"இஸ்ரேல் உறவு, இந்து தேசியவாதம்" - பிரதமர் மோதியின் இஸ்ரேல் பயணம் குறித்து அரபு ஊடகங்கள் கூறுவது என்ன?
பட மூலாதாரம்,Press Information Bureau (PIB)/Anadolu via Getty Images
படக்குறிப்பு,அரபு ஊடகங்கள் பிரதமர் மோதியின் இந்தப் பயணத்தை வெறும் இந்தியா-இஸ்ரேல் உறவுகளின் அடிப்படையில் மட்டும் பார்க்காமல், பரந்த பிராந்திய சமன்பாடுகளின் அடிப்படையிலும் முன்வைக்கின்றன.
7 மணி நேரங்களுக்கு முன்னர்
வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
பிரதமர் நரேந்திர மோதியின் இஸ்ரேல் பயணம், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடனான அவரது நெருக்கம் மற்றும் இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் அவர் ஆற்றிய உரை போன்றவை குறித்து அரபு ஊடகங்களிலும் அதிகம் விவாதிக்கப்படுகின்றன.
அரபு ஊடகங்கள் பிரதமர் மோதியின் இந்தப் பயணத்தை வெறும் இந்தியா-இஸ்ரேல் உறவுகளின் அடிப்படையில் மட்டும் பார்க்காமல், பரந்த பிராந்திய சமன்பாடுகளின் அடிப்படையிலான பார்வையையும் முன்வைக்கின்றன.
இந்தியா வரலாற்று ரீதியாக இரு-நாடுகள் கொள்கையை ஆதரிப்பதோடு, பாலத்தீனப் பகுதியில் அமைதி ஏற்படுத்தும் முயற்சிகளுக்கு ஆதரவு அளித்து வந்தாலும், நரேந்திர மோதியின் தலைமையின் கீழ் அது இஸ்ரேலுடன் நெருக்கமடைந்துள்ளதாக பல அரபு ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இஸ்ரேல் மற்றும் பாலத்தீனர்கள் தொடர்பான இந்தியாவின் பாரம்பரிய நிலைப்பாட்டிலிருந்து தற்போதைய நிலைப்பாடு வேறு திசையில் நகர்ந்து வருவதையும் அரபு ஊடகங்கள் கவனத்தில் கொள்கின்றன.
முன்பு இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையானது இஸ்ரேல் மற்றும் பாலத்தீன லட்சியங்களிலிருந்து சமமான தூரத்தைப் பேணுவதில் கவனம் செலுத்தியது. ஆனால் இப்போது நலன் சார்ந்த உறவுகளே இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையின் மையமாக உள்ளன.
அரபு ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்திகளின் படி, அண்டை நாடுகளுடனான இந்தியாவின் பதற்றமான உறவுகள் மற்றும் அதன் ராணுவத் தேவைகளைக் கருத்தில் கொண்டு, இந்தியா இப்போது இஸ்ரேலை நோக்கி நெருங்கி வருகிறது.
அரபு ஊடகங்கள், பிரதமர் நரேந்திர மோதியின் வருகையைக் குறிப்பிடும்போது, காஸாவில் இஸ்ரேலுக்கு மீதான இனப்படுகொலை குற்றச்சாட்டுகளையும் சுட்டிக்காட்டியுள்ளன.
மேலும், இஸ்ரேல் மீதான இந்தக் குற்றச்சாட்டுகளின் பின்னணியில் பிரதமரின் பயணத்தை எதிர்க்கும் இந்திய எதிர்க்கட்சித் தலைவர்களின் கருத்துக்களையும் அவை வெளியிட்டுள்ள செய்திகளில் இணைத்துள்ளன.
'பாகிஸ்தான், துருக்கி, சௌதி அரேபியா கூட்டணிக்கு சவால்'
பட மூலாதாரம்,Press Information Bureau (PIB)/Anadolu via Getty Images
படக்குறிப்பு,இஸ்ரேலில் உள்ள பென் குரியன் சர்வதேச விமான நிலையத்தில் நடைபெற்ற வரவேற்பு விழாவில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வரவேற்றார்.
