ஏராளன்
கருத்துக்கள உறவுகள்
-
Joined
-
Last visited
-
Currently
Viewing Topic: முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம்
Everything posted by ஏராளன்
-
குடல் ஆரோக்கியம் ஏன் முக்கியமானது? அதை மேம்படுத்த என்ன செய்வது?
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஒனூர் எரெம் பதவி, பிபிசி உலக சேவை 5 மணி நேரங்களுக்கு முன்னர் உங்களது குடல் ஆரோக்கியம், உங்களது கொலஸ்ட்ரால் அளவு முதல் மனநோய் வரை அனைத்துடனும் சம்பந்தப்பட்டது என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன. நமது உடல்நலத்தில் குடலின் பங்கு என்ன என்பது பற்றிய நமது அறிவு விரிவடைந்து வருவதால், குடல் ஆரோக்கியத்தின் மீது நமது கவனமும் அதிகரித்து வருகிறது. 2021-இல் உலகளாவிய புரோபயாடிக்ஸ் சந்தை ஆண்டுக்கு 60 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டியது. இது 2030-ஆம் ஆண்டு வரை ஒவ்வொரு ஆண்டும் 7%-க்கும் அதிகமாக வளரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, என்று சந்தை ஆராய்ச்சி நிறுவனமான போலரிஸ்-இன் தரவுகள் கூறுகின்றன. ஆனால், குடல் ஆரோக்கியம் ஏன் முக்கியமானது? குடல் ஆரோக்கியத்தை எவ்வாறு மேம்படுத்துவது? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மூளையில் காணப்படும் செரோடோனின் போன்ற நரம்பியக்கடத்திகளை குடலும் உற்பத்தி செய்கிறது ஆரோக்கியமான குடல் என்றால் என்ன? குடலின் கட்டமைப்பு சிக்கலானது. அதனால், மற்ற உறுப்புகளின் ஆரோக்கியத்தை அடையாளம் காண்பதைப் போல, ஆரோக்கியமான குடலை அடையாளம் காண்பது எளிதானது அல்ல. மேலும், குடல் ஆரோக்கியத்தை அளவிடுவதற்கு எந்த ஒரு தனிப்பட்டக் கருவியும் இல்லை. நமது குடல் நுண்ணுயிரிகளால் நிறைந்துள்ளது. அவற்றின் எண்ணிக்கை எவ்வளவு அதிகமானது என்றால், அவற்றை ஒன்றாக இணைக்க முடிந்தால், அவற்றின் எடை 1.8 கிலோவுக்கு மேல் இருக்கும். ஒவ்வொரு கிராம் குடலிலும் 100 பில்லியன் (10,000 கோடி) பாக்டீரியாக்கள் உள்ளன. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் குடலுக்கும் மூளைக்கும் இடையிலான உறவை ஆராய்ச்சி செய்யும் டாக்டர் கேடரினா ஜான்சன் கூறுகையில், ஆரோக்கியமான குடல் பலதரப்பட்ட நுண்ணுயிரிகள் வளர்வதை ஊக்குவிக்கிறது. நுண்ணுயிர் அறிவியல் ஒப்பீட்டளவில் ஒரு இளம் துறை, என்கிறார் கேடரினா ஜான்சன். அதாவது ஆரோக்கியமான குடல் எப்படி இருக்கும் என்று நமக்கு விரிவாகத் தெரியாது. "நமது நுண்ணுயிரிகள் மிகவும் தனிப்பட்டவை, பலதரப்பட்டவை. ஆயிரக்கணக்கான வெவ்வேறு நுண்ணுயிரி இனங்கள் (இந்த இனங்களுக்குள் வெவ்வேறு திரிபுகள்) உள்ளன. அவற்றில் பலவற்றின் செயல்பாடு எங்களுக்குத் தெரியாது," என்கிறார் அவர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, குடல் ‘இரண்டாவது மூளை’ என்று அழைக்கப்படுகிறது ஆரோக்கியமான குடல் ஏன் முக்கியம்? குடல் ‘நமது உடலின் அனைத்து உறுப்புகளையும்’ பாதிக்கலாம், என்கிறார் டாக்டர் ஜான்சன். மூளைக்கும் குடலுக்கும் இடையே ‘குடல்-மூளை அச்சு’ (gut–brain axis) எனப்படும் வலுவான தொடர்பு அமைப்பு உள்ளது. ஒவ்வொன்றும் மற்றொன்றுக்கு இன்றியமையாதவை. குடல் நுண்ணுயிரிகள் இல்லாத நிலையில் மூளை வளர்ச்சி ஆரோக்கியமாக நடக்கவில்லை என்று ஆய்வுகள் கண்டறிந்துள்ளன. குடல் ‘இரண்டாவது மூளை’ என்று அழைக்கப்படுகிறது. நியூரான்கள் நமது மூளை மற்றும் மத்திய நரம்பு மண்டலத்தில் காணப்படும் செல்கள் ஆகும். அவை நம் உடல் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று அதற்குச் சொல்கின்றன. மூளையில் காணப்படும் செரோடோனின் போன்ற நரம்பியக்கடத்திகளை குடலும் உற்பத்தி செய்கிறது. இதன் மூலம் நமது மனநிலையை ஒழுங்குபடுத்துவதில் குடலும் ஒரு பங்கு வகிக்கிறது. நமக்கு நன்கு தெரிந்த குடலின் செயல்பாடு உணவில் இருந்து ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதாகும். "நீர் மற்றும் தாதுக்களை நாம் மலம் வழியே இழக்க முடியாது," என்று இந்தியாவின் இரைப்பைக் குடலியல் நிபுணர் டாக்டர் வெங்கட்ராமன் கிருஷ்ணா விளக்குகிறார். இங்கிலாந்தில் உள்ள ‘கட் ஹெல்த் டாக்டர்’ என்றும் அழைக்கப்படும் டாக்டர் மேகன் ராஸ்ஸி, குடல் நுண்ணுயிரிகளில் ஏற்படும் சமநிலைக் குலைவுகள் 70-க்கும் மேற்பட்ட வெவ்வேறு நாட்பட்ட நோய்களுக்குக் காரணமாக அமைகின்றன, என்கிறார். இவற்றில் இதயம் மற்றும் சுவாச நோய்கள் முதல் முடக்கு வாதம் போன்ற நோய்கள் வரை அடங்கும். நமது நோயெதிர்ப்பு உயிரணுக்களில் சுமார் 70% நமது குடலில் வாழ்கின்றன. இது நோயெதிர்ப்பு அமைப்புடன் ஒரு ‘தொடர்ச்சியான செய்திப் பரிமாற்றத்தில்’ இருக்கிறது என்று டாக்டர் ராஸ்ஸி கூறுகிறார். அதனால்தான், “சிறந்த குடல் ஆரோக்கியம் கொண்டவர்கள் அதிக மீள்திறன் கொண்ட நோயெதிர்ப்பு அமைப்புகளைக் கொண்டுள்ளனர்," என்று அவர் கூறுகிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, நார்ச்சத்து நிறைந்த உணவுகள் குடல் ஆரோக்கியத்தை எவ்வாறு மேம்படுத்துவது? 2018-ஆம் ஆண்டில் ‘அமெரிக்க குடல் திட்டத்தின்’ (American Gut Project) ஆராய்ச்சியைத் தொடர்ந்து, மக்கள் ஒவ்வொரு வாரமும் குறைந்தது 30 வெவ்வேறு தாவரங்களைச் சாப்பிட வல்லுநர்கள் பரிந்துரைக்கத் துவங்கினர். பழங்கள், மற்றும் காய்கறிகள் மட்டுமல்ல, விதைகள், மசாலா, மற்றும் கொட்டைகள் போன்றவையும் அடங்கும். சமையல் குறிப்புகளில் சிறிய மாற்றங்களைச் செய்து, பல்பொருள் அங்காடியில் பலவகையான பழங்களைத் தேடுவது போன்ற எளிய முறைகளை டாக்டர் ராஸ்ஸி பரிந்துரைக்கிறார். நார்ச்சத்து நிறைந்த உணவு, வயிறு நிறைந்தது போன்ற உணர்வை வழங்குகிறது, செரிமானத்திற்கு உதவுகிறது, மலச்சிக்கலைத் தடுக்கிறது, என பிரிட்டனின் தேசியச் சுகாதார சேவை தெரிவிக்கிறது. இந்த அமைப்பு பெரியவர்கள் ஒரு நாளைக்கு 30 கிராம் நார்ச்சத்து சாப்பிட பரிந்துரைக்கிறது. நார்ச்சத்துடன் கூடிய மாவு, அல்லது தானிய ரொட்டிகளை உட்கொள்வது, பழுப்பு அரிசி, அல்லது முழு கோதுமை ஆகியவற்றை உட்கொள்வது உங்கள் நார்ச்சத்து உட்கொள்ளலை அதிகரிக்கலாம். நார்ச்சத்துக்கான பிற உணவுகளில், உருளைக்கிழங்குகள் தோலுடன் (வேகவைத்த உருளைக்கிழங்கு) மற்றும் பீன்ஸ், பருப்பு அல்லது கொண்டைக்கடலை போன்ற பருப்பு வகைகள், ஆகியவற்றை குழம்பு, கூட்டு, மற்றும் சாலட்களில் சேர்க்கலாம். ப்ரீபயாடிக் உணவுகள் (சில வகையான நார்ச்சத்து மற்றும் கார்போஹைட்ரேட்டுகள்) குடலில் நன்மை பயக்கும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, நார்ச்சத்துடன் கூடிய மாவு, அல்லது தானிய ரொட்டிகளை உட்கொள்வது, பழுப்பு அரிசி, அல்லது முழு கோதுமை ஆகியவற்றை நார்ச்சத்து உட்கொள்ளலை அதிகரிக்கலாம் வாழைப்பழம், வெங்காயம், பூண்டு, முட்டைக்கோஸ், ஓட்ஸ், அஸ்பாரகஸ், சிட்ரஸ் பழங்கள் ஆகியவை நார்ச்சத்துக்கான மேலும் சில எடுத்துக்காட்டுகள். பாகிஸ்தானில் உள்ள இரைப்பைக் குடலியல் நிபுணரான டாக்டர் ஹனிஷா கெமானி, நமது இருபதுகளில் ‘சமச்சீரான, ஊட்டச்சத்து நிறைந்த உணவு முறையை’ நிறுவுவது ‘நீண்ட கால ஆரோக்கியத்திற்கு முக்கியமானது’ என்கிறார். "இந்த முக்கியமான காலகட்டத்தில் செய்யப்படும் உணவுத் தேர்வுகள் நாள்பட்ட நோய்களை உருவாக்கும் அபாயத்தைத் தீர்மானிக்கும். இது மன மற்றும் அறிவாற்றல் ஆரோக்கியத்தை பாதிக்கலாம், பிற்கால தசாப்தங்களில் ஒட்டுமொத்த உடல் நலனை வடிவமைக்கும்," என்று அவர் கூறுகிறார். இரவு உணவுக்கும் காலை உணவுக்கும் இடையில் குறைந்தது 12 மணிநேர இடைவெளி விடுவது குடல் நுண்ணுயிரிகளுக்கு நன்மை பயக்கும், என லண்டன் கிங்ஸ் கல்லூரியின் பேராசிரியர் டிம் ஸ்பெக்டர் தனது ‘ஸ்பூன்-ஃபெட்: உணவைப் பற்றி நமக்குக் கூறப்பட்ட அனைத்தும் தவறு’ என்ற புத்தகத்தில் குறிப்பிடுகிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பெரியவர்கள் ஒரு நாளைக்கு 30 கிராம் நார்ச்சத்து சாப்பிட வேண்டும் குடலுக்கு தீங்கு விளைவிக்கும் உணவுகள் எவை? அதிகப்படியாகப் பதப்படுத்தப்பட்ட உணவுகள், மது, மற்றும் புகையிலை பயன்பாடு உங்கள் குடலுக்கு நல்லதல்ல என்று டாக்டர் கிருஷ்ணா விளக்குகிறார். மிகவும் பதப்படுத்தப்பட்ட உணவில் 'நல்ல' பாக்டீரியாவை அடக்கும், அல்லது 'கெட்ட' பாக்டீரியாவை அதிகரிக்கும் பொருட்கள் உள்ளன. உலகில் நீங்கள் எங்கு இருந்தாலும், சுகாதாரமற்ற தெருவோர உணவுகளைத் தவிர்க்கவும், ஆபத்தான வைரஸ்கள் அல்லது பாக்டீரியாக்களைத் தவிர்க்க, பழங்கள் மற்றும் காய்கறிகளை நன்கு கழுவி உண்ண வேண்டும் என டாக்டர் கிருஷ்ணா மேலும் கூறுகிறார். மன அழுத்தம் நம் குடலையும் பாதிக்கிறது. இது அமில ரிஃப்ளக்ஸ் மற்றும் குடல் புண்களை அதிகரிக்கலாம். டாக்டர் ஜான்சன் கூறுகையில், அதிக மன அழுத்தத்தில் உள்ளவர்களுக்கு நுண்ணுயிரிகளின் பன்முகத்தன்மை குறைந்துவிடும் என்கிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அதிகப்படியாகப் பதப்படுத்தப்பட்ட உணவுகள் குடலுக்கு நல்லதல்ல புரோபயோட்டிக் உணவுகள் பலனளிக்குமா? ஒரு குறிப்பிட்ட காரணத்திற்காகப் பயன்படுத்தப்படும் போது புரோபயோட்டிக்குகள் வேலை செய்யும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். டாக்டர் மேகன் ராஸ்ஸி, "சரியான நிலையில், சரியான கால அளவுக்கு, நீங்கள் சரியான புரொபயோட்டிக்கை எடுத்துக்கொள்ள வேண்டும்,” என்கிறார். "இன்று நீங்கள் பல்பொருள் அங்காடிகளில் பார்க்கும் ஒரு புரோபயாடிக் தயாரிப்பு, குடல் ஆரோக்கியத்தை ஆதரிக்கும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. விளம்பரங்கள் சொல்வதுபோல அவற்றை ஒவ்வொரு நாளும் உட்கொள்ளவேண்டிய அவசியமும் இல்லை," என்கிறார் அவர். ''சில நாடுகளில், நிறுவனங்கள் குடல் சுகாதார சோதனைகளை வழங்குகின்றன, அங்கு நீங்கள் ஆய்வகத்தில் ஆய்வுக்காக உங்கள் மலத்தைக் கொடுப்பீர்கள்.'' ''இந்த நிறுவனங்கள் சொல்வதைப்போன்ற பலன்களை இந்தப் பரிசோதனைகள் வழங்குவதில்லை, ஆனால் உங்கள் குடல் நுண்ணுயிரிகளின் பன்முகத்தன்மை பற்றிய புரிதலை இவை வழங்க முடியும்'' என்று டாக்டர் ராஸ்ஸி கூறுகிறார். பிரிட்டிஷ் மருத்துவரும் டிவி தொகுப்பாளருமான டாக்டர் சாண்ட் (Xand) இவை முற்றிலும் பலனளிக்குமா என்பது சந்தேகம்தான் என்று ஒப்புக்கொள்கிறார். "அவர்கள் உங்களுக்குப் பொதுவான ஆலோசனையை வழங்குவார்கள். ஆனால், அது ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டது அல்ல," என்று அவர் கூறுகிறார். "உங்கள் பணத்தைச் சேமிக்கவும், உங்களுக்குக் குடல் பிரச்னைகள் இருந்தால் உங்கள் மருத்துவரிடம் பேசவும், என்று நான் கூறுவேன்," என்கிறார் அவர். https://www.bbc.com/tamil/articles/c75nkpzxr1qo
-
ஜெனீவாவிலிருந்து வரும் அச்சுறுத்தலை எவ்வாறு எதிர்கொள்ளப்போகின்றீர்கள்? ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்கள் தெளிவுபடுத்த வேண்டுமென ஜகத்டயஸ் வேண்டுகோள்
02 SEP, 2024 | 11:37 AM ஜெனீவாவின் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் மூலம் ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்களை எவ்வாறு எதிர்கொள்ளப்போகின்றார்கள் என்பதை ஜனாதிபதி வேட்பாளர்கள் தெளிவுபடுத்த வேண்டும் என முன்னாள் இராணுவ அதிகாரி ஜெனரல் ஜகத் டயஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆதாரமற்ற யுத்த குற்றச்சாட்டுகளை அடிப்படையாக வைத்து யுத்தத்தில் வெற்றிபெற்ற இராணுவத்தினரை இலங்கை அரசாங்கம் தண்டிக்கவேண்டும் என அழுத்தம் கொடுக்கும் மனித உரிமை பேரவையை எவ்வாறு எதிர்கொள்ளப்போகின்றார்கள் என்பது குறித்து ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தமது நிலைப்பாடுகளை முன்வைக்கவேண்டு;ம் என அவர் தெரிவித்துள்ளார். ஜெனீவாவின் சமீபத்தைய அறிக்கையை சுட்டிக்காட்டியுள்ள ஜகத்டயஸ் இந்த கடும் சவாலை எதிர்கொள்வதில் அரசாங்கத்திற்கும் ஜனாதிபதி வேட்பாளர்களிற்கும் உள்ள பொறுப்பை வலியுறுத்தியுள்ளார். யுத்தகுற்றங்களில் ஈடுபட்டவர்கள் என தான் குற்றம்சாட்டியவர்களை விசாரணைகளிற்கு உட்படுத்தி தண்டிப்பதற்கு இலங்கை தவறிவிட்டதாக குற்றம்சாட்டும் ஜெனீவா வெளிப்புற உலகளாவிய நியாயாதிக்கத்தை பயன்படுத்துதல், நம்பகதன்மை மிக்க விதத்தில் குற்றம்சாட்டப்பட்டவர்களிற்கு எதிராக பொருளாதார தடைகள் பயணத்தடைகளை விதித்தல்,சர்வதேச சட்டத்தின் அடிப்படையில் பிற நடவடிக்கைகள் போன்ற தந்திரோபாயங்களை சர்வதேச சமூகம் பின்பற்றவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது என ஜகத்டயஸ் தெரிவித்துள்ளார்.. https://www.virakesari.lk/article/192619
-
அமெரிக்காவை அச்சுறுத்தும் ‘ட்ரிபிள் ஈ’ வைரஸ் - எவ்வாறு பரவுகிறது? என்ன ஆபத்து?
பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் அமெரிக்காவின் வடகிழக்கு பகுதியில் உள்ள கொசுக்களில் ‘EEE’ எனப்படும் அரிய, ஆனால் மிகவும் ஆபத்தான வைரஸ் கண்டறியப்பட்டிருக்கிறது. இந்த வைரஸ் உயிருக்கே ஆபத்து விளைவிக்கக் கூடும். ‘ஈஸ்டர்ன் ஈக்வைன் என்செபாலிடிஸ் அல்லது ‘ட்ரிபிள் ஈ’ (Eastern Equine Encephalitis - EEE) என்று அழைக்கப்படும் இந்த வைரஸ், அந்தத் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் கொசுக்கள் கடிப்பதால் பரவுகிறது. இந்த வைரஸ் அங்கு கண்டறியப்பட்டவுடன், மசாசூசெட்ஸ் மாகாணத்தில் உள்ள சமூகங்கள் அதிக ஆபத்தில் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், அப்பகுதியில் இருக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். நியூ ஹாம்ப்ஷயர் மாகாணத்தில் 40 வயதுடைய ஒருவர் இந்த வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மசாசூசெட்ஸ் மாகாணத்தில் 80 வயதுடைய ஒரு நபரும் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இந்த நோய் அரிதானது என்றும், அந்நாட்டில் ஆண்டுதோறும் இந்த நோய்த்தொற்று 11 பேருக்கு மட்டுமே ஏற்படும் என்றும் அமெரிக்காவில் உள்ள நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (Centers for Disease Control and Prevention - CDC) தெரிவித்துள்ளது. மசாசூசெட்ஸில், 2019 மற்றும் 2020-ஆம் ஆண்டுகளில் 17 பேருக்கு ‘ட்ரிபிள் ஈ’ வைரஸ் தொற்று ஏற்பட்டது, இதனால் ஏழு பேர் இறந்தனர். கனடாவிலிருந்து மெக்ஸிகோ வளைகுடா மற்றும் கரீபியன் வரையிலும், தெற்கே அர்ஜென்டினா வரையிலும் - அமெரிக்காவின் கிழக்குக் கடற்கரைப் பகுதியிலும் இந்த வைரஸ் தொற்றுப் பரவல் அவ்வப்போது நிகழ்ந்திருக்கிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மசாசூசெட்ஸ் மாகாணத்தில் உள்ள சமூகங்கள் அதிக ஆபத்தில் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இமக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர் EEE என்பது என்ன? எவ்வாறு பரவுகிறது? ‘ட்ரிபிள் ஈ’ வைரஸ், கொசுக் கடி மூலம், முக்கியமாகப் பறவைகள், குதிரைகள், மற்றும் மனிதர்களுக்குப் பரவும் ஒரு வைரஸ் ஆகும். இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான மக்களுக்கு எந்த அறிகுறிகளும் உருவாகவில்லை. இந்த வைரஸ் மிகவும் அரிதானது. ஆனால் இது மிகவும் தீவிரமான விளைவுகளை ஏற்படுத்தலாம். இது காய்ச்சல் மற்றும் ஆபத்தான மூளை வீக்கத்தை ஏற்படுத்தும். தொற்று ஏற்பட்ட மூன்றில் ஒரு பங்கு பேர் இறக்கக் கூடும் என்று நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (CDC) கூறுகிறது. இந்த தொற்று ஏற்பட்ட ஒரு நபரிடமிருந்து இன்னொருவருக்கு இந்த வைரஸ் பரவாது. பொதுவாக, கோடையின் பிற்பகுதியிலும், இலையுதிர் காலத்தின் துவக்கத்திலும் இந்த வைரஸ் தொற்று பரவும். இது பெரும்பாலும் அமெரிக்காவின் வடகிழக்கு பகுதியிலும், எப்போதாவது அமெரிக்காவின் பிற பகுதிகளிலும் நிகழும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,மசாசூசெட்ஸ் மாகாணத்தின் பகுதிகளுக்கு வானில் இருந்தும், லாரிகளில் இருந்தும் பூச்சிக்கொல்லிகள் தெளிக்கப்படுகின்றன EEE-இன் அறிகுறிகள் என்ன? ‘ட்ரிபிள் ஈ’ தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பொதுவாக, 4 முதல் 10 நாட்களுக்குள் அதற்கான அறிகுறிகளைக் ஏற்படும் என்று நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (CDC) கூறுகிறது. காய்ச்சல், சளி, உடல்வலி, மற்றும் மூட்டு வலி ஆகியவை இதில் அடங்கும். இந்தத் தொற்று ஒன்று முதல் இரண்டு வாரங்கள் வரை நீடிக்கும். இதனால் மத்திய நரம்பு மண்டலம் பாதிக்கப்படாவிட்டால், மக்கள் முழுமையாக குணமடைகின்றனர். ஆனால், சிலருக்கு மெனிஞ்சிடிஸ் (meningitis - மூளைக்காய்ச்சல்) அதாவது மூளை மற்றும் தண்டுவடத்தைச் சுற்றியுள்ள சவ்வுகளின் வீக்கம், அல்லது மூளையில் வீக்கம் ஏற்படும். இந்தத் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீண்ட கால பாதிப்பாக, அறிதல் குறைபாடு, ஆளுமைக் கோளாறுகள், வலிப்பு, பக்கவாதம், மற்றும் கழுத்துப் பிரச்னைகள் ஏற்படலாம். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்த வைரஸ் மனிதர்கள் அதிகம் செல்லாத சதுப்பு நிலங்களில் இருக்கும் நீர்ப்பறவைகள் போன்ற உயிரினங்களைப் பாதிக்கிறது ‘ட்ரிபிள் ஈ’ தொற்றிலிருந்து தற்காத்துக் கொள்வது எப்படி? ட்ரிபிள் ஈ தொற்றுக்கு தடுப்பூசி இல்லை, அதனை குணப்படுத்தும் மருந்து இல்லை. இதற்கான சிகிச்சையில் நரம்பு வழி திரவங்கள் மற்றும் செயற்கை சுவாசம் ஆகியவை அடங்கும். அதிக ஆபத்தில் உள்ளதாகக் குறிப்பிடப்பட்டிருக்கும் மசாசூசெட்ஸில் உள்ள ஒரு டஜன் அல்லது அதற்கு மேற்பட்ட குடியிருப்பு வளாகங்களில், தற்போது மக்கள் கொசுக்களிடமிருந்து பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப் படுகிறார்கள். அதற்கு கீழ்கண்ட வழிகள் அறுவுறுத்தப்பட்டிருக்கின்றன: கொசுக்கள் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கக் கூடிய அந்தி வேளைக்குப் பிறகு வெளிப்புற நடவடிக்கைகளைத் தவிர்ப்பது கொசு விரட்டிகளைப் பயன்படுத்துவது உடலை முழுவதுமாக மறைக்கும் ஆடைகளை அணிவது ஜன்னல்களில் கொசு வலைகளை அமைத்தல் மற்றும் சரிசெய்தல் கொசுக்கள் இனப்பெருக்கம் செய்ய உதவும், தேங்கிய நீரை வெளியேற்றுதல் ஆபத்தில் உள்ள மசாசூசெட்ஸ் மாகாணத்தின் பகுதிகளுக்கு வானில் இருந்தும், லாரிகளில் இருந்தும் பூச்சிக்கொல்லிகள் தெளிக்கப்படுகின்றன. EEE வைரஸ் எவ்வளவு பரவலாக உள்ளது? ட்ரிபிள் ஈ வைரஸ் அமெரிக்காவின் கிழக்குக் கடற்பரப்பில் இருந்து தெற்கே அர்ஜென்டினா வரையிலும், கிரேட் லேக்ஸ் மற்றும் கரீபியன் தீவுகளிலும் இருப்பதாக அறியப்படுகிறது. இது முதன்முதலில் 1933-இல் டெலாவேர், மேரிலேண்ட், மற்றும் வர்ஜீனியாவில் குதிரைகளில் கண்டுபிடிக்கப்பட்டது. மனிதர்கள் அதிகம் செல்லாத சதுப்பு நிலங்களில் இருக்கும் கொசுக்கள் இந்த வைரஸை கடத்துவதால், இது பொதுவாக மனிதர்களுக்குப் பரவுவதில்லை. ஆனால், இந்த வைரஸ் நீர்ப்பறவைகள் போன்ற அப்பகுதியில் வாழும் உயிரினங்களைப் பாதிக்கிறது. பல பறவை இனங்கள் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் அதனால் அவற்றுக்கு இதனால் நோய் ஏற்படுவதில்லை. இந்த ஆண்டு, இந்த வைரஸால் அமெரிக்காவில் 5 மாகாணங்களில் இதுவரை 5 பேர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அமெரிக்கப் பூச்சிக் கட்டுப்பாட்டு நிறுவனமான VDCI-யின் தரவுகள் படி, 2011 மற்றும் 2020 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில், மசாசூசெட்ஸ் மாகாணத்தில் இந்த வைரஸால் அதிகப்படியாக 26 பேர் பாதிக்கப்பட்டனர். அதைத் தொடர்ந்து, மிச்சிகன் (18), புளோரிடா (9), ஜார்ஜியா (7) மற்றும் வட கரோலினா (7) ஆகிய மாகாணங்களில் அதிக EEE வைரஸ் தொற்று பதிவானதாக அந்நிறுவனம் கூறுகிறது. 2010-ஆம் ஆண்டு, பனாமாவின் டேரியன் பகுதியில் ட்ரிபிள் ஈ வைரஸ் பரவல் ஏற்பட்டது. இதில் ஏழு பேர் பாதிக்கப்பட்டனர், இரண்டு பேர் இறந்தனர் என்று ‘நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசின்’ சஞ்சிகை தெரிவித்துள்ளது. அப்பகுதியில் இருந்த 50 குதிரைகளையும் இந்த வைரஸ் தாக்கியது. சமீபத்திய ஆண்டுகளில் டிரினிடாட் நாட்டில் இரண்டு நபர்களுக்கு ட்ரிபிள் ஈ தொற்று ஏற்பட்டது ஆவணப்படுத்தப்பட்டிருக்கிறது. மேலும், பிரேசிலில் ஒரு நபருக்கு இந்தத் தொற்று ஏற்பட்டுள்ளது. 1981-இல் அர்ஜென்டினாவில் ட்ரிபிள் ஈ வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டது. ஆனால் அதனால் அந்நாட்டில் மனிதர்கள் பாதிக்கப்படவில்லை. ‘வெஸ்டர்ன் எக்வைன் என்செபாலிடிஸ்’ எனப்படும் இதேபோன்ற மற்றொரு நோய் அந்த நாட்டில் மிகவும் தீவிரமான பிரச்னையாகும். அது அங்கு பல மனித இறப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES ட்ரிபிள் ஈ பரவல் அதிகரிக்குமா? காலநிலை மாற்றத்தால் எதிர்காலத்தில் ட்ரிபிள் ஈ பரவல்களின் எண்ணிக்கை அதிகரிக்க க்கூடும் என்ற அச்சம் உள்ளது. கொசுக்கள் 10C மற்றும் 32C வெப்பநிலையிலும், காற்றில் குறைந்தபட்சம் 42% ஈரப்பதம் இருக்கும் போதும் சுறுசுறுப்பாகச் செயல்படும். ‘க்ளைமேட் சென்ட்ரல்’ என்ற ஆய்வுக் குழுவின் கூற்றுப்படி, அமெரிக்காவின் கிட்டத்தட்ட முக்கால்வாசிப் பகுதிகளில், 1979-ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது, வானிலை வெப்பமாகவும் ஈரப்பதமாகவும் இருக்கும் காலகட்டம், ஆண்டுக்கு சராசரியாக 16 நாட்கள் அதிகரித்துள்ளது. ஒரு வருடத்தில் கொசுக்கள் எந்தளவு நீண்ட காலம் சுறுசுறுப்பாக இருக்கின்றனவோ, அந்த அளவுக்கு அவை ட்ரிபிள் ஈ போன்ற ஆபத்தான நோய்த்தொற்றுகளைக் கடத்தும் அபாயம் அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது. https://www.bbc.com/tamil/articles/cx2xe79g0pgo
-
‘அறிவார்ந்த அரசியலை பேசும் சூழலை மலையகத்தில் உருவாக்க இலங்கை மலையகத் தமிழ் மக்களின் வேட்பாளராக களமிறங்கியுள்ளேன்’
Published By: VISHNU 01 SEP, 2024 | 09:41 PM நேர்காணல்: சிவலிங்கம் சிவகுமாரன் சுதந்திர இலங்கையின் சுதந்திரம் பறிக்கப்பட்ட மக்களின் குரல்களில் எனது குரலும் ஒன்று. சுதந்திரத்துக்குப் பின்னரான காலப்பகுதியில் வடக்கு கிழக்கு சமூகத்தினர் எவ்வாறு முப்பது வருடங்கள் தனிநாட்டுக்காக போராடினார்களோ அதே போன்று அதற்கு முன்னைய முப்பது வருடங்கள் நாம் இந்த நாட்டின் குடிகள் என்ற அந்தஸ்த்தைப் பெறுவதற்கு போராடினோம். இரண்டு தரப்பினரின் போராட்டங்களும் முக்கியமானவை. அவர்கள் நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்தப் பிறகு போராடினார்கள், நாம் சுதந்திரம் கிடைத்த அதே ஆண்டில் குடியுரிமையையும் அடுத்த ஆண்டில் வாக்குரிமையையும் பறிகொடுத்து விட்டு போராடினோம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக பிந்திய முப்பது வருட போர் யுகம் பேசப்படுவதை போன்று அதற்கு முந்தைய எமது முப்பது வருட போராட்டம் பேசப்படவில்லையென்பது வேதனை. ஆகவே அது குறித்த அறிவார்ந்த அரசியலை பேசும் அதே வேளை மலையக மக்களை இந்நாட்டின் அர்த்தமுள்ள குடிகளாக அங்கீகரிக்க என்ன செய்ய வேண்டும் என்பதை சக ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு சொல்வதற்காகவே நான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்றேன். இத்தேர்தலில் நான் நான் வெல்வதற்காக அல்ல சொல்வதற்காகவே போட்டியிடுகின்றேன் என்று தெரிவிக்கின்றார் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் மலையக அரசியல் அரங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் சுயேச்சை வேட்பாளருமான மயில்வாகனம் திலகராஜ் வீரகேசரி வாரவெளியீட்டுக்கு அவர் வழங்கிய நேர்காணல் இங்கு தரப்படுகின்றது. கேள்வி: இலங்கை மலையகத் தமிழ் மக்களின் வேட்பாளர் என்பதன் விளக்கம் என்ன? பதில் : இதில் சந்தேகங்கள் இருக்க முடியாது என நினைக்கிறேன். இலங்கையில் வாழ்ந்து வருகின்றன மலையக மக்களின் பிரதிநிதியாக நான் பாராளுமன்றில் செயற்பட்டிருக்கின்றேன். அவர்களின் பல பிரச்சினைகளை பேசியிருக்கின்றேன், குரல் கொடுத்திருக்கின்றேன். ஆகவே அந்த மக்களின் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கியுள்ளேன். இந்த நாட்டிற்காக உழைத்த வர்க்கத்தினரின் வாரிசாக நான் விளங்குகின்றேன். இந்த நாட்டில் எமக்கும் உரித்துண்டு என்பதில் எந்த சந்தேகங்களுமில்லை. இலங்கை எமது நாடு. அதில் தமிழர்களாகிய நாங்கள் மலையக சமூகத்தினர். அந்த அடிப்படையில் இலங்கை மலையகத் தமிழர்கள் என்ற பதம் பொருத்தமாகத்தானே இருக்கின்றது. கேள்வி: மலையக அரசியல் அரங்கம் என்ற சமூக செயற்பாட்டு இயக்கத்தின் ஒரு அம்சம் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது எனக் கூறலாமா? பதில் : ஆம் நிச்சயமாக. கடந்த வருடம் இந்த இயக்கத்தை நாம் ஆரம்பித்த போது உள்ளூராட்சி மன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தது. அதில் போட்டியிட வேட்பாளர்கள் அனைவரையும் தெரிவு செய்திருந்தோம். அப்போது எமது அமைப்பின் கொள்கைகள் பற்றி நான் விளக்கமளிக்கும் போது இந்த நாட்டில் இடம்பெறும் சகல தேர்தல்களிலும் நாம் போட்டியிடுவோம் என தெளிவாகக் கூறியிருந்தேன். அதில் ஜனாதிபதி தேர்தல் தான் முதலாவதாக இடம்பெறப் போகின்றது. அதில் களமிறங்கியுள்ளோம். அதில் மற்றுமொரு முக்கிய விடயம் மாவட்ட எல்லைகளை கடந்து செயற்படுவோம் என்பதாகும். ஆகவே நுவரெலியா மாவட்டத்துக்குள்ளேயே எமது அரசியல் செயற்பாடுகளை முன்னெடுத்துக்கொண்டிருக்க முடியாது. ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது என்பது மாவட்ட எல்லைகளை கடந்த ஒரு செயற்பாடு தானே? ஆகவே எமது கொள்கைகளை சிறப்பான முறையில் கால மாற்றத்துக்கும் சூழலுக்கும் ஏற்றவாறு முன்னெடுத்துக்கொண்டிருக்கின்றோம். கேள்வி: களமிறங்கியிருப்பது வெல்வதற்கு அல்ல என்று கூறிவிட்டீர்கள் என்ன சொல்லப்போகின்றீர்கள்? பதில் : இது வரை மலையக சமூகம் தொடர்பில் எந்த மலையக அரசியல்வாதிகளும் சொல்லாத விடயங்களை சொல்லப்போகிறேன் என்றும் வைத்துக்கொள்ளலாம். ஏனென்றால் 1977 ஆம் ஆண்டிலிருந்து இது வரை எமது மலையக பிரதிநிதிகள் பாராளுமன்றத்தில் சொல்லாத பல விடயங்களை நான் பாராளுமன்ற உறுப்பினராக சொல்லியிருக்கின்றேன், அதன் மூலம் சில விடயங்களை செய்யவும் வைத்திருக்கின்றேன். பாரம்பரிய அரசியல்வாதிகள் எல்லாம் பாராளுமன்றத்தில் சொல்ல வேண்டிய விடயங்களை அங்கு சொல்லாமல் பத்திரிகைகளுக்கு அறிக்கை விடுத்துக்கொண்டிருந்த காரணத்தினால் தான் நாங்கள் பாராளுமன்றத்துக்கு வர வேண்டியேற்பட்டது. இப்போது நான் சொல்ல வருகின்ற விடயங்கள் பல உள்ளன. அதில் எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ள பிரதான விடயத்தை இங்கு கூற விரும்புகிறேன். அதாவது மலையக மக்களின் நீண்ட கால பிரச்சினைகளை பதிவு செய்வதற்கான ஒரு ஜனாதிபதி ஆணைக்குழுவை ஸ்தாபித்தலாகும். அதை ஏனைய ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு சொல்ல விரும்புகிறேன். கேள்வி: ஜனாதிபதி வேட்பாளருக்கான காரியாலயம் தொடர்பில் மலையகப் பெருந்தோட்டப்பகுதி குடியிருப்புகள் பற்றிய நீண்ட கால அவலத்தை அம்பலப்படுத்தியிருந்தீர்கள். இது பேசப்பட்டதா? பதில்: இனி அதிகமாகவே பேசப்பட வேண்டும். இப்படியான விடயங்களை சொல்வதற்காகவே நான் களமிறங்கியுள்ளேன் என்பதை ஏனையோரும் புரிந்து கொள்ள வேண்டும். நான் பிறந்த மண் வட்டகொடை மடக்கும்பரை தோட்டத்தின் புதுக்காடு பிரிவு. அங்கு வசிக்கும் ஓய்வு பெற்ற தோட்டத் தொழிலாளியான திருமதி. கருப்பன் தனபதி அவரது வசிப்பிடமான லயன் அறையை எனக்கு தற்காலிக தேர்தல் காரியாலயமாக பயன்படுத்துவதற்கு கடந்த 19 ஆம் திகதி அனுமதி தந்தார். ஆனால் தேர்தல்கள் ஆணைக்குழு எனக்கு அனுப்பி வைத்துள்ள சுற்றுநிருபத்தின் ( இல 06) பிரகாரம் இந்த வசிப்பிடம் திருமதி. கருப்பன் தனபதிக்கு சொந்தமானது என்றும் அந்த வசிப்பிடம் அமைந்த வளவு அரசுக்கோ வேறு நியதிச் சட்ட நிறுவனம் ஒன்றுக்கோ உரித்தானது அல்ல என்பதையும் வேட்பாளராகிய நான் உறுதி செய்தல் வேண்டும். இவற்றை உறுதி செய்ய திருமதி. கருப்பன் தனபதியிடம் எவ்விதமான ஆவணங்களும் இல்லை. ஆனால் அவரது தலைமுறையினர் கடந்த 200 ஆண்டுகளாக இந்த லயன் அறையில் வாழ்வதாக திருமதி. தனபதி வாய்மொழி மூலமாக உறுதி சொல்கிறார். மேலும் வேட்பாளரின் தேர்தல் காரியாலயம் (10x10) 100 சதுர அடிக்கு மேற்பட்டதாகவும் உயரம் 8 அடிக்கு மேற்பட்டதாகவும் இருக்க வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு கோரி இருப்பதுடன் அதனை குறித்த குடியிருப்பு அமைந்த கிராம உத்தியோகத்தர் உறுதி செய்ய வேண்டும் எனவும் சுற்று நிருபத்தில் கேட்கப்பட்டுள்ளது. ஆனால் திருமதி தனபதி அவர்களின் லயன் குடியிருப்பின் கூரையின் முகப்பு பகுதி 6 அடிக்கும் குறைவாகவே உள்ளதால் அதனை உறுதி செய்வதில் கிராம உத்தியோகத்தருக்கு சிக்கல் ஏற்படலாம். தோட்ட லயன் அறையில் பிறந்து வளர்ந்த நான், இத்தகைய லயன் அறைகளில் வாழும் 9 லட்சம் மலையகப் பெருந்தோட்ட மக்களின் பிரதிநிதியாக தோட்ட லயன் அறை ஒன்றிலேயே எனது தற்காலிக தேர்தல் காரியாலயத்தை அமைக்க விரும்புகிறேன். எனவே இந்த சுற்றுநிருப சரத்துகளை மீளாய்வு க்கு உட்படுத்தி 200 ஆண்டுகளாக தமக்கு உரித்தாவனங்கள் ஏதுமற்ற, அவை யாருக்கு உரித்தான வளவு என உறுதி செய்ய முடியாத 8 அடிக்கும் குறைவான உயரமான கூரையின் முகப்பு பகுதியைக் கொண்ட இலங்கை பெருந்தோட்டம் ஒன்றில் அமைந்த தொழிலாளியின் வாழ்விடமான லயக் குடியிருப்பை தற்காலிக தேர்தல் காரியாலயமாக உள்ள சிக்கலை தீர்த்து வைக்குமாறு சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்தேன். அவர்கள் நுவரெலியா மாவட்ட தேர்தல் காரியாலயத்தில் உள்ள தேர்தல் முறைப்பாட்டுப் பிரிவில் இது குறித்து அறிவிக்க சொல்லியிருந்தார்கள். அது குறித்து முறைப்பாடொன்றை செய்தேன். குறித்த காரியாலயத்தை பயன்படுத்தும்படியும் மேற்கொண்டு அது தொடர்பில் பிரச்சினைகள் இருந்தால் அது குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் கூறினார்கள். இவ்வாறான குடியிருப்பு சூழலில்தான் மலையகப் பெருந்தோட்ட மக்கள் வாழ்ந்து வருகிறார்கள் என்பதை ஏனைய ஜனாதிபதி வேட்பாளர்களுக்கும் தேசிய கொள்கை வகுப்பாளர்களுக்கும், அரசுக்கும், ஐ.