Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'இப்பொழுது ஊரில் பெடியளே இல்லை..'

Featured Replies

'இப்பொழுது ஊரில் பெடியளே இல்லை..'

இவர் ஒரு இளைஞர். யாழ்ப்பாணக் குடாநாட்டின் கீழ்ப் பகுதியில் உள்ள சிறிய கிராமமொன்றைச் சேர்ந்தவர். ஆனால், வன்னியில் இறுதிப் போர் நடந்தபோது, அந்தப் போரிலே சிக்கியிருந்தவர். போரின் காரணமாகத் தன்னுடைய கல்வியைத் தொடர முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டவர்களில் ஒருவர்.

இவரைப்போல இருக்கும் ஏராளம் இளைஞர்களின் பிரச்சினைகளை இவர் இங்கே பேசுகிறார். மேலும் இந்தப் போர் தொடர்பான அபிப்பிராயங்களையும் போர் தின்ற ஊரிலே வாழும் இவர், போர்ப் பசியிலிருந்து தப்பிப் பிழைத்தவர்களின் கதைகளைச் சொல்லும் ஒரு சாட்சி. முக்கியமாக தன் சக வயதினரை தன்னுடைய நண்பர்களை இழந்த நிலையில் இளம்பிராயத்தின் நெருக்கடிகளை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டியுள்ளது எனச் சொல்கிறார்.

யாருமே அதிகமாக அறிந்திராத பல பிரச்சினைகளைக் குறித்து நம்முடன் உரையாடுகிறார். யாழ் நிலமைகளைக் கருத்திற்கொண்டு இவ்விளைஞரின் புகைப்படத்தைத் தவிர்த்துள்ளோம்.

உங்களைப் பற்றிச் சொல்லுங்கள்

என்னைப் பற்றி எப்படிச் சொல்வது என்று புரியவில்லை. நான், நாட்டுப் பிரச்சினையால் படிப்பை இடையில் கைவிட நேர்ந்த ஒருவன். சேர்ந்து விளையாடவோ சேர்ந்து சில காரியங்களைச் செய்யவோ ஊரிலிருந்த துணையான நண்பர்களைக்கூட இழந்த நிலையில் இருக்கும் ஒரு இளைஞன். போராற் பாதிக்கப்பட்டிருக்கிற குடும்பமொன்றில் இருக்கிற இளைய பிள்ளை. எனக்கு மூத்த சகோதரங்கள் சிலர் வெளிநாடுகளுக்குப் போய்விட்டார்கள். ஆகவே சகோதரர்களின் பலம், அவர்களோடு இங்கே சேர்ந்திருக்கிறது என்பதெல்லாம் இன்றைக்கு இல்லை. வயதான பெற்றோருடன் நானும் இன்னொரு தம்பியுமே இருக்கிறோம். சொந்தங்கள் எல்லாம் பிரிந்து வாழவேண்டும் என்ற நிலையில் குடும்பம் இருக்கிறது.

அநேகமாக இப்பிடித்தான் பெரும்பாலான தமிழ்க் குடும்பங்கள் உள்ளன. அவலமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டு. அதைவிட புதிதாகப் பிறந்திருக்கிற சூழலில் என்ன செய்கிறது என்றே தெரியாமற் தடுமாறிக் கொண்டிருக்கிற ஆயிரக்கணக்கான என்னைப் போன்ற இளைய தலைமுறை ஆட்களில் ஒருவனாக இருக்கிறேன்.

நீங்கள் சொல்லுகின்ற இந்த நிலைமைகள், இந்தப் பிரச்சினைகளைப் பற்றிச் சற்று விரிவாக விளக்கமாகச் சொல்லுங்கள்?

