முன்னுரை
தமிழீழத்தின் சுதந்திரத்திற்கான விடுதலைப் போராட்டத்தில் சிங்கள அரசின் படைத்துறை இயந்திரத்தின் கைகளால் தென் தமிழீழ தமிழ் மக்கள் பட்ட துன்பங்களும் துயரங்களும் சொல்லொணாதவை.
சிங்கள இனவாதிகளால் ஏலவே திட்டமிடப்பட்ட ஒரு மண் பறிப்பு நிகழ்சி நிரலுக்கு ஏற்ப, தமிழரின் ஊர்மனைகள் அழிக்கப்பட்டு மண்பறிக்கப்பட்டுச் சிங்களக் குடியேற்றங்களை ஏற்படுத்தியதால் தமிழரின் ஆட்புலங்கள் திட்டமிட்டு சுருக்கப்பட்டன.
இந்த ஊர்மனைகளில் வாழ்ந்த அல்லது விரட்டியடிக்கப்பட்ட பின் ஊர் திரும்பவிழைந்த தமிழரின் உயிர்கள் சிங்களப்படைகளாலும், சிங்களக் குடியேற்றவாசிகளை கொண்டு உருவாக்கப்பட்ட “ஊர்காவல்படை” என்ற துணைப்படையாலும் காவுகொள்ளப்பட்டன.
இவ்வாறான சூழ்நிலையில் அகப்பட்டு தென் தமிழீழ தமிழ் மக்கள் அல்லுற்றுக்கொண்டிருந்த வேளையில் அழிவு மற்றொரு வடிவத்திலும் வந்து சேர்ந்தது.
தமிழர்களோடு 'பிட்டும் தேங்காய்ப் பூவும்' போல முஸ்லிம்கள் வாழ்ந்து வருகின்றனர் என்ற அரசியல்வாதிகளின் கூற்றானது - குறிப்பாக, தமிழரசுக் கட்சி சார்பில் 1960 & 1968 ஆண்டு தேர்தலில் போட்டியிட்டிருந்த அமரர் அல்ஹாஜ் எஸ். சி. எம். மசூர் மௌலானா இவ்வுவமையைப் பாவித்துள்ளார் - பொய்யாகும் வகையில் தமிழர் மீதான முஸ்லிம்களின் தாக்குதல்கள் முற்றிப்போயிருந்தன, குறிப்பாக 1990ம் ஆண்டளவில்.
அமரர் எஸ். சி. எம். மசூர் மௌலானா
1985இற்கு முந்தைய காலகட்டத்தில் தமிழர்கள் மீது முஸ்லிம்களால் ஆங்காங்கே பெருந் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இவ்வாறு மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் முதன்முதலில் செய்யப்பட்டது 1954 ஆம் ஆண்டு ஏப்ரல் 16ம் திகதி வீரமுனை (Tamilnation: State and Muslims Desecrate Ancient Tamil Village, K.N.Tharmalingam, Northeastern Herald May/June 2003) ஊரை எரித்தழித்தது ஆகும். இதுபோன்றவற்றில் குறிப்பிடத்தக்கது 1967 ஏப்ரலில் முஸ்லிம்களால் மேற்கொள்ளப்பட்ட சாய்ந்தமருது தமிழ்ப் பிரிவு அழிப்பு (Tamilnation: New Year’s Bloody Dawn: Karativu 1985 K.N.Tharmalingam - Northeastern Herald October/November 2003). இவை மட்டுமன்றி இரு தரப்பிற்குமிடையில் காணிச் சிக்கல்கள் என இன்னும் பல சிக்கல்கள் நடந்தேறியிருந்தன. ஆனால் 1985 ஏப்ரலில் நடந்த 'காரைதீவுப் புத்தாண்டுத் தாக்குதல்' போன்று சிங்கள அரசின் துணையோடு அவை நடைபெற்றிருக்கவில்லை.
இவ்வாறாக, அவ்வப்போது நடைபெற்றுவந்த உள்ளூர் குமுகாய மோதல்களை ஊதிப்பெருப்பித்து தொடர் இன-மத மோதலாக்கிய பெருமை ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவையும் லலித் அதுலத்முதலியையுமே சாரும்.
