Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர் இறையாண்மை மாநாடு குறித்து தணிகைச்செல்வன் கட்டுரை

Featured Replies

மறைமலையில் திரண்டது தமிழ்நாடு

எரிமலையாய்ச் சினந்தது மாநாடு

- தணிகைச்செல்வன்

நீலச்செங்கொடி நட்சத்திரங்கள்

நிறைந்து பறந்த பெருந்திடலில்

ஈழச் சங்கொலி முழக்கிடத் திரண்ட

இளஞ்சிறுத்தையர் இனத் திரளில்

தேகத் தீயினில் சாகத் துணிந்த

ஈகப் புலிகளின் எரி தழலை

தேசத் தலைவன் திருமா ஏந்தித்

தொடர்வான் ‘தம்பி’யின் அடிநிழலை

தமிழர் இறையாண்மை மாநாட்டிலிருந்து கிளம்பித் தமிழ்நாட்டின் திக்கெட்டும் திரும்பிக் கொண்டிருந்த சிறுத்தைகளின் ஒவ்வொருவர் நெஞ்சிலும் மேலே உள்ள வரிகளின் சாரம்தான் அழுத்தமாய்ப் பதிவாகியிருக்கும் என்பதில் ஐயமில்லை.

ஏனெனில், ஈழத்துக்கான தாயகத்தின் வாரிசு தம்பியின் தம்பிதான் என்பதை இதே மறைமலை நகரில் நடந்த உண்ணாநிலைப் போர், தேசத்துக்கே தெரிவித்த சரித்திரத்தை 2009ஆம் ஆண்டிலேயே உருவாக்கிவிட்டது.

தமிழ்த் தேசியர்கள் சற்றே சிந்திக்க வேண்டும். அதிகபட்சமாய் ஆயிரம்பேர்கூட அமராத ‘மாபெரும் மாநாட்டில்’ தமிழர்களின் மாபெரும் தலைவர்கள் மொத்தமாய்க்கூடி நடத்தும் யுத்தத்தின் இலக்கு யார்? ராஜபக்சேவா? இல்லை சோனியாவா? இல்லை ஜெயலலிதாவா? பின் யார்? கலைஞர்!

இருபதாண்டு வரலாறு அறிந்தவர்களுக்குத் தெரியும் - தமிழ்நாட்டின் அரசியல் போர் என்பதே தேசிய இனப்போர்தான். தமிழுக்கும் இந்திக்குமான போர்; தமிழனுக்கும் ஆரியனுக்குமான போர்; தமிழ்நாட்டுக்கும் தில்லிக்குமான போர்; ஈழத்துக்கும் இந்தியத்துக்குமான போர்; புலிகளுக்கும் ‘ரா’(சுஹறு)வுக்குமான போர்!

இந்தப் போரில் ஜெயலலிதா எந்தப் பக்கம்? ஜெயா தமிழ்ப் பகையாளி; தமிழனின் பகையாளி; தமிழ்த்தேசியப் பகையாளி; ஈழத்தின் எதிரி, புலிகளின் எதிரி; பிரபாகரனின் பயங்கர எதிரி; சந்திரிகாவுக்குச் சகோதரிப் பந்தம்; ராஜபக்சேவின் ரத்த பந்தம்! கொழும்புக் கொடுங்கோலர்களின் கொள்கைபரப்புச் செயலாளர்!

“போரில் கொலை என்பது நியாயம்; ஈழமக்கள் கொல்லப்படுவது நியாயம்; பிரபாகரனைத் தூக்கிலிடுவது நியாயம்; பேரறிவாளனுக்கு மரண தண்டனை நியாயம்; நளினியை விடுவிப்பது அநியாயம்!”

- இப்படிக் கணக்கற்ற பகைச் சிந்தனைகளின் கூட்டுத்தொகைதான் ஜெயலலிதா. ஈழத்துக்காக ஆறுமணி நேர ஆகார மறுப்பு; இலங்கையின் மீது படையெடுப்பு - என்று சான்று அளித்த ஆகாசப் புளுகின் ஆயுள் எத்தனை மணித்துளிகள் என்பதை சோ, சு.சாமி, ‘இந்து’ ராம் ஆகியோர் மட்டுமே அறிவார்கள் என்பதோடு வைகோவும் அறிவார் என்பதே முழு உண்மை.

