Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வட மாகாண சபைத் தேர்தலை புறக்கணிப்பது அரசியல் தற்கொலைக்குச் சமமானது!

Featured Replies

தமிழ்த் தேசியத்தினது வாழ்விலும் எதிர்காலத்திலும் அக்கறையுள்ள தமிழ் சிவில் சமூகம் என்ற அலங்காரப் பெயரில் ஒரு விண்ணப்பம் வெளிவந்துள்ளது. அதில் பல பெயர்கள் காணப்படுகின்றன. பெரும்பான்மையினர் வண. பிதாக்கள் மற்றும் வைத்திய கலாநிதிகளது பெயர்களாகும். எது எப்படியோ தமிழ் மக்களது அரசியல் தீர்வு பற்றி இந்த தமிழ் சிவில் சமூகம் காட்டும் கரிசனை வரவேற்கத்தக்கது.

ஆனால் நாம் அறிந்தவரையில் இந்த விண்ணப்பத்தில் உள்ள பெயர்கள் தட்டச்சுச் செய்யப்பட்டுள்ளன. அதில் யாரும் கையெழுத்து இடவில்லை. தொழிற்சங்கம் சார்பான கையொப்பகாரர்கள் இபிடிபி கட்சியின் ஆதரவு தொழிற்சங்கங்களைச் சார்ந்தவர்கள். இன்னும் ஒரு தொகுதி கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கு வேண்டியவர்கள்.

குறிப்பாக முதல் பெயர் மன்னார் மறைவட்ட பேராயர் இராயப்பு யோசேப் ஒப்பீட்டளவில் ஏனைய கத்தோலிக்க பேராயர்களைவிட தமிழ்மக்களது உரிமைகளுக்கு அவ்வப்போது குரல் கொடுத்து வந்தவர். அதே சமயம் போர் முடிந்த பின்னர் ஆட்சித்தலைவர் மகிந்த இராசபக்சே அவர்களை பல தடவை அலரிமாளிகையில் சந்தித்து தேநீர் அருந்தி அளவளாவி வருபவர்.

ஆகவே இந்த விண்ணப்பத்தை படிப்பவர்களுக்கு அதன் பின்னால் வேறு வேறு கைகள் இருப்பது தெள்ளெனப் புலனாகும். ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. "The voice is Jacob's voice, but the hands are the hands of Esau." (Genesis 27:22). அதாவது "குரல் யாக்கோப்பினுடையது ஆனால் கைகள் ஏசுவினது." இந்தப் பழமொழி இந்த விண்ணப்பத்துக்கு முற்றிலும் பொருத்தமாக உள்ளது.

இது கஜேந்திரகுமாரின் மறுவாசிப்பு

1. "புதுடில்லியில் கடந்த ஓகஸ்ட் 23 மற்றும் 24 திகதிகளில் இந்திய காங்கிரஸ் உறுப்பினர் சுதர்சன நாச்சியப்பன் அவர்களால் கூட்டப்பட்ட பல்--தமிழ் கட்சி மகாநாட்டில் 'தேசியம்' 'சுயநிர்ணயம்' என்ற வார்த்தைப் பிரயோகங்கள் உள்ளடங்கிய தீர்மானமொன்றில் ததேகூ சார்பில் பங்குபற்றிய அதன் தொடக்க கால கட்சிகளின் உறுப்பினர்கள் கையெழுத்திட மறுத்தமை எமக்குப் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

கருத்தொருமிப்பு ஏற்படாததால் கையெழுத்திடவில்லை என்ற விளக்கம் எந்த வகையிலும் ஏற்புடைத்தன்று" என்பது சாட்சாத் திருவாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களுடைய குரல். அவரது மறுவாசிப்பு.

கடந்த தேர்தலில் தமிழ்க் காங்கிரசை மக்களிடம் விலைப்படுத்த முடியாது என்று தெரிந்து கொண்ட கஜேந்திரகுமார் தமிழ் மக்கள் தேசிய முன்னணி என்றவொரு காளான் கட்சியை அவசர அவசரமாக உருவாக்கினார். அந்தக் கட்சி சார்பில் தேர்தலில் குதித்த அவரும் அவரது கட்சி வேட்பாளர்களும் கட்டுக்காசை இழந்தார்கள்.

யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி 6,363 வாக்குகளை மட்டும் (6.28 விழுக்காடு) பெற்று 4 ஆவது இடத்துக்குத் தள்ளப்பட்டது. திருகோணமலையில் அந்தக் கட்சிக்குக் கிடைத்த வாக்குகள் 1,181 மட்டுமே. வேட்பாளர்கள் கிடைக்காததால் மட்டக்களப்பு, வன்னி, முல்லைத்தீவு தேர்தல் மாவட்டங்களில் அந்தக் கட்சி போட்டியிடாமல் வெற்றிகரமாகப் பின்வாங்கி விட்டது.

இப்போது தமிழ்மக்கள் முன்னணியும் செல்லாக்காசாகப் போய்விட்டதால் தமிழ் சிவில் சமூகம் என்ற முகமூடியை அணிந்து கொண்டு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வெளிக்கிட்டுள்ளார்.

கொக்கு தலையில் வெண்ணெய் வைத்த கதை

2. பேராயர் இராயப்பு யோசேப் தலைமையிலான இந்த சிவில் சமூகம் ஒரு விசித்திரமான, வேடிக்கையான, நகைப்புக்கிடமான வாதம் ஒன்றை முன்வைத்துள்ளது. மாகாண சபைத் தேர்தல் தொடர்பாக எதிர்வரும் 2012 இல் வடக்கு மாகாண சபைத் தேர்தல் நடைபெறவிருப்பதாகவும் அதனை ததேகூ சந்திக்குமானால் அதில் அமோக வெற்றி பெறும் என்பதில் தமக்கு அய்யமில்லை என்றும் ஆனால் அதனையே அரசும் விரும்புகின்றது என்பதில் உள்ள சூட்சுமத்தை விளங்கிக் கொள்ளவேண்டும் என்றும் ததேகூ யை மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடவைத்து அத்தேர்தலில அது வெற்றி பெறுவதையும் விரும்புகின்றதென்றால் அதற்கான உள்நோக்கம் பூடகமானதல்ல என்றும் மாகாண சபை முறைமையினை தழிழர்கள் ஒரு தீர்வாக ஏற்றுக் கொண்டுவிட்டதாகப்பிரச்சாரம் செய்வதற்காகவே அரசு இதனை முயற்சிக்கின்றது என்ற பெரிய அரசியல் கண்டுபிடிப்பை இந்த சிவில் சமூகம் கண்டுபிடித்துள்ளது.

கொக்கைப் பிடிக்க அதன் தலையில் வெண்ணெய் வைத்து அது வெய்யிலுக்கு உருகி கண்ணை மறைக்கும் போது அபக்கென்று பிடிக்கலாம் என்று சொன்ன புத்திசாலியின் யோசனைக்கும் இந்த சிவில் சமூகத்தின் யோசனைக்கும் வேற்றுமையே கிடையாது! அப்படிப் பார்க்கப் போனால் 1983 இயற்றப்பட்ட 6 ஆவது சட்ட திருத்தத்திற்கும் 1987 இல் இயற்றப்பட்ட 13 ஆவது சட்ட திருத்தத்திற்கும் பின்னரும் நாடாளுமன்ற தேர்தலில் ததேகூ பங்குபற்றியது சிறீலங்காவின் ஒற்றையாட்சி யாப்பை ஒப்புக்கொண்டதற்குச் சமமாகும்! உண்மையில் சிங்கள அரசுக்கு வட மாகாண சபைத் தேர்தலில் ததேகூ யை வெற்றிபெற வைப்பதுதான் விருப்பம் என்றால் எதற்காக அந்த சபைக்கான தேர்தலை தள்ளி வைத்துக் கொண்டுபோகிறது? தேர்தலை உடனடியாக வைத்து தமிழர்கள் 13 ஆவது சட்ட திருத்தத்தை ஏற்றுக் கொண்டுவிட்டார்கள் என்று பரப்புரை செய்யலாமே?