எனக்கு இப்பொழுது 22 வயது. இந்த இருபத்திரண்டு வயதிலையும் நான் இன்னும் மின்சார வசதியுள்ள வீட்டில் இருக்கவில்லை. நல்ல வீட்டில்கூட வாழவில்லை. ஓ.எல்(க.பொ.த.சாதாரணதரம்) வரையில் படித்திருக்கிறேன். இதைப் படிக்கிறதுக்கே ஆறு பாடசாலைகளுக்கு இடம்பெயர்ந்திருக்கிறம். அதனால், பாடசாலை நண்பர்கள் கூட நல்ல முறையில் இல்லை. அதற்குப் பிறகு பாடசாலைக்குப் போக முடியாத நிலை. போர் நடந்ததால், நாட்டுப்பிரச்சினையால், இயக்கத்துக்தில சேரவேண்டியிருந்தது.

குடும்பத்தில் வேறு யாருமே போராடப் போகவில்லை. ஆகவே நான்தான் போகவேண்டியிருந்தது. தம்பியை விட முடியாது என்று நானே சேர்ந்தேன். நான் சேர்ந்த காலத்தைப் பற்றி உங்களுக்கு நன்றாகத் தெரியும். போர் உக்கிரமாக நடந்து கொண்டிருந்த காலம். நாங்கள் பயிற்சி எடுத்த உடனேயே களத்துக்கு அனுப்பப்பட்டம். ஆறுதடவை காயப்பட்டிருக்கிறேன். இதில இரண்டு தடவை மயிரிழையில் உயிர் தப்பினேன். அதைச் செத்துப் பிழைத்தேன் என்றே சொல்ல வேணும்.

என்னைப் பொறுத்தவரையில் இளமைக் காலம் என்ற ஒன்றை நான் அனுபவிக்கவேயில்லை. அகதியாக ஓடித் திரிந்ததும், படிக்க வழியில்லாமல் போனதும் இயக்கத்தில்கூட எதையும் செய்யவோ சாதிக்கவோ முடியாத நிலையில் என்னுடைய காலம் கழிந்ததும்தான் நடந்திருக்கிறது.

என்னோட இயக்கத்தில் இருந்த பெடியள்தான் இப்ப மிஞ்சியிருக்கிற நண்பர்கள். இதிலயும் நாங்கள் தடுப்பில் (புனர்வாழ்வு முகாமில்) இருந்தபோது பழகிய நண்பர்கள்தான் இப்ப தொடர்பில் இருக்கிறார்கள். அவர்களும் என்னைப் போல எல்லாத்திலும் பாதிக்கப்பட்டவர்கள். அவர்களோட என்னத்தைக் கதைக்கிறது? என்றாலும் அந்த நட்புத்தான் மிஞ்சியிருக்கு. இப்படியெல்லாம் ஒரு நிலைவரும் என்று நாங்கள் நினைக்கவேயில்லை.

எங்களுடைய ஊர் ஒரு சிறிய கிராமம். இப்ப 180 குடும்பங்கள் இருக்கின்றன. முன்னர் 210 குடும்பங்கள் இருந்தன. கொஞ்சம் வசதியான ஆட்கள் இன்னும் முழுசாக ஊருக்கு வரயில்லை. அவர்கள் யாழ்ப்பாணத்திலும் பருத்தித்துறை, நெல்லியடி, சாவகச்சேரி, கிளிநொச்சி என்ற இடங்களில் இருக்கிறார்கள். ஒன்றிரண்டு குடும்பங்கள் கொழும்பில் இருக்கினம். ஒரு ஐந்தாறு குடும்பங்கள் வெளிநாடுகளுக்குப் போய்விட்டன.

இப்பொழுது ஊரில் பெடியளே இல்லை. பெரும்பாலும் எல்லாப் பெடியளும் நடந்த போரில் செத்து விட்டார்கள். அநேகமாக என்னுடைய வயதில் இரண்டு மூன்று பேரைத்தவிர, மற்ற ஆட்கள் இல்லை. நான்கு பேர் போர்க்காலத்திலேயே கலியாணம் செய்து விட்டார்கள். அவங்கள் குடும்பகாரர்களாகிவிட்டார்கள். வசதியில்லாத நிலையில், சிறிய வயதிலேயே கலியாணத்தைச் செய்ததால், இப்ப மிகவும் கஸ்ரப்படுகிறார்கள். படிப்பையும் இடையில் விட்டதால், நல்ல தொழிலுக்கும் போக முடியாது.

