Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Everything posted by ஏராளன்

  1. ஹார்வர்ட்: வெளிநாட்டு மாணவர்களுக்கு தடை விதித்த டிரம்ப், வழக்கு தொடர்ந்த பல்கலைக்கழகம் பட மூலாதாரம்,GETTY IMAGES 3 மணி நேரங்களுக்கு முன்னர் ஹார்வர்ட் பல்கலைகழகம் வெளிநாட்டு மாணவர்களை சேர்ப்பதை தடுக்கும் நடவடிக்கையை டிரம்ப் நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. இதனால் அமெரிக்க அரசுக்கும், பழமையான ஹார்வர்ட் பல்கலைக்கழகத்துக்கும் இடையே மோதல் அதிகரித்துள்ளது. டிரம்ப் நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைக்கு எதிராக ஹார்வர்ட் பல்கலைகழகம் வழக்கு தொடர்ந்துள்ளது. பாஸ்டனில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், அரசாங்கத்தின் நடவடிக்கை "தெளிவான சட்ட மீறல்" என அந்த பல்கலைக்கழகம் குறிப்பிட்டுள்ளது. ''சட்டத்தை பின்பற்றவில்லை என்பதால், ஹார்வர்டின் சர்வதேச மாணவர் அனுமதி உரிமம் ரத்து செய்யப்பட்டது'' என அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு செயலாளர் கிறிஸ்டி நோம் கூறியுள்ளார். "இது நாடு முழுவதும் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் ஒரு எச்சரிக்கையாக இருக்கும்" என்று அவர் வியாழக்கிழமை (மே 22) சமூக ஊடக வலைதளமான எக்ஸ் இல் பதிவிட்டுள்ளார். அமெரிக்க அரசின் இந்த நடவடிக்கையை "சட்டவிரோதமானது" என்று ஹார்வர்ட் பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. "140 க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் அறிஞர்களை வழிநடத்தும் ஹார்வர்டின் திறனைப் பராமரிக்க நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். அத்துடன், பல்கலைக்கழகத்தையும் இந்த நாட்டையும் - அளவிட முடியாத அளவுக்கு வளப்படுத்துகிறோம்," என்று பல்கலைக்கழகம் தனது அறிக்கையில் பதிலளித்தது. "ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தை சேர்ந்தவர்களுக்கு வழிகாட்டுதலையும் ஆதரவையும் வழங்க நாங்கள் துரிதமாக செயல்படுகிறோம். அரசின் இந்த பழிவாங்கும் நடவடிக்கை, ஹார்வர்ட் சமூகத்திற்கும் நமது நாட்டிற்கும் கடுமையான தீங்கு விளைவிக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. அத்துடன் ஹார்வர்டின் கல்வி மற்றும் ஆராய்ச்சி நோக்கத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது" என்று அந்த அறிக்கை கூறுகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கடந்த கல்வியாண்டில் 6,700க்கும் மேற்பட்ட வெளிநாட்டு மாணவர்கள் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் சேர்ந்துள்ளனர் டிரம்ப் நிர்வாகத்தின் முடிவுகள் பல்கலைக்கழகத்தில் படிக்கும் ஆயிரக்கணக்கான வெளிநாட்டு மாணவர்களைப் பாதிக்கக்கூடும். கடந்த கல்வியாண்டில் 6,700க்கும் மேற்பட்ட வெளிநாட்டு மாணவர்கள் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்பதற்காக சேர்ந்துள்ளனர் என்பதை பல்கலைக்கழக தரவுகள் காட்டுகின்றன. இது ஹார்வார்டின் மாணவர் சேர்க்கையில் 27% ஆகும். வியாழக்கிழமையன்று, அரசின் கடுமையான நடவடிக்கை தொடர்பாக பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள வெளிநாட்டு மாணவர்கள் மத்தியில் செய்திகள் விரைவாகப் பரவிய நிலையில், ஆயிரக்கணக்கான மாணவர்களிடையே அச்சமும் விரக்தியும் ஏற்பட்டுள்ளது. தற்போது வெளிநாட்டு மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிட்டது. "தற்போது எங்களுக்கு பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டுள்ளது," என்று பட்டதாரி பட்டம் பெறும் ஆஸ்திரேலிய மாணவி சாரா டேவிஸ் பிபிசியிடம் தெரிவித்தார். பகடைக்காயாகும் மாணவர்கள் ஸ்வீடனைச் சேர்ந்த 22 வயது இளங்கலை பட்டதாரி லியோ கெர்டன், ஹார்வர்டில் சேர்க்கை கடிதத்தைப் பெற்ற நாளை தனது வாழ்க்கையின் சிறந்த நாள் என்று நினைவு கூர்ந்தார். தற்போது பட்டம் பெறுவதற்கு ஒரு வாரத்திற்கும் குறைவான காலமே உள்ள நிலையில், இப்படியொரு நிலைமை வரும் என்று அவர் நினைத்துப் பார்க்கவில்லை. "வெள்ளை மாளிகைக்கும் ஹார்வர்டுக்கும் இடையிலான சண்டையில் வெளிநாட்டு மாணவர்கள் பகடைக் காய்களாகப் பயன்படுத்தப்படுகிறார்கள்," என்று லியோ கெர்டன் பிபிசியிடம் கூறினார். "இது மனிதாபிமானமற்றது" என்கிறார் அவர். டிரம்ப் நிர்வாகம் நாடு முழுவதும் உள்ள டஜன் கணக்கான பல்கலைக்கழகங்கள் மீது விசாரணைகளைத் தொடங்கியது. நியூயார்க்கில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகம் போன்ற பல்கலைக்கழகங்கள் அமெரிக்க அரசின் அழுத்தத்துக்கு பணிந்து, டிரம்ப் நிர்வாகம் கூறிய மாற்றங்களை செய்ய ஒப்புக்கொண்டது. ஹார்வர்ட் பல்கலைக்கழகம் அமெரிக்க அரசின் உத்தரவுகளை எதிர்த்தது. நீண்ட கோரிக்கைகளின் பட்டியலை அனுப்பிய டிரம்ப் நிர்வாகத்தின் மீது வழக்குத் தொடரப்போவதாக ஏப்ரல் மாதத்திலேயே ஹார்வர்ட் பல்கலைக்கழகம் அறிவித்தது. பின்னர், இந்தப் பட்டியல் தவறுதலாக அனுப்பப்பட்டதாக வெள்ளை மாளிகை கூறியதும் குறிப்பிடத்தக்கது. "பல்கலைக்கழகம் அதன் சுதந்திரத்தையோ அல்லது அதன் அரசியலமைப்பு உரிமைகளையோ விட்டுக்கொடுக்காது" என்று ஹார்வர்ட் வழக்கறிஞர்கள் டிரம்ப் நிர்வாகத்திடம் தெரிவித்தனர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,வெளிநாட்டு மாணவர்கள் இல்லாமல், ஹார்வர்ட் இனி ஹார்வர்டாக இருக்காது பல்கலைக்கழகங்களுக்கான மானியங்கள் ரத்து பல்கலைக்கழக வளாகத்தில் யூத எதிர்ப்புக்கு எதிராக போராட உதவும் வகையில் மாணவர் சேர்க்கை, பணியாளர்கள் நியமனம் மற்றும் கற்பித்தல் நடைமுறைகளை மாற்றுமாறு ஹார்வர்ட் பல்கலைக்கழகத்துக்கு டிரம்ப் அரசு அறிவுறுத்தியிருந்தது. மேலும், பல்கலைக்கழகத்தின் வரி விலக்கு நிலையை ரத்து செய்வதாகவும், அரசாங்கம் வழங்கிவரும் பில்லியன் கணக்கான டாலர் மானியங்களை முடக்குவதாகவும் அரசு தெரிவித்திருந்தது. யூத எதிர்ப்புக் பிரச்னையை நிவர்த்தி செய்ய பல நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும், அரசாங்கத்தின் கோரிக்கைகள் பல்கலைக்கழகத்தின் "அறிவுசார் நிலைமைகளை" கட்டுப்படுத்தும் முயற்சி எனவும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஹார்வர்ட் பல்கலைக்கழகம் தெரிவித்திருந்தது. வியாழக்கிழமை டிரம்ப் நிர்வாகம் எழுதிய கடிதத்தின் தொடர்ச்சியாகவே அமெரிக்காவின் உள்நாட்டுப் பாதுகாப்புச் செயலாளர் கிறிஸ்டி நோம், எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். SEVP திட்டத்தின் கீழ் வெளிநாட்டு மாணவர்களை சேர்க்க ஹார்வர்ட் பல்கலைக்கழகத்திற்கு இருந்த தகுதியை உள்நாட்டுப் பாதுகாப்பு துறை ரத்து செய்ததாக அவர் அறிவித்தார். இதன் பொருள் வரவிருக்கும் 2025-2026 கல்வியாண்டில் F- அல்லது J போன்ற குடியுரிமை இல்லாத வகையிலான விசா வைத்திருக்கும் மாணவர்களை சேர்க்க முடியாது. தற்போது இந்த விசாக்களை வைத்திருப்பவர்கள், அமெரிக்காவில் இருப்பதற்கான சட்டப்பூர்வ அந்தஸ்தைப் பராமரிக்க வேண்டுமானால், பிற பல்கலைக்கழகங்களுக்கு மாற வேண்டும் என்று கிறிஸ்டி நோம் எழுதியுள்ளார். இந்த வகை மாணவர்களைச் சேர்க்கும் திறனை ஹார்வர்ட் மீண்டும் பெறுவதற்கு, கோரிக்கைகளின் பட்டியலை நிறைவேற்ற 72 மணிநேரம் இருப்பதாக அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சில நாட்களுக்கு முன்பு, டிரம்ப் ஹார்வர்டை 'தீவிர இடதுசாரி' என்று குற்றம் சாட்டியிருந்தார் டிரம்பின் விமர்சனம் சில நாட்களுக்கு முன்பு, டிரம்ப் ஹார்வர்டை 'தீவிர இடதுசாரி' என்று குற்றம் சாட்டியிருந்தார், மேலும் 'இந்த பல்கலைக்கழகம் இனி சிறப்பான கல்விக்கு ஏற்றதல்ல' என்றும் தெரிவித்திருந்தார். அமெரிக்க தேர்தல் பிரசாரத்தின் போது கூட, பல்கலைக்கழகங்களுக்கான நிதியைக் குறைப்பது பற்றி டிரம்ப் பேசியிருந்தார். ஹார்வர்ட், அரசுக்கு எதிராக தொடுத்திருக்கும் வழக்கில், அரசு நிதியுதவி நிறுத்தப்படுவது குழந்தை புற்றுநோய், அல்சைமர் மற்றும் பார்கின்சன் நோய் போன்ற முக்கியமான ஆராய்ச்சிகளைப் பாதிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cd9073e1j92o
  2. Published By: DIGITAL DESK 2 23 MAY, 2025 | 04:29 PM (எம்.ஆர். எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) வெளிநாடுகளில் இருந்து கடன் பெற்றுக்கொள்ளும் போது அதிலும் மோசடி செய்யும் கலாசாரம் தான் கடந்த காலங்களில் காணப்பட்டன. பெற்றுக்கொண்ட அரசமுறை கடன்களில் சுமார் 20ரில்லியன் ரூபா வரையான நிதி நேர்ந்ததென்ன என்பதற்கு முறையான ஆவணங்கள், குறிப்புகள் ஏதும் இல்லை. கணக்காய்வு திணைக்களத்தின் ஊடாக உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என்று நிதி திட்டமிடல் பிரதி அமைச்சர் ஹர்ஷன சூரியபெரும தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (23) நடைபெற்ற குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம் மற்றும் வெளிநாட்டுக் கடன்கள் (நீக்குதல்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, அரசாங்கம் என்ற அடிப்படையில் தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் கடன் பெற்றுக்கொள்ள முடியும்.அரசாங்கம் பிணையாகி அரச நிறுவனங்கள் சர்வதேச பிணைமுறியங்களில் இருந்து கடன் பெற்றுக்கொள்ளும் வசதிகளும் காணப்படுகின்றன.அத்துடன் நிறுவன கட்டமைப்பின் ஊடாக வெளிநாட்டு நிறுவனங்களில் கடன் பெற்றுக்கொள்ள முடியும். கடன் பெறுகையின் போது வெளிப்படைத்தன்மை மற்றும், முறையான கணக்காய்வு அத்தியாவசியமானது. இருதரப்பு மற்றும் பல்தரப்பு கடன்கள் பெற்றுக்கொள்ளப்படுகின்றன. கடன் பெறுவதை போன்று, கடன் முகாமைத்துவமும் அத்தியாவசியமானது. கடந்த காலங்களில் எவ்விதமாக வரையறைகளுமில்லாமல் வெளிநாட்டு அரசமுறை கடன்கள் பெற்றுக்கொள்ளப்பட்டன. பெற்றுக்கொள்ளப்படும் கடன்களினால் செயற்படுத்தப்படும் கருத்திட்டம் என்ன, அந்த கருத்திட்டத்தால் வினைத்திறனான பிரதிபலன்கள் கிடைக்கப்பெறுமா என்பது முறையாக ஆராயப்படவில்லை. பெற்றுக்கொள்ளப்படும் கடன்களையும் கொள்ளையடிக்கும் கலாச்சாரமே காணப்பட்டது. 2026 ஆம் ஆண்டு முதல் காலாண்டளவில் அரச நிதி முகாமைத்துவ காரியாலயம் ஸ்தாபிக்கப்பட்டு, நிதி விவகாரங்கள் குறித்து புதிய திட்டங்கள் செயற்படுத்தப்படும். மத்திய வங்கியின் ஒத்துழைப்பு பெற்றுக்கொள்ளப்படும். கடந்த காலங்களில் பெற்றுக்கொண்ட அரசமுறை கடன்களுக்கு நேர்ந்தது என்னவென்பது இன்று கணக்காய்வாளர் திணைக்களத்தால் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளன. பெற்றுக்கொண்டுள்ள வெளிநாட்டு அரசமுறை கடன்களில் சுமார் 20 ரில்லியன் ரூபாய் வரையிலான நிதிக்கு என்னவாயிற்று என்பதற்குரிய ஆவணங்கள் மற்றும் குறிப்புகள் ஏதும் கிடையாது.இவ்விடயம் குறித்து கணக்காய்வு திணைக்களம் ஊடாக விசேட நடவடிக்கைகள் எதிர்வரும் காலங்களில் எடுக்கப்படும். பெற்றுக்கொண்ட அரசமுறை வெளிநாட்டு கடன்கள் முறையாக முகாமைத்துவம் செய்யப்பட்டு கணக்காய்வுக்குட்டு, பொதுமக்களுக்கு வெளிப்படைத்தன்மையுடன் தரவுகள் பகிரங்கப்படுத்தப்பட்டிருந்ததால் இந்த நாடு நிதியியல் ரீதியில் வங்குரோத்து நிலையடைந்திருக்காது என்றார். https://www.virakesari.lk/article/215508
  3. பட மூலாதாரம், KEVIN CHURCH / BBC கட்டுரை தகவல் எழுதியவர், ரெபாக்கா மொரெல்லே & ஆலிசன் ஃப்ரான்சிஸ் பதவி, 6 மணி நேரங்களுக்கு முன்னர் கனடாவின் அல்பெர்டாவில் அமைந்துள்ள ஒரு பசுமையான காட்டின் சரிவில் அதிகளவில் டைனோசர்கள் புதைந்து போன இடம் ஒன்று இருக்கிறது. ஒரு நாள் நடந்த மோசமான நிகழ்வில், ஆயிரக்கணக்கான டைனோசர்கள் கொல்லப்பட்டு அங்கே புதைந்து போயின. தற்போது புதைப்படிவ பொருட்களை ஆய்வு செய்யும் ஆராய்ச்சியாளர்கள், ரிவர் ஆஃப் டெத், என்று அழைக்கப்படும் பைப்ஸ்டோன் க்ரீக்குக்கு ஆராய்ச்சி செய்ய வந்துள்ளனர். டைனோசர்கள் எவ்வாறு இறந்தன என்ற 7.2 கோடி ஆண்டுகால புதிருக்கு பதில் தேட அங்கே தற்போது முகாமிட்டுள்ளனர். கனமான சுத்தியலின் உதவியைக் கொண்டு, தொல்பொருட்கள் மீது படிந்திருக்கும் மண்ணைத் தட்டி ஆராய்ச்சி மேற்கொள்ளும் அவர்கள், இந்த டைனோசர்கள் எப்படி இறந்தன என்பதை ஆய்வு செய்து கொண்டிருக்கின்றனர். இந்த ஆராய்ச்சியை வழிநடத்தும் பேராசிரியர் எமிலி பாம்ஃபோர்த் இந்த படிமப் பொருளை 'தொன்மத் தங்கம்' (Palaeo Gold) என்று அழைக்கிறார். ஆனால் இதில் இருக்கும் சவால் என்னவென்றால், இந்த டைனோசர்களின் படிமங்களை ஆய்வு செய்ய அதன் மீது இருக்கும் கடினமான பாறைகளை உடைக்க வேண்டும். அவருடைய குழு கொஞ்சம் கொஞ்சமாக அங்கே இருக்கும் மண்ணை, அடுக்கடுக்காக அப்புறப்படுத்த, அந்த டைனோசர்களின் எலும்புகள் மேலே தெரிய ஆரம்பித்தன. பட மூலாதாரம்,KEVIN CHURCH / BBC படக்குறிப்பு,பைப்ஸ்டோன் சிற்றோடை அருகே கண்டுபிடிக்கப்பட்ட பேச்சிரினோசரின் இடுப்பெலும்பு ஆராய்ச்சியாளர்கள் மட்டுமின்றி, இந்த ஆய்வில் எமிலியின் நாயான ஆஸ்டரும் இணைந்துள்ளது. ஆஸ்டர் எங்கேனும் எலும்பு இருப்பதை கண்டுபிடித்தால் உடனே குரைக்க வேண்டும். அதற்கு அது தான் வேலை. அந்த நாயைப் பார்த்துக் கொண்டு பிபிசியிடம் பேசிய பேராசிரியர் எமிலி, "அங்கே ஒரு பெரிய எலும்பு உள்ளது. இடுப்பு எலும்பின் ஒரு பகுதி என்று நாங்கள் நினைக்கின்றோம்," என்று கூறினார். "இங்கே நீளமான, ஒல்லியான எலும்புகளையும் பார்க்கின்றோம். இவை மார்புக்கூட்டில் காணப்படும் எலும்புகள். இது கால் பாதத்தில் காணப்படும் எலும்பு. இந்த எலும்பு என்னவென்று எங்களுக்குத் தெரியவில்லை," என்று ஒவ்வொரு எலும்பாக சுட்டிக்காட்டி அதுகுறித்து விளக்கம் அளிக்கும் எமிலி, "இது தான் பைப்ஸ்டோன் சிற்றோடையின் பின்னே மறைந்திருக்கும் மர்மம்," என்று கூறுகிறார். கனடாவின் பைப்ஸ்டோனுக்கு சென்ற பிபிசி, அங்கே உள்ள வரலாற்றுக்கு முந்தைய புதைகாட்டின் அளவு மற்றும் அங்கே ஆராய்ச்சியாளர்கள் டைனோசரின் அழிவு குறித்து தெரிந்து கொண்ட ஒவ்வொரு தகவலையும் இணைக்கின்றனர் என்று நேரில் கண்டது. ஆயிரக்கணக்கான புதைப்படிமங்கள் அங்கிருந்து எடுக்கப்பட்டுள்ளன. அது இந்த பெரியளவிலான டைனோசர்களின் இறப்பு குறித்து புதிய புதிய தகவல்கள் கிடைத்து வருகின்றன. பட மூலாதாரம்,KEVIN CHURCH/BBC NEWS படக்குறிப்பு,பேராசிரியர் எமிலியும் அவருடைய நாய் அஸ்டரும் 2 டன் எடை கொண்ட ராட்சத விலங்கு இங்கே கண்டெடுக்கப்பட்டுள்ள எலும்புகள் அனைத்தும் பேச்சிரினோசரஸ் வகை டைனோசரை சார்ந்தது. பேராசிரியர் எமிலியின் அகழ்வாராய்ச்சி, பிபிசியின் 'வாக்கிங் வித் டைனோசரஸ்' என்ற தொடரில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. வரலாற்றுக்கு முந்தைய வாழ்க்கையை காட்சிப்படுத்த அறிவியலையும், காட்சி தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தி இந்த தொடர் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வகை டைனோசர்கள் கடைசி கிரிடேசியஸ் காலத்தில் வாழ்ந்துள்ளன. இவை ட்ரைசெராடாப்ஸ் (Triceratops) வகை டைனோசர் இனத்தோடு நெருங்கிய தொடர்பைக் கொண்டவை. ஐந்து மீட்டர் நீளமும், 2 டன்கள் எடையும் கொண்ட இந்த தனித்துவமான போனி ஃப்ரில்கள் மற்றும் மூன்று கொம்புகளைக் கொண்ட நான்கு கால் மிருகமாகும். போனி ஃப்ரில்கள் என்பது தலைக்குப் பின்னால் கழுத்துப் பகுதியில் எலும்புகளோடு மயில் தோகை போன்று இருக்கும் உடல் பகுதியாகும். மற்றொரு தனித்துவமான ஒரு அம்சம் என்பது அதன் மூக்குப் பகுதியில் அமைந்திருக்கும் கட்டி போன்ற அமைப்பாகும். இது 'பாஸ்' என்று அழைக்கப்படுகிறது. கடந்த ஆண்டு இலையுதிர் காலத்தில் இந்த அகழ்வாராய்ச்சிப் பணிகள் ஆரம்பமாகின. தற்போது ஆராய்ச்சியாளர்கள் பணியாற்றிவரும் சிறிய அளவிலான நிலப்பரப்பில் புதைப்படிமங்கள் மிகவும் நெருக்கமாக இருக்கின்றன. ஒவ்வொரு சதுர மீட்டரிலும் 300 எலும்புகள் உள்ளன என்று பேராசிரியர் எமிலி கணித்துள்ளார். ஒரு டென்னிஸ் மைதானம் அளவிலான பகுதி தற்போது வரை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், இந்த எலும்புகளின் படுகையானது கிட்டத்தட்ட ஒரு கிலோ மீட்டர் அளவுக்கு மலைப்பகுதியில் நீண்டுள்ளது. மிகவும் ஆச்சர்யப்படுத்தும் முக்கிய அம்சம் இதில் என்னவென்றால், இந்த எலும்புகளின் அடர்த்தி என்று எமிலி கூறுகிறார். "வட அமெரிக்க பிராந்தியத்தில் கண்டறியப்பட்ட மிகப்பெரிய எலும்புப்படுகை இது என்று நாங்கள் நினைக்கின்றோம். இதுவரை கண்டறியப்பட்ட டைனோசர்கள் வகைகளில் பாதிக்கும் மேலானவை, ஆங்காங்கே கிடைத்த ஒரே ஒரு டைனோசரின் உடலில் இருந்து பெறப்பட்ட மாதிரியைக் கொண்டு வகைப்படுத்தப்பட்டவை. ஆனால், இங்கே ஆயிரக்கணக்கான பேச்சிரினோசரஸ் இருக்கின்றன," என்றும் விவரிக்கிறார் அவர். பட மூலாதாரம்,KEVIN CHURCH/BBC NEWS படக்குறிப்பு,பைப்ஸ்டோன் ஓடையில் ஆராய்ச்சி மேற்கொண்டு வரும் ஆராய்ச்சியாளர்கள் குளிர்காலத்தில் தென் அமெரிக்காவுக்கு வலசை சென்ற இந்த டைனோசர்கள், கோடை காலத்தை கழிப்பதற்காக, பிரமாண்ட அணியாக நூற்றுக்கணக்கான மைல்கள் வலசை மேற்கொண்டு வடக்கு நோக்கி வந்திருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். தற்போது இருப்பதைக் காட்டிலும் கொஞ்சம் கூடுதலாக வெதுவெதுப்புடன் இருந்த இப்பகுதி பசுமைப் போர்த்தியதாக இருந்திருக்க வேண்டும். தாவர உண்ணிகளாக இந்த பெரிய டைனோசர்களுக்கு தேவையான உணவை வழங்கக்கூடிய அளவுக்கு அது பசுமையாக இருந்திருக்க வேண்டும். "இது ஒரே இனத்தைச் சேர்ந்த விலங்கின் ஒரே கூட்டம். இது மிகப்பெரிய மாதிரி அளவு. தொன்ம ஆராய்ச்சியில் இது போன்ற பதிவு இதற்கு முன்பு நடந்ததில்லை," என்று பேராசிரியர் எமிலி பாம்ஃபோர்த் தெரிவிக்கிறார். பட மூலாதாரம்,WALKING WITH DINOSAURS/BBC STUDIOS படக்குறிப்பு,கணினி மூலம் உருவாக்கப்பட்ட பேச்சிரினோசரஸின் தோற்றம் ஆச்சர்யங்களை வாரி வழங்கும் ஆராய்ச்சி அல்பெர்டாவின் வடமேற்கில் அமைந்திருக்கும் இந்த பகுதி பேச்சிரினோசரஸ்களின் வீடு மட்டும் அல்ல. இவற்றைக் காட்டிலும் மிகப்பெரிய அளவிலான டைனோசர்கள் இங்கே உலவிக் கொண்டிருந்தன. பேச்சிரினோசரஸ்களைப் பற்றி அறிந்து கொள்வது என்பது பழங்கால சுற்றுச்சூழல் எப்படி இருந்தது என்பதை அறிந்து கொள்ள உதவும் முக்கிய அம்சமாகும். இரண்டு மணி நேரத்துக்குப் பிறகு நாங்கள் டெட்ஃபால் மலைத்தொடரை அடைந்தோம். அங்கே செல்வது என்பது அடர்ந்த காட்டுக்குள் நடந்து, அலைந்து, ஆஸ்டர் இருந்தால் அதனையும் பாதுகாத்து, நதியைக் கடந்து, வழுக்கும் பாறைகளில் பாதுகாப்பாக நடப்பது என்று ஆயிரம் சவால்களை உள்ளடக்கியது. இங்கே எதையும் தோண்ட வேண்டாம். கரையை ஒட்டியே பெரிய அளவிலான எலும்புகளைக் காண இயலும். பாறைகளால் இழுத்துவரப்பட்டு, ஆற்று நீரால் கழுவப்பட்ட இந்த எலும்புகள் நாம் கண்டுப்பிடிப்பதற்காகக் காத்துக் கொண்டிருக்கின்றன. அங்கே சென்றதும் ஒரு முதுகெலும்பின் (Vertebra) ஒரு கண்ணியைக் கண்டறிந்தோம். மார்புக் கூட்டின் சில பகுதிகளும், பற்களும் ஆங்காங்கே சேற்றில் சிதறிக் கிடந்தன. பட மூலாதாரம்,KEVIN CHURCH/BBC NEWS படக்குறிப்பு,எட்மோண்டோசரஸ் உயிர்வாழ்ந்த பகுதியான டெட்ஃபால் மலைத்தொடரில் காணப்பட்ட