Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்தேசியம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தன் சொந்த சுயநலத்திற்காக தமிழக மக்களைக் கூறுபோட்டு, நடுத்தெருவில் அநாதையாக விட்டுச் சென்றிருப்பவர் ராமசாமி. அடுத்த மாநிலங்கள் எல்லாம் வளர்ந்து கொண்டிருக்க இன்று தமிழகம் சாதிச்சண்டையிலும், குதர்க்கக் கதை பேசுவதிலும் மூழ்கிப் போயிருக்கின்றது. அது பற்றியதொரு ஆய்வு இது.

குமரிமைந்தனின் வலைப்பூவில் இருந்து...

http://kumarimainthan.blogspot.com/2007/09/blog-post.html

----------------------------------------------------------------------------------------------------

தமிழ்த் தேசியம் - முன்னுரை

கிட்டத்தட்ட ஆறு திங்கள்களுக்கு முன்பு உலகத் தமிழ் இளைஞர் பேரவைச் செயலாளர் பர்.இரா. சனார்த்தனம் அவர்கள் ஒரு மலரில் வெளியிடுவதற்காகப் பல தலைப்புகள் கொடுத்துக் கட்டுரைகள் கேட்டுத் தாளிகைகளில் அறிக்கை விடுத்திருந்தார். அவற்றில் "தமிழ்த் தேசியம்' என்பதும் ஒன்று. இப்பொருள் பற்றிய என் கருத்துளை வெளியிட ஒரு வாய்ப்பு என்றெண்ணி இக்கட்டுரையை விடுத்தேன். என் வழக்கப்படி இன்னும் சிலருக்கும் படிகள் அனுப்பினேன். கட்டுரைகள் கேட்டவரிடமிருந்தோ மற்றவரிடமிருந்தோ இது நாள் வரை மறுமொழி எதுவும் இல்லை. ஆனால் தோழர் குணாவின் திராவிடத்தால் வீழ்ந்தோம் என்ற நூலில் இக்கட்டுரையின் பகுதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதை அறிந்தேன். இதே நூலைப் படித்த வேங்கைப் பதிப்பகத்தைச் சேர்ந்த நண்பர் பொன். மாறன் கட்டுரையை வெளியிட முன்வந்தார். கட்டுரை நூல் வடிவில் உங்கள் பார்வையில் உள்ளது.

பத்து அகவையிலிருந்தே திராவிட இயக்கச் சிந்தனையில் வளர்ந்தவன் நான்; களத்தில் இறங்கவில்லையாயினும் கனவுகளில் திளைத்தவன்; சிறுகச் சிறுக அந்தக் கனவு கலைந்து 1973 - இல் முற்றிலும் விடுபட்டவன்; பொதுமையை நாடி அதனிலும் முரண்பாடுகளைக் கண்டு இரண்டும் தமிழகத்துக்கும் பொதுமை இயக்கம் ஏழை நாடுகளுக்கும் செய்துள்ள இரண்டகத்தைக் கண்டு தெளிந்து புதுக் கோட்பாடு, இயக்கம் காண விழைபவன்; ஆனால் ஆர்வமுள்ள அளவுக்கு ஆற்றல்கள் வாய்க்கப் பெறாதவன்; கற்றும் கேட்டும் கண்டும் அறிந்தவற்றையும் உணர்ந்தவற்றையும் பிறருக்கு எடுத்துக் கூறவேண்டும் என்ற கடமையுணர்வை எழுத்துகள் முலம் நிறைவேற்ற முயல்பவன்; இயலாமைகளால் ஆக்கங்களில் குறைபாடுகள் இருக்கலாம் என்பதை உணர்ந்திருந்தும் நகையாடப்படலாம் என்ற தயக்கம் இருந்தும் தெரிந்தவற்றிலிருந்து பெறப்பட்ட முடிவுகளை மக்கள் முன்வைக்க வேண்டுமென்ற கடமையுணர்வால் உந்தப்பட்டவன்; தவறுகள் இருந்தால் அவற்றைச் திருத்தி என் முடிவுகளை மேம்படுத்தும் ஆற்றல் நம் மக்களுக்கு வளர வேண்டுமென்று விரும்புபவன்; ஆனால் நண்பர் குணா தவிர வேறெவரிடமிருந்தும் அத்தகைய ஆற்றல் வெளிப்படவில்லை.

இந்தக் கட்டுரையில் நான் சொல்லியுள்ள கருத்துகளின் எதிரொலி மிகக் கொடியதாக இருக்கக் கூடும். எதிர்ப்பின் எத்தகைய தாக்குதலையும் எதிர்கொள்ள ஆயத்தமாக இருந்தால்தான் நிகழ்காலத் தேக்க நிலையிலிருந்து எதிர்காலத்தை விழித்தெழச் செய்ய வேண்டிய கடமையை நிறைவேற்ற முடியும் என்பது என் முடிவு.

கட்டுரையில் தேசியம் பற்றிய ஒரு வரையறை கூறப்பட்டுள்ளது. அது மிகப் பொதுப்படையானதாகும். உண்மையான தேசியர்கள் தேசியத்தின் வினைப்பாடுகள் கூர்மையாகும் போது தான் தங்களை இனங்காட்டுவர்.

இக்கட்டுரையை வெளிக்கொணர முன் முயற்சி எடுத்துக் கொண்ட வேங்கை அச்சக வேங்கை மார்பனுக்கும் நண்பர் பொன். மாறனுக்கும் கட்டுரை அச்சேறுமுன்பே அறிமுகம் தந்த தோழர் குணாவுக்கும் நன்றி.

நம் குமுகத்தில் அண்மைக் காலங்களில் பொய்த்துப் போய்விட்ட மனந்திறந்த திறனாய்வு மழை இப்போதாவது பொழியுமா?

பின்குறிப்பு: உண்மையில் இந்தக் கட்டுரை இன்று(15-09-07) வரை நூல் வடிவம் பெறவில்லை.

தமிழ்த் தேசியம்

தேசிய உணர்வென்பது இயற்கையானது. அது நில எல்லை அடிப்படையில் உருவாவது. விலங்குகளும் தாம் வாழும் இடங்களுக்கு எல்லை வகுத்துள்ளன. சிலவகை மான்கள் தாம் வாழும் எல்லைகளுக்கு அடையாளமிட்டுப் பேணுவதாக உயிர்நூலார் கூறுவர். நாய்களும் இத்தகைய எல்லைகளை வகுத்துள்ளன. எல்லையினுள் புதிதாக நுழையும் நாயை அவை உடனே அண்டை நாய்களுடன் சேர்ந்து துரத்திவிடும்.

மனிதர்கள் ஓரிடத்தில் இறுதித் திரிவாக்கம் பெற்றுப் பரவினயமையால் உலக மொழிகளில் பல அடிப்படைச் சொற்களில் ஒற்றுமை காணப்படுகிறது. அவர்கள் பல்கிப் பெருகி உலகெலாம் பரவியபோது ஆங்காங்குள்ள பருப்பொருட் சூழல்கள் மற்றும் வாய்ப்புகளுக்கேற்ப அவர்களது பண்பாடுகளும் மொழிகளும் வளர்ச்சியடைந்தன.

அருகருகே வாழ்ந்த மக்கள் உணவு தேடி தத்தம் எல்லைகளை மீறியபோது சண்டைகள் நிகழ்ந்தன. வளமில்லாப் பூமியிலிருந்து கூட்டமாக வளமிக்க பரப்புகளில் புகுந்து கொள்ளையடிப்பதற்கும் போர்கள் நடந்தன. இப்போர்களிலிருந்து பேரரசுகள் உருவாயின. பற்றாக்குறைப் பகுதியிலுள்ளோர் வளமிக்க பகுதிகளிலுள்ள வெவ்வேறு பொருட்களை வாணிகம் மூலம் பண்டமாற்றுச் செய்து உயர்நிலையடைந்த போது அத்தகைய வாணிகக் குழுக்களும் பேரரசுகளை அமைத்தன. இப்பேரரசுகள் தம் மொழி பேசும் மக்களையே அடக்கி அவர்கள் நிலத்தின் வளத்தைச் சுரண்டிச் சென்றபோது சுரண்டப்பட்ட மக்களின் தேசிய உணர்ச்சி மலர்ந்தது. தங்களைச் சுரண்டுவோரிலிருந்து தம்மை இனம் காணும் வகையில் தாம் பேசும் மொழியை தம்மை அடக்கியாளுவோர் மொழியிலிருந்தும் மாறுபடுத்திக்கொண்டனர்.

[1] இதற்கு எடுத்துக்காட்டாக மலையாளம், சிங்களம் ஆகிய தேசியங்களின் வளர்ச்சியைக் கூறலாம். தமிழகத்தின், குறிப்பாகச் சோழப் பேரரசின் ஒடுக்குமுறையிலிருந்தே தமிழில் சேர நாட்டுத் திசைமொழி மலையாளமாக மாற்றப்பட்டது. மலையாளத்துக்கு இன்றைய எழுத்து வடிவத்தைக் கொடுத்த எழுத்தச்சனின் முயற்சி ஏற்றுக் கொள்ளப்பட்டது. இன்று கூட நாட்டுப்புற மலையாளிகளிடம் கழகக் காலத் தமிழ் அழியாமல் நிற்கிறது.

அது போன்றே சிறுபான்மையராயிருந்த சிங்களர் பக்கம் பெரும்பான்மையினரான தமிழர்கள் சோழர்கள் தாக்குதலின் எதரொலியாக உருவான தேசிய உணர்விலிருந்தே சாய்ந்திருப்பார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது. சிங்களர்களின் பெயர்களில் உள்ள பின்னொட்டுகள் இந்த ஐயப்பாட்டை எழுப்புகின்றன. இன்றும் பத்மநாப, டக்ளசு தேவானந்த எனும் பெயர்கள் சிங்களப் பெயர்கள் போல் ஈறு குறிலாக இருக்கின்றன. அவர்கள் செயலும் சிங்களரைச் சார்ந்து நிற்கிறது. வல்லாண்மையை அண்டி வாழ்வதற்காகத் தேசியத்தை மாற்றிக்கொள்வதற்கு இவர்கள் எடுத்துக்காட்டுகள்.

தமிழகத்தில் தேசிய உணர்வு, அதாவது தம் நிலம் பற்றிய மக்களின் ஓர்மை கழகப் பாடல்களிலிருந்து தெரிகிறது. மோரியர் படையெடுப்பின் போது எல்லையிலிருந்த குறுநில மன்னர்களே அவர்களைத் தடுத்து நிறுத்திவிட்டனர். ஆனால் அக்குறுநில மன்னர்களை அழித்ததன் மூலம் முவேந்தர்கள் தமிழகப் பாதுகாப்புக்கு ஊறு விளைத்தனர். தமிழரின் மானம் காப்பதற்காக இமயம் நோக்கிச் சென்ற செங்குட்டுவன் தமிழகம் முழுவதையும் ஓரரசாக்க வேண்டுமென்ற சாத்தனார் போன்றோரின் மறைமுக வேண்டுதலுக்குச் செவிசாய்க்கவில்லை. அதைச் செய்திருந்தால் தமிழக வரலாறே மாறியிருக்கும்.

தமிழகத் தேசிய உணர்வுக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர் இளங்கோவடிகள். ஆனால் அவர் காலத்திலும் தொடர்ந்தும் ஏற்பட்ட உள்நாட்டுக் குழப்பங்களால் தமிழகம் பலமுனைத் தாக்குதலுக்காளாகித் தன் முகத்தைச் சில காலம் இழந்தது.

