Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்

Everything posted by ஏராளன்

  1. 2024 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான அட்டவணையை பரீட்சை திணைக்களம் வெளியிட்டுள்ளது. செப்டம்பர் 15 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணி முதல் 10.45 மணி வரை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் இரண்டாவது வினாத்தாள் நடைபெறும். அன்று காலை 11.15 மணி முதல் மதியம் 12.15 மணி வரை முதலாவது வினாத்தாள் நடைபெறும். பரீட்சைக்காக விண்ணப்பித்தவர்களின் அனுமதி அட்டைகள் அந்தந்த பாடசாலைகளின் அதிபர்களுக்கு தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதுவரை ஆவணங்கள் கிடைக்காத அதிபர்கள் www.doenets.lk அல்லது https://onlineexams.gov.lk/eic என்ற இணையதளத்திற்குச் சென்று ஆவணத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். குறிப்பிடப்பட்ட விண்ணப்பதாரர்களின் தகவல்கள் திருத்தப்பட வேண்டுமானால், இன்று 02 ஆம் திகதி முதல் செப்டம்பர் 9 ஆம் திகதி வரை ஒன்லைனில் திருத்தம் செய்யவும் வசதி செய்யப்பட்டுள்ளது. தொலைபேசி இலக்கங்கள் – 0112 784 208/ 278 4537 / 2784537 / 2786616 /2785413, அவசர இலக்கம் – 1911, தொலைநகல் – 0112 784422 https://thinakkural.lk/article/308871
  2. தமிழ்ப் பொதுவேட்பாளரின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியானது; முழுமையான விபரம் உள்ளே தமிழ் தேசிய பொது கட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் தமிழப் பொதுவேட்பாளரின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டது. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசிய பொதுக்கட்டமைப்பின் ஏற்பாட்டில் தமிழ்ப் பொதுவேட்பாளராக பாக்கியசெல்வம் அரியநேத்திரன் போட்டியிடும் நிலையில், தமிழ்ப் பொதுவேட்பாளரின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ் பொது வேட்பாளரின் அலுவலகத்தில் வெளியிடப்படது. இந்நிகழ்வில் தமிழ்ப் பொதுவேட்பாளர் பா.அரியநேத்திரன் உள்ளிட்ட பொதுக்கட்டமைப்பில் உள்ள அரசியல் கட்சி தலைவர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். முழுமையான தேர்தல் விஞ்ஞாபனம் இதோ… ”தமிழ்த் தேசிய இனமானது கடந்த ஏழு தசாப்தங்களுக்கு மேலாக விடுதலைக்காகப் பல்வேறு வழிமுறைகளில் போராடி வருகிறது. இப்போராட்டத்தின் ஒரு வழிமுறையாகத், தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பு ஆகிய நாம் இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் ஒரு தமிழ்ப் பொது வேட்பாளரை முன்னிறுத்தியுள்ளோம். மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. பா. அரியநேத்திரன் அவர்கள் சங்குச் சின்னத்தின் கீழ் தமிழ்ப்பொது வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டுள்ளார். தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பு என்பது , தமிழ்த் தேசியக் கட்சிகளும் தமிழ் மக்கள் பொதுச்சபை என்ற மக்கள் அமைப்பும் இணைந்து உருவாக்கிய ஒரு கட்டமைப்பாகும். தமிழீழ விடுதலை இயக்கம், தமிழ் மக்கள் கூட்டணி, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழ்த் தேசியக் கட்சி, ஜனநாயகப் போராளிகள் கட்சி, தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் ஆகிய ஏழு கட்சிகளும் தமிழர்தாயகத்தைச் சேர்ந்த அரசியற் செயற்பாட்டாளர்கள், கருத்துருவாக்கிகள், புத்திஜீவிகள், சிவில் சமூகங்கள், அரசசார்பற்ற அமைப்புகள், தொழிற்சங்கங்கள், கிராமமட்ட அமைப்புகள்;, தொழில்சார் அமைப்புகள், கூட்டுறவு அமைப்புகள், மாணவ அமைப்புகள் இணைந்து உருவாக்கிய மக்கள் அமைப்பாகிய தமிழ்மக்கள் பொதுச்சபையும் இணைந்து உருவாக்கிய ஒரு கட்டமைப்பே தமிழ்த்தேசியப் பொதுக் கட்டமைப்பு ஆகும். இலங்கைத் தமிழரசுக் கட்சியில் உள்ள மிகச்சிறு பகுதியினர் தவிர ஏனைய அனைவரும் வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் தமிழ்ப் பொது வேட்பாளருக்கு ஆதரவாகச் செயற்பட்டு வருகிறார்கள். தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பு எனப்படும் இந்தக் கூட்டணி கடந்த 15 ஆண்டுகளில், உருவாக்கப்பட்ட கூட்டணிகளில் ஒப்பீட்டளவில் பெரிய அணியாகும். இது தமிழ் ஒற்றுமையின் புதிய நம்பிக்கையாகவும் எதிர்காலத் தமிழ் அரசியலுக்கான பலமான அடித்தளமாகவும் எழுச்சி பெறும். ஈழத் தமிழர்களாகிய நாம் இலங்கைத் தீவில் தனித்துவம் மிக்க ஒரு தேசிய இனமாகவும், தேசமாகவும் வாழ்ந்து வருகிறோம். வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் இருந்து ஆயிரக்கணக்கான ஆண்டுகால வரலாற்றைக் கொண்ட, மரபு வழித் தாயகத்தைக் கொண்ட, தனித்துவமிக்க பண்பாட்டைக் கொண்ட ஒரு தேசம் ஆவோம் இலங்கைத் தீவு பல்லின, பலமத, பல மொழி, பல் கலாசாரத்தைக் கொண்ட ஒரு தீவாகும். இலங்கைத் தீவின் பல்லினத்தன்மையை ஏற்றுக்கொள்ள மறுத்ததன் விளைவே இனப்பிரச்சினை தோற்றம் பெறுவதற்கும் கூர்மை அடைவதற்கும் இறுதியில் விஸ்வரூபம் எடுப்பதற்குமான மூல காரணமாகும். தமிழ் மக்களுடைய தேசிய இருப்பை அழிக்கும் செயற்பாடுகளே இன அழிப்பாகும். தமிழர் தேசத்தின் இருப்பையும் தனித்துவத்தையும் அழித்து பெரும்பான்மை இனத்துடன் அதனைக் கரைக்கும் உள்நோக்கத்தோடு சிங்கள பௌத்த அரசுக் கட்டமைப்பானது திட்டமிட்டு முன்னெடுத்த இனஅழிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராகத் தமிழ் மக்கள் முதலில் அகிம்சை வழியிலும் பின்னர் ஆயுத வழியிலும் போராடினார்கள். அப்போராட்டங்களை நிர்மூலமாக்கும் குறிக்கோளோடு ஏவி விடப்பட்ட அரச பயங்கரவாதத்தின் மிகக் கொடிய விளைவே இறுதிப் போரில் நிகழ்ந்த உச்சமான இன அழிப்பாகும். இந்தப் பின்னணியில் உலகின் மிகப்பெரிய தமிழ் சட்டமன்றமாகிய தமிழக சட்டமன்றம் இலங்கைத் தீவில் தமிழர்களுக்கெதிராக இடம்பெற்றது. இன அழிப்பு என்று ஏகமனதாகத் தீர்மானமாக நிறைவேற்றியது. வடமாகாண சபை அதை இன அழிப்பு என்று ஏகமனதான ஒரு தீர்மானமாக நிறைவேற்றியது. கனடாவில் பிரம்டன் நகர சபை அதை இன அழிப்பென்று ஏகமனதான ஒரு தீர்மானமாக நிறைவேற்றியது. கனேடிய நாடாளுமன்றம் மே பதினெட்டினைத் தமிழ் இனப்படுகொலை நினைவுகூரல் நாளாக ஏகமனதாக ஏற்றுக்கொண்டு தீர்மானம் நிறைவேற்றியது. பிரான்சில் உள்ள நான்கு மாநகர சபைகளான Bobigny,Sevran,Choisy-Le-Roi,Vitry-Sur-Seine என்பன அது இன அழிப்பு என்று தீர்மானமாக நிறைவேற்றின. ஐக்கிய அமெரிக்கப் பிரதிநிதிகள் சட்டசபையில்(Congress) இந்த ஆண்டு மே15 அறிமுகப்படுத்தப்பட்ட 1230 தீர்மானமானது ஈழத் தமிழர்களுக்கு எதிராக ஸ்ரீலங்கா அரசாங்கத்தால் நடத்தப்பட்டது இனஅழிப்பு என்பதை ஏற்றுக்கொள்கின்றது. ஈழத் தமிழர்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வைக் காணும் பொருட்டு சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்து, அவர்கள் தங்களுக்கு என்ன தீர்வு வேண்டும் என்பதை நிர்ணயிப்பதற்கு ஒரு பொது வாக்கெடுப்பு அவசியம் என்பதை அத்தீர்மானம் வலியுறுத்துகின்றது. எனினும், இன்றுவரை இன அழிப்புக்கு பரிகார நீதியும் கிடைக்கவில்லை; இன அழிப்புச் செயற்பாடுகள் நிறுத்தப்படவுமில்லை. மாறாக, 1-திருகோணமலையில் தமிழர் மரபுரிமைச் சின்னங்கள் இருந்த இடங்கள் தொல்லியல் திணைக்களத்தால்; ஆக்கிரமிக்கப்பட்டு அவ்விடங்கள் வேகமாக சிங்கள பௌத்த மயமாக்கப்படுகின்றன. மேலும், குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவில் ஆயிரக்கணக்கான ஏக்கர்கள் அளவில் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு 26க்கும் அதிகமான விகாரைகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்குள்ள சில பாரம்பரிய தமிழ்க் கிராமங்களை சிங்கள மாவட்டங்களுடன் இணைத்து வடக்கையும் கிழக்கையும் துண்டாடும் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. இவற்றில் பல நீதிமன்றத் தீர்ப்புகளை மீறுபவை. இனஅழிப்பு நடவடிக்கைகளால் அதிகம் விழுங்கப்பட்ட ஒரு மாவட்டம் இது. 2-மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு புறம் சிங்கள பௌத்த மயமாக்கல் நடந்து வருகிறது. இன்னொரு புறம் நிலப்பறிப்பு தொடர்கிறது. உதாரணமாக 3000 குடும்பங்களின் வாழ்வாதாரத்துக்கான கால்நடை சார்ந்த பொருளாதாரத்தை அழிக்கும் நோக்கத்தோடு மயிலத்தமடு, மாதவனை போன்ற இடங்களில் மேய்ச்சல் தரைகளை அரச அனுசரணையோடும் பாதுகாப்போடும் சிங்கள விவசாயிகள் ஆக்கிரமித்து வருகிறார்கள். இங்கேயும் நீதிமன்றத் தீர்ப்புகள் மீறப்படுகின்றன. வாகரை. கதிரவெளியில் கனிமவள அகழ்வு மக்களின் எதிர்ப்பை மீறி முன்னெடுக்கப்படுகின்றது. வாகரையில் இறால் பண்ணைகள் மக்களுடைய எதிர்ப்பை மீறி முன்னெடுக்கப்படுகின்றன. இவ்விரண்டு விடயங்களும் மக்களுடைய வாழ்வாதாரத்தைப் பாதிப்பவை. சுற்றுச் சூழல் பாதுகாப்புக்கு எதிரானவை. 4-அம்பாறை மாவட்டத்தில் கல்முனை வடக்கு தமிழ்ப் பிரதேச செயலர் பிரிவை முழுமையான ஒரு பிரதேச செயலர் பிரிவாகத் தரம் உயர்த்துமாறு தமிழ்மக்கள் தொடர்ச்சியாகப் போராடி வருகிறார்கள். இன்றுவரை ஆட்சிக்கு வந்த எந்த ஓர் அரசாங்கமும் அந்தப் பிரச்சினையைத் தீர்க்க விரும்பவில்லை. இனஅழிப்பு நடவடிக்கைகளால் அதிகம் விழுங்கப்பட்ட மற்றொரு மாவட்டம் இது. 5-வடக்கில் முல்லைத்தீவு, வவுனியா மாவட்டங்களில் குருந்தூர் மலை, வெடுக்கு நாறிமலை, நீராவியடி ஆகிய இடங்களில் தமிழ் மரபுரிமைச் சின்னங்கள் அமைந்திருக்கும் சிறுமலைகளில் அரச திணைக்களங்களும் பிக்குகளும் அரச படையினரும் பௌத்த கட்டுமானங்களை உருவாக்கி வருகிறார்கள். அங்கேயும் நீதிமன்றத் தீர்ப்புகள் மீறப்படுகின்றன. இக்கட்டளைகளை வழங்கிய ஒரு நீதிபதி நாட்டைவிட்டுத் தப்பியோடும் நிலைக்குத் தள்ளப்பட்டார். அதற்காக வெட்கப்படவேண்டிய அரசாங்கம் அவரைத் தனிப்பட்ட முறையில் சிறுமைப்படுத்தியது. முல்லைத்தீவில் உள்ள கொக்குத்தொடுவாயில் மேற்கொள்ளப்படும் மனிதப் புதைகுழி அகழ்வானது பன்னாட்டு நிபுணர்களின் மேற்பார்வையின் கீழ் இடம்பெறவில்லை. யுத்தம் முடிவடைந்த பின்னர் முல்லைத்தீவில் மட்டும் 67 பௌத்த விகாரைகள் அமைக்கப்பட்டுள்ளன. முல்லைத்தீவில் பொதுமக்கள் மற்றும் இராணுவம் இடையிலான விகிதம் 2:1 ஆக இன்னமும் இருக்கின்றது. சுமார் 100க்கும் மேற்பட்ட படையினர் முகாம்கள் முல்லைத்தீவு மாவட்டத்தில் மட்டும் அமைக்கப்பட்டுள்ளன. 6-வவுனியா மாவட்டத்தில் கொக்கச்சான் குளம் என்ற தமிழ் மக்களின் பாரம்பரிய விவசாயக் குடியிருப்பு இராணுவப் பாதுகாப்புடனும் அரச அனுசரணையுடனும் ஆக்கிரமிக்கப்பட்டு ‘கலாபோபஸ்வேவ’ என்ற பெயருடைய சிங்களக் கிராமமாக மாற்றப்பட்டு மிகக்குறுகிய காலத்துக்குள் அந்த கிராமத்துக்குத் தேவையான சகல உட்கட்டுமான வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. இதேபோன்று, அம்பாந்தோட்டையிலிருந்து கொண்டுவரப்பட்டவர்களை அரசின் அனுசரணையோடு குடியமர்த்தி ‘நாமல்கம’ என்ற ஒரு கிராமம் உருவாக்கப்பட்டுள்ளது. 7-மன்னார் மாவட்டத்தில், கனிம வளம் பறிக்கப்படுகின்றது. அங்குள்ள முள்ளிக்குளம் கிராமத்தை ஆக்கிரமித்து வைத்திருக்கும் ஸ்ரீலங்கா கடற்படையானது அக்கிராமத்தின் பூர்வ குடிகளான தமிழ் மக்களை அங்கு முழுமையாக மீளக் குடியமர விடாமல் தடுத்து வருகின்றது. மன்னார் புதைகுழி தொடர்பான உண்மைகள் இதுவரை வெளிப்படுத்தப்படவில்லை 8-கிளிநொச்சி மாவட்டத்தில் தமிழர் மரபுரிமைச் சொத்துகளை தொல்லியல் திணைக்களம் ஆக்கிரமித்து வருகின்றது. 9-யாழ்ப்பாண மாவட்டத்தில் படைத்தரப்பு முகாம்களை அமைத்திருக்கும் பெரும்பாலான காணிகள் தனியாருக்குரியவை. இவற்றுள் மிகச்சிறிய நிலப்பரப்புத்தான் இதுவரை விடுவிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டத்திலும் தமிழர் மரபுரிமைச் சொத்துக்கள் பல ஆக்கிரமிக்கப்பட்டு சிங்கள பௌத்த மயமாக்கப்பட்டுள்ளன. நாவற்குழியில் அரசின் அனுசரணையோடு ஒரு சிங்களக் குடியேற்றம் உருவாக்கப்பட்டிருக்கிறது. தையிட்டியில் தனியார் காணியில் சட்டவிரோதமாக ஒரு புதிய விகாரை படையினரால் கட்டப்பட்டுவிட்டது. 10-தமிழர் தாயகம் எங்கும் தனியார் காணிகள் படையினரால் அபகரிக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே அபகரிக்கப்பட்ட தனியார் காணிகள் பல இதுவரை விடுவிக்கப்படவில்லை. ஆனால் பெரும்பகுதி விடுவிக்கப்பட்டு விட்டதாக அரச புள்ளி விபரங்கள் பொய் கூறுகின்றன. தமிழர் தாயகமெங்கும் வனவளத் திணைக்களமும், வனஜீவராசிகள் திணைக்களமும் காடுகளின் பாதுகாப்பு, வனஉயிரினங்களின் பாதுகாப்பு என்ற பெயரில் தனியார் காணிகள், பயிர்ச்செய்கை நிலங்கள், வணக்கத்தலங்கள் உள்ளடங்கிய பல்லாயிரக்கணக்கான ஏக்கர்கள் அளவு நிலத்தை அபகரித்து வைத்திருக்கின்றன. மேற்குறிப்பிடப்பட்டவை சில உதாரணங்கள் மட்டுமே. கடந்த 15 ஆண்டுகளாக நிலப்பறிப்பும் சிங்கள பௌத்த மயமாக்கலும் அரசுக் கொள்கையாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன 11-புனர்வாழ்வின் பின் விடுவிக்கப்பட்ட முன்னாள் இயக்கத்தவர்கள் 15 ஆண்டுகளின் பின்னரும் தொடர்ச்சியாக அச்சுறுத்தல்களின் மத்தியில் வாழ்ந்து வருகிறார்கள். 12-தமிழ் மக்களின் அரசுக்கு எதிரான செயற்பாடுகளைப் பயங்கரவாதமாகச் சித்திரிக்கக்கூடிய வாய்ப்புகளைக் கொண்டிருக்கும் பயங்கரவாத தடைச் சட்டம் தொடர்ந்தும் தமிழ் மக்களின் தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருக்கிறது 13-அரசியல் கைதிகள் முழுமையாக விடுவிக்கப்படவில்லை. மாறாக, பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தமிழர்கள் தொடர்ந்தும் கைது செய்யப்படுவது முழுமையாக நிறுத்தப்படவும் இல்லை. 