Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

குமாரசாமியின் பகல் பொழுது

Featured Replies

குமாரசாமியின் பகல் பொழுது

பிரபஞ்சன்

குமாரசாமி அலுவலகத்தை விட்டு வெளியே வந்து தெருவில் நின்றார். அவர் ஆச்சரியப்பட்டுப் போகும்படியாக இருந்தது, அந்தப் பகல் பதினொரு மணிப் பொழுது. தெருவில் அரக்கப்பரக்க அடித்துக் கொண்டு ஓடும் மனிதர்களைக் காணோம். எல்லோரும் அலுவலகக் கூண்டுக்குள் போய் முடங்கிக்கொண்டார்கள் போலும். அதிர்ஷ்டவசமாக வானம் மந்தாரமிட்டுக் கிடந்தது. மாலை நேரங்களிலும் அதிகாலை நேரங்களிலும் மட்டும் கிடைக்கும் தண்ணீர்க் காற்று அப்போது வந்து அவரைக் குளிப்பாட்டிற்று. உலகம் ரொம்பப் புதுசாய் இருந்தது குமாரசாமிக்கு. அப்போதுதான் பிறந்த ஒரு குழந்தையைப் போல.

அடைக்கலசாமி நேற்று இறந்து விட்டாராம். சுமார் முப்பது வருஷங்களாகக் குமாரசாமிக்குப் பக்கத்தில் உட்கார்ந்து வேலை பார்த்த அடைக்கலசாமி. அவர் மறைவுக்கு அனுதாபம் தெரிவித்து விடுமுறை விட்டிருக்கிறார்கள். அடைக்கலசாமி என்பது, அவர் அணிந்திருந்த கண்களை பூதாகாரமாக்கிக் காட்டும் கண்ணாடி. ஒடிசல் தேகம், கீழ்ப்புறம் கிழிந்து பிசிறு தெரியும் வேஷ்டி, வேண்டுதல் வேண்டாமை அற்ற நிர்க்குண பரப்பிரும்ம நிலை – இத்யாதிதான். இருவரும் சேர்ந்து ஆரியபவனில் எண்ணற்ற முறை காபி சாப்பிட்டிருக்கிறார்கள். செத்துப் போனவர்க்குச் சர்க்கரை இல்லாத காபிதான் பிடிக்கும். பல வருஷங்களுக்கு முன் குடும்ப சகிதம் குமாரசாமியின் வீட்டுக்கு அடைக்கலசாமி வந்திருந்தார். சினேகிதருக்குக் கோழி அடித்துச் சாப்பாடு போட்டார் குமாரசாமி. அந்த அடைக்கலசாமி செத்துப் போய்விட்டார். குடும்பத்துக்கு மூத்த மகனாகப் பிறந்தவர். ஆறு சகோதரிகள், மூன்று சகோதரர்கள். அத்தனைபேரையும் படிக்க வைத்துக் கல்யாணம் பண்ணிவைத்து, வாழ்க்கையின் கடைசிச் சொட்டையும், சகோதர சகோதரிகளுக்காகச் செலவு பண்ணி, தான் வாழ ஆரம்பிக்கும் முன் செத்துப் போனார். பிறந்தவர் சாவது இயற்கை. ஆனால் வாழ்ந்தவர் சாவது தானே நியாயம். வாழாதவர் சாவது என்ன நியாயம்? அடைக்கலசாமி செத்தது ஒரு தவறு! காலதேவனின் கணக்கு எங்கோ பிழைபட்டுப் போய்விட்டது.

சக ஊழியர்கள் மிக உற்சாகமாக கிடைத்த வாகனங்களில் ஏறி, செத்துப்போன அடைக்கலச்சாமியைப் பார்க்கப் புறப்பட்டுப் போய்விட்டார்கள், குமாரசாமியால் இருந்த இடத்தைவிட்டு நகர முடியவில்லை. அன்றைய பொழுது அவ்வளவு பிரகாசமாய், கழுவின தட்டுமாதிரி பளிச்சென்று இருந்தது. இந்தப் பதினொரு மணிப்பொழுதின் உலகத்தை அவர் பார்த்துப் பலகாலமாகியிருந்தது. அவர் நினைவில் அந்தப் பொழுது தங்கியிருக்கவில்லை, அந்த வேளைகளில் அவர். அலுவலகத்தில் ஏதாவது கோப்பைப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருப்பார். அலுவலகம் ஏ.சி. பண்ணப்பட்ட ஒன்று. அதனால் வெளி உலக சீதோஷ்ணங்கள், தட்பவெட்ப மாறுதல், உலக இயக்கம், அதன் சந்தடிகள், வாகனாதிகளின் கர்ண கடூர சத்தங்கள் எதுவொன்றும் எட்ட நியாயமில்லை. காலை பத்து மணி தொடங்கி மாலை ஐந்து மணிவரை, அவர் தனித் தொட்டியில் போடப்பட்ட மீன்குஞ்சு.

அவருக்கு நினைவில் நிற்கிற பொழுதுகள் பரபரப்பான காலையும், மந்தமான மாலையும், உறக்க மயமான இரவுகளும்! விடியலிலேயே எழுந்து விடுகிற குமாரசாமி, உடனே காலைக்கடன்களை முடித்துக் குளித்தும் விடுவார். இல்லையெனில் ஆறு போர்ஷன்களும், ஆறு போர்ஷன்களிலும் மொத்தமாக ஜீவிக்கிற இருபத்து ஏழு பேர்களுக்கும் சேர்த்து இருக்கிற ஒற்றைக் கக்கூசுக்கு முன், கையில் பிளாஸ்டிக் வாளியோடு நிற்க வேண்டி வந்துவிடும். அதிலும், ராமாயி அம்மாள் உள்ளே நுழைந்தால் அரைமணி கழித்தே வெளியே வருவாள். வயசானால், அத்தனை நேரம் வேண்டியிருக்கும்போலும்! அதைக்கூட சகித்துக் கொள்ளலாம். அவள் புகைத்து வெளியேற்றியிருக்கிற சுருட்டுப்புகை அந்தச் சின்னஞ்சிறு ஜன்னல் அற்ற அறைக்குள்ளேயே சுற்றி வருவதால் உள்ளே இருக்கிற ஆறு ஏழு நிமிஷங்களும் அந்தப் புகையை அவரும் சுவாசிக்க வேண்டியிருப்பதுதான் சகிக்க ஒண்ணாதது. அப்புறம் ஷவரம். அது ஒரு அனிச்சைச் செயல். விரும்பினாலும் வெறுத்தாலும் மயிர் காதோரம் ஆரம்பித்து முளைத்து விடுகிறது. கொஞ்ச நாள் அதை வளர்க்கவும் செய்தார். பார்ப்பவர்கள் ‘என்ன திருப்பதிக்கா‘ என்றார்கள். அதுக்குப் பதில் சொல்லலாம். வெகு பேர், ‘என்ன வீட்டில் எத்தனையாவது மாசம்? என்றார்கள். வெட்கம் பிடுங்கித் தின்றது அவரை. ஐம்பத்திநாலு வயசில் இந்தக் கிரகாச்சாரம் வேறா? நல்ல பிளேடுகள் இரண்டு ரூபாய் வரை விற்றன. தினம் செய்து கொண்டால் வாரம் முழுக்க ஒற்றை பிளேடைக் கொண்டே ஷவரம் ஆகிவிடும். அதுவும் கடைசி மூன்று நாட்களுக்குச் சின்ன முதலாளி மாதிரிக் கடிக்கும். கண்களில் நீர் தளும்ப ஷவரம் முடித்து, கிணற்றிலிருந்து சேந்தி விட்டுக்கொண்டு குளியல். கிணற்றில் தண்ணீர் மழைக்காலங்களில், போலீஸ்காரனிடம் இருக்கும் இழி குணங்களைப் போல் நிரம்பி வழியும். கோடைக்காலங்களில், நல்லவர்களிடம் தங்கியிருக்கும் பணங்காசைப் போல அருகிப் போய்விடும். குளித்துத் தலை ஈரம் காயுமுன்பே மாமி பரிமாற வைத்திருக்கும் ஆவி பறக்கும் சோற்றை ருசி தெரியாமல் அள்ளிப் போட்டுக் கொண்டு சட்டையை மாட்டிக்கொண்டு பஸ் நிறுத்தத்துக்கு வருவார். அங்கு இருவருக்கும் முன்னால் ஒரு மாபெரும் கும்பல் பஸ்ஸுக்குக் காத்து நின்றிருக்கும்.

அந்தக் கும்பல் சந்தேகமில்லாமல், அவரைப் போல மனுஷபுத்திரர்தான் எனினும், அந்தச் சந்தர்ப்பத்தில் அவர்கள் அவரின் சுகத்தை, சௌகரியத்தைக் கெடுக்க வந்த ராட்சஸர்களாகப் படுவர். ‘ஆ! இந்தப் பட்டணத்துக்கு வந்து மனுஷர்களை வெறுக்கும் படியாச்சே!‘ என்று அவர் நோக்கிய பயணம் அத்தன்மையதாய் விளங்கியதே! அந்தக் கும்பலில் அவதாரப் புருஷர்கள் இருக்கக்கூடும். மகாத்மாக்கள் இருக்கக்கூடும். சிபிச் சக்ரவர்த்திகள், கௌதமபுத்தர், ஏகலைவர், ரிஷ்ய சிருங்கர், அனுசுயாக்கள், நாளாயினிகள், கோப்பெருந்தேவிகள், இருக்கலாம்தான். இல்லை என்று கூறமுடியாது. எனினும் பஸ்ஸில் ஏறுகையில் அவர்கள் அத்தனை பேரும் ஒன்று திரண்டு நான்கு கால்களை உடையவர்களாகவே பரிணாமம் எய்துவார்கள். இதழ் நீங்கி வெளிப்பட்ட கோரைப் பற்களை உடைய மிருகங்கள். ரத்தப் பசி கொண்ட மிருகங்கள். பேருந்து வந்து நின்றதும், ஒருவர் மட்டுமே நுழையத்தக்க அதன் வாயிலில், ஐம்பத்தேழு பேரும் ஏற முயற்சித்து, பத்துப்பேர் மட்டுமே நிற்கத் தக்கதாக வருகிற வாகனத்தில், அத்தனை பேரும் பிறர் கால்களில் நிற்கப் பிரயாசைப்பட்டு, ஒருத்தர் உடம்பை ஒருத்தர் மேல் இழைத்துப் பூசி, படரவிட்டு, துர்க்கந்தங்களை வியாபகம் செய்து. காலபதியென்னும் கடிகாரத்தின் பெரிய முள்ளைப் பின்னோக்கி இழுக்கும் மார்க்கண்டேய முயற்சிகளில் லயித்துப்போகும் விவஸ்தை கெட்ட விவகாரத்தில் குமாரசாமிக்கு என்றுமே சம்மதம் இருந்ததில்லைதான். இருந்தும் என்ன? அவர் அந்த யுத்த களத்தில் எப்படியோ இழுத்து விடப்படுகிறார். அவர் கண்கள் கட்டப்பட்டு அவர் கைகளில் ஒரு பட்டாக்கத்தி அளிக்கப்படுகிறது. அவர் அதை நாலாப் பக்கமும் வீசி ஹதம் செய்ய வேண்டும்.

