ஜெயார் வைத்த பொறி
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற பாதுகாப்பு மாநாடு
1983 ஆம் ஆண்டு பங்குனி 4 ஆம் திகதி உமையாள்புரம் பகுதியில் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட பதுங்கித் தாக்கும் நடவடிக்கையினால் கொதிப்படைந்திருந்த ஜெயாரின் அரசு, தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணிக்கும் போராளி அமைப்புக்களுக்கும் இடையே மோதல் ஒன்றினை உருவாக்க மறுபடி முயன்றது. அதன்படி, யாழ்ப்பாணத்தின் பாதுகாப்பு மாநாடு ஒன்றினை ஒழுங்குசெய்து, தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரையும் அதில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்திருந்தது. வெளியில் இருந்து பார்க்கும் ஒருவருக்கு இந்த பாதுகாப்பு மாநாட்டின் நோக்கம் தீங்கானதாகத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. மாநாட்டில் பேசப்படவேண்டிய விடயங்கள் பின்வருமாறு குறிப்பிடப்பட்டிருந்தன,
1. யாழ்ப்பாணக் குடாநாட்டின் பாதுகாப்பு நிலவரத்தினை ஆராய்தல்
2. நிலைமைகளைச் சீராக்கும் வழிவகைகளை ஆராய்தல்.
3. உள்ளுராட்சி மன்றங்களின் செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்கதற்கான சாத்தியப்பாடுகளை ஆராய்தல்.
4. மற்றும், ஏனைய விடயங்கள்.
யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் யோகேந்திரா துரைசாமி இம்மாநாட்டிற்கான ஒழுங்குகளைச் செய்வாரென்றும், யாழ்ப்பாண மாவட்ட அமைச்சர் யு. பி. விஜெயக்கோன் இம்மாநாட்டிற்குத் தலைமை தாங்குவார் என்று அறிவிக்கப்பட்டது. அரச அதிபர் யோகேந்திராவே தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரின் பாராளுமன்ற உறுப்பினர்களை அழைக்கும் விடயத்திற்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்டிருந்தார்.
அமிர்தலிங்கமும், யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து பாராளுமன்றத்திற்குத் தெரிவாகியிருந்த ஏனைய முன்னணித் தலைவர்களும் இந்த பாதுகாப்பு மாநாட்டில் கலந்துகொள்வதற்கான தமது விருப்பத்தினை உடனேயே அரசுக்கு அறியப்படுத்தியிருந்தனர். முன்னணியினர் இக்கூட்டத்தில் கலந்துகொள்ளப்போகிறார்கள் என்கிற செய்தி கசிந்தபோது, அமிர்தலிங்கத்தைச் சந்தித்த சில இளைஞர்கள் இக்கூட்டத்தில் பங்குபற்றவேண்டாம் என்று அவரைக் கேட்டனர். "இக்கூட்டத்தில் பங்குகொள்வதில் என்ன தவறிருக்கிறது?" என்று அவர்களைப் பார்த்து கோபத்துடன் கேட்டார் அமிர்தலிங்கம். "உள்ளுராட்சி மன்றங்களை மீளவும் நடைமுறைப்படுத்துங்கள் என்று அரசைப் பார்த்துக் கேட்பதில் என்ன தவறிருக்கிறது?" என்று மேலும் அவர்களைப் பார்த்துக் கேட்டார் அமிர்.
உள்ளுராட்சி மன்றங்கள் முன்னர் முன்னணியினரின் கட்டுப்பாட்டில் இருந்தபோதும், 1983 ஆம் ஆண்டளவில் இந்த மன்றங்களின் ஆயுட்காலம் முடிவடைந்தபோதும் அவற்றுக்கான தேர்தல்களை அரசு நடத்தியிராமையினால், இம்மன்றங்கள் அரசின் கட்டுப்பாட்டின் கீழேயே இருந்துவந்தன. யாழ்ப்பாணத்தில் நிலவிய அசாதாரண சூழ்நிலைகளால், அம்மாவட்டத்தில் தேர்தல்களை நடத்த முடியாது என்று தேர்தல் ஆணையாளர் அறிவித்திருந்தார்.
தமிழ்ப் பிரதேசங்களில் சுமூகமான நிலையினைத் தோற்றுவித்திருப்பதாகவும், சிவில் நிர்வாகத்தினை மீள ஆரம்பிக்கவிருப்பதாகவும் வெளியுலகிற்குக் காட்டவே இந்த மாநாட்டினை ஜெயார் நடத்துகிறார் என்று போராளிகள் அமிருக்குத் தெரிவித்திருந்தனர். "தமிழர் பிரதேசங்களில் சுமூக நிலை உருவாகிவிட்டதாகக் காட்டி உதவி வழங்கும் நாடுகளிலிருந்து பணத்தினைப் பெற்றுக்கொண்டு, அப்பணத்தினைக் கொண்டு இராணுவத்தை பலப்படுத்தவே ஜெயார் முனைகிறார்" என்று இளைஞர்கள் அமிரிடம் கூறினர்.