நாவுக்கும் சேதியை சொல்ல விரும்புகிறேன். கேள்வி : தோட்டத்தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் என்ன தீர்வுகளை கொண்டிருக்கின்றீர்கள்? பதில் : தொழிலாளர்களின் சம்பளத்தை இது வரை தொழிலாளர்கள் கேட்டதில்லையே, அவர்களின் பிரதிநிதிகள் தானே அதை தீர்மானிக்கின்றார்கள்? ஆகவே இங்கு ஆரம்பமே முரணாக உள்ளது. ஒன்று தொழிலாளர்களின் சம்பளத்தைப் பற்றி கதைப்பார்கள் அல்லது அவர்களை சிறுதோட்ட உடைமையாளர்களாக மாற்றுவோம் என ஒவ்வொரு தேர்தல் காலத்திலும் நிபந்தனைகளை முன்வைத்து யாராவது ஒரு வேட்பாளருடன் இணைந்து கொள்வார்கள். அவர் வெற்றி பெற்றாலும் தோல்வியடைந்தாலும் நடக்கப்போவது ஒன்றுமில்லை. உதாரணத்துக்கு கோட்டாபய ஜனாதிபதி வேட்பாளராக இருந்த போது அவருக்கு ஆதரவளித்த மலையகக் கட்சியானது, தொழிலாளர்களை சிறுதோட்ட உடைமையாளராக்க இவருக்கு வாக்களியுங்கள் என்றது. கோட்டாபய வெற்றி பெற்றும் அது நடக்கவில்லை. சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளித்த கூட்டணி இதையே முன்வைத்து ஆதரவு கேட்டது. அவர் வெற்றி பெறவில்லை. ஆனால் அது முக்கியமல்ல. இவர்கள் முன் வைத்த கோரிக்கையை எதிர்க் கட்சித் தலைவராகவாவது அவர் பாராளுமன்றத்தில் ஒரு பிரேரணையை முன்வைத்திருக்கலாமே? அவர் ஏன் அதை செய்யவில்லை? நான் இவ்விடயத்தில் அனைவருக்கும் அழைப்பு விடுக்கின்றேன். தொழிலாளர்களுக்கு நாட்கூலி முறைமை வேண்டாம். தென்மாகாண தோட்டங்களை சிங்கள மக்களுக்கு பிரித்து கொடுத்தது போன்று மலையகப் பிரதேசங்களிலும் தொழிலாளர்களுக்கு அதை பிரித்து வழங்கும் திட்டம் குறித்து பேச அனைவரும் ஒன்று சேர்ந்தால் நான் அவ்விடத்தில் முதல் நபராக நிற்பேன். கேள்வி: மலையக சமூகத்தை தேசிய நீரோட்டத்தில் இணைத்துக்கொள்ள வேண்டும் என காலங் காலமாக பலரும் பேசி வருகின்றார்களே இது பற்றி உங்கள் கருத்து என்ன? பதில் : எமது மக்களுக்கு சொந்தமாக ஒரு துண்டு காணியில்லை, கெளரவமாக வாழ்வதற்கான குடியிருப்பு இல்லை, அந்த குடியிருப்புக்கு ஒரு முகவரி இல்லை, தேசிய சுகாதார சேவைக்கும் இன்னும் எமது மக்கள் இணைக்கப்படவேயில்லை. உள்ளூரிலேயே இப்படி தீர்க்கப்படாத பிரச்சினைகள் இருக்கும் போது தேசிய நீரோட்டத்துக்கு எப்படி போவது? இந்த மக்களுக்கு முகவரிகளே இல்லையென எந்த தலைவராவது பாராளுமன்றத்தில் பேசியிருக்கின்றாரா? முகவரி இல்லாத காரணங்களினால் தோட்டக் காரியாலயங்கள் தானே தபால்களை விநியோகித்து வருகின்றன? இதற்கான தீர்வை இதுவரை இந்த தலைவர்கள் கூறவில்லையே? தனி ஒருவராக சிவில் சமூக செயற்பாட்டாளர் ஒருவர் தனது தோட்டத்துக்கு முகவரிகளை வழங்கக் கோரி நீதிமன்றத்தை நாடினார். அது அந்த ஒரு தோட்டத்துக்கு மாத்திரமான தீர்வாக அமைந்தது. இங்கு பத்து இலட்சம் மக்களுக்கு அந்தப் பிரச்சினைகள் உள்ளன. அதை வெளிக்கொணர இந்த தேர்தல் காலத்தை நான் பயன்படுத்திக்கொள்ளப்போகின்றேன். எமது தேர்தல் விஞ்ஞாபனங்கள் அனைவருக்கும் சென்று சேர்வதற்கு அவற்றை இயன்றவரை தபாலில் அனுப்புவதற்கான முயற்சியை எடுப்போம். பெருந்தோகையான தேர்தல் விஞ்ஞாபன கடிதங்கள் தோட்ட காரியாலயங்களிலேயே போய்ச் சேரும். ஏனென்றால் முகவரிகள் இல்லாத காரணத்தினால் அந்த பணியை தபாற்கந்தோர்கள் செய்வதில்லை. அவை தோட்டக் காரியாலயத்திலேயே ஒப்படைக்கும். அவ்வாறு நிகழும் போது தோட்ட காரியாலயங்களும், தபால்களை விநியோகிப்பது தமது வேலை அல்ல என்பதை உணர வேண்டும். ஆகவே இதனூடாக ஒரு செய்தியை நான் பலருக்கு சொல்லக் கூடியதாக இருக்கும். நான் ஆரம்பத்தில் கூறியது போன்று இத்தேர்தலில் நான் வெல்லப்போவதில்லையென்றாலும் சொல்லப்போகும் விடயங்கள் அழுத்தமாகவும் அனைவரையும் சிந்திக்க வைப்பதாயும் இருக்கும் என்பது நிச்சயம். https://www.virakesari.lk/article/192594
-
ஜனாதிபதி தேர்தலில் சஜித்திற்கு ஆதரவு : தமிழரசுக்கட்சி அதிரடி அறிவிப்பு
“இலங்கை தமிழரசுக் கட்சிக்கு நன்றி” - சஜித் 01 SEP, 2024 | 07:00 PM ஜனாதிபதி தேர்தலில் இலங்கை தமிழரசுக்கட்சி தனக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளமைக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச நன்றியை தெரிவித்துள்ளார். சமூக ஊடகத்தில் இதனை பதிவு செய்துள்ள அவர், நாங்கள் இணைந்து அனைவரும் வெற்றிபெறும், இனவெறியில்லாத பாரபட்சம் இல்லாத எதிர்காலத்தை உருவாக்குவோம் என தெரிவித்துள்ளார். ஐக்கியம் வலு பகிர்ந்துகொள்ளப்பட்ட நோக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் எதிர்காலத்தை உருவாக்குவோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/192590
-
அமெரிக்க பகிரங்க ஆடவர் டென்னிஸில் அதிர்ச்சிமேல் அதிர்ச்சி; அல்காரஸைத் தொடர்ந்து ஜோகோவிச்சும் நொக் அவுட் ஆனார்
Published By: VISHNU 01 SEP, 2024 | 08:37 PM (நெவில் அன்தனி) நியூயோர்க் சிட்டியில் நடைபெற்றுவரும் ஐக்கிய அமெரிக்க டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் அதிர்ச்சிமேல் அதிர்ச்சி இடம்பெற்றுள்ளது. கடந்த இரண்டு வருடங்கள் அமெரிக்க பகிரங்க டென்னிஸ் போட்டியில் முறையே சம்பியன்களான காலோஸ் அல்காரெஸ் மற்றும் நோவாக் ஜோக்கோவிச் ஆகிய இருவரும் இந்த வருடம் இரண்டாம் மற்றும் மூன்றாம் சுற்றுகளில் அதிர்ச்சி தோல்விகளைத் தழுவி நொக் அவுட் செய்யப்பட்டனர். கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற 2ஆம் சுற்றுப் போட்டியில் நிரல்படுத்தலில் இடம்பெறாத நெதர்லாந்து வீரர் பொட்டிக் வென் டி ஸாண்ட்ஸ்கல்பிடம் 3 நேர் செட்களில் 2023 சம்பியன் காலோஸ் அல்காரெஸ் முற்றிலும் எதிர்பாராதவிதமாக தோல்வி அடைந்தார். முதலாவது செட்டில் அற்புதமாக விளையாடிய ஸாண்ட்ஸ்கல்ப் 6 - 1 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றிபெற்றார். இரண்டாம் செட்டில் இருவரும் கடுமையாக மோதிக்கொண்டதால் அல்காரெஸ் பதிலடி கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஸாண்ட்ஸ்கல்ப் மீண்டும் 7 - 5 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றிபெற்று 2 செட்கள் முன்னிலையில் இருந்தார். மூன்றாவது செட்டில் மீண்டும் திறமையாக விளையாடிய ஸாண்ட்ஸ்கல்ப் 6 - 4 என வெற்றிபெற்று 3ஆம் சுற்றுக்கு முன்னேறினார். இதேவேளை நான்கு செட்கள்வரை நீடித்த மூன்றாம் சுற்று போட்டியில் நடப்பு சம்பியன் ஜோகோவிச்சை 3 - 1 என்ற செட்கள் அடிப்படையில் உலக தரவரிசையில் 50ஆம் இடத்தில் உள்ள அமெரிக்க வீரர் ப்றெண்டன் நக்காஷிமா வெற்றிகொண்டார். முதல் இரண்டு செட்களில் தலா 6 - 4 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றிபெற்ற நக்காஷிமா, 3ஆவது செட்டில் 2 - 6 என தோல்வி அடைந்தார். எனினும் 3ஆவது செட்டில் மீண்டும் திறமையாக விளையாடிய நக்காஷிமா 6 - 4 என வெற்றிபெற்று நான்காம் சுற்றுக்கு முன்னேறினார். அமெரிக்க பகிரங்க டென்னிஸ் போட்டியில் அவர் நான்காம் சுற்றுக்கு முன்னேறியிருப்பது இதுவே முதல் தடவையாகும். https://www.virakesari.lk/article/192593
-
சீனா- பிலிப்பைன்ஸ் இடையே வெடித்துள்ள புதிய மோதல், எச்சரிக்கும் அதிபர்
சீனா - பிலிப்பைன்ஸ் கடலோர காவல்படை கப்பல்கள் மோதல் - நடுக்கடலில் என்ன நடந்தது? பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ஆகஸ்ட் 19ம் தேதி சீனக் கப்பலும், பிலிப்பைன்ஸ் கப்பலும் மோதிக் கொண்டன. (கோப்புப் படம்) கட்டுரை தகவல் எழுதியவர், டெர்பெயில் ஜோர்டான் பதவி, பிபிசி நியூஸ் 1 செப்டெம்பர் 2024, 12:07 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் தென் சீனக் கடலின் சர்ச்சைக்குரிய பகுதியில் கடலோரக் காவல்படை கப்பல்களைக் கொண்டு மோதியதாக சீனாவும் பிலிப்பைன்ஸும் ஒருவரை ஒருவர் பரஸ்பரம் குற்றம்சாட்டியுள்ளன. தங்கள் நாட்டு கப்பல் மீது சீன கப்பல் நேரடியாக, வேண்டுமென்றே மோதியதாக பிலிப்பைன்ஸ் கூறியுள்ளது. அதேசமயம், சீனக் கப்பல் மீது பிலிப்பைன்ஸ் கப்பல் "வேண்டுமென்றே" மோதியதாக சீனா குற்றம் சாட்டியுள்ளது. சபீனா மணல் திட்டு அருகே சனிக்கிழமை நடந்த மோதல், தென் சீனக் கடலில் உள்ள பல்வேறு தீவுகள் மற்றும் பொருளாதார மண்டலங்களில் இரு நாடுகளுக்கும் இடையே நீண்ட காலமாக நீடித்து வரும் சர்ச்சைகளின் சமீபத்திய நிகழ்வாகும். கடந்த இரண்டு வாரங்களுக்குள், அதே பகுதியில் இரு நாடுகளைச் சேர்ந்த கப்பல்கள் தொடர்பாக குறைந்தது மூன்று சம்பவங்கள் நடந்துள்ளன. இரு நாடுகளும் கூறுவது என்ன? சபீனா மணல் திட்டு சீனாவால் ஜியான்பின் ஜியாவோ என்றும், பிலிப்பைன்ஸால் எஸ்கோடா ஷோல் என்றும் அழைக்கப்படுகிறது. பிலிப்பைன்ஸின் மேற்கு கடற்கரையில் இருந்து 75 கடல் மைல் தொலைவிலும், சீனாவில் இருந்து 630 கடல் மைல் தொலைவிலும் இந்த மணல் திட்டு அமைந்துள்ளது. ஆண்டுக்கு 3 டிரில்லியன் டால மதிப்புள்ள வர்த்தகம் நடைபெறும் மிகப்பெரிய கப்பல் போக்குவரத்து பாதையாக தென் சீனக் கடல் உள்ளது. தென் சீனக் கடலில் பிலிப்பைன்ஸ், புரூனே, மலேசியா, தைவான் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகள் தங்களுடையவை என்று கூறும் பகுதிகள் அனைத்தையும் சீனா உரிமை கோருகிறது. சபீனா மணல் திட்டில் இருந்து திரும்பிச் செல்லுமாறு பிலிப்பைன்ஸை சீனாவின் கடலோரக் காவல்படை எச்சரித்துள்ளது. அதேநேரத்தில், "அனைத்து ஆத்திரமூட்டல், தொல்லை மற்றும் அத்துமீறல் செயல்களையும் முறியடிப்போம்" என்று சீனா கூறியுள்ளது. சீனாவுக்கு அமெரிக்கா கண்டனம் "சீன கடலோரக் காவல்படையின் துன்புறுத்தல், கடும் நடவடிக்கைகள் இருந்த போதிலும்", தெரேசா மக்பனுவா எனும் தங்களது கப்பலை அங்கிருந்து நகர்த்தப் போவதில்லை என்று பிலிப்பைன்ஸ் கடலோரக் காவல்படை தெரிவித்துள்ளது. இந்த மோதலில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. ஆனால் சீனக் கப்பலால் "பல முறை" தாக்கப்பட்ட பின்னர், 97 மீட்டர் (318 அடி) நீளமுள்ள தெரேசா மக்பனுவா கப்பலில் சேதம் ஏற்பட்டதாக, பிலிப்பைன்ஸ் கடலோர காவல்படை உயரதிகாரி ஜே டாரியேலா கூறியுள்ளார். பட மூலாதாரம்,PHILLIPINES COAST GUARD படக்குறிப்பு, தங்கள் நாட்டு கப்பலை மோதியதாக சீனா - பிலிப்பைன்ஸ் ஆகிய இரு நாடுகளும் பரஸ்பரம் குற்றம்சாட்டியுள்ளன பிலிப்பைன்ஸுக்கான அமெரிக்க தூதர் மேரிகே எல் கார்ல்சன், சீனாவின் ஆபத்தான நடவடிக்கைகள் என்று இதனை விமர்சித்தார். "[பிலிப்பைன்ஸ்] பொருளாதார தனியுரிமை பகுதிக்குள் (EEZ) சட்டப்பூர்வமான செயல்பாடுகளை நடத்தும் போது, தெரேசா மக்பனுவா கப்பலை வேண்டுமென்றே தாக்கியது உட்பட சர்வதேச சட்டங்களை மீறும் சீனாவின் செயல்களை அமெரிக்கா கண்டிக்கிறது" என அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். “சர்வதேச சட்டத்தை நிலைநிறுத்துவதில் நாங்கள் பிலிப்பைன்ஸுடன் துணை நிற்கிறோம்.” என்று அவர் கூறியுள்ளார். மோதல்களை தணிக்க முயற்சி அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு பிலிப்பைன்ஸ் மற்றும் அதன் நட்பு நாடான அமெரிக்கா மீது சீனா பலமுறை குற்றம்சாட்டி வருகிறது. கடந்த வாரம், சீன பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர், பிலிப்பைன்ஸ் “பொறுப்பற்ற தாக்குதல்களை தூண்ட” அமெரிக்கா தைரியமளிப்பதாக கூறினார். இந்த சர்ச்சை தென் சீனக் கடலில் ஒரு பெரிய மோதலை ஏற்படுத்தக் கூடும் என்று இவ்விவகாரத்தை உற்றுநோக்குபவர்கள் கவலைப்படுகிறார்கள். பட மூலாதாரம்,PHILLIPINES COAST GUARD படக்குறிப்பு,சீனாவுக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது இவ்விவகாரத்தில் ஐ.நா சபை மத்தியஸ்தம் செய்வதற்கான பிலிப்பைன்ஸின் முந்தைய முயற்சியின் போது, ஒன்பது வரிக் கோடு (தென்சீனக் கடலின் பெரும் பகுதியை உரிமை கோர சீனா பயன்படுத்தும் எல்லைக் கோடு) பகுதியில் சீனாவுக்கு எவ்வித சட்டபூர்வமான உரிமையும் இல்லை என ஐ.நா உத்தரவிட்டது. ஆனால், இந்த உத்தரவை சீனா ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டது. ஆனாலும், சமீப வாரங்களில் இரு நாடுகளும் கடலில் உடனடி மோதல்களைத் தணிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தன. கடந்த மாதம் அவ்விரு நாடுகளும் பிலிப்பைன்ஸ் இரண்டாவது தாமஸ் மணல் திட்டில் உணவு, பொருட்கள் மற்றும் பணியாளர்களுடன் மறுசீரமைப்புப் பணிகளை அனுமதிக்க ஒப்புக்கொண்டன. https://www.bbc.com/tamil/articles/cvg54zy1p4do
-
பேரரசர் அசோகர்: அரியணை ஆசையில் சகோதரர்களையே கொன்றவர் பௌத்தம் தழுவி அகிம்சைக்கு மாறியது எப்படி?
பட மூலாதாரம்,MAPLE PRESS கட்டுரை தகவல் எழுதியவர், ரெஹான் ஃபசல் பதவி, பிபிசி ஹிந்தி 1 செப்டெம்பர் 2024, 07:19 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் தனது 40 ஆண்டுகால ஆட்சியில் ஏறக்குறைய முழு இந்திய துணைக் கண்டத்தையும் ஒரே அரசின் கீழ் இணைத்தவர் என்று அசோகரை பற்றிப் பெருமையாகச் சொல்லப்படுகிறது. தமிழ்நாடு, கேரளாவை தவிர இன்றைய முழு இந்தியா, இன்றைய பாகிஸ்தான், மற்றும் குறைந்தபட்சம் ஆப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதி, அசோகரின் ஆட்சியின் கீழ் இருந்தது. அதுமட்டுமின்றி, அந்த நேரத்தில் மிகக் குறைவான எண்ணிக்கையில் பின்பற்றுபவர்களைக் கொண்டிருந்த ஒரு மதத்தை உலகம் முழுவதும் பரப்புவதில் அவர் வெற்றி பெற்றார். அவர் அறிமுகப்படுத்திய தார்மீகக் கருத்துகளின் தாக்கம் இன்றுவரை காணக் கிடைக்கிறது. சார்ல்ஸ் எலன் தனது 'Ashoka: The Search for India's Lost Emperor' என்ற நூலில், "இந்தியாவின் ஸ்தாபகத் தந்தை என்று அசோகரை நிச்சயமாக அழைக்கலாம்," என்று எழுதுகிறார். இந்தியாவை ஒரு தேசமாக இணைத்த முதல் ஆட்சியாளர் அவர். அது மட்டுமின்றி மகாத்மா காந்திக்கு முன்பே அஹிம்சை கொள்கையைப் பின்பற்றத் தொடங்கியவர் அவர். உலகில் மக்கள் நல அரசை நிறுவிய முதல் அரசரும் இவரே. அசோகர் பலருக்கு வெவ்வேறு வடிவங்களில் தோற்றமளிக்கிறார். போரின் பயங்கரத்தைக் கண்டு வெற்றியைக் கைவிட்ட வெற்றியாளர் அவர். ஒரு முனிவர் என்றும் அவரைச் சொல்லலாம். முனிவர் மற்றும் சக்கரவர்த்தியின் அற்புதமான கலவை என்றும் அவரை வர்ணிக்கலாம். மனித விழுமியங்களை ஆழமாகப் புரிந்து கொண்ட அரசியல் மேதை அவர். நவீன இந்தியாவின் பிரதானமான வரலாற்று ஆசிரியரான ரொமிலா தாப்பர், தனது 'அசோகா அண்ட் தி டிக்ளைன் ஆஃப் மெளரியாஸ்’ என்ற நூலில், ”அசோகர் தனது காலத்தைப் பல வழிகளில் பிரதிநிதித்துவப்படுத்தினார். அவர், தான் வாழ்ந்த காலத்தை நன்கு புரிந்துகொண்டு, இந்திய சூழலில் அதன் தேவைகளை நிறைவேற்றியதுதான் அவரது செய்த மிகப்பெரிய சாதனை,” என்று குறிப்பிட்டுள்ளார். மௌரிய வம்சத்தின் மூன்றாவது ஆட்சியாளர் அசோகப் பேரரசரின் கதை அவரது தாத்தா சந்திரகுப்த மௌரியர் மற்றும் மகதத்தின் சிம்மாசனத்தில் அவரை அமர்த்திய சாணக்கியர் ஆகியோரிடம் இருந்து துவங்குகிறது. அசோகர், சந்திரகுப்த மௌரியரின் பேரன். கி.மு.323இல் அலெக்சாண்டர் இறந்த ஓரிரு வருடங்களில், சிந்து நதியின் கிழக்கே கிரேக்க ஆதிக்கம் முடிவுக்கு வரத் தொடங்கியது. சாணக்கியரின் வழிகாட்டுதலின் கீழ், சந்திரகுப்த மௌரியர், தன நந்தனுக்கு எதிராகப் போரிட்டு முதலில் தோல்வியைத் தழுவினார். ஆனால், பின்னர் அவரைத் தோற்கடித்து, வட இந்தியாவின் ஆட்சியாளரானார். சந்திரகுப்த மௌரியரின் 24 ஆண்டுக்கால ஆட்சியில், அவரது படை வெல்ல முடியாததாக இருந்தது. கி.மு.305இல், பாபிலோன் மற்றும் பெர்ஷியாவின் புதிய ஆட்சியாளரான செலூகஸ், அலெக்சாண்டர் இழந்த நிலங்களைக் கைப்பற்ற முயன்றார். அப்போது அவர் சந்திரகுப்த மௌரியரால் தோற்கடிக்கப்பட்டார். சந்திரகுப்த மௌரியருக்கு பிறகு பிந்துசாரர் மகதத்தின் அரசரானார். சாணக்கியர், பிந்துசாரருக்கும் வழிகாட்டி ஆனார். சாணக்கியரின் பேரனும் சீடருமான ராதாகுப்தா, அசோகர் மகதத்தின் மன்னராவதில் முக்கியப் பங்கு வகித்தார். ஏ.எல்.பாஷாம் தனது 'தி வொண்டர் தட் வாஸ் இந்தியா' என்ற புத்தகத்தில், "பிந்துசாரரின் மகன் சுசிமா அவரது அரியணைக்கு வாரிசாக இருந்தார். பிந்துசாரருக்குப் பிறகு அவர் மகதத்தின் ராஜாவாக வருவார் என்று நம்பப்பட்டது," என்று குறிப்பிடுகிறார். "பிந்துசாரரின் வாரிசுகளின் பட்டியலில் அசோகரின் பெயர் மிகவும் கீழே இருந்தது. அவர் உயரம் குறைந்தவர். பருமனாகவும் இருந்தார். அவருக்குத் தோல் நோய் இருந்தது. அதனால் அவர் பார்க்க அழகாக இருக்க மாட்டார்,” என்கிறார் பாஷாம். "ஒருவேளை அவரது தந்தை அவரிடமிருந்து விலகி இருந்ததற்கும், சாத்தியமான வாரிசுகள் பட்டியலில் இருந்து அவர் பெயர் நீக்கப்பட்டதற்கும் இதுவே காரணமாக இருக்கலாம்," என்றும் அவர் தனது நூலில் குறிப்பிடுகிறார். தொழிலதிபரின் மகளைக் காதலித்த அசோகர் படக்குறிப்பு,ரொமிலா தாப்பர் தலைநகர் பாடலிபுத்திரத்தில் இருந்து தொலைவில் உள்ள தக்ஷசிலாவில் கிளர்ச்சி ஏற்பட்டபோது அதை நசுக்க அவரது தந்தை பிந்துசாரர் அசோகரை அங்கு அனுப்பினார். அதன் பிறகு மத்திய இந்தியாவில் உள்ள உஜ்ஜயினிக்கு, பேரரசரின் பிரதிநிதியாக அவர் அனுப்பப்பட்டார். அங்கு விதிஷாவில் உள்ளூர் தொழிலதிபரின் அழகான மகள் மகாதேவி சாக்ய குமாரி மீது அசோகர் காதல் வயப்பட்டார். ரொமிலா தாப்பர் தனது 'அசோகா அண்ட் தி டிக்ளைன் ஆஃப் மௌரியாஸ்’ புத்தகத்தில் "தீபவம்சத்தில் இந்தத் திருமணத்தைப் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. ஆனால், அசோகருக்கு மகிந்தா என்ற மகனும் சங்கமித்தா என்ற மகளும் பிறந்தனர். பின்னர், அவர்கள் பௌத்த மதத்தைப் பரப்புவதற்காக இலங்கைக்கு அனுப்பப்பட்டனர்," என்று குறிப்பிடுகிறார். "அசோகர் சக்கரவர்த்தி ஆனபோது மகாதேவி பாடலிபுத்திரத்திற்கு செல்ல விரும்பவில்லை. அவர் விதிஷாவிலேயே தங்க விரும்பினார். மகாதேவி ஒரு பௌத்தர் என்றும், விதிஷா அப்போது புத்த மதத்தின் மையமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது," என்று குறிப்பிடுகிறார் தாப்பர். "இரண்டாவதாக, அவர் ஒரு தொழிலதிபரின் மகள். அவரது சமூக அந்தஸ்து அரச குடும்பத்தினருக்கு ஈடானதாக இருக்கவில்லை," என்றும் அவர் குறிப்பிடுகிறார். சகோதரர்களைக் கொன்று அரியணையைக் கைப்பற்றியவர் இந்நிலையில், பிந்துசாரர் அசோகரின் மூத்த சகோதரர் சுசிமாவை தனது வாரிசாகத் தேர்ந்தெடுத்தார். ஆனால் கி.