Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குறைந்த பட்சமாகவேனும் தீர்வுக்குக்....

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

குறைந்த பட்சமாகவேனும் தீர்வுக்குக் கொண்டுவரப்பட வேண்டிய இன முரண்பாடு மேலும் விரிவாக்கப்படும் அபத்தம்

Saturday, 16 July 2011 05:29

ண்மைய மாதங்களாக ஊடகங்களில் இரண்டு விடயங்கள் முக்கிய இடத்தைப் பிடித்து வருகின்றன. ஒன்று ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கை. இரண்டாவது லண்டன் சனல்4 தொலைக்காட்சி வெளியிட்ட இலங்கையின் கொலைக்களம் என்னும் விவரணப்படம். இரண்டும் தனித்தனியாகத் தயாரிக்கப்பட்டவையாக இருந்தபோதிலும் அவை இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின்போது பொதுமக்கள் மீதான போர்க் குற்றங்களை வெளிப்படுத்துபவையாகவே அமைந்துள்ளன.

இவ்விரு விடயங்களும் சர்வதேச அளவிலும் இலங்கையிலும் பல்வேறு கேள்விகளையும் சர்ச்சைகளையும் எழுப்பியுள்ளன. இதனையிட்டு இலங்கையின் தமிழ்,சிங்கள, ஆங்கில ஊடகங்களில் செய்திகள்,கட்டுரைகள்,பத்தி எழுத்துகளில் எல்லாம் அரசியல் அலசல்களும் கருத்துக் கண்ணோட்டங்களும் வந்து கொண்டே இருக்கின்றன. இதன் மூலம் விரும்பியும் விரும்பாமலும் ஒரு புறத்தில் பேரினவாதக் கருத்து நிலை வளர்க்கப்படுகிறது, மறுபுறத்தில் தமிழ்க் குறுந்தேசியவாதம் ஊக்குவிக்கப்படுகிறது.

அதாவது குறைந்தபட்சமாவது தீர்வுக்குக் கொண்டுவரப்பட வேண்டிய இன முரண்பாடு மேலும் விரிசலாக்கப்படுகிறது. இதன் பலாபலன்களை ஆளுந்தரப்பினரும் எதிர்த்தரப்பினரும் தமிழ்த் தரப்பில் உள்ளோரும் தத்தமது இருப்பிற்கும் எதிர்காலத்திற்குமாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர். இங்கே மீண்டும் இனப்பிரச்சினை பந்தாடப்படுகிறது. இதனால் இப்பந்தானது இலங்கைக்கு அப்பாலும் சென்று திரும்பக் கூடியதொரு நிலை மீண்டும் உருவாகியுள்ளது.

இரண்டு வருடங்களுக்கு முன்னரான இறுதி யுத்தத்தின் போது பொதுமக்கள் மீதான ஆயுதத் தாக்குதல்களை சர்வதேச யுத்த நியமங்களுக்கு அப்பால் இலங்கைப் படையினர் முன்னெடுத்தனர் என்பதே ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கை சுட்டிக்காட்டும் பிரதான விடயமாகும். இதன் மூலம் மனித உரிமைகள் அப்பட்டமாக மீறப்பட்டுள்ளமையும் அதனால் பொதுமக்கள் பல ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டமை பற்றியும் அவ்வறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. ஆதலால் இலங்கை அரசாங்கம் இவற்றுக்குப் பொறுப்புக் கூறும் கடமையைக் கொண்டுள்ளது. எனவே, இறுதி யுத்த கால சம்பவங்களுக்கும் பொதுமக்களின் உயிர் இழப்புகளுக்கும் பதில் கூறும் வகையிலான நீதி விசாரணை அவசியம் என்பதையும் அதற்குரிய குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதையும் ஐ.நா. நிபுணர் குழு அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

இவ்வாறு அரசாங்கப் படைகள் மீதும் அதற்கு ஆணையிட்ட அரசாங்கம் மீதும் குற்றஞ்சுமத்தியுள்ள ஐ.நா. அறிக்கையானது புலிகள் இயக்கத்தின் மீதும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டைச் சுமத்தியுள்ளது. ஆனால், அதற்கான பொறுப்புக் கூறுவதற்கு புலிகள் இயக்கமோ அதன் தலைமையோ இல்லை. எனவே, இலங்கை அரசாங்கம் மட்டுமே பொறுப்புக் கூறும் கடமை என்ற இடத்திற்குத் தள்ளப்பட்டிருக்கிறது.

ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கை எழுத்து வடிவிலே விரிவான இறுதி யுத்தகாலப் போர்க் குற்றங்கள் பற்றி ஒரு வகையான குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. அதேவேளை. லண்டனைத் தளமாகக் கொண்டியங்கும் சனல்4 தொலைக்காட்சியானது ஐ.நா. நிபுணர் குழுவின் குற்றப்பத்திரிகைக்கு வலுவான சாட்சியம் அளிப்பது போன்று இறுதி யுத்த நாட்களில் இலங்கை அரசாங்கப் படைகள் நடந்து கொண்டதாகக் கூறப்படும் படங்களை உள்ளடக்கிய ஒரு விவரணப் படத்தை வெளியிட்டுள்ளது. அதற்கு இலங்கையின் கொலைக்களம் எனவும் பெயரிட்டுக் கொண்டது. அவை உலகம் பூராவும் சென்றடையும் விதமாகக் காட்சிப்படுத்தப்பட்டதுடன், ஐ.நா. சபை அலுவலகம் லண்டனில் பாராளுமன்ற உறுப்பினர்கள்,மனித உரிமை அமைப்புகள் போன்ற முக்கியமானவர்களுக்கு விசேடமாகவும் காண்பிக்கப்பட்டது. இலங்கையிலும் இவ்விவரணப் படம் பார்க்கக் கூடியதாகவிருந்தது.

இதனால் ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கையும் அதனைத் தொடர்ந்து வெளிவந்த இலங்கையின் கொலைக்களம் விவரணப்படமும் பெரும் வாதப் பிரதிவாதங்களுக்குரியவையாகிக் கொண்டன.நிறைவேற்று அதிகாரம் மிக்க ஜனாதிபதியும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கமும் ஐ.நா. நிபுணர்குழு அறிக்கையையும் சனல்4 வெளியிட்ட ஆவணப்படத்தையும் முற்றுமுழுதாகவே நிராகரித்துக் கொண்டனர். அவற்றுக்கு எதிரான பிரசாரத்தை உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் முன்னெடுத்த வண்ணம் உள்ளனர். இலங்கையின் இறையாண்மை மீது தொடுக்கப்பட்ட தாக்குதல், அந்நிய சக்திகளின் திட்டமிட்ட தலையீடு, புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் புலிகளினது செயற்பாடு என்றவாறான பரப்புரைகளையே அரசாங்கத் தரப்பினர் செய்து கொண்டிருக்கின்றனர். அத்துடன், போர்க்குற்ற விசாரணை எதுவும் தேவையில்லை என்பதற்கு காரணம் கூறும் வகையிலேயே அரசாங்கம் ஏற்கனவே கற்றுக்கொண்ட பாடங்களுக்கான நல்லெண்ண ஆணைக்குழு ஒன்றினை ஜனாதிபதி மூலம் அமைத்துக் கொண்டது. இது அரச தரப்பில் மிகுந்த முன்யோசனையுடன் இடம்பெற்ற முன்னேற்பாடாகும்.

ஏனெனில் ஐ.நா. சபை மூலமான கேள்விகளும் நியாயங்களும் இலங்கை மீது விரல் நீட்டலாக வரக்கூடிய சூழலை அரசாங்கம் எதிர்பார்த்திருந்தது. அவ்வாறான நிலை தோன்றுவதற்கு முன்பாகவே தனது சொந்த விசாரணை என்ற பெயரில் கற்றுக்கொண்ட பாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழுவை நியமித்து விசாரணைகளையும் ஆரம்பித்து நாட்டின் பல பாகங்களிலும் முறைப்பாடுகளைப் பதிவு செய்து கொண்டது. இன்னும் அந்த ஆணைக்குழுவின் அறிக்கையானது முழுமையாகக் கையளிக்கப்படவில்லை. எவ்வாறாயினும் ஐ.நா. நிபுணர்குழு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்ட போர்க் குற்றங்கள் பற்றி இவ் நல்லிணக்க ஆணைக்குழு தொட்டும் பார்க்கவில்லை. இனிமேலும் தொடப் போவதில்லை. ஏனெனில் அரசாங்கமோ அன்றி ஜனாதிபதியோ நியமிக்கும் எந்தவொரு ஆணைக்குழுவும் அரச தரப்பிற்கு பாதகமான விசாரணையை நடத்துவது கிடையாது. அது பெயரளவிலான சுதந்திர ஆணைக்குழுக்களே அன்றி அடிப்படையில் பக்கச்சார்பானதே ஆகும்.

