Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஜப்பான் அணு மின் நிலைய விபத்து – 1-3 part

Featured Replies

ஜப்பானில் ஃபுகுஷிமா 1 அணு மின் நிலையத்தில் நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் ஏற்பட்ட விபத்தும் அதைத் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கும் கதிர்வீச்சு நெருக்கடி பற்றி தமிழ் பதிவுலகில் யாரும் எழுதியதாக எனக்குத் தெரியவில்லை.

இணையம், செய்தித்தளங்கள் மற்றும் ஆங்கில அறிவியல் பதிவுகள் பலவற்றிலிருந்து சேகரித்த தகவல்களைக் கொண்டு என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை எளிதாகப் புரியும்படி தமிழில் எழுதலாம் என்று இந்த முயற்சி.

முதலில் இந்த இடம் எங்கே இருக்கிறது என்று பார்ப்போம்…

ஃபுகுஷிமா அணு மின் நிலையங்கள் ஜப்பான் நாட்டின் மிகப் பெரிய தீவான ஹொன்ஷூ தீவின் வடகிழக்குக் கடற்கரையில் உள்ளன.

மார்ச் 11-ம் தேதி ஜப்பான் நாட்டின் வடகிழக்குக் கடற்கரையிலிருந்து சுமார் 130 கி.மீ. தொலைவில் ஆழ்கடலில் மையம் கொண்டு 8.9 – 9 ரிக்டர் எண்மதிப்பு கொண்ட மிகப் பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து ஏற்பட்ட ஆழிப்பேரலை (சுனாமி) ஜப்பான் நாட்டின் வடகிழக்குக் கடற்கறைப் பகுதிகளில் பேரழிவு ஏற்படுத்தியது.

ஃபுகுஷிமா அணு மின் நிலையத்தில் நடந்திருக்கும் விபத்திற்கு முழு பொறுப்பும் இந்த ஆழிப்பேரலைதான். அதைப் பார்க்கும் முன் இன்னொரு சின்ன விளக்கம்.

செய்திகளில் பல்வேறாக ஃபுகுஷிமா டாய் இச்சி (Fukushima Dai-ichi) அல்லது ஃபுகுஷிமா 1 என்று இந்த நிலையத்தின் பெயர் வருகிறது. ஃபுகுஷிமா என்ற பெயரில் இரண்டு அணு மின் நிலையங்கள் உள்ளன. விபத்து நடந்திருப்பது ஃபுகுஷிமா ஒன்றாம் நிலையத்தில் (டாய் இச்சி என்றால் ஜப்பானிய மொழியில் ஒன்று – விக்கிப்பீடியாவில் படித்தேன்). இதற்கு சுமார் 11 கி.மீ. தெற்கே ஃபுகுஷிமா இரண்டாம் நிலையம் உள்ளது (Fukushima Dai-ni; டாய் நி = இரண்டு).

ஃபுகுஷிமா ஒன்றாம் நிலையத்தில் ஆறு (6) அணு உலைகள் உள்ளன அதில் நான்கு பழைய உலைகள் (Nuclear Plants 1, 2, 3 & 4) அருகருகே இருக்கும் ஒரு தொகுப்பாகவும், இரண்டு புது உலைகள் (Nuclear Plants 5 & 6) சற்றே தள்ளியும் அமைந்துள்ளன.

ஃபுகுஷிமா இரண்டாம் நிலையத்தில் நான்கு (4) அணு உலைகள் உள்ளன. இந்த நிலையத்தில் இப்பொழுது குழப்பம் ஒன்றும் இல்லை.

சுமார் இரண்டு கோடி மக்கள் வாழும் டோக்கியோ நகரப் பகுதியிலிருந்து இந்த அணு மின் நிலையம் சுமார் 225 கி.மீ. தொலைவில்தான் உள்ளது.

நான் பார்த்த பல ஆங்கில வலைதளங்களில் எளிதாகவும் சாமானியருக்குப் புரியும்படியாகவும் இருந்தது நில இயல் (geology) துறையில் முனைவர் பட்டத்திற்கு படித்துக்கொண்டிருக்கும் அமெரிக்கப் பதிவர் ஈவ்லின் மெர்வைன் தன் வலைப்பூவில் (Georneys by Evelyn Mervine) வெளியிட்டிருக்கும் தொடர் பதிவுகள்தான். ஈவ்லின் அவர் தந்தையை தொலைபேசியில் பேட்டி கண்டு அந்த உரையாடல்களை தொடர் பதிவுகளாக வெளியிட்டுள்ளார். ஈவ்லினின் தந்தை மார்க் மெர்வைன் ஒரு அணுமின் துறை பொறியாளர், பல வருடங்கள் அமெரிக்க கடற்படையில் அணுமின் சக்தியில் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களில் பணியாற்றி ஓய்வுபெற்று, பின்னர் தனியார் துறை அணு உலைகளில் பல ஆண்டுகள் பணியாற்றியவர்.

இடம் எங்கே என்று பார்த்தாயிற்று. இனி அணு மின் நிலையம் என்றால் என்ன என்றும் இந்த நிலையத்தின் செயல்பாடு பற்றியும் பார்ப்போம்.

மிக எளிமையாகச் சொன்னால் அணுசக்தியைக் கொண்டு மின்சாரம் உற்பத்தி செய்யும் இடம்தான் அணு மின் நிலையம்.

