Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏழாம் உலகம்-ஜெயமோகன் ஒரு பார்வை

Featured Replies

நாம் வாழும் உலகுக்கு அடியில் வெகு ஆழத்தில் உள்ள இன்னொரு உலகம், குரூரத்தால், வலியால், சிறுமையால் எழுதப்பட்டது இது, மானுடம் என்ற மகத்தான சொல்லின் நிழல், ஒரு கோணத்தில் நமது நமது அனைத்து செயல்பாடுகளையும் மௌனமாக அடிக்கோடிடும் கருமை.

சரளமும் நுட்பமும் கொண்ட மொழியில் நேரடியாகச் சொல்லப்படும் இந்நாவல் , நம் வாழ்வு குறித்தும் நம் பண்பாடு குறித்தும் மிக அந்தரங்கமாக நாம் எழுப்பிக்கொள்ளச் சாத்தியமான எல்லா வினாக்களையும் நைச்சியமாகத் தூண்டக்கூடியது.

இதை படிக்கும் நாம் தான் எவ்வளவு பாதுகாப்பாக இருக்கிறோம்? என நிச்சயம் உணரவைக்கும். தப்பித் தவறி இந்த இழி நிலை நமக்கு வந்திருந்தால்? நம் உறவினருக்கோ, நண்பருக்கோ ஏற்பட்டிருந்தால்? ஐயகோ!!!!

ஏழாம் உலகம்- ஜெயமோகன் தமிழினி வெளியீடு,

170 ருபாய் கொடுத்து நாவல் பிரியர்கள் வாங்கி படிக்க ஏற்ற தரமான ஒன்று, தமிழின் மிக அருமையான டார்க் ஹ்யூமர் படைப்பு என இதை மார்த்தட்டி சொல்லிக்கொள்வேன், நாவல் முழுக்க படித்து முடிக்க 2 நாள் பிடிக்கும், (ஊன்றிப்போய் ,உள் வாங்கி படிக்க)நான் கடவுள் படம் பார்த்த மற்றும் பார்க்காதவர்கள் யார் படித்தாலும் கண்டிப்பாக இதைத்தான் சிலாகிப்பர், [நான் இன்னும் பார்க்கவில்லை ,படம் இந்த கதையை அப்படியே பிரதிபலிக்குமா ? என்பது சந்தேகமே]

இது நம்மை சுற்றி நடக்கும் அபாயகரமான , அருவருப்பான, பணத்தாசை ,மற்றும் காம வெறி பிடித்த,சாதாரண மனிதர்கள் போல இருக்கும்,பசும்தோல் போர்த்திய புலிகளின் கதை, நாவல் முழுக்க நிரம்பி வழியும் குரூரம் நம் அன்றாட வாழ்வின் யதார்த்த நிஜம், இதை படித்து முடித்த போது கனத்தது என் மனது. நாம் ஒரு கையால் ஆகாத கோழைகள் என்று, நாவல் முழுக்க பின் நவீனத்துவ பாணியில், தனக்கு பிடித்த வட்டார மொழியின் செரிவுடன் பிண்ணிப் பிணைந்திருக்கிறார் ஆசிரியர், கதை நாகராஜா கோவிலில் நடந்தாலும், பழனியில் நடந்தாலும், நாகர் கோவிலில் நடந்தாலும், நாமும் அங்கேயே நாவலில் சுற்றி வருவது போல மாற்றி விட்டார்,

வட்டார மொழி முதலில் நமக்கு பிடிபட மறுத்தாலும் நாவலின் குரூரமும், அவலமும்,கதாபாத்திரங்களின், நேர்த்தியான பங்களிப்பும் அதை மறக்கடிக்கிறது. பழகி விடுகிறது. சாப்பிடக்கூட புத்தகத்தை கீழே வைக்கத் தோன்றாது. கிறங்கடிக்கும் சிலேடைகள் ரிவர்ஸில் போய் படிக்க வைக்கும் என்பது திண்ணம்.

