இந்தியாவுக்குப் பாடம்புகட்ட வெளிநாடுகளில் ஆயுதம் வாங்க முனைந்த ஜெயார்
ஜூலை 31, ஞாயிற்றுக்கிழமை வெளிவந்த சண்டே ஐலண்ட் பத்திரிக்கையில், வெளிநாட்டுச் சக்தியொன்றிடமிருந்து தனக்கு வரவிருக்கும் இராணுவ அழுத்தத்தைச் சமாளிக்க இலங்கை அமெரிக்கா, இங்கிலாந்து, பாக்கிஸ்த்தான், வங்காளதேசம் மற்றும் சீனா ஆகிய நாடுகளிலிருந்து ஆயுதங்களைப் பெற்றுக்கொள்ள முயன்றுவருவதாகச் செய்தி வெளியிட்டிருந்தது. மிகார எனும் புனைபெயரில் எழுதிவந்த ரணதுங்க, இலங்கைக்குச் சவாலாக இருக்கும் அந்த வெளிநாட்டுச் சக்தி "இந்தியா" தான் என்று எழுதியிருந்தார்.
கொழும்பில் தங்கியிருந்த இந்திய தூதரக அதிகாரிகள் இலங்கை, இந்தியாவுக்கெதிரான நாடுகளிலிருந்து ஆயுதங்களைப் பெற்றுக்கொள்ள முனையும் செய்தியை அடிப்படையாக வைத்து அறிக்கைகளை இந்தியாவுக்கு அனுப்பியிருந்தார்கள். மேலும், ஜெயவர்த்தனவின் அமைச்சரவையில் இருக்கும் முக்கிய அமைச்சர்கள் இந்திராவின் தொலைபேசி அழைப்பையும், ராவின் திடீர் விஜயத்தையும் தேவையற்ற தலையீடாகப் பார்ப்பதாகவும் அவர்கள் கூறியிருந்தார்கள்.
இந்தச் செய்தி இந்தியாவுக்குத் தலையிடியாய் மாறியது. இந்தியக் கொள்கை வகுப்பாளர்கள் தாம் அவமானப்படுத்தப்பட்டுள்ளதாக உணர்ந்தார்கள். இந்திரா காந்தி கடும் சினம்கொண்டார். சிலகாலமாகவே அமெரிக்கா நோக்கிச் சாயும் ஜெயவர்த்தனவின் நடவடிக்கைகள் அவருக்கு எரிச்சலைக் கொடுத்துக்கொண்டிருந்தன. ஆகவே, இந்தியாவின் நலன்களை மீறி ஜெயார் செயற்பட முடியாதென்பதை அவருக்கு உணர்த்தவேண்டும் என்று திடசங்கற்பம் பூண்டார். இதற்கான அடித்தளத்தை உருவாக்க இந்திரா எண்ணினார். அதன்படி இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சினையினைத் தீர்த்துவைக்க இந்தியாவுக்கு மட்டுமே உரிமை இருக்கிறது என்றும் இந்தியாவைத் தாண்டி எந்தவொரு வெளிச்சக்தியும் இவ்விவகாரத்தில் இலங்கையில் தலையீடு செய்ய முடியாது என்றும் அவர் கூறினார்.
இந்தியாவுக்கு பகைமையான நாடுகள் என்று இந்தியா கருதிய சில நாடுகளிலிருந்து இலங்கை ஆயுதங்களைத் தருவிப்பதைத் தடுப்பதற்கு இந்திராவின் அறிவுருத்தல்களின் பெயரில் இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சகம் இரு விடயங்களைச் செய்தது. முதலாவது, ராவின் வருகையின் இலங்கை உதாசீனம் செய்யும் பட்சத்தில் இலங்கைக்கெதிரான இராணுவ நடவடிக்கை ஒன்றினை இந்தியா ஆரம்பிக்கும் எனும் வதந்தியை வேண்டுமென்றே ஊடகங்கள் ஊடாகக் கசியவிடுவது. இரண்டாவது, ஜெயவர்த்தன ஆயுதங்கள் வாங்க எண்ணியிருக்கும் நாடுகள் அடங்கலாக அனைத்து சர்வதேச நாடுகளையும் இலங்கைக்கு ஆயுதங்களை வழங்கவேண்டாம் என்று கோருவது.
