சிறுகதை: யாதுமானவள்! - ஶ்ரீரஞ்சனி - - ஶ்ரீரஞ்சனி - சிறுகதை 14 டிசம்பர் 2025 இதுதான் நான் தனித்துச் செல்லும் முதல் பயணம். விமானத்தின் பின்பகுதியில்தான் என் இருக்கை இருந்தது. சூட்கேசை என்னுடன் இழுத்துக்கொண்டு சென்ற நான் என் இருக்கையில் கைப்பையை வைத்துவிட்டு, சூட்கேசை மேல் இறாக்கையில் வைப்பதற்குப் பிரயத்தனப்பட்டுக் கொண்டிருந்தேன். எட்டக்கூடிய உயரத்தில் அது இல்லையே என எனக்குக் கவலையாக இருந்தது. என் இருக்கையின் பக்கத்தில் இருந்த இளம் பெண் எழுந்து, உதவிவேண்டுமா என ஆங்கிலத்தில் கேட்டபடி உதவிசெய்ய முன்வந்தா. கேட்காமலேயே உதவிசெய்ய முன்வந்த அவவுக்கு வாயாராவும் மனதாரவும் நன்றிகூறியபடி ஆசுவாசத்துடன் அமர்ந்துகொண்டேன். சற்றுநேரத்தில், “நீங்க சுவிற்சிலாந்திலா இருக்கிறீங்க?” என அவவிடம் கேட்டேன். “ஓம், ஒரு medical conferenceக்காக ரொறன்ரோவுக்கு வந்தனான். நீங்க இங்கையா இருக்கிறீங்க?” அவவும் பேச்சைத் தொடர்ந்தா. “ஓ, ரொறன்ரோ உங்களுக்குப் பிடிச்சிருந்ததா? 20 வருஷமா நான் இங்கைதான் இருக்கிறன். ஆனா, என்ர சொந்த நாடு, இலங்கை. அங்கை எனக்குப் படிப்பிச்ச ஒரு ரீச்சரின்ர 75வது பிறந்தநாள் கொண்டாட்டத்துக்காக உங்கட நாட்டுக்கு வாறன்.” “ரொறன்ரோவுக்கு ஒரு wow சொல்லலாமெண்டால், உங்களுக்கு மிகப் பெரிய wow சொல்லலாம். ஆசிரியர்களுடனான உறவை அவ்வளவு தூரத்துக்கு நீங்க பேணுவீங்களா?” முகத்தில் விழுந்த சுருட்டை மயிரைக் காதோரம் ஒதுக்கியவாறு புருவங்களை உயர்த்தினா அவ. “மிசிஸ் பரம் வித்தியாசமான ஒரு ரீச்சர். அவ என்ர அபிமானத்துக்குரிய ரீச்சர் மட்டுமில்ல, அவ எனக்கொரு role model.” “ஓ!” “சின்ன வயசில இலங்கையின்ர தலைநகரான கொழும்பிலதான் நாங்க இருந்தனாங்க. அங்கை அப்பா ஒரு புடவைக் கடை வைச்சிருந்தவர். 77ம் ஆண்டு நடந்ததொரு கலவரத்தில அவர் கொலைசெய்யப்பட்டிட்டார். அதாலை பிறகு நாங்க யாழ்ப்பாணத்துக்குப் போகவேண்டியிருந்தது. அப்ப நான் ஏழாம் வகுப்பு....” “ஓ, very sad, I am sorry.” “அது ஒரு காலம்... ம்ம், சோகத்தைத்தவிர எதையும் பாத்ததில்லை. புதுப் பள்ளிக்கூடத்தில நான் தனிச்சுப்போயிருந்தன். என்ர பல் அசிங்கமாக இருக்கு, நான் வடிவில்லை எண்டெல்லாம் கேலிபண்ணிச்சினம். பள்ளிக்கூடம் போறதே பெரிய தண்டனை போலிருந்துது.” “எவ்வளவு தூரம் நீங்க பாதிக்கப்பட்டிருந்திருப்பீங்க எண்டு விளங்குது.” மெல்லிய குரலில் சொன்னா அவ. “அம்மா மொத்தத்திலை