Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெளிநாட்டு தலையீடு இல்லையானால் தமிழர் மட்டுமல்ல, சிறிலங்காவின் அனைத்து மக்களும் துன்பங்களைச் சந்திப்பர் - சம்பந்தன்

Featured Replies

வெளிநாட்டு அரசாங்கங்கள் அல்லது வெளி அமைப்புக்களின் தலையீடுகள் இதில் இல்லாவிட்டால் நீண்ட காலப் போக்கில் தமிழ் மக்கள் மட்டுமல்லாது, சிறிலங்காவில் உள்ள அனைத்து மக்களும் பெரும் துன்பங்களைச் சந்திக்க வேண்டி வரும்.

இவ்வாறு கொழும்பை தளமாகக்கொண்ட ஊடகமான Lakbima News இணையத்தளத்திற்காக Namini Wijedasa மேற்கொண்ட நேர்காணலின் போது தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவரான ஆர்.சம்பந்தன் தெரிவித்துள்ளார். அந்த நேர்காணலை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி.

அந்த நேர்காணலின் முழுவிபரமாவது,

அதிகாரப் பரவலாக்கல் தொடர்பான சாத்தியப்பாடுகள் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தைகள் தற்போது மீண்டும் இடைநிறுத்தப்பட்டுள்ளது. ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா மனித உரிமைகள் கூட்டத் தொடரில் சிறிலங்காவுக்கு எதிராக முன்வைக்கப்படும் பிரேரணை தொடர்பில் அனைத்துலக சமூகமானது 'சரியான தீர்வை எடுக்கும்' எனத் தான் நம்புவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான ஆர்.சம்பந்தன் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். அதன் விபரம் வருமாறு:

கேள்வி: இவ்வாரம் சிறிலங்கா அதிபருடன் தாங்கள் மேற்கொண்ட சந்திப்பின் போது என்ன நடந்தது?

பதில்: சிறிலங்கா அதிபர் விடுத்த அழைப்பின் பேரில் கடந்த புதன்கிழமை மாலை 5 மணிக்கு அலரி மாளிகையில் வைத்து அதிபரை நான் சந்தித்துக் கொண்டேன். இது எங்கள் இருவருக்கும் இடையில் இடம்பெற்ற தனிப்பட்ட சந்திப்பாக அமையவில்லை. இச்சந்திப்பில், அமைச்சர் நிமால் சிறிபால டீ சில்வா, அதிபர் செயலாளரான லலித் வீரதுங்க ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பாக நான் மட்டுமே இப்பேச்சில் கலந்துகொண்டிருந்தேன். கூட்டமைப்புக்கும் சிறிலங்கா அரசாங்கப் பிரதிநிதிகளுக்கும் இடையில் மேற்கொள்ளப்படும் சுற்றுப் பேச்சுவார்த்தைகளின் தற்போதைய நிலைப்பாடு மற்றும் நாடாளுமன்றத் தெரிவுக் குழு போன்றன தொடர்பாக இதில் கலந்துரையாடப்பட்டது.

நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் கூட்;டமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்துபவர்களை உள்வாங்கத் தான் விருப்பம் கொண்டுள்ளதாக அதிபர் தெரிவித்தார். செப்ரெம்பர் 02 இல் சிறிலங்கா அதிபருடன் மேற்கொண்ட சந்திப்பின் போது, நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் அங்கம் வகிப்பது தொடர்பில் இணக்கமான உடன்பாடொன்றை எட்டிக் கொள்ள வேண்டும் என நான் அதிபரிடம் தெரிவித்திருந்தேன்.

ஐந்து மாதங்களில் ஏழு சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடாத்தப்பட்ட போதிலும், அதிகாரப் பரவலாக்கல் தொடர்பில் எம்மால் வழங்கப்பட்ட தீர்வுத் திட்டம் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கப் பிரதிநிதிகள் எந்தவொரு பதிலையும் வழங்காததால், இரு தரப்புக்கும் இடையிலான பேச்சுக்கள் ஆகஸ்ட் 04 இல் இடைநிறுத்தப்பட்டது.