வெளிவிவகார அமைச்சர் ஹமீத்
நான் முன்னர் குறிப்பிட்டது போல, ஜெயவர்த்தனவைக் கையாள இந்தியா இரு முனைகளைப் பாவிக்க எண்ணியிருந்தது. முதலாவது இராணுவ நடவடிக்கை. இரண்டாவது இராஜதந்திர ரீதியிலான நெருக்குவாரம். இராஜதந்திர ரீதியிலான இந்தியாவின் அணுகுமுறை, ராவை இலங்கைக்கு அனுப்பி, தமிழர்கள் மீதான தாக்குதல்களை உடனடியாக நிறுத்துவது. ராணுவ அணுகுமுறை என்பது பரா இராணுவத்தினரைத் தரையிறக்கி, விமான நிலையங்களைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதன் மூலம் இலங்கையில் சட்டம் ஒழுங்கினை நிலைநாட்ட ஜெயவர்த்தனவுக்கு அழுத்தம் கொடுப்பது.
ஜெயவர்த்தனவும் அவரது அமைச்சரவை மற்றும் இராணுவத் தலைமைப்பீடத்தினர் போன்றோரும் இந்தியாவின் இராணுவத் திட்டம் குறித்து அறிந்தே இருந்தனர். இந்தியாவின் இராணுவக் கலூரியில் பயிற்சிகளை மேற்கொண்டிருந்த இலங்கை ராணுவத்தின் மேஜர் ஜெனரல் நளின் செனிவிரட்ன இவ்விடயம் தொடர்பாக இந்தியாவில் பேசப்பட்டதை அறிந்தவுடன் உடனடியாக அதனை இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஹமீதிடம் அறியத் தந்தார்.
அக்காலத்தில் தென்னாசிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களின் சார்க் மாநாடு இந்தியாவின் தலைநகர் தில்லியில் நடைபெற ஏற்பாடாகியிருந்தது. இந்த மாநாட்டிற்கு ஹமீதை அனுப்பிய ஜெயவர்த்தன, இலங்கையை ஆக்கிரமிக்கும் இந்தியாவின் உத்தேச இராணுவ நடவடிக்கை குறித்து தெளிவுபடுத்த இந்திராவுடன் பேசுமாறு கோரினார்.
ஆவணி 1 ஆம் திகதி இந்திராவைச் சந்தித்த ஹமீத் இதுகுறித்துக் கேட்டார். இதற்குப் பதிலளித்த இந்திரா இலங்கையில் நடக்கும் சம்பவங்கள் இந்தியாவைக் கவலை கொள்ள வைத்திருப்பதாகக் கூறியதுடன் , இலங்கையினை ஆக்கிரமிக்கும் நோக்கம் தனக்கு இல்லையென்றும் உறுதியளித்தார். இந்திராவின் இந்த உறுதியளித்தலை உடனடியாக ஜெயாருக்கு அறிவித்தார் ஹமீத்.
ராவ் தனக்கு பரிந்துரைத்ததன்படி தமிழ் அகதிகள் பிரச்சினையினைக் கையாள இலங்கைக்கு உதவ இந்திரா முடிவெடுத்தார். ஆவணி 2 ஆம் திகதி லோக்சபாவில் பேசிய இந்திரா இந்த உதவிகள் குறித்துப் பேசினார். அப்பேச்சின்போது இலங்கையின் பிரதேச ஒருமைப்பாட்டினை இந்தியா முழுமையாக மதித்து ஏற்றுக்கொள்கிறதென்று கூறியதுடன் இலங்கைக்கான மனிதாபிமான உடவிகளைச் செய்ய இந்தியா விரும்புகிறதென்றும் கூறினார்.