சமணம் மூலமாக வந்தவர்கள் ஆட்சியாளர்களானார்கள். சமணம் வாணிகர்களின் சமயம் என்று பொதுவாகக் கூறப்படுகிறது. ஆனால் அது வெளிநாட்டு வாணிகர்களின் சமயம், ஏனென்றால் சமணத்தை எதிர்த்து உருவான சிவனியத்துக்குப் பள்ளி எழுச்சி பாடியவரான காரைக்காலம்மையார் ஒரு தமிழ் வாணிகப் பெண்மணி. சம்பந்தருக்கு ஆதரவளித்தவர்களில் வாணிகர்களே வலிமை வாய்ந்தவர்கள்.

புத்த சமயமும் வெளிநாட்டவர் தொடர்பு கொண்டிருந்தது. தன் தந்தை காலத்தில் பன்னீராயிரம் சிங்கள வீரர்களைச் சிறைபிடித்து வந்த கரிகாலனின் புகாரைக் கயவாகு மணிமேகலையின் துணைகொண்டு அழித்தான். இவையனைத்துக்கும் எதிர்ப்பாக, தேசிய எழுச்சியாகத் தான் சிவனியம் உருவானது. சிவபெருமானை மகிழ்வித்தவனாக ஒவ்வொரு பதிகத்திலும் ஒன்பதாம் பாடலில் இராவணனைப் புகழ்வதன் மூலம் அவனை கி.பி. ஆறாம் நூற்றாண்டிலேயே தமிழகத் தேசியத் தலைவர்களில் ஒருவனாக சம்பந்தர் உயர்த்திவிட்டார். இதன் மூலம் அக்காலகட்டத்தில் வைணவமும் தேசியத்துக்கு இரண்டகம் செய்ததை உய்த்துணரலாம்.[2]

தமிழ்த் தேசியத்தின் நிழலில் உருவான சோழப் பேரரசு அதில் நிலைத்து நிற்கவில்லை. மக்களின் வெறுப்புக்கு உள்ளானது. நாளடைவில் வெளியார் ஆதிக்கத்துக்குத் தமிழகம் மீண்டும் மீண்டும் ஆளானது. அவற்றிற்கு மக்களின் எதிர்ப்பின் எதிரொலிகளாக குற்றலாக் குறவஞ்சி, திரிகூடற் பள்ளு போன்ற சில இலக்கியத் தடயங்கள் மட்டும் எஞ்சி நிற்கின்றன. இவ்வெல்லா இயக்கங்களுக்கும் உள்ள ஒரு பொதுத் தன்மை, தாழ்ந்த சாதி மக்களைத் தங்கள் இறைவனுக்கு நெருக்கமானவர்களாகக் காட்டுவதேயாகும்.

இவற்றுக்குப் பின் கி. பி. 1682 முதல் 7 ஆண்டு காலம் பாண்டிய நாட்டை ஆண்ட அரங்ககிருட்டின முத்துவீரப்பனிடம் தேசிய உணர்வு தலைகாட்டியது. 19ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் வெள்ளையரை எதிர்த்து சின்ன மருது வெளியிட்ட சீரங்கம் அறிக்கை தமிழகத் தேசிய வரலாற்றில் ஒப்பற்ற ஒன்றாகும்.

அடிக்குறிப்பு:

[1] தங்களுக்குத் தனி அடையாளமாக சமயத்தை உருவாக்கிக் கொள்வதும் உண்டு. எ-டு. மோசேயின் தலைமையில் யூதர்கள்.

[2] தமிழகத்தில் மாலியத்தின் எழுச்சி குறிஞ்சி நிலத் தலைவர்களுக்கும் மூவேந்தர்களுக்கும் உருவாகியிருந்த முரண்பாடுகளைப் பயன்படுத்தி பார்ப்பனர்கள் மாலியத்தை வைத்து குறிஞ்சி, முல்லை நில மக்களிடையில் செயற்பட்டுவந்ததன் தடயம் சிலப்பதிகாரத்தில் காணப்படுகிறது. குடகு நாட்டை அடுத்த மாங்காட்டு(இது பெரும்பாலும் மங்களூராயிருக்கலாம்) மறையோனின் சுற்றுச்செலவு இதையே சுட்டுகிறது எனலாம். களப்பிரர்கள் முதலில் மாலியர்களாகவே இருந்ததாகத் தோன்றுகிறது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இருபதாம் நூற்றாண்டுத் தமிழகத் தேசியம்

உலகில் தேசிய இயக்கங்களுக்கென்று ஒரு பொதுத் தன்மையுண்டு. ஒவ்வொரு தேசியத்திலுமுள்ள மிக உயர் மட்டத்திலிருப்பவர்களிடமிரு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பெரியாரைத் திறனாய்வோம்( களஉறுப்பினர்களுக்கு முக்கியமான பகுதி :D )

பேரவைக் கட்சியில் இருந்த போதும் அதிலிருந்து வெளியே வந்த தொடக்க காலத்திலும் ஒரு நேர்மையான சாதிய எதிர்ப்புணர்வை அவரிடம் நம்மால் காண முடிகிறது. [1] ஊர் ஊராகக் கடும் வன்முறை எதிர்ப்புகளுக்கிடையில் உள்ளுரிலுள்ள ஆர்வலர்களின் உறுதுணையோடு சாதி சார்ந்த பழமைக் கருத்துகளுக்கு எதிர்ப்பை விதைத்ததில் அவரது வீரம் வெளிப்படுகிறது. ஆனால் பல வேளைகளில் ஒரு கோழைத்தனம் காணப்பட்டது. 1933-இல் உருசியா சென்று திரும்பிய கையோடு பொதுமைக் குமுகத்தை உருவாக்குவதற்கென்று ஈரோட்டுத் திட்டத்தை வெளியிட்டார். ஆங்கில அரசு அவரைச் சிறையிலிட்டு ஒடுக்குமுறையைக் கையாண்டதும் உறுதிமொழி எழுதிக் கொடுத்து வெளியே வந்தவர் இன்னொரு முறை அந்தப் பேச்சையே எடுக்கவில்லை.

சாதியத்தை எதிர்த்துக் கருத்துப் பரப்பல் செய்து வந்த வேளையில் முத்துராமலிங்கத்தேவர்மூலமா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒருவரை ஒரு தேசியத்தைச் சேர்ந்தவரா இல்லையா என்பதை எப்படி முடிவு செய்வது?

தேசியம் என்பது ஒருவரின் தாய்மொழியை மட்டும் அடிப்படையாகக் கொண்டதல்ல. அவர் வாழும் நிலப்பரப்பை அடிப்படையாகக் கொண்டது. எவரொருவர் தான் வாழும் நிலத்தின் நலத்தோடு தன் சொந்த நலம் இரண்டறக் கலந்துள்ளது என்று உணர்ந்து அதற்காகப் பாடுபடுகிறாரோ அதுபோல் எவரொருவருக்கு அவர் வாழும் நிலத்தின் மீது அவரது வாழ்வும் வளமும் வேர்கொண்டுள்ளதாக உணர்ந்துள்ளாரோ அவரே அத்தேசியத்தின் மக்களாவர்.

தமிழகத்தின் தேசிய வாழ்வில் ஒரு திரிபாகவேனும் நிலவிய திராவிட இயக்கத்தில் மொழி உணர்வை முழுமனதோடு வெளிப்படுத்தியவர்களில் பெரும்பாலோர் தெலுங்கைத் தம் தாய்மொழியாகக் கொண்டவர்கள். வரலாற்றுக் காரணங்களால் தமிழகத்தைத் தம் தாயகமாகக் கொண்டுவிட்ட இவர்களுக்குத் தமிழ் நிலத்தின் மீதுள்ள தொடர்பும் நெருக்கமும் வேறெவருடையதைக் காட்டிலும் குறைந்ததல்ல. அதே போல் தனித்தமிழ் இயக்கத்தில் கன்னடத்தைக் தாய்மொழியாகக் கொண்ட எத்தனையோ பேர் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களெல்லாம் தமிழகத் தேச மக்களே.

மாறாகப் பார்ப்பனர்கள் எந்த நிலத்தின் மீதும் பற்றுக்கொண்டவர்களல்லர். அவர்களுக்குத் தேசியம் எதுவுமே கிடையாது. ஆனால் அவர்களும் ஒவ்வொரு சமயம் தாம் வாழும் வெளி இடங்களில் தங்களுக்கு அச்சுறுத்தல் வரும்போது தேசியம் பேசுவர். ஆனால் அதை நம்பி அவர்களைப் பொருட்டாகக் கருதக் கூடாது.

அதேபோல் வளவாழ்வு வாழ முடியுமென்ற நம்பிக்கையில் பிற நாடு சென்று வாழ நினைப்போரும் தேசியத்தில் வேர்கொள்ளாதவரே. ஆனால் இவர்கள் அனைவரும் தாம் செல்லும் இடங்களில் படும் இன்னல்களிலிருந்து விடுதலை பெறத் தாய்நாடு வரும்போது தேசியம் பற்றி நாம் அவர்களுக்கு எடுத்துரைக்கலாம்.

மொத்தத்தில் தமிழகத் தேசியம் புத்துயிர் பெற நாம் மக்களுக்குப் பொருளியல் உணர்வு ஊட்ட வேண்டும். இம்மண்ணின் வளங்கள் மீது நமக்குள்ள உரிமையை நிலைநாட்ட வேண்டும். இந்த மண்ணில் எந்த விதமான பொருளியல் நடவடிக்கையிலும் நாம் ஈடுபட நமக்குள்ள தடையற்ற உரிமையை நாம் வலியுறுத்த வேண்டும். ஒட்டுண்ணி வாழ்க்கையைக் கடிய வேண்டும். யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பது போன்ற ஏமாளித்தனமான, ஏமாற்றுத் தனமான முழக்கங்களைக் கைவிட வேண்டும். அனைத்துக்கும் மேலாக, காசுமீரத்துக்கு வழங்கப்பட்டிருக்கும் அரசியலமைப்புத் சட்டத்தின் 370 - ஆம் விதி அனைத்துத் தேசியங்களுக்கும் விரிவுபடுத்தப்பட வேண்டுமென்று நாம் போராட வேண்டும்.

வாழ்க தமிழகம்! வளர்க தமிழகத் தேசியம்!

Edited by தூயவன்

  • கருத்துக்கள உறவுகள்

4 - 5 தசாப்தங்கள் பழமையான ஈ வெ ராமசாமியின் உழுத்துப் போன திராவிடப் பேச்சுக்களின் மூலம் தம்மை விளம்பரப்படுத்த முயன்று கொண்டிருப்பவர்கள் விளக்(ங்)க வேண்டி பக்கங்களை கட்டுரை தொட்டுச் சென்றுள்ளது.

தகவலுக்கு நன்றி. :icon_idea:

Edited by nedukkalapoovan

1. பல ஆண்டுகாலம் பழமையான உழுத்துப்போன இந்து மதத்தை வைத்தே சிலர் தம்மை விளம்பரப்படுத்த முன்னிற்பதைக் காட்டிலும் அவர்கள் பறவாயில்லைப் போலும்.

