேமசந்திரனின் 2011 வரவு செலவு திட்டம் மீதான உரை

Featured Replies

2011 வரவு செலவு திட்டம் மீதான உரை

சுரேஷ்.க.பிறேமசந்திரன்

தமிழ் தேசியக் கூட்டமைப்பு

நாடாளுமன்ற உறுப்பினர் - யாழ்மாவட்டம்

கௌரவ சபாநாயகர் அவர்களே!

கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ச்சியாக காலத்திற்கு காலம் நடாத்தப்பட்ட தமிழினத்திற்கு எதிரான தாக்குதல்கள் மூலம் உயிரழிப்புக்கள், சொத்தழிப்புக்கள், சொத்துக்களை சூறையாடல் தமிழ் மக்களின் நிலங்கள் ஆக்கிரமிப்பு, ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்களின் வரைமுறையற்ற கைதுகள், கொலைகள், உயர் கல்வி வாய்ப்பு பறிப்பு, உத்தியோக பறிப்பு என உடல் ரீதியாகவும், உள ரீதியாகவும், கலாச்சார ரீதியாகவும் அடிப்படை தேவைகள் மறுப்பு ரீதியாகவும் பல முனைகளில் தமிழ் இன ஒழிப்பை நிகழ்த்தி வந்த சிங்கள ஆட்சியாளர்கள் இன்று தமிழ் இனவொழிப்பை வேகப்படுத்தும் வேலைத்திட்டத்தினை பயங்கரவாதுக்கெதிரான யுத்தம் என்ற போர்வையில் கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக செயற்படுத்தி வருகின்றனர்.

இன்று வடக்கு கிழக்கு மாகாணங்களில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட தலைமையை உதாசீனம் செய்து, நிர்வாக அதிகாரிகளின் சுதந்திரமானதும் சட்டபூர்வமானதுமான செயற்பாடுகளை தடுத்து, இனவெறியூட்டப்பட்ட இராணுவத்தின் துணையுடன் தமிழ் இனவொழிப்பு நடவடிக்கையை அதி வேகப்படுத்தும் செயற் திட்டத்தினை அபிவிருத்தி என்ற பெயரால் இவ்வரசு செயற்படுத்தி வருகிறது. இங்கு சமர்ப்பிக்கப்படிருக்கும் வரவு செலவு திட்டமானது தமிழ் இனவொழிப்பு செயற்திட்டத்தை நாசூக்காகவும் தாக்கமாகவும் நடைமுறைப்படுத்தற்கேற்ற வகையில் தயாரிக்கப்பட்டுள்ளமை துலாம்பரமாக வெளிப்படுத்துகிறது. A calculated genocide is taking place in Sri Lanka. And this budget is clearly expressing the intention to accelerate the agenda of the genocide by this regime.

Hon. Speaker

The international legal definition of the crime of genocide is found in article II and III of the 1948 Convention on the Prevention and Punishment of Genocide.

Article II describes two elements of the crime of genocide.

01. The mental element meaning the “Intent to destroy, in whole or in part, a national, ethnical, racial or religious group As such,” and

02. Physical elements. What are the Physical elements.

(a) Killing members of the group

(b) Causing serious bodily or mental harm to members of the group.

© Deliberately inflicting on the group conditions of life calculated to bring about its physical destruction in whole or in part.

(d) Imposing measures intended to prevent births within the group.

(e) Forcibly transferring children of the group to another group.

And the article III describes five Punishable forms of Crime of genocide: genocide; conspiracy, incitement, attempt and complicity.

இனப்படுகொலை தொடர்பாக the mental element மற்றும் physical element என்பவை தொடர்பாக இலங்கையில் உள்ள நிலைமை என்ன?

Mental element - இலங்கையில் தமிழ் இனத்தை இல்லாதொழிக்கும் வேலை இலங்கை சுதந்திரமடைவதற்கு முன்பிருந்தே ஆரம்பித்து விட்டது. சிங்கள பௌத்தத்தின் மறுமலர்ச்சித் தலைவர் என்று சொல்லக்கூடிய அநகாரிக தர்மபாலவின் Sinhalese are the son of the soil. The Tamils, Moors and Malayalees are the aliens என்ற பிரச்சாரத்தை தொடர்ந்து சிங்களத்தை மட்டும் அரச கரும மொழியாக கொண்டு வந்து தமிழ் மொழியை அழித்தல், மலை நாட்டில் தமிழ் மக்களின் வாக்குரிமையை பிடுங்கி அவர்களின் பிரதிநிதித்துவத்தை அழித்தல், தமிழ் மக்கள் பாரம்பரியமாகவும் பெரும்பான்மையாவும் வாழ்ந்த இடங்களில் சிங்கள் மக்களை குடியேற்றி தமிழரை அவர்களது பூர்வீக இடங்களில் சிறுபான்மையினராக்கி அவர்களின் தனித்துவத்தை அழித்தல், தமிழ் மக்களது நூலகங்களை எரித்து அவர்களது வரலாறு மற்றும் கலாச்சார பாரம்பரியங்களை அழித்தல், இவை எல்லாமே தமிழ் இனத்தின் தனித்துவத்தை அழிப்பதன் மூலம் தமிழ் இனத்தை இல்லாதொழிக்க தொடர்ந்து ஆட்சிக்கு வந்த அரசுகள் எடுத்து வந்த முயற்சிகளாகும்.