மின்உற்பத்தி பல வகையாகச் செய்யலாம். உதாரணத்திற்கு மேட்டூர் அணையில் நீராற்றலை வைத்து மின்உற்பத்தி செய்கிறார்கள். வெப்ப ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய பொருட்களை (உம். நிலக்கரி) எரித்து, அதனின்று வெளிப்படும் வெப்பத்தினால் நீராவியை உற்பத்தி செய்து, நீராவி உருளையை (steam turbine) இயக்கி, அதனுடன் இணைக்கப்பட்டுள்ள மின் இயற்றியிலிருந்து (generator) மின் சக்தியை உற்பத்தி செய்வது அனல்மின் நிலையம் ஆகும்.

நிலக்கரியை எரித்து நீராவி உற்பத்தி செய்வதற்கு பதிலாக அணுக்கருப் பிளவிலிருந்து (nuclear fission) வெளியாகும் அதீத வெப்பத்தை வைத்து நீராவி உற்பத்தி செய்வதே அணு மின் நிலையம்.

அணுக்கருப் பிளவு ஏற்படும் இடத்தை அணு உலை (Nuclear Reactor) என்கிறோம். இதை வைத்து மின்உற்பத்தி செய்யும் இடத்தை அணு மின் நிலையம் (Nuclear Power Plant/Station) என்கிறோம். அணு உலைகளில் பல வகைகள் உள்ளன அதில் கொதிநீர் உலைகள் (Boiling Water Reactor) பழைய தொழில்முறை வகையைச் சார்ந்தவை.

விபத்துக்குள்ளான ஃபுகுஷிமா 1 அணு மின் நிலையத்தில் இருக்கும் ஆறு அணு உலைகளுமே கொதிநீர் உலைகள்தான். அவை அனைத்துமே 1971-லிருந்து 1979-க்குள் தொடங்கப்பட்டன, அதாவது நாற்பது வருடங்களுக்கு முன்பான தொழில்நுட்பத்தைச் சார்ந்தவை.

அணுசக்தி மூலப்பொருட்களை சிறு குண்டு வடிவத்தில் (fuel pellets) ஜிர்க்கோனியத்தால் (Zirconium) ஆன சன்னமான நீளக் குழாய்களில் (fuel rod; பென்சில் தடிமன், நீளம் சுமார் 12 அடி) நிரப்பி, சில நூறு குழாய்களை ஒன்றாகச் சேர்த்து வைத்திருப்பார்கள் (fuel assembly – மூலப்பொருள் தண்டு). சில நூறு தண்டுகளை மூலப்பொருள் மையமாக (fuel core) அணு உலையின் அழுத்த அறையில் வைத்திருப்பார்கள் (pressurrized reactor vessel).

மூலப்பொருள் மையத்தில் அணுக்கருப் பிளவு தொடங்கிவிட்டால் அது சங்கிலித்தொடர் வினையாகத் தொடரும் (fission chain reaction). கருப்பிளவின் விளைவாக வெளிப்படும் அதீத வெப்பத்தால் மையத்தைச் சுற்றி ஓடிக்கொண்டிருக்கும் நீர் கொதித்து நீராவியாகி மேலேழும்பி வெளியே சென்று நீராவிச்சுழலியைச் சுழற்றும். கருப்பிளவுத் தொடர்வினையை நிறுத்த வேண்டும் என்றால் கட்டுப்படுத்தும் தண்டுகளை மூலப்பொருள் தண்டுகளுக்கு மத்தியில் பதிக்க வேண்டும்.கட்டுப்படுத்தும் தண்டுகளை மோட்டார்கள் மூலம் ஏற்றி மூலப்போருள் தண்டுகளின் நடுவே நிறுத்தினால் சில நொடிகளில் கருப்பிளவுத் தொடர்வினை நின்றுவிடும்.

இங்கே நாம் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் ஒன்று உண்டு. தொடர்வினை நின்றுவிட்டாலும், மூலப்பொருளிலிருந்து வெப்பம் வெளியாவது உடனடியாக நிற்காது. கருப்பிளவின் விளைவுப் பொருள்களில் (radioactive fission products – கிளர்மின் விளைவுகள்) தொடர்ந்து கதிரியக்கச் சிதைவு (radioactive decay) ஏற்பட்டுக் கொண்டிருப்பதால் வெப்பம் தொடர்ந்து வெளியாகிக் கொண்டிருக்கும். மூலப்பொருள் மையத்தில் வெப்பம் முழுவதுமாகத் தணிவதற்கு பல நாள்கள் ஆகும். அதனால் தொடர்வினையை நிறுத்திவிட்டாலும் நீர் சுற்றோட்டத்தை நிறுத்தமாட்டார்கள். மூலப்பொருள் மையத்தில் வெப்பம் முழுவதுமாகத் தணியும் வறை நீர் சுற்றோட்டம் தொடரவேண்டும். நீர் சுற்றோட்டப் பம்புகளுக்கும் நிலையத்தில் உள்ள மற்ற மின்சாரத் தேவைகளுக்கும், மின்வாரிய க்ரிட்டிலிருந்துதான் மின்சாரம் வரும். அவசரத் தேவைக்கு டீசலில் ஓடும் மின் இயற்றிகள் உண்டு.

இந்த இடத்தில்தான் ஃபுகுஷிமாவில் பிரச்னை ஆனது.

நிலநடுக்கம் நடந்த அன்று ஃபுகுஷிமா 1 நிலையத்தில் மூன்று உலைகள்தான் செயல்பட்டுக்கொண்டிருந்தன.உலைகள் 4, 5, 6 பராமரிப்பிற்காக நிறுத்திவைக்கப்பட்டிருந்தன. செயல்பாட்டில் இல்லாத உலை 4-ல் மூன்று மாதங்களுக்கு முன் (நவம்பர் 2010-ல்) மூலப்பொருள் முழுவதுமாக வெளியே எடுக்கப்பட்டிருந்தது (இதன் முக்கியத்துவத்தை பின்னால் பார்ப்போம்).