நாவலின் கடைசி பக்கங்களில் அகராதி வேறு இருப்பதால் ஒன்றும் பிரச்சனையில்லை. இதில் வரும் பண்டாரம் என்னும் பாத்திரம் ஒரு கேவலமான பிழைப்பை பிழைப்பவர், 20,30 குறைபிறவி பிச்சைக்காரர்களை (உருப்படிகள்) வைத்துக்கொண்டு தன் பணத்தேவைக் கேற்ப வாங்கியும், விற்றும் வரும் இழிபிறவி, அவருக்கு துணையாக உருப்படிகளை தொட்டு தூக்கி, மலம் கழிக்க வைத்து, தீனி வாங்கி போட்டு,காவல் இருந்து, சில்லறைகளை வசூலித்து , சேர்ந்ததும் பண்டாரத்திடம் கொடுத்து, உருப்படிகளை திருவிழா சமயத்தில் மலை மேல் கொண்டு பிச்சை எடுக்க போடும் பெருமாள்,குமரேசன்,வண்டி மலை,சிண்டன் நாயர், என பாத்திர படைப்பு படு பயங்கரம், இவனுங்க கண்ணில் நாமோ ? நம் குழந்தைகளோ ? பட்டே விடக்கூடாது என வேண்ட வைக்கும்.

பண்டாரத்தின் மனைவியாக ஏக்கியம்மை, தன் கணவன் தொழிலில் தானும் ஐக்கியமாகி விட்ட ஒருத்தி, அவளின் ஒரே குறிக்கோள், மகள்களின் திருமணம், கணவனுக்கு பக்க பலம், கணவனின் வேறு பெண்களுடனான உடல்ரீதியான தவறுகளை கண்டும் காணமல் போகும் ரகம், அவளின் ஒரே குறி பொன்னுருக்குவது,திருமண வயதில் உள்ள பெண்களுக்கு தரம் பார்ப்பது,

பண்டாரத்தின் மூத்த பெண் வடிவம்மை சுயநலம் பிடித்த பிறவி, இரண்டாம் பெண் அடங்காப்பிடாரி, வாயாடி , மூன்றாம் பெண் எந்நேரமும் தூங்கி வழியும் ரகம், (தன் உருப்படி முத்தம்மை பெற்ற பிள்ளை ரஜினி காந்து காய்ச்சலில் கிடக்கும் போது பெருமாளிடம் சொல்லி பிளாஸ்டிக் பேப்பரில், வெய்யிலில் கிடத்தி அரை மணிகொருமுறை தண்ணீரை மேலே ஊற்ற சொல்லுபவர், தன் கடைசி மகள் சரியாக சாப்பிடமாட்டேன் என்கிறாள், என்று வருத்தப்படுவதும், அவளுக்காக வளையல் செய்ய அர்த்த ராத்திரியில், நாகர்கோவில் சென்று கொல்லன் வீட்டு கதவை தட்டி விடிய விடிய வளையல் செய்து வாங்கி வந்து, தூங்கிக்கொண்டிருக்கும் மகள் கையில் போடுவதும்!!!!, சுயநலத்தின் உச்சம்,

மூத்தவளுக்கு தரம்(வரன்)கொண்டு வரும் நாயர் தரகர் சரியான நகைச்சுவை கதா பாத்திரம், ஏப்பை சோப்பையான ஆள் என்ன கிடைத்தாலும் கேட்டு விழுங்குகிறார், நாவலில் எந்த பாத்திரத்தையும் திணிக்காமல், ஒட்டி உறவாட விட்டிருக்கிறார், கோவனத்திர்க்குள் ஒளித்து வைத்திருந்த ஆயிரத்து நானூறு ருபாய் பணத்தையும் போலீசிடம் பறிகொடுத்து, கொட்டையில், அடிவாங்கி கண்கள் வீங்கி வெளியே வந்து ,கான்வாஸ் ஷூ மாட்டும் பண்டாரம், ஷூவுக்குள் 'sole 'லுக்கு அடியில் ஒளித்து வைத்த இருபது ஐந்நூறு ருபாய் நோட்டுகளை எண்ணி,அதை பார்க்கும் டிரைவரிடம் போலீஸ் பனிரெண்டாயிரம் பிடுங்கியதாக பொய் சொல்கிறார்,

பண்டாரத்தின் குணத்தை ஒரே காட்சியில் ஜெமோ சொல்லிவிடுகிறார், (பெருமாள் போலீசுக்கு நூறு ருபாய் மாமூல் கொடுத்து விட்டு,பண்டாரத்திடம் மூன்று போலீஸ் வந்ததாகவும் முன்னூறு தந்ததாகவும் பொய் சொல்கிறான்) ,