‘நடிகர்கள் விஜய்க்கும், விஜயகாந்துக்கும் ஒதுக்கியது போக மிச்சமுள்ள ஒரே ஒரு தொகுதியில் நாஞ்சில் சம்பத் நிற்கட்டும், நாடாளுமன்றத் தேர்தல் வரும்போது நீங்கள் போட்டியிடலாம். அதுவரை கருணாநிதியைக் குதறுவதே உங்கள் கட்சிப் பணி’ என்று புரட்சிப் புயலுக்குப் ‘புரட்சித் தாய்’ காலால் கட்டளையிட்டாலும் அதையும் தலையால் ஏற்றுச் செயலாற்ற வைகோ தயார்.

கடைசித் தம்பி சாகிறவரை களமாடி பாரதத்தில் துரியோதனன் பலியான பின்பே காந்தாரி காலமானாள் என்ற கதை புனரமைக்கப்பட்டு அரங்கேறுகிறது போயஸ் வனத்தில்.

“கலைஞரை வீழ்த்துவோம் - தேர்தலில் தோற்கடிப்போம்” என்ற ஒற்றை வரித் திட்டத்தையே கட்சித் திட்டமாகக் கொண்டவர்கள் இணைந்து நிற்க ஒரே காரணம் ஈழப்பாசம் அன்று - இலைப் பாசமே!

மொட்டுதான் மலரும்; இலை மலர்வதில்லை; எனினும் இயற்கை முரணைக்கூட வசனமாய்ப் பேசுகிற வக்கிரத் தீதுக்கு எது காரணம்? இனப் பாசன்று; இலைப் பாசம்.

ஜெயலலிதா போன்ற தமிழீழத்தின் தலைமைக் கொலையாளிக்கு தமிழினத்தின் தலைமைப் பகையாளிக்கு - தமிழ்த் தேசியத்தின் பிறவி எதிரியான பார்ப்பனத்துக்குப் - பால் ஊற்றும் சேவை செய்யும் பக்தகோடிகள் அம்மனுக்குப் பாத பூஜை கூடச் செய்யட்டும். ஆனால், தமிழின் பெயராலும் தேசியத்தின் பெயராலும் அதைச் செய்யக்கூடாது. ஜெயாவோடு சேர்ந்திருப்பது ஒன்றே தமிழன் என்ற தகுதி இழப்புக்குக் காரணமாகிவிடுகிறது.

ஜெயலலிதாவை ஓர் அரசியல்வாதியாகப் பார்ப்பது சரியன்று, ஆச்சாரியாருக்குப் பிறகு, பார்ப்பனியப் பேராதிக்கத்தைத் தமிழகத்தில் நிறுவ இந்தியப் பார்ப்பனியமும், கடல் கடந்த அந்நியப் பார்ப்பனியமும் கைகோத்து பெரியாரியத்தை அது பிறந்த மண்ணிலேயே புதைத்துவிடத் தீட்டியுள்ள திட்டத்தின் போர்த்தளபதிதான் போயஸ் தலைவி என்பதைப் புரிந்துகொள்ள வேண்டிய காலம் கனிந்துவிட்டது.

இது ஒன்றும் திருவாரூருக்கும் சிறுதாவூருக்குமான பதவிப் போர் இல்லை, திராவிடத்துக்கும் ஆரியத்துக்குமான பண்பாட்டுப் போர். தமிழியத்துக்கும் இந்தியத்துக்குமான தேசியப் போர். தலித்தியத்துக்கும் பார்ப்பனியத்துக்குமான சமூகப் போர்.

இந்தப் போரில் ஜெயாவின் பார்ப்பன அணியையும் பார்ப்பனிய அணிகளையும் சரித்திரம் குறித்துக்கொள்ளும்.

இந்தப் போரில் வீரவடுக்களோடும், தியாகத் தழும்புகளோடும் தொல். திருமா ஒரு தத்துவத்தின் தலைமகனாகக் களத்தில் நிற்கிறார். அவர் மீது எதிரிகள் மட்டுமல்ல; நண்பர்களும் கணை தொடுக்கிறார்கள். அனைத்தையும் தாங்கும் சக்தியை அவருக்கு அளிப்பது இதே லட்சக்கணக்கில் லட்சியத்தால் திரட்டப்பட்டுள்ள அடித்தளத் தமிழர்களின் வேர்வையும் குருதியும்தான்! இந்த மக்களிடமிருந்தே அவர் உரமும் ஊற்றமும் பெறுகிறார்.

வட நாட்டுக்கும் தமிழ்நாட்டுக்குமிடையில் நடக்கும் வர்ணப் போரிலும் வர்க்கப் போரிலும் கொடநாடு எந்தப் பக்கம் என்று குழந்தைக்கும் தெரியும்.

