Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நான் நிரபராதி என்று கத்தும்போதே என் குரல்வளை தூக்குக் கயிற்றால் நசுக்கப்படுமோ?- பேரறிவாளன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நான் நிரபராதி என்று கத்தும்போதே என் குரல்வளை தூக்குக் கயிற்றால் நசுக்கப்படுமோ?- பேரறிவாளன்

வெள்ளிக்கிழமை, ஆகஸ்ட் 19, 2011, 12:48 [iST]

new-save-icon.gif

new-print-icon.gif

new-comment-logo.gif

19-perarivalan300.jpg

சென்னை: நான் நிரபராதி, நான் நிரபராதி என்று கத்திக் கொண்டிருக்கும் போதே என் குரல் வளை தூக்குக் கயிற்றால் நசுக்கப்படுமோ என்று ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனையை எதிர்நோக்கியிருக்கும் பேரறிவாளன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது குடும்பத்திற்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது,

பேரன்புமிக்க அம்மா, அப்பா, சகோதர, சகோதரிகளே,

வணக்கம். நான், அ.ஞா.பேரறிவாளன், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 19 வயதில் பொய்யாக குற்றம் சாட்டப்பட்டு அதன் விளைவாய் தூக்கு தண்டனை பெற்றவனாக கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைவாசம் இருந்து வருபவன். எள் முனையளவும் தொடர்பே இல்லாத வழக்கில் அரசியல் காழ்ப்புணர்ச்சியாலும், கேட்க நாதியற்றவன் என்பதாலும் அநீதியான தீர்ப்பை சுமந்து நிற்பவன்.

தந்தை பெரியாரின் கொள்கையால் நிரம்பிய குடும்ப வழி வந்தவன் என்பதால் மனிதநேயத்தின் அடிப்படையிலும், தொப்புள் கொடி உறவு என்பதால், இன உணர்வின் அடிப்படையிலும் சிங்கள இனவாதத்திற்கு எதிரான ஈழத் தமிழர் விடுதலைப் போராட்டத்தை ஆதரித்து அதற்காக தமிழக மண்ணில் அரசியல் செயல்பாடுகளை முன்னெடுத்தவன் என்ற காரணத்தால் என் மீது தவறான குற்றச்சாட்டு புனையப்பட்டது என்பதை தங்களுக்கு தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

19 வயது இளைஞனாய் கைது செய்யப்பட்டு, வாழ்வின் வசந்த காலங்களையெல்லாம் சிறையில் செய்யாத குற்றத்திற்காக தொலைத்து, இன்று 40 வயதுடன் பக்குவப்பட்ட குடிமகனாய் உங்கள் முன் இக்கடிதத்தின் மூலம் பேசுகிறேன்.

1. திரு. ராஜீவ் அவர்களின் கொலையை நியாயப்படுத்துவதல்ல இக்கடிதத்தின் நோக்கம். மாறாக இக்குற்றத்திற்கு எவ்வித தொடர்புமில்லாத நானும், என்னைப் போன்றவர்களும் மரண தண்டனைக்கு உரியவர்கள் அல்லர் என்று எடுத்துரைப்பது மட்டுமே.

2. திரு. ராஜீவ் கொலை விஷயமாக விசாரிக்க வேண்டும் என்று சொல்லி 11.06.1991 அன்று விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட நான் இன்று வரை நீதி மறுக்கப்பட்டு தூக்கு மரத்தின் நிழலிலேயே வாழ்ந்து வருகிறேன்.

3. அக்கொலைக்கு பயன்பட்ட ‘பெல்ட் பாம்’ செய்வதற்கு நான் உதவினேன் என்பதே என் தண்டனைக்கு வழி வகுத்தக் குற்றச்சாட்டு. இதற்கு ஏதுவாக ஊடகங்களில் பொய் செய்தி பரப்பப்பட்டது. ‘இந்தியா டுடே’ நாளிதழும் நான் எப்படி வெடிகுண்டு செய்தேன் என்று பொய்யாக ஒரு செய்முறை விளக்கம் வெளியிட்டிருந்தார்கள். ஆனால், “சி.பி.ஐ.யால் இறுதி வரை கண்டுப்பிடிக்க முடியாத கேள்விகளுள் ஒன்று, அந்த ‘பெல்ட் பாம்’ஐ செய்தவர் யார் என்பதே” என்று.

விடை தெரியா கேள்விக்கு விடையாக நான் பலியிடப் படவேண்டுமா?

4. அந்த ‘பெல்ட் பாமிற்கு’ 9வி பேட்டரி வாங்கித் தந்தேன் என்பதின் மூலமே நான் அந்த ‘பெல்ட் பாம்’ஐ செய்தேன் என வழக்குரைத்தனர் அரசு தரப்பு வழக்கறிஞர்கள். அதற்கு வசதியாக என்னுடைய மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பியலில் பட்டய படிப்பும் இவர்களின் கதைக்கு கருவானது. ஆனால் வழக்கின் எந்தவொரு இடத்திலும் நான் வாங்கித் தந்த 9வி பேட்டரிதான் பெல்ட் பாம் வெடிக்கப் பயன்பட்டது என்பது நிரூபிக்கப்படவில்லை.

5. உண்மை என்னவெனில் நான் 9வி பேட்டரியை வாங்கவுமில்லை, அதனை யாருக்கும் தரவுமில்லை. ஆனால் நான் 9வி பேட்டரி வாங்கினேன் என்பதற்கு வழக்கிலுள்ள ஒரே ஆதாரம், ஒரு பெட்டிக் கடைக்காரரின் சாட்சி தான். இந்த சாட்சியை ஏற்க முடியாது என்று தடா நீதிமன்றத்தில் கூறிய நீதிபதி, பிறகு என்ன காரணத்தினாலோ இந்த சாட்சியை ஏற்றுக் கொண்டுவிட்டார். நான் வாங்காத பேட்டரியை வாங்கினேன் என்று ஒருவர் மூலம் சொல்ல வைப்பது நம் காவல்துறைக்கு எத்தனை சுலபம் என்று சற்றே சிந்தியுங்கள்.