உண்மை என்னவென்றால் சிங்கள அரசுக்கு அப்படியான எண்ணம் இல்லை. அப்படி நினைப்பது குழந்தைப்பிள்ளைத் தனமானது. மகிந்த இராசபக்சே தேர்தலை தள்ளிப் போடுவதற்குக் காரணம் இன்னும் சில "அபிவிருத்தித் திட்டங்களை" செய்து முடித்துவிட்டு அதன் அடிப்படையில் தேர்தல் பரப்புரை செய்து வட மாகாண சபையைக் கைப்பற்றலாம் என மகிந்த இராசபக்சே கணக்குப் போடுகிறார். அதுதான் உண்மை. 2012 இல் தேர்தல் இல்லை என்று மகிந்த இராசபக்சே நாடாளுமன்றத்தில் கூறியிருப்பது அதனை உறுதி செய்கிறது.

வெளியார் தலையீடு இல்லாமல் இனச் சிக்கலுக்கு தீர்வு காணலாம் என்பது பகற்கனவு:

3. இந்த தமிழ் சிவிலியன் சமூகம் தேசியம், சுயநிர்ணயம் என்ற அடிப்படைகளை ஏற்றுக்கொள்ளாத உள்ளடக்காத எந்த ஒரு அரசியல் தீர்விலும் பலன் இல்லை என்றும் மாறாக இந்த அடிப்படைகளை ஏற்றுக் கொள்கின்ற தீர்வுமட்டுமே நீடித்து நிலைக்கக் கூடிய ஓர் அரசியல் தீர்வைத் தருவதோடு இத்தீவின் இனங்களுக்கிடையில் நீடித்து நிலைக்கக்கூடிய நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தும் என்றும் வெளியார் தலையீட்டுக்கான தேவையையும் இல்லாமல் செய்யும் என்றும் சொல்கிறது. விடிய விடிய இராமர் கதை விடிந்த பின் இராமருக்கு சீதை என்ன முறை என்று ஒருவன் கேட்டானாம். 13 ஆவது சட்ட திருத்தத்தில் சொல்லப்பட்ட காணி, காவல்துறை அதிகாரங்களையோ, வட - கிழக்கு இணைப்பையோ தர மறுக்கும் அரசு எப்படி "இத்தீவின் இனங்களுக்கிடையில் நீடித்து நிலைக்கக்கூடிய நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தும்?" ஒரு அரசியல் தீர்வுக்குச் சம்மதிக்கும்? அதுவும் "வெளியார் தலையீட்டுக்கான தேவையையும் இல்லாமல்?"

இன்று எமக்குள்ள பலங்களில் பன்னாட்டு சமூகத்தின் ஆதரவுதான் முக்கியமானது. பன்னாட்டு சமூகத்தின் அழுத்தம் காரணமாகவே மகிந்த இராபக்சேயின் அரசு பேச்சு வார்த்தையில் வேண்டா வெறுப்போடு கலந்து கொள்கிறது. நாடாளுமன்ற தெரிவுக் குழுவுக்கு வாருங்கள் இல்லையென்றால் பேச்சுவார்த்தை இல்லை எனத் திமிரோடு வெளியுறவு அமைச்சர் ஜி.எல். பீரிஸ் மிரட்டியது நினைவிருக்கலாம். ஆனால் அதன்பின்னரும் பேச்சுவார்த்தை தொடருகிறது என்றால் அதற்கு "வெளியார் தலையீடு" தான் காரணம். வெளியார் தலையீடு இல்லாமல் இனச் சிக்கலுக்கு தீர்வு காணலாம் என்பது பகற்கனவு. சிங்கள அரசைப் பொறுத்தளவில் போரில் வெற்றி பெற்று விட்டதால் இனச் சிக்கல் இன்று இல்லை, எல்லோரும் "லங்கா மாதாவின் புத்திரர்கள்" "அதிகாரப் பரவலாக்கலும் தேவையில்லை" என்பதுதான் அதன் நிலைப்பாடு.

