Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழீழ நாடு நிச்சயமாக மலரும்

Featured Replies

தமிழீழ நாடு நிச்சயமாக மலரும், நாடு கடந்த தமிழீழ அரசின் துணைப் பிரதமர் கூறுகிறார்

சிங்களவர்களின் ஆதிக்கத்தில் இருந்து வரும் இன்றைய சிறிலங்காவில் தமிழ் மக்களுக்காக ஒரு சுதந்திர நாட்டை உருவாக்குவதற்காக தோற்றுவிக்கப்பட்டிருக்கும் நாடு கடந்த தமிழீழ அரசு அந்நோக்கத்தில் வெற்றி பெறும் என்பதில் உலக முழுவதும் பரவியிருக்கும் தமிழீழ மக்கள் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளனர்.

நேற்று கோலாலம்பூரில் நடந்த ஒரு கூட்டத்தில் உரையாற்றிய நாடு கடந்த தமிழீழ அரசின் முதல் துணைப் பிரதமர் பேராசிரியர் இ.செல்வநாதன், “ஒரு சுதந்திர தமிழீழ நாடு உருவாக்கப்பட வேண்டும் என்ற இலட்சியத்தை நாங்கள் அடைவோம். அது வர வேண்டும், நிச்சயமாக வரும்”, என்றார்.

நாடு கடந்த தமிழீழ அரசு ஓர் அதிர்காரப்பூர்வமான அரசல்ல; வெளிநாட்டில் செயல்படும் அரசுமல்ல; ஒரு குறிப்பிட்ட நாட்டிலிருந்து செயல்படும் அரசுமல்ல. அது உலக முழுவதும் வியாபித்திருக்கிறது”, என்று செல்வநாதன் விளக்கினார்.

தமிழீழ அரசின் செயல்பாடு குறித்து மலேசியர்களுக்கு விளக்கம் அளிப்பதற்காகவும் கொடுமைகளுக்கு ஆளாகியுள்ள தமிழீழ மக்கள் தங்களுக்கென்று ஒரு சுதந்திர நாட்டை உருவாக்குவதற்காக அவர்கள் நடத்தும் போராட்டத்தின்மீது அக்கறை கொண்டுள்ள மலேசியர்களின் ஆதரவைப் பெறுவதற்காகவும் செல்வநாதன் கோலாலம்பூருக்கு வருகை மேற்கொண்டுள்ளார்.

அவருடன் நாடு கடந்த தமிழீழ அரசின் துணை வெளிவிவகார அமைச்சர் க.மாணிக்கவாசகரும் அவ்வரசின் நாடாளுமன்ற தலைவர் பொன் பாலராஜனும் வந்துள்ளனர்.

அடுத்து என்ன செய்வது?

இரண்டே நாளில் 40,000 க்கு மேற்பட்ட தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் போரில் தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர், தமிழர்களை ஆட்கொண்ட ஒரே கேள்வி, “அடுத்து என்ன செய்வது” என்பதாகும் என்று செல்வநாதன் கூறினார்.

“தோற்கடிக்கப்பட்டது சுதந்திர நாடு வேண்டும் என்ற வேட்கையல்ல. தோற்கடிக்கப்பட்டது அதனை அடைவதற்காக பயன்படுத்தப்பட்ட வழிவகைதான்”, என்பதைச் சுட்டிக் காட்டிய செல்வா, “சுதந்திர நாட்டை உருவாக்குவதற்கான எங்களுடையப் போராட்டைத் தொடர்வதற்கான புதிய பாதைகளையும் வழிவகைகளையும் தேடினோம். உலகளவில் பல அறிஞர்களும் சிந்தனையாளர்களும் ‘நாடு கடந்த அரசு’ என்ற கொள்கைக்கு வழிகாட்டினர். அவர்களில் ஒருவர் மலேசிய பினாங்கு மாநில துணை முதலமைச்சர்களில் ஒருவரான முனைவர் பி. இராமசாமி”, என்று அவர் மேலும் கூறினார்.

முனைவர் இராமசாமி நேற்றையக் கூட்டத்தில் பங்கேற்றிருந்ததோடு ஆயுதப் போராட்டத்திற்கான சரியான மாற்றான நாடு கடந்த தமிழீழ அரசிற்கு அங்கீகாரம் அளிக்க வேண்டும் என்று கோரும் பெருமக்களுடன் அவரும் சேர்ந்து குரல் கொடுத்தார். மலேசியர்கள் நாடு கடந்த தமிழீழ அரசின் இலட்சியத்திற்கு ஆதரவு வழங்க வேண்டும் என்றும் இராமசாமி கேட்டுக்கொண்டார்.

அமைதி வழியிலும் ஆயுத வழியிலும் ஒரு சுதந்திர நாட்டை உருவாக்குவதற்காக சிறிலங்க தமிழர்கள் போராடி விட்டனர். இப்போது, சட்டமைப்பு வழியைத் தேர்வு செய்துள்ளனர். அவர்கள் விரும்பும் சுதந்திர நாட்டை அவர்களுக்குப் பெற்றுத்தருவதற்காக உருவாக்கப்பட்ட வாகனம்தான் நாடு கடந்த தமிழீழ அரசு என்ற அமைப்பு என்று இராமசாமி மேலும் விளக்கம் அளித்தார்.

