Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரொம்ப கவலையாக உள்ளீர்களா? வாங்க கொஞ்சம் சிரிக்கலாம்

Featured Replies

"குரு நாதா! இனிமேல் நாம் மருத்துவத் தொழில் செய்தால் என்ன?" எனக் கேட்டான், முட்டாள்.

"அதனால் நமக்கு என்ன பயன்?" என்று பரமார்த்த குரு கேட்டார்.

"பணம் கிடைக்கும். அத்துடன் புண்ணியமும் கிடைக்கும்" என்றான், மூடன்.

"அப்படியே செய்வோம்" என்றார் குரு.

"மனிதர்களுக்கு மட்டும்தானா?" என்று கேட்டான் மண்டு.

"மனிதர்க்கும் வைத்தியம் செய்வோம்; மாட்டுக்கும் செய்வோம்; குழந்தைக்கும் செய்வோம்; குரங்குக்கும் செய்வோம்!" என்றான் மட்டி.

பரமார்த்தரும் அவரது ஐந்து சீடர்களும் மருத்துவம் செய்யும் செய்தி ஊர் முழுதும் பரவியது.

காய்ச்சலால் அவதிப்பட்ட ஒருவன் வந்தான். அவன் உடலைத் தொட்டுப் பார்த்த மடையன், "குருவே! இவன் உடம்பு நெருப்பாகச் சுடுகிறது!" என்றான்.

"அப்படியானால் உடனே உடம்பைக் குளிர்ச்சி அடையச் செய்ய வேண்டும்!" என்றார் பரமார்த்தர்.

"அதற்கு என்ன செய்வது?" எனக் கேட்டான் முட்டாள்.

"இந்த ஆளைக் கொண்டுபோய்த் தொட்டியில் உள்ள தண்ணீரில் அழுத்தி வையுங்கள். ஒரு மணி நேரம் அப்படியே கிடக்கட்டும்" என்றார் குரு.

உடனே மட்டியும் மடையனும் அந்த நோயாளியைத் தூக்கிக் கொண்டு போய், தொட்டி நீரில் போட்டனர். முட்டாளும் மூடனும் மாற்றி மாற்றி அவனை நீரில் அழுத்தினார்கள்.

நோயாளியோ "ஐயோ, அம்மா!" என்று அலறியபடி விழுந்தடித்து ஓடினான்.

கொஞ்ச நேரம் கழித்து ஒரு கிழவி வந்தாள். "கண் வலிக்கிறது" என்றாள்.

"இப்போது நேரமில்லை. உண் கண்ணை மட்டும் தோண்டி எடுத்துக் கொடுத்து விட்டுப்போ. சரி செய்து வைக்கிறோம்!" என்றான் முட்டாள்.

கிழவியோ, "ஐயையோ" என்று கத்திக் கொண்டு ஓடினாள்.

சிறிது நேரம் சென்றது. "உடம்பெல்லாம் வெட வெட என்று நடுங்குகிறது என்றபடி ஒருவன் வந்தான்.

"சும்மா இருப்பதால்தான் ஆடுகிறது. உடம்பு முழுவதும் கயிறு போட்டுக் கட்டி விடுங்கள்! அப்போது எல்லாம் சரியாகிவிடும்" என்றார் பரமார்த்தர்.

முட்டாளும் மூடனும், வந்தவனை இழுத்துக் கொண்டு சென்று தூணில் கட்டி வைத்தனர்.

கட்டி வைத்த பிறகும் அவன் உடம்பு நடுங்குவதைக் கண்ட மட்டி, "குருதேவா! இது குளிரால் வந்த நோய். இது தீர வேண்டுமானால், இவன் உடம்பைச் சூடாக்க வேண்டும்!" என்றான்.

அதைக் கேட்ட முட்டாள் தன் கையிலிருந்த கொள்ளிக் கட்டையால் நோயாளியின் உடல் முழுவதும் வரிவரியாகச் சூடு போட்டான்.

வலி தாங்காத நோயாளி சுருண்டு விழுந்தான்.

"பல் வலி தாங்க முடியவில்லை. என்ன செய்வது?" என்று கேட்டபடி வேறொருவர் வந்தார்

"வலிக்கிற பல்லை எடுத்து விட்டால் சரியாகி விடும்" என்றார் பரமார்த்தர்.

சீடர்களோ, ஆளுக்குக் கொஞ்சமாக எல்லா பல்லையும் கத்தியால் தட்டி எடுத்துப் பொட்டலமாகக் கட்டிக் கொடுத்தனர்!

"இனிமேல் உனக்குப் பல்வலியே வராது!" என்றார் பரமார்த்தர்

சற்று நேரம் கழிந்தது. யானைக்கால் வியாதிக்காரன் ஒருவன் வந்தான்.

"உலகிலேயே இதற்கு இரண்டு வகையான வைத்தியம்தான் இருக்கிறது. நன்றாக இருக்கிற காலை வெட்டிவிட்டு, அந்த இடத்தில் யானையின் காலை ஒட்டி விட வேண்டும். இல்லாவிட்டால் அந்தக் காலுக்குச் சமமாக இந்தக் காலில் உள்ள சதையைச் செதுக்கி எடுத்து விட வேண்டும்!" என்றார் பரமார்த்தர்

யானைக்கால் வியாதிக்காரனோ, "காலை விட்டால் போதும்" என்று தப்பினான்.

"ஐயா! ஒரே இருமல். தொடர்ந்து இருமிக் கொண்டே இருக்கிறþன்" என்றபடி வேறு ஓர் ஆள் வந்தார். வாயைத் திறப்பதால்தானே இருமல் வருகிறது. வாயை மூடிவிட்டால் என்ன? என்று நினைத்தார், பரமார்த்தர். "இவர் வாயை அடைத்து விடுங்கள்!" என்று கட்டளை இட்டார்.

குருவின் சொல்படி, கிழிந்த துணிகளை எல்லாம் சுருட்டி, இருமல்காரனின் வாயில் வைத்துத் திணித்தான் மட்டி.

"என் ஆடு சரியாகத் தழை தின்னமாட்டேன் என்கிறது" என்றபடி ஒருவன் வந்தான். அந்த ஆட்டைக் கண்ட குரு, "தொண்டையில் ஏதாவது அடைத்துக் கொண்டு இருக்கும்" என்றார்.

"வாயைப் பெரிதாக ஆக்கிவிட்டால் போதும்" என்றான் மடையன்.

கத்தி ஒன்றைத் தூக்கிக் கொண்டு வந்தான், முட்டாள்.

அதைப் பிடுங்கி, ஆட்டை வெட்டப் போனான் மூடன்.

பயந்துபோன ஆட்டுக்காரன், ஆட்டை இழுத்துக் கொண்டு ஓட்டம் பிடித்தான்.