மார்ச் 11, வெள்ளிக்கிழமை மதியம் சுமார் 2:45 மணிக்கு நிலநடுக்கம் நடந்த சில நொடிகளிலேயே மூன்று உலைகளிலும் செயல்பாடு நிறுத்தப்பட்டது. இது அவர்களின் தானியங்கி அவசர கால பாதுகாப்பு நடைமுறைப்படி சரியாக நடந்தது. அன்று ஏற்பட்ட பயங்கரமான நிலநடுக்கத்தால் அந்தப் பகுதியின் மின்வாரிய க்ரிட் செயலிழந்து போயிருந்தது. மின் தட்டுப்பாடு ஏற்படாமல் அவசர கால டீசல் மின் இயற்றிகள் செயல்பட ஆரம்பித்தன.

ஜப்பானில் நிலநடுக்கங்கள் குறித்த தகவற்சேர்கை ஆரம்பித்த காலத்திலிருந்து இதுவரை இல்லாத மிகக் கடுமையான நிலநடுக்கம் இது. உலகத்தின் ஐந்து அதிபயங்கர நிலநடுக்கங்களில் ஒன்றாக இதைச் சொல்கிறார்கள். இந்த பயங்கர நிலநடுக்கத்தால் ஃபுகுஷிமா 1 நிலையத்தின் கட்டிடங்களுக்கோ இயந்திரங்களுக்கோ சேதாரம் ஒன்றுமே ஏற்படவில்லை. இதற்கு ஜப்பானில் அணு மின் நிலையங்கள் மட்டுமல்லாமல் வேறு எந்த கட்டிடம் கட்டுவதென்றாலும் கடைபிடிக்கப்படும் கண்டிப்பான விதிமுறைகளுக்குத்தான் நன்றி சொல்லவேண்டும்.

நிலநடுக்கம் ஏற்படுத்திய ஆழிப்பேரலை சுமார் அரை மணி நேரம் கழித்து ஃபுகுஷிமா 1 நிலையத்தைத் தாக்கியது. இந்த பயங்கரப் பேரலைத் தாக்குதலில் 5 உலைகளுக்கான அவசரகால டீசல் மின் இயற்றிகள் சேதமடைந்தன. (ஓரிரு நாள் கழித்து வந்த செய்திகளில் ஆறாம் உலையின் மின் இயற்றி மட்டும் தப்பித்தது என்று சொன்னார்கள்.)

part2-

ஃபுகுஷிமாவில் சென்ற வாரம் வெள்ளிக்கிழமை (மார்ச் 11) பிற்பகல் தொடங்கி இன்று வரை தொடர்ந்துகொண்டிருக்கும் நிகழ்வுகள் பற்றி முக்கியமான விளக்கத்தை (தமிழ்ப் பதிவுலகில் பரவலாக டிஸ்கி என்று சொல்லப்படும் disclaimer) முதலில் பார்க்கலாம்.

எட்டு நாள்களாக நடந்து கொண்டிருக்கும் இந்த நெருக்கடியைப் பற்றி விரிவாகவும் விளக்கமாகவும் தகவல்களைத் தெரிந்து கொள்ள சரியான செய்தி மூலங்கள் இல்லை என்பதே உண்மை. ஜப்பான் அரசு கொடுக்கும் செய்தி அறிக்கைகள் மற்றும் சில சர்வதேச அணுசக்தி அமைப்புகள் கொடுக்கும் செய்திகள், விளக்கங்களையும் வைத்துத்தான் எல்லா ஊடகங்களும் செய்தி வெளியிட்டுக்கொண்டிருக்கின்றன. யார் சரியான தகவல்கள் கொடுக்கிறார்கள் என்று கண்டுபிடிக்க சாமானியரால் முடியாது. இந்நிலையில் இங்கே நான் பகிர்ந்துகொள்ளும் தகவல்கள் சரியானவைதான் என்று என்னால் உறுதியளிக்க முடியாது.

இந்தப் பதிவுத்தொடரின் முதல் பாகத்தில் “ஃபுகுஷிமா இரண்டாம் நிலையத்தில் நான்கு (4) அணு உலைகள் உள்ளன. இந்த நிலையத்தில் இப்பொழுது குழப்பம் ஒன்றும் இல்லை.” என்று எழுதியிருந்தேன். “இப்பொழுது குழப்பம் இல்லை” என்பது உண்மை. ஆனால் சுனாமி தாக்கியதில் அங்கேயும் பிரச்சனை ஆனது. இரண்டு நிலையங்களையும் சுனாமியிலிருந்து பாதுகாக்க கடற்கரையிலிருந்து சற்று தள்ளி கடலில் சுவர் எழுப்பியிருந்தார்கள். இருபது அடிக்குக் குறைவான பேரலைகள் இந்தச் சுவர்களைத் தாண்டி நிலையத்தைத் தாக்க முடியாது. ஆனால் அன்று தாக்கிய பேரலைகள் முப்பது அடிக்கும் மேலான உயரத்தில் இருந்ததால் சுவர்களைத் தாண்டி இரண்டு நிலையங்களையும் தாக்கின. ஃபுகுஷிமா இரண்டாம் நிலையத்தில் குளிர்ந்த நீர் கொண்டுவரும் பம்புகள்

பேரலை தாக்குதலால் பாதிக்கப்பட்டு செயலிழந்தன. இதனால் அங்கே உள்ள நான்கு உலைகளிலும் வெப்பத்தைத் தணிக்கமுடியவில்லை. ஆனால் 48 மணி நேரத்தில் மாற்றுப் பம்புகளை வைத்து பிரச்சனை பெரிதாகாமல் தடுத்துவிட்டார்கள்.

