Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இழப்பால் அதிர்கிறது கொக்கிளாய் - ஒரு பூர்வீக கிராமத்தின் துயரக் கதை -

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இழப்பால் அதிர்கிறது கொக்கிளாய் - ஒரு பூர்வீக கிராமத்தின் துயரக் கதை -

13 ஜூலை 2011

குளோபல் தமிழ் செய்திகளுக்காக தமிழ்மாறன்

இழப்பால் அதிர்கிறது கொக்கிளாய் - ஒரு பூர்வீக கிராமத்தின் துயரக் கதை -

ஒரு துண்டிக்கப்பட்ட கிராமத்தைப் போல கொக்கிளாய் மூடி வைக்கப்பட்டிருக்கிறது. நாங்கள் ஒதுக்கப்பட்டவர்களாக புறக்கணிப்படுவதாகவும் நடத்தப்படுவதாகவும் வெதும்பும் சனங்களின் வார்த்தைகள் மிகவும் அதிர வைக்கின்றன. இங்கு சனங்கள் வாழந்தார்களா? என்று பார்ப்பவர்கள் கேட்கும்விதமாக பாழடைந்து அழிவுகளின் எச்சமும் அழிந்து போய்க் கிடக்கிறது கொக்கிளாய்ப் பிரதேசம். கொக்கிளாயில் கடந்த சில மாதங்களின் முன்பாக 27 வருடங்களின் பின்னர் மக்கள் மீளக் குடியமர்த்தப்பட்டிருக்கிறார்கள். சிங்களக் குடியேற்றத்தால் அச்சமடைந்தும் போருக்குப் பிந்திய நிவாரணங்களில் ஒதுக்கப்பட்டு பாதிப்புக்களைச் சுமந்தும் வாழும் கொக்கிளாய் பிரதேச மக்களின் கதைகளை எழுத வேண்டும் என்று அந்தப் பகுதிக்குச் சென்றிருந்தேன். நமது கையறு நிலையை இன்று படுவர்த்தனமாகச் சித்திரித்துக் கொண்டிருக்கும் இந்தப் பிரதேசம் ஈழத்தின் அரசியல் தொடர்பிலும் மிகவும் அதிரும் விடயங்களை முகத்துவாரத்தில் வைத்திருக்கிறது.

அழிவுகளின் எச்சமும் அழிந்து போகும் கொக்கிளாய் -

நாம் இன்று எதை எல்லாம் அதிகமதிம் இழந்து கொண்டிருக்கிறோம் என்பதை கொக்கிளாய்ப் பிரதேசம் வெளிக்காட்டுகிறது. ஈழத்தமிழர்களின் நிலம் இன்று எத்தகைய அபாயங்களை எதிர்கொண்டும் கடந்துகொண்டும் இருக்கிறது என்பதை இந்த நிலம் புலப்படுத்துகிறது. ஒரு முக்கியமான கால கட்டத்தில் ஒரு முக்கிய நிலப்பகுதி தொடர்பில் நாம் அனைவரும் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது. அந்த மக்களின் வார்த்தைகளில் இருக்கும் வாழக்கையுணர்வும் நிலம்மீதான உணர்வும் போராட்டம்மீதான உணர்வும் இரண்டு மாகாணங்கள் ஒன்றினையும் புள்ளியை தொட்டுயர்கின்றன. வடக்கையும் கிழக்கையும் இணைக்கும் கொக்கிளாய் புல்மோட்டைப் பகுதியும் ஈழத்தமிழர்களின் வடக்கு கிழக்கின் இருதயபூமிதான். நாங்கள் எங்கள் தேசத்தை இணைப்பவர்கள். எங்களுக்கு நேர்கிற கதிகள் அறியப்படாதவையாகவும் தீர்க்கப்படாதவையாகவும் இருப்பது எவ்வளவு ஆபத்தானது என்ற அந்த மக்களின் வார்த்தைகளிலுள்ள அரசியலுணர்வு வாழ்வின் வேட்கையால் மேலெழுகின்றன.

ஈழத்தின் வடக்கில் முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைதுறைப்பற்றுப் பிரதேச செயலாளர் பிரிவில் கிழக்குப் பக்கமாக மாவட்டத்தின் முடிவுக் கிராமமாக அமைந்திருக்கிறது கொக்கிளாய். கொக்கிளாய்க் கிராமத்தின் முடிவிலிருந்து புல்மோட்டை கிராமம் தொடங்கி கிழக்கு மாகாணம் விரிகிறது. ஒரு பக்கம் கடலும் சிறு கடல்களும் குளங்களும் ஆறுகளும் கொண்ட வளமான பூமி. காடுகளும் பனைகளும் மணல் வெளிகளும் பறவைகளின் சரணாலமும் கொண்ட நிலப்பிரதேசம். குளத்துமீன்பிடித் தொழிலும் கடல்மீன்பிடித்தொழிலும் மேட்டு நிலப் பயிற்ச்செய்கையும் தாழ் நில நெற்பயிற்ச்செய்கையும் என்று ஒரு காலத்தில் அழகும் வளமும் மிகுந்த வாழ்க்கை இங்கு ஒளிர்ந்திருந்திருந்தது. அப்படியெனில் கொக்கிளாய் இன்றேன் அதிர்கிறது? இன்று கொக்கிளாய் எப்படி இருக்கிறது? என்பது ஆவலோடு அதிர்ச்சி தருகிறது.

கொக்கிளாய்ப் பகுதிக்குச் செல்லுவது அவ்வளவு சாதாரணமானதல்ல. நான் ஏற்கனவே குறிப்பிட்டதைப் போல அது ஒரு துண்டிக்கப்பட்ட பிரதேசம் போல மூடி வைக்கப்பட்டிருக்கிறது. அதிலும் ஒரு ஊடகவியளாலர் அங்கு செல்லுவதும் மக்களை சந்தித்துப் பேசுவதும் மககளின் கதைகளை கேட்பதும் அவ்வளவு சாதாரமானது கிடையாது. கொக்கிளாய் பிரதேசத்தை சென்றடையும் வரை மூன்று சோதனைத் தடுப்பு நிலையங்களைத் தாண்டியே செல்ல வேண்டும். அங்கு அரச பணியாளர்களும் அவ்வப்போது அதிகாரிகாளும்தான் சென்று வருகிறார்கள். மற்றப்படி அங்கு மீள் குடியேறி வாழும் தமிழ் மக்களும் குடியேறி வாழும் சிங்களக் குடிகளும் இராணுவமும்தான் குடியிருக்கிறார்கள். மூடி வைக்கப்படும் விடயத்தில் ஏதோ இருக்கிறது என்பதைப்போல துண்டிக்கப்பட்ட, மூடி வைக்கப்பட்ட கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஒரு கிராமமாக இந்தப் பிரதேசம் கட்டுண்டு கிடக்கிறது.