இலங்கையில் சட்டம் யாவருக்கும் சமம் என்று கூறித் தீர்ப்புகள் வழங்கப்படும் நீதித்துறையிலேயே அரசாங்கத்தரப்பும் ஆளும் வர்க்கமும் சட்ட வளைப்புகளை அப்பட்டமாகவே செய்து வரும் சூழலில் ஆணைக்குழுக்கள் எவ்வாறு வளைத்து எடுத்துக்கொள்ளப்படும் என்பதைப் புரிந்துகொள்வது சிரமம் அல்ல. எனவே, சுயாதீன ஆணைக்குழுக்கள் என்பதெல்லாம் பிரச்சினைகளைத் தணிய வைத்து திசை திருப்புவதற்கான ஒருவகைக் கருவிகளேயாகும்.

இன்று ஐ.நா. நிபுணர்கள் குழுவின் அறிக்கையும் சனல்4 விவரணப் படமும் சர்வதேச அளவில் பரப்புரை பெற்று பல்வேறு மட்டங்களின் ஊடாகவும் இலங்கை உற்று நோக்கப்பட வைக்கப்பட்டுள்ளது. இதற்குரிய பதில் ஏற்றுக்கொள்ளப்படத்தக்க விதமானதாக அமைய வேண்டும். அதற்குத் தனியாகப் போர்க்குற்ற விசாரணை என்ற இடத்திற்கு அரசாங்கத் தரப்பு செல்லத் தயாராக இல்லை. பயங்கரவாதத்திற்கு எதிரான மனிதாபிமான படை நடவடிக்கைகளை மட்டுமே அரசாங்கம் செய்ததாக மீண்டும் மீண்டும் ஒப்புவித்து வருகிறது. அமெரிக்கா ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் எவ்வாறு பயங்கரவாதத்திற்கு எதிராகவும் ஜனநாயகத்திற்காகவும் படைகளை இறக்கி தமது நடவடிக்கைகளைச் செய்கிறதோ அதே விடயத்தையே தாமும் இறுதி யுத்தத்தின்போது செய்ததாகவே ஒரு சமன்பாட்டை ஜனாதிபதியும் அரசாங்கமும் செய்து வருகிறது.

அன்று ஈராக் மீது அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் எவ்வித நியாய தர்மமும் இன்றிப் போர் தொடுத்து நின்றபோது அன்றைய அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ புஷ் கூறிய ஒரு கூற்று மிக முக்கியமானதாகக் காணப்பட்டது. உலகப் பயங்கரவாதத்திற்கு எதிரான இப்போரில் எங்கள் தரப்பில் நிற்காத எவரும் எதிரி தரப்பில் நிற்பதாகவே கொள்ளப்படுவார்கள். இதே வாசகம் தான் இலங்கையின் இறுதி யுத்த நாட்களிலும் ஒலித்தவைகளாகும். அந்த வாசகங்களுக்குள் மனித உரிமை மீறல்களும் கொடூரக் கொன்றழிப்புகளும் இடம்பெறுவது முற்றிலும் நியாயப்படுத்தப்பட்டது.

ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கை,சனல்4 விவரணப்படம் ஆகிய இரண்டையும் ஒருபுறத்தில் வைத்துவிட்டு கௌதம புத்தரின் போதனைகளின்படி பார்க்காது விட்டாலும் மிகச் சாதாரண மனித நேயத்தின் அடிப்படையில் இறுதி யுத்த கால நடவடிக்கைகளைப் பார்ப்பது அவசியமானது. ஏனெனில் இறுதி யுத்தத்திற்குள் அகப்பட்ட மக்கள் இலங்கையின் இறையாண்மை, சுதந்திரம், சுயாதிபத்தியம் என்ற வரையறைக்குட்பட்ட இந்நாட்டின் கௌரவப் பிரஜைகள். இலங்கையின் மேலானதொன்றாகக் கருதப்படும் அரசியலமைப்பானது பிரஜைகளின் அடிப்படை உரிமைகளை அவ்வாறு தான் வரையறை செய்கிறது. அத்தகையவர்களில் ஒரு பகுதியினரே அன்று இறுதிக்கட்ட யுத்தத்தின்போது வன்னிக்குள் அகப்பட்ட மக்களாவர்.