பின்னர் சில முக்கிய விடயங்கள் தொடர்பாக பேசவேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்ட நாம் மீளவும் பேச்சுக்களை தொடர்வதற்கான எமது சம்மதத்தை செப்ரெம்பரில் தெரிவித்தோம். இரு தரப்புகளுக்கும் இடையிலான பேச்சுக்கள் செப்ரெம்பர் 16ல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது. நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு முன்னால் எடுத்துச் செல்லப்படக் கூடிய தீர்வுத் திட்டம் ஒன்றை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்பதில் நாம் உறுதியாக நிற்பதுடன் இதற்காக, இரு தரப்புகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் எந்தவொரு தளர்வும் இல்லாமல் தொடரப்பட வேண்டும் என்பதிலும் நாம் உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளோம்.

கேள்வி: நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் தங்களால் ஏன் தீர்வை எட்ட முடியாது?

பதில்: சிறிலங்கா அரசாங்கத்தின் பிரதான கட்சியான சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன் நாம் ஒரு ஆண்டுக்கும் மேலாக பேச்சக்களை மேற்கொண்டுள்ளோம். இக்கட்சியுடன் மேற்கொள்ளும் பேச்சுக்களில் சில முக்கிய விடயங்கள் தொடர்பில் தீர்வை எட்ட முடியாவிட்டால், சிறிலங்கா அரசாங்கத்தின் கடும்போக்காளர்கள் சிலரை உறுப்பினர்களாகக் கொண்ட நாடாளுமன்றத் தெரிவுக் குழு மூலம் தீர்வை எட்டமுடியும் என நான் நினைக்கவில்லை.

கேள்வி: இந்த விடயத்தில் ஜாதிக ஹெல உறுமய கடும்போக்கைக் கடைப்பிடிக்கும் என நீங்கள் கருதுகிறீர்களா?

பதில்: நான் யாரையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. சிறிலங்கா அரசாங்கத்தின் பிரதான கட்சியான சிறிலங்கா சுதந்திரக் கட்சியானது அரசாங்கத்தில் 95 சதவீத பிரதிநிதித்துவத்தைக் கொண்டுள்ளது. இவ்வாறான பெரும்பான்மைப் பலத்தைக் கொண்டு சிறிலங்கா சுதந்திரக் கட்சியால் கூட, கூட்டமைப்பால் முன்வைக்கப்பட்ட சில முக்கிய பிரச்சினைகள் தொடர்பில் தீர்வை எட்டமுடியாவிட்டால் வேறு எவராலும் இதனை நிறைவேற்ற முடியாது என்றே நான் கருதுகிறேன்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் சிறிலங்கா அதிபருக்கும் இடையில் எட்டப்பட்ட உடன்பாட்டின் பிரகாரமே தற்போது பேச்சவார்த்தைகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால் அடிப்படையில் இவ் உடன்படிக்கையின் விதிகள் மீறப்பட்டுள்ளன.

கேள்வி: நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் அங்கம் வகிப்பதற்கான உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பில் தாங்கள் முற்றிலும் ஆர்வம் காட்டவில்லையா?

பதில்: இதனை ஊடகங்களின் ஊடாக நான் கையாளமுடியாது. கூட்டமைப்பின் நிலைப்பாடு தொடர்பாக நான் அதிபரிடம் விரிவாக விளக்கியுள்ளேன். அத்துடன் இது தொடர்பில் அதிபர் தனது ஈடுபாட்டை காண்பிக்க வேண்டும் எனவும் நான் கேட்டுக் கொண்டுள்ளேன்.

கேள்வி: இது தொடர்பில் அதிபரின் பதில் என்ன?

பதில்: அவர் என்னைப் பார்த்தார். அத்துடன் சந்திப்பில் கலந்து கொண்ட ஏனையவர்களையும் பார்த்தார். பின்னர் நாம் சந்திப்பை நிறைவு செய்து கொண்டோம்.

கேள்வி: சிறிலங்கா அதிபரோ அல்லது கூட்டமைப்பினரோ தமது நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்காத வரை இரு தரப்புகளுக்கும் இடையிலான பேச்சுக்கள் இடைநிறுத்தப்பட்டிருக்குமா?

பதில்: நாம் இதில் பின்வாங்க வேண்டும் என்பதை நான் கூறிக் கொள்ளவில்லை, ஆனால் குறிப்பாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் பேச்சுக்கள் ஆரம்பிக்கப்படுகின்ற இந்த நேரத்தில் நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் அங்கம் வகிப்பதற்கான கூட்டமைப்பு உறுப்பினர்களின் பெயர்களைத் தருமாறு கோரியதானது உண்மையில் நியாயமற்ற செயலாகும்.