14-மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள்;, அரசியற் செயற்பாட்டாளர்கள் மீதான அடக்கு முறைகளும் அச்சுறுத்தல்களும் தொடர்கின்றன. 15-வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான போராட்டம் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து நடந்து வருகிறது. காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு இன்றுவரை நீதி கிடைக்கவில்லை. வலிந்து காணாமல் போகச் செய்யப்பட்டவர்களுக்கான சர்வதேச தினமாகிய கடந்த ஓகஸ்ட் முப்பதாம் திகதியன்று திருகோணமலையில் நடந்த எதிர்ப்பு பேரணியில் கலந்து கொண்ட உறவினர்கள் மற்றும் அரசியற் செயற்பாட்டாளார்கள் மீது அரச பயங்கரவாதமானது போலீஸ் நடவடிக்கை என்ற வடிவத்தில் ஏவி விடப்பட்டது. நீதிமன்ற கட்டளையின் கீழான இச்சட்ட நடவடிக்கை மூலம் அப்பேரணி குலைக்கப்பட்டது. இவ்வாறு கட்டமைக்கப்பட்ட இன அழிப்புச் செயற்பாடுகள் தமிழர் தாயகமெங்கும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தமிழர்களின் தாயகத்தின் நிலத் தொடர்ச்சியைத் துண்டாடுவது, இன விகிதாசாரத்தைக் குறைப்பது, நிலத்தைப் பறிப்பது, தமிழ் மரபுரிமைச் சின்னங்களை அழிப்பது, அங்கே சிங்கள பௌத்த மரபுரிமைச் சின்னங்களை ஸ்தாபிப்பது போன்ற அனைத்துச் செயற்பாடுகளும் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பின் வெவ்வேறு வடிவங்களே. இந்த நடவடிக்கைகள் ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்கப்பட முடியாத தன்மையைக் கொண்டவை. ஸ்ரீலங்கா அரசு என்ற மையத்திலிருந்து உள்நோக்கத்துடன் திட்டமிடப்படுகின்றவை. தொல்லியல் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம், வனவளத் திணைக்களம் போன்ற அரச திணைக்களங்கள் ஆக்கிரமிப்பைப் பகலில் சட்டரீதியாகச் செய்கின்றன. பிக்குகள் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளில் முன்னணியில் நிற்கிறார்கள். அவர்கள் சட்டத்தையோ நீதிமன்றத்தையோ காவல்துறையையோ மதிப்பதில்லை. படையினர் இரவுகளில் பௌத்த கட்டுமானங்களை இரகசியமாகக் நிர்மாணிக்கின்றார்கள். நிலப்பறிப்பு, சிங்களபௌத்தமயமாக்கல், அரசின் அனுசரணையுடனான குடியேற்ற நடவடிக்கைகள் போன்ற நடவடிக்கைகளில் படைத் தரப்பு ஒரு சமாந்தரமான அரசைப்போல செயற்படுகின்றது. அதில் வடக்கு கிழக்கில் மட்டும் 65,000 ஏக்கர்களுக்கு மேற்பட்ட நிலப்பரப்பு படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது இனவழிப்புச் செயற்பாடுகளைத் தொடர்ச்சியாக முன்னெடுத்துவரும் அதேவேளை நாட்டில் பொருளாதாரப் பிரச்சினைதான் உண்டு என்று பொய்யான தோற்றத்தைக் கட்டியெழுப்பி பன்னாட்டு சமூகத்தை நம்ப வைக்க அரசாங்கம் முயற்சித்து வருகிறது. இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணமறுத்து இன அழிப்பு யுத்தத்தைத் தொடர்ந்து முன்னெடுத்த காரணத்தாலேயே நாடு கடனாளியாகியது. எனவே, இப்பொழுது நாட்டை பிடித்துலுப்பும் பொருளாதார நெருக்கடிக்கு மூலகாரணம் யுத்தத்திற்காகப் வாங்கிய கடன் சுமைதான். இப்பொழுது தென்னிலங்கையில் வேட்பாளர்களாகக் களமிறங்கியுள்ள அனைவரும் பொருளாதார நெருக்கடி எனப்படுவது இனப்பிரச்சினையின் விளைவுதான் என்பதனை மறைக்கின்றனர். இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணாமல் பொருளாதார நெருக்கடியைத் தீர்க்கமுடியாது என்ற ஆழமான உண்மையை எந்த ஒரு தென்னிலங்கை வேட்பாளரும் வெளிப்படையாக ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்களுடைய பரப்புரையின் குவிமையமாக இருப்பது நாட்டை வங்குரோத்து நிலையிலிருந்து எப்படி மீட்டெடுப்பது என்பதுதான். இனப்பிரச்சினையை தீர்ப்பதற்காகத் தமிழ் மக்களால் ஏற்கத்தக்க பொருத்தமான முன்மொழிவு எதனையும் அவர்களில் யாரும் இதுவரை முன்வைக்கவில்லை. யுத்த தளபாடங்களுக்காக முன்பிருந்த அரசாங்கங்கள் 25000 கோடி அமெரிக்க டொலர்களைச் செலவழித்துள்ளதாக இந்திய பாதுகாப்புத்துறை சார்ந்த ஒரு நிபுணரின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்தப் பணத்தைச் செலவழித்து முன்னெடுக்கப்பட்ட யுத்தத்தின் விளைவாக ஏற்பட்ட உயிரழிவு, பொருள் அழிவைக் குறித்து இதுவரையிலும் உத்தியோகபூர்வ மதிப்பீடு எதுவும் இலங்கை அரசாங்கத்தால் செய்யப்பட்டிருக்கவில்லை. அந்த அழிவுகளில் இருந்து தமிழ் மக்களை மீட்டெடுப்பதற்கான எந்த ஒரு சிறப்பு செயல்திட்டமும் இன்றுவரையிலும் உருவாக்கப்படவுமில்லை. யுத்தத்துக்காகப் படையினரின் ஆட்தொகை பல இலட்சமாக அதிகரிக்கப்பட்டது. இலங்கையின் மொத்தத் தேசிய உற்பத்தியில் 40 விகிதம் படையினருக்கே செலவழிக்கப்படுகிறது. இலங்கைத்தீவின் அரச உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படும் மொத்தச் சம்பளத்தில் ஏறக்குறையச் சரிபாதி படையினருக்கான சம்பளமாக வழங்கப்படுகிறது. கடந்த 15 ஆண்டுகளிலும் படைத்தரப்பின் ஆட்தொகை குறிப்பாக வடக்கு கிழக்கில் குறைக்கப்படவில்லை. அதாவது இராணுவமய நீக்கம் நிகழவில்லை. மாறாக, தேசியப் பாதுகாப்பு என்ற போர்வையில் தமிழர் தாயகத்தை சிங்கள பௌத்த மயப்படுத்தும் நிகழ்ச்சி நிரலை நிறைவேற்றுவதற்காகவே படைத்தரப்பு பெருஞ் செலவில் பராமரிக்கப்பட்டு வருகின்றது. இவ்வாறான இராணுவ பொருளாதாரச் சூழலுக்குள் புலம் பெயர்ந்த தமிழர்கள் முதலீடு செய்யத் தலைப்பட்டமாடடார்கள். அண்மைக் காலங்களில் அதிகரித்த அளவில் தமிழ் மக்கள் புலம் பெயர்ந்து வருகிறார்கள். தற்போது புலம்பெயர்பவர்கள் படித்தவர்கள், சமூகத்தில் பொறுப்பான பதவிகளை வகித்தவர்களே இப்படிப்பட்ட தலைமை தாங்கும் தகைமையுள்ள படித்தவர்கள் சமூகத்தில் இருந்து வெளியேறுவது எதிர்காலத்தில் தமிழ் மக்களின் அரசியலில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும். இவ்வாறான இராணுவப் பொருளாதார சூழலுக்குள் தமிழ் மக்கள் மத்தியில் கூட்டுணர்வையும் நம்பிக்கையையும் தமிழ்த் தேசிய ஒருமைப்பாட்டையும் கட்டியெழுப்ப வேண்டியது அவசியம். அதேசமயம் இனப்பிரச்சினைக்கான தீர்வின் அவசியத்தையும் அவசரத்தையும் தென்னிலங்கைக்கும் உலக சமூகத்துக்கும் நிராகரிக்கப்பட முடியாத விதத்தில் உணர்த்த வேண்டியதும் அவசியம். தமிழ் மக்களுக்கு பொருளாதாரப் பிரச்சினைகள்தான் உண்டு என்று தொடர்ச்சியாக ஆட்சிக்கு வரும் அரசாங்கங்கள் கூறிவரும் ஒரு பின்னணியில் இனப் பிரச்சினையைப் பேசுபொருளாக்கி அதன்மீது தென்னிலங்கையின் கவனத்தையும் உலகத்தின் கவனத்தையும் ஈர்க்கும் நோக்கத்தோடு, தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பினராகிய நாம் ஒரு பொதுத் தமிழ் வேட்பாளராக திரு.பாஅரியநேத்திரன் அவர்களை முன் நிறுத்துகிறோம். கடந்த 46 ஆண்டுகளாகத் தமிழ் மக்கள் யாரோ ஒரு தென்னிலங்கை வேட்பாளருக்கு வாக்களித்து வந்திருக்கிறார்கள்;. 2009க்குப் பின் 3 ஜனாதிபதித் தேர்தல்களிலும் தமிழ்மக்கள் தென்னிலங்கை வேட்பாளர்களுக்கு வாக்களித்திருக்கிறார்கள். இவர்களில் வென்றவர்களும் சரி தோற்றவர்களும் சரி இன்றுவரையிலும் இனப்பிரச்சினைக்கு ஏற்றுக்கொள்ளத்தக்க ஒரு தீர்வைத் தரவும் இல்லை; இன அழிப்புச் செயற்பாடுகளை நிறுத்தவும் இல்லை. கடந்த 46 ஆண்டுகளாக ஜனாதிபதித் தேர்தல்களில் தென்னிலங்கை வேட்பாளர்களுக்கு பதில் வினையாற்றும் அணுகுமுறையில் இருந்து வேறுபட்டு இந்த முறை தமிழ்மக்கள் செயல்முனைப்போடு ஜனாதிபதித் தேர்தலை எதிர்கொள்வது என்று எடுக்கப்பட்ட முடிவின் விளைவே தமிழ்ப் பொது வேட்பாளர் ஆகும். தமிழ்ப் பொதுவேட்பாளர் தமிழ் மக்களை ஓரணியாகத் திரட்டுவார். அதேசமயம், இனப்பிரச்சினைக்கான தீர்வை நோக்கித் தமிழ் மக்களின் கூட்டு விருப்பத்தை உலக சமூகத்துக்கும் தென்னிலங்கைக்கும் வெளிப்படுத்துவார். இனப்படுகொலைக்கு எதிரான பரிகார நீதியையும் கோருவார். இந்த அடிப்படையில், தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பானது இனப் பிரச்சனைக்கான நிரந்தர தீர்வானது பின்வரும் அடிப்படைகளைக் கொண்டிருக்க வேண்டும் என்று உறுதியாக வலியுறுத்துகின்றது. 1-இனப்பிரச்சினையைத் தீர்க்கும் நோக்கத்தோடு உருவாக்க வேண்டிய இலங்கைத்தீவின் புதிய யாப்பானது தமிழ் மக்களை இறைமையும் சுயநிர்ணய உரிமையும் கொண்ட ஒரு தேசிய இனமாக ஏற்றுக்கொள்ள வேண்டும். 2-தமிழ் மக்களை ஒரு தேசிய இனமாக ஏற்றுக் கொண்டால்தான் இலங்கைத் தீவின் பல்லினத் தன்மையை உறுதிப்படுத்தலாம். எனவே புதிய யாப்பு ஆனது இலங்கைத் தீவின் பன்மைத் தேசியப் பண்பை உறுதிப்படுத்தும் விதத்தில் தேசங்களின் ஒன்றிணைவாக அமைய வேண்டும். அதாவது புதிய யாப்பானது இலங்கைத் தீவு ஒரு பன்மைத் தேசிய அரசாகக் (Plurinational State) கட்டமைக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். 3-ஒற்றையாட்சிக்கு உட்பட்ட எந்த ஒரு அரசியல் தீர்வாலும் தமிழ் மக்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகளை ஒருபோதும் திருப்திப்படுத்த முடியாது. 4-இந்த விடயத்தில் தமிழ் மக்கள் தங்களுக்கு என்ன தீர்வு வேண்டும் என்பதனை தாமே நிர்ணயிப்பதற்குப் பொருத்தமான பன்னாட்டு ஏற்பாடுகளைக் கோருவதற்கு உரித்துடையவர்கள். 5-தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலான அலகானது ஒன்றிணைந்த தற்போதைய வடக்கு கிழக்கு மாகாணங்களை எல்லையாகக் கொண்டு அமைய வேண்டும். குறித்த சுயநிர்ணய அலகிற்குள் முஸ்லீம் மக்களின் நியாயமான அரசியல் உரிமைகள் தொடர்பில் திறந்த மனதோடு பேச்சுவார்த்தை நடாத்த தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்புத் தயாராக உள்ளது. 6-மலையகத் தமிழ் மக்களின் தனித்துவமான தேசிய இருப்பை நாம் அங்கீகரிக்கின்றோம். அந்த அடிப்படையில் அவர்களுக்கு நிரந்தர தீர்வு வழங்கப்பட வேண்டும். மேலும் உடனடி பிரச்சினைகளுக்கு அவர்கள் தொடர்ச்சியாகக் கோரி வரும் தீர்வுகளும் வழங்கப்பட வேண்டும். இத்தீர்வுகளுக்கான போராட்டத்தில் தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பானது மலையகத் தமிழர்களோடு தோளோடு தோள் நிற்கும். 7-ஈழத் தமிழர்களுக்கு எதிராக ஸ்ரீலங்கா அரசு நடத்திய இன அழிப்பு, போர்க் குற்றங்கள், மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் யாவும் அங்கீகரிக்கப்பட்ட ஒரு பன்னாட்டு நீதித்துறைக் கட்டமைப்புக்கூடாக முழுமையாகவும் முறையாகவும் விசாரிக்கப்பட்டு, பரிகார நீதி வழங்கப்படுவதுடன், இன அழிப்புச் செயற்பாடுகள் மீள நிகழாமையை உறுதி செய்ய வேண்டும். இதுவரையிலுமான ஐநா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்களின் தொகுக்கப்பட்ட அனுபவமாக ஐநா பொதுச் செயலர் பொறுப்பு கூறலை ஐநா பொதுச் சபையிடம் பாரப்படுத்துவதன் மூலம் இன அழிப்புக்கு எதிரான பன்னாட்டு விசாரணைகளை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றங்களிடம் பாரப்படுத்த வேண்டும். 8-அபிவிருத்தியின் பெயரால் மேற்கொள்ளப்படும் நிலப்பறிப்பைத் தடுக்கவும் நமது வளங்கள் இன அழிப்பின் ஒரு பகுதியாகச் சுரண்டப்படுவதைத் தடுக்கவும் தமிழர் தாயகத்தின் தேசிய வளங்களை இயற்கையின் சமநிலை குலையாத வகையில் வினைத்திறனுடன் பயன்படுத்தவல்ல தற்சார்பு பொருளாதாரக் கட்டமைப்புக்களை நாம் உருவாக்க வேண்டும். இதற்கேற்ற வகையில் தமிழர் தாயகத்தின் பொருளாதார அபிவிருத்தியை நோக்காகக் கொண்டு புலம்பெயர்ந்த தமிழர்களின் முதலீடுகளையும் உள்ளுர் மற்றும் சர்வதேச முதலீடுகளையும் உள்வாங்கும் அதிகாரம் தமிழர் தேசத்துக்கு இருக்க வேண்டும். 9-ஒரு நிரந்தரத் தீர்வைக் கண்டடைவதற்கு இடைப்பட்ட காலகட்டத்தில், தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுவரும் கட்டமைக்கப்பட்ட இனஅழிப்பு நடவடிக்கைகளை தடுக்கும் நோக்கத்தோடும், தமிழர் தேசத்தின் இருப்பைப் பாதுகாக்கும் நோக்கத்தோடும் போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கென்று பன்னாட்டு சமூகத்தின் மேற்பார்வையின்கீழ் விசேட இடைக்காலப் பாதுகாப்பு ஏற்பாடு ஒன்று உருவாக்கப்பட வேண்டும். மேற்கண்ட தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பின் நிலைப்பாட்டை ஏற்றுத் தமிழ் மக்கள் இதுவே தமது பொது நிலைப்பாடு என்று உலகுக்கும் தென்னிலங்கைக்கும் வெளிக்காட்ட பொதுக் கட்டமைப்பின் பொது வேட்பாளராகிய திரு.பா.அரியநேத்திரன் அவர்களுடைய சங்குச் சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும் என்று அன்புரிமையோடு வேண்டி நிற்கின்றோம். பொதுவேட்பாளர் ஜனாதிபதியாக வருவதற்காக முன் நிறுத்தப்படவில்லை. அவர் தமிழ் மக்களை ஒன்று திரட்டுவதற்காகவும், கட்சிகளை ஒன்றிணைப்பதற்காகவும், தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை ஒருமித்த குரலில் ஒலிக்கச் செய்வதற்காகவுமே முன் நிறுத்தப்படுகிறார். ஒன்று திரண்ட தமிழ் மக்கள் உலகத்தின் முன்னும் தென்னிலங்கையின் முன்னும் பலமாக நிமிர்ந்து நிற்பார்கள். அதாவது அரியநேத்திரன் அவர்களுக்கு வழங்கப்படும் வாக்குகள் தமிழ்மக்கள் தங்களுக்குத் தாங்களே வழங்கும் வாக்குகள்தான். தமிழ் மக்களின் விடுதலைக்காக தமது இன்னுயிர்களைத் தியாகம் செய்தவர்களைக் கௌரவிக்கும் வாக்குகள்தான். எனவே தமிழ் பொது வேட்பாளருக்கு வாக்களிப்பது தமிழ் மக்களின் தேசியக் கடமையாகும். சங்குச் சின்னத்துக்கு ஆகக்கூடிய தமிழ் வாக்குகளை வழங்குவதன் மூலம் அன்பான தமிழ் மக்களே எங்களை நாங்களே வெற்றி பெற வைப்போம். https://thinakkural.lk/article/308918
  3. பராலிம்பிக் ஈட்டி எறிதலில் இலங்கையின் சமித்த துலான் உலக சாதனையுடன் வெள்ளிப் பதக்கம் வென்று வரலாறு படைத்தார் Published By: VISHNU 03 SEP, 2024 | 02:12 AM (நெவில் அன்தனி) பிரான்ஸில் நடைபெற்றுவரும் பாரிஸ் 2024 பராலிம்பிக் விளையாட்டு விழாவில் இலங்கைக்கான முதலாவது பதக்கத்தை சமித்த துலான் கொடிதுவக்கு உலக சாதனையுடன் வென்றெடுத்து தனது தாய் நாட்டிற்கு பெயரும் புகழும் ஈட்டிக்கொடுத்தார். போட்டியின் ஆறாம் நாளான திங்கட்கிழமை (02) இலங்கை நேரப்படி இரவு 10.30 மணிக்கு ஆரம்பமான ஆண்களுக்கான F64 வகைப்படுத்தல் பிரிவு ஈட்டி எறிதல் போட்டியில் பங்குபற்றிய இலங்கை மாற்றுத்திறனாளி சமித்த துலான் கொடிதுவக்கு ஈட்டியை 67.03 மீற்றர் தூரத்திற்கு எறிந்து F44 வகைப்படுத்தல் பிரிவுக்கான உலக சாதனையை நிலைநாட்டி வெள்ளிப் பதக்கத்தை வென்றெடுத்தார். தனது ஐந்தாவது முயற்சியிலேயே சமித்த துலான் கொடிதுவக்கு உலக சாதனையை நிலைநாட்டினார். ஜப்பானின் கோபி விளையாட்டரங்கில் கடந்த மே மாதம் நடைபெற்ற உலக பரா மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பில் F64 வகைப்படுத்தில் பிரிவு ஈட்டி எறிதலில் 66.49 மீற்றர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்து F44 வகைப்படுத்தல் பிரிவுக்கான உலக சாதனை நிலைநாட்டி வெள்ளிப் பதக்கம் வென்ற சமித்த துலான் கொடிதுவக்கு பராலிம்பிக்கில் தனது சொந்த உலக சாதனையை முறியடித்து வரலாறு படைத்தார். டோக்கியோ 2020 பராலிம்பிக் விளையாட்டு விழாவில் சமித்த துலான் கொடிதுவக்கு வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார். சமித்த துலான் கொடிதுவக்கு தனது முதல் நான்கு முயற்சிகளில் முறையே 63.14 மீற்றர், 63.61 மீற்றர், 55.01 மீற்றர், 63.73 மீற்றர் ஆகிய தூரங்களைப் பதிவுசெய்திருந்தார். ஐந்தாவது முயற்சியில் உலக சாதனை நிலைநாட்டிய அவர், கடைசி முயற்சியில் 64.38 மீற்றர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்தார். இப் போட்டியில் இந்தியாவின் மாற்றுத்திறனாளி சுமித் 70.59 மீற்றர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்து புதிய பராலிம்பிக் சாதனையுடன் தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார். அவுஸ்திரேலியாவின் மாற்றுத்திறனாளி மைக்கல் பியூரியன் (F44 வகைப்படுத்தல் பிரிவு) 64.89 மீற்றர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்து வெண்கலப் பதக்கத்தை வென்றெடுத்தார். https://www.virakesari.lk/article/192686