காலைகள் இந்த விதமாகக் கழித்தன குமாரசாமிக்கு. அடடா! இந்தப் பதினொரு மணி உலகம் இந்த மாதிரியா இருக்கும்? அபூர்வமாக இருக்கிறதே! இது எப்படி அவர் கண்களுக்குத் தட்டுப்படாமல் போயிற்று?

மாலைகள் என்பன, வயசாளிகள் உட்கார்ந்திருக்கிற நகரசபைப் பூங்கா மாதிரி. நகரசபைப் பூங்காக்கள் பெரும்பாலும் புஞ்சைக் காடுகள் ‘சக்தி உள்ளதுகள் பிழைக்கும்‘ என்கிற தத்துவத்தை புல் பூண்டுகள் நிறைந்திருக்கும். குறித்த காலத்தில் நீர் ஊற்றப்பட எந்த ஏற்பாடும் இல்லாத காரணத்தால், செடிகள் தவங்கி மெலிந்து, சிறுத்து, வாடி, சத்துணவுக் கூடத்துக் குழந்தைகள் மாதிரி பரிதாபகரமாக இருக்கும். மாலைக் காலத்துக்கு வந்துவிட்ட முதியவர்கள் அல்லதும் பழம்பெரும் பிரஜைகள், அங்குள்ள காரை பூசிய பெஞ்சுகளில் அமர்ந்து, தங்களின் செரிக்கப்படாத உணவு மிச்சங்களைத் தோண்டிக்கொண்டு வந்து அசை போட்டுக்கொண்டிருக்கும் காட்சி, மயான பூமியின் வரவேற்பு அறையில் அவர்கள் அமர்ந்திருப்பது போன்ற பிரமையை ஏற்படுத்தும்.

மாலைக் காலங்கள் என்பன அவர் வீடு திரும்பும் காலங்கள். ஆபீசை விட்டுப் பொடி நடையாக நடந்து, பஸ் நிறுத்தத்தைச் சேர்வதற்கு அரை மணி நேரம் ஆகும். இடைப்பட்ட பாதை, மஞ்சள் பூத்த வெயிலில் பார்க் பெஞ்சின் முதியவர்களைப் போலக் களைப்புடன் காயும். பெட்டிக் கடைகளில் மாலைப் பத்திரிகைகளின் விளம்பர அறிக்கைகள் படுசுவாரஸ்யங்களைத் தாங்கிக் கொண்டு தொங்கும். அரசியல், சினிமா மற்றும் பொது வாழ்வுப் பிரமுகர்களின் பேச்சு அல்லது நடவடிக்கைகள் அதில் வெளிப்பட இருக்கும். ஒருவர் அவருடைய எதிரியை நோக்கி நீ தமிழனுக்குப் பிறந்தவனா? என்று கேட்டிருப்பார். சட்டசபையில் வேஷ்டி விலக்குதல், துண்டு உருவல் போன்ற யுத்தங்கள் நடைபெற்றிருக்கும். ஒருவகையான ஆபாசப் பத்திரிகை படித்த விறுவிறுப்பு உடம்பில் ஏறும். தமிழர்களுக்கு இந்த ரகமான விறுவிறுப்பை ஏற்றுவதுதான் இந்தப் பத்திரிகைகளின் நோக்கமாக இருந்தது எனில், பத்திரிகைகளே மக்களை ஜெயித்தன எனலாம்.

செய்திகள், விட்ட இடத்திலிருந்து தொடர்ந்து சிந்தித்தபடி குமாரசாமி நடப்பார். பள்ளிவாசலுக்கு முன்னால் இருக்கும் டீக்கடையில் சர்க்கரை இல்லாம் ஸ்ட்ராங் டீ வாங்கிக் குடிப்பார். ஆபீஸ் களைப்பு, முதுகு வலி, பிருஷ்ட எரிச்சல் ஆகியவை ஒருவகையாகச் சமனப்பட்டாற் போலத் தோன்றும். அதற்குள் கடைகளில் விளக்குகள் எரிய ஆரம்பிக்கும். பிரகாசமான, கண்களைக் கூசவைக்கும் வெளிச்சங்களில் வியாபாரம் தொடரும். எத்தனை துணிக்கடைகள்? எத்தனை ஷாப்புச் சாமான் கடைகள்? எத்தனை ஓட்டல்கள்? எத்தனை எத்தனை அரசாங்க, தனியார் அலுவலகங்கள்? மனுஷத் தேவைகள் மிகப் பலவாக விரிந்து விட்டன. ‘உண்பது நாழி உடுப்பது ரெண்டு முழம்‘ என்கிற அம்மாஞ்சித்தனங்கள் காலாவதி ஆகிவிட்டன. நகப்பூச்சுக்கள் கூடப் பத்து வர்ணங்களில், நெற்றிப் பொட்டு பலப்பல வர்ணங்களில், அக்குள் மயிர் நீக்க இருபதுக்கும் மேற்பட்ட கம்பெனிகள் உயிரை விட்டுக்கொண்டு லோஷன் தயாரிக்கின்ற. ஆண்களையும் பெண்களையும் அழகர்களாக்க என்றே அழகு நிலையங்கள் நகரங்களில் பெருத்திருக்கின்றன. காலை தொடங்கி நள்ளிரவு வரை பெண்களை அடுப்படிக்குள் முடக்கிப் போட்ட வேலைத் தொடர்களைச் சௌகர்யப்படுத்த, சீக்கிரம் முடிக்க எத்தனை இயந்திரங்கள்? இருந்தும், இன்னும் வறுவல், பொரியல், அப்பளம் வடை என்று அதே பழைய சோற்றுப் பட்டியல்...!

பொழுது, லேசான போதை கொண்டாற் போல, மெல்லிசான கிறக்கம் கொண்டிருக்கும் மனிதர்களின் வயிறுகள் சற்றே புடைத்து எச்சம் வெளிப்படுத்த ஆயத்தம் கொண்டிருக்கும். மாலை நேரம் வந்து இருட்டத் தொடங்குகையில் மனித மனம் பறவைகளின் மனோபாவம் கொண்டு, விரைந்து கூடு சேரும் எண்ணத்தைக் கொண்டு விடுகிறது. வீடுகளில், இன்பத்திலும் துன்பத்திலும் விட்டு நீங்காதபடி இருப்பதாக உறுதி செய்து வாழ வந்திருக்கிற மனைவிகள் இருப்பார்கள். அவர்கள் மூலம் சமூகச் சங்கிலியின் கண்ணி அறுபடாது இருக்கும்பொருட்டு பெற்றெடுத்த பிள்ளைகள் இருப்பார்கள். ஆகவே, மாலைக்காலம் என்பது ஆண்களும் பெண்களும் வீடு திரும்பும் காலம். குமாரசாமி பஸ் நிறுத்தம் வந்து நிற்பார். அங்கிருந்து பஸ் பிடித்து வீடு போய்ச்சேர வேண்டும் சாயங்கால நேரங்களில் வீடு திரும்பும் அலுவலர்களின் முகங்கள், அவசியம் அவதானிக்கத்தக்கவை. எண்ணெய் வழிவதால் முகம் லேசாய் இருண்டு‘ பளபளப்புற்றிருக்கும். குமாரசாமியை உள்ளிட்ட பயணிகள், தவத்தில் ஈடுபட்டிருக்கும் முனிபுங்கவர்களாகிவிடுவார்கள். பிரும்மத்தைக் கண்டடைதலே இவர்கள் லட்சியம் என்பது போல! பயணிகளின் லட்சியம் தங்கள் பயணத்துக்கான பேருந்தைக் கண்டு அடைதலாகும். கடந்த எட்டுமணி நேரங்களில் அவர்கள் முகத்தில் எழுதி ஒட்டியிருந்த அவர்களது உத்தியோகங்களின் பெயரை அழித்துக் குமாரசாமியாகவும்‘ ஜான் பிரிட்டோவாகவும், நசீர் அகமதாகவும் தம்மைக் கண்டுகொள்ளப்போகும் தவிப்பும் துலாம்பரமாகத் தென்பட அவர்கள் நிற்பார்கள்.

நேற்று இதே நேரம், குமாரசாமி இதே பஸ் நிறுத்தத்தில் நின்றிருந்தார். அடைக்கலசாமி அவரைக் கண்டு அவர் பக்கத்தில் வந்து நின்றார். எத்தனை மணிக்கு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது? ராத்திரி பதினொன்றரை மணிக்காம்! ஆட்டோ பிடித்து அவரை ஆஸ்பத்திரிக்கு ஏற்றிச் சென்றிருக்கிறார்கள். வழியிலேயே அவர் ஆவி பிரிந்துவிட்டது. அவர் இறந்த நேரத்தைச் சுமார் பன்னிரண்டு என்று கணக்கிடலாமா? இடலாம். அப்படியெனில் தான் பன்னிரண்டு மணிக்கு இறக்கப்போவதை அறியாத அடைக்கலசாமி, அந்த நேரத்துக்குச் சுமார் ஆறுமணி நேரத்துக்கு முன்னால் குமாரசாமியைக் கண்டு அவர் பக்கத்தில் வந்து நின்றார்.

