Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மயானங்களை நோக்கி நீளும் இனவெறிக் கரங்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மயானங்களை நோக்கி நீளும் இனவெறிக் கரங்கள்

அண்மையில் திருகோணமலையில் இடம்பெற்ற பொதுமக்கள் ஐக்கிய முன்னணியின் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இலங்கையின் அபிவிருத்திக்குத் தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் அனைவரும் சகோதரத்துவ உணர்வுடன் ஒன்றிணைந்து பாடுபடவேண்டும் எனவும் அத்தகைய பாகுபாடற்ற ஒரு சமுதாயத்தைத் தான் உருவாக்கியுள்ளார் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

உண்மையிலேயே சமத்துவமான அடிப்படையில் பாகுபாடற்ற ஒரு சமுதாயத்தை அவர் உருவாக்கியிருந்தால் சகோதரத்துவத்துடன் அனைவரும் ஒன்றிணைந்து உழைப்பார்கள் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.

திட்டமிட்ட ஒடுக்குமுறை

திருகோணமலை பேரூந்து நிலையத்தில் தமிழ் மக்களின் பெரும் எதிர்ப்பின் மத்தியில் ஒரு புத்தர் சிலை நிறுவப்பட்டது. இப்போதும் இராணுவத்தினரால் அதற்குப் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. தமிழ் மக்களின் ஆன்மிக வரலாற்றுடன் தொடர்புபடுத்தப்பட்ட கன்னியாய் வெந்நீரூற்று இன்று தொல்பொருள் திணைக்களத்தால் உள்வாங்கப்பட்டுச் சிங்களக் குடியேற்றங்கள் மூலம் சிங்கள மயப்படுத்தப்படுகிறது.

பாரம்பரியமாக சம்பூரிலும் மூதூர் கிழக்கின் சில பகுதிகளிலும் குடியிருந்த தமிழ் மக்கள் வெளியேற்றப்பட்டது மட்டுமன்றி அவர்கள் தங்கள் சொந்தக் காணிகளில் மீளக்குடியமர அனுமதிக்கப்படவுமில்லை.

கோபாலபுரம் காணிகள் இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுவிட்டன. குச்சவெளியில் ஐயாயிரம் ஏக்கர் காணிகள் பல தேசிய நிறுவனங்களுக்கு 99 வருடக் குத்தகைக்கு விடப்படவுள்ளன.

இப்படியாக இன ஒடுக்குமுறையின் கோரத் தாண்டவம் குறைவின்றி இடம்பெற்றுவரும் திருமலை மண்ணில் நின்று பாகுபாடற்ற ஒரு சமுதாயத்தை உருவாக்கிவிட்டதாக ஜனாதிபதி தெரிவித்த கருத்து, தமிழ் மக்களைத் தொடர்ந்தும் அடிமைகளாக மாற்றுவதன் மூலமே ஒரு பாகுபாடற்ற சமூகம் உருவாக்கப்படுகிறது எனப் பிரகடனம் செய்வது போலத் தோற்றமளிக்கிறது.

இறப்பின் பின்பும் பறிக்கப்படும் உரிமைகள்

பரஸ்பர நம்பிக்கை, அன்பு, சமத்துவம் என்பன மூலமே உண்மையான சகோதரத்துவம் உருவாக முடியும்.

ஒரு இனத்தின் கடைசித்துளி இரத்தத்தையும் உறிஞ்சிக் குடித்தவாறு சகோதரத்துக்கு விடுக்கும் அழைப்பு முற்றிலும் போலியானது. இப்படியான இனிய வார்த்தைப் பிரயோகங்கள் இன ஒடுக்குமுறையை மேலும் வலுப்படுத்துவதவே முயலும்.