தமிழர்களுக்கெதிரான வன்முறைகள் ஆரம்பித்த முதல் நாளிலிருந்தே தமிழ் அகதிகள் பிரச்சினையும் ஆரம்பித்துவிட்டது. கொழும்பில் மட்டும் 14 அகதி முகாம்கள் உருவாக்கப்பட்டன. திங்கட்கிழமை இரவிற்குள் சுமார் 20,000 அகதிகள் இந்த முகாம்களில் அடைக்கலம் தேடியிருந்தனர். நாடு முழுவதற்கும் வன்முறைகள் பரவியபோது மேலும் பல அகதி முகாம்கள் உருவாக்கப்பட்டன. ஆரம்பத்தில் இந்த அகதிமுகாம்களை யார் பொறுப்பெடுப்பது எனும் பிரச்சினை உருவாகியது. இதனையடுத்து வெள்ளியன்று அத்தியாவசிய சேவைகளுக்கான ஆணையாளரான பிரட்மன் வீரக்கோனை அகதிமுகாம்களுக்கான நிவாரண வழங்கலை கண்காணிக்குமாறு ஜெயவர்த்தன பணித்தார். அகதி முகாம்களில் அடைக்கலமாகியிருந்த தமிழ் அகதிகளை அவர்களின் தாயகமான இலங்கையின் வடக்குக் கிழக்குப் பகுதிகளுக்கு அனுப்பிவைப்பதற்கான நடவடிக்கைகளை பிரட்மன் வீரக்கோன் மேற்கொண்டார். ஆரம்பத்தில் கப்பல்கள் மூலமாகவும், பின்னர் புகையிரதங்கள் ஊடாகவும் தமிழ் மக்கள் தமது தாயகம் நோக்கி அனுப்பிவைக்கப்பட்டார்கள். தமிழர்களுக்கெதிரான சிங்களவர்களின் வன்முறைகள் ஆரம்பிக்கப்பட்ட முதலாவது வார இறுதியில் சுமார் 300,000 தமிழர்கள் இடம்பெயரச் செய்யப்பட்டனர்.
கொழும்பு துறைமுகத்தில் தாயகம் நோக்கிச் செல்ல கப்பலுக்காகக் காத்திருக்கும் தமிழ் அகதிகள், ஆவணி 1983
பெருந்தோட்டங்களில் வாழ்ந்துவந்த தமிழர்களும், கொழும்பில் நிரந்தரமாக வாழ்ந்துவந்த தமிழர்களும் கடுமையான நெருக்கடிகளைச் சந்தித்தனர். இவர்களுள் சிலர் வடமாகாணத்திற்கு அவர்களின் உறவினர்களுடன் தங்குவதற்காக அனுப்பிவைக்கப்பட்டனர். ஏனையவர்கள் அகதிமுகாம்களிலேயே பல மாதங்கள் வாழவேண்டியதாயிற்று.
தமிழர்களுக்கெதிரான வன்முறைகள் நாடுமுழுதிலும் கொல்லப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை வெறும் 350 மட்டுமே என்று கூறிய அரசு, தமிழர்களுக்குச் சொந்தமான 18,000 வீடுகளும் வியாபார நிலையங்களும் அழிக்கப்பட்டதாகவும், சுமார் 100,000 தமிழர்கள் அகதிகளாக்கப்பட்டதாகவும் கூறியது. சுயாதீனமான தரவுகளின்படி கொல்லப்பட்ட தமிழர்களின் உண்மையான எண்ணிக்கை இதனைக் காட்டிலும் பல மடங்கு அதிகம் என்று கூறின. தற்போது குறைந்தது 2,500 தமிழர்கள் கொல்லப்பட்டிருப்பதாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது.
இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் என்கிற ரீதியில் இலங்கைக்குத் ராவ் மேற்கொண்டிருந்த விஜயம் தொடர்பாக அவரையே பாராளுமன்றத்தில் உரையாற்றுமாறு பணித்த இந்திரா, இலங்கை இந்தியாவைத் தவிர்த்து வெளிநாடுகளில் ஆயுதங்களை கொள்வனவு செய்ய முயல்வது குறித்த விபரங்களையும் அச்சபையில் தெரிவிக்குமாறு கோரினார்.