குமாரசாமி யோசித்துப் பார்த்தார். அந்த மாலையில் அவர் முகத்தில் மரணம் ஒன்றும் எழுதியிருக்கவில்லை. வேலை பார்த்த களைப்பு இருந்தது. தெளிவோடும், சமயங்களில் நகைச்சுவை தெறிக்கவும்தான் அவர் பேசினார். “பெரிய தங்கை லட்சுமி வந்திருக்கா, குமாரசாமி. இது அவளுக்கு மூணாவது பிள்ளை. மூணாவது பிள்ளை பிரசவத்துக்கும் அண்ணன் வீட்டுக்கு வந்து, அண்ணனுக்கு தொந்தரவு தருவதாவதுன்னுதான் அவளே நினைச்சிருக்கா. நம்ம வீட்டில் என்ன சொன்னாங்கன்னா, கண்ணு உன் அம்மா உசுரோடு இருந்து நீ பிள்ளையாண்டு வந்திருந்தா, இந்த மாதிரி நினைப்பு வருமா. என்னை இப்படி அசலா நினைக்கிறபடி ஆச்சான்னு கேட்டிருக்காங்க. லட்சுமி கண்ணாலே ஜலம் விட்டிருக்கா... நல்ல பொண்ணு. மாமியார் ஒரு லங்கடி. பேச்சு பாவனையெல்லாம் சதையைப் பிச்சுத் தின்கிற மாதிரி இருக்கும். அவள்தான் பெண்ணை மூன்றாம் பிரசவத்துக்கும் இங்கே அனுப்பி வைத்திருக்கிறாள். அவள்தான் யார்? நம் குழந்தை அல்லவா? இருக்கட்டும். செலவோட செலவு. கடைசித் தம்பிக்கு வேலை கிடைச்சுக் கல்யாணம் பண்ணி வச்சுட்டேன்னா, அப்புறம் எனக்கென்ன கவலை, நான் ராஜாதான்.

குமாரசாமி, அடைக்கலசாமியின் கால் செருப்பைக் காண நேர்ந்தது. சாதாரண ரப்பர் செருப்புதான். கட்டை விரல் மோதிரம், மேல் வார் அனைத்திலும் ஒட்டுப்போட்டுத் தைத்திருந்தார். இன்னும் மேலே தைக்க முடியாத அளவுக்கு அது பிய்ந்துபோய் இருந்ததை அவர் அறிந்தார். போட்டிருந்த கதர்ச் சட்டையில் பல இடங்களில் மீன் முட்கள் மாதிரி தையல் போட்டிருந்தது.

அடைக்கலசாமி சொன்னார். “செருப்பு மாற்றக் கூடாதான்னா கேக்கிறீங்க? பேஷா மாற்றலாமே. என்ன சங்கதின்னா, வருஷம் ரெண்டாயிடுச்சி எனக்கும் அதுக்கும் உறவு ஏற்பட்டு. ஒருத்தரை விட்டு ஒருத்தர் பிரிய மனசு வரமாட்டேங்குது...“ இப்படியாகப் பேசிக்கொண்டிருந்தவர், மறக்காமல் லட்சுமிக்கு ஸ்வீட் வாங்கிக் கொண்டு வீட்டுக்குப் போக வேண்டும் என்றார். லட்சுமிக்கு ஸ்வீட் பிடிக்கும், “வாருமே, ஒரு டீ குடிக்கலாம்“ என்று வேறு சொன்னார். “ஐயோ பாவி மனுஷன் கடைசிமுறையாகக் கூப்பிட்டிருக்கிறார். போகாமல் இருந்து விட்டோமே“ என்று மனம் நொந்தார் குமாரசாமி.

ஒரு ஆட்டோ அவர் அருகில் இடித்துக் கொண்டு நிற்கிறாற் போல் நின்றது.

“வரியா சார்?“ என்றார் ஓட்டுநர்.

குமாரசாமி மறுத்தார். பகல் பொழுது இவ்வளவு ஆச்சரியங்களுடன், அழகுடன் திராட்சைக் குலைமாதிரி அவர் முன் தொங்கிக்கொண்டிருக்க அனுபவியாது. வண்டிக்குள் ஏறிச்செல்ல அவருக்குச் சம்மதமில்லை.

காலைகளைப் போலவே மாலைகளிலும் பஸ்ஸில் நெருக்கியடித்துக் கொண்டுதான் மக்கள் பயணம் செய்கிறார்கள். ஆனால், இப்போது அவர்களின் மனமும் உடம்பும் வேறுமாதிரியான பிரச்சனைகளைச் சந்தித்துக்கொண்டிருக்கும். காலைகளில் இருந்த மனிதப் பகை தணிந்து சோர்வு மிகுந்திருக்கும். டிராபிக் போலீஸ் காரனிடம் இருந்து தப்பித்து ஓடுகிற லாரிக்காரர்களின் மன நிலையை அவர்கள் பெற்றிருப்பார்கள்.

குமாரசாமி தன் பேட்டையை ஆறே முக்காலுக்கு அடைவார். ஏழுமணி ஆனாலும் ஆச்சரியமில்லை. அங்கிருந்து நடை. முதலில் மார்க்கெட் சந்து திருப்பம். அந்த இடம் திறந்தவெளி சிறுநீர் கழிப்பிடம். பெரும்பாலான மார்க்கெட் வியாபாரிகளும், வாடிக்கையாளர்களும் அங்குதான் கழிக்கவேண்டி வரும். மூக்கையும் மூச்சுக் குழாய்களையும் எரிச்சல் அடைய வைக்கும் நாற்றம் ‘பொதுக்‘கென்று அங்கிருந்து எழும். பலருக்கு வாந்தியும்கூட வரும். குப்பைகளின் குவியல்களில் இருந்து பந்தாய்ச் சுருட்டிக்கொண்டு எழும் அவிந்த நாற்றம் இன்னொரு பயங்கரம். அங்கு கும்பல்களாகப் பன்றிகள் வாசம் செய்யும் பன்றிக் குட்டிகள் பார்க்க வெகு தமாஷானவை. அவைகளின் குறுகுறுப்பும் குழந்தைமையும் பார்க்க அழகியன. பன்றிகளைக் கடந்தால், நாய்கள். நாய்கள் வெகு சுதந்திரமாக அங்கு ஜீவித்திருந்தன. கடைத்தெருவில் வரிசைக்கிரமமாக மூன்று இறைச்சிக் கடைகள் இருந்தன.

சற்று உள்தள்ளின சந்தில் மாட்டிறைச்சிக் கடையும் இருந்தது. எந்த நாயையும் எந்த வீட்டாரும் வளர்க்கவில்லை. அவைகள் தாமே இரை தேடித்தின்று வளர்ந்தன. மீந்து போன சாதத்தை யாரேனும் ஒரு வீட்டார் தெருவில் கொட்டுகையில், எங்கிருந்தோ ஏழு எட்டு நாய்கள் பிரசன்னமாகித் தம் பங்குக்குப் பெரும் களேபரத்தைச் செய்யும். நாய்களின் நடமாட்டம் தெருவார்க்கு உபயோகமாகவும் இருந்தது. புது மனுஷர்களோ, திருடர்களோ அவற்றின் கண்களுக்குத் தப்ப முடியாது. குமாரசாமியை நாய்கள் அறியும். குண்டும் குழியுமான அந்த ரோட்டில் எது பள்ளம். எது நாய் என்று அறிவதில் இரவு நேரங்களில் பெருஞ்சிரமம் அவருக்கு ஏற்படவே செய்யும். சர்வ ஜாக்கிரதையாக அடியெடுத்து வைத்து நடக்க வேண்டியிருக்கும். பள்ளம் என்று நினைத்து நாயின் வயிற்றில் காலை வைத்துவிடக்கூடும். நாய்கள் கவ்வாமல் விடாது. இந்தப் பரீட்சை மீன்துறை அலுவலகம் வரையில்தான். அதை ஒட்டிய மீன் ஸ்டாலில் வெளிச்சம் இருக்கும். கம்பென்று மீன் வாசம் ஆளைத் தூக்கும். வெட்டி அடுக்கப்பட்ட வஞ்சரம், வௌவால் மீன்களில் ஈக்கள் நிதானமாகப் பறந்தபடி மொய்க்கும். ஞாயிற்றுக் கிழமைகளில்தான் குமாரசாமி மீன் எடுப்பார். ஒரு ஞாயிற்றில் மீன், ஒரு ஞாயிற்றில் கோழி, பதினைந்து நாட்களுக்கு ஒருமுறைதான் புலால். இது ஒன்றும் அவர் விரதமல்ல. அது அவருடைய வருமானம் விதித்திருந்த கட்டளை. வருமானம், நாக்கையும் கட்டுப்படுத்தும் அதிகாரம் கொண்டது.

மீன் கடை கடந்ததும் பட்டாணிக்கடை வரும், கடலை வறுபடும் சுகமான வாசனை அவரை எட்டும். சில வாசனைகள் சில இடங்களின் முகவரியாகவே இருந்தது ஆச்சரியம் தான். பட்டாணிக் கடைக்குப் பக்கத்தில்தான் அவர் நித்தமும் காய்கறி வாங்கும் கடையிருந்தது. பச்சைக் காய்கறிகளை மேலும் பச்சையாக்கும் பொருட்டு விஷேசமான விளக்கு போட்டிருக்கும் கடை. குமாரசாமி சற்று நேரம் யோசித்தபடி இருப்பார். முந்தின நாள் வாங்கிச் சென்ற காய்கறி என்னவாக இருக்கும் என்பது அவர் யோசனையாக இருக்கும். முந்தின நாள் காய்கறி என்பது, இன்று காலை நெற்றியை அழுந்தத் தேய்த்தவாறு யோசித்தபடி நிற்பார். சில சமயங்களில் ஞாபகம் வரும், பல சமயங்களில் வராது. இன்று சமையலில் கத்திரிக்காய் என்றால் நாளைச் சமையலில் வெண்டைக்காய். காய்கறிகள்கூட நாலோ ஐந்தோதான் புழக்கத்தில் இருந்தன. ஒன்று மாற்றி ஒன்று, ஏதோ ஒன்று.

எதை வாங்கிக் கொண்டுப்போய் போட்டாலும் வாய் பேசாது சமைத்துப்போடும் மனைவியாக யசோதை அவருக்கு வாய்த்திருந்தாள். யசோதையை நினைக்குங்கால் அவருக்குள் பச்சாதாபம் பொங்கும். திருமணமான புதிதில் மாங்கொழுந்து நிறத்தில் உற்சாகம் பொங்க வளையவந்த பெண்ணாகத்தான் அவள் இருந்தாள். அவளைக் கைப்பிடித்துக் காற்றும் வெளிச்சமும் சம்சயப்பட்டுக் கொண்டு நுழையும் திருவல்லிக்கேணி ஒண்டுக் குடித்தன வீட்டில் குடி வைத்ததுதான் அவர் செய்த பிசகாக இருக்க வேண்டும். அத்துடன் அவளுக்கு மூன்று பிள்ளைகள் பிறந்தன. ஏனோ அவள் வாய்ப்பேச்சையே மறந்து கொண்டு வந்தாள். அவளைப் பார்க்கும் போதெல்லாம் குமாரசாமி குற்ற மனப்பான்மையில் குமைவார். ஒரு பெண்ணை, மனைவியாக்கி தாயுமாக்கி, அப்படி ஆக்குவதன் மூலமாகச் சீரழிக்க முடியுமென்பது தனக்கு நேர்ந்தது குறித்து அவருக்கு மிகுந்த வருத்தம் இருந்தது. அவள் வாய்திறந்து அவரிடம் எதுவும் கேட்டது இல்லை. சண்டை போட்டதும் இல்லை. முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு பேசாமலிருந்ததும் இல்லை. ஒரு வாரம் பத்து நாட்கள் அம்மாவீட்டுக்குப் போய் வந்ததும் இல்லை. அப்படியெல்லாம் யசோதா இருந்திருந்தால் அவருக்கு அந்த அம்மாளிடம் சௌஜன்யம் இருந்திருக்க வாய்ப்புண்டு. அப்படி இல்லாமையினாலேயே அவருக்கும் அவளுக்கும் இடையே மௌனம் சூழ்ந்துகொண்டது உடைக்க முடியாத கற்பாளை போன்ற மௌனம்.

