Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. Published By: DIGITAL DESK 3 20 MAY, 2025 | 04:55 PM கொழும்பு, ஹேவ்லாக் டவுன் பகுதியில் அமைந்துள்ள ஆடம்பர தொடர்மாடி குடியிருப்புக்குள் பெண்ணொருவர் ரி - 56 ரக துப்பாக்கியை கொண்டு சென்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, குறித்த ஆடம்பர தொடர்மாடி குடியிருப்பிலுள்ள தனது வீட்டுக்கு பெண்ணொருவர் ரி-56 ரக தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கியை கொண்டு சென்றுள்ளார். இவர் துப்பாக்கியை வாகனத்தில் இருந்து எடுப்பதை அவதானித்த அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரி ஒருவர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார். சம்பவ இடத்திற்கு சென்ற வெள்ளவத்தை பொலிஸார் குறித்த வீட்டை பரிசோதனை செய்து பெண்ணை கைது செய்துள்ளனர். இதன்போது, பை ஒன்றில் இருந்த ரி-56 துப்பாக்கியையும் கைப்பற்றியுள்ளனர். துப்பாக்கியை வைத்திருந்த பெண் மற்றும் சம்பவத்துடன் தொடர்புடைய பிற நபர்கள் தொடர்பில் வெள்ளவத்தை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். https://www.virakesari.lk/article/215253
  2. ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பிரேசிலில் உள்ள கொபகபானா கடற்கரைக்கு பிரிட்டனைச் சேர்ந்த இளைஞர்கள் குழுவாக சுற்றுலா சென்றுள்ளனர். இந்த நிலையில் நண்பர்களுடன் மணலில் குழி தோண்டிய பிரிட்டிஷ் சுற்றுலாப்பயணி ஜென்சன் ஸ்டர்ஜென் தான் தோண்டிய குழியிலே சிக்கிக் கொண்டார். சுமார் மூன்று மணி நேரம் சிக்கியிருந்தவருக்கு வழிப்போக்கர்கள் மற்றும் மீட்பு வீரர்கள் இணைந்து அவருக்கு பியர் கொடுத்தனர். சம்பவ இடத்தில் இருந்தவர்கள், அவர் குழிக்குள் குதித்தபோது மணல் சரிந்ததாகத் தெரிவித்தனர். அதிர்ஷ்டவசமாக அலைகள் வரும் முன்பே அவர் மீட்கப்பட்டார். https://www.bbc.com/tamil/articles/c6288z85el4o
  3. INNINGS BREAK 62nd Match (N), Delhi, May 20, 2025, Indian Premier League RR chose to field. Chennai Super Kings (20 ov) 187/8 Current RR: 9.35 • Last 5 ov (RR): 41/2 (8.20) Rajasthan Royals Win Probability: CSK 44.39% • RR 55.61%
  4. 20 MAY, 2025 | 05:41 PM யாழ்ப்பாணத்தை ஆட்சி செய்த 2ஆம் சங்கிலியன் மன்னனின் 406ஆவது நினைவு தினம் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (20) யாழ்ப்பாணத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் முத்திரைச் சந்தியில் அமைந்துள்ள சங்கிலியன் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து, 2ஆம் சங்கிலிய மன்னனின் வரலாற்றுக் குறிப்புகள் அடங்கிய நூலொன்றும் வெளியிட்டு வைக்கப்பட்டது. சிவசேனையின் ஏற்பாட்டில் யாழ்ப்பாண பல்கலைக்கழக ஓய்வு நிலை பேராசிரியர் க.தேவராஜா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மருதனார் மடம் ஆஞ்சநேயர் கோவில் ஆதீன கர்த்தா சிவஶ்ரீ சுந்தரேஸ்வரக் குருக்கள், இந்திய துணைத் தூதரக அதிகாரி நாகராஜன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், யாழ். மாநகர ஆணையாளர் ச.கிருஷ்ணேந்திரன், மதத் தலைவர்கள், வர்த்தகர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/215261
  5. ஒரு போட்டிக்கு ஒரு சிக்ஸ் அடிச்சா தல ரசிகக் குஞ்சுகள் மகிழ்ச்சி அடைகிறார்கள் என்று தல 17 பந்தில் 16 ஓட்டம் எடுத்து ஆட்டமிழந்துவிட்டார்.
  6. Published By: VISHNU 20 MAY, 2025 | 07:50 PM ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் வடக்கு மாகாண பிரதமச் செயலாளராக தனுஜா முருகேசன் நியமிக்கப்பட்டுள்ளார். அதற்கமைவான நியமனக் கடிதம் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் இன்று (20) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் அவருக்கு வழங்கப்பட்டது. https://www.virakesari.lk/article/215275
  7. 20 MAY, 2025 | 02:04 PM மனிதாபிமான உதவிகள் இல்லாததன் காரணமாக அடுத்த 48 மணிநேரத்தில் காசாவில் 14000 குழந்தைகள் உயிரிழக்கும் அபாயநிலை உருவாகியுள்ளதாக ஐநா எச்சரித்துள்ளது. ஐக்கிய நாடுகளின் மனிதாபிமானவிவகாரங்களிற்கான தலைவர் டொம்பிளெச்சர் இதனை பிபிசிக்கு தெரிவித்துள்ளார். காசாவிற்குள் நேற்று ஐந்து டிரக்குகளில் மனிதாபிமான உதவிகள் சென்றன ஆனால் இது சமுத்திரத்தில் சிறுதுளியே இது அங்குள்ள மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கு முற்றிலும் போதாது என அவர் தெரிவித்துள்ளார். குழந்தைகளிற்கான உணவு சத்துணவு ஏற்றப்பட்ட லொறிகள் காசாவில் நிற்கின்றன ஆனால் அவை எல்லையில் காத்திருப்பதால் பொதுமக்களை சென்றடையவில்லை என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/215226
  8. 20 MAY, 2025 | 04:44 PM ரணவிரு சேவை அதிகாரசபையின் வேண்டுகோளின் பேரில், யுத்தத்தினால் காயமடைந்த வீரர்களின் சிகிச்சை மற்றும் புனர்வாழ்வுக்காக இயங்கிவரும் பராமரிப்பு நிலையங்களுக்குத் தேவையான 05 வாகனங்களை கையளிக்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை (20) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்திற்குரிய வாகன தளத்தில் நடைபெற்றது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அறிவுறுத்தலின் பேரில் இந்த வாகனங்கள் வழங்கப்பட்டதோடு அது தொடர்பான ஆவணங்களை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, ரணவிரு சேவை அதிகாரசபையிடம் கையளித்தார். இலங்கை இராணுவத் தலைமையகத்தின் ரணவிரு சேவை அதிகாரசபையின் சார்பாக மேஜர் எரங்க ரத்நாயக்க இது தொடர்பான ஆவணங்களைப் பெற்றுக்கொண்டார். இந்த வாகனங்கள் அனுராதபுரம், கம்புறுபிட்டிய மற்றும் பாங்கொல்ல ஆகிய இடங்களில் உள்ள அபிமங்சல நிலையங்களிலும், அத்திடிய மிஹிந்து செத்மெதுர மற்றும் ராகம ரணவிரு செவன ஆகிய பராமரிப்பு நிலையங்களில் தங்கியிருந்து சிகிச்சை பெறும் படைவீரர்களின் நலனுக்காகப் பயன்படுத்தப்பட உள்ளன. இரண்டு மிட்சுபிஷி மொன்டெரோ ஜீப் வண்டிகள், ஒரு நிசான் பெற்றோல் ஜீப் வண்டி, ஒரு டொயோட்டா கரீனா கார் மற்றும் ஒரு டொயோட்டா ஹைலக்ஸ் வாகனம் என்பன இவ்வாறு பராமரிப்பு நிலையங்களுக்கு ஒப்படைக்கப்பட்டன. https://www.virakesari.lk/article/215249
  9. Published By: DIGITAL DESK 3 20 MAY, 2025 | 05:00 PM அமெரிக்கத் தூதரக அதிகாரிகளின் சமூக ஊடகக் கணக்குகளைப் போன்று ஆள்மாறாட்டம் செய்யும் போலியான சமூக ஊடகக் கணக்குகள் சமீபத்தில் அதிகரித்து வருவதை இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் அவதானித்துள்ளது. ஆள்மாறாட்டம் செய்பவர்களின் சமூக ஊடகக் கணக்குகளுடன் தொடர்பாடல்களை/ ஊடாட்டங்களை மேற்கொள்வதை அல்லது அவற்றினூடாக வழங்கப்படும் தகவல்களை நம்புவதைத் தவிர்த்து, அமெரிக்கத் தூதரகத்தையோ அல்லது அதன் அதிகாரிகளையோ பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறும் எந்தவொரு கணக்கினதும் நம்பகத்தன்மையினை ஆராய்ந்து உறுதிப்படுத்திக்கொள்ளுமாறு சமூக ஊடகங்களைப் பயன்படுத்துபவர்களை நாங்கள் ஊக்குவிக்கிறோம். எமது தூதரகத்தின் மிகவும் துல்லியமான மற்றும் மிகவும் புதுப்பிக்கப்பட்ட தகவல்களுக்கு, போலிகளைத் தவிர்த்து, நேரடியாக எமது மூலாதாரங்களை நாடவும். https://lk.usembassy.gov/ எனும் எமது உத்தியோகபூர்வ இணையத்தளத்தினைப் பார்வையிடுவதுடன், எமது தூதரகத்தின் உறுதிப்படுத்தப்பட்ட சமூக ஊடகக் கணக்குகளை மாத்திரம் பின்தொடரவும்: ⦁ தூதுவர் சங் அவர்களின் X தள கணக்கு: ⦁ @USAmbSL ⦁ இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் X தள கணக்கு: ⦁ @USEmbSL ⦁ இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் இன்ஸ்டகிராம்: ⦁ @USEmbSL ⦁ இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் முகநூல்: http://facebook.com/Colombo.USEmbassy இலங்கையில் அமெரிக்காவின் பணிகள் பற்றிய துல்லியமான தகவல்களைத் தெரிந்துகொள்வதற்கு தூதுவர் ஜுலீ சங் அவர்களின் X தள கணக்கினைப் (@USAmbSL) பின்தொடருமாறு பொதுமக்களை நாங்கள் ஊக்குவிக்கிறோம். அமெரிக்கத் தூதுவருக்கு முகநூல், இன்ஸ்டகிராம் அல்லது டெலிகிராமில் எவ்வித கணக்குகளும் இல்லையென்பதை கருத்திற்கொள்ளவும். இவ்வாறான தளங்களில் அவரது பெயரில் ஏதேனும் கணக்குளை நீங்கள் அவதானித்தால் அது அவரது உண்மையான கணக்கு இல்லையென்பதை அறிந்து கொள்ளவும்! அமெரிக்க வீசா சேவைகள் தொடர்பாக அமெரிக்கத் தூதரகத்தின் கொன்சியுலர் அதிகாரிகள் சமூக ஊடகத் தளங்கள் ஊடாகவோ அல்லது நேரடியான செய்திகள் மூலமாகவோ தனிநபர்களைத் தொடர்பு கொள்ள மாட்டார்கள் என்பதையும் நினைவிற்கொள்ளவும். https://www.virakesari.lk/article/215255
  10. Published By: DIGITAL DESK 2 20 MAY, 2025 | 04:06 PM “சிறுவர் இல்லங்களை நோக்கி அதிகளவான சிறுவர்கள் கொண்டுவரப்படுகின்றனர். இது எமக்கும், சிறுவர்களை பராமரிக்கும் நிறுவனங்களுக்கும் சவாலாக மாறியுள்ளது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் - அரியாலையில் அமைந்துள்ள எஸ்.ஓ.எஸ். தொழிற்பயிற்சி நிலையத்தில் கற்கைநெறிகளை நிறைவு செய்த மாணவர்களுக்கான என்.வி.க்யூ. தரச் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதன் போது கருத்து தெரிவிக்கையிலேயே ஆளுனர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்த நிகழ்வில் சான்றிதழ்களை வழங்கிய பின்னர் ஆளுநர் மேலும் உரையாற்றியதாவது, சிறுவர் இல்லங்களை நோக்கி அதிகளவான சிறுவர்கள் கொண்டுவரப்படுகின்றனர். காலத்தின் சூழலாக அது மாறியிருக்கின்றது. அது எமக்கும் சிறுவர்களை பராமரிக்கும் நிறுவனங்களுக்கும் சவாலாக உள்ளது. இந்த நிறுவனம் வழங்கும் தொழிற்பயிற்சி, மாணவர்கள் தங்கள் வாழ்க்கையில் எந்தளவுக்கு முன்னேறுகிறார்கள் என்பதில்தான் அதன் வெற்றி அமைகிறது. என்.வி.க்யூ. தரச் சான்றிதழைப் பயன்படுத்தி மாணவர்கள் வெளிநாடுகளில் வேலை வாய்ப்புகளைப் பெறலாம். மேலும் கல்வியைத் தொடரவும் முடியும். தொழில் தகைமையுடன் படிப்பை முடிக்கும் இவர்கள், எதிர்காலத்தில் தொழில்முனைவோர்களாக மாறி மற்றவர்களுக்கும் வேலைவாய்ப்புகளை வழங்க வேண்டும் என்றார். தூரப் பிரதேசங்களைச் சேர்ந்த மாணவர்கள் பயிற்சி பெறுவதற்காக விடுதி வசதிகளை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளை நிறுவனம் முன்னெடுத்திருப்பதையும் அவர் பாராட்டினார். இந்நிகழ்வில், வடக்கு மாகாண சிறுவர் நன்னடத்தை திணைக்கள ஆணையாளர் சுஜீவா சிவதாஸ் கௌரவ விருந்தினராகவும், எஸ்.ஓ.எஸ். சிறுவர் கிராம தேசிய இயக்குநர் திவாகர் ரட்ணதுரை சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/215236
