Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லண்டன் தமிழர்களுக்கு ஒரு சல்யூட்!- குமுதம் முச்சந்தி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

"எல்லோருக்கும் வணக்கம்.மதிப்பிற்குரிய நம்ப அலப்பறை டீம் கூட்டம் இன்னைக்கு அவசரமா நடத்தவேண்டிய அவசியம்? ஸ்பெக்ட்ரம் ஊழலில் சிக்கினமாதிரி வாய் திறந்து பேசாம இருந்த சித்தனை கட்டி இழுத்துட்டு வந்திருக்கோம். 'போட்டு பின்னிடலாம் வாங்க' " என்ற அறிவிப்புடனே செம்மொழிப் பூங்காவில் இடம் தேடி அமர்ந்தார் சுவருமுட்டி சுந்தரம்.அருகில் நம்ப ஆ.ராசா மாதிரியே வீரவசனம் பேசிக்கொண்டிருந்தார் சித்தன். ஆனால் யாரும் கேட்கிற மாதிரி இல்லை.

கோட்டைசுத்தி கோபாலு அண்ணன்தான் பேசினார்.''நம்ப லண்டன் தமிழர்களுக்கு முதலில் ஒரு சல்யூட் வைக்கணும்பா. 'எப்படியிருந்த நான் இப்படியாயிட்டேன்'னு ராஜபக்சேவை புலம்ப வைச்சுட்டாய்ங்க.அந்த மனுஷன் நெஞ்சை நிமிர்த்திகிட்டு போன கம்பீரம் என்ன?.இப்போ தலைகுனிந்து ஓடிவர்ற ஒட்டம் என்ன?.சும்மா பட்டைய கிளப்பிட்டாய்ங்கப்பா" என்று பேசும்போதே குறுக்கிட்ட அன்வர்பாய், "இப்படி மொட்டையா சொன்னா எப்படி? நடந்ததை விளக்கமா சொல்றது" என்றார்.

"என்னத்த விளக்கமா சொல்றது. அதான் நாடே பார்த்து சிரிக்குதே. அந்த மனுஷன் ராஜபக்சே,இந்தியாவுக்கு போறதா நினைச்சு லண்டனுக்கு போனாரு. இங்க தமிழ்நாட்டுல துணை தூதரா இருந்தாரில்ல அம்சா. அவருதான் லண்டன்ல இலங்கை தூதர்.தமிழ்நாட்டுல பத்திரிகையாளர்-களையும், மற்ற அரசியல்வாதிகளையும் சரிகட்டி வைச்சிருந்த மாதிரி, அங்கேயும் ஏற்பாடு செய்து வைச்சிருப்பார்.நாமும் நெஞ்சை நிமிர்த்திகிட்டு இந்தியாவுல போய் இறங்குற கணக்கா லண்டனில் நகர்வலம் வரலாம்னு நினைச்சி பறந்தாரு.அங்க போன பிறகுதான் நிலைமையே தெரிஞ்சது.மனுசன் விமான நிலையத்தைவிட்டே வெளியில வர முடியல. வி.ஐ.பி. வழியா தப்பி ஓடலாம்ணு பார்த்தா அதுக்கும் வழியில்ல. அங்கேயும் தமிழர்கள் முற்றுகை. நம்ப பொழப்பு இப்படி ஆயிடுச்சேன்னு மனசுக்குள்ளேயே அழுதுகிட்டு மூணாவதா ஒரு வழியா தப்பிச்சு போயிருக்காரு.அதுக்கும் பாதுகாப்பு போலீசுங்க படாதபாடு பட்டிருக்காய்ங்க. பிறவு 'சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன்' மாதிரி யுனிவர்சிட்டியில ஏற்பாடான கூட்டத்தில் பேசி கௌரவத்தை நிலைநாட்டிடலாம்ணு பார்த்தாரு.தமிழருங்க அதுக்கும் ஆப்பு வைச்சிட்டாய்ங்க. உலகம் முழுவதுமிருந்து லட்சக்கணக்குல ஈமெயில் அனுப்பி எதிர்ப்பு தெரிவிக்க, ஆடிப்போனது நிர்வாகம். கூடவே பிரிட்டிஷ் தமிழ் போரம் விட்ட அறைகூவலை ஏற்று ஆயிரமாயிரம் பேர் நகரத்துல கூடத் தொடங்கிட்டாய்ங்க. ராஜபக்சே தங்கியிருக்கிற பெரிய ஓட்டல் முன்பாக முற்றுகையிடும் போராட்டத்துக்கு முறைப்படி அனுமதி வாங்கி அங்கேயும் போராடத் தொடங்கிட்டாய்ங்க. கடும்குளிர், கொடும்பனிக்கு மத்தியில இருபதாயிரத்துக்கும் மேலான மக்கள் அங்க முற்றுகைப் போராட்டம் நடத்த, அந்த மனுஷன் ராஜபக்சே அங்கிருந்தும் எஸ்கேப்பாகி இலங்கை தூதரகத்தில் போய் தங்திகிட்டாரு..."