நாடு கடந்த தமீழ அரசை உருவாக்குவதற்காக அமைக்கப்பட்ட ஆலோசனைக்குழு தாக்கல் செய்திருந்த பரிந்துரைகளுக்கு அமெரிக்காவிலுள்ள பிலடெல்பியா, தேசிய அரசமைப்பு மையத்தில் நடந்த கூட்டத்தில் முறையாக ஒப்புதல் வழங்கப்பட்டது.

பின்னர், நியு யோர்க்கில் அக்டோபர் 2010 இல் நடைபெற்ற பேராளர்கள் கூட்டத்தில் நாடு கடந்த தமிழீழ அரசின் அரசமைப்புச் சட்டம் முறையாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. பிரிட்டீஷ் நாடாளுமன்ற முறையைப் பின்பற்றி இந்த அரசமைப்புச் சட்டம் இரு அவைகளைக்கொண்ட நாடாளுமன்றத்தை உருவாக்கியுள்ளது.

நியு யோர்க்கில் நடந்த நாடு கடந்த தமிழீழ அரசின் முதல் நாடாளுமன்ற கூட்டத்தில், நாடாளுமன்ற தலைவர் தேர்வு செய்யப்பட்டார். பிரதமர், மூன்று துணைப் பிரதமர்கள் மற்றும் ஏழு அமைச்சர்கள் அடங்கிய ஓர் அமைச்சரவையும் ஏற்படுத்தப்பட்டது என்று கனடிய நாட்டு குடிமகனும் நாடு கடந்த தமிழீழ அரசின் நாடாளுமன்ற தலைவருமான பொன் பாலராஜன் விளக்கமளித்தார்.

நாடு கடந்த தமிழீழ அரசின் செயல்பாடுகள் “வெளிப்படையாகவும் பதில் கூறும் கடப்பாடுடையதாகவும்” இருப்பது மிக அவசியமானது என்று கருதப்பட்டதால், நாடாளுமன்றம் தேர்தல் ஆணையம் மற்றும் பொதுக்கணக்காய்வாளர் அலுவலகம் போன்ற அமைப்புகளையும் உருவாக்கியுள்ளது என்று பொன் பாலராஜன் மேலும் கூறினார்.

நாடு கடந்த தமிழீழ நாடாளுமன்றம் இதர நாடுகளிலுள்ள நாடாளுமன்றங்களிலிருந்து வேறுபட்ட தனித்தன்மையைக் கொண்டது. அதன் உறுப்பினர்கள் புலம் பெயர் வாழ் தமிழ் மக்களால் தேர்வு செய்யப்பட்டவர்கள். “அதில் மலேசியர்களுக்கும் சிங்கப்பூரர்களுக்கும் இடம் உண்டு”, என்று பொன் மேலும் கூறினார்.

தென் சூடான் அங்கீகாரம் அளித்துள்ளது

நாடு கடந்த தமிழீழ அரசின் இலட்சியங்களை இதர நாடுகளின் அரசுகளுக்கு விளக்குவதும் அவற்றை ஏற்றுக்கொள்ளச் செய்யும் பணியும் அவ்வளவு சுபலமானதல்ல. நாடு கடந்த தமிழீழ அரசை அவர்கள் ஒரு பயங்கரவாத குழுவாகவே கருதினர். “நாங்கள் ஒரு பயங்கரவாத அமைப்பு அல்ல என்று அவர்களுக்கு விளக்கம் அளித்தோம். ஜனநாயக மற்றும் சட்டப்பூர்வமான வழிகளை நாங்கள் பின்பற்ற வேண்டும் நீங்கள் கூறுகிறீர்கள். அதனைத்தான் நாங்கள் செய்கிறோம். நமது ஈடுபாடு குறித்து எங்களால் முடிந்த அளவிற்கு அவர்களுக்கு எடுத்துக்கூறினோம். இப்போது ஓரளவிற்கு அவர்கள் நமது குரல்களுக்கு செவிசாய்ப்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன”, என்று ஆஸ்திரேலிய குடிமகனும் ஆஸ்திரேலியாவின் கிரிப்பித் பல்கலைக்கழகத்தின் பொருளாதார புள்ளிவிவரத் தொகுப்பியல் பேராசியருமான செல்வநாதன் கூறினார்.

செல்வநாதன் இன்னொரு முக்கியமான தகவலை வெளியிட்டார். அவர்கள் சந்தித்த இதர நாட்டு அரசாங்கத் தலைவர்கள் அனைவரும், குறிப்பாக மேல்நாட்டு அரசாங்கத் தலைவர்கள், ஒரு விசயத்தை வலியுறுத்தியதாகும். “நாங்கள் தொடர்புகொண்டு பேசிய ஒவ்வொரு அரசாங்கமும் எங்களுடைய இலட்சியம் வெற்றி பெற இந்தியாவின் இணக்கத்தை பெற வேண்டியதின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியது”, என்றார் செல்வநாதன் தெரிவித்தார்.