டைனோசரின் பாத எலும்பு புதைப்படிம ஆராய்ச்சியாளர் ஜாக்‌சன் ஸ்வேடருக்கு ஆர்வத்தை அளிப்பது என்னவென்றால், பார்ப்தற்கு டைனோசரின் மண்டையோட்டைப் போல காட்சியளிக்கும் எலும்புகளின் குவியல். "எங்களுக்கு இங்கே கிடைத்த புதைப்படிமங்களில் பெரும்பாலானவை எட்மோண்டோசரஸ் (Edmontosaurus) வகையைச் சேர்ந்தது. தற்போது நாங்கள் ஆய்வுக்கு உட்படுத்தி வரும் பகுதியானது மண்டையோடு என்பது உறுதியானால், இந்த டைனோசரஸ் 10 மீட்டர் நீளம் கொண்ட தலையைக் கொண்டது என்று கூற இயலும்," என்று தெரிவிக்கிறார் ஜாக்சன். எட்மோண்டோசரஸ் என்பது மற்றொரு தாவர உண்ணி. பேச்சிரினோசரஸைப் போன்றே காடுகளில் வலம் வந்த வகை. இந்த புதிய ஆய்வு முடிவுகள், பூமியின் தொன்மையான நிலம் எப்படி இருந்திருக்கக் கூடும் என்பதை கற்பனை செய்து பார்க்க ஆராய்ச்சியாளர்களுக்கு உதவுகிறது. கிராண்டே ப்ரேரீயில் செயல்பட்டு வரும் பிலிப் ஜே க்யூரி டைனோசர் அருங்காட்சியகத்தில் ஸ்வேடர் 'கலக்‌ஷன்' மேலாளராகப் பணியாற்றி வருகிறார். அகழ்வாய்வு செய்யப்பட்டு பெறப்பட்ட இந்த இரண்டு டைனோசர்களின் மிகப்பெரிய எலும்புகளும் இங்கே தான் சுத்தம் செய்யப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்படுகிறது. தற்போது ஸ்வேடர், 1.5 மீட்டர் நீளம் கொண்ட மிகப்பெரிய பேச்சிரினோசரஸ் மண்டையோட்டை ஆய்வு செய்து வருகிறார். அந்த டைனோசருக்கு அவருக்கு, "பிக் சாம்" என்று பெயரிட்டுள்ளார் ஸ்வேடர். பட மூலாதாரம்,KEVIN CHURCH/BBC NEWS படக்குறிப்பு,பண்டைய உலகம் குறித்து அறிந்துகொள்ள ஜாக்சன் ஸ்வேடர் அருங்காட்சியகத்தில் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார் ஃப்ரிலின் எந்த பகுதியில் மூன்று கொம்புகளும் இடம்பெறும் என்பதை சுட்டிக்காட்டிய அவர், அதில் ஒன்று காணவில்லை என்பதை தெரிவித்தார். "அனைத்து மண்டையோடுகளிலும் முழுமையான கொம்புகள் அந்த இடத்தில் இருந்தன. ஆனால், இந்த ஒற்றைக்கொம்பு மட்டும் அங்கே இல்லை," என்றார் ஸ்வேடர். பல ஆண்டுகளாக களத்தில் பல்வேறு பணிகளை மேற்கொள்ளும் அருங்காட்சியகக் குழு இதுவரை 8 ஆயிரம் டைனோசர் எலும்புகளை சேகரித்துள்ளது. அதன் ஆய்வகம் முழுவதும் புதைப்படிமங்களால் நிறைந்துள்ளது. டைனோசரின் பல இனங்களில் இருந்து பெறப்பட்ட மாதிரிகள், டைனோசரின் உயிரியல் குறித்து அறிந்துகொள்ள ஆராய்ச்சியாளர்களுக்கு உதவுகிறது. மேலும் இந்த விலங்குகள் எப்படி வளருகின்றன, அவை எப்படி ஒரு குழுவாக இணைந்து செயல்படுகின்றன என்பதைப் பற்றியும் அறிந்துகொள்ள உதவுகிறது. ஒரு பெரிய கூட்டத்தில் விலங்குகள் தனித்து தெரிவதற்கு தேவையான வித்தியாசங்கள் குறித்தும் அவர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். பிக் சாம் விவகாரத்தில் இல்லாமல் இருக்கும் ஒற்றைக் கொம்பை ஒரு உதாரணமாகக் குறிப்பிடலாம். பட மூலாதாரம்,WALKING WITH DINOSAURS/BBC STUDIOS படக்குறிப்பு,இயற்கைப் பேரிடரின் காரணமாக இந்த விலங்குகள் கொல்லப்பட்டிருக்கலாம் அழிவுக்குக் காரணம் என்ன? அருங்காட்சியம் மற்றும் இரண்டு தளங்களில் நடத்தப்படும் இந்த ஆராய்ச்சிகள், முக்கியமான இந்த ஒரு கேள்விக்கான பதிலைப் பெற உதவுகின்றன: ஒரே நேரத்தில், பைப்ஸ்டோன் க்ரீகில், அளவுக்கு அதிகமான டைனோசர்கள் உயிரிழந்தது எப்படி? "வலசை சென்ற பெரிய குழு ஒன்று மோசமான பேரிடரை சந்தித்து அதன் மூலம் இறந்திருக்கக் கூடும் என்று நாங்கள் நம்புகின்றோம். முழுமையான குழு இல்லையென்றால் அதில் பாதி அந்த பேரிடரில் இறந்திருக்கலாம்," என்று பேராசிரியர் எமிலி கூறுகிறார். திடீரென ஏற்பட்ட வெள்ளத்தினாலோ, அல்லது மலையின் மேலே ஏற்பட்ட ஏதோ ஒரு நிகழ்வின் காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் விளைவாகவோ இது ஏற்பட்டிருக்கலாம். தடுத்து நிறுத்த இயலாத நீர்ப்பெருக்கு, அடித்துவரப்பட்ட மரங்கள், பாறைகள் இவை அனைத்தும் ஒன்றாக அந்த விலங்கினத்தின் மறைவுக்கு காரணமாக இருந்திருக்கலாம் என்பதை ஆதாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. அப்படி நிகழ்ந்திருந்தால் பேச்சிரினோசரஸ் உயிர் பிழைத்திருக்க வாய்ப்புகள் குறைவு என்று கூறுகிறார் பேராசிரியர் எமிலி. "இவை அனைத்தும் முதலில் கூட்டமாக வலசை வந்திருக்கின்றன. மேலும், அவை அதிக எடை கொண்டவை. அந்த இனத்தினால் நன்றாக நீச்சல் அடிக்க முடியாது. இது போன்ற காரணங்களால் அவை வேகமாக நகர முடியாமல் இருந்திருக்கலாம்," என்று கூறுகிறார் அவர். ஆய்வு நடக்கும் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட பாறைகளில், வேகமாக பாய்ந்து வரும் நீரில் சுழலும் வண்டல் மண் படிமங்களைக் காண இயலும். அழிவை அப்படியே உறைய வைத்தால் எப்படி இருக்குமோ அது போன்று கல்லில் அலை அலையாக அவை படிந்துள்ளன. பட மூலாதாரம்,KEVIN CHURCH/BBC NEWS படக்குறிப்பு,ஆய்வு செய்யப்படும் இடத்தில் இருந்து பெறப்பட்ட பாறையில் காணப்படும் அலையோட்டம் அந்த டைனோசர்களுக்கு மோசமாக இருந்த நாள் ஒன்று புதைபடிம ஆராய்ச்சியாளர்களின் கனவு ஆராய்ச்சிகளில் ஒன்றாக இருக்கிறது. "நாங்கள் இங்கே வரும்போதெல்லாம், இங்கே நாங்கள் எலும்புகளை கண்டுபிடிப்போம் என்று 100% உத்தரவாதத்தோடு வருவோம். ஒவ்வொரு ஆண்டும் நாங்கள் இந்த விலங்கினம் குறித்து புதிதாக அறிந்து கொண்டிருக்கிறோம்," என்று எமிலி கூறுகிறார். "நாங்கள் ஒவ்வொரு முறையும் புதிது புதிதாக தகவல்களை இங்கே கண்டறிகின்றோம் என்பதால் அடிக்கடி நாங்கள் இங்கே வருகிறோம்," என்று கூறுகிறார் அவர். பட மூலாதாரம், WALKING WITH DINOSAURS/BBC STUDIOS படக்குறிப்பு, கூட்டமாக வலசை சென்ற பேச்சிரினோசரஸின் குழு தங்களின் கருவிகளை எடுத்துக்கொண்டு மற்றொரு நாள் வரத் தயாராகும் போது, இன்னும் பார்ப்பதற்கு பல வேலைகள் இருக்கின்றன என்று அவர்களுக்குத் தெரியும். இங்கும் அங்கும் என்ன இருக்கிறது என்பதை அறிந்துகொள்ள இதுவரை மேற்பரப்பை மட்டுமே ஆய்வுக்குட்படுத்தியுள்ளனர். ஆனால், வரலாற்றுக்கு முந்தைய காலத்தின் ரகசியத்தை வெளிப்படுத்த பல முக்கிய அம்சங்கள் அங்கே காத்திருக்கின்றன. வாக்கிங் வித் டைனோசரஸ் (Walking With Dinosaurs) இந்த மாதம் 25-ஆம் தேதி அன்று ஞாயிறு பிபிசி ஒன் - இல் ஒளிபரப்பப்பட உள்ளது. பிபிசி ஐப்ளேயரில் அனைத்து எபிசோட்களையும் காண இயலும். - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c3e5v098knno
  4. Published By: DIGITAL DESK 2 23 MAY, 2025 | 12:39 PM ஜனாதிபதியின் அனுமதி மற்றும் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் ஒப்புதலின் பேரில், இலங்கை பொலிஸ் திணைக்களம் சிரேஷ்ட அதிகாரிகளுக்கு இடமாற்றங்களை மேற்கொண்டுள்ளது. இந்த மாற்றங்கள் உடனடியாக அமுலுக்கு வருவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, இடமாற்றம் செய்யப்பட்ட அதிகாரிகள் வருமாறு: சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எல்.எம்.எஸ். பண்டார, நலன்புரி பிரிவின் பணிப்பாளர் பதவியில் இருந்து குருநாகல் பிரிவின் பொறுப்பதிகாரியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஏ.ஜி.யூ.சி. ஹேரத், குருநாகல் பிரிவின் பொறுப்பதிகாரி பதவியில் இருந்து தலைமையக நிர்வாகப் பணிப்பாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எஸ்.பி.கே. கால்லகே, மொனராகலை பிரிவில் இருந்து நலன்புரி பிரிவின் பணிப்பாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஐ.சி.யூ.ஐ. கந்தேவத்த, கேகாலை பிரிவில் இருந்து தம்புத்தேகம பிரிவின் பொறுப்பதிகாரியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் அத்தியட்சகர் கே.டபிள்யூ.ஜி. துஷரசேன, பொலிஸ் தலைமையகத்தில் இருந்து மேல் மாகாண தெற்கு போக்குவரத்து பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். https://www.virakesari.lk/article/215483
  5. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், சிராஜ் பதவி, பிபிசி தமிழ் 23 மே 2025, 04:42 GMT உலகம் முழுவதும், வாய் சுகாதாரம் தொடர்பான நோய்கள் கிட்டத்தட்ட 350 கோடி மக்களைப் பாதிக்கின்றன என்று உலக சுகாதார அமைப்பு (WHO) கூறுகிறது. ஆனால், 'நான் தினமும் பல் துலக்குகிறேன், அது போதாதா வாய் சுகாதாரத்தைப் பேண, பற்களைப் பாதுகாக்க' என நீங்கள் கேட்டால், ஆம் போதாது. நம்மை அறியாமல் நாம் அன்றாடம் செய்யும் சில செயல்கள் பற்களை மிகவும் பாதிக்கின்றன. அதில், சில உங்களை ஆச்சரியப்படுத்தலாம், அதைக் குறித்து இந்தக் கட்டுரையில் பார்க்கலாம். 1. அதிக அழுத்தம் கொடுத்து பல் தேய்ப்பது பட மூலாதாரம், GETTY IMAGES சிலருக்கு காலை எழுந்தவுடன் 5 முதல் 10 நிமிடங்கள் வரை நேரம் எடுத்து, நன்கு அழுத்தி பல் தேய்ப்பது என்பது வழக்கமாகவே இருக்கும். நன்கு அழுத்தி தேய்த்தால் தான் பற்கள் சுத்தமாகும் என்ற நம்பிக்கையுடன், தேய்த்து முடித்துவிட்டு கண்ணாடியைப் பார்த்து சோதித்துக் கொள்வார்கள். ஆனால், உண்மையில் அவ்வாறு அழுத்தித் தேய்ப்பது பற்களுக்கு ஆபத்தாக தான் முடியும் என்கிறார், பல் அறுவை சிகிச்சை நிபுணர் தாரிணி. "அழுத்தி தேய்த்து பல் பிரஷ் செய்தால் அல்லது அதிக நேரம் பிரஷ் செய்தால், அனைத்து கிருமிகளும் அழிந்துவிடும் என்ற எண்ணம் தவறு. உண்மையில் எந்த முறையில் பிரஷ் செய்கிறீர்கள் என்பதே முக்கியம். மேலும் கீழும் அல்லது ஒரு பக்கமாக தேய்ப்பது பற்களை சேதப்படுத்தும். வட்ட இயக்க (Circular motion) முறையில், மெதுவாக பற்களை தேய்க்க வேண்டும்" என்கிறார் அவர். அதிக அழுத்தம் கொடுப்பதால், எனாமல் (Enamel) தேய்மானம் ஏற்பட்டு, ஈறுகளில் எரிச்சல் ஏற்படலாம் என்கிறார் தாரிணி. "இது தொடர்ந்தால், காலப்போக்கில் ஈறுகள் தேய்ந்து பற்களின் வேர்கள் வெளிப்படத் தொடங்கும். பல் சென்சிட்டிவிட்டி (Sensitivity) பிரச்னையும் ஏற்படும்" என்று அவர் எச்சரிக்கிறார். 'சாஃப்ட்' அல்லது 'அல்ட்ரா- சாஃப்ட்' பிரிஸ்டில் பிரஷ்களை பரிந்துரைக்கும் அவர், "2-3 நிமிடங்கள் பல் துலக்கினால் போதும். ஆனால் ஒரு நாளுக்கு இருமுறை என்பது அவசியம். பற்பசை அளவு கூட ஒரு பட்டாணி அளவுக்கு இருந்தால் போதும்" என்கிறார். 2. பற்களை கருவியாக பயன்படுத்துவது பட மூலாதாரம்,GETTY IMAGES பற்களை கொண்டு ஒரு பாட்டிலை திறப்பது, ஒரு கவரைப் பிரிக்க முடியவில்லை என்றால் உடனடியாக பல்லைக் கொண்டு கிழிப்பது, நகம் கடிப்பது, இதெல்லாம் காலப்போக்கில் பற்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுத்தும் என்கிறார், பல் அறுவை சிகிச்சை நிபுணர் மற்றும் இம்பிளான்டாலஜிஸ்ட், மருத்துவர் அபினவ். "உணவை மெல்வதற்கு தான் பற்கள். அவை கத்தரிக்கோலுக்கோ, பிளேடுக்கோ அல்லது பாட்டில் ஓபனருக்கோ மாற்று அல்ல என்பதை புரிந்துகொள்ள வேண்டும். பற்களை ஏதோ கருவிகளைப் போல பயன்படுத்துவது அவற்றில் விரிசலை ஏற்படுத்தலாம், சில நேரங்களில் பற்கள் உடையக்கூட செய்யலாம்." என்று எச்சரிக்கிறார் அபினவ். நகம் கடிப்பதன் ஆபத்தை விளக்கிய அபினவ், "பலரும் நகம் கடிப்பதை வழக்கமாக வைத்திருப்பார்கள். அது பற்களின் வடிவத்தையே மாற்றிவிடும். அதிக அழுத்தம் கொடுத்து நகம் கடிப்பது, தாடையை சேதப்படுத்தும்" என்கிறார். 3. அடிக்கடி காபி/தேநீர் மற்றும் குளிர்பானங்கள் குடிப்பது பட மூலாதாரம்,GETTY IMAGES பலர் சோடா, பழச்சாறுகள், காபி, தேநீர் அல்லது குளிர்பானங்களை அடிக்கடி பருகுகிறார்கள். அவற்றின் அதிக அமிலத்தன்மை பற்களை படிப்படியாக அரிக்கும் என்கிறார், பல் அறுவை சிகிச்சை நிபுணர் தாரிணி. பாட்டிலில் அடைக்கப்பட்ட குளிர்பானங்கள், காபி மற்றும் தேநீரில் இருக்கும் அதிகளவு சர்க்கரை, காஃபின் போன்றவை பற்களை சேதப்படுத்தும் எனக் கூறுகிறார் அவர். "அடிக்கடி சோடா நிறைந்த குளிர்பானங்கள், காபி/தேநீர் குடிப்பது உடலில் நீர் வற்றச் செய்யும். அதன் விளைவு, உமிழ்நீர் சுரப்பது குறையும். உமிழ்நீர் என்பது வாய் சுகாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது, கேவிட்டிகள் மற்றும் ஈறு பாதிப்பைத் தடுக்கிறது. அது குறைந்தால், பற்கள் பாதிப்பு மட்டுமல்லாது வயிறு சார்ந்த பிரச்னைகளும் ஏற்படும்" என்கிறார் தாரிணி. மேலும், "இத்தகைய பானங்களை குடித்தவுடன் வாயைக் கொப்பளிப்பது மிகவும் முக்கியம். தண்ணீரும் அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும்" என அறிவுறுத்துகிறார். படக்குறிப்பு, பானங்களை முடித்தவுடன் வாயைக் கொப்பளிப்பது மிகவும் முக்கியம் என்கிறார், பல் அறுவை சிகிச்சை நிபுணர் தாரிணி 4. அடிக்கடி நொறுக்குத் தீனிகளை சாப்பிடுவது "ஏதாவது கொறித்துக் கொண்டே இருப்பது என்பதன் அர்த்தம், பற்களில் எப்போதும் உணவுத் துகள்கள் இருக்கும் என்பதே. அது பாக்டீரியாக்களின் வளர்ச்சியை துரிதப்படுத்தும். மேலும் அவை பற்களில் துளைகள், விரிசல்களை ஏற்படுத்தும் (Cavities)" என்கிறார் பல் அறுவை சிகிச்சை நிபுணர் தாரிணி. இதற்கு தீர்வு, ஒரு நாளில் ஒருமுறை மட்டுமே, குறைவான அளவில் நொறுக்குத் தீனிகள் சாப்பிடுவது தான் என்றும் அவர் கூறுகிறார். "அதிலும் சர்க்கரை குறைவானவை என்றால் இன்னும் சிறந்தது. அதிக சர்க்கரை உடலின் பிற பாகங்களுக்கு மட்டுமல்ல, பல்லுக்கும் ஆபத்து தான். சாப்பிட்டு முடித்தவுடன் தண்ணீர் அல்லது மவுத்-வாஷ் பயன்படுத்தி வாயைக் கொப்பளிப்பது நல்லது" என்கிறார் தாரிணி. 5. பற்களைக் கடிப்பது படக்குறிப்பு,பற்களை ஆயுதங்களாக பயன்படுத்தக் கூடாது என்கிறார், பல் அறுவை சிகிச்சை நிபுணர் மற்றும் இம்பிளான்டாலஜிஸ்ட், மருத்துவர் அபினவ் கோபம் வந்தால் பற்களைக் கடிப்பது என்பது பொதுவான ஒரு விஷயமாக உள்ளது. ஆனால், அது பற்களை நிச்சயம் சேதப்படுத்தும் என்கிறார் மருத்துவர் அபினவ். பதற்றம், மன அழுத்தம் என மனரீதியான காரணங்களாலும் பற்களைக் கடிக்கும் பழக்கம் வரலாம் என்கிறார் அவர். "சிலர் தூக்கத்தில் கூட பற்களை அவ்வாறு கடிப்பார்கள். இது பற்களை பலவீனப்படுத்தும், அவற்றின் வடிவம் மாறும், பல் கூச்சம் ஏற்படும், தாடை வலியைக் கூட ஏற்படுத்தும். ஒரு கட்டத்தில் வாயை திறந்து, மூடுவது கூட வலியை ஏற்படுத்தும். பல் மருத்துவரிடம் ஆலோசித்து, 'டென்டல் நைட்கார்டு' (Dental nightguard) பயன்படுத்துவது தீர்வாக இருக்கும்" என்கிறார் அபினவ். 6. புகை பிடிப்பது/புகையிலை பயன்பாடு பட மூலாதாரம்,GETTY IMAGES "புகையிலை பயன்படுத்துபவர்கள் சந்திக்கும் முதல் சிக்கலே பற்களில் கறை படிவது. அதன் தொடர்ச்சியாக, வாய் துர்நாற்றம், ஈறுகள் பலவீனமடைவது மற்றும் வாய் புற்றுநோயின் அபாயம் அதிகரிக்கும்" என எச்சரிக்கிறார், பல் அறுவை சிகிச்சை நிபுணர் தாரிணி. "புகையிலை பயன்பாட்டின் காரணமாக பற்களை எடுக்கும் நிலைகூட வரலாம். ஆனால், மருத்துவ சிகிச்சை எடுத்த பிறகும் புகையிலை பயன்பாட்டை விடவில்லை என்றால், அது சிகிச்சையின் விளைவுகளை மட்டுப்படுத்தும்." என்கிறார். புகையிலை பயன்பாட்டை கைவிடுவது வாய் சுகாதாரம் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பெரிதும் மேம்படுத்தும் என அவர் வலியுறுத்துகிறார். 7. பல் மருத்துவரை கலந்தாலோசிக்காமல் இருப்பது பட மூலாதாரம்,GETTY IMAGES பல் வலி வந்தால் மட்டுமே பல் மருத்துவரிடம் செல்வேன் என்ற எண்ணம் தவறு என்கிறார், பல் அறுவை சிகிச்சை நிபுணர் தாரிணி. ஆறு மாதங்களுக்கு ஒருமுறை பல் மருத்துவரை கலந்தாலோசிப்பது அவசியம் எனக்கூறும் அவர், "கையில் எலும்பு முறிவு என்றால் கையை சரிசெய்யத் தானே நினைப்போம், ஆனால் பற்களை மட்டும் எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்திவிட்டு, கடைசியில் பிரச்னை என்றால் எளிதாக பிடுங்கிவிட்டு செயற்கைப் பல் மாட்டிக்கொள்ளலாம் என நினைக்கிறார்கள். ஒரு பல்லை எடுத்தால், மற்ற பற்களும் காலப்போக்கில் பாதிக்கப்படும் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்" என்கிறார். "பல் சிதைவு, ஈறு தொற்றுகள் மற்றும் வாய்வழி புற்றுநோய் கூட குறிப்பிடத்தக்க அறிகுறிகள் இல்லாமல் அமைதியாக வளரும்" என எச்சரிக்கும் தாரிணி, "வெறுமனே பல் தேய்ப்பது மட்டுமே போதாது. ஏனென்றால், பற்களின் ஆரோக்கியமே ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தின் அறிகுறி" என்கிறார். - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cvg71qv9l28o
