Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அவதி முகாம்கள்

Featured Replies

''இருக்கிறம்!''

''எப்படி இருக்கீங்க?' என்று தமிழ்நாட்டின் இலங்கை அகதிகள் முகாம்களில் வசிப்பவர்களிடம் விசாரித்தால், இப்படியான விரக்தி தொனிக்கும் பதிலையே எதிர்கொள்ள நேர்கிறது.

ஈழம் - கண்ணீர்த் துளியாய் உறைந்து நிற்கும் கனவு! மண்ணை மீட்கவும் முடியாமல், உரிமைகொள்ளவும் இயலாமல், அந்நிய மண்ணில் கையேந்தி நிற்கும் அவலத்துக்கு இணையாக எதைச் சொல்வது?

முகாம்களில் ஒரு குடும்பத்துக்கு பத்துக்குப் பத்து அளவில் வீடு. பலர் முன்னும் பின்னும் இழுத்துக்கட்டி இருக்கிறார்கள். அடித்தட்டு மக்களும் முகஞ்சுளிக்கும் வாழ்க்கைத் தரத்தில்தான் பல முகாம்களின் நிலை அமைந்திருக்கிறது. ஆனால் அதற்கே, 'தமிழ்நாட்டு மக்கள் எங்கள் மீது வைத்திருக்கும் அன்புக்கு என்றைக்கும் நன்றிக்கடன்பட்டவர்கள்!’ என்று அவர்கள் நெகிழும்போது, குற்றவுணர்வு நம்மை ஆட் கொள்கிறது.

புழல் முகாமில் 'கோப்பி’ தந்து உபசரித்த ஒரு பெண் ''நான் படிச்சதெல்லாம் இங்கேதான். ஒன்பது வயசில் இங்கே வந்தேன். இப்போ நான் ஒரு கம்பெனி வேலைக்குப் போகுறன். இங்கேயே வளர்ந்ததால எனக்கு இங்க உள்ளவங்க மாதிரியே பாஷை மாறிடுச்சு!'' என்று சிரித்தார்.

மண்டபம் போன்ற சில முகாம்களில் இருக்கும் கான்கிரீட் வீடுகளும் 20 ஆண்டுகள் பழமையானவை. பல வீடுகளுக்கு ரப்பர் ஷீட்டுகள்தான் மேற்கூரை. சில இடங்களில் சொந்த செலவில் ஆஸ்பெஸ்டாஸ் ஷீட்டுகள் வேய்ந்திருக்கிறார்கள். கோடைக் கால வெப்ப அனல் அப்படியே தலைக்குள் இறங்குகிறது.

தமிழகம் மொத்தம் உள்ள 115 முகாம்களில் 70,374 அகதிகள் வசிக்கிறார்கள். ஒரு லட்சத் துக்கும் மேற்பட்ட அகதிகள், முகாம்களுக்கு வெளியே வசிக்கிறார்கள். தமிழக அரசு உதவித்தொகையாக குடும்பத் தலைவருக்கு மாதம் ஒன்றுக்கு 400, குடும்பத் தலைவிக்கு 200, பிள்ளைகளுக்குத் தலா 144 வழங்கு கிறது. அதாவது, குடும்பத் தலைவருக்கு வழங்கப்படும் அதிகபட்சத் தொகையின் ஒருநாள் சராசரி 13தான். இதில் ஒரு பால் பாக்கெட் மட்டுமே வாங்க முடியும். (கவனிக்க: தமிழகக் காவல்துறையின் மோப்ப நாய் ஒன்றுக்கு நாளன்றுக்கு ஒதுக்கப்படும் தொகை 60)

இந்த சொற்ப உதவித்தொகை ஆண்களைக் கூலி வேலைகளுக்குத் துரத்துகிறது. பெரும்பாலும், பெயின்டர் வேலைக்கும்,கல் உடைப்பதற்கும், சுமை தூக்குவதற்குமே அவர்கள் செல்கிறார்கள். அதிலும் புழல், கும்மிடிப்பூண்டிபோல நகரங்களுக்கு அருகில் உள்ள முகாம்களில் வசிக்கும் அகதிகளுக்குத்தான் இந்த வாய்ப்பும் கிடைக்கிறது. ஊருக்கு ஒதுக்குப்புறமாக அமைந்திருக்கும் முகாம்களில் வசிப்பவர்களுக்கு அந்தக் கூலி வேலை கிடைப்பதிலும் சிக்கல்தான். பெண்களும் கிடைக்கும் வேலையைச் செய்கிறார்கள்.

