Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூடங்குளம் போராட்டத்திற்கு பணம் எங்கிருந்து வருகிறதென்று கேட்க காங்கிரஸுக்கு யோக்கியமில்லை: சீமான்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கூடங்குளம் போராட்டத்திற்கு பணம் எங்கிருந்து வருகிறதென்று கேட்க காங்கிரஸுக்கு யோக்கியமில்லை: சீமான்

13-seeman6300.jpg

சென்னை: கூடங்குளம் போராட்டத்திற்கு பணம் எங்கிருந்து வருகிறது என்று கேட்க காங்கிரஸுக்கு யோக்கியம் இல்லை என்று நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது,

கூடங்குளம் அணுமின் நிலையம் தங்களின் வாழ்விடத்திற்கும், வாழ்வாதரங்களுக்கும் கேடானது என்று கூறி, அதனை மூடிட வேண்டும் என்ற கோரிக்கையுடன் அப்பகுதி வாழ் மக்கள் தொடர்ந்து போராட்டம் நடந்துவரும் நிலையில், அந்தப் போராட்டத்திற்கு எங்கிருந்து பணம் வருகிறது என்று விசாரணை நடத்தப்படும் என்று பிரதமர் அலுவகலத்தி்ற்கான மத்திய இணை அமைச்சர் வி.நாராணயனசாமி கூறியிருப்பது போராட்டத்தில் ஈடுபடும் மக்களை அவமதிக்கும், மிரட்டும் செயலாகும். அமைச்சர் நாராயணசாமியின் கூற்றை நாம் தமிழர் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

கூடங்குளம் மக்களின் அச்சத்தைப் போக்க உதவுவோம் என்று கூறி, பிரதமர் அமைத்த நிபுணர் குழு, மக்கள் போராட்டக் குழுவினருடன் ஒரே ஒரு முறை மட்டும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ள நிலையில், போராட்டக் குழுவினரை மிரட்டும் முயற்சியில் மத்திய அரசு இறங்கியுள்ளது ஏன்?

மத்திய அரசின் நிபுணர் குழுவிடம், கூடங்குளம் அணுமின் நிலையம் தொடர்பான பாதுகாப்பு விவரங்கள் அனைத்தையும் அறிந்து மக்களுக்கு எடுத்துக் கூற, 60 வினாக்களை போராட்டக் குழுவினர் எழுப்பியுள்ளனர். இதற்கான பதிலை இந்திய அணு சக்தி ஆணையத்திடமிருந்து பெற்றுத் தருவோம் என்று மத்திய அரசின் நிபுணர் குழுவும் உறுதியளித்திருக்கிறது.

இந்த நிலையில் நேற்று நெல்லைக்கு வந்த அமைச்சர் நாராயணசாமி, போராட்டக் குழுவினர் கேட்ட முக்கியமான 6 கேள்விகளுக்கு மட்டுமே பதில் கூறுவோம் என்று கூறியுள்ளார். இப்படிக் கூற இவர் யார்? மத்திய அரசு அமைத்துள்ள நிபுணர் குழுவின் தலைவரா? கேட்ட கேள்விகள் 60க்கும் பதில் கூற மத்திய அரசு அல்லது இந்திய அணு சக்தி ஆணையம் தயாராக இல்லை என்று கருதலாமா? இதுதான் மக்களின் அச்சத்தை போக்கும் நடவடிக்கையா? அல்லது போராட்டக் குழு கேட்ட கேள்விகளுக்கு மத்திய அரசிடம் பதில் இல்லையா? எதற்காக இந்த மிரட்டல் பேச்சு?

திருச்செந்தூரிலும், நெல்லையிலும் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நாராயணசாமி, கூடங்குளம் போராட்டத்திற்கு எங்கிருந்து பணம் வருகிறது என்று விசாரணை நடத்துவோம் என்று கூறியுள்ளார். கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டத்திற்கு பணம் அளித்தது மக்கள்தான் என்று நிரூபணமானால் கூடங்குளம் அணு உலைகளை இழுத்து மூடிவிடத் தயாரா? என்று அமைச்சர் நாராயணசாமியை கேட்கிறோம்.

பணம் எங்கிருந்து வந்தது என்று கேள்வி கேட்கும் யோக்கியதை காங்கிரஸ் அரசுக்கு உள்ளதா? கூடங்குளம் போராட்டத்திற்கு பணம் எங்கிருந்து வருகிறது என்பது இருக்கட்டும், 2ஜி, காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள், ஆதர்ஷ் அடுக்குமாடி குடியிருப்பு ஊழல் ஆகியவற்றில் அடித்த ரூபாய் இரண்டு லட்சம் கோடி ஊழல் பணம் எங்கே போனது என்பதை மத்திய அரசு கண்டுபிடிக்கட்டும். அதற்கான விசாரணை நடத்தட்டும். ஊழலை ஒழிக்க அண்ணா ஹசாரே தொடர்ச்சியாக போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறாரே, அவருக்கு எங்கிருந்து பணம் வந்தது என்று ஏன் விசாரணை நடத்தவில்லையே ஏன்.

இந்த நாட்டில் இருந்து பல நூறு லட்சம் கோடி அயல் நாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டு ரகசிய கணக்குகளில் போடப்பட்டுள்ளது என்று பன்னாட்டு அளவில் நாட்டின் மானம் கப்பலேறிக்கொண்டிருக்கிறது. அதற்கு முதலில் காங்கிரஸ் அரசு விடைகாணட்டும். அயல் நாட்டு வங்கிகளில் குவித்து வைக்கப்பட்டுள்ள கணக்குகளின் விவரங்களை வெளியில் சொல்லட்டும். இந்திய உயர் நீதிமன்றமே கணக்கு விவரங்களை வெளியிடு என்று கேட்ட பின்னரும், அதனை வெளியிடாமல் மெளனம் சாதிக்கிறதே மத்திய அரசு, அதற்கு என்ன பதில்? இதற்கு முதலில் நாராயணசாமி பதில் கூறட்டும்.

