Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழ விடுதலைப் போரும், புலிகளின் தாக்கமும்.

Featured Replies

ஈழ விடுதலைப் போரும், புலிகளின் தாக்கமும்.-கை.அறிவழகன்

வரலாற்றின் பாதையில் தமிழினம் என்கிற முந்தைய கட்டுரைக்கு எதிர்பார்த்ததைப் போலவே முதல் மூன்று பகுதிக்கு கணிசமான ஆதரவும், கடைசிப் பகுதிக்குக் கணிசமான எதிர்ப்பும் நண்பர்களிடம் இருந்து கிடைத்தது, புலிகளின் எல்லாவிதமான செயல்பாடுகளுக்கும் ஆதரவளிக்கும் மனநிலையிலோ அல்லது துதி பாடும் மனநிலையிலோ அந்தக் கட்டுரை எழுதப்படவில்லை, எல்லா நிலைகளிலும் புலிகளின் சில முரண்பாடுகளை எனது கட்டுரைகளில் நான் சுட்டிக் காட்டியே வந்திருக்கிறேன், மேலும் புலிகளின் இயக்கம் மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்த பிறகு என்றில்லாமல், புலிகள் மிகப்பெரிய வெற்றிகளை ஈட்டி வந்த காலகட்டங்களிலும் அவர்களின் சில குறிப்பிட்ட தவறுகளை நான் சுட்டிக் காட்டி எழுதி இருப்பதை தொடர்ச்சியாக எனது எழுத்துக்களைப் படிப்பவர்கள் அறிவார்கள் என்று நம்புகிறேன், இருப்பினும் கடந்த கட்டுரையில் நான் குறிப்பிட்ட புலிகள் இயக்கம் மற்றும் அதன் தலைமை குறித்த எனது கருத்துக்களில் இருந்து நான் பின் வங்கப் போவதில்லை, ஏனெனில் அத்தகைய ஒரு பின்வாங்களைத் தமிழர்களிடம் உருவாக்கி விடுவதற்கும், தமிழர்களை அவர்களின் தீவிரமான போராட்டங்களில் இருந்து வழுவ வைப்பதற்கும் சிங்களமும் சரி, இந்திய தேசியத்தின் ஆளுமைகளும் சரி பல்வேறு உளவியல் சிதைப்புத் திட்டங்களை வைத்திருக்கின்றன, இன்னமும் தொடர்ச்சியான ஒரு உளவியல் போரை நடத்தி தமிழ்த் தேசியச் சிந்தனைகளை அதன் அடித்தளத்தை அழிக்க நடக்கும் முயற்சியில் நான் சிக்கிக் கொள்வதை ஒரு போதும் விரும்பவில்லை. மாறாகப் புலிகள் இயக்கம் கடந்த முப்பது ஆண்டுகளுக்கு மேலாகக் கட்டி எழுப்பி இருக்கும் தனித்தமிழ் தேசியச் சிந்தனைகளின் மூலத்திலிருந்தே இழந்த பல்வேறு போராட வடிவங்களைத் திரும்பப் பெற முடியும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

புலிகளின் தீவிரமான போராட்ட காலங்களில் மட்டுமன்றி, சிங்களம் பெருவெற்றி பெற்றிருக்கும் இன்றைய காலகட்டம் வரை அவர்களை நோக்கிப் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் வைக்கப்பட்டிருக்கின்றன, அவற்றில் சில குற்றச்சாட்டுக்களுக்குப் பதில் அளிக்கவும், அந்தக் குற்றச்சாட்டுகளின் அடிநாதமாக விளங்கும் பேரினவாதம் மற்றும் முதலாளித்துவப் பொருளாதாரம் போன்றவற்றைத் தகர்க்கவும் தமிழர்களுக்குத் தேவை இருக்கிறது, அந்தத் தேவையின் இலக்கு நோக்கிய ஒரு பயணமாகவே இந்தக் கட்டுரையை நான் நோக்குகிறேன், இதைப் படிக்கும் அல்லது விமர்சனம் செய்யும் யாவரும் அதே நோக்கோடு இருக்க வேண்டும் என்கிற அவசியம் ஒரு போதும் இல்லை, மனிதர்களின் மனநிலையைப் போலவே பொதுவான பல முரண்பாடுகளை எல்லாக் கருத்தியலும் கொண்டிருக்கும் என்கிற அடிப்படையை நாம் உணரும் போது அது தெளிவாகும்.

இனி குற்றச்சாட்டுகளுக்கு வருவோம்:

குற்றச்சாட்டு ஒன்று:

புலிகள் எப்போதும் அமெரிக்க ஆதரவு மனநிலை கொண்டவர்கள் என்கிற ஒரு குற்றச்சாட்டு பல்வேறு சூழல்களில் அவ்வியக்கத்தின் மீது வைக்கப்படுகிறது.

இந்தக் குற்றச்சாட்டுக்குப் பதில் அளிக்க வேண்டுமென்றால் முதலில் நாம் அமெரிக்காவின் ஆசியக் கொள்கை மற்றும் ஏகாதிபத்தியச் சிந்தனைகளில் இருந்து துவங்க வேண்டும், அமெரிக்காவுக்கும் புலிகளுக்கும் அல்லது தமிழர்களுக்குமான தொடர்பு என்பது இந்திய தேசியத்தின் எழுச்சியை மையமாகக் கொண்டே இருந்து வந்திருக்கிறது, ஆசிய மண்டலத்தின் மனித வளம், இயற்கை வளம் மற்றும் நுகர்வுக்கான சந்தையைக் கைப்பற்றுவதும், ஆசிய நாடுகளின் மீது தனது மேலாதிக்கத்தை நிலை நிறுத்துவதும் அமெரிக்காவின் நீண்ட காலக் கனவு மட்டுமன்றி ஒரு நிலையான கொள்கையாகவும் இருந்து வருகிறது, உழைப்பைக் கொள்ளையிட்டுத் தனது மூலதனத்தைப் பெருக்கிக் கொள்ளும் வாய்ப்பாடு இத்தகைய ஒரு ஆசியக் கொள்கையில் தான் ஒளிந்து கிடக்கிறது என்பதை அமெரிக்கா நீண்ட காலமாக அறிந்து வைத்திருக்கிறது, அத்தகைய ஒரு கொள்கையை என்ன விலை கொடுத்தேனும் செயல்படுத்துவதற்கு அமெரிக்கா தொடர்ந்து முயற்சிகள் செய்து வருவதை உலக வரலாற்றைக் கூர்ந்து கவனிக்கும் யாரும் எளிதில் புரிந்து கொள்ள இயலும்.

