அவர் ஏன் திருப்பி அடிக்கவில்லை ?
பாணந்துரை பிள்ளையார் கோயில் பூசகரை சிங்களவர்கள் உயிருடன் தீக்கிரையாக்கிய செய்தியை தனது தந்தையாரான திருவேங்கடம் வேலுப்பிள்ளை சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்த சிறுவனான பிரபாகரனின் மனதில் ஒரு கேள்வி எழுந்தது, "அவர் ஏன் திருப்பி அடிக்கவில்லை அப்பா?" என்பதுதான் அது.
சமஷ்ட்டிக் கட்சித் தலைவர் தந்தை செல்வாவின் தீவிர ஆதரவாளரான வேலுப்பிள்ளையிடம் தனது மகனின் கேள்விக்கான பதில் இருக்கவில்லை. தமது உரிமைகளை காந்தீய, வன்முறையற்ற போராட்ட வழிகளில் பெற்றுக்கொள்ளமுடியும் என்று அவரைப்போன்றவர்கள் அதுவரை நம்பியே இருந்தனர். காலிமுகத்திடலில் கால்களை மடக்கிக் குந்தியிருந்து, தமது தெய்வங்களை நோக்கி மன்றாட்டுக்களை வைப்பதுவும், வேண்டுவதுமே சிங்களத் தலைவர்களின் கல்மனங்களைக் கரைத்துவிடும், அதன்பின் தமக்கான உரிமைகள் கிடைத்துவிடும் என்று அவர்கள் நம்பியிருந்தார்கள்.
பாணந்துரை பிள்ளையார் கோயில்
ஆனால், மூன்றரை வயதே நிரம்பிய, வீட்டில் எல்லாராலும் "துரை" என்று செல்லமாக அழைக்கப்பட்ட சிறுவன் பிரபாகரனின் இந்தக் கேள்வி அங்கிருந்த எல்லோருக்கும் நியாயமானதாகவும், தர்க்கரீதியில் சாதகமானதாகவும் அன்று தெரிந்தது. வீட்டில் தான் விரும்பியதைச் செய்யவும், கேட்டுப் பெற்றுக்கொள்ளவும் தனது பெற்றோரிடமிருந்தும், சகோதர சகோதரிகளிடமிருந்தும் எப்போதும் நினைத்ததை அடைந்துகொள்ளும் சிறுவன் பிரபாகரனுக்கு அவரது தாயார் பார்வதியம்மாள் சரியாகவே "துரை" என்று பெயர் வைத்திருந்தார். நான்கு பிள்ளைகளில் இளையவராகப் பிறந்த பிரபாகரன் தகப்பனாரின் செல்லப்பிள்ளையாக இருந்ததுடன், சிறுவனாக இருந்த காலத்தில் தகப்பனாருடன் தூங்குவதை வழக்கமாகவும் கொண்டிருந்தார். பிரபாகரன் யாழ் வைத்தியசாலையில் 1954 ஆம் ஆண்டு, கார்த்திகை 26 இல் பிறந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.
தனது தந்தையாருடன் அவரது நண்பர்கள் மாலை வேளைகளில் தனது வீட்டில் நடத்தும் சந்திப்புக்களில் பிரபாகரனும் தவறாது சமூகமளிப்பார். 50 களின் இறுதிப்பகுதிகளில் இலங்கையில் நடைபெற்று வந்த தமிழருக்கெதிரான பல விடயங்கள் அங்கே பேசப்பட்டன. தனிச்சிங்களச் சட்டம், காலிமுகத்திடல் சத்தியாக்கிரகம், சத்தியாக் கிரகப் போராட்டக்காரர்கள் மீதான சிங்களக் காடையர்களின் மூர்க்கமான தாக்குதல்கள், கொழும்பிலிருந்து ஏனைய பகுதிகளுக்கும் பரவிய தமிழர் மீதான வன்முறைகள், கல்லோயாக் குடியேற்றவாசிகளால் படுகொலை செய்யப்பட்ட தமிழர்கள், பண்டா செல்வா ஒப்பந்தமும் அதன் தோல்வியும், 1958 இல் அரசால் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்ட தமிழர் மீதான தாக்குதல்கள், இறுதியாக பாணந்துரை பிள்ளையார் கோயில் பூசகரின் கொடுமையான கொலை என்று பல விடயங்கள் அங்கே பேசப்பட்டன.
