Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரித்தானியப் பேரரசின் உளவியல் பலத்தை ஆட்டம் காணச் செய்த ‘எம்டன்‘

Featured Replies

ஞாயிற்றுக்கிழமை, 06 நவம்பர் 2011, 01:36 GMT ] [ நித்தியபாரதி ] SMS_Emden.jpgகிட்டத்தட்ட நூறு ஆண்டுகளுக்கு முன்பு இதேமாதத்தில் நடந்தேறிய சில சம்பவங்களால் ஐரோப்பிய மொழி மூலத்தைச் சேர்ந்த புதிய சொல் ஒன்று, சிங்களம் மற்றும் சில தென்னிந்திய மொழிகளுக்குக்குள் நுழைந்து கொண்டது.

இன்று யாராவது சிங்கள பேச்சு வழக்கில் (எம்டன்) 'Emden' என்று சொன்னால் அந்த வார்த்தையானது குறிப்பிட்ட நபர் நரியைப் போன்று குள்ளப் புத்தி உடையவர் என்றே அர்த்தம்.

சிறிலங்காத் தாய்மார்கள் தமது குழப்படிக்காரப் பிள்ளைகளை மிரட்டுவதற்கு 'Emden billa' என்ற வார்த்தையைப் பயன்படுத்தினர்.

1914 ஓகஸ்ட் 04ம் நாள், ஜேர்மனி மீது பிரித்தானியா போரை ஆரம்பிப்பதாக அறிவித்ததன் பின்னர், முதலாம் உலக மகாயுத்தம் வெடித்தது.

இது ஆரம்பிக்கப்பட்டு குறைந்தது ஒரு மாதத்திற்குள், அதாவது 1914 ஓகஸ்ட் 30ம் நாள்- இந்து சமுத்திரத்தில் நிறுத்தப்பட்டிருந்த பிரித்தானியா மற்றும் அதன் கூட்டணி நாடுகளின் கப்பல்களைப் பயமுறுத்துவதற்கும், சிறிலங்கா மற்றும் இந்தியாவிற்கு இடையிலான நெருக்கமான கப்பற் போக்குவரத்துப் பாதைகளை இடைமறிப்பதற்கும் ஜேர்மனியின் இலகு ரக அதிவேக கப்பலான Emden வங்காள விரிகுடாவின் ஊடாக இரகசியப் பயணத்தை மேற்கொண்டது.

மிக நீளமான, மெல்லிய, வசீகரம்மிக்க 3650 தொன் எடையுடைய Emden என்ற இந்தக் கப்பல் ஜேர்மனியப் பேரரசின் ஆசியப் பிராந்தியக் கடற்படையின் பெருமைக்குரிய ஒன்றாக இருந்தது.

SMS__Emden_.jpg

இந்தக் கப்பல் 'கிழக்கின் அன்னப் பறவை' என அழைக்கப்பட்டது. ஆனால் இது கூரிய நகங்களைக் கொண்ட கழுகைப் போன்று காணப்பட்டது.

கார்ல் வொன் முல்லர் என்பவரால் கட்டளையிடப்பட்ட இந்தக் கப்பல் எவ்வளவு அழகாக இருந்ததோ, அதேபோன்று பயங்கரமானதாகவும் இருந்தது.

இதில் 4.1 அங்குலத் துப்பாக்கிகள் பத்து பொருத்தப்பட்டிருந்தன. அத்துடன் இது 25 கடல்மைல் வேகத்தில் செல்லக்கூடிய திறமையைக் கொண்டிருந்ததால், கடலில் செல்லும் எந்தவொரு வர்த்தகக் கப்பல்களையும் தாண்டிச் செல்லும் வல்லமை பெற்றிருந்தது.

இதன் சுடுதிறன் மற்றும் இதன் வேகம் ஆகிய இரண்டும் Emden என்ற இந்தக் கப்பலை மிகச்சிறந்த தாக்குதல் கப்பலாக மாற்றியிருந்தன.

