Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

stream_title_14

Showing all content posted in for the last 365 days.

This stream auto-updates

  1. Past hour
  2. ஊடகவியலாளர்கள் படுகொலைக்கு ஈரான் கடும் கண்டனம் Published By: Digital Desk 3 29 Mar, 2026 | 04:52 PM லெபனானில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் மூன்று ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டமை, உலக நாடுகளின் மனச்சாட்சியை உலுக்கும் ஒரு எச்சரிக்கை என ஈரானிய வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சி தெரிவித்துள்ளார். லெபனானின் 'ஜெஸின்' நகரில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பினால் நடத்தப்படும் 'அல் மனார்' தொலைக்காட்சியின் ஊடகவியலாளர் அலி ஷோயப், 'அல் மாயடீன்' ஊடகத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள்பாத்திமா மற்றும் முகமது ஃபெடோனி ஆகியோர் உயிரிழந்துள்ளனர் இந்தச் சம்பவம் குறித்து சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ள ஈரானிய வெளிவிவகார அமைச்சர், "இது தற்செயலான தாக்குதல் அல்ல, மாறாக உண்மையை உரக்கச் சொல்பவர்களின் குரல்களை ஒடுக்குவதற்காக நடத்தப்பட்ட திட்டமிட்ட படுகொலை எனச் சாடியுள்ளார். இதேவேளை, ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் அமைந்துள்ள கத்தாரின் 'அல்-அரபி' செய்தி நிறுவனத்தின் அலுவலகம் இஸ்ரேலிய ஏவுகணைத் தாக்குதலில் பலத்த சேதமடைந்துள்ளது. கட்டிடத்தின் ஜன்னல்கள் மற்றும் தளபாடங்கள் முற்றாகச் சேதமடைந்ததால், அங்கிருந்து முன்னெடுக்கப்பட்டு வந்த நேரலை ஒளிபரப்புகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. அலுவலகத்திற்கு வெளியேயிருந்த வாகனங்கள் மற்றும் வீதிகள் பாரிய அளவில் உருக்குலைந்துள்ளன. https://www.virakesari.lk/article/242244
  3. அமெரிக்காவில் ட்ரம்ப்புக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டம்! Published By: Digital Desk 3 29 Mar, 2026 | 12:12 PM (இணையத்தள சர்வதேச செய்திப் பிரிவு) அமெரிக்கா முழுவதும் உள்ள நகரங்களில் ட்ரம்ப் ட்ரம்ப்பிற்கு எதிராக மாபெரும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் கொள்கைகள், அதிகரித்து வரும் விலைவாசி, ஈரானுக்கு எதிராக நடந்து வரும் போர் ஆகியவற்றால் ஏற்பட்டுள்ள பொருளாதார சிக்கல்கள் உள்ளிட்டவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. சுமார் 70 இலட்சம் மக்கள் இந்தப் போராட்டங்களில் பங்கேற்றிருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. "ட்ரம்ப் ஒரு சர்வாதிகாரியைப் போல எங்களை ஆள நினைக்கிறார். ஆனால் இது அமெரிக்கா, இங்கு அதிகாரம் மக்களுக்கே உரியது; மன்னர்களுக்கோ அல்லது அவர்களின் கோடீஸ்வர நண்பர்களுக்கோ அல்ல" எனப் போராட்ட அமைப்பாளர்கள் கோசமிட்டுள்ளனர். இந்தப் போராட்டங்களைக் கிண்டல் செய்துள்ள வெள்ளை மாளிகை ஊடகப் பேச்சாளர், இவை "ட்ரம்ப் மீதான மனநோய் சிகிச்சை அமர்வுகள்" எனச் சாடியுள்ளார். தேசிய நினைவிடங்கள் மற்றும் லிங்கன் நினைவிடம் அமைந்துள்ள பகுதிகள் போராட்டக்காரர்களால் நிரம்பி வழிந்துள்ளன. டைம்ஸ் சதுக்கத்தில் சுமார் ஒரு இலட்சத்திற்கும் அதிகமானோர் திரண்டதால், மன்ஹாட்டன் பகுதியின் போக்குவரத்து முழுமையாக முடக்கப்பட்டது. கடந்த ஜனவரி மாதம் குடிவரவு அதிகாரிகளால் கொல்லப்பட்ட அமெரிக்கப் பிரஜைகளான ரெனீ நிக்கோல் குட் மற்றும் அலெக்ஸ் பிரெட்டி ஆகியோரின் மரணத்திற்கு நீதி கோரி அங்குப் ஆயிரக்கணக்கானோர் திரண்டனர். பிரபல பாடகர் புரூஸ் ஸ்பிரிங்ஸ்டீன் அங்குப் பாடல்களைப் பாடி போராட்டக்காரர்களை உற்சாகப்படுத்தியுள்ளார். அமெரிக்காவில் மட்டுமன்றி, லண்டன், பாரிஸ் மற்றும் லிஸ்பன் போன்ற உலக நாடுகளின் தலைநகரங்களிலும் புலம்பெயர் அமெரிக்கர்கள் திரண்டு ட்ரம்ப்பிற்கு எதிராகப் போராட்டங்களை நடத்தினர். அங்குப் ஜனாதிபதி ட்ரம்ப்பை "போர்க்குற்றவாளி" மற்றும் "பாசிசவாதி" எனப் போராட்டக்காரர்கள் விமர்சித்துள்ளனர். போராட்டங்கள் அமைதியான முறையில் நடைபெற்று வந்தாலும், அசம்பாவிதங்களைத் தவிர்க்கப் பல மாநிலங்களில் தேசிய பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி அரசியல் எதிரிகளைத் தண்டிக்க முற்படுவதாகவும், இராணுவத்தை உள்நாட்டு நகரங்களில் நிலைநிறுத்துவதாகவும் எதிர்க்கட்சியினர் கடுமையாகக் குற்றம் சாட்டி வருகின்றனர். https://www.virakesari.lk/article/242214
  4. அமெரிக்க ஏகாதிபத்தியமும் சியோனிச இஸ்ரேலும் தோற்கடிக்கப்பட வேண்டும் - புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி தெரிவிப்பு 29 Mar, 2026 | 01:06 PM (க.சிவலிங்கமூர்த்தி) மத்திய கிழக்கின் இறையாண்மை கொண்ட நாடான ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து தொடுத்துள்ள ஆக்கிரமிப்புப் போர் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் எனவும், உலக மேலாதிக்கச் சக்தியான அமெரிக்க ஏகாதிபத்தியமும் அதன் கூட்டாளியான சியோனிச இஸ்ரேலும் தோற்கடிக்கப்பட வேண்டும் எனவும் புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி அறைகூவல் விடுத்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் சி.கா. செந்திவேல் விடுத்துள்ள விசேட அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது மத்திய கிழக்கில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த ஈரான் நாட்டை ஆக்கிரமித்து, அங்கு தமக்குச் சாதகமான ஒரு கைப்பொம்மை ஆட்சியை நிறுவுவதே அமெரிக்காவினதும் இஸ்ரேலினதும் நோக்கமாகும். கடந்த பெப்ரவரி மாதம் 28ஆம் திகதி ஈரானுக்கு எதிராகத் தொடங்கப்பட்ட இந்தக் கொடிய போர், தற்போது ஒரு மாதத்தை எட்டியுள்ளது. தனது உலக மேலாதிக்கத்தைத் தக்கவைக்க அமெரிக்காவும், தனது விரிவாக்கக் கனவை நனவாக்க இஸ்ரேலும் இணைந்து இந்த அநீதியான போரை முன்னெடுத்து வருகின்றன. அமெரிக்கா உலகின் முதல் நிலை வல்லரசு என்றும், இஸ்ரேல் அசைக்க முடியாத பலம் கொண்ட நாடு என்றும் கட்டமைக்கப்பட்டிருந்த பிம்பங்கள், ஈரானிய மக்களின் வீரமிக்க எதிர்ப்பினால் இன்று உடைந்து நொறுங்கி வருகின்றன. 'மக்களே உலக வரலாற்றின் உந்துசக்தி' என்பதை ஈரானிய மக்கள் இன்று உலகுக்கு நிரூ பித்துக் காட்டியுள்ளனர். ஏகாதிபத்திய எதிர்ப்பில் உறுதியாக நிற்கும் ஈரானிய மக்களுக்கும் அந்நாட்டு ஆட்சியாளர்களுக்கும் எமது கட்சியும் இலங்கை மக்களும் தமது முழுமையான ஆதரவையும் ஒருமைப்பாட்டையும் தெரிவிக்கின்றனர். ஏகாதிபத்தியம் என்பது போர் மற்றும் இரத்தத்தால் ஆனது என்பதை நடப்பு நிகழ்வுகள் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளன. இப்போரின் விளைவாக இலங்கை உள்ளிட்ட மூன்றாம் உலக நாடுகள் கடும் பொருளாதார நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்றன. எரிபொருள் தட்டுப்பாடு, அநியாயமான விலை ஏற்றம் மற்றும் பொருளாதார வீழ்ச்சி போன்றவற்றால் கோடிக்கணக்கான உழைக்கும் மக்களின் அன்றாட வாழ்வு சிதைக்கப்பட்டுள்ளது. பசி, பட்டினி மற்றும் வேலையில்லாத் திண்டாட்டத்தை உலக மக்களுக்குப் பரிசாக அளிக்கும் முதலாளித்துவ சக்திகள், மக்களின் வளங்களைச் சுரண்டி நவீன போராயுதங்களை உற்பத்தி செய்வதிலேயே குறியாக உள்ளனர். உலக மக்களின் பொது எதிரியான அமெரிக்க ஏகாதிபத்தியத்தையும் அதன் கூட்டாளியான சியோனிச இஸ்ரேலையும் முறியடிப்பது இன்றைய காலத்தின் உடனடித் தேவையாகும். எனவே, ஏகாதிபத்திய மேலாதிக்கத்தை எதிர்த்துப் போராட அனைத்து இடதுசாரி, முற்போக்கு மற்றும் ஜனநாயகச் சக்திகள் ஓரணியில் திரள வேண்டும் என எமது கட்சி கேட்டுக்கொள்கிறது என்றார். https://www.virakesari.lk/article/242217
  5. மோடிக்கு நன்றி கூறிய அநுர Mar 29, 2026 - 03:41 PM எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வாக இந்தியாவில் இருந்து எரிபொருள் கப்பல் ஒன்று இலங்கைக்கு அனுப்பப்பட்டமைக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க நன்றித் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க எக்ஸ் கணக்கில் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மத்திய கிழக்கு மோதலினால் இலங்கை எதிர்கொண்டுள்ள எரிபொருள் விநியோகத் தடைகள் குறித்து சில நாட்களுக்கு முன்னர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் கலந்துரையாடினேன். இந்தியாவின் விரைவான ஆதரவிற்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நேற்று 38,000 மெட்ரிக் தொன் எரிபொருள் கொழும்பை வந்தடைந்தது. இதனை கிடைப்பதற்கு ஒருங்கிணைத்த இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கருக்கும் நன்றிகள் என தெரிவித்துள்ளார். https://adaderanatamil.lk/news/cmnblnbxc000n356p0byh5vr2
  6. ஹோர்முஸ் நீரிணை வழியாக 20 பாகிஸ்தான் கப்பல்கள் பயணிக்க ஈரான் அனுமதி! Mar 29, 2026 - 02:39 PM பாகிஸ்தான் கொடியுடன் கூடிய 20 கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணை வழியாகப் பயணிப்பதற்கு ஈரான் இணக்கம் தெரிவித்துள்ளதாக பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த உடன்படிக்கையின் கீழ், தினசரி இரண்டு பாகிஸ்தான் கப்பல்கள் வீதம் இந்த கடல் வழிப்பாதையின் ஊடாகப் பயணிக்கும் என பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் இஷாக் தார் தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார். "இது ஈரானால் எடுக்கப்பட்ட மிகவும் சாதகமான மற்றும் ஒத்துழைப்புடன் கூடிய ஒரு நடவடிக்கையாகும், இது பாராட்டப்பட வேண்டும்... இது அமைதிக்கான ஒரு முன்னோடியாகும் மற்றும் பிராந்தியத்தில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த உதவும்" என இஷாக் தார் அங்கு குறிப்பிட்டுள்ளார். தற்போதைய பதற்றமான சூழ்நிலைகளைத் தணிப்பதற்கான ஒரு அர்த்தமுள்ள நடவடிக்கையாக இது அமைந்துள்ளதாகவும், அமைதிக்கான முயற்சிகளை வலுப்படுத்த இது வழிவகுக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். https://adaderanatamil.lk/news/cmnbik3dy000m356ph638jyp3
  7. மாகாணசபைத் தேர்தல் குறித்த பாராளுமன்ற விசேட குழுவில் சட்டமா அதிபர், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் முன்னிலை 29 Mar, 2026 | 01:07 PM (இராஜதுரை ஹஷான்) மாகாணசபைத் தேர்தல் குறித்து ஆராய்ந்து விதப்புரைகளை முன்வைக்க நியமிக்கப்பட்ட பாராளுமன்ற விசேட குழுவில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 7 ஆம் திகதி சட்டமா அதிபர் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் ஆணைக்குழுவின் உயர் அதிகாரிகள் முன்னிலையாகவுள்ளனர். கடந்த 9 ஆண்டுகளாக மாகாண சபைகள் கூட்டப்படாததால் பல பிரச்சினைகள் தோற்றம் பெற்றுள்ளன. எனவே மாகாண சபைத் தேர்தல்களை பழைய விகிதாசார முறைப்படி நடத்த வேண்டும். பின்னர் தேர்தல் முறையைத் திருத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் செயற்குழுவில் முன்மொழிந்தனர். மாகாண சபைத் தேர்தல்களை எந்தத் தேர்தல் முறைமையின் கீழ் நடத்தப்பட வேண்டும் என்பதை ஆராய்ந்து அறிக்கையிடுவதற்கும், அது தொடர்பான முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்கான பாராளுமன்ற விசேட குழு அதன் தலைவர் அமைச்சர் விஜித ஹேரத் தலைமையில் கடந்த 17 ஆம் திகதி முதல் தடவையாகக் கூடியது. மாகாணசபைத் தேர்தல்கள் சட்டம் திருத்தப்பட்டு தற்பொழுது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள 2017ஆம் ஆண்டின் 17ஆம் இலக்க சட்டத்தின் ஏற்படுகளுக்கு அமைய அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கலப்பு விகிதாசார பிரதிநிதித்துவ முறையை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான வட்டார எல்லைகளை தீர்மானிக்கும் நடைமுறை இதுவரையில் பூர்த்திசெய்யப்படாமையால் உருவாகியுள்ள சட்டரீதியான தடையின் காரணமாக மாகாண சபை தேர்தல்களை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்று குழுவின் தலைவர் அமைச்சர் விஜித்த ஹேரத் சுட்டிக்காட்டியுள்ளார். கல்வி மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட பெரும்பாலான முக்கிய நிறுவனங்கள் மாகாண சபைகள் மூலமே நிர்வகிக்கப்படுகின்றன என்று எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் இதன்போது சுட்டிக்காட்டினர். இதற்கமைய கடந்த 9 ஆண்டுகளாக மாகாண சபைகள் கூட்டப்படாததால் பல பிரச்சினைகள் எழுந்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். எனவே மாகாண சபைத் தேர்தல்களை பழைய விகிதாசார முறைப்படி நடத்த வேண்டும் என்றும், பின்னர் தேர்தல் முறையைத் திருத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முன்மொழிந்தனர். மாகாணசபைத் தேர்தல்களில் பெண்களின் பிரதிநிதித்துவத்தையும் இளைஞர்களின் பிரதிநிதித்துவத்தையும் கட்டாயமாக்கும் ஒரு தேர்தல் முறையை உருவாக்குவத தொடர்பில் பரந்த, ஆழமான கலந்துரையாடல்களை முன்னெடுக்க வேண்டியதன் அவசியத்தை குழுவின் தலைவர் வலியுறுத்தினார். அதன்படி, மாகாணசபைத் நடத்துவதற்கு தற்போதைய சட்ட நிலைமை குறித்த அடிப்படைப் புரிதலைப் பெறுவதன் முக்கியத்துவத்தை தலைவர் வலியுறுத்தியுள்ளதுடன், இது தொடர்பான சட்ட ரீதியான வாய்ப்புக்கள் குறித்த கருத்துக்களைப் பெறுவதற்காக சட்டமாஅதிபர் அலுவலகம் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழு ஆகியவற்றின் அதிகாரிகளை அழைப்பதற்கும் குழுவின் தலைவர் முன்மொழிந்தார்.இதற்கமைய சட்டமா அதிபர் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் அதிகாரிகள் எதிர்வரும் 7 ஆம் திகதி குழுவில் முன்னிலையாகவுள்ளனர். https://www.virakesari.lk/article/242218
  8. "நரகத்திற்கு வரவேற்கிறோம்" - அமெரிக்காவின் தரைவழித் தாக்குதல் ஊகங்களுக்கு இரான் கூறும் பதில் என்ன? பட மூலாதாரம்,American marin VANO SHLAMOV AFP via Getty Images படக்குறிப்பு,இரான் நாட்டில் தரைவழித் தாக்குதலைத் தொடங்க அமெரிக்கா தயாராகி வருவதாக வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது (கோப்புப் படம்). 16 நிமிடங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள் இந்தியாவிலுள்ள இரான் தூதரகம், 'தெஹ்ரான் டைம்ஸ்' பத்திரிகையின் ஒரு சிறப்புப் பதிப்பின் பக்கத்தைப் பகிர்ந்து, 'நரகத்திற்கு உங்களை வரவேற்கிறோம்' என்று எழுதியுள்ளது. தெஹ்ரான் டைம்ஸின் அந்தப் பக்கத்தின் தலைப்பே 'நரகத்திற்கு உங்களை வரவேற்கிறோம்' என்பதுதான். அதில், "இரான் மண்ணில் கால் வைக்கும் அமெரிக்க வீரர்கள் சவப்பெட்டிகளில் மட்டுமே திரும்புவார்கள்" என்றும் எழுதப்பட்டுள்ளது. முன்னதாக, பென்டகன் இரான் மீது பல வாரங்களுக்கு தரைவழித் தாக்குதல் நடத்தத் தயாராகி வருவதாக 'வாஷிங்டன் போஸ்ட்' ஆங்கில இதழ் எழுதியிருந்தது. "பேச்சுவார்த்தை ஒருபுறம், தாக்குதல் சதி மறுபுறம்" பட மூலாதாரம்,Ghalibaf NurPhoto via Getty Images படக்குறிப்பு,இரான் சரணடைவது குறித்த கேள்விக்கு பதிலளித்த இரான் நாடாளுமன்ற சபாநாயகர் காலிபாஃப், இரான் "அவமானத்தை" ஏற்காது என்று கூறினார் (கோப்புப் படம்). இரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் விடுத்த செய்தியை இரான் அரசு செய்தி நிறுவனமான ஐஆர்என்ஏ உள்ளிட்ட பல இரான் ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. போர் தொடங்கி 30 நாட்கள் நிறைவடைந்ததையொட்டி விடுத்த இந்தச் செய்தியில் காலிபாஃப் கூறுகையில், "எதிரி பகிரங்கமாகப் பேச்சுவார்த்தைக்கான சமிக்ஞைகளைத் தருகிறதி, ஆனால் திரைக்குப் பின்னால் தரைவழித் தாக்குதலுக்கான சதியைத் தீட்டுகிறது" என்றார். மேலும் அவர், அமெரிக்கா "போரின் மூலம் அடைய முடியாத 15 அம்சப் பட்டியலுடன் தனது விருப்பங்களை முன்வைக்கிறது" என்றும் கூறினார். " அவர்கள் மீது நெருப்பை மழை எனப் பொழிவதற்காக அமெரிக்க வீரர்கள் தரை இறங்குவதற்காக இரான் படைகள் காத்திருக்கின்றன, " என்றும் காலிபாஃப் கூறினார். இரான் சரணடைவது குறித்த கேள்விக்கு, அரபு மொழியில் பதிலளித்த காலிபாஃப், இரான் வழங்கும் செய்தி 'மிகவும் தெளிவானது' என்றும் அது 'அவமானத்தை' ஏற்காது என்றும் கூறினார். இதற்கிடையில், சில உறுதிப்படுத்தப்படாத செய்திகள், டிரம்ப் நிர்வாகம் காலிபாஃப்பை ஒரு சாத்தியமான பங்காளியாகவும், வருங்காலத் தலைவராகவும் கருதுவதாகக் கூறுகின்றன. தரைவழித் தாக்குதலுக்குத் தயாரிப்பா? பட மூலாதாரம்,Reuters படக்குறிப்பு,'யுஎஸ்எஸ் திரிப்போலி' போர்க்கப்பல் இப்பகுதிக்கு வந்து சேர்ந்ததாக அமெரிக்க சென்ட்ரல் கமாண்ட் சனிக்கிழமையன்று தெரிவித்துள்ளது. ஆங்கில நாளிதழான வாஷிங்டன் போஸ்ட் செய்தியின்படி, பென்டகன் இரான் மீது பல வாரங்களுக்கு தரைவழித் தாக்குதல் நடத்தத் தயாராகி வருகிறது. அப்பத்திரிகையின்படி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தாக்குதல் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்தால், போரின் ஒரு புதிய கட்டம் தொடங்கும். இது முதல் நான்கு வாரங்களுடன் ஒப்பிடும்போது அமெரிக்க வீரர்களுக்கு