ஜடமாகவேயிருந்தா. போதாததுக்கு பணக் கஸ்டம் வேறை. அந்த நேரம் மிசிஸ் பரம் இருந்திருக்காட்டி நான் என்ன செய்திருந்திருப்பன் எண்டு நினைச்ச்சா, இப்பகூட எனக்கு நெஞ்சு கனக்கும். நான் பள்ளிக்கூடத்திலை சேந்த சில நாள்களிலைதான் அங்கை அவவுக்கு வேலை கிடைச்சிருந்தது. இளமையாயும் நல்ல வடிவாயும் இருந்த அவவை எல்லாரும் பிரமிப்போடைதான் பாப்பினம். ஒரு கட்டத்திலை என்ர பிரச்சினை அவவுக்கு விளங்கிச்சுதோ என்னவோ, வீட்டை வா, படிக்கலாமெண்டு தன்ர வீட்டுக்குக் கூப்பிட்டு அவ எனக்குப் பாடம் சொல்லித் தரத் தொடங்கினா. அதுக்குப் பிறகுதான் மற்றவையும் கொஞ்சம் கொஞ்சமாய் என்னோடை பழகத் துவங்கிச்சினம். அவவே என்னிலை கரிசனை காட்டுறா எண்டதுதான், அதுக்குக் காரணமா இருந்திருக்கலாமெண்டு நான் நினைக்கிறன்.” “ஓ, விளங்குது. அப்படியொரு ரீச்சர் கிடைக்க நீங்க கொடுத்துவைச்சிருக்கிறீங்க.” “என்ர பிள்ளையளுக்கும் அவவைப் பத்தி நிறையச் சொல்லியிருக்கிறன். ஒரு கட்டத்தில எனக்கு எல்லாமா இருந்த அவவைப் பத்தி, என் வேதனையை விளங்கி எனக்கு உயிர்ப்பளித்த அவவின்ர உளவியலைத்த்தான் அங்கை நடக்கவிருக்கிற கூட்டத்தில பேசப்போகிறன்,” என் குரலில் நன்றியும் பெருமிதமும் கலந்திருந்தது. “அப்ப உங்கடை பேச்சு அந்தமாரி இருக்கும்.” அழகான வெண்ணிறப் பற்கள் தெரிய அவ புன்முறுவல் செய்தா. மூன்று மாதமா யோசித்து, யோசித்து எழுதி, எழுதிப் பின் திருத்தித் திருத்தி நான் எழுதினேனா என நானே வியந்துபோன அந்தப் பேச்சை எண்ணிப்பார்த்துக் கொண்டேன். விமானம் பறக்கத் தொடங்கியது. சூரிய உதயம் யன்னலுக்கூடாகத் தெரிந்தது. செந்நிறச் சூரியக் கதிர்கள் வர்ணஜாலம் காட்டிக்கொண்டிருந்தன. மூன்று தசாப்தங்களின் பின்னர் மிசிஸ் பரமைப் பார்க்கப்போகின்றேன் என மூன்று மாதங்களாக மனசுக்குள் பீறிட்டுக்கொண்டிருந்த களிப்பு இப்போது உச்சத்தை அடைந்திருந்தது. இதயம் ஆனந்தத் தாண்டவமாடியது. பல்கலைக்கழகத்துக்காகக் காத்திருந்த காலங்களில் அவ பள்ளிக்கூடம் முடிந்து எங்களின் ஒழுங்கையால் போவதைப் பார்ப்பதற்காக ஒழுங்கையில் தற்செயலாக நிற்பதுபோல, ஒவ்வொரு நாளைக்கு ஒவ்வொரு விடயம் செய்துகொண்டு நின்றது நினைவுக்கு வர எனக்குள் சிரிப்பு வந்தது. மீளவும் மிசிஸ் பரமோடை உறவைத் தொடர வாய்ப்புக் கிடைத்திருக்கிறது என்பதில் நிறைவாக இருந்தது. பிள்ளைகள் வளர்ந்துவிட்டதால் பொறுப்பில்லை. நிதி நெருக்கடியில்லை. வேலையில் லீவு கிடைக்குமா என