இப்படியாக மொழி, நிலம், கலாசாரம், பொருளாதாரம், மனித உரிமைகள் எனத் தமிழ் மக்களைப் பல்வேறு விதமான ஒடுக்கு முறைகளுக்கும் உட்படுத்தும் அரசும் அரச படைகளும், பாகுபாடின்øம சகோதரத்துவம் போன்ற பதங்களைப் பாவித்துக்கொண்டு எமது மக்களின் மரணத்தின் பின்னான உரிமைகளையும் பறிக்க முற்பட்டிருக்கின்றன.

அதாவது உயிர்வாழும் போது மட்டு மன்றி, இறந்த பின்பும் கூட சிங்கள இனவெறி கலைத்துக் கலைத்து எமது உரிமைகளைப் பறிக்க முனைகிறது.இந்த வகையிலேயே எமது மயானபூமிகள் பறிக்கப்படும் நிலை ஆரம்பமாகியுள்ளது.

அண்மையில் கிளிநொச்சி, திருமுறி கண்டி கிராம முன்னேற்றச் சங்கத் தலைவரின் தந்தையார் நடராஜா அவர்கள் காலமானார். திருமுறிகண்டி மக்களால் பல்லாண்டு காலமாகப் பயன்படுத்தப்பட்டு வந்த அவர்களுக்குரிய மயானத்தில் அவரது உடலைத் தகனம் செய்ய முற்பட்ட போது இராணுவத்தினர் அதற்கு அனுமதியளிக்க மறுத்துவிட்டனர்.

அந்த மயானம் உட்படப் பல பொதுமக் களின் காணிகளும் இராணுவக் குடியிருப்புக்களை அமைக்கும் நோக்குடன் படையினர் வசப்படுத்தப்பட்டு விட்டன. இதன் காரணமாக அவ்வுடல் ஆறு கிலோ மீற்றர் தூரம் கொண்டு செல்லப்பட்டு இன்னொரு கிராமமான அறிவியல் நகரி லேயே தகனம் செய்யப்பட்டது.

சில மாதங்களுக்கு முன்பு மணல் ஏற்றும்போது சாந்தபுரத்தைச் சேர்ந்த ஒரு இளம் குடும்பத்தவர் மரணமடைந்தார். அவரது சடலத்தைச் சாந்தபுரம் மயானத்தில் எரிக்க அனுமதிக்கப்படவில்லை. பின்பு பொதுமக்கள் நடத்திய போராட்டம் காரணமாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் எடுத்த பெரும் முயற்சியின் காரணமாகவும் பூதவுடல் சாந்தபுரம் சுடலையில் தகனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது.அண்மையில் விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் தயார் பார்வதியம்மாள் மரணமடைந்த போது மரணச் சடங்கில் கலந்து கொள்ளச் சென்றவர்கள் மீது பலவிதமான அச்சுறுத்தல்களும் நெருக்கடிகளும் படையினரால் மேற்கொள்ளப்பட்டன.

அதுமட்டுமன்றி அவரைத் தகனம் செய்த சிதையின் மேல் நாய்கள் சுடப்பட்டு போடப்பட்டிருந்தன.

ஒருவர் தகனம் செய்யப்பட்டால் அவரது சாம்பல் எடுக்கப்பட்டு, அதற்கான சமயச் சடங்குகள் நடத்தப்பட்டு, இறுதியில் கடலிலோ அல்லது ஓடும் நீரிலோ கரைப்பது இந்துக்களின் மரபார்ந்த ஒரு நடைமுறையாகும். அதன் மூலம் அந்த ஆத்மா சாந்தியடையும் என்பது எமது மக்களின் மரபு சார்ந்த நம்பிக்கை.

ஆனால் இறந்தவரின் சிதைகூடச் சிதைக்கப்பட்டுக் கேவலப்படுத்தப்பட்டு அதற்கான சடங்கைக் கூட சரியாகச் செய்ய முடியாதவாறு கறைபடுத்துமளவுக்கு இனவெறியின் அநாகரிகம் கொழுந்துவிட்டு எரிந்துள்ளது.

