Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சசிப்பெயர்ச்சிப் பலன்கள்!

Featured Replies

சசிப்பெயர்ச்சிப் பலன்கள்!

இந்தக் கட்டுரையை எழுதத் தொடங்கும்வரை இப்படியொரு அறிவிப்பை அம்மையார் வெளியிடவில்லை. ஆகவே, நம்பிக்கையுடன் எழுதத் தொடங்கினேன்.

உடன்பிறவா சகோதரி சசிகலா உள்ளிட்ட பதினான்கு பேரைக் கட்சியை விட்டு நீக்கிய அறிவிப்பு வெளியானபோது அதிமுகவினர் அத்தனைபேருமே தங்கள் கைகளைக் கிள்ளிப் பார்த்துக்கொண்டிருக்கவேண்டும். நம்பமுடியாத அறிவிப்பு. ஆனாலும் நம்பித்தான் ஆகவேண்டும், அறிவித்தவர் அம்மா என்பதால்!

ஒவ்வொரு கட்சியிலும் நம்பர் டூ என்ற அலங்காரப் பதவி ஒன்று இருக்கும். ஆனால் அதற்கான அதிகாரங்கள் அனைத்தும் இன்னொருவரிடம் இருக்கும். உதாரணம் : திமுகவில் பேராசிரியர் அன்பழகன் வகிக்கும் பதவி. கட்சிப் பதவியைப் பொறுத்தவரை அவர்தான் நம்பர் டூ. ஆனால் உண்மையான நம்பர் டூ? சாட்சாத் மு.க. ஸ்டாலின்தான். காங்கிரஸ் கட்சியில் சோனியாவுக்கு அடுத்த இடம் யாருக்கு? நாட்டையே ஆளுகின்ற பிரதமர் பதவியில் இருக்கும் மன்மோகன் சிங்குக்கா? ஆமாம் என்று சொன்னால் அவரேகூட ஒப்புக்கொள்ளமாட்டார். சந்தேகமே இல்லாமல் ராகுல் காந்திதான் நம்பர் டூ.

அதிமுகவிலும் அதே நடைமுறைதான். ஜெயலலிதாவுக்கு அடுத்து கட்சியிலும் சரி, ஆட்சியிலும் சரி, நம்பர் டூ என்றால் ஓ. பன்னீர்செல்வம். ஆனால் உண்மையான நம்பர் டூ? நேற்றுவரை சசிகலாதான். கட்சிப் பதவியா, அமைச்சர் பதவியா, எதுவாக இருந்தாலும் சசிகலா மனது வைக்கவேண்டும். பதவி வேண்டும் என்றால் கட்சித் தலைவியான ஜெயலலிதாவின் நம்பிக்கையைப் பெறுவது இரண்டாம் பட்சம்தான். சசிகலாவின் நம்பிக்கையைப் பெறுவதுதான் முதல் படி. அதைச் செய்துவிட்டால் போதும். நினைத்தது கிடைத்துவிடும். நினைத்தது என்றால் கட்சிக்காரர் நினைத்தது அல்ல, சசிகலா நினைத்தது. சர்வம் சசிகலா மயம்.

கட்சி, ஆட்சி இரண்டையும் வழிநடத்துகின்ற ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய உதவியாளராக, தோழியாக, உடன்பிறவா சகோதரியாக சசிகலா உருமாறியது என்பது ஓரிரு நாளில் நடந்த சங்கதி அல்ல. ஏறக்குறைய முப்பதாண்டுகால உழைப்பு. வீடியோ கடைக்காரர் என்ற முறையில் ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்திரலேகாவால் ஜெயலலிதாவுக்கு அறிமுகம் செய்யப்பட்டவர் சசிகலா. அப்போது தொடங்கிய பழக்கம் மெல்ல மெல்ல நட்பாக மாறியதற்குக் காரணம் எம்.ஜி.ஆர்.

அதிமுக சார்பில் நடக்கும் கட்சிக் கூட்டங்களை வீடியோவில் பதிவுசெய்யும் வேலையை சசிகலாவிடம் ஒப்படைத்தார் எம்.ஜி.ஆர். ஆம், சசிகலாவின் கணவர் ம. நடராசன் மூலமாக சசிகலாவுக்குக் கிடைத்த வாய்ப்பு அது. எந்தெந்த கூட்டங்களை வீடியோவாக எடுக்கவேண்டும் என்பதை ஜெயலலிதாவிடம் கேட்டுக்கொள்ளுமாறு கூறிவிட்டார் எம்.ஜி.ஆர்.