குமாரசாமி காய்கறி வியாபாரத்தை முடித்துக்கொண்டு தனக்கென்று அவர் வைத்திருக்கும் ஒரே சொகுசுப் பழக்கமான இரவுச் சாப்பாட்டுக்குப் பிறகு அவர் சாப்பிட இரண்டு வாழைப்பழங்களை வாங்கிக்கொண்டு அந்த உபயோகத்துக்கெனவே வைத்திருக்கும் துணிப்பையில் அவற்றை இட்டுக்கொண்டு நடப்பார். சுமார் அரை மைல் இருட்டு பூசி மெழுகியிருக்கும் தெருவில் அவர் நடப்பார். குமாரசாமி மாலைகளைக் கடப்பது இப்படித்தான். அந்த வழிப் பயணத்தில் திடுமெனச் சில நாட்களில் அவரைச் சந்தோஷம் பற்றிக் கொள்ளும். சந்தோஷத்தின் வெளிப்பாடாக மனசுக்குள் அழுந்திக்கிடக்கும் பழைய பாடல்கள் பீறிட்டுக் கொண்டு எழும். பெரும்பாலும், ‘நமக்கினி பயமேது‘ என்று தொடங்குகிற சின்னப்பாவின் பாடலை முனகியபடி நடப்பார். கல்யாணி ராகத்தின் ஆலாபனை அவருக்குத் தெரியாது, ஆனால் அவருக்கு இருக்கும் மனோபாவப்படி அந்த ராகம் வடிவெடுக்கும்.

இரண்டு குடித்தனங்கள் இருந்த அந்த வீட்டின் பிற்பகுதியில் அவர் குடியிருந்தார். முற்பகுதிதான் அவருக்குப் பிடித்திருந்தது. அங்கிருந்து வானம் தெரிந்தது, மரங்களின் விரிந்த தலைகள் தெரிந்தன. அடுத்த வீட்டுக் குழந்தை மாதிரி காற்றும் வெளிச்சமும் சுதந்திரமாக உள்ளே நுழைந்தன. நண்பர்கள் வந்தால் உட்கார்த்தி வைத்துப் பேசக் கொஞ்சம் பெரிய ஹால் இருந்தது. ஆனால் இவை அனைத்துக்குமாக வாடகை ஐந்நூறு என்றார்கள். பிற்பகுதிக்கு வாடகை முந்நூறுதான். கோவில் கர்ப்பக்கிருஹம் மாதிரி எந்நேரமும் இருண்ட அறை. வாழைக்காய்களை வாங்கிப் போட்டால் ஓரிரவுக்குள் பழுத்துப்போகும் வகையாய் எந்நேரமும் சூடான காற்றுப் புழங்கும் அடுப்பறை. குமாரசாமிக்கு முற்பகுதியில் குடியிருக்க விருப்பம். ஆனால் பிற்பகுதியில் இருந்தார்.

“அம்மா... அப்பா வறாங்க...“ என்பாள் நீலா. பெரிய பெண். எஸ்.எஸ்.எல்.சிக்கு மேல் படிப்பு ஏறவில்லை என்று வீட்டோடு இருப்பள். டைப் கற்றுக்கொண்டு, மூன்றாவது வீட்டிலிருந்து பழைய தொடர்கதை பைண்டு வால்யூம்களை வாங்கி வாசித்துக் கொண்டு காலம் கழிப்பவள். இரண்டாவது பெண் கோமளா. அம்மாவுக்கு ரொம்பவும் இசைந்தவள். இளம்பிள்ளைவாதத்தால் கால் சற்றே கோணலாகிப் போனவள். மூன்றாமவள் சாந்தி, நாலாம் வகுப்பு வாசிப்பவள். அப்பா வேலை விட்டு வரும்போது தூங்கி விட்டிருப்பாள். காலை புறப்படும்போது அவளும் பள்ளிக்குப் புறப்பட்டுக் கொண்டிருப்பாள் ஆகவே பேச நேரம் இருக்காது.

யசோதையிடம் பையைக் கொடுப்பார். குமாரசாமிக்கும் அவளுக்குமான சம்சார பந்தம் அந்தப் பையோடு முற்றுப் பெற்று கொண்டு குளியல் அறைக்குச் செல்வார். குளித்து மீள அரைமணி ஆகும். தட்டில் சாதம் பரிமாறி இருக்கும். தடுக்கில் அமர்ந்து சாப்பிடுவார். குழந்தைகள் இழுத்துப் போர்த்துக்கொண்டு உறக்கத்தில் இருப்பார்கள். உண்டு, வாசலுக்கு வீட்டின் முற்பகுதிக்கு வருவார். இரும்புக் கதவைச் சத்தமில்லாமல் திறந்துகொண்டு வீதிக்கு வந்து கைலியை மடித்துக் கட்டிக்கொண்டு தெரு முனைவரை ஒரு நடை நடந்து வருவார். அதற்குள் கண்ணை உறக்கம் விரட்டிக்கொண்டு வரும். மணியும் அதற்குள் ஏறக்குறைய பத்தை நெருங்கிக் கொண்டிருக்கும். படுக்கையில் வந்து விழுந்தார் என்றால், கனவுகள் அற்ற தூக்கத்தில் ஆழ்ந்துவிடுவார்.

குமாரசாமி பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார்.

இறந்துபோன அடைக்கலசாமியின் சடலத்தைப் பார்த்துக் கடைசி மரியாதை செலுத்த வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுபவர் அவர். இதர அலுவலர்கள் அங்ஙனம் அந்நேரம் தங்கள் இறுதி மரியாதைகளைச் செலுத்திக்கொண்டிருப்பார்கள். அசைவில்லாமல் படுத்துக் கிடக்கும், ஒரு காட்சிப் பொருளைப்போல பார்க்கத்தான் வேண்டுமா என்று தமக்குள் ஒருமுறை கேட்டுக்கொண்டார் குமாரசாமி. குடும்பம், சகோதர சகோதரிகள், அவர்களின் உயர்வு என்று சதா இயங்கிக் கொண்டிருந்த ஒரு மனிதன் இயக்கத்தை நிறுத்தி விட்டபின், வீழ்ந்து பட்டபின் அடைக்கலசாமிக்குச் செய்கிற அவமானம் என்றுகூட அவருக்குத் தோன்றவாரம்பித்தது. அவர் அடைக்கலசாமியின் சவ ஊர்வலத்துக்குச் செல்வதில்லை என்று முடிவு செய்தார். ஆகவே, வேறு எங்கு போவது?

அவருக்கு நடக்க வேண்டும் போலிருந்தது, விட்டேத்தியாக, நோக்கமில்லாத ஊர் சுற்றியைப் போல நடந்து சுற்ற வேண்டும்போல இருந்தது. நடப்பதற்காகவே நடக்கிற ஊர்சுற்றி, கண்களை கேமராவாக்கி, மனுஷர்களைப் பிடித்து மனசுக்குள் போட்டுக் கொள்கிற ஊர்சுற்றி. அந்த நினைப்பே அவருக்குள் இளமையைக் கசியவைத்து இருபது முப்பது ஆண்டுகள் அவரிடமிருந்து ஆவியாகக் கரைந்து அவரை இளைஞனாக்கி விடுகிறது. அவர் நடக்கத் தொடங்கினார். ‘எக்ஸ்பிரஸ் ஆபீஸ் நேர் எதிரே சூடாக வாழைக்காய் பஜ்ஜி தின்றுக்கொண்டு நிற்கின்ற சல்வார் கமீஸ் அணிந்து தலைமுடியை அலட்சியமாகப் பறக்கவிட்டபடி சுதந்திரத்தின் சீமந்த புத்திரிகளாகக் காட்சியளிக்கிற இரண்டு பெண்களை அவர் கண்டார். அந்தக் காட்டியை அவர் மிகவும் ரசித்தார். இந்தப் பெண்கள் நின்ற இடத்தில் தன் பெண்களை வைத்துப்பார்த்தார். வருத்தமாக இருந்தது. பெரியவள் படிப்பு வரவில்லை என்கிறாளே! படிப்பு கூடி சிலரிடம்தான் வரும்போலும். சின்னச் சம்பளக்கார வீட்டுப் பிள்ளைகளுக்குப் படிப்பு வராதா, வரக்கூடாதா என்ன?

திடுமென செண்பக ராஜலட்சுமியைப் பற்றிக்கொண்டு மனக்குரங்கு எம்பிக் குதித்தது. அது அந்தக் காலம். செண்பகா உருவாத நெய் மாதிரி. ஊதில் எஸ்.எஸ்.எல்.சி. எழுதி முடித்த கையோடு, ஏதோ ஒரு சின்ன கம்பெனியில் ஏதோ ஒரு வேலையில் சேர்ந்திருந்த காலம். கிராமத்து நாட்டுப்புற அம்மா. கட்டுகிற புடவையைச் சுற்றிக்கொண்டு கோணல் வகிடும். புருவ மத்தியில் துண்டு நெருப்பு மாதிரி குங்குமமும் வைத்துக்கொண்டு அவள் வருவாள். மகிழ மரத்தடி பஸ் நிறுத்தத்தில்தான் அவள் பஸ் ஏறுவது வழக்கம். வயசான மரம் அது. பாரியான உடம்பும், மிகவும் விசாலமான, வனத்தைத் தழுவுகிற மாதிரி கைகளை விரித்துக் கொண்டு அது நிற்கிற பாங்கும் ஒரு ஈர்ப்பைக் குமாரசாமிக்கு ஏற்படுத்தியிருந்தது. தாழங்குடையைச் சின்னது செய்தமாதிரி அதன் பூக்கள் நிழல்குடையின் மேலும், தரையிலும் சிந்திக்கிடப்பது மனசை வருடச் செய்கிற காரியம்தான். இயன்றவரை பூக்களை மதிக்காமல் செண்பகா நடந்து நிற்பதைப் பல சமயங்களில் குமாரசாமி பார்த்திருந்தார். அழுக்குப்படாத, வெள்ளை நிறத்துப் பாதங்கள், செருப்புக்கு மேல் இருந்தாலும் பூமியில் படாது, பூமிக்கு மேல் நிற்பதாக அவர் நினைத்துக்கொண்டார். நிறுத்தத்தின் மேற்கு மூலையில், தந்திக் கம்பத்துக்கு அருகில் அவள் நிற்பாள். நாளாவட்டத்தில் அவளுக்குச் சில அடிகள் தள்ளி அவள் அருகாக நிற்க வேண்டுமென்று அவருக்கு ஏனோ தோன்றியது.