மிகவும் ஆபத்தானதாக இருக்கும். அமெரிக்க சென்ட்ரல் கமாண்ட் சனிக்கிழமையன்று, 'யுஎஸ்எஸ் திரிப்போலி' போர்க்கப்பல் இப்பகுதிக்கு வந்து சேர்ந்ததாகத் தெரிவித்துள்ளது. சமூக வலைதளப் பதிவின்படி, யுஎஸ்எஸ் திரிப்போலி தலைமையிலான பிரிவில் 5,000 மாலுமிகள் மற்றும் கடற்படை வீரர்கள் உள்ளனர், அவர்கள் பல போர்க்கப்பல்களில் நிறுத்தப்பட்டுள்ளனர். படக்குறிப்பு,தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026, தொடர்பான செய்திகள், காணொளிகள், நேர்காணல்களை படிக்க, பார்க்க... தற்போதைய திட்டங்களின்படி, இத்தகைய தரைவழி நடவடிக்கைகள் முழு அளவிலான தாக்குதலாக இருக்காது, மாறாக சிறப்பு அதிரடிப் படைகள் மற்றும் வழக்கமான காலாட்படை வீரர்களின் கூட்டுத் தாக்குதல் நடவடிக்கைகளாக இருக்கும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கடலில் உள்ள கப்பல்களில் 4,000-க்கும் மேற்பட்ட அமெரிக்க கடற்படை வீரர்கள் இருப்பதாகவும், அவர்கள் வளைகுடா பகுதியை நோக்கி முன்னேறி வருவதாகவும் கருதப்படுகிறது. இது தவிர, 82-வது ஏர் போர்ன் டிவிஷனின் பாராட்ரூப்பர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர் மற்றும் கூடுதல் வீரர்களை அனுப்புவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதற்கு மத்தியில் எகிப்து, செளதி அரேபியா மற்றும் துருக்கி ஆகிய மூன்று நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் மத்திய கிழக்கின் நிலைமை குறித்து விவாதிக்க பாகிஸ்தானில் கூடியுள்ளனர். அமெரிக்கா மற்றும் இரான் இடையிலான பேச்சுவார்த்தைக்குத் தலைமை தாங்க பாகிஸ்தான் முன்வந்துள்ளது. இதுவரை அமெரிக்கா என்ன கூறியுள்ளது? பட மூலாதாரம்,Reuters படக்குறிப்பு,எந்தவொரு தரைவழிப் படையும் இல்லாமலேயே அமெரிக்கா தனது இலக்குகளை எட்ட முடியும் என்று அமெரிக்க வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ வெள்ளிக்கிழமையன்று கூறினார். இந்த மாதத்தில் முன்னதாக டிரம்ப் செய்தியாளர்களிடம் கூறுகையில், "நான் எங்கும் படைகளை அனுப்பவில்லை" என்றார், ஆனால் உடனடியாக அவர், "ஒருவேளை நான் அனுப்பிக் கொண்டிருந்தால், நிச்சயமாக உங்களிடம் சொல்ல மாட்டேன்" என்றும் சேர்த்துக் கொண்டார். வெள்ளிக்கிழமை அன்று, அமெரிக்க வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ கூறுகையில், "எந்தவொரு தரைவழிப் படையும் இல்லாமலேயே" அமெரிக்கா தனது இலக்குகளை அடைய முடியும் என்றார். சமீபத்திய ராணுவ நகர்வுகள் டிரம்பிற்கு வாய்ப்புகளை வழங்குவதற்காகவே என்பதையும் அவர் தெளிவுபடுத்தினார். அவர் கூறுகையில், "சூழ்நிலைக்கு ஏற்ப முடிவுகளை மாற்ற அதிபருக்கு அதிகபட்ச வாய்ப்புகளை வழங்க நாங்கள் எப்போதும் தயாராக இருக்கிறோம்" என்றார். யுஎஸ்எஸ் திரிபோலி போர்க்கப்பல் அந்தப் பகுதியை அடைந்துவிட்டதாக அமெரிக்க செண்ட்ரல் கமாண்ட் சனிக்கிழமை தெரிவித்தது. அமெரிக்கா மீதான அவநம்பிக்கை புதியதல்ல அமெரிக்கா மீது காலிபாஃப் அவநம்பிக்கை தெரிவிப்பது இது முதல் முறையல்ல. திரைக்குப் பின்னால் என்ன நடக்கிறது என்பது குறித்த விரிவான தகவல்கள் பிபிசிக்குத் தெரியவில்லை என்றாலும், ஒரு விஷயம் தெளிவாக உள்ளது. 1979 புரட்சிக்குப் பிறகு, இரான் கொள்கைகள் பெருமளவிற்கு மேற்கத்திய அரசியல், கலாச்சார மற்றும் கருத்தியல் செல்வாக்கிற்கு எதிரானதாகவே இருந்து வருகின்றன. மேலும் அது அமெரிக்கா மற்றும் இஸ்ரேலைத் தனது முக்கிய எதிரிகளாகப் பார்க்கிறது. பிப்ரவரி 28 அன்று தொடங்கிய தற்போதைய போர், ஜெனிவாவில் அமெரிக்கா மற்றும் இரான் இடையிலான மறைமுக அணுசக்தி பேச்சுவார்த்தையின் மூன்றாவது சுற்று முடிந்த இரண்டு நாட்களுக்குப் பிறகு தொடங்கியது. பட மூலாதாரம்,Reuters படக்குறிப்பு,முகமது பாகர் காலிபாஃப், இரான் நாடாளுமன்றத்தின் சபாநாயகர். கடந்த கோடைகாலத்திலும், அமெரிக்காவும் இரான் நாடும் அணுசக்தி பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருந்தபோது இரான் மீதான தாக்குதல்கள் தொடங்கின. இதன் காரணமாக இரான் மற்றும் இஸ்ரேல் இடையே 12 நாட்கள் போர் நடந்தது, மேலும் அமெரிக்கா இரான் நாட்டின் மூன்று முக்கியமான அணுசக்தி நிலையங்கள் மீது குண்டுவீசித் தாக்குதல் நடத்தியது. 2015 ஒப்பந்தத்திலிருந்து டிரம்ப் வெளியேறிய பிறகு, அமெரிக்காவை நம்ப முடியுமா இல்லையா என்ற அளவுகோலிலேயே இரான் அதிகாரிகள் எந்தவொரு ஒப்பந்தத்தையும் பார்க்கிறார்கள். இப்போது அவர்கள் முன்பை விட அதிக சந்தேகத்துடன் உள்ளனர். கத்தார் தொலைக்காட்சி நிலையம் மீது தாக்குதல் நடத்திய 10 ட்ரோன்களை செளதி அரேபியா தடுத்தது இதற்கிடையில், ஞாயிற்றுக்கிழமை மதியம் செளதி அரேபியா கடந்த சில மணி நேரங்களில் 10 ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியதாகத் தெரிவித்தது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் குவைத் உள்ளிட்ட பிற வளைகுடா நாடுகளும் இரவு முழுவதும் தாக்குதல்கள் நடந்ததாகக் கூறியுள்ளன. கத்தாரின் அல் அரபி தொலைக்காட்சி நிறுவனம், தெஹ்ரானிலுள்ள அதன் அலுவலகம் ஏவுகணைத் தாக்குதலால் சேதமடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. அந்த நிறுவனம் எக்ஸ் தளத்தில் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளது, அதில் உடைந்த கண்ணாடித் துண்டுகள் மற்றும் இடிபாடுகள் காணப்படுகின்றன. இந்த ஏவுகணையை யார் ஏவினார்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை. இஸ்ரேல் இது குறித்து கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. துபையிலுள்ள எமது செய்தியாளரின் கூற்றுப்படி, கடந்த 24 மணிநேரத்தில் இப்பகுதியில் பலமுறை தாக்குதல்கள் நடந்துள்ளன. Get in touch பிரச்னைகளைப் பேசுவோம் - 2 | பெண்கள் பாதுகாப்பு Contact form - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cddqy1l8238o
  9. எரிபொருள் செலவைக் குறைக்க அவுஸ்திரேலியாவின் 02 மாநிலங்களில் இலவசப் பொதுப் போக்குவரத்து Published By: Digital Desk 3 29 Mar, 2026 | 11:36 AM (இணையத்தள சர்வதேச செய்திப் பிரிவு) மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போரினால் எரிபொருள் விநியோகம் தடைப்பட்டு, பெற்றோல் நிலையங்களில் நீண்ட வரிசைகள் காணப்படுகின்றன. இந்நிலையில், பொதுமக்களின் குடும்பச் செலவுகளைக் குறைக்கும் நோக்கில் அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மற்றும் தாஸ்மேனியா மாநில அரசுகள் பொது போக்குவரத்தை முற்றிலும் இலவசமாக வழங்க முன்வந்துள்ளன. விக்டோரியா மாநில அரசாங்கம் எதிர்வரும் மார்ச் 31 முதல் ஏப்ரல் இறுதி வரை ஒரு மாத காலத்திற்கு அனைத்து ரயில்கள், டிராம்கள் மற்றும் பஸ்களை இலவசமாக வழங்குகிறது. பயணிகள் தங்களது பயண அட்டைகளைப் பயன்படுத்தத் தேவையில்லை. அனைத்து நுழைவு வாயில்களும் திறந்து விடப்படும். இதன் மூலம் ஒரு சாதாரண பயணி மாதம் சுமார் 220 முதல் 250 டொலர்கள் வரை சேமிக்க முடியும் என மாநில முதல்வர் ஜசிந்தா ஆலன் தெரிவித்துள்ளார். தாஸ்மேனியா மாநிலத்தில் பஸ்கள் மற்றும் படகு சேவைகள் மார்ச் 30 முதல் ஜூலை 1 ஆம் திகதி வரை இலவசமாக அமுலில் இருக்கும். இதன்மூலம், டாட்ஜஸ் ஃபெரியிலிருந்து ஹோபார்ட்டிற்கு வேலைக்குச் செல்லும் ஒருவர் வாரத்திற்கு 88 டொலர்கள் வரை சேமிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் தட்டுப்பாட்டைச் சமாளிக்க அவுஸ்திரேலிய மத்திய அரசாங்கம் நாளை திங்கட்கிழமை பாராளுமன்றத்தில் அவசரகாலச் சட்டங்களை அறிமுகப்படுத்தவுள்ளது. நிறுவனங்கள் சர்வதேச சந்தையில் அதிக விலைக்கு எரிபொருளைக் கொள்வனவு செய்யும் போது, அதற்கான காப்புறுதியை அரசாங்கம் ஏற்கும். தற்போது அவுஸ்திரேலியாவிடம் 39 நாட்களுக்கான ப பெற்றோலும், 30 நாட்களுக்கான டீசலும் கையிருப்பில் உள்ளதாகப் பிரதமர் அந்தோனி அல்பானீஸ் உறுதிப்படுத்தியுள்ளார். வாகனங்களைப் பயன்படுத்துவதைக் குறைத்து, முடிந்தவரை வீடுகளிலிருந்து வேலை செய்யுமாறும், தேவையற்ற முறையில் எரிபொருளைச் சேமித்து வைக்க வேண்டாம் எனவும் அவுஸ்திரேலிய பிரதமர் கேட்டுக்கொண்டுள்ளார். https://www.virakesari.lk/article/242192
  10. அமெரிக்காவின் சதித்திட்டம் தொடர்பில் ஈரானின் வௌிப்படுத்தல் Mar 29, 2026 - 02:18 PM அமெரிக்கா பகிரங்கமாக பேச்சுவார்த்தைக்கான சமிக்ஞைகளை வெளிப்படுத்திவிட்டு, இரகசியமாக தரைவழித் தாக்குதலுக்குச் சதி செய்து வருவதாக ஈரானின் பாராளுமன்ற சபாநாயகர் மொஹமட் பாகர் கலிபாப் தெரிவித்துள்ளார். ஈரான் உத்தியோகபூர்வ செய்தி நிறுவனமான IRNA இந்த செய்தியை இன்று (29) வௌியிட்டுள்ளது. அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, அமெரிக்கா பகிரங்கமாக பேச்சுவார்த்தைக்கான சமிக்ஞைகளை வெளிப்படுத்துகிறது. ஆனால் இரகசியமாக தரைவழித் தாக்குதலுக்குச் சதி செய்வதை அறியமுடிந்துள்ளது. அமெரிக்கா 15 அம்ச ஒப்பந்தம் ஒன்றை கொண்டு தமது விருப்பங்களை முன்வைப்பதன் மூலம், போரில் அடையத் தவறியதை நிலைநாட்ட முயல்கிறது என்றார். அமெரிக்க வீரர்கள் தரைவழியாக உள்ளே நுழைவதற்காக ஈரானியப் படைகள் காத்திருப்பதாகவும், அவர்கள் மீது நெருப்பு மழையைப் பொழிவோம் என்றும் கலிபாப் எச்சரித்துள்ளார். ஈரான் சரணடைவது குறித்த கேள்விக்கு அரபு மொழியில் பதிலளித்துள்ள கலிபாப், ஈரானின் செய்தி தெளிவானது என்றும், தாங்கள் ஒருபோதும் அவமானப்படுவதை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்றும் கூறியுள்ளார். இதற்கிடையில், ட்ரம்ப் நிர்வாகம் கலிபாப்பை ஒரு சாத்தியமான பங்காளியாகவும், ஒருவேளை எதிர்காலத் தலைவராகவும் கருதியதாக உறுதிப்படுத்தப்படாத சில தகவல்கள் தெரிவிக்கின்றன. https://adaderanatamil.lk/news/cmnbiod140000356pm1cq3tv6
  11. 5 ஆண்டு கால எண்ணெய் ஒப்பந்தத்திற்கு ரஷ்யா அழைப்பு - அணுமின் நிலையத் திட்டத்தை அரசாங்கம் நிராகரித்தது 29 Mar, 2026 | 11:34 AM (லியோ நிரோஷ தர்ஷன்) இலங்கையின் தற்போதைய எரிபொருள் மற்றும் மின்சார நெருக்கடியைத் தீர்ப்பதற்காக ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் கொள்வனவு செய்வது தொடர்பான பேச்சுவார்த்தைகளில் புதிய திருப்பங்கள் ஏற்பட்டுள்ளன. இலங்கைக்கு அணுமின் நிலையத் திட்டத்தை வழங்க ரஷ்யா முன்வைத்த கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ள நிலையில், நீண்ட கால எண்ணெய் ஒப்பந்தம் தொடர்பாக ரஷ்யா நிபந்தனைகளை விதித்துள்ளது. ரஷ்ய வலுசக்தி பிரதி அமைச்சர் றோமன் மார்ஷவின் இலங்கை விஜயத்தின் போது மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடல்களில் அணுமின் நிலையம் குறித்து பேசப்பட்டதா? என அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸவிடம் வினாவிய போது, இது தொடர்பான விபரங்களை ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிடும் எனத் தெரிவித்தார். எனினும், வெளிவிவகார அமைச்சு இதனை உறுதிப்படுத்தியுள்ளதுடன், ரஷ்யாவின் அணுமின் நிலையத் திட்டக் கோரிக்கையை இலங்கை நிராகரித்துள்ள அதேவேளை, எண்ணெய் கொள்வனவுக்கான ஒப்பந்தம் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டது. தற்போது நிலவும் எரிபொருள் தட்டுப்பாட்டைப் போக்க ரஷ்யாவிடம் அரசாங்கம் கோரிக்கை விடுத்ததற்குப் பதிலளித்துள்ள ரஷ்யா, ஆரம்பகட்டமாக இரண்டு எரிபொருள் கப்பல்களை வழங்க முன்வந்துள்ளது. ஆனால், இந்த இரண்டு கப்பல்களைப் பெற்ற பிறகு, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ரஷ்யாவிடமிருந்து எண்ணெயைப் பெறுவதற்கான நிரந்தர ஒப்பந்தத்தில் இலங்கை கையெழுத்திட வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. இந்த நிபந்தனைக்கு இலங்கை சம்மதித்தால் மட்டுமே, மேலதிக ஒப்பந்தங்களுக்காக ரஷ்ய அமைச்சர் மீண்டும் இலங்கைக்கு விஜயம் செய்வார். இருப்பினும், ரஷ்யா மீதான அமெரிக்காவின் தடைகள் தற்போது முப்பது நாட்களுக்கு மட்டுமே நீக்கப்பட்டுள்ள சூழலில், ஐந்து ஆண்டு கால ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது இலங்கைக்குப் பாரிய இராஜதந்திர நெருக்கடியை ஏற்படுத்தலாம் என அஞ்சப்படுகிறது. முப்பது நாட்களுக்குப் பிறகு அமெரிக்கா மீண்டும் தடைகளை விதித்தால், ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவது சர்வதேச ரீதியில் இலங்கையைப் பாதிக்கலாம். இதற்கிடையில், அணுசக்தி திட்டத்தை மேம்படுத்தும் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக, முதல் அணுமின் நிலையத்தை அமைப்பதற்கான ஐந்து சாத்தியமான தளங்களை இலங்கை அடையாளம் கண்டுள்ளதாக சர்வதேச அணுசக்தி நிறுவனம் 2025 ஆம் ஆண்டு ஜுலை மாதத்தில் உறுதிப்படுத்தியது. அணுசக்தி உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் இலங்கை குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை அடைந்துள்ளதாகக் குறிப்பிட்டிருந்த சர்வதேச அணுசக்தி நிறுவனம், குறிப்பாக உலை கொள்முதல் செய்வதற்கான ஒரு மேலாண்மை கட்டமைப்பை இலங்கை நிறுவியதுடன், விரிவான அணுசக்தி சட்ட வரைவையும் உருவாக்கி, 2025-2044 ஆம் ஆண்டுக்கான தேசிய நீண்டகால எரிசக்தி திட்டத்தில் அணுசக்தியைச் சேர்த்துள்ளதையும் சுட்டிக்காட்டியது. ஆனால் ரஷ;ய தரப்பு இத்திட்டம் குறித்து கோரிக்கையை முன்வைத்த போது தற்போதைய அரசாங்கம் அதனை நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/242202
  12. Today
  13. சிறியர், இங்கு போர் சம்மந்தமாக பகிரப்படும் கருத்துக்களை அவ்வப்போது பார்க்கின்றேன். வேறு பல தகவல் தளங்களிலும் பொது அபிப்பிராயங்களை பார்க்கின்றேன். இங்கு பிரச்சனை என்ன என்றால் பகிரப்படும் தகவல்கள் ஏதோ ஒரு தரப்புக்கு பக்கச்சார்பானதாகவோ/ஆதரிப்பதாகவோ/ஊக்குவிப்பதாகவோ உள்ளன. சுய, விறுப்பு வெறுப்புக்களை ஒரு பக்கம் தூக்கி எறிந்துவிட்டு யதார்த்தத்தை, உண்மை நிலையை அறிவுபூர்வமாக ஆராயும் பக்குவ நிலையான தகவல்கள் ஏறக்குறைய எங்கும் இல்லை. சுய அடையாளங்கள், குறுகிய வட்டங்களுக்கு அப்பால் சென்று பரந்த வீச்சில், அனைவருக்குமான சிறப்பான எதிர்காலம் என பார்த்தால் இப்போதுள்ள குழப்பங்கள் எமது எதிர்காலத்து வாழ்க்கையை, எமது சந்ததிகளை வெகுவாக பாதிக்கும். நொருங்கிய இடிந்த கட்டடத்துக்குள் குற்றுயிராக கிடப்பது எந்த நாட்டவன் எந்த இனத்தவர் என இனம்கண்டு அவர்கள் மீது இரக்கம் கொள்வதும் அல்லது திருப்தி அடைவதும், ஆட்களின் அடையாளத்தின் அடிப்படையில் அவர்களது இறப்பை கொண்டாடுவதும், துக்கம் அடைவதும் நாங்கள் அடிப்படை மனித விழுமியங்கள், உயர்வான நிலையை விட்டு விலகி இதர காட்டு விலங்கினங்கள் போல் பின்னோக்கிய பரிணாமத்திற்கு திரும்புகின்றோம் என்பதை குறிக்கின்றது.
  14. நீங்கள், இவ்வளவு நாளும் புடுங்கின ஆணியே போதும். இனி... ஒரு ஆணியும் புடுங்க வேண்டாம். தமிழருக்கு, நீங்கள் தான் பிரச்சினையே.... முதலில்... உங்கள் கட்சியின் பிரச்சினையை தீருங்கள். மிச்சத்தை பிறகு பாப்பம்.
  15. கைப்பற்றப்படும் சட்டவிரோத மணலை திரும்பவும் அள்ளிய இடத்தில் கொண்டு கொட்டச் செய்தால் நிலம் பழுதாகாது பாதுகாக்கப்படுமே.🤔
  16. ஆனை முகனை தொழுதால் நவகிரகங்களும் மகிழும். நல்லதே நடக்கும். நல்லதே நடக்கும். ஒன்பது கோளும் ஒன்றாய் காண. பிள்ளையார் பட்டி வர வேண்டும். அங்கு கற்பகம் என்னும் கடவுளின் மெய்யில். உறையும் அவரை தொழ வேண்டும்.🙏🤩
  17. கவுண்டமணி: யுத்தத்த எப்போ நிறுத்துவீங்க சார்? ட்ரம்ப்: ஹோர்முஸ்ஸ திறந்தா நிப்பாட்டிடுவன். கவுண்டமணி: நீங்க யுத்தத்த ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி, ஹோர்முஸ் எப்டி இருந்துச்சு சார்? டிரம்ப்: திறந்திருந்துச்சு. கவுண்டமணி: அப்போ என்ன மயிருக்கு யுத்தத்த ஆரம்பிச்ச?🤣"
  18. ரம்புக்கு வந்த சோதனை😁, ஆடாதைய மனித ஆடாதே. கேள்விப்பட்டது Bharain இனில் அமெ படைகள் தளங்களை விட்டு மக்களுடன் கலந்துள்ளார்களாம்🫠
  19. மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
  20. ஆனாலும் அண்ணனின் தொழில் நேர்த்தி வியக்கத்தக்கது. என்னதான் சபரீசனிடம் பெட்டி வாங்கினாலும்….திரள்நிதியை திரட்டாமல் விடுவதும் இல்லை. அதற்கும் முழு எபெர்ட் போடுகிறார். இங்கே Tesco அன்ற பல்பொருள் அங்காடியின் மகுட வாக்கியம் அண்ணனுக்கும் பொருந்தும். Every little helps 😂
  21. வணக்கம் வாத்தியார் . .......! ஆண் : ………………………………….. ஆண் : உன்னை நான் பார்த்தது வெண்ணிலா வேளையில் உன் வண்ணங்கள் கண்ணோடுதான் உன் எண்ணங்கள் நெஞ்சோடுதான் ஆண் : நான் உனக்காகவே பாடுவேன் கண் உறங்காமலே பாடுவேன் ஆண் : அன்று ஒரு பாதி முகம்தானே கண்டேன் இன்று மறுபாதி எதிர்பார்த்து நின்றேன் கை வளையோசை கடல் பொங்கும் அலையோசையோ என செவியாற நான் கேட்க வரவில்லையோ ஆண் : கம்பன் மகனாக நான் மாற வேண்டும் கன்னித் தமிழால் உன் எழில் கூற வேண்டும் என் மகராணி மலர்மேனி செம்மாங்கனி என் மடிமீது குடியேறி முத்தாடவா ஆண் : எங்குத் தொட்டாலும் இனிக்கின்ற செந்தேன் உன்னைத் தொடராமல் நானிங்கு வந்தேன் நான் மறந்தாலும் மறவாத அழகல்லவா நாம் பிரிந்தாலும் பிரியாத உறவல்லவா .......! ...... உன்னை நான் பார்த்தது .....