கட்சிக்குள் ஜெயலலிதாவின் வளர்ச்சியோடு சேர்ந்து சசிகலாவின் நட்பும் வளரத் தொடங்கியது. கட்சி விவகாரங்கள் தொடர்பாக எம்.ஜி.ஆரிடம் தான் தெரிவிக்க விரும்பும் செய்திகளை சசிகலா மூலம் கொடுத்தனுப்பும் அளவுக்கு ஜெ – சசிகலா நட்பு இறுகியிருந்தது. அதுதான் பின்னாளில் கட்சியின் வேட்பாளர் பட்டியல் தொடங்கி அமைச்சரவைப் பட்டியல் வரை அத்தனை சங்கதிகளிலும் தலையிடும் அளவுக்கு வளர்ந்து நின்றது.

அதிமுகவின் அதிகாரமையமாக மாறியது சசிகலா குடும்பம். அதாவது, சசிகலா, நடராஜன், ராமச்சந்திரன், டிடிவி தினகரன், வி.என். சுதாகரன், திவாகரன், இளவரசி, டாக்டர் வெங்கடேஷ், மகாதேவன் என்று எண்ணிக்கை உயர்ந்துகொண்டே இருந்தது. சசிகலா குடும்பத்தினரின் தலையீடுகள் ஆக்கிரமிப்பாக அவதாரம் எடுத்தபோது கட்சிக்குள் புகைச்சல்கள் தொடங்கின. பதவி கிடைக்காத பலரும் பொருமினர். ஆனாலும் அம்மாவின் உடன்பிறவா சகோதரியைப் பகைத்துக்கொள்வதற்கான தைரியமும் இல்லாமல் தவித்துக் கொண்டிருந்தனர்.

நடப்பதை எல்லாம் மௌனமாகப் பார்த்துக்கொண்டிருந்தனர். அது, மகாமகத்தில் இருவரும் நீராடியபோதும் சரி. சட்டமன்ற நிகழ்ச்சி ஒன்றில் சபாநாயகருக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் சசிகலா அமர்ந்தபோதும் சரி. வளர்ப்புமகனுக்குத் திருமணம் நடந்தபோதும் சரி. சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்பாக நீதிமன்றப் படிக்கட்டுகளை நாடியபோதும் சரி. எப்போதுமே அமைதியாக இருந்தனர்.

கட்சியின் இரண்டாம், மூன்றாம் கட்டத்தலைவர்கள் மத்தியில் அதிருப்திகள் பொங்கிவழிந்தபோது ஜெயலலிதா தரப்பில் இருந்து எவ்வித சலனமும் இல்லை. ஆனால் தற்போது திடீரென சசிகலா உள்ளிட்டோரை அதிரடியாகக் கட்சியில் இருந்து நீக்கியிருக்கிறார். இதன் பின்னணி என்பது குறித்து ஏராளமான ஊகங்கள் வந்த வண்ணம் உள்ளன. சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்குத் தண்டனை கிடைத்தால் அடுத்த முதல்வர் யார் என்பது பற்றி ரகசிய ஆலோசனை நடத்தினார் சசிகலா என்பது பரவலாகப் படர்ந்திருக்கும் செய்தி. இல்லையில்லை, வேறு ஏதோ ஒரு பெரிய பரிவர்த்தனை தொடர்பாக இருவருக்கும் மோதல் ஏற்பட்டுவிட்டது. அதன் எதிரொலியே நீக்கம் என்கிறார்கள். எதுவும் இப்போதைக்கு உறுதிசெய்யப்படவில்லை.

சரி, சசிகலாவும் அவருடைய குடும்பத்தினரும் கட்சியை விட்டு நீக்கப்பட்டுவிட்டனர். இதனால் கட்சிக்கு என்ன லாபம்? அல்லது நட்டம்? கட்சி உடைவதற்கு வாய்ப்புகள் இருக்கிறதா? முன்புபோல ஜெயலலிதாவால் இனி இயங்கமுடியுமா? இருவரும் மீண்டும் இணைவதற்கு வாய்ப்புகள் இருக்கிறதா? என்பன போன்ற கேள்விகள் அரசியல் அரங்கில் பலத்த விவாதங்களைக் கிளப்பியுள்ளன.

முதலில் கட்சிக்கு என்ன லாபம் அல்லது நட்டம் என்பதைப் பார்க்கவேண்டும். இந்த இடத்தில் அதிமுகவுக்கு இருக்கும் சாதி இமேஜ் பற்றிப் பேசுவது அவசியம். அதிமுக எப்போதுமே தேவர்களுக்கு ஆதரவான கட்சி; அந்தக் கட்சியில் சுலபமாகப் பதவி பெறவேண்டும் என்றால் அவர் தேவர் சாதியைச் சேர்ந்தவராக இருக்கவேண்டும்; தென் மாவட்டங்களில் அதிமுக செல்வாக்குடன் இருப்பதற்கு தேவர்களின் ஆதரவுதான் காரணம் என்பன போன்ற செய்திகள் தொடர்ந்து ஊடகங்களில் உலாவந்துகொண்டிருக்கின்றன.

