Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Everything posted by ஏராளன்

  1. பங்களாதேஷை 21 ஓட்டங்களால் வென்றது இங்கிலாந்து Published By: VISHNU 05 OCT, 2024 | 11:31 PM (நெவில் அன்தனி) ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஷார்ஜா கிரிக்கெட் விளையாட்டரங்கில் சனிக்கிழமை (05) நடைபெற்ற பி குழுவுக்கான ஐசிசி மகளிர் ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் பங்களாதேஷிடம் சிறு சவாலை எதிர்கொண்ட இங்கிலாந்து இறுதியில் 21 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் எதிரணிக்கு தன்னால் நிர்ணயிக்கப்பட்ட மிகக் குறைந்த மொத்த எண்ணிக்கையை தக்கவைத்து இங்கிலாந்து வெற்றி பெற்றது. சுழல்பந்துவீச்சுக்கு சாதகமாக அமைந்த ஆடுகளத்தில் உயரிய தரத்தைக் கொண்ட பந்துவீச்சு, ஆட்டத்தின் பிடி இங்கிலாந்திடமிருந்து நழுவாமல் இருப்பதை உறுதிசெய்தது. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இங்கிலாந்து 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 118 ஓட்டங்களைப் பெற்றது. இதுவரை நடைபெற்று முடிந்த 6 போட்டிகளில் நியூஸிலாந்தைத் தவிர முதலில் துடுப்பெடுத்தாடிய வேறு எந்த அணியும் 120 ஓட்டங்களை எட்டவில்லை. மாயா பௌச்சர், டெனி வியட் ஹொஜ் ஆகிய இருவரும் 48 ஓட்டங்களைப் பகிர்ந்து இங்கிலாந்துக்கு சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர். ஆனால், அதன் பின்னர் ஓட்ட வேகம் சிறுக சிறுக குறைந்தது.. 12 ஓவர்கள் நிறைவில் இங்கிலாந்து 3 விக்கெட்களை மாத்திரம் இழந்து 76 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. ஆனால், அதன் பின்னர் பங்களாதேஷின் சவால் மிக்க பந்துவீச்சுக்கு மத்தியில் கடைசி 8 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து இங்கிலாந்தினால் மேலதிகமாக 42 ஓட்டங்களையே பெறமுடிந்தது. துடுப்பாட்டத்தில் டெனி வியட் ஹொஜ் 41 ஓட்டங்களையும் மாயா பௌச்சர் 23 ஓட்டங்களையும் அமி ஜோன்ஸ் ஆட்டம் இழக்காமல் 12 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் பாஹிமா காத்துன் 18 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ரிட்டு மோனி 24 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் நஹிதா அக்தர் 32 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையம் கைப்பற்றினர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 97 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. பங்களாதேஷ் துடுப்பாட்டத்தில் இருவர் மாத்திரமே இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர். சோபனா மோஸ்தரி 44 ஓட்டங்களையும் அணித் தலைவி நிகார் சுல்தானா 15 ஓட்டங்களையும் பெற்றனர் பந்துவீச்சில் லின்சி ஸ்மித் 11 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் சாலி டீன் 22 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்டநாயகி: டெனி வியட் ஹொஜ் https://www.virakesari.lk/article/195587
  2. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, (சித்தரிப்புப் படம்) கட்டுரை தகவல் எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம் பதவி, பிபிசி தமிழ் 5 அக்டோபர் 2024 காஞ்சிபுரத்தில் 5 வயது சிறுவனை கொன்றதாக போக்சோ சட்டத்தின் கீழ் 34 வயதான அரசு ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அண்மைக்காலமாக இதுபோன்ற புகார்கள் அதிகம் வருவதாக கூறுகிறார், தமிழ்நாடு சமூகநலத்துறை அமைச்சர் கீதா ஜீவன். போக்சோ குற்றங்களுக்கு யார் காரணம்? குழந்தைகளை பெற்றோர் எவ்வாறு கையாள வேண்டும்? இந்த வழக்கில் கைதாகியுள்ள அரசு ஊழியரின் பெயர் ராஜேஷ். காஞ்சிபுரம் நில அளவைத் துறையில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த ராஜேஷ், பரந்தூர் விமான நிலையம் தொடர்பான நில அளவைப் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம், கருக்குப்பேட்டையைச் சேர்ந்த 5 வயது சிறுவனிடம் பாலியல் ரீதியாக அவர் அத்துமீற முயன்ற போது இந்த கொலை நடந்ததாக கூறப்படுகிறது. காஞ்சிபுரம் சம்பவம் - என்ன நடந்தது? மயக்கம் அடைந்த நிலையில் சிறுவனை அரசு மருத்துவமனைக்கு அவனது தாய் அழைத்துச் சென்றதாகவும், சிறுவன் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியதாகவும் காவல்துறையின் முதல் தகவல் அறிக்கை கூறுகிறது. சிறுவனின் உடலில் வெளிப்புற காயங்கள் இருந்ததை காவல்துறையின் கவனத்துக்கு மருத்துவர்கள் கொண்டு சென்றுள்ளனர். காவல் துறையினர் சிறுவனின் தாயிடம் விசாரித்த போதுதான், சிறுவனையும், அவனது 10 வயது சகோதரியையும் ராஜேஷ் அழைத்துச் சென்ற விவரம் தெரியவந்துள்ளது. சிறுவனின் சகோதரியிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ராஜேஷ் தன்பாலின உறவுக்கு கட்டாயப்படுத்தி சிறுவனை கடுமையாக தாக்கியது தெரியவந்ததை அடுத்து அவர் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் கூறினர். "சிறுவனின் தாய் சற்று அலட்சியமாக இருந்துவிட்டதுதான் இந்த கொலைக்கு காரணம். சிறுவனிடம் அந்த நபர் தவறாக நடந்து கொண்டது இது முதல்முறை அல்ல. முன்னரே இதுபோன்று சில முறை அவர் நடக்க முயன்றிருக்கிறார்." என பிபிசி தமிழிடம் தெரிவித்தார், காஞ்சி தாலுகா காவல்நிலைய ஆய்வாளர் சங்கரநாராயணன். படக்குறிப்பு, இந்த சம்பவம் குறித்து புகார் கொடுக்கப்பட்டுள்ள காஞ்சிபுரம் காவல் நிலையம் போக்சோ குற்றங்களுக்கு அதிகம் காரணமாக இருப்பது யார்? காஞ்சிபுரம் சிறுவன் கொல்லப்பட்ட சம்பவத்தில் குழந்தைகள் நலக் குழுவுக்கு தகவல் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டதாகக் கூறுகிறார் குழந்தைகள் நல ஆர்வலர் கன்யா. தமிழ்நாடு அரசின் சமூகநலத்துறை போதிய நடவடிக்கைகளை எடுத்து வருவதாக பிபிசி தமிழிடம் அவர் கூறினார். காஞ்சிபுரம் சம்பவத்தை சுட்டிக் காட்டிப் பேசிய கன்யா, "குழந்தைகளுக்கு நன்கு அறிமுகமான நபர்களால் தான் அவர்களுக்கு அதிகம் பாதிப்பு ஏற்படுகிறது. அவர்கள் உறவினர்களாகவோ, குடும்ப நண்பர்களாகவோ உள்ளனர். 'குட் டச்' 'பேட் டச்' குறித்து வகுப்பெடுக்க வந்த ஆலோசகரே கூட போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட சம்பவமும் நடந்துள்ளது." என்றார். குழந்தைகளைப் பாதுகாப்பது எப்படி? குழந்தைகளை பாதுகாப்பது எப்படி என்பது குறித்துப் பேசிய கன்யா, தாங்கள் சொல்லும் விஷயத்தை பெற்றோர் அடிக்காமல் கேட்க வேண்டும் என குழந்தைகள் விரும்புவதாக கூறுகிறார். "நெருங்கிய உறவினர் யாராவது குழந்தைக்கு அடிக்கடி முத்தம் கொடுத்தால் அந்த முத்தம் எங்கே, எவ்வாறு கொடுத்தார் எனக் கேட்டால் தெளிவாக குழந்தைகள் கூறிவிடுவார்கள். குழந்தைகளுக்கு அந்த நம்பிக்கையைக் கொடுத்து பேச வைக்க வேண்டும். அதனை பெற்றோர் கவனமாக கேட்க வேண்டும். குழந்தைகள் ஏதோ தவறு செய்துவிட்டதைப் போன்ற பிம்பத்தை ஏற்படுத்திவிடக் கூடாது" என்கிறார் கன்யா. படக்குறிப்பு, குழந்தைகள் நல ஆர்வலர் கன்யா போக்சோ வழக்குகளை கையாள்வதில் நீடிக்கும் சிக்கல் அதேநேரம், "போக்சோ வழக்குகளை கையாள்வது தொடர்பான சிக்கல்களை தமிழக அரசு களைய வேண்டும்" என்று குழந்தைகள் நல செயற்பாட்டாளர் தேவநேயன் அரசு வலியுறுத்தியுள்ளார். . "சிறார் நீதி சட்டத்தின்படி, ஒவ்வொரு காவல் நிலையத்திலும் குழந்தைகள் நல காவல் அலுவலர் இருக்க வேண்டும். ஆனால், அவர் முழுநேர அலுவலராக நியமிக்கப்படுவதில்லை" எனவும் அவர் கூறுகிறார். காவல்நிலையங்களில் சப்-இன்ஸ்பெக்டர் பதவியில் உள்ள ஓர் அதிகாரி, இதை கூடுதல் பொறுப்பாக கவனிப்பதாகவும் குழந்தைகளுக்குத் தனி அலகு (Unit) ஏற்படுத்தாத வரையில் பிரச்னை தீர வாய்ப்பில்லை எனவும் பிபிசி தமிழிடம் தெரிவித்தார். போக்சோ சட்டத்தைக் கண்காணிக்கும் மிக முக்கியமான தலைமை அமைப்பாக உள்ள மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் கடந்த 3 ஆண்டுகளாக செயல்படவில்லை என்று அவர் கூறுகிறார். "தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றத்திற்குப் பின்னர் முந்தைய ஆட்சியில் ஆணையத்தின் தலைவர் மற்றும் நிர்வாக பொறுப்புக்கு தேர்வு செய்யப்பட்டவர்களை தி.மு.க அரசு நீக்கிவிட்டது. அவர்கள் நீதிமன்றம் சென்று தடை வாங்கிவிட்டனர். இன்றளவும் அந்த தடை நீக்கப்படவில்லை" என்கிறார் தேவநேயன். படக்குறிப்பு, தமிழ்நாடு சமூகநலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் அமைச்சர் கீதாஜீவன் பதில் இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய தமிழ்நாடு சமூகநலத் துறை அமைச்சர் கீதா ஜீவன், " குழந்தைகள் நல உரிமை ஆணையம் தொடர்பான வழக்கில் விரைவில் தீர்ப்பு வரும் என நம்புகிறோம். தீர்ப்பு வந்துவிட்டால் குறுகிய காலத்தில் ஆணையத்தின் செயல்பாடுகளில் பெரிய மாற்றங்களைக் கொண்டு வருவோம்" என்றார். குழந்தை திருமணம் எங்காவது நடந்தால் மட்டுமே 1098 என்ற எண்ணுக்கு பலரும் போன் செய்வதாகக் கூறும் அமைச்சர் கீதா ஜீவன், "குழந்தைகள் தொடர்பான எந்தப் பிரச்னையாக இருந்தாலும் இந்த எண்ணில் பேசலாம். இந்த எண்ணை தொடர்பு கொண்டு தனது தந்தை மீது ஒரு குழந்தை புகார் கொடுத்தது. அந்த நபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்" என்று தெரிவித்தார். போக்சோ சட்டத்தின் கீழ் பெண் குழந்தைகள் பாதிக்கப்பட்டால், மருத்துவ பரிசோதனை, விசாரணை என அனைத்தையும் விரைந்து முடித்துவிட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளதாக கீதா ஜீவன் கூறினார். "மீண்டும் மீண்டும் வழக்கு என்ற பெயரில் அந்தக் குழந்தையைத் தொல்லை செய்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம். குழந்தைகளை எப்படி கையாள வேண்டும் என்பது குறித்து காவல்துறையினருக்கு தொடர் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன." என்றார் அமைச்சர் கீதா ஜீவன். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cx2m5rkm894o
  3. 05 OCT, 2024 | 12:29 PM டி.பி.எஸ். ஜெயராஜ் இலங்கையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிக்கவேண்டும் என்ற கோரிக்கை ஒன்றும் புதியது அல்ல. அந்த ஆட்சிமுறை என்றைக்கு அறிமுகப்படுத்தப்பட்டதோ அன்றிலிருந்தே அதை ஒழிக்கவேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டு வந்திருக்கிறது. ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிக்கப் போவதாக தேர்தல்களில் வாக்குறுதி அளித்து மக்களின் ஆணையைப் பெற்று ஜனாதிபதியாக ஆட்சியதிகாரத்துக்கு வந்தவர்கள் எவருமே அதை ஒழிக்கவில்லை என்பது அண்மைக்கால வரலாறு. இறுதியாக நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலிலும் பிரதான வேட்பாளர்களில் அநுரகுமார திசாநாயக்கவும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவும் ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிக்கப்போவதாக மக்களுக்கு வாக்குறுதி வழங்கினார்கள். அவர்களது தேர்தல் விஞ்ஞாபனங்களிலும் அதைக் குறிப்பிட்டிருந்தார்கள். அந்த ஆட்சிமுறையை ஒருபோதுமே ஆதரிக்காத ஜனதா விமுக்தி பெரமுனவின் (ஜே.வி.