  11. லக்னௌ வெளியேற்றம்: களத்தில் வீரர்கள் மோதலால் பரபரப்பு - திக்வேஷ் ராதி ஒரு போட்டியில் ஆட தடை பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், சிவகுமார் பதவி, பிபிசி தமிழ் 20 மே 2025, 01:56 GMT புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் ஐபிஎல்லில் லக்னௌ அணியின் பிளேஆஃப் சுற்றுக் கனவை சன்ரைசர்ஸ் அணி கலைத்துள்ளது. நேற்றைய லீக் ஆட்டத்தில் லக்னௌ நிர்ணயித்த 206 ரன் இலக்கை 10 பந்துகள் மீதமிருக்கும் நிலையிலேயே எட்டிய சன்ரைசர்ஸ், 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அபிஷேக் சர்மா, கிளாசன், மலிங்கா ஆகியோர் இந்த வெற்றியை சாத்தியமாக்கினர். மீண்டும் ஒருமுறை நம்ப முடியாத ஆட்டத்தை வெளிப்படுத்திய அபிஷேக் சர்மா ஆட்டநாயகனாக ஜொலித்தார். ஆட்டத்தின் நடுவே இரு அணி வீரர்களும் திடீரென மோதிக் கொண்டதால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. என்ன நடந்தது? ஏற்கெனவே 3 அணிகள் பிளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்ட நிலையில், எஞ்சியுள்ள நான்காவது இடத்திற்கு இன்னும் எந்தெந்த அணிகள் போட்டியில் உள்ளன? லக்னௌ சிறப்பான தொடக்கம் லக்னௌ நகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் பீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் களம் கண்ட லக்னௌ அணிக்கு சிறப்பாக தொடக்கம் கிடைத்தது. மிட்செல் மார்ஷ் - எய்டன் மார்க்ரம் ஜோடி தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி சன்ரைசர்ஸ் அணியை மிரட்டியது. அரைசதம் அடித்து அசத்திய இருவரும் சேர்ந்து 11-வது ஓவரிலேயே 115 ரன்களை சேர்த்துவிட்டனர். ஒரு விக்கெட் கூட இழக்காத நிலையில் இருந்த லக்னௌ அடுத்திருந்த 9 ஓவர்களில் மலைக்க வைக்கும் அளவுக்கு ரன்களை குவிக்கும் என்று அந்த அணி ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். சன்ரைசர்ஸ் பந்துவீச்சாளர்கள் பதிலடியால் அவர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை. 10.3 ஓவர்களில் 115 ரன் என்ற நிலையில் லக்னௌ இருந்தபோது முதல் விக்கெட்டாக மார்ஷ் வீழ்ந்தார். அவர் 39 பந்துகளில் 65 ரன்கள் குவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,மிட்செல் மார்ஷ் - எய்டன் மார்க்ரம் ஜோடி தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடியது. அடுத்து வந்த வீரர்கள் யாரும் எதிர்பார்ப்புக்கு ஏற்ப விளையாடாததால் அந்த அணியால் எதிர்பார்த்த ஸ்கோரை எட்ட முடியவில்லை. கேப்டன் ரிஷப் பந்த் வெறும் 7 ரன்களில் ஆட்டமிழந்தார். பூரன் 26 பந்துகளில் 45 ரன் சேர்த்தார். மற்றொரு தொடக்க வீரர் மார்க்ரம் 38 பந்துகளில் 61 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார். மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களே எடுத்ததால் லக்னௌ அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 205 ரன்களே சேர்த்தது. இந்த ரன் மழையிலும் சன்ரைசர்ஸ் அணியில் சிக்கனமாக பந்துவீசிய மலிங்கா 4 ஓவர்களில் 28 ரன் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். சன்ரைசர்ஸ் தடாலடி தொடக்கம் சன்ரைசர்ஸ் அணிக்கு கடினமான இலக்கு என்பதால் லக்னௌ அணியினர் நம்பிக்கையுடன் பவுலிங்கை தொடங்கினர். ஆனால், அதனை சன்ரைசர்ஸ் அணியின் அதிரடி தொடக்க வீரர் அபிஷேக் சர்மா சிறிது நேரத்திலேயே கலைத்துவிட்டார். ஆஸ்திரேலியாவில் இருந்து திரும்பி வர தாமதமானதால் இந்த போட்டியில் பங்கேற்காத டிராவிஸ் ஹெட்டுக்குப் பதிலாக தொடக்க வீரராக, இம்பாக்ட் பிளேயராக களம் கண்ட அதர்வா டைட் 9 பந்துகளில் 13 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அடுத்தபடியாக அபிஷேக் சர்மாவுடன் இஷான் கிஷன் ஜோடி சேர்ந்தார். இருவருமே வாண வேடிக்கை நிகழ்த்தியதால் சன்ரைசர்ஸ் அணியின் ஸ்கோர் போர்டு மின்னல் வேகத்தில் எகிறியது. இதனால் அந்த அணி பவர் பிளேயில் 72 ரன்கள் சேர்த்தது. அடுத்து வந்த ஓவரை வீசிய ரவி பிஷ்னோய்க்கு அது ஒரு கொடுங்கனவாக மாறியது. அந்த ஓவரின் கடைசி 4 பந்துகளை எதிர்கொண்ட அபிஷேக் சர்மா அனைத்து பந்துகளையும் சிக்ஸருக்கு அனுப்பி வைத்தார். இதனால், சன்ரைசர்ஸ் அணியின் ஸ்கோர் 7 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 98 என்கிற அளவில் எகிறியது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,7வது ஓவரின் கடைசி 4 பந்துகளை எதிர்கொண்ட அபிஷேக் சர்மா அனைத்து பந்துகளையும் சிக்ஸருக்கு அனுப்பி வைத்தார். அபிஷேக் சர்மா 20 பந்துகளில் 6 சிக்ஸர்களுடன் 59 ரன்கள் சேர்த்து வெளியேறினார். 18 பந்துகளில் அரைசதம் அடித்த அவர், நிகோலஸ் பூரனின் சாதனையை சமன் செய்தார். இருவரும் இதுவரை 4 முறை 20 பந்துகளுக்கும் குறைவாக எதிர்கொண்டு அரைசதம் அடித்துள்ளனர். அபிஷேக் சர்மா வெளியேறிய பிறகு ஹென்ரிச் கிளாசன் சன்ரைசர்ஸ் அணியின் ஸ்கோர் போர்டை கவனித்துக் கொண்டார். அவரது அதிரடியால் அணியின் வெற்றிக்குத் தேவையான ரன்ரேட்டை எளிதாக பராமரிக்க முடிந்தது. கிளாசன் 28 பந்துகளில் 47 ரன்கள் குவித்தார். கமிந்து மென்டிசும் தனது பணியை சிறப்பாக செய்தார். அவர் அதிரடியாக 32 ரன்கள் சேர்த்தார். தொடக்கம் முதல் அடுத்தடுத்து வந்த வீரர்கள் சிறப்பான பங்களிப்பை வழங்கியதால் சன்ரைசர்ஸ் அணி எந்த சிரமமும் இன்றி 10 பந்துகள் மீதமிருக்கும் நிலையிலேயே 206 ரன்கள் வெற்றி இலக்கை எளிதாக எட்டியது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஹென்ரிச் கிளாசன் சன்ரைசர்ஸ் அணியின் ரன் ரேட்டை கவனித்துக் கொண்டார். அபிஷேக் சர்மா - திக்வேஷ் ராதி மோதல் ஆக்ரோஷமான பேட்டிங்கை வெளிப்படுத்திய அபிஷேக் சர்மா தனது அணியின் ஸ்கோரை 7.2 ஓவர்களில் 99 ரன்களாக உயர்த்தினார். பின்னர் அவர் திக்வேஷ் ராதியின் பந்துவீச்சில் ஷர்துல் தாக்கூரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அபிஷேக் சர்மாவை வீழ்த்திய மகிழ்ச்சியில் திக்வேஷ் ராதி தனது தனித்துவமான, 'நோட்புக்' கொண்டாட்டத்தை நிகழ்த்தினார். அத்துடன், அபிஷேக்கை வெளியே செல்லும்படி ஆக்ரோஷமாக சைகையும் செய்தார். ஏற்கனவே ஆட்டமிழந்த ஏமாற்றத்தில் இருந்த அபிஷேக், ராதியின் கொண்டாட்ட பாணிக்கு எதிர்ப்பு தெரிவிக்கவே, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து களத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. நடுவர்கள் மற்றும் பிற வீரர்களின் தலையீட்டிற்குப் பிறகு நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இந்த வீடியோ உடனடியாக சமூக ஊடகங்களில் வைரலானது. இருப்பினும், போட்டிக்குப் பிறகு, பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா மற்றும் லக்னோ உதவி பயிற்சியாளர் விஜய் தஹியா ஆகியோர் அபிஷேக் சர்மா - திக்வேஷ் ராதியுடன் பேசியதைக் காண முடிந்தது. பின்னர் இரு வீரர்களும் ஒருவருக்கொருவர் கைகுலுக்கி பேசிக் கொண்டனர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,திக்வேஷ் ராதி திக்வேஷ் ராதி ஒரு போட்டியில் விளையாட தடை நேற்றைய ஆட்டத்தில் நடத்தை விதிகளை மீறியதாக லக்னௌ பந்துவீச்சாளர் திக்வேஷ் ராதி ஒரு போட்டிக்கு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 50 சதவீதம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் ஊடக அறிக்கையின்படி, இந்த சீசனில் பிரிவு 2.5 இன் கீழ் ராதியின் மூன்றாவது லெவல்-1 விதிமீறல் இதுவாகும். ஒழுங்கு நடவடிக்கை எதிரொலியாக, லக்னௌ அணி விளையாடும் அடுத்த போட்டியில் திக்வேஷ் ராதி விளையாட முடியாது. அந்த போட்டி மே 22-ஆம் தேதி ஆமதாபாத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரானதாகும். இந்த சீசனில் லக்னோ அணிக்காக அறிமுகமான திக்வேஷ் ராதி ஒவ்வொரு முறையும் விக்கெட் எடுத்த பிறகு தனது தனித்துவமான பாணியில் 'நோட்புக் கொண்டாட்டத்தை' மேற்கொள்கிறார். முதல் இரண்டு போட்டிகளில், நமன் தீர் (மும்பை இந்தியன்ஸ்) மற்றும் பிரியான்ஷ் ஆர்யா (பஞ்சாப் கிங்ஸ்) ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்திய பிறகு, அவர் கையில் ஏதோ எழுத சைகை காட்டினார், அதே நேரத்தில் சுனில் நரைனை (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்) அவுட் செய்த பிறகு, அவர் தரையில் ஏதோ எழுதுவது போன்ற பாவனை காண முடிந்தது. 3 சந்தர்ப்பங்களிலும், அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதற்காக அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,அபிஷேக் சர்மா, திக்வேஷ் ராதி இருவரையும் நடுவர்கள் சமாதானப்படுத்தி அனுப்பினர். லக்னௌ வெளியேற்றம் சன்ரைசர்ஸ் அணி ஏற்கனவே பிளேஆஃப் வாய்ப்பை இழந்துவிட்டது. இந்த வெற்றியின் மூலம் லக்னௌ அணியின் பிளேஆஃப் வாய்ப்பையும் சன்ரைசர்ஸ் பறித்துள்ளது. ஏனெனில், பிளேஆஃப் வாய்ப்பை தக்க வைக்க லக்னௌ அணி தனக்கிருந்த 3 போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருந்தது. முதல் போட்டியிலேயே தோற்றுவிட்டதால் அந்த அணிக்கு பிளேஆஃப் வாய்ப்புக்கான கதவுகள் அடைபட்டுவிட்டன. பிளேஆஃப் சுற்றுக்கு குஜராத் டைட்டன்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், பஞ்சாப் ஆகிய அணிகள் ஏற்கெனவே முன்னேறிவிட்டன. எஞ்சியுள்ள ஒரு இடத்துக்கு போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் ஆகிய அணிகள் மட்டுமே உள்ளன. சிஎஸ்கேயின் அடுத்த ஆட்டம் ராஜஸ்தான் vs சிஎஸ்கே நாள் – மே 20 இடம் – டெல்லி நேரம்- இரவு 7.30 மணி பட மூலாதாரம்,GETTY IMAGES மும்பையின் அடுத்த ஆட்டம் மும்பை இந்தியன்ஸ் vs டெல்லி கேபிடல்ஸ் நாள் – மே 21 இடம் – மும்பை நேரம்- இரவு 7.30 மணி ஆர்சிபியின் அடுத்த ஆட்டம் ஆர்சிபி vs சன்ரைசர்ஸ் நாள் – மே 23 இடம் – பெங்களூரு நேரம்- இரவு 7.30 மணி ஆரஞ்சு தொப்பி யாருக்கு? சாய் சுதர்ஸன்(குஜராத் டைட்டன்ஸ்)-617 ரன்கள்(12 போட்டிகள்) சுப்மான் கில் (குஜராத் டைட்டன்ஸ்)-601 ரன்கள்(12 போட்டிகள்) ஜெய்ஸ்வால்(ராஜஸ்தான் ராயல்ஸ்) 523 (13 போட்டிகள்) நீலத் தொப்பி யாருக்கு? பிரசித் கிருஷ்ணா (குஜராத்) 21 விக்கெட்டுகள்(12 போட்டிகள்) நூர் அகமது (சிஎஸ்கே) 20 விக்கெட்டுகள் (12போட்டிகள்) ஜோஷ் ஹேசல்வுட் (ஆர்சிபி) 18 விக்கெட்டுகள்(10 போட்டிகள்) - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cx2rveerj1vo
  12. ஈழத்தமிழ்ச் சொந்தங்களுக்கு குடியுரிமை அளிக்கக் கூடாது என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஏமாற்றமும் மனவலியும் அளிக்கிறது - சீமான் 20 MAY, 2025 | 04:42 PM ஈழத்தமிழ்ச் சொந்தங்களுக்கு குடியுரிமை அளிக்கக் கூடாது என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஏமாற்றமும் மனவலியும் அளிக்கிறதுஎன. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, ஈழத்தமிழ்ச் சொந்தங்களுக்கு குடியுரிமை அளிக்கக் கூடாது என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஏமாற்றமும்இ மனவலியும் அளிக்கிறது! இனவெறி சிங்கள ஆட்சியாளர்களால் ஈழத்தாயகத்தில் நிகழ்த்தப்பட்ட கொடுந்தாக்குதலிருந்து தப்பி, உயிர்வாழ தமிழ்நாட்டில் தஞ்சம் அடைந்து, பல ஆண்டுகளாக வாழ்ந்து வரும் ஈழத்தமிழ்ச்சொந்தங்களுக்கு குடியுரிமை வழங்க உத்தரவிடக்கோரிய மனுவினை இந்திய உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. 'இந்திய நாட்டில் குடியுரிமை கேட்க உங்களுக்கு இங்கே என்ன உரிமை இருக்கிறது? 'வேறு நாட்டிற்கு செல்லுங்கள்! என்ற உச்சநீதிமன்றத்தின் வார்த்தைகள் மிகுந்த மனவலியைத் தருகிறது. ஈழத்தமிழ் மக்களின் தொப்புள்கொடி உறவுகளாம் 10 கோடி தமிழர்கள் நாங்கள், நிலைத்து வாழ்கின்ற பெருத்த நிலப்பரப்பாம் தமிழ்நாடு, இந்திய ஒன்றியத்தில் இருக்கிறது என்பதைவிடவும் என்ன உரிமை அவர்களுக்கு வேண்டும்? இந்திய மாநிலங்களிலேயே அதிக வரி செலுத்தி, நாட்டின் வளர்ச்சியிலும்இ ஒன்றிய அரசின் வருமானத்திலும், பெருமளவு பங்களிப்பு செய்யும் தமிழர்கள் நாங்கள் இந்த மண்ணில் இன்னமும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறோம் என்பதைவிட என்ன உரிமை அவர்களுக்கு வேண்டும்? தமிழர்கள் நாங்கள் செலுத்தும் வரிப்பணம் மூலம், என் மொழி புரியாத என் இனமல்லாத யார் யாரோ உரிமை பெற்று இந்த நாட்டில் வாழும்போது எங்கள் தொப்புள்கொடி ஈழத்தமிழ்ச்சொந்தங்களுக்கு அந்த உரிமை இல்லையா? சீன நாட்டின் ஏதோ ஒரு மூலையிலிருந்து வந்த திபெத்தியர்களுக்கு இங்கு வாழும் உரிமை உண்டு. இந்திய நாடு அவர்களுக்கு எண்ணற்ற வசதிகளைச் செய்து வாழ்விக்கும்போது, அவர்களை நோக்கி எழுப்பப்படாத இது என்ன சத்திரமா? என்ற கேள்விஇ எம் ஈழத்தமிழ்ச்சொந்தங்கள் குடியுரிமை கேட்கும்போது எழுவது ஏன்? இதே கேள்வியை பாகிஸ்தானிடமிருந்து வருகின்ற இந்துக்களிடமோ சீனாவின் திபெத்தியர்களிடமோ கேட்டுவிடத்தான் முடியுமா? அடிமைப்படுத்தி ஆண்ட பல ஐரோப்பிய நாடுகள் கூட அடைக்கலம் தேடி ஏதிலிகளாய் வந்த ஈழத்தமிழர்கள், இந்தியாவின் சீக்கியர்கள் உள்ளிட்ட இலட்சக்கணக்கான ஆதரவற்ற உலக மக்களை அள்ளி அரவணைத்து குடியுரிமை முதல் விளையாட்டு அரசியல் உள்ளிட்ட பலதுறைகளில் பங்கேற்க அனுமதியும் வழங்குகின்றதே? அவர்களை விடவும், தங்கள் தந்தையர் நாடென நம்பி வந்த ஈழத்தமிழ் மக்களைக் காக்க வேண்டிய அதிக பொறுப்பும் - கடமையும் வரி செலுத்தி வாக்கு செலுத்தி நான் நேசித்து நிற்கும் இந்நாட்டிற்கு இருக்கிறதா? இல்லையா? 