அல் ஜசீரா அரபு தொலைக்காட்சியின் இஸ்ரேல்-பாலத்தீன விவகாரங்களுக்கான நிபுணர் அஸாம் அபு அல்-அட்ஸ் கூறுகையில், இந்தியப் பிரதமரின் இந்த வருகை ஒரு ஆழமான மூலோபாய மாற்றத்தைக் குறிக்கிறது என்றார்.
இந்தியா-இஸ்ரேல் கூட்டாண்மை இந்தப் பிராந்தியத்தில் ஒரு புதிய பிராந்திய துருவமுனைப்புக்கு வழிவகுக்கும் என்றும் அவர் கூறினார்.
வரும் காலங்களில், மத்திய கிழக்கு மற்றும் ஆசிய அரசியலில் இந்தியாவும் இஸ்ரேலும் முக்கியப் பங்கு வகிக்கும்.
மேலும்,இந்தியா மற்றும் இஸ்ரேல் இடையிலான பில்லியன் டாலர் ஒப்பந்தத்தை மட்டும் முன்னிலைப்படுத்துவது, இந்தப் பயணத்தின் உண்மையான நோக்கத்தை மறைப்பது போன்றது என்றும் அவர் தெரிவித்தார்.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் தனது உரையில் இந்தியாவுடனான ராணுவக் கூட்டாண்மை பற்றி குறிப்பிட்டார்.
இந்தப் பிராந்தியத்தில் பாகிஸ்தான், துருக்கி மற்றும் சௌதி அரேபியா ஆகிய நாடுகளின் சாத்தியமான கூட்டணியை எதிர்கொள்ள, இந்தியாவும் இஸ்ரேலும் நட்பு நாடுகளாக நெருங்கி வருகின்றன என்பது தெளிவாகிறது.
மத்திய கிழக்கு நாடுகளுக்கு வெளியேயும் தன்னை ஒரு பெரிய சக்தியாகக் காட்டிக்கொள்ள இஸ்ரேல் விரும்புவதாக அஸாம் அபு அல்-அட்ஸ் கூறுகிறார்.
இத்தகைய சூழ்நிலையில், இந்தியாவைப் போன்ற ஒரு பெரிய மற்றும் அணுசக்தி கொண்ட நாட்டுடனான நட்பு அதற்கு மூலோபாய வலிமையை அளிக்கிறது.
அதே நேரத்தில், இஸ்ரேலின் சக்திவாய்ந்த விமானப்படைத் திறன்களைப் பயன்படுத்திக்கொள்ள இந்தியா விரும்புகிறது.
இஸ்ரேலின் ராணுவ ஒத்துழைப்பு இந்த பிராந்தியத்தில் அதன் வலிமையை அதிகரிக்கும் என்று இந்தியா நம்புகிறது.
'இந்து தேசியவாதம்'
பட மூலாதாரம்,Getty Images
படக்குறிப்பு,பிரதமர் மோதி இஸ்ரேலிய நாடாளுமன்றமான நெசெட்டிலும் உரையாற்றினார்.
பாகிஸ்தானுடனான தனது பிராந்திய மோதலின் ஒரு பகுதியாகவும், ஆசியாவில் தனது ராணுவ மற்றும் ராஜ்ஜீய நிலையை வலுப்படுத்தும் முயற்சியாகவும் இஸ்ரேலுடனான இந்தக் கூட்டணியை இந்தியா கருதுவதாக அஸாம் அபு அல்-அட்ஸ் கூறியதை அல் ஜசீரா அரபு ஊடகம் மேற்கோள் காட்டியுள்ளது.
இந்தியாவில் தனது அரசியல் அதிகாரத்தை அதிகரிக்க, மோதி அரசாங்கம் இந்து தேசியவாதத்தின் உதவியைப் பெறுகிறது.
