ஈழத்திற்கு மாற்றீடான தீர்வை முன்வைத்தால் தனிநாட்டுக் கோரிக்கையினைக் கைவிடத் தயார் - அமிர்தலிங்கமும் உமா மகேஸ்வரனும்
லெப்டினன்ட் ஜெனரல் வேர்னன் வோல்ட்டர்ஸ்
பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண்பதில் நிபுணராக விளங்கிய லெப்டினன்ட் ஜெனரல் வேர்னன் வோல்ட்டர்ஸ் எனும் இராணுவ அதிகாரியை ஜெயவர்த்தனவைச் சந்திப்பதற்காக அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரீகன் அனுப்பிவைத்தார். இந்திரா காந்தி அமிர்தலிங்கத்தைச் சந்தித்த ஐப்பசி 17 ஆம் திகதிக்கு சில நாட்களுக்குப் பின்னர் அமெரிக்காவின் ராணுவ அதிகாரி இலங்கைக்குப் பயணமானார்.அமெரிக்காவின் மூலோபாயத் திட்டமிடல் மற்றும் உளவு அமைப்பின் திறமையான அதிகாரி என்று போற்றப்பட்ட வேர்னன் வோல்ட்டர்ஸ், ஜனாதிபதி ரீகனுக்காக பல நடவடிக்கைகளை வெற்றிகரமாகச் செய்தவர் எனும் மரியாதையினைப் பெற்றிருந்தவர். ஆகவே, இந்தியாவின் பாதுகாப்புக்குப் பங்கம் விளைவிக்கக் கூடிய இந்திய எதிர்ப்பு நடவடிக்கைகளின் சூத்திரதாரியே இந்த அதிகாரிதான் என்று இந்திய அதிகாரிகள் கருதினர்.
ஜெயவர்த்தனவுடன் பல மணிநேர தனிப்பட்ட உரையாடல்களில் வேர்னன் வோல்ட்டர்ஸ் பங்குகொண்டார். பிற்காலத்தில் ஜெயவர்த்தனவின் சுயசரிதையினை எழுதிய கே.எம்.டி சில்வா மற்றும் ஹவார்ட் ரிக்கின்ஸ் ஆகியோருடன் பேசும்போது இந்தியாவுடனனான தொடர்பாடல்களுக்கான பாதை அமெரிக்காவைப் பொறுத்தவரை மிகவும் குறுகலானது என்று தான் ஜெயாரிடம் கூறியதாகத் தெரிவித்திருந்தார்.
ஜெயவர்த்தனவின் சுயசரிதையில் மேலும் சில தகவல்களை வோல்ட்டர்ஸ் வழங்கியிருந்தார். ஜெயாருடனான ஆலோசனைகளின்போது தான் தமிழ்ப் பிரிவினைவாதிகளுடனும், இந்தியாவுடனும் தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும்படி ஜெயாரிடம் கேட்டுக்கொண்டதாக வோல்ட்டர்ஸ் கூறியிருந்தார். மேலும், இலங்கையின் நிலைமைகள் மேலும் மோசமடைந்துசென்றால், இந்தியா இராணுவ ரீதியில் தலையிடுவதற்கான சாத்தியம் இருப்பதாக தான் ஜெயாரிடம் தெரிவித்ததாகவும் கூறினார்.
ஆனால் ஜெயாரை ஆசுவாசப்படுத்தவே தனது உயர் இராணுவ அதிகாரியை அமெரிக்கா அனுப்பி வைத்ததை இந்தியா நம்ப மறுத்தது. இந்த அதிகாரியின் வருகை குறித்து அன்றைய இந்தியத் தூதுவர் ஜே.என்.டிக்ஷித் பின்வருமாறு தனது சுயசரிதைப் புத்தகத்தில் எழுதுகிறார்,
"தமிழ்ப் போராளிகளுக்கு இந்தியாவில் வழங்கப்பட்டுவரும் பயிற்சிகள், ஆயுத உதவிகள் குறித்து வோல்ட்டர்ஸ் ஜெயவர்த்தனவிடம் விலாவாரியாக விபரித்தார். மேலும், இலங்கைக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான தொடர்பாடல் முகவராகச் செயற்பட அமெரிக்கா விரும்புவது குறித்தும் பேசினார். இஸ்ரேலிடமிருந்து இராணுவத் தளபாடங்களையும், புலநாய்வு உதவிகளையும் இலங்கை பெற முயன்று வருகிறது. மேலும், இந்தியா தொடர்பான புலநாய்வுத் தகவல்களைச் சேகரிக்க இலங்கையினை கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த தளமாகப் பாவிப்பதும் வோல்ட்டார்ஸின் இன்னொரு நோக்கமாகும். அத்துடன் இங்கிலாந்து மற்றும் பாக்கிஸ்த்தான் ஆகிய நாடுகளின் முன்னாள் இராணுவ வீரர்களை இலங்கை இராணுவத்தில் கூலிப்படையினராக உள்வாங்கும் நடவடிக்கைகளை ஆரம்பிக்க அவர் ஒத்துக்கொண்டார். இந்த விபரங்களை இலங்கையிலிருக்கும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் ஊடாகவும் வோஷிங்க்டனில் இருக்கும் தகவலறிந்த வட்டாரங்கள் ஊடாகவும் உறுதிப்படுத்தியிருக்கிறது" என்று எழுதுகிறார்.