மு.274இல் மற்றொரு கிளர்ச்சி வெடித்தது. இந்த முறை அதைச் சமாளிக்க இளவரசர் சுசிமா அனுப்பப்பட்டார். இந்தக் கலகம் முந்தைய கிளர்ச்சியைவிடத் தீவிரமாக இருந்தது. எனவே இளவரசர் சுசிமா தக்ஷசிலாவில் நீண்ட காலம் தங்க வேண்டியிருந்தது. இதற்கிடையில், மன்னர் பிந்துசாரர் கடுமையாக நோய்வாய்ப்பட்டார். சுசிமாவை திரும்பி வருமாறும், அசோகரை தக்ஷசிலாவுக்கு செல்லுமாறும் அவர் கட்டளையிட்டார். இதற்கிடையில், அசோகரின் ஆதரவாளரான அமைச்சர் ராதா குப்தா தலையிட்டு அரச ஆணையைத் தடுக்க முயன்றார். "தனக்கு உடல்நலம் சரியில்லை என்று அசோகர் நாடகமாடினார். தன்னைத் தற்காலிக மன்னராக அறிவிக்குமாறும் மன்னரிடம் வேண்டினார்,” என்று சார்ல்ஸ் எலன் எழுதுகிறார். இதைக் கேட்ட உடனேயே பிந்துசாரருக்கு வலிப்பு நோய் ஏற்பட்டு அவர் காலமானார். சுசிமா பாடலிபுத்திரத்துக்கு திரும்பியபோது தன் இளைய சகோதரர் அசோகர் அந்த நகரத்தைக் கைப்பற்றியிருப்பதையும், அதன் பிரதான வாயில், கிரேக்கத்தில் இருந்து அழைத்துவரப்பட்ட கூலிப்படையினரால் காவல் காக்கப்படுவதையும் கண்டார். பாடலிபுத்திராவின் கிழக்கு வாசலில் சுசிமா கொல்லப்பட்டது, ஆட்சி அதிகாரத்திற்கான நான்கு ஆண்டுகாலப் போராட்டத்தின் முதல் படி. இந்த நேரத்தில், அசோகர் தனது மற்ற ஒன்றுவிட்ட சகோதரர்கள் 99 பேரையும் கொலை செய்தார். அதன் பிறகுதான் அவர் தன்னை மகதத்தின் மாமன்னராக அறிவித்துக்கொள்ள முடிந்தது. சுனில் கில்னானி, தனது 'இன்கார்னேஷன்ஸ்: இந்தியா இன் ஃபிஃப்டி லைவ்ஸ்' என்ற நூலில், "கொல்லப்பட்ட சகோதரர்களின் எண்ணிக்கை உண்மையில் ஆறு," என்று குறிப்பிடுகிறார். "ஆனால் அரியணைக்கான ரத்தக்களரிப் போராட்டம் பல ஆண்டுகள் தொடர்ந்தது என்பதில் சந்தேகமில்லை. அப்போது அசோகருக்கு 34 வயது," என்றும் அவர் எழுதியுள்ளார். அந்தப்புரப் பெண்களை உயிருடன் எரித்தவர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,அசோகர் காலத்து ஸ்தூபியில் செதுக்கப்பட்டிருக்கும் புடைப்புச் சிற்பங்கள் அசோகர் தனது முடிசூட்டு விழாவை மற்றொரு இளவரசியை திருமணம் செய்துகொண்டு கொண்டாடினார். அசோகரின் அந்தப்புரத்தில் பல பெண்கள் இருந்தனர். ஆனால் அவர்களில் பலர் அசோகரை அழகற்றவர் என்று கருதினர். அசோகர் அவர்களை உயிருடன் எரித்ததாகக் கூறப்படுகிறது. பாடலிபுத்திரத்தின் சிம்மாசனத்தில் அமர்ந்த பிறகு அசோகர் விதிஷாவில் விட்டுச் சென்ற தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளையும் தன்னிடம் அழைத்துக்கொண்டார். அசோகருக்கு குறைந்தது ஆறு மனைவிகள் இருந்தனர். அலகாபாத்தில் நிறுவப்பட்ட ஒரு கல்வெட்டு, ‘அசோகரின் இரண்டாவது மனைவி காருவகி’ என்று குறிப்பிடுகிறது. அசோகரின் முக்கிய மனைவி அசந்திமித்ரா, அசோகருடைய ஆட்சியின் 13வது ஆண்டில் அவர் காலமானார். அசோகர் கி.மு.265இல் பௌத்த மதத்தைத் தழுவினார். இருப்பினும் முதல் ஒன்றரை ஆண்டுகளில் இந்த மதத்தைத் தான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்பதை அவரே ஒப்புக்கொண்டார். அவர் பௌத்தராக மாறிய இரண்டு ஆண்டுகளில் அவரது மகன் மகிந்தா ‘பௌத்த பிக்குவாகவும்’ மகள் சங்கமித்தா, ‘துறவியாகவும்’ ஆனார்கள். கலிங்கப் போரின் ரத்தக்களரி அசோகர் ஆங்கிலேயர்களுக்கு முன்பே இந்தியாவின் மிகப்பெரிய பகுதியை ஆண்டவர் என்று கூறப்படுகிறது. அசோகர் அரியணை ஏறிய நேரத்தில், ரோம் மற்றும் கார்தேஜ் இடையே முதல் பியூனிக் போர் நடந்து கொண்டிருந்தது. பெர்ஷியாவில் ஒரு ரத்தக்களரி மோதல் நடந்து கொண்டிருந்தது. சீனப் பேரரசர், ’சீனப் பெருஞ்சுவரை’ கட்டிக் கொண்டிருந்தார். கி.மு.362இல் அசோகர் கலிங்கத்தை எதிர்த்துப் போரிட்டார். இந்தப் போரில் ஒரு லட்சம் பேர் கொல்லப்பட்டதுடன், போருக்குப் பிறகு ஏற்பட்ட சூழ்நிலைகள் காரணமாக மேலும் ஒரு லட்சம் பேர் உயிரிழந்தனர். ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமான மக்கள் சிறையில் அடைக்கப்பட்டனர், அல்லது நாடு கடத்தப்பட்டனர். கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானோர் பொதுமக்கள். பாட்ரிக் ஒலிவெல் எழுதிய 'Ashoka: Portrait of a Philosopher King' என்ற நூல் சமீபத்தில் பிரசுரமானது. "கலிங்கத்தின் அப்போதைய மக்கள் தொகை 9.75 லட்சம் என்று வரலாற்று ஆசிரியர் சுமித் குஹா குறிப்பிடுகிறார். மக்கள் தொகையை 10 லட்சம் என்று வைத்துக்கொண்டாலும், இறந்தவர்கள் எண்ணிக்கை மொத்த மக்கள் தொகையில் 20%. மேலும், சிறையில் அடைக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையையும் சேர்த்துக் கொண்டால், மொத்த மக்கள் தொகையில் 35% பேர் இந்தப் போரினால் பாதிக்கப்பட்டனர். இந்தக் கண்ணோட்டத்தில் பார்த்தால் இதை ‘மாபெரும் அழித்தொழிப்பு’ என்று சொல்வது தவறாக இருக்காது,” என்று இந்தப் புத்தகத்தில் அவர் குறிப்பிடுகிறார். புத்தரின் சீடர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,அசோகரால் நியமிக்கப்பட்ட சாஞ்சி ஸ்தூபி. இது பௌத்த மதத்தின் மிக முக்கியமான இடமாகக் கருதப்படுகிறது இந்த வெற்றி அசோகரின் சாம்ராஜ்யத்தை வங்காள விரிகுடா வரை விரிவுபடுத்தியது. மேலும் அவர் தொடர்ந்து 37 ஆண்டுகள் அப்பகுதி மீது ஆதிக்கம் செலுத்தினார். ஆனால் மாபெரும் ரத்தக்களரிக்குப் பிறகு கிடைத்த இந்த வெற்றி அசோகரின் மனசாட்சியை உலுக்கிவிட்டது. அவர் அதற்காகப் பகிரங்கமாக வருத்தம் தெரிவித்தார். அவரது வாழ்க்கையில் பெரிய மாற்றம் ஏற்பட்டது. இந்தியாவில் அந்த நேரத்தில் புதிதாக இருந்த கௌதம புத்தரின் போதனைகளை அசோகர் ஏற்றுக்கொண்டார். அசோகர் காலத்தில் இந்திய சமூகத்தில் இருந்த பன்முகத்தன்மை, அதற்கு முன் எப்போதும் இருந்ததில்லை. இத்தகைய பன்முகத்தன்மை கொண்ட சமூகத்தை ஒன்றாக வைத்திருக்க, போதுமான நெகிழ்வுடன் கூடிய உலகளாவிய கண்ணோட்டம் தேவைப்பட்டது. "கலிங்கப் போர், பெயரளவிற்கு பௌத்தராக இருந்த அசோகரை ஒரு உண்மையான பௌத்தராக மாற்றியது. அன்றிலிருந்து அசோகச் சக்ரவர்த்தி புத்தரின் போதனைகளின்படி ஒழுக்க விழுமியங்களைச் சுற்றித் தனது ஆட்சியை வடிவமைத்தார்," என்று சார்லஸ் எலன் எழுதுகிறார். "ஒரு நல்ல ஆட்சியாளராக அசோகர் மக்களுக்குத் தன்னை அர்ப்பணித்துக்க்கொண்டார். ஆனால் தேர்ந்தெடுக்கப்பட்ட சிலர் மட்டுமே அவர் பேசும் வார்த்தைகளைக் கேட்க முடிந்தது. தான் சொல்வதை உலகமே கேட்கவேண்டும் என்று அசோகர் விரும்பினார். என்றென்றும் நிலைத்திருக்கக் கூடிய எழுத்து மொழியில் தன்னை வெளிப்படுத்த அவர் முன்முயற்சி எடுத்தார்," என்று அவர் குறிப்பிடுகிறார். மக்கள் பேசும் மொழியில் செய்தி அவர் தனது செய்திகளைத் தன்னுடைய பேரரசு முழுவதும் பேசப்பட்ட பிராகிருத மொழியில் எழுதினார். "அசோகரின் தகவல் தொடர்பு பாணி மௌரிய பேரரசர்களிடையே தனித்துவமானது," என்று சுனில் கில்னானி எழுதுகிறார். "கல் தூண்கள் அல்லது கல் தொகுதிகள் இருக்கும் இடங்களில் தன்னுடைய வார்த்தைகள் நீண்ட காலம் இருக்கும்படியாகப் பொறிக்கப்பட வேண்டும் என்று தனது ஏழாவது அரசாணையில் அசோகர் எழுதியுள்ளார். ”என் மகன் அல்லது பேரன் ஆட்சி செய்யும் வரை, அல்லது சூரியனும் சந்திரனும் பிரகாசிக்கும் வரை, மக்கள் இந்த வார்த்தைகளைப் படிக்க முடியும். பெரும்பாலான கல்வெட்டுகளில் அசோகர் மூன்றாம் நபராக அல்லது 'அவர்' என்று குறிப்பிடப்பட்டுள்ளார்.” “ஆனால், சில பாறைக் கல்வெட்டுகளில், 'நான்' என்றும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்தப் பாறைக் கல்வெட்டுகளில் உள்ள நபரின் உணர்திறன் பற்றிய பார்வை நமக்கு கிடைக்கிறது," என்கிறார் கில்னானி. அசோகரின் பெரும்பாலான கல்வெட்டுகள் பிராகிருத மொழியின் பிராமி எழுத்துகளில் உள்ளன. சில கல்வெட்டுகள் கிரேக்க மற்றும் அராமிக் எழுத்துகளிலும் கண்டறியப்பட்டுள்ளன. சகிப்புத்தன்மை மற்றும் அகிம்சைக்கு முக்கியத்துவம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,அவர் தனது செய்திகளைத் தன்னுடைய பேரரசு முழுவதும் பேசப்பட்ட பிராகிருத மொழியில் எழுதினார் அசோகர் 'தம்மம்' என்ற கருத்தை உள்வாங்கிப் பின்பற்றத் தொடங்கினார். 'தம்மம்' என்பது ஆன்மீகத் தூய்மை, அல்லது புனிதச் சடங்குகளை அடிப்படையாகக் கொண்டது அல்ல. மாறாக உலக நடத்தையை அடிப்படையாகக் கொண்டது. இந்த சித்தாந்தம் சகிப்புத்தன்மைக்கு ஆதரவாகவும் வன்முறைக்கு எதிராகவும் இருந்தது. "அசோகர் மிகவும் முக்கியத்துவம் கொடுத்த முதல் கொள்கை, பல்வேறு சமயங்களைச் சேர்ந்தவர்களின் சகவாழ்வு ஆகும். அனைவரும் சகவாழ்வு உணர்வுடன் ஒன்றாக வாழக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர் விரும்பினார்," என்று ரொமிலா தாப்பர் குறிப்பிடுகிறார். "நீங்கள் மற்றவர்களின் மத நம்பிக்கைகளை மதிக்க வேண்டும். ஏனென்றால் அப்படி மதிப்பதன் மூலம் மட்டுமே உங்கள் சொந்த மதத்தை நீங்கள் மதிக்க முடியும். இதுதான் தம்மத்தின் அடிப்படைக் கொள்கை. இதற்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது எனக்கு சுவாரஸ்யமாகத் தோன்றுகிறது. அந்தக் காலத்தில் மதப்பிரிவுகளுக்கு இடையே பகைமை அதிகமாக இருந்திருக்க வேண்டும் என்று தோன்றுவதாக," கூறுகிறார் தாப்பர். தம்மத்தின்படி, குடிமக்களின் நலன், அவர்களின் ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சியைப் பற்றிச் சிந்தித்து அந்தத் திசையில் செயல்படுவது ஆட்சியாளரின் கடமை. சாலையோரங்களில் ஆலமரம் அல்லது மாமரங்களை நடுவதும், பயணிகளுக்கு உணவு மற்றும் ஓய்வுக்கான ஏற்பாடுகளைச் செய்வதும் அரசனின் கடமை. அசோகரின் மிகவும் உயரிய எண்ணப்போக்கு 12வது பாறைக் கல்வெட்டு அரசாணையில் பொறிக்கப்பட்டுள்ளது. இதில் மதச் சகிப்புத்தன்மைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. அசோகர் இதை ’பேச்சில் கட்டுப்பாடு’ என்று குறிப்பிடுகிறார். "அதீத பக்தியால் தன் மதத்தைப் போற்றி, பிற மதத்தை விமர்சிப்பவன், தன் மதத்திற்கே கேடு விளைவிப்பவன் ஆவான். ஆகவே பல்வேறு மதத்தினரிடையே நல்லிணக்கம் இருக்க வேண்டும். ஒவ்வொருவரும் பிறருடைய கருத்துகளுக்குச் செவிமடுக்க வேண்டும். அதை மதிக்க வேண்டும்," என்று அந்தப் பாறைக் கல்வெட்டில் கூறப்பட்டுள்ளது. அசோகரின் மரணம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஒரு கல்தூணில் பிராகிருத மொழியில் வடிக்கப்பட்டிருக்கும் விதிகள் அசோகரின் மரணத்திற்குப் பிறகு மௌரியப் பேரரசு வீழ்ச்சியடையத் துவங்கியது. அவரது வாழ்க்கையின் பிற்பகுதியில் அவரது மத நம்பிக்கை உச்சத்தில் இருந்தது. தனது முழு கருவூலத்தையும் காலி செய்யும் அளவிற்கு அவருடைய மதப் பற்று அதிகமானது. அவர் தன்னிடம் இருந்த அனைத்தையும் தானம் செய்தார் என்று புத்த மதக் கதைகள் தெரிவிக்கின்றன. “அசோகர் நோய்வாய்ப்பட்டு மரணப் படுக்கையில் இருந்தபோது தாம் உயிர் பிழைக்க மாட்டோம் என்று அவருக்குத் தெரிந்துவிட்டது. தன்னிடம் இருந்த ரத்தினங்களையும், நகைகளையும் நல்ல காரியங்களுக்காகத் தானம் செய்ய அவர் விரும்பினார். ஆனால் அதற்குள் அவரது அமைச்சர்கள் ஆட்சியில் அமர்ந்துவிட்டனர். அவர் விரும்பிய எதையும் செய்ய அவர்கள் அனுமதிக்கவில்லை,” என்று லி ரோங்ஸி தனது 'தி கிரேட் டாங் டைனஸ்டி ரெக்கார்ட் ஆஃப் தி வெஸ்டர்ன் ரீஜன்ஸ்' என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். அசோகர் கி.மு.232இல் இயற்கை எய்தினார். மௌரிய வம்சத்தின் முடிவு பிருஹத்ரதர், மௌரிய வம்சத்தின் கடைசி அரசர். கி.மு.181-180இல் அவர் தளபதி புஷ்யமித்ரரால் கொல்லப்பட்டார். பின்னர் புஷ்யமித்ரர் சுங்க வம்சத்தை நிறுவினார். மௌரிய வம்சம் மொத்தம் 137 ஆண்டுகள் நீடித்தது. "ஹான் மற்றும் ரோமன் போன்ற பிற ராஜ வம்சங்களுடன் ஒப்பிடும்போது, மௌரிய வம்சம் மிகவும் குறுகிய காலமே இருந்தது. அதன் எழுச்சி சந்திரகுப்த மௌரியரின் வெற்றிகளுடன் தொடங்கியது. அவரது பேரன் அசோகரின் ஆட்சியின்போது அது உச்சத்தை எட்டியது. ஆனால் அதன் பிறகு அது வேகமாக வீழ்ச்சி கண்டது. அசோகரின் மகன்கள் மற்றும் பேரன்கள், தங்கள் தாத்தா மற்றும் கொள்ளுத் தாத்தா போல திறமை கொண்டவர்களாக இருக்கவில்லை. அவர்களுடைய ஆட்சி குறுகிய காலமே இருந்தது. அசோகரின் முழு சாம்ராஜ்யமும் அதன் பல உரிமைதாரர்களிடையே பிரிக்கப்பட்டது,” என்று ரொமிலா தாப்பர் குறிப்பிடுகிறார். தங்கள் அப்பா, தாத்தாவை போல தொலைதூரப் பார்வையும் அவர்களுக்கு இருக்கவில்லை. அசோகரை போல் அவர்கள் கல்வெட்டு எதையும் எழுதவில்லை. சுதந்திர இந்தியாவில் அசோகரின் பாரம்பரியம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்திய மூவர்ணக் கொடியின் நடுவில் அசோக சக்கரத்திற்கு இடம் அளிக்கப்பட்டது அசோகரின் மரணத்திற்குப் பிறகு மௌரியப் பேரரசு வீழ்ச்சியடையத் துவங்கியது. இறுதியில், இந்திய மக்கள் அசோகரை மறந்துவிட்டார்கள் என்றே சொல்லலாம். படிப்படியாக பிராகிருத மொழி மற்றும் பிராமி எழுத்துகளின் பயன்பாடு முடிவுக்கு வந்தது. எனவே, மக்களால் அசோகரின் கல்வெட்டுகளில் எழுதப்பட்ட செய்திகளைப் படிக்க முடியவில்லை. விதியின் விளையாட்டைப் பாருங்கள்… பிரிட்டிஷ் வரலாற்றாசிரியர்களான வில்லியம் ஜோன்ஸ் மற்றும் ஜேம்ஸ் பிரின்செப், 19ஆம் நூற்றாண்டில் அசோகரை மீண்டும் தேடிக் கண்டுபிடித்தார்கள். அவர்கள் பிராமி எழுத்துகளின் அர்த்தத்தை மக்களுக்கு விளக்கினார்கள். இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு 1947ஆம் ஆண்டு ஜூலை மாதம் அரசியல் நிர்ணய சபையில் பேசிய ஜவஹர்லால் நேரு, தேசியக் கொடியின் வடிவமைப்பை இறுதி செய்வதற்கான யோசனையை முன்வைத்தார். இந்திய மூவர்ணக் கொடியின் நடுவில் அசோகரின் தூண்களில் இருந்த சக்கரத்திற்கு இடம் அளிக்கப்பட்டது. ”இந்தக் கொடியில் அசோக சின்னத்தை மட்டும் அல்ல, இந்தியா மட்டுமின்றி உலக வரலாற்றின் முக்கியப் பிரமுகராக இருந்தவரையும் இணைத்திருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்,” என்று நேரு அப்போது குறிப்பிட்டார். அசோகர் இந்திய மக்களுக்கு ஒரு உத்வேகமான ஆளுமையாக இருந்தார். இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு, அசோகருக்கு கிட்டத்தட்ட புதிய நாட்டின் ‘புரவலர் துறவி’ என்ற அந்தஸ்தை வழங்கினார். அசோகரின் நான்கு சிங்கங்கள் இந்திய தபால் தலைகளில் மட்டும் இடம்பெறவில்லை. இந்தியாவின் இந்தத் தேசிய சின்னம் இந்தியர்களின் வாழ்க்கையில் ஒருங்கிணைந்த அடையாளமாகவே மாறிவிட்டது. இது அமைதியான சகவாழ்வின் சின்னமாகவும் உள்ளது. பொது வாழ்வில்கூட கட்டுப்பாடு மற்றும் சுயக்கட்டுப்பாடு என்ற அசோக சக்ரவர்த்தியின் செய்தி இன்று இந்தியர்களுக்கு ஓர் எச்சரிக்கையாகவும் உத்வேகமாகவும் இருக்கிறது. https://www.bbc.com/tamil/articles/c20r3w09lgeo
-
ஜனாதிபதித் தேர்தல் 2024 - செய்திகள்
அடுத்த இரண்டு ஆண்டுகளில் மக்களின் வரிச்சுமை குறைக்கப்படும் - ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 01 SEP, 2024 | 02:12 PM ஏற்றுமதித்துறை பாதிக்காமல் டொலரை 275 ரூபா வரை கொண்டுவர முடியும். வருமானத்தை அதிகரித்துக் கொள்ள நிவாரணம் வழங்கப்படும். உங்களதும், உங்களின் பிள்ளைகளினதும் எதிர்காலத்தை சிந்தித்து வாக்களியுங்கள். சிறுபிள்ளைத்தனமானவர்கள் நாட்டை நிர்வகிக்கத் தகுதியற்றவர்கள் சிறுபிள்ளைத் தனமானவர்களிடம் நாட்டை ஒப்படைத்து, மக்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கிக் கொள்ளக் கூடாது என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். சர்வதேச நாணய நிதியத்துடனும், கடன் வழங்கிய 18 நாடுகளுடனும் செய்து கொண்ட ஒப்பந்தங்களையும், உடன்படிக்கைகளையும் பாதுகாத்து எதிர்வரும் இரண்டு வருடங்களில் வரிகளைக் குறைக்க முடியும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். அத்துடன், ஏற்றுமதித்துறைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் டொலரின் பெறுமதியை 275 ரூபா வரை கொண்டுவர முடியும் என்றும், ஏற்றுமதித் துறையினருடன் பேச்சு நடத்தி, கிரமமாக இந்தப் பணி மேற்கொள்ளப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். எனவே, சஜித்தும் அநுரவும் இன்று மக்களுக்கு அரசியல் வாக்குறுதிகளை வழங்கி வருவதாகவும், பிள்ளைகளினதும், தங்களதும்எதிர்காலத்தைக் கருத்திற் கொண்டு மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி கேட்டுக்கொண்டார். ஜா-எல நகரில் இன்று (30) பிற்பகல் இடம்பெற்ற “இயலும் ஸ்ரீலங்கா” வெற்றிப் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இவ்வாறு தெரிவித்தார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த மக்கள் பேரணியில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டனர். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் உரையாற்றுகையில், ''நெருக்கடியான நேரத்தில் சஜித் பிரேமதாசவிற்கும், அநுரகுமார திஸாநாயக்கவிற்கும் நாட்டைப் பொறுப்பேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டது. அவர்கள் வரவில்லை. நாடும், பொருளாதாரமும் வீழ்ந்துவிட்டது. நாட்டை மீட்க முடியாது என்று அவர்கள் நினைத்தார்கள். ஆனால் நாம் அதனை மீட்டோம். கடினமான தீர்மானங்களை எடுக்க நேரிட்டது. வட் வரியை அதிகரிக்கும் போது இது மிகவும் கடினமான தீர்மானம் என்பதை மக்களுக்கு கூறினோம். எம்மைத் திட்டினார்கள். ஆனால் மக்கள் பொறுத்துக் கொண்டனர். அது எனக்குப்போதும். இந்த கடினமான தீர்மானங்களை எடுத்தால் பொருளாதாரத்தை மீட்க முடியும் என்பதை அறிந்திருந்தோம். பொருளாதாரம் வலுப்படும் போது ரூபா வலுப்பெறும். ரூபா வலுப்பெறும் போது உங்களுக்கு நிவாரணம் கிடைக்கும். இந்தக் காலத்தில் எடுத்த கடினமான தீர்மானங்களை எடுத்ததால் நாம் மீண்டு வந்தோம். இதனால் மக்களுக்கு அஸ்வெசும மூலம் நிவாரணம் வழங்க முடிந்தது. இந்த வருடம் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க முடிந்தது. இன்னும் எங்களிடம் பணம் இருப்பதால் வாழ்க்கைச் செலவு கொடுப்பனவை 25,000 ரூபாவாக வழங்கவும் தீர்மானித்துள்ளோம். அத்துடன் அடிப்படைச் சம்பளத்தை 55,000 ரூபாவாக நிர்ணயிக்கவும் தீர்மானித்துள்ளோம். பொருளாதாரம் வலுப்பெற்றுவருவதால் இவற்றை செய்ய முடிகின்றது. இதனை முன்னெடுத்துச் செல்ல ரூபாவை மேலும் வலுப்படுத்த வேண்டும். ரூபா வலுபெறும்போது எங்களுக்கு அதிகமாக பொருட்களைக் கொள்வனவு செய்ய முடியும். டொலரின் பெறுமதியை 275 ரூபா வரை கொண்டுவர முடியும். இதனைவிட குறைத்தால் ஏற்றுமதி துறையினருடன் நாம் பேச்சு நடத்த வேண்டும். இதனைக் கிரமாக குறைக்குமாறு சிலர் கூறுகின்றனர். தங்களுக்கு பிரச்சினை இல்லை என்று ஏனையோர் கூறுகின்றனர். ஏற்றுமதித்துறை பாதிக்காத வகையில் இதனை செய்ய வேண்டும். இவற்றையும் பாதுகாத்துக் கொண்டு நாம் முன்நோக்கிச் செல்ல வேண்டும். விவசாயத்தையும், மீன்பிடித்துறையும் மேம்படுத்த நிவாரணம் வழங்குவோம். நாட்டில் பிரச்சினை இருந்தால் நாம் பொருட்களின் விலையைக் குறைப்போம் என்று சிலர் கூறுகின்றனர். நிவாரணம் வழங்குவதாக கூறுகின்றனர். நான் அவ்வாறு கூறவில்லை. நாம் நிவாரணம் வழங்குவோம். அந்த நிவாரணங்கள் மூலம் உங்கள் வருமானத்தை அதிகரித்துக்கொள்ள வேண்டும். உற்பத்தியை அதிகரிக்கவே நிவாரணம் வழங்குவோம். இவ்வாறு நாட்டை முன்நோக்கி கொண்டுசெல்ல வேண்டும். என்ன செய்ய வேண்டும் என்பதை நீங்கள் தீர்மானிக்க வேண்டும். சாதித்துக் காட்டியவர்கள் என்னுடன் இருக்கின்றனர். முடியாது என்றவர்கள் எதிரணியில் இருக்கின்றனர். அவர்கள் எங்களைத் திட்டுகின்றனர். வருமானத்தை அதிகரிப்பதைப் போலவே தொழில் வாய்ப்புகளையும் உருவாக்க வேண்டும். எமது திட்டத்தின்படி ஒரு லட்சம் சுய தொழில்வாய்ப்புக்களை உருவாக்குவோம். பணத்தைப் பயன்படுத்தி பணத்தை சம்பாதிக்கும் வழியை உங்களுக்கு ஏற்படுத்தித் தருவோம். எங்களுக்கு சிறந்த திட்டமொன்று இருக்கிறது. ஏனையோரின் வேலைத் திட்டத்தையும் ஆராய்ந்து பாருங்கள். 