குருவும் சீடர்களும் வைத்தியம் என்ற பெயரில் கண்டபடி நடந்து கொள்வதைப் பற்றி எல்லோரும் பேசிக் கொண்டனர்.

பஞ்சாயத்தார் ஒன்று கூடி, குருவும் சீடர்களும் "இனிமேல் இந்த ஊருக்குள்ளேயே நுழையக் கூடாது" என்ற தண்டனையை வழங்கினர்.

Edited by யாழ்அன்பு

  • தொடங்கியவர்

தலைவர் வரிகளை உயர்த்துவது தெரியாமல் உயர்த்தறாரே.. எப்படி..?" "அரசியல்ல வர்றதுக்கு முன்னாலே.. எடுப்பது தெரியாமல் பஸ்ல பிக்பாக்கெட் செய்யற தொழில் செய்தவராச்சே!"

"திடீர்னு அதிகாரி வந்து சொஸைட்டியை செக் பண்ணி, ஏகப்பட்ட ஸ்டாக் குறைஞ்சதைக் கண்டுபிடிச்சதும், கிளார்க் பூச்சி மருந்தைக் குடிச்சுட்டார்!" "அய்யய்யோ... அப்புறம்?" "அப்புறமென்ன, பூச்சி மருந்தும் ஒரு பாட்டில் குறையுதுன்னு அதிகாரி ரிப்போர்ட் பண்ணிட்டார்!"

ஒரு ஜவுளிக் கடையில்.. "டேய் மொக்கை.. இந்த சட்டையைப் பார்த்தியா..? 2000 ரூபாயாம்.. சரியான கொள்ளைக்காரப் பசங்க.." "சரி.. சரி.. பேசுனது போதும்.. சீக்கிரம் மூட்டையைக் கட்டு.. விடியப் போகுது..!"

மொக்கையின் மகனிடம் வகுப்பு ஆசிரியர்.. "அரையாண்டுத் தேர்வில் நல்ல மார்க் வாங்கியிருக்கே சின்ன மொக்கை.. இதே போல ஆண்டுத் தேர்வுலயும் மார்க் எடுக்கணும்.." "அது கொஞ்சம் கஷ்டம்தான்.. அந்த வினாத்தாள் எங்க அப்பா வேலை செய்யற அச்சகத்தில பிரிண்ட் பண்றாங்களோ என்னவோ..?"

"உங்க வீட்டு முகவரியைக் கண்டுபிடிக்கிறதுக்குள்ளே நாயா அலைஞ்சுட்டேன்" "சரி உள்ளே வாங்க, என்ன சாப்பிடறீங்க, பொறையா, பிஸ்கட்டா?"

முனியாண்டி! நீ அடிச்ச கொள்ளை நிரூபணமாயிடுச்சு அதனால் ஐம்பதாயிரம் ரூபாய் அபராதம் கட்ட வேண்டும்!" "எஜமான்! கண்ணைக் கட்டி வாயைக் கட்டி அடிச்ச பணமுங்க கொஞ்சம் கருணை காட்டுங்க!

"பாடம் எல்லாம் முடிஞ்சிப் பேச்சு.. ஏதாவது சந்தேகம் இருந்தா கேளுங்க.. எதுவா இருந்தாலும் தயங்காமக் கேளுங்க.." "சார் உங்க பெண்ணு பேரு என்ன சார்?"

"தலைவருக்கு எத்தனை மனைவி?" "சட்டப்படி ஒண்ணு, 'செட்டப்'படி ஏழு!"

மாலா: எங்க தாத்தாவுக்கு தினமும் கேழ்வரகுக்கூழ், கம்பங்கூழ் இருந்தா போதும் வேற எதுவும் தேவையில்லை. ஹரி: ஓகோ! அப்ப வெறும் 'கூழ்'ட்ரிங்ஸ் தான்னு சொல்லு....

கலா: ரெண்டு கண்ணிருக்கே அரிசியிலே ஒழுங்கா கல்லைப் பொறுக்க முடியாதா? மாலா: முப்பத்திரண்டு பல்லு இருக்கே மெல்ல முடியாதா?

அடிக்கடி திருடிட்டு என் முன்னாடி வந்து நிக்கிறியே, உன் மனசுல என்னதான் நினைச்சுக்கிட்டு இருக்கே?" "ஒரு நாற்காலி போட்டா, நிக்காம சௌகரியமா உட்கார்ந்துக்கலாம்னுதான் எசமான்!"

"என் பையன் பண்ண காரியத்துனால என்னால வெளியே தலை காட்ட முடியலை.." "அப்படி என்ன பண்ணிட்டான்..?" "என்னோட விக்கை எடுத்து அவன் போட்டுக்கிட்டுப் போய்ட்டான்."

"சார்.. நான் போகவேண்டிய தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் டைமுக்கு வருதா..?" ஸ்டேஷன் மாஸ்டர்: டைமுக்கு வந்தா என்ன.. வராட்டி என்ன..? நாங்க அதுக்கெல்லாம் கவலைப்படறதில்லே.. தண்டவாளத்தில வந்தா போதும்..!"

"டாக்டர் எனக்கு கூச்சமா இருக்குது." "எதுனாலும் டாக்டர்கிட்ட கூச்சப்படாமல் சொல்லுங்க." "எனக்கு பல்லு கூச்சமா இருக்கு டாக்டர்."

"கல்யாணத்தில் மொய் எழுத மறந்துட்டு வந்திட்டேன்.." "அப்ப நீ கல்யாண பரபரப்புல 'மொய் மறந்துட்டே'னு சொல்லு."

"என் கணவர் என்னை கடி ஜோக் சொல்ல சொன்னார், நான் மாட்டேன்னிட்டேன்." "ஏன்டி?" "அவரை வேணும்மின்னே 'no'கடிக்கதான்."

"குக்கர்ல சமைத்து சாப்பிட்டா குண்டாயிடுவோம். எப்படி?" "அது மேல தான் "weight" போடரோம் இல்ல?"

"வாத்தியாரை விட கோழி தான் Great எப்படி?" "வாத்தியார் முட்டை மட்டும் தான் போடுவார், ஆனால் கோழி முட்டை போட்டு குஞ்சும் பொறிக்கும்."

"ஃபிளவருக்கும் லவ்வருக்கும் என்ன வித்தியாசம்?" "ஃபிளவர் வாடிப்போயிடும் லவ்வர் ஓடிப்போயிடும்!"

