Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகள் மீது சேறும், இராஜீவ் காந்திக்கு சல்யூட்டும் அடிக்கும் சவுக்கு புத்தகம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் மீது சேறும், இராஜீவ் காந்திக்கு சல்யூட்டும் அடிக்கும் சவுக்கு புத்தகம்

அரிசி மூட்டையில் ஓரிரு கற்கள் கலந்திருந்தால் அதைப் பிரித்தெடுக்கலாம். ஆனால், ஒரு மூட்டை மணலில் கைப்பிடி அரிசியைப் பொறுக்குவது? ராஜீவ் சர்மா எழுதிய 'விடுதலைப் புலிகளுக்கு அப்பால் -‍ ராஜீவ் கொலைப் பின்னணி' நூலிலிருந்து நமக்கு சாதகமான செய்திகளைப் பெறுவதும் அப்படி அரிசி பொறுக்குகிற வேலைதான்.

ஈழப் போராட்டம், விடுதலைப் புலிகள், ராஜீவ் கொலை வழக்கில் சிக்க வைக்கப்பட்ட அப்பாவித் தமிழர்கள் - இவை அனைத்திற்கும் எதிரான ஒரு புத்தகத்தை பொருட்படுத்தி விவாதிக்க வேண்டிய காரணம் அந்தப் புத்தகத்தை பதிப்பித்திருப்பது நமது தோழர் சவுக்கு என்பதால்தான். வெளியீட்டு நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் நமது தோழர்கள் விடுதலை இராசேந்திரன், தியாகு, வழக்கறிஞர் புகழேந்தி, கஜேந்திரன். (புத்தகத்தின் பாதகத்தன்மை குறித்து விழா மேடையிலேயே விடுதலை இராசேந்திரன் பேசினார்.) ஈழப் பிரச்சினையில் ஒத்த உணர்வுள்ள தோழர்கள் இந்த புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார்கள் என்பதும், சவுக்கு வெளியீடு என்பதும், தவறான ஒரு புத்தகத்திற்கு அளிக்கப்பட்ட அங்கீகாரமாக ஆகிவிடக் கூடாது என்பதாலேயே இந்தப் புத்தகத்தை மறுக்க வேண்டியிருக்கிறது. 'இத்தனை நாள் நாங்க சொல்லிட்டிருந்தபோது நம்பலை.. இப்ப பாருங்க.. உங்க தோழர் சவுக்கு வெளியிட்ட புத்தகத்தில் இதெல்லாம் இருக்கு..' என்று ஈழத்திற்கு எதிரானவர்கள் பேசுவதற்கான அத்தனை வாய்ப்புகளையும் இந்தப் புத்தகம் தருகிறது.

முற்றிலும் நம்புவதற்குத் தகுதியற்ற சிபிஐ சிறப்பு புலனாய்வுப் பிரிவு, இந்திய உளவுத்துறை ஆகியவற்றின் குறிப்புகளின் பின்னணியில் எழுதப்பட்ட இந்த நூலினை மறுப்பதாக இருந்தால் அதன் 90% பக்கங்களை நாம் மறுக்க வேண்டியிருக்க வேண்டும். ஆனால் இரண்டு குறிப்பிட்ட செய்திகளுக்காக இந்தப் புத்தகத்தை மறுக்க விரும்புகிறேன்.

1. புலிகள் பயங்கரவாதிகள்; காசுக்காக கொலை செய்யும் கூலிக்கூட்டம்

2. சிபிஐ சிறப்பு புலனாய்வுப் பிரிவின் நேர்மையான விசாரணை; இராஜீவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் குற்றவாளிகள்

சமூக அல்லது அரசியல் விடுதலைக்காக போராடும் குழுக்களை பயங்கரவாதக் குழுக்கள் என்று முதலாளித்துவ ஜனநாயகம் பேணும் நாடுகள் முத்திரை குத்துவதை வரலாற்று நெடுகிலும் காண முடியும். பகத்சிங், சே குவேரா தொடங்கி பாலஸ்தீன விடுதலை இயக்கம், காலிஸ்தான் போராட்ட குழுக்கள், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம், காஷ்மீர் விடுதலை போராட்டக் குழுக்கள் எவையும் இந்த முதலாளித்துவ மதிப்பீட்டிலிருந்து தப்பியதில்லை. ஆயுத விற்பனைக்காக மூன்றாம் உலக நாடுகளில் போராட்டங்களைத் தூண்டிவிட்ட ஏகாதிபத்திய நாடுகள், பின்னர் உலகமயச் சூழலில் 'ஒரே சந்தை' எனும் நோக்கில் 'தேச ஒற்றுமை'யை டன்டன்னாக இறக்குமதி செய்தன. ஏகாதிபத்திய நாடுகளின் கைக்கூலிகளாக செயல்படும் ஊடகங்களுக்கும், அதன் செய்தியாளர்களுக்கும் அரச பயங்கரவாதம் தொடர்பான நிறக்குருடு நோய் இருப்பதும், போராளிக்குழுக்களின் மீது தீராத காய்ச்சல் இருப்பதும் உன்னிப்பாக கவனிப்பவர்களுக்குத் தெரியும். மாவோயிஸ்ட்களின் எதிர்த்தாக்குதல் குறித்து மணிக்கணக்கில் விவாதிக்கும் இவர்கள், மத்திய இந்தியாவிலும், வட கிழக்கிலும் இந்திய ராணுவம் நடத்தும் அரச பயங்கரவாதம் குறித்து ஒரு நிமிடம் கூட பேசமாட்டார்கள். காட்சி ஊடகங்களின் 'ஊடகப் பயங்கரவாதம்' குறித்துதான் நம்மில் பலர் அறிந்திருக்கிறோம். அதற்கு சற்றும் குறையாததுதான் எழுத்து ஊடகங்களும்.

பெரும்பாலான ஊடகங்கள், காவல்துறை/ராணுவம் தரும் செய்திகளை எந்த விசாரணையுமின்றி ஏற்றுக் கொண்டு வெளியிடுகின்றன. காவல்துறை அல்லது சிபிஐ‍-ஆல் கைது செய்யப்படுபவர்கள் அனைவரும் இந்தப் பத்திரிக்கையாளர்களைப் பொருத்தவரை குற்றவாளிகளே! குற்றத்திற்கான நோக்கம், குற்றம் நடந்த சூழல், விசாரணையில் கடைபிடிக்கப்படும் பாரபட்சம் இவை எதுவும் இவர்களுக்கு முக்கியமல்ல. பல பத்திரிக்கையாளர்கள் சம்பவ இடத்திற்கே போகாமல், காவல் நிலையத்தில் போட்டோவும் செய்தியும் வாங்கிக் கொண்டு காவல்துறை சொல்ல விரும்பும் கட்டுக்கதைகளை செய்திகளாக வெளியிடுகிறார்கள். ஊடக தர்மம் குறித்து கவலைப்படாதவர்கள் இந்தியாவின் பெரும்பாலான பத்திரிக்கைகளும், அதில் பணியாற்றுபவர்களும். அத்தகைய 'நேர்மையான' ஒரு பத்திரிக்கையாளர்தான் இந்தப் புத்தகத்தை எழுதிய 'ராஜீவ் சர்மா'. ராஜீவ் கொலை சம்பவம் நடந்த சிறிபெரும்புதூருக்கோ, கொலை விசாரணை நடந்த சென்னைக்கோ வராமலேயே அதுகுறித்து ஒரு புத்தகத்தை எழுதியிருக்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன் இவரது லட்சணத்தை... பின் எதை ஆராய்ந்து இந்தப் புத்தகத்தை எழுதியிருக்கிறார் என்றால், சிபிஐ சிறப்பு புலனாய்வு பிரிவு, இந்திய உளவுத்துறையின் குறிப்புகளின் பின்னணியில்… இவை இரண்டும் இந்தியப் பத்திரிக்கைகளில் அவிழ்த்துவிட்ட கட்டுக்கதைகளை வெட்டி ஒட்டி சுவாரஸ்யமான ஒரு புத்தகத்தை தயாரித்திருக்கிறார். விடுதலைப் புலிகளைப் பற்றி சிபிஐயும், இந்திய உளவுத்துறையும் காலம் காலமாக கூறிவந்த கதைகளுக்கும், இந்த புத்தகத்தில் கூறப்பட்டுள்ளவற்றிற்கும் மயிரளவு வித்தியாசம் கூட இல்லை.