1984ஆம் ஆண்டு ஈழப் போரின் தொடக்க காலத்தில் இலங்கை இராணுவத்தினரால் மூன்று மணிநேர அவகாசம் வழங்கப்பட்டு கொக்கிளாய் மக்கள் வெளியேற்றப்பட்டார்கள். எங்கு செல்லுவது? எப்படிச் செல்லுவது? என்று வழிதெரியாமல் கொக்கிளாய் பிரதேச மக்கள் சிதறுண்டு தொலைந்தார்கள். பலர் அழிந்தும் போனார்கள். இந்த நடவடிக்கையில் கொக்கிளாய் கிராமத்துடன் கொக்குத்தொடுவாய், கரு நாட்டுக்கேனி உட்பட ஆறு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் துரத்தியடிக்கப்பட்டார்கள். பெரும்பாலான மக்கள் முல்லைத்தீவு நகரத்தை நோக்கியும் முல்லைத்தீவு நகரத்தை அண்டிய கிராமங்களை நோக்கியும் சிதறுண்டு போனார்கள். பலர் உலகின் பல்வேறு நாடுகளுக்குப் புலம்பெயர்ந்தார்கள். அன்று அழியத் தொடங்கியது இந்தக் கிராமம். ஆழிந்தழிந்து அழிக்கப்பட்டுக் கொண்டேயிருக்கிறது.

மக்கள் குடி வாழ்ந்த பிரதேசங்கள் எல்லாமே காடு மண்டியிருக்கிறது. முன்பு அவர்கள் கட்டி வாழ்ந்த வீடுகள், கிணறுகள், பள்ளிகள், கடைத்தெருக்கள், வைத்தியசாலைகள் என்று எதனுடைய எச்சங்களும் இல்லை. எல்லாம் அழிக்கப்பட்டு விட்டன. அங்கு 150க்கு மேற்பட்ட பறவைகள் வாழும் சரணாலயம் அழிக்கப்பட்டதாக செய்திகள் வெளிவந்திருந்தன. அந்த மக்களுடன் பறவைகளும் மிருகங்களும் வளர்ப்புப் பிராணிகளும் அழிக்கப்பட்டிருக்கின்றன. ஒரு வாழ்வு அரசியல் நோக்கம் கருதி முழுமையாக வேருடன் அழிக்கப்படுவதையும் துடைத்தெறியப்படுவதையும் புதைக்கப்படுவதையும் கொக்கிளாய் பயங்கரமாக எதிர் கொண்டிருக்கிறது.

இந்தக் கிராமத்தில் எஞ்சியுள்ள சில புளிய மரங்கள் இந்த மக்கள் வாழந்த கதைகளையும் அவர்களின் நீண்ட வரலாற்றையும் சொல்லுகின்றன. ஆலமரங்கள் கோபத்தோடு விழுதெறிந்ததைப்போல அடர்ந்து அலங்கோலமாய் இருக்கின்றன. அங்கு நின்ற பூர்வீக மாமரங்கள் அழிந்து போக அதன் எச்சங்களில் இருந்து முளைத்த மாமரங்கள் தலை எடுத்து நிற்கின்றன. அதைப் போலவே இளம் பனைகளும் தலைக்கு மேல் வளர்ந்து நிற்கின்றன. இந்த மக்களோடு இந்த நிலத்தோடு அதன் வளம் அதன் அடையாளங்கள் என்று எல்லாமே அழிக்கப்பட்டுள்ளன. ஆனால் எல்லாவற்றையும் மீறி விருட்சங்கள் புதிய மரங்களாக முளைத்திருக்கின்றன. கொடும் அழிப்பின் மத்தியிலும் நெடிய வலிமையன புளிய மரங்கள் நிற்பது ஒரு வகையில் நம்பிக்கையை தருகின்றன.

கொக்கிளாய் கிராமம் அதன் பிரதேம் சார்ந்த எல்லாவிதமான நடவடிக்கைகளும் அதன்மீது விழுந்த அபாயங்களையும் ஆக்கிரமிப்புக் கண்களையும் அபகரிப்பின் மறைவுகளையும் மிகத் தெளிவாய்க் காட்டுகின்றன. அந்தக் கிராமத்தை நெருங்குவதற்கு முன்பாக மூன்றாவது சோதனைத் தடுப்புநிலையம் இருக்கிறது. அந்த இடம் பெரும் இராணுவ முகாமாகவும் எல்லைப் பகுதியாகவும் செயற்பட்ட தளம். முல்லைத்தீவுப் பகுதி புலிகளின் கட்டுப்பாட்டில இருந்த காலங்களில் நாயாற்றுப் பகுதியில் புலிகள் தமது எல்லைப் பகுதியை கட்டமைத்த பொழுது இராணுவத்தினர் கொக்கிளாய்ப் பகுதியின் எல்லையில் தமது நிலைகளை அமைத்திருந்தனர். இடையில் கொக்குத் தொடுவாய்ப் பிரதேசம் பெரும்பாலான காலங்களின் சூன்யப் பிரதேசமாகவே இருந்தது.

பெப்ருவரி 13 1985இல் தமிழீழ விடுதலைப் புலிகள் கொக்கிளாய் இராணுவ முகாமை தாக்கியழித்தார்கள். கொக்கிளாய் முகாம் சமர் ஒன்றில் காட்டிக் கொடுப்பதால் 154 பெண் போராளிகள் குறித்த இடத்தில்தான் களப்பலியானர்கள். அவர்கள் களப்பலியடைந்த இடத்திலேயே இப்பொழுது இராணுவத்தினர் தமது இறுதிச் சோதனைத் தடுப்பு நிலையத்தை அமைத்துள்ளனர். அவர்கள் தமது படைமுகாங்களையும் அவற்றை அண்டிய இடங்களையும் தமக்கு ஏற்ப புதிது புதிதாக கட்டமைத்துக் கொண்டிருக்கிறார்கள். கிராமங்களை துண்டாடும் இந்தப் படைமுகாங்கள் அந்த மக்களை கட்டுப்படுத்தவும் எச்சரிக்கையோடு மட்டுப்படுத்தப்பட்ட வாழ்க்கையை உணர்த்தவும் அமைக்கப்படுகின்றன. இதைவிட வீதி முழுவதும் காவலரண்கள் வீதியால் செல்பவர்களை கண்காணித்துக் கொண்டிருக்கின்றன. கொக்கிளாய்ப் பிரதேசத்தை பாதுகாப்பதில் மிகுந்த அக்கறையோடு இருக்கிறார்கள் இந்தப் பாதுகாப்புப்படைகள்.

சிங்களக் குடியேற்ற பகுதியில் மீன்கள் காய்கின்றன:

கொக்கிளாய் இன்று அதிர்ந்து கொண்டிருக்கிறது. இருப்புக்கும் வளத்திற்கும் வாழ்க்கைக்கும் எதிர்காலத்திற்கும் கொக்கிளாயிற்கு ஆபத்து வந்துவிட்டது. கொக்கிளாய் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் 30 வருடங்களாக இருக்கின்றன. தொடக்க காலத்தில் 30 சிங்களக் குடிகள் வந்து அங்கு குடியேறியிருக்கிறார்கள். இன்று அவர்கள் மேலும் குடியேறியும் பெருகியுமாக 300 குடும்பங்கள் ஆகிவிட்டார்கள். கொக்கிளாய் முகத்துவாரத்தில் இந்தக் குடிகள் தங்கியிருக்கின்றன. தொடக்க காலத்தில் இவர்கள் மீன் பிடித் தொழிலுக்காக இங்கு வந்தார்கள். கொக்கிளாய்க் கடல் வளம் கொடுத்த இலாபம் இவர்களை இந்தப் பிரதேசத்தில் தொடர்ந்தும் தங்கியிருந்து தொழில் செய்ய ஆர்வளித்திருக்கிறது. அத்தோடு முக்கியமாக அரசினதும் இராணுவத்தினரதும் பாதுகாப்பும் ஒத்துழைப்பும் இந்த மக்களுக்கு தொடர்ந்து வழங்கப்படுகிறது. அவர்களது இராணுவம் அவர்களுக்கு பாதுகாப்பளிக்கிறது. ஆனால் இது எமது நிலத்திலல்லவா நடக்கிறது. இதுதான் பெரும் அதிர்ச்சியைத் தருகிறது. முகத்துவாரப் பகுதியில் சிறிய நிலப்பகுதியில் முகாம் போல வீடுகளை அமைத்துத் தங்கிய மக்களுக்கு இன்று காணி தேவைப்படுகிறது என்பதுதான் அதிர்ச்சி. இவர்களுக்கு காணிகளை பகிர்ந்தளிக்க நமது உதவி அரசாங்க அதிபர் ஒருவர் நடவடிக்கை எடுக்கிறார்.

