அவன் தூரத்தில் வரும்போதே துர்நாற்றம் ஒன்று வீச அந்தப் பெரிய கண்ணாடியை மீறி சிறிய கடிதங்கள் மட்டுமே போகக்கூடிய இடைவெளியூடாக அந்த நாற்றம் என் மூக்கில் அறைய நான் என்னை அறியாமலேயே கைகளால் மூக்கைப் பொத்திவிட்டு ஒரு வாடிக்கையாளருக்கு முன் அப்படிச் செய்வது அழகல்ல எனறு எண்ணி கைகளைக் கீழே விட, அவன் அந்த இடைவெளியால் தாளைத் தருகிறான். அவனுக்குரிய பணத்தைக் கொடுத்துவிட வழமைபோல் நன்றி கிருஷ்ணா என்றபடி திரும்புகிறான். அவன் கைகளில் வைத்திருந்த பொருட்கள் அப்போதுதான் என் கண்ணில் தெரிகின்றன.
"உன் பெயர் என்ன"
"மார்ட்டீன்"
"எதற்கு இந்த வண்ணக் கட்டிகளையும் பென்சில்களையும் வாங்கிக்கொண்டு செல்கிறாய்"
"நான் ஆர்ட் கீறுவதில் மாஸ்ரேஸ் முடித்திருக்கிறேன். எனக்குத் தோன்றும் நேரங்களில் படங்கள் கீறுவேன்"
"உனக்குக் குடும்பம் இருக்கிறதா"
"யாரும் இப்போ இல்லை"
"வீடு கூட கவுன்சில் தரவில்லையா"
"எனக்கு வீடு இருக்கிறது. இரவில் மட்டும் அங்கு சென்று தூங்குவேன்"
"என்னைத் தவறாக நினைக்காதே. உன்னில் ஒரு கூடாத மணம் வருகிறது. இத்தனை படித்த நீ ஏன் சுத்தமாக இருக்கக் கூடாது."
"ஓகே"
என்றுவிட்டு அவன் செல்ல, வெளியே கடையில் தட்டுக்களில் பொருட்களை அடுக்கிக்கொண்டிருந்த ஒருவர்
"என்ன அக்கா. ஏன் இப்பிடி மணக்குது என்று அவனுக்குச் சொன்னீர்கள்"
"அப்பவாவது அவன் குளித்து உடைமாற்றிக்கொண்டு வருக்கிறானா என்று பார்ப்போம். எத்தனை நாட்கள்தான் அவனின் நாற்றத்தைத் தாங்குவது"
"நீக்கள் சொன்னது போலத்தான் எங்கட முதலாளியும் அவனுக்கு ஒருநாள் சொன்னவர். அவன் அதைக் கேட்டிட்டு "ஜோன் எனக்கு ஒண்டும் சொல்லாதை. நான் இப்பிடித்தான் இருப்பன். எனக்கு மில்லியன் வியூவேர்ஸ் இன்ஸ்ரகிறாமில் இருக்கினம். உனக்குப் பிடிக்காட்டில் நான் எதிர்ப்பக்கம் இருக்கிற கடையில போய் இருக்கிறன்" என்றானாம். அதன்பின் முதலாளி வாயே திறக்கிறேல்லை. ஆனால் நீங்கள் பொம்பிளை எண்டதால ஒண்டும் சொல்லாமல் போறான்.
நான் சிரித்துவிட்டு என் அழுவலைப் பார்க்கிறேன்.
அடுத்த நாள் வேலையை ஆரம்பித்து பத்து நிமிடம் செல்ல மார்ட்டீன் என்னை நோக்கி வந்து குட் மோர்னிங் கிருஷ்ணா என்கிறான்.
நேற்று அவனுடன் கதைத்த பின் எனக்கு அவன்மேல் ஒரு மதிப்புக் கூடியிருந்தது. அதற்குக் காரணம் அவன் படித்திருக்கிறான் என்பது மட்டுமல்லாமல் நான் வேலை முடிந்து செல்லும்போது அவன் மட்டையில் வரைந்து முடித்திருந்த அந்த அழகிய அர்த்தம்பொதிந்த ஓவியமும்தான்.
இன்று நான் சுத்தமாக வந்திருக்கிறேன் என்று தன் ஆடையையும் தொட்டுக் காட்ட அப்பதான் அட இவனில் இன்று எந்தத் துர்நாற்றமும் வீசாததை நான் கவனிக்கவில்லையே என வியந்தபடி மிக்க நன்றி மார்ட்டீன். என் பேச்சு உன்னை காயப்படுத்தியிருந்தால் மன்னித்துக்கொள் என்கிறேன்.
இல்லை இல்லை. நான் ஒன்றும் நினைக்கவில்லை. கடவுள் உன்னை ஆசீர்வதிக்கட்டும் என்றபடி திரும்பிச் செல்ல என் மனம் நிம்மதி அடைகிறது.
கடைக்கு வரும் பலரும் அவனுக்கு பணம் கொடுப்பது மட்டுமன்றி அவனைக் கூட்டிவந்து அவனுக்குத் தேவையான உணவுகளைக்கூட வாங்கிக் கொடுப்பார்கள். அங்கு மெசினில் கோப்பி அல்லது தேநீர் கூட அவனாகவே வாங்குவதுமுண்டு. மற்றவர்களும் வாங்கிக் கொடுப்பதும் உண்டு. சில நேரங்களில் கையில் பணம் இல்லாதபோது கடையில் நிற்போரிடம் கடன் சொல்லி வாங்கிவிட்டுப் பணம் சேரும்போது கொடுத்தும்விடுவான்.
இப்ப இரண்டு வாரங்களாக அவனைக் கடைக்கு முன் காணவில்லை. அவன் மன அழுத்தம் காரணமாக மீண்டும் வைத்தியசாலைக்குச் சென்றுவிட்டானோ? காலையில் எழுந்து பல்விளக்கி முகம் கழுவுகிறானோ என்று கூடத் தெரியாது. குடும்பம் இல்லை. வேறு தொந்தரவுகள் இல்லை. வீதியிலேயே இருப்பதால் வீடு இருந்தாலும் கரண்ட் காசுகூடக் கட்டும் தேவை இல்லாத அவனுக்கே மன அழுத்தம் என்றால் இத்தனை சுமைகளைத் தாங்கி இத்தனைகாலம் குடும்பமாய் வாழும் எனக்கு எத்தனை மனஅழுத்தம் இருக்கவேண்டும். அதனைக்கும் அசையாது இத்தனை மனத்திடத்துடன் நான் இருக்கிறேன் என்னும் பெருமிதமும் எனக்குள் ஏற்படாமல் இல்லை.
இருவாரம் ஒரு மாதமாகி ஆறு ஏழு மாதங்களாகியும் அவன் மீண்டும் வரவேயில்லை. அவன் தொடர்ந்தும் மருத்துவமனையில் தான் இருக்கிறானா?? அன்றி அவனுக்கு எதுவும் நேர்ந்துவிட்டதா என்னும் பதைப்பும் என்னுள் எழுந்து மடிய பலரிடம் விசாரித்தும் அவனைப்பற்றி யாருக்கும் எதுவும் தெரியவேயில்லை. அவன் இருக்கும் இடத்தில் அவன் வைத்துவிட்டுப் போன அந்த மட்டையும் சில நிறம் தீட்டும் பென்சில்களும் கேட்பாரற்று அங்கேயே இன்றுவரை கிடக்கின்றன.