ஆசிய மண்டலத்தை அமெரிக்கா முழுமையாகக் கைப்பற்றிக் கொள்வதற்கு சோவியத் யூனியன் ஒரு மிகப்பெரிய தடையாக நீண்ட காலம் இருந்தது, இந்தியாவில், நேருவின் காலத்தில் துவங்கி இந்திராவின் காலம் வரை இந்திய யூனியன் சோசலிசக் கொள்கைகளை ஓரளவு முன்னகர்த்தி வந்ததே சோவியத் யூனியனுடன் இந்தியா மிகுந்த இணக்கமாகவும், நட்புடனும் இருந்ததற்கான காரணம். சோவியத் யூனியன், அமெரிக்கக் கனவுகளுக்கு ஒரு மிகப்பெரிய மாற்றாகவும், முதலாளித்துவப் பொருளாதாரத்திற்கு சிம்ம சொப்பனமாகவும் இருந்து வந்தது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கைகளைக் கட்டிப் போட்டது மட்டுமன்றி ஆசிய மண்டலத்தின் மிகப்பெரிய நாடுகளைத் தன கைப்பிடிக்குள் கொண்டு வர இயலாமல் தடுக்கவும் செய்தது, பிறகு நிகழ்ந்த அரசியல் மாற்றங்கள், சோவியத் யூனியனின் வீழ்ச்சி போன்ற காரணிகள் அமெரிக்காவின் ஆசியக் கைப்பற்றல் கனவுகளை மீண்டும் துளிர் விடச் செய்தது. சோவியத் யூனியனின் வீழ்ச்சி உலக முதலாளித்துவத்தின் வெற்றியாக மட்டுமன்றிப் பொது உடைமைத் தத்துவத்தை ஏற்று நடைமுறைப்படுத்திய நாடுகளுக்கான பாடமாகவும் மாறியது.

அமெரிக்காவின் சோவியத் யூனியனுக்கு எதிரான தொடர்ச்சியான எல்லைப்புறத் தீவிரவாத ஆதரிப்பும், சோவியத் யூனியனின் மூலதன இழப்பும் அதன் பொது உடைமை சார்ந்த பொருளாதாரத்தை முடக்கியது மட்டுமன்றி, கூட்டுப் பண்ணை விவசாய முறைகளில் தொடர்ச்சியாக நடந்து வந்த குழப்பமான பகிர்வுகளும் அதன் வீழ்ச்சிக்கு வழி அமைத்தது, ஒரு புறம் வெளிநாடுகளில் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட போர்த் தளவாடக் கருவிகள் அதன் பொருளாதாரச் சூழலை நிலை குலைய வைத்தது என்றால் இன்னொரு புறம் தனி மனித உழைப்புக்கு நிகரான பொருள் மதிப்பீட்டில் சோவியத் யூனியனின் கூட்டுப் பண்ணை விவசாயத் திட்டம் குளறுபடி செய்தது, உழைப்புக்கு நிகரான மதிப்பீடு செய்யப்பட வேண்டிய பொருள் பகிர்வு ஒட்டுமொத்த விளைச்சலின் அடிப்படையில் பகிர்வு செய்யப்பட்ட போது தகுதியற்றவர்கள் பயனடையும் மறைமுக முதலாளித்துவப் பொருளாதாரம் கூட்டுப் பண்ணைகளுக்குள் எட்டிப் பார்த்தது, கடும் உழைப்பை வழங்கிய உழைக்கும் மக்கள் சோர்வு நிலையை எட்டினார்கள். தொடர் எல்லைப்புறக் குழப்பங்களால் பாதுகாப்பு குறித்த அதிக கவனம் செலுத்தும் நிலைக்கும், போர்க்கருவிகளை கண்மூடித்தனமாக இறக்குமதி செய்யும் நிலைக்கும் சோவியத் யூனியனின் அரசுகள் அழுத்தம் பெற்றன, அந்த நேரத்தில் போர்க்கருவிகள் உற்பத்தியில் தனது கவனத்தைக் குவிக்க வேண்டிய சோவியத் யூனியன் அதை விடுத்து பல்வேறு முதலாளித்துவ நாடுகளிடம் இருந்து இறக்குமதி செய்தது அதன் பணவீக்க விகிதத்தை உயர்வடையச் செய்தது, தொடர்ந்து வீழ்ச்சியடைந்த பொருளாதாரச் சூழலைச் சமயம் பார்த்துக் காத்திருந்த அமெரிக்க முதலாளித்துவக் கனவுகள் சோவியத் யூனியனின் கட்டமைப்புக்குள் கொல்லைப் புறமாக நுழையத் துவங்கியது, தனது நீண்ட காலப் பனிப் போரில் அமெரிக்கா வெற்றி அடையும் வாய்ப்பு எளிதில் கிடைத்தது.

தொடர்ந்து நிகழ்ந்த மாற்றங்கள் ஆசிய நாடுகளில் பலவற்றை சோவியத் யூனியனிடம் இருந்து தனிமைப்படுத்தி முதலாளித்துவத்தின் தலைமைப் பீடமான அமெரிக்காவின் காலடிகளை நோக்கிப் பயணம் செய்ய வைத்தது. ஆசிய மண்டலத்தின் மிகப்பெரிய நாடுகளான சீனாவையும், இந்தியாவையும் எப்போதும் குழப்பத்தில் ஆழ்த்த அமெரிக்க அரசுகள் தீவிர கவனம் செலுத்தத் துவங்கின, இந்திரா காந்தியின் மறைவுக்குப் பின்னர் நிலவிய அரசியல் குழப்ப நிலையும், ராஜீவ் காந்தியின் திறந்த பொருளாதாரச் சிந்தனைகளும், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கனவுகளுக்கு இந்தியாவில் பாதை அமைத்துக் கொடுத்தன, அரசியல் அறிவும், தெளிந்த கொள்கைகளும் இல்லாத ராஜீவ் காந்தி வெளியுறவுக் கொள்கைகள் மற்றும் பொருளாதாரக் கொள்கைகளில் முன்பிருந்த சோவியத் யூனியன் சார்பு நிலைப்பாட்டில் இருந்து முற்றிலும் ஒரு வேறுபட்ட பாதையில் பயணிக்கத் துவங்கினார், அந்தப் பாதை உலக முதலாளித்துவக் கனவுகளின் பாதையாக இருந்தது.

சீனாவில் நிகழ்ந்த மாணவர் புரட்சியின் பின்னணியில் அமெரிக்க உளவுத் துறையின் கணிசமான பங்காற்றலும் இருந்தது நினைவு கூறத்தக்கது. சீன மாணவர்களிடம் மறைமுகமாக அறிமுகம் செய்யப்பட்ட முழுமையான சுதந்திர மனநிலை சீனக் கம்யூனிசத்தின் அடிப்படையை ஆட்டம் காண வைக்கும் அளவுக்குத் தீவிரத் தன்மையோடு இருந்தது.தன்னிச்சையான நுகர்வுக் கலாச்சாரம், முறைகளற்ற, வரம்பில்லாத பாலுறவுச் சுதந்திரம் போன்றவற்றை கடுமையான ஒழுங்குடன் நெறிமுறைப்படுத்தப்பட்ட சீனாவின் கம்யூனிசச் சார்பு மனநிலை எதிர்கொண்டு தாக்கமடைந்ததே சீன மாணவர் போராட்டத்தின் அடிப்படைக் காரணமாக இருந்தது, சீனம் உறுதி, கடும் இழப்பு மற்றும் மாற்றி அமைக்கப்பட்ட கொள்கைகள் மூலம் தனது அரசியல் நிலைத்தன்மையை உறுதி செய்து கொண்டது, சோவியத் யூனியனில் நிகழ்ந்த தவறுகளைத் தன்னளவில் மட்டுப்படுத்தி முழுமையான நுகர்வுக் கலாச்சாரத்தில் இருந்து முழுமையான உற்பத்தி மனநிலைக்கு தனது பொருளாதாரக் கொள்கைகளை வடிவமைத்துக் கொண்டது. சந்தைப்படுத்தலில் தனது தொழில் நுட்ப அறிவையும், மனித வளத்தையும் பயன்படுத்தி மூலதனத்தைப் பெருக்கும் வழிகளில் சீனா தொடர்ந்து கவனம் செலுத்தியது, சீனாவின் பல்வேறு நிலைப்பாடுகள் முரண்பட்டதாக இருப்பினும் நுகர்வு மனநிலையில் இருந்து விழிப்படைந்து உற்பத்தி மனநிலைக்கு தனது மக்களை அது வழிநடத்தியது.

