Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனிமொழியை பலி வாங்கிய அரசியல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கவிஞராக, மனித உரிமையாளராக எளிமையாக அறியப்பட்ட ஒரு பெண்ணை ‘அதிகாரத்தின் ருசி’ எந்த எல்லைக்கும் கொண்டு போகும் என்பதற்கு கனிமொழி ஒரு உதாரணம்.

பெரிதாக இலட்சியங்களோ, அரசியல் ஆர்வமோ இல்லாத ஒரு சாதாரணப் பெண்ணாகத் தான் கனிமொழியின் ஆரம்ப கால வாழ்க்கை இருந்தது. 90-களின் ஆரம்பத்தில் கனிமொழியின் முதல் திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட பிரிவுக்குப் பின்னர் அவரது முதல் கவிதைத் தொகுப்பு ‘கருவறை வாசனை’ வெளிவருகிறது. ‘கவிஞர் கனிமொழி’ கருணாநிதி என்று அறியப்பட்ட அவர் இலக்கிய உலகில் கொண்டாடப்பட்டதற்கு பின்பாதி பெயரும் ஒரு முக்கியக் காரணம்.

சர்ச் பார்க்கில் பள்ளிப்படிப்பும், எத்திராஜ் கல்லூரியில் முதுநிலை பொருளாதாரமும் படித்திருந்த கனிமொழி 92-ம் ஆண்டு முதல் அடுத்த ஐந்து வருடங்கள் ‘தி ஹிந்து’ ப த்திரிகையின் உதவி ஆசிரியராக பணிபுரிந்தார். 97-ம் ஆண்டு அரவிந்தனோடு கனிமொழிக்கு திருமணம் நடக்கிறது. அதன்பிறகு சிங்கப்பூர் ‘தமிழ் ஓசை’ இதழில் பணி, ‘குங்குமம்’ பத்திரிகையில் வேலை, ‘தி வீக்’ பத்திரிகையின் கட்டுரையாளர் என இப்படி ஒரு சாதாரண பெண்ணுக்குரிய வாழ்க்கைதான் கனிமொழியுடையதும்.

ஒரு மாநில முதல்வரின் மகள் என்கிற எந்த பந்தாவையும் கனிமொழியிடம் பார்க்க முடியாது என்பதுதான் அவரோடு நெருக்கமாக இருந்தவர்கள் ஆச்சரியப்பட்டுச் சொல்வது. ‘‘ஒருமுறை ஒரு இலக்கிய நிகழ்ச்சிக்குப் போய்விட்டு திரும்புவதற்கு கார் வரவில்லை என என்னோடு ஆட்டோ ஏறி வீட்டுக்குப் போனார் கனிமொழி’’ என்று சொல்கிறர் ஒரு கவிஞர்.

‘‘குஜராத் படுகொலை தொடர்பாக 2002-ல் சென்னையில் கூட்டம் ஒன்றை நடத்தினோம். அதற்கு கனிமொழி சில உதவிகளும் செய்தார். அந்தக் கூட்டத்தில் கனிமொழியின் பேச்சு உணர்ச்சிபூர்வமாக அமைந்திருந்தது. ஒரு தாய் என்கிற நிலையில் இருந்து அவர் பேசிய பேச்சு பார்வையாளர்களை கண்கலங்க வைத்தது. அந்த காலகட்டங்களில் மனித உரிமை சார்ந்த பணிகளோடுதான் கனிமொழி தன்னை அடையாளப்படுத்தினார்.

பிறகு அரசியலுக்கு வந்த அவர் மதுரை தினகரன் ஊழியர்கள் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பற்றிக் குறிப்பிடும்போது, ‘அழகிரி ஒரு அன்பான மனிதர்’ என்று கு றிப்பிட்டார் கனிமொழி. அரசியல் அவரை எவ்வளவு தூரம் மாற்றி விட்டது என்பதற்கு இது ஒரு உதாரணம்’’ என்கிறார் காலச்சுவடு பதிப்பக உரிமையாளர் கண்ணன்.

