Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

முத்துக்குமாருக்கு தோல்வியில்லை!!

Featured Replies

இனிய தோழன் முத்துக்குமாரின் இரண்டாம் வருட நினைவை முன்னிட்டு..

அறிவும் உணர்வும் எப்போதுமே ரயில் தண்டவாளம் மாதிரி. இரண்டும் இணையவே இணையாது. உலகளாவிய இந்த விதியை மாற்றிக்காட்டிய மாவீரன், கருப்பு நெருப்பு முத்துக்குமார். அவனுடைய மரண சாசனம் அறிவுப்பூர்வமான ஓர் ஆவணம். அந்த அளவுக்கு ஒரு சாசனத்தை எழுதிவைத்து விட்டு, அதற்கு நிகரான உணர்ச்சிக் கொந்தளிப்போடு தீக்குளிப்பதென்பது வேறெவருக்கு சாத்தியம்? அறிவும் இருக்கவேண்டும், அதற்கு இணையான உணர்வும் இருக்கவேண்டும் என்பதை அழுத்தம் திருத்தமாகப் பதிவு செய்தான் அந்த வீரத்தமிழ் மகன்.

தமிழக வரலாற்றிலேயே, மிகக் குறுகிய காலத்தில் மிக அதிகப் பிரதிகள் அச்சிடப்பட்டது, முத்துக்குமாரின் மரணசாசனமாகத்தான் இருக்கவேண்டும். தனி நபர்கள் மட்டுமின்றி பல்வேறு அமைப்புகள் அந்த மரணசாசனத்தைச் சிறிய புத்தகவடிவில் ஆயிரக்கணக்கில் அச்சிட்டு இலவசமாக விநியோகித்திருக்கின்றன. 2009 பிப்ரவரியில் முத்துக்குமாரின் தியாகச் சாம்பலை சென்னையிலிருந்து கன்னியாகுமரி வரை கொண்டுசென்றபோது வழியெல்லாம் பல்வேறு அட்டைப்படங்களுடன், பல்வேறு தலைப்புகளுடன் அதைப் பார்க்கமுடிந்தது.

'.......சொந்த ரத்தம் ஈழத்தில் சாகிறது. அதைத் தடுத்து நிறுத்துங்கள் என்று குரல்கொடுத்தால், ஆம் என்றோ, இல்லை என்றோ எந்த பதிலும் சொல்லாமல் கள்ள மௌனம் சாதிக்கிறது இந்திய ஏகாதிபத்தியம். இந்தியாவின் போர் ஞாயமானதென்றால் அதை வெளிப்படையாகச் செய்ய வேண்டியதுதானே... ஏன் திருட்டுத்தனமாகச் செய்யவேண்டும்' என்று சோனியா காங்கிரஸின் செவுளில் அறைகிற மாதிரி கேட்டிருந்தான் முத்துக்குமார். அந்தக் கேள்வியில் அனல் பறந்தது. கள்ள மௌனம் சாதித்தவர்களும், திருட்டுத்தனமாகப் போரில் பங்கெடுத்தவர்களும் தான் அதற்கு பதில் சொல்லியிருக்கவேண்டும். சொல்லமுடிந்ததா அவர்களால்?

'கள்ள மௌனம்' என்கிற வார்த்தையை இதற்குமுன் யாரும் பயன்படுத்தியதாகத் தெரியவில்லை. அதிலிருந்த கடுமை, கொடுமை செய்த ஒவ்வொருவரையும் சுட்டெரித்தது. அறிவார்ந்த கேள்விகளை முன்வைத்த அந்த சாசனத்தைப் படித்து நொந்து நூடுல்ஸாகிப் போனார்கள் அவர்கள். அறிக்கை அரசர் கருணாநிதியின் அறிவாலயத்திலிருந்தோ, மௌன மாதா சோனியாவின் அக்பர் ரோட்டிலிருந்தோ, முத்துக்குமாரின் அந்தக் குற்றச்சாட்டை மறுத்து ஒரு அறிக்கை கூட விடமுடியவில்லை.

2009 மே மாதம் தான், 'இந்தியாவின் போரை நாங்கள் நடத்தினோம்' என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தது இலங்கை. அதற்கு 5 மாதங்களுக்கு முன்பே இதை அம்பலப்படுத்தியவன் முத்துக்குமார். இந்தியா- இலங்கைக்கு இடையிலான இந்த கள்ளக்கூட்டையும், ஒன்றுமே தெரியாதவரைப்போல் கண்ணீர் மல்க கருணாநிதி பாடிய ஒப்பாரிப் பாட்டையும் பார்த்து நொந்துபோயிருந்த ஒவ்வொருவரும் முத்துக்குமாரைத் தங்கள் மனசாட்சியாகவே கருதினர். அவன் எழுத்தில் வார்த்தைக்கு வார்த்தை உண்மை இருந்ததைக் கருணாநிதியாலேயே மறுக்கமுடியாது. அதனால்தான், அவனது குற்றச்சாட்டுகளை மறுக்கும் முயற்சியில் தி.மு.க. இன்றுவரை இறங்கவில்லை.