ஐப்பசி 17 ஆம் திகதி அமிர்தலிங்கத்துடனான சந்திப்பினையடுத்து ஊடகங்களிடம் பேசிய இந்திரா, இலங்கையில் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது பதவிகளை இழக்கும் அபாயகரமான சூழ்நிலை உருவாகி வருவதாகக் கூறினார். தாம் ஒத்துக்கொண்ட விடயங்களிலிருந்து பின்வாங்கும் இலங்கையரசு, பேச்சுவார்த்தைகளை வேண்டுமென்றே பிற்போட்டுவருவதாகவும் குற்றஞ்சாட்டினார். ஆகவே, பேச்சுவார்த்தைகளை மீள ஆரம்பிக்கும் பொருட்டு தான் பார்த்தசாரதியை மீண்டும் இலங்கைக்கு அனுப்பப்போவதாகக் கூறினார்.
இந்திரா காந்தி இந்த அறிவிப்பினை வெள்கியிட்டவேளை, பார்த்தசாரதியை இரண்டாவது தடவையாக பேச்சுக்களுக்கு அழைக்கும் முடிவினை ஜெயார் எடுத்திருக்கவில்லை. ஆனால், இந்தியத் தூதுவர் சத்வால் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஹமீதைத் தொடர்புகொண்டு இரண்டாவது சுற்றுப் பேச்சுக்களுக்கு பார்த்தசாரதியை ஜெயவர்த்தன அழைக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். வோல்ட்டர்ஸின் அறிவுரைக்கு அமைவாக, பாரத்தசாரதியை இரண்டாவது சுற்றுப் பேச்சுக்களுக்கு அழைக்க ஜெயவர்த்தன சம்மதித்தார்.
பார்த்தசாரதியை இரண்டாவது சுற்றுப் பேச்சுக்களுக்கு அழைக்கும்படி தொண்டைமானும் ஜெயாரிடம் கேட்டுக்கொண்டிருந்தார். பார்த்தசாரதியின் அழைப்பின்பேரில் தொண்டைமான் ஐப்பசி 10 திகதியிலிருந்து 20 ஆம் திகதிவரை இந்தியாவுக்குச் சென்றிருந்தார். அங்கிருந்த நாட்களில் தொண்டைமான் இந்திரா காந்தி, நரசிம்ம ராவோ, எம்.ஜி.ஆர், கருநாநிதி மற்றும் புளொட் தலைவர் உமா மகேஸ்வரன் ஆகியோரைச் சந்தித்தார். மேலும், அமிர்தலிங்கம், சிவசிதம்பரம், சம்பந்தன் ஆகியோருடனும் தொடர்ச்சியான கலந்தாலோசனைகளில் அவர் ஈடுபட்டார்.
இந்திரா காந்தி, நரசிம்ம ராவோ மற்றும் பார்த்தசாரதி ஆகியோருடனான தொண்டைமானின் பேச்சுவார்த்தைகள் முக்கியமானவையாகக் காணப்பட்டன. இனப்பிரச்சினை தொடர்பாக தொண்டைமான் காத்திரமான பங்கின ஆற்றவேண்டும் என்று இந்திரா தன்னிடம் கோரியதாக அவர் என்னிடம் கூறினார். தமிழர்களை பிரித்தாளும் ஜெயாரின் சதிக்கெதிராக தமிழர்கள் ஒன்றுபட்டுச் செயற்பட வேண்டும் என்று இந்திரா தன்னிடம் கூறியதாக அவர் தெரிவித்தார். தமிழர்களின் உரிமைகளை வென்றெடுக்க அனைத்துத் தமிழ்க் கட்சிகளும் ஒரு அமைப்பாக ஒன்றிணையும் முயற்சிக்கு தான் ஆதரவளிக்க ஒத்துக்கொண்டதாகவும் அவர் கூறினார். மேலும், ஈழத்திற்கு மாற்றீடான, அதேவேளை தமிழர்களின் அபிலாஷைகளைப் பூர்த்திசெய்யக்கூடிய தீர்வுகுறித்தும் இந்திரா தன்னிடம் வினவியதாகவும் கூறினார்.
