Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. Published By: RAJEEBAN 16 MAY, 2025 | 10:32 AM தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை அடிப்படையாக கொண்ட அரசியல் தீர்வினை ஆதரித்து அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் ஹேர்ப் கொனாவே கருத்து வெளியிட்டுள்ளார். சமூக ஊடக பதிவில் இதனை தெரிவித்துள்ள அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, நியுஜேர்சியிலும் அமெரிக்கா முழுவதிலும் வாழும் தமிழ் அமெரிக்கர்களுடன் இணைந்து இலங்கையின் இனமோதலின் போது கொல்லப்பட்ட அல்லது பலவந்தமாக காணாமலாக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான தமிழர்களின் நினைவுகளை நான் கௌரவிக்கின்றேன். தமிழர்களின் சுயநிர்ணய உரிமை அடிப்படையிலான நியாயமான நிரந்தரமான அரசியல் தீர்விற்காக நாங்கள் தொடர்ந்தும் பரப்புரை செய்கின்றோம். https://www.virakesari.lk/article/214860
  2. துருக்கியில் நடக்கும் உக்ரைன் அமைதிப் பேச்சுவார்த்தையில் புட்டின் கலந்துகொள்ளவில்லை - ரஷ்யா 15 MAY, 2025 | 04:52 PM இஸ்தான்புல்: துருக்கியில் வியாழக்கிழமை நடக்கும் உக்ரைன் அமைதி பேச்சுவார்த்தையில் ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் என்று ரஷ்ய ஜனாதிபதி மாளிகை செய்தித்தொடர்பாளர் உறுதி செய்துள்ளார். இதனிடையே பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளும் குழுவினர்களின் பெயர்களை ரஷ்யா வெளியிட்டுள்ளது. விளாடிமிர் மெடின்ஸ்கி தலைமையில் துணை வெளியுறவு அமைச்சர் மிகேல் கலுசின் துணை பாதுகாப்பு அமைச்சர் அலெக்சாண்டர் போமின்ரஷ்ய பாதுகாப்பு படைகளின் இயக்குநர் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். உக்ரைன் உடனான அமைதி பேச்சுவார்த்தை துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் வியாழக்கிழமை தொடங்கும் என்று ரஷ்யா உறுதி செய்திருந்தது. முன்னதாக முன்நிபந்தனைகள் இல்லாமல் உக்ரைனுடன் நேரடி பேச்சுவார்த்தைக்கு தயார் என்று புட்டின் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து ரஷ்ய ஜனாதிபதி விரும்பினால் அவரை நேரடி பேச்சுவார்த்தையில் சந்திக்கத் தயார் என்று உக்ரைன்ஜனாதிபதி ஜெலன்ஸ்கியும் கூறியிருந்தார். புதன்கிழமை உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி கூறுகையில் “அமைதி பேச்சுவார்த்தையில் ரஷ்ய ஜனாதிபதி பங்கேற்பது உறுதியான பின்பேஎங்களின் அடுத்த கட்ட நடவடிக்கைகளை குறித்து முடிவு செய்யப்படும். இந்தப் போர் ஏன் தொடங்கியது ஏன் தொடர்கிறது இந்த அனைத்து கேள்விகளுக்கான பதில்கள் ரஷ்யாவிடம் இருக்கிறது. இந்தப் போர் எப்படி நிறைவடையும் என்பது உலக நாடுகளைப் பொறுத்திருக்கிறது.” என்று தெரிவித்திருந்தார். இதனிடையே மத்திய கிழக்கு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டிருக்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் துருக்கியில் நடக்கும் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள மாட்டார் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. முன்னதாக ரஷ்யா - உக்ரைன் பேச்சுவார்த்தையில் பங்கேற்பது குறித்து பரிசீலிப்பதாக ட்ரம்ப் தெரிவித்திருந்தார். மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்துவரும் போரினை முடிவுக்கு கொண்டு வர இரண்டு நாடுகளும் 30 நாள் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியது. உடனடி போர் நிறுத்தத்தை உக்ரைன் ஜனாதிபதி ஏற்றுக்கொண்டார். ஆனால் போர் நிறுத்த விபரங்கள் குறித்து விவாதிக்க ஒரு பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என்று புதின் தெரிவித்திருந்தார். ரஷ்யா உக்ரைன் இடையே கடைசி நேரடிப் பேச்சுவார்த்தை கடந்த 2022 மார்ச்-ல் இஸ்தான்புல்லில் நடந்தது. இதனிடையே உக்ரைன் ஜனாதிபதி ரஷ்யா பேச்சுவார்த்தைக்கு காட்சிப் பொருள்களை அனுப்பி உள்ளது என்று விமர்சித்துள்ளார். மேலும் ரஷ்ய ஜனாதிபதி புதின் பேச்சுவார்தையில் இருந்தால் மட்டுமே தானும் கலந்து கொள்வேன் என்றும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/214816
  3. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், நிகில் இனாம்தார் பதவி, பிபிசி செய்தியாளர் 15 மே 2025, 13:03 GMT புதுப்பிக்கப்பட்டது 12 நிமிடங்களுக்கு முன்னர் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரிகள் அனைத்தையும் கைவிட இந்தியா முன்வந்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், இந்திய செய்தி நிறுவனம் ஒன்றிடம் பேசியுள்ள இந்திய வெளியுறத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், பேச்சுவார்த்தைகள் இன்னும் நடைபெற்று கொண்டு இருக்கின்றன, இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என கூறியுள்ளார். கத்தார் தலைநகர் தோகாவில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்ட டிரம்ப், இந்திய அரசாங்கம் "எங்களுடன் ஒரு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது. அவர்கள் அடிப்படையில் எங்களிடம் எந்த வரியும் வசூலிக்கத் தயாராக இல்லை" என்று கூறினார். டிரம்ப் கூறிய கருத்துக்கு முரண்பாடாக ஜெய்சங்கர் தெரிவித்த கருத்து உள்ளது. ''எந்தவொரு வர்த்தக ஒப்பந்தமும் இரு நாடுகளுக்கும் பயனளிக்கும் வகையில் இருக்க வேண்டும், இரு தரப்புக்கு பொருத்தமானதாக இருக்க வேண்டும். அதுவே அந்த ஒப்பந்தத்திலிருந்து எங்கள் எதிர்பார்ப்பு. ஒப்பந்தம் இறுதியாகும்வரை அதுபற்றிய எந்த முடிவும் சரியானதாக இருக்காது'' என்கிறார் ஜெய்சங்கர். இந்தியாவும் அமெரிக்காவும் தற்போது வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கின்றன. இந்த சமயத்தில் அமெரிக்கத் தரப்பில் இருந்து அதுவும் அந்நாட்டு அதிபரே இப்படியொரு கருத்தை வெளியிட்டிருப்பது முக்கியத்துவம் பெறுகிறது. தோகாவில் டொனால்ட் டிரம்ப் போயிங் ஜெட் விமானங்கள் உட்பட அமெரிக்காவிற்கும் கத்தாருக்கும் இடையே ஒப்பந்தங்கள் பலவற்றை அறிவித்த டிரம்ப், தோகாவில் வணிகத் தலைவர்களுடனான ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது இந்தியாவின் வரிவிதிப்பு குறித்தும் குறிப்பிட்டார் இந்தியாவில் ஐபோன்களை தயாரிக்கும் ஆப்பிள் நிறுவனத்தின் திட்டங்கள் குறித்து பேசும் போது இக்கருத்தை கூறிய டிரம்ப், "உலகில் அதிக வரி விதிக்கும் நாடுகளில் ஒன்று" என்பதால் அங்கு ஆப்பிள் தொழிற்சாலைகளை நிறுவுவதில் தனக்கு விருப்பமில்லை என்று ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டிம் குக்கிடம் தான் கூறியதாகத் தெரிவித்தார். "அவர்கள் [இந்தியா] எங்களுக்கு ஒரு ஒப்பந்தத்தை வழங்கியுள்ளனர். அதன்படி அவர்கள் எங்களிடம் எந்த வரியும் வசூலிக்கப் போவதில்லை. 'டிம், நீங்கள் சீனாவில் பல தொழிற்சாலைகளை அமைத்தபோதிலும் நாங்கள் உங்களை ஆதரித்தோம். இப்போது நீங்கள் இந்தியாவில் தொழிற்சாலைகளை அமைப்பதில் எங்களுக்கு விருப்பமில்லை. இந்தியா தானாகவே எல்லாவற்றையும் சமாளித்துக்கொள்ளும் என கூறினேன்' '' என்றார் டிரம்ப். இந்த மாத தொடக்கத்தில் ஆப்பிள் நிறுவனம் வெளியிட்ட ஒரு அறிவிப்பில், பெருமளவிலான ஐபோன்களின் உற்பத்தியை சீனாவிலிருந்து இந்தியாவிற்கு மாற்றுவதாகக் கூறியது. அதே நேரத்தில், ஐபேட்கள் மற்றும் ஆப்பிள் வாட்ச் போன்ற பொருட்களின் முக்கிய உற்பத்தி மையமாக வியட்நாம் இருக்கும். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஏப்ரல் மாதத்தில் இந்திய பொருட்களுக்கு 27% வரை வரிகளை விதித்தார். இந்த கூடுதல் வரிகளை விதிப்பதை 90 நாட்கள் அதாவது ஜூலை 9 ஆம் தேதி வரை அமெரிக்கா இடைநிறுத்திவைத்துள்ளது. இந்த நிலையில், தற்போது அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகளை இந்தியா துரிதப்படுத்தியுள்ளது. இதற்கிடையில், இந்த வாரம்தான் அமெரிக்காவும் சீனாவும் வரிகளை குறைப்பது தொடர்பான ஒப்பந்தத்தை எட்டின. சீன இறக்குமதிகள் மீதான அமெரிக்க வரிகள் 145% இலிருந்து 30% ஆகக் குறைகிறது. அதே நேரத்தில் சில அமெரிக்க இறக்குமதிகள் மீதான சீனாவின் வரிகள் 125% இலிருந்து 10% ஆகக் குறையும் என்று ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்திய-பாகிஸ்தான் மோதலில் டிரம்பின் மத்தியஸ்தம் பற்றி இந்தியா எதுவும் குறிப்பிடவில்லை இந்தியாவின் வர்த்தக ஒப்பந்தங்கள் அண்மைக்காலம் வரை இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக பங்காளியாக அமெரிக்கா இருந்து வருவதும், இருதரப்பு வர்த்தகம் 190 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தியா ஏற்கனவே போர்பன் விஸ்கி, மோட்டார் சைக்கிள்கள் மற்றும் வேறு சில அமெரிக்க தயாரிப்புகளுக்கான வரிகளைக் குறைத்துள்ளது. இருந்தபோதிலும் அமெரிக்கா இந்தியாவுடன் 45 பில்லியன் டாலர் வர்த்தக பற்றாக்குறையைக் கொண்டுள்ளது. இந்தப் பற்றாக்குறையைக் குறைக்க டிரம்ப் விரும்புகிறார். "இந்தியாவின் வரிகள் அதிகமாக இருப்பதே வர்த்தக பற்றாக்குறைக்கு காரணம் என்று டிரம்ப் எப்போதும் குற்றம் சாட்டிவருகிறார். "பூஜ்ஜியத்திற்கு பூஜ்ஜியம்" அணுகுமுறையை பயன்படுத்தி இந்தியா ஆட்டோமொபைல் மற்றும் விவசாயம் தவிர அமெரிக்க பொருட்களில் 90 சதவிகிதத்தை வரி இல்லாததாக மாற்ற முன்வரலாம். ஆனால் இந்த ஒப்பந்தம் பரஸ்பரமானதாக இருப்பது உறுதி செய்யப்பட வேண்டும், இரு தரப்பினரும் சமமாக வரிகளை நீக்க வேண்டும்" என்று டெல்லியைச் சேர்ந்த வர்த்தக நிபுணர் அஜய் ஸ்ரீவாஸ்தவா கூறுகிறார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி இருவருமே இருதரப்பு வர்த்தகத்தை இரட்டிப்பாக்க அதாவது 500 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் அதிகமானதாக உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளனர். ஆனால் ஆழமான அரசியலை கொண்டுள்ள விவசாயம் போன்ற துறைகளில் இந்தியா சலுகைகளை வழங்க வாய்ப்பில்லை. பல வருட தயக்கங்களுக்குப் பிறகு அண்மையில் தான், வர்த்தக ஒப்பந்தங்கள் மேற்கொள்வதில் இந்தியா வெளிப்படைத்தன்மையைக் காட்டியுள்ளது. கடந்த வாரம், விஸ்கி மற்றும் ஆட்டோமொபைல்கள் உட்பட பல முக்கியமானத் துறைகளில் வரிகளை கணிசமாகக் குறைக்கும் வர்த்தக ஒப்பந்தம் ஒன்றில் இந்தியாவும் பிரிட்டனும் கையெழுத்திட்டன. கிட்டத்தட்ட 16 வருட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, ஐரோப்பிய சுதந்திர வர்த்தக சங்கத்துடன் (EFTA) கடந்த ஆண்டு இந்தியா 100 பில்லியன் டாலர் வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இது, ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினர்களாக இல்லாத நான்கு ஐரோப்பிய நாடுகளின் குழு ஆகும். இந்த ஆண்டில் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் ஒன்றை இறுதி செய்ய வேண்டும் என்பதில் இந்தியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் மும்முரமாக செயல்பட்டு வருகின்றன. சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் ( Free Trade Agreement )சர்வதேச சட்டத்தின்படி ஒத்துழைக்கும் நாடுகளுக்கு இடையே ஒரு சுதந்திர வர்த்தகத்தை உருவாக்குவதற்கான ஒரு ஒப்பந்தமாகும். இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நாடுகள் பரஸ்பரம் வர்த்தக கட்டுப்பாடுகளை தளர்த்த ஒப்புக் கொள்ளும். - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c80k5yzpnrdo
  4. Published By: RAJEEBAN 15 MAY, 2025 | 01:43 PM உங்களால் உதவமுடியுமா நாங்கள் காசாவிற்குள் மரணித்துக்கொண்டிருக்கின்றோம் என்ற வட்ஸ்அப் செய்தியொன்று கடந்த வாரம் தனக்கு அனுப்பப்பட்டதாக பிபிசியின்செய்தியாளர் அலைஸ் ஹடி தெரிவித்துள்ளார். அவர் இது குறித்து மேலும் தெரிவித்துள்ளதாவது, "உங்களால் எனக்கு உதவமுடியுமா? நாங்கள் காசாவில் வசிக்கின்றோம் உள்ளே மரணித்துக்கொண்டிருக்கின்றோம் நானும் எனது பிள்ளைகளும் ஏனைய சிறுவர்களும் மிக மோசமான மனிதாபிமான நிலையில் இருக்கின்றோம்" இதுவே அய்மன் என்ற நபரிடமிருந்து கடந்த வாரம் எனக்கு கிடைத்த வட்ஸ் அப் செய்தி. அவர் காசாவின் தென்பகுதியில் உள்ள ஹான் யூனிசில் வசிக்கின்றார். இஸ்ரேலின் முற்றுகைதொடர்கின்ற நிலையில் குடும்பத்தின் நிலைமையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. காசாவிற்குள் செல்வதற்கு சர்வதேச செய்தியாளர்களிற்கு அனுமதியில்லை இதன் காரணமாக ஆகவே காசாவில் சிக்குண்டுள்ள மக்களுடன் கையடக்க தொலைபேசி வட்ஸ் அப் மூலமாக மாத்திரம் என்னால் தொடர்புகொள்ள முடியும். தொடர்ந்து அனுப்பிய வட்ஸ் அப் செய்தியில் அய்மன் யதார்த்தம் என்பது விளக்கங்களிற்கு அப்பாற்பட்டது என குறிப்பிட்டார். நான் சொல்வதை நம்புங்கள் நாங்கள் அனுபவிக்கும் பசியின் கொடுமையால் என்னால் நகரகூட முடியாதுள்ளதுகடவுள் அருள் புரிந்தால் ஒரு வீடியோவை தயாரித்து நான் உங்களிற்கு அனுப்புவேன் என அவர் தெரிவித்தார். காசாவில் மக்கள் இணையசேவைக்ககான மின்சாரத்தை பெறுவதற்கு மிகுந்த சிரமப்படுவதால் வட்ஸ் அப் மூலம் தொடர்புகொள்வதும் கடினமான விடயம். https://www.virakesari.lk/article/214795