பெரும்பாலானவர்கள் மேசன் வேலை, தச்சு வேலைக்கே போகிறார்கள். வீட்டுத்திட்டம் இருப்பதால் எல்லாருக்கும் ஏதோ வேலை இருக்கு. கட்டிட வேலைகள்தான். அதுவே அதிகமாக நடப்பதால், இப்ப இந்தத் தொழில்தான் கிடைக்கிறது. கொஞ்சம் கஸ்ரம்தான். ஆனால் என்ன செய்ய முடியும்? நான் மேசன் வேலைக்குப் போகிறேன். என்னுடைய படிப்புக்கு இலங்கையில் இப்ப நல்ல வேலை எடுக்கவே ஏலாது. பட்டதாரிகளே வேலைக்காகக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் என்று ஒரு சங்கத்தை படித்தவர்களே வைத்திருக்கிறார்கள். இதைச் சொல்லி எங்கட பெடியள் சிரிப்பாங்கள். அவங்களை விட (பட்டதாரிகளை விட) நாங்கள் பறவாயில்லை என்று சொல்லுவார்கள்.

நாங்கள் படிப்பையும் இடையில் விட்டு, நாட்டுக்காகப் போராடப்போய், அதையும் ஒழுங்காகச் செய்யேலாமல், இப்ப இந்த நிலைமையில் தனித்துப் போயிருக்கிறம்.

பின்னேரங்களில் ஓய்வாக இருந்தாலும் விளையாடக் கூட தோதான பெடியள் இல்லை. முந்தி எங்கட சித்தப்பா ஆட்கள் 35, 40 வயதில் கூட மைதானத்தில் பந்தடிப்பார்கள். தாச்சி மறிப்பார்கள். எனக்கு அதெல்லாம் முழுசாகத்தெரியாட்டிலும் சின்ன வயதில் அதைப் பார்த்த ஞாபகம்.

இப்ப எங்களின் விளையாட்டுக் கழகத்தை இயக்கவே முடியவில்லை. பிரதேச செயலகத்தில் இருந்து அடிக்கடி வந்து 'கிளப்பை' ஆரம்பியுங்கோ. விளையாட்டு உபகரணங்களைத் தாறம். மைதானத்தைத் திருத்தித் தாறம் என்றெல்லாம் சொல்லுகிறார்கள். ஆனால், விளையாடுறதுக்கு ஆட்கள் வேணுமே.

சில வேலைகளைச் சேர்ந்து செய்யிறதுக்கே ஆட்கள் இல்லை. அதாவது பெடியள் இல்லை. முந்தி ஊரில் கிணறு இறைக்கிறது, வீடு மேய்கிறது, அருவி வெட்டிறது எல்லாத்துக்கும் ஊர்ப்பெடியள்தான். கோவில் வேலைகள், பள்ளிக்கூட விளையாட்டுப் போட்டிக்கான ஏற்பாடுகளைச் செய்யிறது எல்லாமே பெடியள்தான். ஆனால், இப்ப அந்த நிலைமை இல்லை.

எங்கட குடும்பத்தில் அப்பா அம்மாவுடன் மொத்தமாக எட்டுப்பேர். நான் கடைசிக்கு முதல். இரண்டு அண்ணா வெளிநாட்டில். அக்கா இரண்டு பேரும் கலியாணம் முடிச்சிட்டினம். ஒரு அக்கா போர்க்காலத் திருமணம்தான் செய்தவா. எனக்கு நேரே மூத்தவா. அவர் (அத்தான்) மட்டக்களப்பு என்ற படியால் அங்கே போய்விட்டார்கள். அவரும் போராளியாக இருந்தவர்.