பூனை: உன் வயசு என்ன? யானை: பத்து வயசு பூனை: ஆனா நீ பாக்கறதுக்கு ரொம்ப பெரிசா தெரியிறியே யானை: ஆமாம், ஏன்னா நான் காம்ப்ளான் பாய் பூனை: எனக்கு 15 வயசு யானை: ஆனா நீ ரொம்ப சின்னதா தெரியிறியே பூனை: அதுக்கு காரணம் பாண்ட்ஸ் ஏஜ் மிராக்கிள்

டீச்சர்: வாஸ்கோடகாமா யாருன்னு தெரியுமா? பையன்: தெரியாது... டீச்சர்: முதல படிப்புல கவனம் செலுத்து பையன்: பரிமளா ஆண்டி யாருன்னு தெரியுமா? டீச்சர்: தெரியாது... பையன்: மொதல உன் புருஷன் மேல கவனம் செலுத்து...

"நம்ம கூட்டணியிலிருந்து எதிர்க்கட்சிக்குப் போன கட்சித் தலைவரைப் பற்றி கூட்டத்தில எப்படி பேசணும் தலைவரே?" "நம்பிக்கைத் துரோகின்னு பேசுங்க." "அவர் திரும்ப நாளைக்கே நம்ம பக்கம் வந்துட்டா...?" "நம் குடும்பத்திலிருந்து பிரிந்துச் சென்று மீண்டும் இணைய வந்துள்ள உடன் பிறப்பேன்னு பேசிடலாம்."

"நான் ரிடையர் ஆன பிறகு ரொம்ப கஷ்டப்படறேன்.." "ஏன் அப்படி..?" "பின், ஜெம் கிளிப் எல்லாம் காசுகொடுத்து வாங்க வேண்டியிருக்கு."

"எனக்கு புதன்கிழமை லீவ் வேணும்னா, திங்கள்கிழமை எனது மேலதிகாரிகிட்ட ஒரு ஜோக் சொல்லுவேன்" "என்ன சொல்ற நீ?!" "நான் சொன்ன ஜோக்கை புரிஞ்சுக்கிட்டு அவர் புதன்கிழமைதான் சிரிப்பார்.. உடனே லீவ் சேங்க்ஷன் பண்ணிடுவார்."

"உங்க நாயை அடக்கி வையுங்க. என் பெண் பாட ஆரம்பித்ததும் அது குறைக்க தொடங்கிவிடுகிறது." "அதற்கு நான் என்ன செய்ய முடியும்? உங்கள் பெண்தானே முதலில் ஆரம்பிக்கிறாள்?"

மனைவியை தொலைத்த ரெண்டு நபர்: "உங்க மனைவி எப்படி இருப்பாங்க?" "ஸ்லிம்மா சிவப்பா ரொம்ப அழகா." "உங்க மனைவி?" "அவளை எதுக்கு தேடிக்கிட்டு. வாங்க உங்க மனைவிய தேடலாம்...."

நோயாளி: என் கண்ணுக்கு சித்திரகுப்தன் தெரிகிறான் டாக்டர்.. டாக்டர்: கவலையே படாத.. இப்பதான் வைத்தியம் ஆரம்பிச்சிருக்கேன்!.. இன்னும் கொஞ்ச நேரத்தில எமதர்மன் தெரிவான்....

பிச்சக்காரன்: 'பணம் சம்பாதிக்க ஆயிரம் வழிகள்' என்ற புத்தகத்தை எழுதியது நான் தான்..! ஒருத்தன்: பிறகு ஏன் பிச்சை எடுக்கிறாய்..? பிச்சக்காரன்: அந்த ஆயிரம் வழிகளில் இதுதான் முதல் வழி..

"ஜனவரி - 14க்கும், பிப்ரவரி - 14க்கும் என்ன வித்தியாசம்?" "ஒரு பொண்ணு பொங்கல் கொடுத்தா அது ஜனவரி - 14! அதே பொண்ணு அல்வா கொடுத்தா அது பிப்ரவரி - 14!"

மனைவி: என்னங்க! நான் வெச்ச பொங்கல் எப்படி இருக்கு...? கணவன்: ம்ம்... இன்னும் கொஞ்சம் ஊத்து....!

கணவன்: என்னடி சர்க்கரை பொங்கல் வெள்ளையா இருக்கு? மனைவி: பொங்கல்ல சர்க்கரை போட்டிருக்கேன்...!

"என்னதான் அதி நவீன பிரஸ் நடத்துபவரா இருந்தாலும், அவரால 'அச்சு' வெல்லம் போட்டுதான் பொங்கல் செய்ய முடியும். 'ஆப்செட்' வெல்லாம் போட்டு செய்ய முடியாது!"

"என்னதான் 'மண்டை' வெல்லம்னாலும், அதை உடைச்சு பார்த்தா உள்ளே மூளை இருக்காது!"

"நண்பா, ஒலிம்பிக்ல இந்தியா சாதிக்காததை நீ சாதிச்சுட்டே." "நான் என்ன சாதிச்சேன்?" "பின்னே, உன் மாமனாரை ஏமாத்தி இதுவரை முப்பத்தஞ்சு சவரன் தங்கம் வாங்கியிருக்கியே!"

"அந்த அலுவலகத்திலே.. எல்லோரும் தலையை விரிச்சுப் போட்டுட்டு இருக்காங்களே.. ஏன்?" "அங்க லஞ்சம் கொடுத்தா தான் எதுவும் நடக்குமாம்.." "அதை 'சிம்பாலிக்'கா உணர்த்தறாங்களாம்.. லஞ்சம் தலை விரிச்சு ஆடுதுன்னு"

தொப்பை கரைச்சான் லேகியம்!

திடீரென்று பரமார்த்தரின் தொப்பை பெரிதாகிக் கொண்டே போனது. உட்கார்ந்தால் நிற்க முடியவில்லை; நின்றால் உட்கார முடியவில்லை. இதைக் கண்ட சீடர்கள் மிகவும் கவலைப்பட ஆரம்பித்தனர்.

"குருவே! தினம் தினம் உங்கள் தொப்பை கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து கொண்டே போகிறதே! எங்களுக்கெல்லாம் பயமாக இருக்கிறது" என்றான் மட்டி.

"வயிறு இவ்வளவு பெரியதாய் இருக்கிறதே! ஒரு வேளை உங்களுக்குக் குழந்தை ஏதாவது பிறக்கப் போகிறதா?" என்று ஆச்சரியப்பட்டான், மூடன்.

"குருவே! இதை இப்படியே விட்டுவிடக் கூடாது. அப்புறம் ஒரு நாளைக்கு உங்கள் தொப்பை டமார் என்று வெடித்து விடும்!" என்று பயம் காட்டினான் மடையன்.

"ஐயையோ!" என்று அலறிய பரமார்த்தர், "இதற்கு என்ன செய்வது?" என்று கேட்டார்.

"சித்த வைத்தியர் யாரிடமாவது காட்டலாம்" என்று யோசனை சொன்னான் மண்டு.