  6. பட மூலாதாரம்,BBC/PUNEET KUMAR படக்குறிப்பு, எலி கோஹன் கட்டுரை தகவல் எழுதியவர், பரத் சர்மா பதவி, பிபிசி செய்தியாளர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் இஸ்ரேலின் புகழ்பெற்ற உளவாளி எலி கோஹன் மீண்டும் செய்திகளில் இடம்பிடித்துள்ளார். இஸ்ரேலிய அரசாங்கம், அதன் உளவுத்துறை அமைப்பான மொசாட், ஒரு நட்பு நாட்டின் உளவுத்துறை முகமையுடன் இணைந்து ஒரு ரகசிய மற்றும் சிக்கலான நடவடிக்கையை (Covert operation) மேற்கொண்டதாகக் கூறுகிறது. இந்த நடவடிக்கையின் மூலம், எலி கோஹன் தொடர்பான அதிகாரப்பூர்வ ஆவணங்களை சிரியாவிலிருந்து இஸ்ரேலுக்குக் கொண்டு வர முடிந்தது. இஸ்ரேலின் கூற்றுப்படி இந்த ரகசிய நடவடிக்கையில், எலி கோஹனின் புகைப்படங்கள் மற்றும் தனிப்பட்ட உடைமைகள் உள்பட சுமார் 2500 ஆவணங்கள் சிரியாவிலிருந்து இஸ்ரேலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த ஆவணங்கள் அனைத்தும் இதுவரை சிரியா பாதுகாப்புப் படையினரிடம் இருந்ததாகவும், அவர்கள் அவற்றைத் தனியாக வைத்திருந்ததாகவும் மொசாட் கூறுகிறது. மே 18, 1965 அன்று சிரியாவில் பொதுமக்கள் முன்னிலையில் எலி கோஹன் தூக்கிலிடப்பட்டார். கோஹனின் முழுப் பெயர் எலியாஹு பென் ஷால் கோஹன். அவர் இஸ்ரேலின் மிகவும் துணிச்சலான உளவாளி என்றும் அழைக்கப்படுகிறார். சிரியாவில் எதிரிகளிடையே நான்கு ஆண்டுகள் வாழ்ந்த எலி கோஹனால், அந்நாட்டின் அதிகாரத்தின் வட்டத்திற்குள் ஊடுருவி உயர் மட்டத்தை அடையவும் முடிந்தது. எலி கோஹன் தொடர்புடைய எந்தெந்த பொருட்கள் கிடைத்துள்ளன? பட மூலாதாரம்,X/PRIME MINISTER OF ISRAEL படக்குறிப்பு,எலி கோஹனின் உடைமைகளை, கோஹனின் மனைவி நதியா கோஹனுக்குக் காட்டுகிறார் இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு இஸ்ரேலிய பிரதமரின் அதிகாரப்பூர்வ எக்ஸ் கணக்கில் வெளியிடப்பட்டுள்ள புகைப்படங்கள் மற்றும் காணொளியில், எலி கோஹனின் உடைமைகளை, கோஹனின் மனைவி நதியா கோஹனுக்குக் காட்டுகிறார் பெஞ்சமின் நெதன்யாகு. இதில் எலி கோஹனின் கடைசி உயில் என குறிப்பிடப்படும் ஆவணம், மரண தண்டனைக்கு சற்று முன்பு அவரால் எழுதப்பட்டது. இந்த ரகசிய நடவடிக்கையின் மூலம் கோஹனின் விசாரணை கோப்புகளிலிருந்து ஆடியோ பதிவுகள் மற்றும் பிற பொருட்களும் மீட்கப்பட்டதாக மொசாட் கூறுகிறது. கோஹனுடன் தொடர்பில் இருந்தவர்கள் குறித்த கோப்புகளும் உள்ளன. இது தவிர, சிரியாவில் அவரது பணியின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் (இதற்கு முன்பு பார்க்கப்படாதவை) கிடைத்துள்ளன என்றும் கூறப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் கோஹன் தனது குடும்பத்தினருக்கு எழுதிய கடிதங்கள் மற்றும் அவர் கைது செய்யப்பட்ட பின்னர் அவரது இல்லத்தில் இருந்து மீட்கப்பட்ட பொருட்களும் அடங்கும். மொசாட்டின் கூற்றுப்படி, சிரியாவில் உள்ள கோஹனின் இல்லத்தில் இருந்து மீட்கப்பட்ட குறிப்பேடுகள் மற்றும் டைரிகளில், இஸ்ரேலிய உளவுத்துறை முகமையிடமிருந்து அவர் பெற்ற உளவுத்துறை பணி தொடர்பான வழிமுறைகளும் இருந்தன. இது தவிர, சிரியாவில் உள்ள கோஹனின் அடுக்குமாடி குடியிருப்பின் சாவிகள், அவரது பாஸ்போர்ட் மற்றும் அவர் பணியின் போது பயன்படுத்திய போலி அடையாள ஆவணங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த ஆவணங்களில் ஒன்று கோஹனின் சொந்த கையெழுத்தில் உள்ளது, அதை அவர் மரண தண்டனைக்கு சற்று முன்பு எழுதினார். எகிப்தில் பிறந்து, சிரியாவில் மரணித்தவர் பட மூலாதாரம்,ISRAELI GOVERNMENT PRESS OFFICE படக்குறிப்பு,சிரியாவில் எலி கோஹன் கோஹனின் மரண தண்டனைக்கான உத்தரவையும் மொசாட் கைப்பற்றியுள்ளது. அதில் டமாஸ்கஸில் உள்ள யூத சமூகத்தின் தலைவரான ரப்பி நிசிம் இண்டிபோவை சந்திக்க அவருக்கு அனுமதி வழங்கப்பட்டது குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த உளவு பணியின் போது கோஹன், அர்ஜென்டினா குடிமகன் கமில் என்ற அடையாளத்தில் வாழ்ந்தார். அவர் சிரிய அதிபருக்கு மிகவும் நெருக்கமானவராக மாறினார். ஒரு கட்டத்தில் சிரியாவின் துணை பாதுகாப்பு அமைச்சராக மாறுவதற்கான வாய்ப்பு கூட அவரை நெருங்கி வந்தது. 1967 அரபு-இஸ்ரேலியப் போரில் இஸ்ரேலின் வெற்றியில் கோஹன் சேகரித்த உளவுத் தகவல்கள் முக்கிய பங்கு வகித்ததாகக் கூறப்படுகிறது. எலி கோஹன் இஸ்ரேலிலோ, சிரியாவிலோ அல்லது அர்ஜென்டினாவிலோ பிறந்தவரல்ல. அவர் 1924ஆம் ஆண்டு எகிப்தின் அலெக்ஸாண்ட்ரியாவில், ஒரு சிரிய-யூத குடும்பத்தில் பிறந்தார். அவரது தந்தை 1914ஆம் ஆண்டு சிரியாவின் அலெப்போவிலிருந்து எகிப்தில் குடியேறினார். இஸ்ரேல் நாடு உருவானபோது, எகிப்திலிருந்து பல யூத குடும்பங்கள் வெளியேறத் தொடங்கின. 1949ஆம் ஆண்டில், கோஹனின் பெற்றோரும் மூன்று சகோதரர்களும் அதே முடிவை எடுத்து இஸ்ரேலில் குடியேறினர். ஆனால் எலக்ட்ரானிக்ஸ் படித்துக்கொண்டிருந்த கோஹன், எகிப்திலேயே தங்கி தனது படிப்பைத் தொடர முடிவு செய்தார். என்சைக்ளோபீடியா பிரிட்டானிக்காவின் கூற்றுப்படி, அரபு, ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு மொழிகளில் அவருக்கு இருந்த சிறந்த புலமை காரணமாக இஸ்ரேலிய உளவுத்துறை அவர் மீது ஆர்வம் காட்டியது. எலி கோஹன் அர்ஜென்டினாவை அடைந்தது எப்படி? பட மூலாதாரம்,ISRAELI GOVERNMENT PRESS OFFICE படக்குறிப்பு,எலி கோஹன் பிடிபடும் வரை இந்தக் கடிகாரத்தை அணிந்திருந்ததாகக் கூறப்படுகிறது. 1955ஆம் ஆண்டு, உளவுப் பயிற்சி பெற இஸ்ரேல் சென்ற அவர், அடுத்த ஆண்டு எகிப்து திரும்பினார். இருப்பினும், சூயஸ் நெருக்கடியைத் தொடர்ந்து எகிப்திலிருந்து பலர் வெளியேற்றப்பட்டனர், அதில் கோஹனும் ஒருவர். பிறகு 1957இல் அவர் இஸ்ரேலுக்கு குடிபெயர்ந்தார். இஸ்ரேல் வந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, ஈராக்கிய-யூதரும், எழுத்தாளர் சாம்மி மைக்கேலின் சகோதரியுமான நதியா மஜ்தாலை மணந்தார். 1960இல் இஸ்ரேலிய உளவுத்துறையில் சேருவதற்கு, முன்பு அவர் மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றி வந்தார். அடுத்தகட்ட பயிற்சியை முடித்த பிறகு, கோஹன் 1961இல் அர்ஜென்டினா தலைநகரான பியூனஸ் அயர்ஸை அடைந்தார். அங்கு அவர், சிரியா வம்சாவளியைச் சேர்ந்த ஒரு தொழிலதிபர் என்ற அடையாளத்தில் தனது உளவுப் பணியை தொடங்கினார். கமில் அமின் தாபெட் என்ற பெயருடன், கோஹன் அர்ஜென்டினாவில் உள்ள சிரியா சமூகத்தினரிடையே பல முக்கிய தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டார். வெகு சீக்கிரமாக சிரியா தூதரகத்தின் மூத்த அதிகாரிகளுடன் நட்பாக பழகி, அவர்களின் நம்பிக்கையைப் பெற்றார். அவர்களில் சிரியா ராணுவ உயரதிகாரி அமின் அல்-ஹஃபிஸும் ஒருவர். பின்னாளில் அவர் சிரியாவின் அதிபரானார். கோஹன் தனது 'புதிய நண்பர்களுக்கு' சிரியாவுக்கு விரைவில் 'திரும்ப' விரும்புவதாக ஒரு செய்தியை அனுப்பியிருந்தார். 1962 ஆம் ஆண்டு தலைநகர் டமாஸ்கஸில் குடியேற அவருக்கு வாய்ப்பு கிடைத்தபோது, அர்ஜென்டினாவில் அவருக்கு இருந்த தொடர்புகள் சிரியாவின் அதிகாரப் பாதைகளுக்கான அற்புதமான வாய்ப்பை அளித்தன. சிரியாவில் தன்னை நிலைநிறுத்திக் கொண்ட உடனேயே, சிரியா ராணுவம் பற்றிய உளவுத்துறை தகவல்களையும் திட்டங்களையும் கோஹன் இஸ்ரேலுக்கு அனுப்பத் தொடங்கினார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கோலன் குன்றுகள் தொடர்பாக இஸ்ரேலுக்கும் சிரியாவிற்கும் இடையே நீண்ட காலமாக பிரச்னை நிலவி வருகிறது. சிரியாவில் ஏற்பட்ட அதிகார மாற்றம் 1963ஆம் ஆண்டு சிரியாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டபோது, உளவுத்துறையில் கோஹனின் பணிகள் மிகவும் முக்கியமானதாக மாறியது. சிரியாவில் பாத் கட்சி ஆட்சிக்கு வந்தது, அதன் உறுப்பினர்களில் பலர் கோஹனின் அர்ஜென்டினா வாழ்க்கையின் போது அவருக்கு நண்பர்களாக இருந்தவர்கள். இந்த ஆட்சிக் கவிழ்ப்புக்கு அமின் அல்-ஹஃபிஸ் தலைமை தாங்கினார், அவர் அதிபரானார். ஹஃபிஸ், கோஹனை முழுமையாக நம்பினார். ஒரு கட்டத்தில் கோஹனை சிரியாவின் துணைப் பாதுகாப்பு அமைச்சராக்க அவர் முடிவு செய்ததாகக் கூறப்படுகிறது. கோஹனுக்கு ரகசிய ராணுவ விளக்கக் கூட்டங்களில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது மட்டுமல்லாமல், கோலன் குன்றுகள் பகுதியில் உள்ள சிரியா ராணுவத் தளங்களையும் பார்வையிடும் வாய்ப்பும் வழங்கப்பட்டது. அந்த சமயத்தில் கோலன் குன்றுகள் பகுதி தொடர்பாக சிரியாவிற்கும் இஸ்ரேலுக்கும் இடையே அதிக பதற்றம் நிலவியது. 1967ஆம் ஆண்டு மத்திய கிழக்குப் போரில் இஸ்ரேலிடம் சிரியா தோல்வியடைந்ததற்கு, கோலன் குன்றுகள் தொடர்பாக கோஹன் அனுப்பிய உளவுத் தகவல்களும் முக்கிய காரணம் கூறப்படுகிறது. இந்த தகவல்கள் காரணமாக, சிரியா வீரர்களின் இருப்பிடத்தைக் கண்டுபிடிப்பதில் இஸ்ரேலுக்கு நிறைய உதவி கிடைத்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கோலன் குன்றுகள் பகுதி (1967, கோப்புப் படம்) கோஹனின் அலட்சியம் அவரது உயிரைப் பறித்ததா? யூத டிஜிட்டல் நூலகத்தின் ஒரு கட்டுரையின்படி, கோஹனுக்கு உளவுத்துறையில் நிபுணத்துவம் இருந்தபோதிலும், அவர் சில விஷயங்களில் கவனக்குறைவாகவும் இருந்தார். இஸ்ரேலில் இருந்த மொசாட் அதிகாரிகள், வானொலி தகவல் பரிமாற்ற முறையில் கவனத்துடன் இருக்குமாறு கோஹனை பலமுறை எச்சரித்துள்ளனர். ஒரு நாளைக்கு இரண்டு முறைக்கு மேல் தகவல் பரிமாற்றங்களை செய்ய வேண்டாம் என்றும் அவருக்கு அறிவுறுத்தப்பட்டது. ஆனால் கோஹன் இந்த எச்சரிக்கைகளை மீண்டும் மீண்டும் புறக்கணித்தார், ஒருகட்டத்தில் இந்த கவனக்குறைவு அவரது வீழ்ச்சிக்கு வழிவகுத்தது. ஜனவரி 1965இல், சிரியா புலனாய்வு அதிகாரிகள் அவரது வானொலி சமிக்ஞைகளை இடைமறித்து, அவர் தகவல்கள் அனுப்புவதை கையும் களவுமாகப் பிடித்தனர். கோஹன் கைது செய்யப்பட்டு, விசாரிக்கப்பட்டு, பின்னர் ராணுவ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இறுதியில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. கோஹன் மே 18, 1965 அன்று டமாஸ்கஸில் ஒரு பொது இடத்தில் தூக்கிலிடப்பட்டார். அவரது கழுத்தில் 'சிரியாவில் உள்ள அரபு மக்களின் சார்பாக' என்று எழுதப்பட்ட ஒரு பதாகை தொங்க விடப்பட்டது. ஆரம்பத்தில் அவரது மரண தண்டனையைத் தடுக்க இஸ்ரேல் ஒரு சர்வதேச பிரசாரத்தைத் தொடங்கியது, ஆனால் சிரியா அதற்கு உடன்படவில்லை. கோஹனின் மரணத்திற்குப் பிறகு, அவரது உடலையும் உடமைகளையும் திருப்பித் தருமாறு இஸ்ரேல் பலமுறை கோரியது, ஆனால் சிரியா ஒவ்வொரு முறையும் மறுத்துவிட்டது. - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/ce3v79qk6yxo
  7. 'வயிற்றில் 15 மாத சிசு, கூடவே ஏராளமான பிளாஸ்டிக் கழிவுகள்' - கர்ப்பிணி யானை மரணத்துக்கு யார் காரணம்? கட்டுரை தகவல் எழுதியவர், சேவியர் செல்வகுமார் பதவி, பிபிசி தமிழ் 9 மணி நேரங்களுக்கு முன்னர் கோவையில் மருதமலை அடிவாரத்தில், உடல் நலக்குறைவால் கர்ப்பிணி யானை உயிரிழந்ததற்கு, பிளாஸ்டிக் கழிவுகளை உட்கொண்டதும் முக்கிய காரணமெனத் தெரியவந்துள்ளது. மருதமலை, வெள்ளியங்கிரி போன்ற வனப்பகுதிக்குள் அமைந்துள்ள ஆன்மிக சுற்றுலாத்தலங்களில், அளவு கடந்த பிளாஸ்டிக் பயன்பாடு, யானை உள்ளிட்ட காட்டுயிர்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறி வருகிறது. இதனால் உதகை, கொடைக்கானல் போன்ற மலைப்பகுதிகளில் உள்ள சுற்றுலாத் தலங்களில், பிளாஸ்டிக் மற்றும் பாலித்தீன் பைகளுக்கு தடை விதித்தது போல, வனப்பகுதிகளில் உள்ள ஆன்மிக மையங்களிலும் இவற்றுக்குத் தடை விதிக்க வேண்டுமென்ற கோரிக்கை வலுத்துள்ளது. இதற்காக தமிழ்நாடு அரசிடம் பரிந்துரைத்துள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தகவல் கூறுகின்றனர். கோவை நகருக்கு அருகேயுள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியின் ஒரு பகுதியாக மருதமலை உள்ளது. இந்த மலையில் அமைந்துள்ள சுப்பிரமணியர் சுவாமி திருக்கோவில், முருகனின் ஏழாம் படை வீடாக ஆன்மிகவாதிகளால் கருதப்படுகிறது. இந்த கோவில் கட்டப்பட்டுள்ள பகுதியும், அதைச் சுற்றியுள்ள மலைப்பகுதிகளும் கோவை வனக்கோட்டத்துக்குள் அமைந்துள்ளன. கர்ப்பிணி யானையின் உயிரிழப்புக்கு காரணம் என்ன? படக்குறிப்பு,வனத்துறையினர் வந்து, மயங்கிக் கிடந்த யானையை கிரேன் உதவியுடன் துாக்கிச் சென்று சிகிச்சை கொடுத்தனர். இந்த வனப்பகுதியில் யானை, சிறுத்தை, காட்டுப்பன்றி உள்ளிட்ட பல்வேறு காட்டுயிர்களும் இருக்கின்றன. ஆசிய யானைகளின் வாழ்விடமாகவும், வலசைப்பாதையாகவும் உள்ள இந்த மலைப்பகுதிக்கு அருகிலேயே பாரதியார் பல்கலைக்கழகமும் பல நுாறு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. கடந்த மே 17 ஆம் தேதியன்று, அந்தப் பகுதியில் ஒரு பெண் யானை மயங்கிய நிலையில் கிடந்தது. அருகில் ஒரு குட்டி யானையும் நின்றது. வனத்துறையினர் வந்து, மயங்கிக் கிடந்த யானையை கிரேன் உதவியுடன் துாக்கிச் சென்று சிகிச்சை கொடுத்தனர். வனத்துறையில் பணியாற்றும் கால்நடை மருத்துவர்கள் ஐந்து பேர் இணைந்து, சிகிச்சை மேற்கொண்டனர். இருப்பினும் யானை உயிரிழந்து விட்டது. அதை பிரேத பரிசோதனை செய்தபோது, அந்த யானையின் வயிற்றில் 15 மாதமுள்ள சிசு இருந்தது தெரியவந்தது. அத்துடன் அதன் வயிற்றில் ஏராளமான பிளாஸ்டிக், பாலித்தீன் மற்றும் பேப்பர் கழிவுகளும் இருந்ததும் கண்டறியப்பட்டது. பெண் யானை கர்ப்பமாக இருந்தது கூடத் தெரியாமல், யானைக்கு கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை அளித்ததாகவும், அதன் வயிற்றில் ஏறி மிதித்ததாகவும் ஊடகங்களில் பலவிதமான தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தத் தகவல்கள் அனைத்தையும் வனத்துறை அதிகாரிகளும், இதற்கு சிகிச்சையளித்த, பிரேத பரிசோதனை செய்த கால்நடை மருத்துவர்களும் மறுத்துள்ளனர். பிரேத பரிசோதனை செய்த வனத்துறை கால்நடை மருத்துவர் சுகுமார், ''அந்த யானைக்கு உடல்ரீதியாக பலவிதமான பாதிப்புகள் ஏற்பட்டு, பல்வேறு உறுப்புகளும் செயலிழந்திருந்தன. யானையின் குடலில் பெருமளவில் பிளாஸ்டிக் கழிவுகள் இருந்தன. அங்கேயுள்ள குப்பைக்கிடங்கிலிருந்த உணவுக் கழிவுகளை சாப்பிடும்போது, பிளாஸ்டிக் மற்றும் பாலித்தீன்களையும் சேர்த்துச் சாப்பிட்டுள்ளது. அதுவே அதன் உடல் நல பாதிப்புக்கு வழிவகுத்துள்ளது.'' என்று பிபிசி தமிழிடம் தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பிளாஸ்டிக் கழிவுகளால் ஆசிய யானைகள் அதிகம் பாதிக்கப்படுகின்றன (சித்தரிப்புப் படம்) ''அந்த யானை விழுந்து கிடந்த இடத்துக்கு அருகில் இருந்த சாணத்தில், பாக்கெட் ஊறுகாய் கவர்கள் 10க்கும் அதிகமாக இருந்தன. அதை மொத்தமாக யானை சாப்பிட்டுள்ளது. நான் இதற்கு முன்பு, பல யானைகளை பிரேத பரிசோதனை செய்தபோது, ஒன்றிரண்டு பிளாஸ்டிக் அல்லது பாலித்தீன் துண்டுகள் இருக்கும். ஆனால் இந்த யானைக்கு இருந்தது போல, இவ்வளவு அதிகமான பிளாஸ்டிக் கழிவை நான் இதற்கு முன்பு பார்த்ததேயில்லை.'' என்றும் கால்நடை மருத்துவர் சுகுமார் தெரிவித்தார். இறந்த யானை கர்ப்பமாக இருப்பதே தெரியாமல் சிகிச்சை அளித்ததாகக் கூறும் குற்றச்சாட்டை மறுத்த மற்றொரு கால்நடை மருத்துவர் கலைவாணன், ''பெண் காட்டுயிர் என்றாலே அது கர்ப்பமாக இருக்க வாய்ப்புள்ளதாகக் கருதியே சிகிச்சை தரப்படும். அதுமட்டுமின்றி, கர்ப்பிணி யானைக்கு ஒன்றாகவும், மற்ற யானைக்கு வேறு விதமாகவும் சிகிச்சை தர முடியாது. எல்லாவற்றுக்கும் ஒரே மாதிரியான சிகிச்சைதான்.'' என்றார். கர்ப்பமாக இருந்தது தெரியாமல் வயிற்றில் ஏறி மிதித்ததாகக் கூறும் குற்றச்சாட்டை மறுத்த அவர், ''யானைக்கு மாரடைப்பு ஏற்பட்டு உருக்குலைந்ததும், மனிதர்களுக்கு சிபிஆர் கொடுப்பதுபோல அதன் நெஞ்சுப்பகுதியில் மிதித்து இதயத்தில் அழுத்தி மீட்கும் (Chest Compression) முயற்சியை இப்படிச் சித்தரித்து விட்டார்கள். யானை இறப்புக்கு முக்கியக் காரணம், கெட்டுப்போன உணவுகளும், பிளாஸ்டிக் கழிவுகளும்தான்.'' என்றும் விரிவாக விளக்கினார். 'யானையின் சாணத்தில் 70 சதவிகிதம் பிளாஸ்டிக் கழிவு' படக்குறிப்பு,அப்பகுதியில் இருந்த யானைகளின் சாணங்கள் அனைத்திலும் 70 சதவிகிதம் பிளாஸ்டிக் கழிவுகள் இருந்ததாக கால்நடை மருத்துவர்கள் கூறுகின்றனர். இறந்த யானையின் மலக்குடல், சிறுகுடல், பெருங்குடல் அனைத்திலும் பிளாஸ்டிக், பாலித்தீன் மற்றும் அலுமினிய ஃபாயில் பேப்பர்கள் உள்ளிட்ட பலவித குப்பைகள் இருந்ததாகக் கூறும் கால்நடை மருத்துவர்கள், அந்த யானையின் சாணத்தில் மட்டுமின்றி, அந்தப் பகுதியில் இருந்த யானைகளின் சாணங்கள் அனைத்திலும் 70 சதவிகிதம் பிளாஸ்டிக் கழிவுகள் இருந்ததாகத் தெரிவிக்கின்றனர். ''மான், காட்டுமாடு போன்ற காட்டுயிர்களுக்கு வயிற்றில் நான்கு அறைகள் இருப்பதால், பிளாஸ்டிக் கழிவு சாப்பிட்டால் ஏதாவது ஓரிடத்தில் போய் தங்கி, வயிறு உப்பி இறக்க நேரிடும். ஆனால் யானை ஒற்றை வயிறுள்ள விலங்கு என்பதால், பிளாஸ்டிக் சாப்பிட்டாலும் வெளியில் வந்துவிடும். ஆனால் அதைச் சாப்பிடுவதால் ஏற்படும் பாதிப்பு, உயிருக்கே ஆபத்தாக முடிகிறது.'' என்றார் கால்நடை மருத்துவர் சுகுமார். பிளாஸ்டிக் கழிவுகளை தொடர்ந்து உட்கொண்டதால், அதன் வாய் மற்றும் தொண்டைப் பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டு, வயிற்றுக்குள் தொற்று உருவாகி, அதனால் உணவு உண்ண முடியாமலும் போயிருக்க வாய்ப்புள்ளதாக வனத்துறையின் கால்நடை மருத்துவர்கள் தெரிவித்தனர். பிளாஸ்டிக் கழிவு காரணமாக அதனால் இயல்பாக கழிவை வெளியேற்றவும் தடையிருந்திருக்கலாம் என்றும் அவர்கள் கூறினார்கள். இறந்து போன இந்த யானை உட்பட அதே பகுதியில் வாழும் பல்வேறு காட்டு யானைகளும் அதிகளவில் பிளாஸ்டிக் கழிவுகளை உட்கொண்டிருப்பது அவற்றின் சாணங்களை ஆராய்ந்ததில் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே இதே பகுதியில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த ஒரு காட்டுயானையின் வயிற்றிலிருந்து கிலோ கணக்கில் பிளாஸ்டிக் கழிவுகள் இருந்தது கண்டறியப்பட்டது. இதற்குக் காரணம், வனப்பகுதியை ஒட்டியுள்ள ஒரு காலியிடத்தில் சோமையம்பாளையம் ஊராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டப்படுவதுதான் என்ற குற்றச்சாட்டு உள்ளது. இதுகுறித்து பல்வேறு ஊடகங்களும், காட்டுயிர் ஆர்வலர்களும் ஏராளமான புகைப்படங்களையும், காணொளிகளையும் வெளியிட்டு, குப்பைக் கிடங்கை அகற்ற வலியுறுத்தியும் ஊராட்சி நிர்வாகம் அதைச் செய்யவில்லை. தற்போது இந்த யானை இறந்த பின்பு, கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் உத்தரவின்படி, அந்த குப்பைக் கிடங்கை அகற்றி அங்கே மண்ணைக் கொட்டும் வேலை நடக்கிறது. ஆனால் மருதமலை கோவிலிலும், அடிவாரத்திலும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு அபரிமிதமாகவுள்ளது. "அந்த இடத்தைச் சுற்றிலும், யானை உள்ளிட்ட காட்டுயிர்கள் போகாதவாறு நவீன வேலி அமைக்கவும், 'பேவர்ஸ் பிளாக்' தளம் அமைத்து, பயோ மைனிங் முறையில் குப்பைகளை அழிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. அங்கு குப்பைகள் இருப்பது தெரியாத வகையில் சுற்றிலும் மரங்கள் வளர்க்கப்படும்" என்று கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் தெரிவித்துள்ளார். ஆட்சியர் கூறிய கருத்தின்படி, குப்பைக் கிடங்கு அந்த இடத்திலிருந்து மாற்றப்படாது என்று தெரியவந்துள்ளது. ஆனால், இதை நிரந்தரமாக அங்கிருந்து இடம் மாற்ற வேண்டுமென்று சூழலியலாளர்கள் மற்றும் காட்டுயிர் ஆர்வலர்கள் பலரும் சமூக ஊடகங்கள் வாயிலாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். படக்குறிப்பு,வனப்பகுதியை ஒட்டியுள்ள காலியிடத்தில் கொட்டப்பட்ட குப்பைகள் குப்பைக்கிடங்கு இருந்த பகுதி மற்றும் மருதமலை அடிவாரப் பகுதிகளில் பிபிசி தமிழ் கள ஆய்வு செய்தபோது, மலைப்பகுதியிலுள்ள கடைகளில் சந்தனம், குங்குமம் போன்ற எதுவுமே பெரும்பாலும் பிளாஸ்டிக் பைகளில் விற்கப்படுவதில்லை என்று தெரிந்தது. ஆனால், அடிவாரத்திலுள்ள கடைகளில், இலந்த வடை, அப்பம் உள்ளிட்ட உணவுப் பண்டங்கள், பாரம்பரிய விளையாட்டுப் பொருட்கள் அனைத்துமே பிளாஸ்டிக் பைகளில்தான் விற்கப்படுகின்றன. உணவகங்கள் உள்ளிட்ட மற்ற கடைகளில் பிளாஸ்டிக், பாலித்தீன் கேரிபேக் பயன்பாடு மிக அதீதமாக இருந்தது. பக்தர்கள் தாங்கள் வாங்கி வரும் உணவுப் பொருட்கள், பிற பொருட்களை எடுத்துவிட்டு குப்பைகளை மலையுச்சியிலும், மலைக்கான படிக்கட்டுப் பாதையிலும் போட்டிருப்பதால் அந்த குப்பைகளும் ஏராளமாக இருந்தன. அதேபோல, மருதமலை பேருந்து நிலையத்திலும், வனப்பகுதியை ஒட்டியுள்ள காலியிடங்களிலும் மலை போல பிளாஸ்டிக் குப்பைகள் அகற்றப்படாமல் குவிந்து கிடப்பதையும், மாடுகள் மேய்ந்து கொண்டிருப்பதையும் பார்க்க முடிந்தது. பிபிசி தமிழிடம் பேசிய சோமையம்பாளையம் கிராம ஊராட்சி நிர்வாக அலுவலர் செந்தில்குமார், ''ஆட்சியர் உத்தரவின்படி, அந்த இடத்தில் உள்ள குப்பைகள் அகற்றப்பட்டு, அங்கு கற்களைப் பதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மருதமலைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை அதிகமாகவுள்ளது. அதனால் குப்பையும் உடனுக்குடன் குவிந்து விடுகிறது. துாய்மைப் பணியாளர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பதால் இவற்றை அவ்வப்போது அகற்ற முடிவதில்லை.'' என்று தெரிவித்தார். அறநிலையத்துறையின் விளக்கம் என்ன? ஆனால் மருதமலை உச்சியில் சுப்பிரமணியர் சுவாமி திருக்கோவில் அமைந்துள்ள பகுதிகளில், பிளாஸ்டிக் பயன்பாடு அதிகமாக இருக்கிறது என்ற குற்றச்சாட்டை அறநிலையத்துறையின் துணை ஆணையர் செந்தில்குமார் மறுத்தார். கடந்த 2 ஆண்டுகளாகவே, அறநிலையத்துறையின் கடைகளில் பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் நிறுத்திவிட்டதாகவும் அவர் தெரிவித்தார். பிபிசி தமிழிடம் பேசிய அறநிலையத்துறை துணை ஆணையர் செந்தில்குமார், ''மலையுச்சியில் உள்ள கோவில் வளாகத்தை துாய்மைப்படுத்த துாய்மைப் பணியாளர்கள் 20 பேர் உள்ளனர். அவர்கள் படிக்கட்டுப் பாதையிலும், கோவிலைச் சுற்றிலும் உள்ள குப்பைகளை அவ்வப்போது சேகரித்து பைகளில் கட்டி வைத்து விடுகின்றனர். கோவில் மட்டும் மாநகராட்சி கட்டுப்பாட்டில் இருப்பதால் தினமும் எடுத்துக் கொண்டு போய்விடுகின்றனர். கீழேயிருக்கும் குப்பைக்கும் கோவில் நிர்வாகத்துக்கும் தொடர்பில்லை.'' என்றார். மலையடிவாரத்தில் ரூ.110 கோடி மதிப்பில் ஆசியாவிலேயே மிக உயரமாக 184 அடி உயரத்துக்கு முருகன் சிலை அமைப்பதால், கடந்த பிப்ரவரியிலேயே அங்குள்ள கடைகளை காலி செய்யுமாறு கூறிவிட்டதாகவும் அவர் தகவல் தெரிவித்தார். அந்தக் கடைகள், சோமையம்பாளையம் ஊராட்சி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதால் அவற்றைக் காலி செய்ய வேண்டியது உள்ளாட்சி நிர்வாகத்தின் அதிகாரத்துக்கு உட்பட்டது என்றும், மருதமலை பேருந்து நிலையத்தில் குப்பைகள் குவியவும் கடைகளே காரணமென்றும் துணை ஆணையர் செந்தில் குமார் விளக்கினார். மருதமலை மட்டுமின்றி, இதே மேற்குத் தொடர்ச்சி மலையில் கோவை வனக்கோட்டத்தில் அமைந்துள்ள வெள்ளியங்கிரி மலையும், அடர்ந்த வனப்பகுதிக்கு நடுவேதான் அமைந்துள்ளது. அதன் உச்சியில் அமைந்துள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலுக்கு, வனத்துறை அனுமதிக்கும் பிப்ரவரி 1 முதல் மே இறுதிவரையிலும் பல லட்சம் பக்தர்கள் வருகின்றனர். அங்கே ஆண்டுதோறும் டன் கணக்கில் பிளாஸ்டிக் மற்றும் ஆடைக் கழிவுகள் சேருகின்றன. அவற்றை வனத்துறைதான் அகற்றிவருகிறது. சூழல் அமைப்புகள் இதற்குத் துணை நிற்கின்றன. