பதிநான்கு
அதற்குள் மகள் என்னை யாழ்ப்பாணத்தில் மட்டும் ஒரு மாதமாக அடைத்து வைத்திருக்கிறீர்கள். எப்ப வேறு இடங்கள் பார்க்கப் போவது என்கிறாள். இணுவிலில் இருந்து தொடருந்தில் கிளம்பி வவுனியா போய் அங்கு இரு குடும்பங்களைக் கண்டு தங்கி அங்கிருந்து வவுனிக்குளம் என்னும் இடத்தில் என் ஒன்றுவிட்ட அண்ணா சிறிய வீடு ஒன்று கட்டி ஐந்து ஏக்கர் நிலத்தை பக்கத்திலுள்ளவர்களுக்கு குத்தகைக்கு விட்டுவிட்டு ஆறுமாதம் இங்கு, ஆறு மாதம் கனடாவிலுமாக வாழ்கிறார். அவரின் அழைப்பின் பேரில் அங்கும் ஒருநாள் நிற்க அந்தப் பக்கம் காணிகள் வாங்குவோமா என்னும் எண்ணமும் எழுந்தது. என் அண்ணருக்கும் எனக்கும் பொருந்தவே பொருந்தாது. ஏனெனில் அவர் அமிர்தலிங்கத்தின் வால். போக என்னுடன் புலிகளுக்கு எதிராகவே எப்போதும் கதைத்து வாக்குவாதப் பட்டுக்கொண்டு இருப்பார். அத்தோடு அந்தப் பகுதியில் யானைகள் குரங்குகளின் ஆட்டக்காசமும்அப்பப்ப இருக்குமாம் என்றதுடன் அவருக்கு அருகில் இருப்பது சரிவாராது என்று முடிவுசெய்து யாழ்ப்பாணத்தில் காணி வாங்குவதே நல்லது என்கிறேன்.
அங்கிருந்து பஸ்சில் திருகோணமலை சென்றது. கோணேசரத்துக்கு 2017 இலும் சென்றது. இப்ப மகளுக்காக அவரையும் கூட்டிச் சென்றோம்.அங்கு முதலிலே மகள் ஹோட்டல் புக் செய்திருந்தார். மூவர் தங்க 6000 ரூபாய்கள். அங்கிருந்தே கன்னியா வென்நீர் ஊற்று பார்ப்பதற்கு போய்வர ஓட்டோ 2000 ரூபாய்கள். கோணேஸ்வரர் கோவிலுக்குச் செல்லும்போது சிங்களவர்களின் கடைகளைப் பார்த்து முன்னர் வந்த கோபம் இப்ப வரவில்லை. ஏனெனில் இங்கு வசிக்கும் மக்களே எதுவும் செய்ய முடியாதிருக்கும்போது நாம் கோபம் கொண்டோ மனம் வருந்தியோ எதுவும் ஆகப்போவதில்லை எனும் கையாலாகாத்தனம்.
அது முடிய புறாத்தீவு. சிறிய வள்ளத்தில் நாம் தனியாகக் செல்வதானால் 5000 ரூபாய்கள் என்றனர். சரி என்று புறப்படும்போது ஒரு சிங்கள சோடி வர அவர்களையும் ஏற்றிக்கொண்டு போவோம் நீங்கள் நான்காயிரம் அவர்கள் நான்காயிரம் தரட்டும் என்றனர். இது என்ன கணக்கு என்று நான் குளம்ப, அம்மா அவர்கள் எம்மிடம் எவ்வளவு கறக்க முடியுமோ கறப்பார்கள். பேசாமல் இருங்கள் என்றதும் நானும் எதுவும் கதைக்கவில்லை. தீவுக்குள் நுழைவதற்கு, பின்னர் எம்மை கடலுக்கடியில் பவளப்பாறைகள் காட்டுவதற்கு என்று நானும் கணவரும் இலங்கையின் பழைய அடையாள அட்டை வைத்திருந்ததனால் குறைவான காசும் மகள் வெளிநாடு என்பதனால் டொலரில் 10,15,25 என்று மகளுக்குமட்டும் 16000 ரூபாய்களை அறவிட்டனர். அது மிக அற்புதமான அனுபவம்தான்.