"வைத்தியரிடம் போனால் நிறைய செலவாகும். அதனால் நாங்களே காட்டுக்குச் சென்று மூலிகைகள் பறித்து வருகிறோம். அதிலிருந்து ஏதாவது லேகியம் தயாரித்துச் சாப்பிட்டால், தொப்பை கரைந்து விடும்!" என்று வேறொரு யோசனை சொன்னான், முட்டாள்.

உடனே மூடன், கிடுகிடு என்று பரண்மேல் ஏறி, செல்லரித்துப் போன பழைய ஓலைச் சுவடிகளை எல்லாம் எடுத்துப் படித்துப் பார்த்தான்.

"குருவே! தொப்பை கரைச்சான் லேகியம் என்பது பற்றி இதிலே எழுதியிருக்கு! இதில் குறிப்பிட்டிருக்கும் செடிகளை நாங்கள் கொண்டு வருகிறோம்" என்றபடி கீழே குதித்தான்.

எப்படியாவது தொப்பை கரைந்தால் போதும் என்று நினைத்த பரமார்த்தர், "சீடர்களே! சீக்கிரம் புறப்படுங்கள். நிறைய லேகியம் தயாரித்தால் அதை மற்றவர்களுக்கும் விற்று விடலாம்" என்று அனுப்பி வைத்தார்.

காட்டுக்குச் சென்ற சீடர்கள், "தொப்பை கரைச்சான் மூலிகை" எது என்று தெரியாமல் விழித்தார்கள். அப்போது சற்றுத் தூரத்தில் முனிவர் ஒருவ ஒட்டிய வயிறுடன் தவம் செய்து கொண்டிருந்தார்.

அவரைக் கண்ட மட்டி, இவர் வயிறு இவ்வளவு ஒட்டி இருக்கிறதே என்று ஆச்சரியப்பட்டு அவரிடம் போனான்.

"முனிவரே! இந்தச் செடிகளில் தொப்பை கரைச்சான் செடி எது என்று தெரியுமா?" என்று பலமாகக் கத்தி அவரது தவத்தைக் கலைத்தான்.

கோபம் கொண்ட முனிவர், "எந்தச் செடி நாறுகிறதோ, அதுதான் நீ கேட்கும் செடி!" என்று வேண்டுமென்றே சொல்லி அனுப்பினார்!

முனிவர் சொன்னதை நம்பிய சீடர்கள், கண்ட கண்ட இலைகளையும் பறிக்க ஆரம்பித்தார்கள். சாப்பிட்டால் பல வியாதிகளை உருவாக்குகிற இலைகளை எல்லாம் பறித்து மூட்டை கட்டினார்கள்.

சீடர்கள் பறித்து வந்த இலைகளை மோந்த பரமார்த்தர், முகத்தைச் சுளித்தார். "நன்றாக நாறுகிறது! எப்படியும் என் தொப்பை கரைந்து விடும்!" என்று மகிழ்ந்தார். அதன்பிறகு, "சீக்கிரம் ஆகட்டும்! எல்லாவற்றையும் கலந்து அரைத்து வாருங்கள்" என்று கட்டளையிட்டார்.

முட்டாளும் மூடனும் இலைகளைத் துண்டு துண்டாகக் கிள்ளிப் போட்டனர். மட்டியும் மடையனும் கல்லில் வைத்து அரைக்க ஆரம்பித்தனர். அப்போது இலையில் இருந்து நாற்றம் வரவே, ஒருவர் மூக்கை இன்னொருவர் பிடித்துக் கொண்டு இன்னொரு கையால் அரைத்தனர்.

எல்லாவற்றையும் வழித்துச் சட்டியில் போட்டனர். அதை அடுப்பில் வைத்துக் காய்ச்சினான்.

அதன்பிறகு சீடர்கள் அனைவரும் லேகியத்தை உருண்டை பிடித்து எடுத்துக் கொண்டு குருவிடம் போனார்கள். "எங்கள் அருமை குருவே! இதோ, தொப்பை கரைச்சான் லேகியம் தயார்! உடனே இதைச் சாப்பிடுங்கள்" என்று பரமார்த்தரை வேண்டினார்கள்.

"பார்ப்பதற்குக் கொழ கொழ என்றும் கன்னங்கரேல் என்றும் இருந்த லேகியத்தைக் கண்டதுமே பரமார்த்தரின் முகம் பல கோணலாக மாறியது.

முட்டளிடமிருந்து ஓர் உருண்டையை வாங்கி மூக்கருகே கொண்ட போனார். அதிலிருந்து வந்த நாற்றம் அவர் வயிற்றைக் கலக்கியது.

"குருவே! யோசிக்காதீர்கள். நீங்கள் உயிர் வாழ வேண்டுமானால் உங்கள் தொப்பை கரைய வேண்டும். உங்கள் தொப்பை கரைய வேண்டுமானால் இதைச் சாப்பிட்டுத்தான் ஆக வேண்டும். வேறு வழியில்லை!" என்று கூறினான், மட்டி.

பரமார்த்தரும், வேறு வழியின்றி இரண்டு உருண்டைகள் விழுங்கினார்.

"குருவே! இதையும் சாப்பிட்டு விடுங்கள். அப்போதுதான் தொப்பை சீக்கிரம் கரையும்!" என்ற படி இன்னும் சில உருண்டைகளை அவர் வாயில் கட்டாயமாகத் திணித்தனர், முட்டாளும் மூடனும்.

பரமார்த்தர் தம் தொப்பையைக் கரைப்பதற்காக ஏதோ ஒரு லேகியம் சாப்பிடுவதாகக் கேள்விப்பட்ட ஊர் மக்களில் சிலர், தாங்களும் அந்த லேகியத்தைச் சாப்பிட ஆசைப்பட்டனர்.

அந்த நாட்டு அரசனுக்கும் பெரிய தொப்பை இருந்ததால், அவனும் பரமார்த்தர் தயாரித்த லேகியத்தை வாங்கிச் சாப்பிட்டு விட்டான்.

நேரம் செல்லச் செல்ல, எல்லோருக்கும் வயிற்றைக் கலக்கியது. "ஐயோ! என் தொப்பை வலிக்கிறதே!" என்று பரமார்த்தரும், மற்ற தொப்பைக்காரர்களும் அலற ஆரம்பித்தனர்.

தொப்பை கரைச்சான் லேகியம் என்று நினைத்து கண்டதையும் சாப்பிட்டதால், அனைவருக்கம் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு விட்டது. எல்லோரும் விழுந்தடித்துக் கொண்டு ஏரிக் கரைக்கு ஓடினார்கள்.

மன்னரின் நிலைமையும் மோசமாகி விடவே, பரமார்த்தர் மீது கோபம் கொண்டார்.