"அடக்கடவுளே. உலகத்திற்கே 'நான்தான் மாமன்னன்'ங்கிற நினப்புல சுத்தி திரிந்தவருக்கு இப்படி ஒரு நிலைமையா!" - அன்வர்பாய்

''அதற்குள்ளவே அடக்கடவுளே என்றால் எப்படி?. இன்னும் விஷயம் இருக்கு கேளுங்க.எம்பசிக்குள்ள உட்கார்ந்துகிட்டு இலங்கை தூதர் அம்சாவைப் பார்த்து கத்தி கதறி தீர்த்திருக்காரு.இப்படியெல்லாம் நடக்கும்னு ஏன் முன்னாடியே சொல்லல.தெரிந்திருந்தா வந்திருக்க மாட்டேன்ல.அதுக்கா நான் பிரிட்டிஷ் இளவரசிகிட்ட 'கைது ஏதும் பண்ணிடாதீங்கன்னு கெஞ்சி கேட்டு கடிதம் அனுப்பி இங்க வந்தேன்' என்று பிராண்டி எடுத்திருக்காரு. இதுக்கு மத்தியில அவரையும் முக்கிய ராணுவ தளபதிகளையும் கைது செய்ய ஏதாவது சட்ட நடவடிக்கை எடுக்க முடியுமான்னு வேற தமிழருங்க ஏற்பாடு செய்ய மனுஷன் ஆடிப்போயிட்டாராம். எப்படியாவது சொந்த நாட்டுக்கு தப்பி போனாப் போதும்னு தனி விமானத்துல பறக்க ஏற்பாடு செய்யச் சொலிலிட்டாரு. இந்த முறை இலங்கையில போய் இறங்குறப்போ அவரோட முகத்தை பார்க்கணுமே..'' என்று சொல்லி சிரித்தார் கோட்டை கோபாலு அண்ணன்.

"இம்புட்டுக்கும் காரணம் சேனல்-4தான் என்கிற விஷயத்தை விட்டுட்டியேப்பா.."- சுவருமுட்டி

