Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐ.நா நிபுணர்குழு அறிக்கை: தமிழ்த்தரப்பு செய்யவேண்டியது என்ன?

Featured Replies

ஐ.நா நிபுணர்குழு அறிக்கை: தமிழ்த்தரப்பு செய்யவேண்டியது என்ன?

நீண்ட இழுபறிக்குப் பின்னர் ஐ.நா குழு அறிக்கை வெளிவந்துள்ளது. உத்தியோகப்பூர்வ அறிக்கை வெளிவர முன்னரே இலங்கையில் அது கசியவிடப்பட்டுள்ளது. உத்தியோகப்பூர்வ அறிக்கை அரசின் பதிலையும் இணைத்தே வெளிவர இருந்தது. பதிலளிக்கும் கடப்பாட்டைத் தவிர்ப்பதற்காக இலங்கை இதனை கசியவிட்டிருக்கலாம். இலங்கையைப் பொறுத்தவரை அறிக்கையுடன் பதிலளிப்பும் இணைந்து வருவது சங்கடங்களைத் தருவதாக இருக்கும். இதனால் ஐ.நா உடன் இணையாது தனது நிராகரிப்பு அறிக்கைகளை தனித்து வெளியிட்டுள்ளது. ஆனால் உத்தியோகபூர்வமாக ஐ.நாவிற்கு இதனை அறிவித்ததாக தெரியவில்லை.

ஐ.நா போர்க்காலத்தில் அந்நிறுவனத்திற்குரிய விழுமியங்களுடன் செயற்படவில்லை. ஐ.நா நினைத்திருந்தால் போரை நிறுத்தியிருக்க முடியும். தமிழ் மக்களினுடைய அரசியல் இருப்பையும் பாதுகாத்திருக்க முடியும். ஐ.நா செயலாளர் தனக்குள்ள அதிகாரத்தை இதற்காக பயன்படுத்தியிருக்க முடியும். போருடன் மக்களின் உயிர் அழிவு, சொத்தழிவு மட்டும் தொடர்புபட்டிருக்கவில்லை. தமிழ் மக்களின் கூட்டிருப்பும், கூட்டுரிமையும்கூட அதில் அடங்கியிருந்தது. ஐ.நா உட்பட சர்வதேச சமூகம் தமிழ் மக்களின் உயிர்களையும் சொத்துக்களையும் மட்டும் அழிக்கவில்லை, அதனுடன் சேர்த்து தமிழ் மக்களின் கூட்டிருப்பையும், கூட்டுரிமையையும் கூட அழித்திருக்கின்றது. சுருக்கமாகக் கூறினால் பேரினவாதத்தின் வாய்க்குள் தமிழ் மக்களை கொண்டுபோய் விட்டிருக்கின்றது.

போருக்குப் பின்னராவது தமிழ் மக்கள் பட்ட அவலங்களை ஐ.நா குறைத்திருக்கலாம். இயல்பு நிலைக்கு ஏற்பாடு செய்திருக்கலாம். போரின் பின்னரான கொலைகளையும், சித்திரவதைகளையும் இல்லாமல் செய்திருக்கலாம். கூட்டிருப்பை பாதுகாக்கக்கூடிய வகையில் அரசியல் தீர்விற்கு வலிமையான அழுத்தங்களைக் கொடுத்திருக்கலாம். ஆனால் இவற்றில் எவை தொடர்பாகவும் ஆரோக்கியமான செயற்பாடுகளை ஐ.நா மேற்கொள்ளவில்லை. போருக்குப் பின்னரும் தமிழ் மக்கள் பல்வேறு அழிவுகளுக்கு உள்ளாக்கப்பட்ட போதும் அவர்களது கூட்டிருப்பைச் சிதைக்கும் வகையில் தாயகம் மோசமான ஆக்கிரமிப்புக்கு உள்ளாக்கப்பட்டபோதும் அது வெறுமனே பார்த்துக்கொண்டிருந்தது. லிபியாவிலும், சூடானிலும் செலுத்திய அக்கறையில் பத்துவீதத்தைக்கூட தமிழ் மக்கள் விடயத்தில் செலுத்தவில்லை.

இதற்குப்பின்னால் முழுக்க முழுக்க அரசியல் காரணங்களே இருந்தன. மேற்குலகத்திற்கும், இந்தியாவிற்கும் இடையிலான நலன் காரணமாக இந்தியாவை திருப்திப்படுத்துவதற்காக தலையிடாமல் இருந்தது. தற்போது இந்தியாவினதும், மேற்குலகத்தினதும் நலன்கள் ஒருங்கே இலங்கையில் பாதிக்கப்பட்டிருப்பதனாலும் மேற்குலக அரசியல் செயற்பாடுகளுக்கு உறுதுணையாக இருக்கும் மனித உரிமை நிறுவனங்களின் தொடர்ச்சியான வற்புறுத்தல்களினாலும் ஐ.நா செயற்பட்டிருக்கின்றது.