நானும் தம்பியும்தான் இப்ப வீட்டில் இருக்கிறோம். தம்பி படிக்கிறான்.

நான் இந்த வயதில் மேசன் வேலைக்குப் போவேன். அப்பிடியொரு நிலை வரும் என்று கனவிலும் நினைக்கவேயில்லை. மேசன் வேலை ஒன்றும் குறைவான வேலை இல்லை என்றாலும் படிப்பை விட்டிட்டு இந்த மாதிரி இருக்கிறதுதான் கவலை. வருங்காலத்தில் கல்வி இல்லாமல், கல்வித்தகுதி இல்லாமல் வாழவே முடியாது.

உலகத்திலிலேயே கல்வி அறிவு கூடிய மக்களில் இலங்கையர்களும் அடக்கம். அதிலும் தமிழர்கள் முன்னிலை வகித்தார்கள் என்று சொல்வார்கள். ஆனால், இப்ப இலங்கையின் வடக்கு கிழக்குப் பகுதிகளில் இருக்கும் தமிழர்கள்தான் மிகப் பின்தங்கியிருக்கிறார்கள்.

அதிலயும் இரண்டு தலைமுறை ஆட்கள் இதில நன்றாகப் பின்தங்கியிருக்கிறார்கள். அந்த அணியில் நானும் ஒருவனாக மாட்டுப்பட்டிருக்கிறன்

வேறு வகையான பாதிப்புகளை ஈடுசெய்யலாம். பொருளாதாரப் பாதிப்புகளை கடினமான உழைப்பாலும் நல்ல திட்டங்களாலும் முன்னேற்றலாம். ஆனால், இளமையில் கல்வியை இழந்தால் அதை ஒருபோதுமே ஈடுசெய்ய முடியாது.

இந்தக் கவலை என்னுடைய வாழ்க்கையில் என்றைக்கும் மாறாது. என்னைப் போல எத்தனையோ ஆயிரக்கணக்கான இளைஞர்களும் இளம்பெண்களும் இந்தக் கவலையில் உள்ளனர்.

இது எங்களுக்கு மட்டும் பாதிப்பைத் தந்தாற் பரவாயில்லை. எதிர்காலத்தில் எங்களுடைய பிள்ளைகளையும் இளைய சகோதரர்களையும் நாங்கள் வழிப்படுத்தக் கஸ்ரமாக இருக்கும்.

உங்களுடைய நிலைமை விளங்குகிறது. இது உங்களைப் போல இருக்கிற பலருடைய நிலைமையாக இருக்கும் என எண்ணுகிறேன். இந்த நிலைமைய எப்படி மாற்றலாம்? அல்லது இந்த நிலைமைக்கு என்ன செய்யலாம் என்ற நீங்கள் கருதுகிறீர்கள்?

எங்களுடைய நிலைமை உண்மையிலேயே மோசமானது. நாங்கள் படிப்பை இடையில் விட்டதோ விடவேண்டி வந்ததோ என்பது சாதாரணமானதல்ல.

இன்றைக்கு, உலகத்தில் பல இடங்களிலும் எங்களுடைய ஆட்கள் இருக்கினம். யாழ்ப்பாணத்தில், கொழும்பில், வெளிநாடுகளில் என எல்லா இடத்திலும் இருக்கிற எங்களுடைய வயதில் இருக்கிற பெடியள் அல்லது இளைய தலைமுறையினர் எவ்வளவு வசதிகளோடயும் வாய்ப்புகளோடயும் இருக்கிறார்கள். அந்த வசதிகளையும் வாய்ப்புகளையும் எடுத்துக் கொண்டே படிக்கிறார்கள்.

அவர்கள் வளமான கல்வியைப் பெறக்கூடியதாக இருக்கு. தங்களுடைய கல்வியைத் தொடருவதற்கு அவர்களுக்கு எந்த இடைஞ்சலும் இல்லை. கணிணி, இணையம், ஆய்வு கூட வசதிகள், பிற ஏற்பாடுகள் என படிக்கிற இடத்திலும் வீட்டிலும் வெளியிலும் என்று எல்லா வாய்ப்பும் அவர்களுக்கு இருக்கு.