பி.) தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் தலைவர் திசாநாயக்க நாட்டின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக பதவியேற்றிருக்கிறார். அந்த பதவிக்கு வந்தவர்களில் எவருமே அதை ஒழிப்பதில் அக்கறை காட்டவில்லை. சிலர் ஏற்கெனவே ஜனாதிபதி பதவிக்கு இருந்த அதிகாரங்களை மேலும் அதிகரிப்பதற்கும் அரசியலமைப்பில் திருத்தங்களை கொண்டுவந்தார்கள் என்பது எம்மெல்லோருக்கும் தெரியும். ஜனாதிபதி திசாநாயக்கவும் அவர்களைப் போன்று அந்த வாக்குறுதியை நிறைவேற்றப் போவதில்லை என்று முன்கூட்டியே கூறுவது பொருத்தமில்லை என்றாலும் கூட அவரால் அதைச் செய்யக்கூடியதாக இருக்குமா என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது. திசாநாயக்க பதவியேற்று ஒரு சில தினங்களில் தேசிய மக்கள சக்தியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான சுனில் ஹந்துனெத்தி இலங்கை மக்கள் இறுதி நிறைவேற்று அதிகார ஜனாதிபதியை தெரிவு செய்திருக்கிறார்கள் என்று கூறியதைக் காணக்கூடியதாக இருந்தது. இத்தகைய பின்புலத்தில் இலங்கையில் ஜனாதிபதி ஆட்சிமுறையின் வரலாற்றை இந்த கட்டுரை திரும்பிப் பார்க்கிறது. ஜனாதிபதி ஆட்சிமுறைக்கு எதிராக கடந்த பல வருடங்களாக் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றபோதிலும், ஜனாதிபதிகளை தெரிவுசெய்வதற்கு மக்கள் தேர்தல்களில் பெருமளவு உற்சாகம் காண்பிப்பது ஒரு முரண் நகையாகும். ஜனாதிபதி ஆட்சிமுறை ஒரு புறத்தில் கடுமைான கண்டனங்களுக்கு உள்ளாகி வருகின்ற அதேவேளை, மறுபுறத்தில் ஜனாதிபதி தேர்தல்களில் மக்கள் பெருமளவு ஆர்வத்துடன் வாக்களிக்கிறார்கள். பெரிதும் பழிகூறப்படும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை ஜூனியஸ் றிச்சர்ட் ஜெயவர்தன தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தினால் 1978ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. வெஸ்ட்மினிஸ்டர் பாராளுமன்ற ஆட்சி முறையை இல்லாமல் செய்து ஜனாதிபதி ஆட்சிமுறையைக் கொண்டுவந்த அந்த அரசாங்கத்தில் அண்மையில் ஜனாதிபதி பதவியில் இருந்து இறங்கியிருந்த ரணில் விக்கிரமசிங்கவும் அங்கம் வகித்தார். நீண்ட வரலாறு ஜே.ஆர். ஜெயவர்தனவினால் அறிமுகப்படுத்தப்பட்ட ஜனாதிபதி ஆட்சிமுறை நீண்ட வரலாற்றை கொண்டது. பிரதமர் டட்லி சேனநாயக்க தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தில் (1965 - 1970) இராஜாங்க அமைச்சராக (தற்போதைய இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து வேறுபட்டது) பதவிவகித்த ஜெயவர்தன 1966 டிசம்பர் 14ஆம் திகதி கொழும்பில் விஞ்ஞான முன்னேற்றச் சங்கத்தில் பிரதம பேச்சாளராக கலந்துகொண்டு நிகழ்த்திய உரையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை பற்றிய தனது சிந்தனையை முன்வைத்து அமெரிக்க மற்றும் பிரெஞ்சு வகைமாதிரிகளை அடிப்படையாகக் கொண்ட ஜனாதிபதி ஆட்சிமுறை ஒன்றுக்கு ஆதரவாக வாதிட்டார். "நிறைவேற்று அதிகார தலைவர் நேரடியாக மக்களினால் தெரிவுசெய்யப்படுவார். அவர் குறித்துரைக்கப்படும் வருடங்களை உள்ளடக்கிய தனது பதவிக்காலம் முழுவதும் சட்டவாக்க சபையில் (பாராளுமன்றம்) தங்கியிருக்கமாட்டார். அவர் குறிப்பிட்ட வருடங்கள் பலம் வாய்ந்த நிறைவேற்று அதிகார பதவியில் இருப்பார். சட்டவாக்க சபையின் விருப்பு வெறுப்புகளுக்கு ஆளாகமாட்டார். பாராளுமன்ற கட்சியின் கண்டனத்துக்கு ஆளாகுவோமே என்ற பயத்தில் சரியான, ஆனால் பிரபலமான தீர்மானங்களை எடுக்காமல் விடமாட்டார்" என்று அவர் அந்த உரையில் கூறினார். "மக்களினால் நேரடியாக தெரிவுசெய்யப்படும் நிறைவேற்று அதிகார தலைவர் அதே மக்களினால் தெரிவுசெய்ப்படும் ஒரு பாராளுமன்றத்தின் விருப்பு வெறுப்புகளில் தங்கியிருக்கமாட்டார்" என்பதே ஜெயவர்தனவின் சிந்தனையின் சாராம்சம். அவரின் இந்த கருத்து அரசியல் அதிகார வர்க்கத்தின் மத்தியில் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. அந்த நேரத்தில் பிரதமர் டட்லி சேனநாயக்கவுக்கும் இராஜாங்க அமைச்சர் ஜெயவர்தனவுக்கும் இடையிலான உறவுகள் சீர்குலைந்திருந்தன. ஜெயவர்தனவின் யோசனையை டட்லி உறுதியாக எதிர்த்தார். ஐக்கிய தேசிய கட்சிக்குள் கூட ஒரு சிலரே ஜெயவர்தனவின் யோசனையை ஆதரித்தனர். அத்தகைய சூழ்நிலையின் தனது யோசனையை அவரால் முன்னோக்கி நகர்த்த முடியவில்லை. ஆனால் அந்த சிந்தனையை ஒருபோதும் கைவிடவில்லை. ஆறு வருடங்கள் கழித்து பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான ஐக்கிய முன்னணி அரசாங்க காலத்தில் (1970 - 1977) நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவி தொடர்பான தனது சிந்தனையை ஒரு புரிந்துகொள்ளத்தக்க முன்மொழிவின் வடிவில் முன்வைப்பதற்கு ஜெயவர்தனவுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. புதிய அரசியலமைப்பு ஒன்றை வரைவதற்காக பாராளுமன்றம் அரசியல் நிர்ணய சபையாக மாற்றப்பட்டது. அப்போது டட்லி ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக இருந்த அதேவேளை பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் பதவியை ஜெயவர்தன வகித்தார். இருவருக்கும் இடையிலான வேறுபாடுகள் தீவிரமடைந்த நிலையில் ஜெயவர்தன கட்சிக்குள் பெரும்பாலும் தனித்து தன்னெண்ணத்தில் செயற்படும் ஒருவராக விளங்கினார். அரசியல் நிர்ணய சபையில் ஜெயவர்தன 1971 ஜூலை 2ஆம் திகதி ஒரு பிரேரணையை முன்வைத்தார். "அரசின் நிறைவேற்று அதிகாரம் குடியரசின் ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்படும். அரசியலமைப்பின் ஏற்பாடுகளின் பிரகாரம் அவர் அதிகாரங்களை நடைமுறைப்படுத்துவார். 18 வயதுக்கு மேற்பட்ட குடிமக்களின் வாக்குகளினால் மாத்திரம் நேரடியாக தெரிவு செய்யப்படும் குடியரசின் ஜனாதிபதி ஏழு வருடங்கள் பதவிக்காலத்தைக் கொண்டிருப்பார். அமைச்சரவையின் தலைவராகவும் அவரே இருப்பார்" என்று அந்த பிரேரணையில் கூறப்பட்டது. கொழும்பு மத்திய தொகுதி பாராளுமன்ற உறுப்பினராகவும் எதிர்க்கட்சி பிரதம கொறடாவாகவும் இருந்த ரணசிங்க பிரேமதாச பிரேரணையை வழிமொழிந்தார். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறைக்கு ஆதரவாக ஜெயவர்தன அரசியல் நிர்ணய சபையில் தனது பேச்சுத்திறனை வெளிக்காட்டி வாதிட்டார். பிரேரணை நிராகரிக்கப்பட்டது. அவரின் பிரேரணைக்கு எதிரான அரசாங்கத்தின் தாக்குதல்களுக்கு அரசியலமைப்பு விவகார அமைச்சர் கலாநிதி கொல்வின் ஆர்.டி. சில்வா தலைமை தாங்கினார். டட்லி சேனநாயக்க உறுதியாக எதிர்த்த காரணத்தால் ஐக்கிய தேசிய கட்சியின் பெரும்பான்மையான பாராளுமன்ற உறுப்பானர்களும் ஜெயவர்தனவின் பிரேரணையை ஆதரிக்கவில்லை. அன்றைய அரசியல் நிர்ணய சபையினால் ஜெயவர்தன - பிரேமதாச பிரேரணை நிராகரிக்கப்பட்டது. ஐக்கிய முன்னணி அரசாங்கம் 1972 மே 22ஆம் திகதி புதிய குடியரசு அரசியலமைப்பை பிரகடனம் செய்தது. சோல்பரி அரசியலமைப்பின் கீழான மகாதேசாதிபதியை (Governor General) ஜனாதிபதி பதிலீடு செய்தார். தேசிய அரச சபை என்று அறியப்பட்ட பாராளுமன்றத்திடம் அதிகாரங்கள் ஒப்படைக்கப்பட்டன. வில்லியம் கோபல்லாவ சம்பிரதாயபூர்வமான அரச தலைவராக இருந்தபோதிலும், உண்மையான அதிகாரம் அன்றைய பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவிடமே இருந்தது. ஜே.ஆர். தலைமையில் ஐக்கிய தேசிய கட்சி டட்லி சேனநாயக்க 1973 ஏப்ரலில் காலமானதை அடுத்து ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக ஜெயவர்தன பொறுப்பேற்றார். தனது தலைமைத்துவத்தை மிகவும் விரைவாகவே நிலையுறுதிப்படுத்தக்கொண்ட அவர் கட்சியை முழுமையாக தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தார். இப்போது ஒரு வலுவான நிலையில் இருந்துகொண்டு நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை தொடர்பான தனது சிந்தனையை அவரால் முன்னெடுக்கக்கூடியதாக இருந்தது. "மக்களினால் தெரிவு செய்யப்படும் ஒரு ஜனாதிபதியிடம் நிறைவேற்று அதிகாரம் ஒப்படைக்கப்படும். எமக்கு பழக்கப்பட்டுவிட்ட பாராளுமன்ற முறையும் பேணப்படும். பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தைக் கொண்ட கட்சியில் இருந்து பிரதமரை ஜனாதிபதி தெரிவுசெய்வார். தெரிவுசெய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களே அமைச்சர்களாக இருப்பர்" என்று ஐக்கிய தேசிய கட்சியின் 1977 தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிக்கப்பட்டது. பிரதமர் ஆட்சிமுறையில் இருந்து நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறைக்கான மாற்றம் என்பதே அந்த தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதான பிரசாரப் பொருளாக அமைந்தது. மகத்தான வெற்றி பெற்ற அந்த கட்சி பாராளுமன்றத்தின் 168 ஆசனங்களில் 141 ஆசனங்களைக் கைப்பற்றியது. 1977 ஜூலையில் ஜெயவர்தன பிரதமராக பதவியேற்றார். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை அறிமுகப்படுத்தும் தனது சிந்தனையை நடைமுறைப்படுதும் நோக்கில் அவர் விரைவாகச் செயற்படத் தொடங்கினார். ஜே.ஆர். ஜெயவர்தனவும் சில அமைச்சர்களும் ஐக்கிய தேசிய கட்சியின் சில முக்கியஸ்தர்களும் (ஜே. ஆரின் சகோதரரர் எச்.டபிள்யூ. ஜெயவர்தன கியூ.சி. உட்பட) முன்னணி சட்ட அறிஞர் மார்க் பெர்னாண்டாவின் உதவியுடன் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை அறிமுகப்படுத்தும் இலக்கை நோக்கி செயற்படத் தொடங்கினர். பூர்வாங்க கலந்தாலோசனை 1977 ஆகஸ்ட் 7ஆம் திகதி இடம்பெற்றது. முதலில் 1972 அரசியலமைப்புக்கு திருத்தம் ஒன்று வரையப்பட்டது. அது குறித்து அமைச்சரவையில் ஆராயப்பட்ட பிறகு தேசிய நலனுக்கு அவசரமான ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டது. அதற்கு பிறகு அது தொடர்பான சட்டமூலம் 'அவசர சட்டமூலமாக' அந்த நேரத்தில் நடைமுறையில் இருந்த அரசியலமைப்பு நீதிமன்றத்துக்கு சபாநாயகரால் அனுப்பி வைக்கப்பட்டது. அந்த நீதிமன்றம் 24 மணி நேரத்துக்குள் சட்டமூலத்தை அங்கீகரித்தது. பிறகு தேசிய அரச சபையில் (பாராளுமன்றம்) விவாதித்து வாக்கெடுப்புக்கு விடப்படுவதற்காக சமர்ப்பிக்கப்பட்டது. 1972 குடியரசு அரசியலமைப்புக்கான இரண்டாவது திருத்தமாக அது 1977 செப்டெம்பர் 22ஆம் திகதி தேசிய அரச சபையினால் நிறைவேற்றப்பட்டது. நிறைவேற்று அதிகாரம் ஜனாதிபதிக்கு மாற்றப்பட்டது. இலங்கையின் முதலாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக ஜெயவர்தன 1978 பெப்ரவரி 4ஆம் திகதி (சுதந்திர தினம்) பதவியேற்றார். பாராளுமன்ற தெரிவுக்குழு அதேவேளை, 1972 அரசியலமைப்புக்கு பதிலாக புதிய அரசியலமைப்பு ஒன்றை கொண்டுவரும் இலக்கு நோக்கியும் ஜெயவர்தன செயற்படத் தொடங்கினார். தேசிய அரச சபையில் 1977 அக்டோபர் 20ஆம் திகதி நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஒன்றையடுத்து சபாநாயகர் ஆனந்த திஸ்ஸ டி அல்விஸ் அரசியலமைப்பு சீர்திருத்தத்துக்கான பாராளுமன்ற தெரிவுக்குழு ஒன்றை நியமித்தார். இலங்கை குடியரசு அரசியலமைப்பையும் எழுத்தில் உள்ள ஏனைய சட்டங்களையும் மீளாய்வு செய்வதே அந்த தெரிவுக்குழுவுக்கு உரிய ஆணையாகும். பாராளுமன்ற தெரிவுக்குழு 1977 நவம்பர் 3ஆம் திகதி அறிவிக்கப்பட்டது. பிரதமராக இருந்த ஜெயவர்தனவே தெரிவுக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார். அப்போது அவர் கொழும்பு மேற்கு தொகுதி உறுப்பினராக இருந்தார். பிறகு அவர் 1978ஆம் ஆண்டில் ஜனாதிபதியாக பதவியேற்றதை தொடர்ந்து பிரதமராக பதவியேற்ற பிரேமதாச தெரிவுக்குழுவுக்கு தலைவராக சபாநாயகரால் நியமிக்கப்பட்டார். ஏற்கெனவே அவர் தெரிவுக்குழுவின் உறுப்பினராக இருந்தார். காமினி திசாநாயக்க, லலித் அத்துலத் முதலி, றொனி டி மெல், கே.டபிள்யூ.தேவநாயகம், எம்.எச்.எம். நைனா மரிக்கார் ஆகியோர் தெரிவுக்குழுவுக்கு நியமிக்கப்பட்ட ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள். சிறிமாவோ பண்டாரநாயக்கவும் மைத்திரிபால சேனநாயக்கவும் தெரிவுக்குழுவுக்கு நியமிக்கப்பட்ட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறூப்பினர்கள். 