"ஆமாம். மறக்காம அதுக்கு ஒரு சல்யூட் வைக்கணும்பா. விடுதலைப் புலிகளின் பெண் போராளிகளை சித்ரவதை செய்து நிர்வாணப்படுத்தி சிங்கள ராணுவம் படுகொலை செய்த காட்சிகளை சரியான நேரத்தில் அம்பலப்படுத்தினதும் முக்கிய காரணம். அது மட்டுமல்ல, புலிகள் இயக்கத்தின் முக்கிய தளபதி கேணல் ரமேஷை பிடித்து விசாரணை செய்து அதன் பிறகுதான் படுகொலை செய்திருக்காங்கன்னு சொல்லி, அதற்கான வீடியோ ஆதாரத்தை எல்லாம் வெளியிட்டிருக்காய்ங்க. சிங்கள ராணுவத்தின் இந்த கேவலமான நடவடிக்கைய பிரிட்டிஷ் மட்டுமல்ல உலக நாடுகள் எல்லாமும் கடுமையா பார்க்குது.இனிமே என்ன செய்யலாம்னு குழம்பிப்போய் புறப்பட்டிருக்காரு ராஜபக்சே.இந்த லட்சணத்துல இலங்கையில இருக்கிற அமெரிக்க தூதரக அதிகாரி அமெரிக்க தலைமைக்கு அனுப்பின ரகசிய கடிதங்களை விக்கிலீக் இணையதளம் வேற வெளியிட்டது. அதுல ராஜபக்சே, அவரோட தம்பிங்க, சரத் பொன்சேகா,முக்கிய தளபதிங்க எல்லாம் போர்க் குற்றவாளிகள்தான். அப்பாவி மக்களை கொன்றது உண்மைதான். ராஜபக்சேவே போட்டுகிட்ட விசாரணை ஒரு நாடகம்தான். உலகத்திலேயே இப்படி ஒரு போர்க்குற்ற விசாரணை நடத்துறதுக்கு முன்னுதாரணம் ஏதுமில்ல.எல்லாம் நாடகமாத்தான் இருக்குங்கிறத தோல் உரிச்சிருக்காங்க. கடந்த ஜனவரி மாதத்திலேயே அப்படி ஒரு கடிதம் அனுப்பியும் அமெரிக்கா இலங்கைய 'போர்க்குற்றம், இனப்படுகொலை செய்த நாடு'ன்னு கண்டிக்காம விட்டது பெரும் அதிர்ச்சிய ஏற்படுத்தியிருக்கு" என்றார் கோட்டை கோபாலு ..

நம்ப சுவருமுட்டி சுந்தரத்துக்கு கவர்மெண்ட் சரக்கு நல்லா வேலை செய்துகொண்டிருந்தது. 'புல்' போதையில இருக்கிறப்போதான் அவரு உண்மைய போட்டு உடைப்பாரு.'இவன் பேசாம இருந்தாலே போதும்பா'ன்னு நம்ப அலப்பறை டீம் நினைக்கும். உண்மைய உளறி ஏகத்துக்கும் பிரச்சனைய கிளப்பிடுவாரு. அப்படிப்பட்ட 'சுவருமுட்டி' வாய் திறந்தார்..

''என்னத்தய்யா பேசிகிட்டு இருக்கீங்க. நான் ஒரு சங்கதிய சொல்றன் கேளு. தமிழ்நாட்டுல இருக்கிற 'தம்பி', கனடாவில் இருக்கிற அக்காவுக்கு 'புலம்பெயர்ந்த தமிழர்கள்தான் கொஞ்சம் உப்பு, காரம் போட்டு சாப்பிடுறீங்க. அந்த சொரணைய லண்டனில் நிரூபிச்சிட்டீங்க. தாய் தமிழ்நாட்டில் இருக்கிற எங்களைப் பாருங்க. ராஜபக்சேவை டெல்லிக்கும், திருப்திக்கும் ராஜமரியாதையா வர விட்டோம்.தாய் தமிழர்களுக்கு சொரணை கம்மிதான்'னு கடிதம் எழுதி புலம்பியிருந்தாரு.அதுக்கு கனடாவில் இருக்கிற 'அக்கா', 'என்ன தம்பி இப்படி பிரிச்சு எழுதிட்டீங்க. இனிமே நீங்க நாங்கன்னு எழுதாதீங்க.உலகத்தையே அதிரவைத்த முத்துக்குமாரை தந்தது அந்த தமிழ்நாடுதான். பழ. நெடுமாறன் ஐயா, வைகோ,சீமான்னு நிறைய உணர்வாளர்களை தந்திருக்கிறதும் தமிழ்நாடுதான். ஒட்டு மொத்தமா ஒரேடியா குத்தம் சொல்லக்கூடாதுப்பா. அது தப்பு'ன்னு கண்டிச்சிருக்காங்க..."