அணு உலைகளுக்கு எதிராக போராடுபவர்களுக்கு எங்கிருந்து பணம் வருகிறது என்பதை விசாரிப்போம் என்று கூறும் நாராயணசாமி, அணு உலைகளுக்கு ஆதரவாக பேசுவோர், போராட்டம் நடத்துவோருக்கு எங்கிருந்து பணம் வருகிறது. அணு உலை எதிர்ப்புப் போராட்டத்தை கொச்சைப்படுத்திப் பேசும் உங்களுக்கு எந்த அணு உலை தயாரிப்பு நிறுவனம் பணம் தருகிறது? அதற்கெல்லாம் விசாரணை நடத்த தயாராக இருக்கிறாரா நாராயணசாமி?

கூடங்குளம் அணு உலைகளை எதிர்த்து போராடிவரும் மக்களை நேரில் சந்தித்துப் பேச திராணியற்ற மத்திய அமைச்சர், போராடும் மக்கள் மீதும், போராட்டக் குழுவினர் மீதும் அவதூறு பேசுவது, அவர்கள் எழுப்பிய வினாக்களுக்கு பதில் அளித்தால் அணு உலையின் ஆபத்து வெட்ட வெளிச்சமாகிவிடும் என்ற அச்சத்தினால்தான் என்பது புரிகிறது என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

http://tamil.oneindia.in/news/2011/11/13/seeman-slams-congress-over-koodankulam-issue-aid0128.html

டிஸ்கி:

போராட்ட களம் சூடுபறக்கிறத பாத்தா வெளிநாட்டில் இருந்து புலிபினாமிகள்தான் காசு அனுப்புகிறார்கள் ..என காங்கிரஸ்காரான் சொல்வதற்கு இன்னும் ரொம்பதூரம் இல்லீங்கோ..உசாராக இருங்கப்பா.. :( :(

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

2008060754470901%255B1%255D.jpg

அணு சக்தி உற்பத்தி தொழில் நுட்பம்: (Sensitive Nuclear Technology - SNT)

அணு சக்தி தொழில் நுட்பத்தில் மூன்று தொழில் நுட்பங்கள் மிக முக்கியமானதாக சொல்லப்படுகின்றன(SNT).

அவை முறையே #14,

#1) யுரேனியம் செறிவூட்டுதல் - Uranium Enrichment,

#2) மறு பயன்பாட்டுக்கான தயாரிப்பு - Nuclear Fuel Reprocessing,

#3) கன நீர் தாயாரிப்பு - Heavy water manufacturing.

இந்த மூன்று தொழில் நுட்பங்களை தெரிந்த கொண்டுள்ள நாடு அணுவிலிருந்து சக்தி எடுப்பதைப் பொறுத்தவரை சுயச் சார்பான நாடாகும் தகுதி படைத்தது. இந்த மூன்று தொழில் நுட்பம் தெரிந்த நாடு சொந்தமாக அணு குண்டுகளையும் தயாரிக்கலாம். எனவேதான் இந்த தொழில் நுட்பங்கள் பிற நாடுகளுக்கு பரவுவது ஏகாதிபத்தியங்களுக்கு பிடிப்பதில்லை. இப்பொழுது இந்த மூன்று தொழில் நுட்பங்கள் குறித்து சுருக்கமாக பார்க்கலாம்.

யுரேனியம் செறிவூட்டுதல் எனப்படுவது இயற்கையில் U238 என்ற அணு எடை கொண்ட ஐசோடோப்புகள் அதிகம் இருக்குமாறு கிடைக்கும் கச்சா யுரேனியத்தை U235 என்ற அணு எடை கொண்ட யுரெனியம் ஐசோடோப்பு அதிகம் கொண்டதாக மாற்றுவதே யுரேனியம் செறிவூட்டுதல் எனப்படுகிறது. இதுதான் எரிப்பதற்க்கு ஏற்ற அணு எரிபொருள் வடிவம் ஆகும் #15.

மறு பயன்பாட்டுக்கான தாயாரிப்பு (N Fuel Reprocessing) எனப்படுவது ஒரு முறை பயன்படுத்தப்பட்ட செறிவூட்டப்பட்ட யுரேனியம் எரி பொருள் கலவையிலிருந்து புளூட்டோனியம், கச்சா யுரேனியம்(U238) போன்றவற்றை பிரித்தெடுப்பது ஆகும். இதனுடன் யுரெனியம் செறிவூட்டுதலில் கிடைக்கும் தரம் குறைந்த யுரேனிய எரிபொருளை(Depleted Uranium) கலந்து, இது மீண்டும் இன்னொரு முறை எரிபொருளாக பயன்படுத்தப்படுகிறது. இது குறை செறிவு யுரேனிய எரிபொருளுக்கு இணையான சக்தியை கொடுக்கும் தன்மை கொண்டது. உலகிலுள்ள பெரும்பாலான அணு சக்தி உலைகள் குறை செறிவு யுரேனியத்தில் இயங்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டவையே (குறிப்பாக ரஸ்ய வகைகள்). இந்த மறுபயன்பாட்டு எரிபொருள் கலவையை ஆக்சைடு எரிபொருள் கலவை என்கிறார்கள்(Mixed Oxide Fuel) #16, #17. இந்த தொழில் நுட்பத்தின் மூலமும் அணு ஆயுதம் தயாரிக்கலாம்.

கன நீர் தாயாரிப்பு குறித்து. சாதாரண நீர் என்பது H2O. கன நீர் என்பது D2O. இதில் D என்பது ஹைட்ரஜன் ஐசோடோப்பு. அணு உலையில் எரிக்கப்படும் அணுவிலிருந்து கிடைக்கும் வெப்பத்தால் கனநீர் ஆவியாக்கப்பட்டு அந்த அழுத்தமான ஆவி டர்பைனில் மோதவிடப்பட்டு அது ஒரு ஜெனெரேட்டரை இயக்கி மின்சாரம் தாயார் செய்யப்படுகிறது. கன நீர் தயாரிப்பு தொழில் நுட்பத்தின் மூலம் யுரெனியம் செறிவூட்டுதல் தொழில் நுட்பம் இன்றியே (புளுட்டோனியம்)அணு ஆயுதம் தயாரிக்க முடியும். #18.

மேற்சொன்ன மூன்றில் ஏதேனும் ஒரு தொழில் நுட்பம் இருந்தாலே அதன் மூலம் அணு ஆயுதத்திற்க்கு தேவையான புளூட்டோனியமோ அல்லது செறிவூட்டப்பட்ட யுரேனியமோ எரிபொருளாக தயாரிக்க முடியும் என்பதால் இவற்றை மிக முக்கிய தொழில் நுட்பங்களாக வகைப்படுத்தியுள்ளனர் ஏகாதிபத்தியங்கள்.