6. தடா சட்டத்தில் இவ்வழக்கு விசாரிக்கப்பட்டதே தவறு என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. காரணம் இந்தக் கொலைக் குற்றவாளிகளுக்கு கொலை செய்யப்பட்டவர்களைத் தவிர யாதொருவரையும் அச்சுறுத்தவோ, கொல்வதோ நோக்கமாக இருந்திருக்கவில்லை என்று எடுத்துரைத்தது. அப்படி இருக்கும் வேளையில், எங்களை தடா சட்டத்தின் கீழ் கைது செய்து, உரிமைகள் மறுக்கப்பட்டு, தடா சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு, பெறப்பட்ட வாக்கு மூலம் மட்டும் எப்படி செல்லுபடியாகும்?

மேலும் நம் நாட்டில் வாக்கு மூலங்கள் எப்படிப் பெறப்படுகின்றன என்பதும் உங்களுக்கு நன்றாகவே தெரியும். கடுமையான சித்திரவதை, மிரட்டல், அடி உதைக்கு பயந்துதான் பல வாக்குமூலங்கள் ரத்தத்தால் கையெழுத்தாகின்றன. பொதுவாக அப்படிப் பெறப்படும் வாக்கு மூலங்களை மட்டுமே வைத்து நீதிமன்றங்கள் தீர்ப்பினை தருவது கிடையாது. ஆனால் என் வழக்கில் மட்டும் நீதிமன்றம் அவ்வாக்குமூலத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு, வேறு எந்த ஆதாரமும் இல்லாமல் எனக்குத் தூக்குத் தண்டனை வழங்கியுள்ளது.

7. ஒப்புதல் வாக்குமூலத்தை பதிவு செய்த திரு. தியாகராஜன் என்ற அதிகாரி கேரள மாநிலத்தில் 1993 இல் நடைபெற்ற அருட்சகோதரி அபயா கொலை வழக்கை ‘தற்கொலை’ என முடிக்க அழுத்தம் கொடுத்தவர் என்பதும், அவரது முறைகேட்டை எதிர்த்ததால், அவருக்கு கீழ் பணிபுரிந்த துணை காவல் கண்காணிப்பாளர் திரு. தாமஸ் வர்கீஸ் என்பவர் தனது பதவியை துறந்தார் என்பதையும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன். பிறகு இந்த வழக்கு பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை என்று திரும்பியது. எர்ணாகுளம் தலைமை நீதிமன்ற நடுவர் 23.06.2000 அன்று அளித்த தீர்ப்பில் கடுமையான கண்டனங்களை வாங்கியவர் இந்த தியாகராஜன். இவர் என்னிடம் வாங்கிய வாக்குமூலங்கள் ஏன் உண்மையாக இருக்க வேண்டும்? யாருக்காகவோ வழக்கை எப்படியும் வளைப்பவர்கள்தானே இவர்கள்....

8. தடா சட்டத்தில், சிறப்பு தனி நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரிக்கப்பட்டதால், பெரும் பான்மையான உரிமைகள் எனக்கு மறுக்கப்பட்டன. அதுவே என் தரப்பு நியாயங்களை எடுத்துக் கூற முடியாமல் செய்துவிட்டது. பொதுவாக ஒரு மாவட்ட நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பிற்கு, உயர்நீதிமன்றம், பிறகு உச்சநீதிமன்றம் என்று இருமுறை மேல் முறையீடு செய்யும் வாய்ப்புள்ளது.

இந்த செயலபாடு ஒரு இடத்தில் இல்லாவிட்டாலும் மறு இடத்தில் நீதி சரியாக கிடைக்க உதவியது. ஆனால் எங்கள் விஷயத்தில் தடா கொடுங்கோல் வழக்கு என்பதால், உயர் நீதிமன்றம் செல்லும் வாய்ப்பு மறுக்கப்பட்டு, இரண்டில் ஒரு மன்றத்தின் கதவு அடைக்கப்பட்டுப்போனது. இப்பொழுது தடா சட்டம் தவறு என்று அந்த சட்டமே நம் நாட்டில் வாபஸ் பெறப்பட்டாலும், அதனால் பாதிக்கப்பட்ட என் போன்றவர்களுக்கு எப்படி நீதி கிடைக்கும்? எப்பொழுது கிடைக்கும்?

9. தடா நீதிமன்றத்தின் கீழ் விசாரிக்கப்படுபவர்கள் 20 வயதிற்கு மேற்பட்டவர்களாக இருக்க வேண்டும் என தடா சட்ட வரம்பு சொல்கிறது.

10. அவர் அதற்கு முன்னால் குற்றம் ஏதும் புரிந்தவரா என்பதை கவனிக்க வேண்டும்.

11. குற்றப் பின்னணி உள்ள குடும்பத்தைச் சார்ந்தவரா என்பதும் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்கிறது தடா சட்டம்.

12. எனக்கு மட்டும் இந்த எந்த வரைமுறைகளையும் கடைபிடிக்காமல் தடாவின் கீழ் கைது செய்து விசாரித்து, தண்டனையும் அறிவித்தார்கள்.

13. சிறப்பு நீதிமன்றத்தில் 26 பேருக்குத் தூக்குத் தண்டனை வழங்கப்பட்ட நிலையில் உச்ச நீதிமன்றம் அதில் 22 பேர் தூக்குத் தண்டனையை ரத்து செய்கிறதென்றால், இவ்வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் எத்தன்மையுடன் ஒரு தலைப்பட்சமாக, முன் முடிவுகளுடன் விசாரிக்கப்பட்டதென்பதை புரிந்து கெள்ள முடியும்.

சட்டத்தின் முன் எல்லோரும் சமம் என்று இருந்தாலும், இந்த வழக்கைப் பொறுத்தவரை கொல்லப்பட்டவர் ராஜீவ் என்பதாலும், அவருக்கு இருந்த செல்வாக்கு மற்றும் ஊடக அனுகூலங்களாலும், ஒரு தலைபட்சமாகவே பார்க்கப்பட்டது. இன்னொரு வாய்ப்பு கிடைக்கப் பெற்று, நடுநிலையுடன் விசாரிக்கப்பட்டால் எங்களது தூக்குக் கயிறும் கண்டிப்பாக அறுபடும் என்று என்னால் உறுதியாக கூற முடியும்.