அகதி முகாம் பெண்கள் எதிர்கொள்ளும் மிக முக்கியப் பிரச்னை கழிப்பறை வசதி! ஒரே வரிசையில் அமைந்திருக்கும் வீடுகளுக்கு ஒரே ஒரு கழிப்பறை என்பது நிச்சயம் அவர்களின் தேவையைப் பூர்த்தி செய்யாது! முகாம்களில் குடிநீர்க் குழாய்கள் இருந்தாலும், கோடைக் காலத்தில் தண்ணீர்த் தட்டுப்பாடு தவிர்க்க முடியாதது!

வெளியாட்கள் யாரும் அகதிகள் முகாமுக் குள் நுழைந்துவிட முடியாது. பத்திரிகைகளுக்கும் அனுமதி இல்லை. தப்பித்தவறி வெளி நபர் எவரேனும் முகாமுக்குள் நுழைந்து, அங்கு இருப்பவர்களுடன் பேச்சுக் கொடுத்துவிட்டால், போச்சு! அவர் சந்தித்த நபரை வளைத்துக்கட்டி க்யூ பிராஞ்ச் போலீஸார் கெடுபிடி விசாரணை மேற்கொள்வார்கள். அதற்குப் பயந்தே ஒருவரும் முகம்கொடுத்துப் பேசுவது இல்லை. ''சின்னப் பிரச்னையா இருந்தாலும், அகதி அடையாள அட்டையைப் பறிச்சு வெச்சுக்குவாங்க. அதைத் திரும்ப வாங்க ஆறு மாசமாகும். எதுக்கு வம்புன்னுதான் எதுலயும் தலையிட்டுக்குறது இல்லை. எங்களை நிம்மதியா விடுங்க!'' என்பதே பலரின் கருத்து. மீறிப் பேசுபவர்களும் தயக்கத்துடன் கேமராவுக்கு முகம் மறைத்தே பேசுகிறார்கள்!

''தமிழகத்தின் பல்வேறு முகாம்களிலும் எங்கள் உறவினர்கள் இருக்கிறார்கள். அவர்களில் யாருக்காவது உடல்நலம் இல்லை என்றாலோ, இறந்துவிட்டார்கள் என்றாலோ நாங்கள் உடனே சென்றுவிட முடியாது. உரிய அதிகாரிகளிடம் அனுமதி பெறவே இரண்டு நாட்கள் ஆகின்றன. அதுவரை பிணத்தைப் போட்டுவைத்திருப்பார்களா? ஒரு நல்லது கெட்டதுக்குக்கூட எங்களால் போக முடிவது இல்லை!'' என்பது பலரின் துயரம்.

''அகதிகளாக இந்தியாவுக்கு வந்ததால் எங்களுக்குக் கிடைத்த முக்கியமான நன்மை பிள்ளைகளின் படிப்புதான். அரசுப் பள்ளிகளில் படிப்பதால் ப்ளஸ் டூ வரை பிள்ளைகளின் படிப்புக்கு உத்தரவாதம் உண்டு. ஆனால், மேல்படிப்புக்குத்தான் சிரமம்!'' என்கிறார் முகாம்வாசி ஒருவர்.

ஒரு சில பெரிய முகாம்களில் உள்ளேயே பள்ளிக்கூடம் அமைந்துஇருக்கிறது. அங்கன்வாடிகளில் பல குழந்தைகளைக் காண முடிகிறது. ''ஈழத்தில் இழந்த கல்வியை இளந் தலைமுறைக்கு இங்கேயேனும் புகட்ட வேண்டும் என்கிற தாகத்தில், படித்த முகாம்வாசிகளே குழந்தைகளுக்குப் பாடம் சொல்லிக்கொடுக்கிறார்கள். நான் ஒரு பட்டதாரி. எங்கள் மாணவர்களுக்கு வகுப்பு எடுக்கிறேன்!'' என்கிறார் ஈழ ஏதிலியர் கழகத்தின் பத்மநாபன்.

இத்தனை பிரச்னைகளுக்கு மத்தியிலும் குழந்தைகளும், சிறுவர்களும் விளையாட்டில் படு சுட்டியாக இருக் கிறார்கள். கிரிக்கெட், வாலிபால் போன்றவற்றை விரும்பி விளையாடுகிறார்கள். முகாம்களுக்கு இடையே கிரிக்கெட் போட்டிகளும் நடைபெறுகின்றன.