Physical elements என்பதில் Killing members of the group என்பது இன அழிப்பின் ஓர் முக்கிய வடிவமாகும். இன அழிப்பிற்கெதிராக போராடிய எத்தனை இலட்சம் தமிழ் மக்கள் கடந்த 30 ஆண்டுகளில் கொலை செய்யப்பட்டிருக்கின்றார்கள். சுதந்திரத்தின் பின் எத்தனை இனக்கலவரங்கள் உருவாக்கப்பட்டன. அவற்றில் எத்தனை ஆயிரம் தமிழ் மக்கள் கொல்லப்பட்டார்கள். 2005 இல் இன்றைய ஆட்சியாளர் பதவிக்கு வரு முன்னர் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர் என்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற முகமூடிக்குள் ஏறத்தாழ ஒரு இலட்சம் பேர் வரை கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் பக்கசார்பற்ற கணிப்பீடுகள் தெரிவிக்கின்றன. இராணுவத்தால் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட அல்லது காணாமல் போன இளைஞர்கள், யுவதிகள் பல்லாயிரம் பேர். மேலும் ஏறத்தாழ பத்து இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் இராணுவ அச்சுறுத்தல் காரணமாக நாட்டை விட்டு விரட்டப்பட்டுள்ளனர். நடைபெற்ற இப்பாரிய அளவிலான கொலைகள் தொடர்பாக அரசாங்கத்திடம் எந்த விதமான புள்ளிவிபரங்களும் தகவல்களும் இல்லை என்பதுடன் ஒரு சம்பவத்திலாவது குற்றவாளி தண்டிக்கப்பட்டானா? என்றால் இல்லை! இவை எல்லாம் ஆட்சியாளரின் இனவொழிப்பு நோக்கத்தையே அப்பட்டமாக வெளிப்படுத்துகின்றன. ஓர் இனத்தின் உறுப்பினர்களை பகுதியாகவோ, முழுமையாகவோ கொன்றொழிப்பது என்பது வெளிப்படையான இனவொழிப்பு நடவடிக்கையாகும்.

Causing serious bodily or mental harm to members of the group. அதாவது ஒர் இனத்தின் ஒரு பகுதி மக்களையோ அல்லது அனைவரையுமோ உடல் ரீதியாகவோ அல்லது உளரீதியாகவோ கடுமையான துன்பத்திற்கு உள்ளாக்குவதென்பதும் இனவொழிப்பின் இன்னோர் வடிவமாகும். அரச பயங்கரவாதம் காரணமாக கொன்றொழிக்கப்பட்ட மக்கள் போக எஞ்சியிருப்போரில் அங்கவீனர் ஆக்கப்பட்டோர், குண்டுத் தாக்குதல்களால் உடல்களில் செல் துண்டுகளை தாங்கி நீண்டகால நோயாளிகளாக்கப்பட்டோர் பல்லாயிரம் பேர்.

தாய் தந்தையை இழந்து மன நிலை பாதிக்கப்பட்ட சிறுவர்கள், தமது பிள்ளைகளை இழந்து எதிர்காலம் பற்றிய கனவுகளையும் தமது பாதுகாப்பையும் தொலைத்து நடைபிணமாக வாழும் பெற்றோர்கள் பல பத்தாயிரத்தை தாண்டும். வடக்கு கிழக்கில் ஏறத்தாழ ஒரு இலட்சத்தை அண்மித்த தமிழ் பெண்கள் கணவன்மாரை இழந்து வாழ்க்கையே வெறுமையாக போயுள்ளதுடன் தமது குழந்தைகளை வளர்க்க வழியற்ற பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். இவ்விதவைகளில் ஏறத்தாழ பாதி பேர் இளம் வயதினர் ஆவர். ஆக தமிழ் மக்களின் ஒரு தலைமுறை இளைஞர் சமுதாயத்தின் பெரும்பகுதி அழித்தொழிக்கப்பட்;டதன் மூலம் அடுத்த தலைமுறை உருவாக்கத்திற்கான மூலங்கள் திட்டமிட்டு அழிக்கப்பட்டிருக்கின்றது.

ஓர் இனத்தை முழுமையாகவோ அரைகுறையாகவோ அழிப்பதற்கான திட்ட மிட்ட புறச்சூழ் நிலைகளை உருவாக்குதல் என்பது இனவொழிப்பின் இன்னோர் வடிவமாகும். வடக்கு கிழக்கை இராணுவ மயமாக்கி தமிழ் மக்களின் அரசியல் தலைமையும் முடக்கி திட்டமிட்ட இராணுவ ஆட்சியினை நிலை நிறுத்துவதன் ஊடாக மக்களின் அடிப்படை உரிமைகள் ஜனநாயக உரிமைகளை மறுத்து அடிமைகளாக வாழ நிர்ப்பந்திக்கும் சூழ்நிலை தோற்றுவிக்கப்பட்டுள்ளது. வடக்கு கிழக்கில் இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குக்கிராமங்களிலுள்ள மக்களின் குடிமனைகள் வரை பரவியிருக்கின்றனர். மக்களின் அன்றாட வாழ்க்கை, சுதந்திரமான போக்குவரத்து ஆகியவற்றை இது பாதிப்பது மட்டுமன்றி மக்களின் பாதுகாப்பிற்கு குறிப்பாக பெண்களின் பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளனர். வடக்கு கிழக்கில் போரின் போது மக்களின் வீடுகள் பொதுச் சொத்துக்களுக்கு சேதங்கள் ஏற்பட்டதுடன் ஒரு பகுதி முற்றாக அழிக்கப்பட்டது. சேதமான பெரும்பகுதி வீடுகளும் பொதுக் கட்டிடங்களும் திருத்திப் பயன்படுத்தக்கூடிய நிலையில் இருந்தன. ஆனால் போர் முடிந்தப்பின்னர்தான் பெருமளவு வீடுகளும் பொதுக் கட்டிடங்களும் இராணுவத்தினால் புல்டோசர் மூலம் தரைமட்டமாக்கப்பட்டு ஊர்கள் இருந்த அடையாளமே தெரியாமல் நிலத்துள் மூடப்படடன. கிழக்கில் சம்பூரும் வடக்கில் இயக்கச்சி, முல்லைத்தீவில் பல கிராமங்களும் இவ்வாறு காணாமல் போயுள்ளன.

இது தொடர்பாக I would like to quote the Nation Weekly news paper of 10-09-2006 about the fate of Sampur at the hands of government and its military forces.

Army took some journalists soon after the government captured Sampur. One of the journalists

Dharisha Batians wrote that “Sampur town held only about 10000 people, all of whom have fled the area since the government forces began to pound the area using Kfir jets and artillery from across bay”…

“Still apart from the chaos resulting from search operations that followed the capture of the town, the damage to civilian establishments including schools and hospitals appear to be minimal”

“He further note that until the people return to Sampur the military victory will be ground captured, meaningless politically even it is of crucial important from a defense perspective. For what is land if not barren, without people?