அந்த வசதி இங்கிலாந்து உள்ளிட்ட மேலை நாடுகளில் உள்ளது. ஆனால் இனி வழக்கை விசாரிக்கும் வழியில்லை என்கிறது இந்திய குற்றவியல் சட்டம். ஆகையால் கருணை மனுவின் மீதான முடிவே இறுதி முடிவு என்று விடப்பட்ட பரிதாபத்துக்குரியவர்கள் ஆகிப் போனோம் நாங்கள். நான் நிரபராதி, நான் நிரபராதி என்று கத்திக் கொண்டிருக்கும் பொழுதே என் குரல் வளை தூக்குக் கயிற்றால் நசுக்கப்படுமோ?

14. திருமதி சோனியா காந்தி, இவ்வழக்கில் தூக்குத் தண்டனைப் பெற்றவர்களுக்கு அத்தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என்பதில் எனக்கோ என் குழந்தைகளுக்கோ (ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி) சற்றும் விருப்பமில்லை என ஏற்கனவே கூறியுள்ளார்.

15. ஆயினும் எங்களை 20 ஆண்டுகளாக இப்படி சிறையில் அடைத்து வைத்திருக்கும் மர்மம் எங்களுக்கு விளங்கவில்லை. நிரபராதிகளான எங்களை இப்படி தூக்குக் கொட்டடியிலேயே வைத்திருக்கும் காரணம் புரியவில்லை.

16. 1980களின் இறுதியில் வாழ்ந்த எல்லா இளைஞர்களைப் போலவே நானும் ஈழ விடுதலையிலும், விடுதலைப் போராளிகளின் மீதும் பற்றுக் கொண்டிருந்தேன். அன்று கல்லூரிகளிலும், பணி இடங்களிலும் எல்லோரும் தான் விடுதலைப் போராட்டத்திற்காக உதவி வந்தார்கள்.

ஒரு நாள் ஊதியத்தையும் கொடுத்தார்கள். பள்ளிகளில் நன்கொடை வசூலித்தார்கள். ஏன் நம் மத்திய, மாநில அரசுகள் கூடத்தான் அவர்களுக்கு உதவிகள் புரிந்தன? ஒரு துர்ச் சம்பவம் நிகழும்பொழுது நான் மட்டும் எப்படி எதிரி ஆகிப் போனேன்?? ஏன் தனிமைப்படுத்தப்பட்டேன்?? உங்களில் ஒருவன் தானே நானும்??

தூக்குத் தண்டனை என்பது சட்டத்தின் பெயரால் செய்யப்படும் திட்டமிட்ட படுகொலை என்கிறார் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யர்.

செய்த குற்றத்திற்கு வழங்கப்படும் தூக்கு தண்டனையையே திட்டமிட்டப் படுகொலையெனில், செய்யாத குற்றத்திற்கு வழங்கப்படும் தூக்குத் தண்டனையை என்னவென்று சொல்வது?

- முடிவுறா விசாரணையில், முடிவினை நோக்கித் தள்ளப்பட்டுள்ள அப்பாவி

இவ்வாறு அவர் அந்த கடித்தத்தில் தன் ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.

thanks-thatstamil.com

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒருமைப்பாட்டைத் தூக்கிலிட்டு விடாதீர்கள்!

கர்ஜிக்கும் வைகோ!

''முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் பேரறிவாளனுக்கு விதிக்கப் பட்டுள்ள தூக்குத் தண்டனையை ரத்து செய்ய வேண்டும். அந்த இளைஞனை எனக்கு நன்றாகத் தெரியும். ராஜீவ் கொலைச் சதிபற்றி அவருக்கு எதுவும் தெரியாது. பேரறிவாளனை போலீஸார் கடுமையாகச் சித்ரவதை செய்துதான் ஒப்புதல் வாக்குமூலம் வாங்கி இருக்கிறார்கள். 19 வயதில் கைதான அந்த இளைஞன் 20 ஆண்டுகளாகச் சிறையில் இருக் கிறார். அவரது வாழ்க்கையே அழிந்துவிட்டது. நளினிக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஏற்கெனவே ரத்து செய்ததுபோல, பேரறிவாளனுக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையையும் ரத்து செய்ய வேண்டும்!'' - பிரதமர் முன்னால் கலங்கிய குரலில் கோரிக்கை வைத்தார் வைகோ. இது நடந்தது கடந்த 2-ம் தேதி. ஒரு வாரம் கடந்த நிலையில், டெல்லியில் இருந்து ஒரு செய்தி. 'பேரறி வாளனின் மனு நிராகரிக்கப்பட்டது, தூக்குத் தண்டனை உறுதி!’

இந்த நிலை யில் வைகோவைச் சந்தித்தோம்!

p8a.jpg''பிரதமரைச் சந்தித்து நீங்கள் கோரிக்கை வைத்ததுமே, எதிர்மறையான முடிவு வெளிப்பட்டுள்ளதே?''

''இப்படி ஒரு உடனடி முடிவைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். பேரறிவாளன் குறித்து நான் எழுதி இருந்த கடிதத்தை முழுமையாகப் பிரதமர் படித்தார். உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மாண்புமிகு வி.ஆர்.கிருஷ்ணய்யர் 2010 ஆகஸ்ட் 10-ம் நாள் பேரறிவாளனுக்கு மரண தண்டனையைக் குறைப்பதற்கான காரணங்களை அடுக்கி எழுதிய விரிவான கடிதத்தை நான் அதில் முழுமையாகக் குறிப்பிட்டு இருந்தேன். 'உயிர் வாழ்கின்ற அனைத்து ஜீவராசிகளுக்கும் இரக்கம் காட்டுவதை அரசியல் சட்டத்தின் கடமையாகச் (பிரிவு 15எ) சொல்லப்பட்டுள்ளது. இந்தக் கைதியைப் பொறுத்த வரை 20 ஆண்டு காலச் சிறைவாசம் என்பதே துன்பம் தரக்கூடிய, கண்ணீர்விடக்கூடிய மன வேதனையை ஏற்படுத்த வல்லது’ என்று அதில் வி.ஆர்.கிருஷ்ணய்யர் சொல்லி இருப்பார்.