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,யானையின் வயிற்றில் ஒரு அறைதான் இருப்பதால் பிளாஸ்டிக் கழிவுகள் வெளியேறி விடும் என்றாலும், அவை யானைகளுக்கு உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன (சித்தரிப்புப் படம்) பிளாஸ்டிக் மற்றும் கேரிபேக் பயன்பாட்டைக் குறைக்க வனத்துறை ஆண்டுதோறும் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் எந்த பயனுமில்லை. இதில் மற்ற காட்டுயிர்களை விட, யானைகள்தான் அதிகளவில் பாதிப்புக்குள்ளாவதும் உறுதியாகி வருகிறது. யானைகள் மட்டுமின்றி, முதுகெலும்பில்லாத விலங்குகள், முதுகெலும்புள்ளவை என 1500க்கும் மேற்பட்ட இனங்கள், பிளாஸ்டிக் கழிவுகளால் பாதிக்கப்படுவதாக ஆய்வறிக்கைகள் தெரிவித்துள்ளன. இதனால் காட்டுயிர்களுக்கு நரம்பியல் பாதிப்பு ஏற்பட்டு இனப்பெருக்கமே பாதிக்கப்படுவதாக ஒரு அறிக்கை கூறுகிறது. 'நேச்சர் கன்சர்வேஷன்' எனும் ஆய்விதழிழ் வெளியான அந்த ஆய்வறிக்கையில், ஆசிய யானைகளுக்கு பிளாஸ்டிக் கழிவுகளால் ஏற்படும் ஆபத்துகள் விரிவாக ஆராயப்பட்டுள்ளது. விலங்குகளுக்கு பிளாஸ்டிக் கழிவுகளால் ஹார்மோன் சமநிலையின்மை ஏற்பட்டு, அதனால் அவற்றின் இனப்பெருக்கம் பாதிக்கப்படுவதாக அதில் கூறப்பட்டுள்ளது. முறையற்ற கழிவு மேலாண்மையின் எதிர்மறை விளைவுகளில் ஒன்றாக இதைக் குறிப்பிடும் அந்த ஆய்வறிக்கையில், ஆய்வுக்கு எடுக்கப்பட்ட யானை சாண மாதிரிகளில் 85 சதவிகிதம் பிளாஸ்டிக் இருந்தது உறுதியாகியுள்ளது. இந்த சாணங்களில் 1 மி.மீ. முதல் 355 மி.மீ. வரையிலான பல்வேறு அளவிலான பிளாஸ்டிக் துகள்கள் இருந்ததாகவும் ஆராய்ச்சியை மேற்கொண்ட விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். மலையை ஒட்டியுள்ள குப்பைக் கிடங்குகளால் பிரச்னை படக்குறிப்பு,யானை இறந்த பின்பு, கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் உத்தரவின்படி, அந்த குப்பைக் கிடங்கை அகற்றி அங்கே மண்ணைக் கொட்டும் வேலை நடக்கிறது உண்மையில் தமிழகத்திலுள்ள ஆசிய யானைகளுக்கு பிளாஸ்டிக் கழிவுகளால் ஏற்படும் பாதிப்பும், ஆபத்தும் ஆண்டுக்கு ஆண்டு அதிகமாகி வருவதாகக் கூறுகிறார், பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த பொறியாளர் கோ. சுந்தர்ராஜன். உதகை, கொடைக்கானல் போன்ற மலைப்பகுதிகளில், பிளாஸ்டிக், பாலித்தீன் கேரிபேக் தடையை கடுமையாக அமல்படுத்துவதுபோல, மருதமலை, வெள்ளியங்கிரி உள்ளிட்ட ஆன்மிக சுற்றுலாத் தலங்களிலும் பிளாஸ்டிக், பாலித்தீன் போன்றவற்றுக்கு முற்றிலும் தடை விதித்து, அதைக் கடுமையாக அமல்படுத்த வேண்டுமென்பதையும் அவர் கோரிக்கையாக முன் வைக்கிறார். ''நீலகிரி, கொடைக்கானல் போன்ற மலைப்பகுதிகளில் நுழைவுவாயில்களில் வாகனங்களை நிறுத்தி, பிளாஸ்டிக் பொருட்களை சோதனையிடுவது சிறப்பாக அமல்படுத்தப்படுகிறது. முதுமலை, ஆனைமலை புலிகள் காப்பகங்களில் இவை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அவற்றை மருதமலை, வெள்ளியங்கிரி போன்ற மலைப்பகுதிகளிலும் அமல்படுத்த வலியுறுத்துவோம்.'' என்றார் சுந்தர்ராஜன். இந்த ஆன்மிகத் தலங்களுக்கான பாதையில் சோதனைச்சாவடி அமைத்து, அவற்றை வனத்துறையிடம் ஒப்படைத்து, பிளாஸ்டிக் பொருட்களைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவோம் என்று கூறிய சுந்தர்ராஜன், வனத்துறையினருக்கு வாகனங்களை சோதனையிடவும், அபராதம் விதிக்கவும் அதிகாரம் அளித்தாலே இதை பெருமளவில் கட்டுப்படுத்திவிட முடியும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். படக்குறிப்பு,பிளாஸ்டிக் கழிவுகளால் யானைகள் அதிகளவில் பாதிப்புக்குள்ளாகின்றன என ஆய்வுகள் கூறுகின்றன தமிழக அரசு கூறுவது என்ன? இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய தமிழக வனத்துறை செயலாளர் சுப்ரியா சாஹு, ''தமிழகத்தில் ஏற்கெனவே ஒரு முறை பயன்படுத்தும் 14 விதமான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்னையைப் பொறுத்தவரை, வனப்பகுதியை ஒட்டியுள்ள பகுதிகளில் குப்பைக் கிடங்கு அமைப்பதே காட்டுயிர்களுக்கு பெரும் பிரச்னையாகவுள்ளது. இதுபோன்று வனத்தை ஒட்டியுள்ள குப்பைக் கிடங்கு அனைத்தையும் இடம் மாற்ற வேண்டியது உள்ளாட்சித்துறையின் பொறுப்பு.'' என்றார். "இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சியரிடம் பேசியுள்ளேன். தமிழகம் முழுவதும் வனத்தை ஒட்டியுள்ள குப்பைக் கிடங்குகளை ஜிபிஎஸ் முறையில் ஆய்வு செய்து, அவற்றை அகற்றவும் அல்லது இடம் மாற்றவும் நடவடிக்கை எடுக்க அனைத்து மாவட்ட வன அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து உள்ளாட்சித்துறை செயலாளருக்கும் நான் கடிதம் எழுதியுள்ளேன். இனி இப்படி நடக்காது.'' என்றும் சுப்ரியா சாஹு தெரிவித்தார். - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cz0d98g951ko
  8. இலங்கை சிறைச்சாலையில் உரிமைகள் இல்லை - உணவுகள் என்னை நோயாளியாக்குகின்றன,- போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்ட பிரிட்டிஷ் பெண் Published By: RAJEEBAN 23 MAY, 2025 | 12:38 PM போதைப்பொருள் குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ள பிரிட்டிஸ் பெண் டெய்லிமெய்லிற்கு தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ள இலங்கை சிறைச்சாலைகள் திணைக்களம் மறுத்துள்ளதுடன், அந்த பெண்ணை சிறைச்சாலை விதிமுறைகளின் படி நடத்துவதாகவும் அவருக்கு விசேட சலுகைகள் எதனையும் வழங்கவில்லை என தெரிவித்துள்ளது. பிரிட்டனை சேர்ந்த சார்லட்டே மே லீகடந்த வாரம் கொழும்பு விமானநிலையத்தில் கைதுசெய்யப்பட்டார். குஷ் எனப்படும் போதைப்பொருளை கடத்தியமைக்காக அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கைதுசெய்யப்பட்டுள்ள பிரிட்டிஸ் பெண் தனக்கு போதைப்பொருள் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என தெரிவித்துள்ளார். என்னை திட்டமிட்டு இதில் மாட்டிவிட்டுள்ளனர், இலங்கைக்கு பயணிப்பதற்கு முன்னர் தாய்லாந்து தலைநகரில் உள்ள ஹோட்டலில் எனது பொதிகளை விட்டுவிட்டு வெளியே சென்றேன், என அவர் தெரிவித்துள்ளார். அவருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள நிலையில் அவர் குற்றவாளி என்பது உறுதியானால், 20 முதல் 25 வருட சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். தற்போது நீர்கொழும்பு சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள பிரிட்டனை சேர்ந்த பெண்ணிற்கு சிறைச்சாலை விதிமுறைகளிற்கு ஏற்ப அனைத்து வசதிகளும் வழங்கப்படுவதாக சிறைச்சாலை பேச்சாளர் காமினிதிசநாயக்க தெரிவித்துள்ளார். எனினும் பிரிட்டனின் டெய்லிமெய்லிக்கு கருத்து தெரிவித்துள்ள லீ இலங்கைக்கு புறப்பட்டவேளை எனது பயணப்பொதிகளில் போதைப்பொருள் இருப்பது எனக்கு தெரியாது என தெரிவித்துள்ளார். கைதுசெய்யப்பட்ட பின்னர் இலங்கையில் ஏழு நாட்கள் அவர் போதைப்பொருள் தடுப்பு பிரிவில் தடுத்துவைக்கப்பட்டிருந்தார். மூட்டை பூச்சிகள் உள்ள சோபாவில் என்னை உறங்கச்சொன்னார்கள், பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் 24 மணிநேரம் என்னை கண்காணித்துக் கொண்டிருந்தார்கள் என அவர் டெய்லிமெய்லிக்கு தெரிவித்துள்ளார். அதன் பிறகு ஞாயிற்றுக்கிழமை என்னை நீர்கொழும்பு நீதிமன்றத்திற்கு கொண்டுவந்தார்கள், 14 நாள் தடுப்புகாவலில் வைக்கப்பட்டுள்ளார். 22 மணிநேரம் என்னை சிறைக்கூண்டிற்குள் அடைத்துவைத்துள்ளனர், உணவு உண்பதற்கும் வெளியில் காலைநீட்டுவதற்கும் மாத்திரம் அனுமதிக்கின்றனர் என அவர் தெரிவித்துள்ளார். சிறைச்சாலை உணவுகள் என்னை நோயாளியாக்கின்றன, இதனால் நான் இரண்டு நாட்களாக உணவு உண்ணவில்லை, நான் என்னால் முடிந்தளவு சாதகமான மனோநிலையுடன் இருக்க முயல்கின்றேன் என்னால் அதனை மாத்திரம் செய்ய முடியும் என குறிப்பிட்டுள்ளார். ஆனால் இங்கு கடினமாக உள்ளது, இங்கு மனித உரிமை இல்லை, கட்டில்கள் இல்லை போர்வைகள் இல்லை, நீண்ட தாழ்வாரத்தில் ஏனைய பெண்களுடன் சேர்ந்து உறங்கவேண்டியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார். மின்விசிறி உள்ளது அது இயங்கவில்லை, தொலைக்காட்சி உள்ளது அதுவும் இயங்கும் நிலையில் இல்லை, என்னிடம் ஒரு ஜோடி ஆடைகள்தான் உள்ளன மாற்றுடை இல்லை, எனது உடல்நல பாதிப்பிற்கு மருந்து எடுக்க அனுமதிக்கின்றார்கள் இல்லை என அவர் தெரிவித்துள்ளார். அவர்கள் தூக்க மாத்திரைகளை மாத்திரம் தருகின்றார்கள், ஷவரில் தண்ணீர் வராது ஒரு வாளியை தந்து குளிக்க சொல்கின்றார்கள், ஒரு நீண்ட தாழ்வாரத்தில் ஏனைய பெண்களுடன் விட்டுவிடுகின்றனர். அவ்வளவுதான் என அவர் தெரிவித்துள்ளார். சூரியனை பார்ப்பதற்கு இரண்டு மூன்று மணிநேரம்தான் அனுமதிப்பார்கள், உணவு உறைப்பாக உள்ளதால் நான் உண்ணவில்லை, நான் எனது சட்டத்தரணிகளிடம் எனக்கு வேறு உணவு தேவை என தெரிவித்துள்ளேன், அவர்கள் அதற்கு தீர்வை காண்பதாக தெரிவித்தார்கள். ஆனால் இன்னமும் தீர்வை காணவில்லை என லீ தெரிவித்துள்ளார். அதிஸ்டவசமாக சில பெண்கள் சில பெண்கள் ஆங்கிலம் கதைப்பார்கள், அவர்கள் சில பிஸ்கட்களை தந்தார்கள் என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/215487
  9. Published By: RAJEEBAN 23 MAY, 2025 | 11:02 AM டொனால்ட் டிரம்பின் ஆதரவு இல்லாமலே இஸ்ரேல் ஈரானின் அணுசக்தி கட்டமைப்புகள் மீது தாக்குதலை மேற்கொள்வதற்கு இஸ்ரேல் தயாராகின்றது என சிஎன்என் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் ஈரானின் அணுசக்தி கட்டமைப்புகள் மீது தாக்குதலை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் கடந்த சில மாதங்களில் பல மடங்காக அதிகரித்துள்ளன என அமெரிக்காவின் புலனாய்வு அமைப்புகள் தெரிவித்துள்ளன. ஈரானின் அணுசக்தி திட்டம் தொடர்பாக அமெரிக்கா அந்த நாட்டுடன் மேற்கொள்ளவுள்ள பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தால்,இஸ்ரேல் அதன் பின்னர் தாக்குதலை மேற்கொள்ளக்கூடும் என புலனாய்வு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஈரானின் அணுசக்தி கட்டமைப்பின் மீது தாக்குதலை மேற்கொள்ளவேண்டும் என இஸ்ரேலின் கடும்போக்குவாதிகள் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகுவிற்கு அழுத்தம் கொடுத்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது. கடந்த ஒக்டோபரில் ஈரான் இஸ்ரேலை இலக்குவைத்து ஏவுகணை தாக்குதலை மேற்கொண்ட பின்னர் இந்த அழுத்தம் அதிகரித்துள்ளது. இஸ்ரேலின் தொடர்பாடல்களை இடைமறித்து கேட்டதன் மூலமும், இராணுவத்தினரின் நடவடிக்கைகளை அவதானித்ததன் மூலம் இஸ்ரேல் எந்த நேரத்திலும் ஈரானின் அணுசக்தி கட்டமைப்புகள் மீது தாக்குதலை நடத்தலாம் என்பது தெரியவந்துள்ளதாக அமெரிக்க புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர். இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்டால் அதன் காரணமாக மத்திய கிழக்கில் பரந்துபட்ட மோதல் வெடிக்கலாம். அமெரிக்கா இதனை தடுப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அணுசக்தி உடன்பாட்டிற்கு வராவிட்டால் ஈரானிற்கு எதிராக இராணுவநடவடிக்கை எடுக்கப்படலாம் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார். கடந்த மாதம் முதல் இரு நாடுகளும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளன. மார்ச் மாதம் டிரம்ப் ஈரானிற்கு 60 நாள் காலக்கெடுவை விதித்தார் அந்த காலக்கெடு முடிவடைந்துள்ளது. பல மாதங்களாக யுரேனியத்தை செறிவூட்டுவதில் ஈடுபட்டுள்ள ஈரான், தற்போது சிறிய அணுகுண்டை உருவாக்கும் திறனுடன் உள்ளதாக இஸ்ரேல் அச்சம் கொண்டுள்ளது. https://www.virakesari.lk/article/215477
  10. Published By: VISHNU 23 MAY, 2025 | 03:14 AM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) யாழ்ப்பாணத்தில் உறுதிப்பத்திரங்கள் இல்லாத காணிகள் இருப்பதை போன்று ஒரு வீட்டுக்கு இரண்டு உறுதிப்பத்திரங்களை கொண்ட காணிகளும் உள்ளன. ஒருசில சட்டத்தரணிகள் நுட்பமான முறையில் அவ்வாறாக உறுதிப்பத்திரங்களை தயாரித்துள்ளனர் என்று தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே. இளங்குமாரன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (22) நடைபெற்ற ஏற்றுமதி மற்றும் இறக்குமதி (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, யாழ்ப்பாணத்தில் அரசாங்கம் அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுகின்றது. இந்த மாவட்டமாவது 30 வருட யுத்தத்தை எதிர்கொண்டது. தென்பகுதியை விடவும் 30 வருடங்கள் பின்னாலேயே வடக்கு மாகாணம் இருக்கின்றது. இதனால் அந்த மாகாணத்தின் அபிவிருத்திக்காக அரசாங்கம் அதிகளவான நிதியை ஒதுக்கியுள்ளது. கடந்த காலங்களில் ஆட்சிபுரிந்தவர்கள் எவரும் வடக்கின் அபிவிருத்திக்கான இலக்குடன் செல்லவில்லை. இனவாதம் கதைத்துக்கொண்டே பயணித்தனர். ஆனால் இப்போது அரசாங்கம் அனைத்து இனங்களையும் உள்ளடக்கியதாக நாட்டின் அபிவிருத்தியை நோக்கி கொண்டு செல்கின்றது. இதேவேளை தமிழ் அரசியல்வாதிகள் மீண்டும் இனவாதத்தை தூண்டும் வகையில் செயற்படுகின்றனர். உள்ளூராட்சித் தேர்தலில் அதனை காணக்கூடியதாக இருந்தது. தேசிய மக்கள் சக்தி தொடர்பில் எதிர்க்கட்சிகள் போலி பிரசாரங்களை செய்தனர். ஆனால் நாங்கள் மக்கள் மத்தியில் பொய் பிரசாரங்களை செய்யவில்லை. கொள்கை ரீதியில் மக்களை தெளிவுப்படுத்தியுள்ளோம். எவ்வாறாயினும் போலி பிரசாரங்களை மக்கள் நம்பவில்லை. வடக்கில் இரண்டாவது இடத்தில் வைத்துள்ளனர். தேசிய மக்கள் சக்தி காணி சுவீகரிப்பில் ஈடுபட போவதாக கூறினர். ஆனால் மக்கள் நலன் சார்ந்ததாகவே அரசாங்கம் செயற்படுகின்றது. யாழ்ப்பாணத்தில் காணிப் பிரச்சினைகளால் மக்கள் பல இன்னல்களுக்கு உள்ளாகின்றனர். அவர்களுக்கு உறுதிப்பத்திரம் இல்லை. பலர் உறுதிகளை காணாமலாக்கியுள்ளனர். அதேபோன்று ஒரு வீட்டுக்கு இரண்டு உறுதிப்பத்திரங்களும் உள்ளன. சட்டதரணிகள் சிலர் நுட்பமான முறையில் இரண்டு உறுதிப்பத்திரங்களை முடித்து நீதிமன்றத்தில் வழக்குகள் நடக்கின்றன. அதேநேரம் யுத்த காலத்தில் சுவீகரிக்கப்பட்ட இடங்களைகூட அரசாங்கத்தின் உதவியுடன் இடங்களை பெற்றுள்ளனர். குறிப்பாக சிறீதர் தியேட்டர் உள்ளது. அவர் அமைச்சராக இருந்தவர். அதனை சுவீகரித்துக்கொண்டு இன்று வரையில் விடவில்லை. ஆனால் எதிர்காலத்தில் நாங்கள் மக்கள் காணிகளை மக்களிடமே ஒப்படைப்போம். இன்று அரச காணி எது தனியார் காணி எது என்று கண்டுபிடிக்க முடியாதுள்ளது. இதனை அடையாளப்படுத்தும் போது யாருடைய வீட்டையும் குடிமனைகளையும் சுவீகரிக்கப் போவதில்லை. அவ்வாறு செயற்பட்டால் மீண்டும் இந்த நாட்டில் இன நல்லிணக்கம் ஏற்படாது. தங்களுடைய காணி அடையாளங்களுக்கான அத்தாட்சிப்பத்திரங்களை காட்டினால் அவர்களுக்கான உறுதிப்பத்திரங்களை வழங்கவே நடவடிக்கை எடுப்போம் என்றார். https://www.virakesari.lk/article/215463
  11. Published By: VISHNU 23 MAY, 2025 | 03:06 AM (எம்.வை.எம்.சியாம்) ஜனாதிபதி நிதியத்தை முறைகேடாகப் பயன்படுத்தியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் தயாசிறி ஜயசேகர உள்ளிட்ட 12 பேருடைய வங்கிக் கணக்குகளை சோதனையிடுவதற்கு கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியது. குற்றப்புலனாய்வுத் திணைக்களம் முன்வைத்த கோரிக்கை கருத்திற்கொண்ட கொழும்பு கோட்டை நீதிவான் நிலுபுலி லங்காபுர நேற்று இந்த உத்தரவை பிறப்பித்தார். https://www.virakesari.lk/article/215461