'அப்பாவித் தமிழர்களைக் காப்பதற்காகத்தான் போரிடுவதாக பசப்புகிறது இந்தியா. ஆயுதத் தளவாடங்களும் உளவு விமானங்களும்தான் இலங்கை போகின்றனவே தவிர, இந்தியாவால் அனுப்பப்பட்ட ஒரு பாராசெட்டமால் மாத்திரையைக் காட்டச் சொல்லுங்கள் பார்க்கலாம்' என்று அறிவோடும் துணிவோடும் காங்கிரஸின் மரமண்டையில் ஓங்கி அடித்தான் முத்துக்குமார்.

இந்தியாவின் துரோகத்தை அம்பலப்படுத்த, தன் உயிரைத் தானே தியாகம் செய்தான் திலீபன். அது நடந்தது 1987ல். அமைதியை நிலை நாட்டுவதற்காகத்தான் ஜெயவர்தனேவுடன் ஒப்பந்தம் போட்டீர்கள் என்றால், அந்த ஒப்பந்தத்தை முதலில் நிறைவேற்றுங்கள் - என்று ராஜீவ் காந்தியை வலியுறுத்தினான் திலீபன். கருணாநிதி பாணியில் நடத்தப்பட்ட 4 மணி நேர நாடகம் இல்லை அது. மகாத்மா காந்தியின் பாதையில் ஒரு ஈழத்து இளைஞன் நடத்திய சாகசப் பயணம். கால்மாட்டில் மனைவியும் தலைமாட்டில் துணைவியும் அமர்ந்திருக்க அது ஒன்றும் கோபாலபுரத்துக் கூடாரமல்ல. ஒட்டுமொத்தத் தமிழினத்தின் பெருமைக்குரிய ஒரே அடையாளமான பிரபாகரன், அந்த இளைஞனின் தலைமாட்டில் அமர்ந்திருந்தான். நல்லூர் முருகன் கோவில் முன், திலீபனைப் பார்க்கத் திரண்ட ஆயிரக்கணக்கான தாய்மார்கள் கண்ணீர் மல்க நின்றிருந்தார்கள். இந்திய - இலங்கை ஒப்பந்தத்தைக் காப்பாற்றுவதன் மூலம் திலீபனையும் ராஜீவ்காந்தி காப்பாற்றிவிடுவார் என்று அவர்கள் நம்பினார்கள். அந்த நம்பிக்கை பொய்த்தது. இந்திய ஏகாதிபத்தியம் சாதித்த கள்ளமௌனம் திலீபனோடு சேர்த்து, ராஜீவ்-ஜெயவர்தனே ஒப்பந்தத்தையும் குழிதோண்டிப் புதைத்தது. 12 நாட்கள் தண்ணீர் கூட குடிக்காமல் உண்ணாவிரதம் இருந்த திலீபன், ஓர் உன்னத லட்சியத்துக்காக உயிர் துறந்தான்.

ராஜீவின் துரோகத்தைத் திலீபன் அம்பலப்படுத்தினானென்றால், அவன் உயிர் நீத்த 22 ஆண்டுகள் கழித்து, சோனியா காங்கிரஸின் தமிழின விரோதத்தை அம்பலப்படுத்தினான் முத்துக்குமார். தனது முடிவுக்கு மனசாட்சியே இல்லாமல் வேறேதாவது காரணம் கற்பித்து புழுதி கிளப்பவும் முத்தமிழறிஞர்கள் முயல்வார்கள் என்பதால், அந்த அறிஞர்களுக்குப் புரிகிற மொழியில் எழுதிவைத்துவிட்டுத்தான் தீக்குளித்தான் முத்துக்குமார்.