தீர்மானங்கள், ஆணை என்பது வேறு நடைமுறை அரசியல் என்பது வேறு

4. தமிழ் சிவில் சமூகம் எதிர்வரும் மாகாணசபைத் தேர்தல்கள் எமது அரசியல் தீர்வுதொடர்பில் நாம் முன்நோக்கி நகர்வதற்கு ஒரு பெரும் தடைக்கல்லாக அமையும் என்றும் மேலும் குறிப்பாகச் சொல்லுவதாயின் மாகாண சபையை ததேகூ கைப்பற்றும் தருவாய் என்பது எமது நீண்டஅரசியல் பயணத்தின் அவல முடிவாக அமைந்து விடும் என்றும் .........அதேபோல் இன்னுமொரு தேர்தலில் தமிழ் மக்களின் ஆணையைப் பெற்றுத்தான் ததேகூ தமிழ் மக்களின் வேட்கைகளை அரசுக்கும் உலகுக்கும் அறிவிக்க வேண்டுமென்றுமில்லை என்ற கண்டுபிடிப்புக்களை தனது விண்ணப்பத்தில் அடுக்குகிறது. அப்படிப் பார்த்தால் வட்டுக்கோட்டை மாநாட்டில் வடக்கு கிழக்கு தமிழர் தாயகம், தேசியம், சுய நிர்ணய உரிமை என்பவற்றை அடிநாதமாகக் கொண்ட பூரண சுதந்திரமும் தன்னாட்சியும் கொண்ட சோசலிச தமிழீழத்தை அமைப்போம் என்ற தீர்மானத்தின் அடிப்படையில் 1977 இல் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தேர்தல் அறிக்கையில் முன்வைக்கப்பட்டு மக்களிடம் ஆணை பெறப்பட்ட பின்னர் ஏன் தவிகூ, ததேகூ தொடர்ந்து தேர்தலில் பங்குபற்றியது? "தமிழ் மக்களின் ஆணையைப் பெற இன்னுமொரு தேர்தல் அவசியமில்லை" என்று ஏன் சொல்லவில்லை? காரணம் தீர்மானங்கள், ஆணை என்பது வேறு. நடைமுறை அரசியல் என்பது வேறு.

தேர்தலைப் புறக்கணிப்பது அரசியல் தற்கொலைக்கு சமமானது:

5. "அரசு இதனை மீறி தேர்தல்களை நடாத்துமாயின் தேர்தலில் ததேகூ நேரடியாகப் பங்கெடுக்கக் கூடாது. மாறாக தமிழ்த் தேசிய விரோத சக்திகள் அல்லது அரச சார்பு சக்திகள் மாகாண சபையைக் கைப்பற்றுவதைத் தடுக்க நாம் வேறுமாற்று உபாயங்கள் தொடர்பில் சிந்திக்கலாம். இவை தொடர்பில் ததேகூ. மக்களோடு கலந்தாலோசிக்க வேண்டும்" என்று தமிழ் சிவில் சமூகம் சொல்கிறது. இந்த யோசனையை இதற்கு முன் எங்கேயோ கேட்ட மாதிரி - அதாவது யாக்கோப்பின் குரல் - படுகிறதே? ஆமாம் உள்ளாட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட வக்கற்ற தமிழ்க் காங்கிரஸ் அல்லது அதன் முகமூடி தமதேமு இப்படித்தான் "சீ சீ அந்தப் பழம் புளிக்கும்" என்று தேர்தல் காலத்தில் தேர்தலைப் புறக்கணிக்குமாறு அறிக்கை விட்டது. ஒரு மக்களாட்சி முறைமை உள்ள நாட்டில் தேர்தலைப் புறக்கணிப்பது என்பது அரசியல் தற்கொலைக்குச் சமமானது. வண பிதாக்களுக்கும் வைத்திய கலாநிதிகளுக்கும் அரசியல் வரலாறு தெரியாதிருந்திருக்கலாம். இதை எழுதிய அரசியல்வாதி கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்குமா அரசியல் வரலாறு தெரியாது?

1931 இல் நடந்த சட்டசபைத் தேர்தலை அன்றைய யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸ் புறக்கணித்ததால் 50 உறுப்பினர்களைக் கொண்ட சட்ட சபையில் சிங்களவர்களது வாக்குப் பலம் அதிகரித்தது. அதன் காரணமாக முழுவதும் சிங்களவர்களைக் கொண்ட அமைச்சர் அவை (Board of Ministers) உருவாகியது. புறக்கணிப்புக்குச் சொல்லப்பட்ட காரணம் டொமினியன் தகைமை வேண்டாம் இலங்கைக்கு - இந்தியாவில் இந்திய காங்கிரஸ் கேட்டது போல - பூரண சுதந்திரம் வேண்டும் என்ற கோரிக்கைதான். இந்தக் கோரிக்கையை எள்ளி நகையாடிய எஸ்.டபுள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கா கான மயில் ஆடக் கண்டிருந்த வான்கோழி தானும் தனது பொல்லாச் சிறகை விரித்தாடிய கதைக்கு ஒப்பிட்டார்.