சீனாவை முழுமையாக நெருங்க இயலாத அமெரிக்காவின் ஏகாதிபத்தியப் பயணம் இந்திய மனித வளத்தையும், அதன் அடித்தட்டு மக்களின் உழைப்பையும் கொள்ளையடிக்கும் வெகு நுட்பமான ஒரு உளவியல் போரை திறந்த சந்தைப் பொருளாதாரம் என்ற பெயரில் துவக்கியது. அமெரிக்க நிறுவனங்களில் அல்லது முதலாளித்துவச் சந்தைப் பொருளாதாரத்தில் ஊறித் திளைத்திருந்த பல்வேறு சுரண்டல் வர்க்க அறிவாளிகள் இந்திய அரசியல் மையங்களாகக் குடியேற்றப்பட்டார்கள், (இதில் இன்றைய பிரதமர் மன்மோகன் சிங்கில் இருந்து திட்டக் குழுத் தலைவர் அலுவாலியா வரையில் அடக்கம்).இந்திய யூனியனில் காணக் கிடைத்த பல்வேறு தேசிய முரண்பாடுகள் இந்த நேரத்தில் அமெரிக்காவின் துருப்புச் சீட்டுக்களாயின. காஷ்மீர் தேசிய இன எழுச்சியும், தமிழ் ஈழ விடுதலைப் போரும் அமெரிக்காவின் கருவிகளாகியது. தொடர்ந்து பாகிஸ்தான் உடனான நட்பு நிலைப்பாடும்,மக்களாட்சி அல்லாத ராணுவ ஆட்சியை அங்கு நிலையாக வைத்திருக்கும் திட்டமும் இந்திய எல்லைப் புறத்தை எப்போதும் கலவரத்தில் வைத்திருக்கும் என்பதில் தெளிவாக இருந்தது அமெரிக்கா. பாலுக்கும் காவல் பூனைக்கும் நண்பன் என்கிற அமெரிக்காவின் காஷ்மீர் நிலைப்பாடு குறித்து இந்திய அரசுகள் கவனம் செலுத்தவில்லை, மாறாக இந்திய தேசியத்தில் நடக்கும் சுரண்டல் மற்றும் பெரிய அளவிலான ஊழல்களை மறைக்கும் ஒரு கருவியாக பாகிஸ்தான் இந்திய ஆட்சியாளர்களுக்கு மாறிப் போனது. பாகிஸ்தானில் இருந்து செயல்படும் பல்வேறு அமைப்புகளுக்கு ஆயுதப் பயிற்சியும் கொள்கை ரீதியிலான மறைமுக ஆதரவும் அளிக்கும் உளவுத் திறனை அமெரிக்கா வளர்த்து எடுத்தது.

இந்திய தேசியம் வலுப்பெற்று வளர்ந்து ஒரு மிகப் பெரிய ஆற்றலாக உருவெடுப்பது சீனா தவிர்த்த அடுத்த மிகப் பெரிய சந்தையும் தன் கையை விட்டு நழுவிப் போகும் வாய்ப்பாக இருக்கக் கூடாது என்று அமெரிக்கா பல்வேறு திட்டங்களைத் தீட்டியது. மூன்றாம் உலக நாடுகளில் பல உலக வங்கியின் பிடியில் இருந்து வெளியேறித் தங்களுக்கான அடிப்படைப் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் வழியில் பயணம் செய்த போது இந்தியாவும் இன்னும் பல ஆசிய நாடுகளும் உலக வங்கியின் முழுமையான பிடிக்கும் கொண்டு வரப்பட்டார்கள், உலக வங்கி என்பதும், ஐக்கிய நாடுகள் அவை என்பதும் முதலாளித்துவ நாடுகளின் அதிகாரப்பூர்வ அமைப்புகள் என்பதை நாம் மறந்து போய் நீண்ட காலமாயிற்று. திறந்த சந்தைப் பொருளாதாரம் என்ற பெயரில் இந்தியப் பொருளாதாரத்தைக் கொள்ளையடிக்கத் துவங்கிய அமெரிக்கா மெல்ல மெல்ல இந்திய அரசுகளின் மேலாண்மை அதிகாரியாக உருமாற்றம் பெற்றது. (கடைசியாக இந்திய விவசாயியின் கைகளில் இருந்த பால் உற்பத்தி மற்றும் விற்பனை கூட சமீப அமெரிக்க அதிபரின் வருகைக்குப் பின்னர் அமைதியாகக் கைமாறிப் போனதை கைதட்டி வரவேற்றுக் கொண்டிருந்தார்கள் நமது பாராளுமன்ற உறுப்பினர்கள்.)

இலங்கைத் தீவில் காணப்படும் முரண்பாடுகளைத் தொடர்ந்து கையாள்வதில் இரட்டிப்புப் பயன் இருப்பதை அமெரிக்கா உணரத் துவங்கியது. விடுதலைப் புலிகளுக்கு ஆதரவளிப்பதும், அவர்களின் விடுதலைப் போரை மறைமுகமாக ஆதரிப்பதும் ஆசிய எல்லைகளுக்குள் தனது வலிமையை அதிகரிக்கச் செய்யும் என்று அமெரிக்கா நம்பியது. தமிழ்நாட்டின் உணர்வுகளோடு கலந்து கிடக்கும் இந்தப் போராட்டம் இந்திய தேசியத்தின் வலிமையைக் குலைக்க வழி வகை செய்யும் என்று அமெரிக்கா உணர்ந்திருந்தது. இப்படியான குழப்பநிலை, ஒரு நிலைத்தன்மையற்ற நெகிழ்வுடன் கூடிய பொருளாதார வல்லமையை இந்தியா மற்றும் இலங்கைக்குள் எப்போதும் வைத்திருக்க அமெரிக்காவின் நாட்டாமைகளுக்கு உதவி செய்தது. அதுமட்டுமன்றி இந்தியாவின் நிலைத்தன்மைக்கு சிக்கலை உண்டாக்கி நிகழும் அரசியல் குழப்பங்களின் மூலம் ஆசிய மண்டலத்தில் ஆதிக்கம் செலுத்தும் தனது மறைமுகத் திட்டங்களின் ஒரு பகுதியாக புலிகளை அமெரிக்கா ஒரு கால கட்டத்தில் ஆதரிக்கத் துவங்கியது. இருப்பினும் புலிகளின் அரசியல் ஆலோசகரும், அமைப்பைப் பல காலம் வழி நடத்தியவருமான ஆண்டன் பாலசிங்கம் இந்த மறைமுக அமெரிக்கத் திட்டத்தை எப்போதும் முறியடிப்பதில் கைதேர்ந்தவராக இருந்தார். அன்றைய காலகட்டத்தில் தனது இடது சாரிச் சிந்தனைகளை வைத்தே அவர் இயக்கத்தின் செயல்பாடுகளை முன்னகர்த்தினார். இடதுசாரி அரசியல் சார்புடைய ஒரு அரசியல் நெறிமுறையையே கோட்பாட்டு ரீதியாகக் கொண்டிருந்தார்கள் என்று நம்புவதற்கு ஆண்டன் பாலசிங்கத்தின் பல பதிவுகள் நமக்கு உதவி செய்யும், அவரது விடுதலை என்கிற கட்டுரைத் தொகுப்பில் இதற்கான சான்றுகள் இருக்கின்றன. ஆகவே அமெரிக்காவிடம் இருந்து கிடைக்கப்பெற்ற மறைமுக ஆதரவை புலிகள் தங்களின் பாதுகாப்புச் சூழலை வலிமைப்படுத்தவும், கொள்கைகளை நடைமுறைப்படுத்தவும் பயன்படுத்திக் கொண்டார்களே அன்றி ஒரு போதும் வெளிப்படையான அமெரிக்க ஆதரவு நிலையை அவர்கள் கொண்டிருக்கவில்லை.

