Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பான உண்மைகள் வெளிக்கொண்டு வரப்பட வேண்டும் – இரா.சம்பந்தன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

samapanthan-%20r-.jpg

சிறிலங்காவில் வாழும் தமிழ் மக்கள் தற்போதும் சம உரிமையைக் கொண்டுள்ள குடிமக்களாகக் கருதப்படவில்லை. இவர்கள் தமது கௌரவத்தையும் சுயமரியாதையையும் இழந்து வாழ்வதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இராஜவரோதயம் சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்கில் மேற்கொள்ளப்படும் சிங்களக் குடியேற்றங்கள் மற்றும் யுத்தக் குற்றச்சாட்டுக்களை உறுதிசெய்வதற்காக அனைத்துலகத்தாலும் சிறிலங்காவிற்குள்ளும் மேற்கொள்ளப்படும் முயற்சிகள் தொடர்பாக ‘சண்டேலீடர்‘ வாரஇதழுக்கு வழங்கிய நேர்காணலில் ஆர்.சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நேர்காணலின் முழுவடிவம் வருமாறு:

கேள்வி: தமிழ் மக்கள் தவறாக நடத்தப்படுவதுடன், இவர்கள் தமக்கான அடிப்படை உரிமைகள் மற்றும் கௌரவத்தை இழந்து வாழ்கின்றார்கள் என்பதை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா?

பதில்: இது மிக மிக உண்மையானதாகும். நீண்ட காலமாகத் தமிழ் மக்கள் சம உரிமையைப் பெறும் குடிமக்களாக நடத்தப்படவில்லை. அவர்கள் தமக்கான கௌரவத்தையும் சுயமதிப்பையும் பெற்றுக்கொள்வதற்காக பல இடர்களை அனுபவித்து வந்துள்ளனர். அவர்கள் பாதுகாப்பற்ற சூழலை உணர்கின்றார்கள்.

அவர்கள் தமக்கான ஜனநாயக விருப்பங்களை அடைந்து கொள்வதில் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். அத்துடன் அரசியல் அதிகாரங்களை அடைந்து கொள்வதும் தமிழர்களுக்கு பிரதிகூலமாகவே இருந்து வருகின்றது.

50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழர்கள் தமது கருத்துக்களை வெளிப்படுத்திய போதிலும் இவர்கள் நாட்டின் குடிமக்களாக சமமாக மதிக்கப்படவில்லை. அத்துடன் இவர்கள் நாட்டின் இரண்டாந்தரக் குடிமக்களாகவே நடாத்தப்படுகின்றனர்.

இவ்வாறான சூழ்நிலையில் தாம் சம அந்தஸ்தைப் பெறாதவர்களாக வாழ்வதை ஏற்றுக்கொள்ளாத தமிழ் மக்கள் மிகவும் துன்பியல் நிகழ்வுகளை எதிர்நோக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

கேள்வி: சிறிலங்காவின் வடக்குப் பகுதி தற்போது அரசாங்கத்தால் மாற்றப்பட்டு வருகின்றதா?

பதில்: ஆம். வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் சிறிலங்கா அரசாங்கம் தனது குறுகிய, ஆதரவுமிக்க அரசியல் நோக்கங்களை அடைந்து கொள்வதற்காக அங்கு வாழும் மக்களின் வாழ்வு நிலையில் பல மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றது.

கேள்வி: குறிப்பாக இவ்வாறான மாற்றங்கள் எப்படி, எங்கே இடம்பெறுகின்றன என்பது தொடர்பாகக் கூறமுடியுமா?

பதில்: இது பரவலாக எல்லா மாவட்டங்களிலும் நடைபெறுகின்றன. அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார், வவுனியா என எல்லா இடங்களிலும் இவ்வாறான மாற்றங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

சிறிலங்காவின் வடக்கு மேலும் இராணுவ மயப்படுத்தப்படுகின்றது. புதிய இராணுவ முகாங்கள் திறக்கப்பட்டுள்ளன. பாரிய இராணுவத் தளங்கள் அமைக்கப்படுகின்றன. இராணுவப் பிரசன்னம் தற்போது அதிகரிக்கப்படுகின்றது.