  22. பாட்டொன்று தருவார் பாராடியம்மா .........! 😍
  23. வாழ்நாள் போராளிகள்; முன்னாள் போராளிகள்; இந்நாள் போராளிகள்! நிலாந்தன். கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் டில்கோ விருந்தினர் விடுதியில் ஒரு கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டது.”போராளிகள் நலன்புரி அமைப்பினால்” ஏற்பாடு செய்யப்பட்ட இக்கருத்தரங்கில், “சமகால அரசியலில் போராளிகளின் வகிபாகம்” என்ற தலைப்பின் கீழ் பலரும் உரையாற்றினார்கள். போராளிகள் நலன்புரி அமைப்பு என்பது விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து 2009க்குப்பின் புனர்வாழ்வு பெற்ற,தடுப்பிலிருந்து விடுதலை செய்யப்பட்ட,அல்லது கைது செய்யப்பட்ட பின் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்களைக் கொண்ட அமைப்பாகும். முன்னாள் விடுதலைப் புலிகள் இயக்கத்தவர்கள் கடந்த 16 ஆண்டுகளாக ஜனநாயக நீரோட்டத்தில் பங்கெடுப்பதற்காக வெவ்வேறு கட்டமைப்புகளை உருவாக்கி வந்திருக்கிறார்கள். இந்த பெரும்பாலான கட்டமைப்புகளில் அங்கம் வகிப்பவர்கள் போராளிகள் என்று தங்களை அழைத்துக் கொள்கிறார்கள்.அதேசமயம் அவர்களில் ஒரு பகுதியினர் தங்களை முன்னாள் போராளிகள் என்றும் அழைத்துக் கொள்கிறார்கள்.அரசியல்வாதிகள், செயற்பாட்டாளர்கள்,என்.ஜி.ஓக்கள்,ஊடகங்கள் என்று எல்லா இடங்களிலும் இந்த முன்னாள் போராளிகள் என்ற வார்த்தைப் பிரயோகம் உண்டு. இது தொடர்பாக கடந்த கிழமைக்கு முதல் கிழமை யாழ்ப்பாணத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் ஐங்கரநேசன் சுட்டிக்காட்டிப் பேசியிருந்தார்.அந்தக் கூட்டம் தமிழகத்தின் மூத்த கொம்யூனிஸ்ட் தலைவராகிய நல்லகண்ணுவுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக ஒழுங்கு செய்யப்பட்ட கூட்டம்.நல்லகண்ணுவை தமிழக முதல்வர் “வாழ்நாள் போராளி “என்று அழைத்திருந்தார்.ஆனால் “தமிழ் மக்களில் ஒரு பகுதியினரை நாங்கள் முன்னாள் போராளிகள் என்று அழைக்கிறோம்” என்று ஐங்கரநேசன் சுட்டிக்காட்டினார். முன்னாள் போராளிகள் என்று அழைத்தால் அதன் பொருள் அவர்கள் இப்பொழுது போராளிகள் இல்லை என்பதாகும்.ஆனால் போராளி என்பது ஒரு பதவி அல்ல.அதில் முன்னாள்,இந்நாள் என்று அழைக்கலாமா? ஒரு போராளி கட்டாயம் இயக்கங்களில் இருக்க வேண்டும் என்று இல்லை.ஆயுதம் ஏந்திப் போராடினால் மட்டும்தான் ஒருவர் போராளி என்று அழைக்கப்பட வேண்டும் என்று இல்லை.சமூகத்தின் வெவ்வேறு விவகாரங்களை முன்வைத்துப் போராடும் அனைவருமே போராளிகள்தான்.சமூக விடுதலைபி போராளிகள், பெண்விடுதலைப் போராளிகள்…. என்று சமூகத்தின் சிறுமை கண்டு பொங்கும் அனைவருமே போராளிகள்தான். இதுதொடர்பாக கடந்த 16 ஆண்டுகளாக இக்கட்டுரை ஆசிரியரும் உட்பட பலராலும் சுட்டிக்காட்டப்பட்டு வருகிறது. நல்லகண்ணுவின் கூட்டத்தில் ஐங்கரநேசன் ஆற்றிய உரையை அவர் முகநூலில் பதிவிட்டிருந்தார். அந்த உரைக்குக் கீழ் வந்த ஒரு பின்னூட்டத்தில், முன்னாள் ஈ. பி.ஆர்.எல்.எவ் அமைப்பின் உறுப்பினர் ஒருவர் பதில்வினை ஆற்றியிருந்தார். அதில் அவர் ஏனைய இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் இப்பொழுதும் அரசியல் செய்கிறார்கள்.அவர்கள் தங்களைப் போராளிகள் என்று அழைத்துக் கொள்வதில்லை.தங்களுடைய கட்சிகள்,அமைப்புகளின் பெயர்களால்தான் தங்களை அழைத்துக்கொள்கிறார்கள்.ஆனால் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்தவர்கள் மட்டும் ஏன் தங்களைப் போராளிகள் என்று அழைத்துக் கொள்கிறார்கள்? என்று அவர் கேள்வி எழுப்பியிருந்தார். அந்தக் கேள்வி நியாயமானது.அந்த முகநூல் பதிவில் அதற்குரிய பதில் வந்திருக்கவில்லை.கடந்த 16 ஆண்டுகளாக முன்னாள் விடுதலைப் புலிகள் இயக்கத்தவர்கள் ஏன் தங்களைப் போராளிகள் என்று அழைத்துக் கொள்கிறார்கள் ? 2009க்குப் பின்னரான தமிழ்த் தேசியவாத அரசியல் எனப்படுவது ஆயுதப் போராட்டத்தின் பெருமைகளுக்கு “கொப்பிரைட்” எடுப்பதாகத்தான் காணப்படுகிறது.ஆயுதப் போராட்டத்தின் தியாகங்களையும் அர்ப்பணிப்புகளையும் வீரத்தையும் போற்றி அதன்மூலம் நமது வாக்கு வங்கியைத் திரட்டுவதைத்தான் பெரும்பாலான எல்லாத் தமிழ்த் தேசியக் கட்சிகளும் தமது தேர்தல் உத்தியாகக் கொண்டிருக்கின்றன.இதில் நினைவு நாட்களுக்கு யார் அதிகம் உரித்துடையவர்கள் என்ற விடயத்தில் அவ்வப்போது மோதல்களும் ஏற்படுவதுண்டு.இவ்வாறு கடந்த 16 ஆண்டுகளாக ஆயுதப் போராட்டத்தின் மெய்யான வாரிசுகளாக தங்களைக் காட்டிக்கொள்ள முற்படும் கட்சிகள்,அல்லது ஆயுதப் போராட்டத்தின் விளைவுகளைத் தமது தேர்தல்மைய அரசியலுக்குப் பயன்படுத்தும் கட்சிகள்,அல்லது முன்னாள் இயக்கத்தவர்களை தமது உட்கட்சி முரண்பாடுகளுக்கு வசதியாகப் பயன்படுத்தும் அரசியல்வாதிகள் போன்ற யாருமே, எந்தப் போராட்டத்தை தமது வாக்குமைய அரசியல் தேவைகளுக்கு பயன்படுத்தி வருகிறார்களோ, அந்தப் போராட்டத்திற்கு உண்மையாக இல்லை. அல்லது அந்த போராட்டத்தின் இலட்சியங்களுக்கு விசுவாசமாக இல்லை என்ற ஓர் அபிப்பிராயம் தமிழ் மக்கள் மத்தியில் உண்டு தமிழ்த் தேசியக் கோஷங்கள் பெரும்பாலும் திருடர்கள் எடுத்தணியும் முகமூடிகளாக அப்பொழுதோ மாறிவிட்டன.பாதுகாப்பான இறந்த காலத்தைப் பெற்றவரெல்லாம் நிகழ்காலத்தின் பேச்சாளர்களாக மேலெழுந்து விட்டார்கள். யாரெல்லாம் இறந்த காலத்தில் தமது இனத்துக்காக தியாகம் செய்யப் புறப்பட்டார்களோ,அவர்களெல்லாம் இப்பொழுது கைதிகளாகஅரைக் கைதிகளாக,கைவிடப்பட்டவர்களாக,தடுப்பிலிருந்து வந்தவர்களாக, மதிக்கப்படாதவர்களாக,சந்தேகிக்கப்படுகிறவர்களாகக் காணப்படுகிறார்கள். கடந்த 16 ஆண்டுகளிலும் இலங்கைத் தீவில் மிகவும் பாதிக்கப்படக்கூடிய ஒரு பிரிவினராக(most vulnerable) காணப்படுவது தடுப்பிலிருந்து விடுவிக்கப்பட்ட முன்னாள் விடுதலைப் புலிகள் இயக்கத்தவர்கள்தான். பயங்கரவாதத் தடைச் சட்டம் எப்பொழுதும் அவர்களுடைய தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருக்கிறது. சாதாரண ஒன்றிணைவைக்கூட “மீளுருவாக்கம்” என்ற பெயரில் ஒரு சட்டப் பிரச்சினையாக மாற்றக்கூடிய சட்டச் சூழல் இப்பொழுதும் உண்டு.எனவே இலங்கைத் தீவின் அரசியல் நீரோட்டத்தில் அதிகம் ஆபத்துக்குள்ளாகக்கூடிய ஒரு பிரிவினராக முன்னாள் இயக்கத்தவர்கள் காணப்படுகிறார்கள். ஆனால் அவர்கள் எந்த அமைப்பை,எந்தக் கருநிலை அரசைக் கட்டியெழுப்பினார்களோ, அதன் பெருமைகளைக் கொப்பிரைட் எடுக்க முற்படும் கட்சிகளும் அரசியல்வாதிகளும் அவர்களைப் பொருட்படுத்துவதில்லை.அல்லது தேவைக்குப் பயன்படுத்திவிட்டு வீசி விடுகிறார்கள். அல்லது அவர்களைச் சந்தேகிக்கிறார்கள். இப்படிப்பட்டதோர் அரசியல் சூழலில்,தங்களுடைய இறந்த காலத்தை கொப்பிரைட் எடுக்க முற்படும் கட்சிகளின் மத்தியில்,தாங்கள்தான் அதன் உண்மையான வாரிசுகள்,அல்லது தாங்கள்தான் அந்த போராட்டத்தின் உண்மையான தொடர்ச்சிகள் என்று காட்டவேண்டிய தேவை தங்களுக்கு இருப்பதாக பெரும்பாலான முன்னால் இயக்கத்தவர்கள் நம்புகிறார்கள். அந்த அடிப்படையில்தான் அவர்கள் தங்களைப் போராளிகள் என்று அழைத்துக் கொள்கிறார்கள் என்று எடுத்துக் கொள்ளலாமா? ஆனால் கடந்த 16ஆண்டுகளிலும் அவர்கள் தாங்களாக கட்சியை உருவாக்கியும் அல்லது ஏனைய கட்சிகளோடு இணைந்தும் தேர்தல் கேட்டிருக்கிறார்கள்.எனினும்,தொடர்ச்சியாகத் தோற்கடிக்கப்பட்டு வருகிறார்கள்.தமது இறந்தகாலத்தைத் தேர்தல் மொழியில் மொழிபெயர்க்க அவர்களால் முடியவில்லை. தேர்தல் மைய அரசியலுக்குத் தேவையான தொழில் திறன்களை,தந்திரங்களைக் கற்றுக்கொண்டு தேர்தல் மேடைகளில் வெற்றி பெற அவர்களால் இன்றுவரை முடியவில்லை. ஆனால் இது தமிழ்த் தேசிய அரசியலுக்கு மட்டுமான ஒரு தோற்றப்பாடு அல்ல. உலகப் பொதுவானது.இலட்சியவாதிகளும் உண்மையான தியாகிகளும் நேர்மையானவர்களும் தேர்தல்மைய அரசியலில் ஒன்றில் இறங்குவதில்லை; அல்லது இறங்கினாலும் மிகக்குறைந்த அளவே வெற்றிகளைப் பெறுகிறார்கள். உதாரணம்,இங்கே முன்னர் குறிப்பிட்ட நல்லகண்ணு.நல்லகண்ணுவைத் தவிர வேறு ஒரு உள்ளூர் உதாரணத்தையும் இங்கு சுட்டிக்காட்டலாம்.சில ஆண்டுகளுக்கு முன் தென்னிலங்கையில் ஏற்பட்ட தன்னெழுச்சிப் போராட்டங்களின் பின்னணியில் இருந்த அமைப்புகள் ஒன்றுதிரண்டு குடைச் சின்னத்தின் கீழ் தேர்தலில் போட்டியிட்டன.ஆனால் அந்த கூட்டமைப்பு கட்டுக்காசையும் இழக்கும் அளவுக்கு கேவலமாக சிங்கள மக்களால் தோற்கடிக்கப்பட்டது.ஆனால் அந்தக் கிளர்ச்சிகளின் ஓரத்தில் நின்று அந்தக் கிளர்ச்சியின் கனிகளை தேர்தல் மொழியில் “ஹைஜாக்” பண்ணிய ஜேவிபி இப்பொழுது நாட்டின் ஆளுங்கட்சியாக வந்துவிட்டது. ஜேவிபியை இதயமாகக் கொண்ட தேசிய மக்கள் சக்தியின் எழுச்சியில் இருந்து முன்னாள் இயக்கத்தவர்கள் கற்றுக்கொள்ளலாம்.தேசிய மக்கள் சக்தியின் இனப்பிரச்சினை தொடர்பான நிலைப்பாட்டை இக்கட்டுரை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆயுதப் போராட்ட அமைப்பாகிய ஜேவிபி அதன் இரண்டு புரட்சிகளிலும் தோற்கடிக்கப்பட்டது.இரண்டு தடவைகள் தடை செய்யப்பட்டது.இரண்டு தடவைகள் அதன் தோழர்கள் மிகக்குரூரமான விதங்களில் கொன்று எரிக்கப்பட்டார்கள்,அல்லது புதைக்கப்பட்டார்கள்,அல்லது ஆறுகளில் வீசப்பட்டார்கள்.மொத்தம் 85 ஆயிரத்துக்கும் குறையாத தோழர்கள் அவ்வாறு கொன்றொழிக்கப்பட்டதாக அந்த அமைப்புக் கூறுகிறது. ஆனால் கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு கால வரலாற்றைக் கொண்ட அந்த இயக்கமானது,தன் சொந்தச் சாம்பல் மேட்டில் இருந்து,தன் தோழர்களின் புதை மேட்டில் இருந்து மீண்டு எழுந்தது. தன்னைத் தேசிய மக்கள் சக்தியாக, தேர்தல் கவர்ச்சி மிக்க ஒரு புதிய கட்டமைப்பாக வளர்த்துக் கொண்டது. அதன் பின் பொருளாதார நெருக்கடியின் விளைவாக ஏற்பட்ட தன்னெழுச்சிப் போராட்டங்களின் கனிகளை தேர்தல் மேடைகளில் வெற்றிகரமாக ஹைஜாக் பண்ணியது.போராட்டங்களில் பிரதானமாக பின்னணியில் நின்ற அமைப்புக்களால் தமது போராட்டத்தின் வெற்றிகளை தேர்தல் மொழியில் வெற்றிகரமாக மொழிபெயர்க்க முடியவில்லை.ஆனால் தேசிய மக்கள் சக்தி அதைச் செய்தது. இப்பொழுது ஆளும் கட்சியாக எழுச்சி பெற்றுவிட்டது. ஓர் ஆயுதப் போராட்ட அமைப்பு எப்படி ஆளுங்கட்சியாக வர முடியும் என்பதற்கு அது ஓர் உதாரணம்.இனப்பிரச்சினை தொடர்பான என்.பி.பியின் நிலைப்பாட்டை இக்கட்டுரை ஏற்றுக்கொள்ளவில்லை.ஆனால் ஒர் ஆயுதப் போராட்ட அமைப்பு,ஏப்படி தேர்தல் மேடைகளில் வெற்றிபெற முடிந்தது என்ற விடயத்தில் அங்கு கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் உண்டு. இங்கு ஒரு முக்கியமான கள நிலவர வேறுபாட்டை ஒப்பீடு செய்ய வேண்டும். 1980களின் இறுதியில் நசுக்கப்பட்ட பின்னர்,ஜேவிபியின் அரசியலை கொப்பிரைட் எடுப்பதற்கு அங்கிருந்த பெரும்பாலான மேட்டுக்குடி மைய அரசியல் கட்சிகள் முயற்சிக்கவில்லை.முயற்சிக்கவும் மாட்டார்கள். ஏனென்றால் ஜேவிபியின் அரசியல் பாரம்பரியம் வேறு.அவர்களுடைய அரசியல் பாரம்பரியம் வேறு.அதனால் ஜேவிபியின் இரண்டு ஆயுதப் போராட்டங்களையும் கொப்பிரைட் எடுப்பதற்கு அங்கே வேறு எந்தக் கட்சியும் இருக்கவில்லை.ஆனால் தமிழ்த் தேசிய அரசியலில் அப்படியல்ல. தமிழ்த் தேசிய அரசியலில் ஆயுதப் போராட்டத்தின் நன்மைகளை,உன்னதங்களை கொப்பிரைட் எடுக்க முற்படும் தமிழ்த் தேசியவாத கட்சிகளின் மத்தியில், முன்னாள் இயக்கத்தவர்கள் தங்கள்தான் உண்மையான வாரிசுகள் என்று நிரூபிக்க வேண்டிய அரசியல் தேவை ஏற்பட்டது.ஆனால் அவ்வாறு தங்களை போராளிகள் என்று அடையாளப்படுத்திக் கொண்டதனால் அவர்கள் தேர்தல் மைய அரசியலில் வெற்றிகளைப் பெற முடியவில்லை என்பதை கடந்த16 ஆண்டுகளையும் தொகுத்துப் பார்த்தால் தெரியவரும். எனவே தமிழ் மக்களின் வாக்குகளைக் கவர்வதற்கு அவர்கள் ஜனநாயக வழியில் வேறு எதையோ செய்ய வேண்டியிருக்கிறது என்பதனை கடந்த 16 ஆண்டுகளும் அவர்களுக்கு உணர்த்தியுள்ளன.ஆயுதப் போராட்ட ஒழுக்கம் வேறு.தேர்தல் அரசியல் ஒழுக்கம் வேறு.இரு வேறு அரசியல் களங்கள். இரண்டுக்குமான வெற்றி வியூகங்களும் உத்திகளும் தந்திரங்களும் வேறு வேறானவை.எனவே தேர்தல்மைய அரசியலுக்குரிய ஒழுக்கத்தை,அதற்குரிய தந்திரங்களை,தொழில் சார் திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டிய கால நிர்பந்தம் முன்னாள் இயக்கத்தவர்களுக்கு உண்டு. இப்போதிருக்கும் தமிழ்த் தேசிய மிதவாத அரசியலில் பொய்யர்களும் நஞ்சர்களும் நவஞ்சகர்களும் திருடர்களுந்தான் அதிகமாக இருக்கிறார்கள் என்று கருதுபவர்கள் நேர்மையான,கண்ணியமான,தமது வாக்காளர்களுக்கு உண்மையான,புதிய மாற்றத்தைக் காட்டவல்ல ஒரு ஜனநாயக அரசியல் வழியைப் பலப்படுத்த வேண்டும்.ஜனநாயக வழியில் தமிழ் மக்களின் நம்பிக்கைகளை எப்படி வென்றெடுப்பது என்று சிந்திக்க வேண்டும். இந்தியாவிலும் லத்தீன் அமெரிக்காவிலும் ஆபிரிக்க நாடுகளிலும் முன்னாள் போராட்ட இயக்கங்கள் எப்படி ஜனநாயக நீரோட்டத்துக்குள் தங்களை அடுத்த கட்டத்துக்கு தகவமைத்துக் கொண்டன என்பதைக் கற்றுக் கொள்ள வேண்டும். இலட்சியவாதிகளும் நேர்மையானவர்களும் நல்லகண்ணுகளும் தேர்தல்மைய அரசியலில் ஏன் வெற்றி பெற முடியவில்லை என்பதையும் ஆழமாக ஆராய வேண்டும். நேர்மையானவர்கள்,கண்ணியமானவர்கள்,உண்மையானவர்கள்,வாக்காளர்களுக்கு விசுவாசமானவர்கள்,தமது வாக்குறுதிகளுக்கு உண்மையாக இருப்பவர்கள்…தமிழ்த்தேசிய அரசியலில் அதிகரித்த எண்ணிக்கையில் ஈடுபடுவார்களாக இருந்தால்,தமிழ்த்தேசிய அரசியலிலும் புதிய மாற்றங்களைக் காட்டமுடியும். இப்பொழுது அதுதான் பொருத்தமான போராளித்துவம். https://athavannews.com/2026/1470350
  24. களப்பிரர் காலத்து இலங்கை பாலா கருப்பசாமி March 11, 2026 வரலாற்றாய்வாளர் மயிலை சீனி. வேங்கடசாமி எழுதிய களப்பிரர் ஆட்சியில் தமிழகம் நூலை சமீபத்தில் வாசித்தேன். களப்பிரர் காலம் குறித்து மிகக் குறைவான தகவல்களே கிடைத்துள்ளன என்று ஆரம்பத்தில் அவர் நூலைத் தொடங்கும்போது, இதெற்கெதற்கு 180 பக்கப் புத்தகம் என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால் களப்பிரர் காலத்தில் அண்டை நாடுகள், சமயம், இலக்கியம், போர்கள் என விரிவாக இந்நூல் அலசிச் செல்வதன் மூலம் களப்பிரர் ஆட்சி குறித்து ஓரளவு தெளிவான சித்திரத்தை அளிக்கிறது. ஒன்றாம் நூற்றாண்டு முதல் பத்தாம் நூற்றாண்டுவரை தமிழகத்தில் எத்தனை மன்னர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்று பார்த்தால் சட்டென்று ஆதித்த கரிகாலன் மட்டுமே நினைவுக்கு வருகிறார். அதைத் தவிர்த்து நம்மிடம் முறையான வரலாறு இல்லை. எழுதப்பட்ட கல்வெட்டு, செப்பேடுகளிலும் ”துஞ்சினார்” என்று பொத்தாம்பொதுவாக எழுதி வைக்கப்பட்டுள்ளன. பௌத்தம் பரவிய சீனம், இலங்கையில் எல்லாம் அவர்கள் வரலாற்றைத் தெளிவாகப் பதிவு செய்து வைத்துள்ளனர். தமிழகத்தில் பௌத்தம் பரவியிருந்தும் நம்மிடம் தரவுகள் இல்லை. காரணம் கி.பி. ஏழாம் நூற்றாண்டுக்குப்பின் பௌத்த நூல்கள் அனைத்தும் இங்கே அழிக்கப்பட்டுவிட்டன. எனக்கு இந்த நூலில் களப்பிரர் காலத்தில் இலங்கை அரசர்கள் என்ற பகுதி ஆச்சரியமாக இருந்தது. இந்த மன்னர்களின் வரலாறு சூலவம்சம் என்ற நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. சூலவம்சத்தை பௌத்தத் துறவிகள் வெவ்வேறு காலகட்டங்களில் தொடர்ந்து புதுப்பித்து வந்துள்ளனர். இந்நூலை அவர்கள் பாலி மொழியில் எழுதி வந்துள்ளனர். ஓகாரிக திஸ்ஸன் (கி.பி. 209-231) ஹீனயான பௌத்தம் ஒருகட்டத்தில் 18 பிரிவுகளைக் கொண்டதாகப் பிரிந்து போயிருந்தது. அதிலொன்று தேரவாதம். இது இப்போதுவரை இலங்கையில் பின்பற்றப்படும் பௌத்தமதப் பிரிவாக உள்ளது. திஸ்ஸனின் ஆட்சியில் மகாயானம் உள்ளே நுழைந்தது. அதை இம்மன்னன் வளரவிடாமல் தடுத்தான். அபயநாகன் (கி.பி. 231 – 239) இவர் திஸ்ஸனின் தம்பி. இவனுக்கும் பட்டத்து இராணிக்கும் கூடா ஒழுக்கம் இருந்துள்ளது. இது கண்டுபிடிக்கப்பட்டதும் தம்பி தமிழ்நாட்டுக்கு ஓடிவந்துவிட்டார். தமிழ்நாட்டிலிருந்து ஒரு சேனையைத் திரட்டிக்கொண்டு அண்ணன் மீது படையெடுக்க, அண்ணன் இராணியோடு இலங்கையின் மத்தியிலுள்ள மலைநாட்டுக்கு ஓடிவிட்டான். இவன் பின்னாலேயே விரட்டிச் சென்று அவனைக் கொன்று இராணியைக் கவர்ந்துவந்து தனது இராணியாக்கிக் கொண்டான். ஸ்ரீநாகன் II (கி.பி. 240 – 242) இவர் திஸ்ஸனின் மகன். அபயநாகன் இறந்தபின் இரண்டாண்டுகள் மட்டுமே நாட்டை ஆண்டிருக்கிறான். விஜயகுமரன் (கி.பி. 242 – 243) இவர் ஸ்ரீநாகன் II-இன் மகன். இவரது தாத்தா திஸ்ஸன் காலத்திலேயே அரண்மனையில் லம்பகர்ண வம்சத்தைச் சேர்ந்தவர்களின் செல்வாக்கு அதிகமாக இருந்தது. விஜயகுமாரன் அரியணை ஏறியபோது, லம்பகர்ண வம்சத்தைச் சேர்ந்த சங்க திஸ்ஸன், சங்கபோதி, கோதபய என்ற மூன்று நெருங்கிய நண்பர்கள் அவரிடம் அமைச்சர்களாகப் பணியாற்றி வந்தனர். இம்மூவரும் சதி செய்து கி.பி. 243ல் மன்னர் விஜயகுமரனைக் கொன்றனர். அத்துடன் திஸ்ஸனின் வம்சம் முடிவுக்கு வந்தது. சங்க திஸ்ஸன் (கி.பி. 