அமரர் எம்.எச். மொகமது
காரைதீவுப் புத்தாண்டுத் தாக்குதலை சிங்கள அரசின் துணையோடு முஸ்லிம்கள் வெற்றிகரமாக நிறைவேற்றினர். இவ்வழிப்புக்குத் துணையாக அப்போதைய சிறிலங்கா அதிபர் ஜே.ஆர். ஜெயவர்தனாவால் எம்.எச். மொகமது என்ற முஸ்லிம் அமைச்சரும் அவரின் ஆதரவாளர்களும் கொழும்பில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டனர். தாமதமாகினும், இவ்வழிப்பின் போது வெளி மாவட்ட முஸ்லிம்களும் பங்கேற்றிருந்தனர் என்ற தகவலை அமைச்சர் எஸ்.தொண்டமான் புலப்படுத்தினார் (Sri Lanka Guardian: Non –Tamil identity of Muslims 1 & 2 - A.R.M. Imtiyaz And S.R.H. Hoole). இத்தாக்குதல்களுக்கு சிங்கள வான்படையின் உலங்குவானூர்திகளும் உதவி புரிந்தன என்பது கவனமெடுக்க வேண்டிய தகவலாகும் (Tamilnation: New Year’s Bloody Dawn: Karativu 1985 K.N.Tharmalingam - Northeastern Herald October/November 2003).
மேற்குறிப்பிடப்பட்ட சிறிலங்காவின் முஸ்லிம் அமைச்சர் அமரர் எம்.எச். மொகமது, 1983 கறுப்பு சூலை இனப்படுகொலையின் போது தனது முஸ்லிம் ஆதரவாளர்களை குண்டர்களாகப் பாவித்து மத்திய கொழும்பில் வாழ்ந்து வந்த தமிழர்களையும் அழித்துள்ளார் என்பது கூடுதல் தகவலாகும் (Sri Lanka Guardian: Non –Tamil identity of Muslims 1 & 2 - A.R.M. Imtiyaz And S.R.H. Hoole).
எவ்வாறெயினும் அக்காலத்திலும் ஆங்காங்கே வெகுசில முஸ்லிம்கள் தம்மை மத அடிப்படையில் முஸ்லிமெனாது, பேசும் மொழியால் தமிழராக மட்டும் அடையாளப்படுத்தி தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர். முதல் இஸ்லாமியத் தமிழ் மாவீரர் லெப். ஜோன்சன் {ஜெயா ஜுனைதீன்}, 2.6.1986 அன்று தலைநகர் திருமலைக்கு அருகிலுள்ள மேன்காமம் என்ற சிற்றூரிலிருந்து பிடித்துச்செல்லப்பட்டு சிங்களக் குடியேற்ற ஊரான தெகிவத்தையிலிருந்த படைமுகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 40 தமிழ்ப் பெண்கள் (ஆகக் குறைந்து ஒராள் ஆடை களையப்பட்டு) குறித்த தகவல்களை மேஜர் கணேஸின் முகாமிற்கு ஓடிவந்து வழங்கிய இளைஞன் (விடுதலைப்புலிகள் குரல் 11) என்பன 1987இற்கு முன்னர் நடைபெற்ற நிகழ்வுகளில் நானறிந்த குறிப்பிடத்தக்கன ஆகும்.
தமிழ்த் தேசியப் போராட்டத்திற்குள் மதப் பிளவையும் குழப்பத்தையும் நிரந்தரமாக விதைப்பதை நோக்கமாகக் கொண்டு சிங்களத் தலைவர்களால் கேந்திர கொள்கை மொசாட்டின் ஆற்றுகையோடு வகுப்பிக்கப்பட்டது. அவற்றுள் ஒன்றுதான் முஸ்லீம் ஊர்காவலர்களைப் பாவிப்பதாகும் (Tamilnation: The forced evacuation of Muslims in 1989: Some Reflections, Nadesan Satyendra, 1996). அதை முஸ்லிம் குமுகாயத்திற்குள் நடைமுறைப்படுத்துவதில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நிறுவனர் மு. ஹு. மு. அஷ்ரப் முக்கிய பங்கு வகித்தார். அக்கால கட்டத்தில் சிறிலங்கா அரசோடு சேர்ந்தியங்கி வந்த சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இதில் முக்கிய பங்காற்றியது (விக்கிலீக்ஸ்: SOURCE REPORT ON MUSLIM MILITANCY IN SRI LANKA).