"பின்ன என்னப்பா. 'அக்கா' கண்டிக்கிறது நியாயம்தான். தம்பி இப்படி பொத்தாம் பொதுவா சொல்லக்கூடாதில்ல. தப்புதானே.."- அன்வர்பாய்

''வாஸ்தவம்தான். இங்க இருக்கிற எல்லோரும் உணர்வாளர்தான். யாரு இல்லேன்னது. ஆனா ராஜபக்சே இந்தியா வந்தப்போ என்ன செய்தாங்க...? அதை நான் சொல்லவில்லை. அக்கா வருத்தப்படுவாய்ங்க. தமிழருவி மணியன் ஒரு கூட்டத்தில் பேசினதை அப்படியே சொல்றேன். 'ராஜபக்சே இந்தியாவுக்கு வர்ற சேதி இருபது நாளுக்கு முன்னமேயே தெரியும். அறிவிச்சாங்க. இங்க இருக்கிற இயக்கங்களை விடுங்கள். அவர்களுக்கு போதிய ஆள்பலம் இல்லாம இருக்கலாம். ஆனால் பெரிய கட்சிகளை நடத்தும் உணர்வாளர்கள் என்ன செய்தார்கள். மிகப் பெரிய கூட்டத்தைக் கூட்டி கலைஞருக்கு விழா எடுத்து சிறுத்தைகளின் பலத்தை பாருங்கள் என்று காட்ட முடிந்த திருமாவளவனால் சில ஆயிரம் பேரை திரட்ட முடியாதா?. சும்மா, பெயருக்கு ஒரு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்திட்டு ஒதுங்கிக்கொண்டார். பல ஆயிரம் பேரைக்கூட்டி பிரமாண்ட கூட்டத்தை நடத்தி அம்மாவிடம் பலத்தை காட்டும் வைகோ ஏன் அப்படி ஒரு கூட்டத்தைக்கூட்டி ராஜபக்சேவை எதிர்க்காமல் விட்டார்.இதுவரை இல்லாத அளவில் பிரமாண்டமான இளைஞர்கள் கூட்டத்தை மதுரையில் காட்டி முழங்கிய சீமான், அதே போன்ற கூட்டத்தை ஏன் ராஜபக்சேவுக்கு எதிராக கூட்டவில்லை? இவர்கள் எல்லாம் பெயருக்காக வேண்டி, நானும் எதிர்க்கின்றேன் என்கிறதுக்காக சும்மா ஒரு ஆர்ப்பாட்டத்தை நடத்தி முடித்தார்கள்' என்று வேதனையோடு கூறினார். அந்த கூட்டத்தில் எல்லோரும் மதிக்கும் தோழர் நல்லகண்ணுவும் அங்க இருந்தார். இப்படி சொல்றதால அந்த உணர்வாளர்களை குற்றம் சொல்றதா நினைக்ககூடாது. சரியான வகையில பயன்படுத்தணும். எதையும் அரசியலுக்காக நடத்தக்கூடாது. அக்கா வருத்தப்படுவது நியாயம்தான். ஆனால் 'நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே' என்பதும் நம் பரம்பரைதாங்கிறதை மறந்துடக்கூடாது'' உட்கார்ந்தபடியே தள்ளாடி பேசினார் சுவருமுட்டி.

"சரிப்பா. சித்தன் ஏன் வாய் திறக்க மாட்டேங்கிறாரு. காங்கிரஸ் கட்சி கணக்கா மௌனமா இருக்காரே.பேசவேகூடாதுன்னு சத்தியம் செய்திருக்காரோ.." - வம்பிழுத்தார் கோபாலு.