போரின் முடிவு மனதளவில் அகதி மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அன்றாடம் அங்கு நடக்கும் நிகழ்வுகள் அனைத்தும் இவர்களை மனதளவில் வெகுவாகப் பாதிக்கின்றன. அவர்களின் மருத்துவ கவுன்சிலிங்குக்கு அரசு ஏற்பாடு செய்வது மிகவும் முக்கியம். இப்படியானவர்கள், ஊனமுற்றோர், முதியவர்களை அகதி முகாம்களுக்குள் வைத்து சிகிச்சை அளிக்கும் வசதி எதுவும் இப்போதைக்கு இல்லை. இதற்காக 'தாய் மடி’ என்றொரு இல்லத்தை ஏற்படுத்தும் வேலைகள் நடக்கின்றன.

முகாம்களில் வாரத்தில் மூன்று நாட்கள் செக்கிங் உண்டு. அந்தச் சமயத்தில் யாரேனும் முகாமில் இல்லை என்றால், அவர்களது அடையாள அட்டை பறிமுதல் செய்யப்படுவதும் நடக்கிறது. அதனால், முகாம் வாசிகளால் வெளி வேலைகளில் முழுமையாக ஈடுபட முடிவது இல்லை.

இப்படியான பிரச்னைகளில் இருந்து இவர்களை நிரந்தரமாக விடுவிக்க, இந்தியாவில் நீண்டகாலம் வாழ்ந்து வரும் அகதிகளுக்கு, இந்தியக் குடியுரிமை கொடுக்கலாமா?

''இந்தியாவில் குடியுரிமை பெற்று, இலங்கையின் குடியுரிமை பறிபோய்விட்டால், ஏற்கெனவே சிறுபான்மையினராக இருக்கும் நாங்கள், மக்கள்தொகையில் மிகவும் குறைந்துவிடுவோம். எங்களுக்கு இலங்கை நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் இல்லாமல் போய்விடும். எங்கள் உரிமைகள் அங்கே பாதிக்கப்படும். இரட்டைக் குடியுரிமை என்றால் அதை ஏற்றுக்கொள்ளலாம்!'' என்கிறார் ஈழ ஏதிலியர் மறுவாழ்வு கழகத்தைச் சேர்ந்த நேரு.

இந்தியாவின் மனித உரிமை ஆர்வலர்கள் பலர், ஈழ அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர்.

''இரட்டைக் குடியுரிமையை ஏற்றுக்கொள்வது அவரவர் மனம் சார்ந்த விஷயம். விரும்பியவர்கள் பெற்றுக்கொள்ளலாம் என்று இருந்தால் நல்லதே. பங்களாதேஷ், பர்மா அகதிகள் பலரும் இந்தியாவின் பல பகுதிகளில் இருக்கிறார்கள். இலங்கை அகதிகள் கொஞ்சம் பேர் ஒரிஸ்ஸாவிலும் அந்தமானிலும் இருக்கிறார்கள். இலங்கை அகதிகளுக்காக மட்டுமல்ல, ஒட்டு ªமாத்தமாக எல்லா நாடுகளில் இருந்து வரும் அகதிகளுக்கும் நன்மை தரும் வகையில் பரந்த அளவில் இந்திய அரசு சிந்தித்துச் செயல்பட வேண்டும்!'' என்கி றார் ஈழ ஏதிலியர் கழகத்தைச் சேர்ந்த பரமு.

தமிழக முதல்வர் 100 கோடி அகதி முகாம்களுக்கு என்று ஒதுக்கினார். தமிழக அரசின் இலவச கலர் டி.வி, கலைஞர் காப்பீட்டுத் திட்டம், கர்ப்பிணிப் பெண்களுக்கான உதவித்தொகை போன்ற நலத்திட்டங்களின் பலன்கள் முகாம் மக்களையும் சென்றடைகின்றன. ஆனால், இவை ஒரு புறமிருக்க, இன்னொரு பக்கம் 'சிறப்பு முகாம்’கள் என்ற பெயரில் அரசு சிறைக்குள் பல ஆண்டுகளாக அகதிகளைப் பிடித்துவைத்திருக்கிறது. இது அப்பட்ட மான மனித உரிமை மீறல். செங்கல்பட்டு சிறப்பு முகாமில் 40 பேரைத் தடுத்துவைத்திருக்கிறது. ப.சிதம்பரம், ராகுல் காந்தி, சோனியா காந்தி என காங்கிரஸைச் சேர்ந்தவர்கள் தமிழகத்துக்கு வரும்போது, இவர்களை எங்கும் வெளியே செல்ல அனுமதிப்பது இல்லை. தேர்தல் பிரசாரம் தொடங்கி, முடிவுகள் அறிவிக்கும் வரையும் அவர்கள் வெளியூர்களுக்குச் செல்லக் கூடாது என்று விதிக்கப்பட்ட தடை, அவர்களது வாழ்வாதாரத்தைப் பாதிப்பவை.