  5. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஜேக் ஹார்டன் , டாம் எட்கிங்டன், ஜோஷுவா சீதம் பதவி, பிபிசி வெரிஃபை 15 மே 2025, 09:55 GMT புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், கத்தாரிடம் இருந்து 400 மில்லியன் டாலர் மதிப்பிலான விமானத்தை, தனது நிர்வாகம் பரிசாக ஏற்க விரும்புவதாக தெரிவித்துள்ளார். இது "ஒரு சிறப்பான செயல்" என்று பாராட்டியுள்ள டிரம்ப், இப்படிப்பட்ட பரிசை நிராகரிப்பது "முட்டாள்தனமாக" இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியின் சில உறுப்பினர்கள், டிரம்பின் இந்த முடிவை "முழுமையாக சட்டவிரோதமானது" என்று விமர்சித்துள்ளனர். வெள்ளை மாளிகை இதை முற்றிலும் மறுக்கிறது. மேலும், டிரம்பை ஆதரிக்கும் சிலரும் இதைப் பற்றிய விமர்சனங்களை முன்வைத்துள்ளனர். விமானம் குறித்த செய்திகள் "தவறானவை" எனவும், அது தொடர்பான பேச்சுவார்த்தைகள் இன்னும் நடைபெற்று வருகின்றன எனவும் கத்தார் முன்பு கூறியது. தற்போது கத்தார் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளுக்கு டிரம்ப் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வரும் நேரத்தில் இந்த செய்தி வெளியாகியுள்ளது. அதிபர்கள் பரிசுகளை ஏற்றுக்கொள்வது சட்டப்பூர்வமானதா என்பதைக் குறித்து பிபிசி வெரிஃபை ஆராய்ந்தது. விமானம் குறித்த தகவல்கள் ஞாயிற்றுக்கிழமையன்று கத்தார் அரச குடும்பத்திடமிருந்து ஒரு போயிங் ஜம்போ ஜெட் விமானத்தை டிரம்ப் நிர்வாகம் ஏற்க திட்டமிட்டு இருப்பதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இந்த விமானம் மறுசீரமைக்கப்பட்டு, அதிபர்கள் பயணிக்கும் விமானமாக அறியப்படும் "ஏர் ஃபோர்ஸ் ஒன்" எனும் பெயரில் தற்காலிகமாக பயன்படுத்தப்படும் எனவும் செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது. பின்னர் டிரம்ப் தனது ட்ரூத் சோசியல் வலைதளத்தில் இதுகுறித்து பதிவிட்டார். அந்தப் பதிவில், "பாதுகாப்புத்துறை 40 ஆண்டுகளாக புழக்கத்தில் உள்ள ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தை தற்காலிகமாக மாற்றுவதற்காக, மிகவும் வெளிப்படையான மற்றும் பொதுவான பரிவர்த்தனையாக 747 விமானத்தை இலவசமாகப் பெறுகிறது." என்று குறிப்பிட்டார். இதுகுறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, "இது கத்தாரின் சிறந்த செயல். நான் அதை மிகவும் பாராட்டுகிறேன். இதுபோன்ற சலுகையை நான் ஒருபோதும் நிராகரிக்க மாட்டேன்" என்று டிரம்ப் கூறினார். கடந்த பிப்ரவரியில், இரண்டு புதிய ஏர் ஃபோர்ஸ் ஒன் ஜெட் விமானங்களை போயிங் நிறுவனத்திலிருந்து நேரடியாக பெறுவதில் ஏற்பட்ட தாமதத்தைப் பற்றி, "போயிங் குறித்து நான் மகிழ்ச்சி அடையவில்லை" என்று டிரம்ப் தெரிவித்துள்ளார். இதற்குப் பதிலாக, வெள்ளை மாளிகை "ஒரு விமானத்தை வாங்கலாம் அல்லது வேறு ஏதாவது ஒரு விமானத்தைப் பெறலாம்" என்றும் கூறியுள்ளார். படக்குறிப்பு,டிரம்ப் பிப்ரவரியில் பாம் பீச்சில் விமானத்தை சுற்றிப்பார்த்தார் மேலே உள்ள படத்தில் காணப்படும் கத்தார் விமானம் பிப்ரவரியில் புளோரிடா மாகாணம் பாம் பீச்சில் படம் பிடிக்கப்பட்டது. அங்கு டிரம்ப் அந்த விமானத்தை நேரில் பார்வையிட்டார். 2015-ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட விவரக்குறிப்பு சுருக்கத்தின்படி, அந்த விமானத்தில் மூன்று படுக்கையறைகள், தனிப்பட்ட ஓய்வு அறை மற்றும் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளன. இந்த விமானம் கத்தார் பாதுகாப்பு அமைச்சகத்திடம் இருந்து அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகத்துக்கு வழங்கப்படுகிறது. மேலும் அது ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு தரத்தை பூர்த்தி செய்யும் வகையில் மாற்றியமைக்கப்படும் என ஒரு கத்தார் அதிகாரி சிஎன்என் செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார். இதற்கு பல ஆண்டு காலம் ஆகலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர். அதாவது, டிரம்ப் பதவிக்காலத்தின் முடிவை நெருங்கும் வரை அந்த விமானம் பயன்பாட்டுக்கு வருவதற்கு வாய்ப்பில்லை எனக் கணிக்கப்பட்டுள்ளது. டிரம்ப் பதவியிலிருந்து வெளியேறிய பிறகு அந்த விமானம் நேரடியாக அவரது அதிபர் காப்பகத்துக்கு அனுப்பப்படும் என்றும், அதிபர் பதவி முடிந்த பிறகு "அதை பயன்படுத்த மாட்டேன்" என்றும் டிரம்ப் கூறியுள்ளார். ஆயினும், இந்த நடவடிக்கை ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் மற்றும் லாரா லூமர் போன்ற நீண்ட கால டிரம்ப் ஆதரவாளர்களிடமிருந்து கடும் விமர்சனத்திற்கு வழிவகுத்தது "இது உண்மையாக இருந்தால், இந்த நிர்வாகத்தின் மீது இது ஒரு பெரும் களங்கமாக இருக்கும்," என லூமர் கூறினார். இந்தப் பரிசு சட்டப்பூர்வமானதா? இந்த பரிசை ஏற்றுக்கொள்வது சட்டவிரோதமானது என்று ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த பலர் கூறியுள்ளனர். ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த செனடர் ஆடம் ஷிஃப், அமெரிக்க அரசியலமைப்பின் ஒரு பிரிவை மேற்கோள் காட்டியுள்ளார். அதில், தேர்ந்தெடுக்கப்பட்ட எந்த தலைவரும் நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இல்லாமல் ஒரு வெளிநாட்டுத் தலைவரிடமிருந்து "எந்தவொரு பரிசையும்... எந்த வகையிலும்" ஏற்க முடியாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. "இந்த விதி அரசாங்கத்தின் மீது செல்வாக்கு செலுத்தும் ரீதியில் லஞ்சம் வழங்கப்படுவதைத் தடுக்கும் வகையில் உருவாக்கப்பட்டது" என்கிறார் எடின்பரோ பல்கலைக்கழகத்தின் அமெரிக்க வரலாற்றுப் பேராசிரியர் ஃபிராங்க் கோக்லியானோ. "இது நிச்சயமாக அரசியலமைப்பின் எல்லைகளை மீறுகிறது. இந்த அளவிலோ அல்லது இது போன்ற ஒரு பரிசையோ நாங்கள் கண்டதில்லை" என்று லண்டன் மெட்ரோபாலிட்டன் பல்கலைக்கழகத்தின் அரசியலமைப்புச் சட்ட நிபுணர் பேராசிரியர் ஆண்ட்ரூ மோரன் கூறுகிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ரொனால்ட் ரீகனின் ஏர்ஃபோர்ஸ் ஒன் விமானம் போயிங் 707, 2003 இல் அவரது அதிபர் காப்பகத்துக்கு மாற்றப்பட்டது. 1966ஆம் ஆண்டின் வெளிநாட்டு பரிசுகள் மற்றும் அலங்காரச் சட்டம் உள்ளிட்ட பல சட்டங்கள், வெளிநாட்டு பரிசுகளை ஏற்கும் விதிமுறைகளை வகுத்துள்ளன. இந்தச் சட்டங்களின் அடிப்படையில், ஒரு குறிப்பிட்ட மதிப்புக்கு மேற்பட்ட பரிசுகளை ஏற்க நாடாளுமன்றத்தின் ஒப்புதல் அவசியமாக கருதப்படுகின்றது. தற்போது, 480 டாலர் குறைவான மதிப்புடைய பரிசுகளை அமெரிக்க அதிகாரிகள் ஏற்க அனுமதிக்கப்படுகின்றனர். விமானம் இறுதியில் தனது "காப்பகத்துக்கு" செல்லும் என டிரம்ப் கூறியிருந்தாலும், தனது அருங்காட்சியக அறக்கட்டளைக்கு செல்லும் என்பதையே டிரம்ப் இப்படி குறிப்பிட்டிருக்கலாம் என நிபுணர்கள் கருதுகின்றனர். பொதுவாக தங்களுடைய ஆவணங்களை சேமிக்கும் நூலகத்தையும் (காப்பகம்), நினைவுச் சின்னங்களால் நிரம்பிய அருங்காட்சியகத்தையும் முன்னாள் அதிபர்கள் வைத்திருப்பார்கள். இவை பொதுவாக தனியார் நன்கொடைகளால் நிதியளிக்கப்பட்டு, பொதுமக்களின் பார்வைக்கு திறந்து வைக்கப்படுகின்றது. விமானம் நேரடியாக அதிபருக்கு வழங்கப்படாமல், முதலில் அரசு நிர்வாகத்துக்கு தரப்பட்டு பின்னர் அருங்காட்சியகத்துக்கு மாற்றப்பட்டாலும், இது அரசியலமைப்பை மீறுவதைத் தவிர்க்க முடியாது என்று பிபிசி வெரிஃபையுடன் பேசிய நிபுணர்கள் கூறினர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,எந்தவொரு நன்கொடையும் எப்போதும் சட்டத்திற்கு உட்பட்டே பெறப்படும் என்று கரோலின் லீவிட் கூறினார் வாஷிங்டனில் உள்ள சிட்டிசன்ஸ் ஃபார் ரெஸ்பான்சிபிலிட்டி அண்ட் எதிக்ஸ் என்ற அமைப்பைச் சேர்ந்த ஜோர்டான் லிபோவிட்ஸ், டிரம்ப் பதவியிலிருந்து விலகிய பிறகு அந்த விமானத்தை பயன்படுத்தினால் அது எல்லையை மீறுவதாக இருக்கும் என கூறினார். "ரீகனின் ஏர் ஃபோர்ஸ் ஒன் அவரது அதிபர் காப்பகத்தில் வைக்கப்பட்டது. ஆனால் அதில் ஒரு வித்தியாசம் உள்ளது. அந்த விமானம் செயலிழக்கப்பட்டது. ரீகன் அதில் மீண்டும் பயணம் செய்யவில்லை. எனவே அது அருங்காட்சியகப் பொருளாக வைக்கப்படுகின்றது."என்றார். விமானத்தை ஏற்றுக்கொள்வது ஏன் சட்டப்பூர்வமாக இருக்க முடியும் என்பதை விளக்கும் ஒரு ஆவணத்தை அமெரிக்க நீதித்துறை தயார் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆனால் அந்த ஆவணம் இன்னும் பொது வெளிக்கு அளிக்கப்படவில்லை. வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட்டிடம் விமானத்தை பெறுவதில் உள்ள சட்டபூர்வத் தன்மை குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, "இதற்கான சட்ட விவரங்கள் இன்னும் உருவாக்கப்பட்டு வருகின்றன. ஆனால், நிச்சயமாக, இந்த அரசாங்கத்திற்கு செய்யப்படும் எந்த நன்கொடையும் முழுமையாக சட்டப்படி செய்யப்படுகிறது" என்றார். மத்திய கிழக்கில் டிரம்பின் குடும்பம் என்ன செய்து கொண்டிருக்கிறது? அமெரிக்காவுக்கான முதலீட்டை அதிகப்படுத்தும் நம்பிக்கையில் அதிபர் டிரம்ப் செளதி அரேபியா, கத்தார் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளுக்கு நான்கு நாட்கள் பயணம் மேற்கொண்டு உள்ளார். அதிபரின் மகன்களான எரிக் மற்றும் டொனால்ட் ஜூனியரால் நிர்வகிக்கப்படும் டிரம்ப் அமைப்பால் பல வணிக ஒப்பந்தங்கள் அறிவிக்கப்பட்ட பிறகு, டிரம்பின் இந்த பயணம் அமைந்துள்ளது இதில் கத்தார் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் கோல்ஃப் மைதானங்கள் மற்றும் சொகுசு குடியிருப்புகள் கட்டும் திட்டங்களும் உள்ளன. ஜனவரி 20-ஆம் தேதி அமெரிக்க அதிபராக பதவியேற்ற பிறகு, டிரம்ப் தனது வணிக நிர்வாகப் பொறுப்புகளை மகன்களுக்கு ஒப்படைத்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,எரிக் டிரம்ப் மே 1 அன்று துபையில் இருந்தார் மே மாதத் தொடக்கத்தில், டிரம்ப் அமைப்பால் ஒரு ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டது. கத்தாரின் தலைநகரான தோகாவின் வடக்கே ஆடம்பர கோல்ஃப் மைதானமும், சொகுசு குடியிருப்புகளும் கட்டுவதற்கான ஒப்பந்தம் அது. "கத்தாரி டயர் மற்றும் டார் குளோபல் ஆகியோருடன் இணைந்து டிரம்ப் பிராண்டை கத்தாரில் விரிவுபடுத்துவதைப் பற்றி நாங்கள் மிகுந்த பெருமை அடைகிறோம்" என்று அச்சமயத்தில் எரிக் டிரம்ப் தெரிவித்தார். டார் குளோபல் என்பது சௌதி அரசின் பொதுக் கட்டுமான நிறுவனம். கத்தாரி டயர் என்பது கத்தார் அரசுக்கு சொந்தமான நிறுவனம். "துபையின் மையத்தில் 80 தளங்களைக் கொண்ட, "ஆடம்பர வாழ்க்கை மற்றும் உலகத்தரமான விருந்தோம்பலுடன் பிராந்தியத்தின் முதல் டிரம்ப் இன்டர்நேஷனல் ஹோட்டல் & டவர்" கட்டப்படும் என ஏப்ரல் 30 அன்று டிரம்ப் அமைப்பு அறிவித்தது. எரிக் டிரம்ப் சமீபத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சென்றிருந்தார். மே 1ம் தேதி அன்று நடைபெற்ற டோக்கன் 2049 என்ற கிரிப்டோகரன்சி மாநாட்டில் அவர் பேசினார். டிரம்ப் இந்த பயணத்தின் போது தனது குடும்ப வணிகத்தில் சம்பந்தப்பட்டவர்களைச் சந்திக்க வாய்ப்புள்ளதா என்று கேட்கப்பட்ட போது, அதிபர் தனது தனிப்பட்ட நலனுக்காக எதையும் செய்வதாகக் கூறுவது "அபத்தமானது" என வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் பதிலளித்தார். - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cvgq8ep2rn0o
  6. அரியாலை – செம்மணி சிந்துபாத்தி மயானத்தில் அகழ்வுப் பணிகள் ஆரம்பம் 15 MAY, 2025 | 05:09 PM (எம்.நியூட்டன்) அரியாலை – செம்மணி சிந்துபாத்தி மயானத்தில் மனிதச் எச்சங்கள் அவதானிக்கப்பட்ட பகுதிகளில் இன்று வியாழக்கிழமை (15) முதல் அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. செம்மணி - சித்துபாத்தி மயானத்தில் கடந்த பெப்ரவரி மாத ஆரம்பத்தில் அபிவிருத்திப் பணிகளுக்காக குழிகள் வெட்டப்பட்டபோது அதற்குள் மனித என்புச் சிதிலங்கள் அவதானிக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி அப்பகுதியில் நீதவான் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார். அவ்வேளை, மனிதச் சிதிலங்கள் மீட்கப்பட்ட பகுதியை ஸ்கேன் ஆய்வுக்கு உட்படுத்தவும், தொடர்ந்து அகழ்வுப் பணிகளை முன்னெடுக்கவும் உத்தரவிடப்பட்டது. அதன் தொடர்ச்சியாகவே, அங்கு அகழ்வாய்வுப் பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அப்பகுதிகளில் அளவீட்டுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு, மனித சிதிலங்கள் மீட்கப்பட்ட பகுதிகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், அடுத்து வரும் நாட்களில் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/214821