ஆனால் இங்கு வாழ்ந்த ஏறத்தாழ இரண்டாயிரம் குடும்பங்களைச் சேர்ந்த எட்டாயிரம் பேரில் இன்று வரை ஒருவர் கூட தமது வீடுகளில் குடியேற்றப்படவில்லை. ஆறு பாடசாலைகள், எட்டு கோவில்கள், இரண்டாயிரம் வரையான வீடுகள் ஒரு வைத்தியசாலை ஆகியவற்றைக் கொண்ட பல நூற்றாண்டு கால பழம்பெரும் குடியிருப்பு முற்று முழுதாக மண்ணுக்குள் புதைக்கப்பட்டு பத்தாயிரம் ஏக்கர் கொண்ட இவ்வ+ர் மக்கள் வாழ்ந்ததற்கான அடையாளமே இல்லாமல் வெட்டை வெளியாக்கப்பட்டுள்ளது. இதைவிட இவ்வூரிற்கான விலாசத்தையே அழிக்கும் வகையில் தபால் அலுவலகம் மீளப்பெறப்பட்டுள்ளது.

வன்னியில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக மக்களின் சொத்துக்கள் கால்நடைகள் வாகனங்கள் ஆகியன கொள்ளையிடப்பட்டது மட்டுமின்றி வீட்டுக்கதவுகள், ஜன்னல்கள், கூரைகள் உட்பட அனைத்தும் இன்றும் மக்களின் கண் முன்னாலே திருடப்படுகின்றன. மக்களிற்கும் சிவில் அதிகரிகளுக்கும் சம்பந்தப்பட்ட அன்றாட அலுவல்கள் இராணுவத்தின் தலையீடுகளாலும் இராணுவத்தினரிடம் அனுமதி பெற வேண்டிய நிலைகளபலும் அகதிகளான தமிழ் மக்களுக்கு கடும் அசௌகரியங்களை ஏற்படுத்தியிருக்கின்றது. வடக்கு கிழக்கில் இராணுவ ஆட்சியானது அரசாங்கத்தின் இனவொழிப்பு வேலைத்திட்டத்தை துரிதமாக நிறைவேற்றுவதை நோக்கமாக கொண்டே உருவாக்கப்பட்டுள்ளது. தம் இனவாத கொள்கையை செயற்படுத்துவதற்கும் மக்களை பணியவைப்பதற்கும் புலிகளுடன் தொடர்பு அல்லது பயங்கரவாத நடடிக்கைகளுடன் தொடர்பு என்கின்ற சுலபமான ஒரு காரணத்தை துருப்புச்சீட்டாக பயன்படுத்துகின்றனர். இத்தகைய எதேச்சதிகார சூழ்நிலையானது வடக்கு கிழக்கு மக்களை ஒன்றில் விரட்டியடிப்பது அல்லது அடிமைப்படுத்துவது என்கின்ற இனவழிப்பு நோக்கங்களை தவிர வேறு ஏதும் இருக்க முடியாது.

இவற்றிக்கு பலம் சேர்க்கும் வகையில் இன்னொருபுறம் வேகமான கலாச்சார அழிப்பு செயற்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

வடக்கு கிழக்கில் இராணுவ விமானப்படை குண்டு வீச்சினால் பல நூறு கோவில்களும் தேவாலயங்களும் சேதப்படுத்தப்பட்டுள்ள சூழ்நிலையில் அவற்றை புனரமைத்து மக்களின் வழிபாட்டுக்கு அனுமதிப்பதற்கு மாறாக கோவில்களின் சுற்றுப்புறங்களில் இராணுவ முகாம்களை அமைப்பதும் மீதமிருக்கும் கோவில்களை அழிப்பதும் மக்கள் அவற்றை புனரமைப்பதற்கோ சுதந்திரமாக சென்று வழிபடுவதற்கோ தடைவிதிப்பது மட்டுமின்றி விலையுயர்ந்த கோவில் விக்கிரகங்களை திருடுவதுமே நடைபெறுகின்றது. பௌத்தம் அரச மதம் என்ற அரசியல் யாப்பு உரிமையை கேள்விக்கிடமற்ற அதிகாரமாக பயன்படுத்தி பௌத்தர் இல்லாத இடங்களில் பௌத்த விகாரைகளை நிர்மாணித்தல், பழைமையும் புனிதமும் மிக்க இந்து கோவில்களுக்கு அருகில் பௌத்த விகாரைகளையும் பெரும் புத்தர் சிலைகளையும் நிர்மாணித்தல், இதன் மூலம் பௌத்தர் அல்லாத மக்களின் உணர்வுகளை காயப்படுத்தலும் அவர்களின் நிலங்களை கபளீகரம் செய்தலும் தமிழ் மக்களின் கலாச்சார தனித்துவங்களை அழிக்கும் செயற்பாடுகளே!

யாழ்ப்பாணத்தின் மாதகலில் ஓர் புதிய பௌத்த கோவில் கட்டப்பட்டுள்ளது. இப்பொழுது ஏ-9 பாதையின் மாங்குளத்தில் புதிய பௌத்த கோவில் கட்டப்பட்டு வருகின்றது. முல்லைத்தீவு கச்சேரிக்கு முன்பாக பௌத்த கோவில் கட்டுவதற்கான முயற்சி மேற்கொள்ளப்படுகின்றது. வவுனியா வைத்தியசாலையில் உள்ள நீர்தாங்கி உடைக்கபப்பட்டு ஆளுநரின் உத்தரவின் பேரில் அங்கும் ஓர் பௌத்த கோவில் அமைக்கப்படுகின்றது. பாடல் பெற்ற பழம் பெருமை வாய்ந்த இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு மேல் பழைமை வாய்ந்த இலங்கையின் ஐந்து ஈஸ்வரங்களில் ஒன்றான திருக்கேதீஸ்வரத்தின் முகப்பில் புதிய பௌத்த கோவில் அமைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பல வருடங்களுக்கு முன்பாக பாடல் பெற்ற திருத்தலமான திருகோணமலையின் கோணேஸ்வர ஆலயத்தின் முன்பாக பாரிய புத்தர் சிலை அமைக்கப்பட்டது. இன்று தமிழ் மக்கள் தமது இறுதிக் கிரிகைகளை செய்கின்ற மிகவும் தொன்மை வாய்ந்த இராவணனால் தனது தாய்க்கு இறுதி கிரிகைகள் செய்யப்பட்டதாய் சொல்லப்படும் கன்னியா வெந்நீர் ஊற்றும் பௌத்த துறவிகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அதனை விட வன்னியின் பல பகுதிகளிலும் பௌத்த கோவில்கள் உருவாகி வருகின்றன. நாங்கள் ஒன்றும் பௌத்த கோவில்களுக்கோ பௌத்தர்களுக்கோ எதிரானவர்கள் அல்ல ஆனால் அது பௌத்த மக்கள் இருக்கும் இடங்களில் அவை உருவாக்கப்பட வேண்டும் வன்னியில் இராணுவத்தினருக்கோ பொலிஸாருக்கோ பௌத்த கோவில்கள் தேவைப்பட்டால் அது அவர்களின் முகாம்களில் அமைக்கப்பட வேண்டும். தமிழ் மக்களோ இந்துக்களோ செறிந்து வாழும் இடங்களில் அமைக்கப்படுவது ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல. அது தமிழ் இனவொழிப்பின் இன்னொரு பரிமாணமாகவே பார்க்கப்படும்.