திரைப்படங்களில், சகல செல்வாக்குமுள்ள வில்லன்களைத் துணிவுடன் தட்டிக்கேட்டு கான்கிரீட் மாதிரி தங்களைக் காட்டிக்கொள்ளும் ஹீரோக்கள், நிஜவாழ்க்கையில் ஆட்சியாளர்களைப் பார்த்தால் அப்பளம் மாதிரி நொறுங்கிப் போய்விடுவார்கள். இதுதான் தமிழ் சினிமா கதாநாயகர்களின் லட்சணம். நிலைய வித்வான்கள் - என்று இங்கேயிருக்கும் 2 பெரிய ஹீரோக்களுக்குப் பெயரே வைத்துவிட்டார்கள் பத்திரிகைக்காரர்கள். அந்த அளவுக்குப் போய்விட்டது கோபாலபுரத்தை வாழ்த்தி அவர்கள் பாடுகிற கோஷ்டிகானம். இப்போதும் கோபக்கார இளைஞர்களாகவே நடிக்க விரும்பும் அந்த வயதான ஹீரோக்களெல்லாம் அஞ்சிப் பதுங்க, உதவி இயக்குநராயிருந்த முத்துக்குமார் அறிவோடும் ஆண்மையோடும் குரல்கொடுத்தான். 'ஒரு பேச்சுக்கு ஒத்துக்கொள்வதென்றாலும்கூட, விடுதலைப் புலிகள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்றாலும், அப்படி ஒரு தண்டனையை வழங்கும் யோக்கியதை இந்தியாவுக்கோ இலங்கைக்கோ கிடையாது' என்று திட்டவட்டமாகத் தீர்ப்பு வழங்கினான் அவன்.

'ஜாலியன் வாலாபாக்கில் வெள்ளையன் கொன்றான் என்கிறார்களே, இவர்கள் முல்லைத் தீவிலும் வன்னியிலும் செய்வதென்ன? அங்கு கொல்லப்படும் குழந்தைகளைப் பாருங்கள், உங்கள் குழந்தைகள் நினைவு வரவில்லையா? கற்பழிக்கப்படும் பெண்களைப் பாருங்கள், உங்களுக்கு அதுபோன்ற வயதில் ஒரு தங்கையோ அக்காவோ இல்லையா' என்று நம்முடைய மனசாட்சியைப் பிடித்து உலுக்கும் முத்துக்குமார், 'அமைக்கப்படப்போகிற தமிழீழத்தை அங்கீகரிக்கிற உரிமையை மட்டுமே சர்வதேசம் மேற்கொள்ளலாமே தவிர, அது யாரின் தலைமையில் அமையவேண்டும் என்பதைத் தமிழீழ மக்கள்தான் முடிவு செய்வார்கள்' என்று நம்மை ஆளுகிற ஆல் இன் ஆல் அழகுராஜாக்களின் சட்டையைப் பிடித்து உலுக்கவும் தவறவில்லை.

மிகவும் எளிமையான சொற்கள், சிறிய சொற்றொடர்கள்... என்று - ஒரு அரசியல் ஆவணத்துக்கு இலக்கணமாய்த் திகழ்கிறது - முத்துக்குமார் என்கிற இளகிய மனத்து இளைஞன் எழுதிவிட்டுச் சென்ற காலத்தால் அழியாத கருங்கல் சாசனம். ஒவ்வொரு முறை படிக்கும்போதும் முத்துக்குமாரின் ஆண்மை தவறாத எழுத்தாளுமை நம்மை வியக்கவைக்கிறது.

பிரபாகரன் என்கிற மகத்தான தலைவனை மனப்பூர்வமாக நேசித்ததாலோ என்னவோ, பிரபாகரனைப் போல் தெளிவாகப் பேசுகிற ஆற்றல் முத்துக்குமாருக்குக் கைவந்த கலையாக இருந்திருக்கிறது. கருணாநிதி போல் மணிக்கணக்காகப் பேசி நக்கல் அடித்துக் கொண்டிராமல், சொல்லவேண்டிய செய்தியை ரத்தினச் சுருக்கமாகச் சொல்வது பிரபாகரனின் இயல்பு. ஒரு காமெடியனின் பேச்சுக்கும் கதாநாயகனின் பேச்சுக்கு இடையிலான வித்தியாசம் அது.

சரித்திரத்தில் இடம்பெற்ற சுதுமலை கூட்டத்தில் பிரபாகரன் ஆற்றிய உரை இதற்குச் சரியான உதாரணம். இந்திய அமைதி காப்புப் படையை நம்பி ஆயுதங்களை ஒப்படைப்பதாக அறிவித்தபோது, 'இந்த ஆயுதங்கள் எங்கள் மக்களைப் பாதுகாப்பதற்காக எங்களால் பயன்படுத்தப்பட்டவை. இந்த ஆயுதங்களை ஒப்படைக்கும்போது, எங்கள் மக்களின் பாதுகாப்பையும் சேர்த்தே இந்தியாவிடம் ஒப்படைக்கிறோம்' என்று பொட்டில் அடித்தமாதிரி இந்தியாவின் பொறுப்பைச் சுட்டிக்காட்டியவன் அந்த மாவீரன். அதைப் போலவே சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் கையடக்க ஆவணமாகத் திகழ்கிறது முத்துக்குமாரின் மரண சாசனம்.</p>