'வேறு நாட்டிற்கு செல்லுங்கள்' என்கிறீர்கள். உலகில் உள்ள எல்லா நாடுகளும் இதேபோல் சத்திரமா? என்று கேள்வி எழுப்பினால் அகதியான மக்கள் எங்கே சென்று வாழ்வது? இதில் எங்கே இருக்கிறது மனித உரிமை? எங்கே இருக்கிறது மானுட அறம்? புத்தனும், காந்தியும் போதித்தது இதைத்தானா? அசோகரின் தர்மசக்கரத்தைக் கொடியிலும், காந்தியை தேச பிதாவாகவும் கொண்டிருக்கும் நாடு இப்படி செய்வது முறைதானா? இதுதான் இந்த நாட்டின் சட்டம், நீதி என்றால் அதில் எங்கே இருக்கிறது மானுட நேயம்? இத்தகைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்திருந்தால் நேபாளத்தில் பிறந்த புத்தர் புத்த கயாவிற்கும், குஜராத்தில் பிறந்த காந்தி தென்னாப்பிரிக்காவிற்கும் சென்றிருக்கத்தான் முடியுமா? ஈழத்தமிழருக்கும் இந்திய நாட்டிற்கும் எந்த தொடர்பும் இல்லை என்றால் ஈழத்தாயக விடுதலை போராட்டத்தை அழித்தொழிக்க இந்தியப் பெருநாடு அமைதிப்படையை அனுப்பியதுதான் ஏன்? என்ற கேள்விக்கு இந்த நாட்டில் எந்த நியாயவான்களிடம் பதிலுண்டு? பிறக்க ஒரு நாடு, உயிர் பிழைக்க ஒரு நாடு என்று அரசியல் காரணங்களால் அகதியாக்கப்பட்ட மனிதர்களுக்குக் குடியுரிமை வழங்க மறுப்பீர்களானால், அவர்களிடம் குடிகொண்டுள்ள தனித்திறமைக்கு என்ன மதிப்பு உள்ளது? என்ன அங்கீகாரம் உள்ளது? அதனைத் தடுப்பது அடிப்படை மனித உரிமைக்கு எதிரானது இல்லையா? அகதி என்பதற்காக தனித்திறனை விடாமுயற்சியை கடும் உழைப்பைஇ வாழ்க்கை இலட்சியத்தை அழிப்பது மனிதத்திற்கு எதிரானது இல்லையா? அகதியாக்கப்பட்டது அவர்கள் குற்றமா? அகதியாக்கிய நாட்டில் அவர்கள் பிறந்தது குற்றமா? அல்லது அடைக்கலம் தேடி இந்த நாட்டை நம்பி வந்ததுதான் குற்றமா? அகதியாக்கப்ப்பட்ட காரணத்திற்காகஇ இந்த நாட்டில் பிறந்த அவர்களின் பிள்ளைகளுக்கும் கூட மருத்துவம் உள்ளிட்ட உயர்கல்வி வெளிநாட்டு விளையாட்டு போட்டிகளில் பங்கேற்பது உள்ளிட்ட வாய்ப்புகள் வழங்கப்படாதது எவ்வகையில் நியாயமாகும்? இதுதான் இந்த நாடு கட்டிகாக்கும் தர்மமா? இந்திய குடியுரிமை இல்லாத ஒற்றைக்காரணத்திற்காகஇ திருச்சியில் வாழ்ந்து வரும் நீச்சல் வீராங்கனை அன்புமகள் தனுஜா உள்ளிட்ட எத்தனை எத்தனை ஈழத்தமிழ்ச் சொந்தங்கள் தங்களுடைய திறமையை வெளிப்படுத்த முடியாமல் தவிக்கின்றனர் என்பதை எண்ணும்போது இரத்தக்கண்ணீர் வருகிறது. பல்லாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த பண்பாட்டையும் நாகரீகத்தையும் தன்னகத்தே கொண்டு உலகிற்கு அன்பையும்இ அறத்தையும் கற்பித்த ஞானிகள் பலர் வாழ்ந்த நாடானதுஇ நம்மைப்போல இரத்தமும்இ சதையும் உயிரும்இ உணர்வும் கொண்ட சக மனிர்களிடம் இப்படி வெறுப்புகாட்டி விரட்டுவது முறைதானா? அவர்கள் தமிழர்கள் என்பதற்காக எந்த கூடுதல் சலுகையும் இந்த நாடுதர வேண்டாம். குறைந்தபட்சம் மனிதர்கள் என்பதற்காகவது மனிதநேயத்தோடு நடத்தலாமே? எனவே இந்தியப் பெருநாடு ஈழத்தமிழ்ச்சொந்தங்களுக்கு மட்டுமல்ல இந்த நாட்டில் அடைக்கலம் தேடி வந்து வாழ்ந்து வரும் அத்தனை மக்களுக்கும் குடியுரிமை வழங்காவிட்டாலும் கல்வி விளையாட்டு அறிவியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தங்களுக்குள்ள தனித்திறனை வெளிக்காட்ட உதவும் வகையில் இரட்டை குடியுரிமை தற்காலிக குடியுரிமை சிறப்பு குடியுரிமை என்ற பெயரிலாவது அவர்கள் தங்களுடைய தனித்திறனை அடையாளப்படுத்தவும் உலக அரங்கில் அங்கீகாரம் பெறவும் அனுமதிக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். ஆகவே கோடிக்கான ஏழை மக்களின் இறுதி நம்பிக்கையாய் திகழும் இந்திய உச்சநீதிமன்றம் ஈழத்தமிழ்ச்சொந்தங்களுக்கு முற்று முழுதாக குடியுரிமை வழங்க முடியாது என்ற தனது தீர்ப்பினை மறுசீராய்வு செய்து குறைந்தபட்சம் தற்காலிக சிறப்பு குடியுரிமை அல்லது இரட்டை குடியுரிமை வழங்க அரசிற்கு உத்தரவிட்டு தமிழர்களின் மனவலியைப் போக்கிட வேண்டுமென வலியுறுத்துகிறேன். https://www.virakesari.lk/article/215250
  13. Published By: DIGITAL DESK 2 20 MAY, 2025 | 03:49 PM கடந்த 8 மாதங்களில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் 79 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதில் 52 பேர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து நடைபெறும் இந்த வன்முறைகள், கொலைகள் மற்றும் அச்சுறுத்தல்களைத் தடுக்க அரசாங்கம் தவறிவிட்டது என பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச செவ்வாய்க்கிழமை (20) தெரிவித்தார். நிலையியற் கட்டளை 27 (2) இன் கீழ் கேள்விகளை எழுப்பிய அவர், அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் பின்வரும் முக்கியமான கேள்விகளை எழுப்பினார்: துப்பாக்கிச் சூடுகள் தொடர்பில் அரசாங்கத்தின் திட்டம் எங்கே? நாட்டளவில் இடம்பெறும் துப்பாக்கிச் சூடுகள் மற்றும் அச்சுறுத்தல்களுக்கு எதிரான அரசாங்கத்தின் தற்போதைய வேலைத்திட்டம் போதுமானதா என்பதையும், அது இல்லை என்றால், தடுப்பதற்கான புதிய திட்டத்தை சபையில் முன்வைக்குமாறும் கேள்வி எழுப்பப்பட்டது. தேசிய பாதுகாப்பு மற்றும் பொருளாதார தாக்கம்: வன்முறை அதிகரிப்பது தேசிய பாதுகாப்பை பாதிப்பதுடன், வெளிநாட்டு முதலீட்டாளர்களையும் சுற்றுலாப் பயணிகளையும் அச்சுறுத்தும். இதற்காக அரசாங்கம் எவ்வளவு கவனம் செலுத்தியுள்ளது என்றும், இதற்கான நடவடிக்கைகள் எவை என்பதைத் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது. போதைப்பொருள் மற்றும் அதன் தாக்கம்: போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மத்தியில் ஏற்படும் மோதல்களில் பொதுமக்கள் பலியாகின்றனர். இதன் அடிப்படையில், அரசாங்கத்தின் திட்டம் தோல்வியடைந்துள்ளதாகத் தெரிவித்து, அதற்கான மாற்றுத் தீர்வுகள் குறித்து விளக்குமாறு வலியுறுத்தப்பட்டது. அரசியல்வாதிகள் மீது அச்சுறுத்தல்கள்: பாராளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் தொடர்பாக அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன? மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் மற்றும் நடவடிக்கைகளின் நிலை என்ன? என்பன குறித்து விளக்கம் கோரப்பட்டது. இந்த விடயங்களில் தெளிவான பதில் அளிக்க வேண்டும் என சஜித் பிரேமதாச வலியுறுத்தினார். https://www.virakesari.lk/article/215222
  14. Published By: DIGITAL DESK 3 20 MAY, 2025 | 03:09 PM வவுனியாவில் வைத்தியர் முகைதீனை சுட்டுப்படுகொலை செய்த சம்பவத்துடன் தொர்புடைய நெடுமாறன் என்று அழைக்கப்படும் சிவநாதன் பிரேமநாத் என்பவருக்கு வவுனியா மேல்நீதிமன்றம மரணதண்டனை வழங்கியநிலையில் மேன்முறையீட்டு நீதிமன்றம் அந்த தண்டனையை மாற்றி அவரை விடுதலை செய்து உத்தரவிட்டது. மேன் முறையீட்டு நீதிமன்றின் நீதிபதிகளான சசி மகேந்திரன், அமல் ரணராஜா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த தீர்ப்பை இன்று செவ்வாய்க்கிழமை (20) அறிவித்தது. இது தொடர்பாக ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராசா, ஜனாதிபதி சட்டத்தரணி அனில் சில்வா ஆகியோரின் வாதங்களை ஏற்ற நீதிமன்றம் இந்த தீர்ப்பை அறிவித்தது. வவுனியாவில் கடந்த 2009ஆம் ஆண்டு 4ஆம் மாதம் 20ஆம் திகதி கற்குழியில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலையில் கடமையில் இருந்த வைத்தியரான சுல்தான் முகைதீன் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டிருந்தார். இது தொடர்பில் குற்றவாளியாக சந்தேகிக்கப்பட்ட அன்றைய புளட் உறுப்பினரான நெடுமாறன் என்று அழைக்கப்படும் சிவநாதன் பிரேமநாத் என்பவர் மீது வவுனியா மேல்நீதிமன்றில் வழக்குத் தொடுக்கப்பட்டது. நீண்ட விசாரணைகளின் பின்னர் கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூன் 8 ஆம் திகதி அப்போதைய வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதியான மா.இளஞ்செழியன் நெடுமாறன் என்பவரை குற்றவாளியாக கண்டு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். இந்நிலையில் இவ் தீர்ப்பிற்கு எதிராக கெளரி சங்கரி சட்ட நிறுவனம் சார்பில் மேன் முறையீடு செய்யப்பட்டது. மேன்முறையீட்டு மனுமீதான விசாரணைகள் முடிவடைந்த நிலையில் இன்றைய தினம் தீர்ப்புக்காக திகதியிடப்பட்டிருந்தது. அந்தவகையில் குற்றவாளிக்கு எதிராக வவுனியா மேல்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மாற்றிய மேன்முறையீட்டு நீதிமன்றம் குறித்த மனுதாரரை வழக்கில் இருந்து முழுமையாக விடுவித்து தீர்ப்பளித்தது. குறித்த மேன் முறையீட்டு வழக்கில் சட்டத்தரணி தர்மஜா தர்மராஜாவின் ஆலோசனையின் பிரகாரம் சட்டத்தரணி அன்டன் துரைசிங்கம் ஜெயாநந்தன், ஓஷதி ஹப்பு ஆராச்சியுடன் ஜனாதிபதி சட்டத்தரணிகளான கே.வி. தவராசா மற்றும் அனில் சில்வா ஆகியோர் ஆஜராகினர். சட்ட மாஅதிபர்சார்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் அசாத் நவாவி ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/215231
  15. இலங்கையில் நீதிநிலைநாட்டப்படுவதை உறுதி செய்வதற்காக கனடா சர்வதேச சமூகத்துடன் இணைந்து நடவடிக்கைகளை எடுக்கும் - ஹரி ஆனந்த சங்கரி Published By: RAJEEBAN 19 MAY, 2025 | 05:08 PM இலங்கையில் நீதிநிலைநாட்டப்படுவதை உறுதி செய்வதற்காக சர்வதேச சமூகத்துடனும், சர்வதேச பங்காளிகளுடனும் கனடா அரசாங்கம் இணைந்து செயற்படும் என தெரிவித்துள்ள அந்த நாட்டின் பொதுபாதுகாப்பு அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி செப்டம்பரில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையின் அறிக்கை தொடர்பிலும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பிலும் சர்வதேச சமூகத்துடன் இணைந்து செயற்படவுள்ளதாக தெரிவித்துள்ளார் கனடாவின் ஒட்டாவாவில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். கனடாவின் ஒட்டாவாவில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் பெருமளவு தமிழ் மக்கள் கலந்துகொண்டிருந்தனர். ஒட்டாவா தமிழ் சங்கம், தேசிய தலைநகர் பிராந்திய தமிழ் சங்கம், ஒட்டாவா தமிழ் கலாச்சார மற்றும் தொழில்நுட்ப அகடமி, ஒட்டாவா தமிழ் மூத்தோர் சங்கம் தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னம் ஆகிய அமைப்புகள் இணைந்து இந்த நினைவேந்தல் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன. கனேடிய தேசிய கீதத்துடன் பிரெட்பாரெட் அரங்கில் ஆரம்பமான இந்த நிகழ்வில் தமிழ்தாய் வாழ்த்து பாடப்பட்டதுடன் நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் இனப்படுகொலையின் போது கொல்லப்ட்டவர்களை நினைவுகூரும் வகையில் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர். சுதந்திரத்தின் பின்னர் இலங்கையின் ஏனைய பகுதிகளிலும் முள்ளிவாய்க்காலிலும் உயிரிழந்தவர்களிற்கு ஆழந்த இரங்கல்களை வெளியிட்ட கனடாவின் பொதுபாதுகாப்பு அமைச்சர் ஆனந்த சங்கரி, ஒட்டவா நினைவேந்தல் நிகழ்வில் முள்ளிவாய்க்காலில் உயிர்பிழைத்தவர்கள் பிரசன்னமாகியிருப்பதாக தெரிவித்தார். அவர்களின் மீள் எழுச்சிதன்மை நீதி மற்றும் பொறுப்புக்கூறலை உறுதி செய்வதற்கான அவர்களின் அசைக்க முடியாத உறுதிப்பாடு குறித்தும் அவர் தனது உரையில் தெரிவித்தார். ஜனவரி மாதம் இலங்கைக்கான விஜயம் குறித்து தனது உரையில் குறிப்பிட்ட ஹரி ஆனந்தசங்கரி, அங்கு முள்ளிவாய்க்காலில் உயிர்பிழைத்தவர்களை சந்தித்து உரையாடியதாக குறிப்பிட்டார். வடக்கு கிழக்கில் தமிழர்கள் அமைதியாக வாழ்வதை உறுதி செய்வதற்கும், 16 வருடங்களிற்கு முன்னர் இடம்பெற்ற இனப்படுகொலைக்கு பொறுப்புக்கூறப்படுவதையும் உறுதி செய்வதற்கும் உயிர்பிழைத்தவர்களின் குரல்களை ஒலிக்கச்செய்வதன் அவசியத்தை ஹரி ஆனந்தசங்கரி எடுத்துரைத்தார். நீதிநிலைநாட்டப்படுவதை உறுதி செய்வதற்காக சர்வதேச சமூகத்துடனும், சர்வதேச பங்காளிகளுடனும் இணைந்து பணியாற்றும் கனடா அரசாங்கத்தின் நோக்கம் குறித்து குறிப்பிட்ட அவர், செப்டம்பரில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையின் அறிக்கை தொடர்பிலும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பிலும் சர்வதேச சமூகத்துடன் இணைந்து செயற்படவுள்ளதாக அவர் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/215162