இவை மட்டுமின்றி தமிழ் பிரதேசங்களில் சாதாரண அரச அலுவலக திறப்பு விழாக்கள் உட்பட நடைபெறும் நிகழ்ச்சிகளில் தமிழ் பாரம்பரிய இசைகளுக்கு பதிலாக கண்டிய நடனங்களையும் சிங்கள இசைகளையும் திணித்தல் தேசிய கீதத்தை சிங்களத்தில் பாடும் படி தமிழ் மாணவர்களை நிர்ப்பந்தித்தல், பௌத்த விழாக்களுக்கு பௌத்தர் அல்லாத மக்களிடமும், வர்த்தகர்களிடமும் கட்டாயப்படுத்தி பணம் சேர்த்தல் அவ்விழாக்களுக்கு மக்களை வரும் படி வற்புறுத்தல் ஆகியவற்றின்; மூலம் தமிழ் காலாச்சாரத்தின் இருப்பிற்கு அபாய விளக்கு காட்டப்படுகின்றது. இவை மட்டுமின்றி தமிழ் மக்களின் வரலாற்று சின்னங்களை அழித்தல் மற்றும் அவற்றை திரித்துக் காட்ட முற்படல் ஆகியவற்றிலும் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர். இவை எல்லாவற்றிக்கும் சிகரம் வைத்தாற் போல், இந்துக்களின் புனித நாளான நவம்பர் 21ஆம் திகதி தீபத் திருநாளன்று வீடுகளில் தீபமேற்றிய மக்கள் பலர் கிளிநொச்சியிலும், யாழ்ப்பாணத்திலும் இராணுவத்தினால் அடித்து நொருக்கப்பட்டள்ளனர். இவையனைத்தும் வெளிப்படையான கலாச்சார அழிப்பின் உச்சக்கட்டம் (Cultural genocide) ஆகும்.

இங்கு சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் வரவு செலவு திட்டமானது மேலே பட்டியலிடப்பட்டுள்ள பலமுனை தமிழின அழிப்பு நடவடிக்கையை தொடர்ந்து முன்னெடுப்பதற்கான அப்பட்டமான இனவாத வரவு செலவு திட்டம் என்பதனை சாரதாரண பாடசாலை மாணவனாலேயே புரிந்து கொள்ள முடியும்.

யுத்தம் முடிவடைந்தவுடன் எல்லோருக்கும் நிவாரணம் கிடைக்கும் என பொதுமக்களும், சம்பளம் உயரும் என அரச ஊழியர்களும், முதலீட்டு வாய்ப்புக்கள் அதிகரிக்கும் என முதலீட்டாளர்களும், வணிகம் விருத்தியடையும் என வணிகர்களும் எதிர்பார்த்ததுடன் மனித உரிமைகள் பாதுகாக்கப்படும் என மனிதாபிமானமுள்ள வெளிநாடுகளும் எதிர்பார்த்தன. அழிக்கப்பட்ட தமது வீடுகள் மீள கட்டித் தரப்படும் என நான்கு இலட்சம் வரையிலான வடக்கு கிழக்கு மக்கள் எதிர்ப்பார்த்தனர், தமது சொத்தழிவிற்கான நிவாரணங்கள் கிடைக்கும் என எதிர்ப்பார்த்தனர், தமக்கு வாழ்வாதாரத்துக்கான உதவிகள் வழங்கப்படும் என எதிர்ப்பார்த்தனர். இராணுவ செலுவு குறைக்கப்பட்டு மீள்குடியிருப்பு. கல்வி, சுகாதார மீள்கட்டுமான செலவுகளுக்கு ஒதுக்கீடுகள் அதிகரிக்கப்படும் என எதிர்ப்பார்த்தனர் ஆனால் இவற்றில் எதுவுமே வரவு செலவு திட்டத்தில் உள்ளடக்கப்படவில்லை.

அரசாங்கம் இன்னும் யுத்த மமதையிலிருந்து விடுபடவில்லை. பாதுகாப்புக்கு 2010ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 2011 ஆம் ஆண்டுக்காக 13 பில்லியன் ரூபாய்கள் அதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புக்கு ஒதுக்கப்பட்டுள்ள மொத்தத் தொகையானது பொருளாதார அபிவிருத்தி அமைச்சுக்கு ஒதுக்கப்ட்டுள்ள தொகையை விட இரண்டு மடங்கிற்கும் அதிகமானதாகும். பாதுகாப்புக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளமைக்கான காரணம் கடந்த காலங்களில் பாதுகாப்பு உபகரணங்கள் கொள்வனவில் ஏற்பட்ட கடனை அடைப்பதற்காக என்று கூறப்படுகின்றது. இது முற்றிலும் தவறானதாகும்.

வெளிநாட்டுக் கடன்களை அடைக்கும் பணி நிதியமைச்சினுடையதாகும். ஒவ்வொரு அமைச்சு தொடர்பான கடனையும் திருப்பிச் செலுத்தும் முழுப் பொறுப்பும் நிதியமைச்சினுடையதாகும். இது பாதுகாப்பு அமைச்சுக்கும் பொருந்தும். பாதுகாப்புக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளமைக்கான அடுத்த காரணம் பாதுகாப்பு அமைச்சு அபிவிருத்திப் பணிகளில் ஈடுபடுகின்றது என்பதாகும். அப்படியானால் பொருளாதார அபிவிருத்தி அமைச்சும் ஏனைய அமைச்சுக்களும் எதற்காக இருக்கின்றன? என்ற கேள்விக்கு அப்பால் பாதுகாப்பு அமைச்சிற்க்கு ஒதுக்கப்பட்ட 215 பில்லியனானது முப்படைகளுக்கும் பொலிஸிற்கும் ஏனைய பாதுகாப்பு தொடர்பான நிறுவனங்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளதே தவிர அபிவிருத்திக்கு அல்ல என்பதையும் நான் இங்கு கூறிக் கொள்ள விரும்புகின்றேன்.