இந்த மூன்று தொழில் நுட்பங்களுமே இந்தியாவில் பயன்பாட்டில் உள்ளன. நாம் யாரிடமும் யுரேனியம் சம்பந்தப்பட்ட இந்த தொழில் நுட்பங்களுக்காக கையேந்தி நிற்க வேண்டிய அவசியமில்லை என்பதுதான் உண்மை.

ஒரு உண்மை கடந்த 30 வருடங்களாக புதிய அணு உலைகளை மேற்கு நாடுகள் நிறுவாததால் அந்த அரதப் பழசான விற்காத தொழில்நுட்பங்களை, உலைகளை 3 லட்சம் கோடிக்கு நம் தலையில் கட்டுகிறார்கள் அமெரிக்க யுரெனிய உலை முதலாளிகள். இன்னொரு உண்மை இந்த தொழில் நுட்பங்களும் நம்மிடம் ஏற்கனவே இருக்கின்றன. இன்னொரு உண்மை இதே போல இந்தியா விஞ்ஞான வளர்ச்சியடைந்து சுயசார்பு அடைவது என்பதை, அமெரிக்கா எப்போதுமே திட்டமிட்டு முடக்கி வந்துள்ளது அல்லது இணைந்து வேலை செய்யலாம் என்று தொழில் நுட்பங்களை திருடி வந்துள்ளது. வெகு சுலபமான உதாரணங்கள் ராணுவ தளவாடங்கள், ராக்கெட், இலகு ரக விமான தயாரிப்புகளில் எப்பொழுதெல்லாம் இந்தியா அடுத்தக்கட்ட தொழில் நுட்ப வளர்ச்சியடைகிறதோ அப்பொழுது அந்த தொழில்நுட்பத்தை பயன்பாட்டுக்கு வரவிடாமல் தடுத்து தன்னிடம் உள்ள இணையான-பழைய தொழில் நுட்பத்தை தலையில் கட்டும். ஈராக்கிற்கு ஒரு ஸ்கட் என்றால் இஸ்ரேலுக்கு ஒரு பேட்ரியாட். பேட்ரியாட்தான் சக்தி வாய்ந்தது என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அமெரிக்காவுடனான நமது இதுவரையான வணிக உறவுகளில் நம்மை அவர்கள் ஏமாற்றியதுதான் வரலாறாக உள்ளது. தராப்பூர் அணு மின் நிலையம், பசுமைப் புரட்சி, கோதுமையில் பார்த்தீனியச் செடி, செயற்கைகோள் மூலம் பார்த்து வளங்கள் இல்லை என்று பொய் சொன்னது, முதல் சமீபத்திய ராணுவ தளவாட வியாபாரங்கள் வரை. அணு ஒப்பந்தத்தை எதிர்ப்பது பற்றிய நமது இந்த கருத்து ஒரு அம்சம் மட்டுமே. இதுவும்கூட மையமான நமது எதிர்ப்பிற்க்கு காரணம் அல்ல.

இது தவிர்த்து அணு சக்தி தாயாரிப்பில் தோரியத்தை எரிபொருளாக பயன்படுத்தும் தொழில் நுட்பம் வேறு உள்ளது #19. தோரியத்தை எரிபொருளாக பயன்படுத்தும் போது அது U233 என்ற யுரேனியம் ஐசோடோப்பாக மாறி பின்பு எரிகிறது. U233 என்பதும் U235யை போலவே அணு உடைப்பு பண்பு கொண்ட ஐசோடோப்பு ஆகும் (Fissile Isotope). எனவே யுரேனியத்தை பயன்படுத்தும் முன்பு அதனை U235 ஆக மாற்றுவது போல தோரியத்தை பயன்படுத்தும் போது செய்ய வேண்டியது இல்லை. அதாவது யுரேனியம் செறிவூட்டல் என்று தனியாக எதுவும் செய்யத் தேவையில்லை. மேலும் தோரியத்திலிருந்து உருவாகும் அணு கழிவு குறைவு.

இந்த தொழில்நுட்பத்திலும் இந்தியா சுயச்சார்பானதாகவே உள்ளது. தோரியத்தை அடிப்படை எரிபொருளாக பயன்படுத்தும் ஆராய்ச்சியில் மூன்று கட்டத் திட்டம் ஒன்றை இந்தியா கடைபிடித்தது.

முதலில் கன நீர் தயாரிப்பு தொழில்நுட்பத்தை கண்டுபிடிப்பதன் மூலமும், Reprocessing மூலமும் பூளூட்டோனியம் தயாரிப்பது, உயர் அழுத்த கன நீர் உலைகளை தொழில்நுட்பத்தில் சுயச்சார்படைவது.

இரண்டாவது கட்டமாக இந்த புளூட்டோனியத்தை, தோரியத்துடன் சேர்த்து யூரேனியம் U233ஆக மாற்றி அணு உலையில் எரிப்பது.

மூன்றாவதாக இந்த வகை அணு உலையிலிருந்து தோரியத்தை நேரடியாக U233 ஆக மாற்றி பிறகு அதனை எரிபொருளாக பயன்படுத்துவது #20.

இது தவிர்த்து இதே தோரியம் தொழில் நுட்பத்தில் இயங்கும் அணு உலைகளை இந்தியாவிற்க்கு விற்பதற்க்கும் அமெரிக்காவில் உள்ள சில கம்பேனிகள் தயாராக உள்ளன. ஆனால் அந்த கோரிக்கைகள் அமெரிக்க இந்திய அரசுகளால் ஊக்கப்படுத்தப்படவில்லை. அந்த தொழில் நுட்பம் கிடைத்தால் இந்தியா வெளிநாடுகளை நம்பியிராமல் தனது சொந்த தோரியம் இருப்பைக் கொண்டே அணு சக்தி தயாரிக்கலாம் (''Thorium to give India an edge'' எக்னாமிக் டைம்ஸ் - 4 Jan, 2007). ஆனால் அவ்வாறு நடந்தேறாமல் யுரேனியம் என்ற துருப்புச் சீட்டின் மூலம் மட்டுமே இந்த ஒப்பந்தம் நடந்தேற வேண்டும் என்பதில் அமெரிக்காவும், இந்திய அரசும் உறுதியாக நிற்கின்றன. ஏனேனில் இந்த ஒப்பந்தத்தின் நோக்கம் அணு சக்தி கிடையாது. இது பின்னர் விரவாக பார்க்கப்படும்.