2004-ல் காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணி தமிழகத்தில் பெரிய வெற்றி பெற்றது. மத்தியில் ஆட்சியில் பங்கு வகித்த தி.மு.க. சொல்வதை எல்லாம் கேட்கும் நிலையில்தான் அன்றைக்கு காங்கிரஸ் இருந்தது. மத்தியில் வளமான துறைகளை தி.மு.க. கையில் வைத்திருந்ததால் கருணாநிதியின் கோபாலபுரம் குடும்பத்தில் பணம் குவியத் தொடங்கு கிறது. இது சி.ஐ.டி. காலனியை எரிச்சல் படுத்துகிறது.

தனக்கும் சரிபாதி உரிமை கேட்டு ராஜாத்தி அம்மாள் கருணாநிதியிடம் போராட ஆரம்பிக்கிறார். இந்தப் பின்னணியில்தான் அதுவரை அதிகம் அறியப்படாத கனிமொழி தி.மு.க.வில் முன்னிறுத்தப்படுகிறார். கனிமொழியின் எல்லா பரிமாணங்களிலும் ராஜாத்தி அம்மாளின் பங்கு அதிகம். தனக்கென்று எந்த போராட்ட பின்னணியோ, கட்சித் தொண்டர்கள் செல்வாக்கோ இல்லாத கனிமொழி தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் மேடையாக இலக்கிய உலகைப் பயன்படுத்திக் கொள்ளத் தொடங்கினார்.

பாதிரியார் ஜெகத் கஸ்பர் ராஜுடன் இணைந்து ‘தமிழ் மையம்’ ஆரம்பிக்கிறார். இளையராஜாவை வைத்து பெரும் பணச்செலவில் ‘திருவாசகம்’ தயாரிக்கப்படுகிறது. கற்பு குறித்து குஷ்பு கருத்து தெரிவிக்க, அவருக்கு எதிராக தமிழ்நாட்டில் பலத்த கண்டனங்கள் எழுந்தன. அந்த நேரத்தில்தான் கனிமொழி, மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்துடன் இணைந்து ‘கருத்து’ என்கிற பெயரில் இணையதளம் ஒன்றைத் தொடங்கினார்.

நேரடியாக கட்சிக்குள் வராமல் இப்படி மெல்ல, மெல்ல தன்னை முன்னிறுத்திக் கொள்ள ஆரம்பித்தார் கனிமொழி.

டெல்லியில் மத்திய அமைச்சர்கள் பெரும் செல்வாக்கோடு இருந்ததால், அவர்களில் யாரையாவது தன்பக்கம் இழுக்க முயற்சிக்கிறது சி.ஐ.டி. காலனி. பெரிய பின்புலம் ஏதும் இல்லாத மத்திய அமைச்சர் ஆ.ராசாவும், சி.ஐ.டி. காலனி குடும்பம் தனக்கு ஆதரவாக இருக்கும் என நம்புகிறார். இதுதான் ராசா சி.ஐ.டி. காலனியில் ஐக்கியமான கதை.

ராசா வனத்துறை அமைச்சராக இருந்தபோதே, ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தொடர்புடைய கட்டுமான நிறுவனங்கள் மும்பையில் கட்டிடங்கள் கட்டுவதற்கு தடையில்லாச் சான்றிதழ் வழங்குகிறார். இதன்மூலம் கிடைத்த பணத்தைக் கொண்டு சி.ஐ.டி. காலனியோடு ராசா நெருக்கமானதாக சொல்லப்படுகிறது.

2006-ல் தி.மு.க. மறுபடியும் தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடிக்க, அப்போது சி.ஐ.டி. காலனி தனி அதிகார மையமாக மாறியிருந்தது. ராஜாத்தி அம்மாளுக்கு ஆதரவான ஐ.ஏ.எஸ். - ஐ.பி.எஸ். அதிகாரிகள் என பெயர்கள் அடிபடத் தொடங்கின.