அமெரிக்காவால் இரை கொடுத்து வளர்க்கப்பட்ட நச்சுப் பாம்புகளின் வரிசையில் புலிகள் எப்போதும் இடம் பெறவில்லை, மாறாகத் தன்னால் வளர்க்கப்பட்ட பல்வேறு ஆயுதப் போர் புரியும் இயக்கங்கள் தனக்கு எதிராகப் போனதை இரட்டைக் கோபுரத் தகர்ப்பின் போது புரிந்து கொண்ட அமெரிக்கா உடனடியாகத் தனது பாதுகாப்புக் கருதி புலிகளின் மீதான தடைகளைக் கடுமையாக்கியது. அதன் தீவிரவாத எதிர்ப்பு முழக்கத்தில் புலி ஆதரவும் மங்கத் துவங்கியது. மேலும் அமெரிக்காவின் சூழ்ச்சிகளுக்குப் பகடையாக மாறக் கிடைத்த எந்த ஒரு வாய்ப்பையும் புலிகள் பயன்படுத்தவில்லை, அவர்கள் தங்களின் இலக்கான "தனித் தமிழ் ஈழம்" என்ற நிலைப்பாட்டில் இருந்து வழுவாமல் இருந்து வந்ததையே இந்தக் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலாக என்னால் வழங்க முடியும். புலிகள் ஒருபோதும் அமெரிக்க ஆதரவாளர்களோ இல்லை எதிர்ப்பாளர்களோ இல்லை, ஒரு தேசிய இன விடுதலைப் போருக்கு என்ன தேவைகள் இருந்ததோ அவற்றை நிறைவு செய்து கொள்ளும் பணிகளையே புலிகள் எப்போதும் செய்து வந்தார்கள். அது அவர்களைப் பொறுத்த வரையிலும் குறிப்பிட்ட காலம் வரை சரியானதாகவும் இருந்தது.

இரண்டாவது குற்றச்சாட்டு:

இடது சாரிச் சிந்தனையுள்ள மற்றும் தன்னிச்சையான பலவேறு வடக்கு கிழக்கு இலங்கையின் அரசியல் தலைவர்களைப் புலிகள் கொன்றொழித்தார்கள்.

இந்தக் குற்றச்சாட்டு எல்லா நேரங்களிலும் புலிகளின் மீது வைக்கப்படும் பொதுவான ஒரு குற்றச்சாட்டு, அவர்களை இலங்கை தவிர்த்து வேறு நாடுகளின் வெகுமக்களிடம் இருந்து விலகச் செய்த ஒன்றுமாகும், பல்வேறு காலகட்டங்களில் புலிகள் இத்தகைய கொலை நிகழ்வில் ஈடுபட்டதை வெளிப்படையான நேர்மையுடன் ஒப்புக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை, மாற்றுச் சிந்தனை கொண்ட மனிதர்களை அழித்தொழிப்பதே தீர்வு என்கிற நிலைப்பாடு எல்லா நிலைகளிலும் தவிர்க்கப்பட வேண்டியதும், எதிர்க்கப்பட வேண்டியதும் ஆகிறது. ஆனால், அறுபது ஆண்டுகளுக்கு மேலாக ஒரு கடும் போராட்ட வரலாற்றைத் தன்னகத்தே கொண்ட தமிழ்த் தேசிய விடுதலைப் போரின் தகவமைப்புகளில் இத்தகைய நிகழ்வுகளை நாம் வேறு சில கோணங்களிலும் ஆய்வு செய்ய வேண்டியிருக்கிறது.

புலிகளால் படுகொலை செய்யப்பட்டவர்கள் அந்தக் காலகட்டத்தில் ஒன்று சிங்களப் பேரினவாதத்திற்கு அடிவருடிகளாக இருந்தார்கள், அல்லது விடுதலைப் போரின் ஏதோ ஒரு முன்னெடுப்புக்குத் தடையாக இருந்தார்கள் என்பதை அறிய முடிகிறது. இப்படியான ஒரு சூழலில் திறந்த விவாதங்களை நோக்கியோ, அரவணைத்தலை நோக்கியோ அவர்கள் பயணம் செய்யாதது ஒட்டு மொத்த இயக்கத்தின் பின்னடைவாகப் பிந்தைய காலங்களில் மாறிப் போனது என்பதை மறுக்கவோ மறைக்கவோ விரும்புவது தவறான விளைவுகளையே உண்டாக்கும். மலையகத் தமிழர்களின் சமூக, அரசியல் மற்றும் பொருளாதார உயர்வுகளை நோக்கி அதிக கவனம் செய்யாதது புலிகளின் பரவலான நிலைத்தன்மைக்கு ஒரு காரணமாக அமைந்தது என்பதையும் இந்த இடத்தில் மறுப்பதற்கில்லை. இஸ்லாமியத் தமிழ்ச் சமூகத்திடம் இருந்து விலக்கம் பெற்ற புலிகளின் கொள்கைகள் அவர்களின் வெகுமக்கள் நெருக்கத்தைக் குலைய வைத்தது என்பதையும் இவ்விடத்தில் நினைவு கொள்ள வேண்டும், புலிகளின் மிக இறுக்கமான முடிவுகள் இணக்கமான சூழலில் இருந்து இஸ்லாமியத் தமிழர்களை வேறு ஒரு பாதைக்கு அழைத்துச் சென்றன, மொழி வாரித் தேசியம் என்ற புலிகளின் சிந்தனைகளில் இருந்து மாறுபட்டு அவர்கள் மதவழியிலான அடிப்படை நம்பிக்கைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க விழைந்ததும் இதற்கான மேலதிகக் காரணம் என்று கொள்ள இயலும். குறுகலான ஒரு நிலப்பரப்பில் நிகழும் ஒரு தேசிய இன விடுதலைப் போர் வேற்றுமைகளில் இணக்கம் காணத் தவறியது தமிழ்த் தேசிய விடுதலைப் போரில் ஒரு மிகப் பெரிய பாடமாக இருக்க வேண்டும். பல நேரங்களில் களை எடுப்பாகவும், சில நேரங்களில் தவறான குற்றங்களாகவும் நிகழ்ந்த எந்த மனிதப் படுகொலையையும் நியாயப்படுத்தவோ முட்டுக்கொடுக்கவோ விரும்பவில்லை, அதே நேரத்தில் இந்தக் குற்றச்சாட்டுகளுக்காக மட்டுமே புலிகள் இயக்கத்தை முற்றிலும் புறக்கணிக்க விரும்பும் பலர் விடுதலைப் போரின் எதிரிகளாகவும், பேரினவாத அடிமைகளாகவும் இருக்கிறார்கள் என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது.தமிழ்த் தேசிய எழுச்சியில் துவக்கம் பெறும் ஒரு புதிய அரசியல் மாதிரிக்கான சூழலை, உழைக்கும் மக்களின் விடுதலையை எதிர்க்கும் பல்வேறு தரப்புகளும் இத்தகைய ஒரு குற்றச்சாட்டின் பின்னால் ஒளிந்து இருப்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது.