  4. 03 SEP, 2024 | 09:39 AM தொழுநோய் என்பது ஒரு தொற்று நோய் இது எளிதில் சுவாசம் மூலம் பரவக்கூடியது. ஆனால் அதன் ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து இந்த சிகிச்சை மேற்கொண்டால் முழுமையாக குணமடைய கூடியது. இலங்கையில் தொழு நோயிலிருந்து மக்களை பாதுகாக்க விழிப்புணர்வு அதிகரிப்பது அவசியமாகும் என வவுனியா இந்து குருக்கள் ஒன்றியத்தின் தலைவர் - சுப்ரமணிய சர்மா குருக்கள் தெரிவித்துள்ளார். வவுனியா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற தொழுநோய் முகாமைத்துவம், மற்றும் தொழுநோயினால் பாதிக்கப்பட்ட மக்களின் மேம்பாடு எனும் தொனிப்பொருளில் வவுனியா பிரதேச செயகலம், காவேரி கலா மன்றம் மற்றும் மாற்று மக்கள் சபை ஆகியன இணைந்து நடாத்திய மாநாட்டில் இணைந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தொழு நோயின் முக்கிய அறிகுறிகளாக தோலின் மேற்பரப்பில் கட்டிகள் மற்றும் வெளிறிய நிறத்தில் தேமல் காணப்படும். அவை உணர்ச்சியற்றவையாக ரோமங்கள் அற்றவையாக காணப்படும். சில சந்தர்ப்பங்களில் நரம்புகள் மரத்துப் போகின்ற கை கால் உணர்ச்சியற்ற நிலை ஏற்படுகின்ற நிலையும் ஏற்படலாம் இவை அறிகுறிகளாக காணப்படும். இவ்வாறான அறிகுறிகள் காணப்படுமாயின் உடனடியாக மருத்துவ சிகிச்சை பெறுவது அவசியம் இலங்கையில் இலவச சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன எனவே பயப்படாமல் மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்யவும். நோயாளிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர்கள் சமூகத்தில் ஒதுக்கப்படும் நிலையை தவிர்க்க அனைவரும் தொழுநோய் தொடர்பாக அறிந்து மக்களை விழிப்புணர்வுடன் வைத்திருப்பது இன்றியமையாதது. தொழு நோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை பெற்று நம் சமூகத்தை காப்போம் என்றார். https://www.virakesari.lk/article/192695 Leprosy (தொழு நோய்) தொழுநோய் என்பது புறநரம்புகள் பகுதிகளிலும் மற்றும் சுவாசக்குழாயில் காணப்படும் கோழைகளில் ஏற்படும் குருண/குருமணி நோய்களாகும். தோலில் காணப்படும் சீழே அதன் முதல் அறிகுறியாகும். ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை அளிக்காமல் விடின் தொழுநோயின் தீவிரம் அதிகரித்து தோல், நரம்பு, விரல்கள் மற்றும் கண்களுக்கு நிரந்தர பாதிப்பை ஏற்படுத்தும். தொழுநோய் என்றால் என்ன? மைக்ரோ பேக்டீரியம் லெப்ரே (Mycobacterium Leprae) என்ற பாக்டீரியாவால் உண்டாகும் ஒரு தொற்றுநோயே தொழுநோய். இந்த பாக்டீரியா மிக மெதுவாக பெருகுவதால் நோய்த் தொற்று ஏற்பட்டு குறைந்தது 5 அல்லது 6 ஆண்டுகளுக்கு பிறகே நோயின் அறிகுறிகள் தோன்றும். இந்த நோய், தோல், நரம்பு, மேல் மூச்சு மண்டலத்தை பாதிக்கும். இந்நோயை உண்டாக்கும் நோயுயிரியை முதலில் 1873ம் ஆண்டு மருத்துவர் கெரார்டு ஆன்சன் என்பவர் கண்டறிந்தார். ஆதலால், இது ஆன்சன் நோய் எனவும் அழைக்கப்படுகிறது தொழுநோய் எப்படி உண்டாகிறது? மைக்கோபாக்டீரியம் லெப்ரே என்பது வெப்பமண்டலப் பகுதிகளில் காணப்படும் பாக்டீரியம்தான். இதுவே தொழுநோயை உண்டாக்குகிறது. அளவிலும் வடிவிலும் இது காசநோயை (TB) உண்டாக்கும் நுண்ணுயிரி (மைக்கோபாக்டீரியம் தியூபர்குளோசிசு) போன்றதே. ஒளி நுண்ணோக்கி வழியே கண்டால் இந்த பாக்டீரியா உருண்டை உருண்டையாகவோ பக்கம் பக்கமாகக் குச்சிகளாகவோ, ஏறத்தாழ 1 முதல் 8 மைக்ரோமீட்டர் நீளமும், 0.2 – 0.5 மைக்ரோமீட்டர் குறுக்களவும் கொண்ட குச்சிகளாகக் காணப்படுகின்றன. இந்த நுண்ணுயிரியை நார்வே மருத்துவர் கெரார்டு ஆர்மவுர் ஃகான்சன் (Gerhard Armauer Hansen) 1873ம் ஆண்டு கண்டுபிடித்தார். அவர் அப்பொழுது தொழுநோய் உற்றவர்களின் தோல் கொப்புளங்களில் குறிப்பாகத் மனிதர்களில் தேடிக்கொண்டிருந்தார். தொழுநோயை உண்டாக்கும் நுண்ணுயிரியாகக் கண்டுபிடிக்கப்பட்ட முதல் நுண்ணுயிரி இதுதான். இந்த நுண்ணுயிரியை சோதனைச்சாலையில் வளர்க்க இயலாமல் இருப்பதற்குக் காரணம் இந்த நுண்ணுயிரிகளின் உயிர்வாழ்வுக்குத் தேவையான அடிப்படைப் பொருள்கள் (மரபணுக்கள் சில) பிற உயிர்களில் இருந்துதான் கிடைக்கின்றன. மைக்கோபாக்டீரிய வகையைச் சேர்ந்த இந்த நுண்ணுயிரியின் உயிரணுவைச் சூழ்ந்திருக்கும் படலத்தின் தனித்தன்மையாலும் மிக மிக மெதுவாகவே எண்ணிக்கைப் பெருக்கம் செய்வதாலும், இவற்றை அழிப்பது கடினமாக உள்ளது. நோய் எவ்வாறு பரவும்? சிகிச்சை பெறாத நோயாளியே நோய் பரவலுக்கு காரணம். தொழு நோயாளியின் உடலில் இருந்து நோய் கிருமி பரவும் முக்கிய வழி சுவாச மண்டலம். சிகிச்சை பெறாத தொழுநோயாளிகளிடம் தொடர்ந்து தொடர்பு இருக்கும்போது நோய் உண்டாகும். இந்த பாக்டீரியா மூக்கு/வாய் வழியாக சுவாச மண்டலத்துக்குள் நுழைகிறது. பின்பு அவை நரம்புகள் மற்றும் தோலை அடைகின்றன. நோய் அறிகுறிகள் என்னென்ன? * வெளியேறிய தோல் திட்டுக்கள் * தோல் திட்டுகளில் உணர்வு குறைவு/இழப்பு * கை அல்லது காலில் உணர்வின்மை * கால், கைகளில் காயம் அல்லது தீப்புண்(உணர்வின்மை காரணமாக சூடு அறியாமை) * முகம் அல்லது காது மடலில் வீக்கம் அறிகுறிகள் தென்பட்டால்..? தொழுநோய் அறிகுறிகள் தென்பட்டால் அருகில் உள்ள தோல் மருத்துவரை அணுக வேண்டும். தொழுநோய்க்கு மருந்து உண்டு. பன்மருந்து சிகிச்சையின் (MDT) முக்கியத்துவம் என்ன? தொழுநோயை ஒரு தனி மருந்தால் குணப்படுத்த முடியாது. பல மருந்துகளின் கூட்டு சிகிச்சை அதாவது எம்.டி.டி (MDT) தொழுநோய் பன்மருந்து சிகிச்சையால் (Antibiotics) குணப்படுத்த முடியும். தொடர்ந்து பன்மருந்து சிகிச்சை மேற்கொள்ளும் போது நோய் முற்றிலுமாக குணப்படுத்தப்பட்டு ஊனங்கள் தவிர்க்கப்பட்டு, நோய் பரவலும் தடுக்கப்படுகிறது. நோய் பரவும் முறை இந்நோய் காற்றின் மூலமே அதிகம் பரவும். நோயுற்றவருடன் ஏற்படும் நேரடித்தொடர்பின் மூலமும் நோயுயிரி சுவாசக் குழாய் வழியாக உட்செல்வதின் மூலமும் இது பரவுகிறது. நோய்த்தொற்று உள்ள நபர் தும்மும்போதும் இருமும்போதும் கோடிக்கணக்கான தொழுநோய் நுண்ணுயிர்கள் காற்றில் பரவுகின்றன. இது நாசி வழியாக உள்சென்று நோயெதிர்ப்பு சக்தி குறைந்தவரைத் தாக்குகிறது. மேலும் இது நோயுற்றவரின் உடலில் வழியும் சீழ்களில் தொடர்பு ஏற்படுவதாலும் பரவுகிறது. பாதிப்புகள் முகம்: மூக்கு சப்பையாகுதல், கண் இமைகள் மூட முடியாத நிலை. கை: விரல்கள் மடங்கிப்போதல், விரல்கள் குறைந்த அளவில் காணப்படுதல், மணிக்கட்டு துவண்டுவிடுதல். கால்: விரல்கள் மடங்கி போதல், விரல்கள் மழுங்கி விடுதல், பாதம் துவண்டு விடுதல், பாதத்தில் உணர்ச்சி போய் குழிப்புண்கள் ஏற்படுதல். தாக்கம் அதிகமாயின் உயிரும் இழக்க நேரிடும். உலக தொழு நோய் தினம் ஏன்? எப்போது? உலக தொழுநோய் தினம் ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி இறுதி ஞாயிறு கடைப்பிடிக்கப்படுகிறது. ஊனமாக்கும் தொழுநோயை விரைவில் ஒழிக்க தீவிர முயற்சிகளையும் புதிய உறுதியையும் மேற்கொள்ள இந்த தினம் உதவுகிறது. இந்தத் தினம் எதற்காக அனுசரிக்கப்படுகிறது? தொழுநோய் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த… அதன் நோய் அறிகுறிகளை பற்றி மக்கள் அறிய தொழுநோய் குணப்படுத்த முடியும் தகுந்த சிகிச்சை எடுத்து கொண்டால் என்பதை அறியப்படுத்த… தொழுநோய் பற்றிய மோசமான, தவறான எண்ணங்களை (STIGMA) விலக்க… Dr. ஏ .எஸ். நிறைமதி MBBS,MD,DNB சரும மருத்துவர் காவேரி மருத்துவமனை, திருச்சி, தென்னூர் https://kauveryhospital.com/blog/tamil-articles/a-disease-that-continues-for-ages/
  5. Published By: DIGITAL DESK 3 03 SEP, 2024 | 09:13 AM யாழ்ப்பாணம் - சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றினுள் நள்ளிரவு வேளை அத்துமீறி நுழைந்த பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் குடும்பஸ்தரை எவ்வித காரணமும் கூறாது கைது செய்துள்ளதாகவும், கைது செய்த பின்னர் அவரை சித்திரவதைக்கு உட்படுத்தியதாகவும் பாதிக்கப்பட்டவரின் மனைவி தெரிவித்துள்ளார். யாழ். ஊடக மையத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், கடந்த 28ஆம் திகதி நள்ளிரவு வேளை எமது வீட்டின் மதில் ஏறி பாய்ந்து, வீட்டின் முன் பக்க கதவினை கால்களால் உதைத்து உடைத்து வீட்டினுள் அத்துமீறி நுழைந்த சுன்னாக பொலிஸார் எனது கணவரை தாக்கி கைது செய்தனர். கணவரை எதற்காக கைது செய்கிறீர்கள் என கேட்டவேளை ,அதற்கு அவர்கள் பதில் அளிக்கவில்லை. கணவரின் கைதினை தடுக்க நிறைமாத கர்ப்பிணியான நானும் , கணவரின் அண்ணாவின் பெண் பிள்ளைகள் உள்ளிட்ட நாம் முயன்ற வேளை எம்மையும் தாக்க முற்பட்டனர். கணவரின் அண்ணாவின் மகள் கைத்தொலைபேசியை கையில் வைத்திருந்த வேளை , வீடியோ எடுக்கிறீயா என போனை பறித்து உடைக்க முயன்றனர். நாம் கணவரை பொலிஸார் காரணமின்றி கைது செய்து அழைத்து செல்வதனை தடுக்க முயன்ற போதிலும் எம்மை தாக்குவது போன்று அச்சுறுத்தி , கணவனை வீட்டில் இருந்து இழுத்து சென்று , வெளியில் நின்ற முச்சக்கர வண்டியில் ஏற்றி சென்றனர். கணவனை அழைத்து செல்லும் போதே . கண்களை கட்டியுள்ளனர். பின்னர் யாருடனோ தொலைபேசியில் தமிழ் பொலிஸ் உத்தியோகஸ்தர் , கணவனின் பெயரை கூறி , அவரை கைது செய்து விட்டோம் என கூறியுள்ளார். நாம் நள்ளிரவே சுன்னாகம் பொலிஸ் நிலையம் சென்ற போது , கணவனை அடித்து துன்புறுத்தி இருந்தனர். அது தொடர்பில் கேட்ட போது , சந்தேகத்தில் கைது செய்துள்ளோம் என கூறி எம்மை அங்கிருந்து அனுப்பி விட்டனர். மறுநாள் 29ஆம் திகதி நாம் யாழ் . மாவட்ட பொலிஸ் அத்தியட்சகரின் அலுவலகம் சென்று முறையிட்டோம். அவர் அது தொடர்பில் சுன்னாகம் பொலிஸ் பொறுப்பதிகாரியிடம் தொலைபேசியில் விசாரித்தார். அவர்கள் ஏதோ கூற எம்மை அனுப்பி வைத்தார். நாங்கள் மீண்டும் சுன்னாகம் பொலிஸ் நிலையம் சென்ற வேளை , கணவரை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி , தமிழ் பொலிஸ் உத்தியோகஸ்தரான உப பொலிஸ் பரிசோதகர் உள்ளிட்டோர் பைப் , வயர்களால் மிக மோசமாக தாக்கி சித்தரவதை புரிந்துள்ளனர் கணவனை நிலத்தில் முழங்காலில் இருந்தி தாக்கியுள்ளனர். தாக்குதலுக்கு இலக்கானவர் சத்தி எடுத்துள்ளார். கணவரை கைது செய்த பொலிஸார் 24 மணி நேரம் கடந்தும் நீதிமன்றில் முற்படுத்தாது , சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மிக மோசமான முறையில் சித்தரவதைக்கு உள்ளாகியுள்ளனர். பின்னர் அவரை விடுவித்துள்ள நிலையில் நாம் அவரை தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ளோம். தற்போது எனது கணவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார் என தெரிவித்தார். அதேவேளை குறித்த சம்பவம் தொடர்பில் இலங்கை மனிதவுரிமை ஆணைக்குழுவின் பிராந்திய அலுவலகம் கவனம் செலுத்தியுள்ளது எனவும் , பாதிக்கப்பட்ட நபரை திங்கட்கிழமை தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் நேரில் பார்வையிட்டு , அவரது வாக்கு மூலங்களை பெற்றுள்ளதாகவும்,அதன் அடிப்படையில் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக மனிதவுரிமை ஆணைக்குழுவின் யாழ் . பிராந்திய இணைப்பாளர் த. கனகராஜ் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/192692
  6. விண்வெளி என்றால் என்ன? அது எவ்வளவு பெரியது? பூமியில் இருந்து எவ்வளவு தூரத்தில் இருக்கிறது? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், விஷ்ணு ஸ்வரூப் பதவி, பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் விண்வெளி — அறிவியல் திரைப்படங்கள், அறிவியல் புனைகதைகள், சூப்பர்ஹீரோ படங்கள், காமிக்ஸ் எனப் பல வடிவங்களிலும் விண்வெளியைப் பற்றிய கற்பனைகளை நாம் கண்டிருக்கிறோம். இருந்தும் விண்வெளியைப் பற்றிய பல கேள்விகளும், வியப்புகளும் நமக்குத் தீராமல் இருக்கின்றன என்பதே நிதர்சனம். இன்றைய வானவியலும் இயற்பியலும், விண்வெளி பற்றிய இந்தத் தீராத கேள்விகளுக்கு விடை காண முயன்று வருகின்றன. ஆனால், விண்வெளி என்றால் என்ன? அது எதனால் உருவாகியிருக்கிறது? எவ்வளவு தூரத்தில் இருக்கிறது? மொத்த விண்வெளியும் ஒரே போன்றுதான் இருக்குமா? ஆகிய எளிமையான, ஆனால் சுவாரசியமான கேள்விகளுக்கு விடைகாண முயல்கிறது இந்தக் கட்டுரை. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பால்வெளி, ஆண்ட்ரோமீடா ஆகிய நட்சத்திர மண்டலங்கள் உள்ளடக்கிய தொகுதி, 1 கோடி ஒளியாண்டுகள் அகலமானது விண்வெளி எவ்வளவு பெரியது? மிகப் பெரியது. ஆனால் எவ்வளவு? இதனை ஒப்பீட்டளவில் மட்டுமே புரிந்துகொள்ள முடியும் என்கிறது பிரபல அறிவியல் சஞ்சிகையான ‘சைன்டிஃபிக் அமெரிக்கன்’-இல் வெளிவந்திருக்கும் ஒரு கட்டுரை. அதாவது, சூரியனின் விட்டம் 14 லட்சம் கிலோமீட்டர்கள். நமது சூரியக் குடும்பத்துக்கு அருகில் இருக்கும் நட்சத்திரமான ஆல்ஃபா சென்டாரி 41 லட்சம் கோடி கிலோமீட்டர்கள் தொலைவில் இருக்கிறது. அதற்குமேல் அளக்க, விஞ்ஞானிகள் ஒளியாண்டுகள் என்ற அலகினைப் பயன்படுத்துகிறார்கள். ஒரு ஒளியாண்டு என்பது, ஓராண்டில் ஒளி கடக்கும் தூரம். அதாவது, சுமார் 9.5 லட்சம் கோடி கிலோமீட்டர்கள். நமது பால்வெளி நட்சத்திர மண்டலத்தின் அகலம், 1.2 லட்சம் ஒளியாண்டுகள். பால்வெளி, ஆண்ட்ரோமீடா ஆகிய நட்சத்திர மண்டலங்கள் உள்ளடக்கிய தொகுதி, 1 கோடி ஒளியாண்டுகள் அகலமானது. இந்தக் குழு ஒரு பகுதியாக இருக்கும் இன்னும் பெரிய நட்சத்திர மண்டலமான லனியாகீ பெருந்தொகுதி (Laniakea Supercluster), 1 லட்சம் நட்சத்திர மண்டலங்களை உள்ளடக்கியது. இதன் நீளம் 50 கோடி ஒளியாண்டுகள். ஆனால், பிரபஞ்சம் விரவடைந்துகொண்டே போகிறது என்கிறது ஒரு கோட்பாடு. நம்மிடம் வந்தடையும் ஒளியை வைத்துத்தான் நாம் காணக்கூடிய பிரபஞ்சத்தின் விரிவினை நாம் புரிந்துகொள்கிறோம். தற்போதைக்கு நாம் பார்த்தவரையிலான பிரபஞ்சத்தின் அகலம், 9,000 கோடி ஒளியாண்டுகள். ஆனால், பிரபஞ்சம் விரிவடைந்துகொண்டே போகிறது என்று வைத்துக்கொண்டால், நாம் பார்க்காத அதன் பகுதிகள் மிக அதிகம். அதனால், இப்போதைக்கு, வெளி எவ்வளவு பெரியது என்பதை நாம், கணித, இயற்பியல் விதிகளின் துணையோடு கற்பனை மட்டுமே செய்து பார்த்துக்கொள்ள முடியும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பூமியின் பரப்பிலிருந்து 100கி.மீ உயரத்தில் ஒரு எல்லை நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது விண்வெளி எங்கிருந்து துவங்குகிறது? இதற்காக, மொஹாலியில் உள்ள இந்திய அறிவியல் கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தின் பேராசிரியர் முனைவர் த.வி.வெங்கடேஸ்வரனிடம் பிபிசி தமிழ் பேசியது. பூமியின் வளிமண்டலம் முடியுமிடத்திலிருந்து விண்வெளி துவங்குகிறது என்று எளிமையாகச் சொல்லிவிடலாம். ஆனால் பூமியின் வளிமண்டலம் எங்கு முடிகிறது என்பதைச் சொல்வதுதான் கடினம், என்கிறார் வெங்கடேஸ்வரன். “இதற்குக் காரணம், வளிமண்டலம் ஒரு கோடு போட்டதுபோலச் சட்டென முடிவடைவதில்லை. வளிமண்டல வாயுக்களின் அடர்த்தி தொடர்ந்து மெலிந்துகொண்டே போகுமே தவிர அது குறிப்பிட்ட ஓரிடத்தில் நின்றுபோகாது,” என்கிறார் வெங்கடேஸ்வரன். அப்படியிருக்க, எதை விண்வெளி என்று சொல்வது? பூமியின் வளிமண்டல வாயுக்கள் 99% முடிகின்றனவோ, அதற்கு மேல் இருப்பது விண்வெளி என்று கருதப்படுகிறது, என்கிறார் அவர். விண்வெளியை வரையறுக்க மற்றொரு முறையும் உள்ளது. இது பறத்தல் சார்ந்தது. வாயுக்கள் நிறைந்திருக்கும் வளிமண்டலத்தில் ஒரு பறவையோ, விமானமோ பறக்க வேண்டுமெனில், அவை காற்றியக்கவியல் (aerodynamics) விதிகள் மூலமே பறக்கும். இந்த காற்றியக்கவியல் சார்ந்த பறத்தல் எங்கு சாத்தியமில்லாமல் போகிறதோ, அதுதான் விண்வெளி என்று வரையறுக்கப்படுகிறது. இந்த அறிவியல் கருதுகோள்களைக் கொண்டு, ‘கார்மான் கோடு’ (Kármán Line) என்ற ஒரு எல்லை நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. பூமியின் பரப்பிலிருந்து 100கி.மீ உயரத்தில் இந்த எல்லை நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. அங்கிருந்துதான் விண்வெளி துவங்குவதாக, ஐ.நா மற்றும் மற்ற உலக நாடுகள் ஏற்றுக்கொள்கின்றன. ஆனால், அமெரிக்கா, பூமியின் பரப்பிலிருந்து 80கி.