  7. Published By: DIGITAL DESK 2 15 MAY, 2025 | 04:41 PM விசேட தேவையுடைய நபர்களுக்குத் தாக்கம் செலுத்தும் பிரதான பிரச்சினைகள் தொடர்பில் விசேட தேவையுடைய நபர்கள் குழுக்களின் பிரதிநிதிகளுடன் விசேட தேவையுடைய நபர்கள் பற்றிய பாராளுமன்ற ஒன்றியம் கலந்துரையாடியது. இந்த ஒன்றியம் பாராளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த த சில்வா தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடிய போதே அந்தப் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடப்பட்டது. ஒன்றியத்தினால் மேற்கொள்ளப்பட்ட கோரிக்கைக்கு அமைய இந்தப் பிரதிநிதிகள் தமது பிரச்சினைகள் தொடர்பில் ஒன்றியத்தை அறிவுறுத்தியதுடன், இவ்வாறு முன்வைக்கப்படும் அனைத்து கருத்துக்களையும் முன்மொழிவுகளையும் கௌரவத்துடன் ஏற்றுக்கொள்வதாகவும், அது தொடர்பில் எடுக்கக்கூடிய பொருத்தமான நடவடிக்கைகளை எடுப்பதாகவும் ஒன்றியத்தின் தலைவர் தெரிவித்தார். விசேட தேவையுடைய நபர்களுக்காக அனைத்துத் தேர்தல்களிலும் குறிப்பிட்ட ஒரு ஒதுக்கீட்டை ஒதுக்குமாறு பிரதிநிதிகள் முன்மொழிந்தனர். அத்துடன், விசேட தேவையுடைய நபர்களுக்கான தகவல்கள் அடங்கிய இணையத்தளமொன்றை தயாரிக்குமாறு ஒன்றியத்துக்கு முன்மொழிந்ததுடன், இந்த இணையத்தளத்தை கையடக்கத்தொலைபேசி ஊடாகவும் பிரவேசிக்க முடியுமான வகையில் தயாரிக்குமாறு தெரிவித்தனர். அத்துடன், பிரேல் ஊடாக கல்வி கற்கும் மாணவர்களுக்குத் தேவையான வசதிகளை அதிகரிப்பது தொடர்பிலும் ஒன்றியத்தின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது. மேலும், விசேட தேவையுடைய நபர்கள் தொடர்பில் புதிய சட்டமொன்றை கொண்டுவருவது தொடர்பில் ஒன்பதாவது பாராளுமன்றத்துக்கு முன்வைக்கப்பட்ட முன்மொழிவு பற்றி கவனம் செலுத்தப்பட்டதுடன், அதன் எதிர்கால நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதற்கு மேலதிகமாக, செவிப்புலன் குறைபாடு கொண்ட நபர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காகக் காணப்படும் ஆசிரியர் பற்றாக்குறை தொடர்பிலும் ஒன்றியத்திற்குத் தெளிவுபடுத்தப்பட்டதுடன், இயலாமையுள்ள நபர்களுக்காக அரச மற்றும் தனியார் துறைகளில் தொழில் வாய்ப்புக்களை உருவாக்குவது தொடர்பிலும் இங்கு முன்மொழியப்பட்டது. இந்த ஒன்றியத்தின் கூட்டத்தில் பிரதி அமைச்சர் (கலாநிதி) உபாலி பன்னிலகே, பாராளுமன்ற உறுப்பினர்களான (வைத்தியர்) பத்மநாதன் சத்தியலிங்கம், சந்திம ஹெட்டிஆரச்சி மற்றும் சுசந்த குமார நவரத்ன ஆகியோர் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/214810
  8. Published By: DIGITAL DESK 2 15 MAY, 2025 | 04:53 PM 2024 (2025) க. பொ. த சாதாரண தரப் பரீட்சைகளுக்கான செயன்முறைப் பரீட்சைகள் இம் மாதம் நடைபெறும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே வெளியிட்ட அறிக்கையின் படி, செயன்முறைப் பரீட்சைகள் மே 21 முதல் 31 வரை நாடு முழுவதும் 1,228 பரீட்சை மையங்களில் இந்த செயன்முறைத் பரீட்சைகள் நடைபெறவுள்ளன. இதில் சுமார் 1,71,100 பரீட்சார்த்திகள் பங்கேற்க உள்ளனர். செயன்முறைப் பரீட்சைகள் நடைபெறும் பாடங்கள்: இசை (Eastern Music) – 40 இசை (Western Music) – 41 கார்நாடக இசை (Carnatic Music) – 42 உள்ளூர் நடனம் (Local Dancing) – 44 பரதநாட்டியம் ( Bharatha Dancing) – 45 நாடகம் மற்றும் நாடகக் கலை (சிங்களம்) – 50 நாடகம் மற்றும் நாடகக் கலை (தமிழ்) – 51 நாடகம் மற்றும் நாடகக் கலை (ஆங்கிலம்) –52 மேற்கு இசைக்கு உரிய கேட்டல் திறன் பரீட்சை (Listening Test) மே 25 அதே பாடத்திற்கான செயன்முறைப் பரீட்சைகள் நடைபெறும் மையங்களில் நடத்தப்படும். அவதானிக்க வேண்டியவை: எழுத்துப் பரீட்சையும், நடைமுறைப் பரீட்சையும் இரண்டும் கட்டாயம். செயன்முறைப் பரீட்சையில் பங்கேற்காதவர்களுக்கு அந்த பாடத்திற்கான மதிப்பெண்கள் வழங்கப்பட மாட்டாது. அனுமதிப்பத்திரம் மற்றும் திருத்தங்கள்: பாடசாலைகள் வழி பரீட்சார்த்திகள் – அனுமதிப்பத்திரங்கள் மற்றும் நேர அட்டவணைகள் பாடசாலை அதிபர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. தனிப்பட்ட பரீட்சார்த்திகள் – விண்ணப்பத்தில் கொடுத்த முகவரிக்கு அனுப்பப்படும். பாடம், மொழி, அல்லது தனிப்பட்ட விபரங்களில் தவறுகள் இருந்தால், உடனடியாக பாடசாலைப் பரீட்சைகள் பிரிவை தொடர்புகொள்ள வேண்டும். உதவிக்கு: அனுமதிப்பத்திரம் பெறாத பாடசாலைகள் – பாடசாலை இலக்கம், பெயர் மற்றும் முகவரியுடன் தெரிவிக்க வேண்டும். தனியார் பரீட்சார்த்திகள் – பெயர், முகவரி, பரீட்சை இலக்கம் மற்றும் அழகியல் பாட விபரங்களை அனுப்ப வேண்டும். மேலும், பரீட்சை இலக்கத்தை பயன்படுத்தி www.doenets.lk இணையதளத்தின் மூலம் மே 19 முதல் அனுமதிப்பத்திரங்களை பெற்றுக்கொள்ள முடியும். https://www.virakesari.lk/article/214807
  9. இலங்கையில் நீதியை நிலைநாட்டுவதற்காக இன்னமும் குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் - முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் பிரிட்டிஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருத்து Published By: RAJEEBAN 15 MAY, 2025 | 02:44 PM இலங்கையின் யுத்த குற்றவாளிகளிற்கு எதிராக பிரிட்டன் தடைகளை விதித்தமையை வரவேற்றுள்ள பிரிட்டனின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆனால் நீதிக்காக இன்னமும் குறிப்பிடத்தக்க அளவு நடவடிக்கைகளை எடுக்கவேண்டியுள்ளது என தெரிவித்துள்ளனர். பிரிட்டிஸ் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் உரையாற்றியவேளை அவர்கள் இதனை தெரிவித்துள்ளனர். இலங்கையில் மனித உரிமை மீறல்களின் அளவு குறைவடையவில்லை என தெரிவித்துள்ள ஹரோ மேற்கிற்கான நாடாளுமன்ற உறுப்பினர் ஹரெத்தோமஸ் இந்த வருட ஆரம்பத்தில் பிரிட்டிஸ் அரசாங்கம் யுத்த குற்றவாளிகளிற்கு எதிராக தடைகளை விதித்தது, ஆனால் நீதிக்கான இன்னமும் நிறையசெய்யவேண்டியுள்ளது என குறிப்பிட்டுள்ளார். முள்ளிவாய்க்காலின் யுத்தசூன்ய வலயத்தின் மீதான இலங்கை அரசாங்கத்தின் தாக்குதல்களிற்கு எதிர்ப்புதெரிவித்து 2009 ம் ஆண்டு லண்டனில் தமிழ் சமூகம் எவ்வாறு அணிதிரண்டது என்பது எனக்கு நினைவிருக்கின்றது என தெரிவித்துள்ள மிட்சாம் மற்றும் மோர்டனிற்கான நாடாளுமன்ற உறுப்பினர் சிபான் மக்டோனா இலங்கை அதிகாரிகளிற்கு எதிரான பிரிட்டனின் தடை சிறிய நடவடிக்கை போல தோன்றலாம் ஆனால் அது எதிர்காலத்திற்கான பெரும் நம்பிக்கையை வழங்குகின்றது என குறிப்பிட்டார். தமிழ் மக்களின் நீதி மற்றும் சமாதானத்திற்கான எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதற்காக பிரிட்டிஸ் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவேன் என எப்பிங் பொரெஸ்டிற்கான நாடாளுமன்ற உறுப்பினர் நெய்ல் ஹட்சன் தெரிவித்தார். பிரிட்டனின் தடைகளை வரவேற்பதாக தெரிவித்த ஈஸ்தாமிற்கான நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்டீபன் டைம்ஸ் பொறுப்புக்கூறலிற்காக இன்னமும் செய்யவேண்டிய விடயங்கள் உள்ளன என குறிப்பிட்டார். https://www.virakesari.lk/article/214801
  10. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், மோகன் பதவி, பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் ஏ.ஐ. என்கிற வார்த்தையை கேள்விப்படாதவர்களே இருக்க முடியாது என்கிற அளவுக்கு அதன் வளர்ச்சி இன்று அனைத்து இடங்களிலும் வியாபித்திருக்கிறது. செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) என்பது தான் சுருக்கமாக ஏ.ஐ என அழைக்கப்படுகிறது. நம்முடைய பொழுதுபோக்கு தொடங்கி கல்வி, வேலைவாய்ப்பு என அனைத்து துறைகளிலும் ஏஐ ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இன்றைய யுகத்தின் மந்திரச் சொல்லாக ஏஐ மாறியிருக்கிறது. இந்த நிலையில் ஏஐ பற்றி கற்றுக் கொள்வதற்கான ஆர்வமும் ஈடுபாடும் மாணவர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. லின்கெட்இன் நிறுவனம் 2023 ஆம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையில் உள்ள தரவுகளின்படி ஏஐ/மெஷின் லெர்னிங் அல்லது ஏஐ திறன்கள் தேவைப்படுகிற வேலைகள் பற்றி தேடுவது இந்தியாவில் அதற்கு முந்தைய ஆண்டைவிட 6 சதவிகிதம் அதிகரித்துள்ளது. அதே சமயம் ஏஐ அல்லது ஏஐ சார்ந்த வேலைகளுக்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கையும் 5 சதவிகிதம் அதிகரித்துள்ளது. - தற்போது வேலைக்கு எடுக்கப்படுவோரில் 10 சதவிகிதம் பேர் சேரும் பணி என்பது 2000-ஆம் ஆண்டில் அறியப்படக்கூட இல்லை. - 2030ஆம் ஆண்டில் தற்போது வேலைக்குத் தேவைப்படுகிற 70% திறன்கள் ஏஐ-யால் மாறிவிடும் - உலகம் முழுவதும் இந்தியா உள்ளிட்ட 15 நாடுகளில் வேகமாக வளர்ந்து வரும் வேலையாக செயற்கை நுண்ணறிவு பொறியாளர் பணி (Artificial Intelligence Engineer) உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏஐ படிக்க என்னென்ன வாய்ப்புகள் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஏஐ தொடர்பாக பல பட்டப்படிப்புகள் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன தற்போது ஏஐ தொடர்பாக இணையத்தில் பல்வேறு நிறுவனங்களால் இலவச கோர்ஸ்கள் வழங்கப்படுகின்றன. அதே போல பல கல்லூரிகளும் ஏஐ தொடர்பான பி.இ, பி.டெக், எம்.இ, எம்.டெக் மற்றும் டிப்ளமோ கோர்ஸ்களை வழங்கி வருகின்றன. பல நிறுவனங்கள் ஏஐ தொடர்பான பயிற்சிகளையும் தனியாக வழங்கி வருகின்றன. இந்த நிலையில் எந்த வகையான பட்டப்படிப்பு அல்லது பாடத்திட்டங்களைத் தேர்ந்தெடுக்கலாம் என்கிற கேள்வியும் மாணவர்கள் மத்தியில் நிலவுகின்றன. தொழில்நுட்ப படிப்புகளுக்கு மட்டுமே ஏஐ பொருந்துமா? ஏஐ என்பது பொறியியல் அல்லது சில தொழில்நுட்ப படிப்புகளில் மட்டுமே தாக்கம் செலுத்தும் எனப் பரவலாக நம்பப்படுகிறது, ஆனால் ஏஐ அனைத்து துறைகளிலும் ஆதிக்கம் செலுத்தப்போகிறது என்கிறார் கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி. 2023ஆம் ஆண்டு வெளியான லின்கெட் இன் அறிக்கையில் ஏஐ சார்ந்த பணிகள் தேவைப்படுகிற ஐந்து முக்கிய துறைகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அவை தொழில்முறை சேவைகள் தொழில்நுட்பம், தகவல் மற்றும் ஊடகம் நிதி சேவைகள் நிர்வாக சேவைகள் உற்பத்தி ஏஐ படிப்புகளுக்கான பாடத்திட்டம் பட மூலாதாரம்,கல்வியாளர் நெடுஞ்செழியன் படக்குறிப்பு,கல்வியாளர் நெடுஞ்செழியன் ஏஐ பட்டப்படிப்புகள் மீது கவனம் தேவை என எச்சரிக்கிறார் கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி. மேலும் பேசியவர், "பல கல்லூரிகளில் ஏஐ படிப்புகளுக்கு தேவையான கட்டமைப்போ போதிய திறன் பெற்ற பேராசிரியர்களோ இல்லை. கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்திட்டத்தை அப்படியே எடுத்து கூடுதலாக இரண்டு, மூன்று தலைப்புகளை மட்டும் சேர்ந்து ஏஐ படிப்புகள் என சில கல்லூரிகள் வழங்கி வருகின்றன. ஏஐ ஆராய்ச்சி மற்றும் முதலீட்டில் இந்தியா மற்ற நாடுகளைக் காட்டிலும் பின்தங்கியுள்ளது. பல கல்வி நிறுவனங்களும் செயற்கையான தேவையை உருவாக்கி ஏஐ பட்டப்படிப்புகளில் மாணவர்களைச் சேர்த்து வருகின்றன. இந்த பாடத்திட்டங்களில் தரம் என்ன, இதற்கு வேலைவாய்ப்பு எந்த அளவிற்கு உள்ளது என்பது பற்றி எந்த விதமான உத்திரவாதமும் இல்லை. கடந்த சில வருடங்களில் 2.5 லட்சம் மாணவர்கள் ஏஐ படிப்புகளில் சேர்ந்துள்ளனர்" என்றார். இந்தியாவில் ஏஐ மிகவும் மிகைப்படுத்தப்படுகிறது எனக் கூறுகிறார் கல்வியாளர் நெடுஞ்செழியன். மேலும் அவர், "பல முன்னணி கல்வி நிறுவனங்களுமே ஏஐ பட்டப்படிப்புகளை விற்பதற்கு விளம்பரங்கள் செய்து வருகின்றன. இவை ஏஐ கல்வி வணிகமயப்படுவதையே காட்டுகிறது. ஏஐ பற்றி ஆய்வு செய்ய போதுமான கட்டமைப்பு வசதிகள் பெரும்பாலான கல்வி நிறுவனங்களில் இருப்பதில்லை. அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலும் ஏஐ பட்டப்படிப்புகளை கண்மூடித்தனமாக இல்லாமல் முறையாக ஆய்வு செய்து தான் அனுமதிக்க வேண்டும். ஏஐ பாடத்திட்டங்கள் வழங்குகின்ற கல்வி நிறுவனங்களில் அதற்கான போதிய கட்டமைப்பு இருக்கிறதா, திறன் பெற்ற பேராசிரியர்கள் இருக்கிறார்களா என்பதை உறுதி செய்த பிறகே அனுமதி வழங்க வேண்டும்" என்றார். ஏஐ-யின் அடுத்த கட்டம் என்ன? பட மூலாதாரம்,செந்தில் நாயகம் படக்குறிப்பு,செந்தில் நாயகம் ஏஐ தொழில்நுட்பம் பல ஆண்டுகளாக இருந்தாலும் தற்போது தான் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளதாக தெரிவிக்கிறார் முவோனியம் ஏஐ ஸ்டுடியோஸின் தலைமைச் செயல் அதிகாரியான செந்தில் நாயகம். "கடந்த 20 ஆண்டுகளாக பெரு நிறுவனங்கள் ஏஐ தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி வருகின்றன. கம்ப்யூட்டரை முதல் கட்ட வளர்ச்சி என்றும் இணையத்தை இரண்டாம் கட்ட வளர்ச்சி என்றும் நாம் வைத்துக் கொண்டால் ஏஐ என்பது மூன்றாம் கட்ட வளர்ச்சி. இனிவரும் காலங்களில் ஏஐ மாடல்களை உருவாக்குதற்கான செலவு குறைந்து அதன் உற்பத்தி தரம் மேலும் அதிகரிக்கும். தற்போது ஏஐ மூலம் முழு நீள படங்கள் தயாரிப்பதற்கான முயற்சிகளும் நடைபெற்று வருகின்றன. நாம் ஏஐ-யை எதிர்காலம் என நினைக்கிறோம். ஏஐ என்பது நிகழ்காலம், கிட்டத்தட்ட அனைத்து துறைகளிலும் ஏஐ வந்துவிட்டது. இதன் அடுத்தக்கட்டம் என்பது Artificial General Intelligence (ஏஜிஐ) என அழைக்கப்படுகிறது. மனிதர்களுக்கு ஒப்ப அல்லது மனிதர்களைவிடவும் சிறப்பாக செயல்படக்கூடியதாக இந்த நுண்ணறிவு கருதப்படும். எனவே இனி வரும் காலங்களில் ஏஐ பயன்படுத்தாதவர்கள், வேலைவாய்ப்பு சந்தையில் போட்டியிடுவது சவாலாக இருக்கும். இப்போது அமெரிக்காவில் உள்ள