2007 ஜனவரியில் கனிமொழியின் தமிழ்மையம் ‘சங்கமம்’ நிகழ்ச்சியை நடத்துகிறது. அப்போது தமிழக சுற்றுலாத்துறை சார்பில் கனிமொழி பெயரிட்டு அரசு ஆணை அனுப்பப்படுகிறது. தொடர்ந்த ஆண்டுகளில் சங்கமம் நிகழ்ச்சியும், தமிழ் மையம் சார்பில் மாரத்தான் போட்டிகளும் கோலாகலமாக நடத்தப்பட்டன. இதில் ஸ்பான்ஸர் செய்திருந்த நிறுவனங்களில் பெருமளவு ஸ்பெக்ட்ரம் ஊழலில் சம்பந்தப்பட்டிருப்பதாக இப்போது சொல்கிறது சி.பி.ஐ.

தினகரன் மதுரை அலுவலகம் எரிப்பைத் தொடர்ந்து மாறன் சகோதரர்களுக்கும் கோபாலபுரத்திற்கும் முட்டிக் கொண்டது. மாறனின் மத்திய அமைச்சர் பதவி பிடுங்கப்பட, டெல்லியில் தி.மு.க.வின் தீர்மானிக்கும் பொறுப்பை கனிமொழிக்குக் கொடுத்தார் கருணாநிதி.

2007-ல் கனிமொழி ராஜ்யசபா எம்.பி.யாக டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அதன்பிறகு வேலைவாய்ப்பு முகாம் என தமிழகத்திலும் கட்சி ரீதியாக தன்னை வலுப்படு த்திக் கொள்ளத் தொடங்கினார் கனிமொழி. கட்சியில் தனக்கென ஒரு குழுவை உருவாக்கத் தொடங்கினார்.

டெல்லியில் ஆ.ராசா மூலம் கனிமொழிக்கு ஏராளமான தொடர்புகள் கிடைக்கின்றன. சரத்பவார், அவரது மகள் சுப்ரியா அவர்கள் மூலம் ஷாகித் பல்வா, நீரா ராடியா என தொடர்புகள் கிடைக்கிறது. டெல்லியின் செல்வாக்கான இடங்களில் கிடைத்த தொடர்புகள் அவரை யோசிக்க விடாமல் செய்கிறது. இந்த நேரத்தில் கலைஞர் டி.வி. ஆரம்பிக்கும் வேலையையும் கனிமொழியிடம் கருணாநிதி கொடுக்கிறார்.

ஸ்பெக்ட்ரம் பணம் 214 கோடி ரூபாய் கலைஞர் டி.வி.யாக உருமாறுகிறது. இந்த இடங்களில்தான் கனிமொழி தவறு செய்கிறார். சிறிய குழந்தைக்கு கைக்கடங்காத இனிப்பு களைக் கொடுத்தால் அது எப்படி நடந்து கொள்ளுமோ, அப்படியே கனிமொழியும் நடந்து கொள்கிறார். சொந்த அப்பாவைக் கூட நம்பாமல் தன்னிச்சையாக முடிவெ டுக்கிறார். அவர் கருணாநிதியை நம்பியிருந்தால், மாட்டிக் கொள்ளாமல் எப்படி தவறு செய்வது என்று அவர் சொல்லிக் கொடுத்திருப்பார். இன்று திகார் செல்ல வேண்டிய நிலை வந்திருக்காது.

மென்மையான, மனித உரிமைகளில் ஆர்வம் கொண்ட பெண் என்கிற வகையில் ஈழ ஆதரவாளர்கள் கனிமொழி மேல் நம்பிக்கை வைத்திருந்தனர். ஆனால் ஈழ விவகாரத்திலும் கனிமொழி துரோகம்தான் செய்தார். இலங்கையில் போரை நிறுத்தக்கோரி தமிழகத்தில் முதல் போராட்டத்தை 2008 அக்டோபர் மாதம் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சென்னையில் தொடங்கியது. தொடர்ச்சியாக தமிழகத்தில் போராட்டங்கள் நடைபெறத் தொடங்கின. கவிஞர், எழுத்தாளர் என்கிற பெயரில் இந்த போராட்டத்தையும் கனிமொழி கையில் எடுக்கிறார்.