மீ உயரத்திலேயே விண்வெளி துவங்குவதாக நிர்ணயித்திருக்கிறது. இந்த எல்லையின் முக்கியத்துவம் என்ன? கார்மான் எல்லைக்கு மேலிருக்கும் விண்வெளி எந்த நாட்டுக்கும் சொந்தமாகாத பொதுவான வெளி. உதாரணத்துக்கு, ஒரு நாட்டின் செயற்கைக்கோள் மற்றொரு நாட்டின் மீது செல்கிறதென்றால் அது இந்தல் கார்மன் எல்லைக்கு மேல்தான் செல்ல வேண்டும், இல்லையெனில், அது மற்றொரு நாட்டின் வான்பரப்புக்குள் ஊடுருவுவது ஆகிவிடும். அதேபோல் பிரபஞ்சத்தில் உள்ள எந்த கோளின் மேற்பரப்பிலிருந்தும், அவற்றின் வளிமண்டலம் துவங்குகிறது, என்கிறார் அவர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, நட்சத்திர மண்டலங்களுக்கிடையே இருக்கும் வெளி, intergalactic space என்று அழைக்கப்படுகிறது விண்வெளி எதனால் உருவாகியிருக்கிறது? பிரபஞ்சத்தில் இருப்பது எல்லாமே வெளிதான், என்கிறார் வெங்கடேஸ்வரன். இந்த வெளியில்தான் விண்மீன்கள், கோள்கள் அனைத்தும் உள்ளன. இதனை, ஒரு சிலந்தி வலையாகக் காட்சிப்படுத்திக்கொள்ளலாம் என்கிறார் அவர். அதாவது, சிலந்தி வலையில் இழைகள் இருக்கும் இடங்கள்தான், கோள்கள் ஆகியவை இருக்கும் இடங்கள். அவற்றுக்கு இடையில் இருக்கும் வெற்றிடம்தான் வெளி. இந்த வெற்றிடங்களும் முழுமையான வெற்றிடங்கள் அல்ல, அவை ஒப்பீட்டளவில் வாயுக்களின் அடர்த்தி குறைவாக இருக்கும் இடங்கள். வெளியின் வகைகள் என்ன? பிரபஞ்சத்தில் இருக்கும் வெளி மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது, என்கிறார் வெங்கடேஸ்வரன். 1) நமது சூரியக் குடும்பத்தில் இருக்கும் கோள்களின் இடையில் இருக்கும் வெளி ‘interplanetary space’ என்றழைக்கப்படுகிறது. இந்த வெளியில் அந்தக் கோள் குடும்பத்தின் மத்தியில் இருக்கும் நட்சத்திரத்தின் தாக்கம் அதிகளவில் இருக்கும். இந்த வெளியில் 1 கன சென்டிமீட்டரில் 5 முதல் 40 துகள்கள் இருக்கும். இவை ஹைட்ரஜன் போன்ற வாயுக்களால் ஆனவை. 2) நமது சூரியக் குடும்பம் போலவே வேறுபல கோள் குடும்பங்களும் உள்ளன. உதாரணமாக, நமது சூரியக் குடும்பத்திற்கு மிக அருகில் (4.2 ஒளியாண்டுகள்) ஆல்ஃபா சென்டாரி என்ற நட்சத்திரத்தின் கோள் குடும்பம் உள்ளது. இப்படி இரண்டு நட்சத்திரங்களுக்கிடையே இருக்கும் வெளி ‘interstellar space’ என்றழைக்கப்படுகிறது. இந்த வெளியிலும் அந்தந்த நட்சத்திரங்களின் தாக்கம் இருக்கும். உதாரணத்துக்கு, சூரியன், மற்ற நட்சத்திரங்களிலிருந்து வரும் புயல்கள், துகள்கள் ஆகியவை இந்த வெளியில் இருக்கும். இந்த வெளியில், ஒரு கன சென்டிமீட்டரில் 1 துகள் இருக்கும். நாசாவின் வாயேஜர் 1 மற்றும் 2 ஆகிய விண்கலங்கள் இந்த வெளியில்தான் இருக்கின்றன. 3) நமது சூரியக் குடும்பம் இருக்கும் நட்சத்திர மண்டலம் (galaxy) பால்வெளி (milky way) என்றழைக்கப்படுகிறது. இதனைப் போலவே வேறுபல நட்சத்திர மண்டலங்களும் உள்ளன. இவற்றுக்கிடையினால வெளி, intergalactic space என்று அழைக்கப்படுகிறது. இந்த வெளியில் 1 கன மீட்டருக்கு 1 அணு மட்டுமே இருக்கும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பால்வெளி நட்சத்திர மண்டலம் விண்வெளிக்குச் செல்ல எவ்வளவு நேரமாகும்? எவ்வளவு வேகமாகச் செல்ல வேண்டும்? பூமியின் பரப்பிலிருந்து 100கி.மீ என்று வரையறுக்கப்பட்டிருக்கும் விண்வெளியை அடைவதற்கான நேரம் அந்தந்த ராக்கெட்டின் வேகத்தைப் பொறுத்தது, என்கிறார் வெங்கடேஸ்வரன். உதாரணத்துக்கு, இந்தியாவின் சந்திரயான் திட்டத்தில் ஏவப்பட்ட ஜி.எஸ்.எல்.வி ராக்கெட், 194 விநாடிகளில் (அதாவது 3.2 நிமிடங்களில்) விண்வெளியை அடைந்தது. பொதுவாக, பூமியின் புவியீர்ப்புப் புலத்தில் இருந்து வெளியேறி விண்வெளிக்குச் செல்லத் தேவையான வேகம் ‘எஸ்கேப் வெலாசிட்டி’ (escape velocity) என்றழைக்கப்படுகிறது. நமது பூமியின் புவியீர்ப்புப் புலத்தை விட்டு வெளியேற நாம் நொடிக்கு 11.2 கி.மீ வேகத்தில் பயணிக்க வேண்டும். ஆனால், பொதுவாக பூமியில் இருந்து ஏவப்பட்டு, பூமியைச் சுற்றிவர வேண்டிய செயற்கைக்கோள்கள், இந்த வேகத்தில் செல்லாது என்கிறார் வெங்கடேஸ்வரன். ஏனெனில், இவை பூமியின் புவியீர்ப்புக்குள்ளேயே சுற்றிவர வேண்டும். அதேபோல், நிலவுக்கு அனுப்பப்படும் செயற்கைக்கோள்களும், இந்த வேகத்தில் பயணிக்காது. மாறாக, நிலவினை எட்டும் அளவுக்குச் செல்ல என்ன வேகம் தேவையோ, அந்த வேகத்தில் சென்று, நிலவின் ஈர்ப்பு மண்டலத்தை அடைந்தவுடன் ஒரு சிறிய உந்துதலால் அவை நிலவின் ஈர்ப்புக்குள் செல்கின்றன. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சூரியனுக்கு அருகில் இருக்கும் நட்சத்திரமான் ப்ராக்சிமா சென்டாரியின் மாதிரிப் படம் விண்வெளிக்கு முடிவு உண்டா? இந்தக் கேள்விக்கு விடையறிய, பிரபஞ்சத்தின் வடிவம் என்னவென்று முதலில் விளங்கிக்கொள்ள வேண்டும் என்கிறார் வெங்கடேஸ்வரன். ஆனால், அதுபற்றியும் ஒருமித்த முடிவுகள் இல்லை என்கிறார் அவர். ஐன்ஸ்டீனின் கோட்பாட்டிலிருந்து பெறப்பட்ட புரிதலின்படி, பிரபஞ்சத்திற்கு மூன்று சாத்தியமான வடிவங்கள் இருக்கலாம். 1) தட்டையான வடிவம் - பிரபஞ்சாத்தை ஒரு மேஜையின் மேற்பரப்பினைப் போலக் கற்பனை செய்துகொண்டால், அது அனைத்து திசைகளிலும் முடிவின்றிச் செல்லும். அப்போது விண்வெளி முடிவற்றது. ஆனால் தட்டையான வடிவமென்பதால் அதற்கு எல்லைகள் இருக்கும். 2) வளைந்த வடிவம் - ஒரு கால்பந்தின் பரப்பைப்போல பிரபஞ்சம் வளைந்திருக்கிறது என்று கருதினால், விண்வெளிக்கு எல்லை இருக்கும், ஆனால் விளிம்புகள் இருக்காது. 3) குதிரை சேனை வடிவம் - இந்த வடிவத்தில் வெளி உள்நோக்கி வளைந்திருக்கும். இதிலும் வெளிக்கு முடிவு இருக்காது. ஆனால், இதுவரை பிரபஞ்சத்தின் வடிவம் இதுதான் என்று அறுதியாகச் சொல்வதற்குத் தேவையான துல்லியமான அளவீடுகள் நம்மிடம் இல்லை, அதுபற்றிய ஆய்வுகள் தற்போது நடந்துகொண்டிருக்கின்றன, என்கிறார் வெங்கடேஸ்வரன். அதனால் விண்வெளிக்கு முடிவு உண்டா என்பதற்கும் இப்போதைக்கு அறுதியான பதில் இல்லை. இது, பிபிசி-க்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/c0qe2p5n3v8o
  7. Published By: VISHNU 02 SEP, 2024 | 11:27 PM ரொபட் அன்டனி ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் வருகின்ற புதிய அரசாங்கத்துடன் அதிகாரப்பரவலாக்கத்துடன் கூடிய அரசியல் தீர்வு தொடர்பாக இணைந்து செயற்பட எதிர்பார்க்கின்றோம் என்று இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்றூ பெட்ரிக் தெரிவித்தார். பிரித்தானியா பல வருடங்களாக அதிகாரப்பரவலாக்கத்துடன் கூடிய அரசியல்தீர்வு தொடர்பாக வலியுறுத்தி வருகிறது என்றும் சுட்டிக்காட்டிய பிரித்தானிய உயர்ஸ்தானிகர் பிரதான வேட்பாளர்கள் இந்த விடயம் தொடர்பில் தமது கொள்கைகளை வெளியிட்டுள்ளமையையும் எடுத்துக் கூறினார். பாத்பைன்டர் நிறுவனம் வெள்ளிக்கிழமை கொழும்பில் ஏற்பாடு செய்த கலந்துரையாடல் ஒன்றில் பங்கேற்ற பிரித்தானிய உயர்ஸ்தானிகர் இந்த விடயங்களை சுட்டிக்காட்டினார். பிரித்தானியாவின் புதிய அரசாங்கத்தின் வெளியுறவு அணுகுமுறை, தெற்காசியாவில் பிரித்தானியாவின் பிரசன்னம், பிரித்தானியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இரு தரப்பு உறவு உள்ளிட்ட பல்வேறு தொடர்பான விடயங்கள் அவர் கருத்துக்களை முன்வைத்தார். ‘‘பிரித்தானியாவுக்கு தெற்காசிய பிராந்தியம் முக்கியத்துவமிக்கது. எதிர்காலம் இங்கு முக்கியத்துவமிக்கதாக உள்ளது. இலங்கையின் இரண்டாவது ஏற்றுமதி வர்த்தக பங்காளராக தொடர்ந்தும் இருந்து வருகிறது’’ என்று உயர்ஸ்தானிகர் அன்றூ பெட்ரிக் சுட்டிக்காட்டினார். சுற்றுலாத்துறையிலும் இலங்கையில் இரண்டாவது இடத்தை பிரித்தானிய சுற்றுலாப் பயணிகள் பெறுவதாகவும் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டார். மேலும் பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கத்துவம் வகிக்காததன் காரணமாக இலங்கை போன்ற நாடுகளுக்கு உதவும் நோக்கில், ‘‘அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளுக்கான வர்த்தக திட்டம்’’ என்ற செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டார். இந்த கலந்துரையாடலில் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்றூ பெட்ரிக் தெரிவித்த முக்கிய விடயங்கள் வருமாறு: இலங்கைக்கும் பிரித்தானியாவுக்கும் இடையிலான உறவு முக்கியத்துவமிக்கது. பிரித்தானியா தொடர்ந்தும் இலங்கையிலிருந்து அதிக இறக்குமதிகளை செய்கிறது. இலங்கையின் ஏற்றுமதி பொருளாதாரத்தில் பிரித்தானியா இரண்டாவது இடத்தைப் பிடிக்கிறது. சுற்றுலாத்துறை இலங்கையில் மிக முக்கியமான ஆற்றலை கொண்டிருக்கிறது. அதிலும் பிரித்தானிய இலங்கைக்கு சிறந்த பங்களிப்பை வழங்குகிறது. சட்டவிரோத குடியேற்றவாசிகளை ருவாண்டாவுக்கு அனுப்புகின்ற திட்டம் புதிய பிரித்தானிய அரசாங்கத்தினால் நிறுத்தப்பட்டுள்ளது. எந்தவொரு நாட்டுக்கும் இது தொடர்பான பிரச்சினை சவாலாகவே இருக்கும். அதிகமான மக்கள் 20ஆயிரம் டொலர்களுக்கும் அதிக பணத்தை கடத்தல் காரர்களுக்கு கொடுத்து பிரித்தானியாவுக்கு வர முயற்சிக்கின்றனர். ஐ.நா. மனித உரிமை பேரவையின் புதிய அமர்வு நடைபெறவுள்ளது. இதில் இணை அனுசரணை நாடுகள் குழு எவ்வாறான முடிவை எடுத்துள்ளது என்று தற்போது கூற முடியாது. ஆனால், இப்போது இலங்கையில் தேர்தல் காலம் என்பதால் தேர்தலின் பின்னர் இந்த விடயத்தில் செயற்படுவதற்கு புதிய கதவுகள் திறக்கப்படும் என்று நம்புகின்றோம் என்று குறிப்பிட்டார். இதேவேளை, ஜெனிவா கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பில் புதிய பிரேரணை கொண்டு வரப்படுமா என்ற எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த உயர்ஸ்தானிகர் அதற்கு அமர்வு தொடங்கும் வரை காத்திருக்க வேண்டியது அவசியம் என்று பதிலளித்தார். இது இவ்வாறிருக்க அரசியல் தீர்வு தொடர்பில் வடக்கு, கிழக்கு மக்கள் மற்றும் தலைவர்கள் எவ்வாறான விடயங்களை உங்களிடம் தெரிவித்தார்கள் என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த உயர்ஸ்தானிகர், இந்த விடயம் தொடர்பில் நான் மிகக் கவனமாக பேச வேண்டியிருக்கிறது. ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் வருகின்ற புதிய அரசாங்கத்துடன் அதிகாரப்பரவலாக்கத்துடன் கூடிய அரசியல் தீர்வு தொடர்பாக இணைந்து செயற்பட எதிர்பார்க்கின்றோம். பிரித்தானியா பல வருடங்களாக அதிகாரப்பரவலாக்கத்துடன் கூடிய அரசியல்தீர்வு தொடர்பாக வலியுறுத்தி வருகிறது. பிரதான வேட்பாளர்கள் இந்த விடயம் தொடர்பில் தமது கொள்கைகளை வெளியிட்டுள்ளனர் என்றார். https://www.virakesari.lk/article/192685
  8. 2025 ஆம் ஆண்டிலிருந்து அரச ஊழியர்களுக்கு 24 - 50 சதவீதம் வரையிலான சம்பள உயர்வு Published By: VISHNU 03 SEP, 2024 | 04:11 AM - அலுவலக உதவியாளர்களுக்கு தரநிலை அடிப்படையில் 5450 - 13,980 ரூபாய் வரையில் சம்பள அதிகரிப்பு - சாரதிகளுக்கு 6960 - 16,340 ரூபாய் வரையில் சம்பள அதிகரிப்பு - சமூர்த்தி/அபிவிருத்தி/விவசாய ஆய்வு அதிகாரிகளுக்கு 8,340-15,685ரூபாய் வரையில் சம்பளன அதிகரிப்பு - முகாமைத்துவ உதவியாளர்களுக்கு 12,710 - 17,550 ரூபாய் வரையில் சம்பள அதிகரிப்பு - அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு 12,710 - 25,150 ரூபாய் வரையில் சம்பள அதிகரிப்பு - பொது சுகாதார பரிசோதகர்/குடும்ப சுகாதார உத்தியோகத்தர்களுக்கு 12,558 -25,275ரூபாய் வரையில் சம்பள அதிகரிப்பு - கதிரியக்கவியல்/ மருந்தாளர்களுக்கு 13,280 - 25,720 ரூபாய் வரையில் சம்பள அதிகரிப்பு - தாதியர்களுக்கு 13,725 - 26,165 ரூபாய் வரையில் சம்பள அதிகரிப்பு - அதிபர்களுக்கு 23,245 - 39,595 ரூபாய் சம்பள அதிகரிப்பு - ஆசியர்களுக்கு 17,480 - 38,020 ரூபாய் சம்பள அதிகரிப்பு - பொலிஸ் அதிகாரிகளுக்கு 10,740 - 23,685 ரூபாய் சம்பள அதிகரிப்பு - கிராம சேவகர்களுக்கு 11,340 - 23,575 ரூபாய் வரையில் சம்பள அதிகரிப்பு - நிர்வாக சேவை அதிகாரிகளுக்கு 28,885 ரூபாய் சம்பள அதிகரிப்பு - பிரதிப் பணிப்பாளர்/பிரதி ஆணையாளர்களுக்கு 43,865 ரூபாய் சம்பள அதிகரிப்பு - பிரதேச செயலாளர்/பணிப்பாளர்/ஆணையாளர்/சிரேஷ்ட உதவிச் செயலாளர் பதவிகளுக்கு 57,545 ரூபாய் சம்பள அதிகரிப்பு - வைத்திய அதிகாரிகளுக்கு 35,560 - 53,075 ரூபாய் சம்பள அதிகரிப்பு - வருடாந்த சம்பள அதிகரிப்பு இரட்டிப்பாக்கப்படும் - அரச கூட்டுத்தாபனம்/சபைகள்/நியதிச் சட்ட நிறுவனங்கள்/பல்கலைக்கழகங்கள்/முப்படையினருக்கு 2025 ஜனவரி முதலாம் திகதியில் இருந்து சம்பள அதிகரிப்பு வழங்கப்படும். அரச ஊழியர்களின் சம்பள பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நியமிக்கப்பட்ட உதய.ஆர்.செனவிரத்ன தலைமையிலான நிபுணத்துவ குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி 2025 ஜனவரி 1 ஆம் திகதி முதல் அரச ஊழியர்களின் அடிப்படைச் சம்பளம் 24 - 50 சதவீதம் வரையில் அதிகரிக்கப்படவுள்ளது. அதன்படி அரச சேவையின் அலுவலக உதவியாளர் தரம் மூன்றிற்கு 5,450 ரூபாவினாலும், இரண்டாம் தரத்திற்கு 8,760 ரூபாவினாலும், தரம் ஒன்றிற்கு 10,950 ரூபாயினாலும் சம்பளம் அதிகரிக்கப்படவிருப்பதோடு, அதன் உயர்தர சேவைகளுக்கு 13,980 ரூபாவினால் சம்பள அதிகரிப்பு செய்யப்படவுள்ளது. அதேபோல் சாரதி சேவையின் மூன்றாம் தரத்தின் சம்பளம் 6,960 ரூபாவினால் அதிகரிக்கப்படும். இரண்டாம் தரத்தின் சம்பளம் 9,990 ரூபாவினாலும், முதலாம் தரத்திற்கு 13,020 ரூபாவினாலும், விசேட தரத்திற்கு 16,340 ரூபாவினாலும் சம்பள அதிகரிப்பு கிடைக்கும். மூன்றாம் நிலை சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தருக்கு ரூ.8,340 சம்பள உயர்வும், இரண்டாம் தரத்திற்கு ரூ.11,690 சம்பள உயர்வும், முதலாம் தரத்திற்கு ரூ.15,685 சம்பள உயர்வும் கிடைக்கும். முகாமைத்துவ சேவை அதிகாரி/முகாமைத்துவ உதவியாளர் தரம் III இற்கு ரூ. 