அவர் நிற்கிற இடத்திலிருந்து அவளைப் பக்கவாட்டத்தில் முழுமையாகப் பார்க்க முடிந்தது அவரால். காற்றடித்துக் கலைகிற காலைக் குளியல் ஈரம் போகாத கழுத்துப்புற ஒற்றை முடி பல பிரதிமைகளை அவரிடம் ஏற்படுத்தியது உண்மை. காற்றில் அசையும் நாற்றுக்கள். கோட்டைமேல் பறக்கிற கொடி, கறுப்பு வானத்தில் நீந்தும் வெள்ளை மேகம், காயவைத்த, காற்றில் படபடக்கிற கறுப்பு நிறத் துவாலை எனப் பல பிரதிமைகள், அல்லது பிரமைகள்.

அந்தக் காலங்களில் இவ்வளவு ஜனங்கள் இல்லை. அல்லது இவ்வளவு பேர் வேலைக்குப் போவதில்லை. கூட்டம் நெருக்கியடிப்பதில்லை. ஆகவே, மேயப் போன பசுமை எதிர்பார்க்கிற சாவகாசத்தில் பஸ்ஸை எதிர்பார்த்து அவள் நிற்பாள். கண்கள் கிழக்குத் திசையையே பார்த்துக்கொண்டிருக்கும். அவர் நிற்கும் இடத்திலிருந்து அவள் கண்கள் துலாம்பரமாகத் தெரியும். வெள்ளைக் கைக்குட்டையில் கறுப்பு ரோஜா படம் போட்ட மாதிரியான அவள் விழிகள் அசைவற்றுக் கிழக்குத் திசையையே நோக்கியபடி இருக்கும். அவரும் அவளும் ஏறிச் செல்லவேண்டிய பஸ் ஒன்றுதான் என்று கூறுதற்கு இல்லை. ஆறாம் எண் பஸ்ஸில் அவர் சென்றால் அவருடைய அலுவலக வாசலிலேயே போய் இறங்கலாம். ஆனால், அவள் செல்வதோ ஐந்தாம் எண் பஸ். அதில் போனால் அவர் சுமார் இரண்டு பர்லாங்கு தூரம் நடந்து போய் அலுவலகம் சேர வேண்டி வரும். அந்தத் தூரம் ஒரு பொருட்டே அல்ல அவருக்கு. அவர் தினம் தினம் இரண்டு பர்லாங்கு தூரம் நடந்தே அலுவலகம் போனார். பச்சை வாழி அம்மன் பஸ் நிறுத்தத்தில் செண்பகா இறங்கி நடந்து தன் அலுவலகம் செல்வாள். அதுவரை அவரும் அவள் பின்தான் நடந்து செல்வார். பல நாட்களுக்குப் பிறகு ஒரு நாள் அலுவலகத்துக்குள் நுழைந்த செண்பகா அவரைத் திரும்பிப் பார்த்தாற்போல அவருக்குத் தோன்றியது. மனப்பிராந்தி என்று சொல்வார்களே அதுவாக இருக்குமோ என்றுகூட அவருக்குத் தோன்றியது. அன்று அவர் நீண்ட நேரம் மொட்டை மாடியில் தூக்கம் பிடிக்காமல் படுத்துக் கிடந்தார் நிலாவும் அவர்கூட உறக்கம் பிடிக்காமல் துணை நின்றது.

அந்தக் காலம்தான் எவ்வளவு ரம்மியமானது? அவர் சமயங்களில் அந்த நினைவுகளில் அமிழ்ந்து போவார். அந்தக் காலங்களில் அவர் கதர் சட்டையும் கதரிலேயே பேண்ட்டும் அணிவார். கதர் சீக்கிரத்தில் அழுக்கடையக் கூடியது. ஆகவே தினம் தினம் துவைத்துப்போடும் வேலை அவருக்கு நேரும். அவ்வேலையில் அவருக்குத் திருப்தியும் சந்தோஷமுமே ஏற்பட்டன. தினம்தினம் சவரம். மாசத்துக்கு இருமுறை மயிர் வெட்டல் என்ற ஒரு ஒழுங்கு அவருக்கு நேரிட்டது.

ஒரு தீபாவளியை ஒட்டிய நேரம். அவர்கள் ஏறிச் சென்ற பஸ் நடுவழியில் டயர் வெடித்து நின்றது. பஸ்ஸை விட்டு இறங்கி ஒரு ஓரமாகச் சற்றுத் தவிப்போடு நின்றாள் செண்பகம். ஆட்டோக்கள் அதிகம் பரவாத காலம் அது. அவர் ஒரு குதிரை வண்டியை ஏற்பாடு செய்து கொண்டு வந்தார்.

“நீங்களும் வரலாமே... உங்கள் ஆபிசில் இறங்கிக்கொள்ளலாமே...?“ என்று அவளைப் பார்த்துச் சொன்னார். நாலைந்து வார்த்தைகள்தாம். அதற்குள் அவருக்கு வியர்த்துப் போய்விட்டது.

அவள் மறுக்காமல், “ரொம்ப நன்றி“ என்றபடி குதிரை வண்டியின் முன் பகுதியில் அமர்ந்து கொண்டாள். குதிரை, குதிரையைப் போல்தான் இருந்தது. விரைவில் சுருங்கி, இளைத்து, கால்கள் இடித்துக்கொண்டு கழுதையாகும் இருந்தது. அதை ஓட்டிய வண்டிக்காரனே கூட உயிரைச் சுமந்து கொண்டிருப்பவனாகவே தோன்றினான். காய்ந்த புல்லின் மணம் வண்டிக்குள் நிரம்பிச் சுகமான வாசம் தந்துகொண்டிருந்தது. செண்பகா வெளியில் பார்வையைச் செலுத்தியபடி இருந்தாள். அவள் தலையில் அணிந்திருந்த மல்லிகைச் சரத்தினது வாசம் மட்டும் அவரை அணுகிக்கொண்டிருந்தது. குதிரை வண்டி அசைந்து ஆடி மெதுவாக ஊர்ந்து கொண்டிருந்தது. அது இன்னும் மெதுவாகப் போகாதா என்று ஏங்கினார். குமாரசாமி. செண்பகாவின் அலுவலகம் நெருங்கி கொண்டிருப்பது அவருக்கு வேதனையாக இருந்தது. ஏதோ மாயம் நிகழ்ந்து அவள் அலுவலகம் பத்து மைலுக்கு அப்பால் மாறிப் போய்விடாதா என்று கூட அவருக்குத் தோன்றியது. குமாரசாமி வண்டிக்காரரைப் பார்த்து, “குதிரை சொந்தமா?“ என்றார் ஏதாவது பேச வேண்டுமே! இத்தகு பரவசங்களில் லயிப்பவர்கள் அபத்தமாகப் பேசுவது இயற்கைதான். ஆனால், சம்பந்தப்பட்ட இருவருக்கும் அவை ஆயிரம் அர்த்தம் தொனிக்கிற வார்த்தைகளாக இருக்கும்போலும். குமாரசாமியின் அந்தக் கேள்வியை ‘சீரியசாக‘ எடுத்துக் கொண்ட வண்டிக்காரர் சொன்னார்.

“என்ன கேட்டீங்க. சொந்தமான்னா? வயித்துப் புள்ளையே சொந்தமாகாதப்போ மிருகங்க சொந்தமாயிடுமா, சாமி? வாடகை வண்டிதான்.“

தத்துவபரமான அவர் வார்த்தைகள் அந்தச் சூழலுக்குப் பொருந்தாதவையாக இருந்தன. குமாரசாமியால் வார்த்தையை வளர்க்க முடியவில்லை.

“உங்க ஆஃபீசு எத்தனை மணிக்கு?“

அவர் அவளைத்தான் கேட்டார். கேள்வி தம்மைப் பார்த்துக் கேட்பது என்பதை அவள் புரிந்துகொள்ள பல நிமிஷங்கள் ஆயின. திரும்பி, “பத்து மணிக்குத்தான்“ என்றாள். அவர் ஆபீசும் அந்த நேரம்தான் தொடங்கிற்கு. அதில் ஆச்சரியம் கொள்ளவோ விமரிசனம் செய்யவோ ஒன்றுமில்லை. மேடு பள்ளங்களில் வண்டி ஏறி இறங்கும்போது வண்டிப் பலகையில் தலை இடித்தது. ஏனோ அவருக்கு அது வலிக்கவில்லை. சூரியன் முன் பக்கத்தில் தீவிரமாகக் காய்ந்தது. அவருக்கு அது சங்கடமாக இருந்தது.

“கொஞசம் பின்னால் நகர்ந்து அமருங்களேன். வெயில் காய்கிறதே“ என்றார் வாஞ்சையுடன்! அவள் திரும்பிப் பல் தெரியாமல் சிரித்தாள். மஞ்சள் பூசியிருந்தாள். தலையிலிருந்து மணப்பொருள்களின் வாசம் மிதந்தது. “பரவாயில்லை“ என்றாள். அவள் அலுவலகம் வந்தே விட்டது. அவள் இறங்கச் சௌகர்யமாக அவர் இறங்கி நின்று கொண்டார்.

அவள் உள்ளங்கையில் அடங்கியிருந்த சின்ன பர்சை எடுத்து, “வண்டிச் சத்தம் எவ்வளவு!“ என்றாள்.

“பரவாயில்லை... நான் கொடுத்து விடுகிறேன், நீங்கள் போகலாம்“ அவள் சென்று மறைந்தவுடன், வண்டி ஏறியவர்க்குப் பரிசு மாதிரி ஒன்று காத்திருந்தது.