பொய் வழக்குகளில் ஓர் அப்பாவியை குற்றவாளியாக்க காவல்துறை, அவரின் பின்புலத்தைப் பற்றி பல கதைகளை ஜோடிக்கும். 'ஆறாம் வகுப்பில் பென்சில் சீவும் பிளேடால் சக மாணவரைக் கீறி விட்டார்; கல்லூரி மாணவர் சங்கத் தேர்தலில் கலாட்டா செய்திருக்கிறார்; பக்கத்து வீட்டுக்காரருடன் சாக்கடைத் தகராறு செய்திருக்கிறார்' என்று ஏகத்துக்கும் ஜோடிப்பார்கள். ஏனென்றால், 'இப்பேர்ப்பட்ட வன்முறையாளர், இந்தக் கொலையைச் செய்தார் என்பதில் எந்த ஆச்சரியமுமில்லை' என்று நீதிபதி அய்யா ஒரு முடிவுக்கு வருவதற்காக... அப்படிப்பட்ட பல ஜோடிப்புகளை ராஜீவ் சர்மா துளியும் நேர்மையின்றி இந்தப் புத்தகத்தில் பயன்படுத்தியிருக்கிறார்.

புலிகள் பயங்கரவாதிகள், ஈவிரக்கமற்றவர்கள், எப்போதும் கொலைவெறியுடன் இருப்பவர்கள், அப்பாவி மக்களை கொல்லத் தயங்காதவர்கள் என்று சரமாரியான குற்றச்சாட்டுகளோடு போதை மருந்து கடத்தினார்கள் என்ற குற்றச்சாட்டையும் இந்தப் புத்தகம் வைக்கிறது. புகைபிடித்தல், மது அருந்துதலைத் தடை செய்த - ‘கட்டுக்கோப்பானதோர் இயக்கம்’ என்று புலிகள் இயக்கம் பற்றி நாம் அறிந்திருந்ததுதான் தவறா? அதுமட்டுமா, மதிவதினியை பிரபாகரன் காதலித்து திருமணம் செய்தார் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்க, அவரை பிரபாகரன் கடத்திக் கொண்டுபோய் வலுக்கட்டாயமாக திருமணம் செய்தார் என்றும் கூறுகிறார் ராஜீவ் சர்மா. 'சுயநலவாதி, இரக்கமற்றவர், யார் சொல்வதையும் கேட்காதவர்' என்று பிரபாகரன் மீது அடுத்தடுத்து குற்றச்சாட்டுகள்...

சவுக்கு நூல் வெளியீட்டு விழாவிற்காகத்தான் முதன்முறையாக சென்னைக்கே வருகிறேன் என்று கூறும் ராஜீவ் சர்மா எந்த ஆய்வின் பின்னணியில் இந்தக் குற்றச்சாட்டுக்களைக் கூறுகிறார்? அத்தனையும் சிபிஐயும் உளவுத்துறையும் புனைந்த கதைகளின் அடிப்படையில்...

அரசுக்கு எதிராக ஆயுதம் தாங்கிப் போராடுபவர்களை ஒடுக்குவதற்கு அரசு மேற்கொள்ளும் முதல் நடவடிக்கை, போராளிகளை பயங்கரவாதிகள் என்று அறிவிப்பதுதான். காஷ்மீர் போராளிகள், மாவோயிஸ்ட்கள், விடுதலைப் புலிகள் என அனைவர் மீதும் ஒடுக்குதலை மேற்கொள்ளும் அரசு இதைச் செய்திருக்கின்றது. அரசுகளின் இந்த மோசடித்தனத்தை பத்திரிக்கையாளர்களும், எழுத்தாளர்களும் உணர வேண்டியது மிகமிக அவசியம். அப்படி உணர்ந்ததாலேதான் அருந்ததி ராய் அவர்களால், மாவோயிஸ்ட்களை தோழர்கள் என்று அழைக்க முடிகிறது. ஆனால், தனது புத்தகத்திற்கு சிபிஐயின் முன்னாள் இயக்குனரிடம் சர்டிபிகேட் வாங்கியிருக்கும் ராஜீவ் சர்மாவிடம் அந்த நியாயத்தை எதிர்பார்க்க முடியுமா?

இன்னொரு எரிச்சலூட்டும் செய்தியும் இந்தப் புத்தகத்தில் இருக்கிறது. உயரம் குறைவானவர் என்பதை மறைப்பதில் பிரபாகரன் எப்போதும் கவனமுடன் இருப்பாராம். அதை மறைக்கும்விதமாகவே புகைப்படம் எடுக்கச் சொல்வாராம். என்ன கொடுமை இது? எத்தனை புகைப்படங்களில் பிரபாகரன் தன்னை விட உயரமான போராளிகளுடன் உற்சாகமாக நிற்கும் காட்சியை நாம் கண்டிருக்கிறோம். அருகிலிருக்கும் ஒரு புகைப்படத்தைப் பாருங்கள்... ஒரு போராளியை இப்படி எல்லாமுமா கொச்சைப்படுத்துவது?

கிட்டு, பொட்டு அம்மான், காசி ஆனந்தன், குமரன் பத்மநாபா (இன்றைய கே.பி. மீது நமக்கு ஆயிரம் விமர்சனம் இருந்தாலும்), கரும்புலிகள் மீது கூறப்பட்டுள்ள அவதூறைகளையும் பட்டியலிட்டால் இந்தக் கட்டுரை மிக நீண்டதாகவிடும்.

ஒரு இடத்தில் கூட சிறப்பு புலனாய்வுப் பிரிவின் திறமையின்மை, விசாரணை என்ற பெயரில் அது நடத்திய மனித உரிமை மீறல்கள் மீது விமர்சனமே இல்லை. ‘அவர்கள் திறமைசாலிகள், அவர்களின் கைகளை மேலிடம் கட்டிவிட்டது’ என்ற தொனியிலான ஜால்ராவைத்தான் ராஜீவ் சர்மா புத்தகம் முழுவதும் இழையோட விட்டிருக்கிறார். காவல்துறைக்கு இப்படி ‘சிங்குச்சான்’ அடிக்கும் பத்திரிக்கையாளர்களை அம்பலப்படுத்தி பல கட்டுரைகள் எழுதிய சவுக்கு, ராஜீவ் சர்மாவுக்கு மட்டும் எப்படி விதிவிலக்கு அளித்தார் எனப் புரியவில்லை.