2. இந்து மதத்தினதும் அதன் கருத்தியல் தளங்களினதும் போலித்தனங்களும் மக்கள்விரோதப் போக்கும் வெளிச்சம்போட்டுக் காட்டப்படுகின்ற போதெல்லாம், இந்து மதத்தை எதிர்ப்பவர்களை பெரியாரிய வாதிகளாகவோ அல்லது திராவிடக் கருத்துடையோராகவோ அல்லது வேற்று மதத்தினராகவோ அடையாளப்படுத்தி, அவை தொடர்பான விமர்சன ஆக்கங்களையோ அல்லது அவற்றைத் தாக்கி எழுதுவதும், அதனூடாக இந்து மதம் பற்றி எழுதுபவர்களை தாக்கலாம் என்று கருதுவதும் இங்கு வழமையான ஒன்றுதான். இதன்மூலம் இயலாமைகளும் பலவீனங்களும் வெளிப்படுகின்றன என்பதுவும் ஒருவருக்கும் புரியாததொன்றல்ல.

3. குமரிமைந்தனின் தமிழ்த்தேசியம் தொடர்பான ஆக்கம் தமிழகத்தின் பல்வேறு தளங்கள் தொடர்பான விமர்சனமாகவே விரிந்து செல்கிறது. அதில் தமிழ்த்தேசியம் என்பதன் அடிப்படையில் பெரியாரும், திராவிடர் கழகமும், திராவிடக் கட்சிகளும், கமூயுனிச இயக்கங்களும் இன்னும் பிற அமைப்புகளும் தலைவர்களும் விமர்சிக்கப் பட்டிருக்கிறார்கள். இதில் வியப்பதற்கும், கோபப்படுவதற்கும், சீண்டப்படுவதற்கும் எதுவும் இல்லை. பல்லிளித்து பரவசப்படுவதற்கும் எதுவுமில்லை. ஏனென்றால் விமர்சனத்துக்கு அப்பாற்பட்ட எதுவும் இல்லை. குமரிமைந்தனின் கட்டுரைக்கு எதிர்வினையை உரியவர்களே முன்வைத்திருப்பார்கள் அல்லது முன்வைப்பார்கள். இது விவாதமாக ஆக்கபூர்வமான பாதையில் தொடரும். தொடரவேண்டும். சிலரின் தெருச்சண்டையைப் போலல்லாமல்.

4. குமரிமைந்தனின் தமிழ்த்தேசியம் தொடர்பான ஏனைய கட்டுரைகளையும் வாசிப்பது நல்லது. அதேபோல் குமரிமைந்தனின் ஏனைய கட்டுரைகளையும் வாசிப்பது நல்லது. சேலை, பூனூல், பார்ப்பனர், பண்பாடு, தமிழர் வரலாறு போன்ற பல்வேறு தளங்களில் அவரின் கட்டுரைகள் விரிகின்றன. எனவே, ஒருமுறை அவற்றையும் வாசித்து கருத்தியல் வறிஞர்கள் தங்களின் கருத்தியல் தளத்தின் வரட்சியைப் போக்கிக்கொள்வது நல்லது.

Edited by இளைஞன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிற்சேர்க்கை - 1

திராவிட இயக்கம் ஒரு தமிழ்த் தேசிய இயக்கம் என்பது ஒரு மாயை. ஒரு காலகட்டத்தில் அது தமிழகத்தின் அரசியல் - பொருளியல் மீட்சிக்காகக் குரல் கொடுத்தது உண்மை தான். ஆனால் அதன் ஒட்டுமொத்த நடவடிக்கைகளை காய்தல் உவத்தலன்றி ஒரு மீள்பார்வையிட்டால் (மிகை நாடி மிக்க கொண்டால்) கிடைக்கும் விடை:

1. பெரியார் தமிழர்களின் உரிமை என்று சொன்னது பார்ப்பனர்களுக்கு எதிரானதேயொழிய நில எல்லைக்கு வெளியே இருந்து நம் மீது மேலாண்மையும் சுரண்டலும் நிகழ்த்துகிறவர்களுக்கு எதிரானதல்ல. எப்போதாவது தமிழக விடுதலை (இதைக் கூட பிரிவினை என்ற தவறான சொல்லால் தான் அவர்கள் குறிப்பிட்டனர், குறிப்பிடுகின்றனர். சரியான சொல்லைப் பயன்படுத்த வேண்டும் என்ற அளவுக்குக் கூட அவர்களுக்கு அதில் உண்மையான ஈடுபாடு இல்லை) பற்றிப் பேசினால் அது பார்ப்பன ஆதிக்கத்துக்கு எதிரான மிரட்டலாகத்தான் இருக்கும். நிலம், அதன் அடிப்படையிலான பொருளியல் அடிப்படையில்லாமல் இனம் என்ற அடிப்படையிலேயே திராவிடர்கழகம் இயங்கியதால் அதனை ஒரு தேசிய இயக்கம் என்பது தவறு. தமிழினம் என்ற திராவிட இயக்கத்தின் சொல்லாட்சியே இது நிலம் தழுவிய ஒரு தேசிய இயக்கம் அல்ல என்பதற்குச் சான்று கூறும்.

கிறித்துவர்கள் வீட்டிற்குச் சென்றால் "ஏசு கிறித்து இந்த வீட்டின் தலைவர்" என்பது போன்ற எழுத்துக்களை வாயிலில் பதித்திருப்பார்கள். முகம்மதியர்களின் வாயில்களில் அரபு எழுத்துக்கள் இருக்கும். சில இந்துக்களின் வாயிலில் "ஓம்" இருக்கும். அதுபோல் திராவிடர் கழகத்தவர் வீடுகளின் முகப்பில் ஒரு காலத்தில் "திராவிட நாடு திராவிடருக்கே" என்றும் பின்னர் "தமிழ்நாடு தமிழருக்கே" என்றும் சொற்களைப் பார்க்க முடிந்தது. இதுவும் நம்மை ஏமாற வைத்தது. இந்தச் சொற்றொடர்களின் உண்மையான பொருள் திராவிடர் அல்லது தமிழர் என்ற சொல் நில அடிப்படையில் அமைந்ததல்ல, இன அடிப்படையில் அமைந்தது என்பதாகும். ஆரியர் எனும் ஆரிய நாட்டை(ஆரிய வர்த்தத்தை)ச் சேர்ந்த அயலவர்களுக்கு எதிரான திராவிடர் அல்லது தமிழர்களைக் குறிக்கவில்லை. தமிழகத்தில் வாழ்ந்த, வாழ்ந்துவரும், தமிழகத்தைத் தாயகமாகக் கொண்ட, ஆனால் ஐரோப்பியரின் வரலாற்று வரைவுக் குளறுபடிகளினால் உலக வரலாற்றில் காலத்தின் கோலமாக இடம்பெற்றுவிட்ட ஆரிய இனத்தவரென்று தவறாகக் கருதப்படும் தமிழகப் பார்ப்பனர்க்கு எதிரானதாக அச்சொற்றொடர் அமைந்தது.

ஒரு தேசிய இயக்கத்தின் முகாமையான இயல்பு நிலம் சார்ந்து நின்று அந்த நிலத்தின் மேம்பாட்டில்தான் தம் வாழ்வையும் வளத்தையும் கொண்டவர்களும் அவ்வாறு நம்பிச் செயற்படுகிறவர்களுமாகிய மக்களைச் சிதறாமல் ஒன்று திரட்டுவதில் ஈடுபடுவதாகும். அத்தகைய ஒரு வலிய சூழல் திராவிடர் கழகம் உடைவதற்கு முன்பு உருவானது. அப்போது குமுகத்தின் பிற்போக்கு விசைகள் பிற்படுத்தப்பட்ட சாதிகளின் சில தலைவர்களின் மூலம் அறைகூவல்களை விடுத்தன. அன்றைய நிலையில் நம் சமுகத்தின் வரலாற்று வகைப்பட்ட இப்பிற்போக்கு விசைகளின் இறுதி முயற்சியான அதை எளிதில் முறியடிக்கும் வலிமை அன்றைய திராவிட இயக்கத்துக்கு இருந்தது. ஆனால் திராவிடர் கழகத்தின் கோழைத் தலைமை பின் வாங்கி எண்ணிக்கையிலும் வன்முறை எதிர்ப்பிலும் வலிமையற்றவர்களாகிய பார்ப்பனர்கள் பக்கம் கை காட்டிக் கொண்டு வரலாற்றின் ஒரு நல்வாய்ப்பைக் கைவிட்டுப் பெரும் இழப்புக்கு வழிகோலியது.

பின்னர் அதே திராவிடர் கழகம் அதே பிற்போக்கு விசைகளைத் தன்னுள் சேர்த்துக்கொண்டு தாழ்த்தப்பட்ட மக்கள் மீது முன்பு பார்ப்பனர்களும் மேல்சாதியினரும் பிற சாதியினர் மீது என்னென்ன ஒடுக்குமுறைகளைக் கையாண்டார்களோ அதே ஒடுக்குமுறைகளை இயக்கத்தினுள்ளும் நடத்தியது. அதன் விளைவாகத் தாழ்த்தப்பட்ட மக்கள் திராவிட இயக்கத்திலிருந்து மட்டுமல்ல தமிழக மண்ணிலிருந்தே அயற்பட்டுப் போனார்கள். அதன் அடையாளம் தான் தமிழகத்தின் மூலை முடுக்குகளிலெல்லாம் நிறுவப்பட்டுக்கொண்டிருக்கு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

4 - 5 தசாப்தங்கள் பழமையான ஈ வெ ராமசாமியின் உழுத்துப் போன திராவிடப் பேச்சுக்களின் மூலம் தம்மை விளம்பரப்படுத்த முயன்று கொண்டிருப்பவர்கள் விளக்க வேண்டி பக்கங்களை கட்டுரை தொட்டுச் சென்றுள்ளது.

தகவலுக்கு நன்றி. :icon_idea:

இந்தக் கட்டுரையை முதலில் இணைக்கின்றபோது, பெரிதாகப் பிரச்சனை தெரியவில்லை. ஆனால் ஒவ்வொரு பகுதியையும் பார்க்கின்றபோது, இன்னமும் இவர்களின் மீது வெறுப்பு அதிகமாகின்றது.

**குமரி மைநதனை பார்ப்பானி, அடிவருடி என்று திட்டி விவாதத்தை முடிப்பார்கள் என்று தான் முதலில் எதிர்பார்த்தேன். ஆனால் அவர் பார்ப்பானிகளைக் கூட விட்டு வைக்காமல் கடிந்திருப்பதன் மூலம், இவர்களுக்கு வழி கோலாமல் செய்திருக்கின்றார்.

**திராவிடப் பொய்களை உணர்ந்து, அதில் ஊறியிருந்த கண்ணதாசன், சிவாஜி கணேசன் போன்றவர்கள் வெளியேறியிருந்தது, குமரி மைந்தனின் கட்டுரைகளில் உள்ள உண்மைத்தன்மையைக் காட்டுகின்றது.

**யாழ்களத்தின் படித்த மேதாவிகள் என நினைத்துக் கொள்ளுபவர்கள், சம்பந்தமில்லாமல் இதற்குள்ளும் இந்து மதத்தை இழுத்து தலைப்பைத் திசை திருப்புவார்கள்.( அது தான் அத்தலைக்கனம் பிடித்த மேதாவிகளுக்குத் தெரியும்.) அவற்றைக் கண்டு கொள்ளாதீர்கள்

  • கருத்துக்கள உறவுகள்

1. பல ஆண்டுகாலம் பழமையான உழுத்துப்போன இந்து மதத்தை வைத்தே சிலர் தம்மை விளம்பரப்படுத்த முன்னிற்பதைக் காட்டிலும் அவர்கள் பறவாயில்லைப் போலும்.