செண்பகா தலையில் சூடியிருந்த சரத்திலிருந்து ஒற்றை மல்லிகை மலர் அவள் அமர்ந்த இடத்தில் விழுந்திருந்தது. அந்த மலரை எடுத்து முகர்ந்தார். நூறு வெவ்வேறு பூக்களின் வாசனை அதில் இருப்பதாக அவருக்குப்பட்டது. அந்த மலரைப் பத்திரப்படுத்திக் கொண்டார். அன்று இரவும் கூட அவர் உறக்கம் பிடிக்காமல் விழித்துக் கொண்டிருந்தார். நிலவும் அவருடன் விழித்திருந்தது. வாடிய அந்த ஒற்றை மல்லிகை மலரை உள்ளங்கையில் ஏந்திக்கொண்டு அவர் கற்பனை உலகங்களில் சஞ்சாரம் செய்து கொண்டிருந்தார்.

அடுத்த நாள் முதல், அவர்கள் அறிமுகம் கொண்டவர்களாய் புன்னகை செய்யவும், தலை அசைக்கவும் தொடங்கினார்கள் சிலசில வார்த்தைகளைப் பகிர்ந்து கொண்டார்கள்.

“என்ன, பஸ் இன்னும் வரக் காணோம்?“

“அட, என்ன வெயில் இப்படிக் காய்கிறது?“

“வர வர இந்த ஊர்கூடப் பட்டணம்மாதிரி புழுதி படியத் தொடங்குகிறதே“

“இந்தத் தடத்தில் கூடுதலாக இன்னும் இரண்டு பஸ் விடலாம்“

“உங்கள் வாட்ச் நின்று போய் இருக்கா என்ன?“

“நேற்று உங்களுடன் வந்தவர் உங்கள் அண்ணனா?“

“இந்தப் பத்திரிகைதான் நீங்கள் வாசிக்கிறதா?“

“நல்ல புத்தகம். அருமையாக எழுதியிருக்கிறார், படித்துப் பாருங்களேன்,“

“இன்னிக்குக் காலமே ரொம்பச் சீக்கிரம் வந்துவிட்டேன்.“

“மழைத்தூறல் உங்கள் மேல் படுகிறதே, ஒதுங்கி நில்லுங்கள்.“

இப்படியாக, ஒருவழிப்பாதை மாதிரி ஒருவரே மற்றவரைப் பார்த்துப் பேச மற்றவர் வாங்கிக் கொள்ளவுமாகச் சில நாட்கள் சென்றன. ஒரு மதியப் பொழுதில் மழை கடுமையாகி மாலை ஐந்துக்கும் ஐந்தரைக்கும் மேலும் பொழியவே, குமாரசாமி கடைக்கு நனைந்துகொண்டே போய் ஒரு புதுக்குடை வாங்கிச் செண்பகாவின் அலுவலகம் சென்றார். வராண்டாவிலேயே நின்றிருந்த செண்பகா ஆச்சரியம் கொண்டிருக்க வேண்டும். காற்றும் மழையும் கலந்து இடிமாதிரி இறங்கிக் கொண்டிருந்தன.

“நீங்கள் எப்படிப் போவீர்கள்?“ என்று கரிசனத்தோடு கேட்டாள் செண்பகா.

“எனக்கொன்றும் அவசரம் இல்லை. இருட்டிய பிறகுகூடப் போகலாம். உங்களுக்கு சிரமமாகி விடுமே...“ என்றார் குமாரசாமி. அவள் நெகிழ்ந்து போயிருக்க வேண்டும். அடுத்த சில நாட்களில், சிறுசிறு சம்பாஷணைகளை அவர்கள் நடத்தினார்கள்.

“எப்போதும் வெள்ளைதான் உடுத்துவீர்களா?“

“ஏன்? நன்றாக இல்லையா?“

“உங்களுக்குப் பொருத்தமாக இருக்கிறது. நிறத்துக்கும் குணத்துக்கும் சம்பந்தம் இருப்பதாகச் சொல்வார்கள்.“

மற்றும் ஒரு நாளில்:

“இன்று ஏன் பூ வைத்துக்கொள்ளவில்லை?“

(சிரிப்புடன்) “அவசரத்தில் ஓடி வந்துவிட்டேன்“

“உங்களுக்குப் பூ அதிகப்படியான ஆபரணம்“

மற்றும் ஒரு நாளில்:

“நேற்று வரவில்லையே...“

“அத்தை வந்திருந்தாள்...!“

“உடம்புக்கு ஏதோ என்று பயந்து போய்விட்டேன். அலுவலகத்துக்கு வரலாமா என்று யோசித்தேன். நீங்கள் தவறாக நினைப்பீர்களோ என்று...“

“இதில் தப்பாக நினைக்க என்ன இருக்கிறது? டைப்பிஸ்ட் செண்பக ராஜலட்சுமி என்றால் சொல்வார்கள்.”

மற்றும் ஒரு நாளில்:

“நிறையப் படிக்க ஆசைப்பட்டேன். முடியல்லே.“

“ஏன்?“

“ரெண்டு தங்கைகள். அவர்களும் படிக்க வேணுமே? சம்பாதிக்கணும்னு அப்பா சொல்லிட்டார்“

“பிரைவேட்டாகப் படிக்கலாமே...“

“யோசிக்கணும்“

“யோசிக்க ஒண்ணுமில்லை. நான் ஏற்பாடு பண்ணறேன்...“

மற்றும் ஒரு நாளில்:

“விடுமுறை நாட்களிலே என்ன பண்ணுவிங்க? எப்படிப் பொழுது போகுது?“

“அம்மா அப்பளம் பண்ணி வீடுகளுக்குப் போடுறாங்க... அவங்களுக்கு உதவியாக இருப்பேன்.“

அவள் அப்பாவுக்கு உடல்நிலை கெட்டது. செண்பகா இரண்டு நாள் அலுவலகம் வரவில்லை. அவர் அலுவலகம் சென்று விசாரித்தார். அவள் அப்பா ஆஸ்பத்திரியில் இருந்த செய்தியை அவர் அறிந்தார். இடத்தை விசாரித்து அறிந்துகொண்டு அவர் அங்கு போய்ச் சேர்ந்த வேளையில், அவர் படுக்கையைச் சுற்றிச் செண்பகாவும் அவள் சகோதரிகளும் அழுதுகொண்டு நின்றிருந்தார்கள். அம்மா என்று தோன்றுபவள் அப்பாவின் தலைமாட்டில் உட்கார்ந்து அழுது கொண்டிருந்தாள். அப்பா ஸ்மரணை அற்ற ஸ்திதியில் இருந்தார். அவர் முகம் மட்டும் தெரிய இருந்தது. நெருப்பை அவித்ததுமாதிரி முகம் கரிந்து போயிருந்தது. அவரைப் பார்த்துச் செண்பகா அதிகம் அழுதாள். அன்று மாலையிலேயே அப்பா காலமானார்.

குமாரசாமி அலுவலகத்தில், ஐந்நூறு ரூபாய் கடன் வாங்கினார். 1968 ஆம் ஆண்டில் ஐந்நூறு ரூபாய் பெருந்தொகை என்பதில் இரண்டாம் கருத்து இருக்க முடியாது. ‘குடும்பத்தில் ஆண்பிள்ளை இல்லையே என்கிற குறையை நீக்கிவிட்டாய்‘ என்று செண்பகாவின் அம்மாவே குமாரசாமியிடம் சொன்னாள். அந்த ஐந்நூறு ரூபாய்ப் பணத்தில் செண்பகாவின் அப்பா தன் இறுதிப் பயணத்தை மிகக் கௌரவமாக மேற்கொண்டார்.

குமாரசாமி அண்ணா மேம்பாலத்தை அடைந்து, அர்த்தம் இல்லாத குதிரை வீரன் சிலையின் கீழ் நின்றார். புற்கள் ஓரளவு செழித்திருந்தன. கவனிப்பார் இருந்தால் இந்த இடத்தை மிக அழகாக ஆக்கியிருக்க முடியும். சற்றுத் தள்ளி பெரியார். உடைசல் வண்டிகளுக்குப் பக்கத்தில் காவல்காரரைப் போல அனாதரவாய் நின்றார். அந்த இடமும் அழகான பூங்காவாக இருக்கலாம். வேண்டிய அக்கறை...!

செண்பகாவுக்கு அடுத்த ஆறாம் மாதம் திருமணம் நடந்தது. மிகவும் மகிழ்ச்சியோடு அவள் அவருக்குக் கல்யாணப் பத்திரிகை கொடுத்தாள்.

“நீங்கள் அவசியம் கல்யாணத்துக்கு வரவேணும். அம்மா உங்களை எதிர்பார்க்கிறாங்க...“ என்றாள் செண்பகா. மணமகன் தூரத்து அத்தை மகன் என்றாள் அவள். மிராசுதாராம் அவர். மகிழமரத்தின் அடியில் அவர்கள் நின்று கொண்டிருந்தார்கள். மலர்கள் நிழற்குடையின் மேலும் மண்ணிலும் சிந்திக் கிடந்தன. காலை முதிர்கிற நேரம். ஆபீசுக்கான பஸ் இன்னும் வரவில்லை. கல்யாண ஜவுளி எடுக்க மாப்பிள்ளை வீட்டார் காஞ்சிபுரத்துக்கே போகிறார்களாம். நாளை லீவ் போட்டுவிட்டு அவளும் போகப் போகிறாளாம். அவள் மிக மகிழ்ச்சியில் இருந்ததைக் கவனித்தார் குமாரசாமி. பஸ் வந்தது. அவள் ஓடிப்போய் ஏறினாள்.

“நீங்க வரலையா?“ என்றாள் செண்பகா ஓடிக்கொண்டே.

“நீங்க போங்க! நான் ஒரு நண்பரை எதிர்பார்க்கிறேன்“ என்று விட்டு அவர் அங்கேயே நின்றார், எத்தனை நாழி என்று அறியாது மதியம் வரை அங்கேயே நின்றார். அவரை அறியாது அவர் கண்களில் நீர் கசிந்தது. துடைத்துக்கொண்டார். தொண்டை வறண்டிருந்தது. அருகில் இருந்த ஒரு பெட்டிக்கடைக்குச் சென்று சோடா குடித்தார். சில்லரை கொடுக்கப் பர்சை எடுத்தார். ரூபாயை கொடுத்து மீதிச் சில்லறையை வாங்கிப் பர்சில் போடும் போது அந்த ஒற்றை மல்லிகையைக் கண்டார். சருகாகி மடித்து ஆனால் வெகு பத்திரமாய் ஒரு அறைக்குள் இருந்தது அது. அத்துடன் பழைய பஸ் டிக்கெட்டுகளும் கிடந்தன. அவற்றை எடுத்துக் கீழே போட்டார். காலாவதியான டிக்கட்டுகளை பைத்தியங்கள்தான் வைத்திருக்கும்.