இஸ்ரேலிய நாடாளுமன்றமான நெசட்டில் மோதி உரையாற்றிய போது, காஸாவில் இஸ்ரேல் மீதான இனப்படுகொலை குற்றச்சாட்டுகள் இருந்தபோதிலும், இந்தியா இஸ்ரேலுடன் ஒற்றுமையைக் காட்டியதாகவும், பிரதமர் நரேந்திர மோதி காஸாவில் இஸ்ரேலின் 'பேரழிவு ஏற்படுத்தும் போரை' ஆதரித்ததாகவும் இந்தியா இஸ்ரேலுடன் நிற்கிறது என்றும் அல் ஜசீரா குறிப்பிட்டுள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் முன்னணி ஊடகமான அல்-கலீஜ், இஸ்ரேலின் நெசெட் பிரதமர் நரேந்திர மோதி ஆற்றிய உரையை வெளியிட்டுள்ளது. அந்த உரையில், இந்தியா இஸ்ரேலுடன் உறுதியாக நிற்கிறது என்று மோதி தெரிவித்துள்ளார்.
அக்டோபர் 7, 2023 அன்று இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலைக் குறிப்பிட்டுப் பேசிய பிரதமர் மோதி, "உங்கள் வலியை நாங்கள் உணர்கிறோம், உங்கள் துயரத்தை நாங்கள் பகிர்ந்து கொள்கிறோம். காரணம் எதுவாக இருந்தாலும், பொதுமக்கள் கொல்லப்படுவதை நியாயப்படுத்த முடியாது" என்றார்.
"நீடித்த அமைதி மற்றும் பிராந்திய நிலைத்தன்மையை நிலைநாட்ட பங்களிக்கும் அனைத்து முயற்சிகளையும்" இந்தியா ஆதரிக்கிறது" என்ற மோதியின் கூற்றையும் அல்-கலீஜ் குறிப்பிட்டுள்ளது.
நரேந்திர மோதியின் தலைமையின் கீழ் இந்தியாவிற்கும் இஸ்ரேலுக்கும் இடையே வளர்ந்து வரும் நட்புறவை அல்-கலீஜ் குறிப்பிட்டதோடு, பாதுகாப்பு, விவசாயம், தொழில்நுட்பம் மற்றும் சைபர் பாதுகாப்பு ஆகிய துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான கூட்டாண்மை வலுவடைந்து வருவதாகவும் கூறியுள்ளது.
மாறிவரும் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை
பட மூலாதாரம்,EPA/Shutterstock
படக்குறிப்பு,அரபு ஊடகங்கள் இந்த வருகையை இந்தியா-இஸ்ரேல் உறவுகளின் அடிப்படையில் மட்டுமல்லாமல், பெரிய பிராந்திய சமன்பாடுகளின் அடிப்படையிலும் முன்வைக்கின்றன.
இதற்கிடையில், ஐக்கிய அரபு அமீரகத்தை தளமாகக் கொண்ட மற்றொரு ஊடகமான கல்ஃப் நியூஸ், பெஞ்சமின் நெதன்யாகுவும் அவரது மனைவியும், நரேந்திர மோதியை வரவேற்ற விதம், இந்தியா மற்றும் இஸ்ரேல் இடையிலான உறவுகள் எவ்வளவு ஆழமானவை என்பதைக் காட்டுகிறது என்று குறிப்பிட்டுள்ளது.
கல்ஃப் நியூஸ் கருத்துப்படி, இது இந்தியாவின் முந்தைய வெளியுறவுக் கொள்கையிலிருந்து மாறுபட்ட அணுகுமுறையையும் காட்டுகிறது.
இந்தியா வரலாற்று ரீதியாக பாலத்தீனர்களை ஆதரித்து வந்ததுடன், 1992 வரை இஸ்ரேலுடன் முழுமையான ராஜ்ஜீய உறவுகளைக் கூட கொண்டிருக்கவில்லை. ஆனால், சமீபத்திய ஆண்டுகளில் இரு நாடுகளும் நெருக்கமடைந்துள்ளன.