அதிலும் வெள்ளைக்கொடி விவகாரத்தை சாதுரியமாக தவிர்த்திருக்கின்றது. இந்த விவகாரத்தில் ஐ.நா அதிகாரி நம்பியாரும் சம்பந்தப்பட்டிருப்பதால் ஐ.நாவின் முகமூடி கிழிந்துவிடும் என்பதற்காக தவிர்த்திருக்கின்றது போலத் தெரிகின்றது. இனியாவது ஐ.நா தனது பாவங்களைக் கழுவிக்கொள்ளுமா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். ஏனெனில் இந்தியாவினதும், மேற்குலகத்தினதும் நலன்களை இலங்கை அரசு சிறிதளவு பாதுகாக்க முன்வந்தாலும் ஐ.நா குத்துக்கரணம் அடிப்பதற்கு வாய்ப்புக்கள் உண்டு.

நிபுணர் குழுவின் அறிக்கையைப் பொறுத்தவரை மிகவும் காத்திரமாக வெளிவந்திருக்கின்றது. எனினும் வெள்ளைக்கொடி விவகாரம் தவிர்க்கப்பட்டிருப்பது போல இறந்தோர் தொகையும் பாரியளவிற்குத் தவிர்க்கப்பட்டிருக்கின்றது. எதிர்பார்க்கப்பட்டதுபோல இலங்கை இரு அணுகுமுறைகளை முடுக்கிவிட்டுள்ளது. ஒன்று உள்நாட்டில் தனது அரசியல் ஆதாயத்திற்கு இதனை பயன்படுத்திக் கொள்கின்றது. சிங்கள மக்கள் மத்தியில் மேற்குலக எதிர்ப்பு ஏற்கனவே இருக்கின்றது. அதனை கிளறி விட்டுள்ளது. மே தினத்தை இவ்வறிக்கைக்கான எதிர்ப்புத் தினமாக கொண்டாடுமாறு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார். மறுபக்கத்தில் கோத்தபாய ராஜபக்ச தான் சீனா, ரஸ்யா பக்கம் சார்ந்து விடுவோம் என எச்சரிக்கை விடுக்கின்றார்.

எனினும் முன்னர்போல உடனடியாக ஐக்கியநாடு சபை அலுவலகம் முன் போராட்டம் எவற்றையும் நடாத்த முன்வரவில்லை. போராட்டங்கள் ஏதாவது நடைபெறலாம் எனக் கருதி ஐ.நா ஊழியர்கள் ஏற்கனவே பாதுகாப்பு ஒத்திகையை பலமுறை மேற்கொண்டிருந்தார்கள்.

ஐ.நா முன்பான போராட்டம் சர்வதேச ரீதியாக இலங்கை அரசினை தனிமைப்படுத்திவிடும் என இலங்கை கருதியிருக்கலாம். உண்ணாவிரத வீரன் விமல் வீரவன்சவும் தற்போது அடக்கி வாசிக்கின்றார். மக்கள் இயல்பாகவே கூடுகின்ற மே தினத்தையே இதற்கு பயன்படுத்த முயற்சிக்கின்றது. இதற்கும் இடதுசாரித் தொழிற்சங்கங்கள் பல எதிர்ப்பைத் தெரிவித்துள்ளன. மே தினம் தொழிலாளர்கள் பற்றிய பிரச்சனையாக இருப்பதனால் அவர்களின் விவகாரங்களைத் தவிர வேறு விவகாரங்களை இத்தினத்தில் எழுப்ப அவை விரும்பவில்லை.

அரசாங்கம் வெறுமனே இதனை அரசாங்கக் கட்சியின் எதிர்ப்பாக இல்லாமல் முழு இலங்கை மக்களின் எதிர்ப்பாகக் காட்டுவதற்கே முயற்சிக்கின்றது. இதற்காக எதிர்க்கட்சிகளுடன் பேசுவதற்கு சில பிக்குமார்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.

ஐக்கிய தேசியக் கட்சி சரத் பொன்சேகாவை விடுதலை செய்தல், ஜனநாயக உரிமைகளை அங்கீகரித்தல் என்பவற்றை இதற்கு நிபந்தனையாக முன்வைத்துள்ளது. ஜே.வி.பி இதுவரை இணைவுச் செயற்பாட்டைப்பற்றி எதுவும் கூறவில்லை. அரசாங்கத்தின் இராஜதந்திர செயற்பாடுகளே இதற்கு காரணம் என குற்றத்தை மாத்திரம் சுமத்தியுள்ளது. சிங்கள மக்களிடமிருந்து அழுத்தம் வருமானால் ஐக்கிய தேசியக் கட்சி முன்வைத்த நிபந்தனைகளையே அதுவும் முன்வைக்க முனையலாம். ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசா தந்தையின் வழியை பின்பற்ற முனைபவர். தானும் இனவாதத்தை முன்னெடுத்து சிங்கள மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெறலாம் என அவர் கருதுகின்றார். இதனால் கட்சித் தலைமைப்பீடத்துடன் கலந்தாலோசிக்காமலயே எதிர்ப்பறிக்கையை விட்டிருக்கின்றார். இவ்வாறு தனித்தனியாக ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்தவர்கள் அறிக்கையினை விட்டுக்கொண்டிருந்தபோது கட்சியின் இன்னோர் பிரதித் தலைவர் கரு ஜயசூரியா இது விடயத்தில் கட்சி கொள்கை ரீதியான தீர்மானம் எடுக்கும்வரை கட்சியைச் சேர்ந்தவர்கள் அறிக்கைகள் எவற்றையும் விடவேண்டாம் எனக் கேட்டிருக்கின்றார். வெளிநாட்டில் இருக்கும் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கா வந்தபின்னர் கொள்கை ரீதியாக தீர்மானம் எடுக்கப்படும் எனக் கூறியிருக்கின்றார்.