இஸ்லாமிய ஜிகாத் என்ற பயங்கரவாதக் குழுவின் நிறுவனரும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நிறுவனருமான அமரர் மு. ஹு. மு. அஷ்ரப்
கிழக்கு மாகாணத்தில், 1990களுக்கு முன்னர், அஷ்ரப் தனது தொடர்புகளைப் பயன்படுத்தி "இஸ்லாமிய ஜிகாத்" என்ற அமைப்பை நிறுவினார். அதில் ஈ.பி.ஆர்.எல்.எஃவ் உடன் தொடக்கத்தில் தொடர்பு/உறுப்பினராக இருந்த தமிழீழத்தின் தென் மாவட்டங்களைச் சேர்ந்த முஸ்லிம் இளைஞர்களை சேர்த்துக் கொண்டார். பின்னர் மதவெறி மூலம் உந்தப்பட்ட பன்னூறு முஸ்லிம் இளைஞர்கள் தாமாக இணைந்துகொண்டனர்.
இடையில், அஷ்ரபினால் மேற்கோள்ளப்படவிருந்த மற்றொரு நாசத் திட்டத்தையும் குறிப்பிட விரும்புகிறேன்.
1992ம் ஆண்டில், அஷ்ரப் மீண்டும் ஒரு தமிழின அழிப்பிற்கு வலுச்சேர்க்கும் வகையில் கோரிக்கை ஒன்றினை முன்வைத்தார். அவ்வாண்டு சூலை மாதத்தில் தனி முஸ்லிம் படையணி ஒன்றை சிறிலங்கா படைத்துறையில் உருவாக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். ஆனால் சிறிலங்கா படைத்துறை அதிகாரி ஒருவர் இக்கோரிக்கை கருத்தில் கூட எடுத்துக்கொள்ளப்படமாட்டாது என்று மறுத்துரைத்திருந்தார். அப்போது சிறிலங்காவின் ஒட்டுக்குழுவாக விளங்கிய புளட் அமைப்பினைச் சேர்ந்த சித்தார்த்தன், இவ்வுருவாக்கல் மூலம் அஷ்ரப் புதிய சிக்கல்களைத் தோற்றுவிக்க முயல்கிறார் என்று மறுதலித்தார் (முஸ்லிம் ஜிகாத் படையணி: தமிழ்க்குழுக்கள் ஆட்சேபம், 1992/07/31, ஈழநாதம்). இந்த புளட் கும்பலும் (தமிழர்களால் ஆனது), இதே போன்று இன்னொரு கும்பலான ரெலோவும் சிங்களப் படைகளோடு சேர்ந்து தமிழர்களை கொலை செய்தது, 1990களில், என்பது குறிப்பிடத்தக்கது.
இது மறுக்கப்பட்டமையால், பின்னர் மீளவும் 19/10/1992 அன்று மற்றொரு அறிவிப்பை வெளியிட்டார் அஸ்ரப். அதில் முஸ்லிம் படைத்துறைப் பிரிவொன்றை அமைக்கத் தவறினால் தாம் தனி போராளிப் படை ஒன்றை அமைப்போம் என்று உரைத்தார். மட்டுமின்றி சிறிலங்காப் படைத்துறையில் முஸ்லிம் பிரிவு அமைக்க தாம் 10 ஆயிரம் முஸ்லிம்களைத் தருவோம் என்றும் அதனை கொண்டு சிறிலங்காப் படைத்துறையில் உள்ள ஆளணி சிக்கல்களைத் தீர்ப்பதோடு புலிகளுக்கு எதிராகவும் போராடலாம் என்றார். அத்துடன் புலிகளுக்கு மொசாட் உதவுவதாக குற்றஞ்சாட்டியதோடு புலிகளுக்கு எதிராக "ஜிகாத்" என்ற புனிதப்போரை அறிவிக்கவும் தயங்க மாட்டோம் என்றார் (தனிப் போராளிப் படை அமைப்போம்: அஸ்ரப் அரசுக்கு எச்சரிக்கை, 1992/010/19, உதயன்).