உண்மையில் அமெரிக்க கம்பேனியின் தோரியம் தொழில் நுட்பமும் நமக்கு தேவையில்லை. நாமே இந்த துறையில் போதிய தொழில்நுட்ப வளர்ச்சி பெற்றுள்ளோம்.

செப்டம்பர் 1970லேயே டிராம்பேயில் உள்ள பாபா அணு சக்தி மையம் தோரியத்திலிருந்து U233 யுரேனியம் ஐசோடோப்பை வெற்றிகரமாக பிரித்தெடுத்தது #21.

1995-ல் காக்ரபுர்-ல் இரண்டு அணு உலைகளில் குறை செறிவு யுரேனியத்திற்கு பதிலாக உலகிலேயே முதல் முறையாக இந்தியாவில் தோரியம் வெற்றிகரமாக உபயோகிக்கப்பட்டது.

குறிப்பாக ஆகஸ்டு 2005ல் மும்பை பாபா அணு ஆய்வு மையம் தோரியத்தை புளூட்டோனியத்துடன் வினையூட்டி U233 எரிபொருள் உருவாக்கி அணு சக்தி தயாரிக்கும 600MW திறன் கொண்ட இரண்டாம் கட்ட அணு உலையை வடிவமைத்து அறிவித்தனர் #22. உலகிலேயே மிக பாதுகாப்பான அணு உலையாக இதனை பெருமையுடன் அறிவித்தனர். ஏனேனில் யுரேனியம் செறிவூட்டல் தேவையில்லை. இரண்டு வருடத்திற்க்கு எரிபொருள் தேவையின்றி, எந்த தலையீட்டுக்கான அவசியமுமின்று சுலபமாக சக்தியை உருவாக்கும் இந்த அணு உலை. அணு உடைப்பு சுமுகமாக நடந்தேறுவதால் அணு உலையில் எரிபொருளை தாங்கி நிற்கும் Core எனப்படும் பகுதியின் வாழ்நாள் இரண்டு வருடங்களாக அதிகரிக்கிறது. எனவே அணுக் கழிவுகளை கையாள்வதும் யுரேனியம் அணு உலைகள் போன்று அடிக்கடி இல்லாமல் இலகுவானதாக உள்ளது. இதிலிருந்து அணுக் கழிவுகளும் குறைவாக வருகிறது. வடிவமைப்பில் இருந்த இந்த அணு உலை 2008ல் கல்பாக்கத்தில் நிறுவப்பட்டு கடைசி கட்ட வேலைகள் நடந்து வருகின்றன. இது தோரியம் அணு உலையை நோக்கிய இரண்டாவது கட்டம்.

தோரியம் தொழில் நுட்பத்தின் கடைசி கட்டமாகிய மூன்றாவது கட்டம் வரை இந்தியா வெற்றி கண்டுள்ளது(AHWR). AHWR வகையில் 75% தோரியம் எரிபொருளாக இருக்கும். இது தவிர்த்து மூன்றாவது கட்டத்தில் முற்றிலும் தோரியத்தை மட்டுமே பயன்படுத்தும் ADS (Accelerator Driven Systems) உலைகளை கண்டுபிடிக்கும் முயற்சியிலும் சோதனை அளவில் வெற்றி பெற்றுள்ளது. கல்பாக்கத்தில் காமினி(KAMINI)-கல்பாக்கம் மினி என்ற பெயரில் 30KW உலை நிறுவப்பட்டு இயங்கி வருகிறது.300MWல் புதிய தோரிய அணு உலை நிறுவும் வேலைகள் நடந்து வருகின்றன #23.

இரண்டாவது கட்டத்தில் உள்ள ஒரு பிரச்சினை தோரியத்துடன் சேர்ந்து புளூட்டோனியத்தை பயன்படுத்த வேண்டியுள்ளது. புளூட்டோனியம் நமக்கு இரண்டு வகைகளில் கிடைக்கிறது. ஒன்று வெளிநாடுகளிடமிருந்து வாங்குவது. மற்றொன்று Reprocessing மூலமும், கன நீர் தயாரிப்பு தொழில்நுட்பத்தின் மூலமும் புளுட்டோனியம் தயாரிப்பது. இதில் முதல் வகையை நாம் நம்ப இயலாது. மேல்நிலை வல்லரசுகள் நமது சுயசார்பை ஒழித்துக்கட்ட வசதியாக புளூட்டோனியம் கிடைப்பதை தடுக்கவே செய்வார்கள். ஆனால் நம்மிடம் ஏற்கனவே உள்ள Reprocessing தொழில்நுட்பத்தின் மூலமும், கன நீர் தொழில் நுட்பத்தின் மூலமும் நமக்கு தேவையான புளூட்டோனியத்தை நாமே தயாரித்துக் கொள்ளலாம் (இதுவும் கூட மூன்றாவது கட்டமாகிய ADS முழுமையாக வியாபார பயன்பாட்டுக்கு வரும் வரைதான். அதற்க்கு பிறகு இந்த பிரச்சினைகளும் கிடையாது).

இதன் அர்த்தம் SNT எனப்படும் அணு தொழில்நுட்பங்களில் இந்த இரண்டு தொழில்நுட்பங்கள் இந்தியா தனது அணு விஞ்ஞானத்தை அடுத்தக்கட்டத்திற்க்கு சுதந்திரமாக வளர்த்தெடுப்பதற்க்கு இன்றியமையாததாக உள்ளது என்பதே ஆகும். தற்போதைய 123 ஒப்பந்தம் இந்த இரண்டு தொழில்நுட்பங்களையும் பயன்படுத்துவதற்க்கும், வளர்த்தெடுப்பதற்க்கும் ஆப்பு அடிப்பதாக இருப்பதாலேயே விஞ்ஞானிகள் இதனை எதிர்க்கிறார்கள் #24. இப்பொழுது இந்தியாவில் அணு தொழில் நுட்பம் வளர்ந்த பாதையையும், இந்தியாவின் மின்சாரத் தேவை குறித்தும், இந்தியாவில் உள்ள யுரேனியம், தோரியம் எரிபொருள்களின் எதிர்காலம் குறித்தும் பார்க்கலாம்.