சுமார் மூன்றரை இலட்சம் வரையிலான தமிழ் மக்கள் யுத்தப் பிரதேசத்தில் இருந்துள்ளனர். அதற்கான சாட்சியமாக அமைந்ததே இராணுவத்திடம் சரணடைந்து முட்கம்பி வேலிகளுக்குப் பின்னான முகாம்களில் வைக்கப்பட்ட மூன்று இலட்சம் மக்களாவர். சுமார் நாற்பதாயிரம் வரையான மக்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுவது மறுப்பதற்குரிய ஒன்றல்ல. அரசாங்கத் தரப்பைச் சேர்ந்த ஒரு பாராளுமன்ற உறுப்பினர் இறுதி யுத்தத்தின்போது ஐயாயிரம் பேர் வரை கொல்லப்பட்டிருக்கலாம் என அண்மையில் கூறியிருக்கிறார்.

உண்மைகள் எக்காலத்திலும் மறைக்கப்படக் கூடியவைகள் அல்ல. இப்பொழுது இலங்கை அரசாங்கத்திற்குப் பெரும் பிரச்சினையாகி நிற்கும் ஐ.நா. நிபுணர் குழு அறிக்கையும் சனல்4 விவரணப் படமும் இலகுவில் தட்டிக் கழிக்க முடியாத விடயங்களாகியுள்ளன. இந்த விடயத்தில் இரண்டு பக்கங்கள் தெளிவானவைகளாகும். இவை புரிந்துகொள்ளப்பட வேண்டியவையாகும். ஒரு பக்கத்தில் ஐ.நா.வும் அமெரிக்காவும் மேற்குலக நாடுகளும் அணிசேர்ந்து நின்று இலங்கை மீதான அழுத்தத்தை ஒன்றன் பின் ஒன்றாக நகர்த்தி வருகின்றன. அவர்களது நோக்கம் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதியையும் நியாயத்தையும் பெற்றுக்கொடுப்பதல்ல. அமெரிக்காவும் மேற்குலக நாடுகளும் உலகில் எந்தவொரு நாட்டு மக்களது பிரச்சினையிலும் தங்களது நலன்கள்,தேவைகளுக்கு அப்பால் நீதி நியாயத்தின் பக்கம் நின்று வந்த ஒரு உதாரணம் இருக்குமானால் தற்போதைய நிலையில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் எதிர்பார்ப்பதற்கு ஒரு சிறு வெளியாகிலும் இருக்க நியாயம் இருக்கும். அப்படி எதுவும் இல்லை.முழுக்க முழுக்க இலங்கை அரசாங்கத்தையும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவையும் இழுத்து வைத்திருக்க அவர்களுக்கு வலுவான ஒரு கொழுக்கி தேவைப்பட்டது. ஏற்கனவே பொருளாதார ரீதியான கொழுக்கிகள் போட்டு வந்தார்கள். அவற்றால் இலங்கை அரசாங்கத்தை இழுத்து வைத்திருக்க முடியவில்லை. அவற்றுக்கு அப்பால் இந்தியாவின் கொழுக்கி பொருளாதார, இராணுவப் பிடிகளில் வலுவாகிக் கொண்டது. அவ்வாறே சீனாவும் தனது உதவிகள், வர்த்தகம், முதலீடு ஆகிய கொழுக்கிகளை இலங்கை மீது கொண்டிருந்தது. இத்தகைய பிடிகளை இந்தியா,சீனா,பாகிஸ்தான் போன்ற நாடுகள் இலங்கை மீது கொண்டிருப்பதற்கு தேசிய இனப்பிரச்சினை காரணமான யுத்தம் தகுந்த களமாகிக் கொண்டது.

அமெரிக்க மேற்குலக சக்திகளுக்குள்ள வேலை யாதெனில் இலங்கை அரசாங்கத்தை தங்களது பக்கத்தில் மிக நெருக்கமாக வைத்திருக்க முடியவில்லை என்பதேயாகும். அதற்கான தகுந்த தருணமாகவே இப்போது அமெரிக்காவும் மேற்குலகமும் ஐ.நா. மூலமான அழுத்தத்திற்கு முன்வந்திருக்கிறார்கள். இந்த அழுத்த முயற்சிக்கு அடுத்தடுத்த பல கட்டங்கள் உண்டு. ஆனால், அவை எந்தளவுக்கு வேகப்படுத்தப்படும் அல்லது தணிவாக முன்னெடுக்கப்படும் என்பது ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனின் கரங்களில் இல்லாத ஒன்றாகும். அது வெளளை மாளிகையின் சமகாலக் கொள்கை வகுப்பாளர்களின் கைகளிலேயே தங்கியுள்ளது.