பேரறிவாளன் குற்றமற்றவர் என்று பிரதமரிடம் சொன்னேன். '9 வோல்ட் பேட்டரியை வாங்கி சிவராசனிடம் கொடுத்தார் என்பது அவர் மீதான குற்றச்சாட்டு. 9 வோல்ட் பேட்டரி, பொம்மைகளை இயக்குவதற்குப் பயன்படக்கூடியது. இது எதற்காகப் பயன் படப்போகிறது என்று தெரியாமல் பேட்டரி வாங்கியது மரண தண்டனை வழங்குவதற்கான வலுவான காரணமாகக் கருத முடியாது.’ என்றும் சொன்னேன்.

நான் சொன்னதை கவனமாகக் கேட்ட பிரதமர், 'இதை மத்திய உள்துறை அமைச்சருக்குப் பரிந்துரை செய்கிறேன்.’ என்று சொன்னார். 'நீங்களும் பரிந்துரை செய்யுங்கள். நானும் அவரைச் சந்திக்கிறேன்.’ என்று சொல்லிவிட்டு வெளியே வந்தேன்!''

''உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் என்ன சொன்னார்?''

p8.jpg''பிரதமரிடம் கொடுத்த அதே கடிதத்தை ப.சிதம் பரம் பெயருக்குத் தயாரித்துக்கொண்டு, அன்றைய தினமே அவரைச் சந்தித்தேன்.

'நீங்கள் கேட்பது பேரறிவாளனுக்கு மட்டும்தானா?’ என்று அவர் கேட்டார். 'மூன்று பேருக்காகவும்தான்’ என்றேன். 'ஒருவருக்கு குறைக்கப்பட்டால், மற்றவர்களுக்கும் அது பொருந்தும்தானே’ என்ற அமைச்சர், 'உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்திய மரண தண்டனைத் தீர்ப்பில் குறை கண்டுபிடித்து, நாம் தண்டனையைக் குறைக்க முடியாது. எனவே, கருணை அடிப்படையில்தான் எந்த முடிவும் எடுக்க முடியும்.’ என்று சொன்னார். நம்பிக்கையுடன்தான் நான் வெளியில் வந்தேன்.

அடுத்த சில நாட்களிலேயே கருணை மனு நிராகரிக்கப்பட இருப்பது உள்துறை அமைச்சருக்குத் தெரியாதா? 'என் கையைவிட்டுப் போய்விட்டது’ என்றோ, 'நான் என்ன செய்ய முடியும்?’ என்றோ சிதம்பரம் சொல்லி இருக்கலாம். ஏமாற்றப்பட்டது நான் மட்டும் அல்ல... ஓர் இனம் என்பதை இன்றைய மத்திய அரசு உணர வேண்டும்!''

''இத்தனை ஆண்டுகள் கிடப்பில் போட்டுவிட்டு, இப்போது திடீரென முடிவெடுக்க என்ன காரணம்?''

''இலங்கையில் ராஜபக்ஷே நடத்திய நாசகாரப் படு கொலைகளும்... அதற்கு இந்தியா நிதி உதவியும், ராணுவ உதவியும், தகவல் பரிமாற்ற உதவியும் செய்த விவகாரங்கள் இன்று உலக நாடுகள் முழுவதும் பரவிவிட்டன. தமிழகத்தில் வாழும் ஒவ்வொரு தமிழனின் மனச்சாட்சியையும் இது உசுப்பிவிட்டது. அகில இந்தியத் தலைவர்கள் இது பற்றி பேச ஆரம்பித்துள்ளனர். எங்களது டெல்லி ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பி.ஜே.பி. தலை வர்களில் ஒருவரான யஸ்வந்த் சின்ஹா, 'வைகோ படகுகளை ஏற்பாடு செய்யட்டும். நாம் அனைவரும் இலங்கையை நோக்கிச் செல்வோம்’ என்றார். 'உ.பி.யிலும் பீகாரிலும் இதுபற்றி பொதுக் கூட்டம் போடும்போது வைகோ வந்து பேச வேண்டும்’ என்று ராம்விலாஸ் பஸ்வான் அழைப்பு விடுத்திருக்கிறார். ஈழப் போர்க் கொடுமைகள் இந்தியாவின் முக்கிய சேனல்களில் ஒளிபரப்பப்படுகின்றன. இவை அனைத்தையும் தடுப்பதற்கு காங்கிரஸ் அரசாங்கம் எடுக்கும் தற்காப்புக் கேடயம்தான் ஸ்ரீபெரும்புதூர் சம்பவம்.''

''அதற்காக, ராஜீவ் கொலையை உங்களால் நியாயப்படுத்த முடியுமா?''

''நான் ராஜீவ் கொலையை நியாயப்படுத்தவில்லை. அதற்காக, கொலையில் சம்பந்தப்படாத அப்பாவிகளையும் சதியில் உள்ளடக்கினால், அதைக் கண்டிக்க உரிமை இல்லையா? இந்த வழக்கைக் காரணமாகக் காட்டி, ஈழத் தமிழன் அனுபவித்த கொடுமையை, கொலையை, கற்பழிப்பைப்பற்றி பேசுவதைத் தடுக்க நினைப்பதைத்தான் கண்டிக்கிறேன்.

ராஜீவ் வழக்கில் ஐந்து நாட்கள் என்னையும் விசாரித்தார்கள். இந்த வழக்கின் 250-வது சாட்சியாக என்னையும் இணைத்தார்கள். 'இது முற்றிலும் ஜோடிக்கப்பட்ட பொய் வழக்கு’ என்று பூந்தமல்லி தனி நீதிமன்றத்திலேயே சொன்னவன் நான். இன்றும் அது ஆவணங்களில் இருக்கிறது.

'மத்திய அரசாங்கம், இலங்கைக்கு நிதி உதவி, ஆயுத உதவி மற்றும் ராணுவத் தொடர்புள்ள அனைத்து தளவாடங்களையும் கொடுத்துள்ளது. எனவே இலங்கையில் நடக்கும் இனப் படு கொலைக்கு பொறுப்பாளியாகி, நீங்கள் பதில் சொல்ல வேண்டும்’ என்று பிரதமர் மன்மோகன் சிங்கிடம் நேரடியாகவே சொல்லி இருக்கிறேன். இதற்கு எத்தனையோ கடித ஆதாரங்கள் இருக்கின்றன.

எனவே, ஸ்ரீபெரும்புதூர் சம்பவத்தைக் காரணமாகக் காட்டி எங்கள் வாயைப் பூட்ட முடியாது. நாங்கள் இதுவரை பேசாமல் இருந்த வேறு விஷயங்களை இனி பேசப்போகிறோம்!''