ஆக பாத்திரங்கள் ஒன்றை ஒன்று விழுங்குவதை குறிப்பால் உணர்த்திக்கொண்டே இருக்கிறார், சகாவு என்னும் மலையாள ஈனப்பிறவி ஒரு ஆங்கிலம் பேச தெரிந்த , கம்யூனிஸ்ட் நொண்டி[வார்த்தைக்கு மன்னிக்கவும்] , இவனும் குறை பிறவிகளை சகாக்கள் என்று அழைத்து பிச்சை எடுக்க விடுபவன் ,இவனிடம் இருநூறு சகாவுக்கள் உள்ளனர், முன்னாள் பிச்சைக்காரன்)தற்போது ஒரு கோடிக்கும் அதிகமான சொத்து உடையவன், அவன் வருங்கால மருமகன் மம்மூட்டி போல அழகான வக்கீல் ஸ்ரீகண்டன் நாயர், எல்லா கணக்கு வழக்குகளையும் பார்க்கிறான்,

இவர்கள் பேசும் விஷயங்கள் அப்பப்பா?!!!, நாம் அறியாத தொழிலில்,எத்தனை நெளிவு,சுளிவுகள்?பண்டாரத்தை வைத்து இவர்கள் ஒரு கணக்கு போட்டால் பண்டாரம் கணக்கு வேறாக இருந்க்கிறது. பழனியில் கட்டை பஞ்சாயத்து,திருட்டு ,குறை பிறவிகளை வைத்து ,வியாபாரம் பிச்சையிட்ட சில்லறைகளை எண்ணி வாங்குவது, மற்றும் ட்ராவல்ஸ் நடத்தும் யானைக்கால் வியாதி முற்றிய நாயக்கர், அவர்கள் திருட்டு சீடர்கள் என்று இன்னொரு பக்கம்,

அதில் ஒருவன் பண்டாரத்தின் பணப் பையை ஒரு சமயம் பிக் பாக்கெட் அடிக்க முயன்று தோற்று, அதற்குள் பண்டாரம் வங்கியில் செலுத்திவிட ,பின்னர் அவர் அவனை ஓட்டலில் வைத்து அடையாளம் கண்டு குறும்பாய் வணக்கம் சொல்ல, இவன் விழித்து அவர் தன்னை கண்டுபிடித்து விட்டதை உணர்ந்து, அவரிடமே ||காலையில் இருந்து உங்கள் பின்னால் அலையுறேன்.||

ஒரு டிபன் வாங்கி கொடுங்கள் , என்று கேட்க அவர் வாங்கித் தந்தவுடன் கூலாக சிகரெட் வாங்கி தரச் சொல்லி கேட்டு பற்றவைத்தவன் அந்த பையில் எவ்வளவு இருந்தது ? என்று கேட்க , பண்டாரம் அறுவது ஆயிரம் என்று சொல்ல, அடடே விட்டுட்டேனே....என்கிறான். இது உலகத்தரம், இந்த மாதிரி கண்முன் விரியும் காட்சிகளை நமக்கு காட்டிக்கொண்டே இருக்கிறார், தனது மாயாஜாலம் போன்ற எழுத்தில்.

ஆனால் மனிதர் ஒன்றிரெண்டு ஜாதியை தவிர எல்லோரையும் இழுத்துவிட்டார்,இது அவருக்கே உறிய அங்கதம் போலும்!!! ஆனால் இது என்றும் கைகொடுக்காது. நாள் போக்கில் சலிப்பு தட்டிவிடும்,(காடு நாவலில் மேனன் சாதியினரை பத்தில் ஒன்பது பேர் கடைந்தெடுத்த தேவடியாப்பயல்கள், ஆனால் அந்த மீதி ஒரு ஆள் தெய்வம் என்று வர்ணித்தார்,தவிர இழவர்,கண்டன் புலயன்,தலித்துகள்,நாடார்கள் ,கிருத்துவர் என அத்தனை பேரையும் எவ்வளவு முடியுமோ அவ்வளவு எள்ளி நகையாடுகிறார்.இது மிகவும் அருவருக்கத்தக்கது,படிப்போருக்கு மன உளைச்சலை தரவல்லது)என்ன தான் இந்த பகடிகளை கதாபாத்திரங்கள் பேசினாலும்,ஆசிரியரின் சாதி மத வெறி தான் துருத்திக்கொண்டு கதாபாத்திரங்கள் மூலம் பேசுகிறது என்பேன்.