இவ்வாறு இஸ்லாமிய ஜிகாத் என்ற பயங்கரவாத அமைப்பில் இணைந்து கொண்டவர்கள், பின்னாளில், இந்தியப்படை ஈழ மண்ணிலிருந்து வெளியேறியவுடன், பிரேமதாசா அரசினால் உருவாக்கப்பட்ட ஊர்காவல்படையினுள் உள்வாங்கப்பட்டனர் (உதயன்: 27/05/1995, "ஜிகாத் " இயக்கம் மீண்டும் தமிழர் விரோத நடவடிக்கை).
இந்த இனமுரண் வளர்ப்பு வேலையானது இந்திய அமைதிப்படையின் கொடூரமான காலகட்டத்திற்குப் பின் உடனடியாக, இரண்டாம் ஈழப்போர் வெடிக்க முன்னர், பிரேமதாசாவால் முன்னெடுக்கப்பட்ட நாச வேலைத்திட்டங்களில் ஒன்றாகும்.
இத் துணைப்படையானது சிறிலங்கா அரசாங்கத்தால் நேரடியாக முஸ்லிம்கள் வாழும் 'ஊர்களை காக்கப்பதற்கான படை' என்று பொருள்படத்தக்க "ஊர்காவல் படை" என்ற பெயரில் ஒரு துணைப்படையாக உருவாக்கப்பட்டது ஆகும்.
இதன் மூலம் ஜே.ஆர்-முதலி திட்டத்தின் தொடர்ச்சியாக, அதன் அடுத்த கட்டமாக, முஸ்லிம்களை அவர்கள் அரசியல்வாதிகள் மூலம் தமிழர் தம் பகைவர் என்ற கொதிநிலைக்கு 1990 இல் இருந்த பிரேமதாச அரசாங்கம் கொணர்ந்து இருந்தது. இதற்கு அதாவுல்லா போன்ற அடுத்த கட்ட தலைவர்களும் இவ்வினமுரணை வளர்ப்பதில் முன்னின்று செயல்பட்டார்கள்.
திரு. ஏ. எல். எம். அதாவுல்லா
முஸ்லிம் ஊர்காவல்படைக்கு உள்ளூர் அரசியல்வாதிகளின் ஆதரவுடன் சிறிலங்காப் படையப் புலனாய்வுப் பிரிவினதும், சிறப்பு அதிரடிப்படையினதும் ஒத்துழைப்புகளும் ஆயுதப் பயிற்சி மற்றும் ஆயுதங்களும் கிடைக்குமாறும் சிறிலங்கா அரசு வழிவகை செய்து வளர்த்தெடுத்தது.
இந்தப் படைக்குத் தேவையான ஆயுதங்கள் சில நேரங்களில் அதாவுல்லாவிற்குச் சொந்தமான ஊர்திகளில் கொண்டுசெல்லப்பட்டு வழங்கப்பட்டன.
இரண்டாம் ஈழப்போரின் தொடக்க ஆண்டான 1990 இல் முஸ்லிம் காடையர்களாலும் (மதவெறி பீடித்த முஸ்லிம்கள்) முஸ்லிம் ஊர்காவற்படையினராலும் (முன்னர் ஜிகாத்) கொலைவெறித் தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டன. இவர்களை சிங்கள சிறப்பு அதிரடிப்படை பின்னின்று இயக்கியது.
இந்தச் சிறப்பு அதிரடிப்படையிலும் பல முஸ்லிம்கள் இணைந்து தமிழர் மீதான தாக்குதல்களை முன்னின்று நடாத்தினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இத்தாக்குதல்கள் சிங்கள இனவாதத்தின் தமிழர் மீதான கோரங்களுக்கு நிகரான ஒரு கட்டுமான-இனப்படுகொலையின் முஸ்லிம் மதவாத பயங்கரவாதத்தின் பாணியாக இருந்தது. இதன் காரணமாக தென் தமிழீழம் வாழ் தமிழ் மக்கள் அல்லோலகல்லோலப்பட்டனர்.
இலங்கையின் கிழக்கு மாகாணத்தின், தென் தமிழீழத்தின், இன விகிதாச்சாரத்தை மறுவடிவமைப்பதில் முஸ்லிம் பயங்கரவாதிகளின் பயங்கரவாதச் செயல்களும் சிங்களவரின் பேரினவாத வன்முறைச் சம்பவங்களும் முக்கிய பங்கு வகித்தன. இந்த மாற்றத்தால் 1948 க்கு முன்னர் தமிழர்கள் அறுதிப் பெரும்பான்மை என இருந்த நிலையிலிருந்து மூவின சமநிலை என்ற நிலைக்கு இம்மாகண சனத்தொகை மாற்றங்கண்டது.