ஒரு நிறுவனம் அங்கு ஒருவரை பணியமர்த்த ஒரு தொகை செலவு ஆகிறது என்றால், இந்தியாவில் அதில் பாதிக்கும் குறைவாக செலவு செய்தாலே அந்த வேலையை வாங்கிவிட முடியும் என்றால் இந்தியாவுக்கு வருவார்கள். ஆனால் ஏஐ உலகம் முழுவதும் ஒரே விலையில் கிடைக்கும் என வருகிறபோது அனுபவம் வாய்ந்தவர்கள் முதலில் வேலை இழப்பார்கள், புதிதாக வேலைக்கு வருபவர்களுக்கு வேலை கிடைப்பது கடினமாக இருக்கும்" என்றார். வேலைவாய்ப்பில் ஏஐ படக்குறிப்பு,கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி ஏஐ மாடல்களை உருவாக்குவதை விடவும் ஏற்கெனவே உள்ள ஏஐ மாடல்களை திறம்பட பயன்படுத்தக் கற்றுக்கொள்ள வேண்டும் என்கிறார் ஜெயப்பிரகாஷ் காந்தி. தொடர்ந்து பேசிய அவர், "ஏஐ என வருகிறபோது இரண்டு விதமான பணிகள் உள்ளன. ஒன்று ஏஐ மாடல்களை உருவாக்குவது, இரண்டாவது அத்தகைய ஏஐ மாடல்களைப் பயன்படுத்துவது. ஏஐ மாடலை முழுவதுமாக உருவாக்கும் பொறியாளர்கள் மிகவும் சொற்பம். விரல் விட்டு எண்ணினால் உலகம் முழுவதுமே சில ஆயிரம் பேர் தான் இருப்பார்கள். ஆனால் நாம் அனைவருமே ஏஐ மாடல்களைப் பயன்படுத்துவோம். சாட் ஜிபிடி, ஜெமினி போல பல ஏஐ மாடல்கள் தற்போது உள்ளன. இனிவரும் காலங்களில் இன்னும் அதிகமான, தற்போது இருப்பதைவிட மேம்பட்ட ஏஐ மாடல்கள் வெளிவரும். இந்தியாவைப் பொருத்தவரை தற்போது ஒரு முழுமையான ஏஐ மாடல்களை உருவாக்குவதற்கான வளமும், முதலீடும் குறைவாகவே உள்ளது. எனவே நாம் வழக்கத்தில் உள்ள ஏஐ மாடல்களை நம் பணி சார்ந்து எவ்வாறு பயன்படுத்திக் கொள்ளலாம், அதற்கு தேவைப்படும் திறன்கள் என்னென்ன, அதை எவ்வாறு வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதை நோக்கி நகர வேண்டும். ஏஐ-யினால் வேலைவாய்ப்புகள் பறிபோய்விடும் என்கிற அச்சம் இருக்கிறது. ஆனால் இனிவரும் காலங்களில் ஏஐ திறன்கள் உள்ளவர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை கிடைக்கும் என்கிற நிலை உருவாகும். அரசும் ஏஐ-யை ஒழுங்குபடுத்துவது பற்றி யோசிக்க வேண்டும்" என்றார். ஏஐ கற்றுக் கொள்ள விரும்பும் மாணவர்கள் என்ன செய்ய வேண்டும்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஏஐ கற்றுக் கொள்ள விரும்பும் மாணவர்கள் ஏஐ கற்றுக்கொள்ள தனி பட்டப்படிப்பு அவசியம் இல்லை என்கிறார் ஜெயப்பிரகாஷ் காந்தி. இதே கருத்தை செந்திலும் முன்வைக்கிறார். "பொறியியல் போன்ற தொழில்நுட்ப பாடங்களை படிக்க விரும்பும் மாணவர்கள் ஏற்கெனவே உள்ள பொறியியல் பட்டப்படிப்பை எடுத்துக் கொண்டே கூடுதலாக ஏஐ சார்ந்த திறன்களை வளர்த்துக் கொள்வதே தற்போதைக்கு சிறந்ததாக இருக்கும். அதற்கான பிரத்யேக வகுப்புகள் மற்றும் பயிற்சிகளை இணையத்தில் பல முன்னணி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்கள் இலவசமாகவே வழங்குகின்றன" என்றார் ஜெயப்பிரகாஷ் காந்தி. ஏஐ கற்றுக் கொள்ள சுய தேடலே முக்கியம் என்கிறார் செந்தில். மேலும் அவர், "ஒரு பட்டப்படிப்பில் சேர்ந்தாலே ஏஐ முழுவதுமாக கற்றுவிட முடியும் என்று கிடையாது. ஏஐ ஒவ்வொரு துறைக்கும் ஒவ்வொரு விதத்தில் வேலை செய்யும். தகவல் தொழில்நுட்பம், ஊடகம், வங்கி, நிதி சேவைகள், மருத்துவம் என ஒருவர் தேர்ந்தெடுக்கிற துறை சார்ந்து என்ன மாதிரியான திறன்கள் தேவை என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். அவற்றைக் கற்றுக்கொள்ள பல்வேறு வாய்ப்புகள் இணையத்தில் இருக்கின்றன. சீனா தொடக்கப்பள்ளியில் இருந்து ஏஐ கல்வியை கட்டாயமாக்கியுள்ளது. இந்தியாவிலும் கல்லூரி அளவில் இல்லாமல் பள்ளிகளிலே ஏஐ அறிமுகப்படுத்தப்பட வேண்டும்" என்றார். - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c3e53273829o
  11. இலங்கையில் பாரிய மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களை சர்வதேச நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டுமென தொடர்ந்தும் குரல்கொடுப்பேன் - உமாகுமரன் Published By: RAJEEBAN 15 MAY, 2025 | 02:11 PM இலங்கையில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களை சர்வதேச நீதிமன்றத்தில் பாரப்படுத்தவேண்டும் என தொடர்ந்தும் அழுத்தம் கொடுப்பேன் என பிரிட்டனின் நாடாளுமன்ற உறுப்பினர் உமாகுமரன் தெரிவித்துள்ளார். பிரிட்டிஸ் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். இலங்கையில் முள்ளிவாய்க்காலில் சிக்குண்டிருந்த மக்கள்; இனப்படுகொலை செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கான தமிழர்கள் எப்படி 2009ம் ஆண்டு லண்டனை ஸ்தம்பிக்க செய்தனர் என்பதை அவர் நினைவுகூர்ந்துள்ளார். இந்த வருடம் இலங்கையின் சிரேஸ்ட அதிகாரிகளிற்கு எதிராக தடைகளை விதித்ததன் மூலம் பிரிட்டிஸ் அரசாங்கம் குறிப்பிடத்தக்க நடவடிக்கையை எடுத்தது என அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களை சர்வதேச நீதிமன்றத்தில் பாரப்படுத்தவேண்டும் என தொடர்ந்தும் அழுத்தம் கொடுப்பேன். https://www.virakesari.lk/article/214799
  12. ஒரு உப்புப் பாக்கெட் 60 ரூபாயாக விலை நிர்ணயம் செய்ய 76 ஆண்டுகள் ஆனது என்றும், எனினும், 60 ரூபாயிலிருந்து 400 ரூபாயாக மாற வெறும் ஏழு மாதங்கள் மட்டுமே ஆனது என்றும் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச கூறுகிறார். மற்ற அரசாங்கங்கள் எவ்வளவுதான் லஞ்சம் கொடுக்க முயன்றாலும், ஒரு பாக்கெட் உப்பு அல்லது ஒரு கிலோ அரிசிக்கு ஒருபோதும் லஞ்சம் கொடுத்ததில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் பேசுகையில்; தற்போதைய அரசாங்கத்தின் எந்தவொரு திறமையின்மைக்கும் முந்தைய அரசாங்கங்கள் மீது பழி சுமத்தப்படுவதாக தெரிவித்துள்ளார். மோசடி மற்றும் ஊழல் இல்லாதது என்று கூறும் அரசாங்கம், உண்மையில் அவ்வாறு செய்வதன் மூலம் பணத்தை மிச்சப்படுத்தினால், ஒரு பாக்கெட் உப்பு, ஒரு கிலோ அரிசி மற்றும் ஒரு தேங்காய் எப்படி இவ்வளவு விலை உயர்ந்ததாக இருக்கும் என்று அவர் கேள்வி எழுப்பினார். எதிர்காலத்தில் மின்சாரக் கட்டணங்கள் அதிகரிக்கவுள்ளதாகவும், இதுபோன்ற சூழ்நிலையில், பொது மக்களின் வாழ்க்கை மட்டுமல்ல, முழு தொழில்துறை அமைப்பும் பெரும் நெருக்கடிக்குத் தள்ளப்படும் என்றும் அவர் கூறினார். 2024ஆம் ஆண்டின் இறுதிக்குள் லாபம் ஈட்டிய மின்சார சபை, 7 மாதங்களில் எப்படி நஷ்டத்தைச் சந்தித்திருக்க முடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பியிருந்தார். எதிர்காலத்தின் மின் கட்டணம் இன்னும் அதிகரிக்கும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/http:/localhost:8080%20%20%20#%20Development%20base%20URL/article/318049
  13. 15 MAY, 2025 | 04:00 PM இலங்கையில் உள்ள அமெரிக்கத் தூதரகம் ஒரு மில்லியன் டொலர் (299 மில்லியன் ரூபா) பெறுமதியான கதிர்வீச்சு மற்றும் இரசாயனங்களை கண்டறியும் அதிநவீன கருவியினை இலங்கை கடற்படைக்கு வழங்கியுள்ளது. தனது கடல்சார் களத்தில் அணு, கதிரியக்க மற்றும் இரசாயன அச்சுறுத்தல்களைக் கண்டறிந்து அதற்கான பதிலளிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான இலங்கையின் திறனை குறிப்பிடத்தக்க அளவில் இது அதிகரிக்கிறது. அமெரிக்க சக்தி திணைக்களத்தின் தேசிய அணுசக்தி பாதுகாப்பு நிர்வாகம் (DOE/NNSA) மற்றும் அதன் அணுக்கடத்தல் கண்டறிதல் மற்றும் தடுப்பு அலுவலகத்தினால் விநியோகிக்கப்பட்ட இம்மேம்பட்ட கருவியானது, வியாழக்கிழமை (15) இலங்கை கடற்படை தலைமையகத்தில் நடைபெற்ற ஒரு வைபவத்தில் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது. இதில் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலீ சங் மற்றும் இலங்கைக் கடற்படையின் கட்டளைத்தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன பானகொட ஆகியோர் கலந்துகொண்டனர். இந்தியப் பெருங்கடலுக்குச் செல்லல், கப்பல்களில் / படகுகளில் ஏறுதல், தேடுதல்களை மேற்கொள்ளல் மற்றும் பறிமுதல் செய்தல் போன்ற நடவடிக்கைகளை (VBSS) மேற்கொள்வதற்கான இலங்கை கடற்படையின் திறனை மேம்படுத்தும் அதேவேளை நாட்டின் துறைமுகங்கள் மற்றும் கடல் வழிகளைப் பாதுகாத்து, அபாயகரமான இரசாயன, கதிரியக்க மற்றும் அணுசக்தி பொருட்களைக் கண்டறிந்து இடைமறிப்பதற்கான அதன் திறனையும் இந்த உபகரணம் பலப்படுத்துகிறது. “இலங்கையின் கடல் எல்லைகளைப் பாதுகாப்பதற்கும் முழுப் பிராந்தியத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் இம்மேம்பட்ட கருவியானது இன்றியமையாத சாதனமாக அமையும்” என இந்த வைபவத்தில் கலந்துகொண்ட இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலீ சங் தெரிவித்தார். “அணு மற்றும் கதிரியக்க அச்சுறுத்தல்களைக் கண்டறிந்து பதிலளிப்பதற்கான இலங்கைக் கடற்படையின் திறனை மேம்படுத்துவதன் மூலம் இலங்கையின் பாதுகாப்பை பலப்படுத்துவது மாத்திரமன்றி, சமூகங்களையும் பாதுகாத்து, அமெரிக்கா மற்றும் ஏனைய நாடுகளின் கரையோரங்களை தீங்கு விளைவிக்கும் பொருட்கள் அடையாமலிருப்பதை உறுதி செய்து, சர்வதேச கப்பல் பாதைகளையும் நாங்கள் பாதுகாக்கிறோம். இப்பங்காண்மையானது மக்களைப் பாதுகாப்பாக வைத்திருத்தல், பாதுகாப்பான வர்த்தகத்தைப் பராமரித்தல் மற்றும் பிராந்திய பாதுகாப்பினை உறுதி செய்தல் போன்றவற்றுக்கான எமது பகிரப்பட்ட உறுதிப்பாட்டை மீள வலியுறுத்துவது தொடர்பானதாகும்” என அவர் மேலும் குறிப்பிட்டார். இந்த உபகரண பரிமாற்றமானது இலங்கை கடற்படைக்கும் அமெரிக்க சக்தி திணைக்களத்தின் தேசிய அணுசக்தி பாதுகாப்பு நிர்வாகத்துக்கும் இடையே 2024 பெப்ரவரி மாதத்தில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட பின்னர், இடம்பெறும் முதலாவது முக்கிய முன்முயற்சியாகும். அணு மற்றும் கதிரியக்கப் பொருட்களின் சட்டவிரோத போக்குவரத்தைக் கண்டறிவதிலும் அவற்றைத் தடுப்பதிலும் இருதரப்பு ஒத்துழைப்பை பலப்படுத்துவதே இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் நோக்கமாகும். இப்பரிமாற்றத்துக்கு மேலதிகமாக, மார்ச் மாதத்தில் கதிரியக்கப் பொருட்களைக் கண்டறிந்து உலகளாவிய விநியோகச் சங்கிலிகளைப் பாதுகாக்கும் இலங்கை சுங்கத்தின் திறனை மேலும் மேம்படுத்தும் வகையில், கொழும்பு துறைமுகத்தின் மேற்கு கொள்கலன் முனையத்துக்கு 500,000 அமெரிக்க டொலர்கள் பெறுமதியான புதிய கதிர்வீச்சு கண்டறியும் கருவியினை DOE/NNSA ஊடாக அமெரிக்கத் தூதரகம் நன்கொடையாக வழங்கியது. அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களுக்குள் ஆபத்தான கதிரியக்கப் பொருட்கள் நுழைவதைத் தடுக்க உதவுதல், ஆபத்துகளிலிருந்து சமூகங்களைப் பாதுகாத்தல், சர்வதேச கப்பல் பாதைகளின் பாதுகாப்பை பலப்படுதுதல் மற்றும் அணு மற்றும் கதிரியக்க அச்சுறுத்தல்கள் அமெரிக்கக் கரைகளை அடைவதற்கு முன்பே அவற்றை தடுத்தல் போன்ற நடவடிக்கைகளில் முக்கிய பங்கினை வகிப்பதனால் இக்கருவி மிகவும் இன்றியமையாததாகும். கதிர்வீச்சு கண்டறிதல் கருவிகளைப் பயன்படுத்துவதில் சிறப்புப் பயிற்சிகளை வழங்குவதன் மூலமும், கடற்படையின் VBSS திறன்களை மேம்படுத்துவதன் மூலமும், எதிர்காலத்தில் இலங்கை கடற்படைக்கு NSDD தொடர்ந்தும் உதவி செய்யும். கடல்சார் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காகவும், அணுசக்தி அச்சுறுத்தல்களைக் கண்டறிந்து அவற்றைத் தடுப்பதற்காகவும், பாதுகாப்பான மற்றும் மிகவும் பாதுகாக்கப்பட்ட இந்து சமுத்திரப் பிராந்தியத்தினையும், அமெரிக்கத் தாயகத்தினையும் உறுதி செய்வதற்காகவும் இலங்கை மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு உதவிசெய்வதற்கு அமெரிக்கா உறுதிபூண்டுள்ளது. https://www.virakesari.lk/article/214805
  14. காஸா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 70 பேர் பலி காஸா மீது இஸ்ரேல் இராணுவம் நடத்திய தாக்குதலில் 22 குழந்தைகள் உட்பட 70 பேர் உயிரிழந்துள்ளதாக அங்கிருந்துவரும் செய்திகள் தெரிவிக்கின்றன. காஸா மீது இஸ்ரேல் இராணுவம் வான்வழித் தாக்குதலை மேற்கொண்ட நிலையில், இந்த தாக்குதலில் 22 குழந்தைகள் உள்பட 70 பேர் கொல்லப்பட்டதாக காஸா சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. ஹமாஸ் வசம் இருந்த இஸ்ரேல் – அமெரிக்க பணயக் கைதி ஈடன் அலெக்ஸாண்டர் விடுவிக்கப்பட்ட சில மணி நேரங்களில் காஸா மீதான தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ளது. https://thinakkural.lk/article/318026
  15. Published By: RAJEEBAN 15 MAY, 2025 | 02:12 PM பிரிட்டிஸ் நாடாளுமன்றத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.. இலங்கையின் ஆயுதமோதலின் இறுதி தருணங்களில் கொல்லப்பட்ட பொதுமக்களிற்கான மௌன அஞ்சலியுடன் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பமாகின. https://www.virakesari.lk/article/214798