பின்னர் அடுத்தநாள் காலை மீண்டும் பஸ்சில் வெளிக்கிட்டு எல்லா, நுவரெலியா என்று பின்னர் கண்டி போவதாக ஏற்பாடு ஆனால் கண்டி செல்லாமலே கொழும்பு சென்றாச்சு. ஏனெனில் கணவரும் மகளும் இன்னும் ஒரு வாரத்தில் திரும்பச் செல்லவேண்டி இருந்ததால் கணவரின் காணி விடயம் ஒன்று முடிக்கவேண்டி இருந்தது ஒன்று. அடுத்தது நான் தொடர்ந்து நிற்பதனால் எனக்கு ஒரு வருட விசா எடுக்கவேண்டியும் இருந்தது. மூன்றாவது பஸ் பயணம் எனக்கு ஏற்புடையதாக இருக்கவில்லை. றெயின் பஸ் என்று டாய்லெட் பிரச்சனை ஒருபுறம். அதனால் இனிமேல் வருவதானல் ஒருகாரையோ அல்லது வானையோதான் காசைப் பார்க்காமல் பிடித்துக்கொண்டு திரிய வேண்டும் என்னும் என் விருப்பத்தை மகளோ கணவரோ ஏற்றுக்கொள்ளவில்லை. இப்படித் திரிவதுதான் அவர்கள் இருவருக்கும் ஏற்றதாக இருக்க, இனிமேல் நீங்கள் இருவரும் தனியத் திரியுங்கள் என்றுவிட்டேன்.
அத்தோடு கொழும்பில் கோட்டலில் ஒரு நாள் மூன்று பேர் தங்கும் அறை 8000 ரூபாய்களுக்கு எடுத்து அடுத்தநாள் காலைவரை தங்கிவிட்டு மகள் தான் அங்கேயே இருக்கிறேன் என்று கூற எனக்கோ அவளைத் தனிய விட்டுவிட்டுப் போகவும் மனமில்லை. கவனமாக இருங்கோ என்று பலதடவை சொல்ல அம்மா நான் சின்னப் பிள்ளை இல்லை அம்மா என்று சிரிக்கிறாள். கோட்டலுக்கு முன்னால் நிற்கும் ஓட்டோக்களைக் காணவில்லை. அதனால் அங்கு வேலை செய்யும் பையன் வீதியில் ஒரு ஓட்டோவை எமக்காக மறிக்க மீற்றர் போடுகிறேன் என்கிறார். சரி என நானும் கணவரும் ஏறிக்கொள்கிறோம். விசா எடுப்பதற்கு பிறகு செல்வோம். முதலில் லைசென்ஸ் மாற்றுவோம் என எண்ணி அங்கு சென்றால் எக்கச்சக்கமான சனம். அத்தனை தூரம் சென்றதற்கு ஓட்டோக்காரர் 1200 ரூபாய்களைத்தான் எடுத்தார். அதுவே யாழ்ப்பாணத்தில் என்றால் 2000 ரூபாய் கொடுக்கவேண்டும்.
நாம் யூக்கேயில் இருப்பதனால் ஒரே பக்கம் staring என்பதனால் uk இல் main post office இல் ஒரு வருட லைசென்ஸ் எடுத்துக்கொண்டு போய் இலங்கையில் ஒரு ஆண்டுகள் வாகனங்கள் ஓட முடியும். நாம் அதை மறந்துபோய் வந்துவிட்டோம். ஆகவே நான் தொடர்ந்து அங்கு நிற்பதனால் எடுப்போம் என்று யாழ்ப்பாணத்தில் கச்சேரிக்குச் சென்றால் காத்திருப்புக்குப் பின் வரிசையில் நின்று ஒருவரிடம் செல்கிறோம். அவர் மெடிக்கல் எடுத்துக்கொண்டு வரவேண்டும் என்றும் வேறு எவற்றைக் கொண்டுவரவேண்டும் என்று கூறி எனது அடையாள அட்டையைக் கேட்கிறார். அது நான் படிக்கும் காலத்தில் எடுத்தது. அதைப் பார்த்ததுமே அவருக்கு விளங்கிவிட்டது போல. வெளிநாடோ? என்கிறார். ஓம் என்று கூற வெளிநாடு என்றால் நீங்கள் சுண்டுக்குளி லேடீஸ் ஸ்கூல் இற்குப் பின்னால் இருக்கும் ஒரு கண் வைத்தியரோ அல்லது கண்ணாடிக் கடையோ தெரியவில்லை. அங்கு சென்று தான் எடுக்க வேண்டும்.என்று முகவரி தந்ததோடு மட்டுமன்றி 8000 ரூபாய்கள் என்கிறார். நாமும் சரி என்று வெளியே வந்து முன்னால் சென்ற ஓட்டோ ஒன்றை மறித்து அவரிடம் விடயத்தைக் கூறுகிறேன்.
மெடிக்கல் எடுக்கும் இடம் கச்சேரிக்குப் பின்னால் இருக்கே. நீங்கள் வெளிநாடோ என்கிறார். ஓம் என்றதற்கு அதுதான் உங்களிட்டைக் காசு பிடுங்க நினைக்கிறார் என்று எம்மை பின்னாலே உள்ள இடத்துக்குக் கூட்டிச் செல்கிறார். அவருக்கு நன்றி கூறிவிட்டு உள்ளே சென்றால் ஒரு 20 நிமிடத்தில் 800 ரூபாய்கள் பெற்றுக்கொண்டு சான்றிதழ் தருகின்றனர். வெளியே வர அந்த ஓட்டோக்காரர் எமக்காகப் பார்த்துக்கொண்டு நிற்க யாழ்ப்பாணத்திலிருந்து பஸ்சில் வந்த நாம் அவருடன் யாழ்ப்பாணம் செல்கிறோம். கொழும்பில் லைசென்ஸ் மாற்றும் இடத்துக்குச் சென்ற பின்னர் தான் கணவர் தன் லைசென்சைக் காணவில்லை என்கிறார். இனி என்ன செய்வது யாழ்ப்பாணத்தில் இருந்தால் மீண்டும் கொழும்பு வரும்போது எடுப்போம் என்று கூறி அவரை வெளியே இருக்கும்படி கூறிவிட்டு நான் உள்ளே செல்கிறேன்.
