Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இன அழித்தலை பயங்கரவாத போர்வையால் மறைக்க முடியாது

Featured Replies

இன அழித்தலை பயங்கரவாத போர்வையால் மறைக்க முடியாது

-ஆக்கம்: கா. அய்யநாதன்

இலங்கை அரசுக்கு எதிராக குற்ற விரல் நீட்டும் நாடுகள், ஒரு நீண்ட யுத்தத்திற்குப் பிறகு பயங்கரவாதத்தை முறியடித்தது தொடர்பான உண்மையையும், தாங்கள் தோற்கடித்த பயங்கரவாதிகளின் இயற்கையை அறியாதவர்கள் என்றும் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ச மிகுந்த மன வருத்தத்துடன் பேசியுள்ளார்.

கொழும்புவில் ரோட்டரி கிளப் ஏற்பாடு செய்த தெற்காசிய மேம்பாடு மற்றும் ஒத்துழைப்பு மாநாட்டை தொடங்கி வைத்துப் பேசியபோது இவ்வாறு கூறியுள்ள ராஜபக்ச, “பயங்கரவாதத்திற்கு எதிரான போரின் போது நாம் மேற்கொண்ட மனிதாபிமான நடவடிக்கையையும், பயங்கரவாதத்தால் இலங்கைக்கு ஏற்பட்ட துயரத்தையும் அறிந்தவர்களா? இந்த உண்மைகளைப் பற்றி எந்த வகையிலாவது இந்த நாடுகள் அக்கறை கொண்டவையா?” என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதுமட்டுமல்ல, “பயங்கரவாதத்தை ஒழித்த ஒரு பெருமை மிகு நாடாக இன்று நாம் இருக்கின்றோம். அதனை செய்ததன் மூலம் தெற்காசியாவையே பயங்கரவாதத்தில் இருந்து காப்பாற்றியுள்ளோம்” என்றும் பேசியுள்ளார்.

இன்றைக்கு இலங்கையின் அதிபராக மகிந்த ராஜபக்ச இருப்பதற்குக் காரணமான சிங்கள பெளத்த இனவாத அரசியலின் வரலாற்றையும், இலங்கையை சிங்கள பெளத்த நாடாக மாற்ற வேண்டும் என்பதற்காக தென்னிலங்கை அரசியல் கட்சிகள் கடைபிடித்த கொள்கையும், அதனைப் பயன்படுத்தி ஆட்சிக்கு வந்து, இலங்கையின் பூர்வீக மக்களான தமிழர்களை சற்றேறக்குறைய 70 ஆண்டுகளாக இன ஒடுக்கலுக்கும், பிறகு இராணுவ நடவடிக்கையின் மூலமாக இன அழித்தலையும் செய்துவந்த வரலாற்றையும் அறியாதவர்கள் எவராயினும், அவர்கள் சிங்கள சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், மகிந்த ராஜபக்ச விட்ட கதையை ஐயம் ஏதுமின்றி அப்படியே நம்புவார்கள். அப்படித்தான் 80 விழுக்காடு சிங்கள சமூகம் இருக்கின்றது. அதன் விளைவே, தமிழர்களுக்கு எதிரான வெளிப்படையான ஒரு இனவாத கொள்கையைக் கடைபிடிக்கும் அரசியல் கட்சிகள் அங்கு ஆளும் கட்சியாவது இயல்பானதாகிவிட்டது.

இந்த அரசியல் பாரம்பரியத்தின் விதையில் முளைத்து, இன்றைக்கு அந்த கொள்கையை வைத்தே தனது குடும்ப ஆட்சியை எவ்வித எதிர்ப்புமின்றி நிலைநிறுத்திவிட்ட மகிந்த ராஜபக்ச போன்ற இனவாதிகளுக்கு உண்மை என்பது அவர்கள் சார்ந்த சிங்கள இனம் எதையெல்லாம் நம்புகிறதோ, அவை யாவும் உண்மைதான். அதனால்தான் உலகம் கூறும் உண்மை எதுவும் ராஜபக்ச கும்பல்களால் ஏற்க முடியாத வேப்பங்காயாக கசக்கிறது.