  12. குஜராத்தை வீழ்த்திய லக்னெள: பரபரப்பான பிளே ஆஃப் சுற்றில் முதல் 2 இடங்கள் யாருக்கு? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, குஜராத் டைட்டன்ஸ் அணியினரை வீழ்த்திய லக்னௌ சூப்பர் ஜயண்ட்ஸ் அணியினர். கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் 2025ம் ஆண்டு ஐபிஎல் டி20 சீசன் கடைசி நேரத்தில் பரபரப்படைந்துள்ளது, ப்ளே ஆஃப் சுற்றுக்கு 4 அணிகள் தகுதி பெற்ற நிலையில், 4 இடங்களில் எந்தெந்த அணி இடம்பெறும் என்பது கணிக்க முடியாததாகவே அமைந்திருக்கிறது. இதனால் குவாலிஃபயர், குவாலிஃபயர்-2 சுற்று எந்தெந்த அணிகளுக்கு நடக்கும் என்பது சுவாரஸ்யத்தை அதிகப்படுத்தியிருக்கிறது. ஆமதாபாத்தில் நேற்று (மே 22) நடந்த ஆட்டத்தில் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் குஜராத் டைட்டன்ஸ் அணியை 33 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது லக்னெள அணி. இந்த வெற்றியால் லக்னெள அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் வரமுடியாது என்றாலும், தன்னால் இயன்ற சேதாரத்தை பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற அணிகளுக்கு ஏற்படுத்த முடியும். முதலில் பேட் செய்த லக்னெள அணி 2 விக்கெட் இழப்புக்கு 235 ரன்கள் சேர்த்தது. 236 ரன்கள் இலக்கை துரத்திய குஜராத் அணி, 9 விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் மட்டுமே சேர்த்து 33 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த தோல்வியால் குஜராத் அணி 18 புள்ளிகளுடன், 0.602 நிகர ரன்ரேட்டில் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. லக்னெள அணி 12 புள்ளிகளுடன் மைனஸ் 0.337 ரன்ரேட்டில் 6-வது இடத்தில் இருக்கிறது. பிளே ஆஃப் சுற்றில் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணி முதல் தகுதிச்சுற்றில் விளையாடும் அதில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்குத் தகுதி பெறும். 3வது மற்றும் 4வது இடத்தில் உள்ள அணிகளுக்கு இடையே நடக்கும் போட்டியில் வெல்லும் அணி, முதல் தகுதிச் சுற்றில் தோற்ற அணியுடன் மோத வேண்டும். இதில் வெல்லும் அணி இறுதிப் போட்டிக்குத் தகுதிபெறும். ஆனால், இதுவரை பிளே ஆஃப் சுற்றில் முதல் 4 இடங்களைப் பிடிக்கப் போகும் அணிகள் யார் என்பதை கணிக்க முடியவில்லை. குஜராத், மும்பைக்கு தலா ஒரு ஆட்டம் மட்டுமே எஞ்சியுள்ளது, பஞ்சாப், ஆர்சிபிக்கு தலா 2 ஆட்டங்கள் மீதமுள்ளன. இதில் அணிகள் பெறும் வெற்றி, இடங்களை முடிவு செய்யும். குஜராத் அணி குஜராத் அணியைப் பொருத்தவரை 18 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது. கடைசி லீக் ஆட்டத்தில் சிஎஸ்கே அணியுடன் மோதுகிறது. முதல் இரு இடங்களைப் பிடிக்க குஜராத் அணிக்கு வாய்ப்பிருக்கிறது, அதற்கு, கடைசி லீக் ஆட்டத்தில் சிஎஸ்கே அணியை வெல்ல வேண்டும். ஒருவேளை ஆர்சிபி, பஞ்சாப் அணிகள் தங்களின் கடைசி 2 லீக் ஆட்டங்களிலும் வென்றால், இரு அணிகளும் 21 புள்ளிகள் பெற்றுவிடும். அந்த நிலையில், குஜராத் அணி 20 புள்ளிகள் வைத்திருந்தாலும் முதல் இரு இடங்களைப் பெற முடியாது. ஒருவேளை சிஎஸ்கேவுக்கு எதிரான ஆட்டத்தில் குஜராத் அணி தோற்றால்கூட பிளே ஆஃப் சுற்றில் முதல் இரு இடங்களைப் பெற முடியும். அதற்கு ஆர்சிபி கடைசி 2 லீக் ஆட்டங்களிலும் தோற்க வேண்டும், பஞ்சாப் அணி மும்பையை கண்டிப்பாக வென்று மற்றொன்றில் தோற்க வேண்டும். அல்லது ஆர்சிபி மற்றும் பஞ்சாப் அணிகள் கடைசி இரு லீக் ஆட்டங்களிலும் தோற்க வேண்டும். இது நடந்தால் குஜராத் முதல் இரு இடங்களில் வர முடியும். குஜராத் அணி முதல் இரு இடங்களில் வரவேண்டுமானால், ஆர்சிபி, பஞ்சாப் அணிகள் தங்களின் கடைசி இரு லீக் ஆட்டங்களி்ல் வெல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஷுப்மன் கில் ஆர்சிபி, பஞ்சாப் அணிகள் ஆர்சிபி, பஞ்சாப் அணிகள் தலா 17 புள்ளிகளுடன் உள்ளன. இதில் ஆர்சிபி 0.482 ரன்ரேட்டிலும், பஞ்சாப் 0.389 ரன்ரேட்டிலும் உள்ளன. ஆர்சிபி அணி கடைசி லீக் ஆட்டங்களில் சன்ரைசர்ஸ், லக்னெள அணிகளைச் சந்திக்கிறது. பஞ்சாப் அணி, மும்பை, டெல்லி அணிகளுடன் மோதுகிறது. ஒருவேளை குஜராத் அணி கடைசி லீக்கில் சிஎஸ்கே அணியை வென்றால் 20 புள்ளிகளுடன் முடிக்கும். அதேசமயம், ஆர்சிபி, பஞ்சாப் அணிகள் தங்களின் கடைசி 2 லீக் ஆட்டங்களிலும் வென்றால், 21 புள்ளிகளுடன் டாப்-2 இடங்களில் வரலாம். ஆர்சிபி அணி கடைசி 2 லீக் போட்டிகளில் தோற்றால் டாப்-2 இடங்களில் வரமுடியாது. ஒருவேளை ஒரு ஆட்டத்தில் ஆர்சிபி வென்றால் 19 புள்ளிகள் பெறும். பஞ்சாப் அணி தனக்கிருக்கும் 2 ஆட்டங்களில் தோற்றால், 17 புள்ளிகளுடன் இருக்கும், மும்பை அணி கடைசி லீக்கில் வென்றால் 18 புள்ளிகளுடன் முடித்து வலுவான ரன்ரேட்டில் பஞ்சாப் அணியின் 17 புள்ளிகளை விட சிறப்பாக இருந்து 3வது இடத்தைப் பிடிக்கும். ஒருவேளை பஞ்சாப் அணி கடைசி இரு லீக் ஆட்டங்களில் ஒன்றில் வென்று, மற்றொன்றின்றில் தோற்றால் 19 புள்ளிகளுடன் 3வது இடத்தைப் பிடிக்கும். மும்பை அணி கடைசி லீக்கில் வென்றால் 18 புள்ளிகளுடன் 4வது இடத்தைப் பிடிக்கும். ஆக, பஞ்சாப் அணி 3வது இடத்துக்கு வர குறைந்தபட்சம் ஒரு வெற்றி தேவை. இரு ஆட்டங்களிலும் தோற்றால் 4வது இடம்தான் பெறும், மும்பை வெற்றி பெற்றால் 3வது இடத்தைப் பிடிக்கும், சில நேரங்களில் டாப்-2 இடங்களுக்குள் வரலாம். ஆர்சிபி அணி கடைசி இரு லீக்கிலும் வென்றால், 21 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடிக்கலாம், ஒரு ஆட்டத்தில் வென்றால் 19 புள்ளிகளுடன் முடிக்க முடியும். 2வது இடத்தைப் பெற முடியும். ஆனால், ஒருவேளை குஜராத் அணி கடைசி லீக்கில் சிஎஸ்கேவிடம் தோற்றால் 18 புள்ளிகளுடன் முடிக்கும், மும்பை அணி வலுவான ரன்ரேட்டுடன் 18 புள்ளிகளுடன் முடித்தால் 2வது இடம் அல்லது 3வது இடம் பிடிக்கவும் வாய்ப்புள்ளது. இவ்வாறு நடக்க பஞ்சாப் அணி 2 போட்டிகளிலும் தோற்க வேண்டும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பஞ்சாப் கிங்ஸ் அணியினர் மும்பை அணி மும்பை அணி 16 புள்ளிகளுடன், 1.292 என வலுவான ரன்ரேட்டுடன் 4வது இடத்தில் இருக்கிறது. கடைசி லீக்கில் பஞ்சாப் அணியை எதிர்கொள்ளும் மும்பை அணி இதில் வென்றால்18 புள்ளிகளுடனும் தோற்றால் 16 புள்ளிகளுடன் முடிக்கும். ஒரு வேளை மும்பை அணி வென்று, பஞ்சாப் அணி தனக்கிருக்கும் கடைசி லீக்கிலும் தோற்றால் 17 புள்ளிகளுடன் பஞ்சாப் முடித்து 4வது இடத்தைப் பிடிக்கும். மும்பை அணி 3வது இடத்தைப் பிடிக்க முடியும். ஒருவேளை குஜராத் அணி கடைசி லீக்கில் சிஎஸ்கேயிடம் தோற்றால் 18 புள்ளிகளுடன் முடிக்கும். மும்பை அணியும் 18 புள்ளிகளுடன் இருந்து குஜராத்தைவிட வலுவான ரன்ரேட்டில் இருக்கும் பட்சத்தில் 18 புள்ளிகளுடன் 2வது இடத்தைப் பிடிக்க முடியும். ஒருவேளை ஆர்சிபி கடைசி இரு லீக்கிலும் சன்ரைசர்ஸ், லக்னெளவிடம் தோற்றால் 17 புள்ளிகளுடன் முடிக்கும். அப்போது 18 புள்ளிகளுடன் இருக்கும் மும்பை அணி முதலிடத்தைப் பிடிக்கவும் வாய்ப்புள்ளது. நிகர ரன்ரேட் வலுவாக இருப்பதால், ஆர்சிபி 17 புள்ளிகளுடன் 2வது இடத்தைப் பிடிக்கும். ஒருவேளை, ஆர்சிபி அணி ஒரு போட்டியில் வென்றால்கூட 19 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடிக்கும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மும்பை இந்தியன்ஸ் அணியினர் மார்ஷ், பூரனின் மிரட்டல் ஆட்டம் லக்னெள அணி தொடரிலிருந்து வெளியேறினாலும் தன்னால் முடிந்த சேதாரத்தை எதிரணிகளுக்கு ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆட்டத்தில் மார்ஷ் 64 பந்துகளில் 114 ரன்கள் சேர்த்து ஆட்டமிமிழந்தார், நிகோலஸ் பூரன் 27 பந்துகளில் 56 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இருவரும் 2வது விக்கெட்டுக்கு 121 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்துப் பிரிந்தனர். லக்னெள அணியில் இருவரும் சேர்த்த ரன்கள்தான் அதிகபட்சமாகும். ரஷீத் கான் பந்துவீசுவதற்கு முன்பாக சாய் கிஷோரை அறிமுகப்படுத்தினார் ஷுப்மன் கில். மார்ஷ் 2 சிக்ஸர்களை கிஷோர் பந்துவீச்சில் விளாசினார். ரஷீத் கான் வீசிய முதல் ஓவரிலேயே மார்ஷ் 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்கள் சேர்த்தார். சாய் கிஷோர் ஓவரை விளாசிய பூரன் ஒரு பவுண்டரி, சிக்ஸர் விளாசினார். மார்ஷ் 33 பந்துகளில் அரைசதத்தையும், அடுத்த 23 பந்துகளில் அடுத்த 50 ரன்களையும் விரைந்து எட்டி முதல் சதத்தைப் பதிவு செய்தார். நிகோலஸ் பூரனும் 23 பந்துகளில் அரைசதம் அடித்தார். சதம் அடித்து 114 ரன்கள் சேர்த்த மிட்ஷெல் மார்ஷ் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, லக்னௌ அணியின் வீரர் மிஷல் மார்ஷ் 64 பந்துகளில் 114 ரன்கள் சேர்த்தார். அரிதாக ஆட்டமிழந்த டாப்-3 பேட்டர்கள் அதேபோல், குஜராத் அணியின் நம்பிக்கை பேட்டர்கள், தொடக்க கூட்டணியான ஷுப்மன் கில்(35) சாய் சுதர்சன்(21), பட்லர்(33) ஆகியோர் 10 ஓவர்களில் ஆட்டமிழந்தனர். இந்த சீசன் முழுவதும் குஜராத் அணியின் நடுவரிசை பேட்டர்களுக்கு பெரிதாக வேலையின்றி இருந்த நிலையில் நேற்று ஷெர்பானே ருதர்போர்ட், ஷாருக்கான் இணைந்து 4வது விக்கெட்டுக்கு 40 பந்துகளில் 86 ரன்கள் சேர்த்து ஆட்டத்தை பரபரப்பாக்கினர். கடைசி 4 ஓவர்களில் குஜராத் அணி வெற்றிக்கு 54 ரன்கள் தேவைப்பட்டது. இதில் ரூதர்ஃபோர்ட் 38 ரன்களில் ரூர்கே பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதன்பின், அடுத்துவந்த பேட்டர்கள் சரியாக ஆடாததால் கடைசி 4 ஓவர்களில் 20 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது, ஒரு பவுண்டரிகூட குஜராத் பேட்டர்கள் விளாசவில்லை. இந்த சீசனிலேயே குஜராத் அணியில் டாப்-3 பேட்டர்களும் அரிதாக குறைந்த ரன்னில் 3 பேருமே ஆட்டமிழந்துள்ளனர். இல்லாவிட்டால், டாப்-3 பேட்டர்களில் யாரேனும் இருவர் பெரிய பார்ட்னர்ஷிப்புக்கு வித்திடுவார்கள், அணியை எப்படியேனும் கரைசேர்த்துவிடுவார்கள். ஆனால், 3 பேருமே குறைந்த ரன்னில் 10 ஓவருக்குள் ஆட்டமிழந்தது அரிது. குஜராத் அணி இந்த சீசனில் சேர்த்த ரன்களில் 76.87 சதவிகித ரன்கள் டாப்-3 பேட்டர்கள் சுதர்சன், கில், பட்லர் மட்டும் சேர்த்தவை. கடந்த போட்டியில் டெல்லி்க்கு எதிராக 200 ரன்களை விக்கெட் இழப்பின்றி சுதர்சனும், கில்லும் சேஸ் செய்தனர். ஆனால் இந்த ஆட்டத்தில் ரூர்கே பந்துவீச்சில் சுதர்சன் அடித்த ஷாட்டை மார்க்ரம் அருமையாக கேட்ச் பிடித்தார். பட்லர் 2 பவுண்டரி, 2 சிக்ஸர் அடித்து ரன்ரேட்டை உயர்த்தினார். ஆவேஷ் கான் பந்துவீச்சில் அப்துல் சமதிடம் கேட்ச் கொடுத்து கில் ஆட்டமிழந்தார். அடுத்த சிறிது நேரத்தில் பட்லர் ஆகாஷ் சிங் பந்துவீச்சில் பட்லர் போல்டாகி விக்கெட்டை இழந்தார். 10 ஓவர்களுக்குள் டாப்-3 விக்கெட்டுகளை இழந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, குஜராத் டைடன்ஸ் அணியின் வீரர் சாய் சுதர்சன் பரிசோதிக்கப்படாத நடுவரிசை இந்த சீசன் முழுவதும் குஜராத் அணியின் நடுவரிசை பேட்டர்கள் பரிசோதிக்கப்படவில்லை. அதற்கான வாய்ப்பை கொடுக்காமலே டாப்-3 பேட்டர்கள் ஆட்டத்தை முடித்துவந்தனர். ஆனால் இந்த முறை நடுவரிசை பேட்டர்களுக்கான வாய்ப்பை ஷாருக்கான், ரூதர்ஃபோர்ட் பயன்படுத்தினர். இந்த சீசனில் குஜராத் அணியின் நடுவரிசை பேட்டர்கள் 21 ரன்கள் சராசரியும் 165 ஸ்ட்ரைக் ரேட் வைத்து குறைவாக உள்ளனர். இந்த சீசனில் நடுவரிசை பேட்டர்கள் ஃபினிஷிங் பணிக்கு மட்டுமே பயன்பட்டனர். ஆனால் நேற்று ரூதர்ஃபோர்ட், தமிழக வீரர் ஷாருக்கான் இருவரும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 14-15 ஓவர்களில் மட்டும் இருவரும் சேர்ந்து 2 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் என 36 ரன்கள் சேர்த்து ஆட்டத்தில் பரபரப்பு ஏற்படுத்தினர். ஷாருக்கான் 22 பந்துகளில் முதல் அரைசதத்தை விளாசினார். இருவரும் சேர்ந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்ல முயன்றனர். கடைசி 4 ஓவர்களில் குஜராத் வெற்றிக்கு 54 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால், ரூதர்ஃபோர்ட்(38) ஆட்டமிழந்ததும், ஆட்டம் தலைகீழாகமாறியது. அடுத்தடுத்த பேட்டர்கள் ஆட்டமிழக்கவே, குஜராத் அணி 4 ஓவர்களில் 20 ரன்கள் மட்டுமே சேர்த்து தோல்வி அடைந்தது. 'வெற்றிக்குத் திரும்புவோம்' குஜராத் அணியின் கேப்டன் ஷுப்மன் கில் கூறுகையில், "கூடுதலாக 20 ரன்கள் வரை வழங்கியது தோல்விக்கான காரணங்களில் ஒன்று. 210 ரன்களுக்குள் லக்னெளவை கட்டுப்படுத்தி இருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். பவர்பிளேயில் சிறப்பாகவே பந்துவீசினோம், பரிசோதனை முயற்சி எடுக்கவில்லை, அதேநேரம் விக்கெட்டுகளையும் வீழ்த்த சிரமப்பட்டோம். ஆனால் கடைசி 14 ஓவர்களில் லக்னெள 180 ரன்கள் சேர்த்தனர். 17-வது ஓவர்கள் வரை சேஸிங்கில் சிறப்பாக செயல்பட்டோம், ரூதர்ஃபோர்ட், ஷாருக்கான் ஆட்டமிழந்தபின் ஆட்டம் எங்களை விட்டு சென்றது. அடுத்த ஆட்டத்தில் வெற்றிப்பாதைக்கு திரும்புவோம்" எனத் தெரிவித்தார். ஆட்டங்களின் விவரம் இன்றைய ஆட்டம் ஆர்சிபி vs சன்ரைசர்ஸ் இடம்: லக்னெள நேரம்: இரவு 7.30 மும்பையின் அடுத்த ஆட்டம் மும்பை இந்தியன்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் நாள் – மே 26 இடம் – ஜெய்பூர் நேரம்- இரவு 7.30 மணி சிஎஸ்கேயின் அடுத்த ஆட்டம் குஜராத் டைட்டன்ஸ் vs சிஎஸ்கே நாள் – மே 25 இடம் – ஆமதாபாத் நேரம்- மாலை 3.30 மணி ஆர்சிபியின் அடுத்த ஆட்டம் ஆர்சிபி vs லக்னெள நாள் – மே 27 இடம் – லக்னெள நேரம்- இரவு 7.30 மணி ஆரஞ்சு தொப்பி யாருக்கு சாய் சுதர்ஸன்(குஜராத் டைட்டன்ஸ்)-638 ரன்கள்(13 போட்டிகள்) ஷுப்மன் கில் (குஜராத் டைட்டன்ஸ்)-636 ரன்கள்(13 போட்டிகள்) சூர்யகுமார் யாதவ்(மும்பை இந்தியன்ஸ்) 583 (13 போட்டிகள்) நீலத் தொப்பி பிரசித் கிருஷ்ணா (குஜராத்) 21 விக்கெட்டுகள்(12 போட்டிகள்) நூர் அகமது(சிஎஸ்கே) 21 விக்கெட்டுகள்(13போட்டிகள்) டிரன்ட் போல்ட் (மும்பை) 19 விக்கெட்டுகள்(13 போட்டிகள்) - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cwy6gxj84q7o
  13. Published By: VISHNU 23 MAY, 2025 | 02:56 AM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) பிரபாகரனுக்கு சிலை வைப்பது தொடர்பில் நான் ஒருபோதும் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. நாட்டில் நல்லுறவை கட்டியெழுப்புவதற்கு நாம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை தடுப்பதற்கு எதிர்க்கட்சியினர் மேற்கொள்ளும் பொய் பிரசாரமாகும் என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (22) ஒழுங்குப்பிரச்சினை ஒன்றை எழுப்பி உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், நான் சபையில் இல்லாத சந்தர்ப்பத்தில் ஹர்ஷண ராஜகருணா எம்பி தவறான கூற்றொன்றை நான் கூறியதாக சபையில் தெரிவித்துள்ளார். பிரபாகரனுக்கு சிலை வைப்பது தொடர்பாக நான் சபையில் தெரிவித்ததாகவும் அர்ச்சுனா எம்பி அதனை அவருக்குக் கூறியதாகவும் அவர் இங்கு குறிப்பிட்டுள்ளார். எனினும் எந்த சந்தர்ப்பத்திலும் நான் அவ்வாறு எதனையும் கூறவில்லை. எனது கட்சியின் தலைவர் ரோஹண விஜேவீர, நான் அவருடன் நெருக்கமாகப் பழகியவன். அவர் மறைந்தாலும் அந்த நினைவுகளும் உணர்வுகளும் என்றும் எனக்குள் இருக்கின்றன.. அதேபோன்று 89 ஆம் ஆண்டு மரணமடைந்த பெருமளவானோர் உள்ளனர். அவர்கள் இன்றும் எமது உள்ளத்தில் நிலைத்திருக்கின்றனர். அவ்வாறு எங்கள் அனைவருக்கும் தலைமைத்துவம் வழங்கிய எமது தலைவர் ரோஹண விஜேவீரவுக்கு சிலை வைக்க வேண்டும் என்று கூட நான் இதுவரை எங்கும் கூறியதில்லை. அவ்வாறான நான் வேறு ஒருவருக்கு சிலை வைப்பது தொடர்பில் கூறுவேனா? அந்த வகையில் மேற்படி கூற்று முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது. எதிர்க்கட்சியினர் கூறுவதற்கு எதுவும் இல்லாமல் இந்தளவு அடிமட்டத்திற்கு சென்றுள்ளனர் என்பது தொடர்பில் நான் கவலையடைகின்றேன். இந்த நாட்டில் மரணமடைந்தவர்கள் பாரிய அளவில் உள்ளனர். அவ்வாறு மரணமடைந்த அனைவருமே எமது சகோதரர்கள். அவர்களுக்காக நான் முன் நிற்பேனே தவிர, ஒரு நபர் அல்லது ஒரு தலைவருக்காக நான் முன்னிற்க மாட்டேன். பிரபாகரன் மட்டுமல்ல. உமா மகேஸ்வரன், சபாரெத்தினம் என பல தலைவர்கள் இருந்தனர். அவர்கள் தமிழ் மக்களின் நலனுக்காக சில கனவுகளை கண்டனர். எனினும் அவை தோல்வி கண்டன. அவர்கள் இறந்து 16 வருடங்கள் கடந்துள்ள நிலையில் நாட்டில் நல்லுறவை கட்டி யெழுப்புவதற்காக நாம் முன்வந்துள்ளோம். அதனைத் தடுப்பதற்கும் மீண்டும் நாட்டில் இனவாதத்தை கொண்டு வருவதற்கும் அத்துடன் தேசிய மக்கள் சக்தி மற்றும் ஜேவிபி தொடர்பில் தவறான கருத்துக்களை மக்கள் மத்தியில் பரப்புவதற்கும் முயற்சிக்கின்றனர். இதுபோன்ற முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம் என எதிர்க்கட்சியினரை கேட்டுக்கொள்கிறேன். https://www.virakesari.lk/article/215459
  14. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,வங்கப்புலி (சித்தரிப்புப் படம்) 2 மணி நேரங்களுக்கு முன்னர் இன்றைய (23/05/2025) நாளிதழ்களில் வெளிவந்துள்ள செய்திகள் சில இங்கே வழங்கப்பட்டுள்ளன. அசாம் மாநிலத்தில் சுமார் 1000 பேர் சேர்ந்து ஒரு புலியை கொலை செய்து அந்த புலியின் உடல் பாகங்களை வெற்றிச் சின்னங்களாக அவர்கள் எடுத்துச் சென்றுள்ளனர் என்று, தி டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அந்த செய்தியில், "அசாமின் கோலாகாட் மாவட்டத்தில் உள்ள துசிதிமுக் கிராமத்தில் ஓர் ஆண் ராயல் பெங்கால் புலியை (வங்கப்புலி) அப்பகுதியை சேர்ந்த 1,000 பேர் சேர்ந்து கொலை செய்து அதன் உடல் பாகங்களை துண்டு துண்டாக வெட்டி எடுத்துச் சென்றுள்ளனர். அந்த புலி கடந்த சில வாரங்களில் ஒருவரை தாக்கிக் கொலை செய்ததாகவும், கால்நடைகளை தாக்கியதாகவும் கூறப்படுகிறது" என தெரிவிக்கப்பட்டுள்ளது. கத்திகள், ஈட்டிகள், இரும்பு கம்பிகள் ஆகியவற்றுடன் இருந்த கிராமத்தினர் ஒரு வனப்பகுதிக்குள் புலியை துரத்திச் சென்று, வியாழக்கிழமை காலை 8 மணி முதல் 9 மணிக்குள்ளாக அந்த புலியை கொன்றதாக அச்செய்தி கூறுகிறது. இந்த சம்பவம் காசிரங்கா தேசிய பூங்கா மற்றும் புலி காப்பகத்திலிருந்து 20 கி.