இந்த மக்களுக்கு காணிகளை பகிர்ந்தளிப்பேன் என்ற வாக்குறுதியுடனும் அந்தப் பிரமாணத்துடனுமே குறித்த உதவி அரசாங்க அதிபர் பதவியை ஏற்றிருக்கிறார். இது எவ்வளவு கொடுமையானது. தனக்கு பதவி தேவை என்பதற்காக ஈழத் தமிழ் மக்களின் காணிகளை பகிர்ந்து தருகிறேன் என்கிற இவரது பிரமாணம் எந்தளவு கண்டித்தக்கது? குறித்த உதவி அரசாங்க அதிபர் சிங்கள மக்களுக்கு காணிகளை வழங்கப் போகிறாராம் என்பது கொக்கிளாய் மக்களின் நெஞ்சில் பெரும் காயங்களை அடித்தேற்படுத்தியிருக்கின்றன. இது உடனடியாகத் தடுத்து நிறுத்தப்பட வேண்டிய விடயம். அதிகாரிகள் இந்த விடயத்தை வரலாற்று பூர்வமாக தமிழ் மக்களின் மனநிலைகளை புரிந்து தடுத்து நிறுத்த வேண்டும். தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் அந்தப் பகுதிக்குச் சென்று மக்களின் நிலவரங்களை அறிந்து இந்த விவகாரத்தை கவனத்திற்குக் கொண்டு வர வேண்டும். நிலத்தையும் வளத்தையும் உரிமையையும் சுறண்டும் நடவடிக்கைகள்தான் பெரும் விளைவுகளை உருவாக்குபவை என்பதை எடுத்துரைக்க வேண்டும்.

அதிகாரிகள் இந்த மக்களின் விடயத்தில் கருணையற்று சுயநலத்தோடு செயற்படுவதாக சுட்டிக் காட்டிய மக்கள் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த விடயத்தில் கண்டு கொள்ளாமல் இருக்கிறார்கள் என்று ஆதங்கம் தெரிவித்தார்கள். வன்னித் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் யாரும் இந்த மக்களின் நெருக்கடிகளை குறித்து வாய் திறக்காமல் இருப்பதும் இந்த நடவடிக்கைகளை முன்னெடுப்பவர்களுக்கு தங்குதடையற்றுச் சாதகமாகிற வாய்ப்புக்களை உருவாக்கியுள்ளன. மக்களின் மனநிலையை அவர்களின் கோரிக்கையை அவர்களின் ஆதங்கங்களை அவர்களின் விருப்பு வெறுப்புக்களை அந்த மக்களின் வாக்குகளால் பாராளுமன்றம் நோக்கி நகர்ந்தவர்கள் எடுத்துரைக்க வேண்டும். இது அவர்களின் கடமை. கொக்கிளாயின் வரலாற்றுத் துயரத்தை அங்கு பார்த்த சில கொண்டாடல்களிலும் புறக்கணிப்புக்களிலும் நிறைந்த ஒப்பிடத்தக்க காட்சிகளிலும் மலர்ந்துள்ள பிள்ளைகளின் முகங்களிலும் முதுமையடைந்த மூதாட்டி ஒருவரது வார்த்தைகளிலும் நான் பார்த்தேன். அவை துலங்கலான பிரிவுக்கோடுகளை வரைகின்றன. வேறு பட்ட வாழ்க்கை வெளிப்படுத்துகின்றன.

கொக்கிளாயின் மண்டபம் இல்லா முன்பள்ளி

நான் கொக்கிளாயிற்குள் நுழைந்த பொழுது தெருக்கரையில் இரண்டு குழந்தைகளுக்கு தறப்பாளை விரித்து ஒரு முன் பள்ளி ஆசிரியர் பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார். நமது குழந்தைகள் தங்கள் முதல் கல்வியை இப்படித்தான் படிக்கிறார்கள். அவ்வப்பொழுது தெருவால் செல்லும் வாகனங்கள் மற்றும் நடக்கும் பயணங்கள் குழந்தைகளின் படிப்பை திசை திருப்புகின்றன. அங்கு 20 குழந்தைகள் படிக்கிறார்கள். முன்பள்ளிக்கு என்று ஒரு மண்டபம் இல்லாத பிரச்சினையால் பெரும்பாலான குழந்தைகள் படிப்பதற்கு வருவதில்லை என்று அந்த முன்பள்ளியின் ஆசிரியர் ஜெயசங்கர் சுகந்தா குறிப்பிட்டார். இதை முன் பள்ளி என்று குறிப்படுவதன் அர்த்த்ததை இன்னுமின்னும் ஆழமாக சிந்திக்க வைக்கிறது.

காடுகள் படர்ந்த தனது காணியை துப்புரவாக்கிய விட்டு தான் காலம் காலமாக நடந்த அதே தெருக்களால் இன்னும் கம்பீரமும் வேகமும் குறையாதபடி சென்று கொண்டிருந்தார் 87 வயதான மேரி கலிஸ்டா என்ற மூதாட்டி. இவர் இந்தக் கிராமத்தின் பூர்வீக முதுசங்களில் இன்று எஞ்சியிருப்பவர். இந்தக் கிராமத்தின் வளமான வாழ்க்கையோடும் ஒடுக்குமுறைகளுடனும் பெயர்த்தெறிதலோடும் அலைச்சலோடும் வாழ்வை கடந்து வந்தவர். கொக்கிளாய் கிராமத்தின் பட்ட மரங்களிடையில் இன்னும் உயிர்ப்போடு கிளை விரித்த மரமாக அந்த மூதாட்டி கதைகளை தாங்கிக் கொண்டிருக்கிறார். கொக்கிளாய் மண்ணின் வாழ்வின் ஆதாரமாக உழைப்பின் சாட்சியாக இன்னும் வாழும் அவரது வார்த்தைகள் ஒலிக்கின்றன. வாழ்ந்தது மகிழ்ந்தது எல்லாம் இந்தக் கிராமத்தோடுதான். இப்பொழுது மீண்டும் வாழ வந்திருக்கிறேன் என்று முகம் நிறைய புன்னகையுடன் தள்ளாட்டம் ஏதுமின்றி வலிமையுடன் சொன்னது நமது வாழ்வின் வரலாற்றின் ஆச்சரியத்தை தந்தது.