குற்றச்சாட்டு மூன்று:

தமிழ் இளைஞர்களைப் புலிகள் தவறாக வழி நடத்தினார்கள் அல்லது அவர்களை அழிவுப் பாதைக்குக் கொண்டு சென்றார்கள்:

இந்தக் குற்றச்சாட்டின் மூளை இரண்டு தளங்களில் தொடர்ச்சியாக தனது பரப்புரைகளைச் செய்து கொண்டே இருக்கிறது, ஒன்று சிங்களப் பேரினவாதம், இன்னொன்று இந்தியப் முதலாளித்துவப் பார்ப்பனீயம், சிங்களப் பேரினமாவது பல நேரங்களில் இதனை ஒரு விடுதலைப் போராட்டம் என்று ஒப்புக் கொண்டு நேரடியாகப் போரிட்டது, ஆனால், இந்தியப் முதலாளித்துவப் பார்ப்பனீயம் இது போன்ற குற்றச்சாட்டுக்களால் தமிழ் தேசிய எழுச்சியை மைய நீரோட்டத்தில் இருந்து விலகச் செய்து வீழ்த்தி விடத் துடித்தது மட்டுமன்றி அதில் ஓரளவு வெற்றியும் பெற்றது, புலிகளின் கட்டுப்பாட்டில் மூன்றில் ஒரு பகுதி இலங்கை இருந்தபோதும் சரி, ஒரு அதிகாரப் பூர்வமற்ற ஆட்சியை தமிழீழம் என்னும் பெயரில் நடத்திய போதிலும் சரி, தமிழ் இளைஞர்களில் பலர் தன்னிச்சையாகத் தொழில் புரிந்தும், முடிவுகளை எடுத்தும் வந்திருக்கிறார்கள் என்பதை உணரும் போது இந்தக் குற்றச்சாட்டு வலுவிழக்கும், தன்னியல்பாக நிகழ்ந்த ஒரு பேரினவாத எதிர்ப்பு அரசியல் இயக்கமாகவே விடுதலைப் புலிகள் அமைப்பு இருந்தது என்பதை இறுதியாக நிகழ்ந்த போரின் போது வெளியேறிய எண்ணற்ற இளைஞர்களை வைத்து அடையாளம் காண முடியும், பேரினவாத அடக்குமுறையால் தோற்றம் கண்டு வளர்ந்த புலிகளின் இயக்கம் தமிழ் மக்களின் குரலாகவும், மாற்று அரசியல் இயக்கமாகவும் நீண்ட காலம் நிலை கொண்டிருந்தது.

பெண்களின் உடல் மீது நிகழ்த்தப்பட்ட சிங்களப் பேரின வன்முறை வெறியை, குழந்தைகளின் இருப்பின் மீது நிகழ்ந்த குருதி வெறியை, மொழியின், அறிவாற்றலின் மீது நிகழ்ந்த ஆத்திரத்தை அடிப்படையாகக் கொண்டே புலிகளின் இயக்கம் வளர்ந்தும், இயங்கியும் வந்தது என்பதை இலங்கையின் அரசியல் வரலாற்றை ஆய்வு நோக்கில் படிப்பவர்கள் அறிந்து கொள்ள முடியும். இதனை நேர்மையாகப் பதிவு செய்து வந்த சிங்கள ஊடகவியலாளர்களையே இவ்விடத்தில் நினைவு கூற வேண்டும்.பல்வேறு காலகட்டங்களில் தமிழீழ மக்களிடம் இருந்து பதிவு செய்யப்பட்ட குரலில், " பொடியன்கள் மட்டும் இல்லையென்றால், மானமிழந்த, மரியாதை இழந்த அடிமைகளாகவும், உயிர்ப்பிச்சை பெற்று வாழும் சோற்றுப் பிண்டங்களாகவும் மட்டுமே நாங்கள் வாழ்ந்திருக்க வேண்டும்" என்கிற உணர்வு மேலோங்கி இருப்பதை நம்மால் உணர முடியும். உலக அளவில் இன்று தமிழீழ மக்கள் விடுதலை உணர்வும், இனமான உணர்வும் அதிகம் கொண்டவர்கள் என்ற அடைமொழி புலிகள் இயக்கத்தால் உருவாக்கப்பட்டது என்பதைத் தீவிரப் புலி எதிர்ப்பாளர்களும் ஒப்புக் கொள்வார்கள் என்று நம்புகிறேன்.

ஏனைய குற்றச்சாட்டுகள்:

4) பிரபாகரன் வன்னியில் ஒரு அரசரைப் போல வாழ்ந்தார்.

5) புலிகள் இயக்கத்தினர் மக்களின் பணத்தில் சொகுசாக வாழ்ந்தார்கள்.

6) புலிகள் சிறுவர்களை வலிந்து இயக்கத்தில் சேர்க்க முயன்றார்கள்.

7) தாய்த்தமிழக அரசியல் வாதிகள் தமிழீழ விடுதலையைத் தங்கள் அரசியல் மற்றும்

பொருளாதார லாபங்களுக்குப் பயன்படுத்தினார்கள்.

சமூகப் பொருளாதார மற்றும் அரசியல் வழிகளில் புலிகள் பார்வை அற்றவர்களாக

இருந்தார்கள்.