''அவரு நிலைமை, ரொம்ப பாவம்பா. காங்கிரஸ் கட்சி மாதிரின்னு மட்டுமில்ல. நம்ப கலைஞர் மாதிரியும் இருக்காரு. ஸ்பெக்ட்ரம் ஊழல், நீரா ராடியாவுடன் கனிமொழி, ராசாத்தியம்மா, ஆ.ராசா ஆகியோர் 'உரையாடிய' டேப் விவகாரம் வெடிச்ச பிறகு நம்ப கலைஞரும் அப்படித்தான் பேசாம கிடக்காரு.எதற்கெடுத்தாலும் அவரே கேள்விய எழுதி, அவரே பதிலையும் எழுதி உடன் பிறப்புகளுக்கு அனுப்புவாரு. ஆனால் இன்றைய தேதி வரைக்கும் நீரா ராடியாவுடன் கனிமொழி பேசியதை பற்றியோ, இல்ல ராசாத்தியம்மா பேசியதை பற்றியோ ஒரு வார்த்தை வாய்திறந்து பேசல.ஒரு நாட்டின் மத்திய மந்திரிசபைக்கு பேரம் பேசப்பட்டது உண்மையா இல்லையான்னு உடன் பிறப்புகளுக்கு எழுத முடியவில்லை. கேட்டால் நான் ஊழலுக்கு எதிரி. நெருப்பு, எரிமலை அப்டீன்னு எழுதுறாரு.எனக்கிருக்கும் சொத்து கோபாலபரம் வீடு மட்டும்தான்.அந்த வீட்டையும் மக்கள் சேவைக்கு எழுதிகொடுத்திட்-டேன்ங்கிறாரு. தவிர ஒரு எட்டு பத்து கோடிக்குதான் பணம் இருக்குன்னு சொல்றாரு..." என்று கோபாலு பேசிக்கொண்டிருக்கம் போதே குறுக்கிட்ட சுவருமுட்டி...,

''எல்லாம் சரிதான்பா. அவரோட சொத்துக் கணக்கை மட்டும் ரொம்ப யோக்கியமா சொல்றாரு. அப்படியே தயாளு அம்மாள், ராசாத்தியம்மா, முத்து, அழகிரி, ஸ்டாலின், தமிழரசு, செல்வி, கனிமொழி, அவங்களோட வாரிசுங்க சொத்து கணக்கையெல்லாம் சொல்ல வேண்டியதுதானே. அவிங்க குடும்பத்துல மட்டும் எப்படி நாலு சினிமா கம்பெனி தொடங்கியிருக்காங்க? எங்கெங்க எத்தனை ஏக்கர் நிலம் இருக்கு? என்ன வர்த்தக கட்டிடம் இருக்கு? பல கல்விக்கூடங்களில் இருக்கின்ற பங்கு எவ்வளவு? அம்புட்டு சொத்தும் அவர்களால் மட்டும் 'உழைச்சு' சம்பாதிக்க முடிந்தது என்றால் ஏன் நம்மால முடியல.கலைஞரோட பிள்ளைகளுக்கும், பேரப்பிள்ளைகளுக்கும் தெரிந்த அந்த 'தொழில் ரகசிய'த்தை வேலையில்லாத இளைஞர்களுக்கு சொல்லி தர ஒரு முதல்வரோட கடமையில்லையா? தான் முதலமைச்சரா இருக்கிற தமிழ்நாட்டுல அறுபது லட்சத்துக்கும் மேலான இளைஞர்கள் வேலையில்லாம இருக்கிறது நல்லதா? அப்படியே வேலை செய்தாலும் அப்படி சொத்து சேர்க்க முடியாம அல்லாட விடலாமா? அந்த இளைஞர் கூட்டமெல்லாம் கோடீஸ்வரர்களானால் தமிழ் நாட்டுக்குதானே பெருமை.அந்த பெருமை கலைஞருக்குதானே'' என்று சுவருமுட்டி கேள்விகளை அடுக்கிகொண்டிருக்கும் போதே அவரது வாயைப் பொத்திய சித்தன்...

''டேய், இவன் நம்ப எல்லாரையம் 'உள்ள' வைக்காம விடமாட்டான் போலிருக்கு. இவனை பேசவிட்டா 'உடன் பிறப்புகளின் உருட்டுக்கட்டை' விருந்துதான் நமக்கு கிடைக்கும். ஏதோ ஒண்ணா கூடினோமா, நாட்டு நடப்பு பற்றி பேசினோமா,அப்படியே கலைஞ்சோமான்னு இருக்காம வம்புல மாட்டிவிட பார்க்குறான்''என்றபடியே வேறு விஷயத்துக்கு தாவினார்.