அதாவது உயிருடன் இருக்கும்போது மட்டுமன்றி இறந்த பின்பும் தமிழ் மக்களின் உரிமைகளைப் பறிப்பதில் இன ஒடுக்குமுறை பல முனைகளிலும் தீவிரம் காட்டி வருகிறது.

அரசியலும் மாவீரர் துயிலகங்களும்

தமிழ் மக்களின் உரிமைப் போரில் உயிர்நீத்த போராளிகள் அதற்கென ஒதுக்கப்பட்ட இடங்களில் புதைக்கப்பட்டு நினைவுக்கற்கள் நடப்பட்டு மாவீரர் துயிலும் இல்லங்கள் என்ற பேரில் புனிதமாகவும் கௌரவமாகவும் அழகாகவும் பேணிப் பாதுகாக்கப்பட்டு வந்தன. அவர்கள் இறந்த தினத்திலும் மாவீரர் நாளிலும் இந்த மாவீரர்களின் பெற்றோர்களும் உறவினர்களும் கூடி, மலர்தூவி, சுடரேற்றி, அஞ்சலி செய்து மன ஆறுதல் அடைவார்கள்.

அவ்விடத்தைத் தாண்டிச் செல்லும் பொதுமக்களும் அவற்றுக்கு மரியாதை செலுத்திச் செல்லுமளவுக்குத் தமிழ் மக்கள் அவற்றைப் புனிதமாகப் பேணி வந்தனர். போர் நிறுத்த காலங்களில் இங்கு வந்த பல சிங்கள மக்களும் மனமுருகிக் கண்ணீர் விட்டு அஞ்சலி செலுத் திய நிகழ்வுகளும் இடம்பெற்றதுண்டு.

இன்று அவை இடித்து அழிக்கப்பட்டு விட்டன. எந்தவித எச்சமுமே இருக்கக் கூடாது என்ற வகையில் அப்பிரதேசங்கள் உழுது தரைமட்டமாக்கப்பட்டன.ஒரு எதிரி நாட்டுப் படை வீரன் இறந்தால்கூட அவனை இராணுவ மரியாதையுடன் புதைப்பது ஒரு சர்வதேச நியதி. இங்கோ போராளிகளின் கல்லறைளே அழிக்கப்பட்டு இலங்கை இராணுவம் தன் இனவெறி அநாகரிகத்தை நிலைநாட்டியுள்ளது. அதன் மேலேயே தனது படைத் தலைமையகத்தைக் கட்டி, தமது வெறியின் அளவை வலுப்படுத்தியுள்ளது.

பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு அஞ்சலி செலுத்தும் உரிமை கூடத் தமிழ் மக்களிடமிருந்து பறிக்கப்படுகின்றது என்றால் அது பாகுபாடின்மையின் வெளிப்பாடா? அல்லது அதுதான் சகோதரத்துவமா?அதேவேளையில் கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் அழிக்கப்பட்டு அங்கு 51 ஆவது படையணியின் தலைமைச் செயலகம் அமைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி வடபகுதியெங்கும் புத்தர் சிலைகளும் இராணுவ வெற்றிச் சின்னங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

அதாவது தோற்கடிக்கப்பட்ட இனத்தின் மீதான கடும் ஒடுக்குமுறையின் வெளிப்படாக, அடிமைப்படுத்தப்பட்டதன் மமதையாக இவை தோற்றம் காட்டப்படுகின்றன. இது ஆட்சியாளர்களின் இன ஒடுக்குமுறை மட்டுமன்றி முழுச் சிங்கள இனத்தையும் இனவெறி மாயைக்குள் தொடர்ந்தும் வைத்திருக்கும் ஒரு மூன்றாம்தர அரசியலுமாகும்.

சிங்கள இனத்துக்கென ஒரு தனித்து வமான பண்பாடு உண்டு. வீதியில் ஒரு பிரேத ஊர்வலம் வந்தால் அது தெரியாதவர்களுடையதாக இருந்தால் கூட நின்று மரியாதை செலுத்திச் செல்லும் பண்பாடு உடையவர்கள் அவர்கள்.