புலிகள் மீது இந்தப் புத்தகத்தில் வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளிலேயே மிக மோசமானது அவர்கள் கூலிக்காக இராஜீவ் காந்தியைக் கொலை செய்தார்கள் என்பது. மனசாட்சியுள்ள ஒரு இந்தியன், இராஜீவ் காந்தி என்ற கொடுங்கோலனைக் கொல்வதற்கு டெல்லி சீக்கியர்கள் படுகொலை, போபர்ஸ் ஊழல், இடஒதுக்கீடு எதிர்ப்பு என்று ஆயிரம் காரணங்கள் இருக்கின்றன. ஈழத் தமிழனுக்கு இரண்டாயிரம் காரணங்கள் இருக்கின்றன. அமைதிப் படை என்ற பெயரில் சாத்தானின் படைகளை அனுப்பி இராஜீவ் காந்தி ஈழத்தில் புரிந்த அட்டூழியங்களை எந்த ஈழத் தமிழனும் மன்னிக்க மாட்டான். இராஜீவ் காந்தி ஒரு ஈழத் தமிழனால் கொல்லப்படாமல் போயிருந்தால்தான் அது ஆச்சரியம். தோழர் கொளத்தூர் மணியின் வார்த்தைகளைத்தான் இங்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். "ஒரு ஈழத்தமிழன் செய்திருந்தால் நியாயம், விடுதலைப் புலிகள் செய்யாமல் இருந்தால் குற்றம். செய்திருந்தால் பாராட்டுகிறோம், செய்யாமலிருந்திருந்தால் கண்டிக்கிறோம்".

ஆறாயிரம் ஈழத் தமிழர்களைக் கொன்றவன் இராஜீவ் காந்தி. அதுகுறித்து இந்தப் புத்தகம் ஏதாவது பேசுகிறதா? இராஜீவ் கொலை தொடர்பான 20,000 செய்திக்குறிப்புகளை படித்ததாக தம்பட்டம் அடிக்கும் ராஜீவ் சர்மா, 'சாத்தானின் படைகள்' என்ற புத்தகத்தையும் படித்திருக்க வேண்டும். படித்திருந்தால் யார் பயங்கரவாதிகள் என்பது புரிந்திருக்கும்.

இராஜீவ் காந்தி என்ற கொலைகாரன் தமிழ்நாட்டில் கொல்லப்பட்டதால், ஈழ ஆதரவாளர்களும், தமிழ்த் தேசியவாதிகளும் அனுபவித்த அடக்குமுறைகள் கொஞ்சநஞ்சமல்ல. ஈழத்திற்கு ஆதரவாகப் பேசுவதே பயங்கரவாதத்தை ஆதரிக்கும் செயல் என்றளவில் காங்கிரஸ், ஜெயலலிதாவின் அடக்குமுறை இருந்தது. ஈழப் போராளிகள் மீது மாறாத அன்புடைய தமிழக மக்கள் பொதுவெளியில் அவர்கள் குறித்து பேசுவதற்கே அஞ்சினார்கள். புலிகளை ஆதரித்துப் பேசியவர்கள் மீது பயங்கரவாத தடுப்புச் சட்டங்கள் பாய்ச்சப்பட்டன. பழ.நெடுமாறன், வைகோ, சுப.வீரபாண்டியன் உள்ளிட்டவர்கள் ஒன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்தார்கள். இன்று தமிழ்நாட்டில் புலிக்கொடி ஏந்தியும் ஈழப்போராட்டத்தை ஆதரித்தும் பொதுமக்கள் பேசுகிறார்கள் என்றால் அந்தச் சுதந்திரம் ஈழ ஆதரவாளர்களின் தொடர்ச்சியான போராட்டங்களாலும், பரப்புரைகளாலும், முத்துக்குமாரின் உயிர்க்கொடையாலும் கிடைத்ததாகும். புலிகளை பயங்கரவாதிகள் என்பதன் மூலம் அந்தச் சுதந்திரத்தின் மீது கொஞ்சம் மண்ணள்ளிப் போடும் வேலையை இந்தப் புத்தகம் செய்கிறது.

ஒரு சாதாரண பெட்டி கேஸில் கூட ஒழுங்காக விசாரணை நடத்த துப்பில்லாமல் அப்பாவிகளைப் பிடித்து, அடித்து துன்புறுத்தி குற்றவாளியாக்கும் மாண்பு மிக்கதுதான் இந்தியாவில் இருக்கும் அனைத்து மத்திய, மாநில புலனாய்வுப் பிரிவுகளும். பெட்டி கேசுக்கே அந்த நிலை என்றால், நாட்டின் மிக முக்கியமான அரசக்(அடத் தூ!) குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வுப் பிரிவு என்னென்ன கூத்து நடத்தியிருக்கும்? அத்தனை கூத்துக்களையும் ஒரு கேள்வியுமின்றி ஏற்றுக்கொண்டு, கைது செய்யப்பட்ட அத்தனை பேரையும் அக்மார்க் குற்றவாளிகள் என்கிறார் இந்த ராஜீவ் சர்மா. ராஜீவ் சர்மாவிற்கு வேண்டுமானால், உளவுத்துறை, காவல்துறையினரின் யோக்கியதை தெரியாமலிருந்திருக்கலாம். சவுக்கு சங்கருக்கு…?

இராஜீவ் கொலை வழக்கில் கைதாகி 20 ஆண்டுகளாக சிறையிலிருக்கும் 7 பேருக்கு எதிராக மட்டுமல்ல, உச்ச நீதிமன்றத்தால் நிரபராதிகள் என்று விடுவிக்கப்பட்டவர்களுக்கும் எதிராகத்தான் இந்தப் புத்தகம் பேசுகிறது. 'இராஜீவ் கொலையில் தண்டிக்கப்பட்டு இருக்கும் ஏழு தமிழர்களோடு கடந்த பத்து ஆண்டுகளாக பழகி வருவதாகவும், அவர்களுக்கு இந்தப் படுகொலையைப் பற்றி எந்த விபரமும் தெரியவில்லை என்பதை தன்னால் உணர முடிந்தது' என்றும் வழக்கறிஞர் புகழேந்தி கூறுவதற்கு மாறாக, அனைவரையும் குற்றச்சதியில் பங்கேற்றவர்களாகவும், குற்றம் புரிந்தவர்களாகவும் இந்தப் புத்தகம் கூறுகிறது. காங்கிரஸ் ஆட்சியில் நடத்தப்பட்ட விசாரணைகளில் புலனாய்வுத்துறை அதிகாரிகள் யாரையெல்லாம் குற்றவாளிகள் என்று அறிவித்தார்களோ, என்னென்ன குற்றச்சாட்டுக்களை கூறினார்களோ அவையெல்லாவற்றையும் எந்தவொரு கேள்வியுமின்றி இந்தப் புத்தகம் ஏற்றுக் கொள்கிறது.