இந்த எட்டு நாள்களில் நடந்த சம்பவங்களை காலக்கோடுகளாக விக்கிப்பீடியாவில் போட்டிருக்கிறார்கள். அங்கே இருக்கும் அத்தனை விபரங்களையும் முழுமையாக என்னால் விளக்க இயலாது. அறிந்துகொள்ள விரும்புவோர் அங்கே பார்த்துக்கொள்ளுங்கள்.

CNN வலைத்தளத்தில் விக்கிப்பீடியாவை விட எளிமையாக இருக்கிறது. முக்கியமான சிலவற்றை மட்டும் நான் விவரிக்கிறேன்.

[முதல் பாகத்திலிருந்து தொடர்ச்சி] மார்ச் 11, வெள்ளிக்கிழமை மதியம் சுமார் 2:45 மணிக்கு நிலநடுக்கம் நடந்த சில நொடிகளிலேயே மூன்று உலைகளிலும் (units 1, 2, 3) செயல்பாடு நிறுத்தப்பட்டது. இது அவர்களின் தானியங்கி அவசர கால பாதுகாப்பு நடைமுறைப்படி சரியாக நடந்தது. அன்று ஏற்பட்ட பயங்கரமான நிலநடுக்கத்தால் அந்தப் பகுதியின் மின்வாரிய க்ரிட் செயலிழந்து போயிருந்தது. மின் தட்டுப்பாடு ஏற்படாமல் அவசர கால டீசல் மின் இயற்றிகள் செயல்பட ஆரம்பித்தன. மூலப்பொருள் மையத்தில் தொடர்வினை நிறுத்தப்பட்டபின் வெளியாகும் வெப்பத்தைத் தணிக்க நீர் சுற்றோட்டப் பம்புகளை இந்த மின் இயற்றிகள் செயல்படுத்திக்கொண்டிருந்தன.

அப்பொழுதே இரண்டு உலைகளில் (1 & 2) வெப்பத்தைக் குறைப்பதில் பிரச்சனை இருப்பதாக இந்த நிலையத்தை இயக்கும் டோக்கியோ மின் வாரியம் (Tokyo Electric Power Company, TEPCO) மேலதிகாரிகளுக்கு தகவல் அனுப்பியிருக்கிறார்கள். நிலநடுக்கம் ஏற்படுத்திய ஆழிப்பேரலை சுமார் அரை மணி நேரம் கழித்து ஃபுகுஷிமா 1 நிலையத்தைத் தாக்கியது. இந்த பயங்கரப் பேரலைத் தாக்குதலில் 5 உலைகளுக்கான அவசரகால டீசல் மின் இயற்றிகள் சேதமடைந்தன. ஆறாம் உலையின் மின் இயற்றி மட்டும் சேதமின்றித் தப்பித்தது என்றும் தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டிருந்தது என்றும் ஓரிரு நாள் கழித்து வந்த செய்திகளில் தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து சில மணி நேரங்களுக்கு நெருக்கடி நிலை மின்கலங்களைக் கொண்டும் (emergency battery backup), “mobile power units” – நகர்த்தக்கூடிய மின் இயற்றிகளைத்தான் (portable generators) வைத்து உலைகள் 2, 3-ல் ஓரளவு நிலைப்படுத்தியிருக்கிறார்கள் (stabilized). ஜப்பான் ராணுவம் நிலையத்திற்கு மின்கலங்களைக் (batteries) கொண்டு சென்றதாகவும் செய்திகள் வந்தன. ஆனால் உலை 1-ல் நிலைமை மோசமாகிக்கொண்டிருந்தது.

ஜப்பான் அரசின் அணுசக்தி மற்றும் தொழில்துறை பாதுகாப்பு நிறுவனத்தின் நெருக்கடி நிலை தலைமை அலுவலகம் (Emergency Headquarters of the Nuclear & Industrial Safety Agency – NISA) அந்நாட்டில் உள்ள ஐம்பத்தைந்து அணு உலைகளின் நிலவரத்தைக் கண்காணிக்க ஆரம்பித்தது.

அன்று மாலை ஜப்பான் அரசு அணு சக்தி அவசரநிலை அறிவித்து ஃபுகுஷிமா 1 நிலையத்திற்கு மூன்று கி.மீ. சுற்றளவில் உள்ள மக்களை வெளியேற்றவும் மூன்றிலிருந்து பத்து கி.மீ. சுற்றளவில் உள்ள மக்களை வீடுகளுக்கு உள்ளேயே இருக்கும்படியும் ஆணை பிறப்பித்தது. 1-ம் உலையில் வெப்பத்தைத் தணிக்க முடியாததால் அழுத்தம் சாதாரணமாக இருப்பதைவிட இரண்டு மடங்கிற்கும் மேலாக அதிகரித்திருப்பதாகவும், நிலைமை இன்னும் மோசமாகக்கூடும் என்றும் TEPCO நிறுவனம் அறிவித்தது. கதிரியக்கக் கசிவு (radioactive leak) இருப்பதாக அறிவிப்பு எதுவும் கொடுத்ததாகத் தெரியவில்லை.

சில ஊடகங்களில் நிலையத்திற்கு அருகில் வாழும் இருபத்தி இரண்டு பேருக்குக் கதிரியக்கக் கசிவுத்தாக்கம் (radiation exposure) ஏற்பட்டிருப்பதாகவும், உலை ஊழியர்கள் மூன்று பேர் கதிரியக்கத் தாக்கத்தால் நோய்வாய்ப்பட்டிருப்பதாகவும் (radiation sickness) செய்திகள் வந்தன.