ஆனால், எங்களுக்கு இதில் இருபத்தைந்தில் ஒரு பங்கு கூட இல்லை. ஏன் நூறில் ஒரு பங்கு கூட இல்லை.

ஆனால் இன்றைக்கு இருக்கிற உலக ஓட்டத்தின் போட்டிக்கு ஈடுகொடுக்கக் கூடியமாதிரி நாங்களும் தயாராக இருக்கவேண்டும். ஆனால், அதற்கு எங்களுக்கு ஏலாது. ஏனென்றால், நாங்கள் அடிப்படைக் கல்விக்கே வழியற்றுப் போயிருக்கிறோம். பிற துறைகளில் வளர்வதற்கும் வாய்ப்புகள் இல்லை. இன்னும் எங்களுக்கு வீடுகள் கட்டப்படவில்லை. சில ஆட்களுக்கு மட்டுந்தான் வீட்டுத்திட்டம் கிடைச்சிருக்கு. மின்சாரம் வரயில்லை. யுத்தம் முடிந்த பிறகும் நிலைமையில் பெரிய முன்னேற்றங்கள் இல்லை. ஆனால், சாவு மட்டும் இல்லை.

இதேவேளை, வெளிநாடுகளில் இருந்து வருவோரைப் பார்த்தால், அவர்களை நாங்கள் தொடவே முடியாத தொலைவில் இருக்கிறார்கள். தமிழர்கள் இப்படி இருப்பதில், எங்களுக்கும் பெருமைதான். ஆனால், அவர்கள் இங்கே வரும்போது எங்களால் அவர்களோடு சமநிலையில் நின்று பேச முடியவில்லை. அதிலும் எங்களுடைய வயதுக்காரர் கதைக்கிறதும் அவர்கள் கேட்கிற கேள்விகளும் எங்களைத் திகைப்படைய வைக்கிறது.

அவர்களுக்குப் பல விசயங்களைப் பற்றித் தெரியும். அவர்கள் ஆங்கிலத்தில் படிக்கிறார்கள். சிலருக்கு பிரெஞ், டொச் போன்ற மொழிகளும் தெரியும். கணிணி போன்ற விசயங்கள் எல்லாம் மிகச் சிறிய வயதிலேயே அங்கே அவர்களுக்குக் கிடைக்கிறது. கமெரா, புதிய வகையான தொலைபேசிகள், வேற வேற புதிய சாதனங்களை எல்லாம் அவர்கள் மிகச் சாதாரணமாகவே கையாள்கிறார்கள். நாங்கள் அவற்றைப் பார்க்கவே முடியாதவர்களாக இருக்கிறோம்.

அதனால், அவர்கள் பலதைப் பற்றியும் பேசுகிறார்கள். ஏதோ எல்லாம் செய்து காட்டுகிறார்கள். அவர்களோடு எங்களால் ஈடுகொடுக்கவே முடியவில்லை.

எங்களுக்கு என்ன தெரியும். அவர்கள் படித்திருக்கிறார்கள். நல்ல வசதியான சூழலில் வாழ்கிறார்கள். நாங்கள்

இயக்கத்தில் ஆரம்பத்திலேயே இருந்திருந்தால், அதில நாங்களும் ஏதாவது சாதித்திருந்தால், இயக்கம் வெற்றி பெற்றிருந்தால், நாங்களும் எதையாவது செய்து காட்டியிருப்பம். எங்களுக்கும் ஒரு மதிப்பு இருந்திருக்கும். ஒரு செல்வாக்கு இருந்திருக்கும். இப்ப எங்களுக்கு ஒன்றுமே இல்லை. ஒன்றுமே தெரியாது. இயக்கமும் இல்லாமற் போயிட்டுது.