குமாரசாமிக்கு உரக்கச் சிரிக்க வேண்டும்போல் இருந்தது. என்றைக்கோ நடந்துபோன ஒரு அற்ப விஷயத்தைக் குறித்து இவ்வளவு யோசிக்க வேண்டுமா. ஆனாலும் அவை அனிச்சை செயல்களாகவே அல்லவா நிகழ்கின்றன? கோடை காலத்தில் குளத்திலிருந்து எழும் ஆவி மாதிரி இந்த எண்ணங்கள். செண்பகாவுக்குப் பிறகு வேறு யாருடனும் ஏமாற வாய்ப்பில்லாமல் போனது குறித்து அவர் எப்போதும் மகிழ்ச்சியடைவார். தான் ஏமாந்து போய்விடவில்லை என்றும், செண்பகாவே கூட ஏமாற்றுக்காரி அல்ல என்றும், சூழ்நிலையே ஒரு மனிதரை இப்படியெல்லாம் பாத்திரமேற்கச் செய்து வசனம் பேச வைத்துவிடுகிறது என்று அவர் பல சமயங்களில் நம்பினார்.

மதியத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் வெயிலற்ற அந்தக் காலைப் பொழுது, ஒரு செடி வளர்வது மாதிரி வளர்ந்து கொண்டிருந்தது. தரையில் விழுந்த மீன் தண்ணீருக்குள் வந்த மாதிரி அவர் அந்தப் பொழுதை அனுபவித்தார். செண்பகாவுக்குத் திருமணமான கொஞ்ச காலத்துக்கு உள்ளேயே அவருக்கும் கல்யாணம் ஆயிற்று. யசோதை மனைவியாக வந்தாள். குழந்தைகள் வந்தார்கள். உடம்புச் சதை வந்தது. காதோரம் நரை வந்தது. வாயுத் தொல்லை வந்தது. எல்லா விஷயத்துக்கும் தத்துவபரமான சிந்தனைகள் வந்துவிட்டன.

ராதாகிருஷ்ணன் வீதிவழியாகக் கடற்கரை நோக்கி நடையைத் திருப்பினார் கிழக்குத் திசைவழி அவர் நடந்தார். உலக நாடுகள் எதையும் அமைதியாக வாழவிடுவதில்லை என்று உறுதிபூண்டு வாழும் அமெரிக்க நாட்டு அலுவலகம் கடந்து, நடைபாதை வழியாகவே நடந்தார். நாம் காலத்துக்குக் கட்டுப்பட்ட மனிதர் அல்ல என்றும், நாம் எங்கும் செல்ல அல்லது செல்லாமல் இருக்க சுதந்திரப்பட்டவர் என்றும் ஒரு நினைவு அவருக்குத் திடுமெனத் தோன்றவும், தாம் மிகுந்த பலம் கொண்டு விட்டவர், தாமே ஒரு சர்வாதிகாரி அல்லது தாமே அனைத்தும் தானாகி விட்ட சந்நியாசி என்றும் பாவிக்கத் தொடங்கினார். இந்த நினைவு கொடுத்த புத்துணர்ச்சி அவரை நிமிர்ந்து நிற்கச் செய்தது. அவரை இளமைப் பருவம் எய்தச் செய்தது. அவரது காலடியில் சிந்தக் கிடந்த காம்பவுண்டுச் சுவருக்கு உள்ளிருந்த மஞ்சள் அரளி மரத்தின் பூக்கள் அவருக்குப் பூக்களாகத் தோன்றாமல், நட்சத்திரங்களும் உலகங்களும் இணைந்த பிரபஞ்சமாகவே தோன்றியது. அவர் உலகத்தின் தலைவர்! அவரே பிரஜாபதி!!

அட! ஒரு பகல் நேரப் பொழுது இப்படி ஆனந்தமயமாகவா இருக்கும்? இதை அறியாமல் எத்தனை காலங்களை அவர் வீணடித்து விட்டார். அவர் வானவில்லைப் பிடித்துவிட எண்ணி மாடிப்படி ஏறிய அறிவிலி. தொடுவானத்தைத் தொட்டுவிட நினைத்துப் பரிசல் ஓட்டிய மூடர். அதெல்லாம் பழைய கதை.

விவேகானந்தர் இல்லத்தை ஒட்டி, அவர் ஓய்வு நேரப் புரூஃப் திருத்தும் வேலை செய்யும் தமிழ்க்கடல் பதிப்பகம் இருந்தது. அதன் உரிமையாளர் கோபாலனைப் பார்க்க வேண்டும் என அந்தக் கணம் தோன்றியது. நினைவை உடனே செயல்படுத்த ஆரம்பித்தார். குமாரசாமியை அந்த நேரத்தில் அவர் பார்க்கவும் மிகுந்த ஆச்சரியப்பட்டார்.

“என்ன ஓய். என்ன இந்த நேரத்தில். எப்போதும் ராத்திரிகளில் தானே வருவீர். இன்றைக்கு ஆபீஸ் இல்லையா?“ என்றார் கோபாலன்.

குமாரசாமிக்குக்கூட கோபாலன் முகத்தைப் பகலில் பார்ப்பது விந்தையாகவே இருந்தது. கோபாலனைக் கறுப்பு நிறத்தவர் என்று அவர் இதுகாறும் நினைத்திருந்தார். ஆனால் அப்படி இருக்கவில்லை அவர். செம்பழுப்பு நிறத்தில் அவர் இருந்தார். மடிப்புக் குலையாத சட்டையும் தலைமுடியுமாக அவர் இருந்தார். இது ரொம்ப விசேஷமான காட்சியாகக் குமாரசாமிக்கு இருந்தது. மனுஷர்களைக்கூடக் காலம் அல்லாத காலத்தில் அல்லவா அவர் பார்த்து வந்திருக்கிறார். கடைப்பையன் டீ வாங்கி வந்து அவர்களுக்குத் தந்தான். அந்தப் பதிப்பகத்தையும் சுவரை மறைத்து அடுக்கி வைக்கப்பட்டிருந்த புத்தகங்களையும் முதன்முறை பார்ப்பவரைப் போல அவர் பார்த்தார். பெரும்பான்மையான புத்தகங்களை அவர் புரூஃப் பார்த்திருக்கிறார். அந்த நீளநீளமான பேப்பர்களில் அவர் சீர்திருத்திய அச்சுப் பிரதிகள்தாம் புத்தகங்களாக உருவெடுத்துள்ளன.

“என்ன குமாரசாமி. இன்னைக்கு ஆபீசு போகவில்லையா?“

“என்னோட வேலை பார்த்த அடைக்கலசாமின்னு ஒருத்தர் திடீர்னு காலமாயிட்டார். அதனாலே, ஆபீசு விடுமுறை.“

“அடடா.“

புத்தகம் வாங்க ஒன்றிரண்டு பேர் வந்தார்கள். அவர் களை வேடிக்கை பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தார் அவர். ஒருத்தர் ‘ஜே.கிருஷ்ணமூர்த்தி இருக்கிறதா?‘ என்றார். இரண்டாமவர் மாமிசச் சமையல் புத்தகம் வாங்க வந்திருந்தார். எல்லாமே தேவையாகத்தான் இருக்கிறது. தத்துவம், ஆன்மீகம், இலக்கியம், அரசியல், ஊறுகாய், கோழிப் புலவு எல்லாம். அவ்வளவையும் தின்றுதான் மனுஷ ஜீவிதம். அவ்வளவும் சேர்ந்ததுதான் வாழ்க்கை. அது அம்மன் கோயில் பிடாரி. உடுக்கை, கற்பூரம், சாராயம், ஆட்டு ரத்தம், சுருட்டு, முருங்கைக்கீரை எல்லாம் பார்க்கப் படுதமாஷ். குமாரசாமி சிரித்தார்.

“என்ன திடீரென்று?“ என்றார் திடுக்கிட்டுப் போன கோபாலன்.

“மன்னிக்கணும். ஒன்றுமில்லை“

“ஒன்றுமில்லாததற்கு என்ன சிரிப்பு?“

“ஒன்றுமில்லை என்று கண்ட பிறகு, சிரிப்பு“.

கோபாலனும் சேர்ந்துகொண்டார். இருவரும் மாறிமாறி ஒருத்தரைப் பார்த்து ஒருத்தர் சிரித்துக்கொண்டே இருந்தார்கள். ஆஃபீசில் கிளார்க் வேலையில் புதிதாகச் சேர்ந்திருந்த இளம் பெண் மருண்டு போனாள். அவர்களை பார்த்தாள். அப்புறம் கோபாலன் சொன்னார்...

“நான் உமக்கு கொஞ்சம் பணம் தரவேண்டும். இப்போதைக்கு இருநூறு தர்றேன் குமாரசாமி. வேலை அதிகமாகிட்டிருக்கு. நீர் வீட்டில் இருந்துகொண்டே புரூஃப் பார்த்துக்கொடுமே. உம்ம ஆஃபீசில் என்ன சம்பளம் பெரிசாக் கிழிக்கப் போறான்கள் அதற்கு மேலே நான் தர்றேன்.“

கோபாலன் கொடுத்த பணத்தை வாங்கிப் பர்சில் வைத்துக் கொளண்டார்.

“உம்‘ம பெரிய பெண்ணுக்கு டி.வி.கேயில் சொல்லச் சொன்னீரே அது கிடைச்சிடும் போல இருக்கு. அடுத்த வாரத்தில் அவள் வேலைக்குப் போயிடுவாள். அதுக்கு நான் ஆச்சு. தொடக்கத்திலே ஆயிரம் சம்பளம் வரும்.“

“எல்லாம் உங்க பெரிய மனசு.“

குமாரசாமி கிளம்பினார்.

“இரும்யா...செட்டியார் மெஸ்லேந்து பிரியாணி வாங்கிவரச் சொல்றேன். சாப்பிட்டுட்டுப் போவீரா...“

இருந்து சாப்பிட்டுவிட்டுக் கிளம்பினார் குமாரசாமி.