மார்ச் 12, சனிக்கிழமை அதிகாலையிலிருந்து உலை 1-ல் கதிர் வீச்சு அளவு அதிகரித்து வருவதாகவும் கதிரியக்க கசிவு ஏற்பட்டிருக்கலாம் என்றும் செய்திகள் வந்தன. கட்டுப்படுத்த முடியாத வெப்பத்தினால் மூலப்பொருள் மையத்தைச் சுற்றி உள்ள நீர் கொதித்து நீராவியாகி உலை அறையில் அழுத்தத்தை அதிகரித்துக் கொண்டிருந்தது. அழுத்தத்தைக் குறைக்க சனிக்கிழமை முற்பகல் இரண்டு முறை நீராவியை வெளியிட்டார்கள் (venting). இதனால் சிறிதளவு கதிரியக்கக் கசிவு ஏற்பட்டது.

சனிக்கிழமை பிற்பகல் ஃபுகுஷிமா 1 நிலையத்திற்கு பத்து கி.மீ. சுற்றளவில் உள்ள மக்களை வெளியேற்ற ஆரம்பித்தது ஜப்பான் அரசு. சனிக்கிழமை மாலை 4 மணிக்கு NISA வெளியிட்ட அறிக்கையில் சிறிதளவு சீஸியம் (radioactive Cesium) கசிவு ஏற்பட்டுள்ளதாக சொன்னார்கள். எதனால் என்று விபரம் சொன்னதாகத் தெரியவில்லை. சீஸியம் கசிவு ஏற்பட்டுள்ளது என்றால் உலையில் மூலப்பொருள் நீர்காப்பற்று திறந்தவெளியில் இருந்திருக்க வேண்டும் (uncovered fuel core) அல்லது அணுக்கரு உருக ஆரம்பித்திருக்கவேண்டும் (core meltdown) என்பதே அனுமானம்.

சனிக்கிழமை மாலை 6:30 மணியளவில் திடீரென்று 1-ம் உலையின் வெளிப்புறக் கட்டிடத்தின் கூரை வெடித்துச் சிதறியது. உலை ஊழியர்கள் நான்கு பேர் இந்த வெடி விபத்தில் காயமானார்கள். அதிகாரிகள் செய்தியாளர்களிடம் இதைப் பற்றி பேசுகையில் கதிரியக்க வாயுக்கள் எதுவும் கசியவில்லை என்றும் நீராவி அழுத்தம் அதிகமானதால்தான் இந்த வெடி விபத்து ஏற்பட்டது என்றும், கட்டிடத்தின் உள்ளே உலையின் அழுத்த அறைக்கு சேதாரம் ஒன்றும் ஆகவில்லை என்று சொன்னார்களாம். பின்னர் வந்த செய்திகள் மற்றும் நிபுணர்களின் கருத்துக்களும் அந்த வெடி விபத்து நீராவியால் ஆனது அல்ல என்றும் அது ஹைட்ரஜன் வெடி விபத்து என்றும் கூறின.

இவ்விடத்தில் ஹைட்ரஜன் வெடி விபத்து என்றால் என்ன என்று ஒரு சிறு விளக்கம் தேவை. முதல் பாகத்தில் உலையின் பாகங்களை விளக்கும் பகுதியில் அணுசக்தி மூலப்பொருட்கள் சிறு குண்டு வடிவத்தில் (fuel pellets) ஜிர்க்கோனியத்தால் (Zirconium) ஆன சன்னமான நீளக் குழாய்களில் (fuel rod; பென்சில் தடிமன், நீளம் சுமார் 12 அடி) நிரப்பி இருப்பார்கள் என்று பார்த்தோம். உலை செயல்பாட்டை நிறுத்தியபின் வெப்பத்தைத் தணிக்க வேண்டும் என்றும் புரிந்துகொண்டோம். வெப்பத்தைத் தணிக்க இயலவில்லை என்றால் என்ன ஆகும் என்று இப்பொழுது பார்ப்போம். மூலக்கருவில் வெப்பம் சுமார் 1200 டிகிரி செல்சியஸ் அளவைத் தாண்டினால் ஜிர்க்கோனியம் உருகி சுற்றி இருக்கும் நீராவியுடன் கலக்கும். ஜிர்க்கோனியம் நீராவியில் (steam – H2O) இருக்கும் ஹைட்ரஜனை வெளிப்படுத்திவிட்டு ஆக்சிஜனுடன் சேர்ந்து ஜிர்க்கோனியம் டையாக்சைடு ஆக மாறும். உலை அழுத்த அறையில் அழுத்தத்தை குறைக்க நீராவியை வெளியே விட்டார்கள் என்று மேலே பார்த்தோம். அப்படி வெளிப்படும் நீராவியுடன், ஹைட்ரஜன் வாயுவும் இருக்கும். அழுத்த அறைக்கு வெளியே இருக்கும் வெளிப்புறக் கட்டிடத்திலும் நீராவி மற்றும் ஹைட்ரஜன் அழுத்தம் அதிகமானால், காற்றில் உள்ள ஆக்சிஜனுடன் ஹைட்ரஜன் கலந்து பெரிதாக வெடிக்கும்.

இங்கே நாம் முக்கியமாக சில விஷயங்களை கவனிக்க வேண்டும். வெடி விபத்திற்கு காரணம் ஹைட்ரஜன்தான் என்றால், அதிகாரத்தரப்பில் சொன்னது முற்றிலும் பொய் என்று நிரூபணமாகும். ஹைட்ரஜன் வெடி விபத்து ஏற்பட்டது என்றாலே மூலக்கரு (fuel core) பாதுகாப்பாக இல்லை என்று அர்த்தம். அதாவது குழாயிலிருந்து வெளியே வந்து நீராவியுடன் கலந்திருக்க வாய்ப்புகள் அதிகம். மூலக்கரு அல்லது கிளர்மின் விளைவுப் பொருட்கள் (radioactive decay products from fuel core) கலந்த நீராவிதான் வெளியே வந்திருக்கவேண்டும். ஹைட்ரஜன் கசிவு ஏற்பட்டது உலை ஊழியர்கள் நீராவி அழுத்தத்தைக் குறைக்க கசிய விட்டதால்தானா அல்லது உலை அழுத்த அறை சுவர்களில் விரிசல் ஏதாவது உள்ளதா என்ற சந்தேகமும் எழ வேண்டும்.