பாராளுமன்றத்தில் ராவ் ஆற்றிய உரை இருபகுதிகளைக் கொண்டிருந்தது. முதலாவது பகுதி இலங்கையில் இருந்த இந்தியர்களின் சொத்துக்களுக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்பு மற்றும் இந்திய தூதரக அதிகாரிகளின் பாதுகாப்புக் குறித்த கரிசணை பற்றி விளக்கியது.
பின்னர் அவர் பேசும்போது, "இந்தியர்களின் சொத்துக்களுக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்பு மற்றும் அவர்களின் பாதுகாப்புக் குறித்த கவலைகளுக்கப்பால், இந்தியாவைப் பூர்வீமகாகக் கொண்ட பலர் கொல்லப்பட்டிருப்பது குறித்த, குறிப்பாக நாடற்றவர்களாக்கப்பட்டுள்ள பல இந்திய உறவுகள் குறித்த ஒட்டுமொத்த இந்தியாவின் கவலையும் எமக்கிருக்கிறது. இது ஒரு மனிதாபிமான பிரச்சினை. குடியுரிமையினால், நாடுகளின் எல்லைகளால் பிரிக்கப்பட்டிருந்தாலும் எமக்கு மிக அருகில் இருக்கும் நெருங்கிய கலாசார பிணைப்புடைய அயலவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் சொல்லொணாத் துயரங்கள் குறித்து இந்தியா பேசாமலிருக்க முடியாது" என்று கூறிய ராவ், .
மேலும், கொழும்பில் இடம்பெயர்ந்து அகதிமுகாம்களில் வாழ்ந்துவந்த தமிழர்களை அவர்களின் தாயகமான வடக்குக் கிழக்கிற்கு அனுப்பிவைப்பதற்கான கப்பல்களை வழங்குமாறும், அகதி முகாம்களில் இருக்கும் தமிழ் மக்களுக்கான எரிபொருள், மருந்துவகை மற்றும் அத்தியாவசியப் பொருட்களுக்கான உதவிகளையும் வழங்குமாறு இலங்கை அரசு இந்தியாவிடம் கேட்டுக்கொண்டுள்ளதாகவும் கூறினார்.
இந்தியக் கப்பல் ஒன்றில் யாழ்ப்பாணத்திற்கு அனுப்பப்படும் தமிழ் அகதிகள் ஆவணி 1983
இலங்கை கேட்டுக்கொண்டதற்கமைய இந்தியா எரிபொருள், மருந்துவகை, உடைகள் மற்றும் உலர் உணவுப் பொருட்கள் என்பவற்றை இலங்கை அரசாங்கத்திற்கு அனுப்பிவைத்தது. தமிழ் அகதிகளை கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு அழைத்துச் செல்ல கப்பல்களையும் வழங்கியது.
தனது பேச்சின் இரண்டாவது பாகத்தில் இலங்கையரசாங்கம் அமெரிக்கா, இங்கிலாந்து, பாக்கிஸ்த்தான், சீனா மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகளிலிருந்து ஆயுதங்களைக் கொள்வனவு செய்ய முயன்றுவருகிறது என்கிற செய்தியை முன்வைத்தார். தனது விஜயத்தின் பின்னரே இந்த ஆயுதக் கொளவனவு முயற்சியில் இலங்கையரசு இறங்கியிருக்கிறது என்றும் கூறினார்.
இதுகுறித்த மேலதிகத் தகவல்களை தன்னால் வழங்கமுடியாது என்று கூறிய ராவ், பாராளுமன்றமும் நாட்டு மக்களும் இதுகுறித்து அறிந்திருப்பது அவசியம் என்றும் கூறினார்.