கேள்வி: ஜெனீவாவில் காண்பிப்பதற்காக சிறிலங்கா அதிபரால் மேற்கொள்ளப்பட்டுள்ள நகர்வாக இது உள்ளது என நீங்கள் கருதுகிறீர்களா?

பதில்: எனக்குத் தெரியாது. இது தொடர்பில் ஆராய நான் விரும்பவில்லை. ஆனால் உண்மையில் என்ன நடந்ததென்பதை நான் தெரியப்படுத்தியுள்ளேன். நாங்கள் எமது மக்களுக்காக பேச்சுக்களில் ஈடுபட்டுள்ளோம்.

சிறிலங்கா என்ற இத்தீவை இரண்டாகப் பிளவுபடுத்தாது, நியாயமான, நடைமுறைக்குச் சாத்தியமான, பயனுள்ள அரசியல் தீர்வொன்றை எட்டுவதற்கான பேச்சுக்களிலேயே நாம் ஈடுபட்டுள்ளோம் என நாம் எமது மக்களுக்கு தெளிவாக எடுத்துக் கூறியுள்ளோம். இதனை கூட்டமைப்பு தனது கவனத்தில் கொண்டுள்ளது. என்னைச் சூழ பெரும் எண்ணிக்கையிலான மக்கள் காத்திருக்கின்றனர்.

ஆனால் நீங்கள் இந்தச் சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளாவிட்டால், தங்களை மக்கள் நம்பமாட்டார்கள் என நான் அதிபரிடம் எடுத்துக் கூறினேன். நான் சொன்னதை அதிபர் ஏற்றுக் கொண்டார். அதிபர் உண்மையில் என்ன செய்ய வேண்டும் என்பதை அவர் உணர்ந்து கொள்ள வேண்டும்.

கேள்வி: ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்காவானது பிரேரணை ஒன்றை எதிர்நோக்கவுள்ளது. இதற்கு அனைத்தலக சமூகமானது எவ்வாறான பதிலை வழங்கும் என நீங்கள் நம்புகிறீர்கள்?

பதில்: அவர்கள் சரியான பதிலை வழங்குவார்கள் என நான் நம்புகிறேன்.

கேள்வி: இப்பிரேரணையானது சிறிலங்காவுக்கு எதிராக மேற்குலக நாடுகளால் மேற்கொள்ளப்படும் சதி என சிறிலங்கா அரசாங்கம் கூறிவருகிறது. இதனை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா?

பதில்: சிறிலங்காவில் எந்தவொரு விடயமும் நேரான வழியில் அல்லது சரியான வழியில் மேற்கொள்ளப்படுவதில்லை. சர்வ கட்சி பிரதிநிதிகள் குழுவால் சிறிலங்கா அதிபரிடம் கையளிக்கப்பட்ட அறிக்கைக்கு என்ன நடந்தது?

இதேபோன்று உடலகம ஆணைக்குழுவின் வேலைத்திட்டங்கள் ஏன் நிறைவு செய்யப்படாது இடைநிறுத்தப்பட்டது? இதனை இடைநிறுத்தியவர்கள் யார்? ஏன் இவ்வாறு செய்தார்கள்?

அனைத்துலக சமூகத்திற்கு இந்நிலைப்பாடு நன்றாகத் தெரியும். நாங்கள் எல்லா விடயங்களையும் அறிந்து வைத்துள்ளோம். அத்துடன் சிறிலங்காவில் இடம்பெற்ற இறுதிக் கட்ட யுத்தத்தின் போது உண்மையில் என்ன நடந்ததென்பதை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக அனைத்துலக சுயாதீன விசாரணை ஒன்று மேற்கொள்ளப்பட வேண்டிய தேவையுள்ளது.

கேள்வி: 30 ஆண்டு கால யுத்தத்தின் முடிவில் இடம்பெற்ற நிகழ்வுகள் மீளவும் இடம்பெற்று வருவதாக நீங்கள் கருதுகிறீர்களா?

பதில்: யுத்தத்தின் போது மட்டும் தமிழர்களுக்கு எதிராக வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்படவில்லை.

1956,1958, 1961, 1977, 1981, 1983 மற்றும் அதற்குப் பிற்பட்ட காலப்பகுதிகளிலும் தமிழ் மக்கள் வன்முறைகளுக்கு உள்ளாகியுள்ளனர். இதனால் அவர்கள் பல பாதிப்புக்களை சந்தித்துள்ளனர்.