அரசாங்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அணுகுமுன்னரே நிபுணர் குழுவின் அறிக்கையை வரவேற்று சம்பந்தனின் கருத்து வெளிவந்திருக்கின்றது. மிகவும் தந்திரோபாயமான வகையில், போர்க்காலத்திலேயே இவைபற்றி தாம் நாடாளுமன்றத்தில் பேசியிருக்கினறோம். நிபுணர்குழு அதனை ஆய்வுசெய்து உறுதியாக்கியிருக்கின்றது எனக் கூறியுள்ளார். அரசாங்கம் இவற்றைக் கருத்தில் எடுத்து நிபுணர்கள் குழுவின் சிபார்சுகளை நடைமுறைபடுத்த முன்வரவேண்டும் எனவும் கூறியிருக்கின்றார். சம்பந்தன் இவ்வாறு கருத்துத் தெரிவிப்பதற்கு இந்தியாவின் சம்மதம் கிடைத்திருக்க வேண்டும். இல்லாவிடில் தற்போதைய இலங்கை சூழ்நிலையில் இவ்வாறான துணிகரமான கருத்துக்களை சம்பந்தனால் கூறியிருக்கமுடியாது.

முஸ்லிம் காங்கிரஸ் இதுபற்றி இன்னமும் கருத்துத் தெரிவிக்கவில்லை. அக்கட்சி அரசாங்கத்துடன் இணைந்திருப்பதால் அரசாங்கத்திற்கு சார்பாகவே கருத்துக்களை தெரிவிக்கும் என எதிர்ப்பார்க்லாம் அல்லது மௌனமாக இருக்க முயற்சிக்கலாம். ஏனைய முஸ்லிம் தலைவர்களும் அரச சார்பாளர்களாக இருப்பதால் அரசாங்கத்தின் பக்கமே நிற்பார்கள்.

மலையகத் தலைவர்களின் கருத்துக்கள் இதுவரை வெளிவரவில்லை. அங்கு ஜனாதிபதியின் அருட்பார்வையை யார் பெறுவது என்பதில் பெரும்போட்டி நிலவுவதால் அரசாங்கத்திற்கு சார்பாக அறிக்கைகள் வரலாம். ஆறுமுகம் தொண்டமான் கொஞ்சம் சுயமரியாதை பார்ப்பவர் என்பதால் சற்று மௌனமாக இருக்க முயற்சிக்கலாம். வரவேற்று அறிக்கை விடுவார் என எதிர்ப்பார்ப்பதற்கு இல்லை. மலையக மக்கள் முன்னணியின் அரசியற் பிரிவின் புதிய தலைவர் இராதாகிருஸ்ணன் எல்லோரையும் முந்திக்கொண்டு அரசு சார்பாக அறிக்கை விடுவதற்கு வாய்ப்புக்கள் உண்டு. தென்னிலங்கையின் இன்னோர் தமிழ்த் தலைவரான மனோ கணேசன் 'யுத்த வெற்றியை மாத்திரம் தொடர்ந்து முன்னெடுத்து சர்வதேசத்தை பகைத்துக் கொள்வதா? அல்லது ஒன்றுபட்ட இலங்கைக்குள்ளே தமிழ் மக்களுக்கு சுயாட்சியை வழங்குவதன் மூலம் உலகத்துடன் இணக்கமாகச் செல்வதா? என்பதை இந்த அரசாங்கம்தான் தீர்மானிக்க வேண்டும்' எனக் கூறியுள்ளார்.

அரசாங்கம் இரண்டாவது அணுகுறையாக சர்வதேச நாடுகளை நோக்கி நகர இருக்கின்றது. இதில் வெளிப்படையான செயற்பாடுகளையும், மறைமுகமான செயற்பாடுகளையும் முன்னெடுக்க இருக்கின்றது. வெளிப்படையான செயற்பாடுகளை தனது நட்புநாடுகளை நோக்கியும் மறைமுகமான செயற்பாடுகளை மேற்குலகம், ஐ.நா, இந்தியா நோக்கியும் மேற்கொள்ளலாம்.