243 – 252) இவரும் சதியில் கொல்லப்பட்டார். மாம்பழப் பிரியரான இவர் இலங்கையின் கிழக்குத் தீவு ஒன்றுக்குச் சென்றபோது அங்கே மாம்பழத்தில் நஞ்சூட்டிக் கொன்றிருக்கிறார்கள். சங்கபோதி (கி.பி. 252 – 254) இவர் காலத்தில் மரண தண்டனையை ஒழித்திருக்கிறார். இவர் எந்தளவு இரக்க குணமுள்ளவர் என்றால், ஒரு மரண தண்டனைக் கைதியைக் கொல்வதற்குப் பதில் போலியாக ஓர் உருவம் செய்து அவன்தான் இவன் என்பதுபோல ஏமாற்றி கொலையாளியைத் தப்பிக்க வைத்துவிடுவாராம். இதையெல்லாம் சகிக்காமல் இந்தக் கூட்டாளிகளில் ஒருவரான கோத்தபய என்னும் இலம்பகன்னன் இவருக்கு எதிராகக் கலகம் செய்தான். அரசருக்கு எதிராக அவன் போர்தொடுக்க, சங்கபோதி போர் புரியாமல் தப்பியோட, அவரைப் பிடித்த சேனாபதி ஒருவன் அவர் தலையை வெட்டி கோத்தபயவுக்கு அனுப்பினான். கோதபய ஆட்சியைப் பிடித்து மேகவண்ணாபயன் என்ற பெயரில் நாட்டை ஆண்டான். கோதபய (கி.பி. 254 – 267) இவனது காலத்திலும் மகாயானம் தலைதூக்கியிருக்கிறது. அதை அடக்கி தேரவாதத்தை ஓங்கச் செய்தார். மகாயான பிக்குகளை நாடுகடத்தினான். அப்படி நாடு கடத்தப்பட்ட பிக்குகள் தமிழகம் வந்து இங்கிருந்த மகாயான பௌத்தத் தலைவராக இருந்த சங்கமித்திரர் இலங்கையில் மகாயானத்தைப் பரப்ப கங்கணம் கட்டிக் கொண்டார். அங்கே தேரவாத பிக்குகளுடன் வாதஞ்செய்து வென்றார். இதனால் மன்னனும் அவரை ஆதரித்தான். தன் பிள்ளைகளான ஜேட்ட திஸ்ஸன், மகாசேனன் ஆகிய இருவரை அவரிடம் கல்வி கற்க அனுப்பினான். ஜேட்டதிஸ்ஸன் I (கி.பி. 267 – 277) சங்கமித்திரரின் மாணவனாக இருந்தாலும் இவனுக்கு குருவிடம் பகை இருந்தது. அதனால் இவன் அரியணை ஏறியதும் அவர் ஏரம் கட்டிக் கொண்டு சோழநாட்டுக்கு வந்துவிட்டார். சங்கமித்திரருக்கு கோதபயவின் இரண்டாவது மகன் மகாசேனனிடம்தான் அன்பு இருந்தது. இவர் காலத்தில் மணிமேகலைக்கு ஒரு விகாரை எழுப்பியுள்ளார். மகாசேனன் (கி.பி. 277 – 304) மகாசேனன் அரியணை ஏறியதும் சங்கமித்திரர் திரும்பி வந்து தன் கையாலேயே முடிசூட்டி அழகு பார்த்தார். மன்னன் ஆதரவுடன் மகாயானம் பரவ வழிவகுத்தார். தேரவாத மகாயானப் பூசல்கள் இவனது காலத்தில் அடிக்கடி நிகழ்ந்தன. ஸ்ரீ மேகவண்ணன் (கி.பி. 304 -332) இவனது ஆட்சிக்காலத்தில்தான் கலிங்கத்திலிருந்து புத்தரின் பல் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டது. அப்போது இந்தியாவில் வடக்கே சந்திரகுப்தன் ஆட்சி செய்துவந்தான். அவனிடம் புத்த பிக்குகளைத் தூது அனுப்பி புத்தகயாவுக்கு வருகைதரும் பிக்குகளுக்கு பாதுகாப்பு அளித்து ஆதரிக்கும்படி கேட்டுக்கொண்டான். ஜேட்டதிஸ்ஸன் II (கி.பி. 332 – 341) இவன் ஸ்ரீ மேகவண்ணனின் தம்பி. நுண்கலைகளில் ஆர்வம் கொண்டிருந்தான். தந்தத்தில் சிற்பங்கள் செய்வதில் ஆர்வம் கொண்டிருந்த இவன் அரண்மனையிலேயே அதைப் பொதுமக்களுக்குக் கற்பிக்கவும் செய்தான். புத்ததாசன் (கி.பி. 341 – 370) ஜேட்டதிஸ்ஸனின் மகன். மருத்துவ நிபுணனாகவும் இருந்தான். பாம்புக்கே வைத்தியம் பார்த்து நோய் தீர்த்ததாகச் சொல்கிறார்கள். இவனது காலத்தில் வைத்தியசாலைகள் பெருகின. மருத்துவர்களுக்கு நிலங்களும் தானமளித்திருக்கிறான். பாஹியான் என்னும் சீன யாத்திரிகர் இவனது காலத்தில் இலங்கையில் வந்து தங்கியிருக்கிறார். உபதிஸ்ஸன் (கி.பி. 370 – 412) புத்ததாசனின் மூத்த பிள்ளை. இவன் 42 ஆண்டுகள் அரசாண்டிருக்கிறான். தந்தையைப் போலவே மருத்துவத்தில் ஈடுபாடு கொண்டிருந்தான். இவனது பட்டத்து இராணி உபதிஸ்ஸனின் தம்பி மகாநாமனோடு கள்ள உறவில் இருந்தாள். மகாநாமன் பிக்குவாகச் சேரவிருந்தான். இந்நிலையில் இராணி அரசனைக் குத்திக் கொன்றுவிட்டாள். அதனால் மகாநாமன் வந்து ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டான். மகாநாமன் (கி.பி. 412 – 434) அண்ணனின் மனைவியும் பழைய இராணியுமானவளை புதிய இராணியாக்கிக் கொண்டான். இவனுக்கு ஆண் வாரிசு இல்லை. சங்கா என்றொரு பெண்பிள்ளை மட்டுமே. மகாநாமனுக்கு இன்னொரு தமிழினத்தைச் சேர்ந்த மனைவி இருந்தாள். தமிழ் இராணிக்கு சொத்திசேனன் என்றொரு மகன் இருந்தான். சொத்தி சேனன் (கி.பி. 434) இலங்கையை ஆண்ட மன்னர்களிலேயே மிகவும் கெடுபேறுடையவன் இந்த மன்னன்தான். இவன் அரியணை ஏறிய அன்றே கொல்லப்பட்டான். முந்தைய அரசனின் மூத்த இராணிக்குப் பிறந்த சங்காவால் சொத்திசேனன் அரியணை ஏறுவதை பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அதனால் நஞ்சூட்டி அவனைக் கொன்றாள். சத்தக் காகசன் (கி.பி. 434) பிறகு சங்கா தன் கணவனான சத்தக் காகசனை அரியணை ஏறச் செய்தாள். சத்தக் காகசன் என்றால் குடை ஏந்துபவன் என்று அர்த்தம். மகாநாமனுக்கு கொற்றக்குடை ஏந்தியவனாக இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஓராண்டுகாலமே இவன் அரசாண்டான். இவன் இறந்ததும் அமைச்சர் சடலத்தை அரண்மனையிலேயே கொளுத்திவிட்டு மித்தசேளன் என்பவனை மன்னராக்கினார். அத்துடன் லம்பகர்ண பரம்பரை முடிவுக்கு வந்தது. மித்தசேளன் (கி.பி. 435 – 436) இவன் ஒருகாலத்தில் கொள்ளைக்காரனாக இருந்திருக்கிறான். இவனை மன்னனாக்கிய அமைச்சரின் பெயர் தெரியவில்லை. அரசன் நோய்வாய்ப்பட்டிருப்பதால் வெளியே வரமுடியவில்லை என்று சொல்லி காலத்தை ஓட்டியிருக்கிறார்கள். இவ்வாறாக இலங்கையில் தொடர்ந்து குழப்பங்கள் நிகழ, பாண்டிய மன்னன் படையெடுத்துவந்து மன்னனைக் கொன்று ஆட்சியைக் கைப்பற்றினான். பாண்டியர் ஆட்சி (கி.பி. 436 – 463) அனுராதபுரத்திலிருந்து ஆண்ட இப்பாண்டிய மன்னனது பெயர் தெரியவில்லை. பாண்டு என்று பொதுவாக அழைக்கின்றனர். இக்காலகட்டத்தை ஆறு திராவிட மன்னர்களின் காலம் என்றழைக்கின்றனர். அந்த ஆறு மன்னர்கள், 1) பாண்டு, 2) பரிந்தன், 3) இளம்பரிந்தன், 4) தீர்த்தரன், 5) தாட்டியன், 6) பீடியன். பாண்டியர்கள் ஆட்சியின்போது இலங்கையின் தெற்குப் பகுதியான உரோகணத்தை ஆண்டுவந்த தாதுசேனன் என்பவனுடன் அடிக்கடி போர் நடந்தது. அத்தகைய போர்களில் தீர்த்தரன், தாட்டியன், பீடியன் ஆகிய மூவரும் கொல்லப்பட்டனர். கடைசியில் பீடியன் தாதுசேனனிடம் தோற்றுப்போய் தாதுசேனன் அரியணை ஏறினான். தாதுசேனன் (கி.பி. 463 – 479) பாண்டியர்களுக்கெதிராக 27 ஆண்டுகள் கலகம் செய்து ஒருவழியாக மன்னரானான் தாதுசேனன். இவன் வாழ்க்கை துயரமானது. இவனுக்கு இரண்டு மனைவியர். ஒரு மகளும் மொக்கல்லானன் என்ற மகனும் உண்டு. இரண்டாவது மனைவி குலத்தில் தாழ்த்தப்பட்டவள். அவள் மூலமாக கஸ்ஸபன் என்றொரு மகன் பிறந்தான். மகளை தன் தங்கை மகனுக்கு மணம் செய்வித்தான். மருமகனை தனது சேனாதிபதியாக்கிக் கொண்டான். மருமகனது பெயர் உபதிஸ்ஸன். அவன் அரசனின் மகளும் தனது மனைவியுமானவளை ஒருமுறை சவுக்கால் விளாச, காரணமே இல்லாமல் தன் மகளை அடித்திருக்கிறான் என்பதை அறிந்து மகள்மேல் பேரன்பு கொண்டிருந்த அரசன் கடுஞ்சினம் கொண்டான். அவனது அம்மாவும் தனது தங்கையுமானவளை உயிரோடு நெருப்பிலிட்டு எரித்துவிட்டான். இதனால் அரசன் மேல் தீராப்பகை கொண்ட சேனாதிபதி பழிதீர்க்கத் தீர்மானித்தான். அரசனின் இரண்டாம் மனைவிக்குப் பிறந்த கஸ்ஸபனுக்கு அரசாளும் ஆசையைத் தூண்டிவிட்டான். தன் பக்கம் ஆட்களைச் சேர்த்துக் கொண்டு அரசனைச் சிறையிலடைத்தான். அரசனின் இன்னொரு மகன் மொக்கல்லானனைக் கொல்ல முயல அவன் தமிழகத்துக்குத் தப்பியோடினான். அத்தோடு சேனாதிபதி நிற்கவில்லை. கஸ்ஸபனிடம் அவனது தந்தை பெருஞ்செல்வத்தை மொக்கல்லானனுக்குத் தருவதற்காக ஒளித்து வைத்திருப்பதாகவும் அந்த இடத்தைத் தெரிந்துகொள்ளுமாறும் தூண்டினான். பலமுறை ஆட்களை விட்டுக் கேட்டும் அரசன் பதில் சொல்லாதிருக்கவே, அவனைக் கொன்றுவிடும்படி கஸ்ஸபன் ஆணையிட்டான். சேனாதிபதி அரசனை நிர்வாணமாக்கி சுவரோடு சேர்த்துச் செங்கல்லால் சுவரெழுப்பிப் பூசிவிட்டான். கஸ்ஸபன் I (கி.பி. 479 – 497) இவன் பாதுகாப்புக்காக சீக்கிரி மலைமேல் கோட்டையமைத்து அரசாண்டான். இந்தக் கோட்டை மற்றும் அரண்மனைச் சிதிலங்கள் இன்னமும் இலங்கையில் உள்ளன. தமிழகத்தில் உதவிதேடிச் சென்ற மொக்கல்லானனுக்கு சாமானியமாக உதவி கிடைக்கவில்லை. பதினெட்டு ஆண்டுகள் கழித்து தனக்குக் கிடைத்த போர் செய்வதில் திறன் பெர்ற பதினெட்டு தமிழ் நண்பர்களுடன் கஸ்ஸபன் மீது படையெடுத்தான். தோற்கும் நிலையில் இருந்தபோது யானை மீதிருந்தபடி வாளால் தன்னைத்தானே மாய்த்துக்கொண்டு கஸ்ஸபன் இறந்துபோனான். மொக்கல்லானன் (கி.பி 497 – 515) இவன் அரசனானதும் தன் தந்தையைக் கொல்ல கஸ்ஸபனுக்கு உதவியாக இருந்தவர்களைக் கொன்றுகுவித்தான். பலருக்கு மூக்கையும் காதையும் அரிந்து நாடுகடத்தினான். குமார தாதுசேனன் (கி.பி. 515 – 524) மொக்கல்லானனின் மகன். இவன் ஒரு கவிஞனும்கூட. இவன் எழுதிய ஜானகி ஹரணம் என்ற காவியம் பிரபலமானது. இவருக்கும் இந்தியாவின் காளிதாசருக்கும் இடையே நட்பு இருந்ததாகவும் அவர் இலங்கை வந்து தங்கியிருந்தபோது ஒரு சதியில் கொல்லப்பட அத்துயர் தாங்காது அவரை எரியூட்டிய நெருப்பில் விழுந்து உயிரை மாய்த்துக்கொண்டதாக ஒரு கதை உண்டு. இல்லை, இது மொக்கல்லானனின் அமைச்சரின் மகனான காளிதாசன். அவன் அரசனின் நெருங்கிய நண்பன், அவன் இறந்தபோதுதான் துயர் தாங்காமல் தானும் தீயில் குதித்து உயிர்விட்டான் என்றும் சொல்கிறார்கள். கீத்திசேனன் (கி.பி. 524) குமார தாதுசேனனின் மகன். ஆட்சிக்காலத்தில் 9 மாதங்கள் சென்ற நிலையில் இவனது தாய்மாமன் சிவன் இவனைக் கொன்று ஆட்சியைக் கைப்பற்றினான். சிவன் (கி.பி. 524) இவன் அரியணை ஏறிய இருபத்தைந்து நாட்களில் உபதிஸ்ஸன் என்பவனால் கொல்லப்பட்டான். உபதிஸ்ஸன் III (கி.பி. 524 – 526) இந்த உபதிஸ்ஸன் யாரென்றால் தாதுசேனனின் மகளை மணந்து, அவன்மேல் வஞ்சம் கொண்டு கஸ்ஸபனைத் தூண்டி கடைசியில் உயிரோடு அரசனுக்குச் சமாதி கட்டியவன். அதாவது, மொக்கல்லானனின் தங்கையை மணந்தவன். மொக்கல்லானன் தன் தந்தையைக் கொல்ல உதவிய ஆயிரம் பேரைக் கொன்றிருக்கிறான். இவன் எப்படித் தப்பினானென்று தெரியவில்லை. உபதிஸ்ஸன் தன் மகளை சிலாகாலன் என்பவனுக்கு மணஞ்செய்து கொடுத்தான். உபதிஸ்ஸனுக்கு கஸ்ஸபன் என்றொரு மகனுண்டு. சிலாகாலன் ஆளும் ஆசைகொண்டு மாமனாரோடு போர் செய்தான். உபதிஸ்ஸனுக்கு ஏற்கெனவே வயதாகிவிட்ட காரணத்தால் கஸ்ஸபன் போர் செய்துவந்தான். கடைசியில் கஸ்ஸபன் தோற்றுப்போய் களத்தில் தற்கொலை செய்துகொண்டான். அச்செய்தியறிந்து உபதிஸ்ஸனும் இறந்துபோனான். சிலாகாலன் (கி.பி. 526 – 539) இவனுக்கு மொக்கல்லானன், தாட்டாபபூதி, உபதிஸ்ஸன் என மூன்று மகன்கள். மூவருக்கும் ஆளுக்கொரு திக்கில் ஆட்சியைக் கொடுத்து ஆளச் செய்தான். மகாநாகன் என்ற கொள்ளைக்காரனை அரசு அலுவலில் உதவிக்கு வைத்துக்கொண்டு, உரோகணத்தில் அவனை வரி வசூலிப்பவனாக நியமித்தான். அவன் வரியை வாங்கித் தானே வைத்துக்கொண்டு உரோகணத்திலேயே தங்கிவிட்டான். தாட்டாபபூதி (கி.பி. 539 – 540) சிலாகாலன் இறந்தபின், இரண்டாவது மகன் தாட்டாபபூதி ஆட்சியைக் கைப்பற்றினான். மூத்த அண்ணனான மொக்கல்லானனுக்கு ஆட்சிப் பொறுப்பைத் தராமல் இரண்டாமவன் வந்ததை மூன்றாவது தம்பி உபதிஸ்ஸன் கண்டித்தான். அதனால் அவனைக் கொன்றுவிட்டான். மொக்கல்லானன் தாட்டாபபூதி மீது படையெடுத்தான். மொக்கல்லானன் எதற்கு தேவையில்லாமல் படைவீரர்கள் ஒருவருக்கொருவர் கொன்று சாக வேண்டும், ஒற்றைக்கு ஒற்றை போர்செய்து யார் ஆள்வது என்று முடிவு செய்வோம் என்று செய்தியனுப்பினான். இருவரும் யானை மீது அமர்ந்து போர்செய்ய, மொக்கல்லானனின் யானை தாட்டாபபூதியின் யானையைத் தந்தத்தால் குத்திவிட அது திரும்பி ஓடியது. தோற்றுப்போனதால் வாளெடுத்துக் குத்திக்கொண்டு தற்கொலை செய்துகொண்டான், தாட்டாபபூதி. மொக்கல்லானன் II (கி.பி. 540 – 560) கீர்த்தி ஸ்ரீமேகன் (கி.பி. 560 – 561) மொக்கல்லானன் இறந்ததும் அவனது இராணி மற்ற உறவினர்களுக்கு நஞ்சிட்டுக் கொன்றுவிட்டு தன் மகனை அரசனாக்கினாள். ஆனால் பின்னாலிருந்து அவளே ஆண்டாள். இவளது ஆட்சியில் ஏகப்பட்ட குழப்பங்கள் நடந்தேறின. கீர்த்தி ஸ்ரீமேகனின் பாட்டனார் சிலாகாலனால் உரோகணத்தில் வரி வசூலிக்க அமர்த்தப்பட்டிருந்த மகாநாகன், இக்குழப்பத்தைப் பயன்படுத்தி படையெடுத்து வந்து ஆட்சியைக் கைப்பற்றினான். கீர்த்தி ஸ்ரீமேகன் வெறும் பத்தொன்பதே நாட்கள் அரியணையிலிருந்தான். இலங்கையின் அரசியல் அப்போதிருந்தே ஓர் இரத்த சரித்திரமாக இருந்திருப்பது ஆச்சரியம்தான். https://mayir.in/essays/bala-karubbasamy/4523/ களப்பிரர்கள் AI உதவியுடன்.. Kalabhra Dynasty (களப்பிரர்கள்) என்பது தென் இந்திய வரலாற்றில் குறைவாக பதிவாகிய ஒரு ஆட்சிக் குழுவாகும். அவர்கள் பற்றிய தகவல்கள் மிகக் குறைவாக கிடைக்கின்றன. 1️⃣ களப்பிரர்கள் கி.பி. 3–6ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் தமிழ்நாட்டில் ஆட்சி செய்ததாக கருதப்படுகிறார்கள். 2️⃣ அவர்கள் சேரர், சோழர், பாண்டியர் ஆகிய பாரம்பரிய அரசுகளை தற்காலிகமாக வீழ்த்தி ஆட்சி செய்தனர். 3️⃣ இந்த காலத்தை சில வரலாற்றாளர்கள் “தமிழகத்தின் இருண்ட காலம்” என்று குறிப்பிடுகிறார்கள், ஏனெனில் எழுத்து ஆதாரங்கள் குறைவு. 4️⃣ களப்பிரர்கள் பௌத்தம் மற்றும் ஜைனம் போன்ற மதங்களுக்கு ஆதரவாக இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. 5️⃣ பின்னர் பாண்டியர் மற்றும் பல்லவர் போன்ற அரசுகள் அவர்களை தோற்கடித்து மீண்டும் ஆட்சியைப் பெற்றன. இலங்கையில் அவர்கள் பரவினார்களா? நேரடியான ஆதாரம் இல்லை. ஆனால் சில வரலாற்றாளர்கள் அவர்கள் தென் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு சில மக்கள் இடம்பெயர்ச்சியில் கலந்து இருக்கலாம் என்று மட்டும் கருதுகின்றனர். உறுதியான ஆதாரங்கள் இல்லை. களப்பிரர் தமிழரா? 1️⃣ சில வரலாற்றாளர்கள் களப்பிரர்கள் தமிழ் மலைப்பகுதிகளில் வாழ்ந்த பழங்குடி அல்லது வீரக்குடிகள் (hill tribes) என்று கருதுகின்றனர். 2️⃣ மற்றொரு கருத்துப்படி அவர்கள் கர்நாடகப் பகுதியிலிருந்து வந்த “களப்ர/கலவர” என்ற குழுவுடன் தொடர்புடையவர்கள் என்று கருதப்படுகிறது. 3️⃣ சில ஆய்வாளர்கள் அவர்கள் தமிழர்களே ஆனால் சங்க கால அரசுகளுக்கு எதிராக எழுந்த ஒரு புதிய அரசியல் சக்தி என்று கூறுகிறார்கள்.
  25. ஒரு கொலையும் யாழ்ப்பாணத்தவரின் பயங்களும் - நிலாந்தன் சித்த மருத்துவத்துறை விரிவுரையாளரின் கொலைச் சம்பவம் ஒரு தனிப்பட்ட குற்றச்செயலா? அல்லது பொதுவான சமூகப் பிறழ்வின் குறிகாட்டியா ? கொல்லப்பட்டவர் ஒரு மருத்துவர், விரிவுரையாளர் என்பதும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், அந்தச் சம்பவம் அதிகம் கவனிப்பைப் பெறக் காரணம். அவர் ஒரு படித்த தாய். பிள்ளையும் யாழ்ப்பாணத்தின் முன்னணிப் பாடசாலையில் படித்திருக்கிறார். ஒரு படித்த தாய், பதின்ம வயதிலும் அதன் பின்னரும் பிள்ளையை வெற்றிகரமாகக் கையாள முடியாமல் போனது அவருடைய தனிப்பட்ட தோல்வியா? அல்லது நடப்பில் உள்ள கல்வி முறையின் தோல்வியா? இக்கேள்விகளுக்கான விடைகளைத் தேடுவதாக இருந்தால் ஒரு குற்றச் செயல் மட்டும் போதாது. ஒரு குறிப்பிட்ட காலகட்டத்துக்குள் நிகழ்ந்த குற்றச் செயல்களைத் தொகுத்து ஆராய வேண்டும். பொருத்தமான புள்ளி விபரங்களைத் தொகுத்தும் பகுத்தும் கிடைக்கும் முடிவுகளின் அடிப்படையில் அது ஒரு சமூகப் பொதுத் தோறப்பாடா? இல்லையா? என்ற முடிவுக்கு வர வேண்டும். யாழ்ப்பாணத்தின் படித்த கல் வீட்டுக்காரர்கள் அதிகமாக சிசிடிவி கமராவை வீட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் பொருத்தி வைத்திருக்கிறார்கள். குற்றச்செயல்களையும் திருடர்களையும் கண்காணிப்பதற்கு கமராவை பொருத்தும் ஒரு சமூகம், தங்கள் வீட்டுக்குள் தங்கள் கண் முன்னே வளரும் பிள்ளைகளை தொடர்ச்சியாகக் கண்காணிக்கின்றதா? பிள்ளைகளை தொடர்ச்சியாகக் கண்காணிக்கும் பெற்றோரும் மூத்தவர்களும் பிள்ளைகளிடம் ஏற்படும் மாற்றங்களை உடனடியாகக் கண்டு கொள்வார்கள். பிள்ளைகளைத் தொடர்ச்சியாகக் கண்காணிக்கத் தவறும் பெற்றோரே பிள்ளைகளைத் தவறவிடுகிறார்கள். பெரும்பாலான படித்த வசதியானவர்கள் வீடுகளில் கமராவைப் பொருத்தும் ஒரு சமூகத்தில் பிள்ளைகளைத் தொடர்ச்சியாகக் கண்காணிக்க முடியாமல் போவது ஏன்? பிள்ளைகளைக் கண்காணிப்பதற்கு கமராவைப் பொருத்தும் பெற்றோரும் உண்டு. ஆனால் கமராவால் மட்டும் பிள்ளைகளைக் கண்காணிக்க முடியாது. அன்பினால்தான், பாசத்தால்தான் ,அறிவினால்தான் பிள்ளைகளைப் பின்தொடரலாம்; கண்காணிக்கலாம். ஒரு பகுதி படித்த பெற்றோராலேயே ஏன் பிள்ளைகளைக் கண்காணிக்க முடியாமல் போகிறது ? இக்கட்டுரையாளர் யாழ்ப்பாணத்தில் கிராம மட்டங்களில் நடக்கும் சந்திப்புகளின்போது ஒரு கேள்வி கேட்பார். உங்களில் எத்தனை பேரிடம் கைபேசிகள் உண்டு? எல்லாருமே உண்டு என்று கூறுவார்கள். அதில் எத்தனை ஸ்மார்ட் கைபேசிகள்? என்று கேட்டால்,அநேகமானவர்கள் தங்களிடம் இருப்பது அதுதான் என்று கூறுவார்கள். பின்னர் ஒரு கேள்வி “கைபேசியில் நீங்கள் சராசரியாக ஒரு நாளைக்கு எத்தனை