மக்களிற்குச் சொந்தமான காணிகள் இராணுவ நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்படுகின்றன. அதாவது பொதுமக்களின் தேவைகளைக் கருத்திற் கொள்ளாமல் நிலங்கள் அபகரிக்கப்படுகின்றன.

சில சந்தர்ப்பங்களில், பொதுமக்கள் தமது சொந்த நிலங்களுக்குத் திரும்பிப் போவதற்குத் தடை விதிக்கப்படுகின்றது. இந்நிலங்கள் இராணுவக் குடியிருப்புக்களை அமைப்பதற்காகப் பயன்படுத்தப்படுகின்றன. இந்நிலங்களில் சில இராணுவத்தினரால் அபகரிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறான நிலங்கள் உண்மையில் அபிவிருத்தி நோக்கங்களிற்காக எடுக்கப்படுகின்ற போதிலும் அவை பின்னர் பெரும்பான்மை சமூகத்தினருக்காக ஒதுக்கப்படுகின்றன. இவ்வாறான நிலைப்பாடுகள் சிறிலங்காவின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் காணப்படுகின்றன.

இவ்வாறான இராணுவத் தேவைகளுக்காக நிலங்கள் அபகரிக்கப்படுவதால், தமிழ் மற்றும் முஸ்லிம் இனங்களைச் சேர்ந்த சில ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்கான வாய்ப்புக்கள் இழக்கப்படுகின்றன.

தமது சொந்த இடங்களுக்குத் திரும்பியுள்ள இடம்பெயர்ந்த மக்கள் தமது விவசாயத் தொழிலைச் செய்ய முடியாதவர்களாக உள்ளனர். அதாவது இந்த மக்களின் விவசாய நிலங்கள் இராணுவத் தேவைகளுக்குப் பயன்படுத்தப்படுவதால் அல்லது பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்களால் இவர்களது நிலங்கள் அபகரிக்கப்பட்டு விவசாயம் செய்யப்படுவதால் சிறுபான்மை இன மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகின்ற சந்தர்ப்பங்களும் ஏற்பட்டுள்ளன.

இவ்வாறான பிரச்சினைகள் தொடர்பாக தேசிய மற்றும் மாகாண மட்ட அரசாங்க அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு சென்ற போதிலும் இடம்பெயர்ந்து மீளவும் தமது சொந்த இடங்களில் குடியேறிய தமிழ் மக்களின் விவசாய செயற்பாடுகளை மேற்கொள்வதற்கான எந்தவொரு தீர்வும் இதுவரையில் எட்டப்படவில்லை.

சில கரையோரப் பிரதேசங்களைச் சேர்ந்த தமிழ் மக்கள் தமது சொந்த இடங்களுக்குத் திரும்பிச் செல்வதில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இவர்கள் தற்போது கடற்கரையிலிருந்து குறிப்பிட்ட தொலைவில் குடியமர்த்தப்பட்டுள்ளனர். இவர்களது வாழ்வாதாரமாக மீன்பிடித் தொழில் இருப்பதால் இவர்கள் தமது தொழிலை மேற்கொள்ள முடியாதுள்ளனர்.

இவ்வாறான இடங்களில் பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்த மீனவர்கள் குடியேற்றப்பட்டு அவர்கள் மீன்பிடித் தொழிலைச் செய்வதற்கான அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளன. இது தமிழ் மக்களின் உரிமையைப் பாதிப்பதால் எதிர்காலத்தில் இந்த மக்களின் வாழ்வியலில் இவ்வாறான நடவடிக்கைகள் பல தாக்கங்களை ஏற்படுத்தும்.

வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் உள்ள ஆலயங்கள் சில அழிக்கப்பட்டுள்ளன. இந்துக்கள் காலங்காலமாக, தலைமுறை தலைமுறையாக பல நூற்றாண்டுகாலமாகத் தமது இறந்த உறவுகளிற்கான அந்தியேட்டிக் கிரியைகளை சில இடங்களில் அதாவது திருகோணமலையிலுள்ள கன்னியா போன்ற இடங்களில் மேற்கொள்வதற்கான தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு தமிழ்மக்களின் சமய மற்றும் கலாசார அடையாளங்களைப் பேணுகின்ற சில இடங்களில் அவற்றைச் செய்வதற்கான தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக அரசாங்கத்தின் உயர்மட்டத்தில் உள்ளவர்களுக்குத் தெரிவித்த போதிலும், இது தொடர்பாக நாடாளுமன்றில் பல தடவைகள் கேள்வியெழுப்பிய போதிலும் இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.

மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு நடவடிக்கைகள் மிகவும் தாமதமாகவே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த விடயங்களில் நாங்கள் அரசாங்கத்திற்கு ஒத்துழைப்புக்களை நல்கிய போதிலும் இது தொடர்பான சாதகமான பதிலை சிறிலங்கா அரசாங்கம் இதுவரையிலும் வழங்கவில்லை.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் மொழி மற்றும் கலாச்சார அடையாளங்களை மாற்றுவதிலும் சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்ட சில செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றன. இவ்வாறான அரசாங்கத்தின் செயற்பாடுகள் சிறுபான்மைத் தமிழ்மக்களின் பிரசன்னத்தைக் குறைத்து பெரும்பான்மைச் சிங்கள சமூகத்தவரின் பிரசன்னத்தை அதிகரிப்பதற்கு வாய்ப்பாக அமைந்துள்ளது.

நாங்கள் இவ்வாறான முறைப்பாடுகளை சிங்கள மக்களிற்கு எதிராக முன்வைக்கவில்லை. ஆனால் அரசாங்கத்திற்கு எதிராகவே முன்வைக்கின்றோம்.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நிறுவுனரான எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க, ஐக்கிய தேசியக் கட்சியின் நிறுவுனரான டட்லி சேனநாயக்கா போன்ற மறைந்த சிறிலங்காத் தலைவர்களால் முன்வைக்கப்பட்ட கோட்பாடுகளே தற்போது சிறிலங்காவின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் பேசும் மக்களின் மொழி மற்றும் கலாச்சார அடையாளங்களை அழிப்பதற்குக் காரணமாக உள்ளன. இது அரசாங்கத்தின் இணக்கப்பாட்டு முயற்சிகளில் எதிர்மறை மனப்பாங்கை உருவாக்குகின்றது.

கேள்வி: யுத்தத்தின் போது மேற்கொள்ளப்பட்ட மனிதஉரிமை மீறல் குற்றச்சாட்டுக்களை உறுதிப்படுத்துவதில் சிறிலங்கா அரசாங்கம் எவ்வாறான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது என்பது தொடர்பாகக் கூறமுடியுமா?

பதில்: மே 2009 இல் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலர் சிறிலங்காவிற்கு வருகை தந்து சிறிலங்கா அதிபரைச் சந்தித்துக் கலந்துரையாடினார். இருவரும் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையில் போரின் இறுதிக்கட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட யுத்த மீறல் தொடர்பாக அரசாங்கம் பதிலளிக்கும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

அரசாங்கம் இது விடயத்தில் சரியான நடவடிக்கையை மேற்கொள்ளாததால் ஐ.நா பொதுச்செயலர் சிறிலங்காவில் இடம்பெற்ற யுத்த மீறல்கள் தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக வல்லுனர் குழுவொன்றை நியமித்தார். இவ்வல்லுனர் குழு தன்னால் ஆராயப்பட்ட விடயங்கள் தொடர்பான இறுதி அறிக்கை ஒன்றை ஐ.நாவின் பொதுச் செயலரிடம் சமர்ப்பித்துள்ளது.

இது தொடர்பாக ஆராய்வதற்காக சிறிலங்கா அரசாங்கம் தேசிய மட்டத்தில் கற்றுக்கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழு ஒன்றை நியமித்தது. ஆனால் இதன் அறிக்கை மிகக் குறுகியதாகும்.

ஆகவே இக்குற்றச்சாட்டுக்கள் தொடர்பான உண்மையான நிலைப்பாடு வெளிக்கொண்டு வரப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும்.

கேள்வி: சிறிலங்காவின் இறுதிக் கட்ட உள்நாட்டு யுத்தத்தின் போது மேற்கொள்ளப்பட்ட யுத்தக் மீறல்கள் தொடர்பாக முழுமையான விசாரணை ஒன்று மேற்கொள்ளப்பட வேண்டும் என அனைத்துலக சமூகம் பெரும் அழுத்தங்களைப் பிரயோகித்து வருகின்றது. இதுதொடர்பாகநீங்கள் நினைக்கின்றீர்களா?