  16. சாய் சுதர்சன் சதம்: குஜராத் வெற்றியால் 3 அணிகள் பிளேஆஃப் முன்னேற்றம் - நான்காவது அணி எது? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சாய் சுதர்சன் கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 19 மே 2025, 02:22 GMT புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் டி20 கிரிக்கெட் வரலாற்றில் 200 ரன்கள் அல்லது அதிகமான இலக்கை விக்கெட் இழப்பின்றி வெற்றிகரமாக எட்டிய இரண்டாவது அணியாக குஜராத் டைட்டன்ஸ் அணி வரலாற்றில் இடம் பிடித்துள்ளது. ஐபிஎல் டி20 தொடரில் நேற்றைய டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் விக்கெட் இழப்பின்றி 200 ரன்களை அந்த அணி சேஸ் செய்தது. இதற்கு முன் 2022-ஆம் ஆண்டு செப்டம்பர் 22-ஆம் தேதி கராச்சியில் நடந்த டி20 ஆட்டத்தில் இங்கிலாந்துக்கு எதிராக பாகிஸ்தான் அணி 200 ரன்களுக்கு மேல் விக்கெட் இழப்பின்றி சேஸ் செய்திருந்ததுதான் சாதனையாக இருந்தது. அந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி இலக்கை 19.3 ஓவர்களில் சேஸ் செய்திருந்தது, ஆனால், நேற்று 19-வது ஓவரிலேயே குஜராத் அணி சேஸ் செய்து சாதனை படைத்தது. மிஸ்டர் கன்சிஸ்டென்சி ஆட்டநாயகன் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,தமிழக வீரரும், நடப்பு தொடரில் "மிஸ்டர் கன்சிஸ்டென்சி" என்று அழைக்கப்படுபவருமான சாய் சுதர்சன் சதம் அடித்தார் முதலில் பேட் செய்த டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் சேர்த்தது. 200 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணி 19 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 205 ரன்கள் சேர்த்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. தமிழக வீரரும், நடப்பு தொடரில் "மிஸ்டர் கன்சிஸ்டென்சி" என்று அழைக்கப்படுபவருமான சாய் சுதர்சன் சதம் அடித்து 108 ரன்களுடனும் (61பந்துகள் - 4 சிக்ஸர், 12 பவுண்டரி), கேப்டன் சுப்மான் கில் 93 (53 பந்துகள் - 7 சிக்ஸர், 3 பவுண்டரி) ரன்களுடனும் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். ஐபிஎல் டி20 தொடரில் சாய் சுதர்சன் அடிக்கும் 2வது சதம் இதுவாகும். ஆட்டநாயகன் விருதையும் சாய் சுதர்சன் பெற்றார். குஜராத் அணியின் ஒரு விக்கெட்டைக் கூட டெல்லி அணியின் பந்துவீச்சாளர்களால் வீழ்த்த முடியவில்லை. சாய் சுதர்சன், சுப்மான் கில் இருவரும் தங்கள் பேட்டிங்கில் ஒரு சிறிய தவறைக்கூட செய்யாமல் பேட் செய்தார்கள். 200 ரன்களை சேஸ் செய்கிறோம், பெரிய இலக்கு என்ற பதற்றம், ரன் சேர்க்க வேண்டும் என்ற வேகம், பெரிய ஷாட்களுக்கு முயற்சி என எதுவும் சுப்மான் கில், சுதர்சனிடம் காணப்படவில்லை. போட்டி தொடங்கியதிலிருந்து கடைசிவரை இருவரும் ஆற்று நீரோடை போன்று சீராக, அலட்டல் இன்றி ரன்களை எடுத்தனர். தேவைப்படும் நேரத்தில் சிக்ஸர், பவுண்டரி அடித்து ரன்ரேட்டை சிறப்பாக பராமரித்து வெற்றியை சிரமமின்றி பெற்றனர். இதனால் டெல்லி அணி பெரிய ஸ்கோரை எட்டுவதற்கு காரணமாக இருந்த கே.எல்.ராகுலின் சதம் (112) வீணானது. சுதர்சன் அதிரடி தொடக்கம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,தமிழக வீரர் சுதர்சன் தொடக்கத்திலிருந்தே அடித்து ஆடும் முடிவுடன் இருந்தார். 200 ரன்கள் இலக்கு என்பதைப் புரிந்து கொண்ட தமிழக வீரர் சுதர்சன் தொடக்கத்திலிருந்தே அடித்து ஆடும் முடிவுடன் இருந்தார். மறுபுறம் சுப்மான் கில் நிதான ஆட்டத்தைக் கடைபிடித்தார். புதிய பந்தில் நடராஜன் பந்துவீச, அந்த ஓவரை வெளுத்த சுதர்சன் 3 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என விளாசி எடுத்தார். 3வது ஓவர் முடிவில் 13 பந்துகளில் 35 ரன்களை சுதர்சன் சேர்த்திருந்தார். முஸ்தாபிசுர், சமீரா பந்துவீசியும் சுதர்சன் "டைமிங் ஷாட்"களில் பவுண்டரி, சிக்ஸர் அடிப்பதைத் தடுக்க முடியவில்லை. சுதர்சன் எந்தவிதமான சிரமமும் இன்றி, பந்து செல்லும் போக்கிலேயே பவுண்டரி அடிப்பதும், சரியான டைமிங்கில் சிக்ஸருக்கு பந்தை தூக்கிவிடுவதும் பார்ப்பதற்கு அற்புதமாக இருந்தது. பவர்ப்ளே முடிவில் குஜராத் அணி விக்கெட் இழப்பின்றி 59 ரன்கள் சேர்த்திருந்தது. அதிரடியாக ஆடிய சுதர்சன் 30 பந்துகளில் அரைசதத்தை நிறைவு செய்தார். சுப்மான் கில் மெதுவாகத் தொடங்கி 8 ஓவர்கள் வரை 21 பந்துகளில் 19 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்தார். ஆனால், அடுத்த 3 ஓவர்களில் அக்ஸர், குல்தீப், விப்ராஜ் ஆகியோரின் ஓவரில் தலா ஒரு சிக்ஸரை பறக்கவிட்டும், சமீரா ஓவரில் பவுண்டரி அடித்தும் கியரை மாற்றிய கில் 33 பந்துகளில் அரைசதம் அடித்தார். வெற்றிக்கு வித்திட்ட பார்ட்னர்ஷிப் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,வெற்றிக்கு காரணமாக அமைந்த பார்ட்னர்ஷிப் இருவரும் ஃபார்முக்கு வந்தபின், டெல்லி பந்துவீச்சாளர்களால் எவ்வாறு பந்துவீசுவதென்று தெரியவில்லை. குல்தீப், விப்ராஜ், அக்ஸர் என 3 சுழற்பந்துவீச்சாளர்கள் நடுப்பகுதி ஓவர்களை வீசியும் சிறிய தவறைக்கூட இருவரும் செய்யவில்லை. இருமுறை 3வது நடுவருக்கு டெல்லி அணி சென்றும் விக்கெட் கிடைக்கவில்லை. 15 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 154 ரன்களை விக்கெட் இழப்பின்றி சேர்த்தது. முஸ்தாபிசுர் வீசிய 16-வது ஓவரில் சுதர்சன் தொடர்ந்து இரு பவுண்டரிகளையும், குல்தீப் வீசிய அடுத்த ஓவரில் சிக்ஸரும் அடித்து 56 பந்துகளில் சுதர்சன் ஐபிஎல்-ல் தனது 2வது சதத்தை நிறைவு செய்தார். அரைசதத்தை 30 பந்துகளிலும், அடுத்த 26 பந்துகளில் அடுத்த 50 ரன்களையும் சுதர்சன் அடித்தார். இறுதியில் வின்னிங் ஷாட்டாக சுதர்சன் சிக்ஸர் அடித்தார். இருவரையும் ஆட்டமிழக்கச் செய்ய டெல்லி பந்துவீச்சாளர்களின் போராட்டம் கடைசியில் தோல்வியில் முடிந்தது. கே.எல் ராகுலின் போராட்டம் வீண் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,டெல்லி அணி பெரிய ஸ்கோரை எட்டுவதற்கு கே.எல்.ராகுலின் சதம் முக்கியப் பங்கு வகித்தது டெல்லி அணி பெரிய ஸ்கோரை எட்டுவதற்கு கே.எல்.ராகுல் 65 பந்துகளில் 112 ரன்கள் (4 சிக்ஸர், 14 பவுண்டரி) சேர்த்தது முக்கியமாக இருந்தது. டெல்லி மைதானம் மற்ற மைதானங்களைவிட சிறியது என்பதால், வேகப்பந்துவீச்சில் பேட்டர் டிபெண்ட் ஷாட் ஆடினாலே பவுண்டரி செல்லும் நிலையில்தான் இருந்தது. ஆனாலும், ராகுலின் ஒவ்வொரு ஷாட்டும் கண்ணில் ஒத்திக்கொள்ளும் வகையில் இருந்தது. இந்த சீசனில் முதல்முறையாக தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ராகுல் தனக்குக் கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தினார். ரபாடா ஓவரில் 2 சிக்ஸர்கள், பவுண்டரி என ராகுல் ஆட்டம் பவர்ப்ளேயில் மிரட்டலாக இருந்தது. தொடக்கத்திலயே டூப்ளசிஸ் (5) விக்கெட்டை டெல்லி அணி இழந்தாலும், அபிஷேக் போரெல் ராகுலுக்கு நல்ல ஒத்துழைப்பு அளித்தார். அதிரடியாக ஆடிய ராகுல் 35 பந்துகளில் அரைசதம் அடித்தார். 2வது விக்கெட்டுக்கு 90 ரன்கள் சேர்த்த நிலையில் போரெல் 30 ரன்களில் ஆட்டமிழந்தார். குஜராத் அணி ஒரு கேட்சை நழுவவிட்டதை ராகுல் நன்கு பயன்படுத்தினார். சாய் கிஷோர் வீசிய 14-வது ஓவரில் 3 பவுண்டரிகளை ராகுல் விளாசி 60 பந்துகளில் சதம் அடித்தார். கேப்டன் அக்ஸர் படேல் 25 ரன்களில் ஆட்டமிழந்தார். கடைசி நேரத்தில் டிரிஸ்டன் ஸ்டெப்ஸ் கேமியோ ஆடி 21 ரன்கள் சேர்த்தார். ராகுல் 112 ரன்களுடனும், ஸ்டெப்ஸ் 21 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். டெல்லி அணியின் ஆட்டம் முழுவதும் ராகுலின் பேட்டிங் வியாபித்திருந்தது. டெல்லி அணிக்கு பெரிய ஸ்கோரை பெற்றுக் கொடுத்த ராகுலின் ஆட்டம் பிற்பாதியில் கில் - சுதர்சன் பேட்டிங்கால் மறக்கடிக்கப்பட்டுவிட்டது. டெல்லி அணியின் தவறுகள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நடராஜன் மட்டுமல்ல டெல்லி அணியில் அனைத்து பந்துவீச்சாளர்களும் ஓவருக்கு 9 ரன்களுக்குக் குறையாமல் ரன்களை வாரி வழங்கினர். டெல்லி அணி புதிய பந்தில் பந்துவீச நடராஜனுக்கு 2வது ஓவரிலேயே வாய்ப்பு அளித்தது தோல்விக்கு முக்கியக் காரணமாகும். இதுவரை ஐபிஎல் மட்டுமின்றி, மற்ற உள்நாட்டுப் போட்டிகளில் கூட நடராஜன் புதிய பந்தில் பந்து வீசியதில்லை. பெரும்பாலும் பவர்ப்ளே முடிந்து பந்து தேய்ந்த பின்புதான் பந்துவீசியிருக்கிறார். ஏனென்றால், உள்நாட்டுப் போட்டிகளில் நடராஜன் பந்துவீச்சை எதிர்கொண்ட அனுபவம் உள்ள சுதர்சனுக்கு அவரை பந்துவீசச் செய்தது பெரிய தவறாகும். அந்தத் தவறுக்கான தண்டனையாக 3 பவுண்டரி, சிக்ஸர் என 20 ரன்களை விலையாக டெல்லி அணி கொடுத்தது காயத்திலிருந்து திரும்பிய நடராஜனை சரியாக அக்ஸர் படேல் பயன்படுத்தி இருக்க வேண்டும். நடுப்பகுதி ஓவர்களிலும், டெத் ஓவர்களிலும் பந்துவீசி பழக்கப்பட்ட நடராஜனை தொடக்க ஓவரில் பந்துவீசச்செய்தது அவரின் நம்பிக்கையையும் உடைத்தெறிந்தது. 3 ஓவர்கள் வீசிய நடராஜன் 49 ரன்கள் வாரி வழங்கினார். நடராஜன் மட்டுமல்ல டெல்லி அணியில் அனைத்து பந்துவீச்சாளர்களும் ஓவருக்கு 9 ரன்களுக்குக் குறையாமல் வாரி வழங்கினர். படக்குறிப்பு,டெல்லி அணியை வீழ்த்திய குஜராத் "நினைத்தது நடந்தது" ஆட்டநாயகன் விருதுடன் ஆரஞ்சு தொப்பியையும் வசப்படுத்திய தமிழக வீரர் சாய் சுதர்சன் அளித்த பேட்டியில், " ஆட்டத்தை வெற்றியுடன் முடித்துக் கொடுப்பதில் சிறிய மகிழ்ச்சி இருக்கிறது. 6 ஓவர்களுக்குப் பின் 7 முதல் 10 ஓவர் வரை டெல்லி பந்துவீச்சு சிறப்பாக இருந்தது. ஆனால் நானும், கில்லும் ஆட்டத்தை கடைசி வரை எடுத்துச் செல்ல வேண்டும் என்று தீர்மானித்து எங்களை தயார் செய்தோம். 12 ஓவருக்குப்பின் பெரிய ஸ்கோர் செய்ய 2 ஓவர்கள் கிடைத்தன. அதை இருவரும் பயன்படுத்தினோம். ஒவ்வொரு போட்டியிலும் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்து, ஆட்டத்தை ஃபினிஷ் செய்ய நான் நினைப்பேன் ஆனால் முடியவில்லை. இந்த ஆட்டத்தில் நடந்துள்ளது. பேட்டிங்கில் பெரிதாக நான் மாற்றம் செய்யவில்லை. ஆனால் மனதளவில் சுதந்திரமாக இருக்கிறேன், 15 ஓவர்களுக்குப் பின் என்னால் சிறப்பாக பேட் செய்ய முடிந்தது, சுழற்பந்துவீச்சுக்கு எதிராக சிறப்பாக ஆடவும் செய்கிறேன். கில்லுக்கும் எனக்கும் நல்ல புரிதல் இருக்கிறது, இருவரும் பவுண்டரி, சிக்ஸர் அடித்தால் ஷாட்களைப் பற்றி பாராட்டுகளை பரிமாறிக் கொள்வோம், விக்கெட்டுகளுக்கு இடையே ரன் ஓடுவதிலும் சிறப்பாக செயல்பட்டோம்" எனத் தெரிவித்தார். 3 அணிகள் ப்ளே ஆஃப் முன்னேற்றம் பட மூலாதாரம்,GETTY IMAGES குஜராத் அணி இந்த வெற்றியால் 12 போட்டிகளில் 18 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்து ப்ளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றது. அது மட்டுமல்லாமல் ஆர்சிபி அணி, பஞ்சாப் கிங்ஸ் அணிகளும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. பிளேஆஃப் முன்னேற நான்காவது இடத்துக்கு மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேபிடல்ஸ், லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிகள் போட்டியிடுகின்றன. பஞ்சாப் கிங்ஸ் அணி 10 ஆண்டுகளுக்குப் பின் ப்ளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது. ஆர்சிபி அணி கடந்த 6 சீசன்களில் 5வது முறையும், குஜராத் அணி கடந்த 4 சீசன்களில் 3வது முறையும் ப்ளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளன. இந்த 3 அணிகளும் ப்ளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளனவே தவிர முதல் 3 இடங்களை எந்தெந்த அணிகள் பிடிக்கப் போகிறது என்பது அடுத்துவரும் ஆட்டங்களின் முடிவில்தான் தெரியும். ஐபிஎல் கூடுதல் விவரம் இன்றைய ஆட்டம் லக்னெள vs சன்ரைசர்ஸ் இடம்: லக்னெள நேரம்: இரவு 7.30 மும்பையின் அடுத்த ஆட்டம் மும்பை இந்தியன்ஸ் vs டெல்லி கேபிடல்ஸ் நாள் – மே 21 இடம் – மும்பை நேரம்- இரவு 7.30 மணி சிஎஸ்கேயின் அடுத்த ஆட்டம் ராஜஸ்தான் vs சிஎஸ்கே நாள் – மே 20 இடம் – டெல்லி நேரம்- இரவு 7.30 மணி ஆர்சிபியின் அடுத்த ஆட்டம் ஆர்சிபி vs சன்ரைசர்ஸ் நாள் – மே 23 இடம் – பெங்களூரு நேரம்- இரவு 7.30 மணி ஆரஞ்சு தொப்பி யாருக்கு? சாய் சுதர்ஸன்(குஜராத் டைட்டன்ஸ்)-617 ரன்கள்(12 போட்டிகள்) சுப்மான் கில் (குஜராத் டைட்டன்ஸ்)-601 ரன்கள்(12 போட்டிகள்) ஜெய்ஸ்வால்(ராஜஸ்தான் ராயல்ஸ்) 523 (13 போட்டிகள்) நீலத் தொப்பி யாருக்கு? பிரசித் கிருஷ்ணா (குஜராத்) 21 விக்கெட்டுகள்(12 போட்டிகள்) நூர் அகமது (சிஎஸ்கே) 20 விக்கெட்டுகள் (12போட்டிகள்) ஜோஷ் ஹேசல்வுட் (ஆர்சிபி) 18 விக்கெட்டுகள்(10 போட்டிகள்) - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cm265zvz15vo