மணித்தியாலங்கள் செலவழிப்பீர்கள்?” அதற்குக் கிடைக்கும் பதில் பெரும்பாலும் அதிர்ச்சியூட்டுவதாக இருக்கும். ஆகக் குறைந்தது ஒரு மணித்தியாலமும் ஆகக்கூடியது 5 மணித்தியாளங்களும் என்று பதில் கிடைக்கும். அதை வைத்து மீண்டும் ஒரு கேள்வி. “அப்படியென்றால் கடந்த வாரம் முழுவதும் நீங்கள் கைபேசியில் இருந்து கற்றுக்கொண்ட ஒரு விடயத்தைச் சொல்லுங்கள்? அல்லது கைபேசியில் நீங்கள் பார்த்த, கேட்டவற்றுள் உங்களை மிகவும் பாதித்த, உங்களுடைய உணர்வில், சிந்தனையயில் மாற்றத்தை ஏற்படுத்திய ஒரு விடயத்தைச் சொல்லுங்கள் ? என்று கேட்டால், அநேகமானவர்கள் பொருத்தமான பதிலைச் சொல்ல மாட்டார்கள். அரிதாகத்தான் நல்ல பதில் வரும். இது கிராமப்புறச் சந்திப்புகளின் போதும் அவதானிக்கப்பட்டது; நகர்ப்புறச் சந்திப்புகளின் போதும் அவதானிக்கப்பட்டது. படிப்பறிவு மட்டம் குறைந்தவர்கள் மத்தியிலும் அவதானிக்கப்பட்டது; அரசு அலுவலகங்களிலும் அவதானிக்கப்பட்டது. எனவே தொகுத்துப் பார்த்தால் படித்தவர்,படிக்காதவர், வேலை செய்பவர்,வேலை செய்யாதவர்,வசதியானவர்,வசதி குறைந்தவர், என்ற வேறுபாடு இன்றி சமூகத்தில் அதிக தொகையினர் கைபேசிகளின் கைதிகளாகவே காணப்படுகிறார்கள். அவ்வாறு கைபேசிகளின் கைதிகளாகக் காணப்படுவோரிடம் மேலும் ஒரு கூர்மையான கேள்வி கேட்கப்படும்.” நீங்கள் சராசரியாக ஒரு மணித்தியாலத்தில் இருந்து ஐந்து மணித்தியாலங்கள் வரை கைபேசியோடு மினக்கெடுக்கிறீர்கள். ஆனால் உங்களுடைய வளரும் பிள்ளைகளின் கண்களைப் பார்த்து எத்தனை நிமிடங்கள் கதைக்கிறீர்கள்? உங்கள் வளரும் பிள்ளைகளைத் தொட்டு அரவணைத்து எவ்வளவு நேரம் உரையாடுகிறீர்கள்? உங்கள் பிள்ளைகளோடு நீங்கள் எத்தனை மணித்தியாளங்களைச் செலவழிக்கிறீர்கள்? இந்த கேள்விக்கு அவர்கள் கூறும் பதில் பெரும்பாலும் கைபேசியோடு அவர்கள் செலவழிக்கும் நேரத்தைவிட குறைவான நேரந்தான் தங்கள் பிள்ளைகளோடு அவர்கள் செலவழிக்கிறார்கள் என்பதாக இருக்கும். கைபேசி மட்டுமல்ல, தொலைக்காட்சியும் ஒரு நேரம் தின்னிதான். வீட்டில் இருப்பவர்கள், வயோதிபர்கள், குடும்பப் பெண்கள் தொலைக்காட்சியோடு கண்ணை ஒட்டிக் கொண்டிருக்கிறார்கள். அங்கிருந்து அவர்கள் கற்றுக் கொள்வது பெரும்பாலும் முற்போக்கானது அல்ல. பெரும்பாலான தொலைக்காட்சி சீரியல்கள் அவர்களுக்கு எதைக் கற்றுக்கொடுக்கின்றன ? தொகுத்துப் பார்த்தால் பெரும்பாலான திரைத் தொடர்களில் பெண்கள்தான் சூழ்ச்சிகள், சதிகள் நிறைந்த தந்திரசாலிகள். மேலும், ஒரு ஆணுக்கு இரண்டு பெண்கள் ஆசைப்படுவார்கள். அந்த ஆண் ஒரு நாகமாக இருந்தால் இரண்டு பெண் நாகங்கள் ஆசைப்படும். இப்படிப்பட்ட திரைத் தொடர்களில் இருந்து முற்போக்கான விடையங்களை,பெண் விடுதலையை, சமூக விடுதலையை, கற்றுக்கொள்ள முடியாது. பெண்கள் பெண்களுக்கு எதிராக எப்படிச் சூழ்ச்சிகள் செய்வது என்று வேண்டுமானால் கற்றுக் கொள்ளலாம். இவ்வாறு கைபேசிகளோடும் தொலைக்காட்சிகளோடும் தம் பொழுதைப் போக்கும் பெற்றோரும் முதியோரும் அதே அளவு நேரத்தை பிள்ளைகளோடு செலவழிக்கிறார்களா ? கிராம மட்ட சந்திப்புகளில் உங்கள் வளர்ந்த பிள்ளைக்கு சாப்பாடு கொடுக்கும் போது பிள்ளைகளோடு கதைத்துக் கதைத்து உணவு பரிமாறுவீர்களா? பிள்ளையின் கண்களைப் பார்த்து உரையாடுவீர்களா ? என்று கேட்டால், கணிசமான தாய்மார் கூறுவார்கள், இல்லை பிள்ளைகளோடு ஒன்றாக இருந்து சாப்பிடும் சந்தர்ப்பங்கள் குறைவு என்று. பிள்ளைக்கு சோலி அதிகம். பிள்ளையும் கைபேசியில் கண்ணை ஒட்டிக்கொண்டிருக்கும். மனிதர்கள் முன்னெப்பொழுதையும் விட பாரதூரமான விதத்தில் பொழுது போக்கிகளாக மாறிவிட்டார்கள். பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையே முதியோருக்கும் பிள்ளைகளுக்குமிடையே பொழுதுபோக்குச் சாதனங்கள் பெருகிவிட்டன. கைபேசியின் கைதிகளும் தொலைக்காட்சியின் கைதிகளும் மெய்யான பொருளில் பிள்ளைகளை முழுமையாகக் கண்காணிப்பதில்லை . போதைப்பொருள் பாவனை தொடர்பான கருத்தரங்குகளில், துறைசார்ந்த மருத்துவர்களும் நிபுணர்களும் கூறுவார்கள், பிள்ளைகளின் கண்களை உற்றுக் கவனியுங்கள். அவை அசாதாரணமாகச் சிவந்திருக்கின்றனவா? பிள்ளையின் நடத்தைகளைப் பாருங்கள். அது எங்கே போகிறது? எப்பொழுது வருகிறது? யாரோடு சேர்க்கிறது? யாரோடும் சேர்வதில்லை? என்பவற்றைக் கவனியுங்கள். அது நித்திரை கொள்கிறதா? இல்லையா? ஒழுங்காகச் சாப்பிடுகிறதா? ஒழுங்காக மலம் கழிக்கிறதா? ஒழுங்காகக் குளிக்கிறதா? ஒழுங்காக ஆடை உடுத்துகிறதா? என்று கவனியுங்கள். பிள்ளைகளின் கண்களில் ,நடத்தைகளில் ஏற்படும் மாற்றங்களைக் கவனியுங்கள்.பிள்ளைகளின் கைபேசிகளில் யார் யார் இருக்கிறார்கள்? யாரோடு கதைக்கும்போது பிள்ளை தனியே போகிறது? பிள்ளை அதிகம் தனிமையில் இருக்கிறதா? இல்லையா? என்று உற்றுக் கவனியுங்கள். தனிமையில் இருக்கும்பொழுது பிள்ளை என்ன செய்கிறது? என்று பாருங்கள். அதாவது ஒரு சிசிடிவி கமராவானது நடக்கும் சம்பவங்களைத் தொடர்ச்சியாகக் கண்காணிப்பதுபோல பெற்றோரும் பிள்ளைகளை இடையறாது கவனிப்பார்களாக இருந்தால் ஒரு பிள்ளையும் பெற்றோரிடம் இருந்து தவறிப்போகாது. பிள்ளைகளைக் கையாள்வது பெற்றோருக்குப் பெரிய சவாலாகவும் இராது. எனவே கைப்பேசிகளின் காலத்தில்,பொழுதுபோக்குகளின் யுகத்தில், பெற்றோருடைய குடும்ப முகாமைத்துவத் திறன்களை அதிகப்படுத்த வேண்டியுள்ளது. பிள்ளை வளர்ப்புக்கான அறிவு சார்ந்த திறன்களை வளர்த்தெடுக்க வேண்டியுள்ளது. ஒரு குடும்பத்தின் கொள்ளளவை அறிவுபூர்வமாக,விஞ்ஞானபூர்வமாக,அதேசமயம் உணர்வுபூர்வமாகவும் கட்டியெழுப்ப வேண்டியிருக்கிறது. அரசுசார்பற்ற நிறுவனங்கள் கிராம மட்டத்திலும் அலுவலகங்களிலும் நிறுவனங்களிலும் திறன்களைக் கட்டியெழுப்பும் கருத்தரங்குகளையும் பயிற்சிப் பட்டறைகளையும் நடத்துவதுண்டு. ஆனால் அரசுசார்பற்ற நிறுவனங்களால் அழைத்து வரப்படுகின்ற வளவாளர்களில் அநேகமானவர்கள் யாந்திரீகமானவர்கள். சமூகத்தை அதன் பண்பாட்டு அம்சங்களின் ஊடாக அணுக முடியாதவர்கள். பெரும்பாலான அரசசார்பற்ற நிறுவனங்களின் கொள்ளளவைக் கட்டியெழுப்பும் நிகழ்ச்சித் திட்டங்கள் ஒரே மாதிரியானவை. அங்கேயே ஒரு யாந்திரீகப் பண்பு வந்து விடுகிறது. படைப்புத்திறன் இருக்காது. எனவே சமூகத்தின், குடும்பங்களின், தனிநபர்களின் கொள்ளளவைக் கட்டியெழுப்பும் விடயத்தை அரசசார்பற்ற நிறுவனங்கள் மட்டும் கையாள முடியாது. அது ஓர் அரசியல், பண்பாட்டுச் செயல்திட்டம்.குடும்பங்களின் கொள்ளளவைக் கட்டி எழுப்புவது,பிள்ளை வளர்ப்புத் திறனைக் கட்டியெழுப்புவது,சமூக முகமைத்துவத்தைக் கட்டியெழுப்புவது,முரண்பாடுகள் மோதல்களாக வராமல் தடுப்பதற்குரிய திறன்களைக் கட்டியெழுப்புவது, உள்முரண்பாடுகள் குற்றச்செயல்களாக விகார வளர்ச்சி அடைவதைத் தடுப்பதற்குரிய அறிவு சார் திறன்களைக் கட்டியெழுப்புவது…..போன்ற எல்லாமே அரசியல் செயற் திட்டங்கள்தான். அது முழுக்கமுழுக்க அரசியல் பண்பாட்டு மறுமலர்ச்சி. அதற்கு ஒரு அரசியல் தரிசனமும் அதன் வழிவந்த பண்பாட்டு தரிசனமும் இருக்க வேண்டும். அதற்கு அரசியல் தலைமைத்துவம் வேண்டும் பண்பாட்டுத் தலைமைத்துவம் வேண்டும். ஆனால் கொடுமை என்னவென்றால், நமது அரசியல்வாதிகள் தங்கள் கட்சிக்குள் வரும் விவகாரங்களையே தீர்க்க முடியாதவர்களாக, தங்களுடைய கட்சிக்காரனுக்கு எதிராகவே வழக்குப் போடுகிறவர்களாக, தங்கள் கட்சியைக் கொண்டுபோய் நீதிமன்றத்தில் நிறுத்துகிறவர்களாகக் காணப்படும் ஒரு சமூகத்தில், குடும்பங்களுக்குள் வரும் முரண்பாடுகள்,குற்றச்செயல்களாக விகார வளர்ச்சி அடைவதைத் தடுக்கும் விதத்தில் குடும்பத் தலைமைத்துவத்தின் முகாமைத்துவத் திறன்களைக் கட்டியெழுப்புவது யார்? https://www.nillanthan.com/8224/
  26. புனைகதாசிரியராக யாரையும் புனிதப்படுத்துவதோ யாருடைய புனிதங்களை உடைப்பதோ என்னுடைய நோக்கமல்ல-நட்சத்திரன் செவ்விந்தியன் By க.விக்னேஸ்வரன் - March 22, 2026 நட்சத்திரன் செவ்விந்தியன் என்கிற அருண் அம்பலவாணர் யாழ்ப்பாணத்தில் பிறந்தவர். ஆஸ்திரேலியாவில் வசிக்கிறார். இவரது இரண்டு கவிதைத் தொகுப்புகள் ‘வசந்தம் 91’, ‘எப்போதாவது ஒருநாள்’ ஏற்கனவே வெளிவந்துள்ளன், தன்னுடைய முதற் கவிதைத் தொகுப்புகளின் வழியே ஈழ இலக்கியத்தில் தனக்கான கவனத்தை பெற்றவர் நட்சத்திரன் செவ்விந்தியன். தற்போது பத்திரிகைகளில் தனது தனிப்பட்ட இணையதளத்தில் அரசியல் மற்றும் இலக்கிய விமர்சனங்களை எழுதியும் வருகிறார்.முகாமுகம் இவரது முதல் சிறுகதைத் தொகுப்பு. இத்தொகுப்பை மையமாக வைத்து இந்த உரையாடல் இணையம் வழியே எடுக்கப்பட்டுள்ளது. நட்சத்திரன் செவ்விந்தியன் என்கிற குறிப்பிட்ட புனைபெயரைச் சூடிக்கொண்டதற்கான பின்புலம் என்ன? என்னுடைய பத்து வயதில் நான் மிக்க காதலோடு படித்து ரசித்தவை ராணி காமிக்ஸ், முத்து காமிக்ஸ் முதலிய சித்திரக்கதைப் புத்தகங்களே. அப்புத்தகங்களில் செவ்விந்தியப் பாத்திரங்கள் இடம்பெற்றன. அதில் வந்த கவர்ச்சியால் செவ்விந்தியன் என்று பெயர் வைத்தேன். நட்சத்திரன் என்பது இரண்டு பெயர்கள் இடம் பெறவேண்டும், தனியே தமிழர் பெயர்கள் போல (அப்பாவின் பெயரின் முதலெழுத்து அல்லாது) சிங்களவரின் பெயர்கள் போல இரண்டு பெயர்கள் வரவேண்டும் என்கிற ஆர்வத்தில் வைத்த இன்னொரு கவர்ச்சிப் பெயர். இப்போதும் நட்சத்திரன் என்கிறதில் எனக்குத் திருப்திதான். ஆனால் செவ்விந்தியன் என்கிற பெயரில் எனக்குச் சிறிது அசௌகரியம் உண்டு. இதற்குக் காரணம், இப்போது செவ்விந்தியர்(Red Indians) என்கிற பதம் பிழையாக, அவ்வினத்தவர்களை இழிவாக இனவாதத்தோடு சித்தரிக்கப்படுகிறது என்பதற்காகக் கைவிடப்பட்டு விட்டது. பூர்வகுடி அமெரிக்கர் என்பதே ஏற்றுக்கொள்ளப்பட்ட நாகரீகமான பதம். ஆனால் இப்போது என் பெயரை மாற்ற முடியாத அளவுக்குக் காலதாமதமாகிவிட்டதால் அதனையே பயன்படுத்துகிறேன். உங்கள் வாழ்க்கைச் சூழல் பற்றியும் (முடிந்தால் மட்டுமே ) அதனூடாக வாசிப்பு,இலக்கிய வாசிப்பு போன்றவற்றிலிருந்து எழுதுவதை நோக்கி நகர்ந்து வந்த பின்புலம் பற்றியும் சொல்ல இயலுமா? என்னுடைய ஐந்து வயதில் அம்மா இறந்து விட்டார். என்னுடைய ஏழு வயதில் அப்பா இறந்துவிட்டார். இறக்கும்போது அப்பா உதவி அரசாங்க அதிபராக(தாசில்தார்) இருந்தார். 71 வயதான என் தாத்தாவே என்னையும் என் அண்ணாவையும் தங்கையையும் வளர்க்கும் பொறுப்பை ஏற்று தன் மகள்களான சின்னம்மாக்களின்(சித்திகள்) உதவியோடு வளர்த்தார். எனக்கு மூன்று அற்புதமான சின்னம்மாக்கள். என் மூத்த சின்னம்மாவே என்னுடைய புத்தகங்கள் படிக்கும் ஆர்வத்திற்குக் காரணம். ஆங்கிலத்திலும் தமிழிலும் படிக்கக்கூடிய அவரே எனக்கும் அண்ணாவுக்கும் ஆரம்பத்தில் அம்புலி மாமா, ரத்ன பாலா முதலிய சிறார் இதழ்களை வாங்கித்தந்து புத்தகங்கள் படிப்பதில் ஆர்வத்தை ஏற்படுத்தினார். அவர் விவசாயம் சம்பந்தப்பட்ட ஓர் அரசாங்க உத்தியோகத்தராக இருந்தார். தனது சம்பளத்தில் எமக்குப் படிக்க புத்தகங்கள் வாங்கித் தந்தார். பெருந்துயரம் என்னவென்றால் என் அப்பா இறந்த அடுத்த வருடம் திருமணமாகாமலிருந்த என் முத்தச் சின்னம்மா என்னுடைய எட்டு வயதில் தற்கொலை செய்து கொண்டார். வெறும் நாலு வருடங்களில் என் தூண்களாக இருந்த அம்மா, அப்பா, மூத்த சின்னம்மா என மூவரை இழந்துவிட்டேன். எட்டு வயதில் அந்தத் துயரம் தெரியவில்லை எனக்கு. அந்த மூன்று சாவு வீடுகளும் அப்போது கொண்டாட்டமாகவே இருந்தது. பல ஆண்டுகளுக்குப் பிறகே இந்தச் சாவுகளுக்காக நான் அழுதேன். இப்போது இதையும் கண்களில் கண்ணீரோடேயே சொல்கிறேன். மூத்தச் சின்னம்மா வாங்கித்தந்த சிறுவர் இதழ்களை பிறகும் தொடர்ந்து தாத்தா வாங்கித் தந்தார். என்னுடைய 12 வயதில் எமது வடமராட்சிப் பிரதேசத்தில் சிறப்பான பாடசாலையான ஹாட்லிக் கல்லூரியில் படிக்க வைக்கும் தெரிவுப் பரீட்சையில் நான் முதலாவதாகத் தேறினேன். எனக்கு இப்போதும் மிகத்தெளிவாக ஞாபகமிருக்கிறது , தாத்தா முதல்நாள் பஸ்ஸில் ஹாட்லிக் கல்லூரி அனுமதிக்கு என்னைக் கூட்டிச் சென்றுவிட்டு வரும்போது நம்மூர் பஸ் நிலையத்திலுள்ள புத்தகக் கடையில் எனக்கு ரத்னபாலா வாங்கிக்கொடுக்கக் கேட்டபோது புத்தகக் கடை உரிமையாளர் “ரத்ன பாலா இல்லை, கோகுலம் இருக்கிறது. இது ரத்ன பாலாவை விடச் சிறப்பானது” என்று சொன்னார். நான் ரத்ன பாலாவே வேண்டும் என்று அடம்பிடித்தேன்..கடைக்காரரோ “இல்லை உங்கள் பேரன் வளர்ந்து கொண்டிருக்கிறான். இப்போது இவனுக்குக் கோகுலம் தான் சரியாக இருக்கும். பிடிக்காவிட்டால் திரும்பிக் கொண்டு வாருங்கள். நான் பணத்தைத் திருப்பித் தருவேன்” என்றார். கோகுலத்தை வீட்டுக்குச் சென்று வாசித்தேன். அது என் அப்போதைய வயதுக்கு ரத்ன பாலாவை விடச்சிறப்பாக இருந்தது. அந்தக் கடைக்காரர் எனக்குச் செய்த நன்மை அப்போதே புரிந்தது. ஹாடலிக் கல்லூரிக்குச் செல்வதற்காக என் ஒரு மாமனார் அந்தக்கால ஆடம்பரப் பொருளான ஒரு புதிய ஏசியா சைக்கிள் வாங்கித் தந்தார். அந்தச் சைக்கிளில் நான் நம்மூரில் உள்ள எல்லா நூலகங்களுக்கும் நேரம் கிடைக்கிறபோது செல்வேன். கோகுலமும் அலுப்புத் தரக் குமுதம், ஆனந்தவிகடன், தினசரிப் பத்திரிகைகள் எல்லாம் படித்தேன். அந்த நூலகங்களில் நான் முதல் முதலாகப் படித்த இலக்கியச் சஞ்சிகை டொமினிக் ஜீவாவின் மல்லிகை. நான் ஈழ யுத்தத்தின் குழந்தை. எங்கள் பள்ளிப் பருவகாலம் முழுவதும் ஈழ யுத்தங்கள் நடந்து கொண்டிருந்தது. யாழ் குடநாடு புலிகளின் கட்டுப்பாடு, பின் இந்தியச் சமாதானப் படைகளின் கட்டுப்பாடு மீண்டும் புலிகளின் கட்டுப்பாடு என்று ஆட்சிகள் மாறினாலும் சமாதானமில்லாத காலமாகவே இருந்தது. ஆகவே உள்ளூராட்சி சபைகளின் கீழ்வரும் நூலகங்கள் சிறப்பாக இயங்க முடியவில்லை. என்னுடைய பதினாலாவது வயதில் மாலை நேரத் தனியார் ரியூட்டறி வகுப்பில் தமிழாசிரியராக இருந்தவர் செ. யோகராசா என்கிற எழுத்தாளரும் விமர்சகரும் ஆனவர். பின்னாட்களில் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைப் பேராசிரியர் ஆனவர். அவர் இலக்கியத்தில் எனக்கிருந்த ஆர்வத்தைக் கண்டு தனது தனிப்பட்ட நூலகத்தில் வைத்திருந்த ஈழ, தமிழக கிளாசிக்கல் புனைகதை நூல்களையும் கவிதைத் தொகுதிகளையும் இலக்கிய சஞ்சிகைகளைமும் மிகத் தாராளமாகப் படிக்கத் தந்தார். சிறு பத்திரிகைகளான அலை( யாழ்ப்பாணம்), படிகள்(பெங்களூர்), மீட்சி(தமிழகம்) முதலிய இதழ்களை அவரிடமிருந்து பெற்றே வாசித்தேன். அவ்வயதில் அவ்விதழ்களில் வரும் புனைவு சாரா(அல் புனைவு) எழுத்துக்களில் ஒரு 65 வீதம் தான் எனக்குப் புரிந்தாலும் அந்த மொழி தந்த பரபரப்புக்காகவும் பரவசத்துக்காகவும் படித்தேன். இதை விடச்சுவாரசியமானது நான் அவற்றைப் படித்த காலங்களும் இடமும். பாடசாலையில் விஞ்ஞானப் பாடத்தை அல்லது கணிதப் பாடத்தை ஆசியர் படிப்பித்துக் கொண்டிருக்கும் போது நான் பாடப்புத்தகத்துக்குள் மறைத்து வைத்து ஓர் இலக்கியப் புத்தகத்தைப் படித்துக் கொண்டிருப்பேன். ஒன்பதாவது வகுப்பில் ஒருநாள் என் விஞ்ஞான ஆசிரியை நான் வேறேதோ புத்தகத்தை மறைத்துப் படித்துக் கொண்டிருப்பதைக் கண்டு பிடித்துவிட்டார். கிட்ட வந்து புத்தகத்தை எடுத்தார். அது இலங்கைப் பேராசிரியர் வி.செல்வநாயகம் எழுதிய தமிழிலக்கிய வரலாறு. அவர் கோபப்படுவதற்குப் பதில் ஆச்சரியப்பட்டார். இந்த வயதில் இந்தப் புத்தகத்தைப் படிக்கிறாயா என்று என்னிடமே திருப்பித் தந்தார். நான் புத்தகத்தை வாங்கி பையினுள் வைத்து விட்டு ஒன்றுமே நடவாதது போல பிறகு அவரின் விஞ்ஞானப் பாடத்தில் கவனத்தைச் செலுத்தத் தொடங்கினேன். எங்களுக்கு எட்டாம் வகுப்பில் கணித ஆசிரியராக இருந்தவர் அர்ப்பணிப்போடு படிப்பித்தாலும் அப்பாவி. வகுப்பில் எத்தனை பேர் இருக்கிறார்கள் போன்ற விடயங்களைக் கருத்தில் எடுக்கமாட்டார். நான் அவரது வகுப்பு தொடங்கி அவர் கரும்பலகைப் பார்த்து எழுதத் தொடங்க ஓசைப்படாமல் வகுப்பை விட்டு வெளியேறி ஒரு பச்சோந்தியைப் போல அனைத்து வகுப்புகளையும் கடந்து பாடசாலை நூலகத்திற்குச் சென்று விடுவேன். என் சக மாணவர்கள் யாருமே காட்டிக் கொடுக்கமாட்டார்கள். நூலகத்தில் நான் செங்கை ஆழியானின் கங்கைக் கரையோரத்தை விட்ட இடத்திலிருந்து அடுத்த பாட ஆசிரியர் வகுப்புக்கு வருவதற்கு முதல்வரை படிப்பேன். இந்தச் சாகசத்தில் நான் ஒருபோதும் மாட்டுப்பட்டு தண்டிக்கப்படாதது எனக்கே ஆச்சரியம் தான். என் பதினாறு வயதில் இவன் என்கிற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதினேன். அதைத் திசை என்கிற வாரப்பத்திரிகைக்கு அனுப்பினேன். திசையின் இலக்கியப் பக்கங்களுக்குப் பொறுப்பாக இருந்தவர் அ.யேசுராசா. கவிஞரும், சிறுகதாசிரியரும் விமர்சகருமான அ. யேசுராசாதான் இருபதாம் நூற்றாண்டில் பிற்பாதியில் ஈழத்தில் வெளிவந்த தரமான இலக்கியச் சிற்றிதழான அலையின் ஆசிரியராகக் கடைசிவரை இருந்தவர். பிரசுரிப்பதற்குத் தேர்வானதாகப் பிரசுரிப்பதற்கு முதல் வாரத்திலேயே பாராட்டி அஞ்சலட்டை எழுதி அனுப்பினார். இன்றும் எனக்கு என் சின்னக்கால இலக்கிய ஆசான் அ.