10,140 மற்றும் தரம் II இற்கு ரூ.13,490 உயர்த்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது. முதல் தர சம்பளம் 17,550 ரூபாயால் அதிகரிக்கப்படும். அபிவிருத்தி உத்தியோகத்தர் தரம் மூன்று சம்பள உயர்வு 12,710 ரூபாவினாலும் இரண்டாம் தரத்திற்கு ரூ.17,820, முதல் தரத்திற்கு ரூ.25,150 வினாலும் அதிகரிக்கப்படும். பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் குடும்ப சுகாதார பணியாளர் மூன்றாம் தரத்தின் சம்பளம் 12,885 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது. இரண்டாம் தரத்திற்கு ரூ.17,945 சம்பள உயர்வும் முதலாம் தரத்திற்கு ரூ.25,275 சம்பள உயர்வும் கிடைக்கும். கதிரியக்க நிபுணர் மற்றும் மருந்தாளர் மூன்றாம் தரத்திற்கு ரூ.13,280 சம்பள அதிகரிப்பும், இரண்டாம் தரத்திற்கு ரூ.18,310 சம்பள உயர்வும் முதலாம் தரத்திற்கு ரூ.25,720 சம்பள உயர்வும் கிடைக்கும். மூன்றாம் தர தாதியர் உத்தியோகத்தரின் சம்பளம் 13,725 ரூபாயாலும், இரண்டாம் தரத்திற்கு ரூ.18,835 சம்பள அதிகரிப்பும், முதலாம் தரத்தினருக்கு ரூ.26,165 சம்பள உயர்வும் வழங்கப்படவுள்ளது. அதிபர் சேவையின் மூன்றாம் தரத்தின் சம்பளம் 23,425 ரூபாவினாலும், இரண்டாம் தரத்தின் சம்பளம் 29,935 ரூபாவினாலும், மூன்றாம் தரத்திற்கு 39,595 ரூபாவினாலும் அதிகரிக்கப்படும். ஆசிரியர் சேவையில் உள்ள கல்வியியல் கல்லூரி ஆசிரியர்களுக்கு ரூ.17,480 சம்பள உயர்வும், பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூ.19,055 அதிகரிப்பும், இரண்டாம் தரத்திற்கு ரூ.20,425, முதல் தரத்திற்கு 38,020 ரூபாயும் முன்மொழியப்பட்டுள்ளது. பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் சம்பள உயர்வாக ரூ.10,704 பெறுவார். பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரின் சம்பள ரூ.13,210 வினாலும், சப்-இன்ஸ்பெக்டர்களின் சம்பளம் ரூ.14,050 வினாலும் அதிகரிக்கப்படும். பொலிஸ் பரிசோதகரின் சம்பளம் ரூ.18,290, பிரதான பொலிஸ் பரிசோதகரின் சம்பளம் ரூ.23,685 அதிகரிக்கப்படவுள்ளது. கிராம உத்தியோகத்தர் முதலாம் தர சம்பளம் 11,340 ரூபாயால் அதிகரிக்கப்படவுள்ளது. அந்த சேவையின் இரண்டாம் தரத்திற்கு ரூ.14,690, முதலாம் தரத்தினருக்கு ரூ.18,750 சம்பளம் அதிகரிக்கப்படவுள்ளது. நிர்வாக கிராம அதிகாரியின் சம்பளம் ரூ.23,575 அதிகரிக்கும். உதவிச் செயலாளர், உதவிப் பணிப்பாளர், கணக்காளர், உதவிப் பிரதேச செயலாளர், உதவி ஆணையாளர் ஆகியோரின் சம்பளம் 28,885 ரூபாவினால் அதிகரிக்கப்படும். பிரதி பணிப்பாளர் ,பிரதி ஆணையாளர்களின் ஆரம்ப சம்பளம் 43,865 ரூபாவினால் அதிகரிக்கப்பட உள்ளது. பிரதேச செயலாளர், பணிப்பாளர், ஆணையாளர், சிரேஷ்ட உதவி செயலாளர் ஆகிய பதவிகளுக்கான சம்பளம் 57,545 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது. ஆரம்ப தர வைத்தியர்களின் சம்பளம் 35,560 ரூபாவினால் அதிகரிக்கப்படும். இரண்டாம் தர வைத்தியர்களின் சம்பளம் ரூ.39,575 ஆல் அதிகரிக்கப்படவுள்ளது. முதலாம் தர வைத்தியர்களுக்கான சம்பள அதிகரிப்பு 53,075 ரூபாவினாலும், மேலதிக செயலாளர் மற்றும் விசேட வைத்தியர்களின் சம்பளம் 70,200 ரூபாவினாலும் அதிகரிக்கப்படவுள்ளது. உதவிச் செயலாளர், உதவிப் பணிப்பாளர், கணக்காளர், உதவிப் பிரதேச செயலாளர் மற்றும் உதவி ஆணையாளர் ஆகிய பதவிகளுக்கான சம்பளம் 28,885 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது. பிரதிப் பணிப்பாளர் மற்றும் பிரதி ஆணையர்களின் அடிப்படைச் சம்பளம் 43,865 ரூபாயாவினாலும் பிரதேச செயலாளர், பணிப்பாளர், ஆணையர், சிரேஷ்ட உதவிச் செயலர் பதவிகளுக்கான சம்பளம் ரூ.57,545 வினாலும் உயர்த்தப்படும். அத்துடன் ஆரம்ப நிலை வைத்தியர்களின் சம்பளம் 35,560 ரூபாவினாலும் இரண்டாம் நிலை வைத்தியர்களின் சம்பளம் 39,575 ரூபாவினாலும் அதிகரிக்கப்படவுள்ளது. முதலாம் நிலை வைத்தியர்களுக்கு 53,075 ரூபாவும், மேலதிக செயலாளர் மற்றும் விசேட வைத்திய பதவிகளுக்கு 70,200 ரூபாவும் சம்பள உயர்வு வழங்கப்படும். அதே சமயம், அனைத்து அரச ஊழியர்களுக்கும் வழங்கும் வருடாந்தம் சம்பள உயர்வுத் தொகையை இரட்டிப்பாக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மேலும், 2025 ஜனவரி 01 முதல் அரச நிறுவனங்கள், கூட்டுத்தாபனங்கள், நியதிச் சட்ட நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் பாதுகாப்பு படையினரின் சம்பளத்தை அதிகரிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/192689
  9. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், பிபிசி குஜராத்தி சேவை பதவி, புது டெல்லி 2 செப்டெம்பர் 2024 பல நூற்றாண்டுகளாக, ‘ஸ்வஸ்திகா’ சின்னம் இந்து மதம், ஜைன மதம், மற்றும் பௌத்தத்தில் புனிதமான ஒரு குறியீடாக இருந்து வருகிறது. இது அதிர்ஷ்டம், மங்களம் மற்றும் செழிப்பு ஆகியவற்றைக் குறிக்கிறது. கிரகப் பிரவேசம், திருவிழாக்கள், மாங்கல்யம், சமய நிகழ்வுகள் ஆகியவற்றில் இந்தக் குறியீடு பயன்படுத்தப்படுகிறது. ஆனால், ஆஸ்திரேலியா, கனடா, மற்றும் அமெரிக்காவில் இது ஒரு ஆத்திரமூட்டும் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது. 1940-கள் வரை, மேற்கத்திய நாடுகளிலும் இந்தக் குறியீடு பரவலாகவும் பிரபலமாகவும் இருந்தது. செழிப்பு மற்றும் செல்வத்தின் அடையாளமாகப் பார்க்கப்பட்டது. ஹிட்லர் நாஜி ஜெர்மனியின் கொடியில் 'ஹக்கன்க்ரூஸ்' (Hakenkreuz) அல்லது கொக்கி வடிவிலான சிலுவையைப் பயன்படுத்தினார். இது ஸ்வஸ்திகாவைப் போன்ற ஒரு உருவம். அதனால், இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, மேற்கத்தியர்கள், குறிப்பாக யூதர்களிடையே யூத இன அழித்தொழிப்பு (ஹோலோகாஸ்ட்) பற்றிய வலிமிகுந்த நினைவுகளின் அடையாளமாக இந்த குறியீடு மாறியது. இந்தியாவில் மட்டுமல்ல, ஸ்வஸ்திகா என்பது உலகெங்கிலும் உள்ள பிரபலமான ஒரு சின்னமாகும். இது ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மனித குலத்தால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்தியாவில் புதுமனைப் புகுவிழாக்கள், குழந்தைக்குப் பெயர் சூட்டும் விழாக்கள், திருமணச் சடங்குகள், ஆகியவற்றில் இந்தக் குறியீடு பயன்படுத்தப்படுகிறது ஸ்வஸ்திகாவின் பொருள் என்ன? இந்து, சமணம் மற்றும் பௌத்த மதங்களில் பிரபலமான ‘ஸ்வஸ்திகா’ என்ற சொல், 'சு' மற்றும் ‘அஸ்தி’ ஆகிய வேர்ச்சொற்களால் ஆனது. ‘சு’ என்றால் ‘நலம்’ என்று பொருள், 'அஸ்தி' என்றால் 'நடக்கட்டும்’ என்று பொருள். இவை சேர்ந்து உருவானது தான் ‘ஸ்வஸ்திகா’ என்ற சொல். இச்சொல்லின் குறியீட்டு அடையாளம், செங்குத்தான கோடு ஒன்றை நடுவில் ஒரு கிடைமட்டக் கோட்டால் வெட்டி, அவற்றின் நான்கு முனைகளிலிருந்தும் கோடுகளை நீட்டி, எட்டு செங்கோணங்களைக் கொண்ட ஒரு வடிவம். ஒரு ஸ்வஸ்திகாவை உருவாக்கும் போது, அதில் நான்கு இடைவெளிகள் விடப்படுகின்றன, அவற்றில் புள்ளிகளும் வைக்கப்படுகின்றன. கணக்குப் புத்தகங்கள், புனித நூல்கள், கடைகள், வாகனங்கள், புதுமனைப் புகுவிழாக்கள், குழந்தைக்குப் பெயர் சூட்டும் விழாக்கள், திருமணச் சடங்குகள், ஆகியவற்றில் இந்தக் குறியீடு பயன்படுத்தப்படுகிறது. மதச் சடங்குகள், திருமணங்களின் போது இந்த சின்னத்தை வரைகையில், 'ஸ்வஸ்திக் மந்திரம்' உச்சரிக்கப்படுகிறது. இதில், இந்து மத நம்பிக்கையின்படி நலன் ஏற்பட வேண்டி, வருணன், இந்திரன், சூரியன், குரு மற்றும் கருடன் ஆகியோரிடம் பிரார்த்தனை செய்யப்படுகிறது. நான்கு திசைகள், நான்கு பருவங்கள், நான்கு யுகங்கள், நான்கு வேதங்கள், வாழ்க்கையின் நான்கு இலக்குகள் (அறம், பொருள், இன்பம், வீடு), வாழ்க்கையின் நான்கு நிலைகள் (குழந்தைப் பருவம், குடும்பப் பருவம், துறவறம், சன்னியாசம்) போன்ற பல கருத்துகள் இந்தக் குறியீட்டுடன் தொடர்புபடுத்தப்படுகின்றன. 'தி லாஸ்ட் விஸ்டம் ஆஃப் ஸ்வஸ்திக்' என்ற நூலின் ஆசிரியர் அஜய் சதுர்வேதியின் கூற்றுப்படி, ‘வேதக் கணிதத்தில் சத்யோ என்பது நான்கு கோணக் கனசதுரத்தைக் குறிக்கிறது. இது இந்துத் தத்துவத்தின் படி விழிப்பு, தூக்கம், கனவு ஆகியவற்றுக்கு அப்பாற்பட்ட நான்காவது நிலையைக் குறிக்கிறது. ஜப்பானில் உள்ள பௌத்தர்களிடையே இந்தக் குறியீடு கௌதம புத்தரின் கால் தடங்களைக் குறிக்கும் 'மான்சி' என்று அழைக்கப்படுகிறது. சதுர்வேதியின் கூற்றுப்படி, ஹிட்லர் இந்து தத்துவத்தில் இந்த ஸ்வஸ்திகா சின்னத்தின் முக்கியத்துவத்தையோ அர்த்தத்தையோ புரிந்து கொள்ளாமல் அரசியலுக்காக மட்டுமே பயன்படுத்தினார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, நாஜிக் கட்சியின் கொடி 1920-ஆம் ஆண்டு கோடைகாலத்தின் மத்தியில் வெளியிடப்பட்டது. ‘ஹேக்கன்கிராஸ் அல்லது ஹூக் கிராஸ்’ 1871-ஆம் ஆண்டில், ஜெர்மன் தொல்பொருள் ஆராய்ச்சியாளர் ஹென்ரிச் சிஸ்லெமன், பண்டைய டிராய் நகரத்தை (இன்றைய துருக்கியில் இருக்கிறது) அகழாய்வு செய்த போது, மண் பாண்டங்களில் சுமார் 1,800 வகையான ‘கொக்கி சிலுவைக்’ குறியீடுகளைக் கண்டுபிடித்தார். இது ஸ்வஸ்திகா போன்ற ஒரு வடிவம். அவர் இதை ஜெர்மானிய வரலாற்றில் இருக்கும் கலைப்பொருட்களுடன் பொருத்தினார். டிராய் நகரத்தில் வசித்தவர்கள் ஆரியர்கள் என்றும், இந்த மண் பாண்டங்களில் காணப்பட்ட ஒற்றுமைகளை, நாஜிக்கள் ஆரியர்களுக்கும் தங்களுக்குமான இனத் தொடர்ச்சிக்கான சான்றுகள் என்று நம்புவதற்கு வழிவகுத்தது என்றும் மானுடவியலாளர் க்வென்டோலின் லேக் குறிப்பிடுகிறார். ஹிட்லர் தனது கட்சி சின்னமாக ஸ்வஸ்திகாவை ஏற்றுக்கொண்டதற்கு முக்கிய காரணம், ஜெர்மானியர்கள் மொழியிலும் சமஸ்கிருதத்திலும் காணப்படும் ஒற்றுமையே என நம்பப்படுகிறது. இந்த ஒற்றுமையின் மூலம்தான் இந்தியர்களும் ஜெர்மானியர்களும் ஒரே 'தூய்மையான' ஆரிய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என்று ஜெர்மானியர்களை நாஜிக்கள் நம்ப வைத்தனர். 1920-ஆம் ஆண்டில், அடால்ஃப் ஹிட்லர் புதிதாக உருவாக்கப்பட்ட தனது கட்சிக்கு ஒரு சின்னத்தைத் தேடும் போது, அவர் 'ஹேக்கன்க்ரூஸ்' அல்லது வலதுசாரி ஸ்வஸ்திகாவைப் பயன்படுத்தினார். 1933-ஆம் ஆண்டில், ஹிட்லரின் பிரசார அமைச்சர் ஜோசப் கோயபல்ஸ் ஸ்வஸ்திகா அல்லது கொக்கிச் சிலுவையின் வணிகப் பயன்பாட்டை தடை செய்யும் சட்டத்தை இயற்றினார். ஜெர்மனியின் உச்ச ஆட்சியாளரான அடால்ஃப் ஹிட்லர், தனது சுயசரிதையான 'மெய்ன் காம்ப்' நூலின் ஏழாவது அத்தியாயத்தில் நாஜி கொடியின் தேர்வு, அதன் நிறங்கள் மற்றும் சின்னங்களைப் பற்றிக் குறிப்பிடுகிறார். ஹிட்லரின் கூற்றுப்படி, புதிய கொடி 'மூன்றாம் (ஜெர்மன்) ரைக்'-ஐக் குறிக்கிறது. நாஜிக் கட்சியின் கொடி 1920-ஆம் ஆண்டு கோடை காலத்தின் மத்தியில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதில், சிவப்புப் பின்னணியில் ஒரு வெள்ளை வட்டத்திற்குள் கருப்பு ‘ஹேக்கன்கிராஸ்’ இருந்தது. இந்த உருவம் இடது பக்கம் 45 டிகிரி கோணத்தில் சாய்ந்த ஸ்வஸ்திகா. சிவப்பு நிறம் சமூக இயக்கத்தின் அடையாளமாக இருந்தது. வெள்ளை என்பது தேசியவாதத்தின் கருத்தை பிரதிபலிக்கிறது. ஸ்வஸ்திகா ஆரியர்களின் போராட்டத்தையும் வெற்றியையும் குறிக்கிறது. 'தி சைன் ஆஃப் தி கிராஸ்; ஃப்ரம் கிளட்டனி டூ ஜீனோசைடு' (‘The Sign of the Cross: From Gluttony to Genocide’) என்ற புத்தகத்தில், டாக்டர் டேனியல் ரான்கூர் லாஃபேர்ரார், ஹிட்லர் தனது குழந்தைப் பருவத்தை ஆஸ்திரியாவில் உள்ள பெனடிக்டைன் மாண்டிசோரியில் கழித்தார் என்று குறிப்பிடுகிறார். அங்கு பல இடங்களில் ‘கொக்கிச் சிலுவை’ பொறிக்கப்பட்டுள்ளது. அதனால், அவர் தனது குழந்தைப் பருவ நினைவுகளுக்காக அந்தச் சின்னத்தைத் தேர்ந்தெடுத்திருக்கலாம், என்கிறார் அவர். இரண்டாம் உலகப் போரின் போது, யூதர்கள், மாற்றுத்திறனாளிகள், ரோமானி மற்றும் சின்டி இன மக்கள், கறுப்பின மக்கள், ஸ்லாவ் இன மக்கள், ஓரினச் சேர்க்கையாளர்கள், சோவியத் மற்றும் போலந்து மக்கள் என, சுமார் 60 லட்சம் மக்களை இந்தக் கொடியின் கீழ் நாஜிக்கள் கொன்றனர். ஜெர்மனி மற்றும் நாஜிக்களால் ஆக்கிரமிக்கப்பட்ட ஐரோப்பிய நாடுகளில் உள்ள யூதர்கள் ஹிட்லரின் படைகளால் துன்புறுத்தப்பட்டனர். ஹோலோகாஸ்டில் இறந்த பல லட்சம் யூதர்களுக்கு, ‘ஹேக்கன்க்ரூஸ்’ அல்லது ‘கொக்கிச் சிலுவை’ பயங்கரமான நினைவுகளைத் தூண்டும் ஒரு சின்னமாகும். சமீபத்திய ஆண்டுகளில் இந்தச் சின்னம் ‘நவ நாஜிக்கள்’ (Neo-Nazis) மற்றும் பல வெள்ளையின மேலாதிக்கவாதிகளால் பயன்படுத்தப்படுகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மதச் சடங்குகள், திருமணங்களின் போது இந்த சின்னத்தை வரைகையில், 'ஸ்வஸ்திக் மந்திரம்' உச்சரிக்கப்படுகிறது வரலாற்றுக்கு முந்தைய காலத்திலிருந்து ஸ்வஸ்திகாவின் பயன்பாடு 1908-ஆம் ஆண்டு, யுக்ரேனில் யானைத் தந்தத்தில் செதுக்கப்பட்ட ஒரு பறவையின் வடிவம் கண்டுபிடிக்கப்பட்டது. அதில் ஸ்வஸ்திகா வடிவம் செதுக்கப்பட்டிருந்தது. ஸ்வஸ்திகாவின் மிகப் பழமையான உருவம் இதுவாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. கார்பன் டேட்டிங் மூலம் அந்த கலைப்பொருள் குறைந்தது 1,500 ஆண்டுகள் பழமையானது என தெரியவந்துள்ளது. இந்தக் குறியீடு, பண்டைய கிறிஸ்தவக் கல்லறைகள், ரோம் நகரின் நிலத்தடிக் கல்லறைகள், எத்தியோப்பியாவின் லாலிபெலாவில் உள்ள கல் தேவாலயம் மற்றும் ஸ்பெயினின் கோர்டோபா கதீட்ரல் தேவாலயம் ஆகியவற்றில் காணப்படுகிறது. யூத இன அழித்தொழிப்பான ‘ஹோலோகாஸ்ட்’ குறித்த என்சைக்ளோபீடியா குறிப்பின் படி, "7,000 ஆண்டுகளுக்கு முன்பு யூரேசியாவில் ஸ்வஸ்திகா பயன்படுத்தப்பட்டது. இது வானத்தில் சூரியனின் இயக்கம் மற்றும் இயக்கத்தைக் குறிக்கும்." இந்தக் குறியீடு, வெண்கல யுகத்தின் போது ஐரோப்பா முழுவதும் பிரபலமடைந்திருக்கலாம் என்று நிபுணர்கள் கருதுகின்றனர். இன்றைய பாகிஸ்தானில் உள்ள ஹரப்பா நாகரிக காலத் தளங்களில் காணப்படும் சில எச்சங்களில் ஸ்வஸ்திகா சின்னங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. 19-ஆம் நூற்றாண்டில், தாமஸ் வில்சன் தனது 'தி ஸ்வஸ்திக்: தி ஏர்லியஸ்ட் நோன் சிம்பல் அண்ட் இட்ஸ் மைக்ரேஷன்ஸ்' ('The Swastik: The Earliest Known Symbol and its Migrations') என்ற புத்தகத்தில், ஸ்வஸ்திகா சின்னம் பண்டைய காலத்தில் உலகம் முழுவதும் பயன்படுத்தப்பட்டது என்று குறிப்பிடுகிறார். தாள்கள், கேடயங்கள், ஆபரணங்கள் ஆகியவற்றிலும் ஸ்வஸ்திகா சின்னம் காணப்படுகிறது. இது ஒரு வால் நட்சத்திரத்தைக் குறிக்கும் உருவம் என்று சிலர் நம்பினர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஹோலோகாஸ்டில் இறந்த பல லட்சம் யூதர்களுக்கு, ‘ஹேக்கன்க்ரூஸ்’ அல்லது ‘கொக்கிச் சிலுவை’ பயங்கரமான நினைவுகளைத் தூண்டும் ஒரு சின்னமாகும் பீர் முதல் கோகோ கோலா வரை பண்டைய கிரேக்கர்கள் தங்கள் குடங்கள் மற்றும் குவளைகளில் ஸ்வஸ்திகா சின்னத்தை வரைந்தனர். நார்வேயின் நம்பிக்கையின்படி, ஸ்வஸ்திகா என்பது 'தோர்’ என்ற கடவுளின் சுத்தியல். மேற்கத்திய நாடுகளில் விளம்பரம் மற்றும் ஆடைகளில் ஸ்வஸ்திகா சுதந்திரமாக பயன்படுத்தப்பட்டது. இது ஒரு கட்டத்தில் கோகோ கோலா விளம்பரங்களிலும் பயன்படுத்தப்பட்டது. நாஜிக்களால் ஸ்வஸ்திகா பயன்படுத்தப்படுவதற்கு முன்பு, பிரபல டேனிஷ் பீர் நிறுவனமான 'கார்ல்ஸ்பெர்க்' தனது லோகோவில் ஸ்வஸ்திகா சின்னத்தை வைத்திருந்தது. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, ஃபின்லாந்து விமானப்படையின் அதிகாரப்பூர்வ முத்திரையில் ஸ்வஸ்திகா சின்னம் இடம்பெற்றிருந்தது. பிரிட்டனில், ஸ்வஸ்திகா சாரணர் இயக்கத்தினரால் பயன்படுத்தப்பட்டது மற்றும் ஒரு பேட்ஜாகவும் வழங்கப்பட்டது. நாஜி முத்திரைக்கும் மங்களச் சின்னத்திற்கும் உள்ள வேறுபாடுகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வெளிநாடுவாழ் இந்தியர்கள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். 'ஹேக்கன்க்ரூஸ்' ('Hackenkreuz') இடதுபுறமாக 45 டிகிரி கோணத்தில் சாய்ந்திருக்கும். ஆனால், ஸ்வஸ்திகாவோ நேராக வலதுபுறமாக உள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c985m7m219jo