ஒரு பிடுங்கி உத்தியோகம் குமாரசாமிக்கு. வெள்ளைக்காரன் காலத்திலிருந்து அவர் கம்பெனி புகழ்பெற்று வந்திருக்கிறது. அதன் ஸ்தாபகர் வெகு ஆசார சீலராயும் வெள்ளைக்காரன் காலாகாலத்துக்கும் ஆட்சி செய்ய வேண்டும் என்ற கருத்துடையராவும் இருந்தார். அதனாலேயே அவர் கம்பெனியும் அவரும் மேன்மையுற்றார்கள். அந்தக் காலத்தில் பட்டைக்கிராம்பு, வால்மிளகு முதலான பல பொருள்களை அவர்கள் மேனாட்டுக்கு அனுப்பிக் கொண்டிருந்தார்கள். ஸ்தாபகர் ‘இறைவனடியை‘ச் சேர்ந்த பிறகு அவர் மகன், லண்டலின் படித்தவன், அவர் நாற்காலியில் வந்தமர்ந்தான். கற்பாறைகளைப் பிளந்து பாலீஷ் போட்டு மேல்நாடுகளுக்கு அனுப்பிக் கொண்டிருந்தான். இந்தியப் பெண்களைத் தவிர எல்லாவற்றையும் மேல்நாட்டுக்கு அனுப்பிப் பணம் பார்த்தான். இத்தொழிலுக்கு மேல்நாட்டுப் போய்ப் படிக்க என்ன இருக்கிறது என்று குமாரசாமிக்கு விளங்கத்தான் இல்லை. புதிய தலைமுறை அப்பாவைத் தாண்டியது உண்மை. ஸ்தாபகருக்காவது வெள்ளைக்காரன் தெய்வமாக இருந்தான். மகனுக்கோ ஆள்பவர்கள் மற்றும் எதிர்க்கட்சிகாரர்கள் அனைவரும் வழிபடும் கடவுளாக இருந்தார்கள். அடையாற்றுக்கு அருகில் அவனுக்குச் சொந்தமான ஒரு பெரிய வீட்டை வியாபார விஷயங்களுக்காக என்றே வைத்திருந்தான். அங்குதான் அரசியல் தலைவர்கள், ஏதோ ஒரு வகையில் சமூகப் பணியாற்றும் ஸ்திரீகள் ஆகியோரை அவன் சந்தித்தான். அவன் செய்கிற தகிடுத் தத்தங்களுக்கும் அவர் பொறுப்பேற்க முடியாது. அவருக்கு மாசம் பிறந்தால் ஒழுங்காகச் சம்பளம் வந்துவிடுகிறது. அழுக்குப் பஞ்சுகளைக்கூட அவன் விற்கிறான். ஆனால் அவருக்குத் தரும் சம்பள நோட்டுக்களில் அழுக்கில்லைதான் என்றாலும், இந்தப் பகல்பொழுது இவ்வளவு அழகாகவா இருந்து தொலைக்கும்?

காலையில் அலுவலகத்துக்குள் நுழைந்துகொண்டால் செயற்கைக் குளிர்ப்பதன அறையின் சில்லிப்புத் தாக்க, இயற்கைப்பகல் தட்ப வெட்ப சீதோஷ்ணங்களை அறியாது அவருக்கு வரும் கோப்புகளில் அவர் கவனம் புதைக்கப்பட்டு விடுகிறது. ஆஃபீசைச் சுற்றிய மரங்களில் பறவைகள் இருந்தன. கண்ணாடிக் கதவுகளால் மூடப்பட்ட அலுவலகம் ஆனதால் அவற்றின் சத்தங்கள் கேட்பதில்லை. தயிர்க்காரியின் குரல் அனுமதிக்கப்படுவதில்லை. மனுஷ வாழ்க்கையே கல்லறைக்குள் புதையுண்டதுபோல அல்லவா ஆகிவிடுகிறது.

கோப்புகள் மாட்டுச்சாணத்தை நினைவுபடுத்தும். காகிதக்குப்பைகளால் ஆன கோப்புகள். முகம் தெரியாத யாரோ ஒருத்தருக்கு ஆணோ பெண்ணோ, யாருக்கோ வாயு பிரிவதற்காகப் பெருங்காயம் சேகரித்த கோப்பாக அது இருக்கும். முதலாளி யாருக்கோ பகிங்கரமாகவோ ரகசியமாகவோ கொடுத்த கறுப்புப் பணத்தை வெள்ளையாக்கும் கோப்பாக அது இருக்கும். முப்பத்து மூன்று வருஷங்கள் ஸ்தாபனத்துக்கு உழைத்து, டி.பி. நோயினால் அவஸ்தைப்படும் பாண்டுரங்கத்துக்குப் பண உதவி செய்யலாமா நன்றி கெட்டதனமான கோப்பாக இருக்கலாம். ஏதாவது ஒரு இழவுக் கோப்பு சம்பந்தம் அதுக்காகப் பொன்மயமான உலகத்தை என்னத்துக்கு இழப்பது.

அடைக்கலசாமி செத்துப்போனார். அவர் நாற்காலியில் யார் உட்கார்வார்கள்? அதற்கென்றே ஒருவன் பிறந்து வந்திருப்பான். அவன் வந்து அந்த இடத்தை பூர்த்தி செய்வான். பல வருஷங்கள் அந்தக்கோப்புகளைப் புரட்டுவான். மதியம் ஆறிப்போன சோற்றைத் தின்றுவிட்டு, சிறுநீர் கழித்துவிட்டு வந்து உட்கார்ந்து கோப்பைப் பார்த்துப் பின் அவனும் செத்துப்போவான். அப்புறம் அந்த இடத்தில் மற்றும் ஒருவன். குமாரசாமியும் ஒருநாள் போவார். மாரடைப்பு? பேதி? புற்றுநோய்? பாத்ரூமில் வழுக்கி விழுந்து கால் உடைப்பு? ஏதோ ஒரு வழி. மரணம் வரும். நோட்டீஸ் போர்டில் நாலுவரிச் செய்தியாக தொங்கும்.

‘ஒரு வருத்தத்துக்கு உரிய செய்தி. நம் அலுவலகத்தில் கடந்த இருபத்தெட்டு ஆண்டுகள் பணிபுரிந்த உதவிக் கண்காணிப்பாளர் திரு. குமாரசாமி நேற்று இரவு படுக்கையில் உறங்கியபடியே மாரடைப்பால் காலமானார். அன்னார் மறைவுக்காக இன்று அலுவலகம் விடுமுறை விடப்படுகிறது. திரு. குமாரசாமியின் ஆத்மா சாந்தியடைய அனைவரும் பிரார்த்திப்போம். இப்படிக்கு மணிபால் சாத்தே கும்பெனி நிர்வாகி!‘

ஊழியர்கள் சந்தோஷமாய் ஆட்டோ, பஸ் பிடித்து அவரது உடலைப் பார்க்க வருவார்கள். கும்பெனி பெயர் எழுதிய மலர் வளையம் கொண்டு வருவார்கள். (என்ன அநியாயம். அடைக்கலசாமிக்கு வாங்கறச்சே மலர் வளையத்தோட விலை பதினைந்து ரூபாய். குமாரசாமிக்கு வாங்கப்போனா விலை இருபது ரூபாவா) அப்புறம் சிலர் வீட்டுக்குப்போய் அரிதாய்க் கிடைத்த விடுமுறையை உறங்கிக் கழிப்பார்கள். சிலர் சினிமாவுக்குப் போவார்கள். அதனால் என்ன? குமாரசாமி பசிக்கக்கூடாதா? இயற்கை உபத்திரவங்கள் இருக்காதா?

வழக்கத்துக்கு மாறாக மூன்று மணிக்கே வீட்டுக்கு வந்த கணவனை அதிசயமாகப் பார்த்தாள் யசோதை. அவருக்கும் அவள் அதிசயமாகப் தோன்றினாள். தலைவாரிக் கொண்டிருந்தாள் போலும். ஒரு கையில் சீப்பு இருந்தது. ஒரு பக்கத்துக் கூந்தல் வாரப்பட்டு, மறுபக்கம் விரித்துப் போடப்பட்டுக் கிடந்தது. ஸ்நானம் செய்திருந்தாள் போலும். சந்தனசோப்பின் வாசனை படர்ந்து கொண்டிருந்தது.

“என்ன இவ்வளவு சீக்கிரம்“

“அடைக்கலசாமி செத்துப் போய்ட்டார்.“

அவள் யோசித்துவிட்டுச் சொன்னாள்.

“யார்? நம்ம வீட்டுக்குக்கூட வந்திருக்கிறாரே, கிறிஸ்தவர்“

“அவர் தான்“

“நாளைக்கு ஆஃபீஸ் இருக்கா?“

அவர் கைலியை முடிந்து கொண்டே சொன்னார்.

“அவங்களுக்கு இருக்கும்“

“அவங்களுக்குன்னா?“

“எனக்கில்லை.“

“அப்படின்னா?“

“நான் இனிமே ஆஃபீஸ் போகப் போறதில்லை.“

அவர் பாத்ரூம் போய்விட்டு வந்து அவளைப் பார்த்துச் சொன்றார்.

“ஏன்னு அப்புறம் சொல்றேன்... இந்தா?“ என்றபடி இருநூறு ரூபாய்ப் பணத்தை அவளிடம் சேர்த்தார். அறைக்குச் சென்று மேசைக்கு முன் அமர்ந்து கும்பெனிக்கு ராஜினாமா கடிதம் எழுதி முடித்தார். எல்லையில்லாத அமைதி அவரைச் சூழ்ந்தது.

Copyright © 2009 tamilarasiyal.com

All Rights Reserved.

Source: http://www.prapanchan.in/index.php?option=com_content&view=article&id=38:2010-06-17-11-34-25&catid=13:short-stories&Itemid=9

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல அருமையான கதை கறுவல்!

எங்கள் பலபேரின் வாழ்க்கை, அடைக்கலசாமிகளின் வாழ்க்கை போல் தான், கண்கள் கட்டப் பட்ட குதிரைகளைப் போல ஒரே வழியில் திரும்பத் திரும்ப முடிவு வரும் வரை போய்க் கொண்டே இருக்கும்!

குமாரசாமியும், தனது கவுரவத்தைக் கக்கத்தில் கட்டி வைத்து விட்டு, தனது மனைவியை ஒரு மனித ஜன்மமாகப் பார்ப்பதுவும் ஒரு வகையில் முன்னேற்றமே!!!

இணைப்புக்கு நன்றிகள்!!!

  • தொடங்கியவர்

ஆம், நாம் அநேகர் அடைக்கலசாமி போல் , இல்லாவிட்டால் குமாரசாமிபோல் - வேலை வேலை வேலை; வெளியில் நடப்பது எதையும் பார்க்க நேரம் கிடைப்பதில்லை. கிடைத்தாலும் வேறு சோலிபார்க்க வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.