அதேவேளை, ஐ.நா அறிக்கைக்கு எதிராக உலகின் சில நாடுகளை அணுகுவதில் இலங்கை மும்முரம் காட்டி நிற்கிறது. இந்தியா,சீனா,ரஷ்யா, பாகிஸ்தான்,ஈரான் போன்ற நாடுகளைக் குறிப்பாகவும்

அணிசேரா நாடுகளைப் பொதுவாகவும் எதிர்பார்த்து நிற்கிறது. இந்நாடுகளின் நடுவே இந்தியாவின் நிலைப்பாடு விநோதமாகவே காணப்படுகிறது.இறுதி யுத்தத்தை நடத்துவதில் இலங்கையின் உதவியாளனாக அன்றி பங்காளனாகவே இந்தியா பங்கு கொண்டது. அதனாலேயே இறுதி யுத்த காலத்தை இந்தியாவின் யுத்தம் என வர்ணிக்கப்பட்டது. இன்று மனித உரிமை மீறல் போர்க்குற்ற விசாரணை என்பதனை ஐ.நா. மூலம் அமெரிக்க மேற்குலகம் எந்த உள்நோக்கங்களுக்காக முன்வைக்கின்றனவோ அதே வகையிலான பிராந்திய மேலாதிக்க நோக்கங்களுக்குப் பயன்படுத்திக் கொண்டது என்பதே உண்மையானதாகும். இதனை இன்றும் தமிழர் தரப்பு அரசியல் ஆதிக்க சக்திகள் புரிந்துகொள்வதாக இல்லை. அவர்கள் இத்தனைக்குப் பின்பும் இந்தியா,அமெரிக்கா, மேற்குநாடுகள் என மேலேமேலே பார்த்து இரங்குமாறு இறைஞ்சியே நிற்கின்றனர்.

இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்கள் போர்க்குற்ற அத்துமீறல்கள், இலங்கையில் உரிய விசாரணைக்குட்படுத்தப்பட வேண்டும். பாதிக்கப்பட்டு இன்றும் வாழ்விழந்து நிற்கும் மக்களுக்கு நீதியும் உரிய இழப்பீடும் புனரமைப்பும் புனர்வாழ்வையும் உறுதிப்படுத்துவதற்கும் அம்மக்களின் அமைதியான ஐக்கியப்பட்ட வாழ்வுக்கும் ஆறுதல் அளிக்கும் வகையில் இப்போர்க்குற்ற விசாரணை அமைய வேண்டும். அத்துடன், அரசியல் தீர்வுக்கும் அதன் நிலைப்பிற்கும் கூட உதவுவதாக அமைய முடியும்.

எனவே,அமெரிக்க மேற்குலக ஏகாதிபத்திய சக்திகள் ஐ.நா. மூலமான விசாரணை என்ற இடத்திற்குச் செல்வது தடுக்கப்பட வேண்டும். அதற்குரிய ஒரே வழி போர்க்குற்ற விசாரணை ஒன்றினை சுயாதீனமாக முன்னெடுத்துச் செல்வதற்கான துணிவை மகிந்த சிந்தனை அரசாங்கம் பெற்றுக்கொள்வதாகும். சர்வதேச விசாரணைக்குச் சென்று தலைகுனிந்து நிற்பதை விட உள்நாட்டு விசாரணை மூலம் தவறுகளைக் கண்டு உரிய மக்களின் முன்னால் ஆவனவற்றைச் செய்து தலைநிமிர்ந்து மனித உரிமைகளுக்கும் மனித மாண்புகளுக்கும் மதிப்பளித்து நிற்பதே மேலானதாகும். ஆனால், எழும் மிக முக்கிய கேள்வி மகிந்த சிந்தனை அரசாங்கம் இதனைச் செய்து கொள்ளுமா? என்பதேயாகும்.

நன்றி - தினக்குரல்

Edited by nochchi

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.