சாம்பிளுக்கு சில:

“…சிவராசன் தணுவிற்கு தாராளமாக செலவு செய்ய முடிவு செய்தார். மேலும் நளினி மற்றும் சுபாவிடம், தணுவின் விருப்பத்திற்கு ஏற்ப உணவு, உடை, பொழுதுபோக்கு மற்றும் அழகு சாதனப் பொருட்கள் போன்றவற்றின் தேவைகளைப் பூர்த்தி செய்யும்படியும், பணத்தைப் பற்றிக் கவலைப்படாமல் செலவு செய்யுமாறும் மிகத் தெளிவாகக் கூறியிருந்தார். தணுவின் கடைசி 20 நாட்களில், நளினி மற்றும் சுபா சுமார் ரூ.10,000 அளவிற்கு செலவு செய்து இருந்தனர்..”

“..தணு சென்னைக்கு வந்த நாள் முதல் நளினி அவருக்கு மிகவும் நெருங்கிய தோழியாக மாறினார். நளினி கரும்புலிகளை சென்னையிலுள்ள சுற்றுலா தளங்களுக்கும் மார்க்கெட், கடற்கரை மற்றும் ஓட்டல்களுக்கு தினந்தோறும் கூட்டிச் செல்வது வழக்கம்..”

“…நளினி மற்றும் பாக்கியநாதனின் தாயான பத்மாவின் இல்லத்தில் இறுதிகட்ட நடவடிக்கை பற்றி ஆலோசனை நடைபெற்றது. தனு, சிவராசன், சுபா தவிர பாக்கியநாதன், நளினி, ஹரிபாபு, ஸ்ரீகரன் மற்றும் அறிவு ஆகியோர் அக்கூட்டத்தில் பங்கு கொண்டனர். சிவராசன் அடுத்தநாள் ஒவ்வொருவருக்கும் செய்ய வேண்டிய குறிப்பிட்ட வேலையை அவரவர்க்குப் பிரித்துக் கொடுத்தார்..”

“…கொலைச்சதியில் ஈடுபட்ட 4 நபர்கள் தணு, சிவராசன், நளினி மற்றும் சுபா ஆகியோர் கோவிலுக்கு சென்று பிரார்த்தனையில் ஈடுபட்டனர்..”

“…நளினி தடைகளைத் தாண்டி கொலைக்குழு கூட்டத்தினுள் செல்ல உதவி செய்தார்..”

“…ராஜீவ் அரசியல் கொலையிலும், பத்மனாபாவின் கொலையிலும் சிவராசனுக்கு உதவி செய்த சாந்தன் எஸ்.ஐ.டியிடம் 1991 ஏப்ரல் மாதம் தான், சிவராசன், சுபா, தனு ஆகியோருடன் செல்ல வேண்டுமென பொட்டு அம்மானால் கேட்டுக்கொள்ளப்பட்டதாகவும் தெரிவித்தார்..”

“…எல்டிடிஈ போராளி முத்துராஜாவின் உத்தரவுப்படி, பத்மா, பாக்யநாதன் மற்றும் நளினி ஆகியோர் சிவராசன், சுபா, தாஸ் என்கிற முருகன் ஆகியோரை வில்லிவாக்கத்தில் ஓரிடத்திலும் மற்றும் ராயப்பேட்டையில் உள்ள அவர்கள் இல்லத்திலும் தங்க வைத்துள்ளனர்…”

“…முருகன், பின்னாளில், எல்டிடிஈ-ன் உளவு பார்ப்பவராக மாறினார். சிவராசன் உட்பட கொலைக்குழுவின் அனைத்து நபர்களையும் கண்காணிப்பது அவரின் வேலை…”

“..தென்சென்னை நந்தனத்தில் மே 7 அன்று நடந்த வி.பி.சிங்-இன் கூட்டத்திலும், ஏப்ரல் 18 அன்று மெரினா கடற்கரையில் ஜெயலலிதா, ராஜீவ் காந்தி கலந்து கொண்ட பொதுக்கூட்டத்திலும் எல்டிடிஈ மேற்கொண்ட இரண்டு வெள்ளோட்டத்தில் முருகன் கலந்து கொண்டார்…”

“…நளினி மற்றும் முருகன் கைது செய்யப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு மேலும் இரு முக்கியமான எல்டிடிஈ போராளிகள் எஸ்.ஐ.டி.யின் தேடுதல் வலையில் வீழ்ந்தனர். அந்த இருவர் யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட 25 வயதுடைய ராபர்ட் பயாஸ் மற்றும் தமிழ்நாட்டில் ஜோலார்பேட்டையைச் சேர்ந்த ஜி.பேரறிவாளன் என்ற அறிவு. இலங்கைத் தமிழரான பயாஸ் சிவராசன், தனு மற்றும் சுபாவிற்கு தங்குவதற்கான இருப்பிடத்தை தயார் செய்தார். அறிவு, பாக்கியநாதன் மற்றும் பத்மாவுடன் தங்கியிருந்தார்..”

“…அந்தக் கொலைக் குழுவிலிருந்த மற்றொரு நபரான ஜெயக்குமார் ஜூன் 26 அன்று கைது செய்யப்பட்டார். யாழ்ப்பாணத் தமிழரான ஜெயக்குமார் சென்னையில் சிவராசன் மற்றும் சுபா தங்குவதற்கு வசதி செய்து தந்தார்..”

“…கொலை நடப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு மட்டுமே வாங்கப்பட்ட பாக்கியநாதனின் அச்சகம் இந்தக் கொலைக் குழுவினர் கூடிப் பேசும் மற்றொரு இடமாகும். பாக்கியநாதன் தன்னுடைய போலியான அச்சகத்தைப் பற்றி வெளியே சொல்லிக் கொள்ளாமல் மிக ரகசியமாகவே இருந்தார். அந்த அச்சகத்திற்கு அருகில் அவர் யாரையும் வர அனுமதித்தில்லை..”

இப்படி கைதானவர்களுக்கு எதிரான செய்திகள் இந்தப் புத்தகம் எங்கும் விரவிக் கிடக்கின்றன.

சரி, உண்மை என்ன?

தடா சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்கள் காவல்துறையிடம் அளிக்கும் ஒப்புதல் வாக்குமூலமே போதுமானது என்று அச்சட்டம் கூறுகிறது. அப்படிப்பட்ட சூழ்நிலையில், கொலைவழக்கை சீக்கிரம் முடிக்க வேண்டும் என்பதற்காக சிறப்பு புலனாய்வுப் பிரிவு கீழ்த்தரமான நடவடிக்கைகளால் அப்பாவிகளை சித்திரவதைக்குள்ளாக்கி வாக்குமூலம் பெற்றது.

தான் எப்படி குற்றவாளியாக்கப்பட்டேன், என்னவிதமாக சித்திரவதை செய்யப்பட்டேன் என்பது குறித்து சிறையிலிருக்கும் பேரறிவாளன் ‘தூக்குக் கொட்டடியிலிருந்து ஒரு முறையீட்டு மடல்’ நூலில் விவரித்திருக்கிறார்.