அதுமட்டுமன்றி அவர்கள் பின்பற்றும் பௌத்த மதம்கூடத் தர்மம், காருண்யம், அன்பு போன்றவற்றை வலியுறுத்துவதாகவும் பாவ புண்ணியங்கள் தொடர்பான தெளிவான போதனைகளைக் கொண்டதுமாகும்.

எல்லாளச் சக்கரவர்த்தியைத் தோற்கடித்துக் கொன்ற துட்டகைமுனு எல்லா ளன் நினைவாக ஒரு சமாதி அமைத்து எல்லோரும் அதற்கு வணக்கம் செய்து செல்லவேண்டும் எனக் கட்டளையிட்டிருந்தான். அக்காலங்களில் எதிரிகூட இறந்துவிட்டால் மரியாதை என்ற பண்பாடு சிங்கள மக்கள் மத்தியில் நிலவியமையை அறியமுடிகிறது.

ஆனால் இன்று இனவெறியர்களாகத் தம்மை இனம்காட்டும் ஜாதிக ஹெல உறுமயவைச் சேர்ந்த புத்திஜீவி ஒருவன், அது எல்லாளனின் சமாதி அல்ல என்ற பிரசாரத்தை ஆரம்பித்தனர். ஆனால் மகாவம்சத்தில் இருந்த தகவல்கள்

காரணமாக அவர்களின் கீழ்த்தரமான ஆசை வலுவிழந்துவிட்டது.

ஆனால், இன்றைய ஆட்சியாளர்களும் சரி, அவர்களை வழி நடத்தும் பேரினவாதிகளும் சரி சிங்களச் சமூகத்தின் மேன்மையான பண்பாடுகளை அந்த மக்கள் மத்தியிலிருந்து மறக்கடித்து அவர்களை இனவெறிப் போதையிலேயே கட்டி வைக்கும் வகையில் திட்டமிட்டுக் காய்களை நகர்த்துகின்றனர்.இன்று எதிர்க்கட்சிகளாக விளங்கும் ஐக்கிய தேசியக் கட்சி, ஜே.வி.பிகூட மறைந்த தமிழ் மக்களுக்கும் போராளிகளுக்கும் அவர்களின் மயானங்களுக்கும் இழைக்கப்படும் அநீதிகளைக் கண்டுகொள்வதில்லை. போர் வெற்றியின் நாயகன் சரத்பொன்சேகா என்றும் அவரைச் சிறையில் தள்ளிவிட்டு அந்த மகுடத்தை மஹிந்த சகோதரர்கள் சூடிக் கொண்டதையிட்டே எதிர்ப்புக் குரல் எழுப்புகின்றனர்.

தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டம் இராணுவ ரீதியாகத் தோற்கடிக்கப்பட்டமையைப் பயங்கரவாத்துக்கு எதிரான வெற்றி என்பதாக அவர்களும் ஏற்றுக் கொள்கின்றனர்.எனவே அழிக்கப்பட்ட மாவீரர்களின் கல்லறைகள் பயங்கரவாதிகளின் நினை வுச் சின்னங்கள் என அவர்கள் அங்கீகரிப்பதால் அவைக்கு ஏற்படுத்தப்பட்ட அநீதி பற்றி அவர்கள் வாய்திறப்பதில்லை. இவ்வாறே மயானங்கள் உட்படத் தமிழ் மக்களின் நிலங்கள் ஆக்கிரமிக்கப்படும்போது அது பயங்கரவாதிகள் சிங்களத்திடமிருந்து கைப்பற்றிய பகுதிகளை மீட்பதாகவே கருதுகின்றனர்.

இவ்வாறே ஆட்சியாளர்களும் சரி, எதிர்க்கட்சிகளும் சரி இனவாதச் சேற்றில் நின்றே தங்கள் அரசியலை முன்கொண்டு செல்கின்றனர்.