வரிசையில் நின்று ஒருவரிடம் சென்று எமது விபரங்களைக் கொடுக்க அவர் எல்லாத் தகவல்களையும் ரைப் செய்து இன்னொருவரிடம் அனுப்புகிறார். கன நேரமாக என்னைக் காக்கவைத்துவிட்டுப் போன் செய்து சிங்களத்தில் கதைத்தபடி இருக்கிறார். எனக்கு கடுப்பானாலும் எதுவும் செய்யமுடியாமல் இருக்கிறேன். பின்னர் அவர் எல்லாவற்றையும் சரிபார்த்துவிட்டு வெளிநாட்டவர்களுக்கு 11000 ரூபாய் என்றும் தூரத்தில் இருக்கும் கவுண்டரில் பணத்தைச் செலுத்திவிட்டு வரும்படி கூறுகிறார். நேரம் 12.30. கவுண்டருக்குச் சென்றால் அங்கும் வரிசை நீள்கிறது. ஒரு பத்து நிமிடக் காத்திருப்புக்குப் பின் எனக்கு முன்னால் இருவரும் பின்னால் ஐவரும் இருக்க வேலை செய்பவர் வெளியே சென்றவர் திரும்பிவரவில்லை.
அவர்கள் தமக்குள் சிங்களத்தில் அமளிப்படுகிறார்கள். என்ன என்று நான் கேட்க அவர் லஞ்ச் பிரேக் என்கின்றனர். எப்ப வருவார் என்றதற்கு தமக்கும் தெரியாது என்கின்றனர். மற்றவர்கள் வேறு கவுண்டருக்குப் போக நான் என்ன செய்வது என்று தெரியாமல் நிற்க ஒருவர் வந்து ஏன் நிற்கிறாய் என்று கேட்க நான் விபரத்தைக் கூற அவர் வா என்று என்னைக் கூட்டிச் சென்று உள்ளே வேறொருவரிடம் விடயத்தைக் கூறி foreign என்றுவிட்டுப் போக அவர் என்னிடம் பணத்தைப் பெற்றுக்கொண்டு இன்னொரு கவுண்டருக்குப் போய் என் லைசென்சைப் பெற்றுக்கொள்ளுமாறு கூற அங்கே செல்கிறேன்.
ஒரு சிங்களப் பெண் என் பாஸ்போட்டையும் பணம் கட்டிய பற்றுச்சீட்டையும் வாங்கிப் பார்த்துவிட்டு, நீ வெளிநாடு என்றதனால் இன்னும் 8000 ரூபாய்கள் கட்ட வேண்டும் என்று வெளியே உள்ள வேறொரு கவுண்டர் ஒன்றுக்குப் போகுமாறு கூற ஏன் இங்கு கட்ட முடியாதா என்கிறேன். அவர்கள் உன்னை வெளியேதான் அனுப்பியிருக்கவேண்டும். மாறி அனுப்பிவிட்டார்கள் என்கிறார். ஒன்றுக்கு இரண்டு பேர் 11000 ரூபாய்கள் என்றுகூற இவ இன்னும் 8000 காட்டச் சொல்கிறா. அதுவும் வெளியே உள்ள கவுன்டரில் என்று கணவரிடம் சொல்லிக் கோபப்பட, நாம் வேறு சிங்களம் தெரிந்தவர்களைக் கூடிக்கொண்டு வந்திருக்க வேண்டும். இனி உவர்களுடன் நின்று வாக்குவாதப்பட்டு பிரயோசனமில்லை. போய் கட்டிப்போட்டு வா என்கிறார். எனக்கோ இவவை விடக்கூடாது என்று இருந்தாலும் எதுவும் செய்யமுடியாது என்று தெரிகிறது.. வெளியே சென்று காட்டிவிட்டு வர மூன்றுமணிக்கு வெளியே உள்ள இடம் ஒன்றைக் காட்டி அங்கு வந்து லைசென்சைப் பெற்றுக்கொள்ளும்படி கூற நானும் கணவரும் வெளியே சென்று உணவருந்திவிட்டு வந்து காத்திருக்க எட்டு ஆண்டுகளுக்கான லைசென்ஸ் கைக்கு வருகிறது.