“நீண்ட கால யுத்தத்திற்குப் பிறகு பயங்கரவாதத்தை வென்றுள்ளோம்” என்று கூறுகிறார். ஈழத் தமிழர்களின் சம உரிமைப் போராட்டம் வெள்ளையர் ஆதிக்கத்தில் இருந்து இலங்கை விடுபடுவதற்கு முன்னரே தொடங்கி விடுகிறது. அப்போதும் இதே சிங்கள பெளத்த இனவாதம் தமிழர்களுக்கு சம உரிமை அளிக்கப்படுவதை எதிர்க்கிறது. இலங்கையின் பெரும்பான்மை இனமான சிங்களவர்களின் அரசியல் தலைமைகளின் பேச்சைக் கேட்டுக்கொண்டு அங்கு ஒற்றையாட்சியை நிலைப்படுத்திவிட்டு வெள்ளையன் வெளியேறுகிறான். இரு வேறு இனங்களைக் கொண்ட இலங்கையில் ஒரு இனம் மற்றொன்றை விட பெரும்பான்மையாக இருக்குமிடத்தில் அமையும் ஜனநாயக அரசு ஒரு தலைப்பட்சமாகவே இருக்கும் என்று தமிழர் தலைவர்கள் அருணாச்சலம், பொன்னம்பலம் போன்றோர் எடுத்துரைத்ததை வெள்ளையன் கேட்கவில்லை. விளைவு, அங்கு அமைந்த சிங்கள பெரும்பான்மை ஒற்றையாட்சி தமிழர் உரிமை பறிப்பிலும், அவர்களின் காணிகளை (நிலங்களை) பறித்து துரத்துவதிலும் திட்டமிட்டு வெற்றி பெற்று, சிங்கள பெளத்த இனவாத கொள்கையுடைய அரசாக எளிதாக மாற்ற வித்திட்டது. அதன் வெளிப்பாடே 1974இல் ஏற்கப்பட்ட இலங்கையின் புதிய அரசமைப்புச் சட்டம்.

இதனை ஏற்க மறுத்து, தமிழர்களின் சம உரிமைக்காக சாத்வீக வழியில் போராடியவர் ஈழத் தந்தை செல்வா. மகாத்மா காந்தியைப் போல் சட்டம் கற்றவர். மிகச் சிறந்த சட்டத் தரணியாகத் திகழ்ந்தவர். அவர் சேனாநாயகா முதல் சிறிமாவோ பண்டாரநாயக அம்மையார் வரை பேசி, பேசி இரண்டு ஒப்பந்தகளைப் போட்டார். ஆனால் ஒன்றையும் சிங்கள ஆட்சியாளர்கள் நடைமுறைப்படுத்தவில்லை. மாறாக, கிழத்தெறிந்தார்கள். செல்வாவுடன் ஒப்பந்தம் போட்ட காரணத்தினால்தான் பண்டாரநாயகாவை பெளத்த பிக்கு ஒருவன் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றான்.

அதனைத் தொடர்ந்து பிரதமர் ஆனவர்தான் அவருடைய மனைவியான சிறிமாவோ பண்டாரநாயக.

ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தாது மட்டுமின்றி, காலித்தனத்தையும் செல்வா மீது கட்டவிழ்த்துவிட்டது சிங்கள ஆட்சி. அமைதியாக போராட வந்த தமிழர் தலைவர்கள் தாக்கப்பட்டனர்.

இதற்கு மேலும் தாங்க முடியாது என்ற நிலை வந்ததால்தான் 1976இல் வட்டுக்கோட்டை மாநாட்டில் பிரிந்து சென்று தனித் தமிழ் ஈழம் காண்பது என்று தீர்மானம் போட்டார் செல்வா.

அந்தத் தீர்மானத்தையே அடிப்படையாக வைத்து அவர் அமைத்த தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி தமிழர் மாகாணங்களில் பெரும் வெற்றி பெற்றது. அதற்குப் பிறகும் சிங்கள ஆட்சியாளர்கள் திருந்தவில்லை. மாறாக, இராணுவத்தைக் கட்டவிழ்த்து விட்டு தமிழர்கள் மீது கடுமையான ஒடுக்குமுறையை ஏவிவிட்டனர். அதன் எதிர் விளைவுதானே, தமிழர்கள் மத்தியில் பிறந்த ஆயுதம் ஏந்திய விடுதலைப் போராட்டம்? இதனை ராஜபக்ச அல்ல, அவருடைய அப்பனாலும் மறுக்க முடியாது.

ஆக, சாத்வீக வழியில் நடந்த போராட்டத்தை இனவெறியுடன் ஒடுக்கியதன் விளைவாக பிறந்ததே ஆயுதப் போராட்டம். ஈழத் தமிழினத்தின் அந்த ஆயுதப் போராட்டம் பயங்கரவாதம் என்றால், அதனைப் பெற்றது சிங்கள பெளத்த இனவாதமே என்பதை ராஜபக்ச கும்பல் ஒப்புக்கொள்ள வேண்டும். இதுதான் இலங்கை அரசியல் வரலாறு போதிக்கும் உண்மை.