சிறுவனாக தலைவர் பிரபாகரன்
அந்த நிலையில் இலங்கையில் தமிழருக்கும் சிங்களவருக்கும் இடையே பாரிய பிளவொன்று தோன்றியிருந்ததுடன், ஒருமித்த இலங்கை எனும் கோட்பாட்டையும் அது பலவீனப்படுத்திவிடும் என்கிற நிலைமையினையும் தோற்றுவித்திருந்தது. தமிழரின் பூர்வீக தாயகமான வடக்குக் கிழக்கு மாகாணங்களின் எல்லைகளை ஊடறுத்து அரசால் மிகவும் திட்டமிட்ட முறையில் நடத்தப்பட்டு வந்த சிங்களக் குடியேற்றங்கள் இரு இன மக்களுக்கும் இடையே உணர்வுபூர்வமான எதிர்ப்பினை உருவாக்கியிருந்தது. மேலும் ஏறத்தாள பத்து லட்சம் மலையகத் தமிழர்களின் பிரஜாவுரிமையினைப் பறித்த நிகழ்வு சிங்களவர்களின் உண்மையான நோக்கம் என்னவென்பதனையும் தமிழர்களுக்கு மிகவும் தெளிவாகவே உணர்த்தியிருந்தது. தமிழ் மொழிக்கு உத்தியோகபூர்வ அந்தஸ்த்து கொடுக்கப்பட மாட்டாது என்கிற சிங்களத் தலைவர்களின் நிலைப்பாடு ஏற்கனவே கொதிநிலையில் இருந்த தமிழரின் உணர்வுகளை மேலும் அதிகமாக்கி விட்டிருந்தது. இந்த மூன்று காரணங்களையும் முன்வைத்து தந்தை செல்வாவினால் முன்மொழியப்பட்ட தமிழருக்கான தனி அதிகாரம் மிக்க நாட்டினை இலங்கைக்குள் உருவாக்குவதெனும் கருத்தினை தமிழ் மக்களிடையே உறுதிப்படுத்தியதுடன், 1948 இல் முதன்முறையாக செல்வாவினால் முன்மொழியப்பட்ட இக்கருதுகோள் 1956 தேர்தல்களில் தமிழ் மக்களால் முழுமனதாக ஏற்றுக்கொள்ளவும் பட்டது.
அன்றிலிருந்து ஆனி 1956 முதல் வைகாசி 1958 வரையான காலப்பகுதிவரை தமிழர் மீது நடத்தப்பட்ட திட்டமிட்ட தாக்குதல்களால், தமிழரின் பாதுகாப்பு எனும் நான்காவது காரணமும் தமிழ் - சிங்கள பகையுணர்விற்கான காரணங்களுடன் சேர்க்கப்பட்டது. ஆனி 5, 1956 இல், இரு அரச பாராளுமன்ற உறுப்பினர்களின் தலைமையில் சென்ற சிங்களக் காடையர்கள் அன்றைய பாராளுமன்ற முன்றலில், காலிமுகத்திடலில் அமைதிவழியில் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்ட சுமார் 250 தமிழர்கள் மீது மிலேச்சத்தனமான தாக்குதலினை மேற்கொண்டதுடன், தமிழர்களை மிகவும் கேலவலமாக நடாத்தி அவமானப்படுத்தியது.
இத்தாக்குதலினை சுற்றியிருந்து பார்த்து ரசித்த ஏனைய சிங்களவர்கள் தமிழர்கள் மீது கற்களை எறிந்து எள்ளி நகையாடியதுடன், கிழக்கு மாகாணத்திலிருந்து வருகை தந்த தமிழர்கள் தமது ரயிலுக்காக புகையிரத நிலையத்தை நோக்கி ஓடுவரை வீதிகள் தோறும் விரட்டி விரட்டி அடிக்கப்பட்டார்கள். காலிமுகத்திடலில் தமிழர்கள தாக்கப்படுவதை ரசித்த அரசு, மறுநாள் கொழும்பின் பல பகுதிகளிலும் தமிழர்கள் மீது தாக்குதல்களை ஒருங்கிணைத்து நடத்தியது. இதன் ஒரு கட்டமாக, கல்லோயா குடியேற்றம் என்று சிங்களவர்களால் பெயர் மாற்றம் செய்யப்பட்ட தமிழரின் பூர்வீக நிலமான பட்டிப்பளையில் வாழ்ந்துவந்த தமிழர்கள் மீதும் அரசு தாக்குதலை நடத்தியது. இத்தாக்குதலில் சிக்குண்டவர்கள் போக ஏனையவர்கள் இரவோடு இரவாக அங்கிருந்து விரட்டியடிக்கப்பட்டனர். தமிழரின் பூர்வீகத் தாயகத்திலிருந்து தமிழர்கள் வன்முறைகள் மூலம் விரட்டியடிக்கப்படும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளின் ஆரம்பப்புள்ளியே பட்டிப்பளையிலிருந்தே ஆரம்பமாகியது.
பட்டிப்பளை (கல்லோயாக் குடியேற்றத் திட்டம்)