தமிழ் மக்கள் தமக்கான உரிமைகளைத் தருமாறு சிறிலங்கா அரசாங்கத்திடம் கோரியதாலேயே, இவ்வாறான வன்முறைகள் இவர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டன. இந்த உரிமைகளை தமிழ் மக்கள் தொடர்ச்சியாக கோருகின்றனர். நான் கூட எனக்கான உரிமைகள் வழங்கப்பட வேண்டும் எனக் கோருகிறேன்.

இவை நேர்மையான, மதிக்கத்தக்க வழிமுறையின் ஊடாக வழங்கப்பட வேண்டும். இனப் பிரச்சினையானது நியாயமான முறையில் தீர்க்கப்பட வேண்டும் என்பதே கற்றுக் கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரையாகும்.

கேள்வி: இந்த விடயத்தில் அனைத்துலக சமூகத்தின் அழுத்தங்கள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட வேண்டும் என நீங்கள் விரும்புகிறீர்களா?

பதில்: எனது அறிவுக்கு எட்டிய வரையில், சிறிலங்கா அரசாங்கமானது தானாக நினைத்து தமிழ் மக்களுக்கு தீர்வை வழங்கப் போவதில்லை. அது ஒருபோதும் நடைபெற மாட்டாது. அதாவது தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்க தீர்வு காணப்பட வேண்டும் என்பதில் சிறிலங்கா அரசாங்கமானது தனது சொந்தப் புத்தியைப் பயன்படுத்த மாட்டாது.

மே 2009 ல் மனித உரிமைகள் பேரவையில் உரையாற்றிய மகிந்த சமரசிங்க "அரசியல் ரீதியான நடவடிக்கைகளின் ஊடாகவே அரசியற் தீர்வு எட்டப்படும்" எனத் தெரிவித்திருந்தார். இவர் இவ்வாறு அறிவித்து மூன்ற ஆண்டுகள் ஆகின்றன. அவர் கூறிய அரசியற் தீர்வு எங்கே?

கேள்வி: ஜெனீவா கூட்டத் தொடரில் முன்வைப்பதற்கான மூலோபாயம் ஒன்றைத் தான் கொண்டுள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான தங்களின் பதில் என்ன?

பதில்: கற்றுக் கொண்ட பாடங்களுக்கான ஆணைக்குழுவானது சிறிலங்கா அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட ஒன்றாகும். அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்ட ஆணைக்குழு ஒன்று அரசாங்கத்துக்கு எதிராக குற்றங்களை முன்வைக்கமாட்டாது.

ஐ.நா செயலாளர் நாயகத்தால் நியமிக்கப்பட்ட வல்லுனர் குழுவால் தயாரிக்கப்பட்ட அறிக்கைக்கு பதிலளிக்கும் முகமாகவே நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை உள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இவ் ஆணைக்குழுவால் பரிந்துரைக்கப்பட்ட விடயங்களை சிறிலங்கா அரசாங்கம் நடைமுறைப்படுத்துவதற்கான எந்தவொரு உறுதிப்பாடுகளும் வழங்கப்படவில்லை.

அரசாங்கத்தில் உள்ள அதிகாரிகள் இது தொடர்பாக பல்வேறு மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். மகிந்த சமரசிங்க கூட இப்பரிந்துரைகள் அனைத்தும் நடைமுறைப்படுத்தப்பட மாட்டாது எனத் தெரிவித்திருந்தார்.

கேள்வி: இதன் கருத்து என்ன?

பதில்: சிறிலங்கா அரசாங்கமானது கற்றுக் கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவால் பரிந்துரைக்கப்பட்ட விடயங்களை நடைமுறைப்படுத்த மாட்டாது என்பதே இதன் கருத்தாகும். குறிப்பிட்ட காலத்தின் பின்னர் இப் பரிந்துரைகள் அனைத்தும் மறந்த சொத்தாக போய்விடும். இது தொடர்பில் சிறிலங்கா அரசாங்கம் எதனையும் செய்யப் போவதில்லை.

அனைத்தலக சமூகத்தால் இது தொடர்பில் அழுத்தங்கள் வழங்கப்படும் போது மட்டுமே இப் பரிந்துரைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்படும். இல்லையெனில், சர்வ கட்சி ஆணைக்குழு, உடலகம ஆணைக்குழுவின் அறிக்கை போன்று நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையும் பயனற்றுப் போய்விடும்.