  16. செம்மணி பகுதியில் ஆரம்பமானது அகழ்வுப் பணிகள் செம்மணி பகுதியில் மனித எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதிகளில் அகழ்வுப் பணிகள் ஆரம்பமாகியுள்ளது. எனினும் குறித்த பகுதியில் செய்தி சேகரிப்பதற்கு ஊடகவியலாளர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. கடந்த பெப்ரவரி மாத ஆரம்பத்தில் செம்மணி பகுதியில் உள்ள இந்து மயானத்தில் அபிவிருத்திப் பணிகளுக்காக குழிகள் வெட்டப்பட்டபோது அதற்குள் இருந்து மனித எச்சங்கள் மீட்கப்பட்டன. இது தொடர்பில் பொலிஸாரிடம் வழங்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய, விடயத்தை பொலிஸார் நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டு சென்றதைத் தொடர்ந்து, பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி சம்பவ இடத்தில் நீதவான் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார். இதன்போது, மனித எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியை ஆய்வுக்கு உட்படுத்தவும், தொடர்ந்து அகழ்வுப் பணிகளை முன்னெடுக்கவும் தீர்மானிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாகவே, அங்கு அகழ்வாய்வு தற்போது ஆரம்பமாகியுள்ளது. துறைசார் வல்லுநர் பேராசிரியர் சோமதேவ கடந்த மூன்றாம் திகதியன்று மனித எச்சங்கள் அவதானிக்கப்பட்ட இடத்தில் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/http:/localhost:8080%20%20%20#%20Development%20base%20URL/article/317970
  17. கட்டைபறிச்சான் பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கி வைப்பு..! 15 MAY, 2025 | 01:13 PM முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தை முன்னிட்டு திருகோணமலை மாவட்டம் மூதூர் கிழக்கு - கட்டைபறிச்சான் பகுதியில் நேற்று புதன்கிழமை (14) மாலை முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சி பரிமாறப்பட்டதோடு, நினைவஞ்சலி நிகழ்வும் இடம்பெற்றது. இதனை சம்பூர் -ஆலங்குளம் மாவீரர்நாள் நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழு ஏற்பாடு செய்திருந்தது. இதன்போது, முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.மேலும் முள்ளிவாய்க்கால் சம்பவத்தில் உயிர் நீத்தவர்களுக்காக சுடரேற்றி நினைவஞ்சலியும் செலுத்தப்பட்டது. முள்ளிவாய்க்கால் நினைவு தின நிகழ்வில் அதிகளவான பொதுமக்கள் கலந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது. \ https://www.virakesari.lk/article/214787
  18. தமிழர்களின் நில இருப்பை உறுதிபடுத்த சர்வதேச சமூகம் தலையிட வேண்டும்; நான்கு நாட்டு தூதுவர்களிடம் கஜன் அணி வலியுறுத்தல் கனகராசா சரவணன் குருந்தூர்மலையில் பௌத்த தேரர் மற்றும் தொல்பொருட் திணைக்களம் ஆக்கிரமித்துள்ள தனியார் காணிகளில் சொந்த நிலத்தில் உழவு நடவடிக்கையில் ஈடுபட்டஇரண்டு விவசாயிகள் கைது, தையிட்டி சட்டவிரோத விகாரை அகற்றப்பட்டு காணிகள் உரிமையாளர்களிடம் கையளித்தல் வடக்கில் தமிழர்களின் நில இருப்பை உறுதிபடுத்த சர்வதேச சமூகம் அவசர தலையிட வேண்டும் என கோரி தமிழ் தேசிய பேரவையினர் பிரித்தானிய, இந்தியா, கனடா, ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிடப்பிரதிநிதிகளிடம் வலிறுத்தியுள்ளதாக தமிழ் தேசிய பேரவையின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். தமிழ் தேசிய பேரவையினருக்கும் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்ரூ பற்றிக், இந்திய துணை உயர்ஸ்தானிகர் கலாநிதி பாண்டே மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிடப்பிரதிநிதி மகான்ரே பிறஞ்சே கனேடிய உயர்ஸ்தானிகர் இடையிலான சந்திப்பு கொழும்பிலுள்ள அந்தந்த துதுவராலயங்களில் நேற்று புதன்கிழமை (14) இடம்பெற்றுது. இதில் தமிழ் தேசிய பேரவையின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வாராசா கஜேந்திரன், தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ ஐங்கரநேசன், தமிழ் தேசிய கட்சியின் தலைவர் சிரேஸ்ட சட்டத்தரணி ந.சிறீகாந்தா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த உயர்ஸ்தானிகளுடனான சந்திப்பின் பின்னர் பொ.ஜேந்திரகுமார் ஊடக அறிக்கை ஒன்றை நேற்று புதன்கிழமை வெளியிட்டுள்ளார் இந்த சந்திப்பின் பொழுது கடந்த 2025 மார்ச் 28 ஆம் திகதி வெளியிடப்பட்ட வடமாகாணத்தின் வவுனியா தவிரந்த நான்கு மாவடங்களில் சுமார் 6000 ஏக்கர் காணியை அரச காணியாக சுவீகரிக்கும் அரசின் வர்த்தமானி அறிவிப்புக்கு எதிராக நாம் எமது ஆட்சேபனைகளை தெரிவித்திருந்தோம். மூன்று மாத காலத்தில் மக்கள் தமது காணிகளுக்கான ஆவணங்களை சமர்ப்பித்து உரித்தை உறுதிபடுத்த வேண்டும் என்ற அந்த நிலைப்பாட்டினை அரசு மீள பெறவேண்டும் என வலியுறுத்தினோம். வட கிழக்கு மக்கள் யுத்தகாலத்தில் பலதடவைகள் இடம்பெயர்வுகள் காரணமாகவும் போர் அழிவுகள் காரணமாகவும் பெருமளவு மக்களின் சொந்தமான காணி ஆவணங்கள் சொத்துக்கள் இழக்க வேண்டி ஏற்பட்டது. அத்துடன் சுனாமி மூலம் எமது மக்கள் சொத்துக்கள் ஆவணங்களை இழந்தார்கள். ஆகவே ஆவணங்களை உறுதிபடுத்துவது சாத்தியமற்ற விடயம். அதேவேளை போர் காரணமாக தமிழீழ மக்களின் சனத்தொகை பரம்பல் புலம்பெயர்ந்துள்ளது. இந்தியாவில் 1 லடச்த்திற்கும் மேற்பட்ட எமது ஈழ தமிழர்கள் இந்திய பிரஜைகளாக அங்கீகாரமின்றி வாழுகின்றனர் அவர்கள் அங்கு அங்கீகரிக்கப்பட போவதுமில்லை. இவ்வாறான நிலையில் அந்த மக்கள் தங்களுடைய தாய் நாட்டிற்கு வருகை தரவேண்டிய சூழல் ஏற்பட்டால் அவர்கள் இங்கே வாழ முடியாத சூழல் உருவாகும், இந்தியாவிற்கு மிகப்பெரிய பங்கு உள்ளது என்ற அடிப்படையில் இந்திய தூதுவரையும் சந்தித்தோம் இந்த மக்கள் அரசின் பயங்கரவாத அச்சுறுத்தல் மூலமே நாட்டினை விட்டு வெளியேறினார்கள். இந்நிலையில் அரசு இந்த வர்த்தமானியை வெளியிட்டதன் நோக்கம் மக்களின் காணி பிரச்சினைகளை தீர்ப்பதல்ல. மாறாக மக்களின் ஆவணங்களற்ற காணிகளை அரச காணிகளாக சுவீகரிப்பதே இவர்களது நோக்கமாக உள்ளது. ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு உரித்துக்கள் வழங்கவேண்டும் என்பதில் மாற்று கருத்திற்கு இடமில்லை இந்த வர்த்தமானி மூலம் மேற்கொள்ளப்படுகின்ற திட்டத்தினை முற்று முழுதாக ஏற்றுகொள்ள முடியாது. எனவே குறித்த வர்த்தமானி அறிவித்தல் மீளப்பெறப்படல் வேண்டும். அதற்கு சர்வதேச சமூகம் அழுத்தம் கொடுக்க வேண்டும். இரண்டாவது விடயம் குருந்தூர்மலையில் தொல்பொருள் திணைக்களத்தின்குச் சொந்தமான 79 ஏக்கர் நிலப்பரப்பிற்கு மேலதிகமாக 325 ஏக்கர் காணியினை விகாரைக்குரிய புத்த பிக்கு கோரியிருந்தார். ஆனால் அக்காணிகள் தொல்பொருள் திணைக்களத்திற்கு சொந்தமானதல்ல என்ற அடிப்படையிலும் அப்பகுதியில் பெருமளவு விவசாயிகளது விவசாய நடவடிக்கைகளை கருத்திற்கொண்டு மறுக்கப்பட்டிருந்தது. எனினும் பிக்குவும் தொல்பொருட் திணைக்களத்தினரும் பொலீசாரது ஒத்துழைப்புடன் சொந்தக் காணியில் உழவு நடவடிக்கையில் ஈடுபட்ட விவசாயிகள் இருவரையும் கைது செய்து உளவு இயந்திரத்தையும் நீதிமன்றில் நிறுத்தி நீதிமன்றின் மூலம் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் . முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்க குறித்த 325 ஏக்கர் நிலத்தையும் விடுவிக்க வேண்டுமென மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் கூறியிருந்தார். அவ்வாறு சனாதிபதி முன்னிலையில் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தீர்வு எட்டபட்ட பின்னரும் அத்தீர்மானத்தையும் மீறி இன்றும் கூட அந்த வளாகத்தில் உள்ள குளத்தில் மீன்பிடி தடையும் விதிக்கப்பட்டுள்ளதோடு விவசாயத்திற்கு குறித்த நீரை பயன்படுத்த தடையையும் விதித்து விவசாயமும் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே இவ்விடயத்தில் தலையிட்டு சனாதிபதி ரணில் இணங்கியவாறு குறித்த 325 ஏக்கர் நிலத்தையும் தொல்பொருள் திணைக்களம் விடுவிக்கவும் பிக்குவின் அடாவடியை கட்டுப்படுத்தவும் சர்வதேச சமூகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டது. மூன்றாவதாக தையிட்டி சட்டவிரோதமான விகாரை என்று தெரிந்தும் இன்னமும் அந்த காணிகளின் உரிமையாளர்களிடம் வழங்காது அரசின் செயற்பாடுகள் தொடர்கின்றது தையிட்டி விகாரை சட்டவிரோதமானது தொல்பொருளுடன் தொடர்பு அற்றது சட்டவிரோதமாக கட்டப்பட்டது அகற்றபட்டே ஆகவேண்டும் காணிகள் உரிமை யாளர்களிடம் ஒப்படைக்கப்படல் வேண்டும். எனவே இலங்கையின் மனித உரிமைகள் விடயங்கள் தொடர்பில் தொடர்ச்சியாக கரிசனை செலுத்தும் மைய நாடுகளாக பிரித்தானியா மற்றும் கனடா என்பன இருக்கின்றன ஐக்கிய நாடுகள் சபைக்கு இது தொடர்பில் பங்கு இருப்பதால் ஐநாவின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதியிடமும் இவ்விடயத்தில் அவரது தலையீட்டை வலியுறுத்தியுள்ளமாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. https://thinakkural.lk/http:/localhost:8080%20%20%20#%20Development%20base%20URL/article/317964
  19. மன ஆறுதலுக்காக பணம் செலுத்தி கட்டிப்பிடி தெரபி எடுத்துக்கொள்ளும் மக்கள் பட மூலாதாரம்,DANNY FULLBROOK/BBC கட்டுரை தகவல் எழுதியவர், டேனி ஃபுல்ப்ரூக் பதவி, 14 மே 2025 புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை சமி வுட், முன்பின் அறிமுகமில்லாத நபர்களுடன், 'கடுல் புடுல்' (cuddle puddle) என்ற நிகழ்வுக்குச் செல்கிறார். குஷன்கள், போர்வைகளுடன் இந்த நிகழ்வுக்கு வரும் நபர்கள் ஒருவருக்கு ஒருவர் நட்பு ரீதியாக தழுவிக் கொள்கின்றனர். பெட்ஃபோர்டைச் சேர்ந்த 41 வயதான சமி, ஒரு தொழில் முறை கட்டிப்பிடியாளர் (cuddler). கட்டிப்பிடிப்பது தொடர்பான தெரப்பியையும் அவர் வழங்குகிறார். மனிதர்கள் ஒருவரை ஒருவர் தொட்டுக் கொள்ளுதல் ஆறுதல் அளிப்பது மட்டுமின்றி அது குறிப்பிட்ட அளவு நலன்களையும் கொண்டுள்ளது என்று சமி நம்புகிறார். "நன்றாக உணரவைக்கும் சரோடோனின் அளவு அதிகரிக்கும். அன்பு மற்றும் இணைப்புக்கு காரணமாக இருக்கும் ஆக்சிடோசின் அளவும் அதிகரிக்கும்," என்று கூறுகிறார் சமி. மன அழுத்தத்தை ஏற்படுத்தும் கார்டிசோல் அளவை, 'தொடுதல்' குறைக்கிறது. மேலும் உங்களின் நரம்பு மண்டலத்தை சீராக்கவும் செய்கிறது என்று தொடுதல். சமியிடம் தெரப்பிக்கு வரும் நபர்கள், நரம்பு மண்டல பிரச்னைகள், பி.டி.எஸ்.டி. அல்லது தனிமையால் அவதிப்படுகின்றனர். "என்னுடைய இந்த தெரபி சேவைக்கு முழுக்க முழுக்க மோசமான ஆண்களே வருவார்கள் என்று பலர் நம்புகின்றனர். ஆனால் அது அப்படியல்ல. அனைத்து வயதினரும், ஆண்களும், பெண்களும் இந்த சிகிச்சைக்காக வருகை புரிகின்றனர்," என்று விளக்குகிறார் அவர். பெட்ஃபோர்ட்டைச் சேர்ந்த பெப் வலேரியோ கடந்த சில மாதங்களாக சமி நடத்தும் இந்த நிகழ்வுக்கு வருகிறார். "வார்த்தைகள் ஏதுமின்றியே குணமடையும் உணர்வை அளிக்கிறது இது. அங்கே வரும் நபர்களின் பிரச்னை என்ன என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டியதில்லை. மாறாக உங்களின் தொடுதல் அவர்களுக்கு தேவையான உதவியை தருகிறது," என்று பெப் கூறுகிறார். இந்த தெரப்பி எப்படி நடக்கிறது? சமி தன்னிடம் இந்த தெரப்பிக்கு வரும் நபர்களை, குறிப்பிட்ட உணர்ச்சிகரமான சூழலை ஏற்படுத்துவதற்காக சில காட்சிகளை கற்பனை செய்து பார்க்கும்படி கூறுவார். "நீங்கள் மீண்டும் ஒரு முறை கட்டிப்பிடிக்க வேண்டும் என்று நினைக்கும் நபரை தற்போது கட்டியணைத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று கற்பனை செய்யுங்கள், என்று சில நேரங்களில் நான் கூறுவேன்." "உண்மையாகவே அது எனக்கு நெகிழ்ச்சி ஏற்படுத்தும் தருணம். அப்போது அந்த நிகழ்வில் பங்கேற்ற ஆண்களும் பெண்களும் அழுது கொண்டிருப்பார்கள்," என்று விளக்குகிறார். தனி நபர்களுக்கு அளிக்கும் தெரபிகளின் போது அவர்களின் தனித்தேவைகள் குறித்து மட்டுமே அதிகம் கவனம் செலுத்தப்படும். மிகவும் எளிதாக ஒருவர் அருகில் அமர்ந்து கொண்டு, கையோடு கை கோர்த்து பேசிக் கொண்டிருப்பது அவர்களின் தேவையாக இருக்கலாம். அல்லது ஒருவரை கட்டிப்பிடித்த படி படுத்திருக்க வேண்டும் என்று நினைக்கலாம். ஆறுதலாக ஒருவரின் முதுகை வருடிக் கொடுத்தல் போன்ற செயல்பாடுகளும் இதில் அடங்கலாம். பட மூலாதாரம்,SAMII WOOD படக்குறிப்பு,ஆறுதலாக ஒருவரின் முதுகை வருடிக் கொடுத்தல் போன்ற செயல்பாடுகளும் இதில் அடங்கலாம். இதற்கு கட்டணமா? ஒருவரை ஒருவர் கட்டிப்பிடிக்கும் இந்த தெரப்பிக்கு கட்டணம் செலுத்த வேண்டுமா என்று சிலர் புருவம் உயர்த்துகின்றனர். ஆனால் இது நட்பு ரீதியில், ஒருவரை ஒருவர் பேணிக்காக்கும் சேவை என்று கூறுகிறார் சமி. இந்த தெரப்பிக்கு வரும் அனைவரின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, சமியிடம் வரும் நபர்கள் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். மேலும் இந்த சிகிச்சையின் வரம்புகள் என்ன என்பதை பட்டியலிடும் ஒப்புதல் படிவங்களில் கையெழுத்திட்ட பிறகே அனுமதிக்கப்படுகின்றனர். "இது முழுக்க முழுக்க வாடிக்கையாளர்களால் வழி நடத்தப்படும் நிகழ்வு. அவர்களுக்கு என்ன தேவை? அவர்களுக்கு எது ஆறுதல் அளிக்கிறது? என்பது குறித்து அவர்கள் என்னிடம் தெரிவிப்பார்கள்," என்று கூறுகிறார் சமி. நெருக்கமான தொடுதல் என்பது பாலியல் ரீதியான உணர்வுகளை ஏற்படுத்தலாம் என்பதை ஒப்புக்கொள்கிறார் சமி. அது போன்ற சூழலில் இடைவேளையை அறிவிப்பார் அல்லது படுத்திருக்கும் நிலைமையை மாற்றி, தெரப்பியின் கண்ணோட்டம் குறித்து கவனம் செலுத்த வாடிக்கையாளர்களுக்கு அறிவுரை வழங்குவார். இது போன்ற சிகிச்சைகளுக்கு பிரிட்டனில் ஒழுங்குமுறை அமைப்பு ஏதும் இல்லை. ஆனால் சமி போன்ற நிபுணர்கள் கடுல் ஃப்ரொபெஷ்னல் இண்டர்நேஷனல் (Cuddle Professionals International (CPI)) போன்ற அமைப்புகளிடம் அங்கீகாரத்தைப் பெற்றுக் கொள்ள இயலும். தெளிவாக விளக்கப்பட்டு பெறப்படும் ஒப்புதல் (Informed Consent) சார்ந்துள்ள "தார்மீக ரீதியான நெறிமுறைகளை," கடைபிடிக்க கற்றுக் கொள்ள வேண்டும் என்று இந்த அமைப்பு அதன் உறுப்பினர்களை வலியுறுத்துகிறது. இந்த சிகிச்சைகள் பொதுவாக நிபுணத்துவமான தரநிலையைக் கொண்டிருந்தாலும் கூட, எளிதாக இந்த சூழலை தவறாக பயன்படுத்திக் கொள்வதற்காக சாத்தியங்களும் இருக்கின்றன. அப்படியாக ஏதேனும் நடக்கின்ற பட்சத்தில் மக்கள் காவல்துறையினரிடமோ, உள்ளூர் அதிகாரிகளிடமோ, சி.