87 வயதான மேரி கலிஸ்டா என்ற மூதாட்டி

இந்தக் காட்சிகள் முன்குறிப்புக்கள்தான். இவற்றை பார்த்த பின்னர் முகத்துவாரத்தில் பார்த்த காட்சிகள் கொக்கிளாய் கிராமத்தையும் நமது வரலாற்றையும் உலுப்புவதைப்போலிருந்தது. பார்த்து பேரதிர்ச்சியடையும் காட்சிகள்தான். கொக்கிளாய் இன்றேன் அதிர்கிறது என்பதை அந்தக் காட்சிகளின் பின்னர்தான் உணர்ந்தேன். 30 சிங்களக் குடும்பகளும் 300ஆகப் பெருகி மகிழ்வோடும் பாதுகாப்போடும் கடல் தொழிலை செய்து கொண்டிருக்கிறார்கள். இராணுவம் முழுமையான பாதுகாப்பை வழங்கிக் கொண்டிருக்கிறது. முகத்துவாரத்தில் முதலில் புத்தர்தான் வரவேற்பு அளித்தார். அங்குள்ள அரச மரம் ஒன்றின் கீழ் புத்தர் விகாரை எடுத்து அமர்ந்து துயில்கின்றார். மும்மரமாக தொழிலில் சிங்களவர்கள் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். எங்கும் கருவாடுகள் காயப்போடப்பட்டிருந்தன. வலைகளை கட்டிக் கொண்டிருந்தார்கள். பலர் கடற்கரை ஓரத்தில் படகுகளில் மீன்களை இறக்குவது படகை தள்ளுவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள்.

சமையல், சாப்பாடு என்று அன்றாட வாழ்க்கை வெகு இயல்பாக போகிறது. பல்பொருள் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. கடல்த்தொழிலுக்குப் போய் வந்தவர்கள் சிலர் வீட்டு விறாந்தையில் உறங்கிக் கொண்டிருக்கிறார்கள். சிலர் ஒன்றாக அமர்ந்திருந்து பேன் பார்த்தபடி பேசிக் கொண்டிருக்கிறார்கள். உணவருந்திக் கொண்டிருக்கிறார்கள். இப்படி கடலையே களவாடி பணமாக்கும் வாழ்க்கை மிக இயல்பாக நடக்கிறது. எங்களின் கடலில் நடக்கும் இந்தத் துயரத்தை பார்க்கும் பொழுது யாருக்குத்தான் நொஞ்சு பொறுக்கும்? எங்கள் மக்களின் வாழ்க்கையும் வளமும் பணமாக வளமாக தெற்கிக்குக் கொண்டு செல்லப்படுகின்றன என்பதை பார்க்கும் பொழுது யாருக்குத்தான் நொஞ்சு பொறுக்கும்?. நாங்கள் நிலமிழந்து கடலிழந்து உயிரிழந்து அலைய சிறையிருக்க எங்கள் வளத்தை இவர்கள் கொள்ளையடிப்பது என்ன நியாயம்? இவர்களிடம் எப்படி நியாயத்தை எதிர்பார்க்க முடியும் என்ற ஆதங்கம்தான் மட்டுமே எஞ்சுகிறது? ஆதங்கம் என்ன செய்யும்?

மீன்பிடியில் கோலோச்சும் சிங்கள மக்கள்

பார்க்கும் தூரத்தில் புல்மோட்டை தெரிகிறது. கணிப்பொருள்க் கொள்ளையால் புல்மொட்டை அதிர கடல் கொள்ளையால் கொக்கிளாய் அதிர்கிறது. புல்மோட்டைக்கும் கொக்கிளாய்க்கும் இடையில் குறிப்பிட்ட சில நிமிடத்தில் படகு வாயிலாக போக்கு வரத்து நடக்கிறது. கொக்கிளாயில் வந்து தொழிலில் ஈடுபடுபவர்கள் சில நாட்கள் ஓய்வெடுக்கும் முகமாக தெற்கிற்கு சென்று தமது சொந்த வீடுளில் தங்கியிருந்து விட்டு வருகின்றனர். இங்கு பிடிக்கும் மீன்களும் அள்ளும் வளங்களும் தெற்கில் மாளிகைகளாய் சொத்துக்களாய் விளைந்திருக்கின்றன. எல்லாவற்றையும் அந்தக் குறநிமிடப் படகுச் சேவையின் வாயிலாகவே கொண்டு சேர்க்கிறார்கள். கொக்கிளாய் புல்மோட்டைப் பாலம் யுத்தம் காரணமாக உடைந்ததால் கடல்ப் போக்குவரத்தே இப்பொழுது நடக்கிறது. அப்படி அவ்வளவு வளத்தையுமா இந்தப் படகுப் போக்குவரத்தால் கொண்டு சென்றிருப்பார்கள்? என்று ஐய்யம் வரலாம். வன்னி மக்களின் மாடுகள் முதல் அசையும் சொத்துக்கள் அசையாச் சொத்துக்கள் என்று எல்லாவற்றையும் கொள்ளையடித்து அந்த வழியால்தான் கொண்டு சென்றிருக்கிறார்கள் என்று பார்த்தால் அந்தப் போக்குவரத்தின் பலத்தையும் வேகத்தையும் புரிய முடியும். பாலத்தைக் கட்டிக் கொடுத்தால் இன்னும் அதிக வளங்களையும் சொத்துக்களையும் அள்ளிச் சென்று அந்த மக்கள் நன்மையடைவார்கள்.

கொக்கிளாயில் ஒரு சிங்களப் படசாலை

கொக்கிளாயில் ஒரு சிங்களப் படசாலை இருக்கிறது. அதில் 15 மாணவர்கள் கல்வி கற்கிறார்கள். நான்கு இரட்டை மாடிக் கட்டிடங்களுடன் பளிச்சென பள்ளிக்கூடம் காட்சியளிக்கிறது. அனைத்து வளங்களுடனும் இயங்குகிறது. 15 மாணவர்களுக்கு நான்கு இரட்டை மாடிக் கட்டிடங்கள் என்பதைப்போல 7 ஆசிரியர்கள் கற்பிக்கிறார்கள். இந்தப் பாடசாலையை நான் முன்பு குறிப்பிட்ட முன்பள்ளியுடன் ஒப்பிடுவதுடன் கொக்கிளாய் தமிழ்ப் பாடசாலையையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். முதலாம் வகுப்பிலிருந்து சாதாரணதரம் வரையான வகுப்புக்கள், 65 மாணவர்கள், 17 ஆசிரியர்கள் தகரத்தால் பாதியாக சுற்றிக் கட்டப்பட்ட ஒரே ஒரு ஓலை கட்டிடம். பள்ளிகளும் பிஞ்சுகளும் கல்வி என்ற முறையில் இப்படித்தான் புறக்கணிக்கப்படுகிறார்கள். இதை முல்லைத்தீவு நகரத்தில் உள்ள ஒரு பாடசாலையுடன் ஒப்பிட்டாலும் இதே உணர்வுதான் மிஞ்சும்.