மீ தூரத்தில் நடைபெற்றுள்ளது. அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வருவதற்கு முன்பாக, புலியின் கால்கள், காதுகள், பற்கள், தோலின் சில பாகங்களை கிராமத்தினர் வெற்றிச் சின்னங்களாக எடுத்துச் சென்றுவிட்டனர் என்று வன அதிகாரிகள் தெரிவித்ததாக குறிப்பிடுகிறது அந்த செய்தி. "இந்த ஆண்டில் அசாமில் நடைபெறும் மூன்றாவது புலியின் இறப்பு இதுவாகும். இதற்கு முன்பாக ஓரங்க் தேசிய பூங்கா, பிஸ்வநாத் வன உயிர் பகுதியில் இறந்த புலியின் உடல்கள் கண்டறியப்பட்டன. அசாமில் 227 புலிகள் இருப்பதாக 2022 கணக்கெடுப்பு தெரிவிக்கிறது." என குறிப்பிடுகிறது அந்த செய்தி. கோல்காட் வன அதிகாரி குனதீப் தாஸ், "புலி கூர்மையான ஆயுதங்களால் ஏற்பட்ட காயத்தினால் உயிரிழந்துள்ளது என்றும் துப்பாக்கிக் குண்டுகளால் உயிரிழக்கவில்லை என்றும் தெரிவித்தார். இது குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். புலியை காப்பாற்ற முயன்ற போது மூன்று வன அதிகாரிகள் காயமடைந்தனர். கோல்காட் வன அலுவலகத்தில் புலியின் உடல் புதைக்கப்பட்டது. அதற்கு முன்பாக உடற்கூராய்வு நடத்தப்பட்டது. மே மாத தொடக்கத்திலிருந்தே அப்பகுதியில் புலி ஒன்று உலவி வருவது குறித்து அப்பகுதியினருக்கு தெரிந்துள்ளது என்றும் அவர்கள் தங்கள் ஆயுதங்களை தயார் செய்து வந்துள்ளனர் என்றும் வனத்துறையினர் தெரிவித்தனர். வியாழக்கிழமை காலை 6 மணிக்கு புலி இருக்கும் இடம் குறித்த தகவல் கிடைத்த உடனே, புலியை தேடும் பணியை தொடங்கியுள்ளது என்றும் அவர்கள் தெரிவித்தனர்." என அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப்படம் மேலும், காசிரங்கா கள இயக்குநர் சோனாலி கோஷ் புலியின் இருப்பிடம் இன்னும் தெளிவாக தெரியவில்லை என்றார். உள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் ம்ரினால் சாக்கியா இந்த கொலையை கண்டித்தார். "இது மிகவும் துயரமான சம்பவம். இந்த பூமி மனிதர்களுக்கு மட்டும் கிடையாது. வன விலங்குகளுக்குமானது" என்று கூறிய அவர், இதில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியதாக குறிப்பிடுகிறது அந்த செய்தி. IUCN – இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியத்தால் அழிந்துவரும் இனங்களில் ஒன்றாக வகைப்படுத்தப்பட்டுள்ள புலிகள். வன உயிர் பாதுகாப்பு சட்டம் 1972-ன் கீழ் பாதுகாக்கப்படுகின்றன. அந்த சட்டத்தின் படி புலியை வேட்டையாடுவது, அதன் உடல் உறுப்புகளை விற்பது குற்றமாகும். சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் அபூர்ப பல்லவ் கோசுவாமி வனத்துறை போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டினார். "மே 4-ம் தேதி புலியின் நடமாட்டம் குறித்து உள்ளூர்வாசி ஒருவர் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார். வனப்பாதுகாப்புப் படையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தால், உரிய எச்சரிக்கையுடன் செயல்பட்டிருந்தால் இந்த சம்பவத்தை தடுத்திருக்கலாம்" என்று கூறியதாக தெரிவிக்கிறது அந்த செய்தி. ரூ.15 ஆயிரத்துக்கு அடமானம் வைக்கப்பட்ட ஆந்திர மாநில சிறுவன்: காஞ்சிபுரத்தில் சடலமாக மீட்பு பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் பெற்றோர் வாங்கிய ரூ.15 ஆயிரம் கடனுக்காக வாத்து மேய்க்க அனுப்பப்பட்ட ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சிறுவன் காஞ்சிபுரம் செவிலிமேடு பாலாற்றில் சடலமாக மீட்கப்பட்டார் என்று தினகரன் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் அந்த செய்தி கூறுகிறது. ஆந்திர மாநிலம் சத்தியவேடு பகுதியை சேர்ந்தவர் முத்து. இவரது மனைவி தனபாக்கியம். இவர்கள், காஞ்சிபுரம் அடுத்த வெம்பாக்கம் பகுதியில்‌ தங்கியிருந்து வாத்து வளர்க்கும் தொழில் செய்துள்ளனர். ' "இவர்களிடம் ஆந்திர மாநிலம் கூடூர் பகுதியை சேர்ந்த பிரகாஷ் ஏனாதி-அங்கம்மாள் தம்பதியினர் கடனாக ரூ.15 ஆயிரம் வாங்கியுள்ளனர். வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் சிரமப்பட்டுள்ளனர். இதனால் வாங்கிய கடனுக்காக தனது 9 வயது மகன் வெங்கடேஷை 10 மாதங்கள் வாத்து மேய்க்க முத்து-தனபாக்கியம் தம்பதி வீட்டுக்கு அனுப்பியுள்ளனர்." என அச்செய்தி கூறுகிறது. இந்த நிலையில் கடந்த 30 நாட்களுக்கு முன்பு சிறுவனுக்கு மஞ்சள் காமாலை நோய் அதிகரித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் வெம்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்ததாகவும் அங்கு தீவிர சிகிச்சை பெற்றுவந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி இறந்ததாகவும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. "இதுகுறித்து சிறுவனின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்காமல் முத்து, தனபாக்கியம், இவர்களின் மகன் ராஜசேகர் ஆகியோர் சிறுவனை காஞ்சிபுரம் அருகே செவிலிமேடு பாலாற்றில் குழிதோண்டி புதைத்துள்ளனர். இந்த நிலையில், 10 மாத குத்தகை காலம் முடிவுற்று குழந்தையை மீட்க ஆந்திர மாநிலத்தில் இருந்து சிறுவனின் பெற்றோர் செவிலிமேடு வந்து, எங்கள் மகன் எங்கே என கேட்டுள்ளனர். நீங்கள் வாங்கிய கடன் கழியவில்லை. இன்னும் 3 மாதங்கள் உங்கள் மகன் வேலை செய்யவேண்டும் என முத்து கூறியுள்ளார்." என தெரிவிக்கிறது அந்த செய்தி. இதுகுறித்து ஆந்திர மாநிலம் சத்தியவேடு போலீஸில் பிரகாஷ் ஏனாதி அளித்த புகாரின் அடிப்படையில் காஞ்சிபுரம் வந்த ஆந்திர மாநில போலீஸார், முத்து, தனபாக்கியம், ராஜசேகர் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். புத்தூர் டிஎஸ்பி ரவிகுமார் தலைமையிலான போலீஸார், காஞ்சிபுரம் தாலுகா காவல்நிலைய போலீஸார் உதவியுடன் புதைக்கப்பட்ட சிறுவன் வெங்கடேஷ் சடலத்தைத் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து "முத்து, தனபாக்கியம், ராஜசேகர் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் சிறுவன் மஞ்சள் காமாலை நோயில்தான் இறந்தாரா? வேறு காரணமா? என வெம்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தும் விசாரித்து வருகின்றனர்" என்று அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c5y27xj3zlro
  15. தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி கைப்பற்றப்பட்ட விவகாரம் : முன்னாள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க கைது 23 MAY, 2025 | 10:54 AM வெள்ளவத்தையில் தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி கைப்பற்றப்பட்ட விவகாரம் தொடர்பில் முன்னாள் அமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளருமான துமிந்த திஸாநாயக்க இன்று (23) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். திம்பிரிகஸ்யாயவில் உள்ள சொகுசு தொடர்மாடி குடியிருப்பில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கொழும்பு - வெள்ளவத்தை ஹவலொக் சிட்டி பகுதியில் உள்ள ஆடம்பர குடியிருப்புத் தொகுதியில் பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட ரி-56 ரக துப்பாக்கி தொடர்பில் 40 மற்றும் 68 வயதுடைய இரண்டு பெண்கள் செவ்வாய்க்கிழமை (20) கைது செய்யப்பட்டனர். கொழும்பு - வெள்ளவத்தை ஹவலொக் சிட்டி பகுதியில் உள்ள ஆடம்பர குடியிருப்புத் தொகுதியில் பெண்ணொருவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி தொடர்பான விசாரணைகள் பயங்கரவாத தடுப்பு பிரிவிடம் (TID) ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/215474
  16. பட மூலாதாரம்,MATTHEW KAPUST / SURF படக்குறிப்பு,தெற்கு டகோடாவில் விஞ்ஞானிகள் அமைத்த இந்த பெரிய குகை, வெளியுலகத்திலிருந்து முற்றிலும் மறைக்கப்பட்டுள்ளது. நியூட்ரினோ துகள்களில் ஏற்படும் மாற்றங்களை ஆராய்வதற்கான டிடெக்டர் கருவி இங்கு பொருத்தப்படும் கட்டுரை தகவல் எழுதியவர், பல்லப் கோஷ் பதவி, அறிவியல் செய்தியாளர் 22 மே 2025, 05:38 GMT தெற்கு டகோடாவின் காடுகளின் மூடுபனிக்கு மேலே அமைந்துள்ள ஆய்வகத்துக்குள்ளே, விஞ்ஞானிகள் அறிவியலின் மிகப்பெரிய கேள்வி ஒன்றுக்கான விடையை தேடி வருகின்றனர்: இந்த பிரபஞ்சம் ஏன் இருக்கிறது? அவர்களை விட இந்த ஆராய்ச்சியில் பல ஆண்டுகள் முன்னிலையில் உள்ள ஜப்பானிய விஞ்ஞானிகள் அடங்கிய குழுவுக்கும் இந்த ஆராய்ச்சியாளர்கள் குழுவுக்கும் இடையே போட்டி நிலவுகிறது. கோள்கள், நட்சத்திரங்கள் மற்றும் விண்மீன் திரள்கள் ஏன் தோன்றின என்பன குறித்து தற்போதுள்ள வானியல் கோட்பாடுகளால் விளக்க முடியாது. இந்த கேள்விக்கான விடையை கண்டறியும் நம்பிக்கையில் நியூட்ரினோ எனப்படும் துணை அணுத் துகள்கள் (sub-atomic particle) குறித்து ஆராயும் டிடெக்டர் (detector) கருவியை இரு குழுக்களும் உருவாக்கி வருகின்றன. இதற்கான விடை நிலத்துக்கடியில் அதிக ஆழத்தில் இருப்பதாக அமெரிக்க விஞ்ஞானிகள் நம்புகின்றனர், நிலத்துக்கடியில் நியூட்ரினோ குறித்து ஆராயும் இந்த ஆய்வுக்கு டியூன் (Dune - டீப் அண்டர்கிரவுண்ட் நியூட்ரினோ எக்ஸ்பிரிமெண்ட்) என பெயரிடப்பட்டுள்ளது. நிலத்தின் மேற்பரப்பிலிருந்து சுமார் 1,500 மீட்டர் ஆழத்தில், மூன்று பரந்துவிரிந்த குகைகளுக்கு விஞ்ஞானிகள் பயணித்துள்ளனர். இதில் ஈடுபடும் கட்டுமான குழுக்களும் அதன் புல்டோசர்களும் சிறிய பிளாஸ்டிக் பொம்மைகள் போன்று தெரியும் அளவுக்கு இந்த குகைகள் மிகப்பெரியவை. டியூனின் அறிவியல் இயக்குநர் முனைவர் ஜேரெட் ஹெயிஸ், இந்த பிரம்மாண்ட குகைகள் எந்தளவுக்கு அளவில் பெரியவை என்பதை விளக்கும் பொருட்டு, அவை "அறிவியலின் தேவாலயங்கள்" (cathedrals to science) போன்றவை என்றார். பிரபஞ்சம் குறித்த புரிதலை மாற்றும் முயற்சி இந்த குகைகளின் கட்டுமான பணியில் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக ஹெயிஸ் ஈடுபட்டு வருகிறார். நிலத்துக்கு மேலேயிருந்து இரைச்சல் மற்றும் கதிர்வீச்சை தடுக்கும் பொருட்டு டியூன் அமைப்பை முழுவதுமாக அவர்கள் மறைத்துள்ளனர். தற்போது அதன் அடுத்த கட்டத்துக்கு செல்ல டியூன் தயாராக உள்ளது. "பிரபஞ்சம் குறித்த நம் புரிதலை மாற்றும் வகையில், (நியூட்ரினோவை ஆராய்வதற்கான) டிடெக்டர் கருவியை வடிவமைப்பதற்கு நாங்கள் தயாராக உள்ளோம். நாம் ஏன் பிரபஞ்சத்தில் இருக்கிறோம் என்ற கேள்விக்கான விடையை கூறுவதற்கு ஆர்வமாக உள்ள 1,500 விஞ்ஞானிகள் இணைந்து பல்வேறு கருவிகளை பயன்படுத்தி இந்த பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன," என்றார் அவர். பிரபஞ்சம் உருவானபோது இருவிதமான துகள்கள் உருவாகின: நட்சத்திரங்கள், கோள்கள் மற்றும் நம்மை சுற்றியுள்ள எல்லாமும் உருவான பருப்பொருள் மற்றும் பருப்பொருளுக்கு நேரெதிரான எதிர்ப்பொருள் (antimatter). கோட்பாட்டு ரீதியாக இரண்டும் பரஸ்பரம் அதன் திறனை இழக்கச் செய்திருக்க வேண்டும், அப்படி செய்யும்போது பெரும் ஆற்றல் வெடிப்பு மட்டுமே மிஞ்சியிருக்கும். எனினும், பருப்பொருள் இன்னும் மிச்சம் இருக்கிறது. எதனால் பருப்பொருள் வெற்றியடைகிறது மற்றும் நாம் எப்படி இந்த பிரபஞ்சத்தில் இருக்கிறோம் என்பதை புரிந்துகொள்வதற்கான பதில், நியூட்ரினோ துகள் மற்றும் எதிர் நியூட்ரினோ (anti-neutrino) ஆகியவற்றை ஆராய்வதில் தான் இருக்கிறது என விஞ்ஞானிகள் நம்புகின்றனர். இல்லினாய்ஸின் ஆழமான நிலத்தடியிலிருந்து விஞ்ஞானிகள் இரு விதமான துகள்களின் கற்றைகளையும் 800 மைல்கள் தொலைவில் உள்ள தெற்கு டகோட்டாவுக்கு அனுப்புகின்றனர். ஒரு மாபெரும் ஆய்வு திட்டம் ஏனெனில், நியூட்ரினோ மற்றும் எதிர் நியூட்ரினோக்கள் பயணிக்கும் போது சிறிதளவு மாற்றங்களுக்கு உட்படுகின்றன. இந்த மாற்றங்கள் நியூட்ரினோக்களுக்கும் எதிர் நியூட்ரினோக்களுக்கும் வெவ்வேறானதாக உள்ளதா என்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடிக்க விரும்புகின்றனர். அப்படி இரண்டுக்கும் வித்தியாசங்கள் இருந்தால், பருப்பொருளும் எதிர்பொருளும் ஏன் ஒன்றையொன்று அதன் திறனை இழக்கச் செய்வதில்லை என்பதற்கான விடைக்கு அவர்களை இட்டுச் செல்லும். 30 நாடுகளைச் சேர்ந்த 1,400 விஞ்ஞானிகள் இணைந்த ஒரு சர்வதேச ஆய்வுத் திட்டமாக டியூன் உள்ளது. அவர்களுள் ஒருவர் தான் சசக்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த முனைவர் கேட் ஷா. பிரபஞ்சம் மற்றும் மானுடம் குறித்த நம்முடைய புரிதலை, இந்த ஆய்வில் இதுவரையில் தெரிந்த தகவல்கள் மாற்றக்கூடியதாக உள்ளன என அவர் என்னிடம் தெரிவித்தார். "இப்போது தொழில்நுட்பம், பொறியியல், கணினி மென்பொருள் திறன் ஆகியவற்றின் மூலமாக இத்தகைய பெரிய கேள்விகளை தீர்க்க முடிவது உண்மையில் உற்சாகமளிக்கிறது," என அவர் தெரிவித்தார். பட மூலாதாரம்,KAMIOKA/ICRR/TOKYO UNIVERSITY படக்குறிப்பு,ஜப்பானில் ஏற்கெனவே உள்ள சூப்பர் கே நியூட்ரினோ ஆய்வகத்தை விட பெரிய மற்றும் சிறந்த ஆய்வகமாக ஜப்பானின் புதிய ஆய்வகம் இருக்கும் ஜப்பான் விஞ்ஞானிகளின் ஆய்வு இதே கேள்விக்கான பதிலை பெரும் தொலைவில் உள்ள ஜப்பானிய விஞ்ஞானிகள் மின்னும் தங்க நிற உலக உருண்டையில் (நியூட்ரினோ ஆய்வகம்) தேடுகின்றனர். இது, 'அறிவியலின் கோவில்' போன்று பிரகாசிக்கிறது. இந்த விஞ்ஞானிகள் ஹைப்பர் கே எனும் நியூட்ரினோ ஆய்வகத்தை வடிவமைத்து வருகின்றனர், இது, ஏற்கெனவே ஜப்பானில் உள்ள நியூட்ரினோ ஆய்வகமான சூப்பர் கே-வை விட மிகப்பெரியதும் சிறந்ததும் ஆகும். இன்னும் குறைந்தது இரண்டு ஆண்டுகளுக்குள் நியூட்ரினோ கற்றையை ஜப்பானிய விஞ்ஞானிகள் குழு செயல்படுத்த உள்ளது, இது அமெரிக்காவின் திட்டத்தை விட முன்னிலையில் உள்ளது. லண்டன் இம்பெரியல் கல்லூரியின் முனைவர் மார்க் ஸ்காட், தன்னுடைய குழு பிரபஞ்சம் குறித்த இதுவரையிலான கண்டுபிடிப்புகளில் மிகப்பெரியதை நிகழ்த்துவதற்கு சாதகமான நிலையில் உள்ளதாக நம்புகிறார். "நாங்கள் முன்னதாகவே இதை கண்டுபிடிப்போம், எங்களிடம் மிகப்பெரிய டிடெக்டர் கருவி உள்ளது, எனவே டியூன் திட்டத்தை விட எங்களிடம் அதுகுறித்து அதிக தகவல்களை விரைவிலேயே பெறுவோம்," என்றார் அவர். இரண்டு சோதனைகளை ஒன்றாக நடத்தும்போது, ஒரு சோதனை மூலமாக கிடைப்பதை விட அதிகளவில் விஞ்ஞானிகளுக்கு தகவல் கிடைக்கும். ஆனாலும், "நான் தான் அதை முதலில் கண்டுபிடிக்க வேண்டும் என விரும்புகிறேன்!" என்றார் அவர். பட மூலாதாரம்,NASA படக்குறிப்பு,நமது தற்போதைய புரிதலின்படி, நமது பிரபஞ்சம் கோள்கள், நட்சத்திரங்கள் மற்றும் விண்மீன் திரள்களாக உருவாகியிருக்கக் கூடாது. மர்மம் நீடிக்கிறது ஆனால், அமெரிக்காவின் ஆய்வுத்திட்டத்தில் பணியாற்றும், லண்டனின் குயின் மேரி பல்கலைக்கழகத்தின் முனைவர் லிண்டா கிரெமோனெசி, முதலில் அந்த இடத்தை ஜப்பானிய குழு அடையும்போது, என்ன நடக்கிறது என்பது தொடர்பான முழு தகவல்களை அவர்களுக்கு அளிக்காமல் போகலாம் என்கிறார். "இதில் போட்டி இருக்கிறது, ஆனால் நியூட்ரினோக்களும் எதிர் நியூட்ரினோக்களும் வித்தியாசமாக செயலாற்றுகிறதா என்பதை புரிந்துகொள்வதற்கான அனைத்து விஷயங்களும் ஹைப்பர் கே திட்டத்தில் இல்லை". விஞ்ஞானிகளுக்குள் போட்டி இருக்கலாம், ஆனால் முதல்கட்ட முடிவுகள் கிடைக்க இன்னும் சில ஆண்டுகாலம் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பிரபஞ்சத்தில் நாம் இருப்பதற்கு முன்பான ஆரம்பகாலத்தில் என்ன நடந்தது என்பது இன்னும் மர்மமாகவே உள்ளது. - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/ce80nk9wgzpo
  17. பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு நட்ட ஈடு - நெக்ஸ்ட் குழுமம் அறிவிப்பு Published By: VISHNU 22 MAY, 2025 | 07:55 PM (எம்.மனோசித்ரா) பிரித்தானிய குழுமமொன்றுக்கு சொந்தமான நெக்ஸ்ட் உற்பத்தி, அதிக இயக்கச் செலவுகள் காரணமாக கட்டுநாயக்க வர்த்தக வலயத்தில் உள்ள ஒரு தொழிற்சாலையை மூட தீர்மானித்துள்ளதாகவும், எனினும் இதனுடன் தொடர்புடைய ஏனைய இரண்டு தொழிற்சாலைகள் குறைந்தளவான ஊழியர்களுடன் தொடரும் என்றும் தெரிவித்துள்ளது. தமது தீர்மானத்தின் காரணமாக பணிநீக்கம் செய்யப்படும் ஊழியர்களுக்கு இலங்கை தொழிலாளர் சட்டத்துக்கமைய நட்டஈட்டு தொகை வழங்கப்படும் என்றும் அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. செயற்பாடுகளை முடிவுறுத்தும் தீர்மானம் நிறுவனத்திற்கு மிகவும் கடினமான முடிவாக அமைந்துள்ளது. அனைத்து மாற்று வழிகளையும் ஆராய்ந்த பிறகே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அதன் பணிப்பாளர் டேவிட் ரே தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சில ஆண்டுகளாக, இந்த தொழிற்சாலை இலாபகரமானதாக இல்லை. மேலும் நிலைமையை சரிசெய்ய நாங்கள் கணிசமான முயற்சிகள் எடுத்த போதிலும், தொழிற்சாலையை பொருளாதார ரீதியாக சாத்தியமானதாக மாற்ற முடியவில்லை. அந்த வகையில் சமீபத்தில், இந்த நிலைமை மாறுவதற்கான வாய்ப்பு இல்லை என்பது தெளிவாகியுள்ளது. தொழிலாளர்களுக்கான செலவுகள் மிக அதிகமாக இருந்தால், வேறு எந்த முதலீட்டாளரும் அத்தகைய நிறுவனத்தை பொறுப்பேற்று நடத்த முடியாது. மற்ற நாடுகளுடன் போட்டியிடவும் முடியாது. இதனால் தொழிற்சாலையை மூடுவது மாத்திரமே ஒரே வழியாகும். இலங்கையின் தொழிலாளர் சட்டத்தின் கீழ் பணிநீக்கம் செய்யப்பட்ட ஒவ்வொரு தொழிலாளிக்கும் அவர்களின் சேவை விதிமுறைகளின் அடிப்படையில் நிறுவனமானது 2.5 மில்லியன் ரூபாய் வரை இழப்பீடு வழங்கும். மேலும் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் அமைந்துள்ள அலங்கார மற்றும் தயாரிப்பு மேம்பாட்டு தொழிற்சாலைகள் செயல்பாட்டில் இருக்கும். எனினும் அவை குறைந்த எண்ணிக்கையிலான ஊழியர்களுடனேயே இயங்கும். ஆண்டிகம மற்றும் நவகத்தேகமவை தளமாகக் கொண்ட பிற உற்பத்தி செயல்பாடுகளும் வழக்கம் போல் தொடர்ந்து செயல்படும். இந்த தீர்மானம் துரதிர்ஷ்டவசமாக ஒட்டுமொத்தமாக 1,416 பணிநீக்கங்களுக்கு வழிவகுக்கும். நிறுவனத்தை விட்டு வெளியேறுபவர்கள் மாற்று உள்ளுர் வேலைவாய்ப்பைக் கண்டறிய உதவுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். இந்த நோக்கத்திற்காக, பாதிக்கப்பட்டவர்களுக்கு மாற்று வேலை வாய்ப்புகளைக் கண்டறிய உதவுவதற்காக நாங்கள் பிற உள்ளூர் உற்பத்தி தளங்களைத் தொடர்புகொள்வோம். இலங்கையில் எமது நிறுவனத்தின் உற்பத்தி வரலாற்றை அங்கீகரிக்கும் விதமாக, பணிநீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு நிறுவனம் செலுத்தும் சட்டப்பூர்வ பணிநீக்க கொடுப்பனவை அர்த்தமுள்ள வகையில் மேம்படுத்த விரும்புகிறது. அதற்கமைய ஒப்பந்தத்தின் அடிப்படையில் அதனை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். அதாவது பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் தங்கள் பிற உரிமைகளுடன் மேலதிகமாக குறைந்தபட்சம் 2மாத ஊதியத்தைப் பெறுவார்கள். சேவை ஆண்டுகளின் எண்ணிக்கையைப் பொறுத்து சூத்திரத்தின் அடிப்படையில் இழப்பீட்டு தொகை வழங்கப்படும். இந்த கொடுப்பனவுகள் 2.5 மில்லியன் இலங்கை ரூபா உச்ச வரம்பிற்கு உட்பட்டவையாக இருக்கும். அது மாத்திரமின்றி மே மாதம் இறுதி வேலை நாள் வரை சம்பளம் வழங்கப்படும். சம்பளம் வழக்கம் போல் உரிய தினத்தில் செலுத்தப்படும். அத்தோடு நிலுவையில் உள்ள அனைத்து விடுமுறை ஊதியங்களும் செலுத்தப்படும். அனைத்து உற்பத்தி மற்றும் வருகை போனஸ் வழங்கப்படும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/215438
  18. 22 MAY, 2025 | 05:13 PM யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபனின் தலைமையில் புதிய நீரிணைப்புக்கள் வழங்கும் செயற்றிட்டம் தொடர்பான கலந்துரையாடலொன்று இன்றைய தினம் (22) காலை 9 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது. தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி நீர் வழங்கல் திட்டத்தின் கீழ் புதிய நீரிணைப்புக்கள் வழங்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. அதற்கு அமைய, இச்செயற்றிட்டத்தின் முதற்கட்டமாக பிரதேச செயலக பிரிவுகளுக்கு உட்பட்ட தேவைப்பாடுடைய பயனாளிகளுக்கும் புதிய இலவச நீரிணைப்புக்கள் வழங்குவதற்காக பிரதேச செயலாளர்களுடன் இத்தேவைப்பாடுகள் தொடர்பாக அரசாங்க அதிபர் அவர்களால் ஆராயப்பட்டது. இக்கலந்துரையாடலில், முதற்கட்டமாக தெல்லிப்பழை பிரதேச செயலாளர் பிரிவில் காணப்படும் நீரிணைப்பிலிருந்து புதிதாக புதிய இணைப்புக்களை விஸ்தரிப்பதற்கும், தாழையடி நீர் வழங்கல் திட்டத்தின் கீழ் கரவெட்டி, கோப்பாய், சாவகச்சேரி, நல்லூா், யாழ்ப்பாணம், பருத்தித்துறை, வேலணை ஆகிய பிரதேச செயலகங்களுக்கு இலவச நீர் விநியோகம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், இதற்காக இந்த ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவுகளிலிருந்தும் 500 பயனாளிகளை தெரிவு செய்வது எனவும் தீர்மானிக்கப்பட்டது. இக்கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் (காணி) க. ஸ்ரீமோகனன், பிரதேச செயலாளர்கள் (கரவெட்டி, கோப்பாய், சாவகச்சேரி, நல்லூா், தெல்லிப்பழை, யாழ்பபாணம், பருத்தித்துறை மற்றும் வேலணை), தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பொறியியலாளர் மற்றும் மீள்குடியேற்றப் பிரிவின் உத்தியோகத்தர்கள் என பலர் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/215423