“நாங்கள் அதற்கு எதிராக இல்லை. இந்தியாவை நாடி அதன் ஆதரவைப் பெறுவதற்கு நாங்கள் பல வழிகளில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்”, என்று செல்வநாதன் தகவல் அளித்தார்.

நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதமர் விஸ்வநாதன் உருத்திரகுமாரன் டெலிகொன்பிரன்ஸ் வழி கூட்டத்தினரிடம் பேசியதோடு சில கேள்விகளுக்கும் பதில் அளித்தார்.

அவர் சுருக்கமாக அவரது அரசின் உடனடியான ஈடுபாட்டில் சிலவற்றை கீழ்க்கண்டவாறு கூறினார்:

1. இன அழிப்பு, மனித இனத்திற்கெதிரானக் குற்றங்கள், தமிழர்களுக்கு எதிரான போர்க் குற்றங்கள் போன்றவற்றை புரிந்தவர்களை நீதியின்முன் நிறுத்துவதற்கு கணிசமான பங்களிப்பு செய்வது.

2. தமிழ் மக்களின் பாரம்பரிய நிலங்களைப் பறித்து மக்களை இடமாற்றம் செய்ய சிறிலங்கா அரசாங்கமும் அதன் இராணுவமும் மேற்கொண்டுள்ள தீவிரமான செயல்பாடுகளைத் தடுத்து நிறுத்துவதற்கு திடமான நடவடிக்கைகள் மேற்கொள்வது.

3. இன அழிப்பிற்கு ஆளாக்கப்பட்டுள்ள தமிழ் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான ஒரே வழி சுதந்திர தமிழீழ நாடு அமைக்கப்படுவதுதான் என்ற அனைத்துலக உடன்பாட்டை உருவாக்குவதில் வெற்றி பெறுவது.

நாடு கடந்த தமிழீழ அரசின் இலட்சியத்தில் வெற்றி பெறுவதற்கு “இந்தியாவின் நிலை” முக்கியமானது என்று வலியுறுத்தப்படுவது பற்றிய கேள்விக்கு பதில் அளித்த அவர், இந்தியாவின் முக்கியத்துவம் பற்றிய நிலையை ஒப்புக்கொண்டார். அவ்விசயம் தீவிரமாக கவனிக்கப்படுவதாக கூறினார்.

எதிர்வரும் ஜூலை மாதத்தில் சுதந்திர நாடாக மலரும் தென் சூடான், நாடு கடந்த தமிழீழ அரசை அங்கீகரித்த முதல் நாடாகும். அப்புதிய நாட்டில் தமிழீழ அரசு அதன் தூதரகத்தை அமைக்க தென் சூடான் அழைப்பு விடுத்துள்ளது. மேலும், அந்நாட்டின் மேம்பாட்டு செயல்திட்டங்களில் பங்கேற்று தென் சூடானின் மேம்பாட்டிற்கு உதவுமாறு தமிழீழ அரசு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது என்று புன்னகை ததும்ப செல்வநாதன் கூறினார்.

“இது எங்களுக்கு ஒரு பெரிய திருப்பு முனையாகும்”, என்றாரவர்.

நெறிமுறைப் போர்

தமிழ் மக்களின் போராட்டம் அவர்கள் தங்களுக்குச் சொந்தமான நாட்டில் அமைதியாகவும் கௌரவமாகவும் வாழ்வதற்கான உரிமை பற்றியதாகும். அறுபது ஆண்டுகளுக்கு மேலாக அவர்கள் துன்பங்களை அனுபவித்துள்ளனர். இப்போது, புலம் பெயர் தமிழீழ மக்கள் நெறிமுறைப் போரில் இறங்கியுள்ளனர். இப்போர், மகாத்மா காந்தி சுட்டிக் காட்டியுள்ளதுபோல், ஆயுதப் போரைவிட ஆற்றல் மிக்கது. அதனை சிறிலங்கா அரசாங்கம் உணரத் தொடங்கியுள்ளது என்று நாடு கடந்த தமிழீழ அரசின் துணை வெளிவிவகார அமைச்சர் க. மாணிக்கவாசகர் கூறினார்.

கோலாலம்பூரில் பிறந்து வளர்ந்து ஆஸ்திரேலியாவின் குடிமகனாக சிவில் எஞ்சினியராக பணியாற்றும் மாணிக்கா, “புலம் பெயர் வாழ் தமிழீழ மக்கள்தான் சிறிலங்கா அரசாங்கத்திற்கு எதிரான பெரும் மிரட்டல்”, என்று சுட்டினார்.

மேலும், “அனைத்துலக சமூகம் அதன் கடந்த கால தவறுகளைத் திருத்திக்கொள்வதற்காக நாங்கள் இப்போது அதன் மனச்சாட்சியைத் தட்டிக்கொண்டிருக்கிறோம்”, என்றாரவர்.

“நாங்கள் முன்னேறிச் செல்ல வேண்டியுள்ளது. எங்களுக்கு உங்கள் ஆதரவு தேவைப்படுகிறது”, என்று மாணிக்கவாசகர் மலேசியர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

http://www.malaysiaindru.com/?p=70953

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.