வெளிப்படையான செயற்பாடுகளை தற்போதே ஆரம்பித்து விட்டது. குறிப்பாக அணிசேரா நாடுகளைத் தனக்கு ஆதரவாக அணிதிரட்ட முற்பட்டுள்ளது. இதற்காக குழு ஒன்றும் அமைக்கப்பட்டு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. மலேசியா, தென் ஆபிரிக்கா, இலத்தின் அமெரிக்க நாடுகள் என்பவற்றிற்கு இக்குழு உடனடியாக செல்ல இருக்கின்றது. அதேவேளை சீனா, ரஸ்யா போன்ற வல்லரசுகளின் ஆதரவினைப் பெறுவதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

அணிசேரா நாடுகளிற் பெரும்பாலானவை சொந்தப்பலத்தில் இருப்பவை அல்ல. வல்லரசுகளின் தயவில் தங்கியிருப்பவை. அதிலும் பெரும்பாலானவை மேற்குலகில் தங்கியிருப்பன. இதனால் மேற்குலகினை எதிர்த்து இலங்கை அரசிற்கு சார்பாக நிற்பார்கள் எனக் கூறமுடியாது. இந்தியா தற்போது இலங்கையை தாங்கிப்பிடிக்கும் நிலை குறைவாக இருப்பதனால் இலங்கையின் பக்கம் நிற்குமாறு அதுவும் வேண்டி நிற்காது. இதனால் இலங்கையின் முயற்சிகள் பெரியளவிற்கு வெற்றியளிக்கும் எனக் கூறுவதற்கில்லை.

ஆனால் மேற்குலகத்தை எதிர்க்கின்ற ஈரான், மியன்மார், வெனிசுலா, சிரியா போன்ற நாடுகள் இலங்கையை ஆதரிக்க முற்படலாம். சீனா, ரஸ்யா போன்ற நாடுகள் மேற்குலகத்தை எதிர்க்கின்ற நாடுகளாக இருக்கின்றபோதும் அவற்றின் நலன்கள் மேற்குலகத்தோடும், இந்தியாவுடனும் பிணைக்கப்பட்டவை. இப்பிணைப்பை ஏற்படுத்துவதில் முக்கிய நிறுவனமாக இருப்பது ஐ.நாவே. இதனால் ஐ.நாவினை மீறி ஒரு கட்டத்திற்குமேல் அதனால் செயற்பட முடியாது.

சூடான், லிபியா விவகாரத்தில் இதுவே நடந்துள்ளது. சூடானுக்கும் சீனாவிற்கும் இடையில் நெருக்கமான உறவுகள் இருந்தபோதும் சூடான் தொடர்பான ஐ.நாவின் தீர்மானங்களை சீனா எதிர்க்கவில்லை. இதேபோல் லிபியா விவகாரத்திலும் தமது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தாது ஒதுங்கியிருந்தன. சில வேளைகளில் இந்நாடுகள் இலங்கைக்கு சார்பாக அறிக்கைகளை விடலாம். அதனையும் மீறி ஐ.நா செயற்படுமாக இருந்தால் இலங்கைக்காக சிரமம் எடுத்து குறுக்கிடும் எனக் கூறிவிட முடியாது.

தமிழ்த் தரப்பினைப் பொறுத்தவரை நிபுணர்குழு அறிக்கை நீண்டகாலத்திற்குப் பின்னர் கிடைக்கப்பெற்ற மிகப்பெரிய வாய்ப்பு. தமிழ் மக்களின் அரசியலுக்கு தற்போது சர்வதேச சாட்சி கிடைத்துள்ளது. இந்த சந்தர்ப்பத்தையும் தவறவிட்டால் தமிழ் மக்களின் கூட்டிருப்பினை பாதுகாப்பதற்கான எந்த ஒரு வாய்ப்பும் அண்மைக்காலத்தில் கிடைக்கப்பெறும் எனக்கூற முடியாது.

இலங்கை அரசிற்கு நிர்ப்பந்தம் கொடுக்கக்கூடிய வலிமை தற்போது தாயகத்தில் இல்லை. கூடிய பட்சம் தமிழ்த் தேசிய அரசியலை அழியவிடாமல் பாதுகாத்துக்கொள்ளும் செயற்பாட்டையே தாயகத்தில் முன்னெடுக்கலாம். அதனையும்கூட மிகவும் சிரமமெடுத்தே மேற்கொள்ளவேண்டிய நிலை உண்டு. சிங்கள அரசின் கைதியாக இருக்கும் தாயக மக்களினால் இதற்குமேல் எதுவும் செய்யும் நிலை தற்போதைக்கு இல்லை. இந்நிலையில் செயற்பாடுகளை முன்னெடுக்கும் பொறுப்பு புலம்பெயர் மக்களுக்கும், தமிழக மக்களுக்குமே உண்டு. இவர்கள் சர்வதேச பிராந்திய நிர்ப்பந்தங்களை உருவாக்கி இலங்கை அரசினை அசைக்கச்செய்ய முடியும். தமிழ் மக்களின் கூட்டிருப்பினை பாதுகாக்கக்கூடிய அரசியல் தீர்வினை நோக்கி சர்வதேச சக்திகளையும், பிராந்திய சக்திகளையும் தள்ளமுடியும்.