புனர்நிர்மாணம் செய்யப்பட்ட யாழ்ப்பாணச் செயலகம் 2002
ஆனால், சித்திரை 2 ஆம் திகதி நடக்கவிருந்த யாழ்ப்பாண பாதுகாப்பு மாநாட்டில் கலந்துகொள்வதென்று அமிர்தலிங்கம் பிடிவாதமாக இருந்தார். அன்று காலை, மாநாடு நடக்கவிருந்த யாழ் செயலகத்தின் பகுதியொன்றினை புலிகள் குண்டுவைத்துத் தகர்த்தனர். பின்னர், செயலகத்திலிருந்து சில கிலோமீட்டர்கள் தொலைவில் அமைந்திருந்த மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தின் மண்டபத்தில் இம்மாநாட்டினை அரச அதிபர் யோகேந்திரா ஒழுங்குசெய்து நடத்தினார். அமிர்தலிங்கம் உட்பட பல முன்னணி உறுப்பினர்கள் இந்த மாநாட்டில் கலந்துகொண்டனர்.
யாழ் செயலகக் கட்டிடம் மீதான தாக்குதலுக்கு உரிமை கோரி புலிகள் அறிக்கை ஒன்றினை வெளியிட்டிருந்தனர். அதில், "ஒரு ஆயுதப் புரட்சியினை, அரச பயங்கரவாதமும், அரசியல் சந்தர்ப்பவாதிகளும் சேர்ந்து அடக்கிவிட முடியாது. இச்செய்தியினை வழங்கவே செயலகத்தின் மீது தாக்குதல் நடத்தினோம்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
புலிகளின் அறிக்கையினை எள்ளி நகையாடிய அமிர்தலிங்கம், யாழ்ப்பாணத்துப் பத்திரிக்கைகளுக்கு அறிக்கையொன்றினை வெளியிட்டார். "ஒன்று, இரண்டு கட்டிடங்களை வெடிவைத்துத் தகர்ப்பதன் மூலம் ஆயுதப் புரட்சியொன்றினைச் செய்துவிட முடியாது எனும் செய்தியினை தம்பிமார் இப்போது நன்கு உணர்ந்திருப்பார்கள். அவர்களின் முயற்சிகளுக்கு மத்தியிலும் பாதுகாப்பு மாநாடு திட்டமிட்டபடியே நடந்து முடிந்தது என்பதை அவர்கள் அறிந்துகொள்வது அவசியம்" என்று அவரது அறிக்கை கூறியது.
அமிர்தலிங்கம் தனது நிலைப்பாட்டில் மிகவும் பிடிவாதமாக நின்றார். தமிழ் மக்களுக்கும், போராளிகளுக்கும் தானே தமிழர்களின் தலைவர் என்பதைக் காட்டவேண்டும் என்கிற தேவை அவருக்கிருந்தது. செயலகக் குண்டு வெடிப்பிற்குச் சில நாட்களுக்குப் பின்னர் கூட்டமொன்றில் பேசிய அமிர்தலிங்கம், "ஒரு கப்பலுக்கு ஒரு தலைவன் மட்டும் தான் இருக்க முடியும். கப்பலில் உள்ள அனைவரும் தலைவராக விரும்பினால், கப்பலில் கலவரம் ஏற்பட்டு, இறுதியில் மூள்கியும் விடும். 1977 ஆம் ஆண்டு இந்தக் கப்பலை தலைமையேற்றுச் செலுத்துமாறு மக்கள் என்னிடம் ஆணையொன்றினைத் தந்திருக்கிறார்கள். ஆகவே, நான் தான் இக்கப்பலுக்கான தலைவன், என்னைத் தலைமைதாங்க விடுங்கள்" என்று கூறினார்.
அமிர்தலிங்கத்தின் இந்தக் கூற்றிற்கு போராளிகள் உடனடியாகக் கடுமையான கண்டனத்தை வெளியிட்டனர். "கப்பலின் தலைவர், அதனைத் தலைமைதாங்கும் தகுதியைக் கொண்டிருக்காதவிடத்து, கப்பலையும், அதிலுள்ளவர்களையும் காத்துக்கொள்ள, ஏனையவர்கள் அந்த மாலுமியைத் தள்ளிவிட்டு, கப்பலுக்கான தலைமையினைப் பொறுப்பேற்பதுதான் சரியானது" என்று தெரிவித்தனர்.
அமிர்தலிங்கத்தை தலைமைப் பொறுப்பிலிருந்து அகற்றுவதற்குத் தேவையான சந்தர்ப்பத்தினை ஜெயாரே போராளிகளுக்கு ஏற்படுத்தித் தந்தார். ஆகவே உள்ளூராட்சித் தேர்தல்களை வைகாசி 18 ஆம் திகதி நடத்துவதென்று முடிவெடுத்த ஜெயார், அதற்கான வேட்பாளர் மனுக்களை ஏற்றுக்கொள்ளுமாறு தேர்தல் ஆணையாளரைப் பணித்தார். தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி, ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்க் காங்கிரஸ் மற்றும் சில சுயேட்சைக் கட்சிகள் இத்தேர்தலில் பங்கெடுக்க தமது வேட்பாளர்களை நியமித்திருந்தன.