கொக்கிளாய் பிரதேசத்தின் எல்லா நிலைமைகளுடனும் கலந்து பல நெருக்கடிகளின் மத்தியில் கொக்கிளாய் பாடசாலை இயங்குகிறது. 27 வருடங்களுக்கு மேலாக இழந்தவர்கள், அலைந்தவர்களின் குழந்தைகளிடம் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தையும் வாழ வேண்டும் என்ற நம்பிக்கையும் தவிர ஒன்றுமில்லை. எல்லோரும் இருக்கிற வளத்தில் கிடைத்த சூழலில் படித்துக் கொண்டிருந்தார்கள். எதையும் அறியாத இந்தக் குழந்தைகளின், மாணவர்களின் இரண்டு பட்ட சூழல் மிகுந்த நெருடலைத் தருகிறது. இவைதான் இன்று கொக்கிளாய் மக்களுக்கு நிகழும் அரசியலையும் வாழ்வியலின் நெருக்கடிக் கதியையும் தெளிவாக்குகின்றன.

கொக்கிளாய் தமிழ்ப் பாடசாலை ஒரு கொட்டகைதான்

கொக்கிளாய் தமிழ்ப் பாடசாலையில் அதிபர் அலுவலகம் எனப்படும் கொட்டகைதான் ஆசிரியர்களின் விடுதியாகவும் செயற்படுகிறது. வாரக் கணக்கிலும் மாதக் கணக்கிலும் தங்கியிருந்து கல்வி கற்பிற்கும் ஆசிரியர்கள் அந்த அறையில்தான் தங்குகிறார்கள். பாடசாலைக்கு பயன்படுத்தப்படும் பொருட்கள் எல்லாமே அந்த அறையில்தான் கிடக்கின்றன. புத்தகங்கள், மண்வெட்டி முதல் எல்லாமே அதற்குள்தான். பாடசாலையின் பழைய கட்டிடமோ உருத் தெரியாமல் அழிந்து கிடக்கிறது. வலயக்கல்விப் பணிமணையால் கட்டிக் கொடுக்கப்பட்ட இரண்டு கட்டிடங்களும் காற்றில் பறந்து போய் விட்டன.

அந்த ஆசிரியர்கள் மிகுந்த அர்ப்பணிப்போடு கல்வி கற்பிக்கிறார்கள் என்பது நம்பிக்கை அளிக்கிறது. அவர்கள் தமது சொந்த தேவைகளுக்காக விடுப்புக்கள்கூட எடுக்க முடியாத நிலையில் இருக்கிறார்கள். இவர்களுக்கு சரியான போக்கு வரத்து வசதிகள் இல்லை. 7.15 இற்கும் மாலை 2.30 இற்கும் மட்டும் இரண்டு பேரூந்துகள் இருக்கின்றன. இவற்றை தவர விட்டால் வேறு போக்குவரத்து மார்க்கங்கள் கிடையாது. எதாவது அவசரம் என்றால் கூட செல்ல முடியாது. ஆசிரியர்கள் விடுமுறை நாட்களில் தமது ஊரகளுக்குத் திரும்புவதற்காக ஏதாவது வாகனங்கள் வருகின்றனவா? என்று காத்துக் கொண்டிருந்தார்கள்.

மாணவர்களுக்கு போதிய ஆசிரியர்கள் இல்லை. இவ்வருடம் பரீட்சை எழுதவுள்ள சாதாரணதர வகுப்பு மாணவர்கள் பாடசாலைக்கு வந்து விட்டு புத்தகங்களை தாமே வாசித்துவிட்டு திரும்புகிறார்கள். ஆசியிர் வளப் பிரச்சினையால் சில மாணவர்கள் பாடசாலைக்கு வராது வீட்டில் இருக்கிறார்கள். பாதுகாப்பற்ற வீட்டையும் தம்மிடம் உள்ள பொருட்களையும் பாதுகாக்கிற நடவடிக்கைகளில் பள்ளி மாணவர்கள் ஈடுபடுகிறார்கள் என ஆசிரியர் ஒருவர் வருத்தத்துடன் தெரிவித்தார். தாய் தந்தை வேலைக்கு செல்லும்பொழுதும் முல்லைத்தீவு நகரம் போல தூர இடங்களுக்கச் செல்லும் பொழுதும் செல்லும் பொழுதும் படிக்க வேண்டிய பிள்ளைகள் கூடாரத்தை பாதுகாக்கும் காவலாளிகளாகிறார்கள் என்பது இந்தப் பாடசாலைக்கும் கிராமத்திற்கும் நேர்ந்த பொது அவலத்தை சொல்கிறது. ஆனால் 4 கிலோ மீற்றர் தூரத்தில் இருக்கும் புளியமுனை போன்ற தூர கிராமங்களிலிருந்தும் பிள்ளகைள் கால் நடையாக வருகிறார்கள் என்பதும் முக்கியமானது.

கொக்கிளாயின் தமிழ்க் குடும்பம்

கொக்கிளாய் ஒரு துண்டிக்கப்பட்ட தொடர்புகளற்ற பிரதேசம். முல்லைத்தீவு நகரத்திலிருந்து மிக தொலைவில் இருப்பதைப்போலான உணர்வுக்கு பாதைப் பிரச்சினையும் போக்குவரத்துப் பிரச்சினையும் முக்கிய காரணமாக இருக்கின்றன. அங்கு ஒரே ஒரு அம்புலன்ஸ் இருக்கிறது. ஒருவர் நோய்வாய்ப்பட்டு முல்லை நகரத்திற்கு கொண்டு சென்ற தருணத்தில் இன்னொருவருக்கு ஆபத்து நேர்ந்தால் கொண்டு செல்ல எந்த மார்க்கமும் கிடையாது. தனியாள்களின் வாகனங்கள் இரவு வேளையில் பயணிப்பதும் சாத்தியமற்றது. அம்புலன்ஸ் வசதிகள், போக்குவரத்து வசதிகள், மருத்துவச வசதிகள் அதிகரிக்கப்பட வேண்டும் என்பது மக்கிளின் தொடர் கோரிக்கைகளாக முன் வைக்கப்படுகின்றன.

எனது குழந்தைகள் இரவில் தூங்க வேண்டும் என்பதற்காகவும் அவர்களின் உயிர்களைப் பாதுகாக்கவும் நான் இரவில் பாம்பு வேட்டை ஆடுகிறேன் என்று சந்தியாப்பிள்ளை விஜயநாதன் என்னிடம் குறிப்பிட்டார். பாம்பு வேட்டையா? என்று ஆச்சரியத்துடன் கேட்டேன். இரவில் குழந்தைகள் தூங்கும் பொழுது பாம்புகள் தீண்டினால் என்ன செய்வது? வீதிக்கு கொண்டு போகக்கூட ஏலாது. கோண்டு போனால் அதற்கு முதலே ஆள் முடிந்து விடும் என்றார். நீண்ட காலமாக மக்களின்றி காடுகளாக இருந்ததால் பாம்புகள் விளைந்திருப்பதாகவும் அவை இரவில் வீட்டை சுற்றி அலைவதாகவும்; விஜயநாதன் சொன்னார். காட்டு மாடுகள் காணிகளுக்குள் நுழைவதாகவும் குறிப்பிட்டார். புளிய முனையை சேர்ந்த மீன் பிடித் தொழிலாளியான சந்தியாப்பிள்ளை விஜயநாதன் 1984இல் இடம்பெயர்ந்து அலையத் தொடங்கியவர். முல்லைத்தீவில் கோயிலில் முதன் முதலில் தஞ்சமடைந்து பின்னர் அலைந்தலைந்து தமிழகம் வரை அகதியாகச் சென்றவர். 1990இல் ஊர் திரும்பும் நம்பிக்கையை இழந்து தமிழகம் சென்றவர். துமிழக அகதித்துயரத்தை தாங்க முடியாது மீண்டும் 1995இல் நாட்டுக்குத் திரும்பினார். இறுதியில் மெனிக்பாமிலிருந்து விடுவிக்கப்பட்டு மீள் குடியேறியிருக்கிறார். மீள்குடியேறி பத்து மாதங்கள் தறப்பாள் கூடாரத்தில் கழிந்து விட்டன என்று பெருமூச்சுடன் குறிப்பிட்டார்.