உலகப் பொதுமறையான திருக்குறள் 2000 ஆண்டுகளுக்கும் மேலாகப் பழமையானது. இருந்தும் அது இன்றைய உலகுக்கும் செய்தி சொல்லத்தக்க கருத்துருவாக்கத்தளத்தைக் கொண்டிருக்கிறது. அதுபோலத்தான் இந்து தர்மமும்.

ஈ வெ ராமசாமி போன்றோரின் வெறும் உளறல்கள் போன்றதல்ல.. குறளும் இந்து தர்மமும்..! இந்து நாகரிகமாக இன்று உலகப் பல்கலைக்கழகங்கள் எங்கும் படிக்கப்படுகிறது. ஈ வெ ராமசாமியின் உளறல்களை தமிழ்நாட்டில் திண்ணைப் பள்ளிகள் கூட கற்பிப்பதில்லை.. ஆனால் சிலருக்கோ அவைதாம் பகுத்தறிவின் ஊற்று..! :icon_idea:

எமது கருத்துக்கள் இந்து தர்மத்தின் வழி மனித சமூக வாழ்வை மேம்படுத்துவதற்கான வழியைக் காட்டுவதுதானே தவிர.. மனிதனை விலங்கு நிலைக்கு இட்டுச் செல்லும் சிந்தனைகளை புரட்சி என்று காட்டி விதைப்பதல்ல. அறிவியலும் மெஞ்ஞானமும் ஆன்மீகமும் இணைந்த இந்து தர்மம் நிச்சயம் ஒரு மனித நாகரிகத்துக்கான தெளிவான அடித்தளத்தை இட்டிருப்பது நிதர்சனமானது. நவீன அறிவியலோடு இந்து தர்மமும் இணைகின்ற போது மனித வாழ்வு சிறப்புறும்.. அதைக் காட்டுவதுதான் எமது நோக்கமே தவிர.. விளம்பரமல்ல..! :D

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிற்சேர்க்கை - 2

இனி திராவிட முன்னேற்றக் கழகத்தையும் அதன் வழித்தோன்றல்களையும் பார்ப்போம்.

அண்ணாத்துரையும் அவரது தோழர்களும் வழித்தோன்றல்களும் அவ்வப்போது கூறும் ஒரு சொற்றொடர், "நாங்கள் திராவிடநாட்டுக் கோரிக்கையை விட்டுவிட்டாலும் அதற்கான காரணங்கள் இன்னும் நிலவுகின்றன" என்பது.

இந்தச் சொற்களை அன்று அண்ணாத்துரையும் இன்று அவரது தம்பிகளும் மேடைகளில் பேசும் பொழுது மக்கள் ஆரவாரமிட்டு தம் உள்ளக் கிளர்ச்சியை வெளிப்படுத்துவர்.

ஆனால் இச்சொற்றொடரின் உண்மையான பொருள் யாது?

திராவிட நாடு விடுதலை (அவர்கள் சொல்லில் பிரிவினை) கேட்பதற்கான காரணங்கள் அகலவில்லை, ஆனால் நாங்கள் எங்கள் சொந்த நலன்களுக்காக (இதனை அவர்கள் வெளிப்படையாகச் சொல்வார்கள் என்று எதிர்பார்க்க முடியுமா?) அக்கோரிக்கையைக் கைவிட்டுவிட்டோம் என்பதல்லவா?

இந்தச் சொற்றொடருக்காக மக்கள் கொதிப்படைந்திருக்க வேண்டும். "அட கயவாளிகளே! எங்களை இந்நாள்வரை ஏமாற்றி ஆதரவைப் பெற்றுக் கொண்டு இப்போது எங்களை நட்டாற்றில் விட்டதுமல்லாமல் பெருமை வேறு பேசுகிறீர்களே" என்று கேட்டிருக்க வேண்டும். ஏனோ இன்றுவரை எவரிடமிருந்தும் இந்தக் கேள்வி எழவில்லை. ஒருவேளை தேசியம் என்ற சரியான உணர்வு இன்னும் தமிழக மக்களிடம் உருவாக்கப்படாதது காரணமாக இருக்கலாம். அல்லது இந்த இயக்கத்தில் உண்மையான தேசிய உணர்வை ஊட்டத்தக்க ஆற்றல் உள்ள தலைவன் ஒருவன் இதுவரை உருவாகாதது காரணமாக இருக்கலாம். அல்லது தமிழகத்தில் ஓர் உண்மையான தேசியச் சிக்கலே இல்லாமலிருக்கலாம். ஆனால் தமிழகத்திலுள்ள மக்களின் உணர்வுக் காற்றை நுகரும் திறனுள்ள மனச்சாட்சியுள்ள எவரும் இங்கு ஒரு தேசியச் சிக்கல் இல்லை என்று கூறத் துணியமாட்டார்.

இவர்களின் இந்தக் கூற்றுக்கு இன்னொரு பக்கமும் உண்டு. "நாங்கள் எங்களை நம்பிய மக்களை நட்டாற்றில் விட்டு ஏமாற்றி வைத்திருக்கிறோம். அதற்குரிய எங்கள் பலனை நாங்கள் அடைவதில் குறுக்கிடாதீர். அப்படிக் குறுக்கிட்டால் அதன் விளைவுகளுக்கு நீங்கள் ஆளாக வேண்டியிருக்கும்" என்று தில்லியுடன் பகரம் பேசுவதற்கான எச்சரிக்கையாக இச்சொற்றொடார் பயன்பட்டது.

இவ்வாறு எச்சரிக்கை விடும் நிலையில் எந்தத் திராவிடத் தலைவரும் இல்லை என்பது தான் இன்றைய நிலை.

இந்திரா காந்தி ஆயுதப் படைகளை நிறுத்தி வைத்து ஒரேயொரு முறை ஆட்சியைத் கலைத்த உடனேயே இந்த மிரட்டல் உத்தி ஆவியாகிப்போய்விட்டது. தில்லித் தலைமையின் காலைப் பற்றிய கைகள் இன்னும் நகரவில்லை. மொரார்சி தேசாய் "இந்திரா காந்திக்குத் தஞ்சாவூர் பாராளுமன்றத் தொகுதியில் ஆதரவளிக்கப் போகிறாயா" என்ற ஒரே கேள்வியிலேயே ம.கோ. இராமச்சந்திரனின் அனைத்து நாடிகளும் ஒடுங்கிப்போய்விட்டன.

இன்று சுப்பிரமணியம்சாமி ஊழலைப் பற்றியும் ஆட்சிக் கலைப்பைப் பற்றியும் மிரட்டிக்கொண்டேயிருக்கிறார

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மனந்திறந்து... 1

தமிழ்த் தேசியம் கட்டுரைக்கு அச்சேறும் முன்பே பெரும் அதிர்வுகளை ஏற்படுத்திய விறுவிறுப்பான ஒரு வரலாற்றுப் பின்புலம் உண்டு.

ஏறக்குறைய 6 ஆண்டுகளுக்கு முன் உலகத் தமிழ் இளைஞர் பேரவையின் பொதுச் செயலாளர் திரு. இரா.சனார்த்தனம் அவர்கள் தினமணி நாளிதழ் வழியாக ஒரு வேண்டுகோள் விடுத்திருந்தார். அதில் சில தலைப்புகள் தந்து அத்தலைப்புகளில் கட்டுரை கேட்டிருந்தார். அவற்றுள் ஒரு தலைப்பு "தமிழ்த் தேசியம்" என்பது. அத்தலைப்பில் இக்கட்டுரையை எழுதி அவருக்கு விடுத்தேன். திரு.இரா. சனார்த்தனம் திராவிட இயக்கம் சார்ந்தவர். தி.மு.க.வின் உறுதியான பற்றாளர். அவருக்கு இக்கட்டுரை உவப்பாயிராது என்று எனக்குத் தெரியும். அதற்கேற்பவே இந்தக் கட்டுரை வந்து சேர்ந்தது குறித்துக்கூட அவரிடமிருந்து எந்தக் குறிப்பும் வரவில்லை.

வழக்கம் போல் இந்தக் கட்டுரையைப் படியெடுத்துச் சிலருக்கு விடுத்தேன். படி பெற்றவர்களில் வெங்காலூர் குணாவும் ஒருவர். எவரிடமிருந்தும் கட்டுரை பற்றிய கருத்து எதுவும் வரவில்லை. கட்டுரையை அச்சிட்டு வெளியிடும் விருப்பம் இருந்தாலும் நூலை உரிய முறையில் விற்பனை செய்து உண்மையான ஆர்வலர்களைச் சென்றடைய உதவும் வகையில் யாரும் கிடைக்காததால் அது நடைபெறவில்லை. இந்நிலையில் ஏறக்குறைய இரண்டாண்டுகளுக்குப் பின் குணாவின் திராவிடத்தால் வீழ்ந்தோம் நூற்படி வந்தது. பெரியாரின் திராவிடக் கோட்பாட்டைத் திறனாய்ந்து, தமிழக மக்களில் தமிழைத் தாய்மொழியாகக் கொள்ளாதவர்களைத் தமிழ்த் தேசியத்துக்கு எதிரிகளாகக் காட்டுவதே அந்நூலின் நோக்கமாக இருந்தது. இது தமிழ்த் தேசியம் கட்டுரையின் அடிப்படை அணுகலுக்கு நேர் எதிரானதாகும். இருப்பினும் பெரியாரைப் பற்றியும் அண்ணாத்துரை போன்றோர் பற்றியும் கட்டுரையில் உள்ள சில பகுதிகள் நூலில் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

குணாவின் நூல் தமிழன்பர்களிடையில் பரவலான ஈர்ப்பைப் பெறுவதில் தினமலர் நாளிதழ் பெரும் பங்காற்றியது. தமிழ், தமிழகம், தமிழக மக்கள் மீது பகையுணர்வு கொண்ட இந்த நாளிதழ் திராவிட - தமிழ் இயக்கத்தினுள்ளிருந்து வெளித்தோன்றிய இந்த முரண்பாட்டுக்கு நல்ல விளம்பரம் கொடுத்து மனநிறைவு கொண்டது. இவ்வாறு இந்த நூலால் திராவிட - தமிழ் வட்டாரங்களிடையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பெரியாரைப் பற்றிய திறனாய்வுகள் சிலருக்குக் கொதிப்பேற்றியது. அதன் விளைவாக குணா ஒரு பொய் வழக்கின் அடிப்படையில் "தடா" சிறையில் அடைக்கப்பட்டார். "தமிழ்ச் சான்றோர்" ஒருவர் குணாவைக் கொல்ல ஆளமர்த்தினார் என்று கூட அண்மையில் ஒரு பேச்சு அடிபட்டது.[/color] அதை நம்மால் நம்ப முடியவில்லை. அதே நேரத்தில் தமிழ்த் தேசியம் கட்டுரையிலிருந்து மேற்கொள்ளப்பட்ட பகுதிகளை அந்நூலில் படிக்கும் போது முதல் பார்வையில் அவை குணாவின் கூற்றுப் போல் தோன்றுகின்றன; எனவே குமரிமைந்தன் மேல் பாய வேண்டிய கொதிப்பு குணாவின் மீது பாய்ந்துவிட்டது என்று கருதுவாரும் உள்ளனர். எது எப்படியாயினும் பெரியார் தமிழ்த் தேசியத்தின் ஒப்பற்ற தலைவர் என்ற பொய்ப் படிமத்தில் விரிசல் ஏற்படச் செய்ததில் இந்தக் கட்டுரைக்கு முகாமையான பங்கு உண்டு.