பி.ஐயிடமோ (Cuddle Professionals International ) புகார் அளிக்கலாம் என்று சமி தெரிவிக்கிறார். இந்த அமைப்பை க்ளேர் மெண்டெல்சன் என்பவர் துவங்கினார். அவரின் இணையத்தின் கூற்றின் படி, அவர் இந்த சிகிச்சைப் பிரிவில் ஒழுங்குமுறை தேவைப்படுகிறது என்பதை ஒப்புக்கொண்டிருக்கிறார். காம்பிளிமெண்டரி மெடிக்கல் அசோசியேஷன் அமைப்பில் பதிவிடப்பட்ட கல்லூரியாக சி.பி.ஐ. செயல்படுகிறது. மேலும் பயிற்சிகள் வழங்குவதற்கான ஒப்புதலை காம்பிளிமெண்டரி சிகிச்சையாளர்களுக்கான சர்வதேச நிறுவனத்திடம் பெற்றுள்ளது சி.பி.ஐ. (Cuddle Professionals International) பட மூலாதாரம்,SAMII WOOD படக்குறிப்பு,இந்த சூழலை தவறாக பயன்படுத்திக் கொள்வதற்காக சாத்தியங்களும் இருக்கின்றன தயக்கம் காட்டும் மக்கள் வெளிநாடுகளில் கட்டிப்பிடி வைத்தியம் எவ்வளவு பிரபலமாக இருக்கிறது என்பதை ஆவணப்படம் ஒன்றை பார்த்து அறிந்து கொண்டார் சமி. இருப்பினும், பிரிட்டனில் மக்கள் பிறரைத் தொடுவதையோ, பிறரால் தொடப்படுவதையோ பெரிதாக விரும்புவதில்லை என்று கூறுகிறார் சமி. மக்களை "அதிகமாக ஏங்க வைப்பது" மற்றும் "அப்படி ஏங்குவது குறித்து அச்சமடையவைப்பது," என்ற இரண்டுக்கும் கோவிட் பெருந்தொற்றும், அதைத் தொடர்ந்து வந்த ஊரடங்கும் தான் காரணம் என்று கூறுகிறார் சமி. அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் அதிகமாக இந்த பயம் இருக்கிறது. ஆனால் பிரிட்டனில் அது போன்ற சூழல் இல்லை. இங்கு எங்களுக்கு இதற்கான தேவை இருக்கிறது. அப்படி இல்லை என்றால் என்னைப் போன்ற 'கட்டிப்பிடியாளர்களை' நோக்கி மக்கள் வரமாட்டார்கள். "நாம் அனைவரும் ஆன்லைனில் இருப்பதால் ஒருவருடன் ஒருவர் நல்ல தொடர்பில் இருக்கிறோம் என்று நினைக்கிறோம். ஆனால் அதனால் (இணையத்தால்) தான் நாம் அனைவரும் தொடர்பில்லாமல் இருக்கிறோம்." "நம் அனைவரும் நெருக்கத்தை வேண்டுகிறோம். 'என்னை யாராவது கட்டிப்பிடித்தால் நன்றாக இருக்கும். என்னை உண்மையாக மற்றவர்கள் பார்க்க வேண்டும். என் முன்னாள் இருக்கும் மிகப்பெரிய சுவர் உடைந்து ஒருவரால் கட்டிப்பிடிக்கப்பட வேண்டும்,' என்று கூற தயக்கம் தேவையில்லை." பட மூலாதாரம்,SAMII WOOD படக்குறிப்பு,பிரிட்டனில் மக்கள் பிறரைத் தொடுவதையோ, பிறரால் தொடப்படுவதையோ பெரிதாக விரும்புவதில்லை இதன் பின்னால் இருக்கும் அறிவியல் என்ன? ஜெர்மனியின் போகமில் அமைந்திருக்கும் ரூர் பல்கலைக்கழத்தின் காக்னிடிவ் நியூரோசயின்ஸ் துறையின் ஆய்வாளர்களான டாக்டர் ஜூலியன் பகேய்ஷெர் மற்றும் அவர் சகாக்கள் வெளியிட்ட ஆய்வறிக்கையில், "தொடுதல் உடல் மற்றும் மன ரீதியான ஆரோக்கியத்தை மேம்படுத்தும்," என்று குறிப்பிட்டுள்ளனர். ஒரு பழக்கமான நபர் மற்றும் ஒரு சுகாதாரப் பணியாளரின் தொடுதலால் ஏற்படும் நன்மைகளுக்கு இடையே வேறுபாடுகள் ஏதும் இல்லை என்று அவர்கள் கண்டறிந்துள்ளனர். லண்டனியின் யுனிவெர்சிட்டி கல்லூரியைச் சேர்ந்த, காக்னிடிவ் நியூரோசயின்ஸ் துறைப் பேராசிரியரான சோஃபி ஸ்காட் இது குறித்து கூறும் போது, ஒருவரை மற்றொருவர் தொடும் போது பலன்கள் உள்ளது என்றாலும் கூட, சம்பந்தப்பட்ட நபர்களுக்கு இடையேயான உறவு முறையானது மிகவும் முக்கியமானது என்றார். மக்களை கண்காணிக்கும் பகுதி ஒன்றுக்கு அனுப்பி வைத்து அவர்களுக்கு துன்பம் ஏற்படும் போது மூளை எவ்விதம் செயல்படுகிறது என்றொரு ஆய்வு நடத்தப்பட்டது. என்று மற்றொரு ஆய்வறிக்கையை அவர் சுட்டிக்காட்டினார். "ஒருவரின் துணை அவரின் கையைப் பிடிக்கும் போது, வலிக்கான எதிர்வினை குறைவாக இருந்தது. சிக்கலான சூழலில் இருந்து கொஞ்சம் ஆசுவாசமாக உணரும் வகையில் அங்கே வேதியியல் மாற்றங்கள் நிகழ்கின்றன. உங்களின் கையைப் பற்றிக் கொண்டது ஏதோ ஒரு நபர் அல்ல. அவர் உங்களின் துணை." "தொழில்முறையாக ஒருவர் இதனை செய்யும் போது, நீங்கள் அந்த நபருடன் இப்படியான ஒரு உறவை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பது எனக்கு கவலையை அளிக்கிறது. உங்களின் கையை யாரோ ஒருவர் பற்றிக் கொள்ள நீங்கள் அனுமதிப்பதில்லை," என்று அவர் தெரிவித்தார். "முடி வெட்டிக் கொள்ள, கை மற்றும் கால் நகங்களை அழகாக்கிக் கொள்ள மக்கள் விரும்புவதுண்டு. ஆனால் அவை அனைத்தும் உடலின் நடுநிலை உணர்வுகளைக் கொண்ட பாகங்கள். ஆனால் ஒருவரை அணைத்துக் கொள்வது என்பது அவர்களின் உணர்வு மிக்க பகுதிகளுக்கு அருகே செல்வதைப் போன்றது. மக்கள் பாதுகாப்பாக உணர வேண்டும் என்று நான் கூறுகிறேன். அவர்கள் பாதுகாப்பாக உணரவில்லை என்றால், இது பாதகமான சூழலை உருவாக்கும்," என்று அவர் கூறுகிறார். தொடுதலால் ஏற்படும் பலன்கள், அதனால் உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு ஏற்படும் நன்மைகள் குறித்து பல்வேறு ஆராய்ச்சி முடிவுகள் சுட்டிக் காட்டுகின்றன. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,தொடுதலால் ஏற்படும் பலன்கள், அதனால் உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு ஏற்படும் நன்மைகள் குறித்து பல்வேறு ஆராய்ச்சி முடிவுகள் சுட்டிக் காட்டுகின்றன. டேப்பிங், டை-சீ போன்ற குணமடைதலுக்கான மாற்று வழிகள் குறித்து ஆய்வு செய்த போது வலேரியோவுக்கு கட்டிப்பிடி சிகிச்சைப் பற்றி தெரிய வந்தது. "இது அழுத்தத்தைக் குறைத்து, அமைதியை ஏற்படுத்துகிறது," என்று அவர் கூறுகிறார். மனதிற்கு இதம் அளிக்கும் அமைதியான இசையை இசைக்க வைத்து, முதலில் அங்கே பங்கேற்கும் நபர்கள் அனைவரும் ஒன்றாக ஈடுபடும் வகையில் 'வார்ம்-அப்' மற்றும் கட்டிப்பிடித்தல் அடிப்படையிலான பயிற்சிகளை வழங்கி, பாதுகாப்பான சூழலை சமி ஏற்படுத்திக் கொடுத்துள்ளார், என்று வலேரியா தெரிவிக்கிறார். உங்களின் மனத்திரையை உடைக்க சில பயிற்சிகளை நீங்கள் மேற்கொண்ட பிறகு, தரையில் படுத்து, முன்பின் அறிமுகம் இல்லாத நபரை கட்டிக் கொள்ள வேண்டும் என்ற உணர்வு இயற்கையாகவே ஏற்படுகிறது. "கட்டிப்பிடிப்பதற்கு முன்பே, இந்த பயிற்சிகளை மேற்கொள்ளும் நபர்கள் உடைந்து அழும் நிலையும் ஏற்பட்டுள்ளது. சில உணர்வுகளை அந்த பயிற்சிகள் மேலெழும்ப வைக்கிறது," என்று அவர் தெரிவித்தார். சமியிடம் தனி நபருக்கான சிகிச்சைகளை மேற்கொண்ட வலேரியா, இது ஆழமான இணைப்பிற்கு வழி வகை செய்கிறது என்கிறார். "பின்னால் இருந்து ஒருவர் கட்டிக் கொள்ளும் போது, ஒரு ஆணை ஒரு பெண் அணைக்கும் போது பலவீனமாக உணர வைக்கிறது. அது ஒருவர் உங்களை தாங்கிக் கொள்வதை உணர வைக்கிறது," என்று அவர் தெரிவித்தார். "அதன் பிறகு எனக்கு ஆதரவு கிடைத்தது போன்று உணருகிறேன். என்னுடைய பாரத்தையே இறக்கி வைத்தது போன்று அது உணர வைக்கிறது. என் மனத்திரை கீழிறங்கியது." - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/clyqvl1rlnwo
  20. Published By: RAJEEBAN 15 MAY, 2025 | 12:36 PM இலங்கையின் முன்னாள் இராணுவ அதிகாரி கமால் குணரட்ணவிற்கு எதிராக தடைகளை விதிக்கவேண்டும் என கோரும் ஆவணத்தை ஆதாரங்களுடன் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் பிரிட்டனின் வெளிவிவகார பொதுநலவாய அமைச்சிடம் கையளித்துள்ளது. இது தொடர்பில் ஐடிஜேபி மேலும் தெரிவித்துள்ளதாவது, இலங்கையில் யுத்தம் முடிவடைந்ததை குறிக்கும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தை நாங்கள் நெருங்கிக்கொண்டிருக்கின்ற இந்த தருணத்தில் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் இலங்கையின் முன்னாள் இராணுவ அதிகாரி கமால் குணரட்ணவிற்கு எதிராக தடைகளை விதிக்கவேண்டியமைக்கான ஆதாரங்கள் அடங்கிய ஆவணத்தினை மக்னிட்ஸ்கி தடைகளிற்காக பிரிட்டனின் வெளிவிவகார பொதுநலவாய சர்வதேவ அபிவிருத்தி அமைச்சிடம் கையளித்துள்ளோம். கமால் குணரட்ணவுடன் இணைந்து பணியாற்றிய 58வது படைப்பிரிவின் தளபதி சவேந்திர சில்வாவிற்கு எதிராக பாரிய மனித உரிமை மீறல்களிற்காக அமெரிக்கா தடை விதித்துள்ளதையும் அவரும் அவரது குடும்பத்தினரும் அமெரிக்காவிற்கு செல்ல முடியாது என்பதையும் நாங்கள் சுட்டிக்காட்டியுள்ளோம். பிரிட்டனும் சவேந்திர சில்வாவிற்கு எதிராக தடைகளை விதித்துள்ளது. 2009 இல் கமால் குணரட்ண, சவேந்திரசில்வாவின் கட்டளை தளபதியாக செயற்பட்ட ஜகத்ஜயசூரியவிற்கு எதிராக பிரிட்டன் தடைகளை அறிவித்துள்ளதையும் நாங்கள் சுட்டிக்காட்டியுள்ளோம். (2017 இல் லத்தீன் அமெரிக்காவில் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் இவருக்கு எதிராக சர்வதேச நியாயாதிக்கத்தினை தாக்கல் செய்தது என்பதை சுட்டிக்காட்டியுள்ளோம்.) (அவுஸ்திரேலியாவிற்கு அவர் பயணம் மேற்கொள்வதை தடுப்பதற்காக குற்றவியல் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டதையும் தடைகளிற்கான வேண்டுகோள்கள் விடுக்கப்பட்டதையும் சுட்டிக்காட்டியுள்ளோம்) யுத்த கால பாதுகாப்பு செயலாளராக பணியாற்றிய இவர்களின் தலைமை அதிகாரி கோட்டாபய ராஜபக்சவிற்கு எதிராக கனடா ஏற்கனவே தடைகளை விதித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளோம். மேலும் முன்னாள் ஜனாதிபதியும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சருமான மகிந்த ராஜபக்சவிற்கு எதிராக கனடா தடைகளை விதித்துள்ளதையும், சுட்டிக்காட்டியுள்ளோம். https://www.virakesari.lk/article/214788
  21. தமிழ் இனப்படுகொலை நினைவுத்தூபிக்கான நாமல் ராஜபக்சவின் எதிர்ப்பு, அந்த குடும்பத்தின் கரங்களினால் அப்பாவிகள் கொல்லப்பட்டதை அங்கீகரிக்கும் சரியான பாதையில் நாம் சென்றுகொண்டிருக்கின்றோம் என்பதை வெளிப்படுத்தியுள்ளது - பிரம்டன் மேயர் பட்ரிக் பிரவுன் Published By: RAJEEBAN 15 MAY, 2025 | 11:14 AM கனடாவில் உருவாக்கப்பட்டுள்ள தமிழர் இனப்படுகொலை நினைவுத்தூபியை ராஜபக்ச குடும்பம் எதிர்ப்பது அந்த நினைவுத்தூபிக்கு கிடைத்த கௌரவமாகும் என கனடாவின் பிரம்டன் மேயர் பட்ரிக் பிரவுன் தெரிவித்துள்ளார். சமூக ஊடக பதிவில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, தமிழ் இனப்படுகொலை நினைவுத்தூபிக்கான ராஜபக்ச குடும்பத்தின் எதிர்ப்பு , அந்த குடும்பத்தின் கரங்களில் அப்பாவிகள் கொல்லப்பட்டதை அங்கீகரிக்கும் சரியான பாதையில் நாம் சென்றுகொண்டிருக்கின்றோம் என்பதற்கான உறுதியான சமிக்ஞை. ராஜபக்ச குடும்பம் இனப்படுகொலை இடம்பெறவில்லை என உறுதியான நம்பிக்கைகொண்டிருந்தால்; நீதியை குழப்புவதற்கான நடவடிக்கைள், வழக்கு விசாரணையிலிருந்து மறைந்திருத்தல் போன்றவற்றை கைவிட்டுவிட்டு சர்வதேச விசாரணைகளிற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கவேண்டும். இது அவர்களின் நியுரம்பேர்க் தருணம், இந்த குடும்பம் பொறுப்புக்கூறலை எதிர்கொள்வதற்கு பதில், இலங்கை அரசால் பாதுகாக்கப்பட்ட நிலையில், ஆடம்பரத்தில் மறைந்துள்ளது. இது வெட்கக்கேடான விடயம். ராஜபக்ச குடும்பம் இழைத்துள்ள மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் போல்பொட், ஸ்லோபடான் மிலோசோவிக், ஹென்றிச் ஹிம்லர், மற்றும் புளிசியான் கபுகா ஆகியோர் இழைத்த மனித குலத்திற்கு எதிரான குற்றங்களுடன் போட்டியிடும் அளவிற்கும் மோசமானவை. கனடாவில் உருவாக்கப்பட்டுள்ள தமிழர் இனப்படுகொலை நினைவுத்தூபியை ராஜபக்ச குடும்பம் எதிர்ப்பது அந்த நினைவுத்தூபிக்கு கிடைத்த கௌரவமாகும். https://www.virakesari.lk/article/214767
  22. Published By: RAJEEBAN 15 MAY, 2025 | 11:02 AM இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான இனப்படுகொலை குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என அரசாங்கம் கருதினால் ஏன் அது சர்வதேச விசாரணைகளை எதிர்கொள்வது குறித்து இவ்வளவு தூரம் அச்சப்படுகின்றது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கேள்வி எழுப்பியுள்ளார்? இலங்கைக்கான கனடாவின் தூதுவரை அழைத்து எதிர்ப்பு வெளியிட்டமை குறித்த வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தின் முகநூல் பதிவிற்கான பதில் பதிவில் அவர் இதனை தெரிவித்துள்ளார். அவர் அதில் மேலும் தெரிவித்துள்ளதாவது. இலங்கை அரசாங்கம் தமிழ்மக்களிற்கு எதிரான இனப்படுகொலையில் ஈடுபட்டது என்ற குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என உண்மையில் நீங்கள் கருதினால்,சர்வதேச சுயாதீன குற்றவியல் விசாரணையை எதிர்கொள்வதற்கு - அரசாங்கம் தமிழர்களிற்கு எதிரான இனப்படுகொலையில் ஈடுபடவில்லை என்பதை நிரூபிப்பதற்கு நீங்கள் ஏன் இவ்வளவு தூரம் அச்சமடைகின்றீர்கள்? நீங்கள் ஏன் ரோம் சட்டத்தை ஏற்றுக்கொண்டு அதில் கைச்சாத்திட்டு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் விசாரணைகளை மேற்கொள்வதற்கு அனுமதிக்க கூடாது? உண்மை என்னவென்றால் அமைச்சரே,அரசாங்கம் உண்மையைகண்டு அஞ்சி நடுங்குகின்றது. உண்மையே நல்லிணக்கத்திற்கான ஒரே வழி ஆனால் முன்னைய அரசாங்கங்கள் போன்று உங்கள் அரசாங்கமும் அதனை மறுக்கின்றது. https://www.virakesari.lk/article/214770