பதில்: இந்த விடயம் தொடர்பாக ஐ.நாவின் மனிதஉரிமைகள் கூட்டத் தொடரில் விவாதிக்கப்பட்டது. ஐ.நா பொதுச் செயலரால் நியமிக்கப்பட்ட வல்லுனர் குழுவால் தயாரிக்கப்பட்ட அறிக்கை மனிதஉரிமைகள் சபையிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

இந்த விடயம் தொடர்பாக பல நாடுகள் தமது கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளன. அத்துடன் இக்குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் வெளிப்படையான நம்பகத்தன்மையான பதிலை வெளிப்படுத்த வேண்டும் எனவும் இந்த நாடுகள் கோரியுள்ளன.

எந்தவொரு நாடுகளும் மனிதஉரிமைச் சட்டங்கள் மற்றும் மனிதாபிமானச் சட்டங்களை மீறமுடியாது. அனைத்துலக உடன்படிக்கைகளை ஏற்றுக் கொண்டுள்ள ஒவ்வொரு நாடும் இவ்வாறான சட்டங்களுக்குக் கட்டுப்பட வேண்டும். ஆகவே இது விடயத்தில் சிறிலங்கா விதிவிலக்காக இருக்க முடியாது.

கேள்வி: சிறிலங்காவில் இடம்பெற்ற யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றுள்ளன என்பதை நீங்கள் நம்புகிறீர்களா?

பதில்: போர் உக்கிரமடைந்திருந்த காலப்பகுதியில், தமிழ் மக்களின் பாதுகாப்புத் தொடர்பாக நான் சிறிலங்கா நாடாளுமன்றில் பல சந்தர்ப்பங்களில் எடுத்துக் கூறியிருந்தேன்.

இந்த அடிப்படையில், இவ்வாறு மேற்கொள்ளப்படும் யுத்தமானது தமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கான யுத்தமாக மட்டும் அமைந்து விடவில்லை என்றும் இது ஒட்டுமொத்தமாக தமிழ் மக்களை அடக்கி ஒடுக்குவதற்காக மேற்கொள்ளப்படும் யுத்தம் எனவும் சுட்டிக்காட்டியிருந்தேன்.

யுத்த காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சில மனிதஉரிமை மீறல் சம்பவங்கள் மற்றும் அனைத்துலக மனிதாபிமானச் சட்ட மீறல்கள் தொடர்பாக நான் எடுத்துக் கூறியிருந்தேன்.

யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் எனக்குக் கிடைக்கப் பெற்ற தகவல்களைக் கொண்டே நான் இவ்வாறான விடயங்களை நாடாளுமன்றில் குறிப்பிட்டிருந்தேன்.

கேள்வி: இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில் சிறிலங்கா அதிபர் தனது அதிகாரத்திற்குள் இருந்து கொண்டு போதியளவு செயற்பாடுகளை முன்னெடுக்கின்றார் என நீங்கள் கருதுகின்றீர்களா?

பதில்: யுத்தம் நிறைவுக்கு வந்து இரண்டரை ஆண்டுகள் கடந்த நிலையில் தமிழ் மக்களிற்கான இணக்கப்பாட்டு முயற்சிகள், அவர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான முயற்சிகள், அத்துடன் நியாயமான, வினைத்திறன் மிக்க அரசியற் தீர்வை எட்டுவதற்கான முயற்சிகள் என்பவற்றை மிகக் கூடுதலாகச் செய்திருக்க முடியும்.

தமிழ் மக்களின் அரசியற் பிரதிநிதிகளாக இருக்கின்ற நாங்கள் யுத்தம் நிறைவுக்கு வந்ததிலிருந்து இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொள்வதில் சிறிலங்கா அதிபருடன் இணைந்து பணியாற்ற முன்வந்துள்ளோம்.

வழிமூலம் – சண்டேலீடர்

மொழியாக்கம் – நித்தியபாரதி

http://www.puthinappalakai.com/view.php?20111124105088

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றிகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.