துரோகத்தின் நாட்காட்டி : நாள் 27, ஐப்பசி , 2006
கருணா பலநூற்றுக்கணக்கான சிறுவர்களைக் கடத்திச் சென்றிருக்கிறார் - லண்டன் டைம்ஸ் பத்திரிக்கை கட்டுரை
உள்நாட்டு மற்றும் சர்வதேச மனிதநேயத் தொண்டு நிறுவனங்களை ஆதாரம் காட்டி லண்டனிலிருந்து வெளிவரும் பிரபல பத்திரிக்கையான "தி டைம்ஸ்" வெளியிட்டுள்ள அறிக்கையில் கடந்த மார்ச் மாதம் முதல் இன்றுவரை கருணாவும் அவரது சகாக்களும் குறைந்தது 900 சிறுவர்களைக் கடத்திச் சென்றிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்தது துணை ராணுவக் குழுவின் நடவடிக்கைகள் இலங்கையில் தற்போது நடந்துவரும் வன்முறைகளுக்குப் பிரதானமான காரணமாக அமைவதோடு, குறைந்தது 2000 அப்பாவிகள் இவ்வருடத்தில் கொல்லப்படுவதற்கும் முக்கிய காரணமாக அமைந்திருக்கிறதென்றும், 2002 இல் செய்துகொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் அடிப்படையிலான சமாதானப் பேச்சுவார்த்தைகளை பெரும் நெருக்கடியில் தள்ளி முற்றான போர் ஒன்றினை நோக்கி நாட்டினை இழுத்துச் செல்லும் ஒற்றைக் காரணியாக கருணா குழுவின் செயற்பாடுகள் அமைந்திருப்பதாகவும் இச்செய்தி மேலும் கூறுகிறது.
டைம்ஸ் நிருபர் மட்டக்களப்பில் பொதுமக்களுடனும், தொண்டு நிறுவன ஊழியர்களுடனும் பேசியிருந்தார். அவர்களின் கருத்துக்களை இப்பத்திரிக்கை பின்வருமாறு வெளியிட்டது.
"அரசாங்கத்திற்காகவே கருணா சிறுவர்களை நூற்றுக்கணக்கில் கடத்துவதாகவும், அவர்களை துஷ்பிரயோகம் செய்வதாகவும் கண்காணிப்புக் குழுவினரும், தொண்டு நிறுவன அதிகாரிகளும் உறவினர்களும், சாட்சிகளும் கருதுகிறார்கள்".
"எமது பிள்ளைகளுக்கு நடக்கும் அநியாயத்தில் இந்த அரசாங்கத்திற்கும் பங்கிருக்கின்றதென்பதை மக்கள் நம்புகிறார்கள்" என்று ஒரு தொண்டு நிறுவன அதிகாரி கூறினார்.
"கருணா குழுவிற்கும் அரசுக்கும் இடையே வேறுபாடு இருப்பதாக இங்கு மக்கள் நினைக்கவில்லை. அவரை இயக்குவது அரசுதான் என்பதில் எமக்குச் சந்தேகமில்லை" என்று பெற்றோர் ஒருவர் கூறினார்.
"கறுப்பு உடையிலும், சாதாரண உடையிலும் கனரக ஆயுதம் தரித்த கருணா குழு உறுப்பினர்கள் ராணுவ வாகனங்களிலும், பொலீஸ் வாகனங்களிலும் அவர்களுடன் சேர்ந்து பவனிவருவதை நாம் தினமும் காண்கிறோம்" என்று யுத்த நிறுத்த கண்காணிப்புக் குழுவினரும், மட்டக்களப்பு நகர்வாழ் மக்களும் தெரிவிக்கின்றனர்.
"வெலிக்கந்தைப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கருணா குழுவின் முகாம்களுக்கு பல டசின் கணக்கான ராணுவச் சோதனைச் சாவடிகளைத் தாண்டி கடத்தப்பட்ட சிறுவர்களை கருணா குழு இழுத்துச் செல்ல ராணுவம் அனுமதிக்கின்றது" என்று யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழு தெரிவிக்கின்றது.
"கருணா துணைப்படையின் அரசியல்த்துறை எனும் பெயரில் பல அலுவலகங்களை அரச கட்டுப்பாட்டுப் பகுதியில் ராணுவ முகாம்களுக்கு மிக அருகில் அக்குழு அமைத்துவருவது அரசின் துணையுடனேயே இது நடப்பதை உறுதிப்படுத்துகிறது" என்று அப்பத்திரிக்கை மேலும் தெரிவிக்கிறது.
தமது பிள்ளைகளை கருணா குழு பலவந்தமாகப் பிடித்துச் சென்று ஆயுதப் பயிற்சியிலும், கட்டாய வேலையிலும் அமர்த்தியிருப்பதை வெளியில் சொன்னால் கொல்லப்படுவோம் என்கிற அச்சத்தில் உறைந்துபோயிருக்கும் தாய்மாரின் சாட்சியங்களையும் நிருபர் பதிவுசெய்தார்.
இப்பத்திரிக்கையின் அரசியல் ஆய்வாளரிடம் இந்த நிருபர் வினவியபோது, "இன்று நடைபெற்றுவரும் சம்தானப் பேச்சுவார்த்தைகளின் பிரதான முட்டுக்கட்டையாக இருப்பது இக்குழுவினரின் செயற்பாடுகள்தான்" என்று தெரிவித்திருப்பதோடு, "நீண்டகாலமாக இலங்கையில் இடம்பெற்றுவரும் கொடிய யுத்தத்திற்கான சமாதானத் தீர்வொன்றிற்கான முயற்சிகளை இக்குழு முற்றாகக் குழப்பப் போகிறது" என்றும் கூறினார்.
அந்த ஆய்வாளர் மேலும் கூறுகையில், "வடக்கு மற்றும் கிழக்கு தமிழர்களிடையே பிரதேசவாதத்தினை ஊக்குவிப்பதன் மூலம், புலிகளை கூறுபோட்டு இறுதியில் முற்றாக அழிக்கும் இலங்கை அரசாங்கத்தின் நிகழ்ச்சிநிரலின் இதயமாக கருணா செயற்பட்டு வருகிறாரென்பது தெளிவாகத் தெரிகிறது" என்றும் அவர் கூறினார்.
புலிகளையும் அவர்களது விடுதலைப் போராட்டத்தினையும் தொடர்ச்சியாக விமர்சித்துவரும் இப்பத்திரிக்கை கருணா துணைப்படையின் அரசியல்ப் பிரிவு முக்கியஸ்த்தர் பிரதீப் உடனும் செவ்வியொன்றினை மேற்கொண்டதுடன், சிறுவர்களை தாம் இணைப்பதில்லை எனும் அவரது பசப்பலினையும் மேற்கோள் காட்டி வெளியிட்டிருந்தது.