  10. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, வெள்ளத்தில் தத்தளிக்கும் விஜயவாடா நகரம் கட்டுரை தகவல் எழுதியவர், லக்கோஜு ஸ்ரீநிவாஸ் பதவி, பிபிசிக்காக 2 செப்டெம்பர் 2024, 13:56 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. ஆந்திராவில் தலைநகர் அமராவதி மற்றும் அருகிலுள்ள விஜயவாடா ஆகிய இரண்டு பகுதிகளும் நீரில் மூழ்கின. கிருஷ்ணா, குண்டூர், ஏலூர் மாவட்டங்களில் பல கிராமங்கள் மற்றும் நகரங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. விஜயவாடாவில் புடமேரு ஆறு நிரம்பியதால் சிங்நகர், வம்பே காலனி, ராஜராஜேஸ்வரிபேட்டை உள்ளிட்ட பல பகுதிகள் முற்றிலும் வெள்ளத்தில் மூழ்கின. படக்குறிப்பு, விஜயவாடா நகரம் வெள்ளத்தால் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது பட மூலாதாரம்,TELUGU DESAM PARTY படக்குறிப்பு, விஜயவாடாவில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தை மீட்டபோது கைக்குழந்தையை தூக்கிச் சென்ற தேசிய பேரிடர் மீட்புப் படையை சேர்ந்த பணியாளர் கிருஷ்ணா லங்கா, இப்ராஹிம்பட்டினம், ஜூபுடி மற்றும் பிற பகுதிகளும் நீரில் மூழ்கின. புலிகத்த, சிறுகுல்லங்க, யட்லலங்கா மற்றும் ஏனைய கிராமங்களைச் சேர்ந்த மக்கள் வீடுகளை காலி செய்துவிட்டு ஏற்கனவே முகாம்களுக்கு இடம்பெயர்ந்துவிட்டனர். ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார். பாதிக்கப்பட்டவர்களுக்கு ஹெலிகாப்டர்கள் மூலம் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, விஜயவாடாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுப் பொட்கள் வழங்கப்பட்டபோது பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, விஜயவாடாவில் மழைவெள்ளம் சூழ்ந்துள்ள கடைகளுக்கு மேலே இருவர் தஞ்சம் புகுந்துள்ளனர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, விஜயவாடாவில் படகு மூலம் மீட்கப்படும் மக்கள் கிருஷ்ணா ஆற்றில் அதிக அளவு தண்ணீர் வருவதால் பிரகாசம் தடுப்பணையின் கீழ் 70 கதவணைகள் உயர்த்தப்பட்டு தண்ணீர் திறந்து விடப்படுகிறது. படக்குறிப்பு, பிரகாசம் தடுப்பணையில் வெள்ளத்தில் சிக்கிய படகுகள் கரையில் மோதி சேதமடந்து கிடக்கும் காட்சி. படக்குறிப்பு, பிரகாசம் அணையில் வெள்ளத்தால் சேதமடைந்துள்ள கான்கிரீட் தூண் பிரகாசம் அணையில் இருந்து இதுவரை 11 லட்சத்து 20 ஆயிரத்து 101 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். படக்குறிப்பு, ஆந்திராவில் வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்பதற்கான படகுகள் சாலை மார்க்கமாக கொண்டு செல்லப்பட்டன விஜயவாடாவில் வீடுகளில் சிக்கியுள்ள மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதற்காக மச்சிலிப்பட்டினத்தில் இருந்து சுமார் 100 படகுகள் வரவழைக்கப்பட்டன. இவை லாரிகள் மற்றும் வேன்களில் சாலை மார்க்கமாக கொண்டு வரப்பட்டன. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, விஜயவாடாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்களின் உடைமைகளுடன் பாதுகாப்பான இடங்களை நோக்கி செல்கின்றனர் மீட்புப் படையினர் படகுகளில் சென்று பாதிக்கப்பட்டவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்கின்றனர். படக்குறிப்பு, விஜயவாடாவில் குடியிருப்புப் பகுதியை சூழ்ந்துள்ள வெள்ளத்தில் மிதக்கும் கார்கள் பட மூலாதாரம்,I&PR படக்குறிப்பு, ஆந்திராவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெலங்கானாவில் என்ன நிலவரம்? தெலங்கானா மாநிலத்திலும் இடைவிடாது பெய்த மழையால் பலத்த சேதம் ஏற்பட்டது. கனமழையால் கம்மம், வாரங்கல், நல்கொண்டா மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. கம்மம் நகரின் சில பகுதிகளில் 10 அடி வரை வெள்ளம் வந்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இதுதொடர்பாக சமூக வலைதளங்களில் ஏராளமான காணொளிகள் பகிரப்பட்டு வருகின்றன. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,விஜயவாடாவில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் தன்னார்வலர்கள் மூணாறு வெள்ளப்பெருக்கு காரணமாக கம்மம் நகரம் முழுவதும் தண்ணீரில் மூழ்கியது. நல்கொண்டா மாவட்டத்தில் உள்ள பல கிராமங்கள் மற்றும் காலனிகள் வெள்ளத்தில் சிக்கியுள்ளன. படக்குறிப்பு,பாலேறு நீர்த்தேக்கம் நிரம்பி சாலையில் தண்ணீர் ஓடியதால் சேதமடைந்த சாலைகள் வாரங்கல் மற்றும் மகபூபாபாத் மாவட்டங்களும் கடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. பல இடங்களில் ரயில் தண்டவாளத்திற்கு அடியில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளதால் ரயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. கம்மம் மாவட்டத்தில் உள்ள பாலேறு நீர்த்தேக்கம் நிரம்பியதால், நீர்த்தேக்கத்தில் இருந்து சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் சாலைகள் துண்டிக்கப்பட்டன. குசுமஞ்சி வீதி முற்றிலுமாக சேதமடைந்துள்ளது. படக்குறிப்பு,பாலேறு நீர்த்தேக்கம் நிரம்பி சாலையில் தண்ணீர் ஓடியதால் சேதமடைந்த சாலைகள் இரு மாநில முதலமைச்சர்களுடன் பேசிய பிரதமர் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோதி தொலைபேசியில் பேசினார். படக்குறிப்பு, கம்மம் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் முன்பு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பொருட்கள் தேவையான உதவிகளை மத்திய அரசு செய்யும் என அவர் உறுதி தெரிவித்துள்ளார். தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில், தெலங்கானாவில் மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து பிரதமர் கேட்டறிந்தார் என தெரிவித்துள்ளார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cwyw2558932o ஆந்திரா - கனமழையால் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட தண்டவாளங்கள்: 20 ரயில்கள் ரத்து @ விஜயவாடா 02 SEP, 2024 | 10:18 AM ஹைதராபாத்: கனமழை காரணமாக ஆந்திரா மற்றும் தெலங்கானா இடையே பல்வேறு இடங்களில் ரயில் தண்டவாளங்கள் நீரில் மூழ்கின, சில இடங்களில் தண்டவாளங்கள் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டன. இதனால் சுமார் 20 ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. ஆயிரக்கணக்கான ரயில் பயணிகள் பாதிக்கப்பட்டனர். ரயில் பயணத்தை தொடர முடியாமல் நடுவழியில் தவித்த பயணிகளுக்கு மாற்று ஏற்பாடுகளை செய்துள்ளது ரயில்வே துறை. சிறப்பு ரயில்கள் மூலம் சென்னை, திருப்பதி மற்றும் விசாகப்பட்டினம் போன்ற பகுதிகளுக்கு பயணிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக விஜயவாடா மூத்த கோட்ட வணிக மேலாளர் ராம்பாபு தெரிவித்துள்ளார். தமிழ்நாடு, சார்மினார், கோதாவரி எக்ஸ்பிரஸ் ரயில்கள் கொண்டப்பள்ளி மற்றும் ராயனபாடு ரயில் நிலையங்களில் நிறுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இதில் பயணித்த பயணிகள் விஜயவாடா ரயில் நிலையத்துக்கு மாற்றப்பட்டுள்ளனர். கேசமுத்திரம், டோர்னக்கல், கம்மம் போன்ற இடங்களில் வெள்ளம் காரணமாக ரயில் தண்டவாளங்கள் மழைநீரில் மூழ்கி உள்ளதாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த தடத்தில் ரயில்கள் நிறுத்தப்பட்டன. மழை காரணமாக சில ரயில்கள் மாற்றுப் பாதையில் அனுப்பப்பட்டுள்ளன. அதிகாலை 1 மணி அளவில் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் நிறுத்தப்பட்டது. பயணிகளுக்காக பேருந்து வசதியை ஏற்படுத்திய ரயில்வே துறைக்கு பயணிகள் நன்றி தெரிவித்துள்ளனர். மேலும், பயணிகளுக்கு ரயில்வே சார்பில் உணவு, குடிநீர் போன்றவை வழங்கப்பட்டது. வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால் ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. https://www.virakesari.lk/article/192611
  11. Published By: DIGITAL DESK 3 02 SEP, 2024 | 05:27 PM சென்னை - யாழ்ப்பாணத்திற்கிடையில் புதிய விமான சேவையொன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை (01) காலை ஆரம்பமானது. இதற்கமைய, குறித்த சேவையின் முதலாவது விமானம் ஞாயிற்றுக்கிழமை (01) மாலை 3.05 மணிக்கு சென்னையிலிருந்து 52 பயணிகளுடன் யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்திற்கு வந்தடைந்தது. இதன்போது இசை மற்றும் நடனத்துடன் பயணிகள் அழைத்து வரப்பட்டனர். பின்னர் பலாலியில் இருந்து சென்னை நோக்கி பயணத்தை குறித்த விமானம் ஆரம்பித்தது. பலாலியில் இருந்து புறப்பட்ட விமானத்தில் 74 பயணிகள் பயணத்தை மேற்கொண்டனர். விமானத்தில் பயணித்த அனைத்து பயணிகளுக்கும் யாழ்ப்பாண உற்பத்திகள் வழங்கப்பட்டன. பலாலியில் இருந்து இந்த விமான சேவை ஆரம்பிக்கப்பட்டதால், கொழும்பிற்கு செல்லாமல் மிகவும் இலகுவான முறையில் பயணத்தை மேற்கொள்ள கூடியவாறு உள்ளதாக பயணிகள் தெரிவித்தனர். ஆரம்ப நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன், யாழ். இந்திய துணை தூதுவர் சாய் முரளி, விமானப்படை அதிகாரிகள், இந்திய துணைத் தூதரக அதிகாரிகள், பதவிநிலை அதிகாரிகள், பயணிகள் என பலர் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/192646
  12. காசாவில் 6 பணயக் கைதிகள் கொலை எதிரொலி - எஞ்சியவர்களை மீட்க நடவடிக்கை கோரி இஸ்ரேலில் போராட்டம் 02 SEP, 2024 | 05:11 PM டெல் அவிவ்: காசாவில் ஆறு பணயக்கைதிகள் கொல்லப்பட்டதை அடுத்து, எஞ்சியவர்களை மீட்க இஸ்ரேலிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அந்நாட்டின் பல்வேறு நகரங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7 அன்று தாக்குதல் நடத்தி சுமார் 1,200 பேரைக் கொலை செய்தனர். சுமார், 250 பேரை பணயக்கைதிகளாக பிடித்துச் சென்றனர். இந்த சம்பவத்தை அடுத்து, ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில், பணயக்கைதிகளில் 6 பேரை ஹமாஸ் அமைப்பினர் கொன்றனர். அவர்களின் உடல்களை இஸ்ரேலிய ராணுவம் மீட்டது. இதையடுத்து, இஸ்ரேலிய அரசுக்கு எதிராக அந்நாட்டின் ஜெருசலேம், டெல் அவிவ் உள்ளிட்ட நகரங்களில் நேற்றும், இன்றும் (ஞாயிறு, திங்கள் கிழமைகள்) பெரும் போராட்டங்கள் நடைபெற்றன. ஹமாஸ் உடன் போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டிருந்தால் பணயக் கைதிகள் உயிரோடு வந்திருப்பார்கள் என்றும் இஸ்ரேலிய ஆட்சியாளர்களே இதற்கு பொறுப்பு என்றும் கூறி லட்சக்கணக்கான இஸ்ரேலியர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். ஜெருசலேமில், போராட்டக்காரர்கள் வீதிகளை மறித்து பிரதமரின் இல்லத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டம் செய்தனர். டெல் அவிவின் பிரதான நெடுஞ்சாலைகளில், கொல்லப்பட்ட பிணைக்கைதிகளின் படங்களுடன் கொடிகளை ஏந்தியவாறு ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இஸ்ரேலிய தொழிற் சங்கங்களின் அழைப்பை ஏற்று இன்று (செப்.2) அந்நாட்டில் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனால், வர்த்தக நடவடிக்கைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் அனைவரும், இஸ்ரேலிய அரசு விரைவாக ஹமாஸ் அமைப்புடன் அமைதி உடன்படிக்கையில் கையெழுத்திட வேண்டும் என்றும் எஞ்சிய பணயக்கைதிகளை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர். பணயக்கைதிகளின் குடும்பங்களுக்கான அமைப்பு, பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை கடுமையாக கண்டித்துள்ளது. “பிணைக்கைதிகளாக பிடிக்கப்பட்டு கொண்டு செல்லப்பட்டவர்கள் கடந்த 11 மாதங்களாக பல்வேறு துன்பங்களை அனுபவித்து வந்த நிலையில் தற்போது கொல்லப்பட்டுள்ளனர். அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதில் ஏற்பட்ட தாமதமே இதற்குக் காரணம்” என்று அந்த அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. ஹமாஸ் அமைப்பினரை குறிவைத்து காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்கள் காரணமாக 40,738 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இடம்பெயர்ந்த மக்களுக்கு போதிய தங்குமிட வசதிகள் இல்லாததாலும், உணவு போதிய அளவில் கிடைக்காததாலும் அவர்கள் கடும் நெருக்கடியுடன் இக்கட்டான சூழ்நிலையில் வாழ்வதாகவும் அது தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/192662
  13. இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் தொடரிலும் வெற்றியை அண்மித்துள்ள பங்களாதேஷ் Published By: VISHNU 02 SEP, 2024 | 07:01 PM (நெவில் அன்தனி) ராவல்பிண்டியில் நடைபெற்றுவரும் பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியிலும் தொடரிலும் வெற்றிபெறுவதற்கு பங்களாதேஷுக்கு மேலும் 143 தேவைப்படுகிறது. முதலாவது டெஸ்ட் போட்டியில் பங்களாதேஷ் 10 விக்கெட்களால் வெற்றியீட்டியிருந்தது, இந்தப் போட்டியில் 185 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிவரும் பங்களாதேஷ் 4ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 42 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. ஸக்கிர் ஹசன் 31 ஓட்டங்களுடனும் ஷத்மான் இஸ்லாம் 9 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதுள்ளனர். முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் பெற்ற 274 ஓட்டங்களே ஓர் அணியினால் பெறப்பட்ட அதிகூடிய மொத்த எண்ணிக்கையாகும். போட்டியின் ஆரம்ப நாள் ஆட்டம் கடும் மழையினால் முழுமையாக கைவிடப்பட்ட நிலையில் இரண்டாம் நாள் ஆட்டம் ஆரம்பமானபோது பாகிஸ்தான் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்டது. மெஹிதி ஹசன் மிராஸ் 61 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களையும் தஸ்கின் அஹ்மத் 57 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றி பாகிஸ்தானை சிரமத்தில் ஆழ்த்தினர். இருப்பினும் சய்ம் அயூப் (58), அணித் தலைவர் ஷான் மசூத் (57), சலமான் அகா (54) ஆகியோர் பெற்ற அரைச் சதங்களின் உதவியுடன் பாகிஸ்தான் அதன் முதல் இன்னிங்ஸில் 274 ஓட்டங்களைப் பெற்றது. இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் பங்களாதேஷ் விக்கெட் இழப்பின்றி 10 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. மூன்றாம் நாள் தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் முதல் இன்னிங்ஸில் 262 ஓட்டங்களைப் பெற்று 12 ஓட்டங்களால் பின்னிலையில் இருந்தது. ஒரு கட்டத்தில் பங்களாதேஷ் 26 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்களை இழந்து பெரும் இக்கட்டான நிலையில் இருந்தது. ஆனால் லிட்டன் தாஸ் தனி ஒருவராக 138 ஓட்டங்களைக் குவித்து அணியைப் பலப்படுத்தினார். 42ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் லிட்டன் தாஸ் குவித்த நான்காவது டெஸ்ட் சதம் இதுவாகும். முதல் டெஸ்டில் போன்றே இந்த டெஸ்டிலும் சகல துறைகளிலும் பிரகாசித்த மெஹிதி ஹசன் மிராஸ் 78 ஓட்டங்களைப் பெற்றார். அவர்கள் இருவரும் 7ஆவது விக்கெட்டில் பெறுமதிமிக்க 165 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். குரம் ஷாஹ்ஸாத் 90 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்களைக் கைப்பற்றினார். பாகிஸ்தான் அதன் இரண்டாவது இன்னிங்ஸில் 3ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட்களை இழந்து 9 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. போட்டியின் நான்காம் நாளான இன்று காலை தனது 2ஆவது இன்னிங்ஸைத் தொடர்ந்த பாகிஸ்தான் சகல விக்கெட்களையும் இழந்து 172 ஓட்டங்களைப் பெற்றது. மொஹம்மத் ரிஸ்வான் (43), சல்மான் அகா (47 ஆ.இ.) ஆகிய இருவரே 40 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர். பந்துவீச்சில் ஹசன் மஹ்மூத் 43 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களையும் நஹித் ரானா 44 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் கைப்பற்றினர். போட்டியின் கடைசி நாள் ஆட்டம் நாளை நடைபெறும். https://www.virakesari.lk/article/192681
  14. அது வந்து "ஒழிப்பு கோசத்தை" தான் 3 ஆண்டுகளுக்குள் நிறுத்தப் போகிறார்!!