இந்தியாவில் அணு தொழில் நுட்பத்தின் வளர்ச்சிப் பாதை, எரிசக்தி தேவை, எரிபொருள் இன்னபிற:

22 ஜனவரி 1965-ல் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி புளூட்டோனியம் ரிபுரோசசிங் ஆலையை டிராம்பேவில் திறந்து வைத்தார். அமெரிக்காவின் கருத்தில் அப்போதைய இந்தியா ஒரு வருடத்திற்க்கு 100 அணு குண்டுகள் தாயாரிக்க தேவையான புளூட்டோனியம் ரிபுரோசஸ் செய்யத் தேவையானவற்றை கொண்டிருந்தது.

செப்டம்பர் 1970லேயே டிராம்பேயில் உள்ள பாபா அணு சக்தி மையம் தோரியத்திலிருந்து U233 யுரேனியம் ஐசோடோப்பை வெற்றிகரமாக பிரித்தெடுத்தது #25.

22 May 1972-ல் பூர்ணிமா-I ஆய்வு உலை பாபா அணு சக்தி மையத்தில் நிர்மாணிக்கப்பட்டது. முற்றிலும் பாபா அணு சக்தி மையத்தின் இந்திய விஞ்ஞானிகளாலேயே தயாரிக்கப்பட்டு நிர்மாணிக்கப்பட்டது. 21 கிலோ புளூட்டோனியத்தில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது இந்த உலை #26.

இந்த காலகட்டத்தில் அணு ஆயுதம் குறித்த இந்தியாவின் கருத்து அமைதிக்காக அணு ஆயுதம் பரிசோதனை செய்வது என்ற நிலையை அடைந்தது. அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், மேற்கு ஜெர்மனி, ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளிடமிருந்து அணு உதவிகளை பெற்று வந்தது. ஆயினும் வெளிப்படையாகவே அணு வெடிப்பு சோதனைக்கு தயாராகி வருவதை அறிவித்தே வந்துள்ளது இந்தியா. பாராளுமன்றத்திலும் இவை குறித்து அடிக்கடி மயிர் பிளக்க விவாதிக்கப்பட்டது.

1974-ல் IAEAன் நிர்வாகக் குழுவில் இந்தியா உறுப்பினராக தொடர்ந்து 18வது வருடமாக சேர்த்துக் கொள்ளப்பட்டது. காரணம் அணு சக்தி தொழில் நுட்பம் உள்ள உலகின் 9 நாடுகளில் ஒன்றாக அன்று இந்தியா இருந்தது.

18 மே 1974-ல் இந்தியா பொக்ரானில் அணு குண்டு வெடிப்பு சோதனை செய்கிறது. அணு இணைப்பு(Fusion) தொழில் நுட்பத்திற்க்கான ஆய்வுகளையும் இந்திய விஞ்ஞானிகள் தொடங்கினர்.

இதற்க்கு பிறகும் கூட ஜூன் 1974ல் தராப்பூர் அணு மின் நிலையத்திற்க்கு யுரேனியம் அனுப்புகிறது அமெரிக்கா. இந்தியாவின் அணு குண்டு சோதனை எந்த ஒப்பந்தத்தையும்(1963 ஒப்பந்தம்) மீறிவிடவில்லை என்று அமெரிக்க கூறியது #27.

ஆனாலும் கூட செப்டம்பர் 1974ல் இந்திய அணு சக்தி கமிசனிடம் பேச்சுவார்த்தை நடத்தியது அமெரிக்கா. இது அடுத்தக்கட்ட யுரேனியம் அனுப்புவதற்க்கு புதிய உறுதிமொழிகளையும், பாதுகாப்பு உடன்படிக்கைகளையும் கோருவதாக இருந்தது.

25 ஆகஸ்டு 1975-லோ இன்னும் ஒரு படி மேலே போய் அமெரிக்க உளவு பிரிவினர் பின் வரும் அறிக்கை அளித்தனர் அதாவது, இஸ்ரேலுக்கு எதிராக எகிப்து அணு குண்டு தயாரிக்க இந்தியாவின் உதவியை வேண்டி இருப்பதாக அறிக்கை அளித்தனர்.

தீடிரென்று ஜனவரி 31 1976-ல் தாராப்பூர் அணு உலையில் கதிரியக்க கசிவு அபாயம் இருப்பதாக சொல்லும் GE(General Electricals என்ற ரத்தவெறி கம்பேனி)யின் குற்றச்சாட்டை அமெரிக்க செனட் கமிட்டி ஆய்வு செய்ய இருப்பதாக அமெரிக்க செனட்டர் ஜான் க்லன் கூறினார். அமெரிக்க அணு கட்டுப்பாட்டு வாரியத்தை சேர்ந்த டாக்டர் ஸ்டீவன் ஹனயுர் தராப்பூர் அணு உலை பெரிய அபாயாத்தை எதிர்நோக்கி இருப்பதாக கூறினார். இத்தனைக்கும் இந்த அணு உலையில் புதிய எரிபொருள் நிரப்புவதும் அதனை ஒட்டி பராமரிப்பு பணிகள் முழுவதும் சில வாரங்களுக்கு முன்புதான் செய்து முடிக்கப்பட்டிருந்தன. இந்த புதிய எரிபொருள் கூட அணு குண்டு வெடிப்பிற்கு பிறகு அமெரிக்கா இந்தியாவிற்கு அனுப்பியதுதான். விசயம் அணு வெடிப்பு அல்ல மாறாக எகிப்து உடனான இந்திய அணு வர்த்தக ஒப்பந்தம் செய்து கொண்டதே பிரச்சினை.