  17. Published By: RAJEEBAN 19 MAY, 2025 | 04:53 PM யுத்தத்தில் இறந்தவர்களை நினைவுகூருவதற்கு அனைவருக்கும் உரிமையுள்ளது. ஆனால் வெற்றிவிழாவாகவும், வெற்றிநாயர்களாகவும் காட்டிக்கொள்வது எந்த வகையிலும் அர்த்தமற்ற ஒன்று என மக்கள் போராட்ட முன்னணியின் ராஜ்குமார் ரஜீவ்காந் தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்த அவர் இனவாதிகளிற்கு ஏற்றது போல இந்த அரசாங்கம் நகர்ந்து செல்கின்றது எனதெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது- கடந்த 2022 ம் ஆண்டு காலிமுகத்திடல் போராட்டத்தின் போது மே 18ம் திகதி முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட அனைவருக்குமான நினைவேந்தலை இன அழிப்பு நாளின் உடைய நினைவை, அங்கு ஏற்பாடு செய்திருந்தோம். அதன் தொடர்ச்சியாக நான்கு வருடங்களாக இந்த நிகழ்வு இடம்பெற்றுவருகின்றது, இந்த நிகழ்வு முதல் முறையாக காலிமுகத்திடலில் இடம்பெறும்போது, அங்கு முள்ளிவாய்க்கால் என்ற சொற்பதத்தை பயன்படுத்துவதற்கு அது சிலவேளைகளில் விடுதலைப்புலிகளை குறிக்கின்ற சொற்பதமாகயிருப்பதாகவும், எதிர்ப்புகள் வெளிவந்த போதிலும் அந்த எதிர்ப்புகளை மீறி அந்த நாளில் நாங்கள் அந்த நிகழ்வை சிறப்பாக செய்திருந்தோம். அத்தோடு யுத்த வெற்றி விழாவாக கொண்டாடப்படவிருந்த அந்த நாள் அன்று இரத்துச்செய்யப்பட்டது. ஏனென்றால் ஒருநாட்டின் ஒரு பகுதி மக்கள் வடக்கிலே மிக மோசமான முறையிலே கொல்லப்பட்ட நிலையில், பட்டினியில் இடப்பட்டும், குழந்தைகள் சிறுவர்கள் என பாராமல் அவர்கள்மீது கொத்துகொத்தாக குண்டுகளை போட்டு கொன்ற, அந்த நாட்கள். அது மட்டுமன்றி வைத்தியசாலைகள், பாதுகாப்பு வலயங்கள் என பிரகடனப்படுத்தப்பட்ட இடங்களிலே குண்டுதாக்குதல் மேற்கொள்ளப்பட்ட்டு மக்களிற்கு உணவில்லாமல் போதிய மருத்துவசதிகள் இல்லாமல், துடிதுடிக்கவைத்த இந்த நாட்களை எந்த காரணம் கொண்டும் வெற்றிவிழாவாக அதே நாட்டில் இருக்கின்ற இன்னொரு பிரஜை கொண்டாடுவது என்பது சகித்துக்கொள்ள முடியாத ஒரு விடயம். மனித மாண்பிற்கே இழுக்கான விடயம் என்பதை நாங்கள் தொடர்ச்சியாக வலியுறுத்திவருகின்றோம். அந்த வகையில் முள்ளிவாய்க்காலில் தொடர்ச்சியாக நினைவேந்தலில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் மக்களிற்கு உதவிவழங்கும் விதத்தில், நான்காவது தடவையாகவும் நாங்கள் இந்த நிகழ்வை கொழும்பில் ஏற்பாடு செய்திருந்தோம். வழமை போல அங்கும் சில இனவாதிகள் வந்து குழப்பத்தை ஏற்படுத்தியிருந்தார்கள். இதனை விடுதலைப்புலிகள் சார்பாக நடைபெறும் நிகழ்வு என அவர்கள் தரப்பிலிருந்து கூச்சல்கள் இட்டார்கள். இந்த கூச்சல்கள், குழப்பத்திற்கான முக்கிய காரணம் இந்த நாட்டில் இருக்கின்ற இனவாதத்தை தூண்டிவிடுவது. இனவாதத்தை தூண்டிவிடும் நடவடிக்கை என்பது தென்னிலங்கையில் ஒன்று முஸ்லீம்மக்கள் மேல் அல்லது தமிழ் மக்கள் மேல் தொடர்ச்சியாக நடத்தப்பட்டுக்கொண்டிருக்கின்றது. இந்த இனவாத செயற்பாடுகளிற்கு எதிராக ஒரு அரசாக இந்த அரசு போதிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்பதுதான் எங்களின் குற்றச்சாட்டு. ஏனென்றால் இனவாதிகளிற்கு ஏற்றது போல இந்த அரசாங்கம் நகர்ந்து செல்வது எந்த விதத்திலும் அர்த்தமுடையது அல்ல. அனைவரையும் இந்த நாட்டு மக்களாக பார்க்கவேண்டும் என கருதும் அரசு இந்த நாட்டில் உள்ள ஒரு தரப்பு மக்கள் நினைவேந்தலையும் மற்றைய தரப்பு வெற்றிவிழாவை கொண்டாடுவதையும் முதலில் பார்க்கவேண்டும். ஏன் இப்படி வேறுபாடாகயிருக்கின்றது? இந்த வேறுபாட்டை களைவதற்கு என்ன செய்யவேண்டும் அவர்களின் உரிமையை நிலைநாட்டுவதற்கு என்ன செய்யவேண்டும்? தென்னிலங்கையில் கொழுந்துவிட்டெரியும் இந்த இனவாதத்தை கட்டுப்படுத்துவதற்கு என்ன செய்யவேண்டும்? என்பது தொடர்பாக பாரியளவில் சிந்திக்கவேண்டிய தருணத்தில் இருக்கின்றோம். உங்களிற்கு தெரியும் மகிந்த ராஜபக்ச இந்த நாட்டை தொடர்ச்சியாக சூறையாடிக்கொண்டிருந்த தருணத்தில் இந்த நாட்டு மக்களை யுத்தத்தின் பால் ஈர்த்து யுத்தவெற்றிகளை காட்டித்தான் மக்களை தனது பக்கம் ஈர்த்துவைத்திருந்தார். அதேபோல இன்றும், யுத்தவெற்றி வீரர்கள் நாள் அனுஷ்டிக்கப்படுகின்றது. அந்த நாளிற்கு முதலில் ஜனாதிபதி செல்வதில்லை என்ற தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது பின்னர் அவர் செல்கின்றார். யுத்தத்தில் இறந்தவர்களை நினைவுகூருவதற்கு அனைவருக்கும் உரிமையுள்ளது. ஆனால் வெற்றிவிழாவாகவும், வெற்றி நாயர்களாகவும் காட்டிக்கொள்வது எந்த வகையிலும் அர்த்தமற்ற ஒன்று. மே 2009ம் ஆண்டு இறுதி யுத்தம் இடம்பெற்றது, இலட்சக்கான மக்கள் கொல்லப்பட்டார்கள். இது ஒரு இனஅழிப்பாக பார்க்கப்படுகின்றது. இதற்கான பொறுப்புக்கூறலை எந்த ஒரு அரசும், சரியான முறையில் ஏற்றுக்கொள்வதாக இல்லை, பொறுப்புக்கூறும் கடப்பாடு, அரசிற்குள்ளது. மக்கள் யாரும் இங்கு போரிட்டு இறந்த விடுதலைப்புலிகளிற்காக நினைவு கூரவில்லை, அவர்கள் அவர்களை வேறுவிதத்தில் நினைவு கூர்ந்தாலும் கூட மறுபக்கத்திலே, அவர்கள் பொறுப்புக்கூறல் என எதிர்பார்ப்பது இராணுவத்திடம் சரணடைந்து, காணாமலாக்கப்பட்ட தங்கள் உறவுகளிற்கு என்ன ஆனது?அதேபோல பொறுப்புவாய்ந்த அரசாங்கம் என கருதக்கூடிய இலங்கை அரசாங்கம் இலங்கையினுடைய மக்கள் குண்டுகளை போட்டு, கொன்று குவித்திருக்கின்றார்கள். அதற்கான பொறுப்புகூறலை யார் முன்வைப்பது என்ற கேள்வியும் அங்கிருக்கின்றது. https://www.virakesari.lk/article/215159
  18. படக்குறிப்பு,ஜகார்த்தா, இந்தோனீசியா கட்டுரை தகவல் எழுதியவர், அக்னியா அட்ஸ்கியா, அன்ட்ரோ சய்னி, அர்வின் சுப்ரியாடி, அயு இட்ஜஜா பதவி, பிபிசி உலக சேவை 5 மணி நேரங்களுக்கு முன்னர் சிங்கப்பூரின் நான்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் (என்.டி.யூ) மேற்கொண்ட ஆய்வில், உலகம் முழுவதிலும் கவலைப்படத்தக்க வகையில் வேகமாக மூழ்கி வரும் கடலோர நகரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் உள்ள சுமார் 48 நகரங்கள் எந்தளவுக்கு மூழ்கி வருகின்றன என்பது குறித்து ஆய்வுக்குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். காலநிலை மாற்றத்தால் உந்தப்பட்ட கடல் மட்ட உயர்வால் நிலப்பகுதிகள் மூழ்கும் அபாயம் கொண்ட நகரங்கள் இவை. ஆய்வுகள் மற்றும் ஐ.நாவின் மக்கள்தொகை தரவுகள் வாயிலாக இந்த பகுதிகளில் கிட்டத்தட்ட 16 கோடி மக்கள் வாழ்வதாக பிபிசி மதிப்பிட்டுள்ளது. இந்தியாவிலிருந்து சென்னை உட்பட 5 நகரங்கள் இந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளன. அந்த 5 நகரங்களில் நிலைமை என்ன? ஆமதாபாத், குஜராத் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஆமதாபாத்தின் மூழ்கும் பகுதிகளில் 51 லட்சம் பேர் வசிப்பதாக பிபிசி மதிப்பிட்டுள்ளது நான்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் ஆய்வின்படி, ஆமதாபாத்தின் சில பகுதிகள் 2014ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரை ஆண்டுதோறும் சராசரியாக 0.01 செ.மீ-5.1 செ.மீ என்ற அளவில் மூழ்கியுள்ளது. இந்த மூழ்கும் பகுதிகளில் 51 லட்சம் பேர் வசிப்பதாக பிபிசி மதிப்பிட்டுள்ளது. ஆமதாபாத்தின் பிப்லஜ் பகுதி வேகமாக மூழ்கும் பகுதிகளுள் ஒன்றாக என்.டி.யூ கண்டறிந்துள்ளது. இங்கு ஆடை நிறுவனங்கள் அதிகம் காணப்படுகின்றன. இப்பகுதி ஆண்டுக்கு சராசரியாக 4.2 செ.மீ அளவில் மூழ்குகிறது. இது 2024 ஆம் ஆண்டில் கடல் மட்டத்தில் ஏற்பட்ட 0.59 செ.மீ உயர்வுடன் ஒப்பிடப்படுகிறது என, நாசாவால் வழிநடத்தப்பட்ட ஆய்வு கூறுகிறது. அளவுக்கு அதிகமாக நிலத்தடி நீரை பயன்படுத்துவது, கடல் மட்டம் உயர்வு மற்றும் அதீத மழைப்பொழிவு ஆகியவை இதற்கான காரணங்களாக உள்ளன. இந்நகரம் இன்னும் மோசமான வெள்ளத்தால் வருங்காலத்தில் பாதிக்கப்படும் என்றும் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இதைத் தடுக்க, ஆமதாபாத் மாநகராட்சி காலநிலை தடுப்பு செயல் திட்டத்தை வடிவமைத்துள்ளது, மழைநீரை சேமிப்பது மற்றும் நிலத்தடி நீரை மீள்நிரப்பு செய்வதிலும் கவனம் செலுத்துகிறது. கொல்கத்தா, மேற்கு வங்கம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கொல்கத்தாவில் பாத்பரா (Bhatpara) எனும் பகுதி வேகமாக மூழ்கி வருவதாக இந்த ஆய்வு கண்டுபிடித்துள்ளது இந்த ஆய்வின்படி, 2014-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரை கொல்கத்தாவின் சில பகுதிகள் ஆண்டுக்கு சராசரியாக 0.01 செ.மீ-2.8 செ.மீ அளவுக்கு மூழ்கியுள்ளன. இப்படி மூழ்கும் பகுதிகளில் 90 லட்சம் பேர் வசிப்பதாக பிபிசி கணக்கிட்டுள்ளது. கொல்கத்தாவில் பாத்பரா (Bhatpara) எனும் பகுதி வேகமாக மூழ்கி வருவதாக இந்த ஆய்வு கண்டுபிடித்துள்ளது, இப்பகுதி ஆண்டுக்கு சராசரியாக 2.6 செ.மீ. எனும் அளவுக்கு மூழ்கியுள்ளது. இது 2024 ஆம் ஆண்டில் கடல் மட்டத்தில் ஏற்பட்ட 0.59 செ.மீ உயர்வுடன் ஒப்பிடப்படுகிறது என, நாசாவால் வழிநடத்தப்பட்ட ஆய்வு கூறுகிறது. கட்டுப்படுத்தப்பட்ட நீர்நிலைகளில் நிலத்தடி நீரை அதிகமாக உறிஞ்சுதல், நிலத்தடி நீரை சேமித்து வைக்கும் மண் அடுக்குகளிலிருந்து நீரை உறிஞ்சுவதுதான் காரணம் என நிபுணர்கள் கூறுகின்றனர். இத்தகைய பகுதிகளில் நிலநடுக்க அபாயங்கள், வெள்ளம் மற்றும் கடல்நீர் ஊடுருவல் ஆகியவை நிகழ்வதற்கான ஆபத்துகள் உள்ளதாக, நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இதைத் தடுக்க நிலத்தடி நீர் மேலாண்மை, நீர்நிலைகளை வரைபடமாக்குதல் (map aquifers), சுற்றுச்சூழல் தாக்க அறிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறதா என்பதை உறுதி செய்வதற்காக கட்டுமானங்களை கண்காணித்தல் போன்ற பல்வேறு திட்டங்களை இந்திய அரசு உருவாக்கியுள்ளது. மும்பை, மகாராஷ்டிரா பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,மிக உயரமான கட்டடங்கள் மும்பை மூழ்குவதற்கான காரணங்களுள் ஒன்றாக நிபுணர்கள் கூறுகின்றனர் என்.டி.யூ ஆய்வின்படி, மும்பையின் சில பகுதிகள் 2014-ஆம் ஆண்டு முதல் 2020-ஆம் ஆண்டு வரை ஆண்டுக்கு சராசரியாக 0.01 செ.மீ.-5.9 செ.மீ என்ற அளவில் மூழ்கியுள்ளதாக கூறுகிறது. இந்த மூழ்கும் பகுதிகளில் சுமார் 32 லட்சம் பேர் வசிப்பதாக பிபிசி மதிப்பிட்டுள்ளது. கிழக்கு மடுங்காவில் உள்ள கிங்ஸ் சர்க்கிள் நிலையம் மிகவும் வேகமாக மூழ்கும் பகுதியாக என்.டி.யூவின் ஆய்வில் தெரியவந்துள்ளது. அப்பகுதி சராசரியாக ஆண்டுக்கு 2.8 செ.மீ என்ற அளவில் மூழ்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது 2024 ஆம் ஆண்டில் கடல் மட்டத்தில் ஏற்பட்ட 0.59 செ.மீ உயர்வுடன் ஒப்பிடப்படுகிறது என, நாசாவால் வழிநடத்தப்பட்ட ஆய்வு கூறுகிறது. நிலத்தடி நீரை அதிகளவில் உறிஞ்சுதல், மிக உயரமான கட்டடங்கள், மெட்ரோ வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் ஈரநிலங்களை அரசு மற்றும் தொழில் நிறுவனங்கள் மறுபயன்பாட்டுக்கு உட்படுத்துதல் ஆகியவை இதற்கு காரணங்களாக உள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றன. இதைக் கட்டுப்படுத்த இந்திய அரசாங்கம் நிலத்தடி நீர் மேலாண்மை, நீர்நிலைகளை வரைபடமாக்குதல் மற்றும் உள்கட்டமைப்பு விதிமுறைகளை உருவாக்குதல் போன்ற திட்டங்களை உருவாக்கியுள்ளன. சூரத், குஜராத் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சூரத்தில் நிலத்தடி நீரை உறிஞ்சுவதே இதற்கு காரணமாக உள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். என்.டி.யூ ஆய்வின்படி, சூரத்தின் சில பகுதிகள் 2014-ஆம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரை ஆண்டுக்கு சராசரியாக 0.01 செ.மீ-6.7 செ.மீ என்ற அளவில் மூழ்கியுள்ளதாக கூறுகிறது. இந்த மூழ்கும் பகுதிகளில் 30 லட்சம் பேர் வசிப்பதாக பிபிசி மதிப்பிட்டுள்ளது. சூரத்தில் கரஞ்ச் (Karanj) எனும் பகுதி வேகமாக மூழ்கிவரும் பகுதிகளுள் ஒன்றாக என்.டி.யூ ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது, இப்பகுதி ஆண்டுக்கு 6.7 செ.மீ எனும் அளவுக்கு மூழ்கிவருகிறது. இது 2024 ஆம் ஆண்டில் கடல் மட்டத்தில் ஏற்பட்ட 0.59 செ.மீ உயர்வுடன் ஒப்பிடப்படுகிறது என, நாசாவால் வழிநடத்தப்பட்ட ஆய்வு கூறுகிறது. வேளாண்மை மற்றும் தொழில் நகரமான சூரத்தில், பாசனம், ஆடை தொழிற்சாலைகள் மற்றும் வீட்டுப் பயன்பாடுகளுக்காக அதிகளவு நிலத்தடி நீரை உறிஞ்சுவதே இதற்கு காரணமாக உள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். உகாய் அணையின் (ukai dam) செயல்பாட்டை மேம்படுத்துதல் முதல் வெள்ளத்தைக் கட்டுப்படுத்துதல், மழைப்பொழிவை முன்னறிவிப்பதற்கான மாதிரியை உருவாக்குதல், வெள்ள பாதிப்புக்கான முன்னெச்சரிக்கை அமைப்பை உருவாக்குவது ஆகிய திட்டங்களை உள்ளூர் அரசாங்கம் நிறைவு செய்துள்ளது. சென்னை, தமிழ்நாடு 2014-ஆம் ஆண்டிலிருந்து 2020-ஆம் ஆண்டு வரை ஆண்டுக்கு சராசரியாக 0.01 செ.