தோழர் பூங்குழலி தனது ‘தொடரும் தவிப்பு’ நூலில் இதுகுறித்து எழுதியிருக்கிறார்:

"..எத்தனையோ நாட்கள் மதியம் 2 மணிக்கு அழைத்துச் செல்லப்பட்டுச் சாந்தி மறுநாள் அதிகாலை 3 மணி வரை விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தப்பட்டுச் சக்கையாய் வெளிவரும் நிலை. முகாமிற்குள்ளேயே இருந்த ஒரு அறைதான் விசாரணை அறையாய்ப் பயன்படுத்தப்பட்டது. அந்த அறையிலிருந்து சாந்தியின் அலறல் வெளிப்படும் ஒவ்வொரு முறையும் அதன் எதிரொலியாய்ப் பயந்து அலறும் அவரது மகனின் குரல் அறைக்கு வெளியே.."

"நாங்கள் கேட்பதை எழுதிக்கொடு உன்னை விட்டுவிடுகிறோம் என ஆசை வார்த்தைகள். செல்வி மிகுந்த தைரியத்துடன் மறுத்துவிட்டார். 'சுபாவும் தணுவும் என் வீட்டில்தான் தங்கியிருந்தனர். தணுவுக்குக் குண்டை நான்தான் கட்டிவிட்டேன். இதை மட்டும் ஒத்துக்கொள் உனக்கு அதிகம் சிக்கல் வராமல் நான் பார்த்துக்கொள்கிறேன்' என்றார் விசாரணை அதிகாரி.

'நீங்கள் கூறுபவர்களை எனக்குத் தெரியாது. நடக்காத ஒன்றை என்னால் எழுதித்தரமுடியாது' என செல்விப் பிடிவாதமாக மறுக்க.

'சரி! அப்படியானால் உன் கணவரையாவது நாங்கள் சொல்லும்படி நடக்கச்சொல். உன்னை விட்டுவிடுகிறோம். உன் குழந்தைக்கு வசதி வாய்ப்புகள் செய்து தருகிறோம்" – மீண்டும் ஆசைவார்த்தைகள்."

"'உன் பிள்ளைகளைக் கொன்றுவிடுவோம்' – என மிரட்டியே பத்மாவிடம் கையெழுத்து வாங்கிவிட்டனர்.

பாக்கியநாதனிடம் வாங்கிய முறை மிகக் கேவலமானது. அடிக்கும் உதைக்கும் அஞ்சாது, எந்தவித மிரட்டலுக்கும் மசியாது இருந்த அவரின் மன உறுதியையே பொடிப்பொடியாக்கும் வகையில் ஒரு மிரட்டலை அவர் முன் வைத்தனர். ஆம்! பெற்ற தாயையும் உடன் பிறந்த சகோதரிகளையும் கண் முன் நிர்வாணம் ஆக்குவதாகக் கூறினால் எந்த ஆணுக்குத்தான் மனம் பதைக்காது?"

"கைது செய்யப்பட்டபோது நளினி இரண்டு மாத கர்ப்பிணி. கைதான நொடி முதலே கொடுமைகள் துவங்கிவிட்டன. கைதான இடத்திலிருந்து மல்லிகைக்குக் கொண்டுவரும் வழியெங்கும், கணவனின் கண் முன்பே, கூட வந்த அதிகாரி நளினியிடம் தவறாக நடந்துகொள்ள முயல, பெரும் மன அதிர்ச்சிக்கு ஆளானார். மல்லிகையில் நடந்த கொடுமைகள் ஒவ்வொன்றும் வெளியே சொல்வதற்கே நாக் கூசும் அளவில் இருந்தன. கர்ப்பவதி என்றும் பாராமல் அவரை அடித்துத் துன்புறுத்தினர் பாவிகள். கணவன் கண் முன் மனைவியை நிர்வாணமாக்கி அடிப்பதும் மனைவி கண் முன் கணவனை நிர்வாணமாக்கி அடிப்பதும். இது போல எத்தனையோ ... ஒரு பெண்ணாக மற்றொரு பெண்ணிடம், ஏன் பெற்ற தாயிடம், கூட அதைச் சொல்வதற்குக் கூசினார் நளினி. அதையும் மீறிச் சொன்னவை போக, இன்னும் அவர் மனத்திற்குள் புதைந்து கிடப்பது எத்தனையோ?" (இராஜீவ் கொலைவழக்கு -‍ சித்திரவதைகளில் புதைந்த நீதி - பூங்குழலி)

இந்தக் கொலை வழக்கில் கைதாகி பின்னர் உச்ச நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட ரங்கநாத் சோனியாவுடனான தனது சந்திப்பு குறித்து கூறுகையில்,

"... இரண்டாவதாக, “உங்கள் வீட்டில் சிவராசன், சுபா உள்ளிட்ட குற்றவாளிகள் தங்கியிருந்தபோது, படுகொலை செய்வதற்கான காரணம் பற்றி ஏதாவது பேசினார்களா?” எனக் கேட்க, நானும், “அவர்கள் என்னிடம் பேசியவரை ஐ.பி.கே.எஃப். (அமைதிப்படை) இலங்கையில் செய்த அட்டூழியங்களைப் பற்றிப் பேசினார்கள். அதன் எதிரொலியாகத்தான் சம்பவம் நடந்திருக்கிறது என்றனர். சந்திராசாமிக்கும் இதில் தொடர்பிருக்கிறது என அவர்கள் பேசிக் கொண்டதில் இருந்து தெரிந்து கொண்டேன்' என்றேன்.

மூன்றாவதாக, “இதைப் பற்றி சி.பி.ஐ. அதிகாரிகளிடம் சொன்னீர்களா?” என்றார். “அவர்களிடம் இந்த உண்மைகளை விரிவாக எடுத்துரைத்தேன். அதற்காக அடிதான் விழுந்தது. இயக்குனர் கார்த்திகேயன் எனது பல்லை உடைத்தார். சுட்டுக் கொல்வதாகவும் மிரட்டினார்” என்றேன்..." (http://www.keetru.com/literature/essays/ranganath.php)

இத்தனை அயோக்கியத்தனங்களையும், மனித உரிமை மீறல்களையும் செய்துதான் சிறப்பு புலனாய்வுப் பிரிவு 26 பேரையும் குற்றவாளிகள் என்றது. இவையெதையும் கணக்கில் எடுத்துக்கொள்ளாமல், கண்ணை மூடிக் கொண்டு சிறப்பு புலனாய்வுப் பிரிவு சொன்னதைக் கொண்டு, 26 பேரையும் குற்றவாளிக் கூண்டுக்குள் ஏற்றுகிறது இந்தப் புத்தகம். ராஜீவ் சர்மாவிற்கு அதிகாரம் இருந்தால் 26 பேரையும் தூக்கிலேற்றியிருப்பார்.

savukkubook450.jpg

இவர் அப்படியே நம்பும் 'அம்மாம்பெரிய' சிபிஐயின் யோக்கியதை என்ன என்பதையும் கொஞ்சம் பார்ப்போமா? அண்மையில் தேடப்படும் 50 தீவிரவாதிகள் பட்டியலை மத்திய உள்துறை அமைச்சகத்திடம் கொடுத்த சிபிஐ, அவர்கள் பாகிஸ்தானுக்குள் இருப்பதாகவும் கூறியது. பட்டியல் வெளியிடப்பட்ட இரண்டு, மூன்று தினங்களில் பட்டியலில் இருக்கும் வாஜுல் கமர்கான் என்பவர் மும்பை நகரத்தின் அருகே உள்ள தானேவில் பல ஆண்டுகளாக தங்கி வருவதாக அவருடைய குடும்பத்தினர் ஊடகங்களில் தெரியப்படுத்தியவுடன் சிபிஐ சூடு தாங்காமல் கையை உதறிக் கொண்டது; 'சாரி' சொன்னது.