முஸ்லிம் மதப் பயங்கரவாதம் மூலம் மட்டு-அம்பாறை மாவட்டங்களில் பெரிய முஸ்லிம் ஊர்களுக்கு அருகில் இருந்த சிறிய தமிழ் ஊர்களில் வாழ்ந்த தமிழர்களை கொன்று/விரட்டி விட்டு அதன் காணிகளில் நிலப் பரப்புகளை தமது ஊர்களோடு இணைத்துக்கொண்டனர். அதில் வசித்த தமிழர்கள் கொல்லப்பட்டதனாலோ விரட்டியடிக்கப்பட்டதனாலோ மீளத் திரும்பேலாமல் செய்யப்பட்டனர். இச்செயலிற்கு சிறிலங்காவின் சிங்கள அரசும் துணை நின்றது. இதன் மூலம் தமிழரின் இனப்பரம்பல் குறைக்கப்பட்டது.
முஸ்லிம் ஆயுதக் குழுவினர் சிங்களப் படையினரின் துணையோடு, குறிப்பாக சிறப்புப் பணிக்கடப் படை (STF) என்ற சிறப்பு அதிரடிப்படை, தமிழர்களின் ஊர்மனைகளை மண்ணாக்கியதோடு சொத்துக்களை எல்லாம் நாசப்படுத்தினர். அத்தோடு தாங்கள் தாக்கும் ஊர்களில் வாழும் தமிழ் மக்களை கொன்று குவித்ததோடன்றி அங்கு வாழும் தமிழ்ப் பெண்களை காட்டுத்தனமாக வன்புணர்வு செய்து கொடூரமான முறைகளில் கொலை செய்தனர். அகதி முகாம்கள் என்ற போர்வையில் சிங்கள அரசாங்கத்தால் அமைக்கப்பட்டிருந்த தடுப்பு முகாம்களுக்குள் புகுந்து தமிழர்களை கட்டுக்கட்டாகப் பிடித்துச்சென்று கொன்றொழித்தனர். இக்கொலைகளில் பெரும்பாலானவை சாட்சியங்கள் கிடக்காதவாறு துடைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறான முஸ்லிம் பயங்கரவாதத்தின் படுகொலைகளால் தமிழர்கள் பட்ட வேதனைகள் கொஞ்சநஞ்சமல்ல. வீடுவாசல்களைத் துறந்து மரங்களுக்குக் கீழும், மதகுகளுக்குக் கீழும், படுவான்கரைக் காடுகளிலும், ஆற்றங்காரை ஓரங்களில் சிறு குடிசைகள் அமைத்தும் தப்பியொட்டி வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். இவர்களில் சிலர் ஒருநேர உணவிற்கே வழியின்றியும் சிலர் இரவு வேளைகளில் ஊர்மனைகளுக்குச் சென்று தேங்காயையும் மாங்காயையும் எடுத்து வந்து உண்ணும் அவல நிலைக்கும் தள்ளப்பட்டிருந்தனர். ('துன்பங்களைப் பகிர்ந்துகொள்வோம்' & 'இப்படித்தான் தென்தமிழீழம் விடுதலைப்போருக்கு விலை செலுத்துகிறது' ஐப்பசி-கார்த்திகை 1990, விடுதலைப்புலிகள்)
1732 ச. மைல் பரப்பளவான அம்பாறை மாவட்டத்தில் 1200 ச. மைல்களை சிங்களவர்கள் வன்வளைத்துவிட்டார்கள், 1990 வரையில் ('துன்பங்களைப் பகிர்ந்துகொள்வோம்', ஐப்பசி-கார்த்திகை 1990, விடுதலைப்புலிகள்). அம்பாறையின் ஏனைய இடங்களில் வாழும் தமிழ் பேசும் முஸ்லிம்கள் ஏனைய இடங்களில் வாழும் தமிழர்கள் 80,000 பேரை பயங்கரவாதம் மூலம் விரட்டி வந்தனர், 1991 வரையில்.