இத்தனைக்கும் காரணமான அந்தக் குருவைப் பத்து நாட்களுக்குச் சிறையில் அடைத்துப் பட்டினி போடுங்கள்!" என்று ஆணையிட்டான்.

சிறையிலிருந்து தள்ளாடியபடி அந்தக் குருவைக் கண்ட சீடர்களுக்கு வியப்பாகப் போயிற்று. முன்பு வீங்கியிருந்த அவரது தொப்பை இப்போது கரைந்து அளவாக இருந்தது.

"குருவே! நாங்கள் தயாரித்த லேகியம் தான் உங்கள் தொப்பையைக் கரைத்திருக்கிறது" என்று சீடர்கள் பெருமையோடு சொன்னார்கள்.

"லேகியமாவது, மண்ணாங்கட்டியாவது! சோறு தண்ணீர் இல்லாமல் பத்து நாட்கள் சிறையில் பட்டினி கிடந்தேன். அதுதான் இப்படி ஆகிவிட்டேன்!" என்றபடி பசிக் களைப்பால் சுருண்டு விழுந்தார், பரமார்த்தர்.

போர்க்களத்தில் எதிரி

மலைவளம் நிறைந்த நாடு சேர நாடு. அந்த நாட்டின் தலைநகரம் கருவூர். அங்கே இரும்பொறை என்ற அரசர் சிறப்புடன் ஆண்டு வந்தார். குல மரபையும் சேர்த்து அந்துவஞ் சேரல் இரும்பொறை, என்று அவரை அழைத்தார்கள்.

வீரம் நிறைந்த அவர் நீதிநெறி தவறாது ஆட்சி நடத்தினார். அவருடைய அரசவையில் புலவர்கள் பலர் சிறப்புப் பெற்றிருந்தனர்.

இரும்பொறையின் நெருங்கிய நண்பராக உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் என்ற புலவர் இருந்தார். இருவரும் இணை பிரியாது இருந்தனர். எங்கு சென்றாலும் ஒன்றாகவே சென்றனர்.

முடமோசியாரின் அறிவுரைகளைக் கேட்டு ஆட்சி செய்தார் இரும்பொறை.

வழக்கம் போல இருவரும் சோலையில் உலாவிக் கொண்டிருந்தார்கள்.

சிந்தனையில் ஆழ்ந்திருந்த இரும்பொறை ஏதும் பேசவில்லை.

அரசர் ஏதோ குழப்பத்தில் உள்ளார் என்பது முடமோசியார்க்குப் புரிந்தது.

அரசே! உங்கள் ஆட்சி நல்லாட்சியாக உள்ளது. மக்கள் மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள். வீரத்திலும் சிறந்து விளங்குகிறீர்கள். உங்கள் புகழ் எங்கும் பரவி உள்ளது.

ஏதோ சிந்தனையில் ஆழ்ந்தவரைப் போல உள்ளீர்களே. ஆட்சியில் ஏதேனும் குறை நேர்ந்து விட்டதா? எதுவாக இருந்தாலும் தயங்காமல் சொல்லுங்கள்.

புலவரே! உங்கள் அறிவுரைப் படி ஆட்சி செய்து வருகிறேன், எப்படிக் குறை வர முடியும்?

அரசே! வாரி வழங்கியதால் கருவூலம் காலியாகி விட்டதா? மக்களின் மேல் அதிக வரி விதிக்கும் நிலை வந்து விட்டதா?

புலவரே! மலை வளம் மிக்க நாடு நம் சேர நாடு. எவ்வளவு வாரி வழங்கினாலும் இதன் வளம் குறையாது. மக்களும் உழைப்பின் பெருமையை உணர்ந்தவர்கள். கடுமையாக உழைப்பவர்கள். நாட்டின் வளம் பெருகிக் கொண்டே செல்கிறது.

அரசே! ஏதோ சிந்தனையில் ஆழ்ந்தவரைப் போல உள்ளீர்களே?

புலவரே! வளம் மிக மிக நம் நாட்டிற்குத் தீங்கு வருமோ? மக்கள் துன்பம் அடைவார்களோ? இதை நினைத்து என் உள்ளம் கலக்கம் கொள்கிறது.

அரசே! வீரம் மிகுந்த நீங்களா இப்படிக் கலங்குகிறீர்கள்? எனக்கு வியப்பாக உள்ளது.

புலவரே! சேரர் குடியில் பிறந்தவன் நான். அச்சம் என்ற சொல்லையே அறியாதவன். ஒற்றர்கள் கொண்டு வந்த செய்தி அதிர்ச்சியைத் தந்தது. போர் மேகங்கள் நம் நாட்டைச் சூழ்ந்து வருகின்றன. எப்பொழுது வேண்டுமானாலும் போர் நிகழலாம்.

மக்கள் மகிழ்ச்சிக்கு இடையூறு வருமோ என்று தான் கலங்குகிறேன்.

அரசே! வீரம் மிக்கவர் நீங்கள். நாட்டைக் காக்க வலிமை வாய்ந்த பெரும் படை உள்ளது. எல்லா நாட்டு அரசர்களும் இதை அறிவார்கள். தனக்கே அழிவைத் தேடும் வீண் முயற்சியில் இறங்கும் அந்த அரசன் யார்?

புலவரே! சோழன் தான் அந்த அரசன். சேர நாட்டைக் கைப்பற்ற பெரும்பாட்டை திரட்டி வருகிறானாம். ஒற்றர்கள் கொண்டு வந்த செய்தி இது.

சோழ அரசர் குடித்தலைக் கோப்பெரு நற்கிள்ளியா. அவருக்கா நாடு பிடிக்கும் பேராசை? இதனால் எத்தனை உயிர்கள் அழியப் போகின்றன? இரண்டு நாடுகளுக்கும் எவ்வளவு இழப்புகள் ஏற்படப் போகின்றன? இதை அவர் அறிய வில்லையா?

புலவரே! புகழ் வெறி யாரை விட்டது? பெரும்படை இருக்கின்றது என்ற ஆணவம் அந்தச் சோழனுக்கு. இங்கே அவனுக்கும் நல்ல பாடம் கிடைக்கப் போகிறது.

அமைதியான இந்த நாட்டில் போர் ஆரவாரம் தான் எங்கும் கேட்கும். நாமும் வழக்கம் போல் அடிக்கடி சந்தித்து உரையாட இயலாது.

நாட்டின் பாதுகாப்பு வலுவாக இருக்கின்றதா என்று பார்க்க வேண்டும். படைத் தலைவர்கள். வீரர்களோடு இது குறித்துப் பேச வேண்டும். நாம் அரண்மனை திரும்புவோம், என்றார் இரும்பொறை.

இருவரும் அங்கிருந்து சென்றார்கள்.