அதிமுக மீதான தேவர் பிம்பம் விழுந்ததற்கான விதையை விதைத்தவர் எம்.ஜி.ஆர்தான். கட்சி தொடங்கியதும் சந்தித்த திண்டுக்கல் இடைத்தேர்தலில் அவர் நிறுத்திய வேட்பாளரின் பெயர் மாயத்தேவர். அந்த நொடியிலிருந்தே அதிமுகவின் மீது தேவர் ஆதரவு பிம்பம் விழுந்துவிட்டது. பின்னாளில் அந்தப் பிம்பத்தை நிலைநிறுத்தியதற்குக் காரணம் சசிகலா என்றே சொல்லலாம். ஜெயலலிதாவுக்கு அருகில் தேவர் இனத்தைச் சேர்ந்த சசிகலா இருப்பதால் அந்தச் சாதியைச் சேர்ந்தவர்களுக்கு அதிக வாய்ப்புகள் தரப்பட்டன என்பது கட்சிக்குள் இன்றளவும் இருக்கும் முணுமுணுப்பு. அதற்கான ஆகப்பெரிய உதாரணம்தான், ஓ. பன்னீர்செல்வத்துக்குக் கிடைத்த முதல்வர் பதவி.

சசிகலா தற்போது அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுவிட்டதால் தேவர்கள் அதிமுகவில் இருந்து விலகிவிடுவார்களா என்ற கேள்வி எழும்புகிறது. இந்த இடத்தில் முக்கியமான விஷயம் ஒன்றைப் புரிந்துகொள்ளவேண்டும். தேவர்கள் அதிமுகவை ஆதரிப்பதற்குக் காரணம் எம்.ஜி.ஆரும் அவருடைய படங்களும் அவருடைய இரட்டை இலை சின்னமும்தானே தானே தவிர சசிகலா அல்ல. இது பல தேர்தல்களில் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆகவே, சசிகலாவின் வெளியேற்றத்தால் அதிமுகவுக்கு இருக்கும் தேவர் வாக்குவங்கி கரைந்துவிடும் என்பதை ஏற்கமுடியாது.

மாறாக, அவருடைய வெளியேற்றம் காரணமாக நமக்கும் வாய்ப்புகள் கிடைக்கும் என்ற எண்ணம் மற்ற சாதிக் காரர்களுக்கு ஏற்படும். அந்த எண்ணம் காரணமாகக் கூடுதல் எழுச்சியுடன் கட்சிப்பணியில் ஈடுபடுவதற்கு வாய்ப்புகள் உருவாகும். இது ஒரு லாபம். ஜெயலலிதா எடுக்கும் தவறான முடிவுகளுக்குக் காரணம் சசிகலாவும் அவருடைய குடும்பத்தினரும்தான் என்று தெரிந்தோ, தெரியாமலோ நம்புபவர்கள் மனத்தில் சசிகலாவின் வெளியேற்றம் மாற்றத்தை ஏற்படுத்தும். அதிமுகவின் மீதும் ஜெயலலிதாவின் மீதும் கூடுதல் நம்பிக்கையை ஏற்படுத்தும். இது இரண்டாவது லாபம்.

அடுத்த கேள்வி கட்சி உடைவதற்கு வாய்ப்புகள் இருக்கிறதா?

தற்போதைய அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களில் சிலரோ பலரோ சசிகலா ஆதரவாளர்களாக இருப்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் அவர்கள் அத்தனைபேரும் சசிகலாவுடன் உடனடியாக வெளியேறுவார்கள் என்றோ அல்லது சசிகலாவுக்காக ஜெயலலிதாவிடம் போராடுவார்கள் என்றோ, கட்சியை உடைப்பார்கள் என்றோ எதிர்பார்க்க முடியாது. அதிமுக என்றால் எம்.ஜி.ஆர், இரட்டை இலை, ஜெயலலிதா. இந்த மூன்றும் இல்லாமல் அதிமுக இல்லை என்பது அதிமுகவில் இருக்கும் அத்தனைபேருக்குமே தெரிந்த சங்கதி. அதிலும், ஆளுங்கட்சியாக அதிமுக இருக்கும் நிலையில் சசிகலாவுக்காகக் கட்சித் தலைவியை எதிர்ப்பார்கள் என்பது வெறும் கனவாக மட்டுமே இருக்கும்.