யேசுராசாவே. அதற்குக் காரணம் என் பதின்ம வயதுகளிலேயே இலக்கியத்தின், கலைகளின் அடிப்படை “இலக்கணங்களை” எனக்குக் கற்றுத் தந்தது அலை சிற்றிதழ்களே. நான் எழுத்தாளரான பிறகு ஊரில் எனக்குக் கிடைத்த முதிய நண்பர் எழுத்தாளரான குப்பிளான். ஐ.சண்முகம். அவரும் அலை சிற்றிதழின் ஆசிரியராக இருந்தவர். அவர் எனக்கு இன்னும் தரமான சிறப்பான இலக்கியங்களைத் தன் தனிப்பட்ட நூலகத்திலிருந்து படிக்கத் தந்தார். அவற்றில் முக்கியமானவை மகத்தான ரஷ்ய மொழிபெயர்ப்பு நாவல்கள், ஜத்மாத்தவ்வின் அன்னை வயல், தாஸ்தேவ்ஸ்கியின் வெண்ணிற இரவுகள், கொரலென்கோவின் கண் தெரியாத இசைஞன் இப்படிப் பல நாவல்கள். பிறகு, இந்தியச் சமாதானப்படைகள் ஈழத்தை விட்டு வெளியேறி ஓர் ஆறு மாதங்கள் தமிழீழம் பாதிக் கனவில் மறையும் பறவைபோலவும் Virtual Reality போலவும் புலிகளிடமிருந்து. அந்தச் சமாதானம் நீடிக்கவில்லை. 1987 இலங்கை இந்தியச் சமாதானத்தைக் குழப்பிய போரிலிருந்து பிறகு வந்த அனைத்துப் போர்களின் சிற்பியான பிரபாகரனே இரண்டாம் ஈழப்போரையும் தொடங்கினார். நான் 17 வயதில் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்குத் தப்பியோடினேன். பதினாறாம் வயதில் முதற் சிறுகதை எழுதியதாகச் சொல்கிறீர்கள், அப்படியானதொரு நிலையில் முதல் புத்தகமாகக் கவிதைத் தொகுப்பு வெளியிட்டுள்ளீர்கள். புனைவுகளில் தொடங்கிய பயணம் கவிதைகள் பக்கம் மாறியதன் இரகசியம் என்ன? சிறுகதை, நாவல்களைப் படித்தது போலவே கவிதைகளையும் தீவிரமாகப் படித்துக்கொண்டிருந்தேன். சிறந்த ஈழக்கவிதைகளின் தொகுப்பான “பதினொரு ஈழக்கவிஞர்கள்” மற்றும் “மரணத்துள் வாழ்வோம்” என்கிற போர்க்கால ஈழக்கவிதைகளின் தொகுப்பு ஆகியவற்றைப் படித்தேன். இவ்விரு தொகுப்புக்களிலும் இடம்பெற்றிருந்த கவிஞர்களின் கவிதைத் தொகுப்புக்களையும் தேடித் தேடிப் படித்தேன். யாழ்ப்பாணத்தில் அப்போது கிடைத்த தேவதேவனின் சிறு தொகுப்பையும் சுகுமாரனின் சிறுதொகுப்பையும் சோலைக்கிளியின் எட்டாவது நரகத்தையும் விலை கொடுத்து வாங்கிப் படித்தேன். என் அயலவரான பழனி என்கிற NLFT போராட்ட இயக்க அண்ணா எனக்கு மரணத்துள் வாழ்வோம் தொகுப்பையும் வ.ஜ.ச ஜெயபாலனின் சூரியனோடு பேசுதலையும் இரவலாகப் படிக்கத் தந்தார். (சில மாதங்களிலேயே என் வீட்டுப் பின்புறத்திலுள்ள விளையாட்டு மைதானத்தில் பழனி அண்ணாவும் கெங்கன் அண்ணா என்கிற இன்னொரு NLFT உறுப்பினரும் உதைபந்தாட்டம் விளையாடிக் கொண்டிருக்கும் போது புலிகளின் புலனாய்வுப் பிரிவினரால் “கைது செய்யப்பட்டு” கொண்டு செல்லப்படுவதைக் கண்டேன்..இருவரும் பின்னர் சித்திரவதை செய்யப்பட்டுக் கொல்லப்பட்டார்கள்) இதே காலத்தில் தமிழில் வந்த மொழிபெயர்ப்பு கவிதைகளையும் படித்தேன். பதினேழாம் வயதின் ஆரம்பத்தில் ஈழப்போரின் உச்சத்தில் தற்செயலாகக் கவிதை எழுதிப் பார்த்தேன். பதினேழு வயது என் வாழ்வில் மிக முக்கியமான காலம். ஒரு திரைக்கலைஞனாக திரைப்பட நெறியாளராக வரவேண்டும் என்கிற பதின்ம வயதுக் கனவு தீவிரமாக என்னுள் எரிந்து கொண்டிருந்த காலம். இத்தனைக்கும் தமிழ் வணிகப்படங்களை விடத் தரமான சினிமாக்களை நான் பார்த்தது மிகக் குறைவு. மின்சாரமே இல்லாத அக்காலப் போர்க்கால யாழில் திரையரங்குகளோ, தொலைக் காட்சிகளோ இல்லை. அலை சஞ்சிகையில் வந்த தரமான உலகத் திரைப்படங்களைப் பற்றிய விமர்சனக் கட்டுரைகளைப் படித்தது, அலை ஆசிரியர் யேசுராசா யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்குச் சர்வதேசத் திரைப்பட விழாக்களுக்குச் சென்று விட்டு வந்து சொன்ன கதைகளைக் கேட்டது, யாத்ரா சிறுபத்திரிகையில் வந்த சினிமாக் கட்டுரைகளைப் படித்தது, வெங்கட் சாமிநாதனின் சினிமா சம்பந்தமான சில கட்டுரைகளைப் படித்தது, முக்கியமாக செர்கீ ஐசென்ன்ஸ்டைனின் பொட்டம்கின் போர்க்கப்பல் சினிமா பற்றிய சில கட்டுரைகளைப் படித்தது முதலியவற்றால் வந்த ஒரு குருட்டுக் கனவு. என்னுடைய கனவு நனவாக வேண்டுமென்றால் நான் போர்க்கால யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறி கொழும்பு செல்லவேண்டும். ஆனால் அது முடியாத காரியம். ஏனெனில் புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதியிலிருந்த மக்கள் குறிப்பாகப் போராடத் தகுதியான மாணவர்களும் இளைஞர்களும் வெளியேறுவதற்குப் புலிகள் தடை விதித்திருந்தார்கள். நானும் என் வயது சக மாணவனும் சட்டவிரோதமாகக் காடுகள் வழியாகப் புலிகளுக்குத் தெரியாமல் தப்பிப் போகும் ஓர் ஆபத்தான சாகசப் பயணத்தைத் தெரிவு செய்தோம். இந்தப் பயணம் தான் என்னைக் கவிஞனாக்கியது. என்னுடைய சாகசப் பயணத்திற்கு அப்போது 81 வயதாக இருந்த தாத்தா கடும் எதிர்ப்பாக இருந்தார். எனக்குள் எப்படி ஒரு மிருகம் வந்ததோ தெரியாது. அவர் என்னை கொழும்பு செல்ல அனுமதிக்காவிட்டால் நான் இயக்கத்துக்குப் போகவேண்டிவரும் என்று மிரட்டினேன். அவர் பேச்சிழந்து மிரண்டுபோனார். என்னுடைய சின்னம்மாவே தாத்தாவுக்குத் தெரியாமல் செலவுக்குப் பணம் தந்தார். யாழ்ப்பாணத்திலிருந்து மிதி வண்டிகளில் நானும் நண்பனும் எல்லைப்புற வன்னிக் காடுகளில் உள்ள நண்பனின் ஊரான மாங்குளத்துக்குப் போய் அங்குள்ள நண்பனின் உறவினர் வீட்டில் ஒரு மாதம் தங்கியிருந்தோம். அங்கிருந்தே எம் வெற்றிகரமான பயணத்தின் திட்டம் தீட்டப்பட்டது. அது என் படைப்பிலக்கியத்தின் பொற்காலம். நான் எப்படிக் கவிஞனானேன் என்பதைப்பற்றி எழுதிய ஒரு விரிவான கட்டுரை கடந்த வருடம் சொல்வனம் இதழில் பிரசுரமானது. வன்னி மிதிவண்டிப் பயணக் குறிப்புக்கள் – சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026 புலிகளிடம் மாட்டுப் படாமல் காடுகள் வழியாகத் தப்பிச் சென்று இலங்கை அரசாங்கத்தின் கட்டுப் பாட்டிலிருந்த வவுனியா புகையிரத நிலையத்திலிருந்து கொழும்பு செல்லும் புகையிரதத்தில் கொழும்புக்குப் போனோம்..அந்தப் பயணத்தில் நான் கவிஞனாவேனோ என்கிற ஓர் அங்கலாய்ப்பு எனக்கு வந்தது. காரணம் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த நம் வடமாகாணப் பிரதேசங்கள் மிக வறண்டவை. சங்ககால மொழியில் சொன்னால் பாலை. ஆனால் வவுனியாவிலிருந்து கொழும்பு செல்லும் ரயில் பயணம் முல்லை, குறிஞ்சி, மருதம் வழிப் பயணம். இந்த ரயில் பயணத்தைப் பற்றி பத்தாண்டுகளின் பின் ஒரு கவிதை எழுதினேன். இப்போது உங்கள் கேள்விக்குத் தெளிவான பதில் வருகிறது. யாழிலிருந்து விலகி கொழும்பு அடையும் வரையான ஒரு மாதத்திற்கு மேற்பட்ட காலத்திலேயே என் மகத்தான கவிதைகள் எல்லாம் பிறந்தன. அவற்றை அப்போதே எழுதவில்லை. அல்லது முழுமையாக எழுதவில்லை. ஆனால் கவிதை வாய் வழியானது. வாய் மொழி( Oral). அதனால் தான் எழுத்து வடிவம், வரி வடிவம் வருவதற்கு முதலே கவிதையும் பாடலும் உருவானது. ஆனால் சிறுகதை நாவல் அப்படிப் பட்டதல்ல. அது வரி வடிவங்களில் தங்கியிருப்பது. பதினேழு வயதில் நான் கொழும்பை அடைந்தபின் வாய் மொழியாக என்னுள் இருந்த கவிதைகளை வரி வடிவங்களாக எழுதினேன். அது அருவி பிரவகிப்பது போல மிக இலகுவாக இருந்தது. ஒரு கவிதை எழுத எனக்கு அதிக பட்சம் பத்து நிமிடங்கள் தான் தேவையாக இருந்தது. பெரும்பாலும் என் கவிதைகளை எனக்குத் திருத்தி செம்மையாக்க வேண்டிய தேவையும் இருக்கவில்லை. ஒரு கட்டுக் கவிதைகளோடுதான் நான் கொழும்பில் ஈழக் கவிஞர் சேரனைச் சந்தித்தேன். அதிலிருந்து ஒவ்வொரு கவிதைகளாகத் தான் ஆசிரியராக இருந்த சரிநிகர் மாத பத்திரிகையில் பிரசுரித்தார். பெரும்பாலான கவிதைகள் என் பதினெட்டு/பத்தொன்பது வயதுகளில் பிரசுரமானாலும் என் பெரும்பாலான கவிதைகள் வாய்மொழியாக உருவானவை என் பதினேழு வயது சாகசப் பயணத்தில்தான். அந்தக் கவிதைகளுக்குக் கிடைத்த வரவேற்பு என்னைச் சோம்பேறியாக்கியது. இக்கால மொழியில் சொன்னால் கவிதை T20 கிரிக்கெட்டுக்கு ஒப்பானதென்றால் சிறுகதை ரெஸ்ட் மச்சுக்கு ஒப்பானது. ஒரு சிறுகதையை வெறும் பத்து நிமிடத்தில் எழுதமுடியாது. ஒரு வாரமோ ஒரு மாதமோ தேவை. அது மட்டுமல்ல. கவிதையினதும் சிறுகதையினதும்( அதன் தொடர்ச்சியாகக் குறுநாவல் நாவலதும் அடிப்படைக் கூறுகள் (Elements) முற்றிலும் வேறுபட்டவை. சிறுகதை, நாவலின் அடிப்படையான மூலக்கூறுகளான கதைப்பின்னல், பாத்திரவாக்கம், முரண்/பிரச்சனை, theme, setting, point of view என்பவற்றில் ஒருவர் தேறவேண்டுமானால் வயதில் இருபதுகளின் இறுதிவரை காத்திருக்கவேண்டும். முக்கியமாகக் கதைப்பின்னல், பாத்திரவாக்கம், முரண் முதலிய மூலக்கூறுகளைச் சிறப்பாக விருத்தி செய்ய வாழ்க்கை அனுபவங்கள் தேவை. கவிதையின் அடிப்படை மூலக்கூறுகள் கவிதை உருவம், காட்சிப்புலம், உருவகமான மொழி, உருக்கமான உணர்ச்சி செழிப்பான மொழி, எதுகை, மோனை, ஒலிப்பொறிமுறைகள், பெரும்பாலும் கதைப்பின்னலால் அல்லாது காட்சிப் புலங்களாலும் ஒலிப்பொறிமுறைகளாலும் வெளிப்படுத்தப்படும் பாடுபொருள் முதலியவையே. இதனால் ஒருவர் தன்னுடைய பதின்ம வயதுகளின் இறுதியிலோ இருபதுகளின் ஆரம்பத்திலோ சிறப்பான கவிதை எழுதமுடியும். இன்னுஞ் சொல்லப்போனால் மகத்தான கவிஞர்களின் மகத்தான கவிதைகள் எல்லாம் அவர்களின் முப்பது வயதுகளுக்குள் எழுதப்பட்டவைதான். (விதி விலக்குகள் எங்கும் எப்போதும் உண்டு) மகத்தான ரூசியப் பெருங்கவி புஷ்கின் 37 வயதில் மரித்தார். மகாகவி பாரதியார் 38 வயதில் மரித்தார். ஈழத்து நவீன மகாகவி( து. உருத்திரமூர்த்தி) 44 வயதில் மரித்தார். புஷ்கின் தன் இருபதுகளின் இறுதியிலேயே சிறுகதைகளும் நாவல்களும் எழுத ஆரம்பித்தார். பாரதியும் ஈழத்து மகாகவியும் சிறுகதைகளில் சோபிக்கவில்லை. ஆனால் சிறுகதைகளையும் தாண்டி ஒருவர் நல்ல நாவல் எழுதுவது அவரின் முப்பதுகளின் இறுதியில் அல்லது நாற்பதுகளின் ஆரம்பத்தில். உங்களின் முதற் கவிதைத் தொகுப்பில் வாழும் ஊரின் வழியே அடிக்கடி நடைப்பயணம் போவதைச் சொல்லிக்கொண்டு வருகிறீர்கள் அதனூடாக இளம்பருவம், தனிமை,கழி விரக்கம்,யுத்தம் அதன் துயரம்,மரணங்கள் எல்லாம் வருகின்றன. இன்று நாட்டில் யுத்தம் முடிந்து நீண்டகாலமாகிவிட்டது என்கிற போது அதே ஊரில் அதே நடைப்பயணம் போகும் பொழுதுகளில் என்ன மாதிரியான மனநிலை வாய்க்கிறது? 105.pdf நெடுங்காலத்தின் பின் மூன்று வருடங்களுக்கு முன் முன்பனிக்காலத்தில் என் பதினேழு வயதில் விட்டுச்சென்ற ஊருக்கு முதல்முறையாகத் திரும்பியபோது ஊர் எனக்குப் புதிராக இருந்தது. ஊர் மாறவில்லை. நான் தான் மாறிவிட்டேன். எனக்கு எது ஊர்? சிட்னியிலிருந்து சென்னைக்கு வந்து அங்குப் பத்து நாட்கள் நின்று பின் கொழும்புக்கு வந்தேன். கொழும்பில் இரு நாட்கள். பின் யாழ் நகரம். யாழ் நகரில் ஐந்தரை நாட்கள். ஒரு ஞாயிறு நண்பகல் வல்லைப் பாலத்தைக் கடந்து என் ஊரின் எல்லை சிறுநகரான நெல்லியடியில் வந்திறங்கினேன். என் வீட்டில் யாருமில்லை. சொந்த ஊரிலேயே நான் ஹோட்டலில் றூம் போட்டுத்தான் தங்கினேன். கடந்த மூன்றாண்டுகளாக என் சொந்த ஊரே மீள மீள வரும் என்னுடைய Favourite Holiday destination ஆக இருக்கிறது. என் பால்ய கால நண்பனுடன் உணவருந்தியபின் நான் ஊரை அளக்கத் தனித்து நடந்தேன். நெல்லியடி பெற்றோல் நிலையத்திலிருந்து தெற்காகச் செல்வது விக்னேஸ்வரா வீதி. ஊரைவிட்டு ஓடியபின் இத்தனை ஆண்டுகளாக அது நேராகச் செல்லும் வீதி என்பதே என் மனப்படத்திலிருந்தது. ஆனால் அது ஒவ்வொரு நூறு மீற்றர்களுக்கும் வளைந்து நெளிந்து சென்றது. இது என் முதற் புதிர். இரண்டாவது புதிர் என்னூர் மிகப்பெரிதானது என்று நம்பிக் கொண்டிருந்தேன். ஆனால் வெறும் 20 நிமிடங்களில் விக்னேஸ்வராக் கல்லூரியை நான் நடந்து அடைந்து விட்டேன். உண்மையில் என் ஊரில் நடந்து செல்வது ஒரு மாந்திரீக யதார்த்தவாத நாவலைப் படிப்பது போலிருந்தது. சொந்த ஊரிலேயே வழி தொலைவது நம் தலைமுறையினருக்கு அனாயாசமாக நிகழ்வது. நம் தவத்துக்குக் கிடைக்கும் வரம் அல்ல அது. பாவம். பிறகு வெறும் ஐந்து நிமிட நடையில் பதினேழு வயது வரை நான் ஊரில் பிறந்து வளர்ந்த என் வீட்டைக் கண்டுபிடித்தேன். தமிழில் கண்டுபிடித்தல் என்பதற்குப் பல அர்த்தங்கள். இதனை நான் ஆங்கிலத்தில் எழுதியிருந்தால் இவ்விடத்தில் நான் Discover அல்லது Invent என்ற வினைச்சொல்லையா பயன்படுத்தவேண்டும் என்ற குழப்பம் எனக்கு ஏற்பட்டிருக்கும். என் வீடே ஒரு பேய் வீடு போலிருந்தது. அதன் படலையைத் தட்டவோ திறக்கவோ எனக்கு அச்சமாயிருந்தது. பயத்தில் ஒரு சிகரெட்டைப் பற்றவைத்துப் புகைத்துக்கொண்டு முன்னொரு காலத்தில் எங்கள் சுப்பர் மார்க்கெட்டாக இருந்த சம்பந்தர் கடைவரை நடந்தேன். சம்பந்தர் கடையடி ஒரு Ghost Town போலிருந்தது. ஓர் அரைப்பாலைவன Dirt Road சந்தி. எனக்கு அங்கு யாரையும் தெரியவில்லை. யாரும் என்னை இனங்காணவில்லை. இன்னொரு சிகரெட்டைப் பற்றிப் புகைத்தேன். ஊர் மாறிவிட்டது. நான்தான் மாறவில்லை. சிறுகதை எழுதுவதைப் பற்றி உங்கள் கருத்துகள் எனக்கு ஆர்வமூட்டுகின்றன. அவ்வழியே இக்கேள்வியைத் தொகுத்துக் கொள்கிறேன் முகாமுகம் தொகுப்பில் தொகுக்கப்பட்ட சிறுகதைகளில் வடிவ நேர்த்தியிலும் அவற்றின் விறுவிறுப்பான போக்குகளிலும் வாசிப்பவர்களுக்கு ஒருவிதமான சுவாரஸ்யமான விடயத்தை அளித்துவிடுகிறது, அதற்கான காரணம் தொகுப்பிலுள்ள கதைகளின் மையங்கள் இப்படியான மையங்களை எப்படி உங்களை வந்து சேர்க்கின்றன அப்படி வந்து சேர்ந்தாலும் சிறுகதைகளில் நீங்கள் செய்திருக்கும் நுட்பமான போக்குகளை எப்படித் தொடர்ந்து உருவாக்குகிறீர்கள்? உதாரணமாக நீங்கள் அமைப்பில் இல்லாதவர்கள் என்கிறீர்கள் ஆனால் அமைப்பு பற்றி எழுதப்பட்ட எவ்வளவு எழுத்துகளில் உங்களுடையது இன்னும் அமைப்பை நெருக்கமாகவே என் போன்றோர்களைப் பார்க்க வைக்கிறது அதனால் இக்கேள்வியை உங்களிடம் முன் வைக்கிறேன்? இதற்கான விடை முகாமுகம் தொகுப்பின் முன்னுரையில் இருக்கிறது. அப்பகுதிகள் பின்வருபவை. “ஈழப்போரின் தலைமுறையைச் சேர்ந்தவன் நான். போர் என் தலைமுறையின் இளமையைக் காவு கொண்டது. விளையாட்டு வியூகங்களை விடப் போர் வியூகங்களையே எம் பள்ளிக்காலத்தில் கேட்டு வளர்ந்தோம். எங்களுக்குத் துடுப்பு மட்டையையை விடக் கால்பந்தாட்டப் பந்தை விட ஆடுகள மைதானங்களை விட ஏ.கே 47 துப்பாக்கி, கிரனேட், போர்க்களங்கள் பற்றியே அதிகம் தெரியும். விளையாட்டு வீரர்களை விட ஈழப்போராளிகளைப் பற்றியே அதிகம் தெரியும். ஈழ யுத்தத்தின் இறுதிக்காலப்பகுதியில் நான் படித்துக்கொண்டிருந்த புத்தகம் நெப்போலியன் காலத்து யுத்தங்களைப்பற்றி லியோ ரோல்ஸ்ரோய் எழுதிய போரும் சமாதானமும் என்ற நாவல். அது என்னில் பெரிய உத்வேகமாகப் படிந்துவிட்டது. இக்கணம் இந்த முன்னுரையை எழுதிக்கொண்டிருக்கிறபோது நான் மேலே கேட்ட கேள்விக்கும் விடை கிடைக்கிறது. ரோல்ஸ்ரோய் நெப்போலிய யுத்தங்களை தன்நூலுக்குப் பாடுபொருளாக்கியது போல நான் என் சிறுகதைகளுக்கு ஈழ யுத்தத்தைப் பாடுபொருளாக்கியிருக்கிறேன்.ரோல்ஸ்ராயின் மாதிரியை நான் பின்பற்றத் தொடங்கியபின் என் பாதை இலகுவானது. கதைகளுக்குக் குறைவிருக்கவில்லை. மழைபோலப் பொழியத்தொடங்கியது. எழுதினேன்.” எனக்கு கிரிக்கெட் போன்ற விளையாட்டுக்களில் ஈடுபாடு இல்லாமல் போய்விட்ட பிறகு என் ஈடுபாடுகள் அரசியலிலும் சமூக விஞ்ஞானங்களிலும் இலக்கியத்திலும் இருந்தது. எனக்கு அரசியல் என்றால் உக்கிரமாக அப்போது நடந்து கொண்டிருந்த ஈழப்போர். அதன் மையமாக இருந்தவர் பிரபாகரன்., தன் பாசிச ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்வதற்காக, 1987 இலங்கை இந்திய ஒப்பந்தத்தைச் சிதைப்பதற்காக இந்தியச் சமாதானப் படைகளுக்கெதிராகத் தொடங்கிய யுத்தத்திலிருந்து அதற்குப் பிற்பட்ட எல்லா யுத்தங்களினதும் சிற்பி பிரபாகரனே. என் இளமையை மட்டுமல்ல எம் தலைமுறையினரதும் இளமையைக் காவு கொண்டவர் அவரே. என் 25வது வயதில் காலங்கடந்து சிட்னிப் பல்கலைக் கழகத்தில் பொருளாதாரத்தில் கலைமாணிப் பட்டம் படிக்க அனுமதி கிடைத்தது. அரசியல் ஒரு பாடம். தென் அரைக்கோளத்திலேயே சமூக விஞ்ஞானங்களுக்கான மிகப்பெரிய பல்கலைக்கழக (ஒன்பது மாடி) நூலகம் அங்குதான் இருக்கிறது. Fisher Library அதன் பெயர். 