"சரி. அந்த விவகாரம் ஏதும் வேண்டாம். டெல்லி பக்கம் போவோம். காங்கிரஸ் எப்படி இருக்காம்?"- அன்வர்பாய்.

''அங்கமட்டும் என்ன வாழுதாம். டவுசரு கழறுது. ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்துல சுப்ரீம் கோர்ட் கேட்குற கேள்விக்கு பதில் சொல்ல முடியாம திணறிகிட்டிருக்கு. பீகார் சட்டமன்ற தேர்தலில் வேற தர்ம அடி வாங்கியிருக்கு.இந்தப் பக்கம் என்னடான்னா 'மத்திய ஆட்சியில் மதவாதிங்க வந்துடக்குடாதுன்'னு கலைஞர் மறைமுகமா குடைச்சல் கொடுக்கிறார்.ஸ்பெக்ட்ரம் விஷயத்துல ஆ.ராசாவுக்கு குடைச்சல் கொடுத்தா அது திமுக-விற்கு கொடுத்த குடைச்சலாதான் அமையும். அப்படி அமைந்தால் மத்தியில் பி.ஜே.பி. ஆட்சிக்கு வர்ற நிலைமை மாறும் என்கிறார்.இந்திய வரலாற்றிலேயே முதன் முதலாக என்று விளம்பரம் போடுவார்களே அந்தமாதிரி இதுவரை இல்லாத அளவிற்கு தொடர்ந்து பதிமூன்று நாட்களுக்கு மேல் நாடாளுமன்ற கூட்டத்தை நடத்த முடியல.ஸ்பெக்ட்ரம் ஊழலைச் சொல்லி எதிர்கட்சிங்க தண்ணீர் காட்டுறாங்க. 1,70,000 கோடி ஊழலில் சோனியாவுக்கும் பெரும் பங்கு போய் சேர்ந்திருக்கு.சோனியாவோட இரண்டு சகோதரிகளுக்கு தலா 18,000 கோடி ரூபாய் போய் சேர்ந்திருக்கு. அறுபது சதவீத ஊழல் பணம் சோனியாகிட்டதான் இருக்குன்னு நம்ப சுப்ரமணிய சுவாமி வேற போட்டு தாக்குறாரு. மொத்தத்தில் பார்த்தா சோனியாவும், பிரதமரும் முகத்தை சோகத்தில் இருந்து மீட்க முடியாதவர்களாக வைத்திருக்கிறார்கள். அவர்களின் முகமலர்ச்சிக்கு எப்ப நல்ல காலம் பொறக்குமோ'' என்று அடங்க மாட்டாமல் போட்டுத் தாக்கினார் சுவருமுட்டி.

"இந்த சோகமுகம், ஈழத்தில் ஒரு லட்சம் தமிழர்களை சிங்களவன் கொன்றபோது இல்லாமல் போனதே என்பதுதான் என் வருத்தம்.." - கோபாலு.

"அப்படி போடுப்பா. அன்னைக்கு ஒரு இனமே அழுதுகிட்டிருக்கிறப்போ, சிரிச்சுகிட்டு கவலையில்லாம இருந்த இரண்டு முகங்கள், இன்னைக்கு நிம்மதியில்லாம அழுதுகிட்டு இருக்கு. ஒரு முகம் ஸ்டேட்டு. ஒரு முகம் சென்ட்ரல். எப்படியிருக்கு பார்த்தீர்களா. இதுதான் 'முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்' என்பது" என்றபடியே எழுந்தார் சித்தன்.

"என்னப்பா. அதுக்குள்ள எழுந்துட்டே! தமிழ்நாட்டு அரகியல் பற்றியும், கூட்டணி பற்றியும் நிறைய பேச வேண்டியிருக்கே.." என்றார். "இனிமே அடிக்கடி நம்ப கூட்டத்தை கூட்டவேண்டியிருக்கும்பா. அதனால அடுத்த முறை அதைப் பேசிக்கலாம்.." என்றபடியே நடையைக் கட்டினார் சித்தன். கூட்டம் கலைந்தது.

- குமுதம் முச்சந்தி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.