இதற்கிடையில் இந்தியாவின் உறுதிமொழியை ஒட்டி கனடா மீண்டும் உதவிகள் செய்ய ஒத்துக் கொண்டது(பிறகு உடனடியாக பின்வாங்கியும் விட்டது). ஒப்பந்தத்தை இந்தியா மீறிய போதும் கூட வலியுறுத்தி கேட்ட போது கனடா ஒத்துக் கொண்டது. ஆனால் போட்டுக் கொண்ட 1963 ஒப்பந்தத்திற்க்கு சம்பந்தமில்லாமல் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை தனக்கு விரோதமாக இருப்பதாலேயே இந்தியாவுக்கு குடைச்சல் கொடுத்தது அமெரிக்கா. ஏப்ரல் 1974-ல் NSG வழிகாட்டுதல்களுக்கு கட்டுப்படுவதாக எழுதிக் கொடுக்கச் சொல்லி இந்தியாவிற்க்கு புதிய நிபந்தனைகளை விதித்து மிரட்டுகிறது அமெரிக்கா. குறிப்பாக உயர் அணு தொழில்நுட்பங்களை இந்தியா ஏற்றுமதி செய்வதை கட்டுப்படுத்துவதுதான் அமெரிக்காவின் இந்த நெருக்குதலுக்கு காரணம். கடைசியில் 1963 ஒப்பந்தத்தை தூக்கி குப்பையில் போட்டு மூடியது அமெரிக்கா. காரணம் அணு குண்டு வெடிப்பு என்று அமெரிக்காவும் சொல்லவில்லை. உண்மையும் அதுவல்ல. தராப்பூர் ஆலை தனக்கான எரிபொருள் தேவைக்கு மாற்று வழிகளை வேண்டி நின்றது.

உலகில் வேறு எங்குமே இல்லாத புதிய தொழில் நுட்பத்தில் ரிபுரோசசிங் செய்யும் ஒரு ஆலையை 1974-ல் ஹைதராபாத்தில் நிறுவப்பட்டது. இதனிடையா இந்தியா ஈரான், எகிப்து, லிபியா போன்ற நாடுகளுக்கு அணு சக்தி தொழில்நுட்ப உதவிகளை செய்வதற்க்கான வேலைகளில் இறங்கியது.

அணு சக்தியின் நன்மை, தீமை:

அணு வெடிப்பின் மூலம் சக்தி இரு வழிகளில் வெளிப்படுகிறது. ஒன்று கைனடிக் சக்தி(சுழற்சி விசை என்ற மொழிபெயர்ப்பு சரியா?) இன்னொன்று கதிரியக்கமாக வெளிப்படுகிறது. இந்த கதிரியக்கம் தன்னைச் சுற்றியுள்ள பொருட்களின் அணுக்களையும் பாதித்து கதிரியக்க தன்மைவாய்ந்ததாக மாற்றி விடுகிறது. இப்படி உருவாகுபவை அணு உலைகளில் பயன்படுத்தும் கையுறை முதலான பொருட்களில் இருந்து அனைத்தும் அடங்கும். அணு உடைப்பிற்கு பிற்பாடு மிச்சமிருக்கும் கதிரியக்க பாதிப்புக்குள்ளாகும் வாய்ப்புள்ள இந்த அனைத்துவிதமான பொருட்களையும் அணுக் கழிவுகள் என்று குறிப்பிடுகிறார்கள். விலை குறைவாக, வீரியமான முறையில் சக்தி கிடைக்கிறது, கார்பன் மாசுபாடு மிகக் குறைவு என்பது அணுவின் நன்மை எனில், அதனால் உருவாகும் இந்த கழிவுகள் மிக அபாயகாரமானதாக இருக்கின்றன#7.

பொதுவாக அணு உலைகள் தவிர்த்து பிற தொழிற்சாலை உற்பத்திகளில் குறிப்பாக, எண்ணெய் உற்பத்தி நிலையங்களில் மிக அதிகளவில் கதிரியக்க கழிவுகள் உருவாகின்றன. இவை மனிதனுக்கு அபாயகராமானவைதான் என்றாலும் இவை குறை சக்தி கதிரியக்க கழிவுகள்(LLW/ILW). அதாவது பிற தொழிற்சாலை கழிவுகள் போன்றதே இது. இப்படி சொல்வதன் அர்த்தம் இந்த கழிவுகள் குறித்து நாம் குறைத்து மதிப்பிடுவது என்பது அல்ல. இன்று மனித குலத்தை அழிவின் விளிம்பில் நிறுத்தியுள்ள உலக வெப்பமடைதலுக்கு பின்னால் உள்ள அராஜக ஏகாதிபத்திய உற்பத்தி முறையை இந்த பிரச்சினைக்கும் காரணம். இவை நமது கடும் கண்டனத்திற்க்கும் எதிர்ப்பிற்கும் உள்ளாகும் விசயமாகவே உள்ளது. ஆயினும் ஒரு குற்றத்தை காரணம் காட்டி அதை விட பல மடங்கு பெரிய தவறை நியாயப்படுத்த முயலும் கயமைத்தனத்தை அம்பலப்படுத்தும் போது பெரிய தவறு உண்மையில் பெரிய தவறு என்பதையும் சேர்த்தே சொல்ல வேண்டியுள்ளது. ஏனேனில் HLW எனப்படும் அதி உயர் கதிரியக்க கழிவுகளில் அணு கழிவு மட்டும்தான் வருகிறது. இப்படி ஒரு வருடத்திற்க்கு உருவாகும் HLW கழிவுகள் 12,000 மெட்ரிக் டன். அதாவது நூறு இரண்டு அடுக்கு பேரூந்து நிறைய கழிவுகள் உருவாகின்றன.

அணு வெடிப்பின் மூலம் கதிரியக்க தன்மை வாய்ந்தவையாக வெளிவரும் அணுக்களின் கதிரியக்க வாழ்நாள் வேவ்வேறாக உள்ளது ஒரு எடுத்துக்காட்டுக்கு ஐயோடின் உப்பின் கதிரியக்கம் 8 நாட்களில் வடிந்துவிடுகிறது. ஆனால் யுரெனியம் வெடிப்பில் பயன்படுத்தப்படும் புளோட்டனியம்-239 கழிவு வாழ்நாள் பல நூறு-ஆயிரம் வருடங்கள் நீடித்திருக்கும் தன்மை வாய்ந்தது. இன்ன பிற கழிவுகளின் வாழ்நாள் பல நூறு மில்லியன் ஆண்டுகளுக்கும் மேல் நீடித்திருக்கும். இதுதான் அணுக் கழிவுகளை மிக அபாயகரமானதாக மாற்றுகிறது. ஆக, மனித சமுதாயத்தின் தொடர்பிலிருந்து, புவியின் உயிர் சூழலின் தொடர்பிலிருந்து இந்த அணுக் கழிவுகள் சுத்தமாக தனிமைப்படுத்தப்பட்டு பல நூறு-ஆயிரம்-மில்லியன் வருடங்கள் பாதுகாக்கப்பட வேண்டியிருக்கிறது. இப்படி பாதுகாப்பதற்க்கான தொழில் நுட்பம் எதுவும் இல்லை.