தமிழ்நாட்டின் மொழி, இனம், தேசம் ஆகியவற்றைச் சமூக அடித்தளமாகக் கொண்டு எழும் அரசியல், பொருளியல், பண்பாட்டியல், மெய்யியல் ஆகிய வாழ்வியல்களின் விடுதலைக்கான களப் போரிலும் கருத்தியல் போரிலும் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்ட விடுதலைப் பட்டாளமாகச் சிறுத்தைகளைப் பயிற்றுவித்திருக்கும் திருமாத் தமிழனின் அரிமா நோக்குதான் வருங்காலத்துக்கான வரலாற்றுச் செய்தி என்பதை இiறையாண்மை மாநாட்டில் அவரது நிறைவுரை நிரூபித்துவிட்டது.

* * *

தொல்குடித் தமிழர்க்கு இறையாண்மை வேண்டும்

தொப்புள் கொடித் தமிழரை மறவாமை வேண்டும்

ஈழத் தமிழ்த்தேசியத்தின் குடியரசு மலரவும், இங்கே தன்னாட்சித் தமிழ்த் தேசம் ஒரு கூட்டரசில் இணையவும் ஆன இரண்டு போர் உத்திகளை, தமிழீழத் தமிழர்க்கும், தாயகத் தமிழர்க்கும் வகுத்தளித்துள்ளது எரிமலையாய்க் குமுறிய விடுதலைச்சிறுத்தைகளின் மறைமலை மாநாடு - 26.12.2010 அன்று.

ஈகியர்க்கு வீரவணக்கம் தொடங்கி இறுதியாக ‘விக்கிலீக்ஸ்’ அசாங்கேவுக்குப் பாராட்டு - என்பது வரை முப்பது தீர்மானங்களை நிறைவேற்றியிருக்கிறது தமிழர் இறையாண்மை மாநாடு. லட்சங்களாய்க் குவிந்த சிறுத்தைப் படையின் ரத்தங்களாய் எழுதப்பட்ட கட்சியின் தியாகப் பிடிப்புக்கும் சிந்தனைத் துடிப்புக்கும் தொலைநோக்கு விழிப்புக்குமான விளைச்சலாக வெளிப்பட்டிருக்கின்றன மாநாட்டுத் தீர்மானங்கள்.

உலகெங்கும் பத்துக் கோடி மக்கள் தொகை கொண்ட மூத்த குடியும் உலகின் முதல் குடியுமான, தமிழ்க் குடிமக்களுக்கென ஒரு நாடு வேண்டும் என்றும் அது தமிழீழமாக மலரவேண்டும் என்றும் கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக ஆயுதம் ஏந்தா அறப்போரும் ஆயுதமேந்தலை மறப்போரும் ஈழ விடுதலைப் போராக நடந்து வருகின்றன. அது முடிந்துவிட்ட ஒன்றல்ல, அது இனப்போர் மட்டுமன்று; இழந்துவிட்ட இறையாண்மை மீட்சிப் போர். ஈழத் தேசியக் குடியரசை இலக்காகக் கொண்ட போர்.

இதை அனைத்துலகச் சமூகமும் ஐக்கிய நாடுகள் அவையும் அங்கீகரிக்க வேண்டும் என்று அனைத்து நாடுகளின் மனச் சான்றையும் உலுக்கி ஈழத்தில் அழிக்கப்படும் தமிழ்க் குலத்தைப் பாதுகாக்கும் காவல் அரணாக நிமிர்ந்து நிற்கிறது மாநாட்டின் தலைமைத் தீர்மானம்.

* * *

கிழக்குத் துருக்கிஸ்தான் என்ற துருக்கியர்களின் தாய்மண்ணுக்குத் தேசியத் தன்னுரிமை வழங்க மாவோயிசத்தின் அரசியல் திட்டத்தில் வழி இருப்பினும் இன்றைய சீனப் பெருந் தேசியம் மாவோவைத் தூக்கி எறிந்துவிட்டு துருக்கிஸ்தானை சின்ஜியாங் மாநிலம் என மாற்றி உய்குர் எனப்படும் அம்மண்ணின் தேசிய இனக் குடிகளை வெளியேற்றிவிட்டுச் சீனர்களைக் குடியேற்றுவதன் மூலம் சின்ஜியாங் பகுதியைச் சீனமயப்படுத்தும் பெய்ஜிங் அரசின் போரின வெறிப்போக்கின் அடிச்சுவட்டை அப்படியே பின்பற்றி, கிழக்கு ஈழத்தில் சிங்களர்களைக் குடியமர்த்த சிங்களமயப்படுத்தி ஈழத் தேசியத்துக்கு அடித்தளமில்லாமல் தகர்க்கும் சிங்களப் பேரின வெறியின் முகமூடியைக் கிழித்து அதன் உண்மையான கோரப் பற்களை உலகத்துக்கு அம்பலப்படுத்தும் முக்கியமான முடிவொன்றை இறையாண்மை மாநாடு இயற்றியிருக்கிறது. ஐக்கிய நாடுகளின் பேரவை சிங்களப் போர்க்குற்றங்களை விசாரிக்க ஒரு குழுவை அனுப்புகிறபோது, அந்தக்குழு, திட்டமிட்டே தேசிய எல்லைகளை அழித்துவிடுகிற ராஜபக்சேவின் இந்த வகைக் குற்றங்களையும் விசாரித்து நீதி வழங்க வேண்டும் என்பது சிறுத்தைகளின் கோரிக்கை.