இந்தச் சமாளிப்பு முடிவதற்குள்ளாக பட்டியலில் இருக்கும் பெரோஸ் அப்துல் ரஷீத் கான் என்பவரும் இந்தியாவில் இருக்கும் தகவல் வெளியாகி அனைவரையும் தர்மசங்கடத்தில் ஆழ்த்தியது. ஏற்கெனவே கைதாகி மும்பை சிறையில் இருக்கும் நபரைத்தான் பாகிஸ்தானில் ஒளிந்து கொண்டிருப்பதாக கூறி பட்டியலை தந்துள்ளது இந்தியா. அது மட்டுமில்லாது ஆட்டுக் குட்டியை தோளில் போட்டுக் கொண்டு ஊரெல்லாம் தேடிய கதையாக சிறையில் இருக்கும் பெரோஸ்கான் மீது சர்வதேச போலீஸ் மூலமாக பிடிவாரண்ட் வாங்கி சிபிஐ உலகம் பூராவும் தேடித் திரிந்த தகவல் வெளியாகி சிரிப்பாய் சிரிக்கிறது. (நன்றி: மக்கள் ரிப்போர்ட்)

1995ம் ஆண்டு டிசம்பர் மாதம் 18ம் தேதி மேற்கு வங்க மாநிலம் புருலியா மாவட்டத்திலுள்ள ஜோவ்பூர் ஜால்ரா பகுதியில் பறந்த மர்ம விமானம் ஆயுதக் குவியலை வீசியது. அந்த விமானத்தை வழியில் மடக்கிய சிபிஐ அதிகாரிகள் ஆயுத வியாபாரி பீட்டர் பீளீஸையும், நீல்ஸ் கிரிஸ்டியன் நீல்ஸன் என்கிற கிம்டேவியையும் கைது செய்தனர். சிபிஐ விசாரணை நடத்திக் கொண்டிருக்கும்போதே கிம் டேவி மர்மமான முறையில் தப்பியோடி விட்டான். தங்கள் பிடியிலிருந்து தப்பி தலைமறைவாக இருக்கும் கிம்டேவியை தேடிப் பிடிக்க நடவடிக்கை எடுப்பதாக சீன்காட்ட ஆரம்பித்தனர். சிபிஐயின் அறிக்கைகளை கேள்விப்பட்ட கிம்டேவி, தான் மறைந்து வாழவில்லை என்றும், பல ஆண்டுகளாக கோபன் ஹேகனில் வெளிப்படையாக வாழ்ந்து வருவதாகவும் தெரிவித்தான். மேலும் தான் தப்பிக்கவில்லை என்றும், தன்னை பாதுகாப்பாக நேபாள எல்லைக்கு அழைத்துச் சென்று வழியனுப்பி வைத்ததே சிபிஐதான் என்றும் பேட்டி கொடுத்து சிபிஐ மானத்தை கப்பலேற்றி விட்டான்.

இன்னும் ஒருபடி மேலேபோய், தான் கோபன் ஹேகனில் தங்கி இருப்பது சிபிஐக்கு தெரியும் என்றும், சிபிஐ அதிகாரிகள் தன்னைத் தேடுவதாக கூறி இத்தனை ஆண்டுகள் உலகச் சுற்றுலா போய்க் கொண்டிருக்கிறார்கள் என்கிற குண்டைத் தூக்கிப் போட்டு சிபிஐயின் வண்டவாளத்தை தண்டவாளம் ஏற்றி விட்டான். (நன்றி: மக்கள் ரிப்போர்ட்)

இந்த சூரப்புலிகள் இராஜீவ் கொலை விசாரணையின்போது பத்திரிக்கைகளில் வெளியிட்ட புரூடா கதைகளைத் தொகுத்துத்தான், 'அசல் நெய்யில்' செய்யப்பட்ட பத்திரிக்கையாளர் ராஜீவ் சர்மா இந்தப் புத்தகத்தை எழுதியிருக்கிறார். அதற்கு முன்னுரை முன்னாள் சிபிஐ இயக்குனர். நல்லா இருக்குப்பா உங்க காம்பினேஷனும் கொலாப்ரேஷனும்.

இத்தனை அனர்த்தங்களுக்கும் மேலாக இந்தப் புத்தகம் என்ன சொல்கிறது? இராஜீவ் கொலையில் புலிகளுக்கு மட்டுமல்ல, காங்கிரஸ் தலைவர்கள், ஜெயலலிதா, பிரேமதாசா, இஸ்ரேலின் மொசார்ட், அமெரிக்காவின் சிஐஏ-வுக்கும் தொடர்பு இருக்க வாய்ப்பு இருக்கிறது என்று கூறுகிறது. நன்கு கவனிக்கவும்.. அதற்கான யூகங்களைத் தருகிறது; ஆதாரங்களை அல்ல. அதுமட்டுமல்ல, கொலைச்சதியிலிருந்து புலிகளையோ, கைது செய்யப்பட்ட 26 தமிழர்களையோ அது விடுவிக்கவில்லை.

இராஜீவ் கொலைச் சதியில் சர்வதேச நாடுகளின் பங்கு குறித்தும், காங்கிரஸ் தலைவர்களோ, ஜெயலலிதாவோ ராஜீவுடன் இல்லாதது குறித்தும் தமிழகத்தில் நிறைய பேசியும், எழுதியும் ஆகிவிட்டது. தோழர் விடுதலை இராசேந்திரனின் ‘இராஜீவ் கொலை – மறைக்கப்பட்ட உண்மைகள்’ புத்தகம் தொடங்கி தமிழன் எக்ஸ்பிரஸ், ஜூனியர் விகடன், குமுதம் ரிப்போர்ட்டர், நந்தன், நக்கீரன் – ஏன் காலச்சுவடு உட்பட பல்வேறு பத்திரிக்கைகளில் இச்செய்திகளும் கேள்விகளும் எழுப்பப்பட்டுள்ளன. இராஜீவ் கொலை வழக்கு நிதி சேகரிப்பு தொடர்பாக அய்யா பழ.நெடுமாறன் தலைமையில் ஈழ ஆதரவாளர்கள் தமிழகம் முழுவதும் பொதுக் கூட்டங்கள் நடத்தி பேசியிருக்கிறார்கள். என்னுடைய கல்லூரி படிப்பின்போது வள்ளியூரில் அப்படி நடந்த ஒரு கூட்டத்தில் பழ.நெடுமாறன் இந்த செய்திகளை பேசக் கேட்டிருக்கிறேன்.