''எதைச் சொல்கிறீர்கள்?''

''நான் காங்கிரஸ் அரசாங்கத்துக்குச் சொல்வ தெல்லாம்... மூன்று உயிர்களை தூக்கு மேடைக்கு அனுப்ப வேண்டும் என்று நினைத்தால்... இந்திய அமைதிப் படையை அனுப்பி இலங்கையில் நடத்திய அட்டூழியங்களைத் தமிழ் நாட்டின் தெருத் தெருவாய்ப் போய் நாங்கள் இனி சொல்வோம். உண்ணாவிரதம் இருந்த திலீபனைச் சாகடித்தது யார்? சென்னையில் தங்களது அலுவலகத்தைக் காலி செய்துவிட்டு அமைதியாகத் திரும்பிய குமரப்பா, புலேந்திரன் உள்ளிட்ட 12 பேர் சாவுக்கு யார் காரணம்? சமாதானத் தூதனாக வந்த ஜானியைக் கொன்றது யார்? பிரபாகரனை பேச்சுவார்த்தைக்கு வரவைத்து சுட்டுக் கொல்ல உத்தரவிட்டது யார்? இந்திய அமைதிப் படையால் எத்தனை வீடுகள் தகர்க்கப்பட்டன? எத்தனை அப்பாவிகள் கொல்லப்பட்டனர்? எவ்வளவு தமிழ்ப் பெண்கள் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டார்கள் என்பதை எல்லாம் சொல்வேன்.

இந்தியன் பீஸ் கீப்பிங் ஃபோர்ஸ்... இந்தியன் பீஸ் கில்லிங் ஃபோர்ஸாக எப்படி எல்லாம் செயல் பட்டது என்பதற்கு அசைக்க முடியாத ஆதாரங்கள் இருக்கின்றன. 1987-89 காலகட்டத்தில் ராஜீவ் செய்த காரியங்கள் இன்றைய இளைய தலைமுறைகளுக்குத் தெரியாது. அதை இனி தெரியப்படுத்துவோம்!''

''இந்த விஷயத்தில் ஒரு மாநில அரசு என்ன செய்ய முடியும்?''

''இந்த வழக்கில் தூக்குத் தண்டனை பெற்ற 26 பேரின் விடுதலைக்காக தொடக்க காலத்தில் இருந்தே இயக்கம் நடத்தியவர் அண்ணன் பழ.நெடுமாறன். அவருடன் நானும் தோழர் தியாகு போன்றவர்களும் 1999-ம் ஆண்டு ஜனாதிபதி கே.ஆர்.நாராயணனைச் சந்தித்து மனு கொடுத்தோம். பிரதமர் வாஜ்பாயை சந்தித்தோம். உள்துறை அமைச்சர் அத்வானியைத் தொடர்ந்து சட்ட அமைச்சர் ராம் ஜெத்மலானியைச் சந்தித்தோம். 'உங்கள் மாநிலத்தின் முதலமைச்சர் நினைத்தால், செய்யலாம். அமைச்சரவை கூடி ஒரு முடிவெடுத்து மாநில ஆளுநருக்கு பரிந்துரை செய்யலாம்’ என்றார். ஆனால், அன்றைய முதல்வர் கலைஞர் அதில் எந்த முடிவும் எடுக்கவில்லை. அதனால், கவர்னர் பாத்திமா பீவி கருணை மனுவை நிரா கரித்தார்.

இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் பழ.நெடு மாறன் வழக்கு போட, அப்போது வழக்கறிஞராகவும் இப்போது நீதியரசராகவும் இருக்கும் கே.சந்துரு ஆஜர் ஆனார். மனுவை விசாரித்த நீதியரசர் கோவிந்தராஜன், 'மந்திரி சபையின் கருத்துப்படிதான் ஆளுநர் முடிவெடுக்க வேண்டுமே தவிர, தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாது.’ என்று பாத்திமா பீவியின் உத்தரவை ரத்து செய்தார்.

இந்த சூழ்நிலையைப் புரிந்து சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து, முதல்வர் சில முடிவுகளை எடுக்க வேண்டும். மத்திய அரசுதான் இறுதி முடிவுகளை எடுக்கும் இடத்தில் இருக்கிறது. ஆனால், மாநில முதல்வர் ஓர் அழுத்தம் தரலாம்.

'தமிழீழத்தைப் பிரிப்பதுபோல, தமிழ் நாட்டையும் பிரிக்கப் போகிறார்கள்’ என்ற பொய்யைச் சொல்லி, விடுதலைப் புலிகள் இயக்கம் இங்கு தடை செய்யப்பட்டது. ராஜீவ் கொலையைச் சொல்லி, ஈழத்தில் நடந்த இனக் கொலையை மறைக்க முயற்சிக்கிறார்கள். தமிழர் எழுச்சியை அடக்க இந்த மூன்று உயிர்களை பலியிட்டால், அதைத் தொடர்ந்து நடக்கும் விளைவுகளால், இந்தியாவின் ஒருமைப்பாட்டைத் தூக்கிலிட்டுவிடாதீர்கள் என்று எச்சரிப்பதைத் தவிர வேறு வழி இல்லை!''

thanks-vikatan.com

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

''கேட்பது உயிர்ப் பிச்சை அல்ல... மறுக்கப்பட்ட நீதி!''

அலறும் பேரறிவாளனின் அம்மா!

ருணை மனுவை குடியரசுத் தலைவர் நிராகரிக்க, மரணத்தின் விளிம்பில் நிற்கிறார் பேரறிவாளன்.

தன் மகனுக்காக, சட்டத்தின் அத்தனை கதவு​களையும் தட்டித் தட்டி சோர்ந்துகிடக்கிறார் அந்தத் தாய் அற்புதம் அம்மாள்!

''என் பையனுக்​கும், ராஜீவ் கொ​லைக்​கும் எந்த சம்பந்தமும் இல்லை. அறிவை வெளியே கொண்டுவர்றதுக்கு எத்தனை​யோ தடவை போராடினோம். சட்டம் எங்க பக்க நியாயத்தை, கருத்தைக் காது கொடுத்துக் கேட்கவே மாட்டேங்குதே. 21 வருஷங்களா ஒவ்வொரு நிமிஷமும் 'என்ன p6a.jpgநடக்குமோ’ன்னு வயித்துல நெருப்பைக் கட்டிட்டு வாழ்ந்துட்டு இருக்கோம். நல்லது நடக்கும்கிற நம்பிக்கை பொடியாப் போயிடுச்சே...