தனது எதிரிகளை நெருங்குவதற்காக கப்டன் முல்லர் சதித்திட்டம் ஒன்றைத் தீட்டினார். பெரும்பாலான ஜேர்மனிய இலகு ரக அதிவேகக் கப்பல்கள் போன்று Emden என்ற இந்தக் கப்பலிலும் மூன்று புகைபோக்கிக் குழாய்கள் பொருத்தப்பட்டிருந்தன.

பிரித்தானியப் போர்க் கப்பல்களில் நான்கு புகைபோக்கிக் குழாய்கள் பொருத்தப்பட்டிருந்தன.

முல்லர் தனது போர்க்கப்பலில் மரம் மற்றும் வர்ணங்களால் போலியான பிறிதொரு புகைபோக்கிக் குழாயைப் பொருத்தினார்.

அதாவது தனது கப்பலில் நான்கு புகைபோக்கிக் குழாய்களைப் பொருத்துவதன் மூலம் Emden ஐ பிரித்தானியர்களின் கப்பல் போன்ற தோற்றமளிக்கும் வகையில் சதித்திட்டத்தை முல்லர் தீட்டினார்.

இவ்வாறான போலியான தோற்றத்தின் மூலம் எந்தவொரு சந்தேகமும் ஏற்படாத வகையில், Emden ஆல் தனது எதிரிக்கப்பலின் அருகில் செல்ல முடிந்தது.

1914 செப்ரெம்பர் 09ம் நாள் இந்தக் கப்பல் 3400 தொன் எடை கொண்ட பிரித்தானியப் போர்க்கப்பலை மூழ்கடித்தது. அதிலிருந்து ஆறு நாட்களுக்குள் அதாவது, செப்ரெம்பர் 09-14 வரை Emden, இரு கப்பல்களைக் கைப்பற்றிக் கொண்டதுடன் வேறு ஆறு போர்க்கப்பல்களை மூழ்கடித்தது.

சரியாக ஒரு மாதத்தின் பின்னர் இந்த எண்ணிக்கை 11 ஆக உயர்ந்தது. இவற்றின் மொத்த எடை 50,000 தொன் ஆகும்.

பிரித்தானியாவின் போர்க்கப்பலான HMS Yarmouth போன்று முல்லர் நான்கு புகைபோக்கிகளை Emden இல் அமைத்திருந்ததால், பிரித்தானியக் கப்பல்களின் மாலுமிகள் பலர், HMS Yarmouth என்று நினைத்து ஏமாந்து வணக்கம் செலுத்த அருகே செல்வர்.

அப்போது ஜேர்மனி படையினரின் துப்பாக்கிகள் முழங்கி அந்தக் கப்பல்களை மூழ்கடித்து விடும்.

எதுஎவ்வாறிருப்பினும் முல்லர் மிகவும் இரக்க குணமுடைய மனிதனாகவும் இருந்தார். எந்தவொரு எதிரிக் கப்பல்களையும் மூழ்கடிக்க முன்னர், அதில் பணியாற்றியவர்களை முதலில் வெளியேற்றி விடுவார்.

செப்ரெம்பர் 22ம் நாள் பின்னிரவில், அதாவது 14 பிரித்தானியக் கப்பல்கள் Emden ஐ தேடிக் கொண்டிருந்த போது, அது மிக இரகசியமாக சென்னையை வந்தடைந்தது.

அப்போது இது எதிரிக் கப்பல்களை தனது இலக்காகக் கொண்டிருக்கவில்லை. மிகப்பெரிய எண்ணெய்க் குதங்களைத் தாக்குவதையே இலக்காகக் கொண்டிருந்தது.

அங்லோ- பேர்சியன் வளைகுடாவுக்குச் சொந்தமான இரு பெரிய எண்ணைய் தாங்கிகளை அழிப்பதற்காக அவற்றின் மீது ஜேர்மனிய போர்க்கப்பல் 125 தடவைகள் குண்டுகளை வீசியது.

அவை வெடித்துச் சிதறி தீப்பிடித்து எரிந்தன. இதனால் மேலும் மூன்று எண்ணெய் தாங்கிகளும் சேதமடைந்தன.