கால்மணி நேரம் இணையத்தில் தேடியதிலேயே இதுதொடர்பான சில தரவுகளைப் பெற முடிந்தது. அவற்றில் சில:

மாவீரன் முத்துக்குமார் தனது மரண சாசனத்தில் (http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=4110&Itemid=139) “ராஜீவ் கொல்லப்பட்டபோது காங்கிரசின் முக்கிய தலைவர்கள் ஏன் அவருடன் இல்லை, கூட்டணிக் கட்சித் தலைவியான ஜெயலலிதா, தமிழ்நாட்டில் ராஜீவ் கலந்துகொள்ளும் ஆகப்பெரிய பொதுக்கூட்டத்தில் ஏன் பங்கெடுக்கப் போகவில்லை என்பதுபோன்ற கேள்விகள் கேட்கப்படாமலும், இவர்களால் பதில் சொல்லப்படாமலும் கிடக்கின்றன.” என்றும், “ராஜீவ்காந்தி கொலை வழக்கு இண்டர்போலால் விசாரிக்கப்பட்டு, உண்மையான குற்றவாளிகள் இனம்காணப்பட வேண்டும்.” என்றும் எழுதியுள்ளார்.

தமிழன் எக்ஸ்பிரஸ் நவம்பர் 19, 1997 இதழில் சுதாங்கன் “ராஜீவ் கொலை ஒரு வி.ஐ.பி.யின் மரணம் மட்டும் அல்ல; தேசத்தை சிதறச் செய்யும் மிகப் பெரிய சதி. பல அந்நிய சக்திகள் இந்தப் பரந்த தேசத்தைக் காட்டியாள நினைக்கும் தந்திரம்.” என்றும் “வளைகுடா போரின்போது அமெரிக்க விமானங்களுக்கு இந்தியா எரிபொருள் கொடுத்து உதவியது. இந்த உதவியைச் செய்த சந்திரசேகர் அரசைக் கடுமையாகக் கண்டித்தார் ராஜீவ் காந்தி. அமெரிக்காவிற்கு இதனால் ராஜீவ் மீது ஏற்பட்ட கோபத்தையும், இந்தக் கொலையின் பின்னணியில் சி.ஐ.ஏ.வுக்கு பங்கு உண்டா என்பதையும் ஏன் புலனாய்வுத்துறை விசாரிக்கவில்லை?” என்றும் “காமினி திசநாயகா, அதுலத் முதலி, விக்கிரம சிங்கே இவர்கள் எல்லாம் இலங்கையின் முக்கிய அரசியல்வாதிகள். இவர்கள் கொலை செய்யப்பட்டபோது அந்தப் பழி இலங்கை அதிபர் பிரேமதாஸாவின் மீது சுமத்தப்பட்டது. ராஜீவ் விஷயத்தில் ஏன் அந்தக் கோணத்தில் விசாரணை இல்லை?” என்றும் எழுதியிருந்தார். (விடை தெரியாத புதிர்கள் - சுதாங்கன்)

காலச்சுவடில் புலிகளுக்கு எதிரான கண்ணனின் கட்டுரைக்கு வந்த எதிர்வினையில் (http://www.kalachuvadu.com/issue-109/page118.asp) மலரவன் என்பவர் ‘ராஜீவ் காந்தி கொலை ஒரு கோணத்தில் மட்டும் விசாரிக்கப்பட்டு, ஒரு தரப்பினர் மட்டும் குற்றவாளிகளாக்கப்பட்டுத் தண்டிக்கப்பட்டும்விட்டனர். உண்மையில் விடுதலைப்புலிகள் இயக்கம் மட்டும்தான் இந்த நிகழ்விற்குக் காரணமா? விசாரணையின் எல்லை காங்கிரசுகாரர்கள், அதிகாரவர்க்கம் அமெரிக்க சிஐஏ என்று இன்னும் கொஞ்சம் விரிந்திருந்தால் உண்மை வெளிப்பட்டிருக்கும்.’ என்று எழுதியிருக்கிறார்.

தமிழகத்தில் கடந்த 20 ஆண்டுகளாக பலர் பேசியும் எழுதியும் வந்த செய்தியைத்தான் இந்திய உளவுத்துறை குறிப்புகளோடு இந்தப் புத்தகம் சில பக்கங்களில் பேசுகிறது. பெரும்பான்மையான பக்கங்களில் விடுதலைப் புலிகளுக்கு எதிராகவும், கொலை வழக்கில் கைதானவர்களுக்கு எதிராகவும் பேசுகிறது. உச்ச நிதிமன்றம் நிரபாரதிகள் என விடுவித்த 19 பேரையும் குற்றவாளிகள் என்கிறது.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவிக்க இந்தப் புத்தகம் எப்படி உதவி செய்யப் போகிறது? அவர்கள் அப்பாவிகள் என்பதையோ, அவர்கள் மீதான வழக்கு ஜோடிக்கப்பட்டது என்பதையோ இப்புத்தகம் எங்கேயாவது பேசுகிறதா? அவர்களை வழக்கிலிருந்து விடுவிப்பதற்கான சிறுமுகாந்திரத்தையாவது அளிக்கிறதா? சிஐஏ தொடர்பு குறித்து இந்தப் புத்தகம் பேசுவதால், நளினி, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேருக்கு விடுதலை கிடைத்துவிடுமா? அமெரிக்காவின் விசுவாசமான அடிமையாகிவிட்ட இந்தியா, சிஐஏவுக்கு எதிராக சிறுதுரும்பையாவது அசைக்க சம்மதிக்குமா? சிஐஏ மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய காங்கிரஸ் அரசோ அல்லது வேறெந்த அரசோ அனுமதி அளிக்குமா? அதற்குப் பதிலாக ஒட்டுமொத்த தமிழர்களையும் கொல்வதற்குக் கூட இந்திய அரசு தயங்காது என்பதேதானே யதார்த்தம்.

நூல் வெளியீட்டு விழாவில், இராஜீவ் கொலை வழக்கில் தமிழர்கள் மீது வட இந்தியர்கள் குற்றம்சாட்டும்போது பதில் சொல்ல நம்மிடம் தரவுகள் இல்லை என்று மொழிபெயர்ப்பாளர் தோழர் ஆனந்த்ராஜ் பேசினார். அது வாசிப்பின் போதாமையைக் காட்டுகிறதா இல்லை அல்லது தமிழர்கள் நம்மிடையே எப்போதுமிருக்கும் தாழ்வு மனப்பான்மையைக் குறிக்கிறதா எனத் தெரியவில்லை. இந்தப் புத்தகம் தமிழர்களை எங்கேயாவது விடுவித்திருக்கிறதா? முன்னிலும் மோசமாக அல்லவா சித்தரிக்கிறது? எந்த அரசியலும் தெரியாத ஒரு புதிய வாசகர் இந்தப் புத்தகத்தைப் படித்தால், 'இராஜீவ் காந்தி இந்தியாவை வல்லரசாக்க வந்த உத்தமர். அதை விரும்பாத அந்நிய சக்திகளுடன் சேர்ந்து காசுக்கு ஆசைப்பட்டு புலிகள் இந்தக் கொலையை செய்துவிட்டார்கள். புலிகள் மோசமானவர்கள். கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் எல்லோரும் உண்மைக் குற்றவாளிகள்' என்ற சித்திரம்தானே எழும்?