கொக்கிளாய் வாழ் தமிழ்ச் சிறுமி

ஆபத்துத் தருணம் ஒன்றில் வீதிக்குகூட ஒருவரை கொண்டு போக முடியாது என்று விஜயநாதன் சொன்னது வீதிகள் இருக்கிற விசித்திரத்தைப் பற்றித்தான். கொக்கிளாய்க்குச் செல்லும் வீதி முழுவதும் மணல்த்தெருக்களாகவே இருக்கின்றன. வீதிகள் திருத்தப்படாமல் கால் எடுத்து வைக்க முடியாது மணலில் புதைகின்றன. வீதி திருத்தப்படாதிருந்தால் என்ன செய்ய முடியும். வாகனமும் வர முடியாது, நாங்களும் நடக்க முடியாது என்று பலர் குறிப்பிட்டார்கள். நான் சென்ற மோட்டார் சைக்கிள் பல இடங்களில் மணலில் சறுக்கி விழப் பார்த்தது. கொக்குத் தொடுவாய் முதல் கொக்கிளாய் வரை வீதிகள் மணல்த்தெருக்களாகவே உள்ளன. கொக்குத்தொடுவாய், நாயாறு, செம்மலை வழிகள் குன்றும் குழிகளுமாக உள்ளன. மழைக்கு முதலில் வீடு கட்டித் தர வேண்டும் அதற்கு முதலில் வீதி திருத்த வேண்டும் என்று விஜயநாதன் குறிப்பிட்டார். வீதி திருத்தினால்தான் வீடு கட்டும் பொருட்கள் கொண்டு வரலாம் என்று மக்கள் குறிப்பிடுகிறார்கள்.

மீள்குடியேறி பத்து மாதங்களாகின்றன. இப்பொழுதும் மீள்குடியேறிய மக்கள் தறப்பாள் கூடாரங்களில் வாழ்கிறார்கள். வீட்டுத் திட்டமும் தற்காலிக வீட்டுத் திட்டமும் இன்னும் நடைமுறைப்படுத்தவில்லை. அதிகாரிகளோ தவணைகளைச் சொல்லிச் சொல்லியே காலத்தை கடத்துகிறார்கள். வரும் மழைக்கால அவலத்தை எதிர் கொள்ள முடியாது என்று மக்கள் குறிப்பிடுகிறார்கள். கடந்த காலத்தின் பொழுது தறப்பாள் கூடாரங்களை மழையும் காற்றும் தூக்கி எறிந்திருக்கின்றன. மக்கள் மழை வெள்ளத்தில் நனைந்து பெரும் அவலத்திற்கு முகம் கொடுத்திருக்கிறார்கள். எதுவரை நாங்கள் அவலத்திற்கு முகம் கொடுப்பது? எத்தனை அவலத்திற்கு நாங்கள் முகம் கொடுப்பது? என்று மிகுந்த விரக்கியுடன் இந்த மக்கள் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

தறப்பாள் கூடாரங்களில் வாழும் மக்கள்

முகாமில் கொடுமைகளை அனுபவித்தோம். பின்னர் மிள்குடியேற்றம் என்று அழைத்து வந்து செம்மலைப் பாடசாலையில் மூன்று மாதங்கள் வைத்திருந்தார்கள். அவர்கள் தரும் சாப்பாட்டை சாப்பிட்டோம். சுhப்பாட்டுக்குள் புழுக்கள் நெளிந்தன. ஏன் இப்படி எங்களை துன்பப்படுத்துகிறீர்கள் என்று கேட்ட பொழுது அதிகாரிகள் ஒருவரை ஒருவர் சாட்டிக் கொண்டு நழுவிக் கொள்கிறார்கள். போன மாரி வெள்ளத்தில் மழை பாடசாலைகளையும் பிடு;கிப் போட்டது. தெருவெள்ளம் வெள்ளம். இறுதியில் செம்மலை நாயாறு வழியாக ஆற்றில் படகால் வந்து தறப்பாளை கொடுத்தார்கள். இந்தத் தறப்பாள் இனியும் தாங்காது. ஊக்கி விட்டது. பதவியா பாதர் கொடுத்த உலர் உணவுதான் வெள்ளக் காலத்தில் பசியாற உதவியது என்று விடாமல் அவலங்களை அன்டன் ஆசிர்வாதம் சொல்லி முடித்தார்.

செம்மலையிலிருந்து மீள்குடியேற்றத்திற்காக ஏற்றி வரப்பட்ட மக்கள் கொக்கிளாய் பள்ளிக் கூடாரத்தில் வைக்கப்பட்டிருந்தார்கள். மக்களை அவர்களின் காணிகளுக்கு அனுப்பும் நடவடிக்கை எடுக்கப்படாததல் மக்களாகவே காணிகளை துப்புரவாக்கிக் கொண்டு குடியேறியிருக்கிறார்கள். ஆனால் இந்த மக்களின் மீளகுடியேற்றம் பற்றிய செய்திகள் '27 வருடங்களின் பின்னர் சொந்த நிலத்தில் கொக்கிளாய் மக்கள்' என்ற பிரகடனங்களுடன் ஊடகங்களுக்கு தெரிவிக்கப்பட்டு செய்திகளும் விழாக்களும் கௌரவ அரசியல் விஜயங்களும் நடந்தேறியிருக்கின்றன. அடுத்த வாரம் தற்காலிக வீட்டிற்கு அத்திவாரம் போடுகிறோம் என்று சொல்லிச் சென்ற தற்காலிக வீட்டுத் திட்டத்ததை பொறுப்பெடுத்த தொண்டு நிறுவனம் இந்த மக்களின் கூடாரங்களை மறந்து போயிருக்கின்றன.