இந்த இடத்தில் ஜெயலலிதாவின் ஆளுமைத்திறன் பற்றிப் பேசவேண்டும். 1972ல் கட்சி தொடங்கிய எம்.ஜி.ஆர் அதற்கடுத்த பதினைந்தாவது ஆண்டில் மறைந்துவிட்டார். அதன்பிறகு அதிமுக உடைந்தது. பிறகு ஒருங்கிணைந்த அதிமுகவின் தலைமைப் பொறுப்பை ஏற்ற ஜெயலலிதா சுமார் இருபத்தியோரு ஆண்டுகளாக அதே பொறுப்பில் நீடிக்கிறார். சக்தி வாய்ந்த தலைவியாக இயங்கிக் கொண்டிருக்கிறார். எம்.ஜி.ஆர் பெற்ற வெற்றியைக் காட்டிலும் ஜெயலலிதா தலைமையில் அதிமுக பெற்ற வெற்றிகள் அபாரமானவை.

ஆட்சிக்கு வந்தது தொடங்கி ஆளுங்கட்சி என்ற அடிப்படையிலேயே தேர்தலைச் சந்தித்தவர் எம்.ஜி.ஆர். சட்டமன்றத் தேர்தலில் தோல்வி அடைந்து, எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்து, பலத்த போராட்டங்களுக்குப் பிறகு அதிமுக ஆட்சியைப் பிடித்த சாதனை எதுவும் எம்.ஜி.ஆர் காலத்தில் செய்யப்படவில்லை. மாறாக, ஜெயலலிதாவின் தலைமையில் செயல்படத் தொடங்கிய அதிமுக, இரண்டு முறை அபார வெற்றியைப் பெற்றுள்ளது; இரண்டு முறை தோல்வி அடைந்துள்ளது. தோல்விப் பள்ளத்தாக்கில் துவண்டு கிடந்த அதிமுகவை பலமுறை வெற்றிப் பாதைக்கு அழைத்து வந்திருக்கிறார் ஜெயலலிதா.

இத்தகைய வெற்றிகளுக்கு எம்.ஜி.ஆருக்கு இருந்த மக்கள் செல்வாக்கு மட்டுமே காரணம் அல்ல. ஜெயலலிதாவின் உழைப்பைச் சொல்லவேண்டும். சூறாவளிப் பிரசாரத்தைச் சொல்லவேண்டும். நிர்வாகத்திறனைக் குறிப்பிட வேண்டும். எம்.ஜி.ஆர் வாக்குவங்கி என்பது அடிப்படை பலம். அதிமுகவின் வெற்றிக்கு எம்.ஜி.ஆர் வாக்குவங்கி மட்டும்தான் காரணம் என்றால் அவருடைய மரணத்துக்குப் பிறகு இரண்டு முறை அதிமுக தோற்றிருக்க வாய்ப்பில்லை. ஆகவே, எம்.ஜி.ஆருக்கென்று மக்கள் செல்வாக்கு இருப்பது போலவே ஜெயலலிதாவுக்கென்று மக்கள் செல்வாக்கு உருவாகியிருப்பதை உதாசீனம் செய்துவிடமுடியாது.

தவிரவும், வாக்குகளை வசீகரிக்கும் சக்தி என்பது அதிமுகவைப் பொறுத்தவரை ஜெயலலிதா வசம்தான் இருக்கிறதே தவிர சசிகலா உள்ளிட்ட எவருக்குமே கிடையாது. ஒருவேளை சசிகலா உள்ளிட்டோருக்கு அப்படியொரு நம்பிக்கை இருந்தால்.. அய்யோ பாவம்! இதை சசிகலா குழுவினர் உணர்ந்திருப்பார்களா என்பது தெரியாது. ஆனால் கட்சிக்காரர்கள் நன்றாகவே உணர்ந்திருப்பார்கள். கட்சியின் இரண்டாம், மூன்றாம் கட்டத் தலைவர்களும் உணர்ந்திருப்பார்கள். ஆகவே, கட்சி உடைவதற்கான வாய்ப்புகள் இல்லவே இல்லை.

இறுதியாக, ஜெயலலிதா – சசிகலா மீண்டும் இணைவதற்கு வாய்ப்புகள் இருக்கிறதா?

கலைஞர் குடும்பத்தில் இருப்பவர்களுக்கு மட்டும்தான் கண்கள் பனிக்கவேண்டும்; இதயம் இனிக்கவேண்டும் என்ற அவசியம் இருப்பதாகத் தெரியவில்லை.

http://www.tamilpape...28TamilPaper%29

Edited by akootha

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.