அவர்கள்தான் அப்படியென்றால் தமிழராகப் பிறந்து ஆயுதப் போராட்டம் முதல் நாடாளுமன்ற அரசியல்வரை முழ்கி எழுந்த சிலரும் இந்த அநாகரிக, மனிதாபிமானமற்ற தமிழ் மக்களின் இதயங்களையே வெட்டிப் பிளக்கிற நடவடிக்கைகளுக்கு எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காதது மட்டுமன்றி மறைமுக ஆதரவை வழங்கியும் வருகின்றனர்.

இவர்களின் படுமோசமான, வெட்கமற்ற நிலைப்பாடு அரசின் இனவாத நடவடிக்கைகளுக்குப் பயங்கரவாத ஒழிப்பு முலாம் பூசி தமிழ் மக்களை மேலும் ஏறி மிதிக்கும் செயற்பாடுகளாகும்.

போராளிகளின் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை இழந்த சோகத்திலும் தங்கள் பிள்ளைகளின் நினைவிடங்கள் அழிக்கப்பட்ட வேதனையிலும் வெதும்பிக் கொண்டிருக்க, அவர்களைப் பயங்கரவாதிகள் என இழிவுபடுத்துவது எவ்வளவு கொடுமையானதும் கேவலமானதுமாகும்.ஜேர்மன் சர்வாதிகாரி ஹிட்லராலும் அவனின் படையினராலும் 60 லட்சம் யூதர்கள் நச்சுவாயுக்களாலும் கனரக வாகனங்களால் நெரித்தும் கொல்லப்பட்டனர். அவர்கள் எச்சங்கள் கூட எஞ்சியிருக்கக் கூடாது என்பதற்காக அவர்களின் சடலங்கள் பெரும் எரி உலைகளில் போட்டு எரிக்கப்பட்டுச் சாம்பல் மேடுகளாக்கப்பட்டன.

அப்போது 60 லட்சம் பேர் அழிக்கப்பட்டு அவர்களின் அடையாளங்கள் கூட அழிக்கப்பட்டன. ஆனால் அச்சம்பவங்கள் வரலாறாக இன்றும் நிலைபெற்று நின்று ஒவ்வொரு ஜேர்மனியனையும் தலைகுனிய வைக்கின்றன.

ஆனால் அன்று புலம்பெயர்ந்து உயிர்தப்பிய யூதர்கள் தங்கள் வரலாற்றை ஒரு கணமும் மறந்துவிடாது, உழைத்து இஸ்ரேல் என்ற தனிநாடாக நிமிர்ந்து நிற்கின்றனர்.

அவர்கள் இன்று உலக விடுதலைப் போராட்டங்களின் எதிரியாக மாறிவிட்டனர் என்பது வேறு விடயம்.

எந்த எச்சமும் இருக்கக் கூடாது என்பதற்காகச் சாம்பல் மேடாக்கப்பட்டவர்கள், இன்று பலம் வாய்ந்த ஒரு நாடாக மாறிவிட்டனர் என்பதுதான் நாம் கவனிக்க வேண்டிய விடயம். எமது மயானங்கள் ஆக்கிரமிக்கப்படுவதன் மூலமும் மாவீரர் துயிலும் இல்லங்களை அழிப்பதன் மூலமும் இறந்த பின்பும் கூட எமது இனத்தைப் பழிவாங்கும் கேவலமான அரசியல் மூலம் நிச்சயமாக வரலாற்றை மறைக்கவும் முடியாது. தமிழ் மக்களின் உரிமை வேட்கையை அழிக்கவும் முடியாது.இதனால் அரசும் அரச படைகளும் பெறக்கூடிய ஒரே பலன் என்னவென்றால் வரலாற்றின் பக்கங்களில் இழிவுக்குரிய விதத்தில் தங்களைப் பதிவு செய்வது மட்டும்தான்.

நன்றி - உதயன் இணையம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.