இந்தச் சூழலில் 1998 ஆம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற பெரியாற்று நீருரிமை மீட்பு மாநாட்டில் நான் பேசி முடித்து இருக்கையில் அமர்ந்த போது அடுத்த இருக்கையில் அமர்ந்திருந்த திரு. சுப.வீரபாண்டியன் அவர்கள் என்னைப் பார்த்து "இவ்வளவு தெளிவாக இருக்கிறீர்களே; ஆனால் பெரியார் குறித்து மட்டும்...?" என்று கேட்டார். அதைப் பற்றி நாம் பேசலாம் என்று கூறினேன். நிகழ்ச்சி முடிந்த பின் பேசலாம் என்றார். இது நடந்தது நண்பகல் வேளையில். மாலை 6.00 மணிக்கு அவரைத் தேடியபோது அவர் 4.00 மணிக்கே சென்னை புறப்பட்டுச் சென்றுவிட்டதாக அறிந்தேன். பின்னரும் கூட எம் இயக்க இதழான பொருளியல் உரிமை தொடர்ந்து அவருக்கு விடப்பட்டுக்கொண்டிருக்கிறத

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மனந்திறந்து... 2

குமரி மாவட்டத்தில் எங்கள் ஊர் வட்டாரத்தில் திராவிடர் கழகத்தின் முன்னோடிகளில் என் தந்தையும் ஒருவர். அதனால் ஏறக்குறைய பத்து ஆண்டு அகவையிலிருந்தே (1949) விடுதலை, திராவிட நாடு போன்ற இதழ்களையும் பின்னால் தோன்றிய இதழ்களையும் பல நூல்களையும் படிக்கும் வாய்ப்பு எனக்கு ஏற்பட்டது. அவற்றில் வெளிப்பட்ட குறிக்கோள் என்னை இறுகப் பற்றிக்கொண்டது. சாதி, சமய வேறுபாடுகளற்ற, எவ்வித அடிமைத்தனத்துக்கும் ஆட்படாத, தாய் மொழியைப் பேணுகின்ற, பகுத்தறிவுள்ள - அதாவது அறிவியல் அணுகலைக் கொண்ட ஒரு தமிழ்க் குமுகம், அதே போன்று மாந்தநேயம் மிக்க ஓர் உலகம் ஆகியவற்றை உருவாக்குவது என்பது தான் அந்தக் குறிக்கோள். அதை எய்துவதற்காக திராவிட இயக்கம் முன்வைத்த கோட்பாடுகள் மீது நம்பிக்கையும் இருந்தது. அந்தக் கோட்பாடுகளைத் தாண்டியும் சில கருத்துகள் உருவாகிக் கொண்டிருந்தன. என் தந்தை திராவிடக் கழகத்தின் கொள்கைகளைப் பொது இடங்களில் பேசி ஊரில் பலரது வெறுப்புக்கும் பகைமைக்கும் ஆளாகியிருந்தார். ஆனால் அவர் மீது மதிப்பு வைத்திருந்த ஒரு குழு இளைய தலைமுறையினரிடையில் இருந்தது. நானும் என் பருவத்து நண்பர்களிடம் இக்கருத்துகள் பற்றிய கருத்தாடல்கள் செய்வேன். அவ்வாறே பள்ளி, கல்லூரிகளிலும். ஆனால் எனக்கு இயல்பான கூச்சத்தினால் மேடையேறியதோ இயக்கங்களில் பங்கு கொண்டதோ இல்லை. பணிபுரிந்த நாட்களிலும் இதே நடைமுறை தொடர்ந்தது. அத்துடன் தமிழ், தமிழகம், தமிழகப் பண்பாடு பற்றிய நூல்களையும் செய்திகளையும் தீராத் தவிப்போடு (தாகத்தோடு) படிப்பேன். அவ்வாறு கிடைத்த பல செய்திகள் இன்று மனதில் நிலைத்து நிற்கின்றன.

1957 திருச்சி மாநாட்டில் தி.மு.க. தேர்தலில் ஈடுபட முடிவு செய்த போது சிறு உறுத்தல் இருந்தாலும் மூத்த ஒருவர் சொன்ன விளக்கம் அதனை அகற்றியது. 1962இல் திராவிட நாடு பிரிவினைக் கொள்கையைக் கைவிடுவதாக அண்ணாத்துரை அறிவித்த போது அவர் மீதும் பிறர் மீதும் இருந்த அசைக்க முடியா நம்பிக்கையில் அது அவரது அரசியல் சூழ்திறன்(ராசதந்திரம்) என்று பலரையும் போலவே நானும் மகிழ்ந்தேன். ஆச்சாரியாருடனும் அவருக்கு எதிரிகளாகக் கருதப்பட்ட பொதுமைக் கட்சிகளுடனும் 1967இல் ஒரே நேரத்தில் கூட்டணி வைத்துக்கொண்ட போதும் அதே நம்பிக்கை இருந்தது. 1961இல் சம்பத் வெளியேறும் முன் வெளிப்பட்ட முரண்பாடுகள் மூலம் இறைமறுப்புக் கோட்பாடு, "திராவிட நாடு" விடுதலைக் கொள்கை உட்பட இயக்கத்தின் கொள்கைகள் கைகழுவப்படுவதற்கு எதிரான இயக்கம் உருவாகும் என்ற எதிர்பார்ப்பு இருந்தாலும் பின்னர் அதுவே பொய்மானாகிப் போன போது அண்ணாத்துரை வகையறாவிடம் மீண்டும் நம்பிக்கை ஏற்பட்டது.

1967இல் தி.மு.க. ஆட்சி அமைத்ததும் நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. இருமொழித் திட்டம் பற்றிய சட்டம், தமிழ்நாடு பெயர் மாற்றம், சீர்திருத்தத் திருமணங்களுக்குச் சட்ட இசைவளித்தது, பேருந்துகள் அரசுடைமையானது, மும்முனைத் திட்டம்(இன்றைய "மனுநீதி"த் திட்டத்துக்கு முன்னோடி), பரிசுச் சீட்டுத் திட்டம், படியரிசித் திட்டம், உலகத் தமிழ் மாநாடு என்று அனைத்துச் செயற்பாடுகளும் மிகப் பெரிய அருஞ்செயல்களாகத் தோன்றின. இந்தச் செய்திகளைப் படித்து மகிழ்வதற்காகவே தினமணி நாளிதழை வாங்கிப் படிக்கத் தொடங்கினேன்.

இதே காலகட்டத்தில் அறிமுகமான பொதுப்பணித்துறைப் பொறியாளர் ஒருவர் தென்மொழி இதழ் பற்றியும் பாவாணர் பற்றியும் பெருஞ்சித்திரனார் பற்றியும் எடுத்துரைத்தார். அப்போது சோவியத்துக்கு எதிராக வளர்ந்துகொண்டிருந்த மாவோயிய இயக்கத்திலும் அவர் தொடர்பு வைத்திருந்தார். அந்த இயக்கமும் மாவோவின் நூல்களும் தடைசெய்யப்பட்டிருந்தனவாக அவர் கூறினார். ஆனால் அவர் அறை மிசை(மேசை) மீது அந்த நூல்களை அவர் அடுக்கி வைத்திருப்பார். அவர் எவ்வளவோ எடுத்துக்கூறியும் திராவிடக் கருத்துகளின் விளைவாலும் 1962 சீனப் போரின் பாதிப்பாலும் அவற்றை நான் தொடவே இல்லை.

இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னரே தென்மொழியையும் பாவாணரின் நூல்களையும் படிக்கத் தொடங்கினேன். அவற்றைப் படிக்கப் படிக்க என்னுள் உருவான கருத்துகள் தாம், "ஆரியர்" என்று ஒரு "மனித இனம்" உலகில் இருந்ததே இல்லை என்பதும் சமற்கிருதம் ஒரு தனி மொழி அல்ல, தமிழிலிருந்து உருவானது தான் என்பதும் பார்ப்பனர்கள் இந்த மண்ணின் மக்கள் தாம் என்பதும். இதே காலகட்டத்தில் படித்த, அ.கி. நாயுடு என்பார் எழுதிய தொல்காப்பியர் காட்டும் தமிழர் சமுதாயம் என்ற நூலின் கருத்துகள் இணைந்து கடவுள்கள் வெறும் கற்பனைகள் அல்ல, உயிர் வாழ்ந்த பெருமக்களின் வழிபாட்டிலிருந்து தோன்றியவை தாம் என்ற கருத்து கருக்கொண்டது.

அண்ணாத்துரை இறந்து கருணாநிதி தலைமையேற்றுப் பதவிச் சண்டைகள் தொடங்கிய போதும் ம.கோ.இரா.வுக்கும் கருணாநிதிக்கும் உருவான பூசலின் போதும் இவர்களைப் பற்றிய தெளிவுகள் உருவாகத் தொடங்கின. அதே காலகட்டத்தில் நடுவண் அரசின் ஏற்றுமதி - இறக்குமதிச் செயற்பாடுகளை அலசிப் பார்க்கையில் சட்டத்தைக் கையிலெடுத்துக்கொண்ட ஒரு கடத்தல் கும்பலாகவே நடுவணரசு தோன்றியது. கடத்தல்காரர்களுக்கும் அரசுக்கும் இடையிலான மோதல் வெறும் தொழிற்போட்டிதான் என்பதும் உறுதியாகத் தெரிந்தது. அது போலவே மாநில அரசின் மக்கள் நலத் திட்டங்களும் வளர்ச்சித் திட்டங்களும் கட்டுப்பாடுகளும் ஊழலை நோக்கியவை என்ற ஐயப்பாடும் உறுதி பெற்று வந்தது. இந்த மனநிலையில் மார்க்சு, ஏங்கெல்சு, லெனின் போன்றோரின் எழுத்துகளைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அரைகுறையாக உருவாகியிருந்த பல கருத்துகள் இப்போது முழு வடிவம் பெற்றன; அவற்றுக்குக் கோட்பாட்டு வடிவமும் கிடைத்தது. இதே காலகட்டத்தில் தான் பெருஞ்சித்திரனார் பரிந்துரையின் பேரில் பாவாணரால் உலகத் தமிழ்க் கழக (உ..த.க.) நெல்லை மாவட்ட அமைப்பாளராக அமர்த்தப்பட்டேன். இது 1970களின் தொடக்கத்தில் நடைபெற்றது. இது தான் என் முதன் முதலான அமைப்பு சார்ந்த நடவடிக்கையாகும். இருப்பினும் கருணாநிதி பற்றி பெருஞ்சித்திரனார் வெளியிட்டு வந்த முன்னுக்குப் பின் முரணான கருத்துகளினால் அவரோடு சிறு கருத்து மோதலும் ஏற்பட்டது.