பண்டாரத்தின் காமதேனு முத்தம்மை என்னும் உருப்படி , கை கால் சூம்பிப்போன ,ஒரு கண்ணில் பார்வையும் ஒரு கண்ணில் சதையும் கொண்டவள், (நாவல் முழுக்க இவளை எருமைமாடு,பன்றி என்கின்றனர்,) குறைபிறவிகளோடு அவளை இணங்க விட்டு 18 குறைபிறவிகளுக்கும் அதிகமாக அவளை பிரசவிக்கவும் விட்டு, கோவிலில் பிச்சை எடுக்கவும் விட்டு , பின்னர் வந்த விலைக்கு விற்றும் விடுகிறார், அவளுக்கு காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு என்பது போல் தன் பிள்ளைகளின் மேல் அவ்வளவு பாசம், ஆனால் அவள் பதினெட்டு பெற்றும் அவளை அம்மா என்று அழைக்க ஒன்றும் இல்லை. எல்லாம் எங்கெங்கோ யார் யார் ஒப்பந்தத்திலோ ?!!! பிச்சை எடுக்கின்றன, ஆனாலும் அவளுக்கு ஒரு நம்பிக்கை. என்றேனும் ஒரு நாள் தன் பிள்ளையை பார்ப்போம் என்று.!!!

ராமப்பன். இரு கால்கள் இழந்த கிழம், நல்ல வாய்,மனிதர் வாயை திறந்தாலே நகைச்சுவை, பெருமாள் தேடாத இடமாக கண்டுபிடித்து சில்லறைகளை ஒளித்து வைத்து பீடி,டீ,வடை , புகை பீடி(கஞ்சா) என்று மனிதர் தானும் உண்டு பிறருக்கும் தருகிறார், ஏழ்மையிலும் கொடை என்பார் போல, (விலைநங்கை ஒருத்தி பழனி படிக்கட்டில் இருந்து கிராக்கி ஒன்றும் மாட்டாமல் அலுப்பாய் இறங்கி வர, இவர் அவளை அழைத்து, எதாவது சாப்பிடும் படி ஐந்து ரூபாயும், அவளுக்கு மகன் உள்ளது கேட்டு, அவனுக்கு எதாவது வாங்கி கொள்ளும் படி ஐந்து ரூபாயும் தருகிறார்,) பழனி மலை மேலேயே இப்படி விபச்சாரம் கொடிகட்டிப் பறப்பதை நினைத்துப் பதை பதைக்கிறது மனது. அவரின் உணர்ச்சிபூர்வமான பாத்திரப் படைப்பு அற்புதம்,

குருவி என்னும் சக உருப்படியை சகாவு வாங்கிவிட்டது தெரிந்ததும், அவரிடம் என்னையும் வாங்கிடும்யா, மாடா உழைக்கிறேன், இந்த குழந்தையும் நானும் தாயா, புள்ளையா, பழகிட்டோம்யா , என்னையும் வாங்குயா ,என்று கெஞ்சும் இடம் பிச்சைகாரர்களிலும்,நல்ல ஆத்மாக்கள் உண்டு என சொல்கிறது, மாங்காண்டி சாமி, தொரப்பன்,தாணுப் பிள்ளை,குருவி, பண்டாரத்தின் சம்மந்தி, அவரை பெற்ற குண்டினித் தாய் என அடேங்கப்பா!!!.(முருகன் கொஞ்சம் முரண்டு பிடித்தால் வள்ளிக்கும்தெய்வயானைக்கும் கள்ளத்தொடர்பு உண்டு என்பாளாம் அந்த குண்டிணித்தாய் ஒருத்தி!)இதில் யாரை விடுவது?எல்லாமே யதார்த்தம்,செருகலே இல்லை.

அப்புறம் இவர் பழனி லாட்ஜில் வைத்து ஒரு விலை நங்கையை கூட, இவரை அந்த பெண் "கையாலாகாத்தனம்"குறித்து கேலி செய்கிறாள். அந்த பெண்ணை நினைக்கையில் இவரின் இரண்டாம் மகளையே புணருவது போல இவருக்கு எண்ணம் வந்து போவது,அவர் மகளின் தடித்தனத்தை, பொறுக்கித்தனத்தை நமக்கு சொல்லாமல் சொல்லி விடுகிறது. நாவலில் படங்கள் இல்லாவிட்டாலும் ஒவ்வொரு கதாபாத்திரங்களும் மனக்கண்ணில் விரிகின்றன.எனக்கு மட்டும் நேரம் கிடைத்தால் இலவசமாகவே "ஸ்டோரீ போர்டு "வரைந்து ஜெமோவுக்கு பரிசளிப்பேன்.