13 ஈழத் தமிழர்கள், 13 இந்தியத் தமிழர்கள்னு சரிபாதியாச் சேர்த்து இந்த வழக்கை ஜோடிச்சு இருக்காங்க. 1991, ஜூன் மாசம் 11-ம் தேதி, அறிவை விசாரிக்கணும்னு வந்தாங்க. நாங்களே அனுப்பிவெச்சோம். ஆனா, அடுத்த சில நாட்களில் பத்திரிகைகளில், 'பேரறிவாளனைத் தேடிக் கண்டுபிடிச்சோம்’னு செய்தி வந்தது.

படுகொலை செய்யப்பட்டது முன்னாள் பிரதமர் ராஜீவ். அதைப்பத்தி விசாரணை வெளிப்படையா நடந்திருக்கணும் இல்லையா..? என் பையனைப் பிடிச்சிட்டுப் போனப்ப, அவனுக்கு 19 வயசு. அப்ப தடா சட்டம் இல்லை. ஆனா, அதுக்கு அப்புறம் இந்த வழக்கை தடாவுக்குக் கீழே கொண்டுவந்தாங்க. தமிழ்நாட்டுல தடாவுக்குக் கீழே வந்த வழக்கு இது ஒண்ணுதான். அந்த சட்டப்படி, 20 வயசுக்கு மேற்பட்டவங்களைக் கைது செய்யலாம், இதற்கு முன், 'அவர் எந்தக் குற்றச் செயல்களிலாவது ஈடுபட்டிருக்காரா, அவர் குடும்பம் குற்றம் ஏதும் செய்திருக்கா?’னு பார்ப்பாங்க. இந்த வழக்கில் எதையுமே கடைப்பிடிக்கலை. ஒவ்வொரு முறை என் மகன் நீதிமன்றத்துக்கு வரும்போதும் அவனோட பேசுறதுக்குக்கூட நாங்க அவ்ளோ கஷ்டப் பட்டோம்...

விரும்பி வாக்குமூலம் கொடுத்ததா சொல்றாங்க. ஆனா, சிறையில் எப்படி வாக்குமூலம் வாங்குவாங் கங்கிறது உங்களுக்கு எல்லாம் தெரியாததா? அதுவும் காவல் p7.jpgதுறையைச் சேர்ந்த ஒருவர் வாக்குமூலம் வாங்கி இருக்கிறார். அதை நீதிமன்றத்தில் நிராகரிச்சுடுவாங்கனு நினைச்சுட்டு இருந்தோம். ஆனா, இந்த வழக்கில் அந்த வாக்குமூலத்தைச் சேர்த்துட்டாங்க. உச்ச நீதிமன்றம், 'இந்த வழக்கு தடாவின் கீழே விசாரிக்கப்பட்டது தவறு’னு சொல்லி இருக்கு. ஆனா, வாக்குமூலத்தை மட்டும் எப்படி ஏத்துக்கிறாங்கனு தெரியலையே?

கைது செய்யப்பட்ட 26 பேரில் 19 பேர் விடுதலை செய்யப்​பட்டாங்க. மூணு பேருக்கு ஆயுள் தண்டனை. மீதி நாலு பேருக்கு மரண தண்டனை. இதில் இரண்டு பேர் இந்தியத் தமிழர்கள், மீதி ஈழத் தமிழர்கள். நளினிக்கு ஆயுள் தண்டனையாக் குறைச்சாங்க. இப்ப முருகன், சாந்தன், பேரறி​வாளன் மூணு பேரோட கருணை மனுவை 12 வருஷங்கள் கழிச்சு நிராகரிச்​சிருக்காங்க. இது நியாயமா?

ஒன்பது வோல்ட் பேட்டரி வாங்கிக் கொடுத்தாங்கிறதுதான் என் மகன் மேல் இருக்கும் குற்றம். அதுகூட ஒரு பெட்டிக்கடைக்காரர் சொன்னதை வெச்சுப் போட்டிருக்காங்க. அந்த 'பெல்ட் பாம்’ஐ யார் செஞ்சாங்கனு இன்னிக்கு வரை யாருக்குமே தெரியலை.

சோனியா காந்தியே, 'எனக்கோ, என் மகனுக்கோ, என் மகளுக்கோ, இவர்களைத் தூக்கிலிடுவதில் விருப்பம் இல்லை. உங்களிடம் (ஜனாதிபதியிடம்) கருணை மனு வரும்போது, இவர்களுக்குத் தண்டனை குறைப்பு செய்வதில் எந்த ஆட்சேபனையும் இல்லை’னு கடிதம் எழுதி இருக்காங்க. அப்படி இருந்தும் கருணை மனு நிராகரிக்​கப்பட்டு இருக்கு. முன்பு பெட்டிக்கடைக்காரரின் சாட்சியை ஏற்றுக்கொள்ள முடி​யாதுன்னு சொன்ன நீதி​பதிகள் பின்னர் ஏனோ ஏத்துக்கிட்டாங்க. மரண தண்டனை அளிக்கும் கட்டா யத்துக்கு தள்ளப்​பட்டுட்​டாங்க.

ஏ-1 பிரிவில் இருக்கும் நளினிக்கு ஆயுள் தண்டனை கொடுத்​திருக்காங்க. ஆனா, ஏ-18 அதாவது, 18-வது குற்றவாளியா இருக்கும் என் மகனுக்குத் தூக்குத் தண்டனையா? நளினிக்குத் தண்டனை குறைச்சதுக்கு அப்புறம்தான், பிரியங்கா போய் சந்திச்சிருக்காங்க. மரண தண்டனை கூடாதுனு ஊருக்கெல்லாம் பிரசாரம் பண்ணிட்டு இருக்கேன். ஆனா, கடைசியா என் மகனுக்கே இந்த நிலைமையா?