எங்களைப் போல இருக்கிற ஆட்களில் மிக வறிய குடும்பங்களைச் சேர்ந்தவர்களின் நிலைமை படு மோசம். சிறிய வயதில் கலியாணம் செய்தவர்களும் நல்லாய் கஸ்ரப்படுகிறார்கள்.

எதிர்காலத்தில் நன்றாகப் படித்தவர்கள் இங்கே வருவார்கள். அவர்கள் வசதியாகவும் அறிவிற் கூடியவர்களாகவும் இருப்பார்கள். ஆனால் அப்போது நாங்கள் அவர்களைப் பார்த்து ஆச்சரியப்பட்டுக் கொண்டிருப்போம். அல்லது அவர்களுக்கு ஏதாவது சிறிய உதவிகளைச் செய்வோம். சிலவேளைகளில் அவர்களுக்கு நாங்கள் வேலைகாரராகவும் இருக்க வேண்டி வரலாம்.

இப்போது உலகத்தின் மாற்றங்களும் வளர்ச்சியும் அதிகம். நாங்களும் அதுக்கு ஈடு குடுக்கோணும். இல்லையென்றால் எங்களைத் தூக்கிக் கடாசி விட்டிடுவார்கள். ஆனால், அதுக்கு நாங்கள் எப்பிடி ஈடுகுடுக்கிறது?

அப்படியெண்டால், எங்களுக்கு ஒரு நல்ல கல்வி வாய்ப்பைத் தரவேணும். அதுக்கு ஒரு விசேட ஏற்பாட்டையும் தரவேணும். உதவிகள் கிடைக்க வேணும். ஆகக் குறைந்தது தொழிற்கல்வியையாவது படிக்க வாய்ப்பிருக்க வேணும்.

இப்ப நிறைய புதிய கல்வி வாய்ப்பிருக்கு. ஆனால், நாங்கள் வீட்டுக்கும் உழைக்க வேண்டியவர்களாக இருக்கிறோம். போரினால் எங்களுடைய எல்லா வளங்களும் உடமைகளும் அழிந்து போனதால் எல்லாவற்றையும் நாங்கள் உழைத்துத்தானே சேர்க்க வேண்டியிருக்கு.

அதாவது நீங்கள் சொல்லவருவது, போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கானமுழுமையான உதவித்திட்டம்?

ஆம்.

இல்லையென்றால் இதை மாற்றிறது என்றால் நிறையக் கஸ்ரம் என்றுதான் நினைக்கிறேன். இதை எப்படி மாற்றுவது?

ஆனால், சில உதவிகளைச் செய்யலாம். இப்ப நான்கூட ஏ.ல் (க. பொ. த. சாதாரண தரம்) ஐப் படித்து, சோதனை எழுதலாமா என்று யோசிக்கிறேன். என்னைத் தொடர்ந்து படிக்கச்சொல்லி வெளியில் இருக்கின்ற அண்ணாக்கள் சொல்லிக் கொண்டேயிருக்கிறார்கள். எனக்கு என்ன செய்வதென்றே தெரியேல்ல. இப்ப, இந்த வயதில் ரியூசனுக்குப் போக முடியுமா?

அங்கே வயது குறைந்தவர்கள் வருவார்கள். வயது வேறுபாடுகள் பொருத்தமாக இருக்காது. அது மட்டுமில்லை. இவ்வளவு காலமும் வேற சூழலில் இருந்துவிட்டுப் படிக்கிறது என்றால் நிறையக் கஸ்ரப்படவேணும்.

ஆகவே அது சரிவராது. தனியாக வகுப்பு ஏற்பாடு செய்து படிக்கலாம். ஆனால், நாங்கள் இருப்பது கிராமத்தில். ஏ.எல் படிப்பிக்கிறதுக்காக நல்ல ஆசிரியர்கள் கிராமத்துக்கு வரவே மாட்டார்கள். நாங்கள்தான் தேடிப் போகவேணும். அதற்கும் சரியாக எல்லாம் அமையாது. படிக்கிறது என்றால் அதற்கான சில அடிப்படைகள் வேணும். இதையெல்லாம் நினைத்தால் வாழ்க்கையே வெறுக்கும்.