1990களில், ஒரு கட்டத்தில், முஸ்லிம் ஊர்காவல் படையினரின் கொலைவெறிக் கோரத் தாக்குதல்கள் ஓய்ந்தாலும், பின்னாளில் ஜெனீவா போர்நிறுத்த உடன்படிக்கை செய்துகொள்ளப்பட்டதன் பின்னர் மீண்டும் முளைவிட்டது. அது ஏற்கனவே செயலுற்றுக்கொண்டிருந்த ஏனைய ஒட்டுக்குழுக்களுடன் சேர்ந்து இயங்கத் தொடங்கியது. இத்தகவலானது 2006ம் ஆண்டு இரண்டாம் மாதத்தில் ஜெனிவாவில் வைத்து 'தேசத்தின் குரல்' அன்ரன் பாலசிங்கம் அவர்களால் அரசாங்கத்திடம் முன்வைக்கப்பட்ட ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது பெருத்த சர்ச்சைகளை தோற்றுவித்திருந்தது.
ஆனால் இவ்வறிக்கையின் முழு விரிப்பும் புலிகளால் ஏனோ பொதுவெளியில் - ஊடகங்களுக்கு - வெளியிடப்படவில்லை. கசிந்த குறிப்பிடத்தக்க தகவல்களை சண்டே லீடர் வாரயேடு 2006ம் ஆண்டு மார்ச் மாதம் இறுதியில் வெளியிட்டது. இத்தகவலையெடுத்து பல்வேறு தமிழ் நாளேடுகள் வெளியிட்டிருந்தன.
இவ்வறிக்கையில், குறிப்பாக, திருகோணமலை மாவட்டத்தில் நூர்தீன் நிஜாம், நூர்தீன் ஷரோம், பஷீன் ஷரோம், குனேஸ் நஜீம் ஆகியோர் தலைமையில் இயங்கும் ஜிகாத் குழுக்கள் என்ற முஸ்லிம் ஆயுதக்குழுக்களின் முழு விரிப்பும் தெரிவிக்கப்பட்டிருந்தது (தினக்குரல் வழியாக யாழ் கருத்துக்களம் 2: முஸ்லிம் ஆயுதக் குழுக்கள் தொடர்பில் பஃவ்ரல் அமைப்பு வெளியிட்ட அறிக்கை, 19/03/2006).
தென் தமிழீழத்தில் ஜிகாத் குழுக்களின் முதன்மைத் தளங்களாக மூதூர், கிண்ணியா, தோப்பூர், ஓட்டமாவடி, ஏறாவூர், காத்தான்குடி, அக்கரைப்பற்று போன்ற சிறிலங்காப் படைகளின் வன்வளைப்பிற்குட்பட்ட பரப்புகள் விளங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது (தினக்குரல் வழியாக யாழ் கருத்துக்களம் 2: முஸ்லிம் ஆயுதக் குழுக்கள் தொடர்பில் பஃவ்ரல் அமைப்பு வெளியிட்ட அறிக்கை, 19/03/2006).
மேலும், அம்பாறை மாவட்டத்தில் செல்வாக்கு செலுத்தும் முக்கிய முஸ்லிம் அரசியல்வாதி ஒருவருடன் இந்த ஆயுதக் குழுக்கள் கமுக்கமாக செயற்படுவதாக பல தரப்பினராலும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
அத்துடன் இவ்வறிக்கையில் இவர்களுக்கு நிதியுதவி மற்றும் ஆயுதப் பயிற்சி வழங்கியோர் குறித்த தகவல்களும் இடம்பெற்றிருந்ததாக கசிந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜிகாத் அமைப்புடன் தொடர்புடைய பல முக்கிய முஸ்லிம் பயங்கரவாதிகள் 2006ம் ஆண்டிற்கு முன்பு இஸ்லாமிய மதக் கல்வியைப் பெறுகிறோம் என்ற போர்வையில் பாக்கிஸ்தானிய புலனாய்வுத்துறையின் ஆதரவுடன் பாக்கிஸ்தானுக்குக் கொண்டுசெல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இவர்கள் பாக்கிஸ்தானின் மலைச் சாரல்களில் லஷ்கர்-இ-தொய்பா என்ற பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய பயங்கரவாதிகளால் உள்வாங்கப்பட்டு ஆயுதப் பயிற்சியை அவர்களிடத்தில் பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. 2006ம் ஆண்டில் சிறிலங்காவிற்கான அரசதந்திரியாக பணியாற்றிய பாக்கிஸ்தான் உளவுத்துறையின் உயர் அதிகாரி ஒருவர் ஜிகாத் ஆயுதக்குழுவிற்கு பயிற்சி அளித்து ஒருங்கிணைத்து உதவியதாகவும் கூறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது (வீரகேசரி வழியாக யாழ் களம் 2: புலனாய்வு பிரிவின் நெறிப்படுத்தலில் திருகோணமலையில் ஜிகாத்குழு, 12/03/2006).