இது போன்ற கழிவுகளை ஒழித்துக்கட்டும் தொழில்நுட்பம் இன்றி அவற்றை மூட்டைக் கட்டி சேர்த்து வைக்கும் வேலையையே தற்போது செய்து வருகிறார்கள். அமெரிக்காவில் யுகா(Yucca) மலையை இப்படி அணு குப்பைக் கூடையாக மாற்ற முடிவு செய்துள்ளனர். இது கடும் எதிர்ப்புகளை கடந்து வந்து கொண்டிருக்கிறது. இப்படி சேமித்து வைக்கப்படுவதற்க்கும் இடங்கள் இன்றி தற்போது தவித்து வருகிறார்கள். இது அணுக் கழிவுகள் என்ற அபாயம் குறித்தானது.

இது ஒருபக்கம் என்றால் இந்த அணு உலைகளில் விபத்து ஏற்பட்டால் என்ன நடக்கும் என்பது மிக அபாயகரமானதாக இருக்கிறது.

அணு எந்தளவுக்கு சக்தி கொண்டது எனில் நிலக்கரி, டிஎண்டி போன்றவற்றிலிருந்து பெருவதைவிட குறைந்தது 10மில்லியன் மடங்கு அதிகமான உபயோகிக்ககூடிய சக்தி அணுவிலிருந்து கிடைக்கிறது #8. ஹிரோசிமாவில் போடப்பட்ட அணு குண்டில் இருந்த யூரேனியம்-235 அணுவின் அளவு 60கிலோ இதில் 828 கிராம்தான் வெடித்தது, இதிலும் 6கிராம்தான் சக்தியாக உருமாறியது #9. இதிலிருந்து வெளிப்பட்ட சக்தியின் அளவு 13கிலோடன் டிஎண்டி வெடித்ததற்க்கு இணையாக இருந்தது. இதுவே ஒரு முழு நகரத்தை உடனடியாக அழித்தது எனில் இதன் சக்தியை புரிந்து கொள்ளலாம். இந்த தோல்விகரமான குண்டு வெடித்ததில் உடனடியாக 1.6 கிலோமீட்டர் சுற்றளவு அழிந்து விட்டது. இதனால் ஏற்பட்ட தீ 11.2 சதுர கிலோமிட்டர் பரப்பளவிற்கு பரவியது. ஹிரோசிமாவின் 90% நகரம் முற்றிலும் அழிந்தது #10. நாகசாகியில் வெடித்த குண்டு உருவாக்கிய காளான் புகையோ 18 கிலோமீட்டர் உயரம் இருந்தது.

நாகசாகியில் இடப்பட்ட புளூட்டோனியம்-239 குண்டு 6.4 கிலோதான். இதிலிருந்து வந்த சக்தி 21 கிலோடன் டிஎண்டிக்கு இணையாக இருந்தது. உருவான வெப்பம் 3900 டிகிரி செல்சியஸ், காற்றின் வேகம் 1005கிமீ/மணி. உடனடி அழிவு 1.6 கிமீ சுற்றளவிலும், இதனால் ஏற்பட்ட தீ 3 கிமீ சுற்றளவுக்கு பரவியது. இந்த இரண்டு குண்டு வெடிப்பிலும் உடனடியாக இறந்தவர்கள் லட்சங்களில். கதிரியக்கத்தால் பாதிக்கப்பட்டு அடுத்த சில மாதங்களில் இதே அளவில் இறந்தார்கள். இது தவிர்த்து இதன் கதிரியக்க விளைவுகள் இன்று வரை கூட தொடர்கின்றன.

அணு விபத்துக்கள் என்றால் அவ்வப்போது சிறிய அளவில் இன்று வரை நடந்து கொண்டுதான் இருக்கின்றன. பெரும்பாலும் உண்மை நிலவரங்களை யாரும் வெளியிடுவதில்லை. அணு விபத்துக்களில் முக்கியமானவை எனில் ரஸ்யாவில் நிகழ்ந்த செர்னோபிள்ளும், அமெரிக்காவில் நிகழ்ந்த மூன்று மைல் தீவு விபத்தும் உள்ளன. இதில் செர்னோபிள் விபத்தில் 56 பேர் சொச்சம் இதுவரை இறந்துள்ளனர். கதிரியக்க பின் விளைவுகள் குறித்து முரன்பாடான தகவல்கள் உலாவுகின்றன. மூன்று மைல் தீவு விபத்தில் யாரையுமே கதிரியக்கம் பாதிக்கவில்லை என்று சொல்கிறார்கள். ஆயினும் இந்த உலை மூடப்பட்டது. குறிப்பாக செர்னோபிள் விபத்தில் கதிரியக்க சாம்பல்களும், தூசுகளும் 1000மைல்களுக்கு அப்பால் ஐரோப்பிய நாடுகளில் காற்றில் பரவி கதிரியக்க பாதிப்பை ஏற்படுத்தும் அளவு இருந்தது. செர்னோபிள்லிருந்து சில கிமீ தள்ளியிருந்த பிரிபியாட் நகரமே மொத்தமாக காலி செய்யப்பட்டது. வெறும் கட்டங்களுடன் பேய் நகரமாக அது நிற்கிறது. செர்னோபிளில் வெடித்த அணு உலையை மறைக்கும் வகையில் ஒரு பெரிய சுவர் ஒன்று கட்டப்பட்டது. பிறகு அந்த வெடித்த அணு உலையில் அபாயகரமான கழிவுகள் இருப்பதை முன்னிட்டு தற்போது 105மீ உயரம், 200 மீ நீளத்தில், 257மீ அகலத்தில் ஒரு பெரிய வளைவு உலோக மூடி ஒன்றை தயாரித்து 2011ல் இந்த அணு உலையை மூடப் போகிறார்கள். இந்த இரண்டு விபத்துக்களும் அணு உலை குறித்த சர்வதேச கண்ணோட்டத்தை மாற்றியமைப்பதில் பெரும் பங்கு ஆற்றின. குறிப்பாக மேற்கு நாடுகள் புதிதாக அணு உலைகள் திறப்பதையே இத்துடன் நிறுத்திக் கொண்டன. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அனைத்துமே தம்மிடம் ஏற்கனவே உள்ள அணு உலைகளின் வீரியத்தை அதிகப்படுத்தி தமது மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்து கொண்டனர் #11, #12.