இந்தத் தாக்குதலை முடித்துக் கொண்டவுடன், வில்லியம் கோட்டையில் இருந்த பீரங்கிகள் எதிர் நடவடிக்கையில் இறங்குவதற்குள் Emden தப்பிச் சென்று விட்டது.

எண்ணெய் தாங்கிகள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சென்னை வாழ் மக்களை அச்சத்திற்குள்ளாக்கியது. இதனால் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தமது இடங்களை விட்டு இடம்பெயர்ந்தனர்.

ஜேர்மனியப் போர்க்கப்பல் ஒன்று இந்து சமுத்திரம் முழுமையையும் அச்சத்திற்குள்ளாக்கிய விடயமானது பிரித்தானியாவின் உளவியல் பலத்தை ஆட்டம் காணச்செய்தது.

சென்னையில் தாக்குதலை மேற்கொண்ட Emden பின்னர் சிறிலங்காவின் கிழக்குக் கரையோரமாக செல்லத் தொடங்கியது. இந்தச் செய்தியானது சிறிலங்காவில் பீதியை ஏற்படுத்தியது.

இதனால் இலங்கைத் தீவிலிருந்த அதிகாரிகள் இரவு நேரங்களில் கரையோரக் காவற்பணிகளை மேற்கொள்ளத் தொடங்கினர்.

சென்னையில் தாக்குதலை நடத்தியதைத் தொடர்ந்து Emden ஒரு மாதகாலம் வரை சிறிலங்கா கடலில் தரித்து நின்று, அந்த வழியாகச் செல்லும் வணிகக் கப்பல்கள் மீது தாக்குதல்களை மேற்கொண்டது.

1914 நவம்பர் 09ம் நாள் சிறிலங்காத் தீவின் மீது இந்த ஜேர்மனியப் போர்க்கப்பல் தனது கவனத்தைக் குவித்திருந்த போது, கொக்கோஸ் தீவுகளுக்கு அருகே அவுஸ்திரேலிய போர்க்கப்பலான ‘சிட்னி‘ மேற்கொண்ட எதிர்பாராத தாக்குதலினால் Emden மூழ்கடிக்கப்பட்டது.

இந்தத் தாக்குதலில் ஜேர்மனி தனது 131வீரர்களைப் பலிகொடுத்ததுடன், 65 பேர் வரை காயமடைந்தனர். கப்டன் வொன் முல்லர் மற்றும் எஞ்சியிருந்த அவரது ஏனைய கப்பற் பணியாளர்கள் பிரித்தானியரால் சிறைப்பிடிக்கப்பட்டனர்.

இந்தப் போர்க்கப்பலை நினைவுகூரும் வகையில் ஜேர்மனிய அரசாங்கம் யுத்தத்தின் பின் எஞ்சியிருந்த அனைத்து அதிகாரிகளுக்கும் அவர்களது பெயருக்குப் பின்னால் Emden என்பதைச் சேர்த்துக் கொள்ள அனுமதி வழங்கியது.

இந்த நாள் ஜேர்மனிய மக்களால் தற்போதும் 'X-Emdens' என நினைவு கூரப்படுகின்றது.

Emden கப்பற் பணியாளர்களின் வரலாற்றுச் சம்பவமே சிங்களத்தில் புதிய சொல் ஒன்று புகுவதற்குக் காரணமாக அமைந்துள்ளது.

மலையாளத்தில், இது Emadan என அழைக்கப்படுகின்றது. அதாவது மிகப் பெரிய பலம் வாய்ந்த விடயம் அல்லது Emden ஐப் போல பெரியது என இது பொருள்படுகின்றது.

சிறிலங்காவின் கரையோரத்தை இந்த ஜேர்மனியப் போர்க்கப்பல் நாசம் செய்த விடயத்தில் Henry H. Engelbrecht குற்றம்சாட்டப்பட்டு கைதுசெய்யப்பட்டார்.

இவரே அப்போது சிறிலங்காவில் கைது செய்யப்பட்ட முதலாவது போர்க் கைதியாவார். இவர் விடுதலை செய்யப்பட்ட பின்னர் யால சரணாலயத்தைப் பராமரிப்பதற்காக அம்பாந்தோட்டையில் தங்கியிருந்தார்.