பாதுகாப்புக்கு கடந்த ஆண்டினை விட 13 பில்லியன் ரூபாய்கள் அதிகமாக ஒதுக்கிய அரசாங்கம் கல்விக்கும் உயர் கல்விக்கும் முறையே 2.7 மற்றும் 1 பில்லியன் ரூபாய்களையே அதிகமாக ஒதுக்கியுள்ளது. இதுதான் அரசாங்கம் இந்நாட்டின் கல்வியைப் பாதுகாக்கும் இலட்சணமா? அரச ஊழியர்கள் சம்பள உயர்வு கேட்டால் நாட்டின் அபிவிருத்திக்காக அவர்கள் சம்பள உயர்வினைத் தியாகம் செய்ய வேண்டும் என உபதேசிக்கப்படுகின்றது. 30 வருடங்களாக அவர்கள் சம்பள உயர்வினைத் தியாகம் செய்து இன்று ஆசியாவிலேயே குறைவான சம்பளம் பெறுபவர்கள் என்னும் நிலையை அடைந்துள்ளமை போதாதா? கல்வி, உயர்கல்விக்கு மட்டுமல்ல தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி (3.7 பில்லியன்), போன்ற மிக முக்கிய அமைச்சுக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியின் அளவும் போதுமானதல்ல. நாடு தீவாக இருந்தும் கடல் உணவுப் பொருட்கள் கூட இறக்குமதி செய்யப்படுகின்றன. இருந்தும் கடற்றொழில் நீரக வளமூலங்கள் அமைச்சுக்கு 4.4 பில்லியன் ரூபாய்களே ஒதுக்கப்பட்டுள்ளன. பால் மா இறக்குமதிக்காக பெருந்தொகைப் பணம் செலவிடப்படும் நிலையில் கால்நடை வளர்ப்பு மற்றும் கிராமிய சனசமூக அபிவிருத்தி அமைச்சுக்கு 2.2 பில்லியன் ரூபாய்களே ஒதுக்கப்பட்டுள்ளன. இவையெல்லாம் உள்நாட்டு உற்பத்திகளை அதிகரிப்பது தொடர்பில் அசிரத்தை காட்டப்பட்டுள்ளது என்பதையே காட்டுகின்றன. இவ்வாறான நிலையில் இறக்குமதிகளைக் குறைப்பது எவ்வாறு?

இந்த வரவு செலவுத்திட்டத்திலும் யுத்தத்தினால் 30 வருட காலமாகப் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு துரித மீளகட்டுமானத்திற்கென விசேட அமைச்சு எதுவும் உருவாக்கப்படவில்லை. விவசாயம், மீன்பிடி கால்நடை போன்ற துறைகள் வடக்கு கிழக்கில் மிக முக்கியமான துறைகளாகும். யுத்தம் முடிவடைந்து நீண்ட காலம் சென்றுவிட்ட போதிலும் வடக்கு கிழக்கில் இம் மூன்று துறைகளும் வழமை நிலைக்குத் திரும்ப அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. வடக்கு கிழக்கில் இம்மூன்று துறைகளும் செழிப்படையாத வரை உணவுப் பொருட்கள், கடலுணவுப் பொருட்கள், பால் மா போன்றவற்றின் இறக்குமதிகளையும் குறைக்க முடியாது என்பதனையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

நாட்டின் நிலையான பொருளாதார வளர்ச்சிக்கு அதிகூடிய முதலீடு அவசியமானதாகும். உள்நாட்டு முதலீடு போதாது என்னும் நிலையில் வெளிநாட்டு முதலீடுகள் அவசியமானவையாகும். ஆனால் சிறிலங்கன் எயார்லைன்ஸ். மற்றும் செல் காஸ் என்பன அரசுடைமையாக்கப்பட்டமை வெளிநாட்டு முதலீட்டாளர்களை அச்சமடையச் செய்துள்ளது. இவ்வாறான நிச்சியமற்ற நிலையில் எவ்வாறு வெளிநாட்டு முதலீடுகள் உள்வரும். சிங்கப்பூர், மலேசியா, தென்கொரியா போன்ற நாடுகளின் விரைவான வளர்ச்சிக்கு உறுதியான அரசியல் தலைமை மட்டுமல்ல ஊழலற்ற சட்டத்தின் ஆட்சியும் முக்கியமாக இருந்தமை மறுக்க முடியாத உண்மையாகும்.

வெளிநாட்டு உல்லாசப்பயணிகளைக் கவர்வதற்கு கசினோக்களை சட்டரீதியாக திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாடு சூதாட்டக்களமாக மாறப்போகின்றது. தற்போது பாண் உண்பது பயங்கரவாதம் என்றும் தோட்டங்களுக்கு உரத்தை உபயோகிப்பது பயங்கரவாதம் என்றும் பேசப்படுகின்றது. கையடக்கத் தொலைபேசி, ஜீன்ஸ், சேட், மாசிக்கருவாடு, கார், சிறுபிள்ளைகளின் விளையாட்டுப் பொருட்கள் யாவுமே வெளிநாடுகளிலிருந்தே இறக்குமதி செய்யப்படுகின்றது. ஏன் இவற்றையும் பயங்கரவாதம் என்று சொல்லத் தயங்குகின்றீர்கள்? நீங்கள் பயங்கரவாத மாiயையிலிருந்து வெளியே வரமுடியாமல் தவிப்பது தெளிவாகத் தெரிகின்றது.