1977ஆம் ஆண்டில் அரசாங்கத்தில் இணைந்துகொண்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமானும் தெரிவுக்குழுவில் இருந்தார். அந்த நேரத்தில் பாராளுமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சியான தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணி தெரிவுக்குழுவில் பங்கேற்பதற்கு மறுத்துவிட்டது. இடதுசாரி கட்சிகள் 1977 பொதுத் தேர்தலில் துடைத்தெறியப்பட்டதன் விளைவாக தெரிவுக் குழுவில் ரொட்ஸ்கியவாதிகளோ அல்லது கம்யூனிஸ்டுகளோ அந்த குழுவில் இடம்பெறுவதற்கு வாய்ப்பிருக்கவில்லை. முன்னதாக இரண்டாவது அரசியலமைப்பு திருத்தத்தின் கொண்டுவரப்பட்ட நிறைவேற்று ஜனாதிபதி பதவி புதிய அரசியலமைப்பு வரைவில் இப்போது சேர்க்கப்பட்டது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி இப்போது அரசினதும் அரசாங்கத்தினதும் தலைவர். தேர்தல் முறையும் தொகுதி அடிப்படையிலான முறையில் இருந்து விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறைக்கு மாற்றப்பட்டது. இலங்கை குடியரசு இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசாக மாறியது. "ஜே.ஆர். அரசியலமைப்பு" என்று பிரபல்யமாக கூறப்படும் புதிய அரசியலமைப்பு 1978 செப்டெம்பர் 7ஆம் திகதி பிரகடனம் செய்யப்பட்டது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவி உருவாக்கப்பட்டதை அடுத்து இலங்கையின் அரசியல் முறைமை பிரிட்டிஷ் வெஸ்ட்மினிஸ்டர் முறைமையில் இருந்து பிரெஞ்சு கோலிஸ்ட் அரசியலமைப்பை நெருக்கமாக ஒத்த முறைமையாக மாறியது. அதிகாரம் சம்பிரதாயபூர்வமான பதவியில் இருந்து மெய்யான அரச தலைவராக மாற்றப்பட்ட ஜனாதிபதிக்கு மாறியது. இதையடுத்து பிரதமர் பதவியின் மதிப்பு குறைக்கப்பட்டது. அவசரமாக நிறைவேறிய திருத்தம் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியை அறிமுகப்படுத்துவதற்கு புதிய அரசியலமைப்பை கொண்டுவருவதற்கு முன்னதாக 1972 குடியரசு அரசியலமைப்புக்கு இரண்டாவது திருத்தத்தை ஜெயவர்தன கொண்டு வந்தபோது பெருமளவு கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன. குறிப்பாக அந்த திருத்தத்தில் அவர் காட்டிய அவசரம் குறித்து கடுமையாக விசனம் தெரிவிக்கப்பட்டது. லங்கா சமசமாஜ கட்சியின் பழம்பெரும் ரொட்ஸ்கியவாத தலைவரான கலாநிதி என்.எம். பெரேரா அந்த விசனங்களை வெளிப்படுத்தி ஒரு பகிரங்க சொற்பொழிவை நிகழ்த்தினார். அது ஒரு நூலாகவும் வெளியிடப்பட்டது. அந்த நேரத்தில் அவர் பாராளுமன்ற உறுப்பினராக இருக்கவில்லை. "இந்த சட்டமூலத்தை பாராளுமன்றத்துக்கு கொண்டுவருவதற்கு காட்டப்பட்டிருக்கும் அவசரம் எமக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. அரசியலமைப்பு ஒன்றை திருத்துவதில் ஏன் இந்தளவு அவசரம்? எல்லாவற்றுக்கும் மேலாக அரசியலமைப்பு திருத்தங்கள் எனப்படுபவை ஓரிரு வருடங்களுக்கு உரியவை அல்ல. எல்லாக் காலங்களுக்கும் உரியவை. எழுதப்பட்ட அரசியலமைப்பைக் கொண்ட வேறு எந்த நாடுமே ஜெயவர்தன செய்வதைப் போன்று ஒரு திருத்தத்தை முன்யோசனையற்ற முறையில் அவசரமாக கொண்டுவந்திருக்கும் என்று நான் நினைக்கவில்லை. "பெரும்பாலான அரசியலமைப்பு திருத்தங்கள் பயனளிப்பதற்கு பல வருடங்கள் எடுக்கும். சில நாடுகள் திருத்தம் ஒன்றைக் கொண்டு வருவதற்கு முன்னதாக சர்வஜன வாக்கெடுப்பை நடத்தும். இந்த நாட்டில் ஜனாதிபதி ஆட்சிமுறை தொடர்பில் வேறுபட்ட அபிப்பிராயங்களை கொண்டவர்கள் பலர் இருக்கலாம். அவர்கள் தங்களது அபிப்பிராயங்களை பாராளுமன்றத்துக்கும் நாட்டு மக்களுக்கும் வெளிப்படுத்தி அவற்றை முழுமையாக பரிசீலனை செய்யுமாறு வலியுறுத்துவதற்கான உரிமையை ஏன் பறிக்கவேண்டும்?" என்று கலாநிதி பெரேரா கூறினார். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியை அரசியலமைப்பு திருத்தம் ஒன்றின் ஊடாக அவசரமாக கொண்டுவருவதற்குஎ பதிலாக புதிய அரசியலமைப்பு ஒன்றின் மூலமாக் ஏன் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தினால் கொண்டு வரமுடியாது என்பதே பல வட்டாரங்களிலும் கிளப்பப்பட்ட தர்க்க ரீதியான கேள்வியாகும். இந்த விமர்சனங்களை எல்லாம் பொருட்படுத்தாமல் ஜெயவர்தன 2வது திருத்தத்தை தான் நினைத்தபடி நிறைவேற்றினார். ஐக்கிய தேசிய கட்சி முகாமில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்களிடம் இருந்து எதிர்ப்புக் கிளம்புவதற்கு முன்னதாக அதைச் செய்துமுடித்துவிட வேண்டும் என்பதற்காகவே அந்தளவு அவசரத்தை ஜெயவர்தன காட்டினார். பிரதமர் பதவியை மலினப்படுத்தி பாராளுமன்றத்தின் பெறுமதியையும் குறைத்து தனியொருவரிடம் அதிகாரங்களை குவிக்க வழி செய்யும் முறைமை ஒன்றுக்கு பாராளுமன்ற உறுப்பினர்களிடமே அங்கீகாரத்தை கோருவது என்பது துணிச்சலானதும் ஆபத்தானதுமான காரியமாகும். அது தாங்களாக முன்வந்து மரக்குற்றியில் தலைகளை வைக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர்களை கேட்பதற்கு சமமானதாகும். அதனால் சாத்தியமானளவு விரைவாக நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியை கொண்டுவர வேண்டியது ஜெயவர்தனவை பொறுத்தவரை அவசரமானதாக இருந்தது. காலம் தாழ்த்தினால் சந்தேகங்களும் எதிர்ப்பும் கிளம்பக்கூடும். அதனால் ஜெயவர்தன தனது அதிகாரத்தை பலப்படுத்திக்கொண்டார். ரணசிங்க பிரேமதாச தலைமையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் அதற்கு "ஜெயவேவா" போட்டார்கள். பிரதமராக வந்ததன் மூலம் பிரேமதாச பெருமிதமடைந்தார். ஆனால், பிரதமர் பதவி என்பது "கௌரவமான பீயோனாக" தாழ்த்தப்பட்டதை அவர் விளங்கிக்கொள்வதற்கு அப்போது காலங் கடந்துவிட்டது. அரசியல் என்பது சாத்தியமானதை சாதிக்கும் கலையாகும். அதில் நேரம் முக்கியமானது. ஜெயவர்தனவைப் பொறுத்தவரை புதிய அரசியலமைப்பு ஒன்றின் ஊடாக தாமதமாக நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியை கொண்டுவருவதை விடவும் அரசியலமைப்பு திருத்தம் ஒன்றின் ஊடாக அதைச் செய்வது விருப்பத்துக்குரியதாக இருந்தது. அரசியலயைப்பு திருத்தம் என்பது உடனடி யதார்த்தம். புதிய அரசியலமைப்பு ஒன்று தொலைவில் உள்ள சாத்தியப்பாடு மாத்திரமே. அல்பிரட் ஜெயரத்தினம் வில்சன் ஜனாதிபதி ஆட்சிமுறை நிறுவப்பட்ட பிறகு பேராசிரியர் அல்பிரட் ஜெயரத்தினம் வில்சன் "ஆசியாவில் கோலிஸ்ட் முறைமை; இலங்கையின் அரசியலமைப்பு" என்ற நூலில் அது குறித்து ஆய்வு செய்தார். "உள்ளுக்குள் இருந்தோ அல்லது வெளியில் இருந்தோ எளிதில் தாக்கத்துக்கு உள்ளாகாத உறுதி வாய்ந்த நிறைவேற்று அதிகாரத்தை ஜெயவர்தன விரும்பினார். அதன் இறுதி விளைவே பல வழிகளிலும் அதுவும் குறிப்பிட்ட சில சூழ்நிலைகளில் பிரெஞ்சு ஜனாதிபதியையும் விட கூடுதலான அதிகாரங்களைக் கொண்ட இந்த ஜனாதிபதி பதவி" என்று அவர் எழுதினார். ஜெயவர்தன ஜனாதிபதி ஆட்சிமுறை ஒன்றை அறிமுகப்படுத்திய போதிலும் கூட, பாராளுமன்றத்துக்கு வெளியில் இருந்து அமைச்சரவையை நியமிக்கும் ஏற்பாட்டைக் கொண்டுவரவில்லை. அமைச்சரவைக்கு சமாந்தரமான ஒரு அதிகார மையமாக பலம்பொருந்திய ஜனாதிபதி செயலகம் ஒன்று இருப்பதையும் ஜெயவர்தன விரும்பவில்லை. ஏன் அது? அந்த விவகாரத்தில் பேராசிரியர் வில்சனின் விசேடமான கேள்விக்கு பதிலளித்த ஜெயவர்தன, "ஜனாதிபதியைச் சுற்றி இருக்கக்கூடிய ஆலோசகர்களை நியமிக்க நான் தயங்குகிறேன் என்பதை நான் நிச்சயம் கூறவேண்டும். அதற்கு காரணம் பிரதமரையும் அமைச்சரவை உறுப்பினர்களையும் மாத்திரமே ஜனாதிபதி ஆலோசகர்களாகக் கொண்டிருக்கவேண்டும். ஏனென்றால், பாராளுமன்ற உறுப்பினர்கள் என்ற வகையில் அவர்களே மக்களைப் பிரதிநிதித்துவம் செய்கிறார்கள்" என்று கூறினார். இந்த நிலைப்பாட்டை ஜெயவர்தன 1978 மே 31ஆம் திகதி இலங்கை பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் உரை நிகழ்த்தியபோது விபரித்துக் கூறினார். "நான் மக்களினால் தெரிவு செய்யப்பட்ட முதலாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி, அரச தலைவர், அரசாங்க தலைவர். இது அதிகாரம் மிக்க பதவி. அதனால் பொறுப்பு வாய்ந்த பதவி. எனக்கு பிறகு பலர் இந்த பதவிக்கு வரவிருப்பதால் அவர்கள் எல்லோரும் பின்பற்றுவதற்கு பெறுமதியான முன்னுதாரணங்களை எனது பதவிக் காலத்தில் உருவாக்க விரும்புகிறேன். முதலாவதாக, அமைச்சரவை மற்றும் பாராளுமன்றம் ஊடாகவே நான் எப்போதும் செயற்படுவேன். அவர்களது அதிகாரங்களை மலினப்படுத்தாமல் பாராளுமன்ற முறைமையை பேணுவேன். இரண்டாவதாக, ஜனாதிபதி மீது செல்வாக்கு செலுத்தக்கூடிய அவரின் ஆட்கள் என்று அறியப்படும் ஒரு குழுவை நான் உருவாக்கப்போவதில்லை" என்று அவர் தனதுரையில் கூறினார். ஜெயவர்தன நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக வந்தபோது பாராளுமன்றத்தில் ஆறில் ஐந்து பெரும்பான்மைப் பலத்தை அவர் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். "தரங்குறைக்கப்பட்ட" பாராளுமன்றத்தை விடவும் ஜனாதிபதி பதவி மேலானதாகவும் சுதந்திரமானதாகவும் இருந்தபோதிலும், ஜெயவர்தன சாத்தியமானளவுக்கு பாராளுமன்றத்தின் ஊடாக செயற்படுவதற்கே விருப்பினார். அது உண்மையில் அவரின் பொம்மையாக இருந்ததே அதற்கு காரணமாகும். தவிரவும், அவ்வாறு செய்வது ஒரு சர்வாதிகாரி போன்று அதிகாரத்தை அபகரித்துவிட்டதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களின் கடுமையை தணிக்கவும் உதவியது. அவ்வாறாக பாராளுமன்றத்தில் ஐக்கிய தேசிய கட்சிக்கு இருந்த பிரமாண்டமான பெரும்பான்மை ஜெயவர்தன சர்வாதிகாரி என்று நாமம் சூட்டப்படாமலேயே ஒரு சர்வாதிகாரியை போன்று ஆதிக்கப் போக்குடன் அதிகாரத்தை பயன்படுத்த உதவியது. இவை எல்லாவற்றுக்கும் பாராளுமன்றத்தின் மீது முழுக்கட்டுப்பாடு தேவைப்பட்டது. சர்ச்சைக்குரிய பல வழிமுறைகளின் ஊடாக பாராளுமன்றத்தை தனது கட்டுப்பாட்டில் அவர் தொடர்ந்து வைத்திருந்தார். மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிறகு பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சி மாறுவதை ஜே.ஆரின் அரசியலைமைப்பு தடுத்தது. பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத் தரப்பில் இருந்து எதிர்க்கட்சிக்கு மாறுவதை அரசியலயைப்பு ரீதியான சட்டத்தின் மூலமாக அவர் தடுத்தார். ஜெயவர்தனவும் பிரேமதாசவும் ஐக்கிய தேசிய கட்சியின் தளத்தை சமூகத்தின் பல தரப்பினரையும் உள்ளடக்கியதாக விரிவுபடுத்தியதன் விளைவாக 1977 பொதுத் தேர்தலில் பெருமளவு "சாமானியர்கள்" பாராளுமன்றத்துக்கு தெரிவானார்கள். கடுமையான உயர் வர்க்க உணர்வு கொண்ட ஜெயவர்தன மக்கள் பிரதிநதிகளின் விசுவாசங்கள் குறித்து நம்பிக்கையற்றவராக இருந்தார். அதனால் அரசாங்கத்தின் உறுதிப்பாட்டைப் பேணிப் பாதுகாப்பதற்கு கட்சிமாறலை தடுக்க வேண்டியிருந்தது. என்றாலும், மட்டக்களப்பு தொகுதி தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்லையா இராஜதுரை அரசாங்கத்துடன் இணைவதற்கு வசதியாக ஜெயவர்தன அரசியலமைப்புக்கு திருத்தம் ஒன்றைக் கொண்டுவந்தார். அபகீர்த்தி மிக்க அந்த "இராஜதுரை திருத்தம்" எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்க பங்கத்துக்கு வருவதற்கு வசதியாக அமைந்தது. ஆனால், அரசாங்க பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சி தரப்புக்கு செல்லமுடியாது. பிரமாண்டமான பாராளுமன்ற பெரும்பான்மைப் பலத்தை பேணுவதற்கு இன்னொரு சூழ்ச்சித்தனமான வழிமுறையையும் ஜெயவர்தன கையாண்டார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் எஸ். தொண்டமானைத் தவிர அரசாங்கத்தின் ஏனைய சகல பாராளுமன்ற உறுப்பினர்களிடம் இருந்தும் திகதியிடப்படாத பதவிவிலகல் கடிதங்களை அவர் கேட்டுப் பெற்றுக்கொண்டார். கட்சிக்கு அவர்கள் துரோகம் இழைப்பதை அது தடுத்தது. பழிப்புக்குள்ளான சர்வஜன வாக்கெடுப்பு 1982ஆம் ஆண்டின் சர்வஜன வாக்கெடுப்பு ஜெயவர்தன செய்த மிகப் பெரிய ஜனநாயக விரோதச் செயலாக அமைந்தது. 