நாங்கள் போர் முடிந்த பிறகு கொஞ்சம் ஆறுதலாக இருக்கும். நிம்மதியாக இருக்கும் என்றெல்லாம் யோசித்தோம். ஆனால், அதுக்குப் பிறகுதான் ஏராளம் பிரச்சினைகள் ஒண்டுக்குப் பின்னாக ஒண்டாக வருகிறது. சிலவேளை எல்லாம் சேர்ந்தும் வருகிறது.

என்னமாதிரியான பிரச்சினைகள் வருகின்றன?

முந்தி நாங்கள் ஒரு வட்டத்துக்குள்ள இருந்தோம். அநேகமாக எல்லோருக்கும் ஒரே மாதிரியான நிலைமைதான். வளங்களும் குறைவு. ஆனாலும் எல்லாரும் அதுக்குள்ளே இருந்ததால் அதிக பிரச்சினைகள் இல்லை. இப்ப அப்பிடியில்லை.

இப்ப பாதைகள் எல்லாம் திறந்திருக்கு. பொருட்கள் தாராளமாக வருகிறது. காசுள்ள ஆட்களும் வெளிநாட்டுப் பொருளாதார வசதியுடைய ஆட்களும் தாராளமாகச் செலவளிக்கிறார்கள். இதனால், காசில்லாத குடும்பங்கள் நல்லாய் கஸ்ரப்படுகிறார்கள். அதிலும் போரில் அடிமட்டத்தில் இருந்த குடும்பங்களின் நிலைமை மிக மோசம்.

இந்த நிலைமையில் சமனில்லாத வாழ்க்கை ஒன்று உருவாகியிருக்கு. இந்தச் சமனில்லாத வாழ்க்கை கனக்கக் குழப்பங்களைக் கொண்டு வரும். போராடினவர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் தங்களைத் தியாகம் செய்து பிறகும் இப்படிக் கஸ்ரப்பட்டு வாழுறது என்பதை நினைத்து அவர்கள் மிகவும் கவலைப்படுவார்கள். சிலபேர் கோபப்படுவார்கள். இதெல்லாம் எதிர்மறையான விளைவுகளையே தரும் என்று நினைக்கிறேன். இது ஒரு வகையான உளவியற் பிரச்சினைதானே.

இதற்கு என்ன தீர்வு பொருத்தமானது?

இதற்கான பதிலை என்னால் உடனடியாகச் சொல்ல முடியாது. ஆனால், ஏற்றத்தாழ்வுகளும் சமனிலைக் குறைவும் நிச்சயமாகப் பிரச்சினையைத் தரும். அதைவிட இந்த மண்ணில் வாழ்ந்த மக்கள் போரினால் கஸ்ரப்பட்டவர்கள். இயக்கத்தோட நிண்டு போராடினவர்கள். போராட்டத்துக்காகவே எல்லாத்தையும் இழந்தவர்கள். தங்களுடைய வாழ்க்கையையே போராட்டத்துக்காக இழந்தவர்கள்.

இப்படியெல்லாம் செய்த பிறகும் அவர்கள் கஸ்ரப்படுகிறது என்றால்...

என்னைப் பொறுத்தவரை முதலில் இந்தச் சமனிலைக் குறைவை மாற்ற வேணும். இல்லையென்றால், இப்ப இருக்கிற புதிய சூழலில் அரசியல் ரீதியாக மற்றத் தரப்பு - அரசாங்கத் தரப்பு இந்த மக்களைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்த விளையலாம்.

நீங்கள் சொல்வதை மறுத்தும் பேசலாம். ஆனால் தமிழ் மக்கள் அரசாங்கத்துக்கு எதிராகத்தானே தங்களுடைய அரசியல் நிலைப்பாட்டைக் காட்டுகிறார்கள்?