* * *

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை இந்திய அரசு உடனே நீக்கவேண்டும் என்ற தீர்மானம் பொதுவாக ஜனநாயக நெறிகளைத் தாக்கும் முனைவாகவும், குறிப்பாக ஈழத்தமிழர் மீதான இந்தியச் சங்கிலியை உடைக்கும் முயற்சியாகவும் காணப்படுகிறது. உலகம் முழுவதுமுள்ள நாடுகளில் இந்தியா மட்டும்தான் ராஜீவ் கொலைக்கு வன்மம் தீர்க்கிற வகையில், புலித் தடைச் சட்டத்தைத் தொடர்ந்து நீட்டித்து வருகிறது. அதே காரணத்தால்தான் ராஜீவ் கொலை வழக்கில் காரணமின்றி தண்டிக்கப்பட்ட மரண தண்டனைக் கைதிகளுக்கும், ஆயுள் தண்டணைக் கைதிகளுக்கும் 19 ஆண்டுகளுக்குப் பிறகும் விடுதலை தர மறுக்கிறது இந்தியக் காங்கிரஸ் அரசு.

புலித் தடையை அடுத்தடுத்து 20 ஆண்டுகளாக நீட்டிப்பதில் அளவுக்கு மீறிய ஆர்வம் காட்டிய புண்ணியவதி ஜெயலலிதாதான்! பிரபாகரனைத் தூக்கிலிடுமாறு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியவரும் ஜெயாதான்.

இன்று கலைஞர் அரசும் ஜெயா வழியில் புலித்தடையை நீட்டிக்க இசைந்திருப்பது சரியன்று. அரசியல் தேவைகளுக்காக நம் உந்திக்கொடிக் தமிழர்களின் உயிரோடு விளையாடலாமா?

* * *

தேசிய இனங்களுக்குத் தன்னுரிமையை உறுதி செய்யும் இந்திய அரசியல் சட்டத் திருத்தம் மிக மிகத் தேவை. நாகாலாந்து, அசாம், காஷ்மீர், பஞ்சாப், தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் கடந்த ஐம்பதாண்டுகளாக நடைபெற்றுவரும் தேசியத் தன்னுரிமைக்கான போர்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பலியாகி இருக்கிறார்கள். ஆரியப் பெயர்களாக்கப்பட்டுவிட்ட ஊர்களின் பெயர்களை மீண்டும் தமிழ்ப் பெயராக்கக்கூட நடுவணரசின் அனுமதி தேவை என்ற நிலைக்குத் தமிழக அரசிடமிருந்து பறிக்கப்பட்டுவிட்ட சனநாயக உரிமைகளை மீட்டெடுக்கும் முயற்சிக்குத் தன்னாட்சி அதிகாரம் கோரும் தீர்மானம் அனைத்துச் சனநாயகப் போராளிகளுக்கும் கைகொடுக்கும்.

மாநில அரசுகளுக்குத் தனிக்கொடி என்ற உரிமை அமெரிக்க மாநிலங்களில் நடைமுறையில் உள்ளது. அது இந்திய ஒருமைப்பாட்டுக்கு எதிரானதன்று. ஒவ்வொரு மாநிலமும் பிற மாநிலங்களோடும் பிற நாடுகளோடும் கொள்ளும் உறவில் தன் தனித்தன்மையை நிறுவும் சனநாயக விழைவின் வெளிப்பாடே தனிக்கொடி! 1970களில் கலைஞர் தனிக்கொடி என்ற இந்தக் கோரிக்கையை எழுப்பினார் என்பது வரலாற்றுச் செய்தியாகும்.

* * *

மாநில அரசுக்கான உரிமைகள் மத்திய அரசால் களவாடப்பட்டுவிட்ட காரணத்தால்தான் ‘எங்கும் தமிழ் எதிலும் தமிழ்’ என்ற முழக்கம் நீதிமன்றங்களிலோ, மத்திய அரசு நிறுவனங்களிலோ, பல்கலைக்கழகங்களிலோ நடைமுறையாக்குவதில் தடைகள் நேர்கின்றன.