1977ஆம் ஆண்டில் தெரிவுசெய்யப்பட்ட பாராளுமன்றத்தின் பதவிக்காலத்தை இன்னொரு ஆறு வருடங்களுக்கு நீடிப்பதற்கு சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றை நடத்தி அதில் அவர் வெற்றியும் பெற்றார். பாராளுமன்ற தேர்தல் 1983ஆம் ஆண்டில் நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஜெயவர்தனவின் ஜனாதிபதி பதவிக்காலம் முடிவடையும் வரை ஐக்கிய தேசிய கட்சியின் ஆறில் ஐந்து பாராளுமன்ற பெரும்பான்மையை வைத்திருப்பதே அதன் நோக்கமாகும். இதே ஜெயவர்தனதான் சிறிமாவோ பண்டாரநாயக்க அரசாங்கம் பாராளுமன்றத்தின் பதவிக்காலத்தை 1975ஆம் ஆண்டில் இருந்து 1977ஆம் ஆண்டு வரை நீடித்ததை ஜனநாயக விரோத நடவடிக்கை என்று ஆட்சேபித்தார். கொழும்பு தெற்கு பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகிய அவர் "ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக" 1975ஆம் ஆண்டில் நடைபெற்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு பெருவெற்றி பெற்றார். தனது ஆட்சிக்காலத்தில் பாராளுமன்றத்தின் பதவிக்காலத்தை ஆறு வருடங்கள் நீடிப்பதில் அவருக்கு எந்த மன உறுத்தலும் இருக்கவில்லை. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை இப்போது 46 வருடங்களாக நடைமுறையில் இருக்கிறது. அதன் ஆரம்பத்தில் இருந்தே அந்த ஆட்சி முறை கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகி வந்திருக்கிறது. இலங்கையில் தவறாகிப்போன சகல விடயங்களுக்கும் ஜே.ஆரின் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சி முறை மீதே பழிபோடப்பட்டது. இலங்கையில் உள்ள சகல கெடுதிகளுக்கும் மூல காரணம் ஜனாதிபதி ஆட்சி முறையே என்று கண்டனம் செய்வது அரசியல் ரீதியில் ஒரு நாகரிகமாகிவிட்டது. 1991ஆம் ஆண்டில் முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவுக்கு எதிராக காமினி திசாநாயக்கவும் லலித் அத்துலத் முதலியும் கிளர்ச்சி செய்யத்தொடங்கிய நாள் முதலாக இலங்கையின் அரசியல் விவாதத்தில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிப்புக் கோரிக்கை ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இலங்கையில் முதலாவது சிங்கள பேசும்படம் 1947ஆம் ஆண்டில் வெளியானது. அந்த படத்தின் பெயர் "கடவுனு பொறந்துவ" (மீறப்பட்ட வாக்குறுதி) என்பதாகும். ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பது என்ற வாக்குறுதியைப் பொறுத்தவரை கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக இலங்கை மக்கள் மீறப்பட்ட வாக்குறுதிகளையே பார்த்து வருகிறார்கள். ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பதாக தேர்தல்களில் வாக்குறுதி அளிக்கும் வேட்பாளர்கள் வெற்றிபெற்று பதவிக்கு வந்ததும் அதை நிறைவேற்றாமல் விட்டதே இதுவரையான அனுபவமாக இருக்கிறது. பல்வேறு அரசாங்கங்கள் வந்து போய்விட்டன. பல ஜனாதிபதிகளும் வந்து போய்விட்டார்கள். ஆனால், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சி முறை தொடர்ந்துகொண்டே இருக்கிறது. அதை ஒழிப்பது தொடர்பில் பொதுவில் அரசியல் கட்சிகளினாலும் குறிப்பாக பிரதான கட்சிகளினாலும் கருத்தொருமிப்புக்கு வரமுடியாமல் இருப்பது அல்லது கருத்தொருமிப்புக்கு வர விருப்பமில்லாமல் இருப்பதே இதற்கு காரணமாகும். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பதையோ அல்லது அதன் அதிகாரங்களை குறைப்பதையோ அரசியலமைப்பு திருத்தம் ஒன்றின் ஊடாக அல்லது புதிய அரசியலமைப்பு ஒன்றின் ஊடாக மாத்திரமே செய்யமுடியும். இதற்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவு தேவை என்பதுடன் சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றின் மூலமாக மக்களின் அங்கீகாரமும் பெறப்படவேண்டும். மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தைக் கொண்டிருந்த அரசாங்கங்கள் ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிக்கவில்லை. அதேவேளை ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பதற்கு விரும்பிய அரசாங்கங்களுக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருக்கவில்லை. அல்பிரட் ரெனிசனின் நீரோடை விருப்பம் இருந்த இடத்தில் அதிகாரம் இருக்கவில்லை. அதிகாரம் இருந்த இடத்தில் விருப்பம் இருக்கவில்லை. அதனால் ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பது தொடர்பில் முக்கிய அரசியல் கட்சிகள் மத்தியில் கருத்தொருமிப்பு நழுவிக்கொண்டே செல்கிறது. ஜனாதிபதிகள் வரலாம் போகலாம். ஆனால், ஜே.ஆர். ஜெயவர்தனவின் நிறைவேற்று ஜனாதிபதி ஆட்சிமுறை ஆங்கிலேயக் கவிஞர் அல்பிரட் ரெனிசனின் நீரோடை போன்று என்றென்றைக்கும் ஓடிக்கொண்டேயிருக்கும். https://www.virakesari.lk/article/195539
  4. "கொட்டுக்காளி" இயக்குநரிடம் சில கேள்விகள் "கொட்டுக்காளி" படத்தின் மையச் சேதி இந்த ஒரு வரிதான் - ஆண்கள் எல்லாரும் கொடூரமானவர்கள், கேவலமானவர்கள், படுபயங்கரமானவர்கள். நாம் இயக்குநரிடம் கேட்க வேண்டியது ஒரே ஒரு கேள்வியைத்தான்; அதற்கு அவர் பதிலளிக்கும்வரை பலவிதங்களில் கேட்க வேண்டியுள்ளது - ஐயா, இந்தப் படத்தை எடுத்த நீங்கள் ஆண் அல்லவா? இயக்குநர்: அது வந்துங்க நான் ஆம்பளதான், ஆனால் கெட்ட ஆம்பிளை இல்ல. முற்போக்கு முகாமை சேர்ந்த ஆம்பள. நாங்க அடிப்படையிலே ரொம்ப நல்லவங்க. நம் கேள்வி: ஏன் உங்கள மாதிரி நல்ல ஆண்கள் உங்க படத்தில வரதில்ல? இயக்குநர்: என் படம் கிராமத்துல நடக்குது. அங்க எல்லா ஆம்பளங்களும் இப்படித்தான். நம் கேள்வி: நீங்க கிராமத்தை சேர்ந்தவர் இல்லையா? இயக்குநர்: ஆமாங்க, ஆனா நாங்கல்லாம் படிச்சி சிந்திச்சு வித்தியாசமா நல்லவங்களா இருப்போம். நம் கேள்வி: உங்களை மாதிரி ஆம்பளைகளை வச்சு எதிர்காலத்தில படமெடுப்பீங்களா? இயக்குநர்: நாங்க சிறுபான்மையானவங்க. பெரும்பான்மை ஆண்களைப் பத்தி தானே படம் எடுக்க முடியும்? நம் கேள்வி: பெரும்பான்மையின்னா நீங்க அதுக்கு எதாவது ஆய்வு பண்ணியிருக்கீங்களா? புள்ளி விபரம் இருக்குதா? இயக்குநர்: என் வாழ்க்கையில நான் பார்த்த ஆண்களை வச்சு எடுத்திருக்கேன். நம் கேள்வி: அவங்க நீங்க பார்த்த ஒருசிலர் தானே? இயக்குநர்: இலக்கியத்தில, சினிமாவில இந்த மாதிரி படுகேவலமான கொடூரமான ஆண்கள் பற்றி சொல்லப்பட்டிருக்கே... நம் கேள்வி: அவை தனிப்பட்ட பதிவுகள், கற்பனை. சரி விடுங்க, நமது முதல்வர் ஸ்டாலின் இப்படி கொடூரமான கேவலமான மட்டமான ஆம்பளையா? இயக்குநர்: இல்லீங்க. நம் கேள்வி: நமது துணை முதல்வர் உதயநிதி, நமது பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர், முப்படைத் தளபதிகள், தமிழ்நாட்டு சட்டசபையிலும் நாடாளுமன்றத்திலும் கணிசமாக உள்ள ஆண்கள்? இயக்குநர்: இல்லீங்க. நம் கேள்வி: உங்களுக்கு ஆதரவளித்த இயக்குநர் ராம்? உங்கள் படங்களின் தயாரிப்பாளர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், வெற்றிமாறன், சூரி... இயக்குநர்: சத்தியமா இல்ல பாஸ். நம் கேள்வி: அப்போ யாரைப் பத்தித்தான் படம் எடுக்கிறீங்க? இயக்குநர்: பெரும்பான்மை ஆண்களுங்க. நம் கேள்வி: யாரு உங்க படத்தை திரையரங்கிலும், ஒ.டி.டியிலும் பார்க்கிறவர்களா? இயக்குநர்: ச்சேச்சே! நம் கேள்வி: அப்போ யாருதாங்க அது? இயக்குநர்: ஆணினமின்னு பொதுவா சொல்லலாம். நம் கேள்வி: மேற்சொன்னவர்கள் எல்லாரும் ஆணினம் தானே? இயக்குநர்: இல்லீங்க. நம் கேள்வி: சரி அந்தக் கொடூரமான பயங்கரமான படுகேவலமான ஆண்கள் யார்? இயக்குநர்: பாஸ், இப்படி ஆம்பளைத் திட்டிப் படமெடுத்தா அவார்டு கெடைக்குன்னு சொன்னாங்க. அதான் எடுத்தேன். என்னை விட்டிருங்க. நம் கேள்வி: யாருங்க சொல்லித் தந்தது? முற்போக்கு சிந்தனைகளைப் படித்தும் எழுதியும் தேர்ந்த சிந்தனையாளராக இருந்துகொண்டே தன் குடும்பத்தை சேர்ந்தவர்கள் இளைஞர்களை பலாத்காரம் செய்தால், சுரண்டினால் அக்குற்றங்களைத் தெரிந்தும் எதிர்க்காமல் நைசாக இருந்துவிட்டு வெளியே பெண்ணியம் பேசுகிறவர்களின் முற்போக்கு முகாமா? படித்தும் தீமைக்குத் துணைபோகிறவர்கள் படிக்காத முரட்டு ஆண்களை விடக் கேவலம் அல்லவா? இயக்குநர் தலைதெறிக்க ஓடுகிறார்! Posted 2 days ago by ஆர். அபிலாஷ் http://thiruttusavi.blogspot.com/2024/10/blog-post.html
  5. இலங்கை போன்ற அண்டை நாடுகள் இந்தியாவுக்கு மிகவும் முக்கியமானவை; ஜெய்சங்கர்! 05 OCT, 2024 | 05:24 PM (நமது நிருபர்) இலங்கை போன்ற அண்டை நாடுகள் இந்தியாவுக்கு மிகவும் முக்கியமானவை என்றும் இந்தியாவில் இலங்கை பற்றிய மிகுந்த நல்லெண்ணம் இருப்பதாகவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுடனான சந்திப்பில் தெரிவித்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர், தனது நெருங்கிய கடல்சார் அண்டை நாடாகவும் நெருக்கடியில் கைகொடுக்கும் நட்பு நாடாகவும் இலங்கைக்கான இந்தியாவின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை வலியுறுத்துவதே தனது விஜயத்தின் முக்கிய நோக்கமாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார். ஒருநாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்திருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் நேற்றுமுன்தினம் பிற்பகல் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை பிரதமர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடியிருந்தார். இதன்போதே இந்தியவெளிவிவகார அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டிருந்தார். ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்திக் கூட்டணி வெற்றி பெற்றதற்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்த்துக்களை இதன்போது இந்தியவெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்திருந்தார். ஏற்கனவே இரு நாடுகளுக்கு இடையேயான நெருங்கிய இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கான இந்தியாவின் ஒத்துழைப்பு தொடர்ந்தும் இருக்கும் என அவர் இதன்போது பிரதமரிடம் உறுதியளித்தார். பல வருடங்களாக இலங்கைக்கு இந்தியா வழங்கிய உதவிகளுக்கு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நன்றி தெரிவித்தததுடன் இலங்கையின் விரைவான பொருளாதார அபிவிருத்திக்கு தொடர்ச்சியாக இந்தியாவின் ஆதரவின் அவசியத்தையும் வலியுறுத்தினார். அத்துடன் இலங்கை பொருளாதார ஸ்திரத்தன்மையின் ஒரு நிலைமாற்றக் காலத்தை கடந்து வருவதாகவும் குறிப்பிட்டார். டிஜிட்டல் மயமாக்கல் முயற்சிகள் குறித்து வலியுறுத்திய பிற்பாடு கிராமப்புறங்களுக்கு டிஜிட்டல் மயமாக்கலை விரிவுபடுத்துவதில் இந்தியாவின் பரந்த அனுபவத்திலிருந்து இலங்கை பயனடையலாம் என தெரிவித்த பிரதமர் விரயம் ஊழல் மற்றும் பரிவர்த்தனைகளில் முறைகேடுகளைக் குறைப்பதற்கும் உற்பத்தியாளர்கள் கொள்வனவாளர் மற்றும் விவசாய சமூகத்திற்கு மகத்தான அனுகூலங்களைக் கொண்டு வருவதற்கும் டிஜிட்டல் மயமாக்கல் முக்கியமானது என்பதை ஏற்றுக்கொள்வதாகவும் குறிப்பிட்டிருந்தார். இலங்கையுடன் டிஜிட்டல் தளம் தொடர்பான அறிவை இந்தியா தொடர்ந்து பகிர்ந்து கொள்ளும் என்று அமைச்சர் ஜெய்சங்கர் உறுதியளித்ததுடன் கதி சக்தி (நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் இலங்கை அரச ஊழியர்களுக்கு அபிவிருத்தித் திட்ட நடைமுறைப்படுத்தலை விரைவாகக் கண்காணிப்பதற்கான வழிமுறைகள் குறித்து பயிற்சியளிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். சுங்கம் இறை வரி தபால் திணைக்களம் உள்ளிட்ட பல துறைகளுக்கான திறன் விருத்தித் திட்டங்களை இந்தியா விரிவுபடுத்த முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார். இலங்கை போன்ற அண்டை நாடுகள் இந்தியாவுக்கு மிகவும் முக்கியமானவை என்றும் இந்தியாவில் இலங்கை பற்றிய மிகுந்த நல்லெண்ணம் இருப்பதாகவும் அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார். தனது நெருங்கிய கடல்சார் அண்டை நாடாகவும் நெருக்கடியில் கைகொடுக்கும் நட்பு நாடாகவும் இலங்கைக்கான இந்தியாவின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை வலியுறுத்துவதே தனது விஜயத்தின் முக்கிய நோக்கமாகும் என்றும் அவர் கூறினார்.இதன்போது வெவ்வேறு துறைகளில் பரஸ்பர நன்மை பயக்கும் ஒத்துழைப்பு குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது. https://www.virakesari.lk/article/195573