இத்தொடர்நிலைகளால் தமிழகத்தின் குமுகியல் வரலாற்றை நான் அறிந்த தமிழ் இலக்கியங்களிலிருந்தும் பிற நூல்களிலிருந்தும் குமுக நடைமுறைகளிலிருந்தும் மார்க்சியக் கோட்பாட்டினடிப்படையிலும் ஏங்கெல்சின் குடும்பம், தனிச் சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம் என்ற நூலின் கருத்துகளின் அடிப்படையிலும் எழுத எண்ணினேன். அப்பணி ஏறக்குறைய 1979 அளவில் முடிவுற்றது. பஃறுளி முதல் வையை வரை என்று பெயரிடப்பட்ட அந்த நூலை அச்சிட்டு வெளியிடச் சிலரை அணுகியதில் எந்தப் பயனும் கிட்டவில்லை. குமரிக் கண்டத்திலிருந்து தமிழர்களின் குமுக வரலாற்றை தொடங்கும் இந்த நூலின் அடிப்படைக் கருத்து ஆரியர் என்றொரு "இனம்" உலகில் என்றும் வாழ்ந்ததில்லை என்பதாகும். இந்நிலையில் பெரியாற்று அணையில் பணியாற்றும் போது (1980-81) உடன் பணியாற்றிய இந்திய மா.லெ. (மக்கள் போர்க்குழு) கட்சியைச் சேர்ந்த ஒருவர் மூலம் மதுரையிலுள்ள தோழர்கள் சிலரின் தொடர்பு ஏற்பட்டது. அவர்கள் தமிழ்த் தேசிய விடுதலையைப் "பாட்டாளியப் புரட்சி" மூலம் எய்தப் பாடுபட்டுக்கொண்டிருந்தனர். ஒன்றுக்கொன்று தொடர்புபடுத்தப்படாத(இது பாதுகாப்புக்காக) பல குழுக்களாக இவர்கள் இயங்கினர். அவர்கள் ஒரு கட்டத்தில் தமிழகத்தின் "புரட்சிகரப் பாட்டாளியர்" எவரென்பதைக் கண்டறியத் திணறிக்கொண்டிருந்தனர். பொதுமைக் கட்சி அறிக்கையைப் படித்திருந்த நான் மார்க்சின் மூலதனம் முதல் மடலத்தைப் படித்த போது நம் நாட்டை இன்றைய நிலையிலிருந்து அனைத்துத் துறைகளிலும் மேம்பட்ட நிலைக்குக் கொண்டு செல்வதற்குத் தேசிய முதலாளியப் புரட்சி தான் வழி என்ற முடிவுக்கு வந்திருந்தேன்; ஏனென்றால், நம் நாடு பொருளியலிலும் குமுக அமைப்பிலும் நிலக்கிழமைக் கட்டத்தில் உள்ளது. நிலகிழமைக்குப் பொருந்தாத வலிமையான நடுவண் அரசு இருப்பதற்குக் காரணம் அது வல்லரசுகளால் வழிநடத்தப்படுவதாகும். உலக வாணிகக் குழுக்களின் ஏவலாளாகிய அமெரிக்கா போன்றவற்றின் பின்னணி இல்லை என்றால் இந்தியா வெள்ளையர் வருகைக்கு முன்பிருந்தது போல் என்றோ எண்ணற்ற சிற்றரசுகளாகச் சிதறிப் போயிருக்கும். அந்த நிலக்கிழமைப் பொருளியலை அழித்து முதலாளியப் பொருளியல் உருவானால்தான் பிற துறைகளிலும் மேம்பாடு ஏற்படும். மார்க்சு கூறும் பாட்டாளி முதலாளியக் குமுகத்தில் தான் உருவாவான். அவனை இண்டு இடுக்குகளில் தேட வேண்டியதில்லை; அவனே பேருருக் கொண்டு முழுக் குமுகத்தையும் ஈர்த்து நிற்பான். இந்தக் கருத்தை முன்வைத்த போது அவர்களால் கோட்பாட்டடிப்படையில் மறுக்க முடியவில்லை. அதே நேரத்தில் தோழர்களிடையில் அவர்களே ஊட்டி வைத்திருந்த "பாட்டாளியக் கோட்பாட்டை" உடைக்கவும் முடியவில்லை. குழுவினரில் மிகப் பெரும்பாலோரும் திராவிட இயக்கத்திலிருந்து வந்திருந்ததால் ஒதுக்கீடு, பார்ப்பனர் எதிர்ப்பு என்ற நிலையில் வேறு உறைந்துநின்றனர். அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று எமக்கு ஆணையிடு என்று கேட்டு மிரட்டும் பூதத்தைப் போலத் தோழர்கள் கொடுத்த நெருக்கடியாலும் கோட்பாடு பற்றி முடிவெடுக்க முடியாத குழப்பத்தினாலும் அக்குழுக்களின் மூலவிசையாகச் செயற்பட்ட தோழர் மனச்சிதைவடைந்து பெரும் குடியராக மாறிய பின் அக்குழு சிதறி ஓடியது.

இத்தோழருக்கு வந்த அழைப்பின் பேரில் வெங்காலூரில் குணாவின் தமிழக ஆய்வரண் நடத்திய "தேனீக்கள் பட்டறை"யில் கலந்து கொண்டேன். இது 1980களின் தொடக்கத்தில். அதன் மூலம் குணாவின் அறிமுகம் கிடைத்தது. பின்னர் பஃறுளி முதல் வையை வரையின் கையெழுத்துப் படியை ஒளிப்படி எடுத்து அவருக்கு விடுத்தவுடனேயே அவர் அதை அச்சிடும் பணியைத் தொடங்கினார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மனந்திறந்து... 3

இதற்கிடையில் முகாமையான சில நிகழ்வுகள் இடம்பெற்றன. 1980-81இல் சென்னையில் பெருஞ்சித்திரனாரைச் சந்தித்தேன். அவரைப் பல வேளைகளில் இழிவான முறையில் ஏமாற்றியவரும் அவரது முயற்சிகளுக்கு எதிராகச் செயற்பட்டவருமான கருணாநிதிக்கு வேண்டுகோள்கள் வைப்பதும் தேர்தல்களின் போது அவருக்கு வாக்களிக்கத் தன் பற்றாளர்களுக்கு அழைப்பு விடுப்பதுமாகத் தன்னை நம்பித் தன் பின்னால் அணி திரண்டு நிற்கும் தொண்டர்களைக் கருணாநிதியின் வாலாக்குவது பற்றிக் குறை கூறி அவருக்கு நான் எழுதியிருந்த மடலுக்கு அவர் நேரடியாகத் தந்த விடை எனக்கு நிறைவு தரவில்லை. எனவே அவரோடுள்ள தொடர்பை அறுத்துக் கொண்டேன்.

1980ஆம் ஆண்டின் இறுதியில் ஒரு நண்பரின் அறிவுரையின் பேரில் அண்ணா தொழில் நுட்பக் கல்லூரி(இன்றைய அண்ணா பல்கலைக் கழகம்) மாணவர் ஒருவரைக் கல்லூரி விடுதியில் சந்தித்தேன். அவருடனிருந்த இரு இளைஞர்கள் துணையுடன் தமிழ்த் தேசியப் போராளிகள் என்று அறியப்பட்ட அல்லது தங்களை அறிவித்துக்கொண்ட பலரை அவர்களின் வீடுகளுக்குச் சென்று சந்தித்தேன். அரு.கோபாலன், விடுதலை இராசேந்திரன், அவர் துணைவியார் கோவி. சரசுவதி போன்றோர் அவர்களில் முகாமையானவர்கள். பின்னும் சில தடவைகள் சென்னை செல்லும் போது பேராசிரியர்கள் இளவரசு, பெரியார்தாசன் ஆகியவர்களைச் சந்தித்தேன். நண்பர் நா.அரணமுறுவலும் சில வேளைகளில் உடன்வந்துள்ளார். இந்தத் தேடல் சென்னைக்கு வெளியிலும் தொடர்ந்தது. இந்தச் சந்திப்புகளின் விளைவாக ஓருண்மை புரிந்தது. இத்தகையவர்களில் மிகப் பெரும்பான்மையினரும் வெறும்பேச்சு பேசிக் கொண்டு தாங்கள் எந்தத் தேசியத்துக்காகப் போராடுவதாகக் கூறிக்கொள்கிறார்களோ அத்தேசிய நலன்களின் எதிரிகளோடு இணக்கம் கண்டு அத்தேசியத்தை விற்றோ அடமானம் வைத்தோ கிடைக்கும் ஆதாயத்தில் பங்கு பெறுவதற்காகத் "தேசிய விடுதலை" என்று கூறி மிரட்டுகிறவர்கள் என்பதுவே அந்த உண்மை. அதிலும் "தமிழியக்கம்" பேசும் பேராசிரியர் ஒருவர் ஒரு முறை சந்தித்த போது மீண்டும் வரச் சொன்னார். சென்ற போது வீட்டிலிருந்துகொண்டே இல்லை என்றார்.

மதுரையிலிருக்கும்போது (1981-83) தனித்தமிழ் இயக்கத்தின் அரசியல் பின்னணி என்ற பேரா. கா.சிவத்தம்பியின் நூலைப் படிக்க வாய்த்தது. அதற்கு மறுப்பாக, கா.சிவத்தம்பியின் அரசியல் பின்னணி என்ற கட்டுரையை எழுதினேன். ஈழ மாணவர் அமைப்பு (ஈரோசு) சார்பில் தா.கோவேந்தன் அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த பொதுமை இதழில் அது தொடர்கட்டுரையாக வந்தது. இங்குள்ள பொதுமைக் கட்சியினர் நடத்திய நிகழ்ச்சிகளில் ஈழ மாணவர் அமைப்பினர் தங்கள் வெளியீடுகளை விற்பது அன்றிலிருந்து தடைசெய்யப்பட்டது. மதுரையில் இருக்கும்போது பேரா.கோ. கேசவனின் மண்ணும் மனித உறவுகளும் நூலைப் படிக்க வாய்த்த போது அதற்கு மறுப்பாக விளைப்பு உறவுகளும் குமுக உறவுகளும் என்ற கட்டுரையை பேயன் என்ற பெயரில் எழுதினேன்.

இந்தக் கட்டத்தில் குணாவின் தமிழக ஆய்வரணைச் சேர்ந்த பொன். பரமேசுவரன் சென்னையிலிருந்தார். அவரோடு தொடர்பு கொண்டு, தேசியச் சுரண்டலில் பல்வேறு துறையினர் பாதிக்கப்படுவதைச் சுட்டிக்காட்டி அவர் வாழ்ந்த பகுதியில் செறிந்திருந்த கைத்தறி நெசவாளர்களிடத்தில் பணிபுரிய வலியுறுத்தினேன். அதற்குத் தேவையான ஆள்வலிமையும் அமைப்பும் இருந்தாலும் அவர் போன்றோர் மாவோயியத்தின் பாட்டாளிய மற்றும் பண்பாட்டுப் புரட்சிக் கோட்பாடுகளைத் தாண்டி வர இயலாதிருந்தனர். இளைஞர்களை அறைகளிலிருத்திக் கலந்துரையாடல் என்ற எல்லையைத் தாண்டிக் களத்திலிறக்க ஏனோ விரும்பவில்லை. இந்த நிலையில் ஒரு புதிய தொடர்பு வந்தது. அது கோவை ஞானி மூலமாக வந்ததாகக் கூறப்பட்டது. ஆனால் எசு. என். நாகராசன் என்பவர் தான் இத்தொடர்புக்கு வழியமைத்தவர். ஞானி ஒரு வகையில் அவருக்கு மாணவர், அவ்வளவு தான். தொடர்பு கொண்டவர்கள் கேரள மாநிலத்தில் வலுப்பெற்றிருந்ததாக அவர்கள் கூறிக் கொண்ட நடுவண் மறுசீரமைப்புக் குழு என்ற மா.லெ., அதாவது நக்சலிய இயக்கத்தவரும் காம்ரேட் என்னும் மலையாள இதழின் ஆசிரியருமான "காம்ரேட்" கே.என். இராமச்சந்திரன் என்பவர். அவருடன் நான், நாகராசன், பொன். பரமேசுவரன், எசு.வி. இராசதுரை ஆகியோர் கலந்து உரையாடினோம். ந.ம.கு. இந்தியப் புரட்சியை இந்தியத் தேசியங்களின் விடுதலைப் புரட்சியின் திரட்சியாகக் காண்பதாகவும் அந்த அடிப்படையில் தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தை நடத்தத் தாங்கள் ஒத்துழைப்பதாகவும் இராமச்சந்திரன் கூறினார். தமிழகத்தில் திராவிட இயக்கத்தின் பின்னணியில் தேசிய விடுதலை ஆர்வம் உருவாகியுள்ளது; கேரளத்தில் இது எவ்வாறு தோன்றியது என்று கேட்டோம்.