யோசிக்க வேண்டியதில்லை. நினைத்ததைச் செய்யமுடிகிறது, முதுமை சில வகைகளில் உதவியாக இருக்கின்றதுதான் என நன்றியுடன் நினைத்துக்கொண்டேன். X X X X விமானம் தரையிறங்கியபோது இரவாகியிருந்தது. செயற்கை ஒளியில் சுவிற்சிலாந்து பிரகாசித்தது. “மிசிஸ் பரமின்ரை புண்ணியத்திலை உன்னைப் பாக்க முடிஞ்சிருக்கு. பாத்து எத்தனை வருஷமாய்ச்சு,” கட்டிக்கொண்டாள் என்னைக் கூட்டிச்செல்ல விமான நிலையத்துக்கு வந்திருந்த என் மைத்துனி அருள். “என்ன செய்ய அருள், இப்பத்தான் நேரம் வந்திருக்கு, இனி அடிக்கடி வருவன்!” “ஓ, மிசிஸ் பரமைப் பாக்கலாம் எண்டபடியால், இனி அடிக்கடி வருவாய்.” “இல்லையடியப்பா, பிள்ளையள் வளர்ந்திட்டுதுகள் இனிப் பொறுப்பில்லையெண்டு சொல்றன்.” “நீ சொன்னாப்பிறகு, அவவின்ர பேச்சுகளைக் கேட்கிறனான். மனிசி அந்தமாரித்தான் பேசுது.” “அவ உண்மையிலேயே ஒரு காந்தமடி.” “வீட்டுக்குப் போய் குளிச்சு உடைமாற்றிக்கொண்டு படுக்கைக்குச்சென்றபோது, “விடியக் கோயிலுக்குப் போவம், என்ன? முதலிலை முருகனைப் போய்த் தரிசிப்பம்.” என்றாள் அருள். “ஓகே, போவம்.” ரொறன்ரோவிலை கோயிலுக்குப் போறனியோ?” “அங்கை போறனானோ, இல்லையோ, நீ போகேக்கே நான் வரத்தானே வேணும்.” “நாளைக்குத் தேர் எண்டபடியால், உனக்குத் தெரிஞ்ச ஆக்களும் அங்கை வரக்கூடும்” “ஆக்களைப் பாக்கத்தானே அந்தக் காலத்திலும் மாவிட்டபுரத்துக்கு, கீரிமலைக்கு எண்டெல்லாம் போறனாங்கள்,” கண்ணடித்தேன் நான். “உனக்கெல்லாம் பகிடிதான். சாமி கும்பிடப் போறம். போற இடத்திலை ஆக்களைப் பாக்கிறம்.” “சரி, சரி. முதலிலை சாமியைக் கும்பிடுவம். பிறகு ஆர் வந்திருக்கினமெண்டு பாப்பம்.” சிரித்தேன் நான். X X X X தேர் வெளிவீதியில் சுற்றிவந்துகொண்டிருந்தது. வீதி மக்கள் வெள்ளத்தால் நிறைந்து வழிந்தது. “பக்க கோடிகளுக்கு எங்கும் குறைவில்லை,” அருளுக்குக் கூறிச் சிரித்தேன். திடீரென என் முகத்தை இரண்டு கைகள் மூடிக்கொள்ள, ‘யாரெண்டு சொல்லும் பாப்போம்,” எனக் குரலொன்று ஒலித்தது. குரலை எனக்கு மட்டுக்கட்டவே முடியவில்லை. தடுமாறிய என் முன்னால் கைகளை எடுத்துவிட்டுச் சிரித்தபடி நின்றிருந்தாள் சொர்ணா. “ஏய் சொர்ணா, நீர் எங்கையிருக்கிறீர் எண்டு நான் இப்ப எத்தனை வருஷமா தேடிக்கொண்டிருக்கிறன். சோசல் மீடியாக்கள் ஒண்டிலும் நீர் இல்லையா?” சொர்ணாவைக் கண்ட மகிழ்ச்சியில் என் மனம் துள்ளியது. எங்களின் பாடசாலையில் எட்டாம் வகுப்பில் வந்துசேர்ந்திருந்த சொர்ணாவும் நானும் பன்னிரண்டாம் வகுப்புவரை உற்ற சினேகிதிகளாக இருந்தோம். 