இந்த உரிமை மீட்புப் போரில் கனிம வளங்கள், கல்வி நலங்கள், தாய்மொழிக் கல்விக்குத் தேசிய ஆணையம், இந்தியத் தூதரகங்களில் தமிழதிகாரிகள், மனிதவள மேம்பாட்டுத் துறையில் செம்மொழி, தமிழக எல்லைகள், நதி-நீர், நிலவளம் ஆணையம், குடிசை மக்கள் உரிமை - ஆகியன பற்றிய தீர்மானங்கள் கூடுதல் கவனம் பெறுகின்றன.

‘தேசியப் புலனாய்வு நிறுவனம்’ கலைக்கப்படவும் வெளிஉறவுக் கொள்கைகளில் தமிழகத்தின் நலன்களைக் காக்கவும் நிறைவேற்றப்பட்டுள்ள மாநாட்டு முடிவுகள் சிறுத்தைகளின் அரசியல் பார்வையினுள் ஆழம், உறுதி, தெளிவு ஆகியவற்றுக்கான அடையாளமாக நிற்கின்றன.

* * *

ஒரு கட்சியின் மாநாடு இந்த அளவுக்கு அரசியல் அறிவியலையும், தொலைநோக்கையும் தத்துவப் பார்வையையும் ஒருங்கிணைத்து மாநாட்டில் முடிவுகள் மேற்கொண்டிருப்பது ஒரு பெரும் சாதனை. இருபத்தோராம் நூற்றாண்டில் தமிழகத்தில் இதைச் சாதித்திருக்கும் ஒரே அரசியல் கட்சி விடுதலைச்சிறுத்தைகள் கட்சி மட்டுமே.

தலைமைப் பண்பும் தியாகப் பண்பும் தளும்பி வழியும் இளைஞர் பட்டாளத்தைக் கொண்ட ஒரு தலைமையால்தான் இத்தனை பெரிய மாநாட்டை இத்தனைக் கட்டுக்கோப்பாக நடத்திமுடிக்க முடியும்.

நான் மேலும் ஊடுருவிப் பார்க்கும்போது விடுதலைச்சிறுத்தைகளின் தத்துவ அடித்தளம்தான் அக்கட்சியின் கட்டுமான அடித்தளத்தின் காரணியாகச் செயல்படுகின்றது என்பதைக் காண்கிறேன்.

தமிழியத்தின் தேயம்! தலித்தியத்தின் நியாயம்! மார்க்சியத்தின் ஞானம்!

இம்மூன்று கருத்தியலும் சரிவிகிதக் கலவையில் களப்படுத்தப்படும்போதுதான் ஒரு முழுமையான தமிழ்த்தேசிய அமைப்பு முகிழ்க்கும். விடுதலைச்சிறுத்தைகள் கட்சிக்குக் கிடைத்துவரும் விழுப்புண்களுக்கும் வெற்றிப் பண்களுக்கும் இந்தத் தத்துவச் செயலால் பெற்றுள்ள தேசிய முழுமையே அடிப்படையாகும். அண்ணாவின் தமிழ்த்தேசியச் சிந்தனை மரபுக்குப் பிறகு ஏற்பட்டுள்ள வெற்றிடத்தைத் திருமாவின் தலித்தியத்தை உட்செரிந்த தமிழ்த் தேசியம்தான் நிறைவுசெய்ய வந்திருக்கிறது.

தமிழ்த் தேசியத்தைப் போர்த்திக்கொண்டு தலித் எதிர்ப்பில் செயல்படும் பார்ப்பனத் தேசியமும் பார்ப்பனியத் தேசியமும் அம்பலப்பட்டுவரும் பருவம் இது. இலையுதிர் காலம் இது. இந்த நிலையில்தான் விடுதலைச்சிறுத்தைகளின் வீரமுழக்கங்களுக்கு செயல்வடிவம் தந்துள்ளன தீர்மானங்கள்.

இதோ நீலச்செங்கொடி தாங்கிய நட்சத்திரம் தன் நெடும் பயணத்தைத் தொடங்கிவிட்டது - 2011ல். 60 ஆண்டுகளுக்கு முன் சீனத்தின் தலைவன் தோழர் மாவோ நிகழ்த்திய பயணத்தைத் திருமா தொடர்கிறார்.

வெல்க நெடும்பயணம்! வளர்க சிறுத்தையினம்! வருக தமிழீழம்! வாழ்க தமிழ்த் தேசியம்!

* * *

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.