பரோலில்கூட விடாம, பரீட்சை எழுதவிடாம, அவனோட வசந்த காலத்தை எல்லாத்தையும் தொலைச்சுட்டு நிக்குறான்யா... யாரும் முகம் சுளிக்கிற மாதிரிகூட பேச மாட்டான். அவன் 10-ம் கிளாஸ் படிக்கிறப்ப என்.சி.சி. ஸ்டூடன்ட். இவனுக்கு என்ன ரேங்க் கொடுக்கறதுனு அதிகாரிங்களே திண்டாடி இருக்காங்க. பெரியார் கொள்கை வழி வந்த குடும்பம்​கிறதால பொது நலத்துக்காக வாழணும்னு அவன் முடிவு செஞ்சதுதான் தப்பாப்போயிடுச்சு. அப்படிப்பட்ட புள்ளையைப் பெத்த எனக்கு இந்த சமூகம் 'கொலைகாரனைப் பெத்தவ’னு பட்டம் கொடுக்குது!

அறிவோட அப்பா குயில்தாசன் மனசு உடைஞ்சு வீட்டிலேயே கிடக்கார். அவர் நல்ல கவிஞர். ஆனா, இப்ப எல்லாம் பேனா எடுத்தா, சிறைபற்றி மட்டுமே எழுத வருதுங்கிறதால எதையும் எழுதறது இல்லை.

அறிவு கேட்கிறது எல்லாம் உயிர்ப் பிச்சை இல்லை... மறுக்கப்பட்ட நீதி! மனுஷங்க வாழ்ற நாட்டுலதானே நானும் இருக்கேன்... இங்க யாருக்கும் மனிதாபிமானமே இல்லையா?''

அந்த அம்மாவின் கண்ணீருக்கு காலம் தரப்போகும் விடை என்ன?

- ந.வினோத்குமார், படங்கள்: வீ.நாகமணி

இன்னும் நம்பிக்கை இருக்கிறது!

கருணை மனு நிராகரிக்கப்பட்ட மூன்று அல்லது நான்கு நாட்களுக்குள் தூக்குத் தண்டனையை நிறை​வேற்றப்​போகும் தேதியை முடிவு செய்வார்கள். இந்த நிலையில் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரை விடுவிக்க முடியும் என்கிறார்கள், மரண தண்டனைக்கு எதிரான செயற்பாட்டாளர்கள். நீதிக்கு நேர்மாறாக, பிழையாக வழங்கப்பட்ட தண்டனையை ரத்து செய்யும் அதிகாரம் குடியரசுத் தலைவர் மற்றும் மாநில ஆளுநர்களுக்கு உண்டு. இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் 72-வது பிரிவு இந்த அதிகாரத்தை குடியரசுத் தலைவர்களுக்கு வழங்குகிறது. சட்டப் பிரிவு 161, மாநில ஆளுநர்​களுக்கு மரண தண்டனையை ரத்து செய்யும் அதிகாரத்தை வழங்குகிறது!

thanks-vikatan.com

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

''விசாரிக்கப்படாத மர்ம மனிதர்கள் இன்னும் வெளியில் இருக்கிறார்கள்!''

அம்பலப்படுத்தும் சி.பி.ஐ. இன்ஸ்பெக்டர்!

''முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலைச் சதிகாரர்களைப் பிடிக்​காமல் விட்டுவிட்டு, மூன்று பொடியன்களுக்குத் தூக்குத் தண்டனை வாங்கித் தந்த சி.பி.ஐ-யில் வேலை பார்த்ததற்கு வெட்​​கம், வேதனை, அவ​மானம், குற்ற உணர்ச்சி ஆகியவற்றால் குமுறுகிறேன்... கொந்தளிக்கிறேன்!'' - இப்படி தன் வீட்டுச் சுவரில் கொட்டை எழுத்தில் எழுதி வைத்து இருக்கிறார் போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்த மோகன்ராஜ். இவர், ராஜீவ் கொலை வழக்கு விசாரணைக் குழுவில் இடம் பெற்ற அதிகாரிகளில் ஒருவர்!

'ஏன் இந்தத் திடீர் ஆவேசம்?’ என்று கேட்கும் முன்பே, சுவரில் அடித்த பந்தாக வந்தது பதில்!

''நான் புலிகளுக்கு ஆதரவாளன் அல்ல. 'விசாரணை முழுமை அடையாமல், சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரைத் தூக்கிலிடக் கூடாது.’ என்பதே எனது கருத்து. சி.பி.ஐ-க்கு விருப்பப்பட்டுப் போன நான், ராஜீவ் கொலை வழக்கு விசாரணை நடந்த விதத்தைப் பார்த்து, வெதும்பிப்போய் வி.ஆர்.எஸ். வாங்கினேன். இந்த வழக்கில் ஆரம்பத்தில் இருந்தே உயர் அதிகாரிகள் பலர் அலட்சியப் போக்குடன்தான் இருந்தனர். ஒரு நூல் கிடைத்தால், குறிப்பிட்ட லெவலுக்கு மேல் அதை விசாரிக்காமல், அப்படியே நிறுத்தி விடுவார்கள். ராஜீவ் காந்தியைக் கொலை செய்தது விடுதலைப் புலிகள் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால், அதற்குக் காரணகர்த்தாவாக இருந்து பெரும் நிதி உதவி கொடுத்துப் பின்னால் இருந்து இயக்கியவர்கள், வேறு பல உதவிகள் செய்தவர்கள் எனப் பல மர்ம மனிதர்கள் இன்னமும் இருக்கிறார்கள். அவர்களும் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்தானே? அப்படிப்பட்டவர்களை அரசியல் காரணங்களுக்காகப் பொத்திப் பொத்திப் பாதுகாத்தார்கள் என்பதுதான் உண்மை.

p13.jpg

ஒற்றைக்கண் சிவராசன் பெங்களூரு கோனேகொண்டா பகுதியில் தங்கி இருந்த வாடகை வீட்டை நாங்கள் முற்றுகை இட்டதும், தாக்குதலுக்காக உயர் அதிகாரியிடம் அனுமதி கேட்டோம். கிட்டத்தட்ட இரண்டு நாட்கள் அனுமதி கொடுக்காமல் வேண்டும் என்றே காலம் தாழ்த்தினார்கள். தாக்குதல் நடத்த உடனே அனுமதி கொடுத்திருந்தால், சிவராசனை உயிருடன் பிடித்திருக்க முடியும். 'இந்தக் கொலையில் யார் யாருக்கு என்னென்ன பங்கு?’ என்ற மொத்த விவரங்களையும் கறந்திருக்கலாம். ஆனால், அந்தத் தாக்குதலை உடனே நடத்த விடாமல் ஏன் தடுத்தார்கள் என்பது இது வரை எனக்குப் புரியாத புதிர்தான்!