21ஆம் திகதி தேர்தல் முடிவுகளின்படி, 22ஆம் திகதி முதல் இந்த வேலைத் திட்டங்களை ஆரம்பிக்கத் தயாராக இருக்கிறேன். அதன்பின்னர் நிறுத்த முடியாது. நான் பணியாற்ற ஆரம்பித்த பின்னர் எனது அமைச்சர்கள் இரவு பகல் பாராது பணியாற்ற வேண்டும். வரி வலையில் சிக்காத பலர் இருக்கின்றனர். அவர்கள் உள்வாங்கப்படுவார்கள். அதன்பின்னர், வரிகளைக் குறைக்க முடியும். அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரித்த பின்னர், வரிகளைக் குறைக்க முடியும். அடுத்த இரண்டு வருடங்களில் வரிச் சுமை குறைக்க முடியும். இந்த நாட்டின் கல்வித்துறையை மேம்படுத்த வேண்டும். டிஜிட்டல் மயப்படுத்த வேண்டும். ஆனால் இவற்றை செய்ய 5 - 10 வருடங்கள் செல்லும். நான் பொய்களைக் கூற தயார் இல்லை. தொலைக்காட்சியில் சஜித் பிரேமதாச கதைப்பதைப் பார்த்தேன். 10 ஆயிரம் பாடசாலைகளுக்கு அவர் ஸ்மார்ட் வகுப்பறைகளைக் கொண்டுவருவதாக கூறுகிறார். உலகில் உள்ள 10 ஆயிரம் கோடிஸ்வரர்களை சந்தித்து ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பாடசாலையை பொறுப்புக் கொடுப்பேன் என்கிறார். ருமேனியாவில் உள்ள கோடீஸ்வரர் ராகமயில் உள்ள பாடசாலையைப் பொறுப்பேற்பாரா என்று கேட்க விரும்புகிறேன். வீழ்ந்துகிடக்கும் ஆர்ஜன்டீனவில் உள்ள கோடிஸ்வரர் ஒருவர் இங்குள்ள பாடசாலையொன்றை பொறுப்பேற்பாரா? இவற்றை செய்ய முடியுமா? 10 ஆயிரம் பாடசாலைகளில் எத்தனை வகுப்பறைகள் இருக்கின்றன. ஒரு இலட்சம் வகுப்பறைகள் என்று வைத்துக் கொண்டால் கணக்கிட்டுப் பாருங்கள். ஒரு ஸ்மார்ட் வகுப்பறைக்கு சுமார் 20 லட்சம் ரூபாசெலவாகும். இதனை ஒருஈலட்சத்தால் பெருக்கி பாருங்கள். சஜித் பிரேமதாச சொன்னவுடன் உலகில் உள்ள பணக்காரர்கள் இங்கு படையெடுப்பார்கள் என்று அவர் நினைத்துக் கொண்டிருக்கிறார். இவ்வாறான சிறுபிள்ளைத் தனமானவர்களுக்கு வாக்களிக்க முடியுமா? தூதரங்கள் ஊடாக இவற்றைக் கொண்டுவருவதாகக் கூறுகிறார். இல்லையெனில் தூதுவர்களை பதவி விலக்குவதாக கூறுகிறார். எங்களுக்கு 50 தூதரகங்கள்கூட இல்லை. இவ்வாறான நபர்களிடம் எப்படி நாட்டை நிர்வகிக்க முடியும். 2022ஆம் ஆண்டு ஏன் நாட்டைப் பொறுப்பேற்காது தப்பியோடியது ஏன் என்று தற்போது தெரிகிறது. அதனால் யார் உண்மையைப் பேசுகிறார்கள். யார் செயல்கள் மூலம் நிருபித்துள்ளார்கள் என்பதைப் பாருங்கள். இது எனது எதிர்காலம் அல்ல. இது உங்களின் எதிர்காலம். காலையில், எழுந்து வரிகளுக்குச் செல்வதா, நடக்கச் செல்வதா என்பதை தீர்மானியுங்கள். உரிய நேரத்தில் மருந்துகளை எடுப்பதா, மருந்துகள் இன்றி மரணிப்பதா என்பதை தீர்மானியுங்கள். மீண்டும் அந்த யுகத்திற்குச் செல்வதா என்பதை மட்டுமே கேட்கிறேன். எனவே, உங்களின் எதிர்காலம் குறித்தும், உங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் குறித்தும் சிந்தியுங்கள். என்னிடம் நாட்டை ஒப்படையுங்கள். நான் சிறந்த எதிர்காலத்தை உங்களுக்கு வழங்குவேன். எனவே, செம்டம்பர் 21ஆம் திகதி கேஸ் சிலிண்டர் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.''என்றார். முன்னாள் அமைச்சர் ரமேஷ் பத்திரன; அன்று நாட்டைப் பொறுப்பேற்ற கோரிய போது சஜித் பிரேமதாச மறுத்துவிட்டார். இந்த நாட்டை நெருக்கடியில் இருந்து மீட்க முடியாது என்றும், ஏதாவது அதிசயம் நடந்தால் மட்டுமே நாட்டைக் காப்பற்ற முடியும் என்றும் சஜித் பிரேமதாச அணியில் இருக்கும் பொருளாதார நிபுணர் என்று கூறும் ஹர்ஷ டி சில்வா கூறியிருந்தார். ஆனால் அந்த அதிசயத்தை ரணில் விக்ரமசிங்க நிகழ்த்திக் காட்டினார். சிவில் யுத்தத்தை விட பொருளாதார யுத்தம் கொடுரமானது. இரண்டு, மூன்று வாரங்களில் மக்கள் துன்பப்பட்டனர். ஒரு மாத காலத்திற்குள் நாடு மிகப் பெரிய நெருக்கடியை எதிர்கொண்டது. ஆனால் மிகக் குறுகிய காலத்திற்குள் ரணில் விக்ரமசிங்க இந்த நாட்டை மீட்டெடுத்துள்ளார். நாம் தொடர்ந்து இந்தப் பாதையில் பயணிக்க வேண்டும். நாட்டை மீட்டெடுத்த ரணில் விக்ரமசிங்கவை எந்த வகையிலும் புறக்கணிக்க முடியாது. அதனால் தான் பொது வேட்பாளராக அவரை ஆதரிக்கத் தீர்மானித்தோம். வெனிசுவேலாவில் எண்ணெய் வளம் இருந்தும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி திண்டாடுகிறது. லெபனானில் கடந்த பல வருடங்களாக பொருளாதார நெருக்கடி இருக்கிறது. நான்கு மணி நேரம் மட்டுமே மின்சாரம் இருக்கிறது. கிரேக்கம் கடந்த 10 வருடங்களில் 21 அரசாங்கங்கள் மாறியுள்ளன. புதிய அரசாங்கம் வந்து தோல்வியடையும் போது மக்கள் விரட்டியடிக்கின்றனர். அவர்களுக்கு பொருளாதாரத்தை கையாள்வதில் பாரிய பிரச்சினை இருக்கிறது. எத்தியோப்பியா, சிம்பாப்வே போன்ற நாடுகளிலும் இந்த நிலையே இருக்கிறது. இவ்வாறு நெருக்கடியில் சிக்கிய எந்தவொரு நாடும் மீண்டு வரவில்லை. இலங்கை மட்டுமே இந்த நெருக்கடியில் இருந்து மிகக் குறுகிய காலத்தில் மீண்டுவந்துள்ளது.. அதற்கு ரணில் விக்ரமசிங்கவே காரணமாகும். இதற்கு மனசாட்சியுள்ள மக்களாக அவருக்கு நன்றி கடனாக வேறொரு தீர்மானத்தை எடுக்க முடியாது. வரும் 21ஆம் திகதி அவரது சின்னமான கேஸ் சிலிண்டருக்கு வாக்களித்து அடுத்த ஐந்து வருடங்கள் அவரிடம் நாட்டை ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.'' என்றார். அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த: 'அன்று ஆட்சியைப் பொறுப்பேற்க யாரும் முன்வரவில்லை. அன்று ரணில் விக்ரமசிங்கவின் வீடும் தீயிட்டு எரிக்கப்பட்டது. ஆனால் அவர் இந்த நாட்டைப் பொறுப்பேற்க முன்வந்தார். அவருக்கு பதவியேற்றக் கூட ஒரு இடம் இருக்கவில்லை. இன்று இரண்டு வருடங்களில் பொருளாதாரத்தை மீட்டுள்ளார். அன்று கட்டுக்கடங்காமல் உயர்ந்து சென்ற பொருட்களின் விலைகளைக் கட்டுப்படுத்தினார். அன்றிருந்த விலைகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது இன்று விலைகள் குறைந்துள்ளன. வெளிநாட்டு அந்நியச் செலாவணி கையிருப்பை அதிகரித்துள்ளார். ஆனால் இன்று ஆட்சிக்கு வர முயற்சிக்கும் கட்சிகளின் தொழிற்சங்கங்கள் இந்த முயற்சிகளை தோற்கடிக்க முயற்சித்தன. பல்கலைக்கழக மாணவர்களை வீதிக்கு அழைத்து வந்தனர். ஆசிரியர்களை சுகயீன லீவு போராட்டம் நடத்த அழுத்தம் கொடுத்தனர். சம்பள முரண்பாடுகளை முன்வைத்து வீதிகளுக்கு வந்து போராட்டம் நடத்தினார்கள். இன்று அவர்கள் வெளியிட்டுள்ள தேர்தல் கொள்கை அறிக்கையில் குறிப்பிடவில்லை. ரணில் விக்ரமசிங்க இதற்கான தீர்வை வழங்கியுள்ளார். அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும் என்று தேர்தல் கொள்கை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளோம். அதனால் சம்பள முரண்பாட்டைத் தீர்த்து, சம்பளம் அதிகரிப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு தபால் மூலம் வாக்களிக்கவுள்ள அரச ஊழியர்களிடம் கேட்டுக்கொள்கிறேன். அத்துடன் செப்டம்பர் 21ஆம் திகதி சிலிண்டர் சின்னத்திற்கு வாக்களித்து சம்பள அதிகரிப்பை உறுதிசெய்துகொள்வதுடன் வரி குறைப்பையும் உறுதி செய்து மக்கள் தங்களின் வாழ்க்கை மேலும் வளப்படுத்திக் கொள்ள வேண்டும்.'' என்றார். முன்னாள் ஹரீன் பெர்னாண்டோ: ''இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் மும்முனைப் போட்டி இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இம்முறை, நாட்டை காப்பாற்றிய தலைவருக்கும், தன் தலையைக் காத்துக் கொண்ட தலைவர்களுக்கும் இடையேதான் இம்முறை போட்டியிருக்கிறது. அன்று மக்கள் அனைத்திற்கும் அல்லாடிக் கொண்டிருந்தனர். நல்ல வாழ்க்கைத் தரத்தைக் கொண்டிருந்தவர்கள் கூட இவ்வாறு அல்லாடிக் கொண்டிருந்தனர். அதனால் எதிர்வரும் 21ஆம் திகதி நடக்கும் தேர்தல் நாட்டைக் காப்பற்றிய தலைவருக்கும், தங்களைக் காப்பாற்றிக் கொண்ட தலைவர்களுக்கும் இடையிலான போட்டி என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். எந்தக் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும், எந்த இடத்தில் இருந்தாலும் இம்முறை ரணில் விக்ரமசிங்கவிற்கே வாக்களிக்க வேண்டும். ஜே.வி.பி வெற்றிக் கனவில் இருக்கின்றனர். ஆனால் அநுர குமார அமைச்சரவையில் யார் இருப்பார்கள்? நிதியமைச்சர் யார்? கல்வி அமைச்சர் யார்? என்பதை சிந்தித்துப் பாருங்கள். அன்று இருந்த வரிசை யுகத்திற்கு தீர்வு கண்டு மூன்று மாதங்களில் மக்களின் இயல்வு வாழ்க்கையை வழமைக்குக் கொண்டுவந்தார். அன்று ஒரு சுற்றுலாப் பயணி வரவில்லை. விமான நிலையம் வொறிச்சோடியிருந்தது. இன்று விமான நிலையத்தைப் பாருங்கள். சுற்றுலாப் பயணிகள் நிரம்பி வழிகின்றனர். இத்தனையும் நடந்தும் ஏன் மீண்டும் பரீட்சித்துப் பார்க்க வேண்டும். ஒரு முறை பரீட்சித்துப் பார்த்து, இரவு விழுந்த குழியில் பகலில் விழக்கூடாது. உங்களின் பிள்ளைகளுக்காக சிந்தித்து செயல்படுமாறு கூப்பிட்டுக் கேட்டுக்கொள்கிறேன். இன்று அனுபவம் உள்ள தலைவர் ஒருவர் தேவைப்படுகிறார். நீங்கள் சரியான தீர்மானத்தை எடுக்காவிட்டால் நீங்கள் மிகவும் துன்பப்படவேண்டியிருக்கும். ஆறு மாதங்களில் மீண்டும் வரிசைகளுக்குச் செல்ல நேரிடும்.'' என்றார். அமைச்சர் நளின் பெர்னாண்டோ: ''பொருளாதாரத்தில் வீழ்ந்த நாட்டை இரண்டு வருடங்களில் ரணில் விக்ரமசிங்க கட்டியெழுப்பினார். இதனை சஜித் பிரேமதாசவிற்கும், ஜே.வி.பி.க்கும் ஞாபகப்படுத்துகிறோம். நாம் இந்த வேலைத் திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். எமது மக்கள் புத்திசாதுர்யமானவர்கள். பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து அவர்களை ஏமாற்ற முடியாது. நாம் நன்றி மறவாத மக்கள். அதனால் ரணில் விக்ரமசிங்கவின் வேலைத் திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல மக்கள் ஒத்துழைக்க வேண்டும். இதற்கமைய செப்டம்பர் 21ஆம் திகதி கேஸ் சிலிண்டருக்கு வாக்களிக்க வேண்டும்.'' என்றார். பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா: வீழ்ந்த நாட்டை இரண்டாண்டுகளில் மீட்டவர் யார்? அதுதான் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க. நாடு வீழ்ந்தபோது அநுரவுக்கும் சஜிதிற்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. அவர்கள் வந்தார்களா.ரணில் விக்ரமசிங்க தான் முன்வந்தார். அதை மட்டும் நினைவில் கொள்ளுங்கள். நினைவில் வைத்து நன்றியுடன் இருங்கள். எரிபொருள், எரிவாயு, உரம், மருந்து என எதுவுமே இல்லாமல் இருந்த போது நமக்காக யார் முன்வந்தார்கள் என்பதை நினைவுகொள்ளுங்கள். நாடு மீண்டும் வீழ்ந்தால் மீண்டும் பழைய நிலைக்கு செல்வதை யாராலும் தடுக்க முடியாது. சஜித்தும் அநுரவும் நாட்டைக் காப்பாற்ற முன்வரவில்லை. இன்று சுற்றுலா பயணிகள் வருகின்றனர். எரிபொருள், எரிவாயு, மருந்து நிறையவே உள்ளன. இன்று பாடசாலைகள் திறக்கப்பட்டுள்ளன. நாட்டை மீட்க அனுபவமும் திறமையும் இருக்க வேண்டும். அனுரகுமாரவிற்கு மற்றவர்களை விமர்சிக்க மட்டுமே முடியும். https://www.virakesari.lk/article/192541
-
இலங்கை வந்தார் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர்
ரணிலுக்கும் சஜித்திற்கும் இடையில் ஐக்கியத்தை ஏற்படுத்த முயன்றாரா டோவல்? இராஜதந்திர வட்டாரங்கள் மறுப்பு Published By: RAJEEBAN 01 SEP, 2024 | 01:44 PM ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்கவிற்கும் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கும் இடையி;ல் ஐக்கியத்தை ஏற்படுத்தும் இறுதி முயற்சிகளில் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்டோவல் ஈடுபட்டார் என வெளியாகும் தகவல்களை இராஜதந்திர வட்டாரங்கள் நிராகரித்துள்ளன. இருவருக்கும் இடையில் ஐக்கியத்தை ஏற்படுத்தி இணைந்து போட்டியிடச்செய்வதற்கான இறுதி முயற்சிகளிற்காகவே இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டார் என தெரிவிப்பதை இந்திய தூதரகத்தின் உயர் வட்டாரங்கள் நிராகரித்துள்ளன என ஐலண்ட் செய்தி வெளியிட்டுள்ளது. அவ்வாறான தேவை ஏற்பட்டிருந்தால் டோவல் புதுடில்லியிலிருந்தே குறிப்பிட்ட தலைவர்களை தொடர்புகொண்டிருப்பார் அவர்இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருக்கவேண்டியதில்லை என சிரேஸ்ட இராஜதந்திர வட்டாரமொன்று தெரிவித்தது என ஐலண்ட் குறிப்பிட்டுள்ளது. அவர் இலங்கையின் அரசியல் தலைவர்களை நேரடியாக சந்திக்க விரும்பியிருந்தால் ஊடகங்களிற்கு தெரியாமல் சந்தித்திருக்கலாம்,கடந்த காலங்களில் அவர் அவ்வாறு செயற்பட்டுள்ளார் என இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தேர்தல் தொடர்பில் இந்தியாவின் விருப்பங்களை திணிப்பதற்காகவே டோவல் இலங்கையின் அரசியல் தலைவர்களை சந்தித்தார் என தெரிவிப்பது ஆதாரமற்ற விடயம் என இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. https://www.virakesari.lk/article/192552
-
கும்பகோணத்தில் விற்கப்பட்ட காண்டாமிருக கொம்பு - நாடகமாடிப் பிடித்த வனத்துறையின் சிறப்புக் குழு
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம் பதவி, பிபிசி தமிழ் 7 மணி நேரங்களுக்கு முன்னர் 'காண்டாமிருக கொம்புகள் விற்பனைக்கு' — சமீபத்தில் ஆலைன்லைனில் வெளியான இந்த விளம்பரம், தமிழ்நாட்டில் காட்டுயிர் குற்றத் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. "வனத்துறை வரலாற்றில் தமிழ்நாட்டில் காண்டாமிருகக் கொம்பினை விற்க முயல்வதாக ஒருவர் கைது செய்யப்படுவது எங்களுக்குத் தெரிந்து இதுவே முதல்முறை," என்கிறார், திருச்சி மண்டல உதவி வனப் பாதுகாவலர் சாந்தவர்மன். இந்திய கடற்படையில் லெப்டினென்ட் கர்னல் ஆகப் பணியாற்றி ஓய்வு பெற்ற ஒருவர், தன்னிடம் உள்ள காண்டாமிருகக் கொம்பினை விற்பதாக இணையதளத்தில் விளம்பரம் கொடுத்திருந்தார். அவருடன் சேர்த்து 5 பேர், கடந்த ஆகஸ்ட் 27ஆம் தேதி கைது செய்யப்பட்டனர். இந்தியாவில் அசாமின் காசிரங்கா தேசியப் பூங்காவில் மட்டுமே காண்டாமிருகங்கள் வசிக்கும் சூழலில், கும்பகோணத்துக்கு அதன் கொம்பு வந்தது எப்படி? இந்தக் குழு பிடிபட்டது எப்படி? கும்பகோணத்துக்கு எப்படி வந்தது? மகாராஷ்ட்ரா கடற்படையில் லெப்டினென்ட் கர்னல் ஆகப் பணிபுரிந்து ஓய்வு பெற்ற திருநாகேஸ்வரத்தைச் சேர்ந்த கலியபெருமாள் என்பவரிடம்தான் காண்டாமிருகக் கொம்பு இருந்துள்ளது. கடந்த 1982ஆம் ஆண்டு தான் மகாராஷ்ட்ராவில் பணிபுரிந்தபோது, நண்பர் ஒருவரின் நிதி உதவியில் அந்தக் கொம்பினை வாங்கியதாக வனத்துறையின் விசாரணையில் கலியபெருமாள் தெரிவித்தார். இதற்காக மகாராஷ்ட்ராவின் அப்போதைய முதன்மை வனப்பாதுகாவலர் ஒப்புதல் அளித்ததாகக் கூறப்படும் சான்றிதழ் ஒன்றையும் அவர் கையில் வைத்திருந்ததாக பிபிசி தமிழிடம் தெரிவித்தார், கும்பகோணம் வன அலுவலர் பொன்னுசாமி. கலியபெருமாள் கொடுத்த ஆன்லைன் விளம்பரத்தைப் பார்த்துவிட்டு, கொம்பினை விலைபேசி வாங்குவது போன்ற ஒரு நாடகத்தை வனத்துறை அரங்கேற்றியது. இதற்கான பேச்சுவார்த்தையில் வனத்துறையின் சிறப்புக் குழு ஈடுபட்டது. பேச்சுவார்த்தையில் சிலர் இடைத்தரகர்களாகவும் செயல்பட்டுள்ளனர். தங்களின் வேலைக்கு ஏற்ப 2 முதல் 5 லட்சம் வரையில் கமிஷன் வேண்டும் என்று பேரம் பேசியதையும் வனத்துறையின் சிறப்புக் குழுவினர் ஏற்றுக் கொண்டதாகக் கூறுகிறார் பொன்னுசாமி. வனத்துறை நடத்திய நாடகம் பட மூலாதாரம்,TN FOREST DEPARTMENT படக்குறிப்பு,கும்பகோணத்தில் பிடிபட்ட கும்பல் "மிக அரிதான ஒரு விலங்கின் கொம்பினை இவர்கள் உண்மையிலேயே வைத்திருக்கிறார்களா அல்லது 'சதுரங்க வேட்டை' பாணியில் ஏமாற்றும் கும்பலா என்ற சந்தேகமும் ஏற்பட்டது. எங்களின் நடவடிக்கையில் அவர்களுக்குச் சந்தேகம் ஏற்படாதவாறு பார்த்துக் கொண்டோம்," என்கிறார் பொன்னுசாமி. ஒரு கட்டத்தில் பேரம் படிந்ததும் தங்களிடம் உள்ள காண்டாமிருகத்தின் கொம்பினை நேரில் காட்டுவதற்கு முன்வந்துள்ளனர் அந்த நபர்கள். கடந்த வாரம் இந்தக் கும்பலை வனத்துறையின் சிறப்புக் குழு நேரில் சந்தித்தது. அப்போது ஒரு சூட்கேஸில் 500 கிராமுக்கும் சற்று அதிக எடையுள்ள காண்டாமிருகக் கொம்பும், அதற்கு உரிமை கோரும் ஆவணங்களும் இருந்ததாகக் கூறுகிறார் பொன்னுசாமி. "இது தற்போது கடத்தப்பட்ட கொம்பு இல்லை. சிலர், தங்கள் மூதாதையர்கள் வேட்டையாடிய விலங்குகளின் உறுப்புகளுக்கு உரிய அனுமதியைப் பெற்று வைத்திருப்பது வழக்கம். அதைப் பாரம்பரியமாக வைத்துக் கொள்ளலாமே தவிர, யாருக்கும் விற்கக்கூடாது. கும்பகோணத்தில் பிடிபட்ட கொம்பும் இப்படிப்பட்ட வகையைச் சேர்ந்ததுதான்," என்கிறார் திருச்சி உதவி வனப்பாதுகாவலர் சாந்தவர்மன். இந்திய விலங்குகளின் உறுப்புகள் பெரும்பாலும் சீனாவுக்கு சட்டவிரோதமாகக் கடத்தப்படுவது வழக்கம். அப்படிக் கடத்திப் பணம் சம்பாதிக்கவே இந்தக் கும்பல் முயன்றதாக பிபிசி தமிழிடம் சாந்தவர்மன் குறிப்பிட்டார். பட மூலாதாரம்,TN FOREST DEPARTMENT படக்குறிப்பு,பிடிபட்ட காண்டாமிருகக் கொம்பு 7 ஆண்டு சிறைத்தண்டனை "காண்டாமிருகக் கொம்பினை விற்பனை செய்ய முயன்ற கும்பலில் மூன்று பேர் கும்பகோணத்தைச் சேர்ந்தவர்கள். கலியபெருமாள் திருநாகேஸ்வரத்தைச் சேர்ந்தவர். மற்றொரு நபர் திருவாரூரைச் சேர்ந்தவர். இவர்கள் அனைவரும் குற்றத்தை ஒப்புக் கொண்டதால் சிறையில் அடைக்கப்பட்டனர்." “நீதிமன்றத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் வன உயிரின பாதுகாப்புச் சட்டம் 1972இன் படி 3 ஆண்டுகள் முதல் 7 ஆண்டுகள் வரை தண்டனை கிடைக்கும்," என்கிறார் வன அலுவலர் பொன்னுசாமி. "காட்டுயிர் வேட்டைக்காரர்கள் அதிகம் குறிவைக்கும் அச்சுறுத்தல் கொண்ட ஓர் உயிரினமாக காண்டாமிருகம் உள்ளது. இந்தியாவில், அசாமின் காசிரங்காவில் மட்டுமே இவை உள்ளன. நேபாளம், பூடான் ஆகிய பகுதிகளில் இதை வேட்டையாடுவதற்கு குழுக்கள் வருகின்றன,” என்கிறார் அவர். மேலும் பேசிய அவர், “காசிரங்காவுக்கு 2016ஆம் ஆண்டு நாங்கள் பயிற்சிக்காகச் சென்றபோது ஏராளமான தகவல்கள் கிடைத்தன. அங்கு காண்டாமிருகங்களை வேட்டையாட வரும் நபர்களில் ஆண்டுக்கு சுமார் 20 பேர் வரை ‘என்கவுண்டர்’ செய்யப்படுவதாக அங்குள்ள வன அதிகாரிகள் தெரிவித்தனர்,” என்கிறார். “அங்கு துப்பாக்கிச்சூடு நடத்துவதற்கான அதிகாரம், வனத்துறைக்கு வழங்கப்பட்டுள்ளது." காண்டாமிருக வேட்டைக் கும்பல்களால் அங்குள்ள வன அதிகாரிகளின் உயிருக்கும் அச்சுறுத்தல் உள்ளதாகக் கூறுகிறார் வன அலுவலர் பொன்னுசாமி. காண்டாமிருக வேட்டை தொடர்வது ஏன்? படக்குறிப்பு,கும்பகோணம் வன அலுவலர் பொன்னுசாமி பண்டைய சீன மருத்துவத்தில் பாலுணர்வைப் பெருக்கும் மருந்து (aphrodisiac) தயாரிக்க காண்டாமிருகக் கொம்புகள் பயன்படுத்தப்படுவதாகக் கூறுகின்றனர். ஆனால், மருத்துவரீதியாக இது நிரூபிக்கப்படவில்லை எனக் கூறும் பொன்னுசாமி, "காண்டாமிருகக் கொம்பில் நமது நகத்தில் உள்ள புரதமான கெரட்டின் (keratin) தான் உள்ளது. அதில் தனிப்பட்டச் சிறப்பு என எதுவும் இல்லை. ஆனால், ஏதோவொரு நம்பிக்கையின் அடிப்படையில் சீனாவில் இந்த மருந்தை விளம்பரம் செய்து சம்பாதிக்கின்றனர். அதுவே காண்டாமிருகங்களை வேட்டையாடவும் காரணமாக உள்ளது," என்கிறார் பொன்னுசாமி. உலக காட்டுயிர் நிதியத்தின் (WWF) இணையதளம், பண்டைய சீன மருத்துவத்தில் காய்ச்சலைக் குறைப்பது, மூக்கில் ரத்தம் வடிவதைத் தடுப்பது, பக்கவாதத்தைத் தடுப்பது போன்றவற்றுக்கு காண்டாமிருகக் கொம்புகளைப் பயன்படுத்துவதாகத் தெரிவிக்கிறது. மிக அரிதான உயிரினமாகப் பார்க்கப்படும் காண்டாமிருகங்கள், சட்டவிரோதமாக வேட்டையாடப்படுவதாகவும், தற்போது உலகம் முழுவதும் 14,000 காண்டாமிருகங்கள் மட்டுமே உள்ளதாகவும் உலக காட்டுயிர் நிதியத்தின் இணையதளம் கூறுகிறது. கடத்தல் கும்பலின் பின்னணி என்ன? இந்த வழக்கைப் பற்றிய சுவாரஸ்யமான தகவல் ஒன்றையும் பிபிசி தமிழிடம் வன அலுவலர் பொன்னுசாமி பகிர்ந்து கொண்டார். "கைது செய்யப்பட்ட ஐந்து பேரில் இரண்டு பேர் வயதில் மிகவும் மூத்தவர்கள். ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரியின் வயது 80. பணி ஓய்வு பெற்றபோது கிடைத்த சுமார் 80 லட்ச ரூபாய் பணத்தை வட்டிக்குக் கொடுத்து ஏமாந்துவிட்டார். பணம் இல்லாததால், தன்னிடம் உள்ள காண்டாமிருகக் கொம்பினை விற்றுப் பணம் சம்பாதிக்க நினைத்துள்ளார்." "இந்த விளம்பரத்தைப் பார்த்த 76 வயதான காஜாமைதீன், திருவாரூரில் காப்பகம் ஒன்றில் தங்கியிருந்தார். தனது சொத்துகளை இழந்து கடனாளியாகிவிட்டதால், எப்படியாவது பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காகக் கொம்பினை விற்றுத் தருவதாகக் கூறி, கலியபெருமாளுடன் இணைந்துள்ளார். அவர் கூறிய தகவலை, அவரின் குடும்பத்தினரும் ஒப்புக் கொண்டனர்," என்கிறார் பொன்னுசாமி. இந்த வழக்கில் கைதான தென்னரசு என்ற சித்த மருத்துவர், பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டு மண்ணுளிப் பாம்பு உள்படப் பல பொருட்களை ‘சதுரங்க வேட்டை’ திரைப்பட பாணியில் விற்பதற்காகத் தேடி அலைந்துள்ளார். ஆனால், எந்த இடத்திலும் தான் பேரம் பேசிய பணம் கிடைக்கவில்லை எனவும், இறுதியில் காண்டாமிருகக் கொம்பினை விற்றுக் கொடுத்தால் கஷ்டம் தீரும் என்ற நம்பிக்கையில் வந்து வலையில் சிக்கிவிட்டதாகவும் அவர் தனது வாக்குமூலத்தில் கூறியதாக வன அலுவலர் பொன்னுசாமி தெரிவித்தார். காண்டாமிருக வேட்டைச் சம்பவங்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,அசாம் மாநிலத்தின் கசிரங்கா தேசியப் பூங்காவில் மட்டுமே இந்திய ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்கள் காணப்படுகின்றன அசாமில் 2,895 காண்டாமிருகங்கள் உள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. காட்டுயிர் பாதுகாப்புச் சட்டம் 1972இன் படி பட்டியல் 1-இல் அரிதான விலங்காக இது பட்டியலிடப்பட்டுள்ளது. 2022ஆம் ஆண்டில் ஒரு காண்டாமிருகம்கூட கொல்லப்படவில்லை எனவும், அதற்கு முன்னதாக 1977ஆம் ஆண்டுதான் ஒரு காண்டாமிருகம் கூடக் கொல்லப்படாத ஆண்டாக இருந்ததாகவும் அசாம் சிறப்பு டி.ஜி.பி., ஜி.பி.சிங் தெரிவித்துள்ளார். இந்தத் தரவுகளின் மூலமே, காண்டாமிருகங்கள் எந்த அளவுக்கு வேட்டைக்காரர்களின் அச்சுறுத்தல் சூழ்ந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றன என்பது தெரிகிறது. கடந்த 2000ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை 191 காண்டாமிருகங்கள் வேட்டைக் குற்றங்களால் கொல்லப்பட்டுள்ளதாகவும் ஜி.பி.சிங் முன்பு செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். மேலும், 2022ஆம் ஆண்டு காண்டாமிருக வேட்டையில் ஈடுபட்டதாக 58 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நான்கு பேர் போலீஸ் நடவடிக்கையில் கொல்லப்பட்டதாகவும் ஜி.பி.சிங் தெரிவித்துள்ளார். காண்டாமிருகங்களின் கொம்புகளுக்கு அதிக விலை கிடைப்பதாலேயே வேட்டையில் சிலர் ஈடுபடுவதாகவும் அசாம் காவல்துறை தெரிவித்துள்ளது. கடந்த ஜனவரி மாதம், காசிரங்கா தேசிய பூங்காவில் ஒற்றைக் கொம்புள்ள பெண் காண்டாமிருகம் கொல்லப்பட்டுள்ளது. இறந்துபோன காண்டாமிருகத்தின் கொம்பு கிடைக்கவில்லை என காசிரங்கா தேசியப் பூங்காவின் இயக்குநர் சோனாலி கோஷ் தெரிவித்திருந்தார். https://www.bbc.com/tamil/articles/cvgr0vg6neqo
-
ஹமாசினால் பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்ட ஆறுபேரின் உடல்கள் மீட்பு - இஸ்ரேலிய இராணுவம்
Published By: RAJEEBAN 01 SEP, 2024 | 01:16 PM ஹமாஸ் அமைப்பினால் பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்ட ஆறுபேரின் உடல்களை மீட்டுள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது. இந்த உடல்களில் அமெரிக்க பிரஜையொருவரின் உடலும் காணப்படுவதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது. தாங்கள் அவர்கள் இருந்த பகுதிக்கு செல்வதற்கு சற்று முன்னதாக அவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.. மீட்கப்பட்ட உடல்களில் கலிபோர்னியாவை சேர்ந்த ஹேர்ஸ் கோல்ட்பார்க் கொலின் என்பவரின் உடலும் மீட்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இவர் கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் ஏழாம் திகதி நெவா இசைநிகழ்ச்சியிலிருந்து துப்பாக்கி முனையில் கடத்தி செல்லப்பட்டார். பணயக்கைதிகளை மீட்பதற்காக இஸ்ரேலிய பிரதமர் இணங்கிச்செல்லவேண்டும் என இவரது பெற்றோர் அதிகளவில் குரல்கொடுத்து வந்தமை குறிப்பிடத்தக்கது. அவர்கள் தொடர்ச்சியாக பிரச்சாரத்தை முன்னெடுத்துவந்ததுடன் சர்வதேச தலைவர்களையும் சந்தித்திருந்தனர். கடந்தமாதம் இடம்பெற்ற அமெரிக்க ஜனநாய கட்சியின் மாநாட்டிலும் இவர்கள் உரையாற்றியிருந்தனர். https://www.virakesari.lk/article/192551
-
புவி வெப்பம் அதிகரிப்பு: உத்தராகண்ட் ஓம் பர்வத மலையில் முதல் முறையாக பனிக்கட்டிகள் மாயம்
01 SEP, 2024 | 10:13 AM பிதோராகர்: உத்தராகண்ட் ஓம் பர்வத மலைப் பகுதியில் முதல் முறையாக பனிக்கட்டிகள் கடந்த வாரம் முற்றிலும் மாயமானது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உத்தராகண்ட் மாநிலத்தில் வியாஸ் பள்ளத்தாக்கு பகுதியில் சுமார் 14,000 அடி உயரத்தில் அமைந்துள்ளது ஓம் பர்வத மலை. இதன் வடிவமைப்பு இந்தி எழுத்து ஓம் போல இருப்பதால் இது ஓம் பர்வத மலை என அழைக்கப்படுகிறது. இந்த மலை எப்போதும் பனி படர்ந்து காணப்படுவதால், இது பிரபல சுற்றுலாத் தளமாக விளங்கியது. இந்நிலையில் இந்த ஓம் பர்வதமலை கடந்த வாரம் பனிக்கட்டிகள் முற்றிலும் மாயமாகி வெறும் பாறைகளாக காட்சியளித்தன. இதுபோல் ஓம் பர்வத மலை பனி இல்லாமல் இருந்தது இதுவே முதல் முறை. இது இப்பகுதி மக்களுக்கும் பார்வையாளர்களுக்கும் மிகுந்த வேதனையையும் அதிர்ச்சியையும் அளித்தது. இது குறித்து இங்குள்ள குஞ்சி கிராமத்தைச் சேர்ந்த ஊர்மிளா சான்வல் கூறுகையில், ‘‘பனி இல்லாமல் ஓம் வடிவிலான இந்த மலையை அடையாளம் காணவே முடியவில்லை’’ என்றார். இந்த நிலை தொடர்ந்தால், இப்பகுதியில் சுற்றுலா பாதிக்கப் படும் என அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்நிலையில் இங்கு சில நாட்களுக்கு முன் பனிப்பொழிவு ஏற்பட்டதால், ஓம் பர்வத மலையில் மீண்டும் பனித் துகள்களை பார்க்க முடிந்தது. இது இப்பகுதி மக்களுக்கு சற்று நிம்மதியை அளித்துள்ளது. ‘‘இமயமலைப் பகுதியில் கடந்தசில ஆண்டுகளாக மழை மற்றும் பனிப்பொழிவு குறைவால், தற்போது ஓம் பர்வத மலையில் பனித்துகள்கள் முற்றிலும் மறைந்துவிட்டன’’ என கைலாஷ் - மானசரோவர் மற்றும் ஆதி கைலாஷ் யாத்திரைகள் நடத்தும்தன் சிங் கூறுகிறார். அல்மோராவில் உள்ள ஜிபி பந்த் இமயமலை சுற்றுச்சூழல் தேசிய மையத்தின் இயக்குநர் சுனில் நாட்டியால் கூறுகையில், ‘‘இமயமலைப் பகுதியில் வாகனங்கள் அதிகரிப்பால் வெப்ப நிலை உயர்வு, புவி வெப்பம் அதிகரிப்பு, காட்டுத் தீ ஆகியவை காரணமாக பனி மறைகிறது’’ என்றார். https://www.virakesari.lk/article/192521
-
ஐ.எம்.எப் இலங்கையுடன் ஒப்பந்தம் செய்துள்ளதே தவிர ரணிலுடன் அல்ல : அனுர பகிரங்கம்
சர்வதேச நாணய நிதியம் இலங்கையுடன் ஒப்பந்தம் செய்துள்ளதே தவிர ரணில் விக்ரமசிங்கவுடன் அல்லவென தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake ) தெரிவித்துள்ளார். கல்கிசையில் (Mount Lavinia) இடம்பெற்ற பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், தற்போது ஆட்சியாளர்கள் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ள விரும்புகின்றார்களே தவிர புதிய வர்த்தகங்களை உருவாக்குவதற்கு விரும்பவில்லை. சர்வதேச நாணய நிதியம் விருப்பமான இடங்களில் வணிகங்களை ஆரம்பிப்பதற்குத் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் உதவி செய்யும். நாம் அரசாங்கத்தை மாற்றுவதற்கு மாறாக இந்த நாட்டினை அபிவிருத்தி செய்வதற்கே வாய்ப்பை கோருகிறோம். சர்வதேச நாணய நிதியம் (IMF) ரணிலுடன் எந்த ஒப்பந்தங்களையும் செய்யவில்லை. அதன் ஒப்பந்தங்கள் அனைத்தும் இலங்கை அரசுடனே மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கைகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. எனவே தாம் இல்லை என்றால் நாடு மீண்டும் பாதாளத்துக்கு சென்றுவிடும் என ரணில் (Ranil Wickremesinghe) கூறுவது முற்றிலும் பொய்யான கருத்தாகும்“ என ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். https://ibctamil.com/article/anura-campaign-meeting-1725160583#google_vignette
-
தனிநாடு எனது நோக்கமில்லை; - தமிழ் பொதுவேட்பாளர்
தனிநாடு என்பது எனது நோக்கமில்லை; மூன்று பிரதான வேட்பாளர்களும் தமது தேர்தல் பிரச்சாரங்களில் தமிழர்கள் குறித்து எதனையும் தெரிவிக்கவில்லை - தமிழ் பொதுவேட்பாளர் Published By: RAJEEBAN 01 SEP, 2024 | 12:13 PM the morning மூன்று பிரதான வேட்பாளர்களினதும் தேர்த்ல் பிரச்சார கூட்டங்களில் தமிழ் மக்கள் குறித்து அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை என தமிழ் பொதுவேட்பாளர் அரியநேத்திரன் பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். அவர்கள் தமிழ் மக்கள் ஜனாதிபதி தேர்தலில் தங்களிற்கு வாக்களிக்கவில்லை என்பதை உணர்வார்கள்,அவர்கள் தாங்கள் தவறிழைத்துள்ளதை உணர்ந்து தீர்வொனறை முன்வைப்பார்கள் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம். என அவர் குறிப்பிட்டுள்ளார். தனிநாடொன்றை உருவாக்குவது எனது நோக்கம் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். கேள்வி ; ஜனாதிபதி வேட்பாளர் என்ற அடிப்படையில் வடக்குகிழக்கு மக்களிற்கான உங்களின் கொள்கைகள் திட்டங்கள் என்ன? பதில்- வடக்கு மக்களிற்காக மாத்திரமல்ல கிழக்கு மக்களிற்காகவும், அங்கு தமிழ் மக்கள் அதிகளவில் வசிக்கின்றனர். சுதந்திரத்தின் பின்னர் இலங்கையில் தமிழர்கள் அடிமைகளாக்கப்பட்டுள்ளனர். வாழ்வாதாரம் பிரஜாவுரிமைகளை பெற முடியாதவாறு நாங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளோம். தமிழ் மக்களின் உரிமைகள் பறிபோயுள்ளன. தமிழர் அதிகளவாக வாழும் பகுதிகளி;ல் பௌத்தமயமாக்கல் இடம்பெறுவதை இந்த தேர்தலில் முன்னிலைப்படுத்துவதற்காகவும் அதனை மக்கள் முன் கொண்டு செல்வதற்காகவுமே நான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்றேன். இலங்கை அரசாங்கத்திற்கும் சர்வதேச சமூகத்திற்கும் நாங்கள் இதனையே தெரிவிக்கின்றோம். இந்த பிரச்சினைகள் தொடர்ந்தும் நீடிக்கின்றன,இனபிரச்சினைக்கு தீர்வை காணமுடிந்தால்,பொருளாதார பிரச்சினை தானாக முடிவிற்கு வந்துவிடும் இதுவே எனது நோக்கம். கேள்வி ; இலங்கை தமிழ் மக்களிற்கு தனிநாடொன்றை உருவாக்க முயற்சி செய்வீர்களா? பதில் ; தனிநாடொன்றை உருவாக்குவது எனது நோக்கம் இல்லை.ஆனால் முழுமையான சுதந்திரமே எனது நோக்கம். அவ்வாறான நோக்கம் இருந்தால் நான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டிருக்க மாட்டேன். நான் நான் சமத்துவ அரசாங்கத்தை சமத்துவத்தை விரும்புகின்றேன்.கனடா சுவீடன் ஸ்கொட்லாந்து போன்ற நாடுகளில் காணப்படுவதை போன்ற சமத்துவ அரசாங்கத்தை உருவாக்குவதே எனது நோக்கம். கேள்வி ; இந்தியா சீனாவுடனான இலங்கையின் புவிசார் அரசியல் தொடர்புகள் குறித்த உங்களின் நிலைப்பாடு என்ன? பதில் ; இந்தியா எங்களின் அயல்நாடு புராதான காலத்திலிருந்து நட்பு நாடாக விளங்குகின்றது.சீனாவை பொறுத்தவரை அதற்கு இந்தியாவுடன் அரசியல் பகைமை போட்டி உள்ளது. இருநாடுகளும் தங்களின் நலனிற்காக திட்டங்களை தீட்டுகின்றன,இலங்கைக்கு இந்த இரண்டு நாடுகளுடனும் உள்ள உடன்படிக்கை காரணமாக இலங்கைக்கு வாய்ப்புகள் உள்ளன. இலங்கைக்கு இந்தியா, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகள் உதவுகின்றன,எங்களிற்கு அது பிரச்சினையில்லை. ஆனால் நாங்கள் தமிழர்கள் 1948 ம் ஆண்டு முதல் பல தலைவர்களின் ஜனாதிபதிகளின் ஆட்சிகளின் கீழ் வாழ்ந்துள்ளோம், தேர்தல் வாக்குறுதிகள் முன்வைக்கப்பட்டன நிறைவேற்றப்படவில்லை. நான் தேர்தலில் வெற்றிபெறுவதற்காக போட்டியிடவில்லை,தமிழ் மக்களின் தேவைகளிற்காக நாங்கள் போட்டியிடுகின்றோம் என்ற செய்தியை தெரிவிப்பதற்காக நாங்கள் போட்டியிடுகின்றோம், கேள்வி ; ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுபவர் நாட்டை எப்படி அபிவிருத்தி செய்ய முடியும் என நினைக்கின்றீர்கள்? பதில் ; மூன்று பிரதான வேட்பாளர்களினதும் தேர்த்ல் பிரச்சார கூட்டங்களில் தமிழ் மக்கள் குறித்து அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை. ஆனால் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுபவருக்கு நாங்கள் செய்தியொன்றை வைத்திருக்கின்றோம். அவர்கள் தமிழ் மக்கள் ஜனாதிபதி தேர்தலில் தங்களிற்கு வாக்களிக்கவில்லை என்பதை உணர்வார்கள்,அவர்கள் தாங்கள் தவறிழைத்துள்ளதை உணர்ந்து தீர்வொனறை முன்வைப்பார்கள் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம். https://www.virakesari.lk/article/192534
-
கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் குருதி தட்டுப்பாடு
Published By: DIGITAL DESK 3 01 SEP, 2024 | 10:06 AM கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் ஓ வகை குருதி தட்டுப்பாடு நிலவுவதாக மாவட்ட வைத்தியாலையின் இரத்த வங்கி தெரிவித்துள்ளது. மாவட்ட வைத்தியசாலையின் இரத்த வங்கியில் O+ மற்றும் O- இரத்த வகைகளுக்கு தட்டுப்பாடு காணப்படுகிறது. எனவே குருதி கொடை வழங்கும் அன்பர்கள் மாவட்ட வைத்தியசாலையின் இரத்த வங்கியுடன் தொடர்பு கொண்டு தினமும் காலை 9 மணி தொடக்கம் பிற்பகல் 4 மணி வரை இரத்த தானம் செய்ய முடியும் எனவும் தெரிவித்துள்ளனர். ஆகவே, மேற்படி அவசர அவசிய நிலைமயினை கருத்தில் கொண்டு குருதி கொடை அளிக்குமாறு பொது மக்களிடம் கிளிநொச்சி மாவட்ட இரத்த வ்ங்கி கோரியுள்ளது. https://www.virakesari.lk/article/192518
-
உக்ரைன் விமானப்படைத் தளபதி பதவியிலிருந்து நீக்கம்
உக்ரைன் ஜனாதிபதி அதிரடி : விமானப்படைத் தளபதி பதவி நீக்கம் உக்ரைனின்(ukraine) விலையுயர்ந்த புதிய எப் 16 ( F-16) போர் விமானம் ஒன்று அழிக்கப்பட்டது தொடர்பான விவாதத்திற்கு மத்தியில் உக்ரைன் விமானப்படை தளபதியை ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி(Volodymyr Zelensky) பதவி நீக்கம் செய்துள்ளார். லெப்டினன்ட் ஜெனரல் மைகோலா ஓலேஷ்சுக்கை(Lt Gen Mykola Oleshchuk) பணிநீக்கம் செய்ததற்கான காரணத்தை ஜெலென்ஸ்கி குறிப்பிடவில்லை, ஆனால் "எங்கள் அனைத்து வீரர்களையும் கவனித்துக் கொள்ளும்" பொறுப்பு தனக்கு இருப்பதாக கூறினார். கட்டளை மட்டத்தில் மாற்றம் டெலிகிராமில் ஒரு இடுகையில், ஜெலென்ஸ்கி, லெப்டினன்ட் ஜெனரல் ஓலெஸ்சுக்கை மாற்ற முடிவு செய்ததாகக் கூறினார், "கட்டளை மட்டத்தில், நாம் நம்மைப் பலப்படுத்திக் கொள்ள வேண்டும் மற்றும் எங்கள் மக்களைப் பாதுகாக்க வேண்டும்" என்று குறிப்பிட்டார். உக்ரைனின் விமானப்படையின் இடைக்கால தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் அனடோலி கிரிவோனோஷ்கோ(Lt Gen Anatolii Kryvonozhko ) நியமிக்கப்பட்டுள்ளதாக இராணுவத்தின் பொது ஊழியர்கள் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளனர். பல தளபதிகள் மாற்றம் பெப்ரவரி 2022 இல் ரஷ்யா(russia) தனது முழு அளவிலான படையெடுப்பைத் தொடங்கியதிலிருந்து ஜெலென்ஸ்கி பல இராணுவத் தளபதிகளை பதவி நீக்கம் செய்துள்ளார். இந்த ஆண்டு பெப்ரவரியில், அவர் நாட்டின் ஆயுதப் படைகளின் தளபதி வலேரி ஜலுஷ்னியை பதவி நீக்கம் செய்தார். மேலும் ஜூன் மாதம், அவர் லெப்டினன்ட் ஜெனரல் யூரி சோடோலை, அதிகப்படியான உயிரிழப்புகள் மற்றும் திறமையின்மை குற்றச்சாட்டுகள் பற்றிய பொது விமர்சனத்திற்குப் பிறகு பதவி நீக்கம் செய்தார். https://ibctamil.com/article/zelensky-sacks-ukraine-air-force-chief-1725114010
-
ஆசியாவின் மிகப்பெரிய இயற்கைத் துறைமுகமான திருமலை துறைமுகத்தை வளப்படுத்துவோம் - ஜனாதிபதி தெரிவிப்பு