மேலும், வெளிநாட்டுச் சக்தியொன்று தமது நாட்டின் உள்விவகாரங்களில் தேவையற்ற விதத்தில் செல்வாக்குச் செலுத்த நினைப்பதாலேயே இலங்கை வெளிநாடுகளிருந்து ஆயுதங்களைக் கொள்வனவு செய்ய முயல்கிறதென்றும், அந்த வெளிநாட்டுச் சக்தி இந்தியாவே என்று இலங்கை அரசு கூறியிருப்பதாகவும் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தின் கீழ்ச்சபையில் பேசிய ராவ், இந்தியாவுக்குக் கிடைத்திருக்கும் தகவல்களின்படி, இலங்கை ஆயுதக் கொள்வனவில் ஈடுபடப்போவதாகக் குறிப்பிடும் நாடுகளுடன் இந்தியா தொடர்புகொண்டு தனது கரிசணையினை வெளியிட்டிருப்பதுடன், இலங்கையில் நிலவும் சூழ்நிலை தொடர்பாகவும் அந்நாடுகளுக்கு விளக்கமளித்திருக்கிறது. நிலைமைகளின் ஏற்படப்போகும் மாற்றங்களையடுத்து வெளிநாட்டுத் தலையீடுகள் இப்பிராந்தியத்தில் ஏற்பட வாய்ப்பிருப்பதாக இந்தியா கருதுகிறது என்றும் கூறினார்.
அதன் பின்னர் பேசிய ராவ், எச்சக்தியாக இருந்தாலும் இலங்கை விவகாரத்தில் இருந்து விலகியிருக்க வேண்டும் என்று எச்சரிக்கையினையும் விடுத்தார். இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் இந்தியா தலையிடுவதாக சர்வதேசம் கருதக் கூடாது என்றும் கூறினார். இந்தியாவின் தவிர்க்கமுடியாத அயல்நாடாக இலங்கை இருப்பதால் இலங்கையில் நடைபெறும் விடயங்கள் இந்தியாவில் பல பின்விளைவுகளை ஏற்படுத்துவதைத் தவிர்க்கமுடியாது இருக்கிறது என்றும் கூறினார். இந்தியாவின் தேசிய பாதுகாப்பிலும், நலனிலும் இலங்கையில் நடைபெறும் நிகழ்வுகள் தாக்கம் செலுத்துவதால், அவைகுறித்து இந்தியா வாளாவிருக்க முடியாது என்றும் ராவ் கூறினார்.
"எம்முடன் பேசிய இலங்கை அதிகாரிகள் எமக்குச் சார்பாகவே பேசினார்கள். இலங்கை தனக்குத் தேவையான உதவிகளை இந்தியாவிடமிருந்து பெற்றுக்கொள்ள முடியும். அது இரு அரசாங்கங்களுக்கும் இடையே பரஸ்பர ரீதியில் இலகுவாகச் செய்துகொள்ளக்கூடிய ஒரு விடயமாகும்" என்று கூறினார்.
இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சு நடத்திய விசாரணைகளின்போது இலங்கையரசாங்கம் ஆயுதங்களைக் கொள்வனவு செய்ய முயன்று வருவது உண்மையென்று உறுதிப்படுத்தப்பட்டது. ஆகவே, இலங்கையின் இந்த வெளிநாட்டு ஆயுதக் கொள்வனவு முயற்சியை இந்திய வெளிவிவகாரத்துறை தடுப்பதற்கான முயற்சிகளில் இறங்கியது. சர்வதேசமெங்கும் வியாப்பித்திருந்த இந்தியா இராஜதந்திர வலையமைப்பு இந்தப் பணிக்காக முடுக்கிவிடப்பட்டது. சர்வதேச நாடுகளில் இந்தியாவின் தூதர்களாக பணிபுரிந்தவர்களை வெளிநாட்டுவிவகார அமைச்சகத்திற்கு அழைத்துப் பேசிய அதிகாரிகள், ராவ் எழுதிய "இலங்கை விவகாரத்தில் தலையிட வேண்டாம்" என்கிற சாராம்சத்துடனான கடிதங்களை தத்தமது நாடுகளுக்கு எடுத்துச் சென்று வழங்குமாறு கோரினார்கள்.