''அகதி மாணவர் ஒருவர் இங்கே மருத்துவமோ, சட்டமோ படிக்கலாம். ஆனால், அவர் டாக்டராகவோ, வக்கீலாகவோ தொழில் செய்ய முடியாது. இந்த விதிகளைக் கொஞ்சம் தளர்த்தலாமே? அகதி முகாம்களில் இலவச மருத்துவ முகாம்கள் நடத்த முன்வந்திருக்கிறது லயன்ஸ் கிளப். இதற்கு அரசின் அனுமதிக்காக ஓராண்டாகக் காத்திருக்கிறோம்!'' என்று வருத்தம் தெரிவிக்கிறார் நேரு.

''பிளாட்ஃபாரங்களில் வீடின்றி வாழும் மக்களை இங்கே நாங்கள் பார்க்கிறோம். நீங்கள் எங்களை அவர்களைவிடவும் மேலான நிலையில்தான் வைத்திருக்கிறீர்கள். அந்நிய நாட்டில் இருந்து அகதிகளாக வந்தவர்களுக்கு அடிப்படைத் தேவைகளைப் பூர்த்திசெய்திருக்கிறீர்கள். அந்த நன்றியை மறக்க மாட்டோம்!'' என்கிறார் ஈழ ஏதிலியர் கழகத்தைச் சேர்ந்த பரமு.

இத்தனை சிரமங்களோடு அகதி மக்களை நாம் வைத்திருந்தாலும், இப்படிச் சொல்வது அவர்களின் பெருந்தன்மை. ஆனால் நாம்?

'உணர்வினை யன்றி

உயிர்களு மீந்த

உடன் பிறப்புக்களை - உங்கள்

உயர் சிறப்புக்களை - எங்கள்

குறை நிரப்புக்களைக்

கனவிலும் மறவோம் -

மறந்தால் நாங்கள்

கதியெங்கே பெறுவோம்?

உங்கள் கரம் பிடித்தே எழுவோம்’

- என்று உணர்வு பொங்க இந்தியாவில் உள்ள தமிழ் மக்களை நோக்கிப் பாடும் அகதி மக்களின் பாடல் செவிகளுக்குள் இறங்குகிறது. இந்தப் பாடலின் முழுப் பொருளையும் விளங்கிக்கொண்டு 'கதியெங்கே பெறுவோம்’ என்று அலைபாயும் அகதி மக்களின் துயரை மத்திய - மாநில அரசுகள் துடைக்கும் நாள் எந்நாளோ?

- கவின் மலர்

அதிகாரிகளுக்கு மட்டும் ஆம்புலன்ஸ் சேவை!

தமிழகத்தில் 'அகதி’ என்று வருபவர் யாராக இருந்தாலும், மண்டபம் முகாமில்தான் அவர்கள் தங்களைப் பதிந்துகொள்ள வேண்டும். தற்போது இங்கு 2,479 பேர் மழைக்கு ஒழுகும் வீடுகளில் குடி இருக்கிறார்கள். சிதைந்த சாலைகள், திறந்தவெளிக் குளிப்பிடங்கள், தூர்வாரப்படாத கிணற்றில் இருந்து குடிநீர் என மக்கள் வாழும் சூழலே இல்லை. இங்குள்ள 24 மணி நேர மருத்துவமனையில் மருத்துவர்கள் ஒரு நாளில் இரண்டு மணி நேரம்கூட இருப்பது இல்லை. அகதிகளின் பயன்பாட்டுக்கு என தனியார் தொண்டு நிறுவனம் அளித்த ஆம்புலன்ஸ், அதிகாரிகளின் குடும்பத்துக்குச் சேவையாற்றி வருகிறது!

- இரா.மோகன்

''அஞ்சு வருஷமா சத்துணவே இல்லை!''

தமிழகத்தில் மிகப் பெரிய முகாமான கும்மிடிப்பூண்டி முகாமில் வசிக்கும் அகதி ஒருவர், ''இங்கே சுமார் 1,000 குடும்பங்களைச் சேர்ந்த 4,000 பேர் குடியிருக்கோம். ஆனா, எந்த அடிப்படை வசதியும் கிடையாது. பேருக்கு ஒரு ஸ்கூல் இருக்கு. எப்பவாவது டீச்சருங்க வருவாங்க. ஸ்கூல்ல கடந்த அஞ்சு வருஷமா சத்துணவுத் திட்டத்தையும் நிறுத்திட்டாங்க. சமீபத்தில் எங்க முகாமில் சாலை, கால்வாய் வசதிகள் வேலை ஆரம்பிச்சாங்க. நடுவுல என்ன நினைச்சாங்களோ... பாதியில அப்படியே வேலைகளை விட்டுட்டாங்க!'' என்கிறார் விரக்தியுடன்!