மத்திய கிழக்கில் வேலைவாய்ப்புப் பெற்றுச் செல்லும் இலங்கையர்; பல்வேறு துன்புறுத்தல்களை எதிர் கொள்கின்றனர். அவர்களின் மாதாந்த சராசரி சம்பளம் 10 ஆயிரத்திற்கும் 15 ஆயிரத்திற்கும் இடைப்பட்ட சிறு தொகையாகும். 10 ஆயிரம் சம்பளம் பெறக்கூடிய வேலை வாய்ப்புக்களைக் கூட அவசரகால அடிப்படையில் உருவாக்குவதற்கு எவ்வித முயற்சியும் எடுக்கப்படவில்லை. எமது நாட்டுப் பெண்கள் மத்திய கிழக்கில் வெறும் 10 ஆயிரம் ரூபாவுக்காக மிகக்கடுமையான தமக்கு பழக்கமற்ற வேலைகளைச் செய்வதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டு சித்திரவதை செய்யப்படுகின்றனர். பாண் உண்பது பயங்கரவாதம் என்றும் தோட்டங்களுக்கு உரம் உபயோகிப்பது பயங்கரவாதம் என்று கூறுவோர் எமது நாட்டுப் பெண்களை தரங்குறைந்த வேலைகளுக்கு மத்திய கிழக்கிற்கு அனுப்புவதை ஏன் பயங்கரவாதம் என்று கூறுவதில்லை.

2009 ஆம் ஆண்டு மே மாதம் யுத்தம் முடிவடைந்ததன் பின்பாக 2010 ஆண்டு கொண்டுவரப்பட்ட வரவு செலவு திட்டத்தில் யுத்தம் நடந்த காலத்தை விட அதிகப்படியான நிதியாக 202 பில்லியன் பாதுகாப்பு அமைச்சிற்கு ஒதுக்கப்பட்டது. அன்று வன்னியில் இருந்த மூன்று இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் அகதிகளாகி முகாம்களில் தங்கியிருந்த போழுது அவர்களின் மீள் குடியேற்றத்திற்காக ஒதுக்கபட்டது வெறும் மூன்று பில்லியன் ரூபா மட்டும் தான். யுத்தம் மடிந்து 18 மாதங்கள் ஆன இன்றைய நிலையில் 2011 ஆம் ஆண்டுக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு செலவு திட்டத்தில் பாதுகாப்பு செலவுக்காக 13 பில்லியன் மேலதிகமாக ஒதுக்கப்பட்டு 215.2 பில்லியன் இன்று பாதுகாப்பு அமைச்சிற்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அதே வரவு செலவு திட்டத்தில் புனர்வாழ்வுக்காக மூன்று பில்லியன் ஒதுக்கப்பட்ட அதேசயம் இன்று மீள் குடியேற்றத்திற்காக 1.7 பில்லியன் மாத்திரமே ஒதுக்கப்பட்டுள்ளது. யுத்தத்தால் பாதிக்கபட்டு நூற்றுக்கணக்கான வருடங்கள் அவர்கள் தேடிய வீடுகள் சொத்துக்கள் அனைத்தையும் இழந்து நிர்க்கதியாக இருக்கக் கூடிய மக்களுக்கு அரசாங்கம் காட்டும் கரிசனை இவ்வளவுதான். இவர்கள் தான் நாம் ஒரே இனம் ஒரே தாயின் பிள்ளைகள் என ஏமாற்றுக் கதை சொல்லிக் கொண்டு இருக்கின்றார்கள்.

மாவட்டக் கச்சேரிகளுக்கான நிதி ஒதுக்கீட்டிலும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள் வடகிழக்கு மாகாணங்கள் மீண்டும் புறக்கணிக்கப்பட்டுள்ளன. தென்மகாண மாவட்டங்களுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

நேற்று சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவு திட்டத்தில் மாவட்ட கச்சேரிகளுக்கு ஒதுக்கபட்ட நிதி நிலைமையை பாhக்கின்ற போது மிக வளர்ச்சியடைந்த கொழும் மாவட்டத்திற்கு 605 மில்லியனும் கம்பஹா மாவட்டத்திற்கு 596 மில்லியனும் ஒதுக்கப்பட்ட அதே சமயம் தென் பகுதியைச் சார்ந்த காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை போன்ற மாவட்டங்களுக்கு முறையே 626 மில்லியனும், 591 மில்லியனும், 437 மில்லியனுமாக ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் யுத்தத்தால் தரை மட்டமாக்கபட்ட வன்னி மாவட்டங்களான கிளிநொச்சிக்கு 145 மில்லியனும், முல்லைத்தீவுக்கு 133 மில்லியனும் தான் ஒதுக்கப்பட்டுள்ளது. இவர்கள் கூறும் வடக்கின் வசந்தம் எவ்வாறு இருகின்றதென்பது கச்சேரிகளுக்கு ஒதுக்கபட்ட இந்த நிதி ஒதுக்கீடுகளில் இருந்து புரிந்துக் கொள்ளலாம்.

கௌரவ சபாநாயகர் அவர்களே!

வடகிழக்கு மாகாணங்களில் உள்ள இராணுவ ஆட்சி நீக்கப்படுவது எப்போது? வட மாகாண ஆளுனர் ஒரு அராணுவ அதிகாரி. கிழக்கு மாகாண ஆளுனர் ஒரு கடற்படை அதிகாரி. திருமலை மாவட்ட அரச அதிபர் ஒரு இராணுவ அதிகாரி இவை மட்டுமல்ல அண்மையில் நடைபெற்ற சிற்றூழியர் நியமனங்களில் மட்டக்களப்பு மாவட்டதிற்கு நியமிக்கப்பட்ட 21 சிற்றூழியர்களி;ல 17 பேர் சிங்களவர்கள் 4 தமிழர்கள். இந்த 17 சிங்களவர்கள் கூட மட்டக்களப்பு மாவட்டத்தை சாராதவர்கள். மன்னாரில் சிற்றூழியர் நியமனங்களுக்காக தமிழ் மக்களால் விண்ணப்பங்கள் அனுப்பப்பட்ட போதும் அந்த விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு அமைச்சர் கொடுத்த பட்டியலின் பிரகாரமே நியமனங்கள் வழங்கப்படுவதாக அறிகின்றேன். இதே போன்று யாழ்ப்பாணம் நீதிமன்றத்திற்கும் வெளி மாவட்டத்தை சேர்ந்த சிங்களவர் ஒருவர் சிற்றூழியராக நியமிக்கப்பட்டுள்ளார். குறைந்த பட்சம் சிற்றூழியர்கள் நியமனத்தில் கூட தனது சொந்த மாவட்டங்களிலே தமிழ் மக்கள் புறககணிக்கப்படுவதுடன் அண்மையில் நடைபெற்ற சிறீலங்கா நிர்வாக சேவை தெரிவில் கூட தெரிவு செய்யப்பட்ட 257 பேரும் சிங்களவர்களாகவே இருக்கின்றார்கள். இவ்வாறு தமிழ் மக்களை தொடர்ச்சியாக புறக்கணித்து உள்ளூர் நிர்வாகத்தில் கூட சிங்களவர்களை நியமிப்பது என்பது அரசாங்கத்தின் சிங்களமயமாக்கலின் நிகழ்ச்சி நிரலையே வெளிக்காட்டி நிற்கின்றது.