சோழ நாட்டுத் தலை நகரம் உறையூர். அரசவை கூடியுள்ளது. அரியணையில் முடித்தலைக் கோப்பெரு நற்கிள்ளி பெருமிதத்துடன் வீற்றிருந்தார்.

அமைச்சர்கள், படைத் தலைவர், அவையினர் அவரவர் இருக்கைகளில் அமர்ந்து இருந்தனர்.

அவையினரே! என் முன்னோர்கள் இமயத்தை வென்று வெற்றிக் கொடி நாட்டினார்கள். அவர்கள் வீரத்தால் இந்தச் சோழ நாடே பெருமை பெற்றது. அவர்களைப் போன்று நானும் பெருமை பெற விரும்புகிறேன், என்றார் அரசர்.

படைத் தலைவர் எழுந்து, அரசே! கடல் போன்று சோழ நாட்டுப் படை உள்ளது. உங்கள் கட்டளைக்குக் காத்திருக்கிறது. விண்ணுலகையும் வெல்லும் ஆற்றல் வாய்ந்தவர்கள் நம் வீரர்கள். இமயத்தை வெல்லுவதா அவர்களுக்கு அரிய செயல், என்றார்.

படைத் தலைவரே! என் எண்ணத்தை அண்மையில் தான் வெளியிட்டேன். உடனே பெரும்படை திரட்டி விட்டீர்களே. மிக்க மகிழ்ச்சி.

அரசே! நம் வீரர்கள் எப்பொழுது போர் வருமென்று ஆவலுடன் காத்திருந்தார்கள். செய்தி அறிந்தவுடன் எல்லோரும் போருக்குத் தயாராகி விட்டார்கள்.

சேர நாட்டின் மீது படை எடுக்க வேண்டும். அதை வெல்ல வேண்டும். இதுதான் முதல் முயற்சி.

அமைச்சர் எழுந்து அரசே! என் கருத்தை இங்கே சொல்லலாமா? என்று கேட்டார்.

அமைச்சரே! எல்லோர் கருத்தையும் கேட்பதற்காகத்தான் அரசவை உள்ளது. தயங்காமல் சொல்லுங்கள்.

அரசே! நமக்கும் சேர நாட்டிற்கும் பகை ஏதும் இல்லை. சேர நாட்டு அரசரும் உங்களைப் போலவே சிறந்த வீரர். அந்நாட்டு மக்களும் வீரம் மிக்கவர்கள். பேரழிவை ஏற்படுத்தும் இந்தப் போர் தேவையா? சிந்தியுங்கள்.

அமைச்சரே! வலிமை வாய்ந்த அரசனோடு போரிட்டு வென்றால்தானே நமக்குப் பெருமை. பக்கத்தில் வலிமை வாய்ந்த நாடு இருப்பது நமக்கு எப்போதுமே தொல்லை. சேர அரசனை வென்றால் என் புகழ் உலகெங்கும் பரவும். அந்த நாட்டின் செல்வமும் நம் கருவூலத்தில் சேரும். நம் நாடு மேலும் வளம் பெறும்.

அரசே! அமைதியை விரும்பிய நான் என் எண்ணத்தைச் சொன்னேன். வீரம் மிக்கவராகிய நீங்கள் போர் செய்யவே துடிக்கிறீர்கள், என்று அமர்ந்தார் அமைச்சர்.

படைத் தலைவரே! ஒரு திங்களில் நம் படை சேர நாட்டிற்குப் புறப்பட வேண்டும். இந்தப் போருக்கு நானே தலைமை ஏற்கப் போகிறேன். என் வீரத்தை உலகமே அறிந்து போற்றப் போகிறது. எல்லா ஏற்பாடுகளையும் விரைந்து செய்து முடியுங்கள்.

அரசே! கட்டளையை உடனே நிறைவேற்றுகிறேன், என்றார் படைத் தலைவர்.

என் எண்ணம் நிறைவேறும் நாள் வந்து விட்டது. சோழ நாட்டு வெற்றிக் கொடி பல நாடுகளில் பறக்கப் போகிறது, என்று மகிழ்ச்சியுடன் சொன்னார்.

அவையினர் உணர்ச்சிப் பெருக்குடன், சோழ அரசர் வாழ்க, என்று வாழ்த்தொலி எழுப்பினார்கள்.

கருவூர் நகர வீதிகளில் போர் வீரர்கள் அணிவகுத்துச் சென்றனர். அமைதி தவழ்ந்த அந்த நகரத்தில் எங்கும் ஆரவாரம் கேட்டது.

அரண்மனையில் அரசனும் புலவர் முடமோசியாரும் உரையாடிக் கொண்டிருந்தனர்.

அங்கு வந்த படைத் தலைவர் பணிவாக அரசனை வணங்கினார்.

படைத் தலைவரே! என்ன செய்தி?

அரசே! சோழர் படை நம் நாட்டிற்குள் நுழைந்து விட்டது. நம் காப்பு அரண்களை எல்லாம் அழித்து விட்டார்கள். தலை நகரின் அருகே பாசறை அமைத்துத் தங்கி உள்ளார்கள். எங்கே எப்பொழுது போரிடலாம்? இது குறித்து நம் பதிலை எதிர்பார்த்து இருக்கிறார்கள்.

நாம் அவர்களைக் காக்க வைக்க வேண்டாம். விரைவில் போர் செய்வோம். எதிரிகளை விரட்டி அடிப்போம். நம் படைகள் எல்லாம் தயார் நிலையில் உள்ளனவா?

அரசே! நம் நால்வகைப் படைகளும் போருக்குத் தயாராக உள்ளன. நம் படையினர் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளார்கள். நம் படைகளின் அணிவகுப்பை நீங்கள் பார்வையிட வேண்டும்.

படைத் தலைவரே! கோட்டைக்கு வெளியே நாளை நம் படை வீரர்கள் அணிவகுத்து நிற்கட்டும். நானும் முடமோசியாரும் கருவூர்க் கோட்டை வேண்மாடத்தில் இருந்து பார்வை இடுகிறோம். நாளை மறுநாள் படைக்குத்

தலைமை தாங்குகிறேன். எதிரிகளோடு போரிட்டு வெல்கிறேன்.

தங்கள் கட்டளை அரசே! என்ற படைத் தலைவர் வணங்கி விட்டுச் சென்றார்.

முடமாசியாரே! போர் நிகழ உள்ளது. நம் வீரர்கள் எவ்வளவு மகிழ்ச்சியுடனும் ஆர்வத்துடனும் இருக்கிறார்கள். பார்த்தீரா?

ஆம் அரசே! நம் நாட்டு மக்கள் வீரம் மிக்கவர்கள். எதற்கும் கலங்காதவர்கள். எத்தகைய பெரிய படையையும் அழிக்கும் ஆற்றல் வாய்ந்தவர்கள்.