முதல் குற்றச்சாட்டு, பேரினவாதத்தால் ஒடுக்குமுறைக்கு ஆளாக்கப்பட்டு, உரிமை மறுக்கப்பட்ட ஒரு மிகப் பழமையான தேசிய இனத்துக்கு அதன் விடுதலைப் போருக்குத் தலைமை ஏற்றதால் அவருக்குச் சக தமிழர்களால் சூடி மகிழப்படும் மகுடம், இந்தக் குற்றச்சாட்டை எதிர் கொள்வது என்பது ஒட்டு மொத்த விடுதலைப் புலிகளின் இயக்கத்தை, அவர்களின் விடுதலைப் போராட்டத்தை மட்டுமல்லாது தமிழீழம் என்கிற தனித் தமிழ் தேசியத்தின் மீது நம்பிக்கை கொண்டிருக்கிற எவரின் தலை மீதும் அள்ளிக் கொட்டப்படும் மண். போர்க்களத்திற்கு வந்த போதும் சரி, தனி மனித வாழ்க்கையிலும் சரி, பிரபாகரன் ஆடம்பரமான முதலாளித்துவ வாழ்க்கை முறையை விரும்பி இருக்கவில்லை, சென்னையில் போராளிகளோடு ஒரு சிறிய அறையில் தங்கி இருந்த போதும் சரி, வன்னிக் காடுகளில் ஆயிரக்கணக்கான அணி வீரர்களோடு ஆட்சி செலுத்திய போதும் சரி, தனது முறை வரும் போது கடமைகளையும், பணிகளையும் ஏற்றுக் கொள்ளும் ஒரு எளிய மனிதனாகவே அவர் இருந்தார் என்பதற்கு ஏராளமான நேரடிச் சாட்சியங்கள் உண்டு. தனக்குக் கிடைக்கிற எல்லா வாய்ப்புகளும், வசதிகளும் எனது மக்களுக்கும் அவர்தம் குழந்தைகளுக்கும் கிடைக்க வேண்டும் எனபதில் பிரபாகரன் எப்போதும் தெளிவாகவும் உறுதியாகவும் இருந்தார். போர்க்களத்தில் இறந்து போன ஏனைய இளைஞர்களைப் போலவே தனது மகனது உடலையும் அவர் கண்டார். வீடிழந்த, நாடிழந்த ஏனைய முதியவர்களைப் போலவே அவரது தாயும், தகப்பனும் மூட்டைகளைத் தூக்கிக் கொண்டு முகாம்களில் அடைக்கலம் ஆனார்கள். உலகின் எந்த ஒரு நாட்டிலும் அவர்களை ஏக வசதிகளோடும், செல்வச் செழிப்போடும் வாழ வைக்கும் தகுதி அவருக்கு இருந்தும் அவர் தனது எளிய வாழ்வை வாழ்ந்து காட்டியதில் உறுதி செய்தார். பிரபாகரனின் மீது வைக்கப்படும் இந்தக் குற்றச்சாட்டு தமிழினத்தின் சாபக்கேடு.

முதன் முதலாக தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி. ராமச்சந்திரன் இரண்டு கோடி ரூபாய்களை அவர் கைகளில் வழங்கிய போதில் இருந்தே அவருக்குக் கிடைத்த வாய்ப்பான ஆடம்பர வாழ்வை அவர் மறுதலித்தார், அந்தப் பணத்தைக் கொண்டு எத்தகைய ஆயுதங்களை வாங்கி எமது மக்களைக் காக்க முடியும் என்று சிந்தித்தவராகவே அவர் இருந்தார். தனி மனித ஒழுக்கம் குறித்த எந்த ஒரு குற்றச்சாட்டும் இல்லாத சமகால விடுதலைப் போராளிகளில் முதலிடம் பெறும் பிரபாகரனின் மீது வைக்கப்படும் ஆடம்பர வாழ்க்கைக் குற்றச்சாட்டு ஆதாரங்கள் ஏதுமற்ற வெற்றுக் கூச்சல் மட்டுமன்றித் தமிழர்களின் இழிந்த பண்புகளில் ஒன்றாகவும் வரலாற்றில் நிலைபெறும்.

வெளிநாடுகளில் தரகு வேலை செய்யப் புலிகளால் நியமிக்கப்பட்ட தரகர்கள் மற்றும் உறுப்பினர்களில் பலரே இத்தகைய ஆடம்பர, உல்லாச வாழ்க்கையை நோக்கித் திசை திரும்பி இருக்கிறார்களே ஒழியத் தங்கள் முப்பதாண்டு கால போர்க்கள வாழ்க்கையில் மக்களின் பாதுகாப்பான வாழ்க்கை என்கிற நோக்கத்துக்காகத் தங்கள் இளமையை, வாழ்நாட்களைப் பணயம் வைத்த போராளிகளுக்கு இப்படி ஒரு பழி தேவையானது தான், ஏனென்றால் இனி வரும் புதிய தலைமுறை அப்படியான ஒரு பழியை உண்மையென்று நம்பவும், அவர்களின் மீதான தோற்றப் பிழையை உண்டாக்கவும் அது வழிவகுக்கும் அல்லவா? உலக வரலாற்றில் தாங்கள் யாருக்காகப் போராடினார்களோ அவர்களாலேயே இத்தகைய இழிசொல்லுக்கு ஆளான ஆளான இயக்கமும், அதன் ஆயிரக்கணக்கான இளம் போராளிகளும் உண்மையில் பாவம் செய்தவர்கள், தங்கள் வாழ்க்கையை, போராட்டத்தை, இன்னுயிரை இழந்த புலிகளின் பெரும்பான்மையான இளைஞர்கள் வன்னிக் காடுகளில் உல்லாசமாக என்னையும், உங்களையும் போலவே வாழ்ந்து கொண்டிருந்த போதுதான் நச்சு வாயுக்களால் கொல்லப்பட்டார்கள் என்பதை நான் ஒப்புக் கொள்வதும், எனது கண்களை நானே குத்திக் கொள்வதும் ஒன்றாகும்.

புலிகள் தங்கள் இயக்கத்தில் சிறுவர்களை வலிந்து சேர்க்க முயற்சி செய்தார்கள் என்கிற குற்றச்சாட்டில் ஓரளவு உண்மை இருக்கிறது, பேரினவாத அரசால் எந்த நேரத்திலும் தாக்குதலைச் சந்திக்க நேரிடுகிற ஒரு இனத்திற்கு இந்த ஆயுதப் பயிற்சியும், இயக்கச் செயல்பாடுகளும் தேவையானதாகவும், இன்றியமையாததாகவும் இருந்தது, மக்கள் படை மாதிரியான ஆயுதப் பயிற்சியை ஒட்டு மொத்த மக்களுக்கும் வழங்கும் ஒரு விதமான நிகழ்வின் அடிப்படையில் அவர்கள் சிறுவர்களுக்கும், சிறுமிகளுக்கும் ஆயுதப் பயிற்சியைக் கட்டாயம் செய்து வழங்கினார்கள், ஒரு சில இடங்களில் பெற்றோரின் விருப்பம் இல்லாமல் சிறுவர்களை அவர்கள் இயக்கச் செயல்பாடுகளுக்குக் கொண்டு வந்தார்கள் என்கிற உண்மையும் இதற்கும் இருக்கிறது. முழுமையாக இந்தக் குற்றச்சாட்டை நியாயப்படுத்த முடியாதென்றாலும், சமூகம் எதிர் கொள்கிற துன்பங்களை அடிப்படையாகக் கொண்டே இத்தகைய குற்றச்சாட்டுகளை நாம் எதிர் கொள்ள முடியுமே தவிர முழுமையாக ஏனைய இடங்களின் வாழ்க்கைச் சூழலைப் பொருத்து அல்ல.