கேள்வி: இது தொடர்பில் அனைத்துலக அழுத்தங்கள் தொடரப்பட வேண்டும் என நீங்கள் கருதுகிறீர்களா?

பதில்: நிச்சயமாக, ஆணைக்குழுவின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படுவதற்கான ஒரேயோரு வழியாக இது மட்டுமே உள்ளது. வெளிநாட்டு அரசாங்கங்கள் அல்லது வெளி அமைப்புக்களின் தலையீடுகள் இதில் இல்லாவிட்டால் நீண்ட காலப் போக்கில் தமிழ் மக்கள் மட்டுமல்லாது, சிறிலங்காவில் உள்ள அனைத்து மக்களும் பெரும் துன்பங்களைச் சந்திக்க வேண்டி வரும். ஆகவே சிறிலங்காவில் வாழும் அனைத்து மக்களும் நலன் பெறத்தக்க வகையில் அனைவரும் இந்த விடயத்தில் இணைந்து செயற்படவேண்டும்.

கேள்வி: கற்றுக் கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை நீங்கள் தற்போது ஏற்றுக் கொள்கிறீர்களா?

பதில்: யுத்த கால பொறுப்புக் கூறல் விடயத்தில் நாம் இந்த அறிக்கையை நிராகரிக்கிறோம். பாதிக்கப்பட்ட மக்களை இவ் அறிக்கை கவனத்திற் கொள்ளவில்லை. ஆனால் பெரும்பாலான விடயங்களில் இவ் அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டதை நாம் நிச்சயம் வரவேற்றுக் கொள்கிறோம். ஆகவே இப்பரிந்துரைகள் நிறைவேற்றப்படும் பட்சத்தில் மட்டுமே உண்மையில் இவ் ஆணைக்குழுவின் அறிக்கை உண்மைத்தன்மை மிக்கதாக இருக்கும்.

கேள்வி: சிறிலங்கா அரசாங்கமானது இவ் ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்ற முற்பட்டால் யுத்த கால மீறல்கள் தொடர்பிலும் பொறுப்புக் கூறும் என நீங்கள் கருதுகிறீர்களா?

பதில்: அரசாங்கத்திற்கு ஆலோசனை கூற நான் விரும்பவில்லை. அரசாங்கமானது தன்னால் நியமிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்ற வேண்டும். அத்துடன் இந்த விடயத்தில் இது இதய சுத்தியுடன் நடந்து கொள்ள வேண்டும்.

கேள்வி: சிறிலங்காவுக்கு அண்மையில் வருகை தந்திருந்த அமெரிக்க அதிகாரிகளை தாங்கள் சந்தித்த போது, அவர்களிடம், ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் சிறிலங்காவுக்கு எதிராக அமெரிக்காவால் முன்வைக்கப்படத் தீர்மானிக்கப்பட்டுள்ள பிரேரணை தொடர்பாக வலியுறுத்தினீர்களா?

பதில்: நான் சிறிலங்காவுக்கு எதிரானவன் அல்ல என்பதால் சிறிலங்காவுக்கு எதிரான பிரேரணை என நான் அதனைப் பார்க்கவில்லை. நான் சிங்கள மக்களுக்கு எதிரானவன் அல்ல என்பதால் சிங்கள மக்களுக்கு எதிரான பிரேரணையாக நான் அதனைக் கருதவில்லை.

எனது மக்கள் நீதியுடனும் சமத்துவத்துடனும் வாழவேண்டும் என்பதற்காகவே நான் என்னை அர்ப்பணித்துள்ளேன். ஆகவே நான் எதனைச் செய்யவேண்டியுள்ளதோ அதனை நான் நிறைவேற்ற வேண்டும்.

http://www.puthinapp...?20120228105677

Edited by வீணா

  • கருத்துக்கள உறவுகள்

(வெளிநாட்டு அரசாங்கங்கள் அல்லது வெளி அமைப்புக்களின் தலையீடுகள் இதில் இல்லாவிட்டால் நீண்ட காலப் போக்கில் தமிழ் மக்கள் மட்டுமல்லாது, சிறிலங்காவில் உள்ள அனைத்து மக்களும் பெரும் துன்பங்களைச் சந்திக்க வேண்டி வரும்.)

சம்பந்தரின் இந்த அணுகுமுறை பிடிச்சிருக்கு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.