83 கலவரத்தின் பின்னர் சொர்ணா திருமணமாகி வெளிநாடு சென்றுவிட்டதாக அறிந்தேன். அத்துடன் தொடர்பு விட்டுப்போயிருந்தது. “மலேசியாவிலை இருந்தனாங்க, இப்ப இங்கை வந்து மூண்டு வருஷமாகுது. உம்மை இங்கை சந்திப்பனெண்டு நான் நினைக்கவேயில்லை. நீரும் இங்கையா இருக்கிறீர்?” “இல்லை, நான் கனடாவிலை இருக்கிறன். மிசிஸ் பரமுக்கு பவள விழா நடக்குதெல்லோ. கேள்விப்பட்டனீரோ? அதுதான் வந்தனான்.” “ஓ.” சுரத்தில்லாமல் சொன்னாள் சொர்ணா. பின்னர் பரஸ்பரம் எங்களின் வாழ்க்கையைப் பற்றிக் கதைத்தபடி, தொலைபேசி இலக்கங்களைப் பரிமாறிக் கொண்டோம். அருள் என்னைவிட 10 வயது இளையவள் என்பதால் சொர்ணா என் சினேகிதி என்பது அவளுக்குத் தெரிந்திருக்கவில்லை. நான் என் சினேகிதியைச் சந்தித்துக்கொண்டதில் அவளுக்கும் சந்தோஷமாக இருந்தது. பின்னர் அருளுக்குத் தெரிந்தவர்கள், அவர்கள் இவர்கள் எனக் கதைத்துமுடித்து வீட்டுக்குப் போனோம். பயண அலுப்பும், கோவில் அலுப்பும் என்னை நித்திரை மயக்கத்துக்குள் அமிழ்த்திவிட்டது. X X X X வியாழனும் வெள்ளியும் ஊர் பார்ப்பதில் மறைந்துபோனது. மலைகளும் நீர்நிலைகளும் சூழ்ந்த சுவிற்சிலாந்தின் அழகு கண்களுக்குப் பெருவிருந்தாயிருந்தது. ஞாயிற்றுக்கிழமைதான் மிசிஸ் பரமின் பவள விழா. சனிக்கிழமைதான் சொர்ணாவைச் சந்திப்பதாக இருந்தது. அவளைச் சந்திக்கும்போது பவளவிழாவுக்கு அவளும் வருவதை உறுதிப்படுத்த வேண்டுமென நினைத்துக்கொண்டேன். அன்று நான் பேசப்போகும் பேச்சு எப்படியிருந்ததெனச் சொல்வதற்கும் பூசிமெழுகாமல் கதைக்கும் சொர்ணா வருவது நல்லதென நினைத்தேன். அத்துடன் மிசிஸ் பரம் சொர்ணாவினதும் ஆசிரியராக இருந்ததால், சொர்ணா வருவா என்ற நம்பிக்கையும் இருந்தது. இரவுச் சாப்பாட்டுக்கு வரும்படி சொர்ணாவை அருள் அழைத்திருந்தாள். முதல் நாளிரவு தொலைபேசியில் பேசிய சொர்ணா, பகவதியையும் அழைத்து வரட்டுமா, பகவதியும் உம்மைப் பார்க்க ஆசைப்படுகிறா என்றாள். ஓ, நிச்சயமாக, பகவதியும் இங்கேயா இருக்கிறா. எனக்கும் அவவைப் பார்க்க ஆசையாயிருக்கு. கூட்டிக்கொண்டு வாரும் என்றேன், நான். மாலை ஐந்து மணியளவில் பகவதியும் சொர்ணாவும் வந்திறங்கினர். பகவதி அன்று பார்த்தமாதிரியே இருந்தாள். “தனிச்சுச் சுதந்திரமாய் சுத்துற காலம் வசந்திக்கு வந்திருக்கு,” நக்கலடித்தாள் பகவதி. “நீர் மட்டும் என்னவாம்? எங்கை