திருமலை குச்ச வெளியிலில் இருந்து 1971இல் கொக்கிளாயைச் சேர்ந்த செல்வமலரை திருமணம் செய்து கொண்டு இந்தக் கிராமத்தில் வாழ வந்தவர் க. சந்திரசேகரன். 1983 இனக்கலவரத்தை தொடர்ந்து வாழ்வு சிதைக்கப்பட்டு பெயர்ந்தலையத் தொடங்கியதாக தன் நினைவுகளை சந்திரசேகரன் மீட்டார். முல்லைத்தீவு சிவசோதியர் முகாமில் இருந்து 1986இல் தமிழகத்திற்கு அகதியாகச் சென்று 1990இல் நாடு திரும்பி வவுனியாவில் 20 வருட்கள் அகதியாக தஞ்சமடைந்ததாக குறிப்பிட்டார். கதிர்காம முகாமிலிருந்து 33 குடும்பங்களும் யாழ்ப்பாண முகாங்களிலிருந்து 6 குடும்பங்களும் ஏனைய குடும்பங்கள் வெளியில் பல்வேறு இடங்களில் சிதறுண்டும் இருந்து கொக்கிளாயிற்குத் திரும்பியிருக்கிறார்கள். இப்பொழுது 150 குடும்பங்கள் மீள் குடியேறியிருக்கிறார்கள். இதில் பலருக்கு மீள்குடியேறும் பொழுது வழங்கப்படும் 5000 ரூபா கூட வழங்கப்படவில்லை. இந்த மக்களின் கதைகள் அரச தரப்பின் ஊடகப் பிரகடனங்களை பொடியாக்கித் தகர்க்கின்றன.

இதற்கிடையில் இந்த மக்களின் நிவாரணங்கள் இந்த மாதத்துடன் நிறுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் குடியேறி ஆறு மாதங்களுடன் நிவாரணங்கள் நிறுத்தப்படும் என்பது மீள்குடியேற்ற நடவடிக்கையில் உள்ள பிரகடனம். மீள்குடியேறிய மக்களுக்கு இத்தனை மாதத்தில் இதை செய்து கொடுப்போம் அத்தனை மாத்தில் அதைச் செய்து கொடுப்போம் என்று சொல்லுபவர்கள் எதையும் செய்ய மாட்டார்கள். ஆனால் இத்தனை மாததில் நிவாரணம் நிறுத்துவோம் என்பதை மட்டும் மறக்காமல் பொறுத்திருந்து செய்து முடிக்கிறார்கள். இதுதான் மீள்குடியேற்றத்தின் உண்மையான கதை. மீள்குடியேற்றத்தில் எதில் அக்கறை செலுத்தப்படுகிறது என்பதை மக்களின் கதைகள் படுவர்தனமாக வெளிப்படுத்துகின்றன. பிறந்து 31 நாட்கள் ஆகும் கைலாசநாதன்; நிக்கலாவின் குழந்தை தறப்பாள் கூடாரத்திற்குள் வாழ்வதால் வெம்மையால் உடலெல்லாம் கொப்பிளித்துப் போயிருக்கின்றன. இந்தக் குழந்தையின் துயரம் எத்தனை கொடியது. குழந்தையோ கொப்புளம் ஏற்படுத்தும் அரிப்பையும் கொதியையும் அதன்மீது மீள மீள விழும் வெம்மையையும் தாங்க முடியாமல் துடித்து அழுகின்றது.

இந்தத் துயரங்கள் கொக்கிளாய் ஆற்றுக்கும் சிறுவன் குளத்திற்கும் இடையில் உள்ள புளியமுனை என்கிற கிராமத்தில் நடக்கிறது. இந்தக் கிராமம் முழுவதும் கொக்கிளாய் ஆற்றையும் சிறுவன் குளத்தையும் நம்பி வாழுகின்ற மீன்பிடிச் சமூகத்தைச் சேர்ந்த மக்களே வாழ்கின்றார்கள். முள்ளிவாய்க்காலில் புலி என்று நசுக்கி மக்களை கொன்றார்கள். இங்கு தமிழன் என்று நசுக்கி மக்களை கொல்லுகிறார்கள் என்று மிகுந்த ஆதங்கத்துடன் அந்த மக்கள் பேசினார்கள். இப்படி எங்களை புறக்கணித்து ஒதுக்கி வதைப்பதால் இந்த இடத்தை விட்டு நாங்கள் போய் விடவோம் என்றுதான் இப்படிச் செய்கிறார்களா? என்று கேள்வி எழுப்புகிறார்கள். மக்களின் வர்ழ்வியல் துயரத்திலிருந்தும் எதிர்கொள்ளும் கொடுமைகளிலிருந்தும் வரும் இந்தப் பெருங் கேள்வி கொக்கிளாய் கிராமம் எதிர்கொள்ளும் அரசியலை மிகவும் தெளிவாக்கிறது.

புளியமுனை மக்களைப் பொறுத்தவரையில் அவர்களின் உயிராதாய தொழிலாக மீன் பிடிததான் காணப்படுகிறது. ஒரு பக்கம் குளமும் மறுபக்கம் ஆறும் அவர்களின் தொழிற் களங்களாக விரிகின்றன. ஆனால் தொழிலுக்குச் செல்ல தொழிற் துறங்கள் இல்லாத நிலையில் இருக்கிற வலையைக் கொண்டு ஆற்றிலும் குளத்திலும் இறங்குகிறார்கள். தொழிலுக்குச் செல்ல ஆற்றுக்கரை வீதி இன்னும் திருத்தப்படவில்லை. திருத்துவதாக அரச அதிபர் உறுதியளித்தும் இன்னும் வேலை நடக்கவில்லை. சிங்களவர்கள் மீன்பிடித்து வளம் அள்ளும் பெருங்கடலில் இந்த மக்களுக்கு மீன் பிடிக்க இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை. நாங்கள் வடக்கு கிழக்கு என்கிற தமிழர் பூமியின் இருதயப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதால்தான் இப்படி நடத்தப் படுகிறோமா? என மக்கள் எழும்பும் கேள்வி அவர்களின் விரக்கிதையும் கோபத்தையும் வெளிப்படுத்துகின்றன. இந்தக் கேள்விகளும் கதைகளும் மக்களுடையவை.

நாங்கள் ஊர் திரும்பக் கண்ட கனவும் கொண்ட காத்திருப்பும் பலித்து விட்டது நடந்தேறிவிட்டது என்பதைக் குறித்து ஆறுதலைய இப்பொழுது எதுவுமில்லை அந்த மனநிலையே அழிந்து நாம் உணர்வதெல்லாம் எங்கள்மீதான புறக்கணிப்பும் எங்களை சுற்றி நடக்கும் கொடுமைகளும்தான் என்று இந்த மக்கள் ஒரே குரலில் சொல்லுகிறார்கள். இந்தப் புறக்கணிப்புக்கள் சித்திரவதைகளாக மாறியிருக்கின்றன. சுற்றி நடக்கும் கொடுமைகள் அபகரிப்பாகி கொக்கிளாய் நிலத்தின்மீதும் எதிர்கால தலைமுறைமீதும் தாக்குகின்றன. கொக்கிளாயில் இன்று ஏற்பட்டுள்ள அரசியல்தனமானதும் தமிழ் இன இருப்பை சிதைக்கிறதுமான நில அபரிப்புப் பிரச்சினை முரண்பாடுகளையும் போரையும் ஏற்படுத்துமே தவிர சிங்கள ஆதிக்கத்திற்கு இடமளிக்கப்போவதில்லை என்பதை வரலாற்றை திருப்பிப் படிக்கும் பொழுது உணர்ந்து கொள்ள வேண்டிய விடயம்.