தாய்த்தமிழக அரசியல்வாதிகள் ஈழத் தமிழ்ப் போராட்டத்தைத் தங்கள் சுய நலனுக்குப் பயன்படுத்திக் கொண்டார்கள், கூடவே எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்களும் இந்தப் போராட்டத்தைத் தங்கள் சுய நலன்களுக்குப் பயன்படுத்தினார்கள் என்று பொதுவான ஒரு குற்றச்சாட்டு சுமத்தப்படுகிறது, இந்தக் குற்றச்சாட்டில் பகுதி உண்மையும், மிகுதி மிகையும் இருக்கிறது, இரண்டு பெரிய வெகுமக்களின் அரசியல் இயக்கங்களான திராவிட முன்னேற்றக் கழகமும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் (அதாவது அதன் தலைமைப் பொறுப்புகள்) ஈழத் தமிழர் போராட்டத்தை எப்போதும் தங்கள் நலன்களுக்குப் பயன்படுத்தினார்கள் என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன், பல்வேறு காலகட்டங்களில் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும், இன்றைய முதல்வருமான கருணாநிதி ஈழப் போராட்டத்தை தனது அரசியல் நலன்களுக்குப் பயன்படுத்தினார், இறுதிப் போர் நடந்து கொண்டிருந்த போது அவர் நடத்திய உண்ணாநிலை நாடகம் முழுக்க முழுக்க தேர்தலுக்காக அவரால் திட்டமிட்டு நடத்தப்பட்டது, போரைத் தவிர்க்க அவரிடம் இருந்த ஒரே ஆயுதமான நடுவண் அரசுக்கான ஆதரவை விலக்கிக் கொள்வதைப் பற்றி அவர் ஒரு போதும் சிந்திக்கவில்லை, வருமானம் தரக்கூடிய துறைகளைக் கேட்டுப் பெறுவதற்குப் பல முறை ஆதரவு விலக்க ஆயுதத்தைப் பயன்படுத்திய கருணாநிதி ஈழப் போரில் தனது சுய நலன்களை விலை பேசினார்.

மற்றொரு பெரிய அரசியல் கட்சியின் தலைவரான ஜெயலலிதா ஈழ மக்களின் விடுதலைப் போரை நேரடியாகவே தேர்தல் விலையாகக் கருதி மக்களிடம் ஈழம் பெற்றுத் தருவேன் என்று கூக்குரலிட்டார், படைகளை அனுப்பியேனும் ஈழம் பெறுவோம் என்று அவர் நாடாளுமன்றத் தேர்தலின் போது முழக்கமிட்டது நகைச்சுவையின் உச்சம். தேர்தல் முடிந்த பிறகு தன்னுடைய அறிக்கைகளில் ஒரு போதும் இத்தகைய முழக்கங்களை அவர் எழுப்பியது இல்லை, அரசியல் லாபங்களுக்காகவும், அதிகார மோகத்தினாலும் மட்டுமே அவர் ஈழப் போர் குறித்த முழக்கங்களை எழுப்பி வந்தார், அடிப்படையில் அவர் ஒருபோதும் ஈழப் போரையோ, ஈழ அரசியலையோ ஒரு பொருட்டாக நினைக்கவில்லை என்பதை தமிழ்நாட்டுக் குழந்தைகளும் அறிவார்கள்.

இவர்களைத் தவிர்த்து ஈழ மக்களுக்காகக் குரல் கொடுத்த எந்த ஒரு தமிழக அரசியல்வாதியும் அடைந்த பயன்களை விடவும் துன்பங்களே அதிகம், வை.கோ, நெடுமாறன், திருமாவளவன், கிருஷ்ணசாமி, சீமான் போன்ற தலைவர்கள் நீண்ட காலமாகவே ஈழ விடுதலைக்குக் குரல் கொடுப்பவர்கள், ஈழ விடுதலைப் போரின் அதரவு நிலைப்பாட்டுக்காக இவர்கள் சந்தித்திருக்கிற உளவியல் மற்றும் அரசியல் நெருக்கடிகள் புலம் பெயர்ந்து சொகுசு வாழ்க்கை வாழும் எந்த புலி எதிர்ப்பு விமர்சகரை விடவும் மேலானதும் போற்றப்பட வேண்டியதுமே ஆகும். ஈழப் போராட்டத்தில் தாக்கம் விளைவிக்கிற அளவில் எழுதுகிற எந்த எழுத்தாளரும் தமிழ்நாட்டில் இல்லை என்று சொல்லும் அளவிற்கு ஒரு ஊடக வெற்றிடம் நிலவியது, இருப்பினும் பல்வேறு ஊடகங்களும், எழுத்தாளர்களும் ஈழப் போர் குறித்து கிடைக்கும் இடங்களில் எல்லாம் எழுதிக் கொண்டே இருந்தார்கள், விகடன் குழுமத்தில் தொடர்ந்து எழுதிய ஊடகவியளர் ப.திருமாவேலன், குமுதம் குழுமத்தில் தொடர்ந்து எழுதிய ஏகலைவன் போன்றவர்களின் பங்களிப்பை ஒரு முழுநேர எழுத்தாளர் அளவுக்குச் சொல்ல முடியும், தவிர "கீற்று" மாதிரியான இணைய இதழ்கள் தொடர்ந்து பொருளாதார நெருக்கடிகள், அரசியல் நெருக்கடிகள் இவற்றுக்கு இடையே அழுத்தமான குரல் கொடுத்து வந்ததையும் மறக்க இயலாது. இவர்களின் உணர்வுகள் முழுமையும் இனமான அடிப்படையிலானது தவிர தனி மனித நலன் சார்ந்தது அல்ல, ஆட்சியாளர்களுக்கும், இந்திய தேசியத்திற்கும், சிங்களப் பேரினவாதத்திற்கும் பல்லக்குத் தூக்கி அடையும் பயன்களில் நூற்றில் ஒரு பங்குப் பயனும் புலிகளை அல்லது விடுதலைப் போரை ஆதரித்து எழுதுவதால் கிடைக்கப் போவதில்லை என்று தெரிந்தும் இவர்கள் எழுதினார்கள், ஏனென்றால் அவர்கள் தமிழர்களாய் இருந்தார்கள், அவ்வளவுதான்.

சமூகப் பொருளாதார மற்றும் அரசியல் வழிகளில் புலிகள் பார்வை இழந்தவர்களாக இருந்தார்கள் என்பது முதல் கோணல் முற்றிலும் கோணல் என்ற நிலைப்பாட்டையே வழங்கும், சமூக ரீதியாகத் தமிழர்கள் ஒருங்கிணைந்து பன்னாட்டு அரங்கில் செயல்படுவதற்கான ஒரு வாய்ப்பைப் புலிகளே உருவாக்கினார்கள், மொழியின் இன்றியமையாமையை உணர்த்தி தனித்தமிழ் வளர்வு நிலைகளுக்குப் பல்வேறு இயக்கங்கள் பணியாற்றும் ஒரு சூழலைத் தெரிந்தோ, தெரியாமலோ புலிகளே உருவாக்கினார்கள். பொருளாதார நிலைப்பாட்டில் பெரும்பாலான பொருளை பாதுகாப்புக்குச் செலவிட்ட புலிகள் கல்வி, போக்குவரத்து, காவல்துறை, சாலைப்பராமரிப்பு, நீதிமன்றங்கள் போன்றவற்றை சமகாலத்தில் வெற்றிகரமாகச் செலுத்தியமை அவர்களின் அடிப்படைப் பொருளாதாரக் கொள்கையின் வலிமையை உணர்த்தும் வகையில் இருந்தன. அரசியல் நிலைப்பாடு ஒன்றே நெகிழ்வுத் தன்மை குறைவாகக் காணப்பட்ட ஒன்றாகப் புலிகளிடம் ஆண்டன் பாலசிங்கத்தின் மறைவுக்குப் பிறகு காணப்பட்டது. அரசியல் வழியான ஒரு சரியான எழுச்சியை, விழிப்புணர்வை உலகம் முழுவதும் ஏற்படுத்த முயலாத ஒரு தவறு அவர்களின் இயக்க ரீதியிலான வீழ்ச்சிக்கும் துணை போனது எனலாம்.