மிக தேர்ந்த சாமர்த்தியம் கொண்ட முருகன் கோவில் அர்ச்சகர் போத்தி. முருகனா?யார் நம்ம பூக்கடை முருகனை சொல்றியா?என்கிறார். ஜெமோ ஒவ்வொரு நாவலிலும் இப்படிப்பட்ட மனதில் நிற்கும் கதா பாத்திரங்களை படைப்பார் போல, (காடு நாவலில் - குட்டப்பன் , ஐயோ!!! சான்ஸே இல்லை. ஹெர்குலிஸ் போல ஒரு உறுதி) போத்தி கூட்டமில்லாத நேரங்களில் ஒரு கட்டிங் போட்டு விட்டு கருவறைக்குள்ளேயே உலவி, வெற்றிலை போட்டு குதப்பி, முருகன் காலடியிலேயே துப்பி ,பின் நடை சாத்தும் முன்னர் அலம்பி விடுகிறார். அது எல்லா கோவிலிலும் நடக்கும் ஒரு சங்கதியாம், அதை சொன்ன விதம் யதார்த்தம். நமக்கு படிக்கும் போதே வயிறு கலக்குகிறது.

முத்தம்மையை நிர்வாணமாக பார்க்க வேண்டும் என்ற வினோத ஆசை ,வேறு விபரீதமாய் கொண்டிருக்கிறார். பண்டாரம் மகளின் திருமண நகையில்லாமல் திருமணம் நின்று போய்விடுமோ என!! இடிந்து போன வேளையில் எந்த பிரதி உபகாரமும் பார்க்காமல் அவரின் மூத்த பெண் கல்யாணத்தை சிக்கனமாகவும் , கறாராகவும் நடத்தி வைக்கிறார். இது போல ஆள் வீட்டுக்கு ஒருவர் தேவை.

முக்கியமாக தன் தர்பூசணிப்போன்ற வீங்கிய விதைப்பையை கடந்து போகும் நாற்பது வயது ஆசாமிகளுக்கு லகுவாய் தனியே அழைத்து காட்டி இரக்கம் சம்பாதித்து பிச்சை கேட்கும் அகமது,என்ன மாதிரி சட்டம் தெரிந்து வைத்து பண்டாரத்தை மிரட்டுகிறான்,தினமும் படிக்க மாத்ருபூமி கேட்கிறான்.அடேங்கப்பா!!!

பண்டாரம் என்னதான்? நயவஞ்சகமாக கொடுமைகள் செய்தாலும். உருப்படிகள் பண்டாரத்தை ‘மோலாளி, மோலாளி ‘ என்று அன்புடன் அழைத்து ஒரு குடும்பமாக பழகுகிறார்கள். அவருடைய மகள் கல்யாணம் நல்லபடி நடக்கவேண்டும் என்பதில், ராமப்பனும், அகமதும் காட்டும் அக்கறை வியக்க வைக்கிறது. பண்டாரம் எவ்வளவுதான் கொடுமைக்காரராக வந்தாலும், அவரை வெறுக்க முடியவில்லை. அதுதான் நுட்பமான படைப்பு என்பது. குஷ்டரோகி தன் பிளந்த சதை மடிப்புக்குள் பணத்தை பதுக்கி வைப்பது,இரண்டு கால்களும் இல்லாத, உருண்டு போகமட்டுமே சாத்தியம் கொண்ட பெண் உருப்படியை போலீஸ்காரரின் ஆசையை தீர்க்க பண்டாரம் அனுப்பி வைப்பதும், சிறு பிள்ளைகளைப் பிடித்து அமிலம் ஊற்றி, உருமாற்றி ஒரு கணவன் மனைவி கும்பல் விற்பதும், அங்கு போய் மாட்டிக்கொண்ட பண்டாரம் ஆசைவிடாமல் மூவாயிரம்னா வாங்கலாம், என்று விலை பேசுவது கொடுமையின் உச்சம்!!

உருப்படிகளின் உடம்பில் வேலை செய்யும் அங்கங்களை தெரிந்து விற்றுக் காசாக்குகிறார்.