ராஜீவ் கொலைக்கான பணப் பரிமாற்றத்தில், சந்திராசாமி, கே.பி. என்கிற பத்மநாதன் ஆகியோருக்குப் பங்கு இருக்கிறது. இவர்கள் இருவருமே வெளியில்தான் இருக்கிறார்கள். இவர்களுக்குத் தண்டனை வாங்கித் தராமல், உல்லாசமாக உலவ விட்டது ஏன்?

ராஜீவ் கொலை செய்யப்பட்ட இடத்தில் இருந்த மரகதம் சந்திரசேகரின் மகன் லலித் சந்திரசேகர், 'அம்மாவை ஆஸ்பத்திரியில் சேர்க்கப் போய்விட்டேன்...’ என்று சொன்னார். ஆனால், அவர் ஆஸ்பத்திரிக்குப் போகவில்லை. காங்கிரஸ் பிரமுகர் ஒருவர்தான் மரகதம் சந்திரசேகரை ஆஸ்பத்திரியில் சேர்த்தார் என்பது பின்னர்தான் தெரியவந்தது. லலித் சந்திரசேகரின் இந்தத் தவறான வாக்குமூலத்தை மேலும் விசாரிக்கவில்லை. இந்த முரண்பாடுகள் குறித்து நான்கூட கேட்டேன். ஆனால், யாரும் சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை. முதலில் பார்க்கும்போது, அடிபடாமல் இருந்திருக்கிறார் லலித் சந்திரசேகர். ஆனால், நான்கு நாட்கள் கழித்து காலில் கட்டுப் போட்டுக் கொண்டு நடமாடி இருக்கிறார்.

'மல்லிகை’ இல்லத்தில்தான் எங்களது விசாரணைகள் நடந்தன. மல்லிகைக்கு முன்னால் சந்தேகத்​துக்கு இடமான வகையில் ஒருவ​னைப் பிடித்தோம். 'அமெரிக்​காவில் இருக்கும் ஒரு பெண், மல்லிகை இல்லத்தின் முகவரியைக் கேட்டார். அதனால்​தான் முகவரியைக் குறிக்க வந்தேன்.’ என்று அந்தப் பையன் சொன்​னான். அமெரிக்காவில் இருந்து இந்தத் தகவலைக் கேட்ட பெண்ணின் பெயர் பவானி. அவரது கணவர் பெயர் டேரியல் பீட்டர். இவர், லலித் சந்திரசேகரின் நண்பர். ஸ்ரீபெரும்புதூரில் நடந்த குண்டு வெடிப்பில் பலியானவர்களில் இவரும் ஒருவர்.

எங்களிடம் பிடிபட்டவனின் வீட்டைச் சோதனை செய்தோம். அங்கு ஒரு கடிதம் கிடைத்தது. 'இந்த லலித்தால்தான் இந்த நிலைமை. இதை கார்த்தி​கேயனிடம் சொல்ல வேண்டும்.’ என்று அமெரிக்காவில் இருந்த பவானி, அந்தக் கடிதத்தில் எழுதி இருந்தார். அதைக் கைப்பற்றினோம். இதற்காகத்தான் மல்லிகை முகவரியை அவர் கேட்டிருந்தார். எங்கள் அதிகாரிகள் இரண்டு பேர் அப்போது அமெரிக்காவில்தான் இருந்தார்கள். அவர்களிடம் இந்த முகவரியைக் கொடுத்து விசாரிக்கலாம் என்று நாங்கள் எங்களுக்குள் பேசிக்கொண்டோம். உயர் அதிகாரிகள் தகவல் தந்திருப்பார்கள் என்று நினைத்தோம். ஆனால், அமெரிக்காவில் இருந்த அதிகாரிகளுக்கு இந்தத் தகவல் சொல்லப்படவே இல்லை. பிடிபட்ட கடிதம் அடங்கிய கோப்பு, குற்றப் பத்திரிகை தாக்கல் செய்த பிறகுதான் என்னிடம் திருப்பித் தரப்பட்டது. ஆனால், அமெரிக்காவில் இருந்து எழுதப்பட்ட அந்தக் கடிதம் கோப்பில் இல்லை. ஏன் அதை மறைத்தார்கள்? இதுபோல பல நபர்களை சி.பி.ஐ. விசாரிக்கவில்லை.

இந்த சந்தேகங்களை நான் தொடர்ந்து எழுப்பி வருகிறேன். ஆனால், சி.பி.ஐ. இதற்கு உரிய பதிலை இதுவரை தரவில்லை. 'உண்மைகள் உள்ளது உள்ளபடி வெளிவர வேண்டும்’ என்பதே என் எண்ணம். ராஜீவ் கொலை சதியில் ஈடுபட்ட பெரும்புள்ளிகளின் தொடர்புகள் குறித்து விசாரிப்பதற்காக, பல்வேறு உளவு நிறுவனங்களின் நிபுணர்களை உள்ளடக்கிய பல்நோக்கு கண்காணிப்பு ஏஜென்ஸி (எம்.டி.எம்.ஏ.) அமைக்கப்பட்டது. இந்த ஏஜென்ஸி யார் யாரைக் குற்றம் சாட்டுகிறதோ, அவர்கள்தான் உண்மையான குற்றவாளிகள். அந்த முதலைகளை முதலில் கழுவில் ஏற்றிவிட்டு, அதன் பிறகு சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோருக்கு தண்டனை கொடுப்பதுதான் நியாயமாக இருக்கும். எனவே, அதுவரை இவர்கள் மீதான தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று நீதிமன்றத்தின் படி ஏறப் போகிறேன்...'' என அதிரடி அஸ்திரம் ஏவினார் மோகன்ராஜ்.

thanks-vikatan.com

  • கருத்துக்கள உறவுகள்

இதுதான் இந்திய சட்டம் நிரபராதிக்கு தூக்கு......?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.