ஈழத் தமிழர்கள் ஆயுதம் தாங்கி நடத்திய விடுதலைப் போராட்டம் நியாயமானது என்பதால்தான் அவர்களோடு அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தி இலங்கை இனப் பிரச்சனைக்கு நீடித்தத் தீர்வு காணுமாறு சர்வதேச சமூகம் சந்திரிகா அரசுக்கு அழுத்தம் தந்தது. அதனால்தான் ஆயுதம் தாங்கிப் போராடிய தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை தமிழர்களின் தார்மீக பிரதிநிதிகளாக ஏற்று இலங்கை அரசுக் குழு அவர்களோடு ஒரு முறை, இருமுறை அல்ல, ஏழு முறை பேச்சுவார்த்தை நடத்தியது.

2002ஆம் ஆண்டு புலிகளுடன் போர் நிறுத்தம் செய்து கொண்டு, 2006ஆம் ஆண்டு வரை பேச்சுவார்த்தை நடத்தியது வரை அந்த இயக்கம் இலங்கைக்கு பயங்கரவாத இயக்கமாகத் தெரியவில்லை. அப்படி முத்திரையிட்டதையும் நீக்கிக்கொண்டுதான் பேச்சுவார்த்தைக்கு வந்தது. அதன் பிறகு பன்னாட்டு அளவில் மேற்கொண்ட சதித் திட்டத்தின் விளைவுதான் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருந்த புலிகள் மீது பயங்கரவாத முத்திரை குத்தப்பட்டதற்கான காரணமாகும்.

இதனை இலங்கையின் அண்மைக் கால வரலாற்றை அறிந்த நாடுகளும், அரசியல் அவதானிகளும் நன்கு அறிவர்.

ஆக, ‘பயங்கரவாதத்திற்கு எதிரான போர்’ என்ற பேரில், இந்தியா, சீனா உள்ளிட்ட தெற்காசிய வல்லாதிக்கங்களின் முழு ஆதரவுடன் ஈழத் தமிழினத்தை திட்டமிட்டு அழித்துவிட்டு, இன்றைக்கு “நாங்கள் பயங்கரவாதத்தை அழித்துவிட்டோம்” என்று கூறினால், அதன் உண்மை தெரியாமல் உலகம் ஏற்கும் என்று நினைக்கிறது ராஜபக்ச கும்பல். அதனால்தான் உள்ளுர்வாசிகளிடையே பேசும் ஒவ்வொரு கூட்டத்திலும் சர்வதேச சமூகத்தைக் குற்றம் சாற்றுகிறார் ராஜபக்ச.

இந்த மாநாட்டு உரையில் கூட, தாங்கள் மேற்கொண்டது மனிதாபிமான மீட்பு நடவடிக்கை என்று கூசாமல் பேசுகிறார் என்றால், அதனை நம்புவதற்கு ஏமாந்த சிங்கள இனம் முன்னால் அமர்ந்திருக்கிறது என்கிற நம்பிக்கையில்தான். சிங்களம் நம்புவதாலேயே அங்கு நடந்த தமிழினப் படுகொலை என்கிற உண்மை பூமிக்குள் சென்று புதைந்து கொள்ளாது.

மகிந்த ராஜபக்ச அமைத்த கற்ற பாடங்களும் இணைக்கபாடும் என்கிற ஆணையம் (Lessons Learnt and Reconciliation commission -LLRC) முன்பு சாட்சியமளித்த மன்னார் பேராயர் ராயப்பு ஜோசப், இறுதி கட்டப் போர் நடந்த பகுதியில் இருந்த மக்களில் 1,46,679 பேர் இன்றைக்கு இல்லை என்று ஆதாரத்துடன் கூறினார். இந்த வாக்குமூலத்தை அவர் அளித்தது இந்த ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் தேதி. ஆனால், இதுவரை ராஜபக்ச அரசு மறுக்கவில்லை!

இது ஒன்று போதாதா? ராஜபக்ச இராணுவம் மேற்கொண்டது மனிதாபிமான மீட்பு நடவடிக்கையா? அல்லது திட்டமிட்ட தமிழினப் படுகொலையா? என்பதற்கு.