1988 வரையான ஈழப்போராட்ட அரசியலையும் புலிகளின் அரசியலையும் தீவிரமாக விமர்சித்த Broken Palmyrah மூல ஆங்கிலப்பிரதி, நாராயண் சுவாமி எழுதிய Tigers of Lanka : From Boys to Guerrillas முதலிய நூல்களை அங்கு இரவல் பெற்றே வாசித்தேன். எங்கள் காலத்தில் தேசிய விடுதலைப் போராட்டத்தில் புகழ் பெற்றிருந்த யாசர் அரபாத்தின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகம், மற்றும் பாசிஸ்டுகளாக பெயர்பெற்ற ஹிற்லர், ஸ்ராலின் ஆகியோரின் சோவியத் யூனியனின் உடைவுக்குப் பின் வந்த பல வாழ்க்கை வரலாற்று நூல்கள் என்பவற்றைப் படிக்க முடிந்தது. ஒரு புத்தகத்தைப் படித்தால் அது நூறு புத்தகங்களுக்கு உங்களை அழைத்துச் செல்லும் யாசர் அரபாத் பாசிஸ்ட் அல்லர். பின்வந்த பலஸ்தீன விடுதலை இயக்கங்களான ஹமாஸ், ஹிஸ்புல்லா போன்றனவும் பாசிச இயக்கங்கள் அல்ல.. இத்தகைய நூல்களைப் படித்து பிரபாகரனின் போராட்டத்தை மற்றவர்களோடு ஒப்பிட்டபோது பிரபாகரன் பற்றிய தெளிவான சித்திரம் வந்தது. பிரபாகரன் ஓர் “அக்மார்க்” பாசிஸ்ட். பல்கலைக்கழகத்தில் நான் விரிவுரைகளுக்கும் நூலகத்துக்குமே போய் வந்தேன். பரீட்சைகள் எழுதவில்லை. Assignments எதுவும் எழுதிக் கொடுக்கவில்லை. ஆகவே சரியான காரணம் சொல்லாவிட்டால் இனித்தொடர்ந்து பல்கலைக்கழகத்தில் படிக்க முடியாது என்று என்னைக் கலைத்துவிட்டார்கள். நானும் நூறு விரிவுரைகளைக்குப் போனேன், இருநூறு புத்தகங்கள் படித்தேன். ஓர் ஆங்கிலப் புத்தகத்தை முழுமையாகப் படித்துக் கிரகிக்கும் அளவுக்கு என் ஆங்கிலப்புலமை வந்துவிட்டது. இது இப்போதைக்குப் போதும் என்ற திருப்தியோடு வந்துவிட்டேன். பிரபாகரனுக்கு ஒரு விமர்சன ரீதியான வாழ்க்கை வரலாறு எழுதவேண்டும் என்பது என் வாழ்நாள் காலக் கனவு.. பிரபாகரனுக்கு இன்றுவரை ஓரளவு ஏற்றுக்கொள்ளக்கூடிய முழுமையான வாழ்க்கை வரலாறுகள் இரண்டு வந்திருக்கின்றன. INSIDE AN ELUSIVE MIND(2003) and THE ROUT OF PRABHAKARAN(2024). இரண்டுமே தமிழகப் பத்திரிகையாளர் நாராயண் சுவாமியால் எழுதப்பட்டவை. இரண்டுமே எனக்குத் திருப்தியாக இல்லை. இதைவிட வேறு பலரால் எழுதப்பட்ட பிரபாகரனின் வாழ்க்கை வரலாறுகள் மொக்கையானவை. ஒரு தமிழ் நாட்டுக்காரரால் பிரபாகரனுக்கு வாழ்க்கை வரலாறு எழுத முடியாது. என்னைப்போன்ற ஓர் ஈழத்தவர்களால் தான் எழுதமுடியும்..என்னைவிடப் பிரபாகரனுக்கு மகத்தான விமர்சன ரீதியான வாழ்க்கை வரலாறு எழுதத் தகுதியானவர்கள் என்று நான் நம்பியிருந்தது பிரபாகரனின்(1954) தலைமுறையைச் சேர்ந்த இருவர். ஒருவர் கவிஞரும் பத்திரிகையாளரும் பேராசிரியருமான சேரன்(1958). மற்றவர் முன்னாள் புளட் இயக்க உறுப்பினரும் பத்திரிகையாளரும் Tamilnet ஸ்தாபன ஆசிரியருமான தராக்கி சிவராம்(1959). இருவருமே ஆரம்பத்தில் புலிகளின் தீவிரமான விமர்சகர்களாக இருந்தவர்கள். தொண்ணூறுகளின் இறுதியில் இருவருமே புலிகளால் வாங்கப்பட்டு புலிகளின் லாபியிஸ்ட் ஆகிவிட்டது நம் காலத்தின் மிகப்பெரிய சோகம்..சிவராம் 2005ல் இலங்கை அரசாங்க அனுசரணையோடு கொல்லப்பட்டுவிட்டார். கவிஞர் சேரனுக்கோ இப்போது மறுபடியும் புலிகளை விமர்சிக்கும் நிலையெடுப்பது தான் ஒரு சந்தர்ப்பவாதி என்பதை உறுதிப்படுத்தும் என்பதால் புலி சார்பு நிலையிலிருந்தே தன் வாதங்களை முன்வைத்து வருகிறார். போர் நடந்துகொண்டிருந்த காலத்திலேயே புலிகளைப் பற்றிப் படிப்பதே என் காதலாக இருந்தது. 2009ல் ஈழப்போர் முடிந்தபின் புலிகள் பற்றிய அனைத்துத் தகவல்களையும் திரட்டுவது இலகுவானது.. உயிராபத்து இல்லாததால் முன்னாள் புலிப்போராளிகளும் புலிகள் சம்பந்தப்பட்டவர்களும் எழுதிய புலிகளைப்பற்றிய உண்மை வரலாறுகள் வர ஆரம்பித்தன. ஆனால் இந்தப்புத்தகங்களில் இல்லாத மகத்தான தகவல்கள் Primary Sources என்கிற முதன்மை ஆதாரங்களிலிருந்தே வரத்தொடங்கின. முக்கியமாக இறுதிப்போரில் சரணடைந்து புனர்வாழ்வு பெற்று வந்த போராளிகள் சொன்ன கதைகள். யுத்தம் நடந்து கொண்டிருந்த காலப்பகுதியிலேயே புலிகளிலிருந்து வெளியேறிவந்த முன்னாள் போராளிகளின் கதைகள் எனக்குக் கேட்டவண்ணமே இருந்தது. ஆனால் யுத்தம் முடிந்தபின் வந்த முதன்மை ஆதாரங்கள் அளவிலும் தரத்திலும் அற்புதமாக இருந்தன. முதன்மை ஆதாரங்கள் பகுத்தறியப்பட்டு வேறு தகவல்களோடு ஒப்பாய்வு செய்யப்பட்டு உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் அல்ல. நம் கதையைக் கேட்க ஓர் இளிச்சவாயன் வந்துவிட்டான். இன்றைக்குத் தம் காட்டில் மழை என்று அண்டப்புழுகுகளை அவிட்டுவிடத் தயாராக இருக்கும் பல முன்னாள் புலிகளை நான் சந்தித்திருக்கிறேன். உண்மையில் உண்மையை அச்சொட்டாக ஒப்புவித்த புலிகளைவிட அண்டப்புழுகுகளை அவிழ்த்துவிட்ட புலிகளே எண்ணிக்கையில் அதிகமாக இருந்தார்கள். ஏற்கெனவே புலிகளைப்பற்றிய கணிசமான தகவல் களஞ்சியம் இருக்கும் என்னிடம் பொய் சொல்லும்போது மாட்டுப்படுவார்கள். என் உடல் மொழி அவர்களை நான் நம்பவில்லை என்பதை வெளிப்படுத்தும்போது உடனே சுதாரித்துக்கொண்டு தாம் வாய்மொழியாகச் சொல்லும் கதைகளை இடைச்செருகல்களை வைத்து “எடிற்றிங்” பண்ணத்தொடங்குவார்கள். இவர்கள் விதிவசத்தால் தவறான தொழிலைத் தேர்ந்தெடுத்து விட்டார்கள். அற்புதமான புனை கதாசிரியர்களாக வந்திருக்க வேண்டியவர்கள். தமிழ்ச்சூழலில் புனைவு எழுத்தாளர்கள் அ புனைவுகளைப் படிக்கக்கூடாது. படித்தால் அது அவர்களின் புனைவு மொழியைப் பாதிக்கும் என்றொரு தவறான அபிப்பிராயம் இருக்கிறது. இது உண்மையல்ல. பத்திரிகைத் துறை அ புனைவைச் சேர்ந்தது. பத்திரிகையாளர்கள் தம் பத்திரிகை அனுபவங்களை வைத்து அற்புதமான எழுத்தாளர்களான வரமுடியும். இதற்கு நல்ல உதாரணம் கேப்ரியல் கார்சியா மார்க்கியூஸ். அவருடைய நாவல்களின் பலங்களிலொன்று அவர் படித்த வரலாற்று மற்றும் லத்தீன் அமெரிக்க வரலாற்று அ புனைவுகளிலிருந்து வந்தது. ஆக உங்கள் இரண்டு கேள்வியின் சுருக்கமான 1. “உங்கள் கதைகளின் மையங்கள் எப்படி உங்களை வந்து சேர்ந்தன? “ 2. இவற்றிலுள்ள நுட்பமான போக்குகளை எப்படி உருவாக்குகிறீர்கள்? என்பாவற்றுச் சுருக்கமான விடையாக இதைச் சொல்கிறேன். கதைகளின் மையம் என்பதைக் கதைப்பின்னல்(Plot) என்று புரிந்து கொள்கிறேன். ஏறத்தாழ இரண்டு தசாப்தங்களாகப் புலிகளைப் பற்றிப் பின்வரும் மூன்று வழிகளில் சேகரித்த தகவல்களிலிருந்தே அவை வந்தன. 1. நான் ஈழ யுத்தத்தின் குழந்தையாக யாழ்ப்பாணத்திலிருக்கும் போது என் கண்களாலும் காதுகளாலும் புலிகளைப்பற்றிப் பெற்ற என் பட்டறிவு. என் வயது என் வகுப்பு நண்பர்கள், உறவினர்கள், என் அயல் வீட்டுக்காரர்கள், என் நண்பர்களின் சகோதரங்கள் முதலிய பலர் புலிகளில் சேர்ந்து போராடி இறந்திருக்கிறார்கள். இதில் இறக்காதவர்கள் இப்போதும் உயிரோடிருக்கிறார்கள். மேற்கூறிய வகைகளுக்குள் வரும் புலிகளால் வேட்டையாடப்பட்ட மாற்று விடுதலைப் போராளிகள். 2. புலிகளைப் பற்றி வந்த அ புனைவு வரலாற்று நூல்கள், நம்பகரமான அச்சு மற்றும் இணையச் செய்திகள். 3. யுத்தம் முடிந்தபின் புனர்வாழ்வுபெற்று வந்த முன்னாள் புலிகள் முதன்மை ஆதாரங்களாக நேரடியாக மற்றும் தொலைப்பேசி, இணைய வழிகள் முலமாக வழங்கிய வாக்குமூலங்கள். நேரடியான பதிவுகளில் அல்லது உங்கள் விசாரணைக் குறிப்புகள் போன்றவற்றில் அமைப்பின் மீதான பல்வேறு விமரிசனங்களை நான் வாசித்திருக்கிறேன் இப்படியாக இத்தொகுப்பை மேலோட்டமாக எடுத்துக் கொண்டாலும் விமரிசனங்களை மீறி அமைப்பின் மேலே வெளிப்படும் காதலையும் அதன் தலைவர்களின் மீதான நெகிழ்ச்சியான மையத்தையும் தொகுப்பு தன்னையறியாமல் வெளிப்படுத்தும் இடங்களை இத்தொகுப்பின் ஆசிரியராக எப்படிப் பார்க்கிறீர்கள்? முகாமுகம் தொகுப்பில் ஆறு கதைகள் உள்ளன. ஏறத்தாழ 12 ஆண்டுகளில் எழுதப்பட்ட கதைகள். 2011, 2013ம் ஆண்டுகளில் எழுதப்பட்ட கமக்காரன், கர்னலின் காமம் ஆகிய கதைகள் புலிகள் மீதான புனிதப் பிம்பத்தை உடைக்கும் நோக்கத்தோடு எழுதப்பட்ட கதைகள் என்று சரவணன் மாணிக்கவாசகம் சொல்கிறார். ஒரு புனை கதாசிரியராக யாரையும் புனிதப்படுத்துவதோ யாருடைய “புனிதங்களை “ உடைப்பதோ என்னுடைய நோக்கமல்ல. என்னுடைய நோக்கம் வாசிப்பில் பரவசத்தைத் தரக்கூடிய (The Pleasure of Reading) காலத்தை வென்று வாழும் புனைகதைகளை உருவாக்குவதே. பன்னிரண்டு ஆண்டுக்கால இறுதியில் நான் எழுதிய நீண்ட கதைகளான முள்ளும் மலரும், முகாமுகம் ஆகிய கதைகளே இத்தொகுப்பின் சிறப்பான கதைகள் என்பது சீரிய இலக்கிய வாசகர்களினதும் விமர்சகர்களினதும் மதிப்புரை. இவ்விரு கதைகளையும் புலிகளின் ஆதரவாளர்களும் எதிர்ப்பாளர்களும் விரும்பிப் படித்தார்கள். இரு தரப்பினரையும் திருப்திப்படுத்தக்கூடிய என்னுடைய பன்னிரண்டு கால இலக்கிய அறுவடைக்குக் கிடைத்த படைப்பு பரிசுகள். கவிஞர் சுகன் கனகசபை என்பவரே விதிவிலக்காக முள்ளும் மலரும் கதையைப் படித்து “இது உங்கள் முத்திரைக் கதையென்றாலும் ஒரு புலி ஆதரவுக் கதை எழுதியிருக்கிறீர்கள்” என்று குற்றம் சாட்டியிருந்தார். அந்த இரு கதைகளையும் சுட்டியே இந்தக் கேள்வியை நீங்களும் முன் வைக்கிறீர்கள். அ புனைவு எழுதும் போதே நான் எனக்குக் கடிவாளம் போட்டுக்கொண்டு எழுதவேண்டும். தரவுகள் நம்பகரமானதா என்பதை உறுதிப்படுத்தவேண்டும். தருக்கங்கள் நியாயப்போலி(Fallacy) இல்லாமல் இருக்கும்படியாக வாதிக்கவேண்டும். புனைவுக்குக் கடிவாளம் கிடையாது. அது பறவைபோல பறக்கவேண்டும். புனைவின் மூலங்களான பாத்திரவாக்கம், கதைப்பின்னல், முரண் முதலியவற்றைத் தரையில் ஓடும் குதிரையைக் கட்டுப்படுத்துவதுபோலக் கட்டுப்படுத்த முடியாது. அதைக் கட்டுப்படுத்தும் திறன் எழுத்தாளருக்குக் கிடையாது. விட்டுப் பிடிக்கவேண்டும். பாத்திரங்கள் காலநிலை/வானிலை, புவியீர்ப்பு விசை இவற்றுக்கேற்கவே பறக்கும். பிறகும் வெற்றிகரமாக நம்பகரமான கதையாக ஒரு விமானத்தைப் போல பாதுகாப்பாகத் தரையிறக்கவேண்டும். பறப்பது மட்டும் புனைவல்ல. தரையிறக்கமும் ஆபத்தில்லாமல் நடக்கவேண்டும். இவையெல்லாம் நடந்தால் அது ஒரு வெற்றிகரமான புனைவு. மானிடப் புனைவு. “முள்ளும் மலரும்” , “முகாமுகம்” இரண்டும் புயலில் சிக்கினாலும் கடைசியில் பாதுகாப்பாகத் தரையிறங்கிய விமானங்கள். அவற்றின் உயிர்பிழைப்புக்கு விமானி செய்த சமரசங்கள் போன்றதுதான் என் படைப்புச் செயன்முறை. இன்னொரு முறையில் சொன்னால் புனைவில் வரும் பாத்திரம் ஒரு பேயைப்போல எழுத்தாளருக்குள் இறங்குகிறது. பிறகு அதுதான் எழுத்தாளரை ஓட்டிச்செல்கிறது. போகிற போக்கில் அதுவே புனைவின் கதைப்பின்னலையும் முரண்களையும் உருவாக்குகிறது. எழுதி முடித்தபின்னர் தான் எழுத்தாளரே அதிசயிப்பார். “ இதை எழுதியது நான் தானா? அல்லது என்னுள் இறங்கிய பேயா? “ என்று. இவ்வுலகின் ஆகச்சிறந்த சிக்கல்களான காமம்,தனிமை,போதை போன்றவற்றில் உங்களின் பெரும்பாலான சிறுகதைகளின் அடித்தளத்தில் கட்டியெழுப்பப்பட்டுள்ளது என்றாலும் இவற்றில் நான் அதிகம் ரசனையுடன் அணுகியது தனிமை போன்ற குணத்தையே, தனிமை தொடர்ந்து உங்கள் தொகுப்பில் உலவும் அத்தனை மனிதர்களிடம் உள்ளது.அதை அவர்கள் ஒரு மிருகத்தைப் போலவே பழகி தங்களிடம் வைத்துக்கொள்கிறார்கள் இத்தனைக்கும் எவ்வளவு உறவில் அவர்கள் உறவாடினாலும், தொகுப்பில் தனிமை மீதான இவ்வளவு வெளிப்பாட்டிற்கான காரணம் என்னவாக உள்ளது? காமம், தனிமை, போதை போன்றவற்றை இவ்வுலகின் ஆகச்சிறந்த சிக்கல்கள் என்று உங்கள் கேள்வியில் சொல்கிறீர்கள். என்னைப் பொறுத்தவரையில் காமமும் தனிமையும் போதையும் சிக்கல்கள் அல்ல. அவை மனிதரின் அடிப்படையான உயிரியல் உளவியல் தேவைகள். காமத்தையும் தனிமையையும் போதையையும் சிக்கலாக்கிக் கொள்வது அதை எதிர்கொள்ளும் மனிதர்களே தவிரக் காமமும் தனிமையும் போதையும் அடிப்படையில் சிக்கலானவை அல்ல. வாழ்க்கையில் பிரச்சனைகள் சவால்கள் இன்றி ஒரு பணக்கார “உயர்” சாதிக் குடும்பத்தில் யுத்தமோ பொருளாதாரப் பிரச்சனைகளோ இல்லாத காலத்தில் பிறந்து நல்ல பல்கலைக்கழகத்தில் படித்து நல்ல தொழில் பெற்று நிறையச் சம்பாதித்து விசுவாசமான ஒரு மனைவியை மணமுடித்து பிள்ளைகள் பெற்று அவர்களையும் சமூகத்தின் சிறப்பானவர்களாக்கி வறுமை, தோல்வி, துரோகம், இன்னபிற மானுட அல்லல்கள் இன்றி 90 வயதில் தூக்கத்தில் இறந்த ஒரு வென்ற மனிதனின் கதை நல்ல புனைவோ இலக்கியமோ ஆகாது. வாழ்க்கையில் தோற்ற மனிதனின் கதைதான், தப்பிப் பிழைத்த மனிதனின் கதைதான் நல்ல இலக்கியமாகும். நல்ல புனைவுக்கு நாடகப் பாங்கான களேபரமான சூழல் அவசியம். அவை வாழ்க்கையில் தோற்ற மனிதர்கள், திருடர்கள், கொலைகாரர்கள். காமுகர், அனாதைகள், போதைக்கு அடிமையானவர்கள், சூதாடிகள், ஒற்றர்கள், விபச்சாரிகள், ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்கள், யுத்தக் காலங்களில் வாழ்பவர்கள், சைக்கோ பாத் வகையானவர்கள், குற்றவாளிகள், மன நோயாளிகள் முதலியோரின் கதைகளிலேயே வரும். அங்குதான் பாத்திரவாக்கம், கதைப்பின்னல், முரண் முதலிய கூறுகள் சிறப்பாக வரும். அங்குதான் மானுட மனதின் ஆழங்களுக்குச் சென்று முத்து எடுக்கும் வாய்ப்பு கிடைக்கும். முள்ளும் மலரும் கதையின் மூல பாத்திரமான அனாதையான “ பிரிகேடியர் முகமட்” புலிகளால் சிறப்பான ஓர் ஒற்றனாகவும் தற்கொலைப் போராளியாகவும் ஆவதற்குப் பயிற்சி பெற்றவன். ஈழ யுத்தம் முடிந்தபின் அவன் கொழும்பில் வேறொரு போலி அடையாளமான சர்வதேசப் பல்கலைக்கழக மாணவனாகக் கைவிடப்படுகிறான். முகாமுகம் கதையின் முலபாத்திரமானவனுக்கு பெயரே இல்லை. கதிர்காமர் கொலையைச் செய்ய அவனை ஒரு குறிபார்த்துச் சுடுபவனாகப் புலிகள் உபயோகித்தபின் அவனை நட்டாற்றில் கைவிடுகிறார்கள். அவன் ஒரு போலிப்பெயரில் ஒஸ்றேலியாவில் அகதியாகிறான். அசல் அடையாளம் அற்ற இந்த இரண்டு பாத்திரங்களும் போதையையே தனிமையையோ விரும்பித் தேர்ந்தெடுக்கவில்லை. அவை அவர்கள் மீது திணிக்கப்பட்டது. தப்பிப் பிழைப்பதற்கு அவர்களுக்கு அவற்றைவிட வேறு வழிகளிலிருக்கவில்லை. காமம் பற்றிய அதீதமான சொல்லாடல்களில் சில இடங்களிலும் உங்கள் சிறுகதைகள் அதன் கலைத்தன்மை இழந்து நிற்கிறது என்றே நான் விமரிசனம் வைத்தால் உங்கள் பதிலடி எப்படியிருக்கும்? இக்குற்றச்சாட்டை இதுவரையில் வைத்தது 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள். இப்போதுதான் முதல் தடவையாக இளந்தலைமுறையைச் சேர்ந்தவரான உங்களிடமிருந்து வருகிறது. இது எனக்கு மிகுந்த ஆச்சரியமளிக்கிறது. உங்களுடைய ரசனை, கருத்துச் சுதந்திரத்தின் அடிப்படையில் இந்த மதிப்பீட்டை வைக்கலாம். ஆனால் இளந்தலைமுறை இலக்கிய வாசகர்கள் என் காமம் சார்ந்த சொற்களையோ, சொல்லாடல்களையோ உவப்போடு ஏற்றுக்கொள்கிறார்கள். தமிழில் ஆக மோசமான வசைச்சொற்களான “*** சொல் நீக்கப்பட்டுள்ளது - யாழ் இணையம் “ , “*** சொல் நீக்கப்பட்டுள்ளது - யாழ் இணையம்” ஆகியவற்றை வரலாற்றில் முதன் முதலாக இலக்கியத்தில் பயன்படுத்தியது நானல்ல. கடந்த எழுபது வருடங்களுக்கு முதலே இச்சொற்கள் தமிழ்ப் புனைவுகளில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. முள்ளும் மலரும் கதையில் முகமட்டின் காதலியான ஒரு உக்ரேனியப் பெண் முகமட்டுக்கு நிராசையான காமத்தின் உச்ச உணர்ச்சிக் கொந்தளிப்பில் அவனுக்கு அனுப்பிய ரெக்ஸ் மெசேச்சில் தன் பெண்குறி என்பதற்குப்பதிலாக அந்த வசைச்சொல்லைப் பயன்படுத்திவிட்டாள் என்பதுதான் பல 65 வயது கடந்த முதியவர்களுக்குப் பிரச்சனை. அவர்கள் காலத்தில் கைத்தொலைபேசிகளோ, ரெக்ஸ் மெசேச்சொ இல்லை. அவர்கள் காதலிகள் அந்த வசைச்சொல்லைப் பயன்படுத்தியிருக்க வாய்ப்பில்லை. அதற்காக இந்த 2020 களின் இளந்தலைமுறை ஈழப்பெண்கள் பெண்கள் இச்சொல்லைப் பயன்படுத்துவதில்லை என்று அவர்களால் உறுதியாகச் சொல்ல முடியுமா? மேலும் என் கதாபாத்திரங்கள் வெளிநாட்டவர்கள். உக்ரேனியப் பெண், ஒஸ்றேலியப் பெண். நம் ஈழ, தமிழகப் பெண்களே வசைச் சொற்களை நெருக்கமான ஆண் நண்பர்களிடம் இக்காலத்தில் தாராளமாகப் பயன்படுத்துகிறார்கள். எல்லாவற்றையும்விட முக்கியமான பிரச்சனை என் கதைகளில் பெண்கள் இச்சொற்களைப் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்பதுதான். ஆண்கள் பயன்படுத்தியிருந்தால் அந்த 65+ முதியவர்கள் அதனை ஏற்றுக் கொண்டிருப்பார்கள். இது தலைமுறை சார்ந்த, தலைமுறை மாற்றங்களை உணரத்தவறிய முதிய ஆண்களின் ஆணாதிக்க மனநிலையில் வெளிப்பாடு. எல்லாச் சொற்களும் பொருள் குறித்தனவே. எனினும் எல்லாச் சொற்களும் வசைச்சொற்கள் உட்படச் சந்தர்ப்பங்களுக்கேற்பவே அவற்றின் அர்த்தங்களை வெளிப்படுத்துகின்றன. எல்லாச் சொற்களுக்கும் சந்தர்ப்பங்களுக்கேற்ப, Denotation, Connotation என இரண்டு அர்த்தங்கள் உண்டு. Denotation என்பது ஒரு சொல்லின் அசலான அகராதி அர்த்தம். Connotation என்பது அகராதி அர்த்தத்திற்கு அப்பால் சந்தர்ப்பங்களுக்கேற்ப உணர்ச்சிகளையும் மறை பொருளையும் வெளிப்படுத்துவது. நூறாண்டுகளுக்கு முன் தமிழ்ப் பெண்கள் தம் கணவரைப் பெயர் சொல்லி அழைத்ததில்லை. நீ என்று ஒருமையில் அழைத்ததில்லை. இன்றைய பெண்கள் பெயர் சொல்லி, நீ என்று, அவன் என்று சொல்லி தம் கணவனைக் காதலரை விளிக்கிறார்கள். ஐம்பது ஆண்டுகளுக்கு முன் கணவன் பலான படம் பார்த்தால் அவன் வேறொரு பெண்ணோடு தொடர்பு வைத்துவிட்டான் என்ற கணக்கில் பிரச்சனையாக்கி சன்னதமாடுவாள் மனைவி. இன்றைக்கு மனைவியோ காதலியோ தமக்கு மூட் வந்துவிட்டால் களைப்பாயிருக்கிற கணவனிடமே ஸ்மாட் போனிலிருந்து ஒரு பலான வீடியோவைப் போட்டுக் காட்டி அவனைக் காம மூட்டுக்கு கொண்டு வருவாளவை. இதுபோன்ற ஒரு தலைமுறை மாற்றம்தான் பெண்கள் தம் கணவர் காதலரிடம் வசைச் சொற்களைப் பயன்படுத்துவது. அதனுடைய மறைபொருள் – Connotation என்ன? அன்பு, காமம், நெருக்கம். வேற்று ஆடவரிடமோ ஏன் சொந்த ஆண் சகோதரரிடமோ இந்த வசைச்சொற்களைப் பயன்படுத்த முடியாது. புலம்பெயர் வாழ்வு உருவாக்கும் அகச்சிக்கல்களையும் புறச்சிக்கல்களையும் எதிர்கொள்ளும் பொழுதுகளில் ஒருவரின் கலைத்தன்மை இன்னொரு கூர்மையான பகுதிகளை நோக்கிப் பயணிக்கிறது என்றாலும் இவற்றின் ஊடாகவே தொடர்ந்து பயணிப்பதும் சில நேரங்களில் ஒருவரின் கலைத்தன்மை மழுங்கிவிடும் அபாயமும் நேர்ந்துவிடுகிறது இல்லையா? அகதி வாழ்வின் நெருக்கடியும், இயக்கத்தின் ஆதரவும் எதிர்ப்பும் போன்ற முனைகளிலிருந்து ஈழ இலக்கியம் விடுபட மறுப்பதன் காரணம் என்ன? உங்கள் தொகுப்பின் கதைகளும் இந்த விமர்சனப் பள்ளியிலிருந்து தப்பவில்லையே? இந்தக் கேள்வியிலிருந்து வரும் விமர்சனம் பல ஈழ மற்றும் புலம்பெயர்ந்த எழுத்தாளர்களுக்குப் பொருந்தும். எல்லாருக்கும் பொருந்தாது. ஷோபாசக்திக்கு இந்த விமர்சனம் மிகப்பொருந்தும். ஷோபாசக்தியினுடைய Masterpiece ஆன படைப்பு கொரில்லா குறுநாவல்தான். ம் குறுநாவல் சுமாரான படைப்பு. பொக்ஸ், இச்சா நாவல்கள் மோசமானவை, மொக்கையானவை. [இவற்றுக்கு நான் எழுதிய விமர்சன லிங் இணைப்புக்கள்.