  6. ஆஸி.யிடமும் தோல்வி அடைந்ததால் முதல் சுற்றுடன் வெளியேறும் நிலையில் இலங்கை Published By: VISHNU 05 OCT, 2024 | 08:40 PM (நெவில் அன்தனி) ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஷார்ஜா கிரிக்கெட் விளையாட்டரங்கில் சனிக்கிழமை நடைபெற்ற ஏ குழுவுக்கான ஐசிசி மகளிர் ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் நடப்பு சம்பியன் அவுஸ்திரேலியாவிடம் 6 விக்கெட்களால் தோல்வி அடைந்த இலங்கை, முதல் சுற்றுடன் வெளியேறும் நிலையை எதிர்கொண்டுள்ளது. நடப்பு உலக சம்பியன் இலகுவான வெற்றியுடன் ஒன்பதாவது ஐசிசி மகளிர் உலகக் கிண்ண அத்தியாத்தை நம்பிக்கையுடன் ஆரம்பித்துள்ளது. ஏற்கனவே பாகிஸ்தானிடம் தோல்வி அடைந்த இலங்கை, இவ் வருட மகளிர் ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் அடைந்த 2ஆவது தொடர்ச்சியான தோல்வி இதுவாகும். பாகிஸ்தானுடனான முதலாவது போட்டியில் போன்றே அவுஸ்திரேலியாவுடனான போட்டியிலும் இலங்கையின் துடுப்பாட்டம் சிறப்பாக அமையவில்லை. இந்த இரண்டு போட்டிகளிலும் இலங்கை 100 ஓட்டங்களை எட்டத்தவறியது. இன்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இலங்கை 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 93 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. ஆரம்ப வீராங்கனைகளான விஷ்மி குணரட்ன (0), அணித் தலைவி சமரி அத்தபத்து (3) ஆகிய இருவரும் முதல் 3 ஓவர்களுக்குள் ஆட்டம் இழந்ததுடன் கவிஷா டில்ஹாரி (5) 7ஆவது ஓவரில் வெளியேறியமை இலங்கைக்கு பேரிடியைக் கொடுத்தது. ஹர்ஷித்தா சமரவிக்ரமவும் நிலக்ஷிகா சில்வாவும் 4ஆவது விக்கெட்டில் 31 ஓட்டங்களைப் பகிர்ந்து இலங்கை அணிக்கு சிறு உற்சாகத்தைக் கொடுத்தனர். ஆனால், ஹர்ஷித்தா சமரவிக்ரம ஆட்டம் இழந்ததும் மேலும் 3 வீக்கெட்கள் சீரான இடைவெளியில் வீழ்த்தப்பட்டன. துடுப்பாட்டத்தில் நிலக்ஷிகா சில்வா (29), ஹர்ஷிதா சமரவிக்ரம (23), அனுஷிக்கா சஞ்சீவனி (16) ஆகிய மூவரே இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர். பந்துவீச்சில் மெகான் சூட் 12 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் சொஃபி மொலினொக்ஸ் 20 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். 94 ஓட்டங்கள் என்ற மிக இலகுவான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 12.2 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 94 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது. அணித் தலைவி எலிசா ஹீலி (4), ஜோர்ஜியா வெயாஹாம் (3), எலிஸ் பெரி (17) ஆகிய மூவரும் ஆட்டம் இழக்க 6ஆவது ஓவரில் அவுஸ்திரேலியாவின் மொத்த எண்ணிக்கை 35 ஓட்டங்களாக இருந்தது. ஆனால், பெத் மூனி, ஏஷ்லி கார்ட்னர் (12) ஆகிய இருவரும் 4ஆவது விக்கெட்டில் 43 ஓட்டங்களைப் பகிர்ந்து அவுஸ்திரேலியாவின் வெற்றியை இலகுவாக்கினர். திறமையாகத் துடுப்பெடுத்தாடிய பெத் மூனி 43 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். அவரை விட எலிஸ் பெரி 17 ஓட்டங்களையும் ஏஷ்லி கார்ட்னர் 12 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் சுகந்திகா குமாரி 16 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் உதேஷிகா ப்ரபோதனி 19 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் இனோக்கா ரணவீர 20 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். ஆட்டநாயகி: மெகான் ஷூட் https://www.virakesari.lk/article/195586
  7. 05 OCT, 2024 | 05:29 PM திருகோணமலை மாவட்டம் குச்சவெளி பிரதேச செயலக பிரிவில் உள்ள மக்களின் விவசாய நிலங்களை தொல்பொருள் நிலம் என பிக்கு ஒருவர் கூறி வருவதால் அப்பகுதி மக்கள் பாரிய இடையூறுகளை சந்தித்து வருகின்றனர். புதிய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் ஆட்சியிலாவது இதற்கு உரிய தீர்வை பெற்றுத்தர வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருகோணமலை திரியாய்க் கிராமத்தின் பூர்விக வயல் நிலங்களில் முக்கிய வயல் வெளிகளான வளத்தாமரை, ஆதிக்காடு, ஒட்டுப்புல்மோட்டை, நீராவிக்கண்டல் மற்றும் வேடன்குளம் என உள்ளடக்கிய வயல் வெளிகளில் மக்கள் பரம்பரை பரம்பரையாக வயற்செய்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் புல்மோட்டை அரிசிமலைப் பிக்கிவினால் அடாவடியாக கையகப்படுத்தப்பட்ட 88 ஏக்கர் பொதுமக்களின் உறுதிக் காணியில் விவசாயம் மேற்கொள்ள பாரிய சிரமத்தை மக்கள் எதிர்கொள்கின்றனர். வருடா வருடம் பெரும் போக வயற்செய்கையின் போதும் இவவிதமான நெருக்கடிகளை மக்கள் எதிர்கொள்வதும் பின் பிக்குவின் அடாவடியினால் பயந்து இருப்பதுமான அவல நிலையில் மக்கள் இருக்கின்றனர். நீதிமன்றினால் மக்களிடம் காணிகளை கையப்படுத்தக் கோரியும் பிக்கு அடாவடியான முறையில் இச்செய்யற்பாட்டை முன் எடுப்பது குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/195558
  8. இலங்கையிலே இருக்கின்ற கட்டமைப்பு முறைமை, அரசியல் கலாசாரத்தை கொண்டு நகர்த்துவதற்கு இருக்கக்கூடிய முறைமையாகும். இந்த முறைமை இலஞ்சம், ஊழல், மோசடி அதேபோல் பொதுச் சொத்துக்களை வீண்விரயம் செய்தல் போன்றவற்றை மையப்படுத்தி இருக்கக்கூடிய அரசியல் கலாசாரம் ஆகும். அந்தவகையில் நாட்டில் ஊழல் மேலோங்கி இருந்த வேளையில் ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதியாக பொருளாதார நெருக்கடியான காலத்தி்ல் தேர்ந்தெடுத்தோம். ஆனால் அக்காலப்பகுதியிலே நாட்டிலே ஊழல் இன்னும் தலைதூக்கியது. இந்நிலையில் தற்போது ஜனாதிபதி அநுர கூறியது போல ஊழல் விபரங்கள் அடங்கிய அனைத்து கோப்புக்களுக்கும் எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் நாம் 2/3 பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் போது இவை அனைத்திற்கும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய மக்கள் சக்தியின் வடக்கு மாகாண ஒருங்கிணைப்பாளர் அருள் கோகிலன் உடனான சிறப்பு நேர்காணலின் போது குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கைளில், https://tamilwin.com/article/information-files-containing-corruption-details-1728126728#google_vignette
  9. எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்படட 50 தமிழக மீனவர்கள் விடுவிப்பு! 05 OCT, 2024 | 04:37 PM இலங்கைக் கடற்பரப்புக்குள் எல்லைதாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 50 பேர் தமிழக மீனவர்கள் நேற்று வெள்ளிக்கிழமை (04) விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று இலங்கைக்குப் பயணம் மேற்கொண்ட நிலையில், அவர் தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசியல் பிரதிநிதிகள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தனர். அத்துடன், தமிழகத்தில் நேற்றுமுன்தினம் உணவுத் தவிர்ப்புப் போராட்டமும் இடம்பெற்றது. இவ்வாறானதொரு பின்னணியிலேயே, இலங்கைச் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 50 மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். பருத்தித்துறையை அண்மித்த கடற்பரப்பில் கடந்த 21ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்த 37 மீனவர்களும் நேற்று பருத்தித்துறை நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம் கடுமையான எச்சரிக்கை விடுத்ததுடன் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனைகளை விதித்து அவர்களை விடுவித்தது. அத்துடன் 13 மீனவர்களுக்கு எதிரான வழக்கு ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டதுடன் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். மேலும் 4 மீனவர்களுக்கு தலா ஓர் ஆண்டும், இன்னொருவருக்கு ஒன்றரை ஆண்டும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/195554
  10. அரச புலனாய்வு சேவையின் புதிய பணிப்பாளராக பிரதி பொலிஸ்மா அதிபர் தம்மிக்க குமார நியமிக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் திங்கட் கிழமை அவர் பதவியேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஓய்வு பெற்ற மேஜனர் ஜெனரல் சுரேஸ் சாலேயின் இடத்துக்கே அவர் நியமிக்கப்பட்டுள்ளார். சுரேஸ் சாலே ஓய்வு ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் சுரேஸ் சாலே நேற்றையதினம் முதல் பதவியில் இருந்து ஓய்வு பெற்றதாக அறிவிக்கப்படுகின்றது. முன்னதாக உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் பிரித்தானிய ஊடகம் ஒன்று கிழக்கு மாகாண முன்னாள் முதல்வரின் இணைப்பாளர் ஆசாத் மௌலானாவை கோடிட்டு, சுரேஸ் சாலே மீது குற்றம் சுமத்தியிருந்தது. எனினும் அதனை சுரேஸ் சாலே மறுத்திருந்தார். அத்துடன் அந்த ஊடகத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் சுரேஸ் சாலே எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்கத்கது. https://tamilwin.com/article/director-of-state-intelligence-resigns-1728121177
  11. இலங்கையில் புதிதாக பதவியேற்றுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, கடந்தகால ஆட்சியின் போது பாரிய குற்றங்களை இழந்த கும்பலுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக எச்சரித்துள்ளார். இந்நிலையில் ஜனாதிபதியின் செயற்பாட்டுக்கு, கொலைக்கார கும்பல்களால் ஆபத்து ஏற்படலாம் என சிரேஷ்ட ஊடகவியலாளர் சுனந்த தேசப்பிரிய எச்சரித்துள்ளார். அரச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். கொலையாளிகளால் ஆபத்து தாஜுடீன், பிரகீத் எக்னெலிகொட போன்ற சம்பவங்களால் சிக்கித் தவிக்கும் நபர்களால் எதையும் செய்ய முடியும் என தேசப்பிரிய தெரிவித்துள்ளார். “ஜனாதிபதிக்கு ஆபத்து என்று சமூக வலைத்தளத்தில் ஏன் கூறியிருந்தீர்கள்?...” என சுனந்த தேசப்பிரியவிடம் ஊடவியலாளர் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு பதிலளித்தவர், நிச்சயமாக ஆபத்துக்கள் இருக்க கூடும். ஒரு முன்னுதாரண மாற்றம் மேற்கொள்ளும் சூழ்நிலைகளில் இதுபோன்ற ஆபத்துகள் உள்ளன. உயரடுக்கினரிடமிருந்து அதிகாரம் பறிக்கப்படும்போது இத்தகைய ஆபத்துகள் எழுகின்றன. பண்டாரநாயக்க சுட்டுக் கொல்லப்பட்டதை நாம் அறிவோம். அத்தகைய ஸ்னைப்பரைப் பயன்படுத்துவது கடினம் அல்ல. ஆயுதப் படை இன்று பாதாள உலகம் ஒரு ஆயுதப் படை என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. 2 கோடி ரூபாய் கொடுத்து நாட்டை விட்டு வெளியேற டிக்கெட் ஒன்றை எடுத்து கொடுத்தால் எதையும் சாதிக்கலாம். இன்றைக்கு அரசியல் என்பது செல்வம் ஈட்டும் தொழிலாக மாறியுள்ளது. எங்களுடன் தேனீர் அருந்திக் கொண்டிருந்தவர்கள் அரசியல்வாதிகள் ஆனார்கள், ஆனால் நாங்கள் சென்று பார்த்தபோது, வித்தியாசம் தெளிவாகத் தெரிந்தது. அவர்களின் வீடுகள் அரண்மனைகள் போன்றவை. எனவே, நாம் முன்னர் கலந்துரையாடிய தாஜுதீன், பிரகித் எக்னலிகொட போன்ற சம்பவங்களால் சிக்கித் தவிக்கும் நபர்களால் எதையும் செய்யத் தூண்டப்படலாம். அந்த ஆபத்து நிச்சயம் உண்டு. சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார். https://tamilwin.com/article/president-anura-in-danger-sri-lanka-1728099116#google_vignette