சிறிலங்கா கடலில் Emden நடமாடிய வேளையில், அதன் அதிகாரிகள் சிலர் தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்காக, தென்பகுதிக்குள் இரகசியமாக ஊடுருவியதாக வதந்திகள் பரவின.

சிறிலங்காவைத் தளமாகக் கொண்டியங்கிய இரகசிய நிறுவனம் ஒன்று Emden உடன் இணைந்து பணியாற்றியதாகவும் சொல்லப்படுகின்றது.

இந்நிலையிலேயே இந்தக் கப்பலுக்கு இரகசியத் தகவல்கள் மற்றும் ஏனைய சில உதவிகளை வழங்கிய குற்றச்சாட்டின் பேரில் ஹென்றி கைதுசெய்யப்பட்டார்.

ஆனால் இது விடயத்தில் தான் அப்பாவி என்றும் இது தொடர்பாகத் தனக்கு எதுவும் தெரியாது எனவும் ஹென்றி கூறியிருந்தார். ஆனால் இவரது கருத்துக்கள் ஏற்றுக் கொள்ளப்படாது கண்டியிலிருந்த சிறையில் இவர் தடுத்து வைக்கப்பட்டார்.

இதனால் கைதிகளுக்கான உடையைத் தான் அணியமாட்டேன் என ஹென்றி தெரிவித்தார். இதனால் இவர் மூன்று மாத காலம் வரை சிறைக்கம்பிகளின் இருட்டுக்குள் நிர்வாண கோலத்திலேயே இருந்தார்.

இவர் மீதான குற்றம் நிரூபிக்கப்படாத நிலையில், மூன்று மாதகால சிறைவாழ்வின் பின் இவர் விடுதலை செய்யப்பட்டார்.

வீணாகத் தன் மீது பழிசுமத்தப்பட்டதால் மனமுடைந்த இவர், விடுதலையாகி சிறிது காலத்தின் பின்னர் இறந்து விட்டார். இவர் ஜேர்மனியப் போர்க் கப்பலுக்கு உதவி செய்ததாகக் கூறப்பட்ட விடயம் 17 ஆண்டுகாலம் வரை பெரிதும் பேசப்பட்டது.

1931இல் Emden கப்பலின் இரண்டாவது கட்டளை அதிகாரியாகப் பணியாற்றிய ஜேர்மனியத் தளபதி ஒருவர் ஹென்றி மீது எவ்வித குற்றமும் இல்லை என்றும் சிறிலங்காவுடன் தாம் எவ்வித வழங்கல் தொடர்புகளையும் கொண்டிருக்கவில்லை எனவும் தனது விசாரணையின் போது சட்டவாளரிடம் தெரிவித்திருந்தார்.

Emden என்ற இந்தப் போர்க்கப்பல் இந்து சமுத்திரத்திற்குள் நுழைந்ததால் இங்கிருந்த மக்கள் பலரின் வாழ்வு பாதிக்கப்பட்டது.

முதலாவது உலக மகாயுத்தத்தில் 300 சிறிலங்கா இளைஞர்கள் பங்குபற்றியிருந்தனர். இதில் 49 பேர் யுத்தத்தின் போது கொல்லப்பட்டனர்.

கொல்லப்பட்ட ஏனையவர்களில் சிறிலங்கா ஆளுநர் றொபேற் கால்மேர்சின் மகனும் ஒருவராவார். கண்டி ரிறினிற்றிக் கல்லூரியிலிருந்து 65 பேர் போரில் பங்குபற்றியிருந்தனர்

இதில் 13 பேர் கொல்லப்பட்டதுடன், 18 பேர் காயமடைந்தனர். இருவர் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

* தி ஐலன்ட் நாளிதழில் ஜனக பெரேரா எழுதியிருந்த இந்தக் கட்டுரையை ‘புதினப்பலகை‘க்காக தமிழாக்கம் செய்தவர் ‘நித்யபாரதி‘.

http://www.puthinappalakai.com/view.php?20111106104998

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.