  15. Published By: DIGITAL DESK 3 02 SEP, 2024 | 02:36 PM தமிழரசு கட்சியானது நேற்று ஞாயிற்றுக்கிழமை (01) கூடி வவுனியாவில் முடிவு எடுத்ததன் அடிப்படையில், தமிழரசு கட்சியானது ஒற்றுமை இல்லாமல் தமிழர்களை பிரிவுக்கும் அல்லது தமிழர் இந்த நிலைக்கு போவதற்கும் காரணமாக இருக்கின்றது என வடக்கு மாகாண மீனவ அமைப்பின் பிரதிநிதியான அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் வவுனியாவில் நிறைவேற்றப்பட்ட தமிழரசு கட்சியின் தீர்மானம் குறித்து, சமூகமட்ட பொது அமைப்பின் பிரதிநிதி என்ற வகையில் அவரிடம் இதுகுறித்து கருத்து வினவியபோது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், 2009 ஆம் ஆண்டுக்கு பிற்பாடு இன்று வரைக்கும் தமிழரசுக் கட்சி தமிழருடைய உரிமைகளை மீட்பதற்கு உளரீதியாக செயல்படவில்லை. வாய் ரீதியாக மக்களுக்கு ஒன்றை சொல்வதும் அரசாங்கத்திற்கு ஒன்றை சொல்வதுமாக இருக்கின்றது. ஒட்டுமொத்த கட்சியாக இந்த முடிவை எடுத்திருந்தால் நாங்கள் வரவேற்றிருப்போம். ஆனால் கட்சியின் தலைவர் ஒன்றினை கூறுகின்றார், ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா ஒன்றினை கூறுகின்றார், பல உறுப்பினர்கள் இதில் கலந்துகொள்ளவில்லை. ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் தமிழ் மக்களின் ஒற்றுமையையும், ஐக்கியத்தையும் குலைப்பதற்கான அடித்தளமாகத் தான் நாங்கள் இதனை பார்க்கின்றோம். தமிழரசு கட்சியை எடுத்து பார்ப்போமேயானால் சிவஞானம் சிறீதரன், குகதாசன் ஆகியோர் உட்பட்ட கிளிநொச்சி மற்றும் திருகோணமலை கிளைகளினால் தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமந்திரன், சாணக்கியன் ஆகியோர் அதனை எதிர்க்கின்றனர். இவ்வாறு இருந்தால் தமிழர்களுடைய நிலை என்ன? தமிழர்களை கூறு போட்டு, தமிழர்களுடைய இருப்புகளை அழிப்பதற்கு ரணிலோ, சஜித்தோ, அனுரவோ அல்லது நாமல் ராஜபக்சவோ தேவையில்லை, எமது கட்சித் தலைவர்களே போதும். தமிழ் சிவில் சமூகமாக நாங்கள் எடுத்த பொது வேட்பாளர் என்ற முயற்சியை ஆதரித்து, எதிர்காலத்தில் இவ்வாறான புல்லுருவிகளையும், முண்டு கொடுப்பவர்களையும் நிராகரிப்பதற்கு நாங்கள் தமிழர் சமூகமாக ஒன்றுபட வேண்டும். வாக்குப் போடுவது மக்களாகிய நாங்கள். ஆனால் இவர்கள் எப்போது மக்களை சந்தித்து, மக்களது கருத்துக்களை கேட்டு தீர்மானம் எடுத்தார்கள்? ஆகவே இவர்கள் மக்களது பிரதிநிதிகள் என்று கூறி எவ்வாறு சர்வதேச சமூகங்களிடம் பேசப் போகின்றார்கள்? வவுனியாவில் நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் கூட்டமானது பிரிவினையை காட்டுகின்றது. எனவே மக்களே நீங்கள் இந்த தமிழரசுக் கட்சியை நம்பாதீர்கள். நாங்கள் சுயமாக சிந்தித்து, எங்களுக்கு இருக்கின்ற வாக்குரிமை பலத்தினால் ஒன்றிணைந்து செயற்படுவோம். எமது கட்டமைப்புக்குள் வருமாறு நாங்கள் இலங்கை தமிழரசுக் கட்சியையும் அழைக்கின்றோம். தங்களுடைய சுயலாபத்துக்காகவும், தங்களது மதுபான நிலைய அனுமதிப் பத்திரத்துக்காகவும், தாங்கள் கோடிகளை சம்பாதிப்பதற்காகவும் தமிழ்மக்களை எதிர்காலத்தில் விற்றுப் பிழைப்பது சாத்தியமற்றது. 21ஆம் திகதி ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் அது வெளிச்சத்துக்கு வரும். அப்பொழுது இந்த அரசியல் காட்சிகளும், பேரம் பேசுபவர்களும் புரிந்து கொள்வார்கள். எனவேதான் நாங்கள் கூறுகின்றோம். இவற்றையெல்லாம் புறந்தள்ளிவிட்டு சங்கு சின்னத்திற்கு வாக்களிப்போம், எமது ஒற்றுமை நிலைநாட்டுவோம் அதுவே எமக்கான தீர்வு என அவர் மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/192636
  16. நானும் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவன் என்ற அடிப்படையில் காணாமல் ஆக்கப்பட்டோர் உள்ளிட்ட பாதிக்கப்பட்ட மக்களுக்கு தீர்வு பெற்றுக்கொடுப்பேன் என எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். இன்று சமத்துவக் கட்சியின் கிளிநொச்சி தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற, ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார். சமத்துவக் கட்சியும் ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்தமை ஆரோக்கியமாக உள்ளது. வடக்கில் அபிவிருத்திகள் செய்யப்பட வேண்டிள்ளது. இதனால் பல எதிர்பார்ப்புக்களை பூர்த்தி செய்ய முடியும். அவ்வாறு பல திட்டங்களை செய்ய நாம் திட்டமிட்டுள்ளோம். மாகாண சபைகளுக்கான முழுமையான அதிகாரங்கள் வழங்கப்படும். வாழ்வாதரம் உள்ளிட்ட பல திட்டங்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும். அதற்காக சிறப்பு அலுவலகங்கள் 5 மாவட்டங்களிலும் நிறுவ உள்ளோம். அதேபோன்று ஒவ்வொறு பிரதேச செயலக பிரிவுகளிலும் அபிவிருத்தி நிலையங்கள் நிறுவப்படும். இங்கு உள்ள மக்கள் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள். அவர்களுக்கு பல பிரச்சினைகள் உள்ளன. காணாமல் ஆக்கப்பட்டோருக்கு தீர்வை பெற்றுக்கொடுப்போம். அத்துடன், ஏனைய பிரச்சினைகளுக்கும் தீர்வு பெற்றுக்கொபோம். அதற்காகவே இந்த அலுவலகங்களை, மாவட்டம் மற்றும் பிரதேச செயலக ரீதியில் நிறுவ உள்ளோம். நானும் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவன் என்ற அடிப்படையில் தீர்வு பெற்றுக் கொடுக்க வேண்டும் என்ற நிலைப்பாடு எனக்கு உள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில் 4 பிரதேச செயலாளர் பிரிவுகள் உள்ளது. அந்த நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் ஒவ்வொரு தொழிற்பேட்டைகள் உருவாக்கப்படும். அதே போன்று நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் ஒவ்வொரு IT நிறுவனங்கள் நிறுவப்படும். அதன் மூலம் தொழில் வாய்ப்புக்களை உருவாக்கி கொடுக்கப்படும். கிளிநொச்சியில் பாரிய அபிவிருத்திகளை செய்ய முடியும் என நம்புகிறேன். இதனால் இங்குள்ள மக்களிற்கு தீர்வுகளை வழங்க முடியும் எனவும் அவர் தெரிவித்தார். https://thinakkural.lk/article/308851
  17. "ஊழல், மோசடி ஒழிப்பு" கோசத்தை 3 ஆண்டுகளுக்குள் முடிவுக்கு கொண்டு வருவோம் - தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்ட பின் நாமல் தெரிவிப்பு Published By: DIGITAL DESK 3 02 SEP, 2024 | 03:54 PM தேர்தல் மேடைகளில் பிரதான பிரச்சாரமாக பயன்படுத்தப்படும் "ஊழல், மோசடி ஒழிப்பு" கோசத்தை 3 ஆண்டுக்குள் முடிவுக்கு கொண்டு வருவோம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். சர்வமத வழிபாடுகளுடன் "நாமல் இலக்கு - உங்களுக்காக முன்னேற்றகரமான நாடு" என்ற தொனிப்பொருளின் கீழ் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்‌ஷவின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று திங்கட்கிழமை (2) காலை வெளியிடப்பட்டுள்ளது. இதன் பின்னர் உரையாற்றுகையிலேயே நாமல் ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்தார். இங்கு நாமல் ராஜபக்ஷ மேலும் உரையாற்றுகையில், தேர்தல் மேடைகளில் பிரதான பிரச்சாரமாக பயன்படுத்தப்படும் "ஊழல், மோசடி ஒழிப்பு" கோசத்தை 3 ஆண்டுக்குள் முடிவுக்கு கொண்டு வருவோம். நாட்டின் ஒற்றையாட்சி அரசியலமைப்பும் பெளத்த சாசனமும் பாதுகாக்கப்படும். பொருளாதார மேம்பாட்டுக்கான பொறுப்பை நாங்கள் ஏற்போம். ஆட்சியமைத்து 6 மாதங்களுக்குள் முழு அரசசேவை கட்டமைப்பையும் டிஜிட்டல் மயப்படுத்துவோம். வரிக் கொள்கையில் நேரில் வரி முறைமையை செயற்படுத்துவோம். 10 ஆண்டுக்குள் நேர் மற்றும் நேரில் முறைமை ஊடாக 20 இலட்சம் தொழில் வாய்ப்புக்களை தோற்றுவிப்போம். எதிர்வரும் 10 ஆண்டுகள் வலுச் சக்தியை ஏற்றுமதி செய்யும் நாடாக இலங்கையின் சக்தி வலுத்துறையை மேம்படுத்துவோம். இளம் தலைமுறையினரை உள்ளடக்கிய வகையில் ஆசியாவில் அபிவிருத்தி அடைந்த நாடாக இலங்கையை மேம்படுத்துவேன் என்று நாமல் ராஜபக்‌ஷ மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/192623
  18. விகாரைகள் அமைக்க அதிக நிதி ஒதுக்கிய சஜித்துக்கு சுமந்திரன் ஆதரவளித்ததன் காரணத்தை வெளிப்படுத்த வேண்டும் என முன்னாள் பிரதேச சபை உறுப்பினரும், தமிழரசுக் கட்சியின் மாவட்டக் கிளை உறுப்பினருமான சண்முகம் ஜீவராஜ் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழரசுக் கட்சியின் தலைவர், புதிதாக தெரிவான தலைவர் உள்ளிட்ட பலர் இல்லாத கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம் தொடர்பிலும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். கிளிநொச்சி, திருகோணமலை, முல்லைத்தீவு மாவட்ட தமிழரசுக் கட்சிக் கிளைகள் பொது வேட்பாளரை ஆதரிப்பது என தீர்மானித்துள்ள நிலையில், நேற்றைய தீர்மானம் கவலைக்குரியது. விகாரைகள் அமைக்க அதிக நிதி ஒதுக்கிய சஜித்துக்கு சுமந்திரன் ஆதரவளித்ததன் காரணத்தை வெளிப்படுத்த வேண்டும். 2010 ஆம் ஆண்டு எவ்வாறு சுமந்திரன் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு தெரியாமல் வந்தாரோ, அதேபோல அவர் தெரியாமல் துரத்தப்படுவார் என தெரிவித்தார். https://thinakkural.lk/article/308854
  19. பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, அக்டோபர் 7, 2023ம் ஆண்டு பிடித்துச் செல்லப்பட்ட பணயக் கைதிகளை மீட்பதில் அரசும் பிரதமரும் தோல்வி அடைந்துவிட்டதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு கட்டுரை தகவல் எழுதியவர், டியர்பைல் ஜோர்டன், ஆலிஸ் கடி பதவி, பிபிசி நியூஸ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் ஹமாஸ் இயக்கத்தினரால் பிடித்து வைக்கப்பட்டிருந்த ஆறு பணயக் கைதிகளின் உடல்களை இஸ்ரேல் ராணுவத்தினர் காஸாவில் இருந்து மீட்டது இஸ்ரேலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதை தொடர்ந்து ஆயிரக்கணக்கான மக்கள் நாடெங்கும் போராட்டங்களை நடத்தினார்கள். டெல் அவிவ், ஜெருசலேம் மற்றும் இதர நகரங்களில் தங்கள் நாட்டுக் கொடிகளுடன் ஒன்று கூடிய ஆயிரக்கணக்கான இஸ்ரேலிய மக்கள் அந்த நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அந்நாட்டு அரசு, ஹமாஸுடன் பேச்சு வார்த்தை நடத்தி அக்டோபர் 7ம் தேதி தாக்குதலின் போது பிடித்துச் செல்லப்பட்ட பணயக் கைதிகளை மீட்க முறையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்று குற்றம் சாட்டினார்கள். ஞாயிறு, செப்டம்பர் 2ம் தேதி அன்று நடைபெற்ற போராட்டம் மிகவும் அமைதியான முறையில் நடைபெற்றது. ஆனால் டெல் அவிவ் போன்ற பகுதிகளில் காவல்துறையின் தடுப்பையும் மீறி நெடுஞ்சாலைகளை மறித்து சாலை மறியலில் ஈடுபட்டனர் பொதுமக்கள். பணயக் கைதிகளை விடுவிக்கும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என்று கூறி நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளது இஸ்ரேல் நாட்டின் மிகப்பெரிய தொழிலாளர் சங்கமான ஹிஸ்தாத்ரட். முன்னதாக சனிக்கிழமையன்று பணயக் கைதிகளின் உடலை தெற்கு காஸாவில் அமைந்திருக்கும் ரஃபா பகுதியில் உள்ள பாதாள சுரங்கத்தில் கண்டெடுத்ததாக இஸ்ரேல் ராணுவப் படை (IDF) அறிவித்தது. இறந்த பணயக் கைதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களின் பெயர், கார்மெல் காட், ஈடன் யெருஷல்மி, ஹெர்ஷ் கோல்ட்பெர்க் போலின், அலெக்ஸாண்டர் லோபனோவ், அல்மோங் சருஷி, மற்றும் மாஸ்டர் ஸ்கிட் ஓரி டானினோ ஆகும். சனிக்கிழமை அன்று ராணுவ வீரர்கள் அவர்களை மீட்பதற்கு சில நேரங்களுக்கு முன்புதான் அவர்கள் கொலை செய்யப்பட்டனர் என்றும் அறிவித்துள்ளது இஸ்ரேல் ராணுவம். இந்த சம்பவம் மக்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. மீதம் இருக்கும் பணயக் கைதிகளை மீட்பதில் நெதன்யாகுவும் அவரின் அரசும் தோல்வியுற்றது என்று குற்றம் சாட்டி பொதுமக்கள் ஞாயிறு அன்று போராட்டத்தை நடத்தினார்கள். இஸ்ரேல் மக்களின் வேண்டுகோள்கள் என்ன? ஞாயிறு இரவு அன்று, காவல்துறையின் கட்டுப்பாட்டை மீறி அயலோன் நெடுஞ்சாலையை மக்கள் முற்றுகையிட்டு போராட்டங்களை நடத்தினார்கள். பேருந்துகளிலும் குப்பைத் தொட்டிகளிலும் ஏறி நின்று போராட்டத்தை நடத்தினார்கள். அங்கு ஒரு சிலர் நெதன்யாகுவின் உருவப்படம் கொண்ட முகமூடியை அணிந்து கொண்டு, "அவர்கள் எங்களுக்கு உயிருடன் வேண்டும்," என்று கோஷமிட்டனர். "நீங்கள்தான் தலைவர். நீங்கள்தான் இதற்கு பொறுப்பு" என்ற பதாகையை கையில் ஏந்தி ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்டார். பொதுமக்கள் காவல்துறையினரை சாடும் வகையிலும் கோஷங்களை எழுப்பினார்கள். "யாரை நீங்கள் பாதுகாக்கின்றீர்கள்? வெட்கப்பட வேண்டும்," என்ற தொனியில் அவர்களின் கோஷங்கள் இருந்தன. சிலர் சாலைகளில் நெருப்பை மூட்டினார்கள். சிலர் மஞ்சள் நிற ரிப்பன்களை அணிந்து கொண்டு பிடித்து வைக்கப்பட்டுள்ள பணயக் கைதிகளுக்கு ஆதரவாக கோஷமிட்டனர். தொழிலாளர் கட்சியை சேர்ந்த கொள்கை வகுப்பாளார் நாமா லஸிமியும் இந்த போராட்டத்தில் பங்கேற்றிருந்தார். பிபிசியிடம் பேசிய அவர், இந்த போராட்டம் மிகவும் முக்கியமானது என்று குறிப்பிட்டார். மேலும் நாளை என்ன நடக்கும் என்பதுதான் கேள்வியாக இருக்கிறது என்றும் கூறினார். காவல்துறையினர் எறிந்த கண்ணீர் புகை குண்டால் பாதிக்கப்பட்ட அவர் கீழே விழுந்து காயமடைந்திருந்தார். பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, பணயக் கைதிகளை மீட்கக் கோரி நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபட்டனர் பொதுமக்கள் பணயக் கைதியாக பிடித்து வைக்கப்பட்டிருக்கும் ஐடனின் தந்தை எலி ஷ்டிவி, "போர் விவகாரத்தில் முடிவெடுக்கும் மக்கள் இப்போதாவது விழித்துக் கொள்ள வேண்டும். இனிமேல் நம்மிடம் நேரமில்லை," என்று கூறினார். பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த மக்கள் இந்த போராட்டத்தில் ஒன்றாக இணைந்து பங்கேற்றனர் என்றும், அவர்கள் அனைவரும் பணயக் கைதிகள் உடனடியாக மீட்கப்பட வேண்டும் என்பதில் ஒற்றுமையுடன் உள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார். "நான் என்னுடைய குழந்தையை மிகவும் 'மிஸ்' செய்கிறேன். தற்போது அனைத்து குடும்பத்தினரும் ஒரு வகையில் பணயக் கைதிகளாகதான் இருக்கிறோம்," என்று கூறினார் எலி. இனிமேல் என்னால் வீட்டில் இருக்க முடியாது என்று டெல் அவிவில் நடைபெற்ற போராட்டத்தில் ஈடுபட்ட நோகா பர்க்மென் பிபிசியிடம் தெரிவித்தார். விதிகளை மீறி ஏதாவது செய்ய வேண்டும் என்று மக்கள் தற்போது புரிந்துகொண்டுள்ளனர். இது வெறும் ஆரம்பம் தான் என்றும் அவர் பிபிசியிடம் தெரிவித்தார். நகரின் பல்வேறு பகுதிகளில் பலதரப்பட்ட மக்கள் ஒன்றிணைந்து போராட்டங்களை நடத்தினார்கள். ஜெருசலேம் பகுதியில் ஒன்று கூடிய