புலிகள் இருக்கும்வரை அரசிற்கு அழுத்தங்களைக் கொடுக்கும் வகையில் அவர்கள் இருந்தனர். இன்று களத்தில் அவர்கள் இல்லாத நிலையில் சர்வதேச சக்திகளும், பிராந்திய சக்திகளும்தான் அழுத்தங்களைக் கொடுக்கமுடியும். இலங்கையின் புவிசார் அரசியற் சூழல் காரணமாக தமிழ்த்தேசியப் போராட்டத்தின் வெற்றி சர்வதேச, பிராந்திய சக்திகளிலேயே தங்கியிருக்கின்றது. இலங்கை அரசாங்கம் நிபுணர் குழுவின் அறிக்கை நடைமுறைக்கு வருவதை தடுப்பதற்காக பல்வேறு வேலைத்திட்டங்களை நிபுணர்களின் உதவியோடு மேற்கொள்வதற்கு முயற்சி செய்கின்றது. மாற்றுத்திட்டம் ஒன்றை தமிழ்த் தரப்பு காத்திரமாக முன்னெடுக்காமல் இதனை முறியடிக்கமுடியாது.

எனவே ஐ.நா நிபுணர்குழு அறிக்கை தொடர்பாக தேசிய சக்திகள் நான்கு தரப்பினை நோக்கி அரசியற் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டியவர்களாக உள்ளனர்.

1. தாயக மக்கள்

2. மேற்குலகம்

3. இந்தியா

4. ஏனைய நாடுகள்

தாயக மக்களை நோக்கி

முன்னர் கூறியதுபோல தாயக மக்கள் சிங்கள அரசின் கைதிகளாக இருப்பதனால் இதுவிடயத்தில் திறன்மிக்க நடவடிக்கைகளை எடுக்க முடியாது. ஆனால் தற்காப்பு நிலையினை எடுக்கமுடியும். அதனூடாக தாயக மக்களின் விழிப்பு நிலையினை தக்கவைக்க முடியும். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய அமைப்புக்களும், தமிழ் ஊடகங்களும்தான் இதில் அதிக அக்கறையினை எடுக்க வேண்டும். அவை நிபுணர்குழு அறிக்கையினை நடைமுறைப்படுத்துமாறு வற்புறுத்த வேண்டும்.

அரச சார்பு சக்திகள் இவ்விழிப்பு நிலையினை அழிக்கவே முற்படுவர். அரசு சார்ந்த சக்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அதற்கான வேலைத்திட்டங்களை அரசாங்கம் முடுக்கி விடலாம். டக்ளஸ் தேவானந்தா, சிறீரங்கா போன்றவர்களுக்கு அரசாங்கம் மீண்டும் முக்கியத்துவம் கொடுத்து களத்தில் இறக்கிவிடலாம். வெளிநாட்டுப் பிரச்சாரத்திற்கும் அவர்களை அழைத்துச் செல்லலாம். அரசு தனக்கு நெருக்கடி வருகின்றபோது அவர்களுக்கு முன்னுரிமை கொடுப்பதும் நெருக்கடி இல்லாத காலங்களில் ஒதுக்கி வைப்பதும்தான் வரலாறாக உள்ளது.

தாயகத்தில் உள்ள நெருக்கடி என்னவெனில், மூளைச்சலவை செய்வோருக்கு எதிரான மாற்றுக் கருத்துக்களை வைப்பதற்குரிய சூழல் இல்லாமையாகும். இங்கு மாற்றுக்கருத்து என்பது தமிழ்த் தேசியத்தை நிலைநிறுத்துவதாக அமையும். அவற்றை வெளியிடுவதற்கு தாயக தமிழ் ஊடகங்கள் தயக்கம் காட்டி வருகின்றன. இதனால் ஒருபக்க கருத்துக்கள் மட்டும் மக்களுக்கு செல்கின்ற நிலை ஏற்படுகின்றது.

தாயக ஊடகங்களுக்கு இதுபற்றி அழுத்தங்களைக் கொடுத்தல் வேண்டும். இருபக்கக் கருத்துக்களையும் வெளியிடுவதற்கு தயாராக இருந்தால்தான் மூளைச்சலவை செய்வோரின் கருத்துக்களுக்கு இடமளிக்கவேண்டும். இல்லையேல் இரண்டிற்குமே இடமளிக்கக் கூடாது.