  23. ஹோசே முஹிகா: எளிய வீடு, பழைய கார் தான் சொத்து - உலகின் 'ஏழை அதிபர்' குறித்த சுவாரஸ்ய தகவல்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, "மரணத்தை எதிர்கொண்டு நடுங்கி வாழாதே," என்றார் "பெப்பே" முஹிகா. "காட்டின் மிருகங்களைப் போல அதை ஏற்றுக்கொள்." கட்டுரை தகவல் எழுதியவர், கெரார்டோ லிசார்டி பதவி, பிபிசி நியூஸ் முண்டோ 2 மணி நேரங்களுக்கு முன்னர் கடந்த 2012ம் ஆண்டில் தன் வீட்டின் தனியறையில் நேர்காணலை முடித்தபிறகு ஹோசே முஹிகா "மதுபானம்" கொடுத்து எங்களை ஆச்சர்யப்படுத்திய போது நண்பகல் கூட ஆகியிருக்கவில்லை. அந்த ஆண்டில் உருகுவேயின் அதிபராக பாதி ஆட்சிக் காலத்தை முடித்திருந்தார் அவர். அவர் சில கோப்பைகளை கழுவி அதில் கொஞ்சம் ஐஸ் கட்டிகளை சேர்த்து, தாராளமாக விஸ்கியை ஊற்றினார். அவற்றை எங்களுக்குக் கொடுத்த பின்பு, ஆயாசமாக தொடங்கிய உரையாடல் ஒரு தலைப்பிலிருந்து மற்றொரு தலைப்புக்கு மாறிக்கொண்டே இருந்தது. "நான் அரசியலில் இருந்து வெளியேற போகிறேன்," என துபமரோ (Tupamaro guerrilla - தேசிய விடுதலை இயக்கத்தின்) முன்னாள் உறுப்பினரும் (கெரில்லா) 2010 முதல் 2015 வரை உருகுவேவை ஆட்சி செய்தவருமான அவர், பிபிசி முண்டோவுடனான சந்திப்பில் தெரிவித்தார். சிறுவயதிலிருந்து அவருக்கு விருப்பமான ஒன்றில், தன்னுடைய இறப்பு வரை ஈடுபட அவர் திட்டமிட்டிருப்பதாக தெரிவித்தார். கடந்த செவ்வாய்கிழமை, தன்னுடைய 89வது வயதில் அவர் காலமானார். தன்னை பாதித்துள்ள புற்றுநோய், உடல் முழுவதும் பரவியதாக கடந்த ஜனவரி மாதம் அறிவித்த அவர், மேற்கொண்டு தான் சிகிச்சையை தொடரப் போவதில்லை என அறிவித்தார். ஓர் அதிபராக அவர் வாழ்ந்த எளிமையான வாழ்க்கை, நுகர்வு கலாசாரம் மீதான விமர்சனம், சமூக சீர்திருத்தங்களை ஆதரித்தல், எல்லாவற்றையும் தாண்டி கஞ்சாவை சட்டபூர்வமாக்கிய முதல் நாடாக உருகுவேவை மாற்றியது என, லத்தீன் அமெரிக்காவின் இடதுசாரி இயக்கத்தில் முக்கியமான ஆளுமையாக ஹோசே முஹிகா திகழ்கிறார். அவருடைய புகழ் உலகம் முழுவதும் அடைந்தது, உருகுவேவைச் சேர்ந்த ஒரு தலைவருக்கு இது அசாதாரணமான ஒன்று. எனினும், 34 லட்சம் மக்கள் உள்ள ஒரு நாட்டில் அவருடைய அரசியல் மரபு சர்ச்சைகளையும் ஏற்படுத்தியிருக்கிறது. பட மூலாதாரம்,GERARDO LISSARDY படக்குறிப்பு,மான்டிவீடியோவின் புறநகரில் எளிய வீட்டுடன் கூடிய ஒரு பண்ணையில் முஹிகா வசித்து வந்தார். "முடிவுறாத ஒரு பந்தயம்" உலகம் முழுவதும் உள்ள நாடுகளின் தலைவர்கள் அவர்களுக்கென அமையப்பெற்ற மாளிகைகளில் வசிப்பது வழக்கமானது என்றாலும், முஹிகா தன் ஆட்சிக் காலத்தில் மாளிகைக்கு இடம்பெயர்வதை தவிர்த்தார். அதற்குப் பதிலாக மான்டிவீடியோவின் (Montevideo) புற நகரில் தன் மனைவியும் முன்னாள் கெரில்லாவும் அரசியல்வாதியுமான லூசியா டோபோலான்ஸ்கியுடன் எளிமையான வீட்டிலேயே வசித்தார், அங்கு வேலையாட்களோ பாதுகாப்புக்காக கூட யாரையும் அமர்த்தவில்லை. இத்தம்பதிக்கு குழந்தை இல்லை. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,மான்டிவீடியோவின் புறநகரில் உள்ள தனது வீட்டில் முஹிகா தன் மனைவியுடன் மேலும் மிகவும் எளிமையான உடைகளையே அவர் எப்போதும் அணிவார். 1987 மாடலான இளம் நீல நிற வோக்ஸ்வேகன் பீட்டில் காரில் தான் அடிக்கடி அவர் காணப்படுவார். மேலும், தன்னுடைய சம்பளத்தில் பெரும்பகுதியை தானம் செய்துவிடுவார், இத்தகைய காரணங்களால் சில ஊடகங்கள் அவரை உலகின் "மிக ஏழ்மையான அதிபர்" என அழைத்தன. ஆனால், "பெப்பே" (Pepe) எனும் செல்லப்பெயர் கொண்ட முஹிகா, "ஏழ்மையான அதிபர்" எனும் பட்டத்தை நிராகரித்தே வந்தார். "நான் ஒரு ஏழ்மையான அதிபர் என அவர்கள் கூறுகின்றனர். இல்லை, நான் ஏழ்மையான அதிபர் இல்லை," என அவருடைய வீட்டில் அளித்த அந்த பேட்டியில் தெரிவித்தார். "இன்னும் அதிகம் வேண்டும் என்று நினைப்பவர்களும் எதையும் பெற முடியாதவர்களுமே ஏழைகள்," எனவும் அவர் கூறினார். "ஏனெனில் அவர்கள் முடிவுறாத பந்தயத்தில் உள்ளனர். அப்படியிருக்கும்போது அவர்களுக்கு போதுமான நேரமோ அல்லது வேறெதுவுமோ கிடைக்காது." "பல்லாண்டு கால தனிமை" அரசியல் வர்க்கத்தைச் சாராத வெளியாளாகவே பலரும் அவரை பார்த்தனர், ஆனால், அரசியலுக்கு முஹிகா வெளியாள் இல்லை. அரசியல், புத்தகங்கள் மற்றும் இந்த நிலத்தின் மீதான தன்னுடைய ஆர்வம், தன் தாயிடமிருந்து கடத்தப்பட்டதாக அவர் தெரிவித்தார். அவருடைய தாய் முஹிகாவை அவர் தங்கையுடன் நடுத்தர வர்க்க வீட்டில் வளர்த்தார். முஹிகாவுக்கு எட்டு வயது இருக்கும்போது அவருடைய தந்தை இறந்துவிட்டார். இளைஞராக, உருகுவேயின் பாரம்பரிய அரசியல் சக்திகளுள் ஒன்றான தேசிய கட்சியின் உறுப்பினராக முஹிகா இருந்தார், இக்கட்சி பின்னாளில் அரசாங்கத்துக்கு எதிரான கட்சியாக மாறியது. பட மூலாதாரம்,AFP படக்குறிப்பு,முஹிகா 14 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் கழித்தார், மேலும் துபமரோ இயக்கத்தைச் சேர்ந்தவராக இருந்ததற்காக சித்திரவதை செய்யப்பட்டார். அவர் 1985 இல் விடுவிக்கப்பட்டார். 1960களில் துபமரோஸ் (Tupamaros) எனும் தேசிய விடுதலை இயக்கத்தை (MLN-T) உருவாக்குவதில் பங்கேற்றார். இடதுசாரி நகர்ப்புற கெரில்லா குழுவான அந்த இயக்கம், கியூபா புரட்சி மற்றும் பொதுவுடைமைக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, தாக்குதல்கள், கடத்தல்கள் மற்றும் தண்டித்தல் ஆகிய நடவடிக்கைகளில் ஈடுபட்டது. "நல்வாய்ப்பாக" தான் ஒருபோதும் கொலை செய்யவில்லை என அவர் தெரிவித்தார். முஹிகா நான்கு முறை சிறைபிடிக்கப்பட்டார். அதில் ஒன்று, 1970ம் ஆண்டில் நடைபெற்றது, அப்போது அவர் மீது ஆறு முறை சுடப்பட்டது, அப்போது அவர் சாவின் விளிம்புக்கே சென்றுவிட்டார். அதன்பிறகு சிறிது காலத்திலேயே, அவர் சிறையிலிருந்து தப்பினார், எனினும் 1972ம் ஆண்டில் மீண்டும் சிறை பிடிக்கப்பட்டார். மீண்டும் தப்பிக்க முயன்றபோது அதே ஆண்டிலேயே கைது செய்யப்பட்டு 1985ம் ஆண்டு வரை சிறையிலேயே இருந்தார். 1971ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ஒருமுறை அவர் தப்பித்தபோது, துபமரோ குழுவைச் சேர்ந்த மற்ற 105 கைதிகளுடன் சுரங்கப்பாதை வழியாக தப்பித்தார். இச்சம்பவம், உருகுவே சிறை வரலாற்றில் மிகப்பெரிய தப்பித்தல் சம்பவமாகப் பதிவாகியிருக்கிறது. தன் 14 ஆண்டுகால சிறை வாழ்க்கையில், அவர் மிகவும் துன்புறுத்தப்பட்டார், மிகவும் மனிதத்தன்மையற்ற சூழல்களில் தப்பிப் பிழைத்தார். நீர்த்தொட்டி (cisterns) மற்றும் கான்கிரீட் பெட்டிகளில் கூட அவர் தனிமையில் காலம் கழித்ததும் உண்டு. 1973ம் ஆண்டில் உருகுவே ராணுவம் ஆட்சிக் கவிழ்ப்பில் ஈடுபட்ட போது, "துபமரோவின் ஒன்பது பணயக்கைதிகளில்" ஒருவராக முஹிகாவையும் சேர்த்தனர், கெரில்லாக்கள் மீண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டால் அவர் கொலை செய்யப்படுவார் என மிரட்டப்பட்டார். அந்தக் காலகட்டத்தில் சித்தபிரமை பிடித்தது போன்று தான் இருந்ததாகவும் எறும்புகளிடம் கூட பேசிக்கொண்டிருந்ததாகவும் கூறிய அவர், எனினும் தன்னை குறித்து சிறப்பாக அக்காலகட்டத்தில் புரிந்துகொண்டதாகவும் தெரிவித்தார். "அவை தனிமையாக இருந்த ஆண்டுகள்," என, தன் சிறிய பண்ணையில் இருந்த மரங்களுக்கடியில் முஹிகா பிபிசி முண்டோவிடம் தெரிவித்தார். "அந்த காலம் தான் எனக்கு அதிகமாக கற்றுக்கொடுத்தது என சொல்ல வேண்டும்." "யதார்த்தம் பிடிவாதமானது" உருகுவே ராணுவ ஆட்சியின் முடிவில் 1985ம் ஆண்டில் கிடைத்த பொது மன்னிப்பின் மூலம் முஹிகா விடுதலை செய்யப்பட்டார். அது மகிழ்ச்சிகரமான நாளாக அவருடைய நினைவில் உள்ளது. "அதிபர் பொறுப்பு என்பது முட்டாள்தனமானது, அதை ஒப்பிடவே முடியாது," அன அவர் உறுதிபட தெரிவித்தார். உச்சபட்ச பதவியை அவர் அடைவதற்கு முன்னர் துணை செனட் உறுப்பினராகவும், பின்னர் செனட் உறுப்பினராகவும் இருந்தார், பின்னர் 2005ம் ஆண்டில் உருகுவேயின் இடதுசாரி கூட்டணியான பிராட் ஃபிரண்ட் ஆட்சியில் கால்நடைகள் மற்றும் வேளாண் அமைச்சராக இருந்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,முஹிகாவும் 2018 இல் இறந்த அவரது மூன்று கால் நாய் மானுவேலாவும்: "அரசாங்கத்தில் எனக்கு இருந்த மிகவும் விசுவாசமான உறுப்பினர் இதுதான்," என்று அவர் பிபிசி முண்டோவுக்கு அளித்த பேட்டியில் கூறினார். அக்காலகட்டத்தில் அவருடைய புகழ் வேகமாக உயர்ந்தது, பிராட் ஃபிரண்ட் கூட்டணியின் அதிபர் வேட்பாளராக ஆவதற்கு முன்பு வரை தொடர்ச்சியாக அவர் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். கெரில்லா இயக்கத்தில் முன்பு இருந்ததை மறைக்காமல், உருகுவே மக்களின் நம்பிக்கையை பெறும் பொருட்டு, வழக்கத்துக்கும் அதிகமாக தன் பிம்பத்தையும் தன் வார்த்தைகளையும் அவர் கவனமாக வடிவமைத்தார். 2009ம் ஆண்டு தேர்தலின் இரண்டாம் சுற்றில் கிட்டத்தட்ட 53% வாக்குகளைப் பெற்று அவர் வெற்றி பெற்றார். அப்போது 74 வயதான அவர் உலகின் மற்ற பகுதிகளில் அதிகம் அறியப்படாதவராக இருந்தார். லத்தீன் அமெரிக்க இடதுசாரி இயக்கம் வெற்றியை பெற்ற காலங்கள் இருந்தன. அதில் முன்னணி ஆளுமைகளான பிரேசிலின் அப்போதைய பிரதமர் லூயிஸ் இனாசியீ லூலா டா சில்வா மற்றும் வெனிசுலாவின் முன்னாள் அதிபர் ஹூகோ சாவேஸும் அடங்குவர். இருவருடனும் நெருக்கமான உறவை முஹிகா கடைபிடித்து வந்தாலும் சாவிஸ்டா பொதுவுடைமையுடன் (இடதுசாரி அரசியல் கொள்கை) அவர் விலகியே இருந்தார். தன்னுடைய தனிப்பட்ட வழியிலேயே ஆட்சி செய்தார். நடைமுறைவாதம் மற்றும் பல சூழல்களில் தைரியத்துடனும் ஆட்சி செய்தார். அவருடைய ஆட்சிக்காலத்தில் சர்வதேசத்துடன் நியாயமான விதத்தில், உருகுவேயின் பொருளாதாரம் ஆண்டுக்கு சராசரியாக 5.4% எனும் விகிதத்தில் வளர்ந்தது, வறுமையும் வேலைவாய்ப்பின்மையும் குறைந்தது. சிக்கனத்தை முஹிகா ஆதரித்து வந்தாலும் அவருடைய அரசாங்கம் குறிப்பிடத்தக்க அளவில் பொதுச் செலவுகளை அதிகரித்தது, இதனால் நிதி பற்றாக்குறை அதிகரித்தது. இதன் காரணமாக, அவரின் எதிர்ப்பாளர்கள் அவர் மீது குற்றச்சாட்டுகளை சுமத்தினர். தன் அரசாங்கத்தில் கல்விக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என உறுதியளித்தபோதும். உருகுவேயின் கல்வி துறையில் அதிகரித்த பிரச்னைகளை அவர் கவனிக்கத் தவறியதாகவும் விமர்சனங்கள் எழுந்தன. பட மூலாதாரம்,AFP படக்குறிப்பு,முஹிகா தான் அதிபராக இருந்த காலத்தில், உருகுவேயில் வறுமையை ஒழிக்கத் தவறியதற்காக தன்னைத்தானே விமர்சித்துக் கொண்டார்; அவரது விமர்சகர்கள் அவர் நிதிப் பற்றாக்குறையை அதிகரிப்பதாகக் குற்றம் சாட்டினர். எனினும், ஆட்சி முடிந்தபின் சில தினங்களில், உருகுவேயில் இன்னும் வறுமை நீடிப்பது தான் தன்னால் தீர்க்கப்படாத மோசமான பணியாகும் என்றார். "ஏன் என்னால் அதை மாற்ற முடியவில்லை? ஏனெனில் அது பிடிவாதமாக இருக்கிறது என்பதுதான் யதார்த்தம்," என அவர் பிபிசியின் உலக வாசகர்களுடனான உரையாடலில் அவர் தெரிவித்தார். அந்த நிகழ்ச்சியில் அண்டை நாடுகள் மற்றும் இரான், இந்தோனீசியா மற்றும் அஸர்பைஜான் போன்ற தொலைதூர நாடுகளை சேர்ந்தவர்களிடமிருந்து பல்வேறு கேள்விகள் அவரை நோக்கி எழுப்பப்பட்டன. அவருடைய ஆட்சியின் முடிவில் உள்நாட்டில் அதிக புகழ் வாய்ந்தவராக (கிட்டத்தட்ட 70%) அவர் இருந்தார். எனினும் அவர் உலகம் முழுவதும் பயணிப்பதிலேயே தன் நேரத்தின் பெரும்பகுதியை அர்ப்பணித்தார். "இந்த உலகம் அற்பத்தனமானாது" சர்வதேச அளவில் அவருடைய புகழ் அதிகரித்ததில் ஒரு முக்கியமான கட்டம் இருந்தது. 