  12. பட மூலாதாரம்,PMD SRI LANKA படக்குறிப்பு, இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவை சந்தித்தார். கட்டுரை தகவல் எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத் பதவி, பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இலங்கையில் ஜனாதிபதித் தேர்தலின் ஊடாக ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பின்னர், முதல் தடவையாக இலங்கைக்கு வருகைத் தந்த உயர்நிலை வெளிநாட்டு இராஜதந்திரியாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் வரலாற்றில் பதிவாகியுள்ளார். இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் கடந்த 21 ஆம் தேதி நடைபெற்ற நிலையில், தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க இலங்கையின் 9வது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக மக்களினால் தேர்வு செய்யப்பட்டார். இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக இடதுசாரி கட்சியொன்று ஆட்சி பீடம் ஏறியது சர்வதேச அளவில் பேசுப் பொருளாக மாறியது. இலங்கை நிலப் பரப்பு தொடர்பில் இந்தியா, சீனா, அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் அதிக போட்டித்தன்மையுடன் செயற்பட்டு வருகின்ற நிலையில், இடதுசாரி கட்சியொன்று ஆட்சி பீடம் ஏறியமை பூகோள அரசியலில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தும் என அரசியல் ஆய்வாளர்கள் எதிர்வு கூறியுள்ளனர். இவ்வாறான பின்னணியில், இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரின் ஒரு நாள் இலங்கை விஜயமானது, சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது. ஜெய்சங்கரின் இலங்கை விஜயம் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் நேற்றைய தினம் (அக்டோபர் 4) இலங்கையில் ஒரு நாள் விஜயம் செய்தார். கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று முற்பகல் இந்திய விமானப்படைக்கு சொந்தமான விசேட விமானத்தில் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் வருகைத் தந்தார். எஸ்.ஜெய்சங்கருடன், இந்திய வெளிவிவகார அமைச்சின் உயர்நிலை குழுவொன்றும் வருகைத் தந்தது. இந்திய வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்டோரை, இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட உயர்நிலை குழுவினர் வரவேற்றனர். எஸ்.ஜெய்சங்கர், இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத்தை முதலில் சந்தித்தார். அதனைத் தொடர்ந்து, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, பிரதமர் ஹரினி அமரசூரிய, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகியோரை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடாத்தியிருந்தார். இந்திய வெளிவிவகார அமைச்சரின் பயணங்களில் , தமிழ் கட்சிகளை சந்திப்பது வழமையானது என்ற நிலையில், இம்முறை தமிழ் கட்சியை சந்தித்து கலந்துரையாடல்களை நடாத்தவில்லை. இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் உள்ளிட்ட குழுவினர் நேற்றிரவு, இலங்கைக்கான விஜயத்தை நிறைவு செய்து நாடு திரும்பினர். பட மூலாதாரம்,PMD SRI LANKA படக்குறிப்பு, இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுடன், இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கலந்துரையாடல்களை நடாத்தியுள்ளார். ஜனாதிபதியுடனான சந்திப்பு இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு இடையிலான உறவுகளை பல்வேறு துறைகளின் ஊடே பலப்படுத்திக் கொள்வது குறித்து ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுடன், இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கலந்துரையாடல்களை நடாத்தியுள்ளார். இலங்கையின் சுற்றுலாத்துறை, முதலீடுகள், மின்சக்தி மற்றும் வலுசக்தி, பால் சார்ந்த உற்பத்தித் துறை என்பவை தொடர்பில் இந்தியா கொண்டிருக்கும் அக்கறையை வலியுறுத்திய அவர், இலங்கையின் பொருளாதார மறுமலர்ச்சிக்கு இந்தியா முழுமையான ஒத்துழைப்பை வழங்குமெனவும் தெரிவித்தார். அதற்கமைய இலங்கையின் பொருளாதார மறுமலர்ச்சிக்காக இந்தியாவின் பாரிய சந்தை வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பதையும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் சுட்டிக்காட்டினார். அண்மையில் இலங்கை எதிர்கொண்டிருந்த பொருளாதார நெருக்கடியின் போது இந்தியா வழங்கிய ஒத்துழைப்புக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, இந்தியாவுடனான தொடர்புகளை தொடர்ந்து பேணுவதில் ஆர்வமாக இருப்பதாகவும் தெரிவித்தார். மீன்பிடித்துறை மற்றும் தேசிய ஒற்றுமை போன்ற இரு தரப்பும் அக்கறை காட்டும் விடயங்கள் தொடர்பிலும் இந்த சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டது. அதனையடுத்து வெகு விரைவில் இந்தியாவிற்கான சுற்றுப்பயணம் ஒன்றை மேற்கொள்ளுமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோதி விடுத்த அழைப்பை ஜனாதிபதிக்கு இந்திய வெளிவிவகார அமைச்சர் தெரியப்படுத்தினார். அதை தொடர்ந்து, இந்திய பிரதமர் நரேந்திர மோதியும் எதிர்வரும் நாட்களில் இலங்கைக்கு வருகைத்தர வேண்டுமென இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அழைப்பு விடுத்தார். பட மூலாதாரம்,HARINI AMARASURIYA படக்குறிப்பு, இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரியவையும் சந்தித்து பேசினார். இலங்கை பிரதமருடன் இந்திய வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு இலங்கையின் பொருளாதார வளர்ச்சி உள்ளிட்ட விடயங்கள் குறித்து இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருடனான கலந்துரையாடலின் போது பேசியதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். இலங்கையின் மூன்றாவது பெண் பிரதமராக பதவியேற்ற ஹரிணி அமரசூரியவிற்கு, இந்திய வெளிவிவகார அமைச்சர் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். அத்துடன், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்திக் கொள்வது குறித்து இதன்போது அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், டிஜிட்டல்மயமாக்கல் முயற்சிகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடல்கள் நடாத்தப்பட்டுள்ளன. பல்வேறு துறைகளில் பரஸ்பர நன்மை பயக்கும் ஒத்துழைப்பு குறித்து இரண்டு தரப்பினரும் கலந்துரையாடல்களை நடாத்தித்தியுள்ளனர். சஜித் பிரேமதாஸ மற்றும் ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடல் இந்தியா வெளிவிவகார அமைச்சர் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ மற்றும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகியோருடன் விசேட சந்திப்பொன்றை நடாத்தியிருந்தார். இலங்கை தற்போது எதிர்நோக்கியுள்ள பிரச்னைகள் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, இந்திய வெளிவிவகார அமைச்சருக்கு விளக்கியுள்ளார். இலங்கை எதிர்நோக்கிய வங்குரோத்து நிலைமையிலிருந்து மீண்டு வருவதற்கு இந்தியா வழங்கிய ஒத்துழைப்புக்கு, சஜித் பிரேமதாஸ தனது நன்றியை தெரிவித்துள்ளார். அத்துடன், இந்தியாவின் ஒத்துழைப்பை தான் தொடர்ந்தும் எதிர்பார்ப்பதாக கூறிய சஜித் பிரேமதாஸ, இந்தியாவுடனான உறவை தொடர்ந்தும் வலுப்படுத்திக் கொள்வதற்கு இணக்கம் வெளியிட்டுள்ளார். இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை, இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் சந்தித்து கலந்துரையாடல்களை நடாத்தியுள்ளார். பட மூலாதாரம்,SAJITH PREMADASA MEDIA படக்குறிப்பு, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸவையும் சந்தித்தார் தமிழ் கட்சிகளை சந்திக்காதது ஏன்? இலங்கை அரசியலில் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்திக் கொள்வதற்காக செயற்பாட்டை இந்தியா தொடர்ந்தும் முன்னெடுத்து வருவதாக மூத்த பத்திரிகையாளர் இராமானுஜம் நிர்ஷன் பிபிசி தமிழுக்கு தெரிவித்தார். 'அநுர குமார திஸாநாயக்க பதவியேற்றதுமே தான் பெரிய நாடு என்பதை காண்பிப்பதற்கான முயற்சிகளை இந்தியா முன்னெடுத்துள்ளது. இந்திய வெளிவிவகார அமைச்சரின் முதல் விஜயத்தையும் நான் அப்படியே பார்க்கின்றேன். இலங்கை அரசியல் கட்சிகள் அனைத்துடனும் நேரடி தொடர்புகளை இந்தியா பேணி வருகின்றது. வேறு நாடுகள் அரசியல் கட்சிகளுடன் நேரடி தொடர்புகளை இந்தியா போன்று வைத்திருக்காது. இலங்கை அரசியலில் தேசிய மக்கள் சக்திக்கு பெரிய பலமொன்று வர போவதை ஏற்கனவே உணர்ந்ததால்தான் அநுர குமார திஸாநாயக்கவை முன்கூட்டியே நேரில் அழைத்து இந்தியா பேசியிருந்தது. இலங்கையில் எந்த அரசாங்கம் வந்தாலும், இந்தியாவின் ஆதிக்கத்தை இலங்கையில் தக்க வைத்துக்கொள்வதற்கான செயற்பாடுகளை தொடர்ந்து நடத்தி வருகின்றது." என்று அவர் கூறினார். பட மூலாதாரம்,NIRSHAN படக்குறிப்பு, மூத்த பத்திரிகையாளர் இராமானுஜம் நிர்ஷன் தமிழ் கட்சிகளை ஏன் சந்திக்கவில்லை? இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் ஏன் தமிழ் கட்சிகளை சந்திக்கவில்லை என்பது குறித்து பெயர் குறிப்பிட விரும்பாத தமிழ் கட்சியொன்றின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிபிசி தமிழிடம் பேசினார். இந்திய வெளிவிவகார அமைச்சர் ஒரு நாள் விஜயமாக வருகைத் தந்தமையினால், நேரமின்மை காரணமாக அரசத் தலைவர் உள்ளிட்ட சிலரை மாத்திரமே சந்தித்திருக்கலாம் என அவர் குறிப்பிட்டார். அதனாலேயே, தமிழ் கட்சிகளை சந்திக்காது உடனடியாக நாடு திரும்பியிருக்கலாம் எனவும் அவர் தெரிவித்தார். தமிழ் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்று ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பே தமிழ் கட்சிகளுக்கு இந்தியா கோரிக்கை விடுத்திருந்ததாக அவர் கூறினார். இந்தியா இவ்வாறான கோரிக்கையை விடுத்திருந்த போதிலும், அது சாத்தியப்படாத ஒன்று எனவும் அவர் கூறினார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cdje8k3nvzjo
  13. 05 OCT, 2024 | 03:39 PM எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பாக யாழ் - கிளிநொச்சி தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனுவில் கையொப்பமிட்டனர். தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கொக்குவில் பகுதியில் உள்ள தலைமை அலுவலகத்தில் கட்சியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் வேட்பாளர்கள் வேட்புமனுவில் கையெழுத்திட்டனர். அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் சைக்கிள் சின்னத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/195550
  14. வாக்காளர் அட்டை விநியோகிக்கும் விசேட தினம் எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் திகதி இடம்பெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களைப் பெற்றுக் கொள்ளும் செயற்பாடுகள் நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதற்கமைய, எதிர்வரும் 11 ஆம் திகதி வரை 22 தேர்தல் மாவட்டங்களுக்குமான வேட்பு மனுக்கள் அந்தந்த மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகள் ஊடாக ஏற்றுக் கொள்ளப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, எதிர்வரும் 27ஆம் திகதியை விசேட தினமாக அறிவித்து உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் பணிகள் முன்னெடுக்கப்படும் எனப் பிரதி அஞ்சல்மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/310304