மீ-3.7 செ.மீ என்ற அளவில் சென்னையின் சில பகுதிகள் மூழ்கியுள்ளதாக என்.டி.யூ. ஆய்வு தெரிவிக்கிறது. இந்த பகுதிகளில் 14 லட்சம் பேர் வசிப்பதாக பிபிசி மதிப்பிட்டுள்ளது. சென்னையில் வேகமாக மூழ்கும் பகுதியாக தரமணி இருப்பதாக என்.டி.யூ ஆய்வில் தெரியவந்துள்ளது. அந்த பகுதி ஆண்டுக்கு சராசரியாக 3.7 செ.மீ அளவுக்கு மூழ்குவதாக அந்த ஆய்வு கூறுகிறது. இது 2024 ஆம் ஆண்டில் கடல் மட்டத்தில் ஏற்பட்ட 0.59 செ.மீ உயர்வுடன் ஒப்பிடப்படுகிறது என, நாசாவால் வழிநடத்தப்பட்ட ஆய்வு கூறுகிறது. விவசாயம், தொழில் மற்றும் வீட்டுப் பயன்பாடுகளுக்கு அதிகளவில் நிலத்தடி நீர் உறிஞ்சப்படும் பகுதிகள் வேகமாக மூழ்கிவருவதாக சென்னையில் உள்ள நிபுணர்கள் கூறுகின்றனர். இதைத் தடுக்க நிலத்தடி நீர் மேலாண்மை, நீர்நிலைகளை வரைபடமாக்குதல் (map aquifers), சுற்றுச்சூழல் தாக்க அறிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறதா என்பதை உறுதி செய்வதற்காக கட்டுமானங்களை கண்காணித்தல் போன்ற பல்வேறு திட்டங்களை அரசு உருவாக்கியுள்ளது. ஜகார்த்தா, இந்தோனீசியா இந்த ஆய்வில், வேகமாக மூழ்கிவரும் நகரங்களுள் ஒன்றாக இந்தோனீசியாவின் ஜகார்த்தா நகரம் கண்டறியப்பட்டுள்ளது. ஜகார்த்தாவின் சில பகுதிகள் 1970களைக் காட்டிலும் 4 மீட்டர் அளவுக்கு மூழ்கியுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. அதனால், 1,200 கி.மீ தொலைவில் உள்ள போர்னியோ எனும் மற்றொரு தீவில் உள்ள நுசந்தராவில் புதிய தலைநகரத்தைக் கட்டமைக்க இந்தோனீசியா திட்டமிட்டுள்ளது. இது கடற்கரையிலிருந்து வெகு தொலைவில் உள்ளது மற்றும் ஆற்றுநீர், மழைநீரை சேமிக்க ஒரு பெரிய அணை மற்றும் நீர்த்தேக்கத்தை நம்பியுள்ளது. புதிய தலைநகரில் உள்ள அனைத்து வீடுகள் மற்றும் அலுவலகங்களுக்கும் தண்ணீரை சுத்திகரித்து விநியோகிப்பதே இந்தத் திட்டத்தின் நோக்கம், இதனால் நிலத்தடி நீரை உறிஞ்சும் தேவை நீக்கப்படுகிறது. இருப்பினும், புதிய நகரம் பல்லுயிர் பெருக்க இடத்தில் கட்டமைக்கப்படுவதால் சுற்றுச்சூழல் தாக்கங்களுக்காக விமர்சிக்கப்படுகிறது. டோக்கியோ எப்படி இந்த பிரச்னையை தீர்த்தது? டோக்கியோ நகரத்தின் சில பகுதிகள் மூழ்குவதாக கண்டறியப்பட்ட போது, அந்நகரம் வேறொரு அணுகுமுறையை மேற்கொண்டது, அந்த பிரச்னையின் வேரைக் கண்டறிந்து தீர்க்க முடிவு செய்தது. நிலத்தடி நீரை உறிஞ்சுவதில் கடுமையான கட்டுப்பாடுகளை டோக்கியோ நடைமுறைப்படுத்தியதையடுத்து 1970களில் அந்நகரம் மூழ்குவது குறிப்பிடத்தக்க அளவில் குறைந்தது. தண்ணீர் விநியோக மேலாண்மை அமைப்பையும் அந்நகரம் உருவாக்கியது. நகரம் மூழ்குவதை நிறுத்துவதில் இந்த நடவடிக்கை அதிகளவில் செயலாற்றியதாக விஞ்ஞானிகள் வாதிடுகின்றனர். தற்போது இந்த நகரம் அதிகளவில் நிலையானதாக உள்ளதாகவும் 2014ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரை சில பகுதிகள் 0.01 முதல் 2.4 செ.மீ என்ற அளவில் மூழ்கியதாகவும் என்.டி.யூ ஆய்வில் தெரியவந்துள்ளது. என்ன செய்தது டோக்கியோ? நகருக்கு வெளியே உள்ள 2 அணைகளால் தடுக்கப்படும் ஆறுகள் மற்றும் வனங்களில் இருந்தே டோக்கியோவுக்கு அதிகளவிலான நீர் பெறப்படுகிறது. இந்த தண்ணீர் 10 ஆலைகளில் சுத்திகரிக்கப்பட்டு, விநியோக மையத்துக்கு அனுப்பப்படுகின்றன. இந்த மையம், தண்ணீரின் அளவு மற்றும் அழுத்தத்தை ஒழுங்குபடுத்துகிறது. இந்த மையத்திலிருந்து வீடுகள் மற்றும் ஆலைகளுக்கு, நிலநடுக்கத்தால் சேதமடையாத பைப்புகள் வாயிலாக விநியோகிக்கப்படுகின்றன. டோக்கியோ இதை திறம்பட செயல்படுத்தினாலும், அதை நிர்வகிப்பதில் ஆகும் அதிக செலவுகள் காரணமாக, இதை பரவலாகச் செயல்படுத்த முடியுமா என்பதில் சந்தேகம் நிலவுவதாக, ஜப்பானின் வாசெடா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மிகுவெல் எஸ்டெபேன் கூறுகிறார். எனினும், சில ஆசிய நகரங்கள் டோக்கியோவின் அணுகுமுறையை மாதிரியாகப் பார்ப்பதாகவும் அவர் கூறுகிறார். உதாரணமாக, 1970களில் தைவானில் தைபே நகரம் நிலத்தடி நீர் உறிஞ்சுவதை குறைத்துள்ளது, இதனால் அந்நகரம் மூழ்கும் வேகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cx27yk10dkzo
  19. Published By: VISHNU 19 MAY, 2025 | 07:48 PM "பெற்றோர்களே, இந்த தாய் நாட்டின் போரை முடிவுக்குக் கொண்டுவர உங்கள் பிள்ளைகள், மனைவிமார், உங்கள் கணவரைத் தியாகம் செய்தீர்கள்" நீங்கள் சிறந்த தாய்மார்கள். நீங்கள் சிறந்த மனைவிமார். ஆனால் அதன் இறுதி முடிவு என்னவாக இருக்க வேண்டும்? உங்கள் குழந்தை, உங்கள் கணவர், உங்கள் நண்பர், உங்கள் உறவினருக்கு நீங்கள் செய்யக்கூடிய மிக உயர்ந்த நீதி, இந்த நாட்டில் அமைதியை நிலைநாட்டுவதாகும். இந்த நினைவிடத்திற்கு முன், நாம் நின்று அவர்களுக்கு உரிய மரியாதை செலுத்துவது என்பது, மீண்டும் ஒரு மோதல் ஏற்பட இடமளிக்காமல், வெறுப்பு நிறைந்த சமூகத்திற்குப் பதிலாக சகோதரத்துவம், அன்புடன் கூடிய ஒற்றுமை நிறைந்த சமூகத்தை உருவாக்கத் தயார் என்ற உறுதிமொழியை எடுப்பதாகும்” என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். பத்தரமுல்ல, படைவீரர்கள் நினைவிடத்தில் இன்று (19) பிற்பகல் நடைபெற்ற 16 ஆவது படைவீரர்கள் தின நினைவு நிகழ்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக நீடித்த யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்த தினத்தை நினைவுகூறும் நிகழ்வு இன்று (19) பிற்பகல் பத்தரமுல்ல, படைவீரர்கள் நினைவிடத்திற்கு முன்பாக, முப்படைகளின் தளபதி, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தலைமையில் நடைபெற்றது. ஜனாதிபதியின் முழுமையான உரை பின்வருமாறு: எமது நாடு பல தசாப்தங்கள் யுத்தத்திற்கு முகங்கொடுத்தது. யுத்தம் எமது நாட்டுக்கும் மக்களுக்கும் பெரும் அழிவை தந்தது. பலவருடங்களின் பின்னர் யுத்தத்தை நிறைவு செய்ய முடிந்தது. யுத்தத்தை நிறைவு செய்ய உயிர்த்தியாகம் செய்த படையினரை நாம் இன்று நினைவு கூறுகிறோம். இது முக்கியமான வரலாற்றுத் தினமாகும். இது யுத்த நிறைவு தினம் மட்டுமன்றி மீண்டும் நாட்டில் யுத்தம் ஏற்படுவதைத் தடுக்க சிங்கள, தமிழ், முஸ்லிம், பேர்கர், மலே, கிரிஸ்தவர் என சகல மக்களும் ஒரே நாட்டிற்குள் ஒற்றுமையாக நாட்டைக் கட்டியெழுப்பப் போராடுகின்றனர். யுத்தத்தை நிறைவு செய்ய எமது படையினர் உயிர்த்தியாகம் செய்தனர். இங்குள்ள நினைவுச் சின்னம் முழுவதும் அவர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. யுத்தத்தினால் பலர் அங்கவீனமுற்றனர். பலர் தமது உடல் உறுப்புகளை இழந்தனர். அவர்களின் உறவினர், குடும்பத்தினர் பெரும் தியாகம் செய்தனர். அவர்களை நாம் தினமும் நினைவில் கொள்ள வேண்டும். அவர்களுக்கு நாடு கடன் பட்டுள்ளது. யுத்தம் என்பது பாரிய அழிவாகும். யுத்தத்தில் போராடிய நீங்கள் யுத்தம் எந்தளவு நாசகரமானது என்பதை அறிந்திருப்பீர்கள். யுத்தம் செய்த எவரும் யுத்தத்தை தொடர்ந்து எதிர்பார்த்து போராடவில்லை. அனைவரும் சமாதானத்தை எதிர்பார்த்தே போராடினர். வடக்கு தெற்கு பேதமின்றி பெற்றோரை இழந்த பிள்ளைகள், பிள்ளைகளை இழந்த பெற்றோர், கணவரை இழந்த மனைவிமார் உள்ளனர். அவர்கள் கௌரவத்துடன் நினைவுத் தூபியில் தமது உறவினர்களின் பெயர்களைத் தேடுகின்றனர். இங்கு மாத்திரமா வடக்கிலும் இதே நிலைமை தான். தமது பிள்ளைகள், கணவர்மார்களின் புகைப்படத்தை வைத்துக் கொண்டு அவர்களின் உறவினர்கள் வீதியோரம் ஒப்பாரி வைக்கின்றனர். அனைத்து பெற்றோருக்கும் தமது பிள்ளை முக்கியம். பாரிய அழிவை சந்தித்த தாய்நாட்டில் அவ்வாறான யுத்தம் மீள ஏற்படுவதை தடுப்பது எமது பொறுப்பாகும். எமது சந்ததி சண்டையிட்டது. கோபமும் குரோதமும் பரவியது. ஆனால் எமது பிள்ளைகள் வாழும் இன்றைய சந்ததினருக்கு யுத்தம் செய்யாத, மோதல் அற்ற, கோபம், சந்தேகத்திற்குப் பதிலாக நட்புறவு மற்றும் அன்புள்ள நாடு உருவாக்கப்பட வேண்டும். கடந்த கால சம்பவங்களில் இருந்து பாடம் கற்க வேண்டும். மீள அவ்வாறான நிலை எமது தாய்நாட்டில் ஏற்பட இடமளிக்கக் கூடாது. யுத்தமற்ற, குரோதமோ, சந்தேகமோ அற்ற நாடு உருவாக்கப்பட வேண்டும். மீண்டும் மோதல், குரோதம் உள்ள நாட்டுக்குப் பதிலாக சமாதானமான நாட்டை உருவாக்குவதே அவர்களுக்கு நாம் செய்யும் கௌரவமாகும். நாம் எதிர்கால சந்ததியினருக்கு சமாதானமான நாட்டையே வழங்க வேண்டும். அதிகாரத்தை பெறவும் பாதுகாக்கவும் யுத்தம், மோதல் மற்றும் இனவாதத்தை கடந்த காலத்தில் பயன்படுத்தினார்கள். சரத் பொன்சேகா இரண்டரை வருடங்கள் சிறையில் இருந்தார். அவர் என்ன தவறு செய்தார். அவருடன் நான் அன்று நெருக்கமாக பழகினேன். அதிகாரத்தை பலப்படுத்தவும் பாதுகாக்கவும் மேற்கொள்ளப்பட்ட யுத்தங்கள் மற்றும் மோதல்களினால் வடக்கிலும் கிழக்கிலும் உள்ள பிள்ளைகளே பாதிக்கப்பட்டனர். யுத்தத்திற்கு எந்த காரணமும் அற்ற பங்களிக்காத கிராமத்துப் பெற்றோரின் பிள்ளைகளே இறந்தனர், அங்கவீனமுற்றனர். இது தான் அதனால் கிடைத்த அழிவாகும். மக்களால் புறக்கணிக்கப்பட்டோருக்கு யுத்தம் என்பது இனிய அனுபவம். நாம் சமாதானத்திற்காக ஒன்றிணைய வேண்டும். ஆனால் இன்று சமாதானம் என்பது காட்டிக்கொடுப்பின் சின்னமாக மாறியுள்ளது. நல்லிணக்கம் என்பது காட்டிக்கொடுப்பாக உள்ளது. யுத்தம் ஒருபோதும் வெற்றியை கொண்டுதருவதில்லை. படைவீரர்களிடமிருக்கும் ஆயுதத்தை பயன்படுத்த தேவையற்ற அமைதியான சமூகம் உருவாக வேண்டும். நாம் மனிதாபிமானத்திற்கும் மனிதத்துவத்திற்குமே அடிபணிய வேண்டும். இந்த பூமி போதுமான அளவு இரத்தத்தில் தோய்ந்துள்ளது. பெற்றோரும் உறவினர்களும் அதிகமதிகம் கண்ணீர் சிந்தியுள்ளனர். யுத்தத்தின் வேதனையை அனுபவித்துள்ளோம். மீண்டும் அத்தகைய நிலை ஏற்படுவதை தடுக்க வேண்டும். அனைவரும் சமாதானத்திற்காகவே ஆயுதம் ஏந்தினார்கள். யுத்தத்தின் நிறைவு என்பது சமாதானத்தை நிலைநாட்டுவதாகும். நாம் முழுமையான வெற்றியாளர்களாக மாற சமாதானத்தை நிலைநாட்ட வேண்டும். நாம் சமாதானத்திற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கத் தயார். நாட்டின் சமாதானத்திற்காகவே படைவீரர்கள் பங்களித்தார்கள். எதிர்காலத்திலும் சமாதானத்திற்காக பங்களிப்பார்கள். சமாதானத்தை நிலைநாட்டுவதே இறந்த படைவீரர்களுக்கு செய்யும் கைங்கரியமாகும். இது கடினமான செயற்பாடு. வடக்கிலும் தெற்கிலும் அதிகாரத்திற்காக இனவாதம் மீண்டும் பயன்படுத்தப்படுகிறது. தாய்நாட்டில் உண்மையான சமாதானம் நிலைநாட்டப்படவில்லை. மண்சரிவு அபாயம் உள்ள 4900 வீடுகள் உள்ளன. மழை பெய்யும் போது அதில் எங்கு மண்சரிவு ஏற்படும் என்ற அச்சம் ஏற்படுகிறது. உலகில் எங்காவது மோதல் நடக்கும் போது எமது பொருளாதாரத்திற்கு எத்தகைய தாக்கம் ஏற்படும் என்ற அச்சம் தோன்றும். இத்தகைய நிலையில் இது சுதந்திரமான நாடா? பொருளாதார ரீதியாக வீழ்ந்த நாட்டில் எங்கு இறையாண்மை உள்ளது. பலமான பொருளாதாரமற்ற நாடாக இருக்கிறோம். உலகில் கௌரமான நாடாக உயர பொருளாதார ஸ்தீர நிலை ஏற்படுத்தப்பட வேண்டும். குற்றங்கள், தொற்றுநோய்கள் அற்ற நாடு உருவாக வேண்டும். மோதல்களற்ற குரோதமற்ற நாடு உருவாக வேண்டும். அதன் ஊடாகவே பலமான இறையாண்மை ஏற்படும். இந்த தாய் நாட்டை நாம் நேசிக்கிறோம். உலகில் சிறந்த நாடாக மாற்ற சமாதானமும் நல்லிணக்கமும் அவசியம். அதற்கான அனைத்து முடிவுகளையும் தைரியமாக எடுக்க வேண்டும். படையினர் காட்டிய அர்ப்பணிப்பு, தியாகம் மற்றும் தைரியம் என்பன இந்த நாட்டைக் கட்டியெழுப்புவதில் எங்களுக்கு நம்பிக்கையைத் தரும். அதற்காக நாம் அனைவரும் சேர்ந்து ஒரு புதிய போராட்டத்தை ஆரம்பிப்போம். https://www.virakesari.lk/article/215169