  19. Published By: DIGITAL DESK 3 22 MAY, 2025 | 04:55 PM வடக்கில் காணி அபகரிப்பு நோக்கத்திற்காக அரசு வெளியிட்ட வர்த்தமானியை உடன் இரத்துச் செய்ய மற்றும் குருந்தூர்மலை பகுதியில் நீதிக்குப் புறம்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இரண்டு விவசாயிகள் விடுதலை, தையிட்டியில் தனியார் காணியில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத விகாரை அகற்றி காணிகள் உரிமையாளர்களிடம் கையளிக்க தென்னாபிரிக்க அரசு இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என எம்பி தென்னாபிரிக்க தூதுவரிடம் வலியுறுத்தியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார்பொன்னம்பலம் கஜேந்திரகுமார் தெரிவித்தார். தென்னாபிரிக்க தூதுவருக்கும் தமிழ் தேசிய பேரவையின் தலைவரும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், இடையிலான சந்திப்பு இன்று வியாழக்கிழமை (22) காலை கொழும்பிலுள்ள தென்னாபிரிக்க தூதரகத்தில் நடைபெற்றது. இதன் பின்னர் அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெருவித்தார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, கடந்த 2025 மார்ச் மாதம் 28 ஆம் திகதி வெளியிடப்பட்ட வடமாகாணத்தின் சுமார் 6,000 ஏக்கர் காணிகளை அரச காணியாக சுவீகரித்து திட்டமிட்ட சிங்கள பௌத்த மயமாக்கலை மேற்கொள்ளும் கபட முயற்சியில் மூன்று மாத காலத்தில் மக்கள் தமது காணிகளை உறுதிபடுத்த வேண்டும் என்ற அந்த அடிப்படையில் அரசு வெளியிட்ட குறித்த வர்த்தமானியை அரசு மீளப் பெறவேண்டும். வடகிழக்கு மக்கள் யுத்தகாலத்தில் பலதடவைகள் இடம்பெயர வேண்டிய சூழல் ஏற்பட்டது அவ்வாறான சந்தர்ப்பங்களில் அவர்களின் சொந்தமான ஆவணங்கள் அழிவடைந்தும் தொலைந்துமுள்ளன. அத்துடன் சுனாமி மூலம் எமது மக்கள் சொத்துக்கள் ஆவணங்களை இழந்தார்கள். ஆகவே ஆவணங்கள் மூலம் உறுதிபடுத்துவது சாத்தியமற்ற விடயம். அத்துடன் போர் காரணமாக தமிழீழ மக்களின் சனத்தொகை பெருமளவில் புலம்பெயர்ந்துள்ளது. இந்த மக்கள் பயங்கரவாதச் சட்ட அச்சுறுத்தல் காரணமாகவும் நாட்டினை விட்டு வெளியேறினார்கள். எனவே இவர்களின் நோக்கம் மக்களின் காணி பிரச்சினைகளை தீர்ப்பது இல்லை. மாறாக மக்களின் ஆவணங்களற்ற காணிகளை அரச காணிகளாக சுவீகரிப்பதே இவர்களது நோக்கமாக உள்ளது. ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு உரித்துக்கள் வழங்கப்படல் வேண்டும் என்பதில் மாற்றுகருத்திற்கு இடமில்லை. ஆனாலும் இந்த வர்த்தமானி மூலம் மேற்கொள்ளப்படவுள்ள அபகரிப்பை ஒருபோதும் அனுமதிக்க முடியாது எனவும் அதற்கான அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டுமெனவும் வலியுறுத்தினோம். இரண்டாவது குருந்தூர்மலையில் தொல்பொருள் திணைக்களத்திற்கு 79 ஏக்கர் நிலப்பரப்பு மட்டுமே சொந்தமானதென 1932 ஆம் ஆண்டு வர்த்தமானி வெளிப்படுத்துகிறது. எனினும் அதற்கு மேலதிகமாக 325 ஏக்கர் காணியினை குறித்த தொல்பொருட் திணைக்களத்திற்கு வழங்க வேண்டுமென கடந்த ஆட்சிக்காலத்தில் புத்த பிக்கு அரசிடம் கோரியிருந்தார். எனினும் தமிழ் மக்கள் விவசாயம் செய்துவந்த காணிகள் என்பதனால் அவர்களது விவசாய நடவடிக்கைகளை கருத்திற்கொண்டு அப்போதய சனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் அக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டிருந்ததுடன் குறித்த 325 ஏக்கரிலும் பொதுமக்கள் பயன்படுத்த அனுமதிக்க வேண்டுமெனவும் கூறப்பட்டிருந்தது. எனினும் வழமைபோன்று குறித்த பகுதியில் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த விவசாயிகள் மூன்றுபேர் நீதிக்குப் புறம்பாக கைது செய்பட்டு இரண்டுபேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி மட்டத்தில் தீர்வு எட்டபட்ட ஓரு தீர்மானத்தினை அமுல்படுத்தாமல் விவசாய நடவடிக்கைகள் தடுக்கப்பட்டுள்ளதுடன் அந்த வயல்களுக்கு நீர்விநியோகம் செய்ய வேண்டிய குளத்தில் தமிழ் மக்கள் மீன்பிடியில் ஈடுபடவும் தடையும் விதிக்கப்பட்டுள்ளதோடு விவசாயத்திற்கு குறித்த நீரை பயன்படுத்த தடையையும் விதித்துள்ளனர். இதன் மூலம் விவசாயிகளுக்கு பெரும் அநீதி இழைக்கப்பட்டுள்ளது. வர்த்தமானி அறிவித்தல்கள் எதுவும் அற்ற குறித்த பகுதியில் மக்கள் சுதந்திரமாக தொழில் செய்வதனை உறுதிப்படுத்தவும் அநீதியான முறையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இரண்டு விவசாயிகளையும் விடுவிக்கவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும். மூன்றாவதாக தையிட்டி சட்டவிரோதமான விகாரை தொடர்பில் பேசியிருந்தோம் சட்டவிரோதமான விகாரை என்று தெரிந்தும் இன்னமும் அந்த காணிகளின் உரிமையாளர்களிடம் காணிகளை வழங்காது அரசின் செயற்பாடுகள் தொடர்கின்றது. தையிட்டி விகாரை சட்டவிரோதமானது தொல்பொருளுடன் தொடர்பு அற்றது சட்டவிரோதமாக கட்டப்பட்டது அகற்றபட்டே ஆகவேண்டும். காணிகள் உரிமையாளர்களிடம் கையளிக்கப்படல் வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை முன்னுடுக்க வேண்டும். https://www.virakesari.lk/article/215425
  20. Published By: DIGITAL DESK 2 22 MAY, 2025 | 04:23 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) எம்மை சிறைக்கு அனுப்பினால் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு கிடையாது. எம்மீது முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்களை நீதிமன்றத்தின் ஊடாக தீர்த்துக் கொள்கிறோம். ராஜபக்ஷக்களையும், கடந்த அரசாங்கங்களையும் விமர்சித்துக் கொண்டிருக்காமல் சமூக கட்டமைப்பில் காணப்படும் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காணுங்கள் என்று ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (22) நடைபெற்ற ஏற்றுமதி மற்றும் இறக்குமதி (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, அரசாங்கம் ஆட்சிக்கு வந்து 7 மாதங்கள் நிறைவடைந்துள்ளன. வெளிநாட்டு முதலீடுகளை பெற்றுக்கொள்வதற்கு அரசாங்கம் இதுவரையில் என்ன நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. உப்பு பிரச்சினைக்கு தீர்வு காணாதவர்கள் வெளிநாட்டு முதலீடுகளை பெற்றுக்கொள்வது சந்தேகத்துக்குரியதே, நாட்டு மக்கள் மரமுந்திரிகை சாப்பிடுவதை போன்று உப்பு சாப்பிடுவதில்லை என்று அரசாங்கம் பொறுப்பற்ற வகையில் பதிலளிக்கிறது. உணவின் அடிப்படை பொருளாகவே உப்பு காணப்படுகிறது. ஆகவே உப்பு உற்பத்தியில் தோற்றம் பெற்றுள்ள பிரச்சினைகளுக்கு உடன் தீர்வு காணுங்கள். ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் ' நானும் இராணுவ வீரன் ' என்று குறிப்பிட்டுக் கொண்டு திரிந்தவர்கள் தற்போது தலைமறைவாகியுள்ளார்கள். இராணுவத்தில் சேவையாற்றிய பலர் இன்று ஆளும் தரப்பில் உள்ளார்கள். பலர் பதில் அமைச்சர்களாகவும் உள்ளார்கள். இராணுவ வீரர்களை வீரர்கள் என்று குறிப்பிடும் தற்றுணிபு இவர்களுக்கு கிடையாது. தேர்தலுக்கு முன்னர் இராணுவ வீரர்களை சிப்பாய் என்று குறிப்பிடவில்லை. அரசாங்கத்தின் பலவீனம் மற்றும் குறைப்பாடுகளை எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டும் போது அதனை அரசாங்கத்தால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை இதனால் எதிர்க்கட்சியினர் இலக்கு வைக்கப்படுகிறார்கள். எம்மை சிறைக்கு அனுப்பி அடிப்படை மக்களின் அடிப்படைப் பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது. எம்மீது முன்வைத்த குற்றச்சாட்டுக்களை நீதிமன்றத்தின் ஊடாக தீர்த்துக் கொள்கிறோம். சமூக கட்டமைப்பில் நிலவும் அடிப்படை பிரச்சினைகளுக்கு ராஜபக்ஷர்கள் காரணம், கடந்த அரசாங்கம் காரணம் என்று ஆட்சிக்கு வந்தவுடன் குற்றஞ்சாட்டினீர்கள். இனியும் இந்த குற்றச்சாட்டு செல்வாக்கு செலுத்தாது. ஏனெனில் 6 மாதங்கள் கடந்து விட்டன. ஆகவே போலியாக விமர்சனங்களையும், குற்றச்சாட்டுக்களையும் முன்வைத்துக் கொண்டிருக்காமல் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காணுங்கள் என்றார். https://www.virakesari.lk/article/215421
  21. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், கேரி ஓ'டோனோகு பதவி, பிபிசி 2 மணி நேரங்களுக்கு முன்னர் டொனால்ட் டிரம்பின் இரண்டாவது பதவிக்காலம் தொடங்கி மூன்று மாதங்கள் கடந்துள்ள நிலையில், வெளிநாட்டு தலைவர்கள் அமெரிக்க அதிபர் அலுவலகத்திற்கு செல்வதற்கு அழைப்பு கிடைப்பதை ஒரு புறம் பெருமையான விஷயமாகக் கருதலாம். ஆனால் அதே நேரத்தில் அனைவர் முன்னிலையில் விமர்சிக்கப்படுவதற்கும், அவமானப்படுத்தப்படுவதற்கான அபாயமும் அந்த அழைப்பில் உள்ளது என்பதையும் அவர்கள் அறிந்திருக்க வேண்டும். அமெரிக்க அதிபர் டிரம்புக்கும் தென்னாப்பிரிக்காவின் அதிபர் சிரில் ராமபோசாவுக்கும் இடையே நடந்த சந்திப்பு அதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்தது. மங்கலான விளக்குகள், நீண்ட வீடியோ ஒன்றின் திரையிடல் மற்றும் செய்திக் கட்டுரைகளின் குவியல்களுடன் நடத்தப்பட்ட ஒரு மறைமுக தாக்குதலும் இதில் இடம்பெற்றது. அந்த சந்திப்பை தொலைக்காட்சி கேமராக்கள் பதிவு செய்துக்கொண்டிருந்தன. அங்கே ஒரு அமைதியான உரையாடல் நடைபெற்றது. அதன் பிறகு, தென்னாப்பிரிக்காவில் "வெள்ளையர்கள் இனப்படுகொலை" செய்யப்பட்டுள்ளனர் என்ற குற்றச்சாட்டுகள் தவறானவை என நீங்கள் நம்ப வேண்டுமென்றால் எந்த வகையான ஆதாரங்கள் தேவை என்று டிரம்பிடம் ஒரு பத்திரிகையாளர் கேட்டார். அந்த கேள்விக்கு முதலில் பதிலளித்த ராமபோசா , இந்த விவகாரத்தில் அதிபர் "தென்னாப்பிரிக்க மக்களின் குரல்களைக் கேட்க வேண்டும்" என்று கூறினார். அதன் பின்னர் பேசத் தொடங்கிய டிரம்ப், தென்னாப்பிரிக்கத் தலைவருக்கு "சில விஷயங்களை" காட்ட வேண்டும் எனக் கூறி, "விளக்குகளை அணைத்து" தொலைக்காட்சியை இயக்குமாறு ஒரு உதவியாளரிடம் கூறினார். மறுபுறம் டிரம்பின் ஆலோசகராகவும், தென்னாப்பிரிக்காவில் பிறந்த கோடீஸ்வரராகவும் இருக்கும் ஈலோன் மஸ்க், ஒரு சோபாவில் அமைதியாக அமர்ந்து நிகழ்வைக் கவனித்துக் கொண்டிருந்தார். அதற்குப் பிறகு, தென்னாப்பிரிக்காவில் வெள்ளையர்கள் துன்புறுத்தப்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுகளை மையமாகக் கொண்டு, ஒரு அசாதாரணமான மற்றும் திட்டமிட்டு நடத்தியது போன்ற தாக்குதல்களை அமெரிக்க அதிபர் டிரம்ப் முன்னெடுத்தார். இது, பிப்ரவரியில் வெள்ளை மாளிகைக்கு வருகை தந்த யுக்ரேன் தலைவர் ஸெலென்ஸ்கியை டிரம்ப் நடத்திய விதத்தை நினைவுபடுத்தியது. தென்னாப்பிரிக்க அரசியல் தலைவர்கள் "போயரை சுடு" (Shoot the Boer) என்ற இனவெறி எதிர்ப்புப் பாடலை கோஷமிடுவதை அந்த பெரிய திரையில் காண்பிக்கப்பட்ட வீடியோ காட்டியது. அடிக்கடி செய்தி ஊடகங்களை விமர்சிக்கும் டிரம்ப், தெளிவாக ஆதாரம் இல்லாத புகைப்படங்களை காட்டி மகிழ்ந்ததாகவும் தெரிந்தது. மேலும் விவசாயிகளாக இருந்த வெள்ளையர்களின் கல்லறைகள் எங்கே உள்ளன என்ற கேள்விக்கு, டிரம்ப் வெறும் "தென்னாப்பிரிக்கா" என்று மட்டும் பதிலளித்தார். அந்த வீடியோவில் அரசாங்கத்தில் பங்கு வகிக்காத அரசியல் தலைவர்கள் காட்டப்பட்டனர். விவசாயிகளாக இருந்த வெள்ளையர்களின் நிலத்தைப் பறிமுதல் செய்யும் அதிகாரம் அந்த அரசியல் தலைவர்களுக்கு இருப்பதாக டிரம்ப் நம்புவதாகவும் தெரிகிறது. ஆனால், அவர்களுக்கு அதற்கு உரிமை இல்லை. இந்த ஆண்டின் தொடக்கத்தில் இழப்பீடு இல்லாமல் நிலத்தை கையகப்படுத்துதலை அனுமதிக்கும் சர்ச்சைக்குரிய மசோதாவுக்கு ராமபோசா கையெழுத்திட்டபோதிலும், அந்த சட்டம் இன்னும் செயல்படுத்தப்படவில்லை. மேலும், தென்னாப்பிரிக்க அதிபரான ராமபோசா அரசியல் உரைகளில் பயன்படுத்தப்படும் வார்த்தைகள் அல்லது தொனியுடன் உடன்படவில்லை என்றும் தெளிவுபடுத்தியுள்ளார். ஆனால் தென்னாப்பிரிக்காவின் நெல்சன் மண்டேலாவின் நெருங்கிய கூட்டாளியும், சிறுபான்மை வெள்ளையர்களால் ஆளப்பட்ட ஆட்சியை முடிக்க உதவிய பேச்சுவார்த்தையாளருமான ராமபோசா, அந்தக் கூட்டத்திற்காக தயாராக வந்திருந்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES வெளிநாட்டு தலைவர்கள் வெளிப்படையாக புகழ்வதற்கு எடுக்கும் முயற்சிகளை டிரம்ப் சில சமயம் உணராமல் இருக்கிறார். ஆனால் அது தென்னாப்பிரிக்காவுடைய தெளிவான திட்டத்தின் ஒரு பகுதி. டொனால்ட் டிரம்ப் கோல்ஃப் மீது அதீத ஆர்வம் கொண்டவர் என்பது உண்மைதான். ஆனால், ராஜ்ஜீய பிரச்னைகள் மற்றும் வர்த்தக கொள்கை குறித்து நடைபெறும் கூட்டத்துக்காக இரண்டு புகழ்பெற்ற கோல்ஃப் வீரர்களான எர்னி எல்ஸ் மற்றும் ரீடீஃப் கூசனை அழைத்து வரும் ராமபோசாவின் திட்டம், நான் இதுவரை படித்த எந்த சர்வதேச உறவுகள் பாடப்புத்தகத்திலும் காணப்படாத ஒரு யுக்தி. மேலும், இரண்டு வெள்ளை தென்னாப்பிரிக்க கோல்ஃப் வீரர்களை அங்கு காண்பதில் அமெரிக்க அதிபர் டிரம்ப் மகிழ்ச்சியடைந்ததை அனைவரும் தெளிவாகக் கண்டனர். ராமபோசா பெரும்பாலும் அமைதியாகவும், சுருக்கமாகவும் பேசினார். மேலும் ராமபோசா இந்த சூழ்நிலையில் மகிழ்ச்சியடைந்திருக்கவும் வாய்ப்பு உள்ளது. ஏனென்றால் கோல்ஃப் வீரர்களும், தேசிய ஒற்றுமை அரசாங்கத்தில் உள்ள எதிர்க்கட்சியிலிருந்து வந்த அவரது வெள்ளையின விவசாய அமைச்சரும், ஓரளவு பாதுகாப்பாகவும், ஆதரவாகவும் இருந்தனர். ஒரு சிறிய கவசம் அல்லது ராஜ்ஜீய பாதுகாவலைப் போல காணப்பட்ட இந்த உத்தி பயனுள்ளதாகவும் இருந்தது. டிரம்ப் விவசாயிகளின் அவலநிலை குறித்து மீண்டும் பேசினார் . அவர்களில் பலரை அவர் அமெரிக்காவிற்குள் அகதிகளாக வரவேற்றுள்ளார். ஆனால் அதிபர் ராமபோசா இதற்கு பதில் சொல்லவில்லை, மேலும் அவரை கோபமூட்ட எடுக்கப்பட்ட முயற்சிகள் பெரும்பாலும் கவனம் பெறவில்லை. ஒரு கட்டத்தில், கோல்ஃப் வீரர்களையும், தனது அணியில் இடம் பெற்றிருந்த ஒரு ஆப்பிரிக்க கோடீஸ்வரரையும் ராமபோசா குறிப்பிட்டு, " ஆப்பிரிக்க விவசாயிகள் (வெள்ளை தென் ஆப்ரிக்க விவசாயிகள்) மீது இனப்படுகொலை நடந்திருந்தால், இந்த மூன்று நபர்களும் இங்கே இருக்க மாட்டார்கள் என்று நான் உறுதியாக சொல்ல முடியும்." என்று டிரம்பிடம் கூறினார். அதிபர் டிரம்ப்பால் தென்னாப்பிரிக்க அதிபரிடம் இருந்து எந்த எதிர்வினையையும் பெற முடியவில்லை என்றாலும், அவர் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மேற்கொண்ட முயற்சிகள் வீண் என்று அர்த்தமல்ல. அவை நிச்சயமாக வீணாகவில்லை. மக்கள் தங்களின் அதிருப்தி மற்றும் கவலை என நினைப்பதை தொடர்ந்து கவனத்தில் வைத்திருப்பதே ''அமெரிக்காவை மீண்டும் மகத்துவமாக்குவோம்" (MAGA) திட்டத்தின் முக்கிய நோக்கம் ஆகும். அதிபர் டிரம்ப், தனது ஆதரவாளர்கள் என்ன விரும்புகிறார்கள் என்பதை நன்றாக அறிந்திருக்கிறார் ஏனென்றால், இவ்வாறு திட்டமிட்டது போல நிகழ்த்தப்பட்ட இந்த ராஜ்ஜீய பாணியானது, அதிபர் அலுவலகத்திற்கு சென்றிருந்த பார்வையாளர்களை மட்டுமின்றி, உள்நாட்டு அமெரிக்க பார்வையாளர்களையும் இலக்காகக் கொண்டது. சில வெளிநாட்டு தலைவர்கள் இந்த தருணங்களை திறமையாக சமாளிக்க கற்றுக்கொண்டால், டொனால்ட் டிரம்ப் தான் விரும்பும் தாக்கத்தை தொடர்ந்து பெற, தனது திட்டங்களை சிறிது மாற்ற வேண்டியிருக்கும். - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/ckg455kx1zgo
  22. 22 MAY, 2025 | 03:51 PM நாட்டில் மருந்துகளுக்கு கடுமையான பற்றாக்குறை நிலவி வருகிறது. 180 வகையான மருந்துகளுக்கு பற்றாக்குறை நிலவுவதாக சுகாதார அமைச்சின் மருந்து வழங்கல் பிரிவு தெரிவித்துள்ளது. மருத்துவமனை கட்டமைப்பில் மேலும் 50 வகையான அத்தியாவசிய மருந்துகளுக்கும் பற்றாக்குறை நிலவி வருகிறது. இவற்றில், நுண்ணுயிர் எதிர்ப்பிகள், வலி நிவாரணிகள், இன்சுலின், இதய நோய் மருந்துகள் மற்றும் உபகரணங்களுக்கும் கடுமையான பற்றாக்குறை நிலவி வருகிறது. இவ்வாறான பின்புலத்தில், இது குறித்து பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி எழுப்பிய கேள்விகளுக்கு இன்னும் தீர்வுகள் முன்வைக்கப்படவும் இல்லை, பதில்கள் வழங்கப்படவுமில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். விசேட கூற்றொன்றை முன்வைத்து இன்று (22) ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே சஜித் பிரேமதாச இதனை குறிப்பிட்டார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், பொதுமக்களால் எழுப்பப்படும் கேள்விகள் இவை. இன்றும் கூட, தெருநாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவது குறித்து சுகாதார அமைச்சு பேசி வருகிறது. ஆனால் மருந்துப் பற்றாக்குறை தொடர்பிலோ அல்லது சுகாதாரத் துறை குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கோ எந்தப் பதிலும் இல்லை. நாட்டு மக்களின் வாழும் உரிமையை பாதுகாப்பதற்கு இந்த அரசாங்கத்துக்கு எந்த ஆர்வமும் இல்லை. இலவச சுகாதாரத்துறையை மேம்படுத்துவதற்கும் இந்த அரசாங்கம் ஆர்வம் காட்டுவதாக இல்லை. கொவிட் புதிய திரிவு தோன்றியுள்ளது; பரிசோதனைகளை விரைவுபடுத்துங்கள் LP 8.1 எனப்படும் கொவிட் மாதிரிகளின் துணை மாறுபாடு தற்போது சிங்கப்பூர், தாய்லாந்து, இந்தியா மற்றும் ஹொங்கொங்கில் பரவி வருகின்றன. இந்த துணை வகை மாறுபாடுகள் குறித்து நமது நாட்டில் எந்த வித பரிசோதனைகளும் நடைபெறுவதாக காண முடியவில்லை. இந்த கொவிட் துணை மாறுபாடு திரிபுகள் தொடர்பாக எமது நாட்டிலும் பரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். மருத்துவமனைகளில் இந்த அறிகுறிகளைக் காண்பிப்பவர்களுக்கு கூடிய கவனம் செலுத்தப்பட வேண்டும். சின்னம்மையும் பரவி வருகிறது சின்னம்மை பரவுவதாலும் கடுமையான பிரச்சினைகள் எழுந்துள்ளன. இதற்கு குறைந்தபட்சம் 6 வாரங்கள் தொடர்ந்து சிகிச்சை அளிக்க வேண்டும். இந்த நோய் பரவுவதற்கான சாத்தியம் அதிகரித்து காணப்படுகின்றது. எனவே, இதற்கும் தெளிவான திட்டமொன்று முன்னெடுக்க வேண்டியது அவசியம் என்றார். https://www.virakesari.lk/article/215411