<p>இதைவிட வியப்புக்குரியது, மரணத் தேதியை முன்கூட்டியே தீர்மானித்திருந்த முத்துக்குமாரின் இயல்பான, நிதானமான நடவடிக்கைகள். எப்படி அது சாத்தியமாயிற்று? புரிந்துகொள்ள முடியவில்லை. ஜனவரி 29ம் தேதி தான் தீக்குளித்த இடமான சாஸ்திரி பவனுக்குப் புறப்படும்முன், தன்னுடைய நாட்குறிப்பில், கை நடுக்கமேயில்லாமல் அழகுக் கையெழுத்தில் 'இன்று என் வாழ்வில் பொன்னானதோர் நாள்' என்று முத்துக்குமார் எழுதியிருப்பதை இப்போது பார்க்கும்போதும் மனசு அதிர்ந்து அடங்குகிறது.

முத்துக்குமாரின் இறுதி ஊர்வலத்தை அறிவித்த பாதையில் செல்ல அனுமதிக்காமல் மாற்றுப்பாதையில் திருப்பிவிட்டது கருணாநிதியின் காவல்துறை. திடீரென்றுதான் திருப்பிவிட்டார்கள் என்றாலும், அந்தப் பாதையிலும், ஆயிரமாயிரம் பெண்கள் கைக்குழந்தைகளுடன் தெருவின் இருமருங்கிலும் திரண்டிருந்தனர். பெரம்பூரில் பி.எஸ்.என்.எல். அதிகாரிகள் குடியிருப்பின் முன் காத்திருந்தவர்கள், அனேகமாக மேல்தட்டு வர்க்க&nbsp; சகோதரிகள்.... அதிகாரிகளின் குடும்பத்தினர். பொது வாழ்க்கையில் ஈடுபாடு காட்டத் தயங்கும் அந்தச் சகோதரிகள், ஒரு கையில் குழந்தையுடனும், மறு கையில் மெழுகுவர்த்தியுடனும் நின்றதை இன்னும் எங்களால் மறக்கமுடியவில்லை. அவர்களுக்கிடையே முத்துக்குமார் உடலைச் சுமந்துவந்த ஊர்தி நகர்ந்து நகர்ந்துதான் செல்ல வேண்டியிருந்தது. குழந்தைகளுடன் மெழுகுவர்த்திகளை உயர்த்திப் பிடித்தபடி, அந்த இளைஞனின் உருவத்துக்கு அவர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

அந்தப் பகுதிக்கு அடுத்த பகுதி கணேசபுரம் மற்றும் வியாசர்பாடி. தெருவின் இருமருங்கிலும் குடிசைகள் மட்டுமே இருக்கிற எளியோர் பகுதி. முத்துக்குமாருக்காக அங்கேயும் காத்திருந்தார்கள் தமிழ்ச் சகோதரிகள், அனேகமாக குடிசைவாழ் சகோதரிகள். சாலையின் இருமருங்கிலும் மெழுகுவர்த்தியோடு நின்றுகொண்டிருந்தார்கள் அவர்கள். தனக்காகவோ தன் குடும்பத்துக்காகவோ இல்லாமல் ஒரு இனத்துக்காகச் செய்யப்பட்ட மகத்தான உயிர்த் தியாகம் சாதி- மத- வர்க்க எல்லைகளைக் கடந்து அனைத்துத் தரப்பு மக்களையும் மெழுகுவர்த்தி ஏந்தி நிற்கச் செய்தது.

முத்துக்குமாருக்கு அஞ்சலி செலுத்த வழியெல்லாம் திரண்டு நின்ற லட்சோபலட்சம் மக்கள்தான் தமிழகத்தின் உண்மையான முகம். அவர்களை யாரும் அழைக்கவில்லை. அவர்களாகவே, முத்துக்குமார் உடல் 3 நாட்கள் வைக்கப்பட்டிருந்த கொளத்தூரில் திரண்டார்கள், அவர்களாகவே மெழுகுவர்த்தி ஏந்தி சாலைகளில் நின்றார்கள். அன்றுவரை தான் அறிந்திராத அந்த அறிவும் ஆவேசமும் மிக்க இளைஞனுக்காக விழிகளில் நீர் பெருக்கி வழியெல்லாம் நின்றிருந்தது தமிழகம்.

