வாசித்து கருதெழுதிய சுமே அக்கா, சாந்தி அக்கா, கோமகன், மற்றும் பகலவனுக்கு நன்றி.
நன்றி பகலவன் இது சுகமான அல்ல, சுமையான அனுபவம்.இந்த ஆசிரியர் அப்பொழுதுதான் கற்பிக்கத் தொடங்கிய ஆசிரியர் ஆதலால் அவளவு பிரபல்யம் ஆனவர் இல்லை. பெயர் திருஞானசேகரம்.
சில வாரங்களில் தமிழ் ஆசிரியரின் ஓங்கி ஒலித்த குரல் எங்களுக்குப்பழக்கப்பட்டு விட்டது. தமிழை விரும்பி, ரசித்து, ஒரு ஈடுபாட்டோடு கற்பிப்பார். அன்பிற்குரிய மதிப்பிற்குரிய, ஆசானாக, நண்பனாக, சகோதரனாக, என்மனதில் இடம்பிடித்து விட்டார் என் ஆசான்.
அநேகமான தமிழ் வகுப்புகளில் அரைவாசி நேரம்தான் புத்தகப்பாடம், மிகுதி நேரம் ஏதாவது ஒரு விடையத்தை பற்றி விவாதம்தான். ஆனால் ஒவ்வொன்றும் ஆரோக்கியமான விவாதங்கள், சாதி, சமயம், மதமாற்றம், விடுதலை, நாட்டுப்பற்று, என்று நிறைய.
ஒவொரு விடயத்தையும் தானாக எதோ ஒரு நூலிலையில் தொடங்கி விடுவார், பின்னர் தான் அதற்கு எதிரானவர் போல் கதைக்கத் தொடங்க, நாங்கள் வரிந்து காட்டிக்கொண்டு பட்டிமன்றம் தொடங்கிவிடுவோம். கிட்டத்தட்ட ஒரு சண்டை போல இருக்கும். ஒரு சிலர் தான் களத்தில், மற்றவர்கள் சத்தமில்லாமல் அவதானித்துக் கொண்டிருப்பார்கள்.
சிரித்துச்சிரித்து எங்களுக்கு எதிராக கருத்துகளை சொல்லிக் கிண்டி விட்டுக்கொண்டிருபார் ஆசிரியர்.
ஒருநாள், இப்படித்தான் விவாதம் நடந்துகொண்டிருக்க பாட நேரமும் முடிந்து விட, "நீங்கள் பொல்லாத ஆக்கள் இனிமேல் நான் உங்களுக்கு பாடம் எடுக்க மாட்டன் " என்று சொல்லி விட்டுப் போய்விட்டார்.
அது உண்மைதான் என்று, இரண்டு நாட்களின்பின் பேரிடிபோல் காதில் விழுந்த செய்தி சொன்னது. ஆம், இந்தியன் ஆமியின் தமிழீழ நண்பர்கள் எங்கள் ஆசானை விசாரணை என்ற பெயரில் வீதியில் வைத்து அழைத்துச்சென்று அடித்தே கொன்று விட்டார்கள். தமிழை நேசித்து நல்லவர்கள் பக்கம் நின்றதுதான் என் ஆசான் செய்த குற்றம்.
என்னை விக்கி விக்கி அழ வைத்த முதல் மரணவீடு. கழுத்து முறிக்கப்பட்டு திரும்பிய தலையுடன் என் ஆசிரியரின் கடைசித்தோற்றம்..... எழுத முடியவில்லை. இந்த விசைப் பலகை என்னை பரிதாபமாகப் பார்கின்றது.
முற்றும்.