அணுவின் நன்மை தீமைகள் குறித்து இங்கு பார்ப்பதன் முக்கியத்துவம் ஒன்று உள்ளது. விஞ்ஞானிகள் மனித குலத்தின் ஒட்டு மொத்த நன்மைக்காகவே அரிய பல கண்டுபிடிப்புகளை செய்கிறார்கள். ஆயினும் மனிதர்களிடையே இருக்கின்ற முரன்பாடுகளும், முதலாளித்துவ லாப வெறியும் அந்த கண்டுபிடிப்புகளை மனித குலத்திற்கே எதிராக பயன்படுத்தச் செய்து விடுகிறது. எய்ட்ஸை சோதனைச் சாலையில் உருவாக்கி தனது சொந்த நாட்டு மக்கள் மீதே பரிசோதித்த அமெரிக்க முதல் இன்று பரிசோதனைச் சாலை எலிகளாக அப்பாவி இந்தியா ஏழைகளை அரசு மருத்துவமனைகளில்(AIIMS Children killed in Medical trial) கொன்று குவிப்பது வரை இவர்களின் லாப வெறியும் போட்டி பொறாமையும் மனிதர்களை மதித்ததே இல்லை என்பதுதான் உண்மை. இங்கு கேள்வி நாம் ஒரு சமூகமாக அணு சக்தியை பயன்படுத்தும் பொறுப்பு உடையவர்களாக இருக்கிறோமா என்பதுதான்.

இந்த விபத்துக்கள் எல்லாமே மிக முன்னேறிய நாடுகளில் ஏற்பட்ட விபத்துக்கள். எடுத்துக்காட்டுக்கு செர்னோபிள் விபத்தில் வெளியேறிய மக்களுக்காக பல கோடிகளில் புதிய குடியிருப்புகளும், பள்ளிக் கூடங்களும், மருத்துவமனைகளும் இன்ன பிற நகர்ப்புற அத்தியாவசிய உள்கட்டுமானங்களும் புதிதாக கட்டியமைக்கப்பட்டன. உள்ளூரில் கிடைக்கும் மரத்தை எரித்தால் கதிரியக்கம் வரும் என்று நம்பியதால் இந்த இடங்களுக்கான எரிபொருள் தேவைக்காக 8,980 கிமீ நீளத்திற்க்கு புதிதாக எரிவாயு குழாய்கள் பதிக்கப்பட்டன. உள்ளிருந்தே சிதைக்கப்பட்டுக் கொண்டிருந்த சோசலிச கட்டுமானத்தைக் கொண்டு அன்றைய ரஸ்ய ஏகாதிபத்தியம் இவற்றை சமாளித்தது. இதே போன்ற விபத்து இந்தியாவில் ஏற்பட்டால் என்ன ஆகும்? இந்தியாவில் அணு உலைகள் மக்கள் வாழும் இடங்களின் அருகிலேதான் வைக்கப்பட்டுள்ளன- கல்பாக்கம் அணு உலை முதற் கொண்டு. இந்தியா தனது மக்களை எந்தளவிற்கு மதிக்கிறது என்பதற்க்கு ஆதாரங்கள் தேவையில்லை. அணு விபத்து அல்ல மாறாக ஒரு சாதரண ராசயண விபத்து இந்தியாவில் போபாலில் நிகழ்ந்தது. யூனியன் கார்பைடு என்ற அமெரிக்க உளவு கம்பேனி நடத்திய சோதனையின் விளைவாக ஆயிரக்கணக்கில்(அரசு சொல்வது - 3000 பேர், ஓரளவு நம்பத்தகுந்த விவரம் - 8000 பேர், ஒட்டு மொத்தமாக இது வரை கிட்டத்தட்ட 20,000 பேர் வரை) போபால் மக்கள் இறந்து போயினர். இன்று வரை இந்த அமெரிக்க கம்பேனியின் பொறுப்பாளர் எவனையும் கைது செய்யவோ தண்டனை கொடுக்கவோ இல்லை இந்த அரசு. இது வரை அந்த தொழிற்சாலை கழிவுகள் அகற்றப்படவில்லை. வாழும் வெடி குண்டாக அந்த தொழிற்சாலைக் கழிவுகள் நீர், நிலம், காற்றை நஞ்சாக்கி பல்வேறு உடல் கேடுகளை உருவாக்கி வருகிறது. இன்றுவரை பாதிக்கப்பட்டவர்களுக்கு சரியான நிவாரணம் தரப்படவில்லை. விசயம் இப்படி இருக்க யூனியன் கார்பைடு மீது உள்ள வழக்கை விலக்கிக் கொள்ள தயார் என்று முழங்குகிறார் மன்மோகன் சிங். இதுதான் இந்திய அரசு தனது மக்களை மதிக்கும் விதம். சென்னை அருகில் உள்ள கல்பாக்கம் அணு உலை உலகின் மிக அபாயகரமான உலைகளில் ஒன்றாக பட்டியலிடப்பட்டுள்ளது, அடிப்படை குளிர்விக்கும் வசதிகள் உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகள் இல்லாத அணு உலை அது என்பது இங்கு கவனிக்கத்தக்கது #13.

அணு சக்தி என்பது மிக மிக அற்புதமானதொரு/அபாயகரமானதொரு சக்தி அதனை பயன்படுத்துவது என்பதற்க்கு குறைந்த பட்ச ஜனநாயக பண்பு கொண்ட சமூகத்தாலேயே முடியும் இல்லையேல் அது அபாயகரமானது.

நன்றி தோழர் அகரன்..

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

கோடான கோடி தமிழர்களின் வரிப்பணத்தை கொள்ளையடித்து, அந்த வரிப்பணம் ஊடாகவே ஈழத்தமிழர்களையும் அழித்தவண்ணம் உள்ளது காங்கிரஸ்.

ஒரு நல்ல தலைமையில்லா தமிழினத்தை பார்த்து யாரும் எதுவும் கேட்கலாம் :icon_idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.