கௌரவ சபாநாயகர் அவர்களே!

நாட்டிற்குள் சர்வாதிகாரமான ஆட்சிமுறையை முன்னெடுக்கும் அதேவேளை வடக்கு-கிழக்கில் இனவாத இராணுவத்தை பயன்படுத்தி இனவொழிப்பு கொள்கையை நடைமுறைப்படுத்தி வரும் இவ்வாட்சியாளர்கள்தான் இலங்கையை ஆசியாவின் அதிசயமாக்கவும், அடுத்த வருடத்தில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சியை சீனாவுக்கு ஈடாக 11,12% உயர்த்துவதற்கான வரவு செலவு திட்டமாகவும் இவ்வரவு செலவு திட்டத்தை விவரிக்கின்றனர்.

ஆனால் இலங்கையின் உள்நாட்டுக் கொள்கையும் சரி, வெளிநாட்டு கொள்கையும் சரி, இவர்கள் விரும்பும் பொருளாதார வளாச்சியை முன்னெடுத்துச் செல்வதற்கான முறையில் அமைந்ததாக இல்லை. யுத்தம் முடிவடைந்து 18 மாதங்கள் ஆன பின்னரும் கூட மனித உரிமை மீறல்கள் இன்னும் தொடரவே செய்கிறது. இராணுவ புலனாய்வுத்துறை என்பது இப்பொழுது தனக்கு விரும்பாத அல்லது அரசுக்கு விருப்பமற்ற ஜனநாயக அரசியல் கட்சிகளை அழித்தொழிப்பதிலேயே அக்கறையுடன் பணிபுரிகின்றது. தமது கொள்கைக்கு முரணான பாராளுமன்ற உறுப்பினர்கள் மேல் எப்படி வழக்குகளை சோடிப்பது. அவர்களை எவ்வாறு சிறைக் கம்பிகளுக்கு பின்னால் தள்ளுவது, இதன் மூலம் அவர்களை பணிய வைப்பது, அவ்வாறான கட்சிகளை சிதறடிப்பது இதுதான் இன்று இலங்கையின் சகல புலனாய்வுத்துறையினரும் செய்கின்ற வேலையாக உள்ளது.

குடும்ப அரசாட்சியை எப்படி நிலை நிறுத்துவது, இதற்கெதிரான சக்திகளை எப்படி துவம்சம் செய்வது என்பது தான் அரசாங்கத்தின் கவலையாக உள்ளது. அவசரகால சட்டம் நீடிக்கப்பட்டு, ஜனநாயகத்தை குழி தோண்டிப் புதைக்கும் வேலையும் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. புதிய, புதிய சட்ட மூலங்கள் மூலம் தனி நபர்களுக்கான அதிகாரங்கள் அதிகரிக்கப்படுவதுடன், வெளிப்படைத் தன்மைக்கும் ஜனநாயக அமைப்புக்களுக்கும் மூடு விழா நடைபெறுகின்றது.

இது போன்றே இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கையும் சர்வதேச சமூகத்தை கவர்வதாக இல்லை. குறிப்பாக ஜனநாயக பாரம் பரியங்களைக் கொண்ட ஐரோப்பா, அமெரிக்கா போன்ற நாடுகளை இலங்கை அரசு எதிரிகளாகவோ அல்லது இலங்கையின் உள்நாட்டுப்பிரச்சினையில் தலையிடும் சக்திகளாகவோ தான் பார்க்கின்றது. ஜனநாயகம், மனித உரிமைகள், தொழிலாளர் உரிமை தொடர்பான சர்வதேச சட்டங்கள் இலங்கை அரசால் மதிக்கப்பட வேண்டும் என இலங்கை அரசை சர்வதேச சமூகம் வற்புறுத்துகின்றது. ஆனால் வற்புறுத்தல்கள் இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிடுவதற்கு சமனானது என இலங்கை அரசு கருதுகின்றது. இவ்வாறான மோதல்களால் ஐரோப்பிய யூனியன் வழங்கி வந்த GSP+ போன்ற வரிச்சலுகைகள் நிறுத்தப்பட்டுள்ளன. அவை தவிர யுத்த காலத்தில் இலங்கை இராணுவம் மேற்கொண்ட யுத்தக் குற்றங்கள் என்பனவும் இலங்கை அரசுக்கு சர்வதேச ரீதியில் அபகீர்த்தியை ஏற்படுத்தி வருவது மாத்திரமல்லாது இந்த யுத்தக்குற்றங்கள் தொடர்பான சர்வதேச விசாரணைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் எனவும் பல நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. இதுவும் இலங்கைக்கு பாரிய பின்னடைவுகளை ஏற்படுத்தி வருகின்றது.

நடந்து முடிந்த யுத்தம் மனதாபிமானத்தை நிலை நாட்டுவதற்கான யுத்தம் என்றும் அங்கு எந்த விதமான உயிரிழப்புக்களும் இல்லை ( 0 Casuality) என்றும் இலங்கை அரசாங்கம் பிரசாரம் செய்தும் கூட பல ஆயிரக் கணக்கான மக்கள் அங்கே கொல்லப்பட்டிருக்கின்றார்கள், வைத்தியசாலைகளிற்கு மேல் குண்டு வீச்சுக்கள் நடாத்தப்பட்டுள்ளன. அரசாங்கம் உருவாக்கிய பாதுகாப்பு வலயங்களில் இருந்த மக்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். பால் உணவுக்காக வரிசையில் நின்ற சிறுவர்கள் கொல்லப்பட்டிருக்கின்றார்கள், முதியவர்கள் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். வெள்ளைக் கொடியுடன் சென்று சரணடைந்தவர்கள் பலர் கொல்லப்பட்டிருக்கின்றார்கள் ஆகிய உண்மைகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இவை எல்லாம் யுத்தக்குற்றங்களாகவே கணிக்கப்படுகின்றது. இவ்வாறான சூழ்நிலையில் இலங்கையில் அரசியல் ஸ்திரத்தன்மை உண்டென்பதை எந்தப் பொருளாதார வல்லுனரும் நம்பப்போவதில்லை. யுத்தம் முடிந்திருக்கலாம், ஆனால் நாடு இன்னும், அவசரகால சட்ட ஆட்சிக்குள்ளும், ஜனநாயக மறுப்பிற்குள்ளும், சர்வாதிகார போக்கிற்குள்ளும் தான் இருக்கின்றது.