அவசியமாகவும் தீவிரமாகவும் மனிதாபிமானமாகவும் வரலாற்று அடிப்படையிலும் தமிழ் தேசிய இனத்தின் கோரிக்கை உணர்வின் அடிப்படையிலும் அனைத்து மட்டங்களிலும் இந்த விவகாரம் கவனத்தில் எடுத்து நடைமுறை மாற்றங்கள் ஏற்பட வேண்டும் என்பதுதான் கொக்கிளாய் என்கிற நிலத்தின் பூர்வீக குடி மக்களின் பெரும் அவவாவாக இருக்கிறது. மீள்குடியேறிய தமிழ் மக்களின் தேவைகள் தீரக்கப்பட வேண்டியதும் காணி பகிர்ந்து குடியேற்றவுள்ள சிங்களக் குடியேற்றம் தடுத்து நிறுத்தப் பட வேண்டியதும் வடக்கு கிழக்கின் இருதய பூமியான கொக்கிளாய் நிலத்துக்கு மட்டுமல்ல ஒட்டு மொத்த தமிழ் இனத்திற்கும் அவசியமானது.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/63990/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

இழப்பால் அதிர்கிறது கொக்கிளாய் - ஒரு பூர்வீக கிராமத்தின் துயரக் கதை -

இந்தக் கிராமத்தில் எஞ்சியுள்ள சில புளிய மரங்கள் இந்த மக்கள் வாழந்த கதைகளையும் அவர்களின் நீண்ட வரலாற்றையும் சொல்லுகின்றன. ஆலமரங்கள் கோபத்தோடு விழுதெறிந்ததைப்போல அடர்ந்து அலங்கோலமாய் இருக்கின்றன. அங்கு நின்ற பூர்வீக மாமரங்கள் அழிந்து போக அதன் எச்சங்களில் இருந்து முளைத்த மாமரங்கள் தலை எடுத்து நிற்கின்றன. அதைப் போலவே இளம் பனைகளும் தலைக்கு மேல் வளர்ந்து நிற்கின்றன. இந்த மக்களோடு இந்த நிலத்தோடு அதன் வளம் அதன் அடையாளங்கள் என்று எல்லாமே அழிக்கப்பட்டுள்ளன. ஆனால் எல்லாவற்றையும் மீறி விருட்சங்கள் புதிய மரங்களாக முளைத்திருக்கின்றன. கொடும் அழிப்பின் மத்தியிலும் நெடிய வலிமையன புளிய மரங்கள் நிற்பது ஒரு வகையில் நம்பிக்கையை தருகின்றன.

காடுகள் படர்ந்த தனது காணியை துப்புரவாக்கிய விட்டு தான் காலம் காலமாக நடந்த அதே தெருக்களால் இன்னும் கம்பீரமும் வேகமும் குறையாதபடி சென்று கொண்டிருந்தார் 87 வயதான மேரி கலிஸ்டா என்ற மூதாட்டி. இவர் இந்தக் கிராமத்தின் பூர்வீக முதுசங்களில் இன்று எஞ்சியிருப்பவர். இந்தக் கிராமத்தின் வளமான வாழ்க்கையோடும் ஒடுக்குமுறைகளுடனும் பெயர்த்தெறிதலோடும் அலைச்சலோடும் வாழ்வை கடந்து வந்தவர். கொக்கிளாய் கிராமத்தின் பட்ட மரங்களிடையில் இன்னும் உயிர்ப்போடு கிளை விரித்த மரமாக அந்த மூதாட்டி கதைகளை தாங்கிக் கொண்டிருக்கிறார். கொக்கிளாய் மண்ணின் வாழ்வின் ஆதாரமாக உழைப்பின் சாட்சியாக இன்னும் வாழும் அவரது வார்த்தைகள் ஒலிக்கின்றன. வாழ்ந்தது மகிழ்ந்தது எல்லாம் இந்தக் கிராமத்தோடுதான். இப்பொழுது மீண்டும் வாழ வந்திருக்கிறேன் என்று முகம் நிறைய புன்னகையுடன் தள்ளாட்டம் ஏதுமின்றி வலிமையுடன் சொன்னது நமது வாழ்வின் வரலாற்றின் ஆச்சரியத்தை தந்தது.

வலிகளை இன்னும் இன்னும் அதிகமாக்குகிறது இந்தப்பதிவு..அகதிகளாகவே தங்கள் வாழ்நாளில் அரைவாசிப்பகுதியை முடித்துவிட்டது அந்த மண்ணிண் ஒரு சந்ததி.தங்கள் தலைமுறைகள் வாழ்ந்துதிர்ந்த வீடுகளை,வீதிகளை,அந்த செம்பாட்டு மண்ணிண் வாசனையை,வளத்தை,அவர்களுக்கு உரித்தான நிலத்தை பார்க்காமலே வளர்ந்துவிட்டது அவர்களின் இன்னொரு சந்ததி.அந்தமண்ணிண் ஒவ்வொரு அங்குலத்திலும் அந்த மண்ணுக்குரிய மக்களின், அவர்கள் தலைமுறைகளின் வியர்வைத்துளிகள் கலந்திருக்கிறது..அவர்களின் வியர்வையால் அந்த மண் செழித்திருந்தது..அந்தச் செம்பாட்டு மண்ணிண் வளத்தாலும் வனப்பாலும் அந்த மக்களின் வாழ்க்கை ஒரு காலத்தில் தன்னிறைவு கண்டிருந்தது..நிலங்களை விழுங்கும் ஆசையால் அவர்களின் அமைதியான வாழ்க்கை சிதறடிக்கப்பட்டது..குழந்தைகளையும் தூக்கிக்கொண்டு வீதிவீதியாக ஊர் ஊராக அலைய வேண்டியவர்கள் ஆக்கப்பட்டார்கள்.அந்த மண்ணிண் மைந்தர்கள் கண்ணீருடன் பார்த்திருக்க இன்று யார் யாரோ வந்து அவர்களின் வளங்களை சுறண்டுகிறார்கள்..நினைத்தால் நெஞ்சு வெடித்துவிடும் போல் இருக்கிறது..அவர்களின் துயரங்கள் இன்னும் பலநாட்களுக்கு என்னைத்தூங்க விடாது..

Edited by சுபேஸ்

இழப்பால் அதிர்கிறது கொக்கிளாய் - ஒரு பூர்வீக கிராமத்தின் துயரக் கதை -

13 ஜூலை 2011

பெப்ருவரி 13 1985இல் தமிழீழ விடுதலைப் புலிகள் கொக்கிளாய் இராணுவ முகாமை தாக்கியழித்தார்கள். கொக்கிளாய் முகாம் சமர் ஒன்றில் காட்டிக் கொடுப்பதால் 154 பெண் போராளிகள் குறித்த இடத்தில்தான் களப்பலியானர்கள். அவர்கள் களப்பலியடைந்த இடத்திலேயே இப்பொழுது இராணுவத்தினர் தமது இறுதிச் சோதனைத் தடுப்பு நிலையத்தை அமைத்துள்ளனர்.

காட்டிக்கொடுப்பால் அதிகளவு 150 பெண் போராளிகள் இறந்தது 'ஜானகபுர' இராணுவ முகாம் தாக்குதலில். 1995 என நினைக்கிறேன்.

1985 கொக்கிளாய் இராணுவ முகாம் மீதான தாக்குதலில் 16 போராளிகள் இறந்தார்கள். கிணற்று வாளி தவறிவிழுந்ததால் ஏற்பட்டது . இதுதான் முதன் முதலில் அதிகளவு புலிகள் பலியாகியது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.