மனிசன், எங்கை பிள்ளையள்?” நானும் பகவதியை வம்புக்கிழுத்தேன். “அவையும் வந்தால் நாங்க என்னெண்டு பழங்கதையள் கதைக்கிறது. அவைக்குப் போரடிக்குமெண்டு விட்டிட்டு வந்திட்டம்,” என்றாள் சொர்ணா சீரியசாக. நேரம் போனதே தெரியாமல் வம்பளந்துகொண்டிருந்தோம். எங்களின் சிரிப்பொலியில் அருளின் வீடு அதிர்ந்தது. “ஏழு மணியாகுது, வாங்கோ சாப்பிடுவம்,” என அருள் கூப்பிட்டாள். தோசை முறுகலாகவும் ருசியாகவும் இருந்தது. தோசை சுடப் பஞ்சிப்பட்டு, கடையில் வாங்குமெனக்கு தோசைகளை ஒவ்வொன்றாக அருள் சுட்டுத் தந்தது, ஒரு காலத்தில் அம்மா சுடச்சுடச் காத்திருந்து சாப்பிடுவதை நினைவுபடுத்தியது. “தோசை சுடுறதுக்காகக் காய்ஞ்ச தென்னோலைகளை ஒண்டொண்டாப் பிரிச்செடுத்து அம்மா கட்டாக்குறதை, பிறகு ஓலைகள் எரியேக்கை சுவாலை உயரமாய் எழுந்து தேயுறதை ... எல்லாத்தையும் பாக்கிறதிலை ஒரு சுகம் இருந்தது. எல்லாம் ஒரு காலம். இப்ப எனக்கு இந்தத் தோசைகள் அம்மாவையும் அவ தோசை சுடுறதையும் ஞாபகப்படுத்துது,” என்றேன் நான். “கொழும்பில இருக்கேக்கையும் அப்படியோ அம்மா தோசை சுட்டவ?” வெகுளித்தனமாகக் கேட்பதுபோல என்னைக் கேலிசெய்தாள் பகவதி. “கொழும்பு வாழ்க்கை ஆருக்கு ஞாபகமிருக்கு. அப்பாவை அழிச்ச அந்தக் கொழும்பு வாழ்க்கையை மறக்கோணுமெண்டு மறந்தனோ, என்னவோ. எனக்கது ஒண்டுமே நினைவில்லை. .ஆனா யாழ்ப்பாணத்துக்கு வந்ததும் மிசிஸ் பரம் செய்ததுகளை வாழ்க்கைக்கு மறக்கேலாது.” சில கணங்கள் பெரும் அமைதி நிலவியது. நான் அதை உடைத்தேன். “It’s okay. அப்பா போய், இப்ப எத்தனை வருஷமாச்சு. மனசிலை வடுவாயிருக்குதான், ஆனா, அந்த நேரத்திலை பட்ட வேதனை இப்ப இல்லை. கொழும்பை ஏன் ஞாபகப்படுத்தினதெண்டு நீர் கவலைப்படத் தேவையில்லை, பகவதி.” “அதில்லை, வசந்தி. நீர் மிசிஸ் பரமை உச்சந்தலையிலை வைச்சிருக்கிறீர். அதுதான் சொல்லலாமோ வேண்டாமோ எண்டு யோசிக்கிறம்,” சொர்ணாவைப் பார்த்தபடி சொன்னாள் பகவதி. “என்னத்தைச் சொல்லலாமோ, வேண்டாமோ எண்டு யோசிக்கிறியள்?” “அவவைப் பத்தித்தான். அந்த நேரத்திலை ஒத்தடமாயிருந்த மிசிஸ் பரமைத்தான் உமக்குத் தெரியும். அவ ஒத்தடமாயிருந்தா, ஏனெண்டால் உங்களுக்கிடையில முரண்கள் இருக்கேல்லை.” தோளைக் குலுக்கியபடி சொன்னாள் அவள். “எனக்கு விளங்கேல்லை.” “நான் என்ன சொல்றன் எண்டால், அவவை முன்னுக்கு வைச்சால், அவவோடை முரண்படாட்டா ஒரு பிரச்சினையும் வராது... அருள், உண்மையிலேயே தோசை