"ஒன்றிணைந்த வடக்குக் கிழக்கு மாகாணங்களில், தம்மைத்தாமே ஆள்வதற்கான தீர்வொன்றினை வழங்கும் பட்சத்தில் தமிழர்கள் அதனை ஏற்றுக்கொள்வார்கள்" என்று தான் இந்திராவிடம் கூறியதாக அவர் என்னிடம் தெரிவித்தார். தனது பரிந்துரையினை வரவேற்ற இந்திரா இதுகுறித்து அனைவருடனும் தொடர்ந்து பேசுமாறு தன்னை கேட்டுக்கொண்டதாகவும் கூறினார். "நான் இதனையே இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உத்தியோகபூர்வ நிலைப்பாடாகவும் வரிந்து கொண்டேன்" என்று அவர் மேலும் கூறினார்.
இந்திராவிடம் தான் பேசிய விடயங்கள் தொடர்பாக தில்லியில் தன்னைச் சந்தித்த தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் மற்றும் சென்னையில் தன்னைச் சந்தித்த உமா மகேஸ்வரன் ஆகியோரிடம் தொண்டைமான் பேசினார். தொண்டைமானின் நிலைப்பாடு தொடர்பாக அமிர்தலிங்கமும் உமா மகேஸ்வரனும் திருப்தி தெரிவித்திருந்தார்கள்.
உமா மகேஸ்வரனுடனான தனது சந்திப்பை பலரும் அறியும்வகையில் நடத்த தொண்டைமான் விரும்பினார். இச்சந்திப்புக் குறித்து சென்னைப் பத்திரிக்கையாளர்களுக்கு அறியத்தந்த தொண்டைமான், சந்திப்பின் பின்னர் பத்திரிக்கையாளர் மாநாடு ஒன்றினையும் ஒழுங்கு செய்தார். உமா மகேஸ்வரன் எனும் போராளித் தலைவரை ஜெயாரின் அரசாங்கத்தின் அமைச்சர் என்கிற வகையில் அல்லாமல், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் என்கிற வகையிலேயே தான் சந்தித்ததாகக் கூறினார். ஈழத்திற்கு மாற்றீடான தீர்வினை இலங்கையரசு முன்வைக்குமிடத்து அதனை பரிசீலிக்கத் தயாராக இருப்பதாக உமா தன்னிடம் தெரிவித்ததாக அவர் கூறினார்.
மேலும், ஈழத்திற்கு மாற்றீடான, ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வொன்றினை இலங்கையரசு முன்வைக்குமிடத்து, ஈழக் கோரிக்கையினைக் கைவிட தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரும் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்தார்.
ஐப்பசி 22 ஆம் திகதி இலங்கை திரும்பிய தொண்டைமான், மறுநாள் ஜெயாரைச் சந்தித்து தில்லியிலும் சென்னையிலும் இனப்பிரச்சினை குறித்து நிலவும் சூழ்நிலையினை விலாவாரியாக விளக்கினார். தமிழர்களின் பிரச்சினைக்கான தீர்வினை கொண்டுவர பார்த்தசாரதியை மீளவும் பேச்சுக்களுக்கு அழைக்குமாறு ஜெயாரைக் கேட்டுக்கொண்டார். மிதவாத தமிழ்த் தலைமைகளும், உமா மகேஸ்வரனின் புளொட் அமைப்பும் ஈழத்திற்கு மாற்றீடான தீர்வொன்று முன்வைக்கப்படும் பட்சத்தில் தனிநாட்டுக் கோரிக்கையினைக் கைவிடத் தயாராக இருப்பதாக ஜெயாரிடம் கூறினார் தொண்டைமான். ஒன்றிணைந்த வடக்குக் கிழக்கு மாகாணங்களில் சுயாட்சியுள்ள கட்டமைப்பு ஒன்றே தமிழர்கள் எதிர்பார்க்கும் ஈழத்திற்கு மாற்றீடான தீர்வாக இருக்கும் என்று ஜெயாரிடம் அவர் தெரிவித்தார்.