இப்ப அப்படி இருக்கலாம். ஆனால் எதிர்காலத்தில் நான் சொன்ன வகையில் ஒரு உளவியல் நெருக்கடி ஏற்படலாம். அதுக்கு மேல எனக்குத் தெரியாது. ஆனால், நிச்சயமாக இந்த நிலைமையைச் சீர் செய்யவில்லை என்றால், நிச்சயமாக கன பிரச்சினைகளுக்குள்ளே நாங்கள் சிக்குப்படுவம்.

எதிர்காலத்தில் நீங்கள் என்ன செய்வதாகத் திட்டம்?

இதுக்கு என்ன பதிலைச் சொல்லுவது? நாங்கள் எதையும் செய்ய முடியாத ஒரு நிலையில் தள்ளப்பட்டுள்ளோம் என்பதைத்தானே இதுவரையும் சொல்லியிருக்கிறேன்.

http://www.ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=3&contentid=6d344f39-ed3e-43a8-af01-bfc1a80562e0

நாங்கள் அஞ்சலி, ஆறேலி பிணக்குகளை தீர்ப்பதில் பிசி. மற்றவை இங்கை இருந்து அங்கை ஆக்களை கூப்பிட்டு மகாநாடு வைக்கிறது. பிறகு அங்கை இருந்து இங்கை கூப்பிட்டு மகாநாடு வைக்கிறது எண்டு பிசி. எல்லாம் உங்கடை பிரச்னைகளைபற்றி தானம் இந்த மகாநாடுகள். முந்தி கொஞ்ச நாள் தேர்தல் வைக்கிறது பாஷனாக இருந்தது தம்பி. இவை போக மிச்சம் பேர் உங்கை வந்து ஷோகாட்ட்டினம் .

என்ன செய்ய தம்பி. மற்றவன் உளைத்து, வளர்த்த நாட்டில் சொகுசாக வளர தன்னை பழக்கிகொண்டவன் தமிழன். தலைவருக்கு முதல் ஒருவரும் தமிழனால் எப்படி நாடு நடத்தமுடியும் எண்டு நவீன உலகுக்கு செய்து காட்டமுடியவில்லை.நானும் உன்னை போல இளையவனாக எங்கடைநாடுக்காக செய்கிரம் எண்டு தலை நிமித்திக்கொண்டு திரிந்த காலம் எண்டு ஒண்டு இருந்தது. ஆனால் இப்பொது நம்ம தமிழர் பாடு தலைகீழ்.

எவ்வளவு காலத்துக்கு எவை ஆடுவினும் எண்டு பாப்பம். எல்லாரும் ஆடி ஒடுங்கிற காலம் வரும். அதுவரை மனம் தளராதே.

  • கருத்துக்கள உறவுகள்

ஏம் மக்களின் வாழ்க்கை சமநிலை பேணப்பட வேண்டும்.அல்லது அவர் சொன்ன நிலமை உருவாகாலாம்(உருவாகும்)ஆனால் என்ன செய்வது நாங்கள் பிலிம் காட்ட மட்டும் பழகிய கூட்டம்.

  • தொடங்கியவர்

அடிப்படையில் இந்த நேர்காணலில், தாயக மக்களுக்கு அதிகம் தேவைப்படுவது 'நம்பிக்கை' என தெரிகின்றது. அந்த நமபிக்கையை ஊட்ட வேண்டியவர்களில் புலம்பெயர் சமுதாயமும் ஒன்று.

இந்த நேர்காணலில் 'வயது போய்விட்டது, மேற்கொண்டு எவ்வாறு கல்வி கற்பது?' என்ற ஆதங்கம் முன்வைக்கப்பட்டுள்ளது. தாயகத்தில் இருந்து புலம்பெயர்ந்த பலரும் நாற்பது ஐம்பது வயதுகளிலும் புதியனவற்றை கற்கிறார்கள். எனவே கற்பதற்கு வயது இல்லை.

Edited by akootha

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.