சுப்பர். சம்பலும்தான். இஞ்சிபோட்டு அரைச்சிருக்கிறீர், என்ன?” தலையைக் கீழும் மேலுமாக ஆட்டின அருள் “தாங்கஸ்,” என்றாள். எனக்கோ கதை திசைமாறுவது விருப்பமில்லாமல் இருந்தது. “என்ன நடந்தது எண்டு சொல்லுமன்?” அவசரப்பட்டேன் நான். “சொர்ணா இப்ப நடத்துற முதியோர் சங்கத்தை அவதான் முதலில நடத்தினவ. பிறகு கொமிற்றியிலை கருத்து வேறுபாடு வந்தவுடனை எல்லாத்தையும் உதறிப்போட்டுப் போட்டா. கணக்கு வழக்குகளைக்கூடக் குடுக்கேல்லை. கடைசியில சொர்ணா தான் அந்தப் பொறுப்பை எடுக்கவேண்டியிருந்துது. எல்லாத்தையும் சரிப்பண்ணலாமெண்டு அவவின்ர வீட்டுக்கு சொர்ணா நாலைஞ்சு தடவை போய்க் கெஞ்சிக் கேட்டும் பழைய பைல்கள் ஒண்டையும் அவ குடுக்கமாட்டன் எண்டிட்டா. அதாலை ஒடிற்றிங்கிலை சங்கம் பட்டபாடு சொல்லிமுடியாது.” “ஏன் அப்படிச் செய்தவ, எனக்கு நம்பேலாமல் இருக்கு!” குழப்பத்துடன் நான் சொர்ணாவைப் பார்த்தேன். “அதுதான் சொன்னனே, முரண்வரேக்கைதான் ஒராளின்ரை சுயம் தெரியும். இவையின்ர சங்கச் செயலாளர் அவவுக்கு ஆதரவாயிருக்கேல்லை எண்டதாலை அவரின்ர மனிசி செத்ததுக்குக்கூடத் துயரம் விசாரிக்கேல்லையாம் எண்டால் பாருமன்.” “அவ இப்பிடிச் செய்தவ எண்டதை எனக்கு நம்பேலாமல் இருக்கு.” “நீர் இதையும் நம்பமாட்டீர். இங்கை அவ வந்திருந்த துவக்கத்தில பிள்ளையளோடை சரியாய்க் கஷ்டப்பட்டவ. சொல்லிக் காட்டக்கூடாது எண்டாலும், உமக்கு விளங்கட்டுமெண்டதாகச் சொல்றன். நான் அவவுக்கு நிறைய உதவிசெய்திருக்கிறன். ஜக்கற், அது இதெண்டு கணக்குப்பாக்காமல் வாங்கிக்கொடுத்திருக்கிறன். அப்படியிருந்தும், அவ பேசின ஒரு பேச்சிலை இருந்த ஒரு பிழையைச் சுட்டிக்காட்டிட்டன் எண்டு என்னை இப்ப தூரவைச்சிட்டா. சொர்ணாவின்ர பிரச்சினையைத் தீக்கிறதுக்காக நானும் ஏதாவது செய்வமெண்டு பாத்தன். ஆனா அந்த மனுசி கதைச்சால்தானே. அவவின்ர வண்டவாளங்கள் தெரிஞ்சிருந்தால், நீர் இங்கை வந்திப்பீரோ என்னவோ! …. நாங்களும்தான் பிழைவிடுறனாங்கதான், இல்லையெண்டில்லை. ஆனா, பெரிய ஆள்தோரணையிலை மனிசரா வாழோணுமெண்டு மற்றவைக்கு ஆலோசனை வழங்கிற, வழிகாட்டியா இருக்கிறதா பெயரெடுக்கிற இவ இப்பிடி நடக்கலாமோ...?” தலையை மேலும் கீழும் ஆட்டியபடி என் முகத்தைப் பார்த்தாள், பகவதி. “எனக்கு என்னத்தைச் சொல்லுறதெண்டு தெரியேல்லை, பகவதி… நீர் கேட்கிற கேள்வியில அர்த்தமிருக்கு... அவவுக்கு இப்பிடியுயொரு பக்கமிருக்குமெண்டு நான் கனவிலும் நினைக்கேல்லை.” “பகவதி