ஆனந்தசங்கரி, சித்தார்த்தன் ஆகியோரினால் ஏற்படுகின்ற நெருக்கடிகள் இந்தத்தடவை வராது. அவர்கள் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் இணைந்துள்ளமையினால் அடக்கி வாசிக்கவே முற்படுவர். மகிந்தருக்கு எதிராக நடைபெற்ற இலண்டன் போராட்டத்திற்கு இவர்கள் இருவரும் எதிர்த்தே கருத்துக்களை தெரிவித்திருந்தனர்.

ஆனந்தசங்கரி எந்த ஒழுங்கிற்கும் கட்டுப்படாதவர். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் இணைந்த பின்னரும் யாழ் இராணுவத் தளபதியை வாழ்த்தி அவருக்கு கடிதம் எழுதியிருந்தார். சிலவேளைகளில் இந்த நிபுணர் குழு அறிக்கை எல்லாம் தேவையற்ற விடயம் எனக்கூறி பான் கீ மூனுக்கு அவர் கடிதம் எழுத முற்படலாம். யாழ் தளபதிக்கு எழுதிய கடிதம் தொடர்பாக யதார்த்தவாதி என தினகரன் பத்திரிகை அவருக்கு பாராட்டுப்பத்திரம் வழங்கியிருக்கின்றது.

மேற்குலகம் நோக்கி

அமெரிக்கா உட்பட மேற்குலகம் நோக்கியும் நிபுணர்குழுவின் அறிக்கையை நடைமுறைப்படுத்தும்படி அழுத்தங்களைக் கொடுத்தல் வேண்டும். குறிப்பாக சர்வதேச விசாரணைக் குழு அமைத்தல், சிறைகளில் இருப்போரை விடுதலை செய்தல், தமிழ் மக்களின் கூட்டிருப்பினை பேணுவதற்கான அரசியல் தீர்வினைக் காணுதல் என்பவற்றிற்கு அழுத்தங்களைக் கொடுத்தல் வேண்டும்.

புலம்பெயர் மக்களே இந்தப் பணியினை பொறுப்பெடுத்தல் வேண்டும். மேற்குலகம் தமது அரசியல் நலன்களுக்காக இலங்கை அரசாங்கம் மனித உரிமைகள் தொடர்பாக சிறிய சைகைகளைக் காட்டினாலும் தமது தொடர் அழுத்தங்களை நிறுத்த முற்படும் அல்லது ஒத்திவைக்க முற்படும். புலம்பெயர் மக்கள் இதற்கு இடங்கொடுக்கக் கூடாது. நேரடியாகவும், மனித உரிமை நிறுவனங்களினூடாகவும் மேற்குலக நாடுகளுக்கு நிர்ப்பந்தங்களைக் கொடுக்க முற்படல் வேண்டும்.

ஐ.நாவும் மேற்குலகத்தின் செல்வாக்கிற்கு உட்பட்டதாகவே உள்ளது. மேற்குலகம் அழுத்தம் கொடுத்தால்தான் இதுவிடயத்தில் ஐ.நாவும் செயற்படும். அல்லது ஐ.நா இதனை கிடப்பில் போட முனையலாம். நிபுணர்குழு அறிக்கையின் தாமதத்திற்குகூட மேற்குலகே காரணம்.

இந்தியாவை நோக்கி

இந்தியாவை நோக்கிய வேலைத்திட்டமே மிக மிக முக்கியமானது. ஏற்கனவே கூறியதுபோல இந்தியா பெரிய நாடாக இருப்பதனால் மேற்குலகம் உட்பட சர்வதேச சக்திகள் இலங்கை விடயத்தில் இந்தியாவின் பக்கமே நிற்கும். ஒருதடவை சம்பந்தன் கூறியதுபோல 'இந்தியா தமிழர் பக்கம் நின்றால் உலகம் தமிழர் பக்கம் நிற்கும். இந்தியா தமிழருக்கு எதிராக நின்றால் உலகமும் தமிழருக்கு எதிராக நிற்கும்.'

ஆனால் புவிசார் அரசியல் காரணமாக இந்தியாவிற்கு இலங்கை முழுவதும் தேவைப்படுகின்றது. இதனால் இலங்கை முழுவதையும் கட்டுப்பாட்டின்கீழ் வைத்திருக்க விரும்புகின்றது. இதற்கு ஒரு செயற்பாட்டுக் கருவியாக மட்டும் தமிழர் விவகாரத்தை கையிலெடுக்க முற்படுகின்றது. இலங்கை அரசு இந்தியாவின் செல்வாக்கிற்குள் வராத காலங்களில் தமிழர் விவகாரத்தை கையிலெடுக்கும். செல்வாக்கிற்குள் வந்துள்ள காலங்களில் தமிழர்களுக்கு எதிராக செயற்படும்.

அண்மைக்காலமாக இலங்கை அரசு இந்தியாவின் செல்வாக்கிலிருந்து விடுபட்டுச் செல்கின்றது. விடுபடுவது மட்டுமல்ல இந்தியாவின் எதிரிகளாக உள்ள சீனாவையும், பாகிஸ்தானையும் உள்ளீர்க்கப் பார்க்கின்றது. இது இந்தியாவிற்கு வாழ்வுப் பிரச்சினை. இதனால் தமிழர் விவகாரத்தை தற்போது கையிலெடுக்க முனைகின்றது.