  15. 05 OCT, 2024 | 05:32 PM ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (05) முற்பகல் நாராஹேன்பிட்டியில் அமைந்திருக்கும் ராமண்ய பீடத்திற்கு சென்று இலங்கை ராமண்ய பீடத்தின் மகாநாயக்க தேரர் வண. மகுலேவே விமலநாயக்க தேரரை சந்தித்து ஆசி பெற்றுகொண்டார். அநுநாயக்க தேரர்கள், பதிவாளர்கள் தலைமையிலான மகா சங்கத்தினர் இதன்போது கலந்துகொண்டிருந்ததோடு, அவர்கள் செத் பிரித் பாராயணம் செய்து ஜனாதிபதிக்கு ஆசி வழங்கினர். அதனையடுத்து ஜனாதிபதி தற்போதைய பொருளாதார அரசியல் நிலைமைகள் குறித்து மகா சங்கத்தினருக்கு எடுத்துக்கூறும் வகையில் சிறிது நேரம் கலந்துரையாடினார். தூதுவர்களை நியமிக்கும்போது, கற்ற, அறிவார்ந்த, வௌிநாடுகளில் இந்நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தக் கூடிய பொறுத்தமானவர்களை நியமிக்குமாறும், ஆளுநர்களை நியமிக்கும்போது அரசியல் நோக்களுங்காக அன்றி பொறுப்பானவர்களை நியமிக்குமாறும் மகா சங்கத்தினர் ஜனாதிபதியிடம் கேட்டுக்கொண்டனர். அதேபோல் அமைச்சுக்களின் செயலாளர் பதவிக்கும் பொறுத்தமானவர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தினர். தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டவாறு தீர்மானங்களை எடுப்பதே தமது நோக்கமாகும் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலின் பின்னர் உரிய மறுசீரமைப்புக்களை செய்ய எதிர்பார்த்திருப்பதாகவும் தெரிவித்தார். ஜனாதிபதி தேர்தலில் நாட்டு மக்கள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான குழுவினர் மீது வைத்த நம்பிக்கையை உறுதிப்படுத்தும் வகையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதற்கு மகாசங்கத்தினர் ஆசி என்றும் ஜனாதிபதிக்கு கிட்டும் என வண. மகுலேவ விமலநாயக்க தேரர் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/195577
  16. இஸ்ரேல் (israel) வேரோடு பிடுங்கப்படும், அமெரிக்கா இஸ்ரேலை ஒரு கருவியாக மட்டுமே பயன்படுத்துவதாக உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி (Sayyid Ali Hosseini Khamenei) எச்சரித்துள்ளார். மத்திய கிழக்கில் இப்போது இஸ்ரேல் - ஈரான் (iran) இடையே நேரடியாகப் போர் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், படுகொலை செய்யப்பட்ட ஹிஸ்புல்லா தலைவர் நஸ்ரல்லா நினைவு கூட்டத்தில் கலந்து கொண்ட போதே உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேல் நாட்டை எச்சரிக்கும் அயதுல்லா கடந்த 5 ஆண்டுகளில் கமேனி பொது நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுவது இதுவே முதல்முறையாகும். இதில் அவர் நேரடியாக இஸ்ரேல் நாட்டை எச்சரிக்கும் வகையில் பேசினார். பாலஸ்தீன மற்றும் லெபனான் இயக்கத்திற்கான ஈரான் ஆதரவை உறுதி செய்தார். ஈரான் நாட்டின் எதிரிகளை நிச்சயம் தோற்கடிப்பேன் என்று சபதம் எடுத்த அயதுல்லா அலி கமேனி, இஸ்ரேல் மீதான ஏவுகணைத் தாக்குதல்களை நியாயப்படுத்தினார். இஸ்ரேலை ஆக்கிரமிப்பு பாலஸ்தீனம் என்றே குறிப்பிட்ட கமேனி, தங்கள் நாட்டு மக்களைக் காக்கத் தேவைப்பட்டால் மீண்டும் தாக்குதலை நடத்தவும் தயாராக உள்ளதாகத் தெரிவித்தார். மேலும், ஹிஸ்புல்லா அமைப்பிற்கான ஆதரவு தொடரும் என்ற அவர், ஈரானும் அதன் நட்பு நாடுகளும் சேர்ந்து அதன் எதிரிகளை வீழ்த்தும் எனத் திட்டவட்டமாக அறிவித்தார். ஈரான் மற்றும் தமது கூட்டணியினர் இஸ்ரேலிடம் இருந்து பின்வாங்கப்போவதில்லை என்று ஈரான் உயர்மட்டத் தலைவர் ஆயதொல்ல அலி கமேனி தெரிவித்துள்ளார். போலியான தேசம் வேரோடு பிடுங்கப்படும் எமது படையினர் சில இரவுகளுக்கு முன்னர் சிறப்பாக செயற்பட்ட நடவடிக்கை முழுமையாக சட்டபூர்வமானது மற்றும் முறையானதாகும். இஸ்ரேலின் உதவியுடன் இந்த பிராந்தியத்தில் உள்ள வளங்களை அமெரிக்கா தன்வசப்படுத்த முயல்கிறது. இஸ்ரேலை அமெரிக்கா ஒரு கருவியாகப் பயன்படுத்துகிறது என்பதே உண்மை. தங்கள் ஏதோ பெரிய நாடாக இந்த யூத தேசம் நினைக்கிறது. ஆனால், உண்மையில் அந்த போலியான தேசம் வேரோடு பிடுங்கப்படும். நீண்ட காலம் தாங்காது. அது அமெரிக்கர்களின் ஆதரவினால் மட்டுமே உள்ளது” என்று மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். தலைவர்கள் கொல்லப்பட்டாலும் கூட பிராந்தியத்தில் எதிர்ப்புப் போராட்டம் பின்வாங்காது என்று கமேனி வலியுறுத்தினார். https://ibctamil.com/article/israil-iran-war-tension-in-middle-east-1728118712
  17. தமிழர் அரசியல் களத்தில் இளைஞர்கள் களமிறங்க வேண்டுமென்றால் சில முதியவர்கள் தாமாக முன்வந்து ஓய்வுபெற வேண்டுமென்று பிரித்தானியாவில் (United Kingdom) இருக்கும் அரசியல் ஆய்வாளர் தி.திபாகரன் (D. Dibhakaran) சுட்டிக்காட்டியுள்ளார். குறித்த விடயத்தை லங்காசிறி ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “இலங்கையில் முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னர் 15 ஆண்டுகளாக ஈழத்தமிழர்கள் எந்தவொரு காத்திரமான அரசியலையும் முன்னெடுக்கவில்லை. தமிழர் அரசியல் களம் அழிவின் விளிம்பில் தமிழ் தேசிய கட்டுமானம் தொடர்ந்து அழிக்கப்பட்டு வருகின்றது. தமிழ் தரப்பில் சில முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள நிலையில் தற்போதுள்ளவர்களும் அவ்வாறு ஓய்வு பெற்று இளைஞர்களுக்கு வாயப்பளிக்க வேண்டும். அத்தோடு, இளைஞர்களும் தானாக வந்து அரசியலை கையில் எடுத்தால் மாத்திரமே தமிழர் அரசியல் களத்தை முன்னோக்கி கொண்டு செல்ல முடியும். மேலும், இலங்கை அரசியலில் இந்தியாவின் வகிபங்கு, தமிழர் அரசியல் களம், இளைஞர்களின் அரசியல் வருகை மற்றும் வயதான அரசியல்வாதிகளின் ஓய்வு தொடர்பில் அவர் தெரிவித்த கருத்துக்களுடன் வருகின்றது இன்றைய ஊடறுப்பு, https://ibctamil.com/article/the-political-arrival-of-youth-in-the-tamil-region-1728079807#google_vignette
  18. அரசியல் தீர்மானம் எடுத்து அரசியல் கைதிகளை விடுதலை செய்வது அரசியல் கைதிகளுக்கும் தமிழ் மக்களுக்குமான அரசியல் கௌரவமாகும். ஆனால் அதனை செய்ய எள்ளளவும் துணிய மாட்டார்கள் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார். அவரால் இன்று(05) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கையின் தெற்கு அரசியலில் மாற்றம் என்பது தற்போது கவர்ச்சி அரசியலாகி மக்கள் மயப்படுத்தபட்டு வருகின்றது. இது எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னர் அது மேலும் கவர்ச்சியாகலாம். இந்த அரசியல் கலாச்சாரத்திற்குள் வடகிழக்கின் புத்தி ஜீவிகளாகவும், கல்வியாளர்களாகவும் கருதப்படுவோரும் இழுத்துச் செல்லப்படும் அபாயமும் நிலவுகின்றது. அதேபோல் தாயகத்தில் பாரம்பரிய கட்சிகளாகவும், ஈழப் போராட்டத்தில் முனைப்போடு செயற்பட்டவர்களாகவும் (காட்டிக் கொடுத்தவர்கள்) வீர வசனம் பேசுபவரும் வாக்கு கொள்ளைக்காக கூட்டு திட்டம் தீட்டிக் கொண்டிருக்கின்றனர். இவர்கள் தமிழர் தேசியத்தை முள் வேலிக்குள் தள்ளி கொலை செய்ய எடுக்கும் முயற்சியை வருடந்தோறும் மாவீரர்களுக்கு சுடர் ஏற்ற ஒழுங்குகள் செய்வோரும், சுடர் ஏற்றுவோரும் தகர்த்தெறிய வேண்டும். தற்போதைய நாட்டின் ஜனாதிபதியான அனுரகுமார திசாநாயக்கா ஜனாதிபதி தேர்தலில் வாக்குகளை தமதாக்க இறுதியாக யாழ்ப்பாணம் வந்தபோது மாற்றத்தை தேடும் தென்பகுதி மக்களோடு இணைந்து கொள்ளுங்கள் என்றே அழைப்பு விடுத்து வாக்கு கேட்டார். வடகிழக்கு தமிழர்கள் தேசத்தில் அவர்கள் நடத்திய யுத்தம், அதனால் ஏற்பட்ட பாதிப்புகள், காணாமலாக்கப்பட்டோர் மற்றும் இராணுவத்தினர், தொல்லியல் திணைக்கத்தினர், சிங்கள பௌத்த துறவிகள் ஆகியோரால் முன்னெடுக்கப்படும் நில ஆக்கிரமிப்பு தொடர்பான மக்கள் எதிர்பார்க்கும் நீதி, அரசியல் பிரச்சனைக்கான தீர்வு எதையும் குறிப்பிடவில்லை. ஜனாதிபதி அவர்களின் மாற்றம் என்பது தமிழர்கள் வாழ்வோடு தொடர்பு பட்டதல்ல. அது முழுக்க முழுக்க தனது அரசியல் அதிகாரத்தை தக்க வைப்பதற்கான சிங்கள பௌத்த மக்களை திருப்திப்படுத்துவதற்கான அரசியல் என்பதனை நாம் ஆழமாக சிந்திப்போம். இதற்குள் சிக்கிவிட வேண்டாம் என தமிழர் தாயக மக்களை கேட்டுக் கொள்கின்றோம். இடதுசாரி சிந்தனை உடைய மக்கள் விடுதலை முன்னணியினர் வடகிழக்கு மக்கள், மலையக மக்கள் என்போர் அரச அதிகார தரப்பாலும் அரச இயந்திரத்தினராலும் பொருளாதார, சமூக அரசியல் ரீதியாக ஒடுக்கப்படும் போது அவர்களை தங்கள் வர்க்கமாக ஏற்று அவர்களோடு சேர்ந்து பயணிக்கவில்லை. தமது அரசியலின் எதிரியாகவே அவர்களைப் பார்த்தார்கள். ஆட்சியாளர் சேர்ந்து ஒடுக்குமுறைக்கும் இன அழிப்பிற்கும் இனப்படுகொலைக்கும் துணை நின்றது அவர்கள் வரலாறு. இதனால்தான் யாழ்ப்பாணத்தில் அவருடைய மேடையில் தமிழர்கள் முகம் கொடுக்கும் பிரச்சினைகள் தொடர்பாக வாய் திறக்கவில்லை. நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழ்நிலையில் தமிழ் அச்சு ஊடகம் ஒன்று தற்போதைய பிரதமர் வழங்கி உள்ள செவ்வியில்”என்ன பிரச்சனைக்கு ஒரு நிலைக்குள் இருந்து கொண்டு மாத்திரம் தீர்வு காண முடியாது புதிய அரசியலமைப்பு உருவாக்கம் மற்றும் புதிய சட்டம் உருவாக்குதல் ஊடாக தீர்வு காணலாம் என்று கருதுகிறார்கள் அதுவல்ல அரசாங்கம் செயற்படும் விதத்தை அடிப்படையாகக் கொண்டு இனப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்”என்று கூறியவர் “தமிழ், முஸ்லிம் மக்கள் அரசாங்கம் தம்மையும் பிரதிநிதித்துவம்படுகிறது என்பதை உணர வேண்டும். அவ்வாறான வகையில் அரசாங்கம் செயப்பட வேண்டும்” எனக் கூறியிருக்கின்றார். இன்னுமொரு சந்தர்ப்பத்தில் இனப் பிரச்சனைக்கான தீர்வு யாப்பின் ஊடாக மேற்கொள்ளப்படும் அது மக்கள் தீர்ப்புக்கு விடப்படும் என்றும் கூறியுள்ளார். இதனை சிங்கள பௌத்தர்களிடம் அரசியல் தீர்வினை விட்டு விடுவோம் என்பதாகவே நாம் பொருள் கொள்ளல் வேண்டும். அது மட்டுமல்ல அமைச்சரவை தீர்மானங்களை அமைச்சர் விஜித்த ஹோரத் அவர்கள் அறிவித்த போது “அரசியல் கைதிகள் நாட்டின் சட்டம் மூலம் விடுதலை செய்யப்படுவார்கள்” எனக்கூறினார். இதுவரை காலமும் அவ்வாறே விடுதலை செய்யப்படுகிறார்கள். இவர்களுடைய சட்டம் காரணமாக பலர் 25 வருட காலமாக சிறை கம்பிகளுக்குள் அடைப்பட்டுள்ளனர். இந்த சட்டத்தின் மூலம் தான் தீர்வு காண்போம் என்பதன் மூலம் அரசியல் தீர்மானம் எடுத்து அவர்களை விடுதலை செய்ய மாட்டோம் என்று கூறுவதாகவே உள்ளது. அரசியல் தீர்மானம் எடுத்து அரசியல் கைதிகளை விடுதலை செய்வது அரசியல் கைதிகளுக்கும் தமிழ் மக்களுக்குமான அரசியல் கௌரவமாகும். அதற்கு இவர்கள் எள்ளளவும் துணிய மாட்டார்கள் என்பது மட்டும் திண்ணம். இந்நிலையில் ஒரு சில தமிழ் அரசியல் கட்சி தலைமைகள் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவிற்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் தமது ஆதரவு கரத்தை நீட்டுவதாக அடையாளம் காட்டி சந்திப்புகளை செய்துள்ளனர். மேலும் சிலர் தமிழர் தேசியத்தின் முகம் காட்டி ஆட்சி கதிரைகளை தமதாக்கியும் ஆதரவு கொடுக்க முயல்கின்றனர். இன்னும் சிலர் மேற்கூறியர்கள் எல்லாம் தோற்கடித்து நேரடியாகவே பேசிய மக்கள் சக்திக்கு ஆதரவினை கொடுக்க துணிந்துள்ளனர். இன்னும் சிலர் தமிழர்களை சிதைக்க சுயேட்சையாகவும் களமிறங்கவும் ஆயத்தமாய் உள்ளனர். இவர்கள் வீட்டில் பூச்சிகள் மட்டுமல்ல. இவர்கள் இனப்படுகொலையாளர்கள். தனது அரசியல் நலன் கருதி இந்தியாவும் இவர்களை இயக்கிக் கொண்டிருக்கின்றது. இவர்களுடைய நோக்கம் தமிழர் தேசியத்தையும் அது தொடர்பாக தெளிவோடு விட்டுக் கொடுக்காது பேசுகின்றவர்களையும் அரசியல் சமூகத்தில் இருந்து அகற்ற வேண்டும் என்பதே.இதற்கும் இடமளிக்க கூடாது. அரசியல் பன்முகம் கொண்ட இராவண கூட்டம் தமிழர் தேசியத்தை சிதைத்தழிக்க அணிவகுத்து நிற்கையில் விட்டில் பூச்சிகளாக தமிழர்கள் அதில் விழுந்து விடக்கூடாது. தேசிய அரசியல் முகமூடி கொள்ளையர்களிடம் தப்பித்தால் மட்டுமே எமது அரசியல் கௌரவத்தை தற்காத்துக் கொள்ளலாம். இல்லையேல் இனமாக எழ முடியாத சூழல் ஏற்படுவதே பலரது நோக்கம். அதனை தோல்வியுறச் செய்வோம். முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் பின்னரும் நாம் எழுந்தோம். என்பதையே நினைவில் கொள்வோம். அதுவே எமது சக்தி எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/310314