இந்த வெடி விபத்து நடந்த பின் ஜப்பான் அரசு ஃபுகுஷிமா 1 நிலையத்திற்கு இருபது கி.மீ. சுற்றளவில் உள்ள மக்களை வெளியேற்ற ஆணை பிறப்பித்தது. இதனால் சுமார் இரண்டு லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டனர்.

இதுவரை ஜப்பான் அரசு கதிரியக்கக் கசிவு ஏற்பட்டதாக அறிவிப்பு எதுவும் வெளியடவில்லை.

சனிக்கிழமை இரவு 10 மணியளவில் அதிகாரிகள் உலை 1-ல் வெப்பத்தை தணிக்க நேரடியாக கடல் நீரை உள்ளே செலுத்தலாம் என்று முடிவெடுத்தனர். இந்த முடிவே நிலைமையின் தீவிரத்தை விவரமறிந்த பார்வையாளர்களுக்கு தெளிவாக விளக்கியது. கடலில் இருந்து எடுக்கப்படும் உப்புநீரை உலைக்குள் செலுத்தினால் அதுவே உலைக்கு சாவு மணி என்று விவரம் அறிந்தவர்களுக்குத் தெரியும். அதற்குப்பின் அந்த உலையை உபயோகிக்க முடியாது.

part-3

மார்ச் 11, வெள்ளிக்கிழமை பிற்பகல் நிலநடுக்கத்தை தொடர்ந்து வந்த பயங்கர ஆழிப்பேரலையால் ஃபுகுஷிமா அணு மின் நிலையத்தில் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்பட்டு ப்ரச்சினை ஆரம்பித்தது. செயல்பட்டுக் கொண்டிருந்த மூன்று உலைகளில் வெப்பத்தைத் தணிக்க முயன்றுகொண்டிருந்தார்கள்.

மார்ச் 12, சனிக்கிழமை மாலை 1-ம் உலையில் ஹைட்ரஜன் வெடி விபத்து ஏற்பட்டது என்றும் அன்றிரவில் இருந்து வெப்பத்தைத் தணிக்க கடல் நீரை உபயோகித்தனர் என்றும் பார்த்தோம்.

மார்ச் 13, ஞாயிற்றுக்கிழமை முழுவதும் அதே நிலைதான் தொடர்ந்தது. கடல் நீரில் போராக்ஸ் எனும் உப்பையும் கலந்து செலுத்திக்கொன்டிருந்தார்கள். இந்த போராக்ஸ் (Borax, sodium borate) உப்பு சூடாக இருக்கும் மூலக்கருவிலிருந்து வெளியாகும் நியூட்ரான்களை (neutrons) உட்கொள்ளும் தன்மை உடையது. அதனால் மூலக் கருவில் மீண்டும் தொடர்வினை தொடங்குவதைத் தடுக்கும்.

மார்ச் 14, திங்கள்கிழமை முற்பகல் சுமார் 11 மணிக்கு 3-ம் உலையில் திடீரென்று ஹைட்ரஜன் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பதினோரு பேர் காயமானார்கள், அருகில் உள்ள 2-ம் உலையின் குளிர்விக்கும் சாதனங்கள் சிலவும் சேதமாயின. 2-ம் உலையின் கருவில் நீர் வற்றிவிட்டதால் மூலப்பொருள் தண்டுகளும் கட்டுப்படுத்தும் தண்டுகளும் சில அடி உயரத்திற்கு நீர் காப்பற்றுத் திறந்த வெளியில் இருப்பதைக் கண்டுபிடித்தனர். அதனால் 2-ம் உலைக்குள்ளும் கடல் நீரை செலுத்த ஆரம்பித்தார்கள்.

மார்ச் 15, செவ்வாய்க்கிழமை காலை சுமார் 6 மணிக்கு 2-ம் உலையிலும் திடீரென்று ஹைட்ரஜன் வெடி விபத்து ஏற்பட்டது. நான்கு நாள்களில் நிலையத்தில் நடந்த மூன்றாம் வெடி விபத்து இது. இதைத் தொடர்ந்து நிலைய வளாகத்தில் கதிரியக்க அளவு அபாயகரமாக உயர்ந்தது. கரையோர வாயுமண்டலத்தில் கதிரியக்க அளவு அதிகரித்ததால் அமெரிக்க கடற்படைக் கப்பல்கள் தள்ளிச் சென்றன. நெருக்கடியை சமாளிக்க ஐம்பது பேரை மட்டும் விட்டுவிட்டு நிலையத்தின் மற்ற அனைத்து ஊழியர்களையும் (சுமார் 800 பேர்) வெளியேற்றினார்கள்.

இதெல்லாம் ஒருபுறம் நடந்து கொண்டிருக்கையில், உலை 4-ல் கழிவுற்ற மூலத்தண்டுகளைத் தேக்கி வைத்திருக்கும் தொட்டியில் (spent fuel storage/cooling pool) தீ பிடித்தது.

4-ம் உலைதான் நிலநடுக்கம், சுனாமி ஏற்பட்ட பொழுது செயல்பாட்டில் இல்லையே அங்கே எப்படி பிரச்சனை ஆனது? அதற்கு இன்னொரு சின்ன விளக்கம் தேவை.