சொன்னதெல்லாம் உண்மை, வசந்தி. ஆனா, அதுக்காண்டி... நீர் அவவை வெறுக்கோணும் எண்டில்லை. உமக்கு அந்த நேரம் அவ எல்லாமா இருந்திருக்கிறா. அதுக்கு நீர் நன்றியாய் இருக்கத்தானே வேணும்.” மென்மையாகவும் உறுதியாகவும் சொன்னாள் சொர்ணா. “எண்டாலும், உங்களுக்கு இப்பிடி நடந்திருக்கேக்கை, எப்படி நான் அவவை உயர்த்திப் பேசுறது?” “இவ்வளவு தூரம் வந்திருக்கிறாய். அழைப்பிதழிலை பேரெல்லாம் போட்டாச்சு, பேசத்தானே வேணும்,” என்கிறாள் அருள், தோசையை என் தட்டில் வைத்தபடி. எனக்குத் திடீரெனப் பசி போய்விட்டது. X X X X அந்த ஞாயிற்றுக்கிழமை இரவு, மண்டபம் மலர் அலங்காரங்களாலும், வண்ண விளக்குகளாலும் ஒளிர்ந்து கொண்டிருந்தது. ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், நண்பர்கள் எல்லோரும் ஆரவாரமாகக் கூடியிருந்தனர். பொன்மஞ்சள் நிறச் சீலையில் மேடையின் நடுவில் மலர்மாலையுடன் மிசிஸ் பரம் அமர்ந்திருந்தா. பக்கத்தில் அவவின் கணவர் பரம் அவவின் சேலை நிறத்துக்குத் தோதான சேர்ட்டுடன் கையில் ஒரு கைத்தடியுடன் இருந்தார். மாணவர்களின் வாழ்த்துகள் தொடர்ந்து கொண்டிருந்தன. அவர்களின் வாழ்க்கையில் அவ எவ்வளவு தூரம் பங்களித்திருந்தா என ஒவ்வொருவரும் சொல்லிக்கொண்டே இருந்தனர். நானும் அருளும் போய் எங்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த ஆசனங்களில் அமர்ந்து கொண்டோம். என் மனம் நிலைகொள்ளாமல் தவித்தது. நன்றியைப் பகிர்வது எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியம் என் சினேகிதிகளின் அனுபவங்களைப் புறக்கணிக்காமல் இருப்பதற்கும் உள்ளதென என் மனம் எனக்கு ஓயாமல் சொல்லிக்கொண்டிருந்தது. என் பெயர் அழைக்கப்பட்டது. என் இதயம் துடிக்க மறுத்ததுபோல, நெஞ்சுக்குள் அடைத்தது. மூன்று மாதங்களாகத் தயாரித்த பேச்சு கையில் இருந்தது. ஆனால், மனதில் சொர்ணாவும் பகவதியும் கூறிய கதைகள்தான் சுழன்று கொண்டிருந்தன. ‘வசந்தி மோகன்,’ என் பெயரை அழைத்துக்கொண்டிருப்பவரின் குரல் மீளவும் ஒலித்தது. மெதுவாக எழும்பினேன். மேடைக்குப் போகும் படிகளில் இரண்டு படிகளைத் தாண்டிவிட்டேன். ஆனால் அடுத்த படியில் காலடி எடுத்துவைக்க முடியவில்லை. என் தலை என்னையும் அறியாமல் இடமும் வலமும் ஆடியது. ஒருவாறு சமாளித்துக்கொண்டு, ஆழமாக மூச்செடுத்தேன். ‘பேசினால் உண்மை வெளிப்படும். பேசாதே,’ என என் மூளை எச்சரித்தது. தொண்டை காய்ந்து போயிருந்தது. மெதுவாக