இப்படியான சூழ்நிலையில் அந்நிய முதலீடுகள் வந்து குவியும் என்று எதிர்பார்ப்பதும், அதிசயங்கள் நடக்கும் என கூறுவதும் ஒட்டு மொத்த நாட்டுக்கும் புலுடா விடும் கதையே தவிர அதில் எது வித உண்மைத் தன்மையுமில்லை என்பதை நாடறியும்.

இவற்றை புரிந்து கொண்டதன் அடிப்படையில் தான் K.P மூலம் புலம்பெயர்ந்த தமிழ் மக்களின் மூலதனத்தை கொண்டு வர முயற்சிக்கின்றார்கள். ஆனால் அது கூட உங்களால் முடியாது. K.P யை நம்பி தமது பணத்தை முதலீடு செய்ய அவர்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல. வட-கிழக்கு தமிழ் மக்களின் அரசியல், பொருளாதார கலாச்சார, பாதுகாப்பு, நிர்வாக வேலைகளை கவனிக்கக்கூடிய சகல அதிகாரங்களுடன் கூடிய ஓர் நிறுவனம் என்று தோற்றுவிக்கப்படுகின்றதோ அப்பொழுதுதான் புலம் பெயர் தமிழர்கள் முதலீடு செய்ய முன்வருவார்களே தவிர கொழும்பை நம்பியோ, K.P யை நம்பியோ அவர்கள் எதனையும் செய்ய மாட்டார்கள் என்பதை தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள். எனவே தான் உங்கள் உள்நாட்டு கொள்கைகளையும், வெளிநாட்டு கொள்கைகளையும் மறு பரிசீலனை செய்யுங்கள். சிங்கள கடும் போக்காளர்களும், சிங்கள மேலாதிக்கவாதிகளும் நாட்டுப்பற்றாளர்கள் என்ற பெயரில் ஐரோப்பியர், அமெரிக்கர் எல்லோரும் காலனி ஆதிக்கவாதிகள் எனக்குதிக்கலாம், இந்நாட்டில் சிறுபான்மை தேசிய இனங்களுக்காக உரிமைகள் கொடுக்க கூடாதென அறிவுரை கூறலாம். இன்றைய உலகில் இவையெல்லாம் ஏற்றுக் கொள்ளப்பட முடியாத, காலம் கடந்த சிந்தனைகள் என்பதை அரசு புரிந்து கொள்ள வேண்டும். இத்தகையவர்களால் நாட்டை மேலும் அழிவுப்பாதையில்தான் கொண்டு செல்ல முடியும்.

கௌரவ சபாநாயகர் அவர்களே!

ஒரு பக்கம் ஜனநாயக மறுப்பு, இன்னொரு பக்கம் குடும்ப ஆட்சியின் சர்வாதிகாரம், மறுப்பக்கம் இன ஒழிப்பு நடவடிக்கைகள், தமிழ் மக்கள் மேல் கட்டவிழ்த்து விட்ட அடக்குமுறைகள் இன்னும் பலபடி அதிகரித்திருக்கின்றதே தவிர குறைவடையவில்லை. என்ன காரணங்களுக்காக தமிழ் மக்கள் தனிநாடு கேட்டு போராடினார்களோ அந்தக் காரணிகள் மேலும் வலிமை பெற்று வருகின்றதே தவிர குறையவில்லை. இந்நிலையில் இலங்கையில் பொருளாதார சுபீட்சமும் ஏற்பட முடியாது அதிசயமும் நிகழ முடியாது. ஆகவே முதலில் உள் நாட்டு கொள்கையில் மாற்றம் வேண்டும். தமிழர்கள் தமது பாதுகாப்பு, பொருளாதார வளர்ச்சி, கல்வி, கலை, கலாச்சாரம் பண்பாடு மற்றும் முழுமையான தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளும் வகையில் தமிழர்கள் தமது பிரதேசங்களை தாமே ஆளுகின்ற கூட்டாட்சி அரசியல் முறை உருவாக்கப்பட வேண்டும். இந்நிலை உருவாகும் வரையில் இலங்கையில் பொருளாதார அதிசயங்கள் நிகழ்வது அபூர்வமாகத்தான் இருக்கும்.

எனவே தமிழின அழிப்பிற்கென்றே தயாரிக்கப்பட்ட இவ்வரவு செலவு திட்டம் பாரிய மாற்றத்திற்கு உள்ளாக வேண்டும் போரினால் அழித்தொழிக்கபட்ட திருகோணமலை, மட்டக்களப்பு, வன்னி மாவட்ட மக்களின் மீள்குடியேற்றம், பாடசாலைகள், வைத்தியசாலைகள், கோவில்கள் மற்றும் தேவாலயங்களின் புனரமைப்புக்காக போதிய நிதி ஒதுக்கப்பட வேண்டும். இராணுவ செலவீனங்கள் பெருமளவுக்கு குறைக்கப்பட்டு வடக்கு கிழக்கில் இராணுவ முகாம்களும் செயற்பாடுகளும் 83 இற்கு முந்திய நிலைக்கு செல்ல வேண்டும். வடக்கு கிழக்கில் அழிக்கப்பட்ட மக்களின் சொத்துகளுக்கு நிவாரணமும் அவர்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்த போதிய நிதியும் சிறப்பாக ஒதுக்கப்பட வேண்டும். இல்லாவிடத்து இது வெறும் தமிழ் இன ஒழிப்பு வரவு வெலவு திட்டமாகவே இருக்கும் என்பதனையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இத்தகைய அப்பட்டமான இனவாத வரவு செலவு திட்டத்தை முற்று முழுமாக எதிர்க்கும் என்பதனையும் வலியுறுத்தி கூற விரும்புகின்றேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.