அணு உலை அறையின் உள்ளே வைத்திருக்கும் மூலப்பொருள் காலப்போக்கில் நீர்த்துப் போகும். கழிவுற்ற மூலப்பொருளை ஏறக்குறைய வருடத்திற்கு ஒரு முறை மாற்றுவார்கள். உள்ளே இருக்கும் எல்லா மூலத்தண்டுகளையும் ஒரே சமயத்தில் மாற்ற மாட்டார்கள். சுமார் மூன்றில் ஒரு பங்கை மட்டுமே மாற்றுவார்கள். வெளியே எடுக்கப்படும் கழிவுற்ற மூலப்பொருளில் இன்னும் கதிரியக்க பொருட்கள் இருப்பதால் அத்தண்டுகளை உருக்கு-கான்க்ரீட்டால் ஆன பிரத்தியேகத் தொட்டிகளில் தேக்கி வைப்பார்கள். இந்த நிலையத்தில் உள்ள ஆறு உலைகளிலும் உலை அறைக்கு மேலே உள்ள தளத்தில் இந்தத் தொட்டிகள் இருக்கின்றன. இவை அல்லாமல் ஏழாவதாக ஒரு தனித் தொட்டியும் சற்று தள்ளி இருக்கிறது.

தொட்டியில் தேக்கி வைத்திருக்கும் மூலத் தண்டுகளுக்கு மேல் குறைந்த பட்சம் இருபத்தைந்திலிருந்து முப்பது அடிக்கு நீர் இருக்க வேண்டும். நீர் அளவு குறைந்தால் தண்டுகளில் மீண்டும் கருப்பிளவு தொடங்கி விடும் அதனால் கரு உருகும் அபாயம் உண்டாகும்.தேக்கத் தொட்டிகளுக்குள் எவ்வளவு தண்டுகள் இருக்கின்றன, அவை எவ்வளவு நாள் முன் உலையிலிருந்து எடுக்கப்பட்டன என்பதைப் பொறுத்து தொட்டியின் வெப்ப நிலை மாறும், அதற்கேற்றபடி தொட்டியில் நீர் நிலையை கண்காணிக்க வேண்டும்.

இந்தப் பதிவுத் தொடரின் முதல் பாகத்தில் “செயல்பாட்டில் இல்லாத உலை 4-ல் மூன்று மாதங்களுக்கு முன் (நவம்பர் 2010-ல்) மூலப்பொருள் முழுவதுமாக வெளியே எடுக்கப்பட்டிருந்தது (இதன் முக்கியத்துவத்தை பின்னால் பார்ப்போம்).” என்று எழுதியிருந்தேன். 4-ம் உலை பராமரிப்புக்காக நிறுத்திவைக்கப் பட்டிருந்ததால் அதிலிருந்த அனைத்து முலப்பொருள் தண்டுகளையும் வெளியே எடுத்து தேக்கத் தொட்டியில் வைத்திருந்தார்கள். சில மாதம் முன் வரை உபயோகத்திலிருந்ததாலும், அதிக எண்ணிக்கையில் இருந்ததாலும் இந்தத் தொட்டியில் வெப்பம் அதிகமாகவே இருந்தது. தொட்டிக்குள் நீர் அளவு குறைந்ததை உலையில் இருந்தவர்கள் யாரும் கவனிக்கவில்லை போல் தெரிகிறது. மற்ற இடங்களில் வெப்பமும் வெடியுமாக களேபரம் நடந்து கொண்டிருந்ததால் இதை கவனிக்காமல் விட்டுவிட்டார்கள் போலும். என்னதான் சாக்கு சொன்னாலும், இது கவனக்குறைவு காரணமான, தவிர்க்கப்பட்டிருக்க வேண்டிய ஒரு விபத்து.

இந்தத் தீ விபத்தால் நேரடியாக காற்றுமண்டலத்தில் கதிர்வீச்சு வெளியாகியுள்ளது என்று சர்வதேச அணு சக்தி அமைப்பு (IAEA) செய்தி வெளியிட்டது. இந்நிலையில் கதிர்வீச்சு அதிகமானதால் ஜப்பான் அரசு ஃபுகுஷிமா 1 நிலையத்திற்கு மேலே வானத்தில் முப்பது கி.மீ. சுற்றளவிற்கு விமானங்கள் பறப்பதை தடை செய்தது.

4-ம் உலையின் தேக்கத் தொட்டியில் பற்றிய தீ அணைக்கப்பட்டுவிட்டது என்றும் தேக்கத்தொட்டியில் மீதமுள்ள நீர் கொதித்துக் கொண்டிருக்கிறது என்றும் செவ்வாய்க்கிழமை மாலை அதிகாரபூர்வமான அறிவிப்பு வந்தது.

இந்நிலையில் செயல்பாட்டில் இல்லாத 5-ம் உலையில் நீர் நிலை குறைந்து கொண்டிருப்பதாகவும் சரியாக இயங்கிக்கொண்டிருக்கும் 6-ம் உலையின் டீசல் மின் இயற்றியை வைத்து 5-ம் உலைக்கும் நீர் செலுத்தலாம் என்று திட்டம் இருப்பதாகவும் செய்திகள் வந்தன.

மார்ச் 16, புதன்கிழமை அன்று காலை 4-ம் உலையின் மேல் தளத்தில் மீண்டும் தீப்பிடித்து அது அணைக்கப்பட்டது. ஒன்று மற்றும் மூன்றாம் உலைகளிலிருந்து வெள்ளைப் புகை அல்லது நீராவி வந்ததாலும் நிலையத்திற்குள் கதிர்வீச்சின் அளவு அதிகரித்ததாலும், மூலப்பொருள் வைக்கப்பட்டிருக்கும் அறைச்சுவர்களில் விரிசல் விட்டிருக்குமோ என்ற அச்சம் இருந்தது. நிலையத்தில் மீதமிருந்த ஐம்பது ஊழியர்களும் சுமார் ஒரு மணி நேரம் வெளியேற்றப்பட்டனர்.