சீபா உடன்படிக்கையில் கையெழுத்திட இலங்கை பின்னிற்றல், சம்பூர் அனல் மின்நிலையம் தொடர்பாக அரசுகளுக்கிடையிலான உடன்படிக்கைக்கு பின்னிற்றல், இடம் பெயர்ந்தோருக்கான 50,000 வீட்டுத் திட்டத்தை செயற்படவிடாது தடுத்தல், வட - கிழக்கு புனர்நிர்மாணச் செயற்பாட்டில் இந்தியாவின் பங்கிற்கு முக்கியத்துவம் கொடாமை, தமிழக மீனவர்கள் தொடர்ச்சியாக கொலை செய்யப்படல், 13வது திருத்தத்தினை நடைமுறைப்படுத்தாமை என பல விடயங்களினால் இந்தியா பாரிய அதிருப்தியில் இருக்கின்றது. இந்த அதிருப்தியின் விளைவாகத்தான் உலகக்கிண்ண இறுதிப் போட்டியில் மகிந்தரும் அவரது பரிவாரங்களும் அவமானப்பட்டமை நடந்தேறியுள்ளது. மீனவரது உடல் தேடி இந்தியக் கடற்படை எவ்வித அனுமதியுமில்லாமல் வடபகுதிக் கடலுக்குள் வந்தமையும் நடந்தேறியுள்ளது.

இவ்வாறான இந்தியாவின் தேவைகளுக்கு அப்பால் தமிழகத்தின் உணர்வுகளை புறந்தள்ள முடியாத நிலையும் இந்திய மத்திய அரசிற்கு இருக்கின்றது. இவை பற்றி எனது முன்னைய கட்டுரைகளிலும் கூறியிருக்கின்றேன். இதைவிட தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கும் கனவும் வேறு மத்திய அரசிற்கு இருக்கின்றது.

இவ்வாறு இந்தியாவின் தேவை, தமிழகத்தின் அழுத்தம் என இரண்டும் சேர்ந்து செயற்படக்கூடிய நிலை இன்று இருக்கின்றது. இலங்கை சிறிது விட்டுக்கொடுத்தால்கூட இந்தியா இலங்கைப் பக்கம் சாயத் தொடங்கும். எனவே இந்தியாவின் தேவை, தமிழகத்தின் அழுத்தம் என இரண்டும் இருக்கின்ற இக்காலப்பகுதியை தமிழ்த்தரப்பு பயன்படுத்த தயாராக இருக்கவேண்டும். தமிழகத்தில் மேற்கொள்ளப்படுகின்ற செயற்பாடுகள் மூலமே இப்பணியினை வினைத்திறனுடன் முன்னெடுக்க முடியும்.

நான் முன்னைய கட்டுரைகளில் கூறியதுபோல தமிழக அரசியல் வாதிககள், இலக்கியவாதிகள், கலைஞர்கள், ஊடகவியலாளர்கள், தொழிற்சங்கவாதிகள் என்போருடன் வலிமையான தொடர்புகளை ஏற்படுத்தி செயற்பட்டால் இப்பணிகளில் வெற்றிகளைக் காணமுடியும். ஏற்கனவே சில அரசியல் குழுக்கள் அங்கு போராட்டங்களை நடாத்தத் தொடங்கியுள்ளன. இதனை மேலும் வளர்த்தெடுக்க நாம் முயலவேண்டும்.

ஏனைய நாடுகளை நோக்கி

தமிழ் மக்களுக்கு அவர்கள் விவகாரத்தில் அதிகம் தலையிடுகின்ற அமெரிக்கா உட்பட மேற்குலகமும், இந்தியாவுமே சர்வதேசமாகத் தெரிகின்றது. இதனால் சர்வதேசம் நோக்கிய சிறிய அரசியல் வேலைகள் கூட இப்பிராந்தியங்களை நோக்கியே மேற்கொள்ளப்படுகின்றன. ஏனைய நாடுகள் பற்றி அக்கறை செலுத்தப்படுவதேயில்லை.

ஆனால் ஐ.நா செயற்பாடுகள் என வருகின்றபோது ஏனைய நாடுகளையும் நாம் புறக்கணித்துவிட முடியாது. சென்ற தடவை மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான மசோதா தோற்கடிக்கப்படுவதற்கு இந்நாடுகளே பிரதான காரணியாக விளங்கின. குறிப்பாக ஆபிரிக்க நாடுகள், இலத்தீன் அமெரிக்க நாடுகள் இச்செயற்பாட்டில் முன்னிலை நின்றன.

தற்போதுகூட இலங்கையின் தூதுக்குழு அணிசேரா இயக்கத்திலுள்ள இந்நாடுகளை நோக்கிய ஆதரவுப் பயணத்தை ஆரம்பித்துள்ளது. எனவே நாமும் இந்நாடுகள் தொடர்பாக அசட்டையாக இருக்காது செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்.