புலவரே! சேரனின் வீரத்தை இந்த உலகமே வியந்து போற்றப் போகிறது. பகைவரின் செங்குருதி வெள்ளத்தில் நில மகள் நீராடப் போகிறாள், என்று உணர்ச்சி பொங்கப் பேசினார் இரும்பொறை.

அரசே! நாம் நாளை சந்திப்போம், என்று சொல்லி விடை பெற்றார் முடிமோசியார்.

கருவூர்க் கோட்டைக்குச் சிறிது தொலைவில் சோழர் படையின் பாசறை இருந்தது.

காலை நேரம். சோழ வீரர்கள் ஆங்காங்கே போர்ப் பயிற்சி செய்து கொண்டு இருந்தார்கள்.

சோழ அரசர் நற்கிள்ளி அவர்களைப் பாராட்டிக் கொண்டே சென்றார்.

குன்றுகளை ஒத்த யானைகள் இருந்த இடத்திற்கு வந்தார் அவர். வலிமை வாய்ந்த யானைப் படையைக் கண்டு மகிழ்ச்சி அடைந்தார்.

எதிரிகளை வெல்ல இந்த யானைப் படையே போதுமே. நம்மை எதிர்த்து ஒரு நாள் கூட அவர்களால் போர் செய்ய முடியாது, என்று நினைத்தார் அவர்.

அங்கிருந்த பட்டத்து யானை பிளிறியது. அந்த யானையின் அருகே சென்றார் அவர்.

பாகன் பரபரப்புடன் ஓடி வந்தான். அரசரைப் பணிவாக வணங்கினான்.

பாகனே! பட்டத்து யானையின் மேல் அமர்ந்து நம் படையை பார்வையிட விரும்புகிறேன்.

தயக்கத்துடன் பாகன், அரசர் பெருமானே! பட்டத்து யானை அடிக்கடி பிளிறுகிறது. இரண்டு நாட்களாக எனக்கும் கட்டுப்பட மறுக்கிறது. மதம் பிடித்தது போல உள்ளது.

பட்டத்து யானையின் மேல் அமர வேண்டாம். இன்று மாலைக்குள் பட்டத்து யானையைப் பழைய நிலைக்குக் கொண்டு வந்து விடுவேன். என்னை மன்னியுங்கள், என்று பணிவுடன் சொன்னான்.

பாகனே! மதம் கொண்ட யானையை நான் அடக்குகிறேன், என்று சொன்னார் அவர். யானையின் மேல் ஏறி அமர்ந்தார்.

அரசே! வேண்டாம். நான் சொல்வதைக் கேளுங்கள், என்று கெஞ்சினான் பாகன்.

யானையோ பிளிறியபடி வேகமாக ஓடத் தொடங்கியது.

பாகன் திகைத்து நின்றான்.

பட்டத்து யானைக்கு மதம் பிடித்து விட்டது. அரசரைச் சுமந்து ஓடுகிறது, என்ற கூக்குரல் பாசறை எங்கும் ஒலித்தது.

வீரர்கள் ஓடி வந்தார்கள்.

ஐயோ! பட்டத்து யானை கருவூர்க் கோட்டையை நோக்கிச் செல்கிறதே. அதைத் தடுப்பார் இல்லையே, என்று எல்லோரும் அலறினார்கள்.

வேகமாக ஓடிய யானையைப் பின் தொடர வீரர்களால் முடியவில்லை.

யானை அவர்கள் கண்களில் இருந்து மறைந்தது.

கருவூர்க் கோட்டைத் திடலில் சேர நாட்டு வீரர்கள் அணிவகுத்து நின்றனர்.

கோட்டையின் வேண்மாடத்தில் இரும்பொறையும் முடமோசியாரும் நின்று இருந்தனர். படை வீரர்களின் அணிவகுப்பைப் பார்த்தனர்.

புலவரே! கண்ணுக்கு எட்டிய தொலைவு நம் வீரர்களே உள்ளனர். சேர அரசர் வாழ்க! வெற்றி வேந்தர் வாழ்க, என்று விண்ணதிர முழக்கம் செய்கின்றனர். போர் வேண்டி அவர்கள் செய்யும் ஆரவாரம் உங்களுக்குக் கேட்கிறதா?

அரசே! சேர வீரர்களின் வீரத்தை எல்லோரும் அறிவார்கள். எங்களைப் போன்ற புலவர்கள் போரை விரும்ப மாட்டார்கள். அதனால் மக்களுக்கு அழிவுதான் ஏற்படுகிறது. ஒரு போர் மற்றொரு போருக்கு அழைத்துச் செல்கிறது. அதனால் மக்கள் தொடர்ந்து பெருந் துன்பத்தை அடைகிறார்கள்.

புலவரே! நாங்கள் போரையா விரும்பினோம்? சோழன் தூங்கும் புலியை எழுப்பி விட்டான். புலியின் சீற்றத்தையும் வலிமையையும் அவன் சந்தித்தே ஆக வேண்டும்.

அரசே! அதோ பாருங்கள். எங்கிருந்தோ யானை ஒன்று ஓடி வருகிறது. படை அணிவகுப்பிற்குள் நுழைந்து விட்டது. படை அணிவகுப்பிற்குள் நுழைந்து விட்டது. தன் துதிக்கையால் வீரர்கள் சிலரைத் தூக்கி எறிந்து விட்டது. அந்த யானையின் மேல் ஒரு வீரன் அமர்ந்து உள்ளான்.

ஆம் புலவரே! அந்த யானையின் மேல் நம் எதிரி ஒருவன் உள்ளான். படை அணிவகுப்பிற்குள் நுழைந்து குழப்பம் விளைவிக்கிறான். என்ன துணிவு அவனுக்கு?

அரசே! நம் வீரர்கள் அந்த யானையைச் சூழ்ந்து விட்டனர். யானையும் கோட்டையின் அருகே வந்து விட்டது. இனி எந்த எதிரியால் தப்ப முடியாது. அவன் தோற்றம் இப்பொழுது தெளிவாகத் தெரிகிறது.

புலவர் தனக்குள் ஆ! யானையின் மேல் இருப்பவர் சோழ அரசர் நற்கிள்ளி அல்லவா? எதற்காக அவர் யானையின் மேல் தனியே இங்கு வந்தார்?

மதம் கொண்ட யானையை அவர் அடக்க முயற்சி செய்திருக்க வேண்டும். அவருக்குக் கட்டுப்படாத யானை இங்கே வந்திருக்க வேண்டும். அரசர் இரும்பொறைக்கு உண்மையை உணர்த்த வேண்டும்? என்று நினைத்தார்.

புலவரே! ஏன் திடீரென்று அமைதியாகி விட்டீர்?