  23. மாவோயிஸ்ட் தலைவர் பசவராஜூ கொல்லப்பட்டது நக்சல் அமைப்பின் முடிவை உணர்த்துகிறதா? பட மூலாதாரம்,SALMAN RAVI/BBC படக்குறிப்பு,பஸ்தரில் பாதுகாப்புப் பணியில் இருக்கும் பாதுகாப்புப் படை வீரர். (கோப்புப் படம்) கட்டுரை தகவல் எழுதியவர், அலோக் புதுல் பதவி, ஹிந்திக்காக 22 மே 2025, 10:54 GMT 1992 மே மாதத்தில், கோடைக்காலம் உச்சத்தில் இருந்தபோது, அப்போதைய மிகப்பெரிய நக்சல் அமைப்பான 'சிபிஐ (எம்எல்) மக்கள் போர்க் குழு'-வில் சூடான விவாதம் ஒன்று நடைபெற்றது. ஆந்திராவில் இந்த அமைப்பு தடை செய்யப்பட்டு ஒரு வாரம் கூட ஆகவில்லை. ஆனால் கட்சியின் மத்திய குழு செயலாளர் கொண்டபள்ளி சீதாராமையா ஏற்கனவே தனது சகாக்களுடன் சேர்ந்து ஒரு தனி அமைப்பை உருவாக்கும் யோசனையை முன்வைத்திருந்தார். சீதாராமையாவுடன் செல்வதற்குப் பதிலாக, வாரங்கல் பல்கலைக்கழகத்தில் தனது பி.டெக் படிப்பை முடித்து, பின்னர் 1980-களில் அமைப்பில் சேர்ந்த நம்பல்லா கேசவ ராவ், மக்கள் போர் குழுவில் தொடர முடிவு செய்தார். ஜூன் 1992-ல், கணபதி என்ற முப்பல்ல லட்சுமண ராவ் கட்சியின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டபோது, நம்பல்ல கேசவ ராவ் அவரது நெருங்கிய உதவியாளராக உருவெடுத்தார். கட்சியின் மத்திய குழுவில் நம்பல்ல கேசவ ராவுக்கு இடம் வழங்கப்பட்டது. அந்த நம்பல்லா கேசவ ராவ் தான் நக்சல் இயக்கத்தில் பசவராஜு என்று அழைக்கப்பட்டார். புதன்கிழமை, சத்தீஸ்கரின் நாராயண்பூரில் நடந்த மோதலில் நம்பல்லா கேசவ் ராவ் என்ற பசவராஜு மற்றும் 27 மாவோயிஸ்டுகளைக் கொன்றதாக போலீசார் கூறினர். ஆயுதமேந்திய மாவோயிஸ்டு போராட்டத்தின் முடிவின் தொடக்கமாகவும் புதன்கிழமை நிகழ்வுகளை பலர் பார்க்கிறார்கள். பஸ்டர் ஐ.ஜி பி சுந்தர்ராஜ் கூறுகையில், "2024 ஆம் ஆண்டில் நக்சலைட்டுகளுக்கு எதிராக பாதுகாப்புப் படையினர் ஒரு தீர்க்கமான நடவடிக்கையை நடத்தியது போல, 2025 ஆம் ஆண்டிலும் நாங்கள் அதை தொடர்ந்து முன்னெடுத்து வருகிறோம். இதன் விளைவாக, மாவோயிஸ்ட் அமைப்பின் பொதுச் செயலாளர் கொல்லப்பட்டார். இவர் சிபிஐ மாவோயிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினராகவும் இருந்தார். சத்தீஸ்கரில் முதன்முறையாக அரசியல் தலைமைக்குழு மற்றும் பொதுச்செயலாளர் மட்டத்தில் இருந்த மாவோயிஸ்ட் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். இது குறிப்பிடத்தக்க சாதனையாகும்" என்றார். "நக்சலிசத்தை ஒழிப்பதற்கான போராட்டத்தில் ஒரு வரலாற்று சாதனை. இன்று, சத்தீஸ்கரின் நாராயண்பூரில் நடந்த நடவடிக்கையில், சிபிஐ-மாவோயிஸ்ட் பொதுச் செயலாளர், நக்சல் இயக்கத்தின் உயர்மட்டத் தலைவர் மற்றும் முதுகெலும்பான நம்பல்லா கேசவ ராவ் என்ற பசவராஜு உட்பட 27 பயங்கரமான மாவோயிஸ்டுகளை பாதுகாப்புப் படையினர் கொன்றுள்ளனர்" என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா புதன்கிழமை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நக்சலிசத்தை ஒழிப்பதற்கான போராட்டத்தில் பசவராஜூவின் கொலை ஒரு வரலாற்று சாதனை என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார். பொறியாளர் முதல் மாவோயிஸ்ட் வரை ஹைதராபாத்திலிருந்து 720 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது ஜியன்னாபேட்டை கிராமம். மாவட்ட தலைமையகமான ஸ்ரீகாகுளத்திலிருந்து சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்த சிறிய கிராமத்தைச் சேர்ந்த ஆசிரியரான வாசுதேவ் ராவ் இப்பகுதியில் பிரலமானவர். கிராமத்தின் பெரியவர்களிடம் பேசும்போது, அவர்கள் வாசுதேவ் ராவ் மற்றும் வாசுதேவ் ராவின் மகன் நம்பல்லா கேசவ் ராவ் பற்றிய பல கதைகளைச் சொல்கின்றனர். வாசுதேவ் ராவ் தனது மூன்று மகள்களுக்கும் மூன்று மகன்களுக்கும் நல்ல கல்வியைக் கொடுக்க முயன்றார். வாசுதேவ் ராவின் மகன்களும் - தில்லேஸ்வர ராவ் மற்றும் கேசவ ராவ் கல்வியில் சிறந்து விளங்கினர். வாசுதேவ் ராவ், தனது மகன் கேசவ் ராவை வாரங்கலில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் சேர்த்தார். பி.டெக் படித்துக் கொண்டிருந்தபோது, கேசவ ராவ் புரட்சிகர மாணவர் சங்கத்தில் சேர்ந்ததாகவும், சமூக இயக்கங்களில் தீவிரமாக இருப்பதாகவும் செய்திகள் கிராமத்தை எட்டத் தொடங்கின. கேசவ் ராவ் மீது காவல்துறையில் சில வழக்குகளும் பதிவாகின. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சத்தீஸ்கரில் நடைபெற்ற பாதுகாப்புப் படையினருக்கான டிரோன் பயிற்சி (கோப்புப் படம்) ஸ்ரீகாகுளம் சமூக ஆர்வலர் குணா ஸ்ரீபிரகாஷ் கூறுகையில், "கேசவ் எம்.டெக் படிப்பில் சேர்ந்தார். ஆனால் தனது பெரும்பாலான நேரத்தை அரசியல் நடவடிக்கைகளில் செலவிடத் தொடங்கினார். சிபிஐ லிபரேஷன் கட்சிகாக வேலை செய்யத் தொடங்கியதும், சில நாட்களில்யே அவர் தலைமறைவானார். கேசவ் ராவின் சகோதரர் தில்லேஸ்வர ராவ், குடும்பப் பொறுப்பை பார்த்துக் கொண்டார். அவர் துறைமுகத்தில் நல்ல வேலையில் இருந்தார். ஆனால் கேசவ ராவ் குறித்து எந்த தகவலும் வரவில்லை'' என்கிறார். எம்.டெக் படிக்கும் போது, கேசவ் ராவ் நக்சலைட் அமைப்பான சிபிஐ மக்கள் போர் குழுவில் சாதாரண தொண்டராக அமைப்பில் சேர்ந்த கேசவ் ராவ், அடுத்தடுத்த பொறுப்புகளை ஏற்றுக்கொண்டு தலைமையின் நம்பிக்கையை வென்றார். கேசவ் ராவின் பொறுப்பும், பகுதியும் மாறிக் கொண்டே இருந்ததுபோல, அவரது பெயரும் ககன்னா, பிரகாஷ், கிருஷ்ணா, விஜய், கேசவ், பிஆர், பிரகாஷ், தர்ப நரசிம்ம ரெட்டி, ஆகாஷ், நரசிம்மா, பசவராஜ், பசவராஜு என தொடர்ந்து மாறிக் கொண்டே இருந்தது. 1992 ஆம் ஆண்டில், மக்கள் போர்க் குழு வீழ்ச்சியின் விளிம்பில் இருந்தபோது, கணபதியுடன் நின்ற கேசவ் ராவுக்கு மத்திய குழுவின் உறுப்பினராக பொறுப்பு வழங்கப்பட்டது, இது அவரை அமைப்பில் முக்கியமானவராக ஆக்கியது. பட மூலாதாரம்,ALOK PUTUL/BBC படக்குறிப்பு,கைப்பற்றப்பட்ட ஆயுதங்களை பாதுகாப்புப் படையினர் பார்வையிடுகின்றனர். பசவராஜூவுக்கு மத்தியக் குழுவில் எப்படி இடம் கிடைத்தது? 1992 ஆம் ஆண்டில் மக்கள் போர் குழுவின் மத்திய குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், கேசவ் ராவ் மாவோயிச அமைப்பில் சிறப்பு கொரில்லா படைக்கு நீண்ட காலம் தலைமை தாங்கினார். ஆயுதங்கள் முதல் பயிற்சி வரை அனைத்திற்கும் பொறுப்பாக இருந்த கேசவ் ராவுக்கு, பிரிக்கப்படாத ஆந்திரா, மகாராஷ்டிரா மற்றும் பிரிக்கப்படாத மத்தியப் பிரதேசத்தில் அமைப்பை விரிவுபடுத்தும் பொறுப்பு வழங்கப்பட்டது. 1994-95 இல் கொரில்லாப் படை தொடங்கப்பட்டிருந்தாலும், மே 1999 வாக்கில், மத்திய கொரில்லாப் படை கலைக்கப்பட்டு, பிளாட்டூன்கள், உள்ளூர் கொரில்லா அணிகள் மற்றும் சிறப்பு கொரில்லா அணிகள் தொடங்கப்பட்டன என்பதை மாவோயிச ஆவணங்கள் தெரிவிக்கின்றன. இக்காலக்கட்டத்தில், முதன்முறையாக, ஆயுதக்குழு மற்றும் அமைப்பு வேலைகளுக்காக தனித்தனி கட்சிகள் உருவாக்கப்பட்டன. இந்த காலக்கட்டத்தில், கேசவ் ராவ் மத்திய ராணுவ ஆணையத்தின் பொறுப்பாளராக பணியாற்றினார். 2000 ஆம் ஆண்டில், மாவோயிஸ்ட் அமைப்பு. மக்கள் விடுதலை ஆயுதக்குழுவை உருவாக்கியது, இந்த காலக்கட்டத்தில்தான் கேசவ் ராவ் அமைப்பின் மிக உயர்ந்த குழுவான அரசியல் தலைமைக்குழுவில் இடம் பெற்றார். இந்த காலக்கட்டத்தில், கேசவ் ராவின் பெயர் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட மாவோயிஸ்ட் நடவடிக்கைகளுடன் இணைத்து பேசப்பட்டது. மேலும் பல்வேறு மாநில மற்றும் மத்திய அமைப்புகளால் இவரது தலைக்கு அறிவிக்கப்பட்ட பரிசுத்தொகையின் அளவும் அதிகரித்துக் கொண்டே இருந்தது. என்.ஐ.ஏ, சி.பி.ஐ மற்றும் பல்வேறு மாநில அரசுகள் கேசவ் ராவின் தலைக்கு அறிவித்த மொத்த பரிசுத்தொகை ஒன்றரை கோடி ரூபாயையும் தாண்டிவிட்டது. பெரிய தாக்குதல்களில் பசவராஜூவின் பங்கு கேசவ் ராவ் முதன்முதலில் 1987 இல் ஆந்திராவின் கிழக்கு கோதாவரியில் ஒரு தாக்குதலை வழிநடத்தினார் என்று ஒரு போலீஸ் அதிகாரி கூறுகிறார். இந்த தாக்குதலில் ஒரு போலீஸ் அதிகாரி உட்பட 6 போலீசார் கொல்லப்பட்டனர். இதற்குப் பிறகு, 'கேசவ் ராவ் நடத்திய கொடூரம் மற்றும் வன்முறை சம்பவங்கள் இப்போது போலீஸ் ஆவணங்களின் ஒரு பகுதியாகும்' என்று அதிகாரிகள் கூறுகின்றனர். ஏப்ரல் 10, 2010 அன்று தாந்தேவாடாவில் 76 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவம், 2013 மே 23 அன்று தர்பா பள்ளத்தாக்கின் ஜீராம் படுகொலை என பல்வேறு பெரிய சம்பவத்திலும் கேசவ் ராவ் முக்கிய பங்கு வகித்ததாகக் கருதப்படுகிறது. ஜீரம் பள்ளத்தாக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் உட்பட 27 பேர் கொல்லப்பட்டனர். "2018 ஆம் ஆண்டில் அரக்கு தாக்குதலில் ஆந்திர எம்.எல்.ஏ கிதாரி சர்வேஸ்வர ராவ் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ சிவேரி சோமா ஆகியோர் கொலை செய்யப்பட்டதற்கும் கேசவ் ராவ் பொறுப்பாக்கப்பட்டார். 2019 ல் கட்சிரோலியில் 15 கமாண்டோக்கள் உட்பட 16 பேர் கொல்லப்பட்டதன் பின்னணியில் கேசவ் ராவ் இருந்தார். அப்போதைய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மீதான தாக்குதலின் பின்னணியிலும் கேசவ் இருந்தார். ஒடிசா மற்றும் சத்தீஸ்கரில் உள்ள சிறையில் தாக்குதல் நடத்தியதற்கும் கேசவ்தான் காரணம்" என்று போலீஸ் அதிகாரி கூறுகிறார். எப்படி கேசவ் ராவ் மாவோயிஸ்ட் தலைமை பொறுப்புக்கு வந்தார்? 2009 இல் கோபாத் காந்தி மற்றும் 2010 இல் அரசியல் தலைமைக்குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான பிஜோய் டா என்கிற நவீன் பிரசாத் என்கிற நாராயண் சன்யால் ஆகியோர் கைது செய்யப்பட்டது அமைப்புக்கு பல நெருக்கடிகளை உருவாக்கியது. இதற்கிடையில், ஜூலை 2010 இல் சிபிஐ மாவோயிஸ்ட் செய்தித் தொடர்பாளர் செருகுரி ராஜ்குமார் என்ற ஆசாத் மற்றும் 2011 நவம்பரில் கோட்டேஸ்வர ராவ் என்ற கிஷன்ஜி ஆகியோர் கொல்லப்பட்ட பிறகு, மாவோயிஸ்ட் அமைப்பில் கேசவ் ராவின் பிடி வலுவடைந்தது. நோய்வாய்ப்பட்ட சிபிஐ (மாவோயிஸ்ட்) பொதுச் செயலாளர் முப்பபல்லா லட்சுமண ராவ் என்கிற கணபதி அமைப்பின் பதவியிலிருந்து தன்னை விடுவிக்குமாறு வேண்டுகோள் விடுத்தபோது, கேசவ் ராவ் இயல்பாகவே சிபிஐ (மாவோயிஸ்ட்) கட்டளையை ஏற்க முன்னணி போட்டியாளராக ஆனார். 2018 ஆம் ஆண்டில், நம்பல்லா கேசவ் ராவ் என்ற பசவராஜு கட்சியின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார். பெரும்பாலான மார்க்சிஸ்ட் மற்றும் மாவோயிஸ்ட் அமைப்புகளில் தலைவர், துணைத் தலைவர் பதவி கிடையாது. பொதுச் செயலாளர் என்பது இந்த அமைப்பின் மிக உயர்ந்த பதவியாகும். இந்த வகையில், பி.டெக் படித்த கேசவ் ராவ், மாவோயிஸ்ட் அமைப்பில் ஒரு சாதாரண தொண்டராக இருந்து மாவோயிஸ்டுகளின் பொதுச் செயலாளராக உயர்ந்தார். 27 ஆண்டுகளாக மத்திய குழு உறுப்பினராகவும், 18 ஆண்டுகளாக அரசியல் தலைமைக்குழு உறுப்பினராகவும் பணியாற்றிய கேசவ் ராவை பொதுச் செயலாளராக நியமித்ததை அறிவித்த சிபிஐ மாவோயிஸ்ட் மத்திய கமிட்டி செய்தித் தொடர்பாளர் அபய், கேசவ் ராவைப் பற்றி கூறுகையில், "துல்லியமாகச் சொல்வதானால், அவர் சமீபத்தில் பொதுச் செயலாளராக பரிணமித்துள்ளார், அதே நேரத்தில் 1992 க்குப் பிறகு ஒரு கூட்டுத் தலைமையாக வளர்ந்த மத்திய குழுவில் ஒரு முக்கியமான தோழராக இருக்கிறார்." என்றார். நெருக்கடியில் இருந்த மாவோயிஸ்ட் அமைப்பு பட மூலாதாரம்,CPI (MAOIST) படக்குறிப்பு,மாவோயிஸ்ட் முகாம் (கோப்புப் படம்) சத்தீஸ்கரில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது பாதுகாப்புப் படை முகாம்கள் ஒன்றன் பின் ஒன்றாக திறக்கப்பட்ட சமயத்தில் மாவோயிஸ்டுகளுக்கு சிக்கல்கள் அதிகமானது. இதற்குப் பிறகு, 2023 டிசம்பரில் வந்த பாஜகவின் விஷ்ணுதேவ் சாய் அரசு, சில மாதங்களுக்குள் மாவோயிஸ்டுகளுக்கு எதிராக ஆக்ரோஷமான நடவடிக்கைகளைத் தொடங்கியபோது, கேசவ் ராவ் மாவோயிஸ்ட் அமைப்பைக் காப்பாற்றி பராமரிக்கும் சவாலை எதிர்கொண்டார். பாஜக அரசின் 15 மாத ஆட்சிக் காலத்தில், 450 க்கும் மேற்பட்ட மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர், நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர், சிலர் காணாமல் போயினர். மாவோயிஸ்டுகள் என்று சந்தேகிக்கப்பட்ட ஏராளமானோரும் சரணடைந்தனர். மாவோயிஸ்ட் அமைப்பு தனது பிடிவாதம் அனைத்தையும் கைவிட்டு நிபந்தனையற்ற அமைதிப் பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொள்ளும் அளவுக்கு நிலைமை மாறியது. ஆனால் இப்போது அதற்கு அரசு தயாராக இல்லை. மாவோயிஸ்டுகள் ஆயுதங்களை கீழே போட்டால் மட்டுமே பேச்சுவார்த்தை நடைபெறும் என்று சத்தீஸ்கர் உள்துறை அமைச்சர் விஜய் சர்மா தெளிவாகக் கூறினார். மாவோயிஸ்டுகளின் முடிவின் தொடக்கமா இது? பட மூலாதாரம்,CG KHABAR/BBC புதன்கிழமை கேசவ் ராவ் கொல்லப்பட்ட பிறகு, மாவோயிஸ்ட் அமைப்பு குறித்து பல கேள்விகள் எழத் தொடங்கியுள்ளன. சத்தீஸ்கரைச் சேர்ந்த ஒரு போலீஸ் அதிகாரி கூறுகையில், "இந்த மரணம் மீதமுள்ள மாவோயிஸ்டுகள் மீது பெரிய உளவியல் தாக்கத்தை ஏற்படுத்தும். கேசவ் ராவ் கொலைக்குப் பிறகு, மாவோயிஸ்ட் அமைப்பு தலைமையற்றதாகிவிட்டது. இத்தகைய சூழ்நிலையில், இது மாவோயிஸ்டுகளின் முடிவின் தொடக்கம் என்று நீங்கள் கூறலாம். 2026 மார்ச் 31ஆம் தேதிக்குள் நாட்டிலிருந்து நக்சல் அமைப்பை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா காலக்கெடு நிர்ணயித்திருந்தார். அது இப்போது உண்மையாகி வருவதாகத் தெரிகிறது." இருப்பினும், சத்தீஸ்கரில் பல ஆண்டுகளாக காவல்துறை இயக்குநர் பதவியை வகித்த விஸ்வரஞ்சன் இதை வேறுவிதமாகப் பார்க்கிறார். "கேசவ் ராவ் கொலை போலீசாருக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி. அது ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். மாவோயிஸ்ட் பிரச்னை சில ஆண்டுகளுக்கு அமைதியடைய வாய்ப்புள்ளது. ஆனால் 1973 இல் நக்சலைட் இயக்கம் மோசமாக நசுக்கப்பட்ட பிறகும், நக்சலைட்டுகள் பல தசாப்தங்களுக்குப் பிறகு தங்களை புத்துயிர் பெறச் செய்தனர் என்பதை பழைய வரலாறு காட்டுகிறது." என்கிறார் விஸ்வரஞ்சன் விஸ்வரஞ்சனின் கூற்றுப்படி, மாவோயிஸ்ட் இயக்கம் வரும் நாட்களில் அகிம்சை வடிவத்தில் உருவாகலாம் அல்லது வேறு ஏதேனும் வன்முறை வடிவத்தில் மீண்டும் எழக்கூடும். அதற்கான சாத்தியக்கூறுகள் இன்னும் உள்ளன. ஆனால் யதார்த்தம் என்னவென்றால், கிட்டதட்ட 33 ஆண்டுகளுக்கு முன்பு நம்பல்லா கேசவ ராவுக்கு மாவோயிஸ்ட் இயக்கத்தில் ஒரு பெரிய பொறுப்பு வழங்கப்பட்ட அதே மே மாதத்தில், அவர் கொல்லப்பட்டுள்ளார். பல மாதங்களாக நிலவிய கடுமையான வெப்பத்திற்குப் பிறகு, பஸ்தர் உட்பட சத்தீஸ்கரின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்து வரும் நிலையில், கேசவ் ராவ் மற்றும் பிற மாவோயிஸ்ட்களின் சடலங்களை மாவட்ட தலைமையகத்திற்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் தற்போது நடந்து வருகின்றன. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c1mgzn7dpd0o
  24. 22 MAY, 2025 | 12:33 PM ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குகரையில் இராஜதந்திரிகள் குழுவினரை நோக்கி இஸ்ரேலிய படையினர் எச்சரிக்கை வேட்டுக்களை தீர்த்தமைக்கு பல உலக நாடுகள் கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளன. ஜெனின் நகரை நோக்கி சென்றுகொண்டிருந்த இராஜதந்திரிகளை நோக்கி இஸ்ரேலிய படையினர் துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டனர் எவரும் பாதிக்கப்படவில்லை என பிபிசி தெரிவித்துள்ளது. இஸ்ரேலிய படையினர் துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபடுவதை காண்பிக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன. ஏழு துப்பாக்கி வேட்டுகளையாவது வீடியோவில் கேட்க முடிகின்றது. அனுமதியளிக்கப்பட்ட பகுதியிலிருந்து அவர்கள் விலகியதன் காரணமாகவே துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ள இஸ்ரேலிய இராணுவம், அவர்களை எச்சரிக்கும் விதத்தில் வானை நோக்கியே துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளது. சர்வதேச இராஜதந்திரிகளிற்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துவதாக தெரிவித்துள்ள இஸ்ரேலிய இராணுவம் விசாரணைகளின் பின்னர் இராஜதந்திரிகளை தொடர்புகொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ளது இஸ்ரேலிய இராணுவத்தினரின் இந்த நடவடிக்கைகக்கு ஸ்பெயின், எகிப்து, பிரான்ஸ், அயர்லாந்து, இத்தாலி ஆகிய நாடுகள் கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளன. இஸ்ரேலிய தூதுவர்களை அழைத்து தங்கள் கண்டனங்களை வெளியிடப்போவதாக பல நாடுகள் தெரிவித்துள்ளன. இந்த சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும், விளக்கமளிக்கவேண்டும் என பலநாடுகள் தெரிவித்துள்ளன. இராஜதந்திரிகள் குழுவை இஸ்ரேலிய படையினர் வேண்டுமென்றே இலக்குவைத்தது பெரும் குற்றம் என பாலஸ்தீன அதிகார சபை தெரிவித்துள்ளது. ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குகரையில் காணப்படும் மனிதாபிமான நிலை குறித்து நேரடியாக பார்த்து அறிந்துகொள்வதற்காகவும், பாலஸ்தீன மக்களிற்கு எதிரான இஸ்ரேலிய படையினரின் மனித உரிமை மீறல்களை பதிவு செய்வதற்காகவே இராஜதந்திரிகள் அங்கு சென்றனர் என பாலஸ்தீன அதிகார சபை தெரிவித்துள்ளது. மேற்குக் கரையில் உள்ள ஐக்கிய நாடுகளின் நிவாரண மற்றும் பணி அமைப்பின் இயக்குநரான ரோலண்ட் பிரீட்ரிக் இஸ்ரேல் தெரிவித்ததை ஏற்கமறுத்துள்ளதுடன் அதன் விளக்கங்கள் "இன்றைய சம்பவத்தின்தீவிரத்தை முழுமையாகப் பிடிக்கவில்லை" என்று கூறினார் இந்த சம்பவம் மேற்குக் கரையில் இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகளால் வழக்கமாகப் பயன்படுத்தப்படும் அதிகப்படியான பலத்தை தெளிவாக நினைவூட்டுகிறது. இது பெரும்பாலும் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்துகிறது" என்று பிரீட்ரிக் கூறினார். "இந்த சம்பவத்திற்குப் பிறகு ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுத்துறை உயர் பிரதிநிதி காஜா கல்லாஸ் "இராஜதந்திரிகளின் உயிருக்கு ஏற்படும் எந்தவொரு அச்சுறுத்தலும் ஏற்றுக்கொள்ள முடியாதது" என்று கூறினார். "இந்த சம்பவத்தை விசாரித்து இதற்குப் பொறுப்பானவர்களை பொறுப்பேற்கச் செய்ய இஸ்ரேலை நாங்கள் நிச்சயமாகக் கேட்டுக்கொள்கிறோம்" என்று கல்லாஸ் புதன்கிழமை ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார் மேற்குக் கரையில் உள்ள ஐக்கிய நாடுகளின் நிவாரண மற்றும் பணி அமைப்பின் இயக்குநரான ரோலண்ட் பிரீட்ரிக் இஸ்ரேலிய இராணுவத்தின் நிகழ்வுகள் குறித்த பதிப்பை மறுத்து அதன் விளக்கங்கள் "இன்றைய நிகழ்வின் தீவிரத்தை முழுமையாகப் பிடிக்கவில்லை" என்று கூறினார் இந்த சம்பவம் மேற்குக் கரையில் இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகளால் வழக்கமாகப் பயன்படுத்தப்படும் அதிகப்படியான பலத்தை மெதுவான முறையில் பயன்படுத்துவதை தெளிவாக நினைவூட்டுகிறது. இது பெரும்பாலும் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்துகிறது" என்று பிரீட்ரிக் கூறினார். "நிராயுதபாணியான பொதுமக்களுக்கு ஈடுபாட்டின் விதிகள் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பது குறித்து இது கடுமையான கவலைகளை எழுப்புகிறது. https://www.virakesari.lk/article/215390
  25. 22 MAY, 2025 | 03:21 PM இலங்கையில் இனிமேலும் பிரபாகரன் உப்பு என்று எதுவும் இல்லை என அமைச்சர் சுனில் ஹந்துநெத்தி தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுடனான கடும் வாக்குவாதத்தின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார். வடக்கு உப்பை தெற்கிற்கு விநியோகிப்பதற்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ஆனையிறவு உப்பு தொழிற்சாலையில் தொழிலாளர்களை போராட்டத்தில் ஈடுபடுத்தினார் என சுனில் ஹந்துநெத்தி தெரிவித்தார். வடக்கு உப்பு தெற்கு உப்பு என்று எதுவும் இல்லை. இலங்கையின் உப்பே உள்ளது. அந்த நாட்களில் நீங்கள் பிரபாகரன் உப்பை வைத்திருந்திருக்கலாம். ஆனால் அவ்வாறான இன்று அவ்வாறான உப்பு எதுவுமில்லை. நாங்கள் நாட்டை ஐக்கியப்படுத்திவிட்டோம் என தெரிவித்தார். இதற்கு பதிலளித்த அர்ச்சுனா நான் வடக்கு உப்பை தெற்கிற்கு வழங்கவேண்டாம் என தெரிவிக்கவில்லை தொழிலாளர்களின் பிரச்சினைகளிற்கு தீர்வை காணுங்கள் என்றே வேண்டுகோள் விடுத்தேன் என தெரிவித்தார். https://www.virakesari.lk/article/215409

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.