  19. 05 OCT, 2024 | 12:08 PM பாராளுமன்றத் தேர்தல் தொடர்பில் ஆராய்வதற்காக இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மத்திய குழுவால் நியமிக்கப்பட்ட நியமனக்குழு வவுனியாவில் இன்று (5) கூடியது. எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி சார்பில் களமிறங்கவுள்ள வேட்பாளர்கள் தொடர்பில் ஆராய்வதற்காக 11 பேர் கொண்ட நியமனக்குழுவை தமிழ் அரசுக் கட்சியின் மத்திய குழு நியமித்திருந்தது. இந்நிலையில் அக்குழு இன்று காலை 11 மணியளவில் வவுனியாவில் கூடியுள்ளது. இதன்போது எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் களமிறங்கவுள்ள வேட்பாளர்கள் தொடர்பாக இன்றே இறுதி முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இக்கலந்துரையாடலில் நியமனக்குழுவின் அனைத்து உறுப்பினர்களும் கலந்துகொண்டிருந்தனர். https://www.virakesari.lk/article/195537
  20. 05 OCT, 2024 | 12:20 PM ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் உயர்மட்ட குழுக் கூட்டம் வவுனியா கோவில்குளம் பகுதியில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியொன்றில் இன்று (05) நடைபெற்றது. இதில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான த.சித்தார்த்தன், சுரேஸ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன், ஜனநாயக போராளிகள் கட்சியின் க.துளசி முதலான முக்கிஸ்தர்கள் கலந்துகொண்டிருந்தனர். https://www.virakesari.lk/article/195538
  21. மோடியும் இலங்கை வர வேண்டும்; ஜனாதிபதி அநுர ஜெய்சங்கரிடம் தெரிவிப்பு வெகு விரைவில் இந்தியாவுக்கான சுற்றுப் பயணம் ஒன்றை மேற்கொள்ளுமாறு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி விடுத்த அழைப்பை இந்திய வௌிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்குக் கூறியதைத் தொடர்ந்து, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் மிக விரைவில் இலங்கைக்கு வருகை தர வேண்டும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அழைப்பு விடுத்தார் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ஒரு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்த இந்திய வௌிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவைச் சந்தித்துக் கலந்துரையாடினார். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் பதவிக்காலம் ஆரம்பிக்கும் தருவாயில் இந்நாட்டுக்கு வருகைத்தர கிடைத்தமையையிட்டு மகிழ்ச்சி தெரிவித்த அவர், ஜனாதிபதிக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்த்துச் செய்தியை ஜனாதிபதியிடம் கையளித்த இந்திய வௌிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இந்திய – இலங்கை உறவுகளைப் பல்வேறு துறைகளூடாக பலப்படுத்திக்கொள்வது குறித்தும் ஜனாதிபதியுடன் கலந்தாலோசித்தார். இலங்கையின் சுற்றுலாத்துறை, முதலீடுகள், மின்சக்தி மற்றும் வலுசக்தி, பால் சார்ந்த உற்பத்தித் துறை என்பவை தொடர்பில் இந்தியா கொண்டிருக்கும் அக்கறையை வலியுறுத்திய அவர், இலங்கையின் பொருளாதார மறுமலர்ச்சிக்கு இந்தியா முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் எனவும் தெரிவித்தார். அதற்கமைய இலங்கையின் பொருளாதார மறுமலர்ச்சிக்காக இந்தியாவின் பாரிய சந்தை வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள முடியும் என்பதையும் இந்திய வௌிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் சுட்டிக்காட்டினார். அண்மையில் இலங்கை எதிர்கொண்டிருந்த பொருளாதார நெருக்கடியின் போது இந்திய வழங்கிய ஒத்துழைப்புக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, இந்தியாவுடனான தொடர்ப்புகளைத் தொடர்ந்தும் பேணுவதில் ஆர்வமாக இருப்பதாகவும் தெரிவித்தார். மீன்பிடித்துறை மற்றும் தேசிய ஒற்றுமை போன்ற இரு தரப்பும் அக்கறை காட்டும் விடயங்கள் தொடர்பிலும் இந்தச் சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டது. அதனையடுத்து வெகு விரைவில் இந்தியாவுக்கான சுற்றுப் பயணம் ஒன்றை மேற்கொள்ளுமாறு இந்தியப் பிரமர் நரேந்திர மோடி விடுத்த அழைப்பை இந்திய வௌிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்குக் கூறியதைத் தொடர்ந்து, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் எதிர்வரும் நாட்களில் இலங்கைக்கு வருகை தர வேண்டும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அழைப்பு விடுத்தார். – என்றுள்ளது. https://thinakkural.lk/article/310307
  22. ஈஸ்டர் தாக்குதல் உள்ளிட்ட கிழக்கின் படுகொலைகள் குறித்து சாட்சி சொல்ல முன்வந்தவர் மீது மட்டக்களப்பு காத்தான்குடி காவல்துறை விசாரணை என அழைத்துச் சென்று தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதிய ஜனாதிபதியாக அநுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) அவர்கள் பொறுப்பேற்றதன் பின்னர் நாட்டில் நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மற்றும் ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட நாட்டில் நடைபெற்ற கடத்தல்கள் படுகொலைகள் குறித்து விசாரணை செய்யப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் ஏற்பட்டு வரும் நிலையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல், ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், ஊடகவியலாளர்கள் கடத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவங்கள் உட்பட கிழக்கு மாகாணத்தில் நடைபெற்ற படுகொலைகள் கடத்தல்கள் தொடர்பாக அந்த சம்பவங்களை செய்தவர்களுடன் கூடவே இருந்து குறித்த சம்பவங்கள் தொடர்பில் நேரடி சாட்சி சொல்வதற்கு முன் வந்து, இலங்கையின் பாதுகாப்பு தரப்பினருக்கும், ஜனாதிபதி செயலகம், மனித உரிமை அமைப்புகளிடமும் தனது வாக்குமூலத்தை வழங்கிவிட்டு தனது கடந்த காலத்தை மறப்பதற்காக மீன் வியாபாரம் செய்து வந்த முன்னாள் ஆயுதக் குழுக்களின் முக்கியஸ்தரான முகமட் குசைன் என்பவரை விசாரணைக்கு என அழைத்துச் சென்ற காத்தான்குடி காவல்துறை அவரை மிக மோசமாக தாக்கியதில் அவர் படுகாயம் அடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இலங்கையில் ஆட்சி மாற்றம் ஒன்று நடைபெற்றுள்ள நிலையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் உட்பட நாட்டில் நடைபெற்ற படுகொலைகள் குறித்த விசாரணைகள் நடாத்தப்படும் போது அதன் முக்கிய சாட்சிகளாக முகமட் குசைன் போன்றவர்களின் வாக்கு மூலங்கள் மாறலாம் என்பதோடு படுகொலைகளுடன் சம்பந்தப்பட்டவர்களை குறித்த நபர் அடையாளம் காட்டிக் கொடுப்பார் என்ற அச்சம் காரணமாக தனது கணவரை கொலை செய்யும் நோக்கில் பொய்யான குற்றச்சாட்டுக்களை சுமத்தி அவரை விசாரணை என்ற போர்வையில் அவரை தாக்கியுள்ளதாக தாக்குதலுக்கு உள்ளானவரின் மனைவி தெரிவித்துள்ளார். குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக மனித உரிமைகள் ஆணைக்குழு, சாட்சிகளை பாதுகாக்கும் ஆணைக்குழு, காவல்துறை உயர் அதிகாரிகளிடமும் முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். https://ibctamil.com/article/easter-attack-witness-abducted-and-attacked-1728112231
  23. பொதுத் தேர்தல்; இதுவரை 05 பேர் வேட்பு மனுத் தாக்கல் 05 OCT, 2024 | 01:23 PM எதிர்வரும் நவம்பர் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்காக இதுவரை 05 பேர் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளதாகத் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி, அரசியல் கட்சிகளின் சார்பில் 2 பேரும் சுயேட்சை குழுவாக 3 பேரும் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளதாகத் தேர்தல் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/195536
  24. ஈரானின் (Iran) அணுசக்தி தளங்கள் மீது இஸ்ரேல் (Israel) தாக்குதல் நடத்த வேண்டும் என அமெரிக்க குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் டொனால்டு ட்ரம்ப் (Donald Trump) தெரிவித்துள்ளார். பிரச்சார கூட்டமொன்றில் நேற்று (04.10.2024) கலந்து கொண்ட போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இதன்போது கருத்து தெரிவித்த ட்ரம்ப், ஈரானின் அணுசக்தி திட்டங்கள் மீது இஸ்ரேல் குறிவைக்கும் சாத்தியம் தொடர்பில் கேள்வி எழுப்பினால், தமது பதில், கண்டிப்பாக தாக்குதலை முன்னெடுக்க வேண்டும் என்றும், அதன் தாக்கம் குறித்து பின்னர் கவலை கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார். ஈரானுக்கான பதிலடி எனினும், அப்படியான ஒரு தாக்குதலை முன்னெடுப்பது தவறான ஒரு செயல் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் (Joe Biden) சுட்டிக்காட்டியுள்ளார். சமீபத்தில் இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசிய ஈரான், இனி பதிலடி என்றால் அது உக்கிரமாக இருக்கும் என்றும் மிரட்டல் விடுத்தது. ஆனால், ஈரானுக்கான பதிலடி உறுதி என்றே இஸ்ரேல் அறிவித்துள்ளது. அத்துடன், ஈரானின் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் விதமாக அங்குள்ள எண்ணெய் ஆலைகள் மீது தாக்குதல் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது. இதனிடையே ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க இதுவே சரியான தருணம் என இஸ்ரேலின் முன்னாள் பிரதமர் நப்தலி பென்னட் தெரிவித்துள்ளதுடன் ஈரான் மீதான தாக்குதலை உடனடியாக தொடங்க இஸ்ரேல் அரசை அவர் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://ibctamil.com/article/hitnuclearsites-first-donaldtrump-big-warning-iran-1728096721#google_vignette
  25. காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திக்கு இந்தியா நிதியுதவி : வெளியான அறிவிப்பு யாழ்ப்பாணம் (Jaffna) - காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திக்கு இந்தியா நிதியுதவி வழங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் (S. Jaishankar) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடன் (Anura Kumara Dissanayake) கலந்துரையாடிய போதே இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் இலங்கையில் மேற்கொள்ளப்படவுள்ள முதலீடுகள் மற்றும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடியதாக இந்திய வெளிவிவகார அமைச்சு (Ministry of External Affairs of India) விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 61.5 மில்லியன் அமெரிக்க டொலர் இந்த நிலையில், காங்கேசன்துறை துறைமுகத்தை நவீனமயமாக்கும் நடவடிக்கைகளுக்காக 61.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை இந்தியா வழங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இலங்கை தொடருந்து திணைக்களத்துக்கு 22 டீசல் இயந்திரங்களைப் பரிசாக வழங்குவதற்கு இந்தியா தீர்மானித்துள்ளதாகவும் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளார். இதேவேளை, எரிசக்தி, வலுசக்தி, சுகாதாரம், சுற்றுலா, பால்வள மேம்பாடு மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் இலங்கைக்கான விஜயத்தின் போது இந்திய வெளிவிவகார அமைச்சர் கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://ibctamil.com/article/modernization-of-kankesanthurai-port-india-support-1728100136

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.