கேரளத்தில் தாங்கள் கள ஆய்வு செய்த போது அங்கு நிலவும் பொருளியல் வளர்ச்சிநிலைக்குப் பொருந்தாத, அதனை மிஞ்சிய பண்பாட்டு நிலை, அதாவது பாட்டாளிய இயக்க வளர்ச்சி நிகழ்ந்திருப்பதைக் கண்டதாகவும் அதைத் தடம்பிடித்த போது தேசியங்களை நடுவணரசு சுரண்டுவதால் பொருளியல் வளர்ச்சி தடைப்படுவதைக் கண்டதாகவும் அதிலிருந்து இந்த முடிவை எய்தியதாகவும் கூறினார். எனவே தமிழகத் தேசிய விசைகளோடு ந.ம.கு. ஓர் அணியமைத்துச் செயற்படுவதென்று அக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. மார்க்சியம் இன்று என்ற பெயரில் ஓர் இதழ் வெளியிடுவதெனவும் அதற்கு எசு.வி.இராசதுரை ஆசிரியராகச் செயற்படுவதெனவும் முடிவு செய்யப்பட்டது. அங்கிருந்து பெரியவர் வே.ஆனைமுத்து அவர்களைச் சென்று சந்தித்து அவரது பெரியார் சமவுரிமைக் கழகத்தையும் இந்த அணியில் இணைத்துச் சில முழக்கங்களை அவரது அச்சகத்திலேயே அச்சிட்டுப் பிரிந்தோம். அடுத்து ஒரு கூட்டம் கல்பாக்கத்தில் நடந்தது. அதில் கேரளத்தைச் சேர்ந்த வேணு என்பவர் கலந்து கொண்டார். இவர் ந.ம.கு.வில் கே.என். இராமச்சந்திரனுக்கு மேல்நிலையில் உள்ளவர் என்று கூறப்பட்டது. அக்கூட்டத்தில் இந்திய அளவில் ஓர் அமைப்பை உருவாக்குவதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஓர் அனைந்திந்தியத் தலைமையின் கீழ் அனைத்துத் தேசிய அமைப்புகளும் செயற்பட வேண்டும் என்ற கருத்தை வேணுவும் பிறரும் முன்வைத்தனர். நான் அதை ஏற்கவில்லை. ஒவ்வொரு தேசிய அமைப்பிலிருந்தும் இரண்டு பேராளர்கள் மட்டுமே இந்திய அமைப்பின் உறுப்பினர்களாக இருக்க வேண்டும்; அவர்கள் தேசிய அமைப்புகளின் கருத்தை இந்திய அமைப்பில் எடுத்துச் சொல்வோராகவும் இந்திய அமைப்பு மேற்கொள்ளும் முடிவுகளைத் தேசிய அமைப்புகளிடம் கூறி விளக்குவோராகவும் இருக்க வேண்டும்; அவற்றை ஏற்பதோ மறுப்பதோ தேசிய அமைப்புகளின் உரிமையாயிருக்க வேண்டும்; இந்தப் பேராளர்கள் உட்பட தேசிய அமைப்புகளின் உறுப்பினர் எவரையும் இந்திய அமைப்பு கட்டுப்படுத்தக் கூடாது என்ற கருத்துகளை நானும் மதுரைத் தோழரும் முன்வைத்தோம். இந்திய அமைப்புக்கு முழு அதிகாரம் வேண்டும்; இல்லையென்றால் அது தன் ஒருங்கிணைப்புப் பணியைச் செய்ய முடியாது என்றனர். இந்தியாவிலுள்ள தேசியங்கள் வளர்ச்சி நிலையில் தமக்குள் பெரும் ஏற்றத்தாழ்வுகளைக் கொண்டுள்ளன; எனவே முழு அதிகாரமுள்ள அமைப்பு ஒரே நேரத்தில் ஒரே வகையான நடவடிக்கையை எடுத்தால் இப்போது போல் ஒன்றிரண்டு தேசியங்கள் பிற தேசியங்கள் மீது ஆதிக்கம் செலுத்தும் நிலை வரலாம்; அதே நேரத்தில் தளர்வான ஓர் இந்திய அமைப்பு இருந்தால் பின்தங்கிய தேசியங்களில் வளர்ச்சியை ஊக்கும் வழிகாட்டல்களை நடுவண் அமைப்பு மூலமாக மேற்கொள்வதற்கான ஒருங்கிணைப்பைப் பெற முடியும் என்று நாங்கள் வாதிட்டோம். நாங்கள் இன்றியே தமிழக ந.ம.கு. அமைக்கப்பட்டது. கூட்டத்தின் இறுதியில், நாம் இங்கிருந்து கலைந்து சென்று களத்தில் மக்களை, அவர்களில் எந்த வகுப்பினரை, எந்தக் குறிக்கோள்களை, முழக்கங்களை முன்வைத்து அணுகுவது என்பது குறித்த "செயல்திட்டம்" வேண்டும் என்று கேட்டேன். கூட்டத்தை நெறிப்படுத்திய எசு.வி. இராசதுரை, "மார்க்சியப் பொருளில்", "செயல்திட்டம்" என்பது அரசியல் கட்சிகள் வெளியிடும் தேர்தல் அறிக்கையைப் போல் வாக்குறுதிகளின் ஒரு பட்டியல்தான் என்பது போல் பொருள் கூறி நழுவ முயன்றார். "செயல்திட்டம்" என்ற பெயர் பொருந்தாதென்றால் வேறு பெயர் வைத்துக்கொள்ளுங்கள்; ஆனால் இங்கிருந்து செல்வோர் தொடர்ந்து என்ன செய்ய வேண்டும் என்பதைக் கூறுங்கள் என்று கேட்டதற்கு இறுதி வரை விடை கிடைக்கவில்லை. எனவே இதுவும் அனைவரையும் அறைகளுக்குள் அடைத்துவைத்துக் கலந்துரையாடுவதைத் தாண்டிச்செல்ல மறுப்பது என்ற வகையிலேயே அமைந்திருந்தது.

அதன்பிறகு, நக்சலிய இயக்கத்தில் செயற்பட்ட போது வெடிகுண்டு செய்தார் என்ற குற்றச் சாட்டில் மரண தண்டனை பெற்றவரும் பொது மக்கள் குடியுரிமை ஒன்றியம்(பி.யு.சி.எல்.)[1] என்ற அமைப்பின் முயற்சிகளால் பிணையில் வெளியில் வந்தவருமான பாவலர் கலியபெருமாள் இப்போது தமிழ்த் தேசிய விடுதலையை ஏற்றுக்கொண்டு அதற்காகப் போராட இயக்கம் நடத்தப் போவதாகவும் அதை அறிவிக்கப் பெண்ணாடத்தில் ஒரு கூட்டம் நடக்கவிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. இதில் தமிழகத்தின் எல்லாப் பகுதிகளிலுமிருந்து "தமிழ் உணர்வாளர்களும்" "தமிழ்த் தேசிய உணர்வாளர்களும்" பெரும் எண்ணிக்கையில் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டமே ஓர் ஏமாற்று என்று அதில் உரையாற்ற வந்திருந்த குணா சண்டையிட்டு வெளியேறினார். கலியபெருமாள், தமிழரசன் முரண்பாடு தோன்றி அவர்கள் பின்னர் பிரிந்தனர். கலியபெருமாள் பிணையில் வந்ததற்கும் கூட்டம் நடந்ததற்கும் முயற்சி எடுத்தவர் இராசதுரை தான் என்று கூறப்பட்டது.

இதற்கிடையில் மார்க்சியம் இன்று இரண்டு மூன்று இதழ்கள் வந்திருந்தன. அடுத்து தனக்கு அமெரிக்காவிலிருந்து ஓர் ஆய்வுத் திட்டம் கிடைத்திருப்பதாகவும் அதனால் தான் தொடர்ந்து இதழின் ஆசிரியர் பணியைப் பார்க்க முடியாது என்றும் கூறி இராசதுரை விலகிவிட்டார் என்று கூறப்பட்டது. அதன் பிறகு ஒரேயொரு இதழ் வெளிவந்ததாக நினைவு.

நான் எழுதியிருந்த விளைப்பு உறவுகளும் குமுக உறவுகளும் என்ற கட்டுரையை மார்க்சியம் இன்று இதழில் வெளியிட தோழர் பொன்.பரமேசுவரன் மூலம் குணா முயன்றபோது அது மறுக்கப்பட்டதால் அதனை அவரே தன் தமிழக ஆய்வரண் மூலமாக வெளியிட்டார் என்பதை ஓர் இடைக்குறிப்பாகக் கூறுகிறேன்.