Published By: DIGITAL DESK 7 01 SEP, 2024 | 10:30 AM ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் சேருவாவில தொகுதி அமைப்பாளர் நளின் குணவர்தன, திருகோணமலை கடவத் ஹதர பிரதேச சபையின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் மாநகர சபை உறுப்பினர் ரீ. பஹர்தீன் ஆகியோர் ஜனாதிபதிக்கு ஆதரவினை தெரிவித்துள்ளனர். ஆசியாவின் மிகப்பெரிய துறைமுகமான திருகோணமலை துறைமுகத்தை வெற்றிடமாக வைத்திருந்த தேசிய தவறை சரிசெய்து, இந்திய அரசாங்கத்தின் ஆதரவுடன் துரிதமாக அபிவிருத்தி செய்து தேசிய பொருளாதாரத்துடன் இணைக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். திருகோணமலை உவர்மலை விளையாட்டரங்கில் நேற்று சனிக்கிழமை (31) நடைபெற்ற "இயலும் ஸ்ரீலங்கா" வெற்றிப் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் பாராளுமன்ற உறுப்பினர் கபில நுவன் அத்துகோரள மற்றும் திருகோணமலை மாவட்ட ஐ.தே.க அமைப்பாளர் சந்தீப் சமரசிங்க ஆகியோரின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்தில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டனர். ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் சேருவாவில தொகுதி அமைப்பாளர் நளின் குணவர்தன, திருகோணமலை கடவத் ஹதர பிரதேச சபையின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் மாநகர சபை உறுப்பினர் ரீ. பஹர்தீன் ஆகியோர் இதன்போது ஜனாதிபதிக்கு ஆதரவாக இணைந்து கொண்டமையும் விசேட அம்சமாகும். நிலாவெளி தொடக்கம் திருகோணமலை வரையிலும் வெருகல் ஆறு தொடக்கம் அறுகம்பே வரையிலும் சுற்றுலா வலயங்களை உருவாக்கி பெருமளவிலான சுற்றுலாப் பயணிகளை திருகோணமலைக்கு வரவழைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்தப் பொதுக் கூட்டத்தில் உரையாற்றுகையில் குறிப்பிட்டார். திருகோணமலையை வலுசக்தி மையமாக அபிவிருத்தி செய்யும் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி, மீன்பிடித் தொழிலின் அபிவிருத்திக்கு மானியங்கள் வழங்கப்படுவதுடன், சிவில் பாதுகாப்புப் படைகளின் பிரச்சினையும் உடனடியாக தீர்க்கப்படும் என்றும் தெரிவித்தார். சேருவாவில விகாரையின் அபிவிருத்திக்கு ஆதரவளிப்பதாகத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, புதிய அரசாங்கத்தின் கீழ் உலகெங்கிலும் உள்ள இந்துக்களால் தெற்குக் கைலாசம் எனப் போற்றப்படும் திருக்கோணேஸ்வரம் கோயிலின் கோபுரத்தை புனரமைக்கும் பொறுப்பையும் தாம் ஏற்பதாக தெரிவித்தார். இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்த நாட்டின் இளைஞர்களுக்காக எமது நாட்டை அபிவிருத்தி செய்ய வேண்டும். அந்த முன்னேற்றம் ஏற்றுமதி பொருளாதாரத்தின் மூலம் மட்டுமே அடைய வேண்டும். அதற்காக விவசாயத்தை நவீனமயமாக்க வேண்டும். ஒரு ஹெக்டேருக்கு 08 மெட்ரிக் தொன் நெல் விளைச்சலைப் பெற முடியும். இதற்கான உதவிகளை வழங்குவோம். மேலும், மீன்பிடி தொழில் வளர்ச்சிக்கு மானியம் வழங்குவோம். இந்த நாட்டுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை 50 இலட்சமாக அதிகரிக்க வேண்டும். அதற்காக நிலாவெளியில் இருந்து திருகோணமலை வரையிலும் வெருகல் ஆறு முதல் அறுகம்பே வரையிலும் சுற்றுலா வலயங்களை உருவாக்கி இந்த பிரதேசத்திற்கு அதிகளவான சுற்றுலாப் பயணிகளை வரவழைக்க திட்டமிட்டுள்ளோம். ஆசியாவிலேயே மிகப் பெரிய இயற்கைத் துறைமுகமாகத் திகழும் திருகோணமலைத் துறைமுகத்தை வெறுமனே வைத்திருக்கும் தேசிய தவறை, நாம் தற்போது சீர்செய்து வருகின்றோம். இதை மேம்படுத்த எந்த அரசாங்கமும் கவனம் செலுத்தவில்லை. அதனால் தான் இந்தியாவுடன் இணைந்து திருகோணமலை அபிவிருத்தி வேலைத் திட்டத்தை ஆரம்பிக்கின்றோம். திருகோணமலையை வலுசக்தி மையமாக அபிவிருத்தி செய்து அந்த வேலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றோம். சாம்பூர் சூரிய சக்தி திட்டத்தையும் நடைமுறைப்படுத்தியுள்ளோம். இந்த மாகாணத்தில் ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான பெரிய முதலீட்டு வலயத்தை உருவாக்கி புதிய கைத்தொழில்களைக் கொண்டுவர பணியாற்றி வருகிறோம். ஹிங்குரக்கொட விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்கும் நாம் பணியாற்றி வருகிறோம். திருகோணமலைக்கு வந்தபோது மறைந்த ஆர். சம்பந்தன் அவர்களை எனக்கு ஞாபகம் வருகிறது. திருகோணமலையை அபிவிருத்தி செய்ய வேண்டும் என்று எப்போதும் கூறிவந்தார். நான் அவருக்கு அந்த வாக்குறுதியை வழங்கினேன். அந்த வாக்குறுதியை அனைவரும் ஒன்றாக நிறைவேற்றுவோம். அத்துடன் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் செயற்பட்டு வருகின்றோம். செப்டம்பர் 21 ஆம் திகதி கேஸ் சிலிண்டருக்கு வாக்களித்து இந்தத் வேலைத்திட்டத்தை வலுவாக முன்னெடுப்போம் என்று அனைவரையும் அழைக்கிறேன்.’’ என்றார். அமைச்சர் அலி சப்ரி ‘’இரண்டு வருடங்களுக்கு முன் நாம் அனைவரும் ஆதரவற்றவர்களாக இருந்தோம். எதிர்க்கட்சித் தலைவரிடம் அப்போது நாட்டைப் பொறுப்பேற்கச் சொன்னோம். பொருளாதாரத்தின் உண்மை நிலையை அறிந்து பொறுப்பேற்காமல் ஓடிவிட்டார். தப்பியோடியதுடன் மக்களை மேலும் மேலும் துன்பப்படுத்தினர். அப்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவே அனைத்து பொறுப்புகளையும் சுமந்து தனிமனிதனாக இந்த நாட்டை மீளக் கட்டியெழுப்ப வழிவகுத்தவர். இதற்கு முன்பு நாங்கள் அவருக்கு ஆதரவு வழங்கவில்லை. அவருக்கு எதிராகவே செயல்பட்டோம். ஆனால் கடந்த இரண்டு வருடங்களில் அவருடன் பணிபுரிந்தபோது, அவருடைய ஆளுமை, சர்வதேச உறவுகள் மற்றும் பொருளாதாரக் கண்ணோட்டம் பற்றிய அறிவைப் புரிந்துகொண்டோம். அவர் இந்நாட்டின் சிங்கள, தமிழ், முஸ்லிம் என அனைத்து மக்களையும் பாகுபாடின்றி நடத்தும் விதம் இந்த நாட்டின் தலைமைத்துவத்திற்கு மிகவும் முக்கியமான பண்பாகும். ஒரு குறிப்பிட்ட முகநூல் பக்கத்தில் இப்படி ஒரு பதிவு இருந்தது. ‘இந்த செப்டெம்பரில் நீங்கள் ரணில் விக்ரமசிங்கவுக்கு வாக்களித்தால் அவர்தான் ஜனாதிபதி. ஆனால், வேறு யாருக்காவது வாக்களித்தால், அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் அவரே மீண்டும் நாட்டைப் பொறுப்பேற்க நேரிடும்’ இந்த நாட்டை வேறு யாராலும் முன்னோக்கிக் கொண்டு செல்ல செய்ய முடியாது என்பதே அதன் அர்த்தம். முன்னாள் இராஜாங்க அமைச்சர் புத்திர சிகாமணி இந்தத் தேர்தல் காலத்தில் பலரும் பல வாக்குறுதிகளை வழங்குகின்றனர். வரியை முழுமையாக இல்லாமல் செய்வதாக கூறுகின்றனர். இதனை செய்ய முடியுமா என்பதை சிந்திக்க வேண்டும். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, வங்குரோத்தடைந்த நாட்டை 02 வருடங்களில் மீட்டு நாம் நிம்மதியாக வாழக் கூடிய ஒரு ஆரம்பத்தை தந்திருக்கிறார். அவர் இந்த நாட்டில் தொடர்ந்து ஆட்சியில் இருந்தால் மாத்திரமே இந்த நாடு முன்னேறும். நாங்கள் கேஸ் சிலிண்டருக்கும், பால்மாவுக்கும் எரிபொருளுக்கும் வரிசையில் இருந்த காலத்தை யாரும் மறந்திருக்கமாட்டார்கள். நிலைமையை மாற்றியவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க. இன்று தேர்தலில் போட்டியிடும் எவருக்கும் அன்று ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியில் இருந்து இந்நாட்டை மீட்டெடுக்க முடியவில்லை. ரணில் விக்ரமசிங்கவிற்கு அனுபவம், தகுதி இருக்கின்றது. வேறு எந்த வேட்பாளருக்கும் அந்த சக்தி இல்லை. எனவே தமிழ் வேட்பாளர் என்று உங்களது வாக்குகளை சிதறடிக்காமல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு வாக்களித்து அவரை வெற்றிபெற்ச் செய்வோம்.’’ என்றார். பாராளுமன்ற உறுப்பினர் கபில நுவன் அத்துகோரள, '’கடந்த காலத்தில் பொருளாதாரம் வங்குரோத்தானபோது ஜே.வி.பி. என்ன செய்துகொண்டிருந்த் என்பதை நினைத்துப் பாருங்கள். கொவிட் தொற்றுநோய் மற்றும் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட மக்கள் ஜே.வி.பியின் குறுகிய அரசியல் நோக்கங்களினால் மேலும் பாதிக்கப்பட்டனர். அரச சேவை பெறும் அப்பாவி மக்கள் ஜே.வி.பியின் வேலைநிறுத்தம் போராட்டங்களினால் நிர்க்கதியான பல சந்தர்ப்பங்கள் இருக்கின்றன. பொதுமக்கள் வைத்தியசாலைகளுக்கும், மாணவர்கள் பாடசாலைகளுக்கும் சென்றுவிட்டு திரும்பி வந்த பல நாட்கள் இருந்தன. இந்த நாட்டு மக்களுக்காக என்று கூறி அவர்கள் செய்ததெல்லாம் மக்களை மேலும் ஒடுக்கியது. குறைந்த பட்சம் அந்த ஐக்கிய மக்கள் சக்திக்கும், ஜே.வி.பிக்கும் வாக்கு கேட்கும் உரிமை கூட இல்லை. அதற்கான உரிமை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு மாத்திரமே உள்ளது. இந்த நாடு மீண்டும் பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடைந்தால் அதை மீண்டும் ரணில் விக்ரமசிங்கவே பொறுப்பெடுக்க வேண்டும். அதற்கு வேறு தலைவர் இல்லை என்பதைக் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.’’ என்றார். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்தித் சமரசிங்க ‘’இரண்டு ஆண்டுகளுக்கு முன், மீனவர்கள் கடலுக்கு செல்ல முடியாமல் இருந்த். டீசல், மண்ணெண்ணெய் இருக்கவில்லை. விவசாயம் செய்ய உரம் இருக்கவில்லை. பிள்ளைகள் பாடசாலை செல்ல முடியாதிருந்தது. மின்சாரம் இல்லை. இவ்வாறானதொரு தருணத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த நாட்டைக் பொறுப்பேற்றார். ஆனால் இன்று அனைத்து சவால்களையும் வெற்றிகொண்டார். நாட்டின் பொருளாதாரம் ஸ்திரப்படுத்தப்பட்டது. சுமூகமாக வாழக்கூடிய நிலைக்கு நாட்டை முன்னேற்றினார். நாட்டின் மீதுள்ள அக்கறையால் நாம் அனைவரும் கட்சி நிற, சாதி பேதமின்றி ஜனாதிபதிக்கு ஆதரவளிக்கத் தீர்மானித்துள்ளோம். இந்த நாட்டை பாதுகாத்தால் தான் அரசியல் செய்ய முடியும். அது மட்டுமின்றி இந்த நாடு பாதுகாக்கப்பட்டால் தான் உங்கள் பிள்ளைகள் படித்து டாக்டர், இன்ஜினியர் ஆக முடியும். மேலும் அவரது "திருகோணமலை அபிவிருத்தித் திட்டத்தின்" கீழ் இம்மாவட்டத்தில் விவசாயம், சுயதொழில், சுற்றுலா, மீன்பிடி போன்ற அனைத்து துறைகளும் அபிவிருத்தி செய்யப்படும். இரண்டு வருடங்களில் அவர் செய்தவற்றின் அடிப்படையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை நாம் நம்ப முடியும். எனவே, செப்டெம்பர் 21ஆம் திகதி கேஸ் சிலிண்டருக்கு வாக்களித்து அவரை மீண்டும் இந்த நாட்டின் ஜனாதிபதியாக தெரிவுசெய்ய வேண்டும்.’’ என்றார். இராஜாங்க அமைச்சர் ச. வியாழேந்திரன் இரண்டு வருடங்களுக்கு முன்னர் என்ன நடந்தது என்பதை அனைவரும் அறிவோம். ரணில் விக்ரமசிங்கவுக்கு நாம் ஏன் வாக்களிக்க வேண்டும்? வீடுகளில் நிம்மதியாக உறங்க வேண்டிய மக்கள் மின்சாரம் தடைப்பட்டு வீதிகளுக்கு வந்தார்கள். கேஸ், எரிபொருள், மண்ணென்ணெய் வேண்டி வீதிக்கு வந்தார்கள். இவ்வாறு ஒரு வரிசை கலாசாரம் ஏற்பட்டது. மிகப் பொருளாதார வீழ்ச்சிக்கு எமது நாடு தள்ளப்பட்டது. நாட்டைப் பொறுப்பேற்குமாறு முன்னாள் ஜனாதிபதி கோரிய போது சிலர் ஓடி ஒளிந்தனர். சஜித் பிரேதமதாஸவும் அநுரவும் காதல் கடிதம் எழுதுவது போல் முன்னாள் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதிக்கொண்டிருந்தார்கள். யாருமே நாட்டைப் பொறுப்பேற்க முன்வரவில்லை. குறைந்தது 25 வருடங்களுக்கு பின்னரே இந்த நாடு ஓரளவு சுவாசிக்கும் என்று சிலர் கூறினர். இந்த பொருளாதார பிரச்சினைக்கு தீர்வுகாண முடியாது என்றனர். சிம்பாப்வே, எதியோப்பியா போன்ற நாடுகளை உதாரணமாக எடுத்துக் காட்டலாம். அவ்வாறான சூழலில் இந்த நாட்டைப் பொறுப்பேற்று மிகக் குறுகிய காலத்தில் இந்த நாட்டை மீட்டெடுத்த எமது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னெடுத்த மிகச் சரியான பொருளாதார வேலைத்திட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுக்க அவரை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியடையச் செய்வொம்.’’ என்றார். ஐக்கிய தேசிய கட்சியின் மூதூர் ஒருங்கிணைப்பாளர் ஏ.பீ அமீன் ‘’இந்நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் போன்று அனைத்து இன, மத மக்களும் வாழுகின்ற திருகோணமலை மாவட்டத்திலும் நாம் அனைவரும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு வழங்க வேண்டும். அன்று முழு நாட்டு மக்களும் துன்பப்பட்டபோது எம்மை பாதுகாக்க எந்த தலைவரும் முன்வரவில்லை. ஆனால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தைரியமாக இந்நாட்டைப் பொறுப்பேற்று எம்மை பாதுகாத்து, எல்லா மக்களும் மகிழ்ச்சியாகவும் சுபீட்சமாகவும் நிம்மதியாகவும் இன்று வாழக் கூடிய சூழலை உருவாக்கினார். எனவே அவர் கொண்டு செல்லும் வேலைத்திட்டத்தை தொடர்ந்தும் இந்நாட்டில் முன்னெடுக்க கேஸ் சிலிண்டருக்கு வாக்களித்து, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களை மீண்டும் ஜனாதிபதியாக தெரிவு செய்யமாறு உங்கள் அனைவரிடமும் கேட்டுக்கொள்கிறேன்.’’ என்றார். கிழக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் திருமதி ஆரியவதி கலப்பத்தி நாம் சரியாகச் செயற்படாவிட்டால் பங்களாதேஷுக்கு நேர்ந்த கதி இந்த நாட்டுக்கும் ஏற்படும். அன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டை பொறுப்பேற்காமல் இருந்திருந்தால் எமக்கு நாடு இருந்திருக்காது. மன இறுக்கத்துடன் இந்த நிகழ்வில் கலந்து கொள்கிறேன். என் மகன் மரணித்து பத்து நாட்கள் ஆகிறது. வேறு எந்த தாயும் இவ்வாறு வரமாட்டார். நாட்டின் நலனுக்காகவே இன்று நான் இங்கு வந்துள்ளேன். இந்தப் பயணம் வெற்றியடைய வேண்டுமானால், சரியான தலைவர் தேவை. அந்த தலைவர் தான் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க.’’ என்றார். மகாசங்கத்தினர் தலைமையிலான சர்வ மத தலைவர்கள், முன்னாள் இராஜாங்க அமைச்சர் புத்திர சிகாமணி, ஐக்கிய தேசியக் கட்சியின் மூதூர் இணைப்பாளர் ஏ.பி.அமீன், பொதுஜன ஐக்கிய முன்னணி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தி உள்ளூராட்சி மன்றங்களின் முன்னாள் பிரதிநிதிகள் மற்றும் பெருந்திரளான மக்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/192519
-
இங்கிலாந்து - இலங்கை கிரிக்கெட் தொடர் செய்திகள்
483 ஓட்டங்கள் வெற்றி இலக்கை நோக்கி கடைசி இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடும் இலங்கைக்கு பெரும் நெருக்கடி 31 AUG, 2024 | 11:34 PM (நெவில் அன்தனி) இங்கிலாந்துக்கு எதிராக லோர்ட்ஸ் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் 2ஆவது போட்டியில் மிகவும் கடினமான 483 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி கடைசி இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடும் இலங்கை, 3ஆம் நாள் ஆட்டம் போதிய வெளிச்சமின்மை காரணமாக நிறுத்தப்பட்டபோது 2 விக்கெட்களை இழந்து 53 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. மூன்றாம் நாள் ஆட்டத்தில் மேலும் 22 ஓவர்கள் வீசப்பட வேண்டியிருந்த நிலையிலேயே ஆட்டம் நிறுத்தப்பட்டது. அதன் பின்னர் வெளிச்சம் பிரகாசமடையாததால் மாலை 6.00 மணிக்கு 3ஆம் நாள் ஆட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. திமுத் கருணாரட்ன 23 ஓட்டங்களுடனும் இராக்காப்பாளன் ப்ரபாத் ஜயசூரிய 3 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர். நிஷான் மதுஷன்க (13), பெத்தும் நிஸ்ஸன்க (14) ஆகிய இருவரே ஆட்டம் இழந்தவர்களாவர். போட்டியில் இன்னும் இரண்டு நாட்கள் மீதம் இருப்பதால் அதிசயம் நிகழ்ந்தாலன்றி இலங்கை தோல்வி அடைவது உறுதியாவதுடன் தொடர் இங்கிலாந்து வசமாகிவிடும். முன்னதாக போட்டியின் 3ஆம் நாள் காலை தனது முதலாவது இன்னிங்ஸை ஒரு விக்கெட் இழப்புக்கு 25 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த இங்கிலாந்து சகல விக்கெட்களையும் இழந்து 251 ஓட்டங்களைப் பெற்றது. இந்த மொத்த எண்ணிக்கையில் சாதனையாளர் ஜோ ரூட்டின் பங்களிப்பு 103 ஓட்டங்களாகும். இந்த டெஸ்ட் போட்டியில் 2 இன்னிங்ஸ்களிலும் சதம் குவித்து அசத்திய ஜோ ரூட், இங்கிலாந்து சார்பாக அதிக டெஸ்ட் சதங்கள் குவித்த வீரர் என்ற சாதனையை நிலைநாட்டினார். போட்டியின் முதலாம் நாளான வியாழக்கிழமை 33ஆவது சதத்தைக் குவித்து இங்கிலாந்து சார்பாக அதிக சதங்கள் குவித்த அலஸ்டயார் குக்கின் சாதனையை சமப்படுத்திய ஜோ ரூட் இன்று 34ஆவது சதத்தைக் குவித்து புதிய சாதனையை நிலைநாட்டினார். லோர்ட்ஸ் விளையாட்டரங்கில் ஜோ ரூட் குவித்த 7ஆவது டெஸ்ட் சதம் இதுவாகும். அத்துடன் டெஸ்ட் போட்டி ஒன்றில் 2 இன்னிங்ஸ்களிலும் முதல் தடவையாக சதங்கள் குவித்ததன் மூலம் வரலாற்று ஏடுகளில் ஜோ ரூட் இணைந்துகொண்டார். அது மட்டுமல்லாமல் 111 பந்துகளில் சதத்தைப் பூர்த்தி செய்து தனது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையில் அதிவேக சதத்தைப் பெற்றார். இரண்டாவது இன்னிங்ஸில் ஜோ ரூட் 103 ஓட்டங்களைப் பெற்றார். அவருக்கு அடுத்ததாக ஹெரி புறூக் பெற்ற 37 ஓட்டங்களே இரண்டாவது அதிகூடிய எண்ணிக்கையாக இருந்தது. எண்ணிக்கை சுருக்கம் இங்கிலாந்து 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 427 (ஜோ ரூட் 143, கஸ் அட்கின்சன் 118, பென் டக்கட் 40, அசித்த பெர்னாண்டோ 102 - 5 விக்.,) இலங்கை 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 196 (கமிந்து மெண்டிஸ் 74, தினேஷ் சந்திமால் 23, ஏஞ்சலோ மெத்யூஸ் 22, மெத்யூ பொட்ஸ் 19 - 2 விக்., கிறிஸ் வோக்ஸ் 21 - 2 விக்.) இங்கிலாந்து 2ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 251 (ஜோ ரூட் 103, ஹெரி புறூக் 37, ஜெமி ஸ்மித் 26, பென் டக்கட் 24, அசித்த பெர்னாண்டோ 52 - 3 விக்., லஹிரு குமார 53 - 3 விக்., மிலன் ரத்நாயக்க 38 - 2 விக்.) இலங்கை 2ஆவது இன்: 3ஆம் நாள் ஆட்டம் போதிய வெளிச்சமின்மை காரணமாக முடிவுக்கு வந்தபோது 53 - 2 விக். (திமுத் கருணாரட்ன 23 ஆ.இ., பெத்தும் நிஸ்ஸன்க 14, நிஷான் மதுஷ்க 13, ஒல்லி ஸ்டோன் 1 - 1 விக்., கஸ் அட்கின்சன் 15 - 1 விக்.) https://www.virakesari.lk/article/192509
-
இலங்கை வந்தார் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர்