சர்வதேசம் நோக்கிய பணிகளை முன்னெடுக்கும்போது கூடியவரை உலகத் தமிழர்களை இணைத்துக்கொண்டு செயற்படுவதே ஆரோக்கியமானதாக இருக்கும். ஈழத்தமிழர்கள் தனித்து செயற்படும்போது நாம் சனத்தொகையில் குறைவாக இருப்பதனால் சர்வதேச சக்திகள் பெரிதாகக் கண்டுகொள்ள மாட்டா. ஆனால் உலகத் தமிழர்களை அதுவும் குறிப்பாக தமிழகத் தமிழர்களை இணைத்து செயற்படும்போது அவர்கள் எங்களை புறந்தள்ளிவிட முடியாது. இது விடயத்தில் மலேசியத் தமிழர்கள், தென் ஆபிரிக்கத் தமிழர்கள், மொரீசியஸ் தமிழர்கள் என்போரும் அதிகளவில் உதவ முடியும்.

உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டியவை

01. ஐ.நா நிபுணர்குழு அறிக்கையை நிறைவேற்றக்கோரும் அமைப்பு என ஒரு அமைப்பினை உடனடியாக நிறுவுதல் வேண்டும்.

02. இவ்வமைப்பின் கிளைகளை உலகின் பல்வேறு பிராந்தியங்களிலும் உருவாக்குதல் வேண்டும். தற்போதைக்கு இலண்டன், கனடா, நோர்வே, தமிழ்நாடு, மலேசியா, தென் ஆபிரிக்கா, தாயகம் என்பவற்றில் உருவாக்கலாம். இக்கிளைகள் தாம் வசிக்கும் பிராந்தியங்களை நோக்கி பணிகளை முன்னெடுக்கலாம்.

03. புலம்பெயர் மக்கள் இந்தப்பணிகளை முன்னெடுக்கும்போது தம்மிடையே உள்ள குழு வேறுபாடுகளை சற்று ஒதுக்கிவைக்க வேண்டும்.

04. உடனடியாகவே நிபுணர் குழுவின் அறிக்கையை நடைமுறைப்படுத்தும்படி கோரி போராட்டங்களை ஆரம்பிக்கவேண்டும். புலம்பெயர் நாடுகளிலும், தமிழகத்திலும் உடனடியாகவே இதனை ஆரம்பிக்கலாம். பின்னர் ஏனைய நாடுகளுக்கும் இதனைக் கொண்டு செல்லலாம்.

தற்போதைய சூழ்நிலையில் கையெழுத்துப் போராட்டம், தந்தியடிப்புப் பேராட்டம், குறுஞ் செய்தி அனுப்புதல் போன்ற போராட்டங்களை உடனடியாக முன்னெடுக்கலாம்.

தவிர ஐ.நா செயலகங்கள் முன்னிலையில் ஆர்ப்பாட்டங்களையும் உண்ணாவிரதப் போராட்டங்களையும் நடத்துவது பற்றி ஆலோசிக்க வேண்டும். புலம்பெயர் நாடுகளில் ஆங்காங்கே இப்பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது என்பது உண்மையே. எனினும் இதனை பரந்துபட்ட ஒழுங்குபடுத்தலினூடாக செயற்படுத்துவது அதிகளவு பயன்களை தரக்கூடியதாக இருக்கும்.

இறுதியாக ஒன்றைக்கூற விரும்புகின்றேன்.

வரலாறு காலத்திற்கு காலம் எமக்கு வாய்ப்புக்களை உருவாக்கித் தரும். அதனை நாம் ஒழுங்காக பயன்படுத்தாவிட்டால் வரலாறு ஒருபோதும் எம்மை மன்னிக்காது.

http://www.ponguthamil.com/paarvai/paarvaicontent.asp?sectionid=2&contentid={5407C35D-CE43-42B9-AB79-A375C18364CC}

  • தொடங்கியவர்

Extracts from the UN Panel of Experts Report on Sri Lanka

Leaked by The Island, Colombo, April 17-22, 2011

Extracts from the Ban-Ki-moon panel report Part 1, 2, 3, 4, 5, and 6

http://www.sangam.org/2011/04/Extracts_Experts_Report.php?uid=4320

நான் நினைக்கின்றேன் எழுதுவதற்கு நிறைய பேர் இருக்கினம். ஏனென்றால் கடந்த இருவாரமாக எல்லா தளங்களும் ஏன் யாழிலும் கூட நான் உட்பட எழுதி இருக்கின்றேன். ஆனால் செயற்பாடு இல்லை.

செயற்பாட்டில் உள்ள சீமான்களை கண்டுபிடித்து உசுப்பேற்றி செய்ய வேண்டிய கடப்பாடும் எல்லோருக்கும் உண்டு.

Edited by உமை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.