- சுபாஷ்பாபு

'நல்லா படிக்கணும்னு ஆசை!''

வேலூர் அப்துல்லாபுரம் இலங்கை அகதிகள் முகாமில் உள்ள பிரியங்கா பிறந்தது தமிழ்நாட்டில்தான். தற்போது ப்ளஸ் டூ தேர்வு எழுதி இருக்கிறார். ''பத்தாவதில் 350 மதிப்பெண் எடுத்தேன். இப்போ குடும்பத்தில் சுகம் (வசதி) இல்லா காரணத்தால் அப்பா படிக்க வேணாம் என்று கதைத்துவிட்டார். நான் நல்லா படிக்கணும்னு ஆசை!'' என்ற பிரியங்காவின் கண்கள் முழுக்க கனவு!

ஆச்சர்யமாக வேலூர் ஜாக்ஜி தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராகப் பணிபுரிகிறார் ஸ்டெல்லா. ''பள்ளியில் நாங்கள் பேசும் தமிழ் மொழி புரியவில்லை என்று சக மாணவர்கள் கிண்டல் செய்தார்கள். இப்போது நான் ஈழத் தமிழில் செய்தி வாசிப்பதையும்கூட சிலர் கேலி செய்கிறார்கள். ஆனால், நிச்சயம் தமிழ்நாட்டு தொலைக்காட்சிகளின் நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள்தான் தமிழைக் கொச்சைப்படுத்துகிறார்கள்.

நாங்கள் இங்கே பாதுகாப்பாகத்தான் இருக்கிறோம். ஆனால், தங்கக் கூண்டு என்பதற்காக பறவைகள் தங்க நினைக்குமா? ஈழத்தில் எங்கள் உறவினர்களோடு பனை மரத்தடியில் உட்கார்ந்து நிலாச் சோறு சாப்பிடும் நாளுக்குத்தான் தினந் தினமும் ஏங்கித் தவிக்கிறோம்!'' எனும் ஸ்டெல்லாவின் குரலில் எப்போதும் ஒளிந்திருக்கிறது ஓர் இனம் புரிந்த சோகம்!

- கே.ஏ.சசிகுமார்

''அங்கேயே குண்டடிபட்டுச் செத்திருக்கலாம்!''

பவானிசாகர் முகாம்வாசி ஒருவரின் வேதனை இது... ''காலையில 10 மணிக்கு ரெவின்யூ இன்ஸ்பெக்டர் செக்கிங்குக்கு வர்றதா காக்க வைப்பாங்க. அவர் சாவகாசமா சாயங்காலமா வருவாரு. க்யூ பிராஞ்ச் போலீஸ்காரங்க செக்கிங் வர்றப்போ ஆள் இல்லைன்னா, வேலை பார்க்கிற இடத்துல இருந்து சர்டிஃபிகேட் வாங்கிட்டு வரச் சொல்வாங்க. தோட்டத்துக் கூலி வேலைக்குப் போறவன் தோட்ட முதலாளிகிட்டே சர்டிஃபிகேட் கேட்டா அவர் கொடுப்பாரா? அன்னியோட வேலையைவிட்டே நிறுத்திடுவாரு. ஹ்ம்ம்... இப்படி ஒவ்வொரு நாளும் துன்பம் துயரம் அனுபவிக்கிறதுக்குப் பதிலா, அங்கேயே குண்டடிபட்டுச் செத்து இருக்கலாம்!''

- எஸ்.ஷக்தி

ஒழுகும் வீடுகளுக்கு நடுவே வாலிபால்!

மழை பெய்தால் ஆங்காங்கே ஒழுகும் வீடுகள் சேலம் பவளத்தானூர் முகாமின் பளீர் அடையாளம். அரசு அளிக்கும் அரிசி உண்ணக்கூடிய தரத்தில் இல்லை என்பதால், கைக்காசைச் செலவழித்து, வேறு அரிசி வாங்க வேண்டிய நிலை. இங்கு உள்ள சிறுவர்களுக்கு விளையாட்டில் மிகவும் ஈடுபாடு உண்டு. வாலிபால்தான் இவர்களுக்குப் பிடித்த விளையாட்டு!

- கே.ராஜா திருவேங்கடம்

(நன்றி : ஆனந்த விகடன்)

http://kavinmalar.blogspot.com/2011/05/blog-post_30.html

  • கருத்துக்கள உறவுகள்

பூமிப் பந்தின் ஒவ்வொரு முலையிலும் சிதறிப்போய் இருக்கிறோம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.