கனிமொழியின் தொடர் ஈழ ஆதரவுப் போராட்டங்களை நம்பி, போரின் கடைசி வாரத்தில் புலிகள் கனிமொழியைத் தொடர்பு கொண்டார்கள். சரணடைய வந்தவர்கள் இவரை நம்பி உயிரைக் கொடுக்க வேண்டியதாயிற்று.

கனிமொழியின் இந்த அசுர வளர்ச்சி கோபாலபுரம் குடும்பத்திற்கு எரிச்சலை அதிகப்படுத்தியது. மாறன் சகோதரர்களும் கோபாலபுரத்துடன் நெருக்கமாகி விட, குடும்பத் திற்குள்ளேயே கனிமொழிக்கு எதிரிகள் அதிகமானார்கள். கனிமொழி தான், ‘‘என் அண்ணன், என் பெரியம்மா’’ என்றெல்லாம் பேட்டி கொடுத்துக் கொண்டிருந்தார். அவர்கள் யாரும் இவரை அணுக்கமாக நினைக்கவில்லை. இன்றைக்கு சிறையில் இருக்கும் கனிமொழிக்காக கோபாலபுரத்தில் கருணாநிதியைத் தவிர யாரும் வருத் தப்படவில்லை.

‘‘கனிமொழியின் இந்த நிலை திராவிட அரசியலில் பெண்ணின் இடத்தையும், முக்கியத்துவத்தையும் கேள்விக்குறியாக்கி உள்ளது’’ என்கிறார் கவிஞர் மாலதி மைத்ரி. ‘‘பெரியார் பாசறையில் இருந்து வந்த கருணாநிதியின் மோசமான நடத்தையினாலும், குடும்ப உறுப்பினர்களின் ஆதிக்கத்தாலும் இன்று கனிமொழி பலியாகி இருக்கிறார்.

கருணாநிதியின் தவறான முன்னுதாரணத்தினால் கனிமொழிக்கு சமூகத்திலும், அரசியலிலும் அடையாளம் மறுக்கப்பட்டிருந்தது. பால்ய வயதில் கருணாநிதிதான் தன் தந்தை என கனிமொழியால் வெளிப்படையாகச் சொல்ல முடியவில்லை. பிற்காலத்தில் அரசியலுக்கு வந்த பிறகு தன் குடும்ப உறுப்பினர்களுடன் போட்டிபோட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டார்.

அதிகார போதையும், ஜெயித்தே ஆகவேண்டும் என்கிற வெறியும் இன்று அவரை சிறைக்கு அனுப்பியிருக்கிறது. அவருடைய நண்பர்களும் தன்னுடைய லாபத்துக்காக அவரது துதிபாடிகளாகவே இருந்து விட்டது கனிமொழியின் துரதிருஷ்டம் தான்’’ என்கிறார் மாலதி மைத்ரி.

அடையாளம் மறுக்கப்பட்ட ஒரு பெண்ணாக, ஒரு எழுத்தாளராக, ஒரு அரசியல்வாதியாக, இன்று சிறைவாசியாக..... கனிமொழி எழுதிய கவிதை ஒன்றைக் குறிப்பிட்டால் சரியாக இருக்கும்.

‘‘அப்பா சொன்னாரென

பள்ளிக்குச் சென்றேன்

தலை சீவிக் கொண்டேன்

நண்பர்களைத் தவிர்த்தேன்

கல்யாணம் கட்டிக் கொண்டேன்

காத்திருக்கிறேன் என்முறை வருமென்று...’’

ப்ரியா தம்பி

- குமுதம் ரிப்போட்டர்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.