1994 இல் வரலாறு மீண்டும் திரும்பியது. வி.புலிகள் தேர்தலைப் புறக்கணித்ததால் டக்லஸ் தேவானந்தாவின் இபிடிபி 10,744 (0.14) வாக்குளைப் பெற்று 9 இடங்களில் "வெற்றி" பெற்றது! இந்த 10,744 வாக்குகளில் இபிடிபி யின் கட்டுப்பாட்டில் இருந்த தீவுப்பகுதியில் 9,944 வாக்குகள் கிடைத்தன. இந்தத் தேர்தல் புறக்கணிப்பே இபிடிபி யின் அரசியல் வருகைக்கு கால்கோள் இட்டதோடு மட்டுமின்றி இன்றைய துரோக அரசியலுக்கும் வழிவகுத்தளது. இதனை வரலாறு தெரிந்தவர்கள் புரிந்து கொள்வார்கள்.

தேர்தல் புறக்கணிப்பு தேவானந்தாவுக்கு மகிடம் சூட்டவோ?

6. போகிற போக்கைப் பார்த்தால் தமிழ் சிவில் சமூகம் வடமாகாண சபைத் தேர்தலை புறக்கணிக்க ஆலோசனை சொல்வது டக்லஸ் தேவானந்தாவுக்கு மகிடம் சூட்டத்தான் என்ற அய்யம் எழுகிறது. சென்ற நாடாளுமன்றத் தேர்தலிலும் (2010) தமிழ்க் காங்கிரஸ் கட்சி தேசியத்துக்கு ஆதரவான வாக்குகளைப் பிரித்ததால் இபிடிபி கட்சிக்கு ஒரு இருக்கையை தங்கத் தாம்பாளத்தில் வைத்துக் கொடுத்தது. ததேகூ கேட்காவிட்டால் மாகாண சபையைக் கைப்பற்றுவதற்கு வேறு மாற்று உபாயங்களைப் பற்றித் தமிழ் சிவில் சமூகம் சிந்திக்கப் போகிறதாம். என்ன அந்த உபாயம் - சாணக்கியம் - என்பதைச் சொல்ல வேண்டியதுதானே? அந்த உபாயம் வணபிதாக்களையும் வைத்திய கலாநிதிகளையும் சுயேட்சைகளாகத் தேர்தலில் நிறுத்துவதா? அப்படியென்றால் தமிழ் சிவில் சமூகத்துக்கு ஆட்டோடுதான் கோபம் குட்டிகளோடு இல்லை என்றாகிறது? அதாவது ததேகூ ஓடு மட்டும் கோபம் மற்றவர்களோடு இல்லை!

ததேகூ யை மக்கள் தேர்தலில் வாக்களித்து நாடாளுமன்றம் அனுப்பி இருக்கிறார்கள். அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட ஆணையை ததேகூ மனம், மொழி, வாக்கு ஆகிய மூன்றோடும் நிறைவேற்ற வேண்டும். அதில் அவர்கள் தவறு இழைத்தால் மக்கள் அடுத்த தேர்தலில் ததேகூ யை நிச்சயம் தண்டிப்பார்கள்.

தமிழ் சிவில் சமூகம் என்ற போர்வையில் ததேகூ க்கு எதிராகக் குறுக்குச் சால் ஓட்டுவது அல்லது கால்தடம் போட்டு விழுத்த எத்தனிப்பது அறம் அல்ல. தமிழ் சிவில் சமூகம் யார் எதிரி யார் நண்பன் என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

வரலாற்றில் முன் எப்பொழுதம் இல்லாத ஒரு சிங்கள - பவுத்த வெறிபிடித்த - போர் வெற்றியில் மிதப்பாக இருக்கும் - ஓர் அரசின் அரசியல், இராணுவ, இராசதந்திரம் ஆகியவற்றுக்கு முகம் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் ததேகூ இருக்கிறது.