( பொக்ஸ் நாவல்: ஒரு மலின இலக்கியம், இச்சா – ஷோபா சக்தியின் ‘மட்டரக காக்ரெயில்’ தயாரிப்பு: நட்சத்திரன் செவ்விந்தியன்) சலாம் அலைக் சுமாரானது. நாவல்களைப்போலவே அவர் நல்ல சுமாரான மற்றும் மொக்கையான சிறுகதைகளும் எழுதியுள்ளார். அவருடைய எல்லாப் படைப்புகளிலும் நீங்கள் சொன்னபடியே அகதி வாழ்வின் நெருக்கடியும் இயக்கத்தின் ஆதரவும் எதிர்ப்பும் தொடர்ந்து வருகிறது. சரியாகச் சொல்லப்போனால் அவரின் மொக்கை நாவல்களான பொக்சிலும் இச்சாவிலும் இவை சலிப்பூட்டும் அளவுக்கு மீள மீளச் சொல்லப்படுகின்றன. அதாவது Recycling செய்யப்படுகின்றன. அதனால்தான் பொக்சும் இச்சாவும் தோற்றன. “இவற்றின் ஊடாகவே தொடர்ந்து பயணிப்பதும் சில நேரங்களில் ஒருவரின் கலைத்தன்மை மழுங்கிவிடும் அபாயமும் நேர்ந்துவிடுகிறது” என்ற உங்கள் கேள்வியில் வரும் சில நேரங்களில் அழுத்தப்படவேண்டியது. ஷோபாசக்தியைப் போலச் சில ஈழ எழுத்தாளர்களின் விடயத்தில் இது சரியென்றாலும் எல்லா ஈழ எழுத்தாளர் விடயத்திலும் இந்த விடயம் சரியானதல்ல. ஏனெனில் எல்லா மானுடக் கதைகளும் ஏற்கெனவே சொல்லப்பட்டவை. இதனை மிக அழகாகச் சொன்னவர் அமெரிக்கத் திரைக்கலைஞர் ஸ்டான்லி கூப்ரிக். அவர் சொன்னார் “எல்லாக் கதைகளும் ஏற்கெனவே சொல்லப்பட்டவை எல்லா சீனும் ஏற்கெனவே எடுக்கப்பட்டவை எமது பணி அதை மேலுஞ் செம்மையாக்குவதே” அகதி வாழ்வும் போரும் மானுட வரலாற்றில் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவை. அன்றிலிருந்தே இவை வாய்மொழி இலக்கியம் வழியாகவும் எழுத்துவழி இலக்கியம் வழியாகவும் சொல்லப்பட்டு வருகின்றன. உலகின் முதல் நாவலாகக் கருதப்படுவது ஜப்பானிய மொழியில் பதினோராம் நூற்றாண்டில் எழுதப்பட்ட The Tale of Genji. உலகின் முதல் நவீன நாவலாகக் கருதப்படுவது 16ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட Don Quixote. ஆனால் இன்றை வரைக்கும் உலகின் எல்லா நாவலாசிரியர்களும் எழுதிய/ எழுதாத எல்லாக் கதைகளையும் ஏற்கெனவே சொல்லப்பட்ட கதைகளாக எழுத்து வரிவடிவங்களில் வசன நடையில் எழுதப்பட்டது, எழுதித் தொகுக்கப்பட்டது இற்றைக்கு ஈராயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட ஆதியாகமத்தில் தான். ஆதியாகமம் ஒரு நாவல் அல்ல, நூற்றுக்கணக்கான நாவல்கள். ஆதியாகமம் பல எழுத்தாளர்களால் பல நூற்றாண்டுகளாகச் சேகரிக்கப்பட்ட வாய்மொழிக் கதைகளையும் இலக்கிய வடிவங்களையும் தொகுத்து அடிப்படையில் ஒரு மதநூலாக ஆக்கியதால் அதனை நாவல் என்கிற சொல்லப்பட்ட வடிவத்துக்குள் வைக்கமுடியவில்லையாம். என்னைப் பொறுத்த வரையில் ஆதியாகம் தான் நாம் அறிந்த எழுத்து வரி வடிவங்களில், வசன நடையில் வந்த உலகில் முதல் நாவல். ஆதியாகமம், அதை உள்ளடக்கிய வேதாகமம் இவற்றில் இல்லாத புதிய மானுடக் கதைகளையா இப்போது இருபத்தோராம் நூற்றாண்டு எழுத்தாளர்கள் சொல்லிவிட்டார்கள்? ஆக எல்லாக் கதைகளும் ஏற்கெனவே சொல்லப்பட்ட, எழுதப்பட்ட கதைகள்தான். பாடுபொருட்கள் தான். அதை மேலுஞ் சிறப்பாக எப்படி எழுதுவது என்பதே சமகால எழுத்தாளர்களின் சவாலே தவிரப் பாடுபொருள் அல்ல பிரச்சனை. உங்கள் கேள்விக்கான இன்னொரு இரண்டாவது பதிலை ஈழப் போரிலக்கியத்தை தம் வணிக நோக்கங்களுக்காகப் பயன்படுத்திய தமிழக வணிக இதழ்களின் அஜெண்டாவில் வைத்து விளக்கலாம். 2009ல் ஈழப்போர் முடிந்தபின் தமிழ் உணர்வை சனரஞ்சகமான கச்சாப்பொருளாக்கி சுமாரான மற்றும் மோசமான ஈழப்போர் சம்பந்தமான நாவல்கள் வெளிவந்தன. ஆனந்த விகடன் போன்ற வியாபார நிறுவனங்கள் ஊக்குவித்த இந்தப் போக்கின்படி தமிழ்க்கவி, தமிழ்நதி, சயந்தன், குணா கவியழகன், தீபச்செல்வன் முதலியோர் எழுதிய நாவல்கள் வெளிவந்து சனரஞ்சக மதிப்பை பெற்று பிரபல்யமாகின்றன. ஈழ இலக்கியத்தைத் தமிழக வணிகத் தொலைக்காட்சி சீரியல்கள் போன்று மலினமாக்கிய காலம் இது. இதன் தொடர்ச்சியாக அகரமுதல்வன், வாசு முருகவேல் போன்ற ஈழ எழுத்தாளர்களும் வந்தார்கள். சீரிய இலக்கியம் சினிமா சீரியல்களான காலம். இந்தச் சினிமா சீரியல் வகை பெரும்பாலான படைப்புக்கள் காலத்தை வென்று நிலைக்கக்கூடியவல்ல. “அகதி வாழ்வின் நெருக்கடியும், இயக்கத்தின் ஆதரவும் எதிர்ப்பும் போன்ற முனைகளிலிருந்து ஈழ இலக்கியம் விடுபட மறுப்பதன் காரணம் என்ன?” என்கிற உங்கள் கேள்விக்குப் பதில் ஒன்றுதான் அது வணிக நோக்கங்கள். இக்காலத்தில் விதி விலக்கான ஈழ எழுத்தாளர்கள் இருந்திருக்கிறார்கள். ஒருவர் அருந்ததி. அவர் எழுதிய ஈழத் தலித்திய நாவலான ஆண்பால் உலகு 2019 ல் வந்தது. கடந்த நாற்பதாண்டுகளில் வந்த சிறப்பான ஈழப்போர்க்கால ஈழத் தலித்திய நாவல். இரண்டாமவர் மீ டூ குற்றச்சாட்டுக்குள்ளான எழுத்தாளரான யதார்த்தனால் எழுதப்பட்ட 2022 வெளிவந்த நகுலாத்தை நாவல். அகதி வாழ்வு, ஈழப்போர், இயக்கத்தின் ஆதரவு அல்லது எதிர்ப்பு என்பவைதான் பாடுபொருட்கள். இதுகாலவரை வந்த சயந்தனின் நாவல்களை விட சோபாசக்தியின் பொக்ஸ், இச்சா, சலாம் அலைக் ஆகிய நாவல்களை விட, நான் மேலே குறிப்பிட்ட பல ஈழப்போரிலக்கிய சினிமா சீரியல் வகை நாவல்களைவிட நகுலாத்தை படைப்பாற்றலில் சிறப்பானது. உங்கள் நீண்ட கேள்வியின் கடைசியில் “உங்கள் தொகுப்பின் கதைகளும் இந்த விமர்சனப் பள்ளியிலிருந்து தப்பவில்லையே? “ என்று கேட்டிருக்கிறீர்கள். கவிதைகளிலிருந்து விடுபட்டு இப்போதுதான் முதல் புனைவிலக்கியமாக முகாமுகம் என்ற என் சிறுகதைத்தொகுதி வந்திருக்கிறது. பெங்களூரிலிருந்தே நீங்கள் என் தொகுதியை ஆடர் செய்து வாங்கியிருக்கிறீர்கள். இவ்வருடச் சனவரி பெப்ரவரி மாதங்களில் நீங்களே உங்கள் முகநூலில் என் புத்தகத்தை மூன்று முறை குறிப்பிட்டுள்ளீர்கள். அதில் முக்கியமானது “ வருடத்தின் முதற் சிறுகதைத் தொகுப்பு வாசிப்பில் ஏமாற்றங்களை அளிக்கவில்லை என்பதே நிறைவானது” என்று தொடங்கி நீங்கள் உங்கள் முகநூலில் எழுதிய முகாமுகம் தொகுப்புக்கான Critically acclaimed மதிப்புரை. இப்போது என்னைப் பேட்டி காண்கிறீர்கள். இது என் தொகுப்புக்கான வெற்றி இல்லையா? தமிழகத்தின் முதன்மையான இலக்கியப் பதிப்பகமான காலச்சுவடு முதல் பதிப்பில் வந்த அனைத்து முகாமுகம் பிரதிகளும் சென்னைப் புத்தகத் திருவிழாவில் விற்றுத் தீர்ந்தன. இரண்டு மாதங்களில் இப்போது இரண்டாம் பதிப்பு வந்திருக்கிறது. இத்தனைக்கும் முகாமுகம் தொகுப்பைப் பற்றி தி இந்து நாளிதழில் யாரும் மதிப்புரை எழுதவில்லை. ஆனந்த விகடனிலோ குமுதத்திலோ கூட மதிப்புரைகள் வரவில்லை. ஆனந்த விகடன் என்னைப் பேட்டி காணவில்லை. எல்லா ஈழப் போரிலக்கிய எழுத்தாளர்கள் எழுதிய அதே பாடுபொருட்களான போர், அகதி வாழ்வின் நெருக்கடிகள், இயக்கத்தின் ஆதரவு அல்லது எதிர்ப்பு என்பவையே நானும் எழுதினேன். இப்போதுதான் நான் ஒரு நாவல் எழுதிக்கொண்டிருக்கிறேன். அதே பாடு பொருட்களை வைத்து. அது வெளிவந்தபின் என் படைப்பாற்றலை மதிப்பீடுகளைக் காலத்தை விட மிகப்பெரிய இலக்கிய அளவுகோல் எது? ஷோபாசக்தியின் மாஸ்டர் பீஸ் கொரில்லா என்கிற உங்கள் பதில் பிடித்திருக்கிறது என்னைப் பொருத்தவரையில் ஷோபாசக்தி தன்னுடைய சிறுகதைகளிலும் தான் ஒரு மாஸ்டர் என்பதை நிரூபணம் செய்திருக்கிறார் என்றே நம்புகிறேன். இந்த இடத்தில் ஈழ இலக்கியத்திலிருந்து வந்து அகரமுதல்வன் போன்றவர்கள் இங்கிருக்கும் அதிகார மையங்களுடன் தன்னை இணைந்து கொண்டு இங்கே அவர்கள் அடைந்திருக்கம் இன்னொரு அதிகார மையம் முக்கியமானது தானே. கிட்டத்தட்ட தமிழிலக்கியச் சூழலில் கூடவும் யார் முன்னிறுத்தப்பட வேண்டும் என்பதைக் கூடவும் அவர்களே முடிவு செய்கிறார்கள் , இத்தகைய போக்கும் ஈழ இலக்கியத்திற்கு வலுச் சேர்க்கும் தானே? அதிகார மையங்களிருந்து இலக்கியம் மதிப்பிடப்படுவது இல்லை. காலத்தை வென்று வாழும் இலக்கியத்தை நேர்மையான விமர்சகர்கள் ஆரம்பத்தில் இனங்காட்டினாலும் பல தலைமுறையாக வரும் வாசகர்களே தீர்மானிக்கிறார்கள். தமிழகத்தில் மட்டுமல்ல உலகம் பூராகவும் சமகாலத்தில் சில அதிகார மையங்கள் குறிப்பிட்ட சில இலக்கியப்பிரதிகளையும் எழுத்தாளர்களையும் முன்னிறுத்தினாலும் அப்பிரதிகளையும் எழுத்தாளர்களையும் காலம் விரைவில் நிராகரித்துவிடும். இன்றைய ஆங்கில மொழி இலக்கிய உலகில் நாசகார அதிகார மையமாக இருந்து மொக்கை நாவல்களை முன்னிறுத்திக் கொண்டிருப்பது மான் புக்கர் பரிசு அமைப்பு. சில பல ஆங்கிலப் பதிப்பாளர்கள் புக்கர் தேர்வுக் குழுவில் அதிகார மையமாக இருந்து தமக்குள் இரகசிய வணிக பேரம்பேசல்கள் மூலம் தமது நலன்களுக்காக இலக்கியத்தைப் பாழாக்கிக் கொண்டிருக்கிறார்கள். நேர்மையான ஆங்கில இலக்கிய விமர்சகர்கள் இதனைச் சுட்டிக்காட்டினாலும் அவர்களைவிடப் பதிப்பகங்கள் பலமாக இருப்பதால் சமகாலத்தில் விமர்சகர்களின் குரல் எடுபடுவதில்லை. இலக்கிய விருதுகளில் இட ஒதுக்கீடு, Populism என்பவற்றுக்கு இடம் இருக்கக்கூடாது. தமிழ்ச்சூழலிலும் விருது வழங்கும் அரசு சாரா நிறுவனங்கள் பல விருதுகள் மூலம் தம்மை இலக்கிய அதிகார மையங்களாக்குகின்றன. இதில் விஷ்ணுபுரம் விருது, கனடா இலக்கியத் தோட்ட விருது என்பன ஒரு தனிநபரின் கட்டுப்பாட்டில் இயங்குபவை. அமெரிக்க விளக்கு விருது மட்டுந்தான் சர்ச்சைகளற்ற நேர்மையான தெரிவுக்குழு முலம் விருதைத் தெரியும் அமைப்பாக இருக்கிறது. இப்படி அதிகார மையங்களிலிருந்து தீர்மானிக்கப்படும் இலக்கியங்களைக் காலம் வெகு விரைவில் நிராகரித்துவிடும். அகரமுதல்வன்அதிகார மையமாவதற்கு முதல் அதிகார மையமானவர் ஷோபாசக்தி. அ.மார்க்ஸ் இலக்கியவாதி அல்லர். ஆய்வாளர். ஆனால் ஓர் அதிகார மையமான அவருக்கு இலக்கியத்தில் யாரை முன்னிறுத்தவேண்டும், புறக்கணிக்கவேண்டும் என்கிற தனிப்பட்ட நலன் சார்ந்த அஜெண்டா இருந்தது. 1998/1999 காலப்பகுதியில் ஷோபாசக்தி, சுகன் கனகசபை, கற்சுறா முதலிய பாரிஸ் வாழ் ஈழத்தமிழர் அ.மார்க்ஸை பாரீசுக்கு அழைத்தார்கள். அங்கு மார்க்ஸ் அவர்களின் மூளையைக்கழுவி இலக்கியமே எழுதத்தெரியாத சாரு நிவேதிதாவை அவர்களிடம் அறிமுகப்படுத்தினார். அவர்கள் அடுத்த வருடம் சாரு நிவேதிதாவை பாரீசுக்கு அழைத்தார்கள். சாரு தன்னை விருந்தினராக அழைத்தவர்களுக்கு அங்கு நிறையத் துன்பங்கள் கொடுத்தார். அவர்கள் இரவல் பெற்றுக்கொடுத்த கமெராவையே திருடிக்கொண்டு இந்தியா வர முயன்றார். அவர்களின் பணத்தைத் திருடினார். பிறகு சாருவே ஓர் இலக்கிய அதிகார மையமாக வந்து இலக்கியத்தைப் பாழ் படுத்தினார். ஒரு விளம்பர நடிக மாடலாக பணம் மற்றும் சலுகைகளைப் பெற்றுக்கொண்டே சாரு இன்றுவரையும் மொக்கை இலக்கியங்களைப் பரிந்துரை செய்து கொண்டிருக்கிறார். இதற்கிடையில் அ.மார்க்சுக்கும் ரவிக்குமாருக்குமிடையில் முரண்பாடு வந்தபின் ரவிக்குமார் காலச்சுவடு சஞ்சிகையோடு நெருக்கமானார். 2000ம் ஆண்டு காலச்சுவடு சஞ்சிகையும் கவிஞர் சேரனின் சரிநிகர் வார இதழும் சேர்ந்து மிகப்பிரமாண்டமான தமிழ் இனி 2000 மாநாட்டை சென்னையில் ஒழுங்கு செய்தார்கள். விடுவாரா அ.மார்க்ஸ்? காலச்சுவடு கண்ணனும் அவர் தந்தையார் சுந்தர ராமசாமியும் பிறப்பால் பிராமணர்கள் என்பதை மட்டுமே வைத்து இந்த மாநாட்டைக் குழப்பப் பல அவதூறுகளைத் திட்டமிட்டுப் பரப்பினார் அ.மார்க்ஸ். அதற்கு உதவியாக ஷோபாசக்தி முதலியவர்களைப் பயன்படுத்தினார். பிறகு ஷோபாசக்தியை முன்னிலைப்படுத்தி தமிழகத்தில் அவரைப் பிரபல்லியமாக்கி ஷோபாசக்தியையே ஓர் அதிகாரமையமாக்கினார். ஓர் அதிகார மையமாக ஷோபாசக்தி இன்று செய்வதென்ன? தன்னைப்போலப் பாலியல் குற்றச்சாட்டுக்குள்ளானவர்களின், அவர்களைப் பாதுகாப்பவர்களின் மொக்கைப் படைப்புக்களை அவர்களின் குற்ற வரலாறுகளைப் பணயமாக வைத்துக்கொண்டு முன்னிறுத்துவது. (உதாரணம் கிரிசாந்தின் மொக்கை நாவல்களான கொடிறோஸ், கல்விரல் என்பவற்றை முன்னிறுத்துவது). இதற்குப் பிரதியுபகாரமாக அவர்கள் ஷோபாசக்தியின் Public Relations ஏஜண்டுகளாக தொழிற்படுகிறார்கள். மறுபுறத்தில் இலக்கியமே எழுத்தே எழுதத் தெரியாதவர்களுக்கு, அவர்களிடமிருந்து பணமும் சலுகைகளும் பெற்றுக்கொண்டு தன்வரலாறு, மற்றும் நாவலை ஒரு Ghost Writer ஆக ஷோபாசக்தி எழுதிக் கொடுக்கிறார். தன் கட்டுப்பாட்டில் இயங்கும் கருப்பு பிரதிகள் பதிப்பகம் மூலமாகப் புலம்பெயர்ந்த எழுத்தாளர்களிடமிருந்து அதிகப் பணம் பெற்று அவர்களின் நூலை வெளியிட்டு பணமோசடி செய்கிறார். இலக்கிய அதிகார மையங்கள் யார் முன்னிறுத்தப்படவேண்டும் என்பதைத் தம் தனிப்பட்ட நலன்களை முன்னிறுத்தியே செய்வார்கள். இது இலக்கியத்திற்கு வலுச் சேர்க்காது. இலக்கியத்தைச் சம காலத்தில் பாழ்படுத்தவே செய்யும். ஆனால் காலம் அதிகார மையங்கள் முன்னிறுத்திய அனைத்துப் படைப்புகளையும் நிராகரிக்கும். இப்ப அகரமுதல்வனுக்கு வருகிறேன். அவரும் ஓர் அதிகார மையமாகி இருக்கிறார் என்கிறீர்கள். ஷோபாசக்தியாவது கொரில்லா என்றொரு மாஸ்டர் பீஸ் குறுநாவலும் சில நல்ல சிறுகதைகளும் எழுதியிருக்கிறார். அகர முதல்வன் எம்மாத்திரம்? காலம் அவர் படைப்புக்களையும் அவர் முன்னிறுத்தும் படைப்புக்களையும் மிக விரைவிலேயே நிராகரித்துவிடும். இலக்கியப் பயணத்தில் ஏதேனும் இலக்குகளையும் நோக்கி நகரும் எண்ணங்கள் உண்டா? உண்டு என்றால் அப்பயணத்தில் அடுத்தென்ன? என் முதல் கவிதைத்தொகுதியான வசந்தம் 91 என் இருபது வயதில் பிரசுரமானது. இரண்டாவது கவிதைத் தொகுதியான எப்போதாவது ஒருநாள் 25 வயதில் பிரசுரமானது. இதே காலப்பகுதியில் நான் சில சிறுகதைகளையும் ஒரு குறுநாவலையும் எழுதினாலும் அவை எனக்கே திருப்தியாக இருக்கவில்லை. ஒஸ்றேலியாவில் சிட்னி நகரில் குடியேறிய பின் சில கவிதைகளே எழுத முடிந்தது. பிறகு ஒரு பத்தாண்டுகளுக்குப் படைப்பிலக்கியங்களே எழுதவில்லை. ஈழ அரசியல் பற்றிய ஆய்வுக்கட்டுரைகளைக் குறிப்பாகப் புலிகளின் பாசிச அரசியலை விமர்சித்த கட்டுரைகளும் சில இலக்கிய விமர்சனங்களுமே எழுதினேன். பத்தாண்டுகளின் பின் கமக்காரன் என்கிற சிறுகதையை எழுதியபோது எனக்குத் திருப்தியாக இருந்தது. சிறுகதைகள், குறுநாவல்கள் எழுதுவதற்குரிய திறமை வந்தது எனக்கே தெரிந்தது. அதற்குப் பிறகு பிரவாகமாக முன்னையைப் போலக் கவிதைகள் வரவில்லை. ஒரு சில கவிதைகளே எழுதினேன். சிறுகதைகள், நாவல்களே இனி எனது வசதியான வடிவமாக இருக்கும் என்பதை உணர்ந்தேன். பின் கர்னலின் காமம் என்கிற நீண்ட சிறுகதை ஒன்று எழுதினேன். அது இன்னும் திருப்தியாக இருந்தது. இக்காலத்திலேயே பல சிறுகதைகளுக்கான சில நாவல்களுக்கான கருக்கள் எனக்குள் உருவாகியது. சிட்னி நகரில் பல ஆண்டுகள் வசித்தபின் ஆங்கிலமும் வசமானபின் இப்போது என்னிடம் ஆங்கிலத்தில் ஒரு நாவல் எழுதுவதற்கான கருவும் இருக்கிறது. ஆனால் என் தனிப்பட்ட வாழ்க்கைப் பிரச்சனைகளால் அவற்றை எழுத எனக்கு நேரமும் வசதியும் கிடைக்கவில்லை. கொரோனா காலத்தில் ஒரு வருடம் வேலையில்லாது இருந்தேன். அக்காலத்திலேயே என் Jaffnafashion.com வலைத்தளத்தை ஆரம்பித்தேன். முள்ளும் மலரும் சிறுகதையையும் முகாமுகம் நீள் கதையையும் எழுதினேன். பிறகு வேலை செய்யத் தொடங்கிய பின்னரும் ஓய்வு நேரங்களில் தடையின்றி புனைவுகள் எழுத முடிந்தது. சினிமாக் கலைஞராக வரவேண்டும் என்கிற என் கனவு பாதிக்கனவில் முறிந்தது. ஆனால் என்னுடைய புனைவுகளைக் குறிப்பாக முகாமுகம் நீள் கதையைப் படித்த பலர் அற்புதமான சினிமா ஆக்கக்கூடியது என்று விதந்துரைத்தார்கள். ஈழத்திலிருந்து தமிழகத்துக்கு வந்து வெற்றிமாறனின் உதவி இயக்குநராக இருந்து இப்போது வெற்றிமாறனின் ஆதரவோடு ஒரு திரைப்படத்தை இயக்கிக்கொண்டிருக்கும் ஹசீன் அதம், மூன்று வருடங்களுக்கு முதல் ஒஸ்றேலியா வந்திருந்த போது என் கனகி புராணம் என்ற குறுங்குறு நாவலை (Novelette) படித்துவிட்டுச் சொன்னார். “உங்களால் நல்ல திரைக்கதைகளை எழுத முடியும். முழுநேரத் தொழிலாகவும் செய்யலாம். உங்கள் திரைக்கதைகளை விற்றுப் பண மீட்டுவதற்கு நான் உதவத் தயாராக இருக்கிறேன்” இனி கடவுள் விடும் வழி. பார்ப்போம். https://kanali.in/natchitra-sevindian/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.