  20. இலங்கையில் இடம்பெற்றது இனஅழிப்பு - ராஜபக்ச அரசாங்கத்தின் யுத்த குற்றங்களை ஒருபோதும் மறக்ககூடாது - கனடாவின் கென்சவேர்ட்டிவ் கட்சி தலைவர் Published By: RAJEEBAN 19 MAY, 2025 | 01:14 PM இலங்கையில் இடம்பெற்றது படுகொலைகள் மாத்திரமல்ல, இனஅழிப்பு என தெரிவித்துள்ள கனடாவின் கென்சவேர்ட்டிவ் கட்சி தலைவர் பியர் பொலியியர்(Pierre Poilievre,) ராஜபக்ச அரசாங்கத்தின் யுத்த குற்றங்களை ஒருபோதும் மறக்ககூடாது. அந்த குற்றங்களில் ஈடுபட்டவர்கள் தண்டனையின்றி தப்ப அனுமதிக்க கூடாது என தெரிவித்துள்ளார் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தை முன்னிட்டு வெளியிட்ட அறிக்கையில் இதனை தெரிவித்துள்ள அவர், மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, வரலாற்றை திரும்பிப்பார்க்கும் அனைவரும் பெருமிதமான தருணங்களையும் வலிமிகுந்த தருணங்களையும் நினைவுகூருவார்கள். தமிழ் இனப்படுகொலை நினைவுநாளில் கடந்த நூற்றாண்டின் மிகப்பெரிய துயரங்களில் ஒன்றான தமிழ் இனப்படுகொலை குறித்து எங்கள் எண்ணங்களை திருப்புகின்றோம். பல தசாப்தங்களாக இலங்கை வன்முறையாலும் இரத்தக்களறியாலும் பாதிக்கப்பட்டது, ஏற்கனவே பல வருடங்களாக துயரங்களை அனுபவித்த நிலையில் 2009 மே மாதம் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டமை, தனித்துவமான பயங்கரம் மற்றும் ஈவிரக்கமற்ற தன்மை ஆகியவற்றின் தருணமாகும். இது வெறுமனே படுகொலையில்லை இது இனஅழிப்பு 16 வருடங்களிற்கு பின்னர் பாதிக்கப்பட்டவர்களை நாங்கள் நினைவுகூருகின்றோம், நீதிக்கான அவசர தேவையை அங்கீகரிக்கின்றோம். ராஜபக்ச அரசாங்கத்தின் யுத்த குற்றங்களை ஒருபோதும் மறக்ககூடாது. அந்த குற்றங்களில் ஈடுபட்டவர்கள் தண்டனையின்றி தப்ப அனுமதிக்க கூடாது. கனடா வலுவான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும், பொறுப்புக்கூறலை கோரவேண்டும். கனடா யுத்தகுற்றவாளிகளிற்கான புகலிடமாக ஒருபோதும் விளங்ககூடாது. தமிழ் இனப்படுகொலைக்கு காரணமானவர்கள் உண்மையான விளைவுகளை அனுபவிப்பதை உறுதி செய்வதற்கு கென்சவேர்ட்டிவ் அரசாங்கம் நடவடிக்கைகளை எடுக்கும். கனடாவில் உள்ள தமிழ் சமூகம் நம்பமுடியாத மீள் எழுச்சி தன்மையை வெளிப்படுத்தியுள்ளது. வேதனையை வலிமையாக மாற்றியுள்ளது, எங்கள் நாட்டை வளப்படுத்தியுள்ளது. இந்த இனப்படுகொலையில் பாதிக்கப்பட்டவர்களை நாங்கள் நினைவுகூரும் இந்த தருணத்தில் அனைவருக்கும் நீதி மற்றும் சமாதானத்திற்கான எங்கள் அர்ப்பணிப்பை மீளவலியுறுத்துகின்றோம். எங்கள் பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர் ராஜபக்ச அரசாங்கத்தை எதிர்த்துநின்றார் என்பது குறித்து நான் பெருமிதம் அடைகின்றேன். நான் ராஜபக்ச அரசாங்கம் தங்கள் குற்றங்களிற்காக பதில் கூருவதை உறுதி செய்வதற்காக தொடர்ந்தும் போராடுவேன், சர்வதேச நீதிமன்றத்தில் அவர்களை பாரப்படுத்தும் நடவடிக்கைகளை எடுப்பேன். https://www.virakesari.lk/article/215141
  21. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், சுசீலா சிங் பதவி, பிபிசி செய்தியாளர் 28 ஏப்ரல் 2024 புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் (அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜோ பைடனுக்கு ப்ராஸ்டேட் புற்றுநோய் உறுதியாகியிருப்பதைத் தொடர்ந்து, இந்த கட்டுரை மறுபகிர்வு செய்யப்படுகிறது) மருத்துவ ஆய்விதழான லான்செட் கடந்த ஆண்டு வெளியிட்டிருந்த ஓர் அறிக்கைப்படி, உலகம் முழுவதும் ப்ராஸ்டேட் புற்றுநோயால் பாதிக்கப்படும் ஆண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 2020ஆம் ஆண்டில் ப்ராஸ்டேட் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14 லட்சமாக இருந்தது. இது 2040ஆம் ஆண்டில் 29 லட்சமாக அதிகரிக்கும் என்று லான்செட் அறிக்கை கூறுகிறது. மொத்தம் 112 நாடுகளில் உள்ள ஆண்களுக்கு இது பொதுவான பிரச்னை என்றும், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களில் 15% பேர் ப்ராஸ்டேட் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் என்றும் இந்த அறிக்கை கூறுகிறது. கடந்த 2020ஆம் ஆண்டில், உலகளவில் 3,75,000 ஆண்கள் ப்ராஸ்டேட் புற்றுநோயால் இறந்தனர். எதிர்வரும் 2040ஆம் ஆண்டில் இந்த இறப்புகள் 85% அதிகரிக்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. புற்றுநோயால் ஏற்படும் ஆண்கள் மத்தியில் ஏற்படும் இறப்புகளில் இது ஐந்தாவது பெரிய காரணமாக உள்ளது. இந்தியாவில், புற்றுநோய் பாதிக்கப்பட்ட மக்களில் மொத்தம் 3% ப்ராஸ்டேட் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள். மேலும் ஒவ்வோர் ஆண்டும் 33,000 முதல் 42,000 புதிதாக ப்ராஸ்டேட் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். இந்தியாவில் 30% அதிகரித்த ப்ராஸ்டேட் புற்றுநோய் பட மூலாதாரம்,RITU MARWA படக்குறிப்பு,ரிது மர்வா மற்றும் ராஜேஷ் குமார் லான்செட் அறிக்கையின்படி, ஒவ்வொரு 1 லட்சம் ஆண்களுக்கும் 4 முதல் 8 பேர் ப்ராஸ்டேட் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். கடந்த 25 ஆண்டுகளில் நகர்ப்புற மக்களில் ப்ரோஸ்டேட் புற்றுநோய் 75% முதல் 85% அதிகரித்துள்ள அதே வேளையில், தேசிய அளவில் புற்றுநோய் பாதிப்புகள் 30% அதிகரித்துள்ளது. டெல்லியில் வசிக்கும் ராஜேஷ் குமாருக்கு 2022 அக்டோபரில் ப்ரோஸ்டேட் புற்றுநோய் இருப்பது தெரிய வந்தது. அவரது மனைவி ரிது மர்வா பிபிசியிடம் ஒரு தொலைபேசி உரையாடலில், "என் கணவர் சிறுநீரை அடக்கி வைப்பதில் பிரச்னைகளை எதிர்கொண்டார். நாங்கள் ஒவ்வோர் ஆண்டும் மருத்துவ பரிசோதனை செய்து கொள்வோம். இந்த பிரச்னைக்குப் பிறகு, எங்கள் குடும்ப மருத்துவர் அல்ட்ராசவுண்ட் செய்யச் சொன்னார்," என்றார். பரிசோதனையில் ராஜேஷ் குமாருக்கு ப்ரோஸ்டேட் பெரிதாகி இருப்பது தெரிய வந்ததால், மருத்துவர் அவரை ப்ரோஸ்டேட் ஸ்பெசிஃபிக் ஆன்டிஜென் அல்லது பி.எஸ்.ஏ பரிசோதனை செய்து கொள்ளச் சொன்னார். இதையடுத்து எம்.ஆர்.ஐ., பயாப்ஸி ஆகிய பரிசோதனைகள் செய்து பார்த்ததில் ராஜேஷ் குமாருக்கு இரண்டாம் நிலை ப்ரோஸ்டேட் புற்றுநோய் இருப்பது தெரிய வந்தது. ப்ரோஸ்டேட் என்றால் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES ப்ரோஸ்டேட் ஆண் இனப்பெருக்க அமைப்பின் ஒரு பகுதி. இது சிறுநீர்ப்பைக்கு அடியில் அமைந்துள்ளது. இது ஒரு வால்நட் அளவில் இருந்தாலும் வயது ஆக ஆகப் பெரிதாகிறது. ஆண்களுக்கு 45-50 வயதிற்குப் பிறகு ப்ரோஸ்டேட் தொடர்பான பிரச்னைகள் வந்தாலும், அவை அனைத்தும் புற்றுநோய் அல்ல என்கிறார்கள் மருத்துவர்கள். மேலும், எல்லா ஆண்களும் இந்தச் சிக்கலை எதிர்கொள்வது இல்லை. ப்ராஸ்டேட் உறுப்பின் அளவு அதிகரிக்கத் துவங்கும்போது மருத்துவர்கள் பி.எஸ்.ஏ சோதனையைப் பரிந்துரைக்கின்றனர். இந்த ஆய்வுக்குப் பிறகுதான், புற்றுநோய் சந்தேகம் இருந்தால் கூடுதல் பரிசோதனைகள் செய்யப்பட்டு, முடிவுகளின்படி சிகிச்சை துவங்கப்படுகிறது. இந்த சிகிச்சை 68 வயதான ராஜேஷ் குமாருக்கும் தொடங்கப்பட்டது. 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ப்ரோஸ்டேட் புற்றுநோய் மெதுவாக வளரும் பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் (AIIMS) அறுவை சிகிச்சை புற்றுநோயியல் துறையில் பேராசிரியராக இருந்த மருத்துவர் எஸ்.வி.எஸ்.தேவ் இதுபற்றிக் கூறுகையில், இந்த நோய் வயது அதிகரித்த பிறகு தோன்றும் என்றார். மேலும், இது உடலில் மெதுவாக வளரும் தன்மை கொண்டது என்றும் கூறினார். தைராய்டு புற்றுநோய் மற்றும் சில வகையான மார்பகப் புற்றுநோய்களும் உடலில் மெதுவாக வளரும் தன்மை கொண்டவை. "இதற்கு முன்பு இந்தியாவில் ப்ராஸ்டேட் புற்றுநோய் பாதிப்புகள் குறைவாகவே இருந்தன. ஏனெனில் மக்களின் சராசரி ஆயுட்காலம் குறைவாக இருந்தது, அதாவது 60 வயது. ஆனால் இப்போது மக்களின் சராசரி ஆயுட்காலம் அதிகரித்துள்ளது," என்று அவர் கூறுகிறார். டெல்லியின் ஆர்ட்டெமிஸ் மருத்துவமனையில் சிறுநீரக மருத்துவத்தின் தலைமை மருத்துவராக இருக்கும் விக்ரம் பருவா கௌசிக், "மக்களின் சராசரி ஆயுட்காலம் அதிகரித்ததால், ப்ரோஸ்டேட் புற்றுநோயும் அதிகரிக்கத் துவங்கியது. ஆனால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை பதிவு செய்யப்படுவதைவிட அதிகமாக இருக்கலாம்," என்றார். பட மூலாதாரம்,DR SVS DEO படக்குறிப்பு,மருத்துவர் எஸ்.வி.எஸ்.தேவ் இந்தியாவில் உள்ள புற்றுநோய் பதிவேட்டின்படி, கடந்த பத்து ஆண்டுகளில் ப்ரோஸ்டேட் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆனால் மேற்கத்திய நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் இந்த எண்ணிக்கை இரண்டு முதல் மூன்று மடங்கு குறைவாக இருப்பதாக மருத்துவர் எஸ்.வி.எஸ் தேவ் கூறுகிறார். இந்தப் புற்றுநோய் தரவு, புற்றுநோய் பதிவேட்டில் இருந்து கிடைப்பதாகவும் ஒவ்வொரு மருத்துவமனையில் இருந்தும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் கூறுகிறார். இத்தகைய சூழ்நிலையில், ப்ரோஸ்டேட் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கலாம் என்றும் எச்சரிக்கிறார் அவர். இந்தப் புற்றுநோய்க்கான பரிசோதனைத் திட்டம் இல்லாததால் ப்ரோஸ்டேட் புற்றுநோயின் வழக்குகள் குறைவாக இருப்பதாகவும், ஆனால் மேற்கத்திய நாடுகளில் அதிக அளவு ப்ரோஸ்டேட் புற்றுநோய் பரிசோதனைகள் நடப்பதாகவும் அவர் கூறுகிறார். எவ்வாறாயினும், இதனால் ஏற்படும் இறப்புகளின் எண்ணிக்கையை மதிப்பிடுவது சவாலானது, ஏனெனில் இதன் காரணமாக ஏற்படும் இறப்புகள் குறைவாகவே பதிவு செய்யப்படுகின்றன. இது ஒரு வாழ்க்கை முறை நோயா? பட மூலாதாரம்,DR PRADEEP BANSAL படக்குறிப்பு,மருத்துவர் பிரதீப் பன்சல் ஃபோர்டிஸ் மருத்துவமனையின் சிறுநீரகவியல், ரோபோடிக்ஸ் மற்றும் சிறுநீரக மாற்று சிகிச்சைத் துறையின் இயக்குநரான மருத்துவர் பிரதீப் பன்சல், ஆண்களின் வயது அதிகரிக்க அதிகரிக்கும்போது ப்ரோஸ்டேட் புற்றுநோய் பாதிப்பிற்கான சாத்தியங்கள் அதிகரிப்பதாகக் கூறுகிறார். இதற்குக் காரணம் மரபணு என்றும் அவர் தெரிவித்தார். அதேநேரம் சைவ உணவு உண்பவர்களைவிட அசைவ உணவு உண்பவர்களுக்கு புற்றுநோய் வருவதற்கான சாத்தியங்கள் அதிகமாக இருக்கலாம் என்கிறார். ஆனால் சைவ உணவு மட்டுமே உட்கொள்பவர்களுக்கு புற்றுநோய் வரவே வராது என்றும் கூற முடியாது, ஏனெனில் புற்றுநோய் வருவதற்கு மேலும் பல காரணங்கள் உள்ளன. மேலை நாடுகளில் இந்தப் புற்றுநோய் அதிகமாகக் காணப்படுவது, ஏனென்றால் இது உணவுப் பழக்கம், புகைப்பிடித்தல், மது அருந்துதல் போன்றவற்றுடன் தொடர்புடையது. இவை புற்றுநோய் அபாயத்தை அதிகரிப்பதாகக் கூறுகிறார் மருத்துவர் பன்சால். சமீபத்திய லான்செட் அறிக்கைப்படி, ப்ரோஸ்டேட் புற்றுநோய் தாமதமாகக் கண்டறியப்படுகிறது. மேலும் குறைந்த அல்லது நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் தாமதமான நோயறிதல் ஒரு பெரிய பிரச்னை. ப்ராஸ்டேட் புற்றுநோயின் அறிகுறிகள் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES ஒருவரது குடும்பத்தில் யாருக்கேனும் புற்றுநோய் இருந்தால், அந்த நபரை புற்றுநோய் பரிசோதனை செய்துகொள்ள மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். ப்ரோஸ்டேட் புற்றுநோய்க்குக் குறிப்பிட்ட அறிகுறிகள் இல்லை என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். மருத்துவர்களின் கூற்றுப்படி, ஒருவரின் பி.எஸ்.ஏ அளவும் அந்த நபரின் வயதைப் பொறுத்தது. அமெரிக்க அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான நேஷனல் கேன்சர் இன்ஸ்டிடியூட் என்ற நிறுவனத்தின்படி, எந்த பி.எஸ்.ஏ அளவும் சாதாரணமானது அல்லது அசாதாரணமானது அல்ல. முன்பு 4ng/mL அல்லது அதற்கும் குறைவானது சாதாரணமாகக் கருதப்பட்டது. ஆனால் இதைவிடக் குறைவாக உள்ளவர்களுக்கு ப்ரோஸ்டேட் புற்றுநோய் ஏற்படுவதையும், இதைவிட அதிகமாக அதாவது 10ng/mL வரை உள்ளவர்களுக்கு ப்ரோஸ்டேட் புற்றுநோய் ஏற்படாததையும் அவதானிக்க முடிந்தது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். மருத்துவர்களின் கூற்றுப்படி, ஆரம்பத்தில் அறிகுறிகள் தெரியவில்லை என்றாலும் கீழ்கண்ட பிரச்னைகள் எழுந்தால் பி.எஸ்.ஏ பரிசோதனை செய்யுமாறு பரிந்துரைக்கப்படுகிறது: அடிக்கடி சிறுநீர் கழித்தல் இரவில் சிறுநீர் மெதுவாக கழிவது சிறுநீர் தானாக வெளியேறுதல் சிறுநீரில் ரத்தப்போக்கு புற்றுநோய் கண்டறியப்பட்டு, அது உடலில் பரவியிருந்தால், புற்றுநோய் எலும்புகளுக்குச் செல்கிறது, அதன் பிறகு கீழ்கண்ட பிரச்னைகள் ஏற்படலாம்: முதுகு வலி எலும்பு முறிவு எலும்புகளில் வலி இதுகுறித்து டாக்டர் பிரதீப் பன்சால் கூறும்போது, “புற்றுநோய் புரோஸ்டேட் சுரப்பியில் மட்டுமே இருந்தால், ரோபோடிக் அறுவை சிகிச்சையைப் பரிந்துரைக்கிறோம். இது அவர்களின் ஆயுளை 10-15 ஆண்டுகள் நீட்டிக்கிறது. ஆனால் அது எலும்புகளுக்குப் பரவினால் அது சிக்கலானது, மேலும் அதற்கான சிகிச்சை வேறு விதமானது," என்றார். இதற்கான சிகிச்சை என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES ப்ரோஸ்டேட் புற்றுநோயை ரத்தப் பரிசோதனை மூலம் கண்டறியலாம் என்றும், பெரும்பாலான ஆய்வகங்களில் இந்த வசதி இருப்பதாகவும் மருத்துவர்கள் கூறுகின்றனர். ப்ரோஸ்டேட் உறுப்பு விரிவடைந்தால், இமேஜிங், அல்ட்ராசவுண்ட் மற்றும் எம்.