உனது நாட்டு மக்கள் ஒன்றரை இலட்சம் பேரைக் கொன்றுவிட்டு, இன்றைக்கு ‘பயங்கரவாதத்தை ஒழித்த பெருமையுடன் நின்றுக்கொண்டிருக்கிறோம்’ என்று கூறுவது சிங்கள பெளத்த இனவாத மயக்கத்தில் இருக்கும் அந்த மக்களை ஏமாற்றத்தான் பயன்படும், அது எந்த விதத்திலும் நடந்த உண்மைகளை மாற்றிவிடாது.

“மிகக் கடுமையாகப் போராடி அமைதியை வென்றுள்ளோம்” என்று கூறுகிறார். யாருக்கு அமைதி? வடக்கிலும் கிழக்கிலும் கிரீஸ் தடவிய இராணுவத்தினரை உலாவ விட்டு தமிழ் பெண்கள் மீது பாலியல் வன்முறை நடத்துவது, கொழும்புவில் புகழ்பெற்ற வெள்ளை வேன்கள் இப்போது தமிழர் பகுதியில் உலாவுகின்றன. போரினால் இடம் பெயர்ந்த மக்களில் 90 விழுக்காட்டினர் மறுகுடியமர்த்தம் செய்யப்பட்டுள்ளார்கள் என்று கூறுகிறார். எங்கே குடியமர்த்தப்பட்டார்கள்? அவர்கள் வாழ்ந்த இடங்களிலா? தமிழர்கள் வாழ்ந்த இடங்களில் சிங்கள குடியேற்றங்கள், தமிழர்கள் மீன் பிடித்த பகுதிகளில் சிங்கள மீனவர்களுக்கு மட்டும் மீன் பிடிக்க அனுமதி, தமிழர்களின் காணிகள் பறிக்கப்பட்டு, தமிழர் பகுதிகளில் குடியமர்த்தப்பட்ட சிங்களர்களுக்கு பிரித்தளிக்கப்பட்டுள்ளது, தமிழர் நகரங்களில் சிங்கள இராணுவ முகாம்கள், பல பகுதிகள் இராணுவ நிர்வாகப் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. போர் முடிந்த இரண்டு ஆண்டுகள் ஆகியும் அட்டூழியம் செய்துகொண்டு, ஏமாந்த சிங்களவனிடம் எல்லாம் அமைதியாக இருக்கிறது என்று கதையடித்தால் உலகம் ஏற்றுக்கொள்ளுமா? உலக நாடுகள் அனைத்தும் இந்தியாவா என்ன? சொல்வதற்கெல்லாம் தலையாட்ட?

ஈழத் தமிழினத்தை முற்றிலுமாக ஒரங்கட்டி, அவர்களுக்கென்று பாரம்பரிய பூமி என்று ஏதுமில்லை என்று நிரூபிக்க சிங்கள குடியேற்றங்களை மட்டும் செய்வதோடு நின்றுவிடாமல், அப்பகுதிகளின் பெயர்களை சிங்களத்திற்கு மாற்றம் செய்து, பார்க்கும் இடங்களிலெல்லாம் புத்தர் சிலைகளை வைத்து, எங்கு நோக்கினும் தமிழர் பூமி என்கிற அடையாளம் என்று ஏதுமிருக்கக் கூடாது என்று திட்டமிட்டு செயலாற்றி வரும் ஒரு இனவெறி அரசி்ன் அதிபராகவே மகிந்த ராஜபக்ச உள்ளார் என்பதை உலகம் வேகமாக புரிந்துகொண்டு வருகிறது.

இந்தியா, சீனா போன்ற வல்லாதிக்கங்களின் பாதுகாப்பில் எத்தனைக் காலம்தான் உண்மையை மறைத்து ஏமாற்றிட முடியும்? சிங்கள பெளத்த இனவாத முகத்திரை வெகு விரைவில் கிழியும்போது, தங்கள் தவறை சிங்கள மக்களும் உணர்வார்கள், அந்த காலம் வெகு தூரத்தில் இல்லை. அதுவரை ராஜபக்ச கும்பலின் ஏமாற்றுப் பேச்சு ‘பெருமைக்குரியதாக’வே இருக்கும்.

மூலம்: இணையத் தமிழ் - ஐப்பசி 5, 2011

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு லட்சத்து நாற்பத்தி ஏழாயிரம் மக்களை, அவர்கள் பூர்வீக பூமியில் வைத்து... பல வல்லரசு நாடுகளின் துணையுடன் கொன்றும் விரட்டியும் அடித்துவிட்டு... பயங்கர வாதத்தைப் பற்றிக் கதைக்க இவர்களுக்கு என்ன உரிமை உள்ளது?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.