ஒலிவாங்கிக்கு முன்னால் போய் நின்றுகொண்டேன். “அன்பான மிசிஸ் பரம் அவர்களே, ஆசிரியர்களே, என் அன்புத் தோழர்களே, மிசிஸ் பரம், எனக்கு ஆசிரியர் மட்டுமல்ல. தனிமையிலும் துயரத்திலும் நான் சிக்கித்தவித்தபோது, எனக்கு ஆதாரசுருதியாக இருந்த ஒரு கனிவான மனிதர். ‘நீ முக்கியமானவள்’ எனச் சொல்லும் தோரணையில் அவர் என்னுடன் நடந்த விதமும் அவரின் அன்பும் என் வாழ்க்கையை மாற்றியது. என் வாழ்க்கையின் இருண்ட அந்த நாள்கள் என் நினைவுக்கு வரும்போதெல்லாம், மிசிஸ் பரம் காட்டிய வெளிச்சம் ஒருபோதும் என் நினைவுக்கு வராமல் போனதில்லை. அவர் காட்டிய கருணைக்கு நான் என்றென்றும் நன்றியுள்ளவளாக இருப்பேன். ஆனால், நண்பர்களே,” - ஒரு கணம் நிறுத்தினேன். “மனிதர்களைப் பற்றிய ஒரு உண்மையை நாங்களெல்லாம் ஏற்கவேண்டும். மனிதர்களில் எவரும் ஒரு முகம் கொண்டவர்கள் அல்லர். ஒவ்வொருவருக்கும் பல முகங்கள் இருக்கின்றன. அதிலும் சிலருக்கு முற்றிலும் எதிரெதிரான முகங்கள் உள்ளன. அதனால், ஒருவருக்குத் தெய்வமாகத் தோன்றுபவர், இன்னொருவருக்கு அரக்கராகத் தெரியலாம். குறித்தவரின் நினைவுகள் ஒருவரை மகிழ்விக்கின்ற அதேவேளையில் இன்னொருவருக்கு வலியைக் கொடுக்கலாம்.” மீளவும் ஒரு கணம் என் பேச்சை நிறுத்திவிட்டு மிசிஸ் பரமைத் திரும்பிப் பார்த்தேன். அவரின் முகத்தில் ஆழ்ந்த சிந்தனையின் ரேகைகள் ஓடுவதுபோல எனக்குத் தெரிந்தது. மண்டபத்தில் ஓரிரு கணங்கள் பெரும் அமைதி நிலவியது. பின் நீண்டதொரு கைதட்டல் ஒலித்தது. நான் தொடர்ந்தேன். “எனவே முழுமையானதொரு மனிதரைப் பற்றிப் பேசுவதற்கு நான் இங்கே வரவில்லை. வாழ்க்கையில் நான் இழந்துபோன பிடிப்பை மீளப் பெற்றுக்கொள்வதற்குக் காரணமாக இருந்த ஒருவரைப் பற்றியே பேச வந்திருக்கிறேன்...” “தெல்லிப்பழைச் சைவ வித்தியாசாலையில் மிசிஸ் பரம் ஆசிரியராகப் பதவியேற்றபோது, அவரின் அபிமான மாணவியாக இருந்த வசந்திக்கு நன்றி கூறிக்கொண்டு, இனி அடுத்ததாக....” தலைமை வகித்தவர் பேசிக்கொண்டிருந்தார். அருளின் அருகே வந்தமர்ந்த எனக்கு உடம்பு படபடத்தது. முகத்தில் அனல் அடிப்பது போலிருந்தது. என் கைகளை இறுகப்பற்றிக் கொண்ட அருள், “வீட்டுக்குப் போவோமா” என்றாள். sri.vije@gmail.com https://www.geotamil.com/index.php/2021-02-11-18-01-46/9494-2025-12-14-13-07-25
By
யாயினி · 58 minutes ago 58 min
Archived
This topic is now archived and is closed to further replies.