ஆர்.ஐ ஆகியவையும் செய்யப்படுகின்றன. ஆரம்பக் கட்டத்தில் நோயாளிக்கு ரோபோடிக் அறுவை சிகிச்சை செய்து அந்தப் பகுதி அகற்றப்படும் என்றும் ஆனால் புற்றுநோயின் நிலை தீவிரமடைந்தால் ஹார்மோன் சிகிச்சை அளிக்கப்பட்டு நோயாளியின் நிலையைப் பார்த்த பிறகு அடுத்தகட்ட சிகிச்சை அளிக்கப்படும் என்றும் மருத்துவர் எஸ்.வி.எஸ் தேவ் கூறுகிறார். ப்ரோஸ்டேட் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் 5 முதல் 15 ஆண்டுகள் வரை உயிர்வாழ முடியும், ஏனெனில் இது சிகிச்சை அளிக்கக்கூடிய புற்றுநோய். ராஜேஷ் குமார் அறுவை சிகிச்சை செய்து சகஜ வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். இது மரபணு சார்ந்த நோயா? பட மூலாதாரம்,GETTY IMAGES புற்றுநோய் என்பது மரபணு சார்ந்த ஒரு நோய், அதாவது உங்கள் குடும்பத்தில் யாருக்காவது புற்றுநோய் இருந்தால், உங்களுக்கு புற்றுநோய் வர வாய்ப்பு உள்ளது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். அத்தகைய சூழ்நிலையில், எந்தவொரு குடும்பத்திலும் ப்ரோஸ்டேட் புற்றுநோய் அல்லது வேறு ஏதேனும் புற்றுநோய் இருந்தால், அவர்கள் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். குடும்பத்தில் யாருக்காவது ப்ரோஸ்டேட் புற்றுநோய் இருந்தால், குடும்பத்தின் ஆண் உறுப்பினர்கள் 45 வயதிற்குப் பிறகு ஒவ்வொரு இரண்டு வருடங்களுக்கும் பி.எஸ்.ஏ பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். பெண்கள் மார்பகப் புற்றுநோயைத் தாங்களே பரிசோதித்துக் கொள்ள வேண்டும். வெளிநாட்டில் நிலைமை என்ன? பட மூலாதாரம்,DR VIKRAM BARUA KAUSHIK படக்குறிப்பு,மருத்துவர் விக்ரம் பருவா கௌசிக் லான்செட் அறிக்கையின்படி, 2020ஆம் ஆண்டிற்குப் பிறகு, கிழக்கு ஆசியா, தென் அமெரிக்கா, கிழக்கு ஐரோப்பா, வட அமெரிக்கா போன்ற நாடுகளிலும் ப்ரோஸ்டேட் புற்றுநோய் மற்றும் அதனால் ஏற்படும் இறப்புகள் அதிகரிக்கும். அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் உள்ள பணக்காரர்கள் தற்போது தங்கள் உடல்நிலையில் கவனம் செலுத்தத் துவங்கியுள்ளனர் என்றும், அதன் நேர்மறையான விளைவைக் காண 10 ஆண்டுகள் ஆகும் என்றும் மருத்துவர் எஸ்.வி.எஸ் தேவ் கூறுகிறார். "கடந்த 80கள் மற்றும் 90களில், அந்த நாடுகளின் மக்கள் மலிவான நொறுக்குத் தீனிகளை அதிகம் உட்கொண்டார்கள்." மேலும், அதன் விளைவு இப்போது தெரிவதாகக் கூறுகிறார் அவர். மருத்துவர் விக்ரம் பருவா கௌசிக் கூறுகையில், அமெரிக்காவிலும் மற்ற வளர்ந்த நாடுகளிலும் அதிக அளவில் புற்றுநோய் பரிசோதனை இருப்பதாகவும், அதனால்தான் ப்ராஸ்டேட் புற்றுநோய் உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகளவில் பதிவாகி இருப்பதாகவும், அவர் கூறுகிறார். ஆனால் இந்த மருத்துவர்கள் அனைவரும் இந்தப் புற்றுநோய்க்கான சிகிச்சை சாத்தியம் என்பதாலும் அதன் முன்னேற்றம் மெதுவாக இருப்பதாலும், நோயாளிகள் நீண்டநாள் வாழ்கின்றனர் என்றும் கூறுகிறார்கள். - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cv2d07rdzq9o
  22. தற்கொலைகளைத் தடுக்க முடியாதா ? 🤔">Let’s Talk Mental Health with Dr.Sivathas In this powerful and thought-provoking video, Prof. Selvam Kannathasan sits down with a respected clinical psychologist Dr.S.Sivathas to discuss the growing issue of suicide among young people and the critical importance of mental health awareness in today’s world. Drawing from real-life experiences and professional insight, they explore the emotional struggles faced by youth and how society can respond with empathy, understanding, and support. Dr.Sivathas emphasizes the need to recognize mental health as a vital part of overall well-being—especially during the formative years of life. The conversation highlights how timely intervention, open dialogue, and emotional education can save lives and empower young minds to navigate challenges with strength and resilience. Watch this video to understand why mental health matters, how we can break the stigma, and what we can all do to create a safer, more compassionate future for the next generation.
  23. வெளிப்படைத்தன்மை இருந்தால்தான் வெளிநாடுகளிலுள்ளவர்கள் உதவிகளைச் செய்வார்கள்; ஆளுநர் வேதநாயகன் 19 MAY, 2025 | 01:34 PM (எம்.நியூட்டன்) நிறுவனம் வளர்ச்சியடைவதற்கு வெளிப்படைத்தன்மை முக்கியம் வெளிப்படைத்தன்மை இருந்தால்தான் வெளிநாடுகளிலுள்ளவர்கள் உதவிகளைச் செய்வார்கள் என வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன் தெரிவித்தார். மாதகலைச் சேர்ந்த விசுவநாதர் சிற்றம்பலம் சமூகசேவைகளைப் பாராட்டி மதிப்பளித்து அவரின் வாழ்நாள் சாதனைகளை வாழும்போதே வாழ்த்தும் கௌரவிப்பு விழாவும் நூல் வெளியீடும் மாதகல் இளைஞர் சங்க கலையரங்கத்தில் சனிக்கிழமை (17) இடம்பெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், மாதகல் மண்ணுக்கு நான் பிரதேச செயலராக, மாவட்டச் செயலராக இருக்கும்போது வந்திருக்கின்றேன். இப்போது ஆளுநராகிய பின்னர் இரண்டாவது தடவையாகவும் வருகின்றேன். ஒவ்வொரு தடவையும் வரும்போதும் எனக்கு பிரதேச செயலராக இங்கு கடமையாற்றிய நினைவுகளே வருகின்றன. அந்தப் பயங்கரமான காலத்தில் கெடுபிடிகளுக்கு மத்தியில் இங்கு வந்து சென்றிருக்கின்றேன். இங்கு சிற்றம்பலம் ஐயாவைப்பற்றி ஒரு விடயத்தைக் குறிப்பிட்டிருந்தனர். அவரின் வெளிப்படைத்தன்மை பற்றி சிலாகித்திருந்தனர். ஒரு சதத்துக்கும் கணக்குக்காட்டக் கூடிய ஒருவர். இன்று இவ்வாறான வெளிப்படைத்தன்மையானவர்களைக் காண்பது அரிது. ஒரு நிறுவனம் வளர்ச்சியடைவதற்கு வெளிப்படைத்தன்மை முக்கியம். வெளிப்படைத்தன்மை இருந்தால்தான் வெளிநாடுகளிலுள்ளவர்கள் உதவிகளைச் செய்வார்கள். சிற்றம்பலம் ஐயாவிடம் சிறந்த ஆளுமையும் தலைமைத்துவமும் இருக்கின்றது. அவர் யாரிடமும் சத்தமாகப் பேசமாட்டார். மக்களிடத்தில் அன்பாக நடந்துகொள்ளும் ஒருவர். அதனால்தான் இன்று ஊரே அவருக்கான கௌரவிப்பு விழாவுக்கு திரண்டு வந்திருக்கின்றது. இன்று ஒரு நிறுவனம் சிறப்பாக இயங்குகின்றது என்றால் உடனே அங்கே புல்லுருவிகளும் வந்துவிடுவார்கள். அவர்கள் அந்த நிறுவனத்திலிருந்து எப்படி உழைக்கலாம் என்றே சிந்திப்பார்கள். இதனால் நாளடைவில் அந்த நிறுவனங்கள் வீழ்ச்சியடைகின்றன. ஆனால் உங்கள் சிற்றம்பலம் ஐயாவால் ஊரிலுள்ள பல நிறுவனங்களும் இன்றும் சிறப்பாக இயங்குகின்றன. அவர் தனது இந்த 82 வயதிலும் ஊருக்காக உழைத்துக்கொண்டிருக்கின்றார். அப்படிப்பட்ட ஒரு மனிதரை ஊரே திரண்டு கௌரவிப்பது என்பது பாராட்டக்கூடியது. அவர் தொடர்ந்தும் ஊருக்கு சேவையாற்றவேண்டும் என்றார் . இந்த நிகழ்வில் 'கந்தன் அலங்காரம்' மற்றும் 'மாதகலின் விடிவெள்ளி' ஆகிய நூல்கள் வெளியிடப்பட்டன. https://www.virakesari.lk/article/215134
  24. Published By: DIGITAL DESK 3 19 MAY, 2025 | 12:06 PM மட்டக்களப்பு மறைமாவட்டத்தின் முதலாவது ஆயர் ஓய்வுபெற்ற கலாநிதி பொன்னையா ஜோசப் ஆண்டகை இன்று திங்கட்கிழமை (19) நித்திய இளைப்பாறுதல் அடைந்தார். https://www.virakesari.lk/article/215131
  25. "நிலத்தை இழந்தால் பலத்தை இழப்போம், பலத்தை இழந்தால் இனத்தை இழப்போம்" என்பதை உணர்ந்து அன்னை நிலத்தை மீட்க வந்த மீட்பர்தான் பிரபாகரன் - சீமான் 19 MAY, 2025 | 04:01 PM மொழி அழிந்தால் இனம் நிச்சயம் அழியும். இந்த வரலாற்று உண்மையை உணர்ந்து மொழியை மீட்கவும் காக்கவும் ஒருவன் வந்தான். நிலத்தை இழந்தால் பலத்தை இழப்போம். பலத்தை இழந்தால் இனத்தை இழப்போம் என்பதை உணர்ந்து அன்னை நிலத்தை மீட்க ஒரு மீட்பன் வந்தான். அவன் பெயர் பிரபாகரன் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். கோயம்புத்தூர்: நாம் தமிழர் கட்சி சார்பில் 'தமிழினப் பேரெழுச்சி பொதுக்கூட்டம்' கோயம்புத்தூர் கொடிசியா மைதானத்தில் மே 18 நடைபெற்றது. இதில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ மனோரஞ்சன், பயபாரி எழுத்தாளர் ஜக்மோகன் சிங் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் சீமான் பேசும்போது "வரலாற்றில் புறக்கணிக்கப்பட்ட தமிழின மக்கள் சொந்த மண்ணிலேயே அடிமைகளாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். சாதி மதங்களால் பிளவுபட்டு தன்னின பகையால் மோதி ரத்தம் சிந்தி வீழ்ந்ததால் அரசியல் வலிமையற்றவர்களாக நிற்கிறோம். சிதைந்து அழிந்து கொண்டிருக்கும் தமிழினத்தை பாதுகாப்பாக வாழ வைக்க போராடித்தான் ஆக வேண்டும். தமிழன் என்று சொல்லும்போதே திமிரும் தைரியமும் வர வேண்டும். குனிந்து கும்பிடு போட்டு வாழ்க ஒழிக என்று கோஷம் போட்டால் உன்னை தூக்கி சுடுகாட்டில் போடுவார்கள். நாம் தமிழர் கட்சி மட்டுமே 'தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க' என்ற முழக்கங்களை முன்வைத்து அடிமைப்பட்ட தமிழ் தேசிய மக்களின் உரிமை மீட்சிக்கு போராடும் மக்கள் ராணுவம். மானம் அறம் வீரம் என வாழ்ந்த மறவர் கூட்டம் நாம். கடல் கடந்து நிலப்பரப்பை வென்று உலகத்தின் மூன்றாவது பெரிய வல்லரசை நிறுவிய ராஜராஜ சோழன் வாரிசுகள் நாம். யாரையும் அடிமைப்படுத்தி வாழ்ந்ததாக சரித்திரமே இல்லை. அப்படிப்பட்ட எங்களை சிங்களவன் அடிமைப்படுத்த நினைத்தால் விடுவதற்கு நாங்கள் பூனையோ எலியோ அல்ல... புலிகள். மூவேந்தர் வாரிசுகளான நாம் முள்ளிவாய்க்காலில் முடங்கிய நாள் இன்று. பச்சிளம் குழந்தைகள் பாஸ்பரஸ் குண்டுகளுக்கு செத்து மடிந்த நாள். ஈக்களும் எறும்புகளுக்கும் இரக்கம் காட்டியவர்கள் இரக்கமின்றி கொல்லப்பட்ட நாள். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என உலகத்தை தழுவி பாடியவர்கள் இரக்கமின்றி கொல்லப்பட்ட நாள். என் மண்ணின் மக்கள் மரணித்தபோது உலகில் ஒருவன் கூட அழவில்லை. இதுதான் வரலாற்றில் பெரும் துயரம். எங்களுக்காகவும் பேசுங்களேன் என்று ஈழத்து குரல்கள் ஒலித்தன. உயிரைக் காப்பாற்ற பதுங்கிய பதுங்குழிகளே புதை குழிகளாக மாறின. ரத்தமும் கண்ணீரும் சுமந்து பிரசவித்த தாய் தன் வயிற்றுக்குள் பிள்ளைகளை வாங்கிக் கொண்ட அவலம் நிகழ்ந்தது. 13 கோடி மக்கள் தொகை கொண்ட தமிழர்கள் ஏன் சுதந்திரமாக வாழக்கூடாது? ஒரு இனம் தனக்கென ஒரு நாட்டை அடையும்போது தான் முழுமையான விடுதலை அடையும். உலகில் எல்லா மொழிகளும் மனிதன் பேசிய மொழி. ஆனால் தமிழ் இறைவன் பேசிய மொழி. சிவன் முருகன் மாயோன் ஆகியோர் என் மூதாதையர்கள். கடவுளை கடன் கொடுத்த இனத்தின் மக்கள் நாங்கள். உலக அறிஞர்களால் நன்கு கட்டமைக்கப்பட்ட ஒரே மொழி தமிழ். தனித்து இயங்கக்கூடிய செம்மொழி. இந்த மொழி அழிந்தால் இனம் நிச்சயம் அழியும். இந்த வரலாற்று உண்மையை உணர்ந்து மொழியை மீட்கவும் காக்கவும் ஒருவன் வந்தான். நிலத்தை இழந்தால் பலத்தை இழப்போம். பலத்தை இழந்தால் இனத்தை இழப்போம் என்பதை உணர்ந்து அன்னை நிலத்தை மீட்க ஒரு மீட்பன் வந்தான். அவன் பெயர் பிரபாகரன். தமிழ் பேரினத்தின் வரலாறாகவே வாழ்ந்தான். அவன் வெடித்த முதல் தோட்டா உலகத்தையே அதிர வைத்தது. 200 ஆண்டுகளுக்கு பிறகு என் இனம் எப்படி வாழ வேண்டும் என்று கனவு கண்டான். ஆனால் உலகப் போரால் அந்த கனவு நசுக்கப்பட்டது. விடுதலைப்புலிகளை பயங்கரவாதிகள் என்று சொன்னது இந்த ஆட்சியாளர்கள் தான். இனத்தை கொன்று குவித்தவர்களுக்கே வரிசையில் நின்று வாக்கு செலுத்தி அடிமையாக வாழ்கிறோம். போரை நடத்தியது காங்கிரஸ். அவர்களுடன் நின்றவர்கள் திமுக. போராடி நிறுத்த வேண்டிய உயரத்தில் இருந்தவர்கள் அதிமுக. 2ஜி அலைக்கற்றைக்காக பாராளுமன்றத்தை முடக்கிய பாஜக. தமிழினத்தின் எதிரிகள் இவர்கள் நான்கு பேரும். https://www.virakesari.lk/article/215153

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.