முஸ்லிம் ஆயுதக் குழுக்களுக்கும் பாக்கிஸ்தானுக்குமான தொடர்பை பின்னாளில் கசிந்த விக்கிலீக்ஸ் தகவல்கள் மூலமும் உறுதிப்படுத்தக்கூடியதாக உள்ளது.
விக்கிலீக்ஸின் தகவலின் படி, தமிழீழத் தலைநகர் திருகோணமலையில் நொக்ஸ் குழு (மதிப்பிற்குரிய ஆங்கிலேயன் ஒருவரின் பெயரால் பெயரிடப்பட்டது), ஒசாமா குழு, ஜெட்டி குழு (Jetty==இறங்குதுறை. இதில் துறைமுகத்தில் வேலை செய்யும் முஸ்லீம்களே பெருவாரியாக இடம்பெற்றிருந்தனர்.) ஆகியன செயற்பட்டன. அம்பாறையில், முஜாகிதீன் குழு செயலுற்றது. 2006இன் நிலைமையின் படி 150 ஆயுததாரிகள் இதில் உறுப்பினராய் இருந்துள்ளனர். இந்த ஆளணி எண்ணிக்கையானது ஒசாமா குழுவை விட அதிகமாகும். இந்தக் குழுக்களிடம் புலிகளிடமிருந்து பிரிந்து சென்று தேச வஞ்சகமிழைத்த கருணா குழுவினது ஆயுதங்கள் இருந்தனவாம் (விக்கிலீக்ஸ்: SOURCE REPORT ON MUSLIM MILITANCY IN SRI LANKA).
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தற்போதைய தலைவர் திரு. ரவூப் ஹக்கீம் | இப்படமானது இவர் சிறிலங்கா அரசாங்கத்தின் போர்க்குற்றங்கள் தொடர்பான குற்றஞ்சாட்டல்களுக்கு மறுப்புத் தெரிவித்து சிங்கள அரசைக் காப்பாற்ற அல் ஜெசீரா தொலைக்காட்சியில் நேர்காணல் வழங்கிய போது எடுக்கப்பட்டதாகும்.
இவ்வாறாக முஸ்லிம் ஆயுதக் குழுக்கள் குறித்த ஆதாரங்கள் தவிபு ஆல் முன்வைக்கப்பட்ட போதிலும் அப்படி எதுவும் இல்லையென்று சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அடியொட்ட மறுத்துரைத்தார். ஆயினும் பஃவ்ரெல் (PAFFREL) அமைப்பு தம்மிடம் இதற்கான ஆதரங்கள் உள்ளதாக தெரிவித்துள்ளதென்று தினக்குரல் 19/03/2006 அன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஆனால் இதே ஹக்கீம் தான் 2002ம் ஆண்டு சூன் 23ம் நாள் தமிழீழ விடுதலைப் புலிகளின் மூதூர் அரசியல்துறை அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்ட போது முஸ்லிம் தீவிரவாதக் குழுக்களின் செயற்பாட்டை அக்குழுக்களின் பெயரைக் குறிக்காமல் ஒப்புக் கொண்டார் (புதினம்: கிழக்கில் உதயமாகிறது "ஜிகாத்" குழு!, 28/03/2006) என்பது குறிப்பிடத்தக்கது.
இதுபோன்ற இந்த முஸ்லிம் பயங்கரவாதக் குழுக்களின் செயற்பாடுகளால் தமிழர்கள் எண்ணற்ற வேதனைகளை அனுபவித்தனர். எனினும் தென் தமிழீழம் வாழ் தமிழ் மக்கள் இக்கொடுமைகளையெல்லாம் தாங்கியபடியே மனவுறுதி தளராமல் தொடர்ந்தும் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு பங்களித்தனர்.
*****