ஆழிப்பேரலையால் சேதமடைந்த சாலைகளை புல்டோசர்கள் வைத்து சரி செய்து உலைகளுக்குள் நீர் இறைக்க தீயணைப்பு வண்டிகளையும் காவல் துறை உபயோகிக்கும் நீர் பீரங்கி வண்டிகளையும் கொண்டு வந்தார்கள்.

புதன் மாலை 3-ம் உலையின் தேக்கத் தொட்டியிலும் நீர் குறைந்து கொண்டிருப்பதாக அறிவித்தார்கள். புதன் இரவு 11 மணிக்குமேல் கதிர்வீச்சு அளவு குறைந்ததால் மேலும் 130 ஊழியர்கள் நிலையத்தினுள் வந்தார்கள்.

மார்ச் 17, வியாழக்கிழமை காலை விமானப் படை ஹெலிகாப்டர்களை வைத்து கடல் நீரை மேலிருந்து உலைகளின் மேல் ஊற்றினார்கள். நிலையத்தில் 22 பேர் கதிரியக்கத் தாக்கத்தால் நோய்வாய்ப்பட்டுள்ளதாக TEPCO அதிகாரிகள் அறிவித்தார்கள்.

மார்ச் 18, வெள்ளிக்கிழமை அன்று நிறுவனம் இந்த அணு நிலைய விபத்தின் அளவை நான்காம் நிலையிலிருந்து ஐந்தாம் நிலைக்கு உயர்த்தியது.அதாவது அமெரிக்காவில் 1979-ல் நடந்த த்ரீ மைல் ஐலன்ட் விபத்தின் நிலைக்கு இந்த விபத்தின் நிலையையும் உயர்த்தினார்கள். 1986-ல் செர்னோபிலில் நடந்த விபத்துதான் உலகிலேயே மோசமானது, அதன் அளவு 7.

மார்ச் 19, சனிக்கிழமை நிலைமை மோசமாகவில்லை. உலைகளிலும் தேக்கத் தொட்டிகளிலும் வெப்பத்தைத் தணிக்க முயற்சிகள் தொடர்ந்தன. நிலையத்திற்கு மின்சார வாரிய க்ரிடிலிருந்து மின்சாரம் கொண்டுவரும் முயற்சிகளும் தொடர்ந்தன.

மார்ச் 20, ஞாயிற்றுக்கிழமை உலைகள் 5 மற்றும் 6-ல் மின் வாரிய மின்சாரம் மற்றும் தடையில்லாமல் கிடைப்பதால் அங்கு இனி பிரச்சனை இருக்காது என்று நம்பிக்கை வந்தது. இந்நிலையில் நிலையத்தை சுற்றியுள்ள இடங்களில் உணவுப் பொருட்களில் (பால் மற்றும் காய்கறிகளில்) கதிரியக்கத் தாக்கம் இருப்பதை கண்டுபிடித்தனர்.

மார்ச் 21, திங்கள்கிழமை முடியும் வரை மற்ற நான்கு உலைகளுக்கு இன்னும் தடையில்லாத மின்சாரம் கிடைக்கவில்லை. உலைகளில் வெப்பத்தைத் தணிக்கும் வேலை தொடர்ந்துகொண்டிருக்கிறது.

உலை 1 – ஹைட்ரஜன் வெடி விபத்து ஏற்பட்டதால் வெளிப்புறக் கட்டிடத்திற்கு பெரும் சேதம். மூலக்கருவில் சுமார் 70 சதவிகிதம் சேதம். தேக்கத் தொட்டியில் நீர் குறைந்து வெப்பம் அதிகரித்துள்ளது. கடல் நீர் செலுத்திக்கொண்டுள்ளார்கள்.

உலை 2 – ஹைட்ரஜன் வெடி விபத்து ஏற்பட்டது. வெளிப்புறக் கட்டிடத்திற்கு சிறிதளவு சேதம். மூலக்கருவில் சுமார் மூன்றில் ஒரு பங்கு சேதமாகியிருக்கலாம் என்று சந்தேகம். உலை அழுத்த அறை சேதமாகியிருக்கிறது. தேக்கத் தொட்டியைப் பற்றி தகவல் இல்லை. கடல் நீர் செலுத்தியுள்ளார்கள்.

உலை 3 – ஹைட்ரஜன் வெடி விபத்து ஏற்பட்டதால் வெளிப்புறக் கட்டிடத்திற்கு பெரும் சேதம். மூலக்கரு சேதமாகியிருக்கிறது, அளவு தெரியவில்லை. தேக்கத் தொட்டியில் நீர் குறைந்து வெப்பம் அதிகரித்துள்ளது. கடல் நீர் செலுத்திக்கொண்டுள்ளார்கள்.

உலை 4 - செயல்பாட்டில் இல்லை. ஆனால் தேக்கத் தொட்டியில் தீ விபத்து. அதனால் வெளிப்புறக் கட்டிடத்திற்கு பெரும் சேதம். கடல் நீர் செலுத்திக்கொண்டுள்ளார்கள்.

தொடரும்…

thanz....http://nilalgal.wordpress.com/

மேலதிக தகவலுக்கும் படங்களுக்கும் இங்கே செல்லுங்கள்....:)

http://nilalgal.wordpress.com/

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு மிகவும் நன்றி . நல்ல விளக்க்மான் கட்டுரை .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.