ஆனால், இதற்குப் புலிகளை மட்டுமே குற்றம் சொல்லி நாம் அனைவரும் தப்பிக் கொள்ள முடியாது, இந்த வீழ்ச்சிக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் நானும் நீங்களும் ஒரு காரணம், ஒரு இயக்கத்தின் வீழ்ச்சி அந்த இயக்கம் சார்ந்த இன மக்களின் அரசியல் விழிப்புணர்வுக்கு அடிப்படையாக அமைந்திருப்பதே புலிகளின் ஒட்டுமொத்த சமூக, பொருளாதார மற்றும் அரசியல் தொலைநோக்கின் வெற்றி என்றே நான் புரிந்து கொள்கிறேன். நீங்களும் அப்படியே புரிந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை.

இறுதியாக இத்தகைய விவாதங்களில் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் குறித்து நாம் பேசியாக வேண்டும், ஈழத் தமிழன், தமிழகத் தமிழன் அல்லது உலகின் வேறெந்த நாட்டின் தமிழனும் சரி, சமகால அரசியலின் போக்கைப் புரிந்து கொண்டு, மரபான நமது பொது உடைமைத் தத்துவ அடிப்படைகளில் இருந்து நமக்கான கருத்தியலையும், அரசியலையும் உருவாக்கிக் கட்டமைக்க வேண்டியிருக்கிறது. இணையத்தில் சண்டையிட்டுக் கொள்வதற்கும், குறிப்புகள் இயற்றிப் பின்னூட்டங்கள் இடுவதற்கும் ஆன போராட்டம் இல்லை இந்த நீண்ட விடுதலைப் போராட்டம், தனிச்சிறப்பு மிக்க நமது மொழியின் இருப்பையும், அதன் இலக்கண, இலக்கியங்களின் கூறுகளைக் காக்கவும், இயற்கையோடு இயைந்து வாழும் ஏனைய உயிர்களுக்குத் தீங்கிழைக்காத ஒரு வாழ்க்கை முறையை மீட்டெடுக்கவும் நமக்குத் தேவையாகி இருக்கிற ஒரு போராட்ட வடிவமாகும்.

முதலாளித்துவ நுகர்வு மனநிலை அணு அணுவாய் ஊடகங்களின் வழியாக ஏற்றப்படும் ஒரு காலகட்டத்தில், பாலுணர்வு மற்றும் வன்முறை வடிவங்கள் திரைப்படக் காட்சிகளின் வழியாக நுரைத்துப் பொங்கும் ஒரு சூழலில் ஆன்மீக நெறிப்படுத்தல் என்ற பெயரில் நிகழும் மந்தை மனப்போக்கில் இருந்து நமது இளைய தலைமுறையைத் திசை திருப்பி எளிமையான, அழகான ஒரு விடுதலை பெற்ற வாழ்க்கையை அறிமுகம் செய்வதும், அரசியல் விழிப்புணர்வு பெற்ற இலவச மனநிலையில் இருந்து மீண்டெழுகிற ஒரு சூழலை அவர்களுக்கு உருவாக்கிக் கொடுப்பதும் ஒவ்வொரு சுய அறிவுள்ள தமிழனின் கடமையும், பணியுமாகிறது.

நாம் நமக்கான தேசிய விடுதலைப் போரை ஒரு இயக்கத்திடம் கொடுத்து விட்டுக் கடந்த முப்பதாண்டு காலமாக வெறும் பார்வையாளர்களாய் இருந்தோம், தனது கடமைகளை முடித்துக் கொண்டு அதே விடுதலைப் போரை நம்மிடம் திரும்பக் கொடுத்து விட்டு மறைந்து போனது அந்த இயக்கம், தனி மனிதர்கள் இயக்கங்கள் இவற்றைத் தாண்டி விடுதலைப் போருக்கான தேவை மட்டும் அப்படியே இருக்கிறது. முன்னிலும் அதிகமாக.

நாம் குற்றம் குறைகளைக் கண்டறியவும், குற்றச்சாட்டுகளைப் பட்டியலிட்டு சுமத்தவும் பல்லாயிரம் பிரபாகரன்கள் நமக்குக் கிடைக்கக் கூடும், ஒரு சின்னஞ்சிறிய தீவில் தமிழினம் பேரினவாதத்தால் கடும் ஒடுக்குமுறைக்கு ஆளான போது நமது பெண்களையும், குழந்தைகளையும் அவர்களிடம் இருந்து காக்க இன்னும் ஒரே ஒரு பிரபாகரன் நமக்குக் கிடைப்பது தான் கடினம் என்கிற உண்மையில் உறைந்து கிடக்கிறது தமிழினத்தின் விடுதலை.

தமிழரின் தாகம், தமிழீழத் தாயகம்

*****************

http://tamizharivu.wordpress.com

முதலாளித்துவ நுகர்வு மனநிலை அணு அணுவாய் ஊடகங்களின் வழியாக ஏற்றப்படும் ஒரு காலகட்டத்தில், பாலுணர்வு மற்றும் வன்முறை வடிவங்கள் திரைப்படக் காட்சிகளின் வழியாக நுரைத்துப் பொங்கும் ஒரு சூழலில் ஆன்மீக நெறிப்படுத்தல் என்ற பெயரில் நிகழும் மந்தை மனப்போக்கில் இருந்து நமது இளைய தலைமுறையைத் திசை திருப்பி எளிமையான, அழகான ஒரு விடுதலை பெற்ற வாழ்க்கையை அறிமுகம் செய்வதும், அரசியல் விழிப்புணர்வு பெற்ற இலவச மனநிலையில் இருந்து மீண்டெழுகிற ஒரு சூழலை அவர்களுக்கு உருவாக்கிக் கொடுப்பதும் ஒவ்வொரு சுய அறிவுள்ள தமிழனின் கடமையும், பணியுமாகிறது.

இதுகளை எப்படி செய்யலாம்

இஸ்லாமியத் தமிழ்ச் சமூகத்திடம் இருந்து விலக்கம் பெற்ற புலிகளின் கொள்கைகள் அவர்களின் வெகுமக்கள் நெருக்கத்தைக் குலைய வைத்தது என்பதையும் இவ்விடத்தில் நினைவு கொள்ள வேண்டும், புலிகளின் மிக இறுக்கமான முடிவுகள் இணக்கமான சூழலில் இருந்து இஸ்லாமியத் தமிழர்களை வேறு ஒரு பாதைக்கு அழைத்துச் சென்றன, மொழி வாரித் தேசியம் என்ற புலிகளின் சிந்தனைகளில் இருந்து மாறுபட்டு அவர்கள் மதவழியிலான அடிப்படை நம்பிக்கைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க விழைந்ததும் இதற்கான மேலதிகக் காரணம் என்று கொள்ள இயலும்

புலிகள்தான் உருவாகுவதற்கு முதலே இஸ்லாமியர் இந்த கொள்கையில் தான் இருந்தார்கள் ..இதில் எந்தவித மாற்றுகருத்துக்கும் இடமில்லை..

வெள்ளைக்காரன் ஆட்சியிலயே அவர்கள் தெளிவாக இருந்து இருக்கிறார்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.