பொதுமக்கள் பிரதமரின் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு முன்பு நடைபெற்ற போராட்டங்களைக் காட்டிலும் இது மிகவும் பெரியது என்று 50 வயது மதிக்கத்தக்க ஒரு போராட்டக்காரர் பிபிசியிடம் தெரிவித்தார். அக்டோபர் 7ம் தேதி அன்று ஹமாஸ் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த 21 வயது மதிக்கத்தக்க நபரின் அண்ணன் யோதம் பீர் (24) டெல் அவிவில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றார். "6 நபர்களின் நிலை என்ன என்று கேட்ட பின்பு எங்களால் அமைதியாக இருக்க இயலவில்லை. இது மிகவும் முக்கியமான தருணம். எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை," என்று அவர் பிபிசியிடம் தெரிவித்தார். படக்குறிப்பு, அக்டோபர் 7 அன்று ஹமாஸ் நடத்திய தாக்குதலில் தன்னுடைய சகோதரரை இழந்த யோதம் பீர் அரசு அக்கறை காட்டவில்லை - எதிர்க்கட்சியினர் குற்றச்சாட்டு எதிர்க்கட்சி தலைவர் யைர் லாபிட் இந்த போராட்டத்தில் பங்கேற்றதாக உள்ளூர் செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டன. முன்னாள் பிரதமரும் யேஷ் ஆதித் கட்சியின் தலைவருமான அவர், மாபெரும் அளவில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு பணயக் கைதிகளை விடுவிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட நெதன்யாகுவை கட்டாயப்படுத்த வேண்டும் என முன்பு கோரிக்கை வைத்திருந்தார். பொது வேலை நிறுத்தத்தை அறிவித்த தொழிலாளர் சங்கத்தின் தலைவர் அர்னோன் பார் டேவிட், மற்ற அனைத்தைக் காட்டிலும் அவர்களை விடுவித்தல் மிகவும் முக்கியமானது என்று கூறினார். பணயக் கைதிகளை விடுவிக்கும் ஒப்பந்தத்திற்கு பதிலாக நாம் இறந்து போன நபர்களின் உடல்களைத்தான் பெற்றுக் கொண்டிருக்கிறோம் என்றும் கூறினார். நெதன்யாகு அரசுக்கும் ஹமாஸுக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்படுத்த மேற்கொள்ளப்படும் முயற்சிகளில் ஒன்றாக தேசிய அளவிலான வேலை நிறுத்தத்திற்கு ஆதரவை அளித்து வருகின்றனர் பணயக் கைதிகளின் குடும்பத்தினர். பணயக் கைதிகளின் குடும்பத்தினர்கள் இணைந்து செயல்படும் பணயக் கைதி குடும்பங்களின் மன்றம் "ஹமாஸின் பிடியில் சிக்கி 11 மாத சித்தரவதைகள், பசி மற்றும் கொடுமையை அனுபவித்த அந்த ஆறு நபர்களும் கடந்த சில நாட்களில்தான் கொல்லப்பட்டுள்ளனர்," என்று கூறியுள்ளது. ஹமாஸுடன் ஒப்பந்தத்தில் ஈடுபடுவதில் தாமதம் ஏற்பட்டால் மீதம் இருக்கும் பணயக் கைதிகளும் இவ்வாறு கொல்லப்படுவார்கள் என்று அவர்கள் கூறினர். நாட்டை பாதுகாக்கவும், மீதமுள்ள பணயக் கைதிகளை விடுவிக்கவும் தேவையான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளார் இஸ்ரேலின் பிரதமர் நெதன்யாகு. ஆனால், "பணயக் கைதிகளை கொலை செய்தவர்களுக்கு இந்த ஒப்பந்தம் தேவை இல்லை," என்றும் அவர் மேற்கோள்காட்டியுள்ளார். தீவிர வலதுசாரி சிந்தனையை கொண்ட அந்த நாட்டின் நிதி அமைச்சர் பெஸாலெல் ஸ்மோட்ரிக் இந்த போராட்டத்தை கண்டித்ததோடு இது ஹமாஸின் நலனை கருத்தில் கொண்டு நடைபெறும் போராட்டம் என்று தெரிவித்தார். காஸாவில் இன்னும் எவ்வளவு பணயக் கைதிகள் இருக்கின்றனர் என்பது தெரியவில்லை. அக்டோபர் 7, 2023ம் ஆண்டு தெற்கு இஸ்ரேலில் ஹமாஸ் நடத்திய தாக்குதலில் 251 நபர்கள் பணயக் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர். 1200 நபர்கள் கொல்லப்பட்டனர். காஸாவில் உள்ள ஹமாஸுக்கு எதிராக இஸ்ரேல் எதிர் தாக்குதல் நடத்தியது. அக்டோபர் 7ம் தேதி முதல் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 40,530 பேர் கொல்லப்பட்டதாக ஹமாஸுன் சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. https://www.bbc.com/tamil/articles/cr40pnv0qezo
  20. 02 SEP, 2024 | 03:20 PM ஜனாதிபதியினதும் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளரினதும் இரண்டாம் நிலை தலைவர்கள் இருவரையும் இணைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர் என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார். தேசிய மக்கள் சக்திக்கு கிடைத்துள்ள சாதகமான நிலையை மாற்றியமைப்பதற்காக ஜனாதிபதியினதும் எதிர்கட்சி தலைவரினதும் பிரச்சார பிரிவில் இரண்டாம் நிலையில் உள்ள தலைவர்கள் இருவரையும இணைந்து செயற்பட செய்வது தொடர்பிலான பேச்சுக்களில் ஈடுபட்டுள்ளனர் என அனுரகுமாரதிசநாயக்க ஹோமகவில் இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தில் தெரிவித்துள்ளார். ரணில் விக்கிரமசிங்கவிற்கும் சஜித்பிரேமதாசவிற்கும் இடையிலான மோதல்கள் தொடர்கின்ற அதேவேளை இரண்டு தரப்பினதும் இரண்டாம் நிலையை சேர்ந்தவர்கள் தேசிய மக்கள் சக்தியின் வெற்றியை தடுக்க முயல்கின்றனர் என அவர் தெரிவித்துள்ளார். இரண்டாம் நிலையில்தலைவர்கள் மத்தியில் பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்றன,நாம் பிரிந்திருப்பது விவேகமானதா இல்லையா? நாம் ஒன்று கூடி தேசிய மக்கள் சக்தியின் வெற்றியை மாற்றியமைக்க ஏதாவது செய்ய முடியாத என அவர்கள் பேசிக்கொள்கின்றார்கள் என அனுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/192643
  21. மத்திய குழு தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவோம்; பல்டியடித்த மாவை இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மத்திய செயற்குழு நிறைவேற்றிய தீர்மானத்தை எவ்வாறு இணைந்து நடைமுறைப்படுத்துவது என்பது பற்றி அடுத்த கூட்டத்தில் தீர்மானிப்போம் என அக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். யாழில் இன்று நடைபெற்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வி.தர்மலிங்கத்தின் நினைவேந்தலில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், சுகவீனம் காரணமாக நேற்றைய இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்ளமுடியவில்லை. ஆனாலும் இலங்கை தமிழ் அரசுக் கட்சி மத்திய செயற்குழு எடுத்த தீர்மானத்தை ஒற்றுமையாக இணைந்து நடைமுறைப்படுத்துவோம் என்று அவர் தெரிவித்தார். https://thinakkural.lk/article/308865
  22. இலங்கையை 2ஆவது டெஸ்டில் 190 ஓட்டங்களால் வெற்றி கொண்ட இங்கிலாந்து தொடரையும் கைப்பற்றியது Published By: VISHNU 01 SEP, 2024 | 10:36 PM (நெவில் அன்தனி) இலங்கைக்கு எதிராக லோர்ட்ஸ் விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (01) நிறைவு பெற்ற 2ஆவது ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் இரண்டாவது போட்டியில் 190 ஓட்டங்களால் அமோக வெற்றியீட்டிய இங்கிலாந்து, தொடரை இப்போதைக்கு 2 - 0 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் கைப்பற்றியுள்ளது. ஜோ ரூட் இரண்டு இன்னிங்ஸ்களிலும் குவித்த சதங்கள், கஸ் அட்கின்சனின் அற்புதமான சகலதுறை ஆட்டம் என்பன இங்கிலாந்தின் வெற்றியில் முக்கிய பங்காற்றின. மிகவும் கடினமான 483 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இலங்கை சகல விக்கெட்களையும் இழந்து 292 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. முதலாவது டெஸ்டில் போன்றே இந்த டெஸ்டிலும் நான்கு நாட்களுக்குள் இலங்கை தோல்வி அடைந்தது. போட்டியின் 4ஆம் நாள் காலை வெற்றிக்கு மேலும் 430 ஓட்டங்கள் தெவைப்பட்ட நிலையில் 2 விக்கெட் இழப்புக்கு 53 ஓட்டங்களிலிருந்து இலங்கை தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்தது. இராக்காப்பாளன் ப்ரபாத் ஜயசூரிய 41 பந்துகளை எதிர்கொண்டு 4 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். அவரைத் தொடர்ந்து களம் புகுந்த ஏஞ்சலோ மெத்யூஸ் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி திமுத் கருணாரட்னவுடன் 4ஆவது விக்கெட்டில் 50 ஓட்டங்களைப் பகிர்ந்தார். மொத்த எண்ணிக்கை 115 ஓட்டங்களாக இருந்தபோது திமுத் கருணாரட்ன கவனக் குறைவான அடி தெரிவினால் ஆட்டம் இழந்தார். அவர் 129 பந்துகளை எதிர்கொண்டு 55 ஓட்டங்களைப் பெற்றார். தொடர்ந்து மத்திய வரிசையில் ஏஞ்சலோ மெத்யூஸ் (36), தினேஷ் சந்திமால் (58), தனஞ்சய டி சில்வா (50), மிலன் ரத்நாயக்க (43) ஆகியோர் திறமையாகத் துடுப்பெடுத்தாடியபோதிலும் அவர்களால் இலங்கையின் தோல்வியைத் தடுக்க முடியாமல் போனது. எண்ணிக்கை சுருக்கம் இங்கிலாந்து 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 427 (ஜோ ரூட் 143, கஸ் அட்கின்சன் 118, பென் டக்கட் 40, அசித்த பெர்னாண்டோ 102 - 5 விக்.,) இலங்கை 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 196 (கமிந்து மெண்டிஸ் 74, தினேஷ் சந்திமால் 23, ஏஞ்சலோ மெத்யூஸ் 22, மெத்யூ பொட்ஸ் 19 - 2 விக்., கிறிஸ் வோக்ஸ் 21 - 2 விக்.) இங்கிலாந்து 2ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 251 (ஜோ ரூட் 103, ஹெரி புறூக் 37, ஜெமி ஸ்மித் 26, பென் டக்கட் 24, அசித்த பெர்னாண்டோ 52 - 3 விக்., லஹிரு குமார 53 - 3 விக்., மிலன் ரத்நாயக்க 38 - 2 விக்.) இலங்கை 2ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 292 (தினேஷ் சந்திமால் 58, திமுத் கருணாரட்ன 55, தனஞ்சய டி சில்வா 50, மிலன் ரத்நாயக்க 43, ஏஞ்சலோ மெத்யூஸ் 36, கஸ் அட்கின்சன் 62 - 5 விக்., கிறிஸ் வோக்ஸ் 46 - 2 விக்., ஒல்லி ஸ்டோன் 56 - 2 விக்.) ஆட்டநாயகன்: கஸ் அட்கின்சன் https://www.virakesari.lk/article/192595
  23. போர் நிறுத்தத்தை மீறி தாக்குதல் நடத்திய இஸ்ரேல்; போலியோ முகாமிற்கு முன்னால் 49 பேர் பலி காசாவின் நசீரத் பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 49 பேர் உயிரிழந்துள்ளனர். இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ஆம் தேதி ஏவுகணைத் தாக்குதல் நடத்தினர். இதனையடுத்து காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. தொடர்ந்து இரு தரப்பினரும் போரை துவங்கினர். கிட்டதட்ட 11 மாதங்களாக நடைபெற்று வரும் இந்த போரினால் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் இறந்துள்ளனர். குறிப்பாக குழந்தைகளும், பெண்களும்தான் அதிகம் இறந்துள்ளனர். இதனிடையே போர் நிறுத்த பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்பட்டாலும், அனைத்தும் தோல்வியிலேயே முடிந்துள்ளன. இஸ்ரேலின் பயங்கரமான தாக்குதல்களால் காசா முழுவதும் உருக்குலைந்துள்ளது. போரால் அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடு, நோய் தொற்று அபாயங்களும் ஏற்பட்டுள்ளன. இதனால் காசாவில் உள்ள 6.4 லட்சம் குழந்தைகளுக்காக, உலக சுகாதார அமைப்பு போலியோ சொட்டு முகாம் நடத்த முன்வந்தது. அதற்காக இன்றுமுதல் 3 நாட்களுக்கு தினமும் 8 மணி நேர போர் நிறுத்தத்துக்கு இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் இடையே உடன்பாடு எட்டப்பட்டது. இதனை முன்னிட்டு நேற்றைய தினமே பல இடங்களில் மாதிரி முகாம்கள் நடத்தப்பட்டன. சில குழந்தைகளுக்கு மருத்துவ அதிகாரிகள் போலியோ சொட்டு மருந்தும் வழங்கினர். தொடர்ந்து இன்று நடைபெறவிருந்த சொட்டு மருந்து முகாம்களுக்கு, 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவ மற்றும் சமூக நலப் பணியாளர்கள் தயாராக இருந்தனர். இச்சூழலில் காசாவில் இஸ்ரேல் படையினர் திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த வான்வழித் தாக்குதலில், அகதிகள் முகாம்கள் அமைந்திருந்த பகுதிகளில் ஒன்றான நசீரத் பகுதியில் 19 பேர் உயிரிழந்தனர். அவர்களில் 9 பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அடுத்தடுத்து நடத்தப்பட்ட தொடர் தாக்குதல்களில் 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதனால் ஒரே நாளிலில் பலி எண்ணிக்கை 49 ஆக உயர்ந்தது. https://thinakkural.lk/article/308836
  24. அனுரகுமார வெற்றிபெற்றால் வேறு கட்சியில் இருந்தே பிரதமர் நியமிக்க வேண்டி வரும்; ஜனாதிபதி வேட்பாளர் விஜயதாச ராஜபக்ஷ Published By: VISHNU 02 SEP, 2024 | 02:43 AM (எம்.ஆர்.எம்.வசீம்) அனுரகுமார வெற்றிபெற்றால் பாராளுமன்றத்தை கலைத்து காபந்து அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கு அவர்களுக்கு பாராளுமன்றத்தில் ஆசனங்கள் இல்லை. அதனால் ஜே.வி.பி. அரசாங்கம் அமைப்பது சாத்தியமில்லை. அதேநேரம் அவருக்கு எதிராக குற்றப்பிரேரணை ஒன்று கொண்டுவந்தால், அது தொடர்பான விசாரணை முடிவடையும் வரைக்கும் பராாளுமன்றத்தை கலைக்கவும் முடியாது என ஜனாதிபதி வேட்பாளர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார். எதிர்வரும் 21ஆம் திகதி இடம்பெற இருக்கும் ஜனாதிபதி தேர்தலில் அனுரகுமார திஸாநாயக்க வெற்றிபெற்றால் அவர் எவ்வாறு தற்காலிக அரசாங்கம் அமைப்பது என்ற கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் யாராவது ஒரு வேட்பாளர் எதி்ர்வரும் 21ஆம் திகதி வெற்றிபெற்றால், அவர் ஜனாதிபதியாக பொறுப்பேற்றதன் பின்னர பாராளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் அவருக்கு கிடைக்கிறது. அவ்வாறு அவர் பாராளுமன்றத்தை கலைத்தால் தற்காலிக அமைச்சரவை ஒன்றை அவர் அமைக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் அடுத்த வருடம் செப்டம்பர் முதலாம் திகதிவரை பாராளுமன்றத்துக்கான காலம் இருப்பதால், அதுவரைக்கும் பாராளுமன்றத்தை அவ்வாறே கொண்டுசெல்லவும் தெரிவு செய்யப்படும் ஜனாதிபதிக்கு முடியும். அதேநேரம் பாராளுமன்றத்தில் இருக்கும் உறுப்பினர்களில் அதிகமானவர்களின் விருப்பத்துக்குரியவர் என ஜனாதிபதி நினைக்கும் ஒருவரை பிரதமராக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இருக்கிறது. ஏனெனில் அடுத்த பாராளுமன்றம் வரைக்கும் நாட்டில் அமைச்சரை ஒன்று இருக்கவேண்டும். குறைந்தது 20 அமைச்சர்களாவது இருக்க வேண்டும். அப்போதுதான் நாட்டை கொண்டு செல்ல முடியும். அனுரகுமார வெற்றிபெற்றால், அவர்களுக்கு பாராளுமன்றத்தில் போதுமான உறுப்பினர்கள் இல்லை. அதனால் வேறு கட்சிகளில் இருந்தாவது பிரதமர் ஒருவரை ஜனாதிபதிக்கு நியமிக்க வேண்டி ஏற்படுகிறது. மேலும் இந்த தேர்தலில் அனுரகுமார திஸாநாயக்க வெற்றிபெற்றுள்ள நிலையில். ஏதாவது ஒரு காரணத்துக்காக அவருக்கு எதிராக குற்றப்பிரேரணை ஒன்றை பாராளுமன்றத்துக்கு கொண்டுவந்து, அவரை பதவி நீக்கவும் முடியும். பாராளுமன்ற உறுப்பினர்கள் கைச்சாத்திட்டு சபாநாயகருக்கு குற்றப்பிரேணை கையளிக்கப்பட்டு, அதனை சபாநாயகர் ஏற்றுக்கொண்டால், அதன் பின்னர் குற்றப்பிரேரணை தொடர்பான வழக்கு விசாரணைகள் முடிவடைந்து தீர்ப்பு கிடைக்கும் வரை பாராளுமன்றத்தை கலைக்க முடியாது என்றார். https://www.virakesari.lk/article/192600

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.