2012ம் ஆண்டு ஜூன் மாதம் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற ஐநாவின் ரியோ+20 மாநாட்டில் நீடித்த வளர்ச்சி குறித்த உரைதான் அது. பல நாடுகள் மற்றும் அரசாங்கங்களின் தலைவர்களின் முன்பு அவர் நுகர்வு சமூகத்தை விமர்சித்தார், இதனால் மக்கள் கடன்களை அடைக்க கடுமையாக உழைக்க வழிவகுத்ததாக தெரிவித்தார். "இவை மிகவும் அடிப்படையான விஷயங்கள்: வளர்ச்சி என்பது மகிழ்ச்சிக்கு முரணானதாக இருக்கக்கூடாது. அது, மனிதர்களின் மகிழ்ச்சி, பூமி மீதான காதல், மனித உறவுகள், குழந்தைகள் மீதான அக்கறைக்கு ஆதரவானதாக இருக்க வேண்டும்." என அவர் வலியுறுத்தினார். தன்னுடைய வார்த்தைகள் "அடிப்படையானவை" என அவர் விவரித்த போதும், இணையத்தில் அவருடைய பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியது, யூடியூபில் பல லட்சக்கணக்கானோரால் அவருடைய காணொளி பார்க்கப்பட்டது. சமூக ஊடகங்களை பயன்படுத்தாத ஒரு அதிபருக்கு அது பெரும் வெற்றியாக பார்க்கப்பட்டது. பட மூலாதாரம்,YASMIN BOTELHO MEDIA NINJA படக்குறிப்பு,தனது அதிபர் பதவிக்காலம் முடிவடைந்த சிறிது நேரத்திலேயே ரியோ டி ஜெனிரோவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் தனது பேச்சைக் கேட்ட ஆயிரக்கணக்கான இளைஞர்களை முஹிகா வரவேற்கிறார். அதைத்தொடர்ந்து, தன்னுடைய வீட்டில் பிபிசி முண்டோவுக்கு அவர் அளித்த பேட்டியையும் பலரும் பின் தொடர்ந்தனர். அதிபராக அவருடைய வாழ்க்கை முறை, அவரின் பூந்தோட்டம், மூன்று கால்களை கொண்ட மானுவேலா (Manuela) எனும் அவரின் செல்ல நாயை காண ஆர்வம் எழுந்து, உலகம் முழுவதிலுமிருந்து பல ஊடகங்கள் அவரை சந்திக்க வந்தன. தன்னுடைய நிர்வாகத்தின்போது நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட சமூக ரீதியான சட்டங்களுக்காகவும் உருகுவே கவனத்தை ஈர்த்தது. குறிப்பாக, கருக்கலைப்பு சட்ட விரோதம் என்பதை நீக்கியது, தன்பாலின திருமணத்தை அங்கீகரித்தது, கஞ்சா சந்தையை சட்டப்பூர்வமாக்கியது ஆகியவை அடங்கும். தான் ஒருபோதும் கஞ்சாவை சுவைத்ததில்லை எனக்கூறிய அவர், தான் அதிபரானபோது அதை சட்டபூர்வமாக்குவது தன் திட்டங்களுள் ஒன்றாக இருக்கவில்லை என்றும் தெரிவித்தார். எனினும் தன் ஆட்சியின் மத்தியில், கஞ்சாவை தடை செய்வது தோல்வியடைந்தது என்றும் போதை சந்தையை மீட்க வேண்டும் என்பதற்காகவும் அதை சட்டபூர்வமாக்கியதாக தெரிவித்தார். இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற பெருவை சேர்ந்த மரியோ வர்காஸ் லோசா போன்றவர்களிடமிருந்து அவர் பாராட்டைப் பெற்றார். 2013ம் ஆண்டில் டைம் இதழின் மிகவும் செல்வாக்குமிக்க 100 பிரபலங்கள் பட்டியலில் இடம்பெற்றார். மேலும், தி எக்கனாமிஸ்ட் இதழின் அந்தாண்டுக்கான சிறந்த நாடாக உருகுவே அறிவிக்கப்பட்டது. அரபு ஷேக் ஒருவர் முஹிகாவின் காருக்கு பல மில்லியன் டாலர்களை வழங்குவதாகக் கூறினார். அதை முஹிகா மறுத்தார். முஹிகாவின் சொத்தாகவும் அடையாளமாகவும் அந்த கார் திகழ்ந்தது. ஆட்சி முடிவுற்ற பின் அவர் குவாட்டமாலா மற்றும் துருக்கி போன்ற சில நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்ட போது, அவருடைய பீட்டில் கார் அவருக்காக விமான நிலையத்தில் காத்திருக்கும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,முஹிகாவின் வோக்ஸ்வேகன் பீட்டில் அவரது எளிமையான பிம்பத்தின் மற்றொரு அடையாளமாக மாறியது. பெரும் புகழால் ஆச்சர்யமடைந்த முஹிகா "உலகின் கவனம் என்னை நோக்கி ஈர்க்கப்படுவது ஏன்? எளிமையான வீட்டில் வாழ்வதாலும் பழைய காரில் பயணிப்பதாலுமா? இது என்ன புதிதா? எது இயல்பானதோ அதைக்கண்டு உலகம் ஆச்சர்யமடைவதால், அது மிகவும் அற்பத்தனமானது," என ஆட்சி நிறைவடைந்த தருணத்தில் அவர் தெரிவித்தார். 20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உருவான உருகுவேயின் குடியரசு மற்றும் மரபுகளுக்கு ஏற்ப தன்னுடைய அரசாங்க பாணி இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். பல நாடுகளின் பாரம்பரிய அரசியல்வாதிகளுக்கு அவருடைய புகழ் வளர்வது ஏமாற்றத்தை அளித்தது. சாவேஸின் இறப்பு மற்றும் லூலா மீது எழுந்த ஊழல் மோசடி குற்றச்சாட்டுகளுக்கு இடையே, லத்தீன் அமெரிக்காவின் இடதுசாரி இயக்கத்தில் எழுந்த வெற்றிடம் முஹிகாவால் நிரப்பப்பட்டது. இறப்பு அதிபராக இருந்தபோது அவர் கூறிய சர்ச்சைக்குரிய கருத்துகளுக்காக முஹிகா அறியப்படுகிறார். 2013ம் ஆண்டில் மைக் ஆஃப் செய்யப்படாமல் இருப்பதை உணராமல் அப்போதைய அர்ஜெண்டினா அதிபர் கிரிஸ்டினா ஃபெர்னாண்டெஸை குறிப்பிட்டு "ஒற்றை கண் உள்ளவரை விட, இந்த வயதான பெண்மணி மோசமானவர்" எனக் கூறினார். பிரேசிலில் 2014ம் ஆண்டு நடந்த உலக கால்பந்து போட்டியில், உருகுவே வீரர் லூயிஸ் சுவாரெஸ் எதிராளியை கடித்ததற்காக தண்டனை பெற்றபோது ஃபிஃபா தலைவர்களை மோசமாக விமர்சித்தார். சில சமயங்களில் அவருடைய பேச்சுகள் அன்பு மற்றும் மகிழ்ச்சியை தழுவியும் இருக்கும். "தினமும் காலையில் எழுந்திருக்கும் போது, நீங்கள் செய்தவை சரியானதா அல்லது தவறானதா என்பதை யோசிக்க 10 நிமிடங்கள் எடுத்துக்கொள்ளுங்கள்," என பதவிக்காலம் முடிந்து சில மாதங்களில் ரியோ டி ஜெனிரோவில் இளைஞர்கள் மத்தியில் ஆற்றிய உரையில் அவர் அறிவுறுத்தினார். பட மூலாதாரம்,AFP தன்னுடைய வயது மற்றும் இறப்புக்கு அருகில் தான் இருப்பது குறித்தும் அவர் பேசியுள்ளார். இறப்பை எந்தவொரு நாடகமும் இன்றி இயற்கையானதாக எடுத்துக்கொள்ள வேண்டும் என அவர் கூறினார். 2014ம் ஆண்டு ஏப்ரலில் தனக்கு உணவுக்குழாய் புற்றுநோய் இருப்பதாகவும் அதற்காக சிகிச்சை எடுப்பதாகவும் தெரிவித்தார். "இறுதியில் என்னிடம் என்ன உள்ளதோ அது எடுத்துக் கொள்ளப்படும்," என அவர் முடித்தார். உருகுவேயின் வார இதழான Búsqueda-க்கு அளித்த பேட்டியில், கல்லீரல் வரை புற்றுநோய் பரவிட்டதாகவும் வயது மற்றும் நாள்பட்ட நோய் காரணமாக மேற்கொண்டு சிகிச்சை எடுப்பதை தான் தவிர்ப்பதாகவும் தெரிவித்தார். அவருக்கு அடுத்து வந்த யமண்டு ஓர்சி உருகுவேயின் அதிபராக கடந்த நவம்பர் மாதம் ஆனார். நாடு குடியரசு ஆனதிலிருந்து வரலாற்றில் அதிகளவிலான நாடாளுமன்ற இடங்களை பெற்ற கூட்டணியாக பிராட் ஃபிரண்ட் அமைந்தது, ஆனால், அதில் முஹிகா இல்லை. "இதுவொரு பரிசாக இருக்கிறது, ஏனெனில் ஓர் ஆட்டத்தின் முடிவில் இது நிகழ்ந்திருக்கிறது," என முஹிகா பிபிசிக்கு பின்னாளில் அளித்த பேட்டியில் தெரிவித்தார். "யார் அதிகம் செய்கிறாரோ அவர் சிறந்த தலைவர் இல்லை என்பது என்னுடைய எண்ணமாக எப்போதும் இருந்திருக்கிறது. மற்றவர்கள் தொடர்வதற்கு அதிகமாக விட்டுச் செல்பவர்கள் தான் சிறந்த தலைவர்." ஆன்ட்ரெஸ் டான்ஸா மற்றும் எர்னெஸ்டோ டுல்போவிட்ஸ் எழுதிய "எ பிளாக் ஷீப் இன் பவர்" எனும் புத்தகத்தில், "யாரும் இறப்பை விரும்புவதில்லை, ஆனால் அது எப்போதாவது வரும் என்பதை ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் நீங்கள் உணருவீர்கள்" என முஹிகா குறிப்பிட்டார். "தயவுசெய்து, மரணத்தை எதிர்கொண்டு நடுங்கி வாழாதீர்கள். காட்டு மிருகங்களைப் போல அதை ஏற்றுக்கொள்ளுங்கள். இந்த உலகம் மாறிக்கொண்டே இருக்கு, எதுவும் நிகழ்ந்துவிடப் போவதில்லை. அந்த பயம் மறைந்துவிடும்," என அவர் கூறினார். "முற்காலத்திய மனிதர்களின் மனப்பான்மையுடன் இருக்க வேண்டும்." - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cwy380pqw09o
  24. ஆரம்ப வீரருகக்காக அலைமோதும் அவுஸ்திரேலியா; 12 போட்டிகளில் 5 ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள்? 14 MAY, 2025 | 02:49 PM (நெவில் அன்தனி) உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதி ஆட்டம் நெருங்கிக்கொண்டிருக்கின்ற நிலையில் ஆரம்பத் துடுப்பாட்ட வீரருக்கான அவுஸ்திரேலியாவின் அலைமோதல் தொடர்ந்த வண்ணம் உள்ளது. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்புக்கு முன்பதாக கடைசியாக நடைபெற்ற 11 டெஸ்ட் போட்டிகளில் ஒருவர் மாத்திரமே நிரந்தர ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக விளையாடியுள்ளார். அவரது ஜோடியாக நான்கு வீரர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளனர். உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆரம்ப வீரராக ஐந்தாவது வீரர் ஒருவர் பயன்படுத்தப்படலாம் என்ற கருத்தும் வலுக்கத் தொடங்கியுள்ளது. டேவிட் வோர்னர் கடந்த வருடம் ஜனவரி மாதம் ஓய்வு பெற்ற பின்னர் உஸ்மான் கவாஜாவின் ஆரம்ப ஜோடியினராக நால்வர் பயன்படுத்தப்பட்டுள்ளனர். முன்னாள் அணித் தலைவர் ஸ்டீவன் ஸ்மித், நேதன் மெக்ஸ்வீனி, சாம் கொன்ஸ்டாஸ், ட்ரவிஸ் ஹெட் ஆகிய நால்வர் கடந்த 11 டெஸ்ட் போட்டிகளில் உஸ்மான் கவாஜாவின் ஆரம்பத் துடப்பாட்ட ஜோடியாக விளையாடியுள்ளனர். தென் ஆபிரிக்காவுக்கு எதிராக அடுத்த மாதம் நடைபெறவுள்ள உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் உஸ்மானின் ஐந்தாவது ஆரம்ப ஜோடியாக மானஸ் லபுஷேன் துடுப்பெடுத்தாடக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆரம்பத் துடுப்பாட்டம் என்பது சிறப்புவாய்ந்த ஒருவருக்கு உரிய பாத்திரமாக அமைந்துவிடாது என்ற கருத்தை தேசிய தேர்வாளர் ஜோர்ஜ் பெய்லி வெளியிட்டுள்ளார். 'ஆரம்ப வீரர் ஸ்தானத்தை ஜொஷ் இங்லிஸாலும் நிரப்பமுடியும். அதேவேளை, மானஸாலும் நிரப்ப முடியும் என்பதை நான் கூறியிருந்தேன்' என 15 வீரர்கள் அடங்கிய குழாத்தை உறுதிசெய்த பின்னர் பெய்லி தெரிவித்தார். இரண்டாவது உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் அத்தியாயத்திற்கான இறுதிப் போட்டியில் (லண்டன் ஓவல் விளையாட்டரங்கில் 2023 ஜூன் 7ஆம் திகதியிலிருந்து 11ஆம் திகதிவரை) இந்தியாவை எதிர்த்தாடிய அவுஸ்திரேலியா 209 ஓட்டங்களால் வெற்றியீட்டி சம்பியனாகி இருந்தது. இரண்டாவது தடவையாகவும் சம்பியனாகும் குறிக்கோளுடன் அவுஸ்திரேலியா பலம்வாயந்த குழாத்தை அறிவித்துள்ளது. இந்தக் குழாத்தில் இடம்பெறும் அதே வீரர்கள், 2023 - 2025 WTC சுழற்சியில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கும் பெயரிடப்பட்டுள்ளனர். அவுஸ்திரேலிய குழாம் பெட் கமின்ஸ் (தலைவர்), ஸ்கொட் போலண்ட், அலெக்ஸ் கேரி, கெமரன் க்றீன், ஜொஷ் ஹேஸ்ல்வூட், ட்ரவிஸ் ஹெட், ஜொஷ் இங்லிஸ், உஸ்மான் கவாஜா, சாம் கொன்ஸ்டாஸ், மெட் குனேமான், மானஸ் லபுஷேன், நேதன் லயன், ஸ்டீவன் ஸ்மித், மிச்செல் ஸ்டார்க், போ வெப்ஸ்டர். பயணிக்கும் பதில் வீரர்: ப்றெண்டன் டொகெட். https://www.virakesari.lk/article/214697
  25. கனடா வெளியுறவு அமைச்சரான தமிழக பெண்; பகவத் கீதையில் பதவி பிரமாணம்.. யார் இந்த அனிதா ஆனந்த்? 14 MAY, 2025 | 12:43 PM ஒட்டாவா: கனடா நாடாளுமன்ற தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதில் முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் கட்சி மீண்டும் வெற்றி பெற்றது. புதிய பிரதமராக மார்க் கார்னி வெற்றி பெற்றார். அவரது அமைச்சரவையில் வெளியுறவுத்துறை அமைச்சராக பதவியேற்று கொண்ட தமிழ் வம்சாவளி பெண்ணான அனிதா ஆனந்த் பகவத் கீதையை வைத்து பதவி பிரமாணம் எடுத்து கொண்டார். இந்த அனிதா ஆனந்த் யார்? பின்னணி என்ன? . கனடா பிரதமராக ஜஸ்டின் ட்ரூடோ இருந்தார். அரசியல் நெருக்கடியால் அவர் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து இடைக்கால பிரதமராக மார்க் கார்னி செயல்பட்டார். அதன்பிறகு அவரே லிபரல் கட்சி சார்பில் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதையடுத்து கடந்த மாதம் இறுதியில் கனடாவில் நாடாளுமன்ற தேர்தல் நடந்தது. இதில் லிபரல் கட்சி அமோக வெற்றி பெற்றது. இதையடுத்து மீண்டும் மார்க் கார்னி பிரதமராக பொறுப்பேற்றார். இந்நிலையில் தான் புதிய அமைச்சரவை அமைக்கப்பட்டது. மொத்தம் 28 அமைச்சர்கள்இ 10 மத்திய இணை அமைச்சர்கள் என்று மொத்தம் 38 பேர் இடம் பெற்றனர். இதில் 24 பேர் புது முகங்களாகும். இந்த அமைச்சரவையில் தமிழக வம்சாவளியை சேர்ந்த ஆனந்த் இடம்பெற்றுள்ளார். அவருக்கு வெளியுறவுத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து அனிதா ஆனந்த் பகவத்கீதையை வைத்து அமைச்சராக பதவி பிரமாணம் செய்து கொண்டார். பகவத் கீதையை வைத்து அனிதா ஆனந்த் பதவியேற்ற வீடியோவை அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் ‛ கனடாவின் புதிய வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளமை குறித்து பெருமிதம் கொள்கிள்றேன். பாதுகாப்பான நியாயமான உலகத்தை கட்டியெழுப்பவும் கனேடிய மக்களிற்கு வழங்கவும் பிரதமர் மார்க் கார்னி மற்றும் எங்கள் குழுவினருடன் இணைந்து பணியாற்ற எதிர்பார்த்துள்ளேன் என அவர் சமூக ஊடக பதிவில் தெரிவித்துள்ளார். தற்போது கனடா வெளியுறவுத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள அனிதா ஆனந்த் பெற்றோர் இந்தியாவை பூர்வீகமாக கொண்டவர்கள். தந்தை தமிழகத்தை சேர்ந்தவர் மருத்துவர்.. தாய் பெயர் சரோஜ். இவர் பஞ்சாப்பை சேர்ந்தவர். இவரும் மருத்துவர். அனிதா ஆனந்த் கனடாவிலேயே பிறந்து வளர்ந்தவர். இப்போது 58 வயது ஆகிறது. 4 பட்டப்படிப்புகளை முடித்துள்ளார். குயின்ஸ் பல்கலைக்கழகத்தில் இளநிலை பிரிவில் Arts in Political Studies என்பதை படித்து முடித்தார். அதில் தங்கப்பதக்கம் வாங்கினார். அதன்பிறகு ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் இளநிலை பிரிவில்Jurisprudenceபடிப்பையும் தல்ஹசி பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பையும் டொரண்டோ பல்கலைகழகத்தில் சட்ட மேற்படிப்பையும் முடித்தார். அனிதா ஆனந்த் அடிப்படையில் வழக்கறிஞர் ஆவார் . இவர் கடந்த 2015ம் ஆண்டில் பொது வாழ்க்கைக்குள் நுழைந்தார். அவர் ஒன்டாரியோ அரசின் நிபுணர் குழுவில் இடம்பிடித்தார். அதன்பிறகு கடந்த 2019ம் ஆண்டில் ஒக்வில்லி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன்பிறகு கொரோனா பரவல் சமயத்தில் பொதுசேவை மற்றும் கொள்முதல் பிரிவின் அமைச்சராக செயல்பட்டார். அனிதா ஆனந்துக்கு திருமணமாகி விட்டது. கணவர் பெயர் ஜான் நோல்டன். இவரும் கனடாவில் வழக்கறிஞராகவும் வருகிறார். https://www.virakesari.lk/article/214682

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.