அக்டோபர் 2023-இல் காஸா போர் தொடங்கிய பிறகு பல நாடுகளுடனான இஸ்ரேலின் உறவுகள் மோசமடைந்தன என்றும், பல ஐரோப்பிய நாடுகளும் காஸாவில் அதன் தாக்குதல்களை கடுமையாக விமர்சித்தன என்றும் கல்ஃப் நியூஸ் எழுதியுள்ளது.
இத்தகைய சூழ்நிலையில், மோதியின் இந்த வருகை இஸ்ரேலுக்கான சர்வதேச ஆதரவை அதிகரிப்பதில் பயனுள்ளதாக இருக்கும் என்று பெஞ்சமின் நெதன்யாகு நம்புகிறார்.
இருப்பினும், இந்தியா இஸ்ரேலுடன் மட்டுமின்றி, வளைகுடா நாடுகள் மற்றும் இரானுடனும் வலுவான உறவுகளைப் பேணி வருவதாக கல்ஃப் நியூஸ் குறிப்பிடுகிறது. இந்த சமநிலை அதன் வெளியுறவுக் கொள்கையில் பிரதிபலிக்கிறது.
நரேந்திர மோதியின் வருகைக்கு எதிராக இந்தியாவில் எதிர்க்கட்சித் தலைவர்கள் நடத்திய போராட்டத்தையும் கல்ஃப் நியூஸ் வெளியிட்டுள்ளது.
இதில் காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தியின் கருத்தும் இடம் பெற்றுள்ளது. அதில் காஸாவில் இஸ்ரேல் செய்த இனப்படுகொலை குறித்து பிரதமர் மோதி இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் குறிப்பிடுவார் என்று நம்புவதாக அவர் கூறியிருந்தார்.
லண்டனைத் தளமாகக் கொண்ட 'த நியூ அரப்' இதழ், தீவிர இந்து தேசியவாதியான மோதி, அக்டோபர் 7 தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேலுடன் ஒற்றுமையை வெளிப்படுத்திய ஒரு சில உலகத் தலைவர்களில் ஒருவர் என்று எழுதியுள்ளது.
ஆனால் மேற்குக் கரையைக் கட்டுப்படுத்தும் இஸ்ரேலின் முயற்சிகளையும், பாலத்தீன அதிகார சபையின் வரையறுக்கப்பட்ட அதிகாரங்களை பலவீனப்படுத்தும் அதன் முயற்சிகளையும் சமீபத்தில் கண்டித்த நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று.
மேற்குக் கரையில் இஸ்ரேலின் விரிவாக்கத் திட்டங்களை இந்தியா உட்பட 100-க்கும் மேற்பட்ட நாடுகள் கண்டித்துள்ளதாக அரபு மொழி டிஜிட்டல் செய்தி இணையதளமான 'நியூஸ்ரூம்' தெரிவித்துள்ளது.
இருப்பினும், இதற்கு முன்பு இந்த விவகாரத்தில் இஸ்ரேலை விமர்சிக்க இந்தியா தயக்கம் காட்டியிருந்தது.
அக்டோபர் 7, 2023 தாக்குதலுக்குப் பிறகு, பல மேற்கத்திய நாடுகளின் தலைவர்கள் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவைச் சந்தித்துள்ளனர். ஆனால் குளோபல் சவுத் நாடுகளுடைய தலைவர்களின் வருகைகள் மிகவும் குறைவாகவே உள்ளன என்று நியூஸ்ரூம் பதிவு செய்துள்ளது.
இந்தச் சூழலில் மோதியின் வருகை சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
மேலும், இந்தியாவையும் மோதியையும் நெதன்யாகு பாராட்டியதையும், மோதியை உலகின் மிகவும் பிரபலமான தலைவர்களில் ஒருவர் என்று நெதன்யாகு விவரித்ததாகவும் நியூஸ்ரூம் குறிப்பிட்டுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
https://www.bbc.com/tamil/articles/cn4gwgzgn0lo
By
ஏராளன் ·
Archived
This topic is now archived and is closed to further replies.