திரு இரா சம்பந்தர் கிழக்கை சிங்கள மயப்படுத்த 60 ஆண்டுகள் எடுத்தது ஆனால் வடக்கை சிங்கள மயப்படுத்த 10 - 20 ஆண்டுகள் போதும் என்று கனடாவில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசும் போது குறிப்பிட்டிருந்தார். வட - கிழக்கு வரலாற்றில் இல்லாதவாறு இராணுவ மயப்படுத்தப் பட்டுள்ளது. முழத்துக்கு ஒரு இராணுவம் மட்டுமல்ல ஊருக்கு ஒரு இராணுவ தளங்மும் நிறுவப்படுகிறது.

திட்ட மிட்ட சிங்களக் குடியேற்றங்கள் வடக்கில் அசுர வேகத்தில் நடைபெறுகிறது. இதன் மூலம் தமிழர்களது தாயகக் கோட்பாட்டை உடைத்து எறிவதே சிங்கள அரசின் இலக்காகும். நிலம் பறிபோனால் சுயநிர்ணயம் என்ற பேச்சுக்கே இடமில்லாது போய்விடும்.

எனவே இன்றைய உலக ஒழுங்கு, புவிசார் அரசியல், பொருளாதார நலங்கள் போன்றவற்றின் யதார்த்தங்களைப் புரிந்து கொண்டு ததேகூ கைகளைப் பலப்படுத்த எல்லோரும் முன்வர வேண்டும். ததேகூ ஆலோசனை சொல்வதென்றால் அது ஆக்க பூர்வமான உருப்படியான ஆலோசனை ஆக இருக்க வேண்டும்.

ததேகூ யைப் பொறுத்தளவில் தேர்தல் அறிக்கையில் சொல்லியவாறு தமிழினத்தின் அடிப்படைக் கோரிக்கைகளான தமிழ்த் தேசியம், தாயகம், தன்னாட்சியுரிமை எவற்றையும் விட்டுக் கொடுக்காமல்தான் பேச்சுவார்த்தை இடம்பெறுகிறது. எமக்குப் பணியாரம்தான் தேவையே ஒழிய சிலு சிலுப்பு அல்ல என்பதை நினைவில் கொள்வது நல்லது.

திருவள்ளுவர் வாக்குக்கு இணங்க வினை வலி, தன் வலி, துணை வலி, மாற்றான் வலி என்பனவற்றைத் தூக்கிச் செயல் செய்ய வேண்டும் என்றார். பின்னாளில் மாவோ "நண்பன் யார்? எதிரி யார்?" என்று வகுத்துக் கொண்ட பின் "களமிறங்கு" என்று சொன்னதை மனதில் இருத்திக் கவனமாகவும் நிதானமாகவும் பயணிப்போம்.

நக்கீரன் (கனடா)

யாழ் உதயன் பத்திரிகையில் 16/12/2011இல் வெளிவந்தது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எமக்கு பணியாரம் சிலுசிலுப்பு எல்லாம் தேர்தல் காலங்களில் காட்டிவரும் தமிழர்கூட்டமைப்பு இனிமேலாவது மக்களின் வாக்குக்காக வீரம் பேசுவதை விடுத்து தமிழ் மக்களின் உரிமைக்காக இதயசுத்தியுடன் போராட முன்வரவேண்டும். யாழ். புத்திஜீவிகள் இவ்வேளையில் குரல் கொடுத்திருப்பது மிகச் சரியானதே. இல்லாவிடில் சிங்களத் தலைவர்களுடன் தேநீர் குடித்து மகிழ்ந்த கதையாகிவிடும். அன்றைய நக்கீரன் நெற்றிக்கண் காட்டினாலும் குற்றம் குற்றமே என்றான். இன்று கனடாவிலுள்ள நக்கீரன் தேர்தல் வந்தால் சிலவேளை தனக்கும் ஒரு வாய்ப்புக் கிடைக்கலாம் என ஏங்குகிறார் போல. உண்மை, நீதிக்காக மட்டும் எழுதுங்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.