அரசே! அந்த யானையில் மேல் இருப்பவர் சோழ அரசர்.

புலவரே! நீங்கள் சொல்வது உண்மையா? யானையின் மேல் இருப்பது சோழ அரசனா? நன்றாகப் பார்த்துச் சொல்லுங்கள்.

அரசே! அவர் சோழ அரசர் முடித்தலைக் கோப்பெரு நற்கிள்ளிதான். நான் அவரைப் பலமுறை சந்தித்து இருக்கிறேன்.

அவர் ஏன் யானையின் மேல் அமர்ந்து தனியே இங்கே வந்தார்?

அரசே! யானைக்கு மதம் பிடித்திருக்க வேண்டும். அதை அடக்க அவர் முயற்சி செய்திருக்க வேண்டும். அவர்க்கு அடங்காமல் யானை இங்கே வந்திருக்க வேண்டும்.

புலவரே! நீங்கள் சொல்வது போலத்தான் நடந்திருக்க வேண்டும். அங்கே பாருங்கள். நம் வீரர்கள் அந்த யானையைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து விட்டார்கள்.

அரசே! யானையின் மேல் இருப்பவர் உங்கள் எதிரிதான். தனியே உங்களிடம் சிக்கி உள்ளார். அவருக்கு எந்தத் துன்பமும் செய்யாதீர்கள்.

அவருக்கு ஏதேனும் நேர்ந்தால் உலகம் என்ன சொல்லும்? தனியே தளர்ந்து வந்த அரசனைக் கொன்றான் சேரன். இவ்வாறு உலகமே உங்களை இகழும். புகழ் வாய்ந்த சேரர் குடிக்கே தீராப் பழி நேரும்.

புலவரே! என்னோடு இவ்வளவு காலம் பழகி இருக்கிறீர்கள். என் உள்ளத்தை அறிய வில்லையே. உண்மையான வீரர்கள் போர்க்களத்தில் தான் வீரத்தைக் காட்டுவார்கள். எந்தச் சூழலிலும் போர் அறத்தை விட மாட்டார்கள். தனியே சிக்கிய எதிரிக்குத் தொல்லை தருபவனா நான்?

அருகில் நின்றிருந்த வீரனைப் பார்த்து, யானையின் மேல் இருப்பவர் சோழ அரசர். அரசருக்கு உரிய சிறப்புடன் இங்கே அழைத்து வாருங்கள். என்று கட்டளை இட்டார்.

அரசர் வாழ்க, என்ற அந்த வீரன் சென்றான்.

சிறிது நேரத்தில் வீரர்கள் சூழச் சோழ அரசர் அங்கு வந்தார். தலை கவிழ்ந்த வண்ணம் அவர் இருந்தார்.

முகம் மலர அவரை வரவேற்றார் சேர அரசர்.

வாருங்கள்! சோழ அரசரே! எதிர்பாராமல் நிகழ்ந்த சந்திப்பு இது. உங்கள் வருகையால் இந்தக் கருவூர் நகரமே சிறப்புப் பெற்றது. என் அருகே இருப்பவர் பெரும்புலவர் ஏணிச்சேரி முடமோசியார். என் இனிய நண்பர். அவரால்தான் உங்களை அறிந்து கொள்ளும் பேறு பெற்றேன், என்றார்.

ஏதும் பேசாமல் தலை கவிழ்ந்தபடி நின்றார் சோழ அரசர்.

இங்கு வந்த சூழலை எண்ணி நீங்கள் வருந்த வேண்டாம். எங்கள் விருந்தினராகச் சிறிது நேரம் இங்கே இருங்கள். பிறகு உங்கள் எண்ணம் போலச் செய்யுங்கள்.

இங்கே உங்களைத் தடுப்பார் யாரும் இல்லை. நாளை நாம் இருவரும் போர்க்களத்தில் சந்திப்போம்.

போர்க்களத்தில் தான் நீங்கள் என் எதிரி. எதிர்பாராத நிகழ்ச்சிகளால் நீங்கள் இங்கே வந்து விட்டீர்கள். தனியே நுழைந்த நீங்கள் என் நண்பர். எந்தச் சூழலிலும் போர் அறத்தை நான் மீற மாட்டேன், என்றார் இரும்பொறை.

நற்கிள்ளி தலை நிமிர்ந்து இரும்பொறையைப் பார்த்தார்.

நண்பரே! மண்ணாசையால் உங்களோடு போரிடப் பெரும் படையுடன் வந்தேன். யானை மதம் பட்டதால் உங்கள் பெருமித உள்ளத்தை அறிந்தேன்.

உங்களைப் போரில் வெற்றி கொள்ள நினைத்தேன். உண்மையில் வெற்றி பெற்றவர் நீங்கள் தான். இனி நமக்குள் போரே வேண்டாம். நாம் இருவரும் நல்ல நண்பர்களாக இருப்போம், என்றார்.

இரு அரசர்களும் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவிக் கொண்டனர்.

நண்பரே! நீங்களும் உங்கள் வீரர்களும் எங்களின் விருந்தினர்களாக இங்கே தங்க வேண்டும். சேர நாட்டு விருந்தோம்பலை நீங்கள் அறிய வேண்டும். இது என் வேண்டுகோள், என்றார் இரும்பொறை.

அப்படியே ஆகட்டும், என்றார் சோழ அரசர்.

அருகில் இருந்த புலவர் மகிழ்ச்சியுடன் போரே இல்லாத உலகத்தைக் கனவு கண்டேன். அப்படிப்பட்ட உலகத்தில் மக்கள் அமைதியாகவும். வளமாகவும் வாழ்வார்கள். நற்பண்புகள் கொண்ட உங்கள் இருவரால் என் எண்ணம் நிறைவேறியது. உங்களுக்கு என் பாராட்டுகள், என்றார்.

அணிவகுத்து நின்ற சேர வீரர்கள், சோழ அரசர் வாழ்க, என்று வாழ்த்தொலி எழுப்பினார்கள்.

இரண்டு அரசர்களும் மகிழ்ச்சியுடன் உரையாடிக் கொண்டே அரண்மனைக்குள் நுழைந்தார்கள்.

இவனியா ரென்குவை யாயி னிவனே

புலிநிறக் கவசம் பூம்பொறி சிதைய

எய்கணை கிழித்த பகட்டெழின் மார்பின்

மறலி யன்ன களிற்று மிசையோனே

களிறே, முந்நீர் வழங்கு நாவாய் போலவும்

பன்மீ னாப்பட் டிங்கள் போலவும்

சுறவினத் தன்ன வாளோர் மொய்ப்ப

மரீஇயோ ரறியாது மைந்துபட் டன்றே

(புறநானூற்றுப் பாடல் 13, அடிகள் 1 முதல் 8 வரை. பாடியவர் உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.