நான் அறிந்த வரை இராசதுரை காசுக்காக எழுதுபவர். மார்க்சியம் என்ற பெயரில் அதன் எதிர்ப்புக் கோட்பாடுகளான இருத்தலியத்தையும் அயலாதலை(அந்நியமாதல்)யும் எழுதியவர். பெரியார் வாழ்ந்த காலத்தில் அவரது கோட்பாடுகளை எள்ளி நகையாடியவர். [b]இன்று பெரியாரைக் கடவுளாக்குவதற்காகத் தொடர்ந்து நூல்களை எழுதிக்கொண்டிருக்கிறார். தமிழகத்துக்கு உள்ளிலும் வெளியிலும் பெரியாருக்கு ஒரு கடவுள் படிமம் கொடுப்பதால் பல வகைகளில் ஆதாயம் பெறும் குழுக்கள் உள்ளன. குறிப்பாகப் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் வாணிக வல்லரசியங்களுக்கும் தமிழக அறிவாளிகளின் சிந்தனைகளைப் பொருளியல் சுரண்டல்களிலிருந்து திருப்பவும் ஒதுக்கீட்டு அரசியலாருக்கு வலிமை சேர்க்கவும் இது தேவையாகிறது. இந்திய விடுதலை, தமிழ் மேம்பாடு பற்றிய முயற்சிகளில் அடித்தள மக்களின் பணிகளை உலகுக்கு எடுத்துரைக்கும் ஆர்வம் அவரிடம் வெளிப்பட்டாலும் கூலிக்கு எழுதும் பண்பு அதை மீறி நிற்கிறது என்பது என் கணிப்பாகும். அதோடு இவரும் இவர் போன்று கோவை ஞானி, அ.மார்க்சு போன்றோரும் அமைப்புகள், நிறுவனங்கள், கட்சிகள், இயக்கங்கள் ஆகியவற்றுக்கு எதிரானவர்கள். கட்சி என்று ஒன்றிருந்தால் அதில் அதிகாரமும் ஆதிக்கமும் உருவாகிவிடும் என்று கூறுபவர்கள். கருத்து(பிரச்சாரம்) இல்லாத இலக்கியம், கட்சி இல்லாத அரசியல், இயங்கியல் இல்லாத மார்க்சியம் (அத்துடன் கரு இல்லாத குழந்தை என்ற ஒன்றையும் நாம் சேர்த்துக் கொள்ளலாம்) பற்றியெல்லாம் கூறுவார்கள். கரு என்ற ஒன்றே கிடையாது, அனைத்தும் உருவெளித் தோற்றம், மாயை, பொய்ம்மை என்பது இவர்கள் வலியுறுத்தும் சிந்தனை. கரு என்ற ஒன்று இல்லை என்பார் அ.மார்க்சு; இந்த நொடி தான் உண்மை, நேற்று, நாளை என்ற தொடர்ச்சியெல்லாம் கிடையாது என்பார் இராசதுரை. நுணுகிப் பார்த்தால் நேற்று என்பது கடந்து போன உண்மை, நாளை என்பது நாம் எதிர்பார்த்துக் காத்து நிற்கும் வாய்ப்பு, இந்த நொடி என்பது தான் சொல்லி முடிப்பதற்குள் கடந்து சென்றுவிடும் "மாயை", ஆனால் இந்த "மாயை" தான் நாம் நேரடியாகப் புலனுணரும் உண்மை, நேற்றையும், நாளையையும் இணைக்கும் பாலம். நம் அறிதல் பிழைகளினால் ஏற்படும் தவறுகளைக் காட்டி இயற்கையையும் உலகையும் வாழ்வையும் காலத்தையும் பொய் என்று கூறும் தவற்றைச் செய்கிறார்கள் இவர்கள். நான் எழுதி தாராமதி இதழில் தொடராக வந்த மார்க்சியம் எனும் கட்டுரையைப் பற்றிக் கருத்துக் கூறுகையில் "இயங்கியல் விளக்கம் நன்றாக இருக்கிறது; ஆனால் அதை நான் மார்க்சியம் என்று ஏற்றுக்கொள்ள முடியாது" என்றார் ஞானி. ஆக, இயங்கியல் இல்லாத மார்க்சியம் அவருடையது. ஆதிசங்கரரின் இரண்டன்மையியத்திலிருந்து (அத்துவைத்திலிருந்து) தான் மார்க்சியத்தைப் புரிந்துகொண்டதாக அவர் கூறுகிறார். ஆதிசங்கரர் உலகில் அனைத்துமே மாயை, பொய்த்தோற்றம், உண்மையென்று எதுவும் கிடையாது என்றவர். இந்தக் கோட்பாட்டிலிருந்து மார்க்சியத்தைப் பார்ப்பதாகக் கூறும் ஞானியை ஒரு மார்க்சியராகத் தமிழகப் படிப்பாளிகள் ஏற்றுக்கொண்டது ஒரு விந்தைதான். தமிழகத்தில் இவையெல்லாம் விந்தையல்ல என்கிறீர்களா? இந்த "மாயாவாதி" களுக்கு ஏதோவொரு வகையில் வெளிவிசைகளின் தொடர்பும் இருக்கிறது. ஆனால் நிகழ்காலத் தமிழக வரலாற்றில் தமிழ்த் தேசியம் என்ற அரங்குக்குள் இவர்கள் புகுந்து சில காலமாயினும் ஆட்சி செலுத்தியிருக்கிறார்கள், செலுத்துகிறார்கள்.

ந.ம.கு.வில் ஒரு "புரட்சிகர மாற்றம்" வந்தது. கேரள, அதாவது தலைமை அமைப்பில் வேணுவுக்கும் கே.என்.இராமச்சந்திரனுக்கும் தனிப்பட்ட ஏதோ பகைமையால் கே.என். இராமச்சந்திரன் பிரிந்தார். அவருடன் தமிழகக் குழுவும் விலகியது. . இப்பிளவுக்கு இராமச்சந்திரன் (நாகராசனும் சேர்ந்து) கூறிய காரணம், தேசியங்களின் விடுதலைப் புரட்சிகளின் தொகுப்பே இந்தியப் புரட்சி என்ற நிலைப்பாடு "மக்களிடையிலிருந்து உருவாகவில்லை"யாம் (இதுவரை அது உறைக்கவில்லையா?); வேணு போன்றவர்களால் "மேலிருந்து திணிக்கப்பட்டதா"ம்; எனவே அது "மக்களாட்சிக் கோட்பாட்டுக்கு எதிரானதா"ம். அவ்வாறு பிரிந்தவர்கள் ஓர் அனைந்திந்நிய "புரட்சிகரப்" பொதுமை இயக்கத்தோடு (இவர்கள் சிவப்பு விண்மீன் என்றொரு ஆங்கில இதழ் நடத்துகின்றனர். அவ்விதழின் பெயரில் அவர்கள் அழைக்கப்படுவது வழக்கம்) இணைந்தனர் இவர்களுக்குத் தேசியங்களின் விடுதலை என்பதில் உடன்பாடு கிடையாது; ஆனால் "மக்களாட்சிக் கோட்பாடுகளின்படி" இயங்குபவர்கள் என்று எசு.என். நாகராசன் "வழிகாட்டினார்". ஆக, நாகராசனுக்கு மார்க்சு, ஏங்கல்சு, லெனின், மாவோ போன்ற மார்க்சியத் தலைவர்களும் அந்த வட்டத்துக்கு வெளியில் உலகில் தோன்றிய தலைவர்களும் அவர்கள் மக்களிடம் கேட்டுக்கொண்டு தங்கள் கருத்துகளை முன்வைக்கவில்லை என்ற அடிப்படையில் ஒதுக்கத்தக்கவர்கள். இவ்வாறு வெவ்வேறு களங்களிலிருந்து "தமிழ்த் தேசிய விசை"களில் சிலரை இழுத்துச் சென்று நட்டாற்றில் விட்டாயிற்று. இந்த இயக்க நடைமுறைகளில் நாகராசனின் தலைமையை நம்பி முனைப்பாகச் செயற்பட்ட நேர்மையும் தூய்மையும் கடும் உழைப்பும் ஊக்கமும் நிறைந்த தோழர் பொன்.பரமேசுவரன் தான் நம்பிய பாட்டாளியக் கோட்பாட்டினால் தன் வேலையை இழந்து வயிற்றுப் பிழைப்புக்காக அரபு நாடுகளுக்குச் சென்றுவிட்டார்.

நானறிந்த வரை எசு.என்.நாகராசன் அதன் பிறகு எந்தச் செயற்பாட்டிலும் ஈடுபடவில்லை. இனி அழிப்பதற்கு உருப்படியான தமிழ்த் தேசிய விசை எதுவுமில்லை என்று மனம் நிறைந்திருக்குக் கூடும். இவர் மாவோவைக் கடவுளாக வணங்குபவர். நாம் இதுவரை குறிப்பிட்ட "மார்க்சியர்" அனைவரும் மாவோ வழிபாட்டினர் தாம் என்றாலும் இவர் தான் தலைமைப் பூசாரி. மாவோவைத் திருமாலின் (எத்தனையாவது என்று சொல்ல முடியவில்லை; ஏசுவையும் முகமது நபியையும் கூடத் தோற்றரவுகள் என்று கூறிக் கொள்கின்றனர்) தோற்றரவு என்று கருதும் வீர மாலியர்(வைணவர்). அதே நேரத்தில் தமிழ்த் தேசிய விசைகளைக் கெல்லியெடுத்து அழித்து ஊழித் தாண்டவமாடிய சிவன். இந்தியப் பொதுமை இயக்கத்தில் தேசியங்களின் விடுதலையை முன்வைத்து பொதுமை (மார்க்சியம்), அதாவது இடங்கைப் பொதுமைக் கட்சி பிரிந்து தனியாக வந்ததற்குத் தானே காரணம் என்பவர். நக்சலிய இயக்கத்தினுள்ளும் தேசியங்களின் விடுதலைக் கோட்பாட்டைப் புகுத்தியவன் தானே என்று பெருமையடித்துக் கொண்டவர். இவை உண்மையாக இருந்தால் தேசிய விசைகளை ஏமாற்றி ஈர்த்தெடுத்து அழிப்பது தான் அவரது உள்நோக்கம் என்பது இப்போது புரிந்திருக்கும்.

"மார்க்சியர்"களின் அடுத்துக்கெடுக்கும் பணிக்கு இன்னொரு சான்று: நான் மேலே குறிப்பிட்ட பெரியாற்று அணையில் பணிபுரிந்த நண்பரைப் பற்றி நெல்லைப் பகுதி நண்பர் ஒருவர் கூறியது. அவர் நெல்லையில் பணியாற்றிய போது அங்குள்ள தி.க., தி.மு.க., தனித்தமிழ் இயக்க இளைஞர்களை அணுகி தங்கள் இயக்கம் (இந்திய மா.லெ.இயக்கம்-மக்கள் போர்க்குழு) தமிழ்த் தேசிய விடுதலையை ஏற்றுக்கொள்வதாகவும் பெரியாரின் பங்களிப்பை, தனித்தமிழ் இயக்கக் கோட்பாடுகளை ஏற்றுக்கொள்வதாகவும் இரண்டாண்டுகள் நம்பவைத்திருக்கிறார். இறுதியில், தமிழக மக்களின் எதிரி தில்லி அரசு, அதன் பின்னணியில் சோவியத்து, அமெரிக்கா போன்ற வல்லரசுகள் (அவற்றுள் சோவியத்து தான் உலக மக்களின் முதல் எதிரி!) நிற்கின்றன; இந்த மாபெரும் விசைகளின் படைகளை எதிர்த்துப் போரிட வேண்டுமாயின் தமிழகத்தை மட்டுமே களனாகக்கொண்ட இயக்கத்தால் முடியாது; எனவே ஓர் இந்திய அமைப்பினுள் நீங்கள் வர வேண்டும் என்றிருக்கிறார். பெரும்பாலோர் அவரை விட்டு விலகிவிட்டனர்.

இவ்வாறு "மார்க்சிய"க் கட்சிகள் அல்லது பொதுமை என்ற சொல்லை அடைமொழியாகக் கொண்ட கட்சிகள், அமைப்புகள், இயக்கங்கள் அனைத்தும் தமிழ்த் தேசியத்தை அடுத்துக் கெடுப்பவையாக, அணைத்து அழிப்பவையாகவே உள்ளன.

அடிக்குறிப்பு:

[1] அமெரிக்க உளவு முகவாண்மையின் உருவாக்கமான மாவோயிய முனைப்பியர்கள் வெடிகுண்டு போன்ற ஆயுதங்களைச் செய்யும்போதோ கொலைகளைச் செய்தோ பிடிபட்டுத் தண்டனையடைந்து சிறையிலிருக்கும்போது அவர்களை அணுகி "தமிழ்த் தேசியம்" புகட்டி மன்னிப்பு கேட்கவைத்து பிணையில் கொண்டுவந்து அவர்களை "தமிழ்த் தேசிய மறவர்"களாக உலவவிடுவது அதே உளவு முகவாண்மையின் இன்னொரு படைப்பான பொ.ம.கு.ஆ. என்பது குறிப்பிடத்தக்கது. எ-டு. கலியபெருமாள், தியாகு போன்றோர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.