வட இந்தியர்களிடம் இந்தப் புத்தகத்தைக் காட்டி, நம் ஆட்களையே குற்றவாளியாக்குவதை விட, இராஜீவ் காந்தி ஆறாயிரம் தமிழர்களைக் கொன்ற ஒரு அயோக்கியன் என்று சொல்வதும், 'இது கொலையல்ல, மரண தண்டணை' என்று தோழர் கொளத்தூர் மணி போல் உரக்கச் சொல்வதும், இந்த வழக்கில் எப்படி அப்பாவிகள் சிக்க வைக்கப்பட்டிருப்பார்கள் என்று விளங்கவைப்பதும்தான் சரியானது. அதற்கான தரவுகள் தமிழில் ஏராளமாக இருக்கின்றன. தோழர்கள் விடுதலை இராசேந்திரன், புகழேந்தி, பூங்குழலி உதவியுடன் ஆனந்த்ராஜ் 3 அல்லது 4 மாதங்கள் முயற்சித்தால் ஆங்கிலத்தில் அருமையானதொரு புத்தகத்தைக் கொண்டுவரலாம். அதைவிடுத்து, 26 பேருக்கும் பாதகமான இந்தப் புத்தகத்தை சிங்களத்திலும், மலையாளத்திலும் மொழிபெயர்ப்பு செய்து வெளியிடப் போகிறேன் என்று தோழர் அச்சுறுத்துவது அழகல்ல…

விடுதலைப் புலிகளை மிகமிக திறமைசாலிகளாக தான் சித்தரித்த‌தாக கூறுவதன் மூலம், அவர்களை பயங்கரவாதிகளாக, கூலியாட்களாக சித்தரித்ததை சமப்ப‌டுத்தப் பார்க்கிறார் ராஜீவ் சர்மா. போராளிகள் மீது சேறடிப்பதன் மூலம் மறைமுகமாக போராட்டத்தின் நியாயத்தை மறுக்கும் கேடுகெட்ட அரசியலைத்தான் அவர் செய்திருக்கிறார்.

ராஜீவ் சர்மா எழுதுகிறார்:

“…எனது இந்தியா உயர்ந்தது (மேரா பாரத் மஹான் – My India is great) என்ற வாசகத்தைக் கொடுத்த முன்னாள் பிரதமர் இறந்துவிட்டார். ஆனால், இந்தியாவின் கௌரவம் நிலைகுலைந்தது. 1992 மே 22 அன்று ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முதல் குற்றவாளியாக பிரபாகரன் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் பிரபாகரன் எங்கே? அவர் இப்பொழுதும் நன்கு ஒருங்கிணைக்கப்பட்ட கொரில்லா ராணுவத்திற்குக் கட்டளையிட்டுக் கொண்டு ராஜாவைப் போல இருக்கிறார். ஏன் பிரபாகரனைப் பிடிப்பதற்காகத் தாக்குதல் நடவடிக்கை திட்டமிடப்பட முடியாது? ஈராக்கின் உள்ளே நுழைந்து ஈராக்கின் அணு உலைகளை அழித்து பாதுகாப்பாகத் திரும்பும் போர்விமானங்களை இஸ்ரேல் போன்ற சிறிய நாடுகள் அனுப்பும்பொழுது இந்தியாவின் அருகில் இருந்துகொண்டு இந்தியாவின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் மிரட்டல் விடுக்கும் தீவிரவாத இயக்கத்தின் தலைவரைப் பிடிக்க ஏன் புதுதில்லி தைரியமான வெளிப்படையான தாக்குதலைத் துவங்கக்கூடாது?..”

மீண்டும் ஒரு இந்தியப் படையை ஈழத்திற்கு அனுப்பி, தமிழர்களைக் கொல்ல இந்திய அரசுக்கு 1998ல் யோசனை தந்திருக்கிறான் இந்த ராஜீவ் சர்மா (இந்த நாய்க்கு இனி என்ன மரியாதை வேண்டிக் கிடக்கிறது?). ஈழ ஆதரவாளர்கள் நிரம்பியிருந்த அவையில் இந்தப் புத்தகத்தை வெளியிட்டுவிட்டு, பத்திரமாக திரும்பியுமிருக்கிறான். நமது ஜனநாயகத்தன்மையில் நீடிக்கிறது எதிரிகளின் உயிர்.

யார் இந்த ராஜீவ் சர்மா?

சிபிஐ வசம் இருந்த இராஜீவ் கொலை வழக்கு தொடர்பான ரகசிய ஆவணங்கள் இவனுக்கு எப்படி கிடைத்தது?

சித்திரவதைகள் மூலம் அப்பாவிகளை குற்றவாளியாக்கிய சிபிஐ‍-ன் முறைகேடான விசாரணைகள் குறித்து இப்புத்தகம் மௌனம் சாதிப்பதேன்?

திரைப்படங்களில் நேர்மையானவர்களாகவும், திறமைசாலிகளாவும் காட்டப்படுவதுபோல், இந்தப் புத்தகத்தில் சிபிஐ அதிகாரிகளை காட்ட வேண்டிய அவசியம் ராஜீவ் சர்மாவுக்கு ஏன் வந்தது?

கொலை வழக்கு விசாரணையின்போது சிபிஐ இயக்குனராக இருந்த விஜயகரன் இந்தப் புத்தகத்திற்கு எப்படி முன்னுரை எழுதினார்?

சிபிஐக்கும், ராஜீவ் சர்மாவுக்கும் இடையேயான தொடர்பு என்ன?

தமிழகப் பத்திரிக்கையாளர்களை அம்பலப்படுத்தியதுபோல், இந்த ‘யோக்கிய சிகாமணி’ ராஜீவ் சர்மாவையும் தோலுரித்துக் காட்ட வேண்டிய‌ அவசியம் தோழர் சவுக்குக்கு இருக்கிறது.

தமிழினத்திற்கோ, தமிழர்களுக்கோ பயனளிக்கும் வகையில் – ஒரு குண்டுமணி அளவிற்குக்கூட புதிய செய்தியைக் கொண்டுவராத இந்தப் புத்தகம் யாருக்குப் பயன்படப் போகிறது? சோ.ராமசாமி, வாசந்தி, அ.மார்க்ஸ், ஜெயமோகன் கும்பலுக்குத்தான்.. இந்திய வல்லாதிக்கத்தின் குரலை ஊடகங்களில் பரப்பிக் கொண்டிருக்கும் அவர்களுக்கு லட்டு மாதிரியான செய்திகள் இதில் இருக்கின்றன. அவர்கள் அடுத்து எழுதும் கட்டுரைகளின் பின்னிணைப்புகளில் 'விடுதலைப் புலிகளுக்கு அப்பால் -‍ ராஜீவ் கொலைப் பின்னணி, சவுக்கு வெளியீடு’ என்பதும் இடம்பெற்றால் அதற்கு யாரும் ஆச்சரியம் கொள்ளத் தேவையில்லை. அதற்கான முழுத்தகுதியும் இப்புத்தகத்திற்கு உள்ளது.

- கீற்று நந்தன் ( editor@keetru.comஇந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்கு தாங்கள் JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் )

நன்றி கீற்று இணையதளம்

  • கருத்துக்கள உறவுகள்

சிபிஐக்கும், ராஜீவ் சர்மாவுக்கும் இடையேயான தொடர்பு என்ன?

யாராக இருந்தாலென்ன, இந்த ராஜீவ் சர்மா!

ராஜீவ் கொலையின் உண்மைக் குற்றவாளிகளை மறைப்பதற்காக, வேண்டுமென்றே புலிகளை இழுத்து, உண்மைகளைத் திசை திருப்ப முயற்சிக்கின்றார்!

இணைப்புக்கு நன்றிகள் நுணா!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.