அவருக்கு மனதை உறுத்தவே இல்லை. ஒரு கால், ஒரு கை, ஒற்றை முலை முத்தம்மை, தன் குழந்தையை நாய் இழுத்து போகாமல் தன் சதை மடிப்புகளிடையே மறைத்து வைத்து படுத்திருப்பாள். அவள் குழந்தையை ஈவிரக்கமில்லாமல் பிரித்து விற்றுவிடுவார்கள். அவள் ‘ரசனிகாந்து, ரசனிகாந்து ‘ என்று அரற்றியபடி அன்ன ஆகாரம் இல்லாமல் காய்வாள். தாலிகட்டி ஐந்து நிமிடம்கூட ஆகவில்லை, அருமை அருமையாக வளர்த்த பெண் ‘நான் அவிகவிட்ட பேசி எல்லாத்தையும் களட்டி தாறேன் ‘ என்று சொல்வது, இந்த இடங்களில் எல்லாம் சொல்லமுடியாத அதிர்ச்சி ஏற்படுகிறது. ஆனால் நம்பகத்தன்மை குறையவில்லை. நேரடி அனுபவத்தில் எழுதிய நாவல் என்றபடியால் உண்மை ஒளி வசனத்துக்கு வசனம் வீசுகிறது. சபாஷ் சார். நாவல் திடாரென்று முடிகிறது. அது குறையேயில்லை. ஒரு வித அடையாளம் ,ஸ்டைல்.

முத்தம்மை தான் பெற்ற முதல் மகனை வைத்தே குறை உருப்படி உண்டாக புணர விடப்படுகிறாள், அதுவும் ஒரு மலக்காட்டில் , இவள் அவனை அவனின் ஒற்றை விரலை வைத்தே கண்டுகொண்டு, ஐயோ உடையோரே இவன் வேண்டாம், ஒத்தை விரல், இவன் வேண்டாம் , என்று கதற, பலபேரதிர்ச்சிகள் மனதுக்குள் எழ, பல கேள்விகள் விடைகளின்றி தொக்கி நிற்கின்றன . இனி என்ன நடக்கும் ? தெரியவில்லை.. அதை நம் ஊகத்துக்கே விட்டு விட்டார்ஆசிரியர். மனிதர் புலிப்பால் கறந்து தந்திருக்கிறார்.மிகவும் ஸ்ட்ராங்!!!.

திருஷ்டி இல்லாமலா ?பின்னே :-

(கால கட்டத்தை சொல்லுவதில் தடுமாற்றம்)

முத்தம்மை தங்கமகன் படம் போஸ்டர் பார்த்து தன் மகனுக்கு ரசினிகாந்து என பெயரிடுகிறாள்.(1983 வெளியீடு? ) பண்டாரம் பஸ்ஸில் பயணிக்கும் போது பனி விழும் மலர்வனம் பாடல் கேட்டு மிகவும் கவனம் சிதறுகிறார். என்ன அர்த்தம் என குழம்புகிறார்.(1982 வெளியீடு ) இவரின் சின்ன மகளை மயக்கி இழுத்துக் கொண்டு ஓடியவன் "yezdi" பைக் வைத்திருக்கிறான் . வளையல் செய்ய பவுன் விலை 4000 ரூபாய் [ஆக நம்மால் எளிதாய் இது 80களின் கதைக்களம் என உணரமுடிகின்றது]

ஆனால் பாருங்கள்!!! பிச்சை போடும் தர்ம பிரபுக்கள் "ஐந்து ரூபாய் நாணயம் பிச்சை போடுவதும், [அப்போது ஐந்து ரூ நாணயம் இருந்ததா?] பிச்சைகாரர்கள் சாதாரணமாக நாற்பது ரூபாயை பதுக்கி தேற்றுவதும், குய்யன் ஐம்பது ரூபாய் கொடுத்து ஆர்ய பவன் சாப்பாடு சாப்பிடுவதும், குறைபிறவிகளை பதினைந்தாயிரம் , இருபதாயிரம் என விலைபேசி விற்பதும் லேசாக நமக்கு இது எந்த வருடம் நடக்கிறது? என்னும் வினாவை நிச்சயமாய் எழுப்புகிறது. இதை மட்டும் சரி பண்ணியிருந்தால் நமக்கு எல்லா விடைகளும் நாவலிலேயே கிடைத்திருக்கும்.இந்த புத்தகத்தை இவ்வளவு அழகாக கொண்டு வந்த தமிழினி குழுமத்தாருக்கு நன்றிகளும் பாராட்டுக்களும்

http://geethappriyan...nvironment.html

Edited by வீணா

  • 3 months later...
  • கருத்துக்கள உறவுகள்

நல்ல பார்வை!

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி வீணா பகிர்வுக்கு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.