இரவு 8 மணிக்கு, வியாசர்பாடியில் காத்திருந்த ஆயிரக்கணக்கான பெண்களில் ஒரு வயதான தாய், 'இருட்டுல என் பிள்ளையைப் பார்க்கமுடியலையே' என்று அவனுக்காகக் கண்ணீர் சிந்தினாளே, அது ஒரே ஒரு தாயின் கண்ணீர் இல்லை, ஒட்டுமொத்தத் தமிழகத்தின் கண்ணீர். அந்தத் தாய்தான் தமிழகத்தின் அடையாளமே தவிர, இங்கேயுள்ள துரோக அரசியல்வாதிகள் அல்ல என்பதை உலகெங்கும் சிதறிக்கிடக்கும் எங்கள் ஈழத்துச் சொந்தங்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டிய கடமை எங்கள் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது.

முத்துக்குமாரின் உடல் தகனம் செய்யப்பட்டபோது, அந்தத் திருவுடலுடன் சேர்த்து - பிரபாகரன் பெயரை உச்சரிக்கலாமா கூடாதா என்கிற அச்சத்தையும் சேர்த்தே தகனம் செய்ததே தமிழகம். சினிமா நாயகர்களின் படங்களைத் தான் பத்திரிகைகளில் போடவேண்டும் என்கிற நிலை மாறி, ஒரிஜினல் ஹீரோவான பிரபாகரன் படத்தைப் போட்டால்தான் பத்திரிகைகள் போணியாகும் என்கிற நிலை இங்கே ஏற்பட்டது.

முத்துக்குமாரின் கனவு நிறைவேறவில்லை - என்று குறைப்பட்டுக் கொள்ளும் நண்பர்கள், முத்துக்குமார் தோற்றுவிடவில்லை - என்கிற உண்மையை உணர்ந்துகொள்ளவேண்டும்.. அவன் தோல்வியாளன் இல்லை.. வெற்றியாளன். அவனது தியாகம்தான் வர்க்கபேதம் இல்லாமல் தமிழகத் தமிழர்களைத் தெருவில் திரளவைத்தது, நம் அத்தனை பேரின் அச்சத்தையும் அகற்றியது, உலகெங்கும் தமிழ் இளைஞர்களை வீதிக்கு வரவழைத்தது. 'எங்கள் தேசியத் தலைவர் பிரபாகரன்' என்று துணிவுடன் பதாகை ஏந்தவைத்தது. தாய்மண்ணுக்கான போராட்டத்தில் இளயோரும் இணைய வழிவகுத்தது.

முத்துக்குமார் உடல் தகனம் செய்யப்பட்ட மறுநாள், லண்டனில் கொட்டுகிற பனியையும் பொருட்படுத்தாமல் தேம்ஸ் நதிக்கரையில் திரண்ட இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களின் எண்ணிக்கை ஒன்றேகால் லட்சத்துக்கும் அதிகம். அதிர்ந்துபோனது லண்டன் நகர காவல்துறை. ஒரு கையில் முத்துக்குமாரின் உருவப்படத்தையும், மறுகையில் பிரபாகரன் படத்தையும் தாங்கியபடி திரண்ட அந்த இளைஞர்கள்தான், ஈழப்போராட்டம் இளையோர் கைக்கு வந்துவிட்டது என்பதற்கான முதல் அடையாளம் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. இனி எந்தக் காலத்திலாவது, யாராலாவது அந்த மண்ணுக்கான போராட்டத்தை ஒடுக்கமுடியுமா? முத்துக்குமார் என்கிற அந்த இளைஞனின் உயிர்த் தியாகம் ஒரு உரிமைப் போராட்டத்தின் வலுவைக் கூட்டிய வரலாறு இது.

முத்துக்குமார் ஒரு வீர வரலாறு. 'தம்பி நீ எந்தச் சாதி' என்று கேட்ட மருத்துவரிடம் 'தமிழ்ச் சாதி' என்று தெளிவாகப் பதிலளித்து உயிர்போகும் நிலையிலும் தமிழினத்துக்கு உயிர்கொடுத்த வரலாறு. 'பிரபாகரனைப் போல் எங்களுக்கு ஒரு தலைவனில்லையே' என்ற உண்மையை வேதனையுடன் பதிவு செய்த வரலாறு. வீழ்ந்துகிடந்த தமிழினத்துக்கு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்திய அந்த வரலாற்றை நாம் எந்தக் காலத்திலும் மறந்துவிட முடியாது...மறந்துவிடக் கூடாது.

- புகழேந்தி தங்கராஜ்

http://www.ponguthamil.com/agappakkam/agappakkamcontent.asp?sectionid=7&contentid={23B8A173-6768-4FD3-90DF-290597EB5E42}

Edited by akootha

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.