இந்தியத் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் பங்களாதேஷின் நிலைமைகள் குறித்து ஜனாதிபதி ரணிலுடன் கலந்துரையாடல் 01 SEP, 2024 | 10:23 AM (லியோ நிரோஷ தர்ஷன்) அரசியல் - பொருளாதார நெருக்கடிகளைக் கடந்து ஈராண்டுகளுக்கு பின்னர் இலங்கையில் அமைதியானதும் சுதந்திரமானதுமான தேர்தல் ஒன்றை நடத்துவதற்கான சூழலை ஏற்படுத்தியமைக்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை பாராட்டியுள்ள இந்தியத் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் , பங்களாதேசத்தின் அண்மைய முன்னேற்றங்கள் குறித்தும் கொழும்பு விஜயத்தின் போது கவனம் செலுத்தியுள்ளார். இருநாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு கடந்த வியாழக்கிழமை (09) கொழும்பை வந்தடைந்த இந்தியத் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை நாடு திரும்புவதற்கு முன்னர் சந்தித்து கலந்துரையாடியிருந்தார். இதன் போதே அஜித் தோவால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை பாராட்டியுள்ளார். இந்தியா, இலங்கை மற்றும் மாலைத்தீவுகள் இடையிலான முத்தரப்பு பிராந்திய முயற்சியாக ஆரம்பிக்கப்பட்ட கொழும்பு பாதுகாப்பு மாநாட்டின் உள்ளடக்கங்களின் மறுபரிசீலனை குறித்து கவனம் செலுத்தியிருந்த அஜித் கே. தோவால், முத்தரப்பு ஒப்பந்தத்திலும் கைச்சாத்திருந்தார். இருப்பினும் இதற்கு அப்பால் அரசியல் சந்திப்புகளுக்கே கொழும்பு விஜயத்தில் அஜித் தோவால் முக்கியத்துவம் அளித்திருந்தார். குறிப்பாக இலங்கையின் அடுத்த ஐந்து ஆண்டுக் காலத்தை அரசியல் ரீதியில் தீர்மானிக்க கூடிய ஜனாதிபதி தேர்தல் இடம்பெற மூன்று வாரங்களுக்கும் குறைவான நாட்கள் இருக்கையில் கொழும்பை வந்தடைந்த அஜித் தோவால் அனைத்து பிரதான வேட்பாளர்களையும் சந்தித்து கலந்துரையாடினார்.ஆனால் அவர்களுடன் பேசப்பட்ட எந்தவொரு விடயமும் இதுவரையில் இருதரப்பினருமே வெளிப்படுத்த வில்லை. அநுரகுமார திசாநாயக்க, சஜித் பிரேமதாச மற்றும் நாமல் ராஜபக்ஷ ஆகியோர், அஜித் தோவாலை சந்தித்த புகைப்படங்களை கூட வெளியிட வில்லை. அந்த சந்திப்புகளின் உள்ளடக்கங்களின் இரகசிய தன்மையைப் பாதுகாக்கும் வகையில் அனைவருமே செயல்பட்டுள்ளனர். இருப்பினும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் அஜித் தேவாலுக்கும் இடையில் இடம்பெற்ற இருதரப்பு கலந்துரையாடலின் போது, முக்கிய தேர்தல் ஒன்று நாட்டில் இடம்பெறவுள்ள நிலையில் , அதற்கான அமைதியான சூழல் குறித்து கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. மேலும் பங்களாதேசத்தில் அண்மைய அமைதியின்மைகள் பிராந்திய ஒருமைப்பாட்டில் தாக்கம் செலுத்தியுள்ளதாகவும், கூடிய விரைவில் நிலைமை சீர்படுத்த புதிய நிர்வாகத்திற்கு ஒத்துழைப்புகள் வழங்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் தேர்தல் முடிவடைந்த பின்னர் பிரதமர் நரேந்திர மோடியின் வருகைக்கான திகதி தீர்மானிக்கப்பட உள்ளதாகவும் இதன் போது குறிப்பிடப்பட்டது. எவ்வாறாயினும் இலங்கையின் தேர்தல் இந்தியாவுக்கு மூலோபாய ரீதியில் முக்கியத்துவம் என்பதாலேயே இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவாலின் கொழும்பு விஜயம் அமைந்துள்ளதாக புவிசார் அரசியல் விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர். குறிப்பாக சீன கப்பல்களின் இலங்கை நோக்கி தொடர் விஜயங்கள் இந்தியாவை எறிச்சல் ஊட்டுவதாகவே அமைந்துள்ளது. மாலைத்தீவில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்களின் பின்னரான சீனாவின் இந்திய பெருங்கடல் நகர்வுகள் அதிகரித்துள்ளன. இத்தகைய சூழலில் இலங்கையில் முக்கிய தேர்தல் இடம்பெறுகின்ற நிலையில் அஜித் தோவாலின் கொழும்பு விஜயம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/192516
-
தமிழரசுக்கட்சியின் திருகோணமலை உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவு
சங்கு சின்னத்துக்கு ஆதரவளிக்க தீர்மானம்; செல்வம் அடைக்கலநாதன் Published By: DIGITAL DESK 7 01 SEP, 2024 | 09:20 AM இலங்கை தமிழ் அரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட கிளை தமிழ் கட்டமைப்பின் சிறந்த முடிவாக பொது வேட்பாளர் அரியநேந்திரனுக்கு ஆதரவளித்து சங்கு சின்னத்தை தீர்மானித்த முடிவு வரவேற்கத்தக்கது என தமிழீழ விடுதலை இயக்கத்தின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். திருகோணமலையில் உள்ள இலங்கை தமிழ் அரசு கட்சியின் காரியாலயத்தில் நேற்று சனிக்கிழமை (31) இடம் பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு இவ்வாறு தெரிவித்தார். இதில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் உட்பட கட்சி பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டனர். மேலும் கருத்துரைத்த அவர் இந்த புரட்சிகரமான முடிவால் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். தமிழ் தேசிய கூட்டமைப்பு ஊடாக அனைவரும் ஒற்றுமையாக பயணிக்க வேண்டும். எங்கள் ஒற்றுமை தமிழ் கட்டமைப்பு ஒற்றுமையை காட்டியுள்ளது. இதனால் தான் 22 உறுப்பினர்களை பெற்றிருக்கிறோம். சங்கு சின்னம் ஊடாக அனைத்து தமிழ் கட்சிகளுக்கும் மற்றும் சிவில் அமைப்புக்களுக்கும் ஒரே குடையின் கீழ் ஒன்றினைத்து மக்களுக்கு பலமான செய்தியை சொல்ல வேண்டும். எங்களுக்குள் பிரிவினையற்ற நிலை இல்லாது தமிழ் தேசியத்துக்கு அந்த பலத்தை கொண்டு செல்ல வேண்டும். பிரிவினைகள் மக்களுக்கு கோபத்தை உண்டு பண்ணும், இதனால் இருக்கின்ற 10 பிரநிதித்துவம் ஐந்தாக குறையலாம். இந்த கூட்டு தேர்தலுக்கான கூட்டாகவன்றி மக்கள் பிரச்சினைகளை வெளிக்கொனரவும் போராட்டங்களை முன்னெடுக்கவும் ஆலமரமாக இருக்க வேண்டும் திருகோணமலை மாவட்ட தமிழரசு கட்சியின் முடிவால் கிளிநொச்சி மாவட்ட கட்சி கிளையும் இதே முடிவெடுத்துள்ளது என்றார். இதன் போது உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் தமிழ் கட்சிகள் சிறு சிறு கட்சிகளாக இருக்காமல் அனைவரும் ஒன்றினைந்து தமிழ் தேசிய கூட்டமைப்பாக பயணித்து இழந்த உரிமைகளை மீளப் பெறுவோம். 1948ல் இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்தது. ஆனால் தமிழ் மக்களுக்கு கிடைக்கவில்லை என்றார். https://www.virakesari.lk/article/192512
-
எரிபொருள் விலைகளில் திருத்தம்
31 AUG, 2024 | 10:35 PM எரிபொருள் விலைகளில் இன்று நள்ளிரவு முதல் திருத்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனம் மற்றும் ஐ. ஓ. சி. நிறுவனம் அறிவித்துள்ளன. பெற்றோல் 92 ஒக்டேன் ஒரு லீற்றரின் விலை 12 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 332 ரூபாவாகும். பெற்றோல் 95 ஒக்டேன் ஒரு லீற்றரின் விலை 2 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 377 ரூபாவாகும். டீசல் ஒரு லீற்றரின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 307 ரூபாவாகும். சுப்பர் டீசல் ஒரு லீற்றரின் விலை 3 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 352 ரூபாவாகும். ஆனால் மண்ணெண்ணெய் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/192508
-
அரசியலில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கும் கேரள திரையுலகம்
ஹேமா கமிட்டி அறிக்கை: முதல்முறையாக வாய் திறந்த நடிகர் மோகன் லால், தெலுங்கு சினிமா பற்றிப் பேசிய சமந்தா பட மூலாதாரம்,FACEBOOK/MOHANLAL படக்குறிப்பு, மலையாள நடிகர் மோகன் லால் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் மலையாள திரையுலகில் வாய்ப்பு தேடி வரும் பெண்களை நடிகர்கள், இயக்குநர்கள் உள்ளிட்ட பலரும் பாலியல் ரீதியாகப் பயன்படுத்துவதாக (casting couch) எழுந்த சர்ச்சைக்கு மலையாள நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவரும், நடிகருமான மோகன் லால் முதல்முறையாகப் பதிலளித்துள்ளார். “மலையாள திரையுலகை அழித்து விடாதீர்கள்” என்று அவர் வலியுறுத்தியுள்ளார். நீதிபதி ஹேமா தலைமையிலான ஆணையத்தின் அறிக்கையை மோகன் லால் வரவேற்றதாக ஏஎன்ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது. குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்றும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் விசாரணைக்கு ஒத்துழைப்பார்கள் என்றும் அவர் கூறினார். மலையாள திரைப்படக் கலைஞர்கள் சங்கத்தின் (அம்மா) தேர்தல் விரைவில் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மலையாள திரையுலகில் பெண்கள் எதிர்கொள்ளும் துன்புறுத்தல்கள் குறித்த நீதிபதி ஹேமா தலைமையிலான ஆணையத்தின் அறிக்கை சமீபத்தில் வெளியானது. பெண் கலைஞர்களுக்கு எதிரான துன்புறுத்தல் மற்றும் தவறான நடத்தை பற்றிய அதிர்ச்சித் தகவல்கள் இந்திய திரையுலகத்தை உலுக்கியுள்ளது. "இதுபோன்ற சம்பவங்கள் முழு திரையுலகையும் அழித்துவிடும். 'அம்மா' சங்கத்தின் மீது மட்டும் குற்றம் சுமாத்தாதீர்கள் என்று கேட்டுக் கொள்கிறோம். இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது" என்று மோகன் லால் கூறினார். “அம்மா சங்கத்திலும் கருத்து வேறுபாடுகள் உள்ளன, உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ‘அம்மா’ சங்கத்திற்கு விரைவில் தேர்தல் நடைபெறவுள்ளது. ‘அம்மா’ சங்கத்தின் பதவியிலிருந்து விலகியது தப்பிப்பதற்காக அல்ல. தயவு செய்து தேவையில்லாமல் ‘அம்மா’ சங்கத்தைக் குறை சொல்லாதீர்கள். நீதிபதி ஹேமா ஆணையத்தின் அறிக்கையை வரவேற்கிறோம். அந்த அறிக்கையை வெளியிட்டது சரியான முடிவு,'' என்றார். மலையாள இயக்குநர் ரஞ்சித், நடிகர்கள் சித்திக், முகேஷ் உள்ளிட்ட மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்கள் தங்களுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக சில நடிகைகள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்நிலையில், மோகன் லால் உள்ளிட்ட 'அம்மா' உறுப்பினர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். 'கடினமாக உழைக்கும் திரைத்துறை' ஒட்டுமொத்த மலையாள திரையுலகையும் எதிர்மறையாகச் சித்தரிக்க வேண்டாம் என்று ஊடகங்களையும் மக்களையும் கேட்டுக்கொண்டார் மோகன் லால். மலையாள திரையுலகம் மிகவும் கடினமாக உழைக்கும் திரைத்துறை என்று அவர் கூறினார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மலையாள திரையுலகில் நடிகைகளுக்குப் பாலியல் துன்புறுத்தல் குறித்து ஹேமா அறிக்கை குறிப்பிட்டுள்ளது. "அம்மா சங்கத்தை மட்டுமே நோக்கிப் பல கேள்விகள் எழுப்பப்படுகின்றன. இந்தக் கேள்விகளை எல்லோரிடமும் கேட்க வேண்டும். மலையாள திரையுலகம் மிகவும் கடினமாக உழைக்கும் திரைத்துறை. நிறைய பேர் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் எல்லோரையும் குறை சொல்லக்கூடாது. யாருக்காகவும் சட்டத்தை மாற்ற முடியாது. இதற்குப் பொறுப்பானவர்கள் தண்டிக்கப்படுவார்கள். மலையாள திரையுலகை அழிக்க வேண்டாம்,'' என்றார். "விசாரணை கண்டிப்பாக நடைபெறும். துணை நடிகர்கள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்தும் கவனம் செலுத்தி வருகிறோம். ஒரே நேரத்தில் அனைவரின் பெயர்களும் வெளிவருகின்றன. நாங்கள் ஆதரவற்ற நிலையில் இருக்கிறோம். விசாரணை நடவடிக்கைக்கு நாங்கள் ஒத்துழைப்போம். பிரச்னைகளைச் சரி செய்ய நாங்கள் இங்கு வந்துள்ளோம்" என்று மோகன் லால் தெரிவித்துள்ளார் தெலுங்கு சினிமா குறித்து சமந்தா கருத்து இந்த விவகாரம் குறித்து நடிகை சமந்தா கருத்து தெரிவித்துள்ளார். தெலுங்கு சினிமா அமைப்பான ‘பெண்களின் குரல்’ (The Voice of Women) என்ற அமைப்பு அரசாங்கத்திடம் அளித்த அறிக்கையை வெளியிடுமாறு, சமந்தா வெள்ளிக்கிழமை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பட மூலாதாரம்,FACEBOOK/SAMANTHA படக்குறிப்பு, நடிகை சமந்தா "தெலுங்கு திரையுலகில் உள்ள அனைத்து பெண்களும் ஹேமா கமிட்டி அறிக்கையை வரவேற்கின்றனர். கேரளாவில் உள்ள நடிகைகள் கூட்டமைப்பான ‘வுமன் இன் சினிமா கலெக்டிவ்’ (WCC) முயற்சிகளை நாங்கள் பாராட்டுகிறோம். அவர்களின் முயற்சிகள் ‘தி வாய்ஸ் ஆஃப் வுமன்’ இயக்கத்திற்கு வழிவகுத்தது. அதனால் ஈர்க்கப்பட்டு, 'தி வாய்ஸ் ஆஃப் வுமன்' தெலுங்கு திரையுலகில் பெண்களை ஆதரிப்பதற்காக 2019இல் அமைக்கப்பட்டது. பாலியல் துன்புறுத்தல் தொடர்பான அக்குழுவின் அறிக்கையை தெலங்கானா அரசு வெளியிட வேண்டும்” என்று சமந்தா அப்பதிவில் தெரிவித்துள்ளார். கடந்த 2017ஆம் ஆண்டு கேரளாவில் உருவான ‘வுமன் இன் சினிமா கலெக்டிவ்’ திரைப்படத் துறையில் பாலின பாகுபாடுகளுக்கு எதிராகப் போராடி வருகிறது. பெண்களுக்கு சம உரிமைகளை உறுதிப்படுத்தும் வகையில் கொள்கை மாற்றங்களுக்காகப் பணியாற்றி வருகிறது. மலையாளத் திரையுலகில் பணிபுரியும் பெண்களைக் கொண்டு ‘வுமன் இன் சினிமா கலெக்டிவ்’ உருவாக்கப்பட்டது. நீதிபதி ஹேமா ஆணையத்தின் அறிக்கையில் என்ன இருக்கிறது? மலையாளத் திரையுலகின் நிலைமை குறித்து ஆய்வு செய்யக் கோரி 2017ஆம் ஆண்டு கேரள முதலமைச்சர் பினராயி விஜயனிடம் வுமன் இன் சினிமா கலெக்டிவ் (WCC) ஓர் அறிக்கையைச் சமர்ப்பித்தது. இதையடுத்து, அதே ஆண்டில் நீதிபதி ஹேமா ஆணையத்தை மாநில அரசு அமைத்தது. பிரபல கதாநாயகியை காரில் வைத்து சிலர் பாலியல் துன்புறுத்தல் செய்ததை அடுத்து, திரையுலகின் நிலைமையை ஆய்வு செய்ய வுமன் இன் சினிமா கலெக்டிவ் உறுப்பினர்கள் மனு அளித்தனர். இந்தக் குழுவில் நடிகை டி.சாரதா, கேரள முன்னாள் தலைமைச் செயலாளர் கே.பி.வல்சலா குமாரி ஆகியோர் இடம்பெற்றனர். பட மூலாதாரம்,GETTY IMAGES மலையாள திரையுலகில் வாய்ப்பு தேடி வரும் பெண்களை பாலியல் ரீதியாகப் பயன்படுத்திக் கொள்வது (casting couch) ஆழமாக வேரூன்றியுள்ளதாக ஓய்வுபெற்ற கேரள உயர்நீதிமன்ற நீதிபதி ஹேமா தலைமையிலான ஆணையம் தெரிவித்துள்ளது. அந்தக் குழுவின் அறிக்கை சமீபத்தில் கேரள அரசால் வெளியிடப்பட்டது. “சமரசம்” மற்றும் “ஒத்துப்போதல்” போன்றவை மலையாள திரையுலகின் பல்வேறு மட்டங்களில் “வாய்ப்புக்கான” கடவுச் சொற்களாக இருப்பதாக, அந்த அறிக்கை அடையாளம் கண்டுள்ளது. “தேவைப்படும் போதெல்லாம் பெண்கள் பாலியல் உறவுக்குத் தயாராக இருக்க வேண்டும்” என்பதுதான் இந்த இரு வார்த்தைகளின் அர்த்தம். திரையுலகில் 'காஸ்டிங் கவுச்' நடப்பதாக இருக்கும் பரவலான நம்பிக்கையைப் பயன்படுத்தி, புதிதாக இத்துறைக்கு வருபவர்களுக்கு தயாரிப்பு மேலாளர்கள் (production controllers) இத்தகைய உணர்வை வழங்குகின்றனர். இதற்கு இரையாகும் நபர்களுக்கு “குறியீட்டு எண்களும்” வழங்கப்படுகின்றன. 44 பக்கங்கள் இல்லை நீதிபதி கே.ஹேமா தலைமையிலான குழு தனது அறிக்கையைச் சமர்ப்பித்து நான்கரை ஆண்டுகளுக்குப் பிறகு, கேரள அரசு அந்த அறிக்கையை வெளியிட்டது. அறிக்கையின் 290 பக்கங்களில் 44 பக்கங்கள் வெளியிடப்படவில்லை. இந்தப் பக்கங்களில், திரையுலகில் தங்களைத் துன்புறுத்தியவர்களின் பெயர்களைப் பெண்கள் குறிப்பிட்டுள்ளனர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தங்களுக்கு நேர்ந்த துன்புறுத்தல்களை பெண்கள் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர். அந்த அறிக்கையில் இருந்து நீக்கப்பட்ட மற்றொரு பக்கத்தில், பெண்கள் எப்படித் துன்புறுத்தப்பட்டனர், எவ்வளவு கொடுமையாக நடத்தப்பட்டனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் நீக்கப்பட்ட இரண்டாவது பகுதியில், பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான ஒரு பெண், “அடுத்த நாள் முதல் அதே நபருடன் கணவன் - மனைவியாக, கட்டிப்பிடித்துக் கொண்டு நடிக்க வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது, இந்த விவகாரத்தின் தீவிரத்தை உணர்த்தும் அதிர்ச்சிகரமான உதாரணம். “இதுவொரு பயங்கரமான சம்பவம். படப்பிடிப்பின்போது அவர் சந்தித்த இந்தக் கசப்பான அனுபவம் அவருடைய முகத்தில் தெரிந்தது. இதனால், ஒரு ஷாட்டுக்கு அவர் 17 டேக்குகளை எடுத்தார். இயக்குநர் அந்தப் பெண்ணை மோசமாகத் திட்டினார்” என்று அந்த அறிக்கை கூறுகிறது. இந்த அறிக்கை வெளியானதும் கதாநாயகிகள் தங்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்களை ஒவ்வொன்றாக அம்பலப்படுத்தி வருகின்றனர். https://www.bbc.com/tamil/articles/c303rr5pqd4o
-
தமிழ்பொதுவேட்பாளருக்கு ஆதரவளிப்பது நல்லிணக்க முயற்சிகளிற்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் - பெரமுனவின் மத்திய குழு உறுப்பினர் கீதநாத் காசிலிங்கம்
01 SEP, 2024 | 10:43 AM தமிழ் பொதுவேட்பாளருக்கு ஆதரவளிப்பது நல்லிணக்க முயற்சிகளிற்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வடமாகாணத்திற்கான மத்திய குழு உறுப்பினர் கீதநாத் காசிலிங்கம் தெரிவித்துள்ளார். தமிழ் பொதுவேட்பாளரை ஆதரிக்கும் யோசனை குறித்து அவர் கடும் கரிசனை வெளியிட்டுள்ளார். தமிழ் பொதுவேட்பாளரை ஆதரிக்கும் திட்டம் நாடு தற்போது முன்னெடுத்திருக்கும் நல்லிணக்க முயற்சிகளிற்கு இடையூரை ஏற்படுத்தலாம் என அவர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி வேட்பாளருக்கு வாக்களிக்கும்போது கொள்கைகள் தகுதிகள் குறித்தே கவனம் செலுத்தவேண்டும், இனஅடிப்படையில் அதனை ஆராயக்கூடாது என அவர் தெரிவித்துள்ளார். இனப்பிரிவுகளிற்கு முக்கியத்துவம் கொடுப்பதால் தமிழர்களின் நோக்கம் குறிக்கோள் பாதிக்கப்படும், தேசிய நல்லிணக்கத்திற்கு பாதிப்பு ஏற்படலாம் என அவர் தெரிவித்துள்ளார். தமிழ் அரசியல்வாதிகள் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ளவேண்டும், இதன் காரணமாக ஏற்படக்கூடிய எதிர்மறையான விளைவுகளிற்கு தென்பகுதியை குற்றம்சாட்டக்கூடாது என அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழ் அரசியல்வாதிகளின் பொறுப்புணர்வற்ற செயற்பாடுகள் காரணமாக சாதாரண அப்பாவி தமிழ் மக்களே பிரச்சினைகளை எதிர்கொள்வார்கள், என தெரிவித்துள்ள அவர் தீவிரவாதத்தை தூண்டும் ஆபத்துக்களிற்கு எதிராக எச்சரித்துள்ளதுடன், அனைவரையும் உள்ளடக்கிய அமைதியான அணுகுமுறைக்கு அழைப்பு விடுத்துள்ளார். பிரிவினைக்கு முன்னுரிமை வழங்ககூடாது, வாழ்வாதாரத்தை, வாழ்க்கை தரத்தை, வலுப்படுத்துதல், வடக்கிற்கு முதலீட்டை வரவழைத்தல், அந்த பகுதியை வர்த்தக நடவடிக்கைகளிற்கான தளமாக மாற்றுதல், போன்றவை குறித்தே கவனம் செலுத்தவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/192527
-
சோழர் காலத்தில் இறந்த அரசருடன் உயிரோடு புதைக்கப்பட்ட பெண்கள் - எதற்காக தெரியுமா?
இந்தக் கட்டுரையில் உள்ள தவறைச் சுட்டி மன